disalbe Right click

Showing posts with label பெண்கள் - மருத்துவம். Show all posts
Showing posts with label பெண்கள் - மருத்துவம். Show all posts

Friday, September 8, 2017

மகப்பேறு காலம்- என்ன செய்ய வேண்டும்?

Image may contain: 1 person, smiling, text and closeup
மகப்பேறு காலம் - என்ன செய்ய வேண்டும்?
மகப்பேறு காலம்முக்கிய தருணம்!
மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவற்றை சரியாக பின்பற்றுவதே, தாயும், சேயும் நலமாக இருக்க உதவுகிறது. இந்த காலகட்டத்தில் தான் புத்தகம் படிப்பது, நேர்மறை சிந்தனை யை வளர்த்துக் கொள்வது, சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுவது என, குழந்தையின் நலனை காப்பதற்கான முயற்சியின் அடித்தளம்.
இதில், திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் பாலுடன் விதாரி, சதாவரி, ஆஸ்திமது, பிரமி ஆகிய சில மூலிகைகளுடன் தேன் மற்றும் நெய் கலந்து குடிக்க வேண்டும். இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. 
இந்த காலகட்டத்தில் சிசுவின் உடலில் கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சி நடைபெறும். 
இம்மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய், ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு, உணவை தாயின் ரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும், ஒரே உணவாக அமைகிறது. கொழுப்பு, காரம், உப்பு மற்றும் நீரை சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் சிறிதளவு துளசியை 
உட்கொண்டு வந்தால் பிரசவ வலி குறையும். 
ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும், எதிர்காலத்தில் மனதாலும், உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும், கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். 
அவை: 
 கர்ப்பிணிகள் சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள்,பழங்கள், தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. ஆகவே, மாத்திரை உட்கொள்ளும் அளவிற்கு, காய்கறிகளையும் சேர்த்து கொள்வது அவசியம். 
  மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம். 
  கர்ப்பிணிகள் சரியான நேரத்திற்கு, உணவு அருந்த வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. 
  முக்கியமான ஒன்று, புத்தகத்தை படிப்பது சிந்தனைகளை வளர்க்கும். நல்லவையே கேட்டல், பழகுதல் மூலம் நாளடைவில், குழந்தைகளின் குணமும் அவ்வாறே அமைய வாய்ப்புள்ளது.
நன்றி :தினமலர் நாளிதழ் - 30.08.2015

Sunday, February 5, 2017

Image may contain: 1 person

மார்பக புற்று நோய் - சிகிச்சை முறைகள்

கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!
‘‘மார்பகப் புற்றுநோயை எதிர்க்க, அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி, ஹார் மோன் தெரபி மற்றும் டார்கெட்டட் (targetted) தெரபி என பல மருத்துவசிகிச்சைகள் உள்ளன. நோயின் நிலை, தன்மையைப் பொறுத்து அது முடிவுசெய்யப்படும். சிலருக்கு அறுவை சிகிச்சையே முதல்கட்ட சிகிச்சையாக மேற்கொள்ளப்படும். அந்த சிகிச்சையின் பலன்களைப் பார்த்த பிறகே, பிற சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.

கீமோ தெரபி:
செல்லின் மாறுபாட்டினை கேன்சர் என்கிறோம். அந்த மாறுபட்ட ஆகாத செல்லினை அழிக்க ட்ரிப்ஸ் வழியாக மருந்து செலுத்தப்படும். அப்படி செலுத்தப்படும்போது மற்ற நல்ல செல்களும் பாதிக்கப்படக்கூடும். அதனால் முடி உதிர்வு, வாந்தி, பேதி, சோர்வு, எதிர்ப்புச் சக்தி குறைவு போன்ற வெளிப்பாடுகள் தென்படும். ஆனாலும், அவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இந்த சிகிச்சையானது 21 நாளுக்கு ஒருமுறை என… 4, 6, 8 முறை என வியாதியைப் பொறுத்து வழங்கப்படும்.

ரேடியோ தெரபி:
கதிர்வீச்சு வழியாக காமா, போட்டான் (மார்பகப் புற்றுநோயில் அதிகம் இதைத்தான் பயன்படுத்துவார்கள்) மற்றும் எலெக்ட்ரான் போன்ற கதிர்களை (தேவைக்கு ஏற்ப) செலுத்தி அதன் மூலமாக புற்று செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் முறையே ரேடியோ தெரபி சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையானது 5 வாரங்களுக்கு 25 முறை செய்யப்படும்.

