disalbe Right click

Showing posts with label பங்குச் சந்தை. Show all posts
Showing posts with label பங்குச் சந்தை. Show all posts

Thursday, February 2, 2017

டீ மேட் அக்கவுண்ட் என்றால் என்ன?

No automatic alt text available.

டீ மேட் அக்கவுண்ட் என்றால் என்ன?

டீ-மேட் ஏன்? எதற்கு?
ஷேர் மார்க்கெட்டில் அடிக்கடி டீ-மேட் ஷேர், டீ-மேட் அக்கவுண்ட் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்றால் என்னவென்று பல பேருக்குப் புரிவதில்லை. கேட்கவும் கூச்சமாக இருக்கும். என்னய்யா? இலட்சங்களில் டிரேடிங் செய்கிறீர்? டீ-மேட் தெரியாதா என்று கேட்டு விட்டால் அசிங்கமாகப் போகுமே என்று பொத்தாம் பொதுவாக தலையாட்டி விட்டுப் போவார்கள்.
ஷேர் வாங்கினோமா, விற்றோமா? இலாபமோ நஷ்டமோ வந்ததா? புலம்பி விட்டு வீட்டுக்குப் போனோமா என்றே இருப்பார்கள் பலர். ஆனால் இது ரொம்ப சிம்பிள் விஷயம். புரிந்து கொள்வதும் சுலபம் தான். ஒரு சிம்பிள் உதாரணத்தோடு பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்.
மெட்டீரியல் என்றால் பொருள். டீ-மெட்டீரியல் என்றால் அந்தப் பொருளை இல்லாமல் ஆக்குவது. உங்களிடம் பணம் இருந்தால் எங்கே கொண்டு போய் வைப்பீர்கள். கொஞ்சமாக இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கையில் இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொண்டா திரிய முடியும். பேங்கில் போட்டு வைப்பீர்கள் அல்லவா?
அதற்கு என்ன அத்தாட்சி? வங்கிக் கணக்குப் புத்தகம். அதையும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திரிய முடியாது. பணம் பரிவர்த்தனை செய்ய என்ன வழி? அதற்குத்தான் செக் புத்தகம் கொடுத்தார்கள்.
சரி. ஓக்கே! ஆனால் அவசரமாக அகால நேரத்தில் பணம் தேவைப்பட்டால்? என்ன வழி? அதற்கும் ரொம்ப நாள் யோசித்து டெபிட் கம் ஏடிஎம் கார்டு கொண்டு வந்தார்கள்.
அதாவது, பொருளாக / மெட்டீரியலாக, அதாவது நாணயங்களாக இருந்த பணத்தை டீ-மெட்டீரியலாக ஆக்கினார்கள். இப்போது உங்களிடம் இருப்பவை வெறும் எண்களே!
இன்னோரு விஷயம். ஏடிஎம் கார்டு மூலம் நம் காசை, நம் கைக்காசை மட்டும் தான் செலவு செய்ய முடியும். நூறு இருநூறு, அல்லது அதற்கு மேலே, சேர்த்து செலவு செய்ய வேண்டுமென்றால்?
அப்போ கடன் அட்டை ஒன்று உருவாக்கினால் நன்றாக இருக்குமல்லவா? ....க்கினார்கள். இந்தா வைத்துக்கொள் என்று கொடுத்தார்கள். எவ்ளோ வேணா செலவு செய் என்றார்கள். முப்பது நாளோ ஐம்பது நாளோ கழித்து கட்டு. போதும். (கட்ட முடியவில்லையா?
அப்படி வா வழிக்கு. அதுதான் வேணும் எனக்கு என்று வட்டிக்குட்டியை பெற்றுப்போடுகின்றது நாம் செய்த கடன்) இன்னும் ஒன்றே ஒன்று தான் பாக்கி. கைரேகையை வைத்தே ஏ.டி.எம் மில் பணம் எடுக்கவோ, பணம் செலவு செய்யவோ வசதி வந்தால் நன்றாக இருக்கும்.. ஃபோர்ஜரி (ஏமாற்றம்) நடக்க வாய்ப்புண்டு என்றால் ரெட்டினா ஸ்கேன் (கண் பாப்பா) வசதி கொண்டு வரப் பாருங்களேன். இன்னும் வேலை சுலபமாகிப் போகுமே..
சரி. அதை விடுங்கள். பண விஷயத்துக்கு வருவோம். அதாவது நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாம் உபயோகப் படுத்தும் ரூபாய் நோட்டுக்களே கிட்டத்தட்ட டீ-மெட்டீரியல் தான். ஆதி காலத்தில் பொருளுக்குப் பொருள், அதாவது உப்பு, புளி, பருப்பு, புளியாங்கொட்டை போன்றவை பணமாக செயல்பட்டு பரிமாற்றம் செய்யப் பட்டன.
