disalbe Right click

Friday, April 10, 2015

தேசிய ஓய்வூதியத் திட்டம்


தேசிய ஓய்வூதியத் திட்டம் NATIONAL PENSION SYSTEM
***************************************************************
            இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும், ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ (NPS – National Pension System)  என்னும் திட்டம் பற்றி உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

        அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வு காலத்தில் வருமானம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இது, முதுமையில் பொருளாதாரப் பாதுகாப்பின்றி இருப்பதை தவிர்ப்பதுடன், மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தையும் இது ஏற்படுத்தும்! என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

                 அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறுவனங்களில், இந்த திட்டத்துக்கான கணக்கு ஆரம்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.  இதற்காக ‘பிரான்’ (PRAN- Permanent Retirement Account Number) எண் தரப் படும். இது வாழ்நாளுக்கான எண் ஆகும்.
        18 வயது முதல் 55 வயதுவரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். மத்தியஅரசு ஊழியர்கள், மாநிலஅரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை எளியோர் என்று அனைவரும் பயன்பெறலாம். வெளிநாடுவாழ் இந்தியர்கள் (N.R.I.)மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (P.P.F) சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென்இந்திய வங்கிகள் அனைத்திலும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
       இத்திட்டத்தில் சேர முதலில் 600 ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் மாதாமாதம் குறைந்தபட்சம் 100 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். 
              நீங்கள் 100 ரூபாய்செலுத்தினா ல், உங்கள் கணக்கில் ஆண்டு க்கு 100ரூபாயை மத்திய அரசு செலுத்தும் (முதல் 4 வருடங்க ளுக்குமட்டும்). 
              அதிகபட்சமாக 12ஆயிரம் ரூபாய்வரை மாதம் தோறும் செலுத்துபவர்கள் வரைதான் மத்திய அரசின் 1000ரூபாய் கிடைக்கும். அதற்குமேல் செலுத்துவோருக்கு இந்தச் சலுகை இல்லை. சந்தாதாரருக்கு 60 வயது ஆகும்போது, அவர் கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக் கொள்ளலாம். மீதி தொகையிலி ருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும். அதுவும் 8%  முதல் 12% கூட்டுவட்டியுடன்  கிடைக்கும்.
         மகளிர் சுய உதவிக் குழுக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதிநேரவேலை தேடுபவர்கள் என அனைவரும் இத்திட்டத்தில் முகவர்களாக சேர்ந்து வருமானமும் ஈட்ட வாய்ப்பிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு http:// pfrda.org.in/index1.cshtml?lsid=86 எனும் லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Thursday, April 9, 2015

தெரிந்து கொள்வோம் படிவம் 16


தெரிந்து கொள்வோம் படிவம் 16
****************************************
 இந்த இயந்திர வாழ்க்கை முறையில், இன்றைய இளைஞர்கள் பலரும் சிறந்த வாய்ப்புகளை நோக்கியும், சிறப்பான ஊக்கத் தொகை, ஊதியத்தை எதிர்பார்த்து சென்னை, பெங்களுர் போன்ற நகரங்களை நோக்கி வேகமாக ஒடி வருகின்றனர். அதிக ஊதித்தை தேடி இவர்கள் அடிக்கடி தான் பணிபுரியம் நிறுவனங்களை மாற்றி வருகின்றனர். மாத ஊதியத்தில் வேலைக்குச் செல்பவர்கள் தங்களுடைய வரியை செலுத்தும் போது பயன்படுத்தும் முக்கியமான படிவம் தான் படிவம் 16 (Form 16). வருமான வரி செலுத்தும் போது சில நேரங்களில், அவர்கள் தங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட படிவம் 16-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இந்தக் கட்டுரையின் மூலம் பார்ம் 16-ஐ பற்றிய 10 விஷயங்களை காண்போம்.

1.பார்ம் 16 என்றால் என்ன? 
ஒரு நிறுவனம் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் படிவம் தான் பார்ம் 16. இந்தச் சான்றிதழில் அந்தப் பணியாளர் சம்பாதித்த ஊதியம் மற்றும் அவரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரி ஆகியவை பற்றிய அனைத்து விபரங்களும் இருக்கும்.   

2.நிறுவன மாற்றம் 
ஒருவர் தன்னுடைய வேலையை வேறு நிறுவனத்திற்கு மாற்றிக் கொண்டால், அவர் தன்னுடைய முந்தைய நிறுவனம் மற்றும் தற்போதைய நிறுவனம் ஆகிய இரண்டிடம் இருந்தும் படிவம் 16-ஐ ஆண்டின் முடிவில் பெற வேண்டும்.

3.ஒன்றுக்கும் மேற்பட்ட படிவங்கள் 
ஒரு தனிநபர் வேறு வேலைக்குச் சென்றாலோ அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் வேலை செய்து வந்தாலோ அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட படிவம் 16-ஐ பெற முடியும்.

4.வருமான வரி 
உங்களுடைய ஊதியம் குறைந்தபட்ச வரி செலுத்தும் அளவை விடக் குறைவாக இருந்தால், ஊதியத்திலிருந்து வரி நேரடியாகப் பிடித்தம் செய்யப்படாத காரணத்தால் சான்றிதழ் எதுவும் தரப்படாது.

5.வருமான படிவம் 
உங்களுடைய நிறுவனத்தினர் படிவம் 16-ஐ கொடுக்காத பட்சத்தில், அவர்கள் கொடுக்கும் சேலரி ஸ்லிப்பில் இருக்கும் விபரங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

6.பல தகவல்கள் 
மொத்த வருமானம், மேல் வருமானம், பல்வேறு சலுகைகள் மற்றும் பிடித்தங்கள் போன்ற முக்கியமான தகவல்களைப் படிவம் 16 கொண்டிருக்கும்.

7.வரி கணக்கீடு 
நீங்கள் ஒரே நிதியாண்டில் வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றியிருந்தால், அந்த இரண்டு நிறுவனங்களிலிருந்தும் நீங்கள் பெற்ற வருமானத்தை மொத்தமாகக் கூட்டி கணக்கிட்டு, உங்களுக்கான வரியை செலுத்த வேண்டும்.

8.இப்படியும் செய்யலாம்..
 வரிப் பிடித்தம் எதுவும் இல்லை என்பது போன்று, ஏதாவதொரு காரணத்திற்காக முந்தைய நிறுவனம் படிவம் 16-ஐ கொடுக்க இயலாத போது, உங்களுடைய சேலரி ஸ்லிப்-ஐயும் மற்றும் புதிய நிறுவனத்திலிருந்து பெற்ற படிவம் 16-ம் கொண்டு வரிச் செலுத்தலாம்.

9.வருமான வரி செலுத்துதல்
 உங்களுடைய முந்தைய நிறுவனத்தினரின் படிவம் 16-ஐ தற்போதைய நிறுவனத்தினரிடம் நீங்கள் கொடுக்க விரும்பாவிட்டால், இரு நிறுவனங்களிடமிருந்தும் பெற்ற படிவம் 16 குறிப்பைப் பயன்படுத்தி வரிச் செலுத்தலாம்.

10.பான் எண் 
படிவம் 16-ல் வேலை கொடுத்த நிறுவனத்தின் நிரந்தரக் கணக்கு எண் (PAN) குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.



