வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க!
என்னுடைய பெயர் ராமலிங்கம். என்னிடத்தில் சக்ரவர்த்தி என்பவர் கடந்த 01.10.2011 அன்று அவரது குடும்பச் செலவுகளுக்காக கடனாக ரூ. 50,000/- பெற்றுக் கொண்டு அதற்கு வட்டியாக ரூ.100/-க்கு ரூ.1/- வீதம் வட்டி தருவதாகவும், ஒப்புக் கொண்டு, நான் கேட்கும்போது என்னிடமோ, அல்லது எனது ஆணை பெற்றவரிடமோ கடனை செலுத்திவிடுவதாகவும் கூறி ஒரு புரோ நோட்டு எழுதிக் கொடுத்துள்ளார்.
ஆனால், கடனை பெற்றுக் கொண்ட பிறகு, பலமுறை நான் நேரில் கேட்ட பிறகும் ஒரு முறைகூட எனக்கு வட்டிப்பணம் செலுத்தவில்லை, அசலையும் தரவில்லை. அதனால், 06.02.2012 அன்று அவருக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினேன். அதனை 10.02.2012 அன்று பெற்றுக் கொண்ட அவர் எனக்கு பதில் ஏதும் அனுப்பவில்லை. கடனையும் பைசல் செய்யவில்லை.
இந்நிலையில், 16.11.2012 அன்று ஷை சக்ரவர்த்தி இறந்துவிட்டார். அதனால், என்னிடம் சக்ரவர்த்தி வாங்கிய கடனை, அவரது வாரிசுகளான அவரது மனைவி திருமதி உஷா சக்ரவர்த்தி மற்றும் அவரது மகள் உமா மகேஸ்வரி (வயது 17), அவரது மகன் செல்வ கணபதி (வயது 15) ஆகியோரை அணுகி கேட்டபோது அவர்கள் எனது கடனை பைசல் செய்யவில்லை.
அதனால், சக்ரவர்த்தியின் மனைவியான திருமதி உஷா சக்ரவர்த்தி அவர்களுக்கு கடந்த 29.09.2014 அன்று வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினேன். குடும்பச் செலவிற்காக சக்ரவர்த்தி வாங்கிய கடனானது அவரது குடும்ப உறுப்பினர்களை கட்டுப்படுத்தும்.
ஆகவே, எனது கடனை வட்டியுடன் செலுத்த மேற்கண்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
பிரதிவாதிகள் தரப்புல என்ன சொல்றாங்கன்னு கேப்போம் வாங்க!
இந்த வழக்கில் சக்ரவர்த்தியின் மனைவி தோன்றாதரப்பினர் ஆகிவிட்டதாலும், அவரது குழந்தைகள் மைனர்கள் என்பதாலும், நீதிமன்ற காப்பாளராக வழக்கறிஞர் செல்வி ஜெய அருணி அவர்கள் தாக்கல் செய்துள்ள எதிருரையில்,
வாதி கூறுவது அனைத்தும் தவறு. சக்ரவர்த்தி கடன் வாங்கவில்லை. அப்படியே வாங்கி இருந்தாலும், அது அவரது மைனர் குழந்தைகளுக்குத் தெரியாது. எனவே அது அவர்களை கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார். ஆகவே இந்த வழக்கு செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
******************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 24.03.2018
வழங்கப்பட்ட தீர்ப்பு
மாவட்டஉரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி
முன்னிலை: திருமதி.ஏ.உமாமகேஸ்வரி பி.எஸ்ஸி.¸பி.எல்.¸
மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி
திருவள்ளுவராண்டு 2046¸ ஜய ஆண்டு¸ பங்குனித்திங்கள் 30ஆம் நாள்
2015 ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13 ஆம் நாள் திங்கட்கிழமை
அசல் வழக்கு எண்.238/2014
ராமலிங்கம் … வாதி
/எதிர்/
1. உஷா சகக்ரவர்த்தி
2. மைனர் உமாமகேஸ்வரி(வயது சுமார் 17)
3. மைனர் செல்வகணபதி (வயது சுமார் 15) (மைனர் பிரதிவாதிகளுக்காக நீதிமன்ற காப்பாளர் வழக்கறிஞர் செல்வி.எஸ்.ஜெயஅருணி)
…பிரதிவாதிகள்
வழக்கிலிருந்து முக்கிய
குறிப்புகள்:
மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர் 17.03.2015 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1) தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானதா¸ செல்லத்தக்கதா¸ தகுந்த மறுபயன் கொண்டதா?
2) தாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா?
3) வாதி வழக்குரையில் கோரியுள்ள தொகை மற்றும் அதற்கான பின்வட்டி அவருக்கு கிடைக்கத்தக்கதா?
4) வாதிக்கு கிடைக்கக்கூடிய இதர பரிகாரங்கள் என்ன?
தீர்ப்புரை:
கடனுறுதிச்சீட்டு வழக்குகளைப் பொறுத்தவரை கடனுறுதிச்சீட்டு உண்மையானது¸ செல்லத்தக்கது¸ சரியான மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது வாதியால் நிரூபிக்கப்படும்பட்சத்தில் அந்த நிரூபணமானது பிரதிவாதியால் பொய்ப்பிக்கப்படும்வரை மெய்ப்பிக்கப்பட்டதாகவே கருதப்படும். அந்த வகையில் இந்த வழக்கை நிரூபிக்கும் வகையில் வாதி¸ தன்னை வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதில் சாட்சி கையெழுத்து போட்ட சண்முகம் என்பவர் வா.சா.2 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானது¸ செல்லத்தக்கது¸ தகுந்த மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
ஆனால் பிரதிவாதி தரப்பில் எவ்வித சாட்சிகளும் விசாரிக்கப்படவில்லை. மேலும்¸ கடனுறுதிச்சீட்டு வழக்குகளைப் பொறுத்தவரை ஒருவர் தாவா கடனுறுதிச்சீட்டில் பணம் பெற்றுக்கொண்டு கையெழுத்து போட்டாலே தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானதாக கருதப்படும். மேற்கொண்டு விசாரிக்கப்படும் சாட்சிகள் அனைத்துமே அதனை வலுப்படுத்தும் சாட்சிகளாகும். எனவே கடனுறுதிச்சீட்டு உண்மையானது என்பதை வாதி தனது தரப்பு சாட்சிகள் மற்றும் சான்றாவணங்கள் வாதியின் கட்சியை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை மறுத்துரைக்கும் பிரதிவாதிகள்தான் அவரால் சொல்லப்படும் சூழ்நிலைகளை நிரூபிக்கக் கடமைப்பட்டவர்.
ஆகவே நிரூபிக்கும் சுமையானது வாதியிடமிருந்து பிரதிவாதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது.ஆனால் பிரதிவாதிதரப்பில் எவ்வித சாட்சிகள் கொண்டோ¸ சான்றாவணங்கள் கொண்டோ தங்களது தரப்பை நிரூபிக்கவில்லை.
எனவே மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 118 ன்படியும்¸ வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.5 வரையிலான சான்றாவணங்கள் மூலமும்¸ வா.சா.1 மற்றும் வா.சா.2சாட்சிகளின் சாட்சியங்களின் மூலமும் தாவா கடனுறுதிச்சீட்டு எழுதிக்கொடுக்கப்பட்டது உண்மையானது¸ அது செல்லத்தக்கது¸ அது தகுந்த மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்று முடிவுசெய்து எழுவினா எண்.1-க்கும்¸ அதன் அடிப்படையில் வாதி தாவாவில் கோரியவாறு தொகையை வட்டியுடன் பெற அருகதையுடையவர் என எழுவினா எண்.2-க்கும் இந்நீதிமன்றம் முடிவு செய்து மேற்கண்ட வகையில் எழுவினாக்களுக்கு தீர்வு காணப்பட்டு வாதிக்கு ஆதரவாக தீர்மானிக்கப்படுகிறது.”
நன்றி : http://www.tamiljudgements.org