நீண்ட நாள் கழித்து ஷெர்ஷா சூரி காலத்தில் தான் நாணயங்கள் என்று ஒரு வடிவத்தை உருவாக்கி அவை அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டன. ஆரம்பத்தில் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் நாணயங்களை உபயோகித்தவர்கள் நாளாக நாளாக இவ்வளவு எடையாக இருக்கிறதே இதைத் தூக்கித் திரிய முடியாது என்று புலம்ப ஆரம்பித்தார்கள். ஆக வேறு என்ன செய்யலாம்?
இங்கே தான் நமக்கு உதவினான் நம் பக்கத்து வீட்டு சைனாக்காரன். பேப்பர் / காகிதம் என்ற ஒன்றை உருவாக்கிக் காண்பித்தான் அவன். நம்மாட்களும் நாமும் ஏன் அதை உபயோகித்துப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தார்கள். பணம் காகிதத்தில் அச்சிடப்பட்டது.
காகிதமா ? காகிதத்தில் அச்சடித்தால் அது பணம் தான் என்று என்ன ருசு? மக்கள் பயந்தார்கள். மக்கள் பயத்தைப் போக்க அவற்றில் ஒரு ஒழுங்கு முறை ஏற்படுத்தப் பட்டது. மேலும் மேலும் ரூபாய் நோட்டுக்கள் மேம்படுத்தப் பட்டன. மக்களிடையே பிரபலப் படுத்தப் பட்டன.
அதை விடப் பெரிய பிரச்சினை... காகிதத்தில் அச்சடித்தால் யார் பொறுப்பேற்பது? நீங்களோ நானோ கோடி வீட்டு காமேஸ்வரனோ பொறுப்பேற்க முடியுமா? அதற்கு ஒரு ஆள் வேண்டாமா? யார்? கவர்னர் என்று முடிவானது. எந்த ஊரு கவர்னர்? உங்க ஊரா? எங்க ஊரா? பணத்தைக் கையாள்கிற பெரிய தலை யாரு? ரிஸர்வ் பேங்க் தானே. அப்போ அதோட கவர்னரை போடச் சொல்லு.. என்று முடிவாகியது.
உங்கள் பாக்கெட்டில் இருந்து ஒரு நூறு ரூபாயை உருவிப் பாருங்கள். அதில் "இந்தக் காகிதத்தை வைத்திருப்பருக்கு நூறு ரூபாய் மதிப்புள்ள பொருளைத்தர நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று கவர்னர் கையெழுத்துப் போட்டிருப்பார்.
ஆக நாம் வைத்திருப்பது நூறு ரூபாய் இல்லை. நூறு ரூபாய் மதிப்புள்ள நோட்டு, வெறும் பேப்பர். இதுதான் டீ-மெட்டீரியல். சுருக்கமாக டீ-மேட்.
அதே கான்செப்ட் தான் இங்கு ஷேர் மார்க்கெட்டிலும். பொருளாக / மெட்டீரியலாக, அதாவது பேப்பர் பத்திரங்களாக பரிவர்த்தனை செய்யப் பட்டுக்கொண்டிருந்த ஷேர் டாக்குமெண்டுகளை டீ-மெட்டீரியலாக அதாவது பேப்பர் இல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் நம்பர் சிஸ்டத்துக்கு மாற்றினார்கள்.
NSE (தேசிய பங்குச் சந்தை) இதற்கு பெரும் பங்களித்தது. இம்முறையில் ஏற்பட்ட வெற்றி மற்றும் தெளிவுத்தன்மை (transperency) காரணமாக வேறு வழியின்றி BSE யும் பின் தொடர வேண்டியதாயிற்று.
பங்கு பத்திரங்கள் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த மோசடிகள் குறைக்கப் பட்டு டூப்ளிகேட் பிரச்சினைகளுக்கு முழுதாக ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.
இப்போது ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் கம்பெனியின் பேப்பர் பத்திரங்களை எங்கும் தூக்கிச் சுமக்க வேண்டாம். அவற்றை எலக்ட்ரானிக்கில் மாற்றி நம்பராக உங்களிடம் சொல்லி விடுவார்கள்.
அந்த நம்பரை நினைவு வைத்திருந்தால் போதும். இந்தியாவில் எங்கு போனாலும் அதைச்சொல்லி உங்கள் ஹோல்டிங் (கையிருப்பு)கை பார்த்துக்கொள்ளலாம். திருடு போகவோ, தொலைந்து போகவோ, எரிந்து போகவோ, எலி கடிக்கவோ வாய்ப்பில்லை. என்ன ஒன்று? அவற்றை விற்று பணமாக்க வேண்டுமென்றால் அது உங்கள் எண்தான் என்பதற்கான சான்று தர வேண்டும். (அது ஏற்கனவே உங்களிடம் கொடுக்கப் பட்டிருக்கும்) பின்னே? உங்கள் நம்பரைச்சொல்லி வேறு யாராவது விற்று விட்டால்? அதற்குத்தான் இந்த ஏற்பாடு.