செல்வமகள் சேமிப்புத்திட்டம் - முழு விபரங்கள்


செல்வமகள் சேமிப்புத்திட்டம் பற்றிய முழு விபரங்கள்
***************************************************************
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ”சுகன்யா சம்ரிட்ஹி யோஜனா” என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். ஆங்கிலத்தில் அதை ”Girl Child Prosperity Scheme” என்கிறார்கள். தமிழில் அதன் பெயர் “செல்வ மகள் சேமிப்புத் திட்டம்” என்பதாகும்..
இந்த செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கும், அது முதிர்வடையும்போது வழங்கப்படும் தொகைக்கும் வருமான வரி கிடையாது என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பினால், இந்தத் திட்டத்தில் சேருகிறவர்களுக்கு லாபகரமான திட்டமாக மாறிவிட்டது.
யார் யார் இதில் சேரலாம்?
***************************************

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் பத்து வயது அல்லது பத்துக்கும் குறைவான வயதாகும் பெண் பிள்ளைகள் மட்டுமே சேர முடியும். மற்றவர்கள் பெயரில் இந்த கணக்கு தொடங்க முடியாது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் இந்த ஆண்டுக்கு மட்டும் ஒரு சிறிய விதிவிலக்கு கொடுத்திருக்கிறார்கள்.
அதன்படி, வயது பத்துக்கும் மேலாக ஓர் ஆண்டு கூடுதல் ஆகியிருந்தாலும், அதாவது 2003-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதிக்கும், 2004-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கும் இடையில் பிறந்த பெண் குழந்தைகள், அவர்களுக்கு வயது பத்துக்கு மேல் ஆகியிருந்தாலும் இந்தத் திட்டத்தில் சேர அனுமதி உண்டு. அப்படிச் சேர்வதற்கு கடைசி நாள் 01.12.2015.
யார் கணக்கு துவங்கலாம்? என்ன சான்றிதழ்கள் தேவை?
**********************************************************************************
பெண் குழந்தையின் பெற்றோர்தான் துவங்க வேண்டும். பெற்றோர் இருவரும் இல்லாதபட்சத்தில் மட்டும் அந்தப் பெண்ணின் சட்டபூர்வமான கார்டியன் கணக்குத் துவங்கலாம்.
எவ்வளவு கட்டவேண்டும்?
**************************************

திட்டத்தில் சேருகிறவர்கள், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் ரூ.1,000 கட்ட வேண்டும். நூறின் மடங்குகளில் கட்டுகிற தொகை, ஆண்டுக்கு ஆண்டு மாறுபடலாம். குறிபிட்ட அளவு, ஒரே தொகைதான் கட்ட வேண்டும் என்பதில்லை. ஆனால், அதிகபட்சமாக ஒரு ஆண்டில் ஒன்றரை லட்சம்தான் கட்டலாம். கட்டுகிற பணத்தை ஒரே தவணையில்தான் கட்ட வேண்டும் என்பதில்லை. சீட்டு கட்டுவது போல, எஸ்ஐபி போல மாதா மாதமும், மாதம் 100 ரூபாய் முதல் 12,500 ரூபாய் வரைகூடக் கட்டலாம்.
எப்படிக் கட்டினாலும், திட்டத்தில் தொடருவதற்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 கட்ட வேண்டும். எந்த ஒரு ஆண்டும் ரூ.1,000 கட்டத் தவறினால், அதன்பிறகு ரூ.50 அபராதம் செலுத்திவிட்டுத்தான் சேமிப்பைத் தொடரமுடியும்.
இந்தத் திட்டத்தினால் என்ன பலன்?
****************************************************

கட்டுகிற பணத்துக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80-சியின் கீழ் முழு வரி விலக்கு உண்டு. அதேபோல், முதிர்வுத் தொகையை பெறும் நேரமும், பெறுகிற முழுத்தொகைக்கும் வரி கிடையாது.
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் சேரும் பணத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு வட்டி தருவார்கள். அந்த வட்டியை கையில் தரமாட்டார்கள். கணக்கில் சேர்த்துவிடுவார்கள். தற்சமயம் இருக்கிற பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, வரும் ஆண்டுக்கு அறிவித்திருக்கிற 9.1 சதவீதம் என்பது நல்ல வட்டி. அதுவும், வரிவிலக்குடன். இதனுடன் ஒப்பிடக்கூடிய மற்றொரு சிறுசேமிப்புத் திட்டத்துடன் வைத்துப் பார்த்தால், பி.பி.எஃப்.-ல் இந்த ஆண்டு வட்டி 8.75 சதவீதமாக இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வட்டி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, கவர்மென்ட் செக்யூரிட்டிகளுக்கு நிலவும் வட்டியைவிட 0.75 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று பதில் சொல்கிறார்கள்.
எவ்வளவு காலம் பணம் கட்ட வேண்டும்?
************************************************************

திட்டம், 21 ஆண்டுகளுக்கானது. ஆனால், பணம் கட்டுவது அதிகபட்சமாக 14 ஆண்டுகளுக்குத்தான். அதன்பிறகு பணம் கட்ட வேண்டாம். கட்டவும் முடியாது. கணக்கில் இருக்கிற பணத்துக்கு வட்டியைக் கணக்கிட்டு, முதிர்வுகாலம் வரை கணக்கில் சேர்த்துக்கொண்டே வருவார்கள்.
முதிர்வு எப்போது?
***************************

கணக்கு துவங்கியதில் இருந்து 21-ம் ஆண்டுடன் இந்தத் திட்டம் முதிர்வு அடைந்துவிடும். அதன்பிறகும் தொடருவதென்றால் தொடரலாம். கணக்கில் இருக்கிற பணத்துக்கு வட்டி உண்டு.
கணக்குதாரர் விரும்பினாலும், 18 வயதுக்குப் பின் எந்த வயதில் திருமணம் நடந்தாலும், அதன்பின் இந்தத் திட்டத்தில் தொடர முடியாது. முதிர்வுத் தொகை, கணக்குதாரரான பெண்ணிடம்தான் வழங்கப்படும்.
முன்கூட்டியே விலக முடியுமா?
*********************************************

முடியும். ஆனால், விலகுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.
1. கணக்குதாரருக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேலும்,
2. அவருக்கு திருமணம் முடிந்திருக்க வேண்டும்.
அப்படியிருந்து விண்ணப்பித்தால், கணக்கை முடித்து மொத்தப் பணத்தையும் கொடுத்துவிடுவார்கள். கொடுக்கப்படும் தொகை எவ்வளவாக இருந்தாலும் அதற்கு வருமான வரி இல்லை.
இடையில் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?
***************************************************************************

கணக்கு வைத்திருக்கும் பெண்ணுக்கு 18 வயது ஆன பிறகு, தேவைப்பட்டால் கணக்கில் இருக்கும் பணத்தில் பாதியை பெற முடியும். இந்தத் திட்டத்தில் 50 சதவீதம் பார்ஷியல் வித்டிராயல் அனுமதிக்கப்படுகிறது. இது, அந்தப் பெண்ணின் கல்வி போன்ற செலவுகளுக்கு உதவுவதற்காக.
18 வயதாகும் வரை, முதலீடு செய்த பணத்தை எடுக்கவே முடியாது. அது முழு ‘லாக் இன். 18 வயதுக்குப் பின், பாதிப் பணத்தை எடுக்கலாம். திருமணத்துக்குப் பின் முழுப் பணத்தையும் எடுக்கலாம். பெற்றோர் அல்லது கார்டியன் மிக மோசமான நிதி நெருக்கடியில் இருக்கும்பட்சத்தில், அதற்கென உள்ள தனிப் படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பரிசீலனைக்குப் பின் கணக்கை முடித்து பணம் கொடுப்பார்கள்.
எத்தனை கணக்குகள் ஆரம்பிக்கலாம்?
********************************************************

ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்குதான் ஆரம்பிக்க முடியும். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர், இரண்டு குழந்தைகளின் பெயரிலும் தனித்தனியே இரண்டு கணக்குகள் துவங்கி சேமிக்கலாம்.
இரட்டைக் குழந்தைகள் இருந்தால் கணக்கு துவங்குவது எப்படி?
*********************************************************************************************

இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் என்றால் மட்டும், முதல் பிரசவத்தில் பிறந்த பெண்ணுக்கும் சேர்த்து மொத்தம் மூன்று தனித்தனி கணக்குகள் துவக்க அனுமதி உண்டு. முதல் பிரவத்திலேயே மூன்று பெண் குழந்தைகள் என்றாலும், மூன்று கணக்குகளுக்கு அனுமதி தருகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் ஐந்து பெண் குழந்தைகள் இருந்தால்?
********************************************************************************

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் பிள்ளைகளுக்குத்தான் செல்வமகள் கணக்குத் துவங்க முடியும்.
வாரிசுதாரர் என்னும் நாமினேஷன் வசதி உண்டா?
************************************************************************

வாரிசுதாரர் எனும் நாமினேஷன் வசதி இந்தத் திட்டத்தில் இல்லை. கணக்குதாரருக்கு ஏதும் நிகழும்பட்சம், கணக்கை துவங்கிய பெற்றோர் அல்லது கார்டியனிடம் கணக்கு முடித்துக் கொடுக்கப்படும்.
எங்கே, எப்படி இந்தக் கணக்கை துவங்குவது?
******************************************************************
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், கணக்கு துவங்குபவரின் அடையாள அட்டை மற்றும் அவரது முகவரி சான்றிதழ் ஆகியவை போதும். அஞ்சலகங்கள் அல்லது அரசு குறிபிட்டிருக்கும் 28 வங்கிகளில் செல்வ மகள் திட்டக் கணக்கை துவங்கிவிடலாம். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி ஆகியவை அவற்றில் சில.
பத்துக்கும் குறைவான வயதில் பெண் குழந்தைகள் இருப்பவர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பு. காரணம், சந்தை நிலவரத்தை ஒட்டிய வட்டி; முதலுக்கும் வட்டிக்கும் வருமான வரிவிலக்கு;

வருமான வரிச் சலுகை:
*************************************''வருமான வரிச்சட்டத்தின் 80-வது பிரிவு, உட்பிரிவு 2-ன் கீழ் உள்ள 8-வது சட்ட உட்கூறின் கீழ் ‘செல்வ மகள்' சேமிப்புத் திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘செல்வ மகள்' சேமிப்புத் திட்டத்துக்கு வருமான வரி சலுகை வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையை அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிப்பவர்கள் பெறலாம். கடந்த ஆண்டு வருமான வரிக் கணக்கில் ‘செல்வ மகள்' சேமிப்புத் திட்டத்தின் கீழ் உள்ள தொகையை சேர்க்க தேவையில்லை. சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர் அல்லது பெற்றோர் / பாதுகாவலர் இச்சலுகையை பெற உரிமை கோரலாம்''

Monday, April 6, 2015

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்


முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்
****************************************
முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை பெறுவது எப்படி?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான வருமானச் சான்றிதழ் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற வேண்டும். வருமானச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை (ரேசன் கார்டு) ஆகியவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீ்ட்டு திட்ட மையத்தில் வழங்கி, புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின், குறிப்பிட்ட நாள் இடைவெளியில் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்படும்.
tamilnadu chief minister health insurance scheme details, maruththuva sigichai perum valigal

இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான வழிமுறை என்ன?

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. மருத்துவமனை குறித்த பட்டியல் அடங்கிய கையேடு அடையாள அட்டையுடன் வழங்கப்படும். கையேட்டில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனையில் காப்பீட்டு நிறுவன தொடர்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் அவரை அணுகி காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினால் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். பழைய காப்பீட்டு திட்டத்தில் பெறப்பட்ட அடையாள அட்டை இருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான அதிகபட்ச தொகை எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில நோய்களுக்கு ரூ. 1.50 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். மேலும், பச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரும் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1,016 மருத்துவ சிகிச்சை உள்பட 113 தொடர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிகிச்சை பெறுவோர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. காப்பீட்டு நிறுவனம் மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான தொகை வழங்கப்படும்

இத்திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற யாரை அணுக வேண்டும்?

இத்திட்டத்தில் சேரவும், சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் 1800 425 3993 என்ற கட்டணமில்லா (toll free) தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டால் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் குறித்த முழு விவரங்களையும் அறிய முடியும். தவிர, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீட்டு திட்ட மையத்தை அல்லது கிராம நிர்வாக அலுவலரை அணுகியும் காப்பீட்டு திட்ட விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.


ஏ,டி.எம்-ல் கள்ள நோட்டு வந்தால்


ஏ,டி.எம்-ல் கள்ள நோட்டு! என்ன செய்ய வேண்டும்?
***************************************************************
ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த் தாள்களை லோடு செய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். 

ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். 
அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங் களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தால் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.

எப்படி வருகிறது?
*************************

எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது. Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்து வருகின்றன. இவர்களின் பணி வங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.

யாரை அணுகுவது?
****************************

வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம்.

ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.

பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.

ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள். 

அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

வங்கி நடைமுறைகள்!
**********************************

ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம். 

ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ள நோட்டுதானா என்று பரிசோதிப்பார்கள். 

அது கள்ள நோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். 

கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள்.

உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள். 

இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தேகம் வந்தால் அவர் மீது வங்கியானது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது. 

எஃப்.ஐ.ஆர். ஃபைல்!
*****************************

பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த் தாள்கள் கள்ள நோட்டுகளாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்களின் மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும். 

அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும். 

தனது ஏ.டி.எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.

ஆர்.பி.ஐ.-ன் உதவி!
****************************

வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ள நோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென்று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். 

அதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம். 

இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு,www.rbi.org.inwww.paisabolthahai.rbi.org.in என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.''

இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்!


குடும்பத்தின் முதல் பட்டதாரி - அரசு தரும் சலுகை!


குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு தரும் சலுகை!
************************************************************
2010-11ம் கல்வியாண்டு முதல், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது

பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும்.

கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும்.

யார் யாருக்கு இது பொருந்தும்?
***********************************

கவுன்சிலிங் முறையில் அரசு தொழிற்கல்லூரி மற்றும்
அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் இத்திட்டம் பொருந்தும்.

முந்தைய ஆண்டுகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.

இதனை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
*************************************************

1.தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும்.

2. மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும்.

சான்றிதழ்களை சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

3. மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

4. ‘குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை’ என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.

இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்

. மாணவர் களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப் படும்.

உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெற வேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும்.

விதவை மறுமணம் - அரசு நிதியுதவி


விதவை மறுமணத்திற்கு அரசு தருகின்ற நிதியுதவி
************************************************************

டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு  விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’


விதவைகளுக்குப் புதுவாழ்வளிக்க, அவர்களின் மறுமணத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் விதவைகள் மறுமணத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

2 திட்டங்கள் மூலமாக வழங்கப்படும் உதவிகள்
**********************************************************************

திட்டம் 1:
**************

25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 
4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2:
*************** 

50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும்
4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
*************************************************

திட்டம் 1:
***************

1) இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.

2)வருமான வரம்பு எதுவும் இல்லை.

3) மணமகளுக்கு குறைந்தபட்சம் 20 வயதாவது இருக்க வேண்டும். மணமகனுக்கு 40வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

4) திருமண நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

திட்டம் 2:
***************

1) இதற்கு கல்வித் தகுதி தேவை.

பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

2)வருமான வரம்பு எதுவும் இல்லை.

3) மணமகளுக்கு குறைந்தபட்சம் 20 வயதாவது இருக்க வேண்டும். மணமகனுக்கு 40வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

4) திருமண நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்:
***********************************

* விதவைச் சான்று
* மறுமணப் பத்திரிகை
* மணமகன் அல்லது மணமகளின் வயதுச் சான்று
* திருமணப் புகைப்படம்
* பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று.
(திட்டம் 2-இல் பயன்பெறுவதாக இருந்தால் மட்டும்).

பிராய்லர் கோழி நல்லதா? நாட்டுக்கோழி நல்லதா?


பிராய்லர் கோழி நல்லதா? நாட்டுக்கோழி நல்லதா?
************************************************************
நாட்டுக்கோழி Vs பிராய்லர் – கவனம் எந்தக் கோழி நல்ல கோழி?
By vayal on 19/03/2015


முறுக்கில்லாத வாலிபர்கள், உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப்படுவது கோழிக்கறி. மேற்கூறிய நன்மைகளுக்கெல்லாம் உரித்தானது நாட்டுக்கோழி. விவசாய நிலங்களில் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று விட்டு நாட்டுக்கோழி இடும் கழிவு நிலத்துக்கு உரமாகவும் பயன்பட்டது. இப்படியாக ஒரு சூழலியல் தொடர் சங்கிலியைக் கொண்டிருந்தது நாட்டுக் கோழி வளர்ப்பு.

