disalbe Right click

Friday, April 10, 2015

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?


ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
**********************************************
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்! 

http://uidai.gov.in/update-your-aadhaar-data.html


இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம். 

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:


1. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
2. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
3. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
5. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
6. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.


தொல்லை தரும் நண்பர்களைக் கட்டுப்படுத்த


தொல்லை தரும் நண்பர்களைக் கட்டுப்படுத்த
************************************************************

பேஸ்புக் தளத்தில், நமக்கென அக்கவுண்ட் வைத்து, இயக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே நம் நண்பர்கள் வட்டம் வேகமாக விரிவடையும். நான் என்னதான் நம் நண்பர்களை எடைபோட்டு தேர்ந்தெடுத்தாலும், ஒரு சிலர் தங்களுடைய செய்திப் பதிவுகள் (news feed) மூலம் நம்மை எரிச்சல் அடைய வைப்பார்கள். இவர்களிடமிருந்து நாம் ஆர்வம் காட்டாத செய்திப் பதிவுகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கப் பெறுவோம். இதனால் எரிச்சல் அடைவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த பதிவுகளை நிறுத்த முடியாமல் தவிப்போம்.

பேஸ்புக் தளம் தற்போது இதற்கு ஒரