Minority and Guardianship
மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்
இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 என்ற சட்டமானது 25 ஆகஸ்டு 1956 முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் வருவதற்குமுன்னர், பழைய இந்து சட்டமே இருந்து வந்தது. இந்த பழைய இந்து சட்டப்படி, “மைனர்” என்பவர் (இளவர் என்றும் சொல்கிறார்கள்) தென்னிந்தியாவில் 15 வயது பூர்த்தி அடையாதவர் மைனர் என்றும், வட இந்தியாவில் 16 வயது பூர்த்தியடையாதவரை மைனர் என்றும் சட்டம் இருந்ததாம். இந்த புதுச் சட்டமான இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 வந்தபின்னர், மைனரின் வயதை 18 வயதாக பூர்த்தி அடையாதவரை மைனர் என்று வகுத்துக் கொண்டனர்.
இந்த 18 வயது தத்துவம் ஏற்கனவே பிரிட்டீஸார் இந்தியாவை ஆளும் காலத்திலேயே ஒரு சட்டமாக 1875லேயே கொண்டு வந்துவிட்டது. அந்தச் சட்டத்துக்குப் பெயர் “இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875.” ஏற்கனவே அந்த சட்டம் நடைமுறையில் இருந்தால், 1956ல் எதற்கு இந்து மைனாரிட்டி சட்டத்தை கொண்டு வந்தார்கள்? காரணம்: 1875 இந்தியன் மெஜாரிட்டி சட்டப்படி, இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் ஒரே சட்டமாக, 18 வயது பூர்த்தி அடைந்தவர் மேஜர் வயதை அடைந்தவர் என்று சட்டம் கருதியது உண்மைதான்.
ஆனாலும், இந்தியாவில் பல மதங்கள் இருக்கின்றன. அந்தந்த மதங்கள் ஒவ்வொரு கோட்பாடுகளை அந்தந்த மத மக்களுக்கு ஊட்டிவிட்டிருக்கின்றன. எனவே, இந்த மதங்களில் கோட்பாடுகளில் தடையிட அரசாங்கம் விரும்பவில்லை. எனவே, இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875 ல் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டனர். அதன்படி, அந்தந்த மதங்களின் “திருமணம், விவாகரத்து, தத்து எடுத்தல்” போன்ற மதம் சார்ந்த விவகாரங்களில் இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875ஐ நுழைக்க முடியாது.
அதாவது, திருமணம் போன்ற விஷயங்களில் அந்தந்த மதங்களில் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி உள்ளார்களோ அந்த வயதில் (மைனராக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும்) திருமணம் நடத்திக் கொள்ளலாம். அதில் இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875 தலையிடாது. மற்ற விவகாரங்களில், அதாவது சொத்து வாங்குவது, விற்பது, உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்வது, கோர்ட்டில் வழக்கு போடுவது, இவைகளில், இந்த இந்தியன் மெஜாரிட்டிட சட்டமே செல்லும் என்று பிரிட்டீஸ் அரசு 1875ல் சட்டம் கொண்டு வந்தது.
அதன்பின்னர், சுதந்திர இந்தியாவில் 1956ல் இந்த இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ஐ கொண்டு வந்தனர். இந்த புதிய சட்டத்தின்படி, “பழைய இந்து மதத்தில் எதைச் சொல்லி இருந்தாலும், அதையெல்லாம் தூர எரிந்துவிட்டு, இனிமேல், மைனர் என்பவர் 18 வயது பூர்த்தி அடையாதவர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது 18 வயது அல்லது பிறந்து 18 வருடங்கள் முடிந்திருந்தால் மட்டுமே அவர் மேஜர் அல்லது சட்டபூர்வ வயதுக்கு வந்தவர் என்று கருதப்படும் என்றும், அவ்வாறு மேஜர் ஆன ஒருவரே உலகில் உள்ள எல்லா வேலைகளையும் தானாக முடிவெடுக்க, அதை நிறைவேற்ற முடியும் என்று சட்டத்தை கொண்டுவந்து விட்டது.
முடிவில், இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு (ஜெயின், சீக்கியர், புத்தம் இவைகள் உட்பட) இந்த புதிய இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் நடைமுறையில் உள்ளது. (அதாவது 18 வயது முடியும்வரை மைனர் என இந்து சட்டம்).
கிறிஸ்தவர்களுக்கு தனியே ஒரு மைனர் & கார்டியன் சட்டம் இல்லை, எனவே அவர்கள் இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875ன் படி நடந்து கொள்ள வேண்டியது. (அதாவது அந்த சட்டப்படி 18 வயது முடியாதவரை மைனர் என கருதப்படுவார்).
முஸ்லீம்களில் மைனரின் வயது
முஸ்லீம்களுக்கு தனியே ஒரு மைனர் & கார்டியன் சட்டம் இல்லை. எனவே அவர்கள் நிக்காஹ் என்னும் திருமணம், தலக் என்னும் டைவர்ஸ், ஹிபா என்னும் தானம் முதலிய மத விஷயங்களில் புனித குரானில் சொல்லியுள்ளபடியும், ஷரியத் சட்டத்தில் சொல்லியுள்ளபடியும் மைனர் வயதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். (14 வயது வரை மைனர் என்று கருதுகிறார்கள்). மற்ற உலக சட்ட விஷயங்களில் 18 வயது பூர்த்தி ஆகாதவர் மைனர் என்று இந்தியன் மெஜாரிட்டி சட்டத்தில் சொல்லியுள்ளபடி நடந்து கொள்ள வேண்டும்.
ஆக வெளிஉலக வேலைகளான, சொத்து வாங்குவது, ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி கையெழுத்து செய்து கொள்வது, வழக்கு நடத்துவது போன்ற விஷயங்களில் இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் ஒரே சட்டம்தான், அதாவது 18 வயது அல்லது 18 வருடத்தை பூர்த்தி செய்திருப்பவர் மட்டுமே மேஜர் வயது உடையவர் என்றும், அவ்வாறு 18 வயது நிரம்பியவர் மட்டுமே தனியாக செயல்பட முடியும் என்றும் இன்றைய சட்டம் தெளிவாக்குகிறது. 18 வயது முடிவடையாதவர் தனியாக இயங்க முடியாது. அவருக்கு ஒரு கார்டியன் என்னும் பாதுகாவலர் வேண்டும். கார்டியன் என்னும் பாதுகாவலர் என்றால் மைனரின் உடலைப் பாதுகாக்கவும், அவரின் சொத்துக்களை பாதுகாக்கவும் இருப்பவரே கார்டியன் என்னும் பாதுகாவலர். உடலுக்கும் சொத்துக்குமான இரண்டுக்கும் பாதுகாவலராக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒன்றுக்கு மட்டும் பாதுகாவலராகவும் இருக்கலாம். இந்த பாதுகாவலர் யார் யார் என்பதைப்பற்றித்தான் இந்த இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 விளக்குகிறது.
அந்த பாதுகாவலரின் அதிகாரங்கள் என்ன என்றும் அவர்கள் எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றியும் இந்த சட்டம் சொல்கிறது. இந்து மதத்தைச் சார்ந்த மைனருக்கு இரண்டு வகையில் சொத்துக்கள் கிடைக்கும். ஒன்று அவரின் பூர்வீக வழியில் மைனருக்கு கிடைக்கும் “பூர்வீகச் சொத்துக்கள்’. மற்றொன்று அந்த மைனரே, அதாவது அவரின் பணத்தைக் கொண்டே அந்த மைனரின் பெயரில் வாங்கப்பட்ட “தனிச் சொத்துக்கள்” உண்டு. இந்த சொத்துக்களில் அந்த இந்து மைனரின் பாதுகாவலரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதைத்தான் இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 விளக்குகிறது.
அதேபோல, இந்தியாவில் பிரிட்டீஸ் அரசு காலத்திலேயே இந்த இந்து சட்டம் 1956 வருவதற்கு முன்னரே, 1890-லிருந்து ஒரே சட்டம் இருந்து வருகிறது. இன்றும் அதுதான் நடைமுறையில் இருக்கிறது. இதற்கு கார்டியன்ஸ் & வார்டு சட்டம் 1890 என்று பெயர். இது எல்லா மதத்தினருக்கும் உள்ள ஒரு பொதுவான சட்டம். அதாவது பொதுவாக ஒரு மைனரின் சொத்தை எப்படி பாதுகாக்க வேண்டும், மைனரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும், (மைனரைப் பாதுகாப்பது என்றால், அவரை படிக்க வைப்பது, சாப்பாடு கொடுப்பது, நோய்களிலிருந்து காப்பாற்றுவது போன்றவை), மைனரின் சொத்துக்களை எப்படி பாதுகாக்க வேண்டும், மைனரின் சொத்தை விற்க வேண்டிய நெருக்கடி வந்தால் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி உள்ளது இந்த 1890 சட்டம்.
