15: நல்லது மட்டுமல்ல, புத்திசாலித்தனமும்கூட!
எதையும் முறைப்படி செய்வது நல்லது. முதலில் எப்படியாவது தொழில் தொடங்கினால் போதும் என்று இருக்கும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற மனோபாவம் மேலோங்கி நிற்கும். குறிப்பாக இரண்டு விஷயங்களில் தவறு செய்ய வாய்ப்புகள் உள்ளன.
தடபுடலான தொடக்கம்
ஒன்று உங்கள் தொழில் பற்றிய சட்ட திட்டங்களைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது. அதற்கான ஆவணங்களைச் சரியாகப் பெறாமல் இருப்பது. இப்போதைக்கு இது போதும் என முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பிக்கும்போது திடீரென ஒரு நோட்டீஸ் வந்து உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
நண்பர் ஒருவர் சென்னையின் மிக நவ நாகரிகப் பகுதி ஒன்றில் ஒரு குளிர்பானக் கடை தொடங்கத் திட்டமிட்டார். ஒரு முக்கியச் சாலையில், ஒரு வீட்டின் முன் பகுதியை வாடகைக்கு எடுத்தார். வீட்டுக்காரருக்கும் அரசாங்கம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்கானவர். பல ஆண்டுகளாக அங்கு இருப்பதால் மிகவும் பிரபலமானவரும்கூட. நல்ல வாடகை, அதிகச் சிக்கல் இல்லாத தொழில், படித்தவர் ஆரம்பிக்கிறார் என்று முழு ஆதரவு தந்தார். நண்பரும் மொத்த முதலீடும் செய்தார். இதற்காக வீட்டை மாற்றி, கடை அருகிலேயே புது வீடு புகுந்தார். தடபுடலாக நண்பர்களை அழைத்துத் தொழில் தொடங்கினார்.
இரண்டுமே கடினம்தான்!
சரியாக மூன்றாம் நாள் மாநகராட்சி ஆட்கள் வந்தார்கள். குடும்பங்கள் வாழும் பகுதியில் கடை நடத்த ஆட்சேபம் தெரிவித்து அங்கிருந்த குடியிருப்போர் சங்கம் புகார் தெரிவித்திருந்தது. சாலை நடை பாதை ஆக்கிரமிப்பு உட்படப் பல பிரிவுகளில் புகார்கள் இருந்தன. விசாரிக்கையில் அந்த வீடே அனுமதியின்றி விதிகள் மீறிக் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. நண்பரும் வீட்டுக்காரரும் நடையாய் நடந்தார்கள். எல்லா வழிகளிலும் முயன்றார்கள். பின்னணியில் வீட்டுக்காரருக்கு ஆகாத ஒரு காவல்துறை அதிகாரி செயல்படுவது தெரிந்தது. எதுவாயிருப்பின் என்ன? நண்பர் கடையை மூடினார். பெருத்த நஷ்டம். பின்னர் அதேபோல இடம் தேடி, குடும்பத்தைப் பழைய இடத்துக்கு மாற்றுவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது.
நீங்கள் தொழில் செய்ய யாருடைய ஆட்சேபணையும் இருக்கக் கூடாது. குறிப்பாக நீங்கள் சிறு தொழில் தொடங்குபவராகவோ அல்லது முதல் முறை தொழில் தொடங்குபவராகவோ இருந்தால் ஒரு முறைக்குப் பல முறை அனைத்தும் சரியாக உள்ளனவா என்று பார்த்துப் பின் முதலிடுவது நல்லது.
இந்தியாவில் தொழில் தொடங்குவது, அதைத் தொடர்ந்து நடத்துவது இரண்டுமே கடினமான காரியங்கள். Ease of Doing Business Index என்று ஒன்று உண்டு. எந்தெந்த நாடுகளில் தொழில் தொடங்குவது, நடத்துவது எளிது என்ற பட்டியல் இது. 160 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 130-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இப்போது புரிகிறதா இங்கு தொழில் செய்ய ஏன் இவ்வளவு சிரமங்கள் என்று?
