நீதிமன்றத்தில் ப்ரைவேட் கம்ப்ளைண்ட் கொடுப்பது எப்படி?
ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தின் வழக்கு ஒன்றை நாம் தாக்கல் செய்யும் முன் அந்த வழக்கில் நியாமம் இருக்கிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
ஆகவே. குற்றம் எந்த எல்லைக்குள் நடந்துள்ளதோ அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.
எந்த நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்வது?
குற்றவியல் நீதிமன்றங்கள் ஒரே ஊரில் பல இருக்கின்றது.. அவைகள் முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் மன்றம் என்றும். இரண்டாவது வகுப்பு நீதித்துறை நடுவர் மன்றம் என்றும் கூட இருக்கலாம். நமது வழக்கில் உள்ள குற்ற அளவின் தன்மையைப் பொருத்தும், குற்றம் சாட்டப்பட்டவரைப் பொருத்தும் எங்கே வழக்கை தாக்கல் செய்வது என்று நாம் முடிவு செய்ய வேண்டும்.
தவறாக வேறு நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தால் என்ன நடக்கும்?
தவறாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தால் தவறு ஏதும் இல்லை. நமது வழக்கின். மனு அந்த நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டு, நம்மிடம் திருப்பியளிக்கப்படும். அதே நேரத்தில் ஏன் திருப்பி அளிக்கப்பட்டது என்பதற்கான காரணமும் எழுதப்பட்டிருக்கும். அதை படித்துத் தெரிந்து கொண்டு அதற்குரிய நீதிமன்றத்தில் நமது வழக்கை நாம் தாக்கல் செய்யலாம்.
வழக்கு மனுவை தயார் செய்வது எப்படி?
மனு தயார் செய்யும் போது தலைப்பில் பேப்பரின் நடுவில் கொஞ்சம் பெரிய எழுத்தில், நீதித்துறை நடுவர் மன்றம் என மனு எழுதி அதன் கீழே அந்த நீதிமன்றம் இருக்கின்ற ஊரின் பெயரை எழுத வேண்டும். அதற்குக் கீழே மையத்தில் ஆண்டுப்பட்டிகை வழக்கு எண் அல்லது (Calendar Case) சி.சி.எண்.. என்று எழுதி கொஞ்சம் இடம் விட்டு அதாவது சி.சி. எண்…….2019 என்று வருடத்தைக் குறிப்பிட வேண்டும். நமது வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதும் வழக்கிற்கு ஒரு எண் வழங்கப்படும். அந்த எண்ணை எழுதுவதற்கு வசதியாகவே மேற்கூறிய இடைவெளியை நாம் முதலிலேயே விட்டுவிடவேண்டும்..
அடுத்து நமது பெயர் – தந்தையார் பெயர்- நமது வயது மற்றும் முகவரியை இடது பக்கத்தில் எழுதி. மனுதாரர் / புகார்தாரர் / வாதி என்று அதற்கு நேராக வலது புறத்தில் எழுத வேண்டும். அதற்குக் கீழே தன் வழக்கில் தானே ஆஜராகிறார் அல்லது ஆங்கிலத்தில் Party in Person என்று எழுதவேண்டும்.
அவ்வாறு எழுதப்பட்டிருந்தால் மனுதாரர் வழக்கறிஞர் இல்லாமல், தன் வழக்கில் தானே வாதாடப் போகிறார் என்பதை நடுவர் முதலிலேயே புரிந்து கொள்வார்.
அடுத்து இடது பக்கத்தில் எதிர்மனுதாரர்களின் பெயர், அவர்களின் தந்தையார் பெயர் மற்றும் வயது (வயது தெரியவில்லை என்றால் சுமாரான வயது) மற்றும் முகவரி எழுதவேண்டும்.
எதிர்மனுதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால் நம்பரிட்டு வரிசையாக எழுத வேண்டும். அவர்களின் பெயருக்கு நேராக வலது பக்கத்தில் எதிர்மனுதாரர்கள் / பிரதிவாதிகள் என்று குறிப்பிடவேண்டும்.
நீதிமன்ற கட்டணம்.
குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்ய கட்டணமாக 20 ரூபாய்க்குக் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் வாங்கி ஓரத்தில் ஓட்டிவிடவேண்டும். இதுவே வழக்கு தொடுக்க நீதிமன்றத்தில் நீங்கள் செலுத்தும் கட்டணமாகும்.
இந்த கோர்ட் ஃபீ ஸ்டாம்ப்-ஐ இடதுபுறம் தான் ஒட்ட வேண்டும். என்பதில்லை தலைப்பிலோ வலது புறத்திலோ எங்கு வேண்டுமானாலும் ஒட்டலாம்.
குற்ற விசாரணைமுறைச் சட்டம், பிரிவு - 200
குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இதுபோல் தனியாக ஒருவர் புகார் கொடுப்பது பற்றி குற்ற விசாரணைமுறைச்
சட்டம், பிரிவு 200-ல் குறிப்படப்பட்டுள்ளது. எனவே கீழே மையத்தில் கு.வி.மு.ச. பிரிவு 200-ன் கீழ் மனு என்று குறிப்பிட்டு அடிக்கோடு இடவேண்டும்.
ஒரு குற்றம் பற்றி சரியாகப் புலனாகாத நிலையில் கு.வி.மு.ச. பிரிவு 190(1)(அ)-ன் கீழும் இந்த மனுவை ஒரு முறையீடாக நாம் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.
பொதுநல வழக்காக இருந்தால் எப்படி எழுத வேண்டும்?
பொது சுகாதாரக் கேடுகள். பொது வழிக்கு இடையூறு ஏற்படுத்துதல்
அமைதியைக் குலைத்தல் போன்ற பொது நல வழக்காக இருந்தால் கு.வி.மு.ச. 133-ன் கீழ் முறையீடு என்று குறிப்பிடடு தாக்கல் செய்ய வேண்டும்.
புகாரின் தன்மை பற்றி எழுத வேண்டும்
அடுத்து புகாரின் தன்மையைச் சுருக்கமாகப் பத்தி பத்தியாக எழுதி, ஒவ்வொரு பத்திக்கும் வரிசையாக எண்கள் கொடுக்க வேண்டும். உங்கள் மனுவை படிக்கும் போது படிப்பவருக்கு வழக்கின் தன்மை தெளிவாக தெரிய வேண்டும். உங்கள் மனுவை வைத்தே உங்கள் திறமையை நடுவர் எடை போட்டுவிடலாம்.
இறுதியில் ஆகவே கனம் கோர்ட்டார் அவர்கள் எதிர்மனுதாரர்/எதிர்மனுதாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் பிரார்த்திக்கப்படுகிறது என்று மனுவை முடிக்க வேண்டும். வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் இந்தியத் தண்டனைச் சட்டத்தில், எந்தப் பிரிவின் கீழ் அடங்கும் என்ற விபரம் தெரிவிக்கலாம். தெரிவித்தால் மனுதார் சட்டம் தெரிந்தவர் என்பதை நடுவர் புரிந்து கொண்டு நியாயமாக விசாரரணயை நடத்த எண்ணலாம். கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
கடைசியில் வலது பக்கம் கையெழுத்து செய்து – மனுதாரர்/புகார்தாரர்/வாதி என்று எழுத வேண்டும்.
மனுவை பச்சை கலர் கேங்கர் பேப்பரில்தான் எழுத வேண்டும். மனு எழுதும் போது ஒவ்வொரு வரிகளுக்கும் இடையே நன்கு இடைவெளிவிட்டு எழுத வேண்டும். நமக்காக ஒரு பிரதி கண்டிப்பாக ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்மனுதாரர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை நகல்களை அவர்களுக்கு அளிப்பதற்காக ஒரிஜினல் மனுவுடன் சேர்த்து நீதிமன்றத்தில் கொடுக்க வேண்டும்.
