disalbe Right click

Showing posts with label வழக்கறிஞர். Show all posts
Showing posts with label வழக்கறிஞர். Show all posts

Tuesday, May 18, 2021

வழக்கறிஞர்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள்

வழக்கறிஞர்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள்

வழக்கறிஞர் Dhanesh Balamurugan அவர்களது 15.05.2021 முகநூல் பதிவு
முகநூல் நண்பர் ஒருவர் அனைவரது கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்று பதிவிடுகிறீர்கள். இதேபோல் வழக்கறிஞர்கள் பற்றி பதிவிட முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்காக எனக்கு தெரிந்த விஷயங்களை மட்டுமே பதிவு செய்துள்ளேன்.
  • வக்கீல்களிடமும், டாக்டர்களிடமும் உண்மையை சொல்ல வேண்டும் என்று கூறுவார்கள்.
  • அப்படி கூறினால்தான் வழக்கறிஞர்கள் தொழில் ரீதியாக நல்ல முறையில் செயல்பட முடியும்.
  • வழக்கறிஞர்களிடம் பொய் சொல்லக்கூடாது என்று சொல்லும் நீங்கள் மட்டும் பொய் நீதிமன்றத்தில் பொய் சொல்லலாமா? என்று சிலர் விதண்டாவாதம் செய்வதுண்டு.
  • கவிஞர்களும், வழக்கறிஞர்களும் பொய் சொல்ல அனுமதி உண்டு என பொதுவாக ஒரு கருத்து நடைமுறையில் உள்ளது. கவிதை நடைக்காக கவிஞர்கள் உண்மைக்கு மாறானவற்றை சொல்வதுண்டு.
  • ஆனால் கவிஞர் பொய் சொல்வதற்கும், வழக்கறிஞர்கள் பொய் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
  • சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யும் போது, அந்த சாட்சியின் உணர்ச்சியை தூண்டி விட்டு, அவரிடமிருந்து உண்மை வரவழைப்பதற்காக, ஒரு சாட்சி குற்றம் செய்யவில்லை என்று தெரிந்திருந்தும், நீங்கள்தான் அதை செய்தீர்கள் என்று பொய்யாக கூறுவதுண்டு.
  • இதனால் கோபமடையும் சாட்சி, அந்த குற்றத்தை நான் செய்யவில்லை, அவன்தான் செய்தான் என்று உண்மைக் குற்றவாளியின் பெயரை சொல்ல வாய்ப்பு இருப்பதால் வழக்கறிஞர்கள் பொய்களை சொல்லி உண்மையை கண்டறிய இத்தகைய பொய்கள் கூறப்படுகிறது.
  • சாட்சிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க வழக்கறிஞர்கள் பொய் பேசுவதை சட்டம் அனுமதிக்கிறது.
  • இல்லை என்றால் உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடுவர். அப்பாவிகள் தண்டிக்கப்பட்டுவிடுவர்.
  • வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 29 ன்படி பதிவு பெற்ற வழக்கறிஞர்கள் மட்டுமே மற்றவர்களுக்காக வாதாட முடியும்.
  • அவர்கள் மட்டுமே வழக்கறிஞர் தொழில் செய்யும் உரிமை உடையவர்கள்.
வழக்கறிஞர்களுக்கென்று உரிமைகளும், கடமைகளும் உள்ளது.
  • நீதிமன்றத்தில் வழக்காடும் போது கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
  • அதேசமயம் தனது சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்.
  • ஒரு சட்ட அதிகாரி மீது ஏதேனும் கடுமையான குற்றச்சாட்டு இருந்து அதற்கு ஆதாரமும் இருக்கும்போது அதனை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கும் உரிமையும், கடமையும் வழக்கறிஞர்களுக்கு உள்ளது.
