ரயிலில் பைக்குகளை கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும்?
பணி மாறுதல் உள்ளிட்ட சூழல்களில் கையுடன் மோட்டார்சைக்கிள்களையும் எடுத்துச் செல்லும் நிலை பலருக்கு ஏற்படுகிறது. குறைந்த தூரம் என்றால் ஆம்னி பஸ்களில் அல்லது பார்சல் சர்வீஸ் மூலமாக எடுத்துச் செல்ல முடியும்.
ஆனால், வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு ரயில்களே சிறந்த வழியாகவும், விரைவான வழியாகவும் இருக்கும். இந்தநிலையில், ரயில்களில் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை எடுத்துச் செல்வதற்கான சில வழிமுறைகளை இங்கு காணலாம்.
இரண்டு வழிகள்
ரயில்களில் இருசக்கர வாகனங்களை எடுத்துச் செல்வதற்கு இரு வழிகள் உள்ளன. அதாவது, பயணியுடன் சேர்த்து எடுத்துச் செல்லும் விதத்திலும், தனி பார்சலாகவும் அனுப்ப முடியும். இதற்கிடையே, ரயில்வே பார்சல் அலுவலகத்திற்கு சென்று, கட்டணம், ஆவணங்கள், குறிப்பிட்ட இடத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு நாட்களாகவும் போன்ற தகவல்களை கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.
பேக்கிங்
ரயில்வே சரக்குப் பிரிவிலும் பேக்கிங் செய்வார்கள். ஆனால், ரயில்வே பார்சல் அலுவலங்களுக்கு வெளியில் சில தனியார் அல்லது தனி நபர்கள் சிறந்த முறையில் பேக்கிங் செய்து கொடுக்கின்றனர். இதற்கு கட்டணம் சிறிது கூடுதலாகும் என்றாலும், பைக்கை ரயிலில் ஏற்றும்போது, இறக்கும்போது கீறல்கள் விழாமல் தவிர்க்கும்.
விண்ணப்பம்
ரயில் சரக்குப் பிரிவில் கொடுக்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில், பைக்கின் தற்போதைய விலை மதிப்பு, எஞ்சின் மற்றும் சேஸீ நம்பர்கள் உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
கட்டணம்
தூரத்திற்கும், பைக்கின் எடைக்கும் தக்கவாறு கட்டணம் நிர்ணயிக்கப்படும். மேலும், புறப்படும் நிலையத்திலும், சென்றடையும் நிலையத்திலும் பேக்கிங் மற்றும் கையாளுதல் பணிகளுக்காக ரூ.150 முதல் ரூ.200 வரை தனித்தனியாக வசூலிக்கப்படும். அத்துடன், நீங்கள் குறிப்பிடும் பைக்கின் மதிப்பில் ஒரு சதவீதம் காப்பீடுக்காக வசூலிக்கப்படும். ஆனால், ரூ.10,000 குறைவான மதிப்புடைய வாகனங்களுக்கு இந்த கட்டணம் இல்லை.
தனி பார்சலாக...
தனி பார்சலாக அனுப்பும்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவல் நேரத்தில் சரக்கு கையாளும் பிரிவில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதேபோன்று, இதே வேலை நேரத்தில் மட்டுமே சென்றடையும் இடத்திலும் டெலிவிரியும் பெற முடியும்.
பயணியுடன் சேர்த்து...
பயணிக்கும்போதே, பைக்கையும் எடுத்துச் செல்லும் வசதியும் உள்ளது. அதாவது, கையுடன் எடுத்துச் சென்று டெலிவிரி பெறும் முறை இது.
முன்பதிவு நேரம்
பயணிக்கும் குறிப்பிட்ட ரயில் புறப்படுவதற்கு முன் 2 மணிநேரத்திற்கு முன்பாக சரக்கு கையாளும் பிரிவை அணுக வேண்டும்.
உரிமையாளர் இல்லையெனில்...
பைக்கின் உரிமையாளர் பயணிக்கவில்லை எனில் அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் அல்லது ஏஜென்ட் பைக்கின் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் பயணிக்கும் ரயிலிலேயே, உங்களது இருசக்கர வாகனம் ஏற்றப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
டெலிவிரி
பயணியுடன் சேர்த்து பைக்கை எடுத்துச் செல்லும்போது சென்றடையும் இடத்தில் 24 மணிநேரமும் டெலிவிரி பெற்றுக் கொள்ளலாம். சிறிய ரயில்நிலையங்களில், பைக்கை இறக்குவதற்கான வசதி இல்லையெனில், அருகிலுள்ள பெரிய ரயில் நிலையங்களுக்கு முன்பதிவு செய்து டெலிவிரி பெற முடியும்.
ஆவணங்கள்
ரயிலில் அனுப்பும்போது, இருசக்கர வாகனத்தின் ஒரிஜினல் ஆர்சி புக் அல்லது வாகனத்தின் பதிவு ஸ்மார்ட் கார்டை முன்பதிவு அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும். அத்துடன் ஒரு நகரை அவர்களிடம் தர வேண்டும். அதேபோன்று, வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ் பிரதியும் கொடுக்க வேண்டும்
பொது விதிமுறைகள்
பெட்ரோல் டேங்க் முழுவதுமாக காலி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கவர்
இருசக்கர வாகனத்தை ரயில்வே விதிகளின்படி பேக் செய்ய வேண்டும். பாலித்தீன் கவர் அல்லது சாக்குப் பைகளால் பேக் செய்யலாம்.
லேபிள்
ரயிலில் ஏற்றுவதற்கு முன்னர் ரயில்வே துறை அதிகாரிகளால் அடையாள எண்கள் ஒட்டப்படும்.
ரசீதுகள் பத்திரம்
முன்பதிவு செய்யும்போது கொடுக்கப்படும் கட்டண ரசீதின் நகலை, டெலிவிரி பெறும்போது கொடுக்க வேண்டும். அத்துடன், கையுடன் எடுத்துச் செல்லும்போது, பயணச் சீட்டையும், சரக்கு கட்டண சீட்டு என இரண்டையும் காண்பிக்க வேண்டும்.
முழுமையாக சேதமடைந்தால்...
ஒருவேளை தீ விபத்து உள்ளிட்ட காரணங்களால் உங்கள் இருசக்கர வாகனம் முழுவதுமாக சேதமடைந்துவிட்டால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மதிப்பிற்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.
டிப்ஸ்
ரயிலில் எடுத்துச் செல்லும்போது பெட்ரோல் முழுவதுமாக காலி செய்யப்பட்டு விடும் என்பதால், டெலிவிரி பெற செல்லும்போது சிறிய கேனில் பெட்ரோலை வாங்கிச் செல்வது நலம். ரயில் நிலைய வளாகத்திற்குள் வண்டியை ஓட்ட முடியாது. வெளியில் வந்தவுடன் பெட்ரோலை ஊற்றி எடுத்துச் செல்ல முடியும். கையுடன் எடுத்துச் செல்பவர்கள் வாய்ப்பு இருந்தால் நண்பர்கள், உறவினர்களை பெட்ரோலை வாங்கி வரச்சொல்லலாம்.
நன்றி : டிரைவ் ஸ்பார்க் - 07.03.2016