பிரேத பரிசோதனை நடப்பது என்ன?
**********************************************
மரணங்களுக்குப் பின்னால் உள்ள எத்தனையோ புதிர்களைத் தீர்க்கக்கூடிய இடம் பிரேதப் பரிசோதனை அறை.
ஆனால், இந்தியாவில் பெரும் பாலான பிரேதப் பரிசோதனைகள் முறையாகச் செய்யப்பட வில்லை என்கிறார் மருத்துவர் டிகால்.
சட்டம் சார்ந்த சிறப்பு மருத்துவரான இவர், பல வருட அரசுப் பணிக்குப் பிறகு, தற்போது தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் இணை தடயவியல் மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
இதுவரை 2,000 பிரேதப் பரிசோதனைகளைச் செய்துள்ளார். 2ஜி வழக்கில் சர்ச்சைக்குரிய முறையில் தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப்படும் சாதிக் பாட்சாவின் உடலைப் பரிசோதனை செய்தவர் இவர்தான்.
தடயவியல் ஆய்வுகள் மற்றும் பிரேதப் பரிசோதனை முறைகளில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்து நம்மிடம் பேசுகிறார்.
தடயவியல் ஆய்வில் பிரேதப் பரிசோதனையின் பங்கு என்ன?
*************************************************************************************************
தடயவியல் என்பது கடல். அதில் சிறிய பகுதி தடயவியல் மருத்துவம். ஒரு குற்றம் மனித உடல் சார்ந்த குற்றம் எனில், பிரேதப் பரிசோதனை மருத்துவரின் அறிக்கை அதற்கு அவசியம்.
*************************************************************************************************
தடயவியல் என்பது கடல். அதில் சிறிய பகுதி தடயவியல் மருத்துவம். ஒரு குற்றம் மனித உடல் சார்ந்த குற்றம் எனில், பிரேதப் பரிசோதனை மருத்துவரின் அறிக்கை அதற்கு அவசியம்.
இந்தியத் தடயவியல் துறையிடம் எவ்வளவோ வசதிகள் இருந்தும் நிறைய மரணங்கள் மர்மமாகவே இருப்பதற்கான காரணம் என்ன?
பெரும்பாலும், பிரேதப் பரிசோதனை மேஜையிலேயே மரணத்துக்கான காரணத்தை மருத்துவர் கண்டுபிடித்துவிட முடியும். வசதிகள் இருந்தாலும், நமது நாட்டைப் பொறுத்தவரை பிரேதப் பரிசோதனை நடைமுறைகளில் நிறையக் குளறுபடிகள் உள்ளன.
பிரேதப் பரிசோதனைக்கான சடலத்தைக் காவல் துறையினர் அளிக்கும்போதே மரணத்துக்குள்ளானவர் என்னென்ன காரணங்களால் இறந்திருக்கக் கூடும் என்ற தங்கள் விசாரணை விவரங்களைச் சான்றிதழாகக் கொடுத்து விடுகிறார்கள். காவல் துறையின் அறிக்கையையே அரசு மருத்துவரும் கொடுத்துவிட்டால் அந்த வழக்கே முடிந்து விடும். இந்தியாவில் எத்தனை வழக்குகளில் காவல் துறையினர் சொல்வதற்கு மாறாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது, சொல்லுங்கள்? அதனால்தான் சொல்கிறோம். புலனாய்வு செய்யும் போலீஸும் அரசு மருத்துவரும் மட்டும் போதாது. சந்தேகப் படும் தரப்பு சார்பில் மருத்துவ நிபுணர் பிரேதப் பரிசோதனை அறையில் இருந்தால் மட்டுமே பிரச்சினை தீர்க்கப்படும்.
மேல்முறையீடு செய்வது சந்தேகம் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லையா?
பெரும்பாலும் பரிசோதனை முடிக்கப்பட்ட அன்றே சடலத்தை எரித்துவிடுவார்கள். இல்லையென்றால், அடுத்த நாள் காலை அழுகிவிடும். அதற்குப் பிறகு என்ன செய்வது?
அப்படியெனில், உண்மையாகவே பிரேதப் பரிசோதனை நடப்பதில்லை என்கிறீர்களா?
மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை அறைக்கே பெரும் பாலும் போவதில்லை. எம்.டி. படிக்கும் மாணவர்கள்தான் பிரேதப் பரிசோதனை செய்கிறார்கள். இவர்கள் கையெழுத்து மட்டுமே போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். எம்.பி.பி.எஸ். படித்த யாரும் பிரேதப் பரிசோதனை செய்யலாம் என்ற அனுமதி உள்ளது.
மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடக்கிறது. வெட்டுக் காயத்தால் இறந்தவர் தொடர்பான வழக்கு அது. பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய மருத்துவர் உள்ளேயே போகவில்லை. மரணத்துக்கான காரணம் ஆஸ்துமா என்பதாகவும், நுரையீரலைத் திறந்து பார்த்த தாகவும் அறிக்கை கொடுத்துவிட்டார்கள்.
பிரேதப் பரிசோதனை அறைக்கு மருத்துவர்கள் ஏன் போவதில்லை?
மருத்துவர்கள் உள்ளே நுழையும் நிலையில் அந்த இடம் உள்ளதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
பிரேதப் பரிசோதனையில் நடக்கும் தவறுகளுக்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்?
சமீபத்தில் என்னிடம் நிபுணர் ஆலோசனைக்காக ஒரு வழக்கு வந்துள்ளது. நெல்லூரில் நடந்த ஒரு மாணவியின் மரண வழக்கு அது. நான்கு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். அந்த மாணவி, தன் கழுத்தைத் தானே நெரித்துக்கொண்டு இறந்துவிட்டதாக அறிக்கை கொடுத்துள்ளனர். ஒருவர் தனது கழுத்தைத் தானே நெரித்துக்கொண்டு சாவதற்கான சாத்தியக்கூறு 0.0001 சதவீதம்தான் இருக்கிறது. அப்படியிருக்க, இது வரை அதைக் கொலை வழக்காகப் பதியவில்லை. அந்த மாணவியின் பெற்றோர் இது தற்கொலை என்று நம்ப மறுக்கின்றனர். சிபிஐ விசாரணை கேட்கின்றனர். ஆந்திர உயர் நீதிமன்றமோ எந்தக் காரணத்துக்காக சிபிஐ விசாரணை என்று கேட்கின்றனர். நிபுணர் பரிந்துரைக்காக என்னிடம் வந்தனர். கழுத்தைப் பிறர் நெரிக்கும்போது, அனைத்துச் சதைகளும் அழுத்தப்பட்டு ரத்தக் கசிவு ஏற்படும். அதையே மருத்துவரும் தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார். ஆனால், அது எப்படித் தற்கொலை வழக்கானது? பெரும்பாலான வரதட்சணைக் கொலைகளில் இப்படித்தான் பெண்கள் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு முடிக்கப்படுகிறது.
சட்டரீதியான விசாரணையில் பிரேதப் பரிசோதனை செய்பவரின் இடம் எது?
பிரேதப் பரிசோதனை செய்பவர் ஒரு சந்தேகத்தை மட்டுமே எழுப்ப முடியும். அவர் ஒரு சாட்சி. அவ்வளவுதான். மரணத்துக்கு உடல்ரீதியான காரணங்கள் என்னென்ன என்று மட்டுமே அவரிடம் கேட்பார்கள். நீதிமன்றத்தால் எந்த வழக்கிலும் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையை நேரடியாக உணர முடியாது. மருத்துவரின் பணி என்பது அந்த உண்மைக்கு நெருக்கமாக நீதிமன்றத்தைக் கொண்டு நிறுத்துவதுதான். இருட்டுக்குள் தடவிச் செல்வதைப் போன்ற பாதை அது. உடலில் இருந்ததை விஞ்ஞானபூர்வமாக உண்மையாகச் சொன்னால் போதும். ஆனால், அந்த உண்மையைச் சொல்ல முடியாத நிலையில் நடைமுறைகளில் எவ்வளவோ ஓட்டைகள்!