இந்த 1890 சட்டப்படிதான் எல்லா மைனர்களின் உடல் பாதுகாப்பும், சொத்த பாதுகாப்பும் இருக்க வேண்டும். அந்த மைனர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்த 1890 சட்டம்தான் அவருக்கு வழிகாட்டி. அப்படியென்றால், இந்துமத மைனர்களுக்கு தனியே ஒரு சட்டம் இருக்கிறதே. இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 அது எதற்கு என்ற கேள்வி வரலாம். ஆம். இந்துமத மைனர்களுக்கு இந்த இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ம் அதனுடன் சேர்ந்து பிரிட்டீஸ் காலத்து பழைய சட்டமான கார்டியன்ஸ் & வார்டு சட்டம் 1890ம் சேர்ந்தே நடைமுறையில் இருக்கும்.
இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால், இந்துமத மைனரின் உடல் பாதுகாப்புக்கும், சொத்து பாதுகாப்புக்கும் 1956-ன் இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் ஆக்ட் 1956ம், மைனர் சொத்துக்களை விற்பனை செய்யும்போது என்ன நடைமுறையை பின்பற்றவேண்டும், நீதிமன்ற அனுமதியை எப்படி பெறவேண்டும் என்ற விதிமுறைகளுக்கு பிரிட்டீஸ் சட்டமான கார்டியன்ஸ் & வார்டு ஆக்ட் 1890ம் ஆக இரண்டு சட்டங்களுமே இந்துமத மைனர்களுக்கு செல்லபடியாகும். இரண்டு ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும் என்று அந்த 1956 இந்தமத சட்டத்திலேயே சொல்லியுள்ளார்கள்.
கிறிஸ்தவர்களுக்கு எந்த சட்டம்?
ஆனால், கிறிஸ்தவ மைனர்களுக்கு பழைமையான பிரிட்டீஸ் சட்டமான கார்டியன்ஸ் & வார்டு ஆக்ட் 1890 மட்டுமே செல்லும். முஸ்லீம்களுக்கு பொதுவான காரியங்களுக்கு இந்த கார்டியன் & வார்டு ஆக்ட் 1890ம், திருமணம் போன்றவற்றுக்கு முஸ்லீம் மதச்சட்டமும் செல்லும்.
இந்து மைனர்களுக்கு கார்டியன்கள்;
18 வயதுக்கு குறைந்த வயதுடைய மைனருக்கு கார்டியன்களை, இரண்டு வகையாக சொல்கிறார்கள். ஒன்று, இயற்கை கார்டியன்; மற்றொன்று உயில்மூலம் ஏற்பட்ட கார்டியன். இயற்கை கார்டியன் என்பவர் அந்த மைனர் குழந்தையின் தந்தை மற்றும் தந்தைக்கு அடுத்த அந்த மைனரின் தாய் ஆகிய இருவரையும் இயற்கை கார்டியன் என்கிறார்கள். இயற்கை கார்டியனான தந்தை ஏதாவது ஒரு உயில் எழுதிவைத்து அதன்படி அவரின் இறப்புக்குப் பின்னர் அவரின் மைனர் குழந்தைக்கு யாரையாவது அவர் நம்பும் நபரை கார்டியனாக இருந்து மைனரையும் அவரின் சொத்துக்களையும் பாதுகாத்து அவர் மேஜர் வயதை அடைந்தவுடன் அவரிடம் ஒப்படைக்கும்படி ஒரு உயில் எழுதி வைத்திருப்பார். அப்படி உயில் மூலம் நியமிக்கப்பட்ட கார்டியனை டெஸ்டமெண்டரி கார்டியன் அல்லது உயில் கார்டியன் என்பர். டெஸ்ட்டமெண்டரி என்றால் உயிலை விட்டுச் சென்றவர் என்று பொருள்.
நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் கார்டியன்
இந்த இரண்டு வகை கார்டியன்கள் இல்லாமல் மற்றொரு வகை கார்டியனும் உண்டு. அது கோர்ட்டால் நியமிக்கப்படும் கார்டியன். இந்த வகை கார்டியன்கள் இல்லாமல் பல காலத்தில் (1956க்கு முன்னர்) வேறு ஒருவகையான கார்டியனும் இருந்தது. அந்த கார்டியனுக்கு டி-பேக்டோ கார்டியன் de-facto என்று பெயர். அந்த டி-பேக்டோ கார்டியனை இப்போது சட்டம் அனுமதிக்கவில்லை.
