மணவாழ்வு மீட்புரிமைச் சட்டம்!
மணவாழ்க்கையை மீட்டளிக்கும்
சட்டம்
ஈகோவினாலோ, சொந்தங்களின்
தலையீட்டாலோ பெரிதாக்கப்பட்ட குடும்பப் பிரச்னை, கோபம், வெறுப்பு உள்ளிட்ட சூழ்நிலைகளால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் தம்பதிகள் பலர். ஒருகட்டத்தில்
பிரிவு வாழ்வின் கசப்பு தாங்காமல், ‘நாம் சேர்ந்து வாழ்ந்தால் என்ன?’ என்று மனைவி கணவருடனோ, கணவர் மனைவியுடனோ சேர்ந்து வாழ விரும்பினால், அவருக்குப் பக்கபலமாக நிற்கிறது மண வாழ்வு மீட்புரிமைச் சட்டம்.
மீண்டும் இணைவதற்கு துணை புரியும் சட்டங்களின் பிரிவுகள்
இந்துக்களுக்கு இந்து திருமணச்சட்டம் 1955 பிரிவு 9, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட கிறிஸ்தவர்களுக்கு இந்திய விவாகரத்துச் சட்டம் 1869, பிரிவு 32, இரு வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது திருமணத்தைச்
சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் பதிவு செய்திருந்தால்
சிறப்புத் திருமணச்சட்டம்
1954 பிரிவு 22 மற்றும் இஸ்லாமிய மத சம்பிரதாயத்தின்படி நிக்காஹ் செய்துகொண்ட இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியத் தனிச் சட்டங்கள்… என இந்தச் சட்டங்கள் எல்லாம் பிரிந்து வாழும் தம்பதி மீண்டும் சட்டப்படி இணைய துணை நிற்கின்றன.
இதற்கு எப்படி மனு செய்ய வேண்டும்?
கணவனோ, மனைவியோ வலுவான காரணமில்லாமல் பிரிந்து வாழ்கிறார்கள் என்றால், சேர்ந்து வாழ ஆசைப்படும் இருவரில் யாராவது ஒருவர், மேலே குறிப்பிட்டிருக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்கள் வசிப்பிடத்துக்கு
உட்பட்ட நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். பொதுவாக, கணவனோ, மனைவியோ, ‘என் துணையை என்னோடு சேர்த்து வையுங்கள்’ என்று நீதிமன்றம் செல்கிறார் என்றால், அந்த ஒரு காரணமே அவர்மீது இன்னொருவருக்கு அன்பை ஏற்படுத்தும்.
ஈகோ உடையவும், அவர்கள் மீண்டும் இணையவும் வாய்ப்புகள் உருவாகும்.
இந்தச் சட்ட நடைமுறை யாருக்கெல்லாம் பொருந்தும்?
- அங்கீகரிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். லிவிங் டுகெதரில் வாழும் தம்பதிகளுக்கு இச்சட்டம் பொருந்தாது.
- ‘இருவரும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறோம். ஆனால், எங்களுக்குள் எப்போதும் சண்டை; சேர்ந்து வாழ மறுக்கிறார். எங்களைச் சேர்த்து வையுங்கள்’ என்று இச்சட்டப் பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியாது.
- இருவரும் இரு வேறு வசிப்பிடத்தில் பிரிந்து வாழ்கின்றனர் என்பது நிரூபணமாக வேண்டும்.
- சேர்த்துவைக்க மனு செய்திருக்கும் மனுதாரர், அவரது தரப்பை மெய்ப்பிக்க வேண்டும். மனுதாரரின் தரப்பில் நீதிமன்றம் திருப்தி அடைந்தால் மட்டுமே எதிர்த்தரப்பை நீதிமன்றத்துக்கு அழைக்கும்.
- எதிர்த்தரப்பு, பிரிந்து வாழ்வதற்கான நியாயமான காரணத்தை முன் வைக்கும் பட்சத்தில், அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
- நியாயம் மனுதாரரின் தரப்பில்தான் இருக்கிறது எனில் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எனத் தீர்ப்பாகும்.
- ‘தம்பதிகள் இல்லறத்தில் இணைய வேண்டும்’ என்ற தீர்ப்பை எதிர்த்தரப்பு ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.