disalbe Right click

Showing posts with label வழக்குகள். Show all posts
Showing posts with label வழக்குகள். Show all posts

Thursday, August 6, 2020

வாய்தா பற்றி வழக்கறிஞர் Dhanesh Balamurugan‎

வாய்தா பற்றி வழக்கறிஞர் Dhanesh Balamurugan

ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) எனப்படும்.
வாய்தா வழங்கும் முறை பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 கூறுகிறது.
பிரிவு 309 - Power to postpone or adjourn Proceedings -
1. நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். வழக்கை ஒத்தி வைப்பது அவசியமானது என்று நீதிமன்றம் கருதினாலொழிய மற்றபடி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு ஒத்தி வைத்தால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும்.
வரம்புரையாக - இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376, 376(அ), 376(ஆ), 376(இ), 376(ஈ)- ன் கீழான குற்றம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்போது, முடிந்த மட்டும் அந்த வழக்கு விசாரணையை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும். (இது புதிதாக சட்ட எண்- 13/2013 ன் படி இணைக்கப்பட்டு 3.2.2013 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது)
2. நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு பின்னர் விசாரணை எதையும் துவக்குவதை தள்ளி வைப்பது அவசியமானது என்னும் முடிவுக்கு வருமானால் நிபந்தனைகள் அடிப்படையில் தள்ளி வைக்கலாம். ஆனால் நீதிமன்றத்தில் சாட்சிகள் முன்னிலையாகி இருந்தால் காரணமில்லாமல் தள்ளி வைக்கக்கூடாது.
3. சூழ்நிலைகள் கைமீறியதாக இருக்கும் நிலையில் வாய்தா வழங்கலாம். மற்றபடி வழக்கு தரப்பினர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக வழக்கை தள்ளி வைக்கக்கூடாது.
4. வழக்கு தரப்பினரின் வழக்கறிஞர் மற்றொரு நீதிமன்றத்தில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை காரணம் காட்டி வழக்கு விசாரணையை மற்றொரு தேதிக்கு மாற்றி வைக்கும்படி கோர முடியாது.
5. உரிய சந்தர்ப்பங்களில் வழக்கு செலவுத் தொகையை செலுத்த உத்தரவிடலாம்.
இதுபோக இன்னும் பல விளக்கங்கள் உள்ளது.
வழக்கு விசாரணையை துரிதப்படுத்த காவல்துறையினரின் ஒத்துழைப்பு கட்டாயம் வேண்டும். ஆனால் காவல்துறையை நீதிமன்றம் நம்பாது.
ஒரு வழக்கை ஒத்தி வைக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது நீதிமன்றத்தின் இயல்பான அதிகாரத்தை பொறுத்ததாகும். ஆனால் இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. வாய்தா வழங்கினால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும் என்று கு. வி. மு. ச பிரிவு 309(1) கூறுகிறது. ஆனால் பெரும்பாலான நீதிமன்றங்கள் இதனை பின்பற்றுவதில்லை. அதனால் தரப்பினர் ஆஜராகும் போது நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தால் தகுந்த காரணம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை வற்புறுத்த வழக்கின் தரப்பினர்களுக்கு உரிமை உண்டு.
தகுந்த காரணம் என்பது வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் அல்லது வல்லுநரின் அறிக்கைகள் வர வேண்டியுள்ளது அல்லது முக்கியமான சாட்சியை அழைத்து விசாரணை செய்ய வேண்டியுள்ளது என்பன ஆகும். வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு சாத்தியமில்லை என்ற நிலையில் தான் வாய்தா வழங்கப்படுகிறது.
வழக்கறிஞருக்கு வேறு கோர்ட்டில் வேலை இருக்கிறது என்பதெல்லாம் தகுந்த காரணம் கிடையாது.
தகுந்த காரணம் இருந்தால் நீதிமன்றம் வழக்கை 15 நாட்களுக்கு மேல் ஒத்தி வைக்கக்கூடாது.
எந்த ஒரு நீதிமன்றமும் வழக்கை விரைந்து முடிக்கவே விரும்புகிறது. ஆனால் சில வழக்கறிஞர்கள் தேவை இல்லாமல் வாய்தா கேட்பதால்தான் காலதாமதம் ஆகிறது.
எனவே தேவையில்லாமல் வாய்தா கேட்டால் கு. வி. மு. ச பிரிவு 309(2) ன் கீழ் செலவுத் தொகை தர வேண்டும் என்று கோரினால் தேவையில்லாமல் வாய்தா வழங்கப்படுவதை தவிர்க்கலாம்.
( எனக்கு தெரிந்து இதுதான் நடைமுறை)