ஹார்மோன் தெரபி:
மாத்திரை மூலமாக ஹார்மோன் தூண்டுதலால் ஏற்படக்கூடிய புற்று செல்களைத் திரும்ப வராமல் தடுக்கும் முறையே ஹார்மோன் சிகிச்சை முறையாகும். 5 வருடங்களுக்கு தினமும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்றவற்றை ஒப்பிடும்போது இதனால் வரக்கூடிய பக்கவிளைவுகள் மிக மிகக் குறைவே.

டார்கெட்டட் தெரபி:
ஊசி மூலமாக (சில நேரங்களில் மாத்திரை மூலமாக) குறிப்பிட்ட பாதிப்பு விளைவிக் கக்கூடிய செல்களை மட்டும் டார்கெட் வைத்து அழிக்கும் முறை டார்கெட்டட் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் ஒரு வருட காலத்துக்கு… 21 நாட்களுக்கு ஒருமுறை என 9 முதல் 17 ஊசிகள் வரை போடப்படும்.

மார்பகத்தை அகற்றாமல் சிகிச்சை… சாத்தியமா?
மார்பகப்புற்றால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணுக்கு, அதை அகற்றாமல் சிகிச்சை செய்வது சாத்தியமா? சாத்தியம்தான். ஒரு பெண்ணின் மார்பக அளவின் விகிதத்தைவிட கட்டி பெரியதாக இருந்தால், அங்கு விட்டுவைக்க மார்பகப் பகுதி எதுவும் மிஞ்சி இருக்காது. அதுபோன்ற சூழ்நிலையில், நோயாளியின் மார்பகத்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று விருப்பப்பட்டால் சில வழிமுறைகள் உள்ளன.

கீமோதெரபி கொடுத்து கட்டியின் அளவைக் குறைத்து பின்னர் அறுவை சிகிச்சை செய்யலாம். சில சமயம் கட்டியின் அளவைக் குறைப்பதற்குக் கொடுக்கும் வைத்தியத்தால் கட்டி கரைந்தேபோகக்கூடும். அந்தச் சமயத்தில் கட்டிதான் கரைந்துவிட்டதே என்று விட்டுவிடக்கூடாது. அது போன வேகத்தில் மீண்டும் வந்துவிடக்கூடும். எனவே, மருத்துவரின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுவது அவசியம். இதைத் தாண்டி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட இன்னும் பல சிகிச்சை முறைகள் உள்ளன.

மார்பக மறு உருவாக்கம்!
இழந்த மார்பகத்தை மீண்டும் உருவாக்குதலில், அந்தப் பெண்ணின் உடலின் பிற பகுதிகளிலிருந்து தசையை எடுத்து, அல்லது செயற்கை சிலிக்கான் மார்பகத்தைப் பொருத்தி சிகிச்சை செய்ய முடியும். இப்படிப் புதிதாக உருவாக்கப்படும் மார்பகம், மற்றொரு மார்பகத்தைவிட வித்தியாசமாக இருக்கலாம். அதோடு புதிதாக உருவாக்கப்பட்ட மார்பகத்தில் எந்தவித தொடு உணர்ச்சியும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. நம் உடம்பின் வேறு பகுதியில் இருந்து தசைகள் எடுத்துச் செய்தாலும் உணர்ச்சி இருக்காது. சிலருக்கு மார்பக அறுவை சிகிச்சை செய்யும் அதே நேரத்திலேயே இந்த மறு உருவாக்க அறுவை சிகிச்சையையும் செய்யமுடியும். ஒரு சிலருக்கு சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து இந்த மறு உருவாக்கத்தைச் செய்ய வேண்டிவரும். இதில் அந்தப் பெண்ணின் உடல்நிலை, வயது, என்ன வகையான மார்பகப் புற்றுநோய், இதுவரை என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இனி என்ன விதமான சிகிச்சை தேவைப்படும் என எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில்தான் எப்போது, என்னவிதமான மறு உருவாக்கம் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

இந்த சிகிச்சையின் விளைவுகள் பின்வருமாறு…

அறுவை சிகிச்சைத் தழும்புகள் இயல்பு நிலைக்குத் திரும்ப, கூடுதலாக சில நாட்கள் ஆகலாம்.

புதிதாக உருவாக்கிய மார்பகத்துக்கு ரத்த ஓட்டம் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் அதில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாகவோ இழக்க நேரிடலாம்.

கிருமித் தொற்று ஏற்படக்கூடும்.

புண் ஆறுவதற்கு சற்று அதிக காலம் ஆனால், அடுத்தகட்ட சிகிச்சையைத் தொடர்வதும் தாமதப்படும்.

மார்பக மறு உருவாக்கலில் இந்தியாவின் நிலை!

இந்தியாவில் மார்பக மறு உருவாக்க சிகிச்சை கோரும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

காரணங்கள்…

நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் மார்பக மறு உருவாக்கத்தைச் செய்ய முடியாது.

இந்த அறுவை சிகிச்சைக்கு செலவு மிக அதிகம்.

நம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் பலர் பலவிதமான யோசனைகளைச் சொல்வார்கள். அவர்களுடைய புரிதல் எல்லாம் முழுமையானதாக இருக்காது. ஆனால், அவை நோயாளியின் முடிவை வலுவாகப் பாதிக்கக்கூடியதாக இருக்கும்.

சிலிக்கான் செயற்கை மார்பகம் எளிதில் கிடைப்பதில்லை. நிறைய செலவும் ஆகும். அதோடு மார்பகத்தின் வடிவம் நன்றாக அமைய மறுபரிசீலனை செய்யும் நோக்கில் பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கின்றன. இதற்கு ஆகும் செலவும் மிக மிக அதிகம்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் மார்பக மறு உருவாக்கத்தை ஆர்வத்துடன் பரிந்துரைப்பதில்லை.


உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறையும்!
எந்தவொரு நோயாக இருந்தாலும் உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். அதுபோலத்தான் மார்பகப் புற்றுநோய்க்கும் அது அவசியமானது. குறிப்பாக, கீமோ தெரபி சிகிச்சையின்போது நோயாளி தன் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

சமச்சீரான உணவே மிகச்சிறந்த மருந்து. அதை உண்டால்தான் நோய் சீக்கிரம் குணமாகும். அதோடு உடம்பும் சிகிச்சையை சந்திக்கும் அளவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். பிடித்த உணவை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம்.

உணவில் தினமும் ஐந்து வகைப் பழங்களும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் நார்ச்சத்து உட்பட அனைத்துவிதமான சத்துக்களும் கிடைத்துவிடும்.

சரியான உணவுப் பழக்கமும், முறையான உடற்பயிற்சியும் மார்பகப் புற்றுநோயாளிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சி, கலிஃபோர்னியா மாகாணத்தில் லா ஜோலாவில் உள்ள `UCSD’ புற்றுநோய் மையத்தில் இயங்கும் புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது. 1,490 பெண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் 30 பெண்கள் மட்டுமே ஐந்து விதமான காய்கறிகள் மற்றும் பழங்களுடன் உணவு உண்பதாகவும், வாரத்தில் ஆறு நாட்கள் தினமும் 45 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். நோய் பாதிப்பில் இந்தப் பெண்களுக்கு, மற்ற பெண்களைவிடக் குறைவான அபாயமே உண்டு என்று, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

புற்றுநோயாளிகள் பால் பொருட்கள் சாப்பிடக்கூடாது என்று ஜோன் பிளான் என்ற விஞ்ஞானி சொல்லியிருக்கிறார். ஆனால், அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. கோதுமைப் புல் சாறு அல்லது பவுடர், காளான் போன்றவற்றைச் சாப்பிடலாம். ஆனால், கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்படும்போது மட்டும் இவற்றைச் சாப்பிடக்கூடாது.

அதிகப் புரதச்சத்து கொண்ட உணவான சோயாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும் என்று சொல்லப்பட்டாலும், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

மீன், கோழி போன்றவற்றை எண்ணெயில் பொரிக்காமல் வேகவைத்த சமையலாகச் சாப்பிடலாம். மாட்டுக் கறி வேண்டாம்.

துணை சிகிச்சைகள்!
மார்பகப் புற்றுநோயாளிகள் பலருக்கு வலியைக் குறைக்கவும், பக்கவிளைவுகளைக் குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் துணை சிகிச்சைகள் ஏராளமாக உள்ளன. அந்தப் பட்டியல் இங்கே. இது முழுமையான பட்டியல் கிடையாது. மேலும், இதைச் செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டியது மிக மிக அவசியம்.