  • ஒரு வழக்கறிஞர் நீதிமன்ற அதிகாரியாக கருதப்படுவார். நீதிமன்றத்திற்கு எப்போதும் மரியாதை கொடுக்க வேண்டும்.
  • ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அந்த நீதிபதியிடமோ, வேறு நீதிபதிகளிடமோ அந்த வழக்கு சம்பந்தமாக எந்தவிதமான தனிப்பட்ட தொடர்பும் வைக்கக்கூடாது.
  • எதிர்கட்சி வழக்கறிஞரிடமோ, எதிர்கட்சிக்காரரிடமோ தவறான முறையிலும், சட்ட விரோதமான முறையிலும் நடந்து கொள்ளக்கூடாது.
  • அதேபோல் தனது கட்சிக்காரர் சட்ட விரோதமான முறையில் நடக்க முயற்சிப்பதையும், நீதிக்கு புறம்பாக செயல்பட முயற்சிப்பதையும் தடுக்க வேண்டும்.
  • தவறான வழிமுறைகளை பின்பற்றச் சொல்லும் கட்சிக்காரருக்கு வாதாட வழக்கறிஞர்கள் மறுக்கலாம்.
  • அத்தகைய விஷயங்களில் கட்சிக்காரர் சொல்லும் தவறான முறைகளை பின்பற்றாமல் தானே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.
  • உறவினர்களான நீதிபதிகள் முன் விசாரணைக்கு ஆஜராகக்கூடாது.
  • பொது இடங்களில் வழக்கறிஞர்களுக்கான ஆடை அணியக்கூடாது.
  • தான் நிர்வாகக்குழுவில் உள்ள நிறுவனத்திற்காக ஆஜராகக்கூடாது.
  • தனக்கு பணத் தொடர்பு உள்ள வழக்குகளில் ஆஜராகக்கூடாது.
  • சட்ட நடவடிக்கை சம்மந்தமாக வழக்கறிஞரின் கட்சிக்காரருக்கு தேவைப்படும் போது, வழக்கறிஞர் அவருக்கு உத்தரவாதியாகவோ அல்லது அவரது உத்தரவாதம் பற்றி சான்று கொடுக்கவோ கூடாது.
  • ஒரு வழக்கறிஞர் தனக்கு அதிக பரிச்சயம் இல்லாத துறையில் வரும் வழக்குகளை அவற்றில் பரிச்சயம் இல்லை என்பதால் ஏற்றுக்கொள்ள மறுக்கும் உரிமை உண்டு.
  • கட்சிக்காரருக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வது வழக்கறிஞர்களின் முக்கிய கடமை.
  • வழக்கில் எப்படி வாதட வேண்டும், என்னென்ன ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுத்து கொள்ளும் உரிமை வழக்கறிஞர்களுக்கு உண்டு.
  • வழக்கறிஞர்களுக்கு நேர்மைதான் முதல் கொள்கையாக இருக்க வேண்டும்.
  • தைரியம் என்பது ஒரு வழக்கறிஞருக்கு உள்ள மிகப்பெரிய ஆயுதம். இது ஆழ்ந்த சட்ட அறிவு மற்றும் நேரடி அணுகுமுறை ஆகியவற்றின் மூலமாக வலுப்படுத்தலாம்.
  • நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகும் முன் வழக்கு பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
  • விவேகம் ரொம்ப முக்கியம்.
  • பேச்சுத்திறமை வழக்கறிஞர்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான திறமையாகும்.
  • Decision making என்னும் முடிவு எடுக்கும் திறன் வழக்கறிஞர்களுக்கு ரொம்ப முக்கியம்.
  • எந்த சமயத்திலும் பக்குவமாக நடந்து கொள்ளும் திறமை வழக்கறிஞர்களிடம் இருக்க வேண்டும்.
வழக்கறிஞர்கள் மீதான தொழில் விதிமுறை மீறல்கள் மற்றும் ஒழுங்கினம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழு ஒவ்வொரு மாநில பார் கவுன்சிலிலும் உள்ளது.
வழக்கறிஞர்கள் தவறிழைத்தற்கான ஆதாரங்கள் இருந்தால் உரிய முறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க தடை ஏதுமில்லை.
வழக்கறிஞர் Dhanesh Balamurugan அவர்களுக்கு நன்றி!