பொதுவாக வழக்கின் மனுவானது டைப் செய்து தாக்கல் செய்வதே நடைமுறையில் இருந்து வருகிறது. அதுவே வசதியாகவும் உள்ளது. அப்படியே செய்வது நல்லது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனுவானது வழக்கு முடியும் வரையில் பாதுகாப்பட வேண்டியுள்ளதால் திக் பேப்பரில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்பதால், பச்சை கலர் கேங்கர் பேப்பரில் வழக்கின் மனுக்கள் அனைவராலும் தயார் செய்யப்படுகிறது.
டாக்கெட் சீட் (Docket Sheet)
டாக்கெட் சீட் (Docket Sheet)
வேறு ஒரு முழுத்தாளை எடுத்து அதனை. பாதியாக மடித்து வலப்பக்கத்தில்
மேலே நீதிமன்றத்தின்
பெயரும். ஊரின் பெயரும் கீழே எழுத வேண்டும். அதற்கடுத்து (C.C.No…./2019) என்று எழுதவேண்டும். இது காலண்டர் கேஸ் எண். (CALENDAR CASE
NUMBER) என்பதன் சுருக்கமாகும்.
தமிழில் ஆண்டுப்பட்டிகை
வழக்கு எண்……../2019 என்றும் குறிப்பிடலாம்.
சற்று கீழே மனுதாரின் பெயர் எழுதி-மனுதார் என்று எழுத வேண்டும். அதற்குக் கீழ் கொஞ்சம் இடம்விட்டு எதிர்மனுதாரின் பெயரை எழுத வேண்டும். எதிர்மனுதாரர்கள் பலர் இருந்தால் முதல் எதிர் மனுதாரர் ஒருவரின் பெயரை மட்டும் எழுதி மற்றும் பிறர் என்று குறிப்பிட்டால் போதும்.
மையப்பகுதியில்
குற்றவிசாரணை முறைச்சட்டம்
அல்லது கு.வி.மு.ச. 200கீழ் மனு என்று குறிப்பிட்டு மேலும் கீழும் கோடிட்டுத் தனியாகக் காட்ட வேண்டும். அல்லது நீங்கள் எந்தப் சட்டப்பிரிவின் கீழ் உள்ளே வழக்கை குறிப்பிட்டுள்ளீர்களோ அதை இங்கே குறிப்பிடவேண்டும்.
கடைசியில் உங்கள் பெயரை எழுதி மனுதாரர்- தன் வழக்கில் தானே ஆஜராகிறார் என்று அவசியம் எழுத வேண்டும். இந்த பேப்பருக்குள் உங்கள் மனுவை வைத்து மூலையில் தைக்க வேண்டும். இதே போன்ற பேப்பரை தனித்தனியாக தயாரித்து அதன் நடுப்பகுதியில் உள்ளே இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தின் பெயரை குறிப்பிட்டு, ஒவ்வொரு ஆவணத்தின் நகலையும் உள்ளே வைத்து தைக்க வேண்டும்.
இந்த மனுவுடன் உரிய சான்றாவணங்கள்
இருந்தால் கூடிய மட்டும் ஒரிஜினலோ அல்லது ஜெராக்ஸ் காபியோ இணைக்க வேண்டும். ஒரிஜினல் சான்றாவணம் இணைத்தால் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டியது இல்லை. ஜெராக்ஸ் காப்பி இணைத்தால் கண்டிப்பாக ஒவ்வொரு ஆவணத்திற்கும், 5 ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் கண்டிப்பாக ஒட்ட வேண்டும்.
அபிடவிட் இணைக்க வேண்டும் என்று நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. எனவே தங்களது அபிடவிட் ஒன்றை இணைக்க வேண்டும்.
அபிடவிட் இணைக்க வேண்டும் என்று நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. எனவே தங்களது அபிடவிட் ஒன்றை இணைக்க வேண்டும்.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.07.2019