தியானம்

பிரானிக் ஹீலிங்

ரெய்கி

யோகா

யோகா நித்ரா

சுவாசப் பயிற்சி

பிரணாயாமம்

மந்திரம் ஜெபித்தல்

ரெஃப்ளெக்ஸாலஜி

அரோமா தெரபி

ஆயுர்வேத மசாஜ்

அக்குபஞ்சர்

இசை சிகிச்சை

கலை சிகிச்சை

ஜர்னலிங்

உணர்ச்சிபூர்வ சிகிச்சை

சிகிச்சையும் தாம்பத்ய உறவும்!
மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததில் இருந்து சிகிச்சை முடியும்வரை பெண்கள் பல வகைகளில் பாதிக்கப்படுவார்கள். அதில் தாம்பத்ய உறவும் அடங்கும். இது பற்றி மருத்துவர்கள்கூட வெளிப்படையாக எதுவும் பேசுவதில்லை. இதைக் காரணம் காட்டி சில திருமண உறவுகள் முறிவதைக்கூட நாம் பார்த்திருக்கலாம்.

அதற்கான காரணங்களாக… உடல் அழகு போய்விடுவதால் ஏற்படும் பதற்றம், மார்பகம் மற்றும் பிறப்புறுப்பில் வரக்கூடிய வலி, சிகிச்சை காலகட்டத்தில் வரக்கூடிய மன அழுத்தம்… இன்னும் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும் இவையெல்லாம் கடந்த ஒரு புரிதல் இருந்தால் அது கொடுக்கும் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டுவர மிகப்பெரிய மருந்தாக விளங்கும்!

நன்றி : அவள்விகடன் - 09.02.2016

Monday, January 23, 2017

தலைமுடி உதிர்வதை தடுக்க


தலைமுடி உதிர்வதை தடுக்க

வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி?
இன்றைய பரபரப்பான காலத்தில் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இந்த தலைமுடி உதிர்வதை நினைத்து வருந்துவோர் பலர். இதனால் இரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்களும் ஏராளம். தலைமுடி உதிர்ந்தால், பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதுண்டு. இப்படி தலைமுடி அதிகம் உதிர்வது ஒருவருக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கவலைப்படாதீர்கள். தலைமுடி உதிர்வதை நம் வீட்டு சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே நிறுத்தலாம். முக்கியமாக வெங்காயம் தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். ஏனெனில் வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இந்த சல்பர் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜென் உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இதில் கொலாஜென் தான் தலைமுடியின் வளர்ச்சிக்கு காரணமான ஒன்று. ஒரே வாரத்தில் முடி உதிர்வதைத் தடுக்க தலைக்கு பூண்டு யூஸ் பண்ணுங்க...
சரி, தலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது என்று நீங்கள் கேட்கலாம். இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும் வெங்காயத்தைப் பயன்படுத்தும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வெங்காய சாறு மற்றும் பாதாம் எண்ணெய்
வெங்காய சாற்றினை பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து மைல்டு ஷாம்பு போட்டு அலசுங்கள். இதனால் பாதாம் எண்ணெய் தலைமுடிக்கு பொலிவைத் தரும் மற்றம் வெங்காயச் சாறு மயிர் கால்களை வலிமைப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும்.
வெங்காய சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் தேங்காய் 
எண்ணெயும் தலைமுடி உதிர்வதை எதிர்த்துப் போராடும். அத்தகைய தேங்காய் எண்ணெயை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும்.
வெங்காய சாறு மற்றும் ஆலிவ் ஆயில் 

தலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காய சாறு மற்றும் ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்த கலவை. இந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
வெங்காய சாறு மற்றும் வெதுவெதுப்பான நீர் 
வெங்காய சாற்றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, ஒரே மாதத்தில் முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கலாம்.
வெங்காய சாறு மற்றும் எலுமிச்சை 
வெங்காய சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, தலையை மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கி, ஸ்கால்ப் சுத்தமாகும்.
வெங்காயம் மற்றும் தயிர் 
வெங்காயத்தை அரைத்து, அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச, முடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் மென்மைத்தன்மையும் பாதுகாக்கப்படும்.
போல்ட் ஸ்கை » தமிழ் » அழகு » Hair Care -22.01.2016

Thursday, January 19, 2017

கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை!


கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை! 

நலம் நல்லது-54 
நம் பாரம்பர்யம், கருத்தரித்த பெண்களுக்காக எத்தனையோ வைத்திய முறைகளைத் தேடித்தேடிச் சொல்லியிருக்கிறது. அவற்றையெல்லாம் நவீன மருத்துவ முறை வந்த பிறகு, நாம் மறந்துவிட்டோம். 
கர்ப்பிணிப் பெண்கள் ஆங்கில மருத்துவத்தோடு, நம் பாரம்பர்ய மருத்துவ விஷயங்களையும் சேர்த்துக் கடைப்பிடிப்பது, ஆரோக்கியமான குழந்தைக்கும் எளிதான பிரசவத்துக்கும் வழிவகுக்கும். அவற்றைப் புறக்கணிக்கவே கூடாது. 