டீ-மேட் கணக்கு துவங்குவது எப்படி ?ரொம்ப சிம்பிள். பதிவு பெற்ற ஏதேனும் ஒரு புரோக்கரிடம் செல்லுங்கள். இன்றைய தினம் எல்லா பெரிய நிறுவனங்களும் புரோக்கிங் நிறுவனங்கள் துவங்கி நடத்தி வருகின்றன. ரிலையன்ஸ், பிர்லா முதல் ஏபிசி பிரைவேட் லிமிடெட் வரை பல நூறு நிறுவனங்கள். எல்லா ஊரிலும் இன்று பல நிறுவனங்களின் கிளைகள் இருக்கின்றன. சந்தோஷமாகச் செய்து தருவார்கள். அதுதானே அவர்கள் வேலை.
அவர்கள் கேட்கும் சில ஆவணங்கள் மட்டும் தர வேண்டியிருக்கும். பான் கார்டு கட்டாயம் தேவை. இருப்பிடத்தை நிரூபிக்க இருப்பிடச் சான்று. உங்கள் முகத்தை அவர்கள் நினைவு வைத்துக்கொள்ள இரு புகைப்படங்கள். பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு கண்டிப்பாக வேண்டுமே. அதன் சான்று. பணம் கொடுக்க செக் லீஃப். அவ்வளவுதான்.
கூடுதலாக மார்க்கெட் ரிஸ்க்(சந்தை அபாயம்)கை விளக்கும் பத்திரங்கள் புத்தகத்தில் பிரிண்ட் அடிக்கப் பட்டிருக்கும். (முடிந்தால் படித்துப் பார்த்து விட்டு) கையெழுத்துப் போட வேண்டும். சுமாராக இருபது, இருபத்தைந்து (புரோக்கரைப் பொறுத்து) கையெழுத்துக்கள் போட வேண்டியிருக்கும்.
மாட்டுக்கு ஒரு கையெழுத்தா? எத்தன..............? விட்டா மடுவுக்கு ஒண்ணு கேப்பீங்க போலருக்கு ? என்று வடிவேல் புலம்புவது போல புலம்ப வேண்டியிருந்தாலும் வேறு வழயில்லை. கையெழுத்துப் போட முடியாது என்று சொல்லி வேறு புரோக்கரிடம் போனால் அவரும் ஒரு கட்டு டாக்குமெண்டுகளை நீட்டுவார். ஒன்றிரண்டு க்ளாஸ் (முக்கியமான வரிகள்) மாறியிருக்கும், அவ்வளவுதான்.
ஆக பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி வைக்க டீ-மேட் கணக்கு தேவை என்று புரிந்து கொண்டீர்களா? டீ-மேட் அக்கவுண்ட் என்பது ஒரு பெட்டி போல, லாக்கர் போல. ஷேர்களை வாங்கி அவற்றில் டெபாஸிட் செய்து வைக்கலாம். விற்க வேண்டுமென்றால் எடுத்து விற்றுக்கொள்ளலாம். அந்த அக்கவுண்டை உங்களுக்கு வழங்கும் நிறுவனங்களை டெபாஸிட்டரி என்பார்கள்.
இந்தியாவில் NSDL, CDSL என்று இரு டெபாஸிட்டரிகள் உள்ளன. இவற்றிற்கு கிளைகள் கிடையாது. ஆகவே DP - Depository Participant எனத் தன்னிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் (புரோக்கர்களும் உண்டு) மூலம் இந்த வசதியை வழங்குவார்கள். எப்படி உங்களுக்கு விருப்பப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்குகிறீர்களோ அது மாதிரி இவை இரண்டில் எவற்றில் வேண்டுமானாலும் கணக்கு துவங்கிக் கொள்ளலாம். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. நீங்கள் சந்தித்த புரோக்கரிடம் அந்த வசதி உள்ளதா என்று மட்டும் பார்த்துக்கொள்ளவும்.
ஆனால் டீ-மேட் அக்கவுண்டில் டிரேடிங் (பரிவர்த்தனை) செய்ய இயலாது. அப்படி என்றால்? குழம்பாதீர்கள். இதுவும் சிம்பிள் தான். அதே புரோக்கரிடம் ஒரு (பரிவர்த்தனை) டிரேடிங் அக்கவுண்டும் ஆரம்பிக்க வேண்டும். இந்த டிரேடிங் அக்கவுண்ட் மூலம் NSE, BSE என்ற இரண்டு சந்தைகளிலும் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும.
டீ-மேட் அக்கவுண்டும் டிரேடிங் அக்கவுண்டும் அக்கா தங்கை (உடன்பிறவா சகோதரிகள்) போல. இரண்டும் இருந்தால் தான் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும். வாங்கும் போது டிரேடிங் அக்கவுண்ட் மூலம் வாங்கி டீ-மேட்டில் அக்கவுண்டில் வைத்துக் கொள்கிறீர்கள். விற்கையில் டீ-மேட்டில் அக்கவுண்டில் இருந்து எடுத்து டிரேடிங் அக்கவுண்ட் மூலம் விற்கிறீர்கள். அவ்வளவு தான்.
நன்றி : எஸ்காஉயிரோசை வார இணைய இதழ்