 

Tuesday, March 13, 2018

நோட்டரி பப்ளிக் ஆவதற்கு தகுதி

சான்று அலுவலர்
சான்று அலுவலர் பற்றி  "The Notaries Act, 1952(53 of 1952)" ல் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் பிரிவு 3 ன்படி மத்திய அரசு, இந்தியா முழுமைக்குமோ, அல்லது இந்தியாவின் ஒரு பகுதிக்கோ, அதேபோல் மாநில அரசுகள், மாநிலம் முழுமைக்குமோ அல்லது மாநிலத்தின் ஒரு பகுதிக்கோ வழக்கறிஞராக பணியாற்றுபவரையோ அல்லது அரசு நிர்ணயிக்கும் தகுதி உடையவரையோ நோட்டரி பப்ளிக்காக நியமிக்கலாம்.
நோட்டரி பப்ளிக் ஆவதற்கு தேவையான தகுதிகள் என்ன?
💬    வழக்கறிஞராக குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது
💬 தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராக இருந்தால், வழக்கறிஞராக குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது
💬  பெண் வழக்கறிஞர்கள் என்றால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது
💬   மத்திய அரசின் சட்டத்துறை பணிகளில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும் அல்லது
💬  வழக்கறிஞராக பதிவு செய்தபிறகு, மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ சட்ட அறிவு தேவைப்படும் பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது
💬  நீதித்துறை பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது
💬  நீதிபதி அல்லது தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அல்லது இராணுவ இலாகாவின் சட்டத்துறை இவற்றுள் ஏதேனும் ஒன்றில் அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.
நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சான்றிதழ் பற்றி....
நோட்டரி பப்ளிக்காக பணி செய்ய விரும்புபவர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய பிறகு, இந்த சட்டத்தின் பிரிவு 4 ல் கூறப்பட்டுள்ளபடி அரசால் பராமரிக்கப்படும் பதிவேட்டில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள பிரிவு 5(a) ன்படி உரிமை உடையவர்கள் ஆவார்கள். அதேபோல் பிரிவு 5(b) ன்படி குறிப்பிட்ட காலத்திற்கு ( சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள்) பணியாற்ற அரசிடமிருந்து சான்றிதழ் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
விதி எண் 8 ன்படி மேலே கூறப்பட்டுள்ள சான்றிதழை, குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து கொள்ளலாம். அவ்வாறு புதுப்பிக்க கொடுக்கப்படும் விண்ணப்பம், முதலில் கொடுக்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காலம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த சட்டத்தின் பிரிவு 9 ன்படி மேற்படி சான்றிதழ் இல்லாமல் யாரும் நோட்டரி பப்ளிக்காக பணியாற்ற முடியாது.
நோட்டரி பப்ளிக்கின் பணிகள் பற்றி இந்த சட்டத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது
நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரின் முக்கியமான பணிகள்  
💬  எழுதப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து, அதாவது அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சரிதானா என்பதை பார்த்து, அதை எழுதிய நபர்தான் கையொப்பம் இட்டுள்ளாரா என்பதை எல்லாம் சரிபார்த்து சான்று செய்தல்
💬  எந்தவொரு நபருக்கும் சத்திய பிரமாணம் என்ற உறுதிமொழி செய்வித்தல் (Administer Oath) அல்லது அவர்களிடமிருந்து உறுதிமொழிப் பத்திரம் வாங்குதல் (Affidavit)
💬 ஒரு ஆவணத்தை ஒரு மொழியிலிருந்து வேறு ஒரு மொழிக்கு மொழி பெயர்த்தல். அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட ஆவணங்கள் சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல்
💬  நீதிமன்றமோ அல்லது அதைப்போல அதிகார மையமோ கட்டளையிட்டால், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆணையராக இருந்து சாட்சியங்களை பதிவு செய்தல்
💬 தேவைப்படும் போது பஞ்சாயத்தாரராகவோ அல்லது மத்தியஸ்தம் செய்பவராகவோ செயல்படுதல்
நோட்டரி பப்ளிக் பயன்படுத்த வேண்டிய முத்திரை
நோட்டரி பப்ளிக் தனது பணிகளை செய்யும் போது அவருக்குரிய முத்திரையை பயன்படுத்த வேண்டியது கட்டாய தேவையாகும். "சான்றுறுதி அலுவலர் விதிகள் 1956" ன் விதி 12 ல் அந்த முத்திரை எந்த அளவில், எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி அந்த முத்திரை 5 செ. மீ விட்டமுள்ள சாதாரணமான வட்டவடிவில் இருக்க வேண்டும். அதில் நோட்டரி பப்ளிக்கின் பெயர், பணியாற்றும் பகுதி, பதிவு எண், அவரை நியமனம் செய்த அரசு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 139 ல் நோட்டரி பப்ளிக்கால் சரிபார்த்து கையெழுத்து செய்யப்பட்ட பிரமாண வாக்குமூலம், நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 297 லிலும் கூறப்பட்டுள்ளது.
நன்றி : எனது முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான  Dhanesh Balamurugan

************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 13.03.2018