ஜெர்மனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வொய்ட் லெகான் எனப்படும் பிராய்லர் கோழி வளர்ப்பு எப்படி இருக்கிறது, தெரியுமா? குடோனுக்குள் சூரிய ஒளியே படாமல், ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறுகிய காலத்துக்குள் அதிவேகமாக வளர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. அப்படியாக வளரும் கோழிகளைத்தான் இன்றைக்கு நாம் விரும்பி உண்கிறோம். இக்கோழிகளுக்கு மேற்கூறிய மருத்துவத் தன்மையெல்லாம் அறவே இல்லை. மாறாக அவை நோய்களை நமக்குத் தரவல்லவை.

இது குறித்து முதலில் அக்கு ஹீலர் உமர்ஃபாருக்கிடம் பேசினோம்… ‘‘நம் நாட்டில் பிராய்லர் சிக்கன் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், அதனுள் புரதம் மற்றும் சில சத்துகள் அதிக அளவில் இருப்பதாக சிக்கன் கம்பெனிகளும் மருத்துவர்களும் இணைந்து அறிவித்தனர். 90களில் பிராய்லர் சிக்கனை எதிர்த்துப் பேசுவது என்பது அறிவியலையே எதிர்த்துப் பேசுவதாக பார்க்கப்பட்டது. இப்படியாக உருவகப்படுத்தப்பட்டு நம்முள் சந்தைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பிராய்லர் சிக்கன் பற்றிய ஆய்வுகள் நம்மை புருவம் உயர்த்தச் செய்கின்றன.

அமெரிக்காவின் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள Duquesne பல்கலைக்கழக ஆய்வுகள் பிராய்லர் கோழியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசிகள் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை என்று கூறுகின்றன. பிராய்லர் கோழியை உணவாக தொடர்ந்து உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக சென்னையில் இயங்கும் மருத்துவ ஆய்வுக்குழு சார்ந்த குடல் நோய் சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிராய்லர் சிக்கன் நல்லதல்ல என்கிற அடிப்படை புரிதல் எல்லோரிடமும் இருக்கிறது. அப்படியிருந்தும் அதிக அளவில் நாம் உண்ணும் பிரதான உணவாக இன்று திகழ்வது பிராய்லர் சிக்கன்தான்.

நல்ல உணவே செரிக்காத இன்றைய வாழ்க்கைமுறையில் பிராய்லர் சிக்கன் போன்ற ரசாயன உணவுகளைச் சாப்பிட்டால் என்ன ஆகும்? அது மட்டுமல்ல… ஒவ்வொருவரும் தங்களது தேவைக்கேற்ப சாப்பிடுவதுதான் சரியான முறை. பசி என்பதைத் தாண்டி ருசிக்காகச் சாப்பிடத் தொடங்கிய பிறகோ கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுகிறோம்.

முன்பெல்லாம் ஒரு குடும்பத்துக்கே ஒரு கிலோ அல்லது அரை கிலோ கறி எடுத்து சமைத்துச் சாப்பிடுவார்கள். இன்றைக்கு ஒரு தனிநபர் வேறு உணவுகள் எதையும் சாப்பிடாமல், சிக்கனை மட்டுமே அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை சாப்பிடும் கலாசாரம் வந்து விட்டது. சாப்பிடும் உணவுகள் செரிப்பதற்கான உடல் உழைப்பும் நம்மிடம் இல்லாத காரணத்தால், அவை கொழுப்பாக மாறி பருமனுக்கு வழி வகை செய்கின்றன.

பிராய்லர் சிக்கனை நாம் எதிர்ப்பதற்கான காரணங்களை அலசுவோம். பிராய்லர் கோழிகள் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே உயிர்வாழும் தன்மை கொண்டவை. அதற்குள்ளாகவே அவற்றை சதைப்பிடிப்போடு, எடை கூடுதலாக்கி வளர்த்து, விற்பனை செய்து விட வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் பண்ணை உரிமையாளர்களுக்கு இருக்கிறது. அதனால் கோழிகளின் வேகமான வளர்ச்சிக்காக இரவு நேரங்களிலும் பல்புகளை எரிய விட்டு சாப்பிட வைத்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி வளர்க்கப்பட்ட எடையும் போதாமல் பிராய்லர் கோழிகளுக்காகவே தனியான சத்து மருந்துகளையும் ஊசிகளையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

இந்தப் பயன்பாட்டின் உச்சம்தான் இன்றைக்கு அதிவேக வளர்ச்சிக்குப் போடப்படும் ஹார்மோன் ஊசிகள். மனிதர்களுக்கு ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்தினாலே பல்வேறு விளைவுகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது. இந்த நிலையில் குறுகிய ஆயுள் கொண்ட சிறிய கோழிகளுக்கு ஹார்மோன்களை செலுத்துவதன் மூலம், அதன் உடல் முழுவதும் பாதிப்புகள் பரவி விடுகின்றன. இந்தக் கோழியை சாப்பிடும் நம் உடலிலும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

நம் நாட்டில் நடத்தப்பட்ட பிராய்லர் கோழி பற்றிய சமீபத்திய ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது. டெல்லியில் இயங்கும் ‘சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரோன்மன்ட்’ அமைப்பின் பொல்யூஷன் மானிட்டரிங் லேபரட்டரி மூலமாக பிராய்லர் சிக்கன் பற்றி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வுக்காக பிராய்லர் கோழியின் கறி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதற்காக டெல்லியில் இருந்து 36 வகை மாதிரிகளும், நொய்டாவிலிருந்து 12 வகை மாதிரிகளும், குர்கானில் 8 மாதிரிகளும், ஃபரிதாபாத் மற்றும் காஸியாபாத்தில் 7 வகை மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டன. கோழியின் வளர்ச்சிக்காக செலுத்தப்பட்ட ஆன்டிபயாடிக் ரசாயனங்கள் கோழியின் கல்லீரலிலும் சிறுநீரகங்களிலும் தேங்கியிருந்ததை ஆய்வில் கண்டறிந்தனர். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 40 சதவிகித கோழிகளில் பலவகை ஆன்டிபயாடிக் கலப்பும், 22.9 சதவிகித கோழிகளில் இரு ஆன்டிபயாடிக்குகளும், 17.1 சதவிகித கோழிகளில் ஒரு ஆன்டிபயாடிக் ரசாயனமும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒன்றுக்கொன்று எதிரானதாகச் செயல்படும் ஆன்டிபயாடிக் ரசாயனங்களை கலந்து கொடுப்பது கோழிகளுக்கு வேண்டுமானால் வளர்ச்சியைத் தரலாம். மனிதர்களுக்கு கணக்கற்ற நோய்களைத்தான் தரும்.

கோழிகளின் கறியில் கலந்திருக்கும் ஆன்டிபயாடிக்குகளை போல, ஹார்மோன்களும் பல்வேறு உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.கோழி உருவாக்கப்பட்டு கறியாக்கப்படும் வரையிலான செயல்பாடுகளே நம்மை மலைக்க வைக்கின்றன.

அதன் பிற்பாடு அக்கறியை ருசியாக சமைத்து நம் நாக்குக்கு விருந்தளிக்க என்னென்ன செயல்பாடுகளுக்கெல்லாம் கோழிக்கறி உட்படுத்தப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். சிக்கன் 65, சில்லி சிக்கன் என்று அடர் சிவப்பு நிறத்தில் பொரித்தெடுக்கப்பட்ட சிக்கனை வாங்கி ருசிக்கிறோம். அதன் அடர் சிவப்பு நிறத்துக்காக செயற்கை பவுடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை இது போன்று நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருளில் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் உலக அளவில் உள்ள ஆய்வாளர்கள்.