Sunday, May 8, 2016

மறந்துபோன டிவிடெண்ட்


மறந்துபோன டிவிடெண்ட்: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புவோர் நீண்ட காலத்துக்கு நல்ல பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல வருமானமும் லாபமும் பார்க்கலாம் என்று சொல்வதுண்டு. ஆனால், நீண்ட காலம் என்பதற்காக, அந்த முதலீட்டையே மறந்துபோகிற அளவுக்கு இருந்துவிடக்கூடாது. ஆண்டுக்கு ஒரு முறையேனும் நமது முதலீடுகளை ஆராய்வது மிகவும் அவசியம். 

நாம் இப்படி சொல்வதற்கு காரணம், இந்தியாவில் பங்கு முதலீட்டின் வாயிலாக டிவிடெண்ட் வழங்கப்பட்டும் அதைப் பெறாமல் இருக்கும் (Unclaimed dividends) தொகை பல ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதனால் நஷ்டம்என்னவோ, முதலீட்டாளர்களுக்குத்தான்.  பங்குகளில் முதலீடு செய்து, அதன் பலனாகக் கிடைக்கும்  டிவிடெண்ட்டை அனுபவிக்க முடியாமல் இருப்பது துரதிஷ்டமே. 

எந்தெந்த காரணங்களுக்காக இது போன்று நிறுவனங்கள் அளிக்கும் டிவிடெண்ட் தொகையானது  முதலீட்டாளர் களுக்கு போய்ச் சேராமல் போகிறது? ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முகவரி மாற்றம்!
பல்வேறு காரணங்களுக்காக, குறிப்பாக தொழில் காரணங்களுக்காக பலர் தங்களது வீடுகளை மாற்றும் சூழல் ஏற்படும். அது போன்ற சமயத்தில் நிறுவனங்கள் முதலீட்டாளர் களுக்கு அனுப்பும் டிவி டெண்ட்டுக்கான காசோலை அந்த முகவரிக்கு அனுப்பி வைக்கபட்டும் முதலீட்டாளர் களுக்கு டிவிடெண்ட் தொகை கிடைக்காமல் போக  வாய்ப்பு உண்டு. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களால் இயன்ற அளவு அவைகளை எடுத்துப் பாதுகாத்து வைத்தாலும் அதை உரியவரிடம் சேர்ப்பது பல நேரங்களில் நடைமுறையில் சாத்தியப்படாத காரியம்.
இந்தியாவில் பெறப்படாத டிவிடெண்ட் கணக்கில் பெரும்பாலான பணம் இந்த வகையைச் சாரும். உதார ணத்துக்கு, ஒரு முதலீட்டாளர் முதலீடு செய்யும் போது ஒரு வீட்டில் வசித்திருப்பார். சில ஆண்டுகளில் அவர் அந்த வீட்டை மாற்றி னாலோ அல்லது ஊரை மாற்றினாலோ, அவர் அந்த விவரத்தை நிறுவனங் களுக்கோ அல்லது நிறுவனங்களின் பதிவாளருக்கோ தெரியப்படுத்தாமல் இருந்தால், அவர் முதலீட்டுக்கான டிவிடெண்ட் அவருடைய அந்த பழைய முகவரிக்கே சென்று கொண்டிருக்கும்.
வீட்டை மாற்றி அதே ஊரில் வேறு வீட்டுக்குச் சென்று இருந்தாலாவது ஒரளவுக்கு தபால் களை கண்காணிக்க முடியும். ஊரை விட்டோ அல்லது நாட்டை விட்டோ செல்ல நேரிட்டால், பழைய ஊரில் வரும் தபால்களை கண்காணிப்பது இயலாத காரியம்.