மகப்பேறு மருத்துவம், மிக அவசியமான ஒன்று. குடும்ப மருத்துவரை அணுகி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிந்துகொள்வது; தன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைச் சரிபார்ப்பது; சர்க்கரைநோய் இருக்கிறதா, உயர் ரத்த அழுத்தத்தின் அளவு என்ன என அறிந்துகொள்வது; தொற்றுநோய் ஏதாவது இருக்கிறதா எனப் பரிசோதனை செய்வது... எல்லாமே கர்ப்பிணிப் பெண்ணுக்கு முக்கியம்தான். 

ஆனால், பெண் கருத்தரித்திருக்கும் காலம் முழுவதும் மருத்துவமனையையும் மருத்துவரையும் மட்டுமே நம்பி இருக்கும் சூழல் இன்று இருக்கிறது. 

நம் தமிழர் மருத்துவம் கர்ப்பிணிப் பெண்களுக்கு சில நல்ல வழிகளைக் காட்டியிருக்கிறது. அவற்றைப் பின்பற்றினால் பிரசவம் சுகமாகும். அவற்றில் சில... 

* கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பகால வாந்தி, ரத்தசோகை, முதல் ட்ரைமெஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுக்கள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும். 

* காரணமற்ற வெள்ளைப்போக்குக்கு, முளைகட்டிய வெந்தயக் கஞ்சி, உளுந்தங்கஞ்சி சிறந்த தீர்வைத் தருபவை. 
* கர்ப்பகால ஆரம்பத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கர்ப்பப்பையில் ஏற்படும் தேவையற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு கொட்டையுள்ள கறுப்பு பன்னீர் திராட்சை நல்லது. 

* தாமரைப்பூ, தக்கோலம், நெய்தல் கிழங்கு, செங்கழுநீர்க் கிழங்கு ஆகியவை கர்ப்பகால சங்கடங்களில் இருந்து மீள சித்த மருத்துவம் சொல்லும் மருத்துவ உணவுகள். இவை ஃபோலிக் அமிலம் நிறைந்தவை; வலி நிவாரணி தன்மை உடையவை; வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றல் உடையவை. இரும்பு மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தவை. 

* வண்ணங்கள் நிறைந்த பழங்கள், கீரை, மீன், முட்டை, பால், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி சாதம் ஆகியவை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடவேண்டியவை. 

* விலை உயர்ந்த எந்த டானிக்குகளும் தர முடியாத பயனை, முருங்கைக்கீரை, பாசிப் பருப்பு கலந்த பொரியல், கேழ்வரகு அடை ஆகியவை தந்துவிடும். 

* முன் பக்கம் சிறுநீர்ப்பையும் பின் பக்கம் மலக்குடலும் அழுத்தப்படுவதால், முறையே நீர்ச் சுருக்கமும் மலச்சிக்கலும் ஏற்படுவது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சர்வ சாதாரணம். இதற்கு, தினமும் நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், மருத்துவர் ஆலோசனைப்படி இரவில் கடுக்காய் பிஞ்சு ஆகியவற்றைச் சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். 

* கர்ப்ப காலத்தில் மட்டும் சில பெண்களுக்கு சர்க்கரைநோய் (Gestational Diabetes) ஏற்படும். இதற்காகக் கலங்கத் தேவையில்லை. இந்தப் பெண்களுக்கு உரிய மருத்துவமும் வெள்ளைச் சர்க்கரை சேர்க்காத உணவையும் கொடுக்கவேண்டியது அவசியம். தினமும் உணவில் வெந்தயத்தையும் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக்கொள்வது கூடுதலாக நல்லது. 

அறிவியல் வசதி இல்லாத அந்தக் காலத்திலேயே 

`செப்பியதினம் ஒன்றில் கடுகு போலாம்’ என 23 மி.மீ அளவே இருக்கும் கர்ப்பப்பையையும்,
`பூவிலே இரண்டு திங்கள் கழுத்துண்டாம், 
புகழ் சிரசு முறுப்பாகும்’ என 
ஐந்தாம் மாதம் காது, மூக்கு உதடும், 
ஏழாம் மாதம் தலைமுடியும் தெரியும் என, 
கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு அகத்தியர் வல்லாதியிலும், 
பராசர சேகரத்திலும், 
யூகி சிந்தாமணியிலும் 
சொன்னவர்கள் நம் சித்தர்கள். 