ஆனால், இதற்கு முன்னர் டி-பேக்டோ கார்டியனான அந்த மைனரின் சகோதரர், பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டன், மாமா, போன்றோர், அந்த மைனரின் உடலுக்கு கார்டியனாக (guardian to the person) இருந்தார்கள். அவர்கள் மைனரின் சொத்துக்கு கார்டியனாக இருக்க முடியாது. இப்போது இந்த டி-பேக்டோ கார்டியன்கள் சட்டப்படி செல்லாது. இயற்கை கார்டியனாக தந்தை, தாய் மட்டுமே கார்டியனாக இருக்க முடியும். அப்படி இல்லையென்றால், கோர்ட் மூலம் கார்டியனை நியமிக்கலாம். கோர்ட்டானது, யார் சரியான கார்டியன் என முடிவு செய்து நியமிக்கும்.
இயற்கை கார்டியன்:
இயற்கை கார்டியனாக (Natural Guardian) முதலில் தந்தையும், தந்தைக்கு பின்னர் தாயும் கார்டியன் என்று சட்டம் சொல்கிறது. எப்போது தந்தை கார்டியன், எப்போது தாய் கார்டியன் என்றும் பிரித்துச் சொல்லவில்லை. ஆனாலும், பிறந்த குழந்தையிலிருந்து அதன் ஐந்து வருடங்களை வரை கண்டிப்பாக அந்தக் குழந்தை தன் தாயிடம்தான் இருக்க வேண்டும் கூறுகிறது. தாய் கார்டியன் என்று சொல்லவில்லை. தாயின் பாதுகாப்பில் இருக்கும் அந்தக் குழந்தை என்றுதான் சொல்கிறது. தந்தை மதம் மாறிவிட்டாலும், சந்நியாசியாக ஆகி விட்டாலும் அவரின் மைனர் குழந்தைக்கு கார்டியனாக இருக்க முடியாது.
1980ல் ஒரு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், “தந்தை தான்தோன்றித் தனமாக திரிந்து கொண்டு குழந்தையை பராமரிக்காமல் அவரின் கடமையை செய்யாமல் இருந்தாலும் அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் அவரேதான் கார்டியனாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக மைனரின் தாய் கார்டியனாக இருக்க முடியாது என்று ஒரு தீர்ப்பை கொடுத்தது. கேரளா உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், மைனர் குழந்தை தன் தாயிடம் தனியே பிரிந்து இருந்தாலும் அந்த தாய் அந்த குழந்தைக்கு கார்டியனாக இருக்க முடியாது. அதன் தகப்பன்தான் கார்டியனாக இருக்க முடியும். டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், கோர்ட் உத்தரவின்படி தகப்பன் கார்டியன் நிலையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டால்தான், அந்த குழந்தையின் தாய் கார்டியனாக இருக்க முடியும் என்று சொல்லப் பட்டுள்ளது.
தாய் கார்டியன் ஆகமுடியுமா?
அப்படியென்றால், இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ல் பிரிவு 6-ன்படி, தகப்பன் உயிருடன் இருக்கும்வரை தகப்பன்தான் அவன் மைனர் குழந்தைக்கு (மகனோ, மகளோ) இயற்கை கார்டியனாக இருக்க முடியுமா? தாய் இருக்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு முக்கியமான வழக்கு வருகிறது. அதில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்குகிறது. இது ஒரு விசித்திரமான வழக்குதான். பிரிவு 6-ல் “தகப்பனும், ‘தகப்பனுக்குப்பின் தாயும்’ இயற்கை கார்டியனாக இருப்பார்கள் என்று சொல்லியுள்ளது.
அப்படியென்றால் தந்தை உயிருடன் இருக்கும்வரை அவர்தான் கார்டியனாக இருப்பாரா? தந்தை உயிருடன் இருக்கும்வரை தாய் கார்டியனாக இருக்கமுடியாதா? என்ற கேள்வி எழுந்தது. பிரிவு 6 அப்படித்தான் சொல்கிறதா? இதுவரை பல உயர்நீதிமன்றங்கள், தகப்பன் உயிருடன் இருக்கும்வரை தாய் கார்டியனாக இருக்க முடியாது என்றுதான் தீர்ப்புக்களை கூறியுள்ளது. “The father and after him, the mother” என்றுதான் பிரிவு 6-ல் சொல்லப்பட்டுள்ளது.