பெரும்பாலான பெறப்படாத டிவிடெண்ட் தொகை முகவரி மாற்றத்தினாலேயே ஏற்படுகிறது. இப்போது இசிஎஸ் முறை வந்து விட்டாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெருவாரியான டிவிடெண்ட்டுகள் வங்கிக் காசோலை மூலமாக மட்டுமே முதலீட்டாளர்களின் வீட்டு முகவரிக்குச் சென்றுள்ளன. இசிஎஸ் மூலமாக டிவிடெண்ட் வழங்கப்படும் வசதி துவங்கப் பட்டதும்தான் ஓரளவுக்கு இந்த வீடு மற்றும் ஊர் மாற்றப் பிரச்னை கட்டுக்குள் உள்ளது என்று சொல்லலாம்.
வங்கிக் கணக்கு மாற்றம்!
முதலீட்டாளர்களின் வங்ண்ட் தொகையும் நமது நாட்டில் அதிகமாகவே உள்ளன. முதலீடு செய்யும்போது கொடுத்த வங்கிக் கணக்கின் அடிப்படையில்தான் டிவிடெண்ட் காசோலையோ அல்லது நேரிடையாக இசிஎஸ் மூலமாகவோ டிவிடெண்ட் தொகை நிறுவனங்களால் அனுப்பப்படும். முதலீடு செய்யும் போது கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கில் ஏற்பட்ட மாற்றத்தை தெரிவிக்காத பட்சத்தில் மாற்றம் ஏற்பட்ட பிறகும் அதே கணக்கில் தான் டிவிடெண்ட் தொகை சென்று திரும்பிக் கொண்டிருக்கும்.
அதுமட்டுமல்லாது, அநேகமாக நாம் அனைவருமே நமது வங்கிக் கணக்குகளை ஏதாவது ஒரு காலகட்டத்தில் மாற்றி இருப்போம். அந்த விவரத்தைத் தெரியப்படுத்தாத வரை டிவிடெண்ட் தொகை யானது பழைய வங்கிக் கணக்கின் அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கும். அதுமட்டு மல்லாது, பல வருடங்களுக்கு முன்பு இருந்த வங்கிக் கணக்கின் எண்கள் புதிய முறைக்கு மாறுதலாகும்போதும் அதை தெரியப்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. அதன் காரணமாகவும் டிவிடெண்ட் தொகை நிலுவையில் இருப்பதை நாம் காணலாம்.
முதலீட்டாளர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்!
டிவிடெண்ட் வழங்கப்பட்டும் பெற்றுக் கொள்ளப்படாத டிவிடெண்ட் தொகை நமது சந்தையில் அதிகமாக இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம், முதலீட்டாளர்களின் இறப்பும் அதனால் ஏற்படும் குழப்பமும் தான். ஒரு முதலீட்டாளர் மறைந்தால், அவரின் வாரிசுகளோ அல்லது குடும்பத்தினரோ அதை நிறுவனத்தின் பங்கு விஷயங்களை நிர்வகிக்கும் பதிவாளரிடம் (Registrar) தெரியப்படுத்தி, உரிமம் கோரவில்லை என்றால் அதன் காரணமாகவும் டிவிடெண்ட் தொகை உரிய நபரிடமோ அல்லது பரிந்துரைக்கப்பட்ட நபர்களிடமோ போய்ச் சேருவதில்லை.
மேலும், முதலீடுகள் பல வருடங்களுக்கு முன்பு செய்யப் பட்டிருப்பின், அந்த முதலீட்டாளர் அந்த முதலீட்டு விவரங்களை தனது குடும்பத் தாரிடம் முழுவதுமாகச் சொல்லத் தவறுவதும் இதற்கு ஒரு முக்கியமான காரணம். அதன் காரணங்களுக்காக பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான டிவிடெண்ட் தொகை இன்னும் நேரடி வாரிசுகளாலேயோ அல்லது குடும்பத்தினாலேயோ பெறப்படாமலேயே உள்ளது.
திரும்பக் கோரப்படாத டிவிடெண்ட் தொகை!