பொன்சியூ, எரித்ரோசின் என்கிற இரு ரசாயன நிறமிகளைப் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியன்ட் ப்ளூ, இண்டிகோ கார்மைன் நிறமிகள் மூலம் ஊதா நிறம் கிடைக்கும். இதுபோன்ற 8 வகை நிறங்களை ஐஸ்க்ரீம், ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கெட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என 7 வகை உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு.

அதுவும் 10 கிலோ உணவுக்கு ஒரு கிராம் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பது வரைமுறை. அளவு கூடினால் நிறங்களின் நச்சுத்தன்மை உணவைப் பாதித்துவிடும் என்பதால்தான் அரசு இந்த வரைமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சிக்கனுடன் எந்த நிறமிகளையும் சேர்க்கக்கூடாது என்கிறது உணவுச்சட்டம். நடைமுறையில் இதற்கு நேர் எதிரான செயல்பாடு கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. நல்ல சிவப்பு நிறத்தில் பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காக செயற்கை நிறத்தை அள்ளிக் கொட்டுகின்றனர். சூடான் டை, மெட்டானில் மற்றும் எரித்ரோசின் ஆகிய ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அந்த பவுடர் நம் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் பல.

எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோயும், ஹார்மோன் தொடர்பான பல்வேறு சிக்கல்களும் ஏற்படும் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்கிற காரணத்தால் சூடான் டையை உணவில் பயன்படுத்துவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கோ இப்பொருட்கள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. கண்ட கண்ட குப்பைகளையெல்லாம் கொட்டுவதற்கு நமது உடல் குப்பைத் தொட்டியல்ல… நாம் சாப்பிடுகிற உணவு தரமானதா என்பதை அலசுவதில் கவனம் வேண்டும்’’ என்கிறார் உமர்ஃபாருக்.

‘தேவையற்ற கொழுப்பைத் தவிர பிராய்லர் கோழியில் எதுவுமில்லை’ என்கிறார் உணவியல் நிபுணர் வர்ஷா‘‘நாட்டுக்கோழி சிறந்தது என்று சொல்வதற்கு காரணம் அது இயற்கையானது. அதோடு இயற்கையான சூழலில் வளர்வது. கிராமப்புறங்களிலும் விவசாய நிலங்களிலும்தான் நாட்டுக்கோழி வளர்ப்பை மேற்கொள்கின்றனர். ஒரு கோழி முட்டையிலிருந்து குஞ்சாகி வெளியே வந்து 200 நாட்கள் ஆன பிற்பாடுதான் இறைச்சிக்காகக் கொல்லப்படுகிறது.

அந்த 200 நாட்கள் கோழி வாழும்போது அது பல்வேறான சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. விளைநிலங்களில் இருக்கும் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று வளர்கிறது. ஓடியாடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால், அதன் தசைகள் கடினமாகினாலும் சுவை கூடுகிறது. நாட்டுக்கோழியில் கொழுப்பை விட புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது.

பிராய்லர் கோழியோ, முட்டையில் குஞ்சாகி வெளியே வந்த 45 நாட்களுக்குள் இறைச்சிக்காக அழிக்கப்படுகிறது. நாட்டுக்கோழி 200 நாட்கள் சேர்ந்து வளர வேண்டியதை பிராய்லர் 45 நாட்களில் வளர்கிறதென்றால் சும்மாவா? உண்மையில் அது வளரவில்லை… ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்க்கிறார்கள். பிராய்லர் கோழிகள் சூரிய ஒளியே படாத கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கால்சியம் கிடைக்கப் பெறுவதில்லை. ஓடியாடாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் புரதத்தை விட பிராய்லரில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது.

100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்புதான் இருக்கிறது. அதுவே 100 கிராம் பிராய்லரில் 23 கிராம் கொழுப்பு இருக்கிறது. 100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரதம்தான் இருக்கிறது. அதுவே நாட்டுக்கோழியில் 21 கிராம் புரதம் இருக்கிறது. கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருக்கும் உணவே சிறந்தது. அந்த அடிப்படையிலும் நாட்டுக்கோழிதான் சிறந்தது.

பிராய்லர் கோழிகளுக்கு உடல் மற்றும் மன நலப் பிரச்னைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. Sudden Death Syndrome எனப்படும் திடீர்ச்சாவு பிராய்லர் கோழிகளுக்கு ஏற்படுகிறது. நாட்டுக்கோழிகளுக்கு Dexa Hexanoic Acid எனப்படும் ரசாயனம் அதிகளவில் சுரப்பதால் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். பிராய்லர் கோழிகளில் இந்த ரசாயனத்தின் அளவு குறைவாக இருப்பதால் மூளை வளர்ச்சி இருக்காது.

மூளை வளர்ச்சியில்லாத, உடல் வலுவில்லாத பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பைத் தவிர்த்து நமக்கு வேறேதும் கிடைக்கப்போவதில்லை’’ என்கிறார் வர்ஷா. கண்ட கண்ட குப்பைகளையெல்லாம் கொட்டுவதற்கு நமது உடல் குப்பைத் தொட்டியல்ல… நாம் சாப்பிடுகிற உணவு தரமானதா என்பதை அலசுவதில் கவனம் வேண்டும்! மூளை வளர்ச்சியில்லாத, உடல் வலுவில்லாத பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பைத் தவிர்த்து நமக்கு வேறேதும் கிடைக்கப்போவதில்லை!


சிட்கோ தொழிற்பேட்டை


சிட்கோ தொழிற்பேட்டை
******************************
மாநில அளவிலான தொழில் வளர்ச்சிக்கு என்று தொடங்கபட்டது தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம். இதுதான் சிட்கோ என்று அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாடு அரசால் 1971ல் தொடங்கப்பட்டது. சிறு தொழில்களின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டது. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்கள் மற்றும் சிறு தொழில்களை ஊக்குவித்து கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் தொடங்கப்பட்டது.

ஏன் சிட்கோ உருவாக்கப்பட்டது?

தொழிற்சாலைகளை ஒரே இடத்தில் அமைப்பதற்கு ஏற்ப இடங்களைத் தேர்வுசெய்து அந்த இடங்களை மேம்படுத்தும் வேலைகளை செய்கிறது. தொழில் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கி கொடுப்பதுதான் சிட்கோவின் முக்கிய பணி.

இதற்கான இடங்களைக் கண்டறிந்து அந்த இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, மூலப்பொருட்கள் எளிதாக கிடைப்பதற்கான வழி செய்வது, சந்தைப் படுத்துவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பது போன்றவற்றை சிட்கோ மேற்கொள்கிறது. தொழில் முனைவர்களுக்கு அவ்வப்போதைய வழிகாட்டுதல்களும் சிட்கோ வழங்கும்.

சிட்கோவில் இடம் பெறுவது எப்படி?

சிட்கோ நிறுவனம் தொழிற்பேட்டை அமைக்க உள்ள பகுதிகளில் விண்ணப்பங்களின் அடிப்படையில் கட்டடங்களை அமைப்பது அல்லது அடிப்படை வசதிகளை மேம்படுத்தி உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்கிறது. இது நீண்ட கால குத்தகையாக இருக்கும். இவ்வாறு இட வசதிகளை ஏற்படுத்துவதற்கு முன் தொழில் முனைவர்களின் தேவைகள் குறித்து கருத்தும் கேட்கப்படுகிறது. தொழில் முனைவர்களின் தகுதி மற்றும் கேட்பு அடிப்படையில் தொழிற்பேட்டையில் இடங்களை வாங்க முடியும்.

மூலப்பொருட்கள் விநியோகம்.

சிட்கோ நிறுவனம் முக்கிய மூலப்பொருட்களையும் உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கிறது. மூலப்பொருட்களை சந்தையிலிருந்து மொத்தமாக வாங்குகிறது. சிட்கோ உறுப்பினர்களுக்குத் தேவையின் அடிப்படையில் குறைந்த விலையில் கொடுக்கும்.