அவர்கள் சொன்ன வழிமுறைகளைக் கடைப்பிடிப்போம்! ஆரோக்கியமான பிரசவத்துக்கு வழி வகுப்போம்! 

தொகுப்பு: பாலு சத்யா

நன்றி : விகடன் செய்திகள் -20.01.2017

Wednesday, January 11, 2017

டூவீலர் ஓட்டுவதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்


டூவீலர் ஓட்டுவதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

தேவை அதிக கவனம்
பறந்து செல்ல விரும்பும் பெண்களுக்குக் கிடைத் திருக்கும் புதிய சிறகுகளே இருசக்கர வாகனங்கள். காற்றைக் கிழித்துப் பறக்கும் நொடியில், காலின் கீழே வானம் நழுவும். உடல்தொட்டு வருடும், காற்றின் சந்தங்களுக்கு வார்த்தைகள் பிடித்து வந்து, மனம் கவிதை வாசிக்கும்!

ஆனால், ‘`இருசக்கர வாகனங்களின் வடிவமைப்பு மற்றும் அதை இயக்கும் முறைகளால், பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்புப் பிரச்னைகள் பலரும் அறியாதது’’ என்று எச்சரிக்கிறார், சேலத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ரம்யா.

‘`பெண்கள் இருசக்கர வாகனத்தில் சரியான பொசிஷனில் அமர்ந்து இயக்க வேண்டும். மாறாக, தன்னை வருத்தி அமர்ந்து ஓட்டும்போது, அவர்களின் எடை முழுவதையும் பிறப்புறுப்பு தாங்க நேர்வதால், அவ்விடம் மரத்துப் போவதோடு, நாளடைவில் அவர்களின் தாம்பத்ய இன்பம் உணரும் தன்மையும் குறைந்துபோகும்’’ என்று அதிர்ச்சித் தகவல் கூறிய ரம்யா, அதுபற்றி விளக்கமாகப் பேசினார்.

ஆண்கள் சந்தித்த பிரச்னை இப்போது பெண்களுக்கும்…

‘`சைக்ளிக் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் பெரினியல் பெயின் (Perineal Pain) பிரச்னையை, முன்னர் சைக்ளிங் விளையாட்டில் ஈடுபடும் ஆண்கள் மட்டுமே சந்தித்து வந்தனர். இப்போது, இருசக்கர வாகனம் இயக்கும் பெண்களில் 60% பேருக்கு இந்தப் பாதிப்பு உள்ளது.

என்ன காரணம்?

சரியான பொசிஷனில் அமர்ந்து இருசக்கர வாகனத்தை இயக்கும்போது, உடலின் எடை இடுப்பு எலும்பின் அடிப்பகுதியில் இறங்கும். அதுவே, ஸீட்டின்முன் நகர்ந்தவாறு அமரும்போது, உடலின் எடை பிறப்புறுப்புக்குச் செல்லும். எலும்புகளைப் போல தசைகளால் எடையைத் தாங்கமுடியாது என்பதால், அந்தத் தசைகள் பாதிக்கப்படும். 
குறிப்பாக, நாப்கின் பயன்படுத்தும் மாதவிடாய் நாட்களில், இந்த அழுத்தம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.  உடலின் எடையைத் தாங்குவதோடு, வாகனம் இயக்கும்போது அழுத்தம், உராய்வுக்கும் உள்ளாவதால் அந்தத் தசை நரம்புகள் நாளடைவில் மரத்துப்போகும். சிலிர்ப்பு, கூச்சம் என மிக நுண்ணிய உணர்வுகள் பரவும் பிறப்புறுப்புத் தசைகள் மரத்துப்போவது மற்றும் பாதிப்புக்குள்ளாவதால், அந்த உணர்வுகளை உறுப்பு உணரும் தன்மை பெண்களுக்குக் குறையும். அதன் விளைவாக, தாம்பத்யமே அலுத்துப்போகலாம். 

அறிகுறிகள் என்னென்ன?

* பிறப்புறுப்பில் வலி மற்றும் எரிச்சல், சில நேரங்களில் மரத்துப்போன உணர்வு

* குதிரைவால் எலும்பில் வலி (முதுகுத் தொடரின் கடைசி எலும்பு) வலி

* தொடை இடுக்குகளில் வலி

* தாம்பத்யத்தின்போதும் பின்னரும் வலி மற்றும் திருப்தியின்மை

* சிறுநீர் கழிக்கையில் வலி மற்றும் எரிச்சல், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அடிக்கடி ஏற்படுவது, சிறுநீர் முழுமையாக வெளியேறாத உணர்வு

 * தொடைகள்,  வயிற்றை இறுக்கிப்பிடிக்கும் ஜீன்ஸ் உள்ளிட்ட உடைகள் அணியும் போது ஏற்படும் அசௌகர்யம்.