இந்தியாவில் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பல முதலீடுகளிலிருந்து வழங்கப்பட்டும் பெற்றுக் கொள்ளப்படாத டிவிடெண்ட் தொகை ஏறக்குறைய ரூ.65,000 கோடி என்ற அளவில் உள்ளது. இந்தக் கூட்டுத் தொகையானது கடந்த பல வருடங்களாக அறிவிக்கப்பட்ட டிவிடெண்ட், முதலீட்டாளர்களால் பெற்றுக் கொள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கும் தொகையே ஆகும்.
இந்த நிலையை முடிவுக்குக் கொண்டுவர சில ஆண்டுகளுக்கு முன்னால், அன்றைய மத்திய அரசு, இதற்கு ஒரு தீர்வை வகுத்தது. அதாவது, டிவிடெண்ட் கொடுக்கப்பெற்று ஏழு ஆண்டுகளுக்குள் அவற்றை பெற்றுக்கொள்ள முதலீட்டாளர்கள் முயற்சி எடுக்கவில்லை எனில், அந்தத் தொகையானது “முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி” (Investor education and protection fund) என்ற அரசின் அமைப்பினுடன் சேர்க்கப்பட்டு விடும் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தது.
இதன் காரணமாக இது போன்ற நிலுவைத் தொகை வருடக்கணக்கில் கேட்பாரற்று இருப்பது என்ற நிலை மாறி, அது முதலீட்டாளர்களின் விழிப்பு உணர்ச்சி நிதிக்காகப் பயன் படுத்தப்படுகிறது என்பது ஓர் ஆறுதலான விஷயமாக இருந்தா லும், முதலீட்டாளர்களின் பணம் அவர்களுக்குப் போய்ச் சேராமல் விரையமாகி போகிறது என்பதே உண்மை.
அதுமட்டுமல்லாது, நிறுவனங்கள் தங்களிடம் உள்ள டிவிடெண்ட் பெற்றுக் கொள்ளாத முதலீட்டாளர் பட்டியலை தங்களது இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்பதும் ஒரு விதியாக கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், பெற்றுக்கொள்ள படாத டிவிடெண்ட் தொகையை முதலீட்டாளர் நிதியில் ஒப்படைக்கும்முன் அந்த முதலீட்டாளர்களுக்கு கட்டாயம் தெரியப்படுத்தவேண்டும் என்பதும் ஒரு முக்கியக் கட்டளை.
என்ன செய்ய வேண்டும்?
முதலீட்டாளர்கள் தங்களுக்கு டிவிடெண்ட்டுகள் வழங்கப்பட்டு அவற்றை பெறவில்லை என்று அறிந்தால் மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முதலில், நிறுவனத்தின் பங்குகளின் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் பதிவாளரிடம் ஒரு விரிவான, அனைத்து விவரங் களையும் உள்ளடக்கிய ஒரு கடிதத்தைக் கொடுக்க வேண்டும். அதில் முதலீட்டாளர்கள் எந்த நிறுவனத்தின் பங்கை வைத்திருக்கிறார், எவ்வளவு பங்குகள், எவ்வளவு காலம் டிவிடெண்ட் பெறவில்லை என்ற தகவல்களுடன் முதலீட்டாளரின் டீமேட் கணக்கின் எண்ணைக் குறிப்பிட வேண்டும். அதுமட்டுமல்லாது, அந்தப் பங்கில் உரிமம் எது போன்ற அமைப்பில் உள்ளதோ, அதாவது தனியாகவோ (single holding) அல்லது கூட்டாகவோ (Joint holding) இருப்பின், அதன் அடிப்படையில் முதலீட்டாளரின் அல்லது முதலீட்டாளர்களின் கையொப்பம் அந்தக் கோரிக்கைக் கடிதத்தில் இருக்கவேண்டும்.