சந்தை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள்


சிட்கோ நிறுவனம் வாங்குபவர்கள் விற்பவர்களுக்கான சந்தையையும் ஏற்பாடு செய்கிறது. இதன் மூலம் சிறிய அளவில் தொழில் வியாபாரத்துக்கு உதவுகிறது. தவிர தொழில்நுட்பங்களில் மேம்பாடு சார்ந்த கருத்தரங்குகளை நடத்துகிறது. ஏற்றுமதி சார்ந்த தொழில்களையும் சிட்கோ ஊக்குவிக்கிறது. இதற்கென்று தனியாக இணையதள சேவை மூலம் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சேவை சிறு தொழில் முனைவர்கள் தங்களது விற்பனையை அதிகரிக்க வகை செய்கிறது.

மானியங்கள்

தொழிற்பேட்டையில் தொழிலைத் தொடங்கும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியமும் கிடைக்கும். இந்த நிறுவனங்களின் இயந்திரம் மற்றும் திட்ட மதிப்பிலிருந்து 25 சதவீதம் வரை மானியம் கிடைக்க வாய்ப்புள்ளது. மற்றும் அதிகபட்சமாக 30 லட்சம் வரை கிடைக்கும்,

தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் தற்போது 76 தொழிற்பேட்டைகள் உள்ளன. இதில் இதில் 36 தொழிற்பேட்டைகள் அரசால் நேரடியாக தொடங்கப்பட்டவை. சிட்கோ 44 தொழிற்பேட்டைகளை உருவாக்கியுள்ளது. இந்தத் தொழிற்பேட்டைகள் வெவ்வேறு கிராம மற்றும் பின் தங்கிய இடங்களில் அமைந்துள்ளன.

கிராமப்புற சிறு மற்றும் குறு தொழில்களை வளர்க்கும் பொருட்டுதான் சிட்கோ கொண்டுவரப்பட்டது. தொழில் முனைவர்கள் இதை சரியாக பயன்படுத்திக் கொள்வது வருமானத்தை தேடிக்கொள்வது சிறப்பு.

குடும்பச் சொத்து பங்கு பிரிப்பது எப்படி?

குடும்பச் சொத்து பங்கு பிரிப்பது எப்படி?
பாகப்பிரிவினை”
தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை. 
அதாவது, குடும்பச்சொத்து உடன்படிக்கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும். 

பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப்படாத பட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப் பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப் பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம்.
தான பத்திரம்..!
சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்து கொள்ளும் போது இந்த முறையைக் கையாளலாம்.
ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண் டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் 


மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முத்திரைத் தாள் கட்டணம் அதிகமாக செலுத்தாமல்  உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.
ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழி காட்டி மதிப்பில் 1 சதவீதம் அல்லது அதிகபட்சம் 25,000 ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.
உயில்..!
இது விருப்ப ஆவணம்: தனது சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல் லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.
தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், அந்த சொத்து சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.
மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படு மாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
பெண்களுக்கான சொத்துரிமை!
பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திருமணமான பெண்களுக்கான சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
2005-ம்ஆண்டு சட்டதிருத்தத்தின்படி, பெண்கள் தனது தந்தையின் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோ ரமுடியும். மேலும், 25.03.1989-க்கு முன்பு திருமணம்செய்து 

கொண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியும். அதேவேளையில், சொத்து 25.03.1989-க்கு முன்னர் பாகப் பிரிவினை செய்யப்பட்டிருந்தால், 
பாகப்பிரிவினை கோர முடியாது. ஒரு வேளை அந்த சொத்து விற்கப்படாமல் அல்லது பாகம் பிரிக்கப்படாமல் இருந்தால் உரிமை கோர முடியும்.
வாரிசுச் சான்றிதழ்..!
வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட்போன்றவற்றில் முதலீடு செய் திருந்து எதிர்பாராமல் இறக் கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் 

ஒப்படைக்கப்படும். ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்திலோ வாரிசுச்சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதி மன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொ த்துக்கள் ஒப்படைக்கப்படும்.
பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரிய வரும் போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்”
பொதுவாக, சொத்து பாகப்பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை 

கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என 
இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.


பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா?


பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா?
**********************************************

''பெண்களுக்கான சொத்துரிமை, பெண்ணின் சொத்தில் அவருக்கு உள்ள உரிமைகள் என இரண்டு வகையாக இந்த விஷயத்தை அணுகலாம். இதைத் தெளிவாக தெரிந்துகொண்டால் குழப்பங்கள் இருக்காது''

''முதலில், பெண்களுக்கான சொத்துரிமை குறித்து பார்ப்போம். இந்த உரிமை அவர்களுக்குத் தானாக வந்துவிடவில்லை. 1937 வரை இந்து பொதுக் குடும்ப சொத்தில் பெண்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லாமலே இருந்தது. அதாவது, பங்குரிமையானவர்களாக (Coparcener) ஆண்கள் மட்டுமே இருக்க முடியும். கணவர் இறந்துவிட்டால் அவருடைய பங்கு, அந்த கூட்டுக் குடும்பத்திலுள்ள மற்ற ஆண்களுக்குச் சேர்ந்துவிடும். ஆனால், ஆண்களைப்போல, மனைவிக்கோ, மகளுக்கோ எந்தப் பங்கும் கிடைக்காது.

இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டு, சொத்தில் பெண்களுக்கான உரிமைச் சட்டம் 1937-ல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, கூட்டுக் குடும்ப அமைப்பில் கணவரின் சொத்து மனைவிக்கு வந்தடைய வழி செய்தது. ஆனால், முழுமையான உரிமை வந்தடையவில்லை. அதன்பிறகு, 1956-ல் இந்து வாரிசு உரிமைச் சட்டம் இயற்றப்பட்டபோதுதான் பெண்களுக்கு சொத்துரிமை மேலும் பலப்படுத்தப்பட்டது. அதன்படி, ஓர் ஆணின் சொத்து, அவரது காலத்திற்குப் பிறகு, பொதுக் குடும்ப சொத்து என்றும், தனிப்பட்ட சொத்து என்றும் இரண்டு வகையாகப் பிரிக்க வழி செய்தது. இதில், தனிப்பட்ட சொத்தில் வாரிசு அடிப்படையில் மனைவிக்கும், மகள்களுக்கும் சமபங்கு வழங்க வகை செய்யப்பட்டது. ஆனால், பொதுக் குடும்பச் சொத்து, பரம்பரை சொத்தில் உரிமை எதுவும் வழங்கப்படவில்லை.

1989-ல் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங் களில் இந்த சட்ட நடைமுறையில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பொதுக் குடும்பச் சொத்திலும் பெண்கள் உரிமை கோரலாம் என்கிற நிலை உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி, 25.03.1989-க்கு முன்பாக திருமணம் ஆன பெண்களுக்கு இந்தச் சட்ட திருத்தம் பொருந்தாது. மேலும், அன்றைய தேதி வரை பொதுக் குடும்பச் சொத்து பாகம் பிரிக்கப்பட்டிருக்கக் கூடாது என்று இந்தச் சட்ட திருத்தம் சொன்னது.

2005-ம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, பெண் என்பவர் குடும்பத்தின் பங்குரிமையானவராக கருதப்படுவார் என்றது. அதன் விளைவாக, பொதுக் குடும்பச் சொத்து என்றாலும், ஆணின் தனிப்பட்ட சொத்து என்றாலும், ஓர் ஆணுக்கு என்ன உரிமை உள்ளதோ, அந்த உரிமை பெண்ணுக்கும் உள்ளது. 

2005 முதல் இந்தச் சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது. தற்போது சொத்துகளில் ஆண், பெண் பேதம் கிடையாது. காலப்போக்கில் இப்படி பல மாற்றம் கண்டுவந்திருக்கிறது பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம்.
அடுத்து, நாம் பார்க்கவேண்டிய முக்கியமான விஷயம், ஆண்கள் பெயரில் உள்ள சொத்துகளில் அவருக்கு உள்ள உரிமையும், பெண்கள் பெயரில் உள்ள சொத்துகளில் அவருக்கு உள்ள உரிமைகளும் என்ன என்பதைத்தான்.