புகார்தாரர் சார்பில் ஒரு நிபுணர் பங்குகொண்டால் என்ன வகையான மாற்றங்கள் ஏற்படும்?
பிரேதப் பரிசோதனைக்கான படிவத்திலேயே புகார் தாரரிடம், அவருடைய சார்பில் மருத்துவர் வேண்டுமா என்று கேட்பதற்கான இடம் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரேதப் பரிசோதனைகளில் புகார்தாரர் தரப்பாக தனியார் மருத்துவர்களை நியமிக்கலாம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவர்களை அனுப்பலாம். வீடியோ எடுப்பது அனைத்துப் பிரேதப் பரிசோதனைகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இப்போதைய நடைமுறைப்படி, ஒரு மருத்துவரே பிரேதப் பரிசோதனை செய்யும் நிலையில் தன்னுடைய அறிக்கையை அவர் எத்தனை காலம் வேண்டுமானாலும் முடிவெடுக்காமல் நிறுத்தி வைக்க இயலும். ரசாயனப் பரிசோதனைக்குக் காத்திருப்பதாகக் காரணம் சொல்லலாம். ஒரு சாதாரண ஊழியரின் மூலம் அங்குள்ள சாம்பிள்களை மாற்றிவிட முடியும். மூன்று நாட்களுக்குள் ஒரு சோதனையை முடித்து அறிக்கை அனுப்பும் வகையில் அங்குள்ள உள்கட்டமைப்பையும் பணியாளர்களையும் அதிகரிக்க வேண்டும்.
பிணவறைகளையும் பிரேதப் பரிசோதனை அறையையும் எப்படி மேம்படுத்த வேண்டும்?
உடலின் ஒவ்வோர் அடுக்கையும் கத்தியால் வெட்டும்போதும் வேறு வேறு கையுறைகளை அணிய வேண்டும். ஆனால், அது நடைமுறையில் இல்லை. அழுக்குக் கையால் ஒரு மாதிரியை எடுத்தால் துல்லியமான முடிவுக்கு எப்படி வர முடியும்? பல வருடங்களாக ஒரே உடைகளை எப்படித் துவைத்துப் பயன்படுத்த முடியும்? கையுறை, காலுறை, மேல் கோட் உட்பட ஒரு முறையே பயன்படுத்தும் வகையில் இருத்தல் அவசியம். எல்லாவற்றுக்கும் டிஸ்போஸபிள் வேண்டும். மொத்த டிஸ்போஸபிள் உடை ஒரு செட்டுக்கு ரூ.100-தான் ஆகும்.
அதேபோல், பிணவறைக்குள்ளேயே உடைமாற்று அறை, ஷவருடன் இருக்க வேண்டும். குளிர்சாதன வசதி, நீர் உடனடியாக உலரும் வகையில் வழுக்காத தரைகள், சடலங்களைப் பார்வையிடும் அறை ஆகியவை அவசியம். சாதாரண வீட்டின் சமையலறையிலேயே சிம்னி வசதி வேண்டும் என்கிற காலம் இது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறையில் சிம்னி கிடையாது. சடலத்தைத் திறக்கும் போது எத்தனை அழுக்குகள், கிருமிகள் வெளிவரும். அதை உறிஞ்சி மேலே அனுப்ப சிம்னி வேண்டாமா? வெளி நாடுகளில் அந்த வசதிகள் பக்காவாக இருக்கின்றன.
இந்திய மருத்துவமனைகளில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால், பிணவறையும் பிரேதப் பரிசோதனை அறையும் மட்டும் ஏன் அப்படியே இருக்கின்றன?