அந்தக் கடிதத்துடன், டிவிடெண்ட் வாரண்ட் அல்லது பங்குகளின் பட்டியலை இணைத்து நிறுவனம் பரிந்துரைக்கிற வகையில் ஒரு இண்டம்னிடி பத்திரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் ஆராய்ந்த பின், கொடுக்கப் பெற்ற தகவல்களை சரிபார்த்து உறுதி செய்தபின் நிறுவனத்தின் பதிவாளர் டிவிடெண்ட் தொகையை முதலீட்டாளர் களுக்கோ அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கோ வழங்குவார்கள். 
மேலும், முதலீட்டாளர் அல்லது முதலீட்டாளர்களின் அடிப்படை விஷயங்களான வீட்டு முகவரி, வங்கிக் கணக்கு மற்றும் முதலீட்டாளர்களின் தனி மனித விஷயங்கள் (அதாவது, முதலீட்டாளர் தவறி இருந்தால்) அதற்குண்டான சட்டப் பூர்வமான விஷயங்களையும் சேர்த்து இணைக்க வேண்டும். அப்படி முழுமையாக இணைத்து அனுப்பினால், நிலுவையில் உள்ள டிவிடெண்ட்டுகளைப் பெறுவது சுலபமாகும்.
வரும்முன் காப்பது எப்படி?
இந்தப் பிரச்னையில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஐடியா இதோ:
டிவிடெண்ட் நிலுவைத் தொகையை சரியான ஆவணங்கள் கொண்டு பெற்று விடலாம் என்றாலும் முதலீட்டாளர்கள் தங்களின் உழைப்பால் உருவாக்கிய பணத்தை முதலீடுகளில் அதுவும் குறிப்பாக, பங்கு முதலீடுகளில் போடும்போது எப்போதும் விழிப்புடன் இருப்பது நல்லது. அதுவும் பங்குகளில் டிவிடெண்ட் என்பது நாம் எதிர்பாராத நேரங்களில் வந்துகொண்டு இருக்கும் ஒரு வருமானம்.
அப்படி நாம் விழிப்புடன் இருக்கும் பட்சத்தில் இது போன்ற டிவிடெண்ட் விஷயங்களை நாம் கண்காணித்து வருவது நமது முதலீடுகளுக்கு மிகவும் அவசியமாகிறது. நமது வாழ்க்கை காலச் சூழலுக்கேற்ப மாறி வந்தாலும், நமது முதலீடுகளின் மேல் விழிப்புடன் இருந்தால் இது போன்ற டிவிடெண்ட் கிடைக்கப் பெறாத நிலையை நிச்சயமாகத் தவிர்க்க முடியும்.
அதிலும் குறிப்பாக, வீடு மாற்றமோ, ஊர் மாற்றமோ அல்லது வங்கிக் கணக்கு மாற்றமோ ஏற்பட்டால், உடனடியாக உங்களின் பங்கு ஆலோசகரைத் தொடர்பு கொண்டு, அந்த மாற்றங்களை நிறுவனத்தின் பதிவாளர் மூலம் செய்ய சொல்லவேண்டும்.
அதுமட்டுமல்லாது, தாங்கள் செய்த முதலீடுகளை தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியம். எதிர்காலத்தில் பங்குகளின் உரிமத்தை சரியான முறையில் மாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும். மேலும், இது போன்ற குழப்பங்கள் எழாமல் இருக்கவும் உதவும்.
ஏனென்றால், பல பிள்ளைகளுக்கும் குடும்பத்தி னருக்கும் தங்களது தகப்பனார் எந்தப் பங்குகளில் முதலீடு செய்துள்ளார் என்ற விஷயமே தெரியாமல் போய் விடும் சூழலை அனுபவத்தில் நாம் கண்டிருக்கிறோம். அப்படித் தெரியாமலே போய்விட்டால் அவர்களுக்கு  நியாயமாகச் சேர வேண்டிய பணம் அவர்களுக்குக் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.
மேலும், தக்க ஆலோசகரைக் கொண்டு செய்த முதலீடுகளை ஆண்டுக்கொருமுறை ஆய்வு செய்துவருவதும் அவசியம். அப்போதுதான் இது மாதிரி பிரச்னைகள் ஏற்படாது!