இந்த “after him” என்ற வார்த்தைக்கு “இறப்புக்குப்பின்” என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளக்கூடாது. தகப்பன், உயிருடன் இருக்கும்போதே, அவனால் செயல்பட முடியாமல்போனால், தாய் கார்டியனாக இருக்கலாம் என்றுதான் அதன் பொருளை யூகிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அந்த தீர்ப்பில் தெளிவு படுத்தியுள்ளது. அந்த வழக்குதான் Githa Hariharan v. Reserve Bank of India, AIR 1999 SC 1149.
இந்த வழக்கில், “தகப்பன், மைனரின் விஷயங்களில் தலையிட விருப்பம் இல்லாமல் திரிந்தாலும், அல்லது தகப்பனும் தாயும் சேர்ந்து முடிவு செய்திருந்தாலும், அல்லது தாயிடமே அந்த குழந்தை முழுப் பொறுப்பில் இருந்தாலும், தகப்பனார் இந்த நாட்டில் இல்லாமல் இருந்தாலும், குழந்தையை கவனிக்க முடியாமல் தகப்பனுக்கு ஏதாவது ஒரு குறை இருந்தாலும், அப்போதெல்லாம் தாய் அந்த குழந்தைக்கு கார்டியனாக இருக்கலாம். என்று தீர்ப்பு கூறிவிட்டது. இந்த வழக்கிலும், தகப்பன் உயிருடன் இருக்கிறார். ஆனால் தாயை விட்டு பிரிந்து இருக்கிறார். குழந்தை தகப்பனிடம் இல்லை. தாயுடன் வசிக்கிறது. குழந்தைக்கு பாங்கில் பணத்தை டெப்பாசிட் செய்கிறார் தாய். அதன் தகப்பன்தான் கார்டியனாக இருக்கமுடியும் என்றும் எனவே தகப்பனின் கையெழுத்து வேண்டும் என்றும் பேங்க் சொல்லிவிட்டது, ஆனால், தாயோ, குழந்தை என்னிடமே வளர்கிறது. தகப்பன் குழந்தையுடன் வாழவில்லை. பிரிந்து வாழ்கிறார். குழந்தைக்கு பேங்கில் கட்டும் டெப்பாசிட் பணம் தாயின் பணமே. இப்படி இருக்கும்போது, தகப்பன் கார்டியன் என்பதை ஏற்க முடியாது என்று வழக்கு சுப்ரீம்கோர்ட் வரை சென்று அந்த வழக்கில்தான் இந்த அதிரடியான தீர்ப்பு பெறப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த நாள் முதல், தாயும் கார்டியனாக இருக்கலாம் என்று ஒரு வரலாற்று தீர்ப்பும் கிடைத்தது.
வளர்ப்பு குழந்தைக்கு யார் கார்டியன்? (இந்து )
இந்து மதத்தில் மட்டுமே வளர்ப்பு குழந்தைகளை தத்து (Adoption) எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. மற்ற மதங்களில் அந்த பழக்கம் இல்லை. (இப்போது சட்டம் மாறிவிட்டது). இந்து மதத்தில் தத்து என்னும் வளர்ப்பு குழந்தைகளை எடுத்து வளர்ப்பர். இதை அந்த குழந்தை 14 வயதுக்குள் இருக்கும்போது, அதன் தகப்பன்-தாய் சம்மதத்துடன் தத்து எடுத்து வளர்ப்பர். இப்படி தத்து எடுத்து வளர்த்த குழந்தைக்கு இயற்கை பெற்றோர் இருக்கும்போது, வளர்ப்பு பெற்றோர் இயற்கை கார்டியனாக இருக்க முடியுமா? இதற்கு பதிலாக, இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ல் பிரிவு 7-ல் சொல்லப் பட்டுள்ளது. அதன்படி, வளர்ப்பு குழந்தைகளுக்கு அதன் வளர்ப்பு தந்தை இயற்கை கார்டியனாக இருக்கலாம், அவருக்குப்பின் (அவர் இயங்காமல் போனால்), வளர்ப்புத் தாய் இயற்கை கார்டியனாக இருக்கலாம்.
இயற்கை கார்டியனின் அதிகாரங்கள்
இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ன் பிரிவு 8-ன்படி, மைனர் குழந்தைக்கு நன்மை அளிக்கும் எந்த காரியத்தையும் அந்த மைனருக்காக அதன் இயற்கை கார்டியன் செய்து வரலாம். ஆனால், மைனரின் சொத்துக்களை இயற்கை கார்டியன் என்பவர் அந்த மைனரின் தந்தையே ஆனாலும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, ஐந்து வருடங்களுக்கு மேல் நீண்டகால குத்தகைக்கு விடவோ முடியாது.