ஆவணங்களைப் பாதுகாக்கவும்
அதனால் தொழில் தொடங்குவதற்கு முன் அனைத்து அரசாங்க சட்டத் திட்டங்கள் அறிந்து தகுந்த ஆவணங்கள் பெறுதல் முக்கியம். அதே போல என்னென்ன மாதாந்தர வருடாந்தர அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிந்துகொள்ளுங்கள். அலுவலகத்தில் இருக்க வேண்டிய சான்றிதழ்கள் என்னென்ன? தொழிலாளர் வருகைப்பதிவு போன்றவை நமக்காக மட்டுமல்ல. தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் வந்து சோதனையிடலாம். அதனால் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் சரிவரப் பாதுகாத்துச் சமர்ப்பிப்பது நல்லது.
சட்டத்துக்குச் சின்ன வகையில்கூடப் புறம்பாகச் செயல்படாமல் இருப்பது நல்லது மட்டுமல்ல, புத்திசாலித்தனமும்கூட.
அடுத்த விஷயம், நிதி தொடர்பானது. உங்கள் வியாபாரத்துக்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்பது முதல் நிதி தொடர்பான எல்லாப் பரிமாற்றங்களையும் தகுந்த ஆதாரத்துடன் ஆவணப்படுத்துங்கள். வரி ஏய்ப்பு செய்யக் கறுப்பு பணத்தில் பரிமாற்றங்கள் நடத்தினால் என்றுமே ஆபத்துதான்.
பலர் தங்கள் லாபத்தைக் குறைத்துக் காண்பிப்பதையும், வங்கிக் கணக்குக்குப் பணம் வராமல் பார்த்துக்கொள்வதையும் சாமர்த்தியம் என்று நினைக்கின்றனர். இது குறுகிய காலச் சிந்தனை. உங்கள் வியாபாரத்தைப் பெருக்க நினைத்தால் இது உதவாது.
நீங்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுவந்து, உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்து, லாபக் கணக்கு எழுதினால் தான் உங்கள் நிறுவனத்தின் மதிப்பீடு பெருகும். வங்கிக் கடன் தாராளமாகக் கிடைக்கும். வெளி முதலீட்டாளர்கள் வருவார்கள். உங்கள் தொழில் பெருகும்.
நாணயமாக இருந்து என்ன பயன்?
ஆனால், குறுகிய காலத்தில் வரிகள் உங்களை வாட்டியெடுக்கலாம். பணத் தட்டுப்பாடு வரலாம். உங்கள் நலம் விரும்பிகள் ‘பேசாமல் கறுப்பில் பரிமாற்றம் செய்’ என்பார்கள். இவ்வளவு நாணயமாக இருந்து என்ன பயன் என்று உங்களுக்கே தோன்றலாம்.
இதே அளவில் தொழிலில் இயங்க இந்தச் சிந்தனை உதவலாம். பன்மடங்காகப் பெருக உதவாது. வங்கிகள், வெளி முதலீட்டாளர்கள், தொழில் துறை நண்பர்கள் உங்கள் தொழிலைப் பரிசீலனை செய்ய உங்களுக்குப் போதிய சான்றுகள் வேண்டும்.
99 சதவீதத்தினர் தங்கள் வியாபாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றனர் அல்லது ஓரளவுக்கு உயர்த்துகின்றனர். 1 சதவீதத்துக்கும் குறைவானோர்தான் வியாபாரத்தைப் பன்மடங்காகப் பெருக்குபவர்கள். அவர்கள் அரசாங்கத்தையும் நிதி நிர்வாகத்தையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் என்பதுதான் உண்மை.
லாபத்தை மறைத்து நஷ்டக் கணக்கு எழுதுவதை விட லாபத்தைக் காட்டித் தொழிலைப் பெருக்குவதுதான் வியாபாரச் சூட்சமம்.
நம் பெரும்பாலான வியாபாரத் தவறுகள் பயத்தாலும் பேராசையினாலும் செய்யப்படுபவை. வரி ஏய்ப்புகள், அரசாங்க விதி மீறல்கள், கறுப்புப் பண நடமாட்டம் இவை யாவும் தொழில் தொடங்குவோர் கவனமாகத் தவிர்க்க வேண்டிய தவறுகள்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 16.05.2017