நன்றி : நாணயம் விகடன் - 10.04.2016

Monday, April 6, 2015

மோசடி நிறுவனங்களை அடையாளம் காண


மோசடி நிறுவனங்களை அடையாளம் காண 10 வழிகள்
***************************************************************
பிஏசிஎல், எம்ஆர்டிடி மாதிரி பல நூறு மோசடி நிறுவனங்கள் தமிழகம் முழுக்க ராஜ்ஜியம் நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களைக் கண்டுபிடிப்பதற்கான பத்து வழிகள் இருக்கிறது.

1. நாம் முதலீடு செய்யப்போகும் நிறுவனம் எந்தமாதிரியானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, தனிநபர் நடத்தும் அமைப்பா, கூட்டாண்மை நிறுவனமா, இன்ஷூரன்ஸ் நிறுவனமா, வங்கியா, வங்கியல்லாத நிதி நிறுவனமா, பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளா, பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை ஒளிவுமறைவற்ற முறையில் தங்கள் கணக்குவழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், அவற்றைத் தேர்வு செய்வது நல்லது. ஆனால், அது மட்டுமே நம் பணத்துக்குப் பாதுகாப்பல்ல.

2.நிறுவனங்கள் எந்தச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது, எந்த ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் கீழ் நெறிமுறைப்படுத்தப் படுகிறது என்பதை இணையம் மூலமாகவோ, நேரடி யாகவோ தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களால் ஒரு பிரச்னை எனில், யாரிடம் முறை யிடுவது என்பது தெரியும். உதாரணமாக, இன்ஷூரன்ஸ் நிறுவனம் எனில், ஐஆர்டிஏவால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். (பதிவு பெற்ற நிறுவனங்களின் பெயர் பட்டியல் ஐஆர்டிஏ இணையதளத்தில் கிடைக்கிறது). வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் எனில், இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். ஈக்விட்டி சார்ந்த முதலீடுகள் எனில், அந்த நிறுவனங்கள் செபியால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். உற்பத்தி/சேவைத் துறை நிறுவனங்கள் எனில், கம்பெனி சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

3.முதலீடுகளை பணமாகவே பெறுவோம் எனில், அந்த நிறுவனங்களை நம்பாதீர்கள். அதேபோல், நிறுவனத்தின் பெயரில் மட்டுமே காசோலைகளை எழுதுங்கள். குறிப்பிட்ட வேறு நிறுவனத்தின் பெயரில் எழுதவோ, தனி நபரின் பெயரிலோ காசோலையை தரச் சொன்னால் போலி நிறுவனங்கள் என்பதை அடையாளம் கண்டுவிடலாம். நிறுவனத்தின் பெயரில் காசோலை எடுக்கச் சொன்னாலும், அதில் க்ராஸ் செய்ய வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது போலி நிறுவனமாகவே இருக்க வாய்ப்புண்டு.

4.ஒரு நிறுவனம் மக்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாகப் பெறுகிறது எனில், அதற்கு இந்திய ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கி தவிர, வேறு அரசு அல்லாத அமைப்புகளிடம் அனுமதி பெற்று டெபாசிட் பெற்றாலும் அதைப் போலி நிறுவனமாகக் கருதலாம்.

5.பட்டியலிடப்படாத நிறுவனங்களில் நிதி சார்ந்த பிரச்னைகள் இருந்தால் நமக்குத் தெரியாது. எனவே, பட்டியலிடப்படாத நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

6.நிதி நிறுவனங்களில் முதலீடு மேற்கொள்ளும் போது அவர்கள் வழங்கும் விண்ணப்பங்களில் தந்திருக்கும் டிஸ்க்ளெய்மர் விதிகள் மற்றும் நம் சந்தேகங்களுக்கு விளக்கம் தர மறுத்தாலோ, இழுத்தடித்தாலோ, மழுப்பினாலோ அந்த நிறுவனம் போலி நிறுவனம் என்று முடிவு செய்யலாம். முழுவதும் பூர்த்தி செய்யாத எந்த விண்ணப்பத்திலும் கையெழுத்திடாதீர்கள்.

7.முதலீடு செய்த நிறுவனத்தின் செயல்பாடுகள், புரமோட்டர்களின் செயல்பாடுகள், கணக்கு வழக்குகள், நிறுவன நிர்வாகம், நிதி நிலைமை, சந்தையில் நிறுவனத்துக்கு ஏற்படும் மாற்றங்கள் என்று எதையும் தெளிவாக வெளியிடாமல், ரகசியமாக வைத்திருந்தால் அந்த நிறுவனத்தைப் போலி நிறுவனமாகக் கருதலாம். குறிப்பாக, பெறப்படும் பணம் எதில் முதலீடு செய்யப்படுகிறது, எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதை வெளி யிடாத நிறுவனங்கள் மிக ஆபத்தானவை.

8.நிறுவனத்தின் எந்த முக்கிய மாற்றமும் முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்த பின்னரே செய்ய வேண்டும். அப்படி தெரிவிக்காமல் செய்தால், அது போலி நிறுவனம்.

9.போலி நிறுவனங்கள் வளர வளர தன் வெளிப்படைத்தன்மையை வெகுவாகக் குறைத்துக் கொள்ளும். சரியான பதில்கள் கிடைக்காது, பணம் சம்பந்தமான பரிமாற்றங்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். இறுதி நிலையில் அவை எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்கிற மாதிரி மர்மமாக செயல்படத் தொடங்கும்.

10.கவர்ச்சிகரமான ஆஃபர்கள், அதிக டிவிடெண்ட், குலுக்கல் முறை யில் கோடி ரூபாய்க்கு பரிசு, தங்க காசு, ஆண்டுக்கு 35% வட்டி, ரியல் எஸ்டேட் கூட்டு முதலீடுத் திட்டம் என்கிற மாதிரியான, பேராசையைத் தூண்டக்கூடிய வார்த்தைகளைச் சொல்லும் எல்லா நிறுவனங்களும் 200% போலிதான். இந்த நிறுவனங் களிடமிருந்து தூர விலகி நில்லுங்கள்!