Saturday, October 5, 2019

வழக்குகளில் சமரசம் செய்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

வழக்குகளில் சமரசம் செய்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
ஏதோ ஒரு செயலினால் பாதிக்கப்பட்டவர், ஏதோ ஒரு வேகத்தில் எதிரி மீது குற்றம் சாட்டிஒன்ன என்ன செய்றேன் பார்!” என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விடுவார். ஆனால், வழக்கின் போக்கு, அதற்கு ஆகின்ற செலவு, வீண் அலைச்சல்  மற்றும் அதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல் ஆகியவற்றைப் பார்த்துவிட்டுசமாதானமாக போய்விட்டால் என்ன?” என்று வாதி மற்றும் பிரதிவாதி ஆகிய இருவருமே ஒரு காலகட்டத்தில் நினைப்பதுண்டு. ஆனால், எல்லா வழக்கிலும் சமரசம் செய்துகொள்ள நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. சில வழக்குகளில் குற்றவாளிக்கு தண்டணை வழங்கியே தீர வேண்டும்! என்று சட்டம் சொல்கிறதுசமரசம் செய்து கொள்ளும் குற்றங்கள் எந்த சட்டப்பிரிவுக்குட்பட்டவை? அதற்கு வழக்குத்தொடுத்தவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் என்ன செய்ய வேண்டும்என்பதை கீழே காண்போம் வாருங்கள்
சமரசம் செய்து கொள்ளும் குற்றங்கள்
சமரசம் செய்து கொள்ளும் குற்றங்களைப் (Compounding of Offences) பற்றி இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 298, 323, 324, 341, 342, 352, 355, 358, 426, 427, 447, 448, 491, 497, 498, 500, 501, 502, 504, 506 மற்றும் 508 ஆகியவற்றின் கீழ் அடங்கிய குற்றங்களின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த தரப்பினர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. பாதிக்கப்பட்டவரும் எதிரிகளும் உள்ளூர் பெரியவர்களின் முன்னிலையில் ஆஜராகி, வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டாமென்று முடிவு மேற்கொண்டு, எழுத்து மூலமாக ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி, அதனைக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 320(1)ன் கீழ்மனுத்தாக்கல் செய்தாலே போதுமானதாகும். அந்த மனுவில் கண்டிப்பாக பாதிக்கப்பட்டவரும், அனைத்து எதிரிகளும் கையொப்பம் செய்திருக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னர் சமரசம்
இந்திய தண்டணைச் சட்டத்தின் பிரிவுகள் 324, 325, 335, 337, 338, 343, 344, 346, 354, 357, 379, 381, 403, 406, 407, 408, 411, 414, 417, 418, 419, 420, 421, 422, 423, 424, 428, 429, 430, 451, 482, 483, 486, 494, 500 மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் சமரசம் செய்து கொள்வதாக இருந்தால் எந்த நீதிமன்றத்தில் வழக்கு நடக்கின்றதோ அந்த நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்.
எந்த ஒரு வழக்கிலும் தீர்ப்பு சொன்ன பின்னரோ அல்லது ஒரு வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட பின்னரோ சமரசம் செய்து கொள்ள முடியாது.
நீதிமன்றம் என்ன செய்யும்?
சமரசத்தின் பொருட்டு மனுத்தாக்கல் செய்த பின்னர் நீதிபதி பாதிக்கப்பட்டவரை விசாரித்து அவர் வழக்கில் சமாதானமாக போக விரும்புவதை பதிவு செய்து கொண்டு எதிரிகளை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பார். பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவராக அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் வழக்கை சமரசம் செய்து கொள்ள முடியாது.
அது போன்ற சூழ்நிலையில் அவர் சார்பில் தந்தை அல்லது தாய் அல்லது காப்பாளர் சமரசம் செய்து கொள்ளலாம்.
சமரசம் செய்ய முடியாத குற்றங்களில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம் உயர்நீதிமன்றமோ அல்லது அமர்வு நீதிமன்றமோ சமரசம் செய்து கொள்ள சம்பந்தப்பட்ட நபருக்கு குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 401ன் கீழ் அனுமதி வழங்கலாம்.
**************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 05.10.2019 

