disalbe Right click

Showing posts with label மாற்றுத்திறனாளிகள். Show all posts
Showing posts with label மாற்றுத்திறனாளிகள். Show all posts

Wednesday, January 10, 2018

சிறப்பு அடையாள அட்டை

 ஆதார் கார்டு போல மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்.
ஆதார் கார்டு போல் நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான 'யுனிக் ஐடி' கார்டுகளை வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளதாக, மாற்றுத் திறனாளிகள் நல துறை அதிகாரிகள்  கூறியுள்ளனர்.
மாநில அரசுகள் மூலம்
ஒவ்வொரு மாநிலமும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று தனியாக  அடையாள அட்டை வழங்கியுள்ளது.  அந்த அட்டையை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், தொழில் தொடங்க கடன் உதவிகளை மாநில அரசுகள்,  வழங்கி வருகிறது.
நாடு முழுவதும் 
நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் அட்டையைப் போல் ஒரே மாதிரியான யுனிக் ஐடி கார்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதுஆதார் அட்டையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் போல், இந்த அடையாள அட்டையிலும் 40 சதவீதத்துக்கு மேல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளியின் பெயர், வயது, முகவரி, ஆதார் எண், ஊனம் தொடர்பான விபரங்கள் மற்றும் குயிக் ரெஸ்பான்ஸ் கோடு ஆகியவை  இடம் பெற்றிருக்கும்.
இந்த அடையாள அட்டை பெற என்ன செய்ய வேண்டும்?
மாற்று திறனாளிகள் தங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஜாதிச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படம் இணைத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு பிரத்யேக மென்பொருள், லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
இலவசம்
அவர்களின் புகைப்படத்துடன், முழு விபரங்களையும் அங்கு பதிவேற்றம் செய்து மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும். மாற்று திறனாளிகளுக்காக ஆதார் கார்டில் இருப்பது போல் கை விரல் ரேகை, கண் விழி பதிவு செய்யும் முறையில் இருந்து இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.01.2018

Sunday, August 13, 2017

மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு ஓர் இணையதளம்

மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு ஓர் இணையதளம்
வாழ்வில், பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறலாம். ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கோ, வாழ்க்கையே பிரச்னை தான்.
இதில், மணவாழ்வுக்கான தேடலோ, இவர்களுக்கு போர்க்களம் தான். அதனாலேயே பலருக்கு திருமணம் என்பது கனவாகவே முடிந்து விடுகிறது. ஆனால், மற்றவர்களை விட, மாற்றுத்திறனாளிகளுக்கு தான், மணவாழ்க்கை முக்கியம்; காரணம், துணையும், அன்பும், ஆறுதலும் இவர்களுக்கு தான் அதிகம் தேவை.
இதை, எத்தனை பேர் உணர்ந்தனரோ தெரியாது... ஆனால், சென்னை சாயி சங்கரா மேட்ரி மோனியல்ஸ் நிறுவனர், நா.பஞ்சாபகேசன் நன்கு உணர்ந்தார். காரணம், இவரும் ஒரு மாற்றுத்திறனாளி!
கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக, தாம் நடத்தி வரும் மேட்ரிமோனியல் மூலமாக, பல ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்தி வைத்ததுடன், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான இணையை தேர்ந்தெடுக்கwww.saithunaimatri.com என்ற இணையதளத்தை துவக்கி உள்ளார்.
ஜாதி, மத வேறுபாடின்றி, முற்றிலும், இலவச சேவையாக நடத்தப்படும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி, தங்களுக்கு பொருத்தமான துணையை மாற்றுத் திறனாளிகள் தேடிக் கொள்ளலாம்; மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்ய விரும்புவோரும் இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம். இது, மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், யாரும் இந்த தளத்தை தவறாக பயன்படுத்தி விடக் கூடாது என்பதற்காக, பதிவதற்கு சில வரைமுறைகள் உள்ளன. இணையதளம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள், நேரில் வந்தும் பதிவு செய்யலாம். இது பற்றிய முழு விவரத்திற்கும், 78109 81000 - 98403 30531 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குள் திருமணம் செய்வதால், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்குமோ என்ற பயமோ, சந்தேகமோ வேண்டாம்; நார்மலான குழந்தைகள் பிறக்கும். இதை மெய்ப்பிக்கும் வகையில், திருமணம் செய்து, நார்மலான குழந்தைகளை பெற்று, சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும், மாற்றுத்திறனாளி தம்பதிகளை மேடையேற்றி, பார்வையாளர்களுக்கு நம்பிக்கையை விதைத்து வருகிறார், பஞ்சாபகேசன்.
பார்ப்பதில், கேட்பதில், பேசுவதில், நடப்பதில், புரிந்து கொள்வதில் என்று, நாட்டில்5 சதவீத மக்கள், ஊனமுற்றவர்கள் என்ற அடையாளத்தோடு இருக்கின்றனர். இவர்களுக்கு, உடலில் தான் ஊனமே தவிர, மனதில் எவ்வித ஊனமில்லை. இவர்கள், தகுந்த துணையோடு, மன மகிழ்ச்சியுடன், ஆனந்தத்துடன் வாழ, இந்த இணையதளம் உதவுகிறது.
'நாம் தான் மாற்றுத்திறனாளி இல்லையே... நமக்கு எதற்கு இந்த கட்டுரை...' என்று, இதைப் படிப்போர் நினைக்க வேண்டாம்; உங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு இவ்விஷயத்தை கொண்டு செல்லுங்கள். அது, அவர்களுக்கு செய்யும் உதவி மட்டுமல்ல; உங்களுக்கு நீங்களே தேடிக் கொள்ளும் புண்ணியமும் கூட!
எல்.முருகராஜ்