என்ன தீர்வு?

* இருசக்கர வாகனத்தை இயக்கும்போது  எடையை இடுப்பு எலும்பு தாங்குவது போல் நேராக அமர வேண்டும்.

* எடை அதிகம் உள்ளவர்கள் டபுள்ஸ் செல்லும்போது, வாகனத்தை இயக்குபவர் ஸீட்டின் நுனிக்குத் தள்ளப்படுவார் என்பதால், அவற்றைத் தவிர்க்கலாம். ட்ரிபுள்ஸ் செல்லக் கூடாது.

* இருசக்கர வாகனத்தில் அதிக தூரப் பயணங்களைத் தவிர்க்கலாம். வேறுவழியின்றி செல்ல நேர்ந்தால், உடலை வருத்தாமல் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளலாம். பயணங்களின்போது ஜீன்ஸ், லெகிங்ஸ் போன்ற இறுக்கமான உடைகளைத் தவிர்க்கலாம்.

* பெண்கள் சரியான நிலையில் அமர்ந்து வாகனம் இயக்க நினைத்தாலும், பொதுவாக இருசக்கர வாகனங்களின் இருக்கை அமைப்பே, முன்புறம் வழுக்கிக் கொண்டு வருவது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர்க்கும்விதமாக, முன்பகுதியில் ஸீட்டின் அகலத்தை, உயரத்தை அதிகரித்து மறுவடிவமைப்பு செய்து கொள்ளலாம். 

* உயரம் குறைவான பெண்கள், தங்கள் உயரத்துக்கேற்ப ஸீட்டின் உயரத்தை மறுவடி வமைப்பு செய்து பயன்படுத்தலாம்.

* குஷன் ஸீட் பயன்படுத்துவது சிறந்தது.

சிகிச்சைகள் உண்டு!

பெரினியல் பெயின் பிரச்னையில் இருந்து விடுபட, எளிமையான பிசியோதெரபி பயிற்சிகளைச் செய்யலாம். பிறப்புறுப்பின் ரத்த ஓட்டம் அதிகரித்து நுண்மையான உணர்வுகளைத் தூண்டும் கெஜல்ஸ் பயிற்சிகள் (Kegels exercise) செய்யலாம். வாரம் ஒரு முறை பாத்டப்பில் வெதுவெதுப்பான நீரில் அமரலாம். பிறப்புறுப்பில் தொற்று உள்ளிட்ட வேறு பிரச்னைகள் இருப்பின், அதற்கான மருத்துவச் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்’’ – வலியுறுத்துகிறார் ரம்யா.

நன்றி : அவள்விகடன் - 27.01.2017

Wednesday, January 4, 2017

குழந்தையின்மை பிரச்னைக்கு 5 காரணங்கள்!

குழந்தையின்மை பிரச்னைக்கு 5 காரணங்கள்! 

பத்து வருடங்களுக்கு முன்பு வரை திருமணமாகி நான்கைந்து வருடங்கள் குழந்தையில்லாமல் போனால் பிறகுதான் மருத்துவரைச் சந்திக்க வந்துகொண்டிருந்தார்கள். 

ஐந்து வருடங்களுக்கு முன்புவரை திருமணமான அடுத்த மாதமே குழந்தை இல்லை என மருத்துவமனைகளுக்குப் படையெடுக்க ஆரம்பித்தார்கள். 

இன்று என்ன டிரெண்ட் தெரியுமா? திருமணத்துக்கு முன்னரே மருத்துவரைச் சந்தித்து, தனக்கு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா? ​திருமணத்துக்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருக்குமா என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். 

இது ஆரோக்கியமான, வரவேற்கத்தக்க விஷயம். ஆனாலும் இன்னொரு பிரிவினர் இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் உணவுமுறையிலும் வாழ்க்கை முறையிலும் தவறுகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக, குழந்தையின்மைப் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள்...” என்கிறார் மகப்பேறு மருத்துவர் ப்ரியா.
குழந்தையின்மைப் பிரச்னையைத் தவிர்க்க அவசியமான ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்கிறர் டாக்டர் ப்ரியா...
பிசிஓடி பயங்கரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!
பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’ (பிசிஓடி) எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னை இன்று மிக அதிகமாகிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றம், ஜங்க் உணவுகள், அதீத மன அழுத்தம், பரம்பரைத் தன்மை - இந்த நான்கும்தான் பிசிஓடிக்கான பிரதான காரணங்கள். 