Wednesday, August 14, 2019

வக்கீல் நோட்டீஸ் –ஐப் பற்றி தெரிந்து கொள்வோமா?

வக்கீல் நோட்டீஸ்ஐப் பற்றி தெரிந்து கொள்வோமா?
ஒருவர் மீதோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீதோ சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடர்வதற்கு முன்னால், அது பற்றிய அறிவிப்பை அவருக்கு அல்லது அவர்களுக்கு வழக்கறிஞர் மூலம் நாம் கொடுக்கின்ற அறிவிப்பையே வக்கீல் நோட்டீஸ் என்று சொல்கிறோம்.  
வழக்கறிஞர் மூலமாகத்தான் இதை கொடுக்க வேண்டுமா?
அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை. சட்டம் தெரிந்தால் நாமே இதனை அனுப்பலாம். பொதுவாக இதற்குப் சட்ட அறிவிப்பு என்பதே சரியானது. விபரம் தெரியாதவர்கள் வழக்கறிஞர் மூலம் இதனை அனுப்புவதால் இதனை வக்கீல் நோட்டீஸ் என்கிறார்கள்.
இந்த அறிவிப்பில் என்ன சங்கதி இருக்கும்?
ஒரு செயலை செய்ய வேண்டும் என்றோ அல்லது ஒரு செயலை செய்யாமல் இருக்க வேண்டும் என்றோ அல்லது செய்யப்பட இருக்கும் சில செயல்களால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை குறித்து அறிவுறுத்தி, ஒரு நபர் மற்றொரு நபருக்கு அல்லது நபர்களுக்கு எழுத்து மூலமாக கொடுக்கும் எச்சரிக்கைதான் "சட்ட அறிவிப்பு" எனப்படுகிறது.
இதனை அனுப்பாமல் வழக்கு தொடுக்க முடியாதா?
பொதுவாக நாம் தாக்கல் செய்யப்போகின்ற வழக்கு எதுவாக இருந்தாலும், அதற்கு முன்பு எதிர் தரப்பினருக்கு அந்த வழக்கு பற்றிய அறிவிப்பு ஒன்றை கொடுப்பதுதான் நல்லது. தான் செய்தது அல்லது செய்யப்போவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை எதிர்தரப்பினர் உணர்ந்து கொண்டு அதை செய்யாமல் இருக்கவும், சமாதானத்திற்கு வரவும் அது உதவும். வழக்கிற்கான செலவு மிச்சமாகும். நேரமும் மிச்சம் ஆகும்.
சட்ட அறிவிப்பு கொடுக்காமல் வழக்கு தொடர்ந்தால், அதனாலேயே சில சமயங்களில் வழக்கு தள்ளுபடி ஆகலாம்.  ஆகையால் சில வழக்குகளுக்கு கண்டிப்பாக சட்ட அறிவிப்பு கொடுத்தே ஆகவேண்டும்.
இதற்கு உதாரணமாக
அரசாங்கத்திற்கு எதிராக நாம் வழக்கு தொடரும் முன்பாக உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 80 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு
சொத்துரிமை மாற்றுச் சட்டம் 106 வது பிரிவின்படி கொடுக்க வேண்டிய அறிவிப்பு
இரயில்வே சட்டம் பிரிவு 106 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு
ஆகியவற்றைக் கூறலாம்.
சட்ட அறிவிப்பில் என்னென்ன இருக்க வேண்டும்?
பொதுவாக சட்ட அறிவிப்பில் நாம் தாக்கல் செய்ய இருக்கும் வழக்கின் சங்கதிகள் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும்.
⧭ சட்ட அறிவிப்பை கொடுக்கிறவரின் பெயர் மற்றும் முகவரி
⧭ சட்ட அறிவிப்பு பெறுபவரின் பெயர் மற்றும் முகவரி
⧭ வழக்கின் பிரச்சினை குறித்த விபரம்
⧭ சட்ட அறிவிப்பிற்கான வழக்கு மூலம்
⧭ வேண்டுகின்ற பரிகாரம்
⧭ பரிகாரத்தை நிறைவேற்றவில்லை என்றால், அதனால் ஏற்படும் விளைவுகள்
⧭ எத்தனை நாட்களுக்குள் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும்?
⧭ சட்ட அறிவிப்பு வழக்கறிஞர் மூலமாக கொடுக்கப்பட்டால் இறுதியில் வலது புறம் அவரது கையொப்பம் அல்லது அனுப்புபவரின் கையொப்பம்
⧭ சட்ட அறிவிப்பின் கடைசியில் இடதுபுறம் அனுப்புபவரின் ஊரும், தேதியும் குறிப்பிட வேண்டும்.
அறிவிப்பை எப்படி அனுப்ப வேண்டும்?
யாருக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டுமோ,  அவரது பெயரைக் குறிப்பிட்டு முகவரிக்கு பதிவுத் தபாலில் ஒப்புகை அட்டை இணைத்து, இந்திய தபால்துறை மூலம் அனுப்பி வைக்க வேண்டும். கொரியர் சர்வீஸ் மூலம் அனுப்பாதீர்கள். இ மெயில் மூலம், வாட்ஸப் மூலமும் இப்போது அனுப்புகிறார்கள். முக்கியமாக பெறுபவரின் பெயர் மற்றும் முகவரியில் தவறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அனுப்பியதற்கான ரசீது மற்றும் ஒப்புதல் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வழக்கின் போது அவைகளும் ஒரு ஆதாரமாக பதிவு செய்யப்படும்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 14.08.2019 