நன்றி : தினமலர் - வாரமலர் - 13.08.2017

Thursday, July 7, 2016

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை


மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற 
என்ன செய்ய வேண்டும்?

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று நாகை  மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

முதல் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான நிலைகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஓராண்டு கல்வி உதவித் தொகையாக ரூ. 1,000-மும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நிலைகளில் பயிலுவோருக்கு ரூ. 3 ஆயிரமும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான நிலைகளில் பயிலுவோருக்கு ரூ. 4 ஆயிரமும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

பட்டப்படிப்பு உதவித் தொகையாக ரூ. 6 ஆயிரமும், முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கு ரூ. 7 ஆயிரமும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித் தொகையாக 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான நிலைகளில் பயிலுபவர்களுக்கு ரூ. 3 ஆயிரமும், பட்டப் படிப்புப் பயிலுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும், தொழிற்கல்வி மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலுபவர்களுக்கு ரூ. 6 ஆயிரமும் வழங்கப்படும்.

இத்திட்ட உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை

na‌ga‌pa‌t‌t‌i‌na‌m.‌n‌ic.‌i‌n 

 என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலிருந்தும் பெற்றும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி நாளிதழ் - 08.07.2016

Saturday, May 2, 2015

மாற்றுத்திறனாளிகள் கல்விக்கடன்


மாற்றுத்திறனாளிகள் கல்விக்கடன் பெற என்ன செய்ய வேண்டும்?
*******************************************************************************


உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் (National Handicapped Finance and Development Corporation)  தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்தியாவில் உள்ள 40 அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 
இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும்.
கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும்.
 மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய www.nhfdc.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.
இந்த இணையதளம்  தமிழிலும் விபரங்கள் அறியும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.



Friday, April 10, 2015

மாற்றுத்திறனாளிகள் - தொழில் தொடங்க - கடன்


மாற்றுத்திறனாளிகள் - தொழில் தொடங்க கடன் பெற ...?
தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் 
(NHFDC) National Handicapped Finance and Development Corporation) வழங்கும் கடன் உதவி:-
1) மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்குவத்ற்கு, ”தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்” பலவித சலுகைக் கடன்களை வழங்குகிறது.  
2) விற்பனை மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும், சேவைப்பிரிவுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் மாற்றுத்திறனாளிகள் கடன் பெறலாம். தொழில் செய்ய ஆட்டோ ரிக்சா, வேன் போன்ற வாகனங்கள் வாங்கவும், விவசாயப் பணிகளுக்கும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு  10 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். பொருட்கள் உற்பத்தி, தயாரிப்புக்காக சிறு தொழிற்கூடங்கள் அமைக்க மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 25 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படுகிறது .
3) மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், செரிபிரல்கஃபேல்சி மற்றும் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க அவர்களின் வாழ்க்கைத்துணை  மற்றும் அவர்களின்  பெற்றோர் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
4) இந்தியாவில் படிக்க ரூ.7.50 லட்சம், வெளிநாடுகளில் படிக்க ரூ.15 லட்சம் வரை கல்விக்கடன் கிடைக்கும்.
5) நுண் கடன் திட்ட்த்தின் கீழ் (Micro Credit Scheme) தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம், பயனாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை கடன் தரப்படும்.
நிபந்தனைகள்: 

1) இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும். 
     குறைந்தது 40% அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் திறன் பாதிப்பு.
2) 18லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
3) நகர் பகுதியில் வசிப்பவராக இருந்தால் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாகவும், கிராமப் பகுதியில் வசிப்பவராக ரூ.3 லட்சத்துக்குக் குறைவாகவும்  அவரது ஆண்டு வருமானம் இருக்கவேண்டும்.
4) தொடர்புடைய கல்வி, தொழில்நுட்பச் சான்றிதழ்களை வைத்திருக்கவேண்டும். தேவையான அனுபவமும் அவர் பெற்றிருக்கவேண்டும்.
வட்டி விகிதம்:
5) 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு ஆண்டுக்கு 5%. 