அப்படி இந்த சட்டக் கட்டுப்பாட்டை மீறி மைனரின் சொத்தை இயற்கை கார்டியன் விற்று விட்டால் அதை மைனர் நினைத்தால் ரத்து செய்து விடலாம். It is voidable at the instance of the minor. மைனர் சொத்தை கார்டியன் விற்க முடியாது என்று இந்தச் சட்டம் சொல்வதால், மைனரின் சொத்தை உண்மையிலேயே உண்மையான காரணத்துக்கு விற்பனை செய்ய வேண்டி நிர்பந்தம் இருந்தால், அந்த சொத்து இருக்கும் மாவட்டத்திலுள்ள மாவட்ட கோர்ட்டில் கார்டியன் மனுச் செய்து காரணத்தை கூறி மைனரின் சொத்தை விற்கலாம். அப்படி மனுச் செய்யும்போது, பிரிட்டீஸ் பழைய சட்டமான கார்டியன்ஸ் & வார்டு சட்டம் 1890 சட்டத்தில் சொல்லியுள்ளபடி அதாவது அதன் பிரிவு 29-ன்படி மாவட்ட கோர்ட்டில் மனு செய்ய வேண்டும். அந்த மாவட்ட கோர்ட் அனுமதி கொடுக்க மறுத்து விட்டால், உயர்நீதிமன்றத்துக்கு அப்பீல் செய்து கொள்ளலாம்.
பூர்வீகச் சொத்தில் மைனரின் பங்கு
பூர்வீகச் சொத்தில் உள்ள மைனரின் பங்கு சொத்துக்கு இந்த பிரிவு-8 எந்த தடையும் செய்யாது, அதாவது பூர்வீகச் சொத்தில் மைனரின் பங்கை கர்த்தா அல்லது மைனரின் கார்டியன் விற்கலாம், அடமானம் செய்யலாம். கோர்ட் உத்தரவு பெறவேண்டிய அவசியம் இல்லை. கூட்டுகுடும்ப உரிமை உள்ள மைனர் சொத்தில் கோர்ட் தலையிடாது. அதன் குடும்பத் தலைவரே முழு உரிமையுடன் அந்த மைனரின் நன்மைக்காக காரியங்களை செய்து கொள்ளலாம். அவர் கோர்ட்டின் முன்-அனுமதியைப் பெற தேவையில்லை. சட்டத்தில் அவசியம் இல்லை என்று சொல்லியுள்ள போதிலும், அனுமதி பெற வேண்டும் என்று கார்டியன் விரும்பினால், உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்து கார்டியனாக நியமித்துக் கொள்ளலாம்.
பொதுவாக, ஒரு மைனருக்கு இரண்டு கார்டியன்கள் இருப்பதில்லை. கோர்ட்டும் இரண்டு கார்டியன்களை நியமிக்க மாட்டார்கள். ஆனாலும், மைனரை பார்த்துக் கொள்ள ஒரு கார்டியனும், மைனரின் சொத்துக்களுக்கு ஒரு கார்டியனும் நியமிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டாம்.
இந்து மைனர் சொத்தை கோர்ட் அனுமதி இல்லாமல் விற்றால்….?
மைனர் சொத்துக்களை அவரின் இயற்கை கார்டியன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் அது மைனரின் நன்மைக்காக இருக்க வேண்டும் என்றும், இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் ஆக்ட் 1956ன் பிரிவு 8ல் சொல்லப் பட்டுள்ளது. ஆனாலும் அசையாச் சொத்துக்களை கோர்ட் அனுமதியில்லாமல் விற்க முடியாது என்றும் சொல்லி உள்ளது, அவ்வாறு கோர்ட் அனுமதி கொடுக்கும்போது, அந்த விற்பனையானது மைனரின் அவசியத்துக்காக விற்கப்பட்டால் மட்டுமே கோர்ட் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.