Monday, April 15, 2019

அரசு அதிகாரி மீது வழக்குத் தொடர முன் அனுமதி அவசியம்!


அரசு அதிகாரி மீது வழக்குத் தொடர முன் அனுமதி அவசியம்!
அலுவலகத்தில் தனது கடமையை சரியாக செய்யாத ஓர் அரசு ஊழியர் மீது நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்ட நபர் நடவடிக்கை எடுக்க முடியுமா?
K. முருகன் என்பவர் ஒரு வழக்கறிஞர். அவர் 26.12.2012 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கீரைத்துறை காவல் நிலையத்திற்கு அவரது கட்சிக்காரரான பால்பாண்டி சார்பாக சென்றார். அப்போது செந்தில்குமார் என்னும் காவல் அதிகாரி பணியில் இருந்துள்ளார்.
வழக்கு சம்பந்தமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவல் அதிகாரி செந்தில்குமார் வழக்கறிஞர் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமில்லாமல் அவரை காவல் நிலையத்திற்குள் நுழையக் கூடாது என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை ராஜகுரு, விஜயன் என்ற இரு வழக்கறிஞர்களும், ராமர் என்ற ஒரு நபரும் பார்த்துள்ளனர்
வழக்கறிஞர் முருகன் செய்த காரியம்
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் முருகன் மதுரை நகர காவல்துறை ஆணையரிடம் இது குறித்து ஒரு புகாரை நேரிடையாக அளிக்கிறார். ஆனால் அந்த புகாரை ஆணையர் வாங்க மறுத்து விடுகிறார். அதனால் முருகன் பதிவுத் தபாலில் புகாரை ஆணையருக்கு அனுப்பி வைக்கிறார். தொடர்ந்து உடனே செந்தில்குமார் மீது மதுரை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் புகாரை தாக்கல் செய்கிறார். அந்தப் புகாரை நடுவர் கோப்புக்கு எடுத்துக் கொண்டு செந்தில்குமாருக்கு சம்மன் அனுப்புகிறார்.
செந்தில்குமார் செய்த காரியம்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரி செந்தில்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்கிறார்.
செந்தில்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்
செந்தில்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கறிஞர் முருகன் என்ன விஷயத்திற்காக காவல் நிலையத்திற்கு வந்தார் என்று புகாரில் தெளிவாக எதையும் கூறவில்லை. வழக்கறிஞர் முருகன் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் காவல் நிலையத்தில் வைத்து நடந்துள்ளது. அப்போது செந்தில்குமார் பணியில் இருந்துள்ளார். பணி நேரத்தில் அலுவலக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது, அலுவலகத்தில் கூட்டமாக கூடியுள்ளவர்களை கலைப்பதற்கான உரிமை செந்தில்குமாருக்கு உள்ளது. சார்பு ஆய்வாளர் பதவிக்கு குறைவில்லாத பதவியில் உள்ள ஒரு நபர் சட்டத்திற்கு புறம்பாக கூடியுள்ள கூட்டத்தை கலைப்பதற்கான அதிகாரம் இந்திய தண்டனைச் சட்டம் சட்டம் பிரிவு 179 ன் கீழ் செந்தில்குமாருக்கு உள்ளது. மேலும் அரசு அதிகாரியான செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், எவர் ஒருவரும், அரசிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டியது அவசியம். ஆனால் வழக்கறிஞர் முருகன் அவ்வாறு அனுமதி எதையும் பெறவில்லை