பிசிஓடி பிரச்னை குழந்தையின்மைக்குக் காரணமாவதுடன், சர்க்கரைநோய் நெருக்கத்தில் இருப்பதற்கான எச்சரிக்கை மணியும்கூட. எனவே, அதை ப்ரீடயப்பட்டிக் அறிகுறியாகவே கருத வேண்டும். மட்டுமின்றி ஹைப்பர் டென்ஷன், மெட்டபாலிக் சிண்ட்ரோம், பருமன் போன்றவையும் வரும் அபாயம் அதிகம்.
உடற்பயிற்சியில் உறுதிகொள்ளுங்கள்!
என்னதான் வசதிகள் இருந்தாலும், ஆரோக்கியத்துக்காக சில விஷயங்களில் உடலை வருத்திக்கொண்டுதான் ஆக வேண்டும். வீட்டைவிட்டு இறங்கினாலே வண்டி, எல்லாவற்றுக்கும் உதவியாள் போன்றவற்றை மறந்து, உடற்பயிற்சிகளை தினசரிக் கடமையாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம்
திருமணத்தையும் முதல் கர்ப்பத்தையும் தள்ளிப் போடாதீர்கள்!
சரியான வயதில் திருமணம் என்பது இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு மிக மிக முக்கியம்.30 பிளஸ்ஸில் திருமணம்... பிறகு 2, 3 வருடங்கள் இடைவெளி... என வருடங்களைக் கடத்துவது ஆபத்தானது. வயதைக் கடந்து கருத்தரிப்பதே இன்று சவாலாக இருக்கிறது. அப்படியே கருத்தரித்தாலும், அதைக் கலைக்கிற பெண்களும் இருக்கிறார்கள். கருவைக் கலைக்க தானாகவோ அல்லது தெரிந்த மருத்துவரிடம் கேட்டோ மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள். 

அப்படி மாத்திரை எடுக்கும்போது, கருவானது முழுமையாகக் கலையாமல், மிச்ச சொச்சங்கள் உள்ளேயே தங்கிவிடும். அப்படி மிச்சம் இருந்தால், எண்டோமெட்ரியம் பகுதியில் தொற்று வரும். அடுத்த குழந்தை உருவாகாது. ரத்தப்போக்கு இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் ஸ்கேன் சோதனை அவசியம்.
கருவைக் கலைக்க நீங்களாக மாத்திரை எடுக்காதீர்கள்!
7 முதல் 9 வாரக் கரு என்றால் மட்டுமே அதைக் கலைக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். அதைத் தாண்டிவிட்டால், மாத்திரைகளின் மூலம் கலைப்பது பாதுகாப்பானதல்ல. டி அண்ட் சி முறைப்படிதான் கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும்.
இது எதுவும் தெரியாமல் கருவைக் கலைக்க மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்கள், நான்கைந்து நாட்கள் ரத்தப்போக்கு முடிந்ததும், ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். கர்ப்பப்பையில் கருவின் மிச்சமோ, ரத்தக் கட்டிகளோ இல்லையா என்று பார்க்க வேண்டும். அதேபோன்று எண்டோமெட்ரியம் அடர்த்தி அதிகமாக இருந்தாலும் பிரச்னைதான். அதற்கும் டி அண்ட் சிதான் செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பப்பையை தேவையின்றி சுரண்டி சுத்தப்படுத்துவதன் மூலம் புண்கள் ஏற்படும். அது அடுத்த கர்ப்பத்திலும் பிரச்னைகளைத் தரலாம்.

எனவே, சரியான வயதில் திருமணம்... முதல் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடாமல் சரியான வயதில் பிள்ளைப் பேறு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பருமனைக் கட்டுப்படுத்தும் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பின்பற்றுதல் போன்றவை மிக அவசியம்.
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!
பிசிஓடியை கட்டுப்படுத்த பட்டையைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து குடிப்பதும், இரவே ஊறவைத்த வெந்தயத்தை காலையில் எடுத்துக்கொள்வதும் உதவும்.
14, 15 வயதிலேயே பிசிஓடி இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். திடீரென பெண் குழந்தைகளின் உடலில் எடை எகிறும். முகம் மற்றும் உடல் முழுவதும் தேவையற்ற ரோம வளர்ச்சி இருக்கும். இதையெல்லாம் அலட்சியப்படுத்தாமல், உடனே மருத்துவரைச் சந்தித்து பிசிஓடிக்கான அறிகுறிகளா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.
நன்றி : விகடன் செய்திகள் - 03.01.2017