ஒரு ஊழலான அமைப்பைச் சரிசெய்வதற்கு அனைத்து அங்கங்களிலும் மாற்றம் அவசியம். ஒரு பிணவறை நவீனமாவதை மருத்துவர் விரும்ப மாட்டார். ஏனெனில், வீடியோ கேமரா இருந்தால், எல்லா பிரேதப் பரிசோதனைகளிலும் அவர் பங்கேற்க வேண்டும். கத்தியை எடுத்து சடலத்தைக் கட்டாயமாக வெட்டிப் பார்க்க வேண்டும்.
ஆனால், இப்போது எந்த மருத்துவரும் சடலத்தைத் தொடுவதேயில்லை. ‘ஸ்வீப்பர்’ என்று சொல்லப்படும் கீழ்நிலைப் பணியாளர்கள்தான் கத்தியைக் கையாள்வார்கள். அவர்களும் முறையான கல்விப் பின்னணியோ, பயிற்சியோ இல்லாதவர்கள். ப்ளஸ் டூ முடித்தவர்களுக்கு இரண்டு வருடம் பயிற்சி கொடுத்து இப்பணியில் நியமிக்கலாம். ஆனால், அதற்குக்கூட அரசு இதுவரை வழிவகை செய்ய வில்லை. இதுபோன்ற மாற்றத்தை மருத்துவர்களும் விரும்ப வில்லை. அரசுத் தரப்பில் கொடுக்கப்படும் நிதி எதையும் பிரேதப் பரிசோதனை முறையை மேம்படுத்துவதற்கு டீன்கள் ஒதுக்குவதேயில்லை. ஏனெனில், ஒதுக்கப்படும் நிதி குறைவு. ஒரு புதிய கத்தரிக்கோல் வாங்குவதற்கு எத்தனை ‘பார்மாலிட்டிஸ்’ நடக்கும் தெரியுமா?
வேறு என்ன செய்யலாம்?
நீதிபதி பி.என். பிரகாஷ் சமீபத்தில் ஓர் அருமையான தீர்ப்பு கொடுத்திருக்கிறார். அடையாளம் தெரியாத சடலங்களைத் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பரிசோதிக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்குக் கூறியுள்ளார். அவர்களுக்கு நடைமுறை அறிவுபெற சடலங்கள் தேவை. அடையாளம் தெரியாத உடல்களை மூன்று நாட்கள் குளிர்பதனத்தில் வைக்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகும் யாரும் கோராத நிலையில், தனியார் மருத்துவமனை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிரேதப் பரிசோதனை செய்யும் அரசு மருத்துவருக்கு உதவித்தொகை உண்டா?
ஒரு பிரேதப் பரிசோதனைக்கு 500 ரூபாய்கூட உதவித் தொகை அரசு மருத்துவர்களுக்குக் கிடையாது. சமீப காலம் வரை ஒரு பிரேதப் பரிசோதனைக்கு 75 ரூபாய் கொடுத்தனர். ஊதிய கமிஷன் இப்போதுதான் 150 ரூபாயைப் பரிந்துரைத்துள்ளது. கடைநிலைப் பணியாளருக்கு ஒரு பிரேதத்துக்கு 12 ரூபாய் வரை கிடைக்கும்.
ஒரு பிரேதப் பரிசோதனை நிபுணராக மரணத்தையும், மரணமடைந்த ஒரு உடலையும் எப்படி விளக்குவீர்கள்?
எங்கள் துறையில் சொல்வார்கள்: இறந்த உடலைப் பொறுத்தவரை அது உண்மையை மட்டுமே பேசும். அது பேசும் மொழியை மட்டுமே மருத்துவர் தெரிந்திருக்க வேண்டும். அந்த மொழிதான் அறிவியல். இறந்த உடல் சொல்லும் அனைத்தையும் எனது அனுபவத்தையும் அறிவையும் வைத்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் கற்றது கைமண் அளவு என்பதே உண்மை.
..........................தி இந்து நாளிதழ் செய்திகள், 08.02.2015....................