ஆண்கள் பெயரில் உள்ள சொத்து அவர் களுக்கு எப்படி கிடைத்தது என்பதைப் பொறுத்து அவர்களின் உரிமை தீர்மானிக்கப்படும். அதாவது, மூதாதையர் வழியாக ஓர் ஆணுக்குக் கிடைக்கும் சொத்தில் அவருடைய மகனுக்கும், பேரனுக்கும் பங்குரிமை உண்டு. அதேபோல, ஒரு பொதுக் குடும்பத்தில், ஓர் ஆண் பெயரில் சொத்து இருந்தாலும் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் பொதுக் குடும்ப உறுப்பினர்கள் என்கிற அடிப்படையில் பாகம் கேட்க உரிமை உண்டு. அதே ஆண் அவருடைய சுயசம்பாத்தியத்தில் அல்லது அவருடைய தனிப்பட்ட பாகமாகக் கிடைக்கும் சொத்துகள் அவருக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட சொத்தாகும். இப்படி சொத்து வந்த முறையைப் பொறுத்து சொத்தின் உரிமை தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால், பெண்கள் பெயரில் உள்ள சொத்துகளை பொறுத்து இவ்விதமான நிபந்தனைகள் எதுவும் இல்லை. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14-ன்படி ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்துகள் இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். திருமணமான ஒரு பெண்ணுக்கு அவரது பெற்றோர் மூலமாகச் சொத்துகள் கிடைத்தால், அதில் அவரது கணவரோ, குழந்தைகளோ உரிமை கோர முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள்.

ஏற்கெனவே சொன்னபடி, இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14-ன்படி ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அதாவது அவரது பெற்றோர்கள் மூலமாக, கணவனின் மூலமாக அல்லது சுய சம்பாத்தியம் மூலமாக என எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அது அவரது தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். எனவே, அந்தச் சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு எதிராக பாகமோ, உரிமையோ வேறு யாரும் கோர முடியாது.
கணவன் தன்னுடைய வருமானத்தைக் கொண்டு மனைவி பெயரில் ஒரு சொத்தை வாங்குகிறார். இருவருக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இந்த நிலையில் கணவன் அந்தச் சொத்தை திரும்ப எடுத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டால், முடியாது 

எப்படி என்கிறீர்களா?
ஒருவர் தன்னுடைய பணத்தைக்கொண்டு வேறொருவர் பெயரில் சொத்துகளை கிரயம் செய்வது, பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே, யார் பெயரில் சொத்து இருக்கிறதோ, அவரே அந்தச் சொத்தின் உரிமையாளராகக் கருதப்படுவார். சட்டப்படி, வேறு யாரும் அந்தச் சொத்தின் உரிமையாளராகக் கோர முடியாது. அப்படிக் கோருவது குற்றம்.

ஆனால், இந்த நடைமுறையிலும் விதிவிலக்கு உள்ளது. அதாவது, ஒருவர் தன் மனைவி பெயரிலோ அல்லது திருமணமாகாத மகள் பெயரிலோ சொத்துகளை வாங்கியிருந்தால், அந்தச் சொத்து வாங்குவதற்கான பணம் தன்னால் மட்டுமே செலுத்தப்பட்டது என்பதையும், மனைவி / மகளுக்கு வருமானம் ஏதுமில்லை அல்லது கிரயத்தொகை அவரால் செலுத்தப்படவில்லை என்பதை நிரூபித்தால் மட்டுமே அந்தச் சொத்தை அவருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிடும்.

ஒரு பெண்ணின் சொத்திற்கு யார், யார் வாரிசுகளாக இருக்க முடியும் என்பது முக்கியமான கேள்வி. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 15-ன்படி, ஒரு பெண் இறந்தபிறகு அவருடைய கணவன் மற்றும் மகன், மகள்கள் வாரிசுகளாகின்றனர். அவர்கள் இல்லாதபோது கணவனுடைய வாரிசுகளுக்கு அந்தச் சொத்து போய் சேரும்.

கணவனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழும் மனைவி, விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இறந்துவிட்டால் அவருக்கு வாரிசு யார்? என்று நீங்கள் கேட்கலாம். விவாகரத்து வழங்கப்படும்வரை கணவன் - மனைவி என்கிற பந்தம்தான் கணக்கிலெடுக்கப்படும். ஆகவே, வாரிசு உரிமைச் சட்டப்படி, பிரிந்து வாழும் மனைவியின் சொத்து கணவனுக்குச் சென்றடையும்.

திருமணம் ஆகாமல் ஒரு பெண் இறந்தால் அவரது சொத்துகளுக்கு யார் வாரிசு என்று கேட்கிறீர்களா? திருமணம் ஆகாத பெண் இறந்தால், அவரது பெற்றோரே வாரிசாக இருப்பார்கள். அவர்கள் இல்லாதபட்சத்தில் தந்தையின் வாரிசுகள் இறந்துபோன பெண்ணின் வாரிசுகளாகக் கருதப்படுவார்கள்.

ஒரு பெண்ணின் தனிப்பட்ட சொத்தை அவர் எவ்வாறு அனுபவிக்க முடியும்? ஒரு குறிப்பிட்ட சொத்திற்கு ஒரு பெண் தனிப்பட்ட முழுமையான உரிமையாளர் என்கிறபோது, அவர் அந்தச் சொத்தை தன் விருப்பப்படி அனுபவிக்க முடியும். அதாவது, அவர் அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றித் தரலாம். அது தானமாகவோ / உயிலாகவோ அல்லது விற்கவோ எந்த வகையிலும் பாராதீனம் செய்யலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

ஓர் இந்துப் பெண் மதம் மாறுவதால், குடும்பச் சொத்தில் உள்ள உரிமைகளோ, பங்கு கேட்கும் உரிமைகளோ பாதிக்கப்படுமா? என்று கேட்கலாம். 

இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 26-ன்படி, இந்து மதத்திலிருந்து விலகி மதம் மாறிய ஒருவர் மற்றும் அவரின் வாரிசுகள், வாரிசு உரிமையின் அடிப்படையில் இந்துக் கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கு கேட்க முடியாது. இருந்தாலும், ஜாதிக் குறைபாடுகள் அகற்றுதல் சட்டத்தின்படி ஒருவர் சாதி இழப்பதாலோ அல்லது மதம் மாறுவதாலோ சொத்தில் உள்ள உரிமையை அவர் இழப்பதில்லை. இதையே உயர்நீதிமன்ற சமீபத்திய தீர்ப்புகூட உறுதி செய்துள்ளது.

இந்துப் பெண்களுக்கான இந்த சொத்துரிமை சட்டங்கள் முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தில் உள்ள பெண்களுக்குப் பொருந்துமா? என்பதும் பலருக்கு இருக்கும் கேள்வி.

பரம்பரைச் சொத்து, தனிக் குடும்பச் சொத்து போன்ற தத்துவங்கள் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தாது. 

ஆகவே, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவரது பெயரில் உள்ள சொத்துகள் அவரது தனிப்பட்ட சொத்தாகவே இருக்கும்''


உயில் என்பது என்ன ?


உயில் என்பது என்ன ?
************************************

ஒரு மனிதர் - தனது வாழ் நாளுக்கு பின் தனது சொத்து மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம் உள்ளிட்ட அனைத்தும் யார் யாருக்கு தர வேண்டும் என விரும்புகிறாரோ - அதனை எழுதி வைப்பது தான் உயில். உயிருடன் இருக்கும் போது எழுதப்படும் இந்த தனி மனிதரின் விருப்பம் - அவரது மறைவுக்கு பின் தான் அமல் படுத்தப்படும்.

சுய சம்பாத்தியத்தில் வந்தவை மட்டும் தான் உயில் எழுத முடியுமா ?