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 131 & 132
குற்றவியல் நடுவரும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 131 & 132 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி இந்த வழக்கை கோப்புக்கு ஏற்றுக் கொண்டுள்ளார். ஒரு அரசு ஊழியர் அவரது அலுவலக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது குற்றம் செய்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் முன் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என கல்கத்தா உயர்நீதிமன்றம் " நாராயணன் சந்திர பிரம்நாயக் Vs ஆனந்த மண்டல் மற்றுமொருவர் (1984-CRLJ-1334)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பையும், அலகாபாத் உயர்நீதிமன்றம் "ராம் ஆதார் யாதவ் Vs ராம சந்திர மிஸ்ரா மற்றுமொருவர் (1992-CRLJ-2216)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பையும் சுட்டிக்காட்டி குற்றவியல் நடுவரின் உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டார்
முருகன் தரப்பு வழக்கறிஞரின் வாதம்
வழக்கறிஞர் முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில்குமார் சட்ட நடவடிக்கைகளை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், காவல் நிலையத்திற்குள் ஒரு வழக்கறிஞர் செல்வதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும். முருகனை வழக்கறிஞர் என்றுகூட பார்க்காமல் செந்தில்குமார் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளது குற்றம் என்றும் கூறினார்


நீதிபதியின் உத்தரவு
செந்தில்குமார் காவல்துறை அதிகாரி என்பதை வழக்கறிஞர் முருகன் மறுக்கவில்லை. செந்தில்குமார் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டும் போது அவர் தனது அலுவலகத்தில் பணிசெய்து கொண்டு இருந்துள்ளார். ஆகையால் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் அரசிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே வழக்கறிஞர் முருகனின் வழக்கை குற்றவியல் நடுவர் கோப்புக்கு எடுத்துக் கொண்டது தவறானது. எனவே செந்தில்குமாரின் சீராய்வு மனுவை அனுமதித்து, குற்றவியல் நடுவரின் உத்தரவை ரத்து செய்கிறேன் என்று கூறி உத்தரவு பிறப்பித்தார்.
CRL. RC. No - 193/2018    Dt - 16.7.2018 
செந்தில்குமார் Vs K. முருகன் 2018-2-TNLR-65
நன்றி : எனது முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan அவர்களுக்கு