கோர்ட் அனுமதியைப் பெறாமல் மைனரின் சொத்தை, தகப்பனார் கார்டியனாக இருந்து விற்று இருந்தால் அந்த கிரயத்தை அந்த மைனர் 18 வயது முடிந்து மேஜர் வயதை அடைந்தவுடன் அதிலிருந்து மூன்று வருடங்களுக்குள் அந்த கிரயத்தை செல்லாது என கோர்ட் மூலம் தீர்ப்பு வாங்கலாம். அதில் மைனரின் நன்மைக்காக இந்த சொத்து விற்கப்படவில்லை என்று கூறித்தான் தீர்ப்பை வாங்க முடியும். அவ்வாறான வழக்குகளை அந்த மைனர் 18 வயது முடிந்து மூன்று வருடங்களுக்குள் அதாவது அவரின் 21 வயதுக்குள் வழக்கு போட்டுவிட வேண்டும். இதற்குப்பின் அதாவது 21 வயது முடிந்தவுடன் அப்படி ஒரு வழக்கை போட முடியாது என லிமிடேஷன் சட்டம் பிரிவு 60-ல் சொல்லப்பட்டுள்ளது. (The Limitation Act Section 60).
பல மைனர்கள் இருந்து, அவர்கள் எல்லோரும் கார்டியனின் மைனர் சொத்தின் கிரயத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை இருந்தால், இது கூட்டாக வழக்குப்போடும் நிலை. இதில் மூத்த மைனருக்கு 21 வயதுக்கு மேல் ஆகிவிட்டிருந்தால் அவர் வழக்கு போட முடியாது. ஆனால், இளைய மைனருக்கு 21 வயதுக்கு கீழே இருந்தால் அவர் தனியே தன் பாகத்துக்கு வழக்கை போடலாம் என்றும், கூட்டுகுடும்ப சொத்துக்களில் மூத்த மைனர் கர்த்தாவாக இருக்க வேண்டி இருந்தால், அவருக்கு 21 வயது முடிந்தவுடனேயே இளைய மைனர்களுக்கு அவ்வாறு 21 வயது வரவில்லை என்றாலும் எல்லோருமே வழக்குப் போடும் உரிமையை இழந்துவிடுவர் என லிமிடேஷன் சட்டம் பிரிவு 7ல் சொல்லப் பட்டுள்ளது. ஏனென்றால் கூட்டுக்குடும்பச் சொத்தில் கர்த்தாவின் (மேனேஜரின்) உரிமை பறிபோய் விட்டால், ஜூனியர் மெம்பர்களின் உரிமையும் கூடவே பறிபோய்விடும் என்று இந்த விதி கூறுகிறது. ஏனென்றால் இது ஒரு கூட்டான உரிமையாகும்.
மைனரைக் காட்டி எழுதிய பத்திரத்தை எப்படி ரத்து செய்யமுடியும்?
மைனரை பத்திரத்தில் பெயர் காண்பித்து அந்த மைனரின் தகப்பனார் அவருக்காக கார்டியனாக இருந்து அந்த மைனரின் சொத்தை விற்பனை செய்திருந்தால், அதை அந்த மைனர் 18 வயது முடிந்து மூன்று வருடங்களுக்குள் அதாவது அவரின் 21 வயதுக்குள் அந்த கிரயத்தை ரத்து செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த மைனர் 21 வயதுவரை எந்த வழக்கும் போடவில்லை என்றால், அதற்குமேல் அந்த கிரயம் செல்லும். அதற்குப்பின் அந்த மைனர் அவரின் சொத்தை திரும்ப கேட்க முடியாது. அந்த வழக்கை 21 வயதுக்குள் கோர்ட்டில் போடும்போது, அந்த சொத்துக்குறிய மதிப்புக்கு கணக்கிட்டு 7.5% கோர்ட் கட்டணம் கட்ட வேண்டும்.
ஆனால் அந்த மைனரின் பேர் அந்த பத்திரத்தில் குறிப்பிடாமல் அவருக்காக கையெழுத்து கார்டியன் போடாமல் இருந்தால், அந்த கிரயத்தை கோர்ட்டில் ரத்து செய்ய வழக்கு போடும்போது அந்த சொத்தின் மதிப்புக்கு கோர்ட் கட்டணம் கட்ட தேவையில்லை, ஏனென்றால், அந்த கிரயப் பத்திரத்தில் மைனரின் பெயர் இல்லை. அந்த மைனருக்காக யாரும் விற்கவில்லை. விற்காத சொத்துக்கு கோர்ட் கட்டணம் தேவையில்லை என்று அடிப்படை விதியின்படி தன் பங்குக்கு மைனர் கோர்ட் தீர்ப்பை வாங்கிவிடலாம். சென்னை உயர்நீதிமன்றத்தின் முழுபெஞ்ச் தீர்ப்பில் இந்த சட்டப்பிரச்சனை அலசப்பட்டு இந்த தீர்ப்பு வழங்கப் பட்டது. (The Hon’ble FULL BENCH of the Madras High Court, in Sankaranarayana v. Kandasamia, AIR 1956 Mad 670).
இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875
1875லிலேயே பிரிட்டீஸ் ஆட்சி காலத்திலேயே இந்தியன் மெஜாரிட்டி சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது. இந்தச் சட்டம் வருவதற்கு முன், இந்துக்கள், மைனாரிட்டி என்பது 16 வயது ஆரம்பமாகும் வரைதான் என்றார்கள். கோர்ட்டுகளும் அதை ஒப்புக்கொண்டன. இன்னும் சில கோர்ட்டுகள் 16 வயது முடிந்தவுடன்தான் மேஜர் ஆவார்கள் என்று தீர்ப்பளித்தன. முஸ்லீம் மதத்தில் மெஜாரிட்டி என்பது பருவம் அடைந்தவுடன் வந்துவிடும் என்று சொல்லி உள்ளார்கள். பருவம் என்பது அந்தக் காலத்தில், ஆணுக்கு 12 வயது முடிவடைந்தவுடன் வந்துவிடும், பெண்ணுக்கு 9 வயது முடிவடைந்தவுடன் வந்துவிடும் என்று முடிவெடுத்-திருந்தார்கள். அதை பிரைவி கவுன்சில் வழக்கிலும் உறுதி செய்துள்ளது. AIR 1928 PC 152.
இந்தியாவில், முகமதியர்கள் வழக்கப்படி திருமணம், டைவர், தலக் இவைகளில் மேஜர் வயது என்பது 15 முடிவடைந்தவுடன் ஏற்படும் என்று சொல்லி உள்ளனர். ஒரு 15 வயது முஸ்லீம், இஸ்லாமிய சட்டப்படி மேஜர் என்றும், இந்தியன் மெஜாரிட்டி சட்டப்படி மைனர் என்றும் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு இந்தியாவில் மைனாரிட்டி வயதுபற்றி பல குழப்பங்கள் இருந்ததால் இவையெல்லாவற்றையும் ஒன்றுபடுத்தி, இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் வந்தது. இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டும் பொருந்தும். வெளிநாட்டினருக்கு பொருந்தாது.
மைனர் போடும் வழக்குகள்;
கோர்ட்டில் வழக்குகளை தாக்கல் செய்யவதற்கு அந்த வழக்கை போடுபவர் மேஜராக இருக்க வேண்டும், அதாவது அவர் 18 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். அதாவது அவருக்கு அப்போது 19 வயது நடந்து கொண்டிருக்க வேண்டும். அப்படி மேஜர் ஆகாமல் இருந்தால், அதாவது மைனராக இருந்தால், அவருக்காக அவரின் கார்டியன் அந்த வழக்கை போடலாம். அந்த கார்டியன் அவரின் தந்தையாகவோ, தாயாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த மைனரின் நண்பனாக இருக்கலாம். (The next friend) வேறு யாராவது, மைனருக்கு எதிராக ஒரு வழக்கை கோர்ட்டில் போட வேண்டும் என்ற நிலை இருந்தால், அவர் அந்த மைனர் மீது வழக்கை போடலாம். ஆனால், அந்த வழக்குடன் ஒரு மனுவையும் போட்டு, அதில், அந்த மைனருக்காக அந்த வழக்கை நடத்த, ஒரு கோர்ட் கார்டியனையும் நியமிக்க சொல்லி கேட்க வேண்டும். அந்த கார்டியன் அந்த மைனரின் தகப்பன், தாய், அல்லது வேறு யாராவகவும் இருக்கலாம். கோர்ட் அதை முடிவு செய்யும்.
சட்டபூர்வம் இல்லாத குழந்தை
திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அது சட்டபூர்வமற்ற குழந்தை (illegitimate child) என்பர். இந்த மாதிரி குழந்தைகளுக்கு அதன் தாயே கார்டியன் ஆவார்.
மேற்கண்ட விபரங்கள் முழுவதும் https://gblawfirm.blogspot.in ல் இருந்து
எடுக்கப்பட்டவை ஆகும்.
வழக்குரைஞர் திரு பாலகிருஷ்ணன் அவர்களுக்கு எனது நன்றி!
***************அன்புடன் செல்வம் பழனிச்சாமி