சுய சம்பாத்தியத்தில் வந்தவை மற்றும் தனது பெற்றோர் மூலம் - சட்டப்படி ஒருவருக்கு வந்த சொத்துக்கள் இவற்றை உயில் மூலம் மாற்றம் செய்ய முயும்.
வயதானவர்கள் மட்டும் தான் உயில் எழுதுவது அவசியமா ?

அப்படி இல்லை. மரணம் எப்போது வேண்டுமானாலும், எந்த வடிவிலும் ஒருவருக்கு வரக்கூடும் என்பதால் - மத்திய வயதில் இருப்போரும் கூட உயில் எழுதி வைப்பது நல்லது. உயில் எழுதாத பட்சத்தில் - உங்கள் உறவினர்களில் - நீங்கள் விரும்பாத சிலருக்கு கூட உங்கள் சொத்தில் ஒரு பகுதி செல்லக்கூடும். மாறாக நீங்கள் சம்பாதித்த சொத்தை நீங்கள் விரும்பினால் - ஒரே ஒரு நபருக்கு கூட செல்லுமாறு உயில் மூலம் செய்யலாம். மேலும் உங்கள் சொத்தில் ஒரு பங்கை உங்கள் காலத்துக்கு பின் Charity - க்கு செல்ல வேண்டுமென நினைத்தால் - அது உயில் எழுதி வைத்தால் தான் சாத்தியமாகும். இல்லாவிடில் வாரிசு தாரர்கள் மட்டுமே சொத்தை பிரித்து கொள்வர்.

ஒரு உயில் எப்படி எழுதப்பட வேண்டும் ? அதனை ரிஜிஸ்தர் செய்வது எப்படி ?


உயில் ஒரு மனிதனின் விருப்பம் என்ற அளவில் - எப்படி / எந்த format -ல் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

உயிலை ரிஜிஸ்தர் செய்வது சட்டப்படி கட்டாயம் இல்லை. ஆயினும் - அதன் நம்பகத்தன்மையை சிலர் சந்தேகிக்கலாம் என்ற அளவில் - ரிஜிஸ்தர் செய்வது நல்லது.

தனது உயிலை ஒருவர் எழுதி முடித்து விட்டு தனது கையொப்பம் இட்டபின் - கட்டாயம் இருவர் சாட்சி கையெழுத்திட வேண்டும். இப்படி சாட்சி கையெழுத்திடுவோர் - தங்கள் முன் உயிலை எழுதியவர் கையொப்பம் இட்டார் என்பதற்கு மட்டுமே கையெழுத்து இடுகிறார்கள். உயிலை முழுவதும் அவர்கள் வாசிக்க வேண்டுமென்று அவசியம் இல்லை.

இதன் பின் உயில் சப் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் ரிஜிஸ்தர் செய்யலாம். உயிலை ரிஜிஸ்தர் செய்ய மிக மிக குறைந்த கட்டணமே (அதிக பட்சம் ரூ. 500 ) வாங்கப்படுகிறது.

நாம் ஒரு முறை எழுதிய உயிலை மாற்றி எழுத முடியுமா ? ஒருவர் பல உயில் எழுதினால் - எது எடுத்து கொள்ளப்படும் ?

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் உயிலை மாற்றி எழுதலாம். எந்த உயில் கடைசியாக ஒருவரால் எழுதப்பட்டதோ, அதுவே அவரின் இறுதி உயிலாக எடுத்து கொள்ளப்படும்
உயிலை முழுவதும் மாற்றி எழுதாமல் சில பகுதிகளை மட்டும் மாற்ற முடியுமா ?

முடியும். 

குறிப்பாக ஒருவர் உயில் எழுதிய பின் புதிதாக வேறு சொத்துகள் வாங்கியிருக்கலாம். அல்லது ஏற்கனவே எழுதிய ஒரு சொத்தை - இன்னொருவருக்கு மாற்றி எழுதலாம். இந்நேரங்களில் உயிலின் ஒரு பகுதியில் மட்டும் மாற்றம் செய்யப்படும். அல்லது புதிதாக உள்ள சொத்து யாருக்கு சேரவேண்டும் என எழுதப்படலாம். இதற்கு "Codicil " என்று பெயர். உயில் மற்றும் Codicil இரண்டும் சேர்ந்து ஒருவரின் உயிலாக கொள்ளப்படும்

ஒருவருக்கு உயில் மூலம் எழுதி வைத்த சொத்தை, உயில் எழுதியவர் பின்னர் விற்க முடியுமா ?
உயில் என்பது ஓருவரின் இறப்புக்கு பின் தான் நடைமுறைக்கு வருகிறது. எனவே - அவர் இறக்கும் வரை அந்த சொத்தை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனை அவர் தாரளாமாக பிறருக்கு விற்கலாம். அல்லது வேறு யாருக்கேனும் கூட மாற்றி எழுதலாம்

இஸ்லாமியர்கள் தங்கள் சொத்து முழுமையும் உயில் மூலம் எழுத முடியுமா ?

முடியாது. ஒரு இஸ்லாமியர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே உயில் மூலம் எழுத முடியும். மீதமுள்ள 2/3 பங்கு - அவரது வாரிசு தாரகளுக்கு இஸ்லாமிய சட்டத்தின் படி தான் சென்று சேரும்.

உயிலை நடைமுறைப்படுத்த கோர்ட் அனுமதி பெறவேண்டுமா ?

உயிலில் உள்ள விஷயங்களை கோர்ட் ஒரு முறை அங்கீகரிக்கும் வழக்கம் இந்தியாவில் மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள சொத்துக்களுக்கு மட்டும் அவசியமாகும். போலவே இந்த 3 நகரங்களிலும் இருந்தபடி ஒருவர் உயில் எழுதினர் எனில் - அவர் உயில் மூலம் எழுதும் சொத்து வேறு ஊரில் இருந்தாலும் கூட கோர்ட் அப்ரூவல் பெறுவது அவசியமாகிறது. இந்த நடைமுறையை ப்ரொபேட் என்று அழைப்பார்கள்.

ப்ரொபேட் தேவைப்படும் நேரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு விண்ணப்பித்து ப்ரொபேட் பெற்றபின் தான் சொத்து - சட்டப்படி அவருக்கு வந்து சேரும்

Executor மற்றும் Beneficiary என்பவர்கள் யார்?

தனது சொத்துக்களை உயில் மூலம் எழுதி வைக்கும் நபர் Testator எனப்படுவார்.

சொத்தில் யார் யாருக்கெல்லாம் உரிமை/ பங்கு உள்ளதாக அவர் குறிப்பிடுகிறாரோ அவர்கள் Beneficiary எனப்படுவர்.

ஒருவர் எழுதிய உயிலை அவரது மரணத்துக்கு பின் நிர்வகித்து அனைவருக்கும் உயிலில் உள்ளபடி சொத்துக்கள் சென்று சேரும்படி நடவடிக்கை எடுப்பவர் Executor என அழைக்கப்படுவார்.

ஒருவர் தனது உயிலிலேயே - Executor யார் என குறிப்பிடுவது மிகவும் நல்லது

நாம் எழுதும் உயில் யாருக்கும் தெரியாமல் இருக்குமாறு பார்த்து கொள்ளும் வசதி உள்ளதா ?

ஆம்; அப்படியொரு வசதி இருக்கிறது. எந்த சப் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் உயிலை நாம் பதிவு செய்கிறோமோ, அங்கேயே குறிப்பிட்ட தொகை செலுத்தினால், சப் ரிஜிஸ்தர் அதனை பத்திரமாக பாதுகாப்பார். அவர் ரீசீப்ட்- டை நமது வாரிசு தாரர்களிடம் தந்து வைத்து விடலாம். நமது இறப்பிற்கு பின் அந்த ரீசீப்ட் மற்றும் நமது இறப்பிற்கான சான்று காட்டி - நமது வாரிசு தாரர்கள் நமது உயிலை பெற்று கொள்ளலாம்