50 ஆயிரத்துக்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு 6%. 
5 லட்சத்துக்கு மேல் ஆண்டுக்கு 8%.
திருப்பிச்செலுத்தும் காலம்:
6) பொதுக் கடன்களை 10 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும்.
7) கல்விக் கடன்களை 7 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும். (படிப்பு முடித்த 6 மாதங்கள் அல்லது வேலை கிடைத்த பிறகு எது முன்னதாகவோ அதிலிருந்து தவணை).
கடன் தள்ளுபடி:
1) தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வழங்கும் கடன் திட்டங்களில் பெண்களுக்கு வட்டியில் 1 சதவிகிதமும், சில திட்டங்களுக்கு 0.5 சதவிகிதமும் சிறப்புத் தள்ளுபடி செய்யப்படுகிறது
எப்படி விண்ணப்பிப்பது?
1) தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில முகவர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

 தமிழக முகவரி:
 தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி லிமிடெட் (TNSC Bank), 
233, நேதாஷி சுபாஷ் சந்திரபோஷ் சாலை, 
சென்னை-600001. 
போன்: 044-25302300
2) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெறலாம்.
3) கடன் உதவி பெற கால தாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய முகவரி: 

முதன்மைச் செயலாளர்/ மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், 
மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், 
ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, 
கே.கே.நகர், 
சென்னை-600 078. 
போன்: 044-24719948, 044-24719949

மாற்றுத் திறனாளிகள்-அரசு சலுகை பெற


மாற்றுத் திறனாளிகள்-அரசு சலுகை பெற.....? 
**************************************************************
1) கல்வி உதவித் தொகை:
**************************************
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 500 ரூபாய்
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை 1,500 ரூபாய்
9-முதல் 12-ஆம் வகுப்பு வரை 2,000 ரூபாய்
இளநிலை பட்டப்படிப்பு 3,000 ரூபாய்
முதுநில பட்டயப் படிப்பு 3,500 ரூபாய்

இணைக்க வேண்டிய சான்றுகள்:

தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
9-ஆம் வகுப்புக்கு மேல் முந்தைய ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல்
குடும்ப அட்டை நகல்

எப்போது விண்ணப்பிப்பது?
கல்வி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்

2) வங்கிக் கடன் உதவி
***********************************

வங்கிக் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அதிகபட்சமாக 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
குடும்ப அட்டை நகல்

எப்போது விண்ணப்பிப்பது?
ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை
குறிப்பு: பெட்டிக்கடை வங்கிக் கடனுக்கு அரசு மானியம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

3)மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் 
 மாற்றுத் திறனாளி இல்லாதவர்களுக்கான நிதியுதவித் திட்டம்

அளிக்கப்படும் பணம் எவ்வளவு? 
ரொக்கத் தொகை 25,000. 
டிகிரி முடித்தவர்களுக்கு 50,000 ரூபாயும் 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். கொடுக்கப்படும் தொகையில் பாதி (ரூ.25,000) தேசிய சேமிப்புப் பத்திரமாக வழங்கப்படும்.

யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
பார்வையற்றவரைத் திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு
கை கால் ஊனமுற்ற (ஆர்த்தோ)திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு.
பேசும் திறனற்ற மற்றும் காது கேளாதோரை திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு.

இணைக்க வேண்டிய சான்றுகள்:

தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
வயதுச் சான்று
திருமணப் பத்திரிகை மற்றும் சான்று
குடும்ப அட்டை நகல்

யாருக்கு விண்ணப்பிப்பது?

மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

4) மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை

மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
குடும்ப அட்டை நகல்
ஊனத்தின் தன்மை குறைந்தது 40 சதவிகிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

எப்போது விண்ணப்பிக்கலாம்?
அனைத்து அரசாங்க வேலை நாட்களும்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

5) இலவசப் பேருந்து சலுகை யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
****************************************************************************************
பார்வையற்றோர், அவர் குடியிருக்கும் மாவட்டத்திற்குள்ளே பயணம் செய்யலாம்.

இதர மாற்றுத் திறனாளிகள் தனது இருப்பிடத்திலிருந்து பணி செய்யும் இடம் அல்லது  கல்வி பயிலும் இடம் வரை பயணம் செய்யலாம்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
விண்ணப்பம்
மூன்று புகைப்படங்கள்
கல்விநிலையம், தொழிற்கல்வி நிலையம் அல்லது பணிபுரியும் இடத்தின் சான்று.

எப்போது விண்ணப்பிக்கலாம்?

மார்ச் மாதம் முதல்விண்ணப்பிக்கலாம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
ஒரு மாதத்திற்குள் கிடைக்கும்.

6)தேசிய அடையாள அட்டை
*******************************************

தேசிய அடையாள அட்டை பெறுவது முக்கியமானது. இதனைப்  பெற்றவர்களே மாற்றுத் திறனாளிகளாக உதவி பெற தகுதி உள்ளவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். இந்த அட்டை பெற சிறப்பு மருத்துவர் ஒருவரிடம் மாற்றுத் திறனாளி   எனச் சான்று பெற்று அளிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
இரண்டு போட்டோ மற்றும் மாற்றுத் திறனுடையோர் பற்றிய முழு விவரம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
ஒரே நாளில் வழங்கப்படும்.

7) உபகரணங்கள் உதவி
***********************************

சிறப்பு மருத்துவர் கருத்துரைக்கு இணங்க,  கீழ்க்கண்ட உபகரண உதவி வழங்கப்படும்.
அ) மூன்று சக்கர வண்டி
ஆ) சக்கர நாற்காலி
இ) காதொலிக் கருவி
ஈ) பார்வையற்றோர் கைக்கடிகாரம்
உ) பார்வையற்றோர் ஊன்றுகோல், கண்ணாடி
ஊ) காலிப்பர்
எ) கைதாங்கி ஊன்றுகோல்
ஏ) செயற்கைக் கால்
ஐ) சூரியஒளி பேட்டரி

இணைக்க வேண்டிய சான்றுகள் :
தேசிய அடையாள அட்டை
விண்ணப்பம்
சிறப்பு மருத்துவச் சான்று
வருமானச் சான்று

எப்போது விண்ணப்பிக்கலாம்?
அனைத்து அரசு வேலை நாட்களிலும் விண்ணப்பிக்கலாம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர்.
மாற்றுத் திறனாளிகளின் கவனத்திற்கு...

***********************************************************

பேருந்தில் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் ஓர் உதவியாளருடன் பயணம் செய்யலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலை நடத்துநரிடம் அளித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் மாற்றுத் திறனாளிகள் பேருந்தில்  தனியாகவும் பயணம் செய்யலாம். உதவியாளருக்கான சான்றிதழை வைத்திருப்பவர்கள், அதன் நகலையும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் அளித்து, இருவரும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பேருந்தில்  பயணம் செய்யலாம். 

உதவியாளருக்கான பேருந்து சலுகைப் படிவம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும். இதனைப் பெற்று முறையாக மருத்துவரிடம் கையொப்பம் வாங்கி, அதன் நகலையும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் பயன்படுத்தலாம். இதனைப் புதுப்பிக்கத் தேவையில்லை. இது நிரந்தரமானது.

இந்திய ரயில்வேயில் முழுமையான பார்வையற்றவர்களும், காது கேளாத, வாய் பேச இயலாதவர்களும் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்துடன் தனியாகப் பயணம் செய்யலாம். முதல் வகுப்பு, குளிரூட்டப்பட்ட வகுப்புகளில் 50 சதவிகிதம் கட்டணத்தில் பயணம் செய்யலாம். அதற்கு முறையான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ரயிலில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய, குறிப்பிட்ட படிவத்தில் மருத்துவச் சான்றிதழ் பெற்று அதன் நகலைக் கொடுத்து பயணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். 5 வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். 35 வயதுக்குப் பின்னர் பெறப்படும் சான்றிதழானது நிரந்தரமானது. அதன் பின்னர் புதுப்பிக்க வேண்டாம். ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம்.

இரண்டு கால்களும் செயலிழந்து, கைகள் நல்ல முறையில் இயங்கும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் அதே அலுவலகத்தில் கிடைக்கும்.

கல்லூரியில் பயிலும் கை, கால் ஊனமுற்ற மாணவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் கைகள் நன்கு இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். தற்போது இத்திட்டம் சுயவேலை வாய்ப்பு செய்பவர்களுக்கும், பணிக்குச் செல்பவர்களுக்கும் என்று அனைத்து கை, கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 

அனைத்து மத்திய, மாநில அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகளிலும் 3 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. இந்திய ஆட்சிப் பணியில் இருந்து, கடைநிலை ஊழியர் வரை அனைத்துப் பணிகளுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். இதில் பார்வையற்றோர், காது கேளாதோர், கை, கால் ஊனமுற்றோர் தலா ஒரு சதவிகிதத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை 100 கிலோமீட்டர் வரை இலவசப் பேருந்துப் பயணம் மேற்கொள்ளலாம்.

என்ன மாதிரி ஊனம் உள்ளதோ, அந்தப் பிரிவு சிறப்பு மருத்துவர் உள்ளிட்ட 3 நபர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான  விண்ணப்பப் படிவம் அவர் பயிலும் கல்விக் கூடத்திலேயேகிடைக்கும். வேறு ஏதும் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்று பள்ளித் தலைமை ஆசிரியர் சான்றளிக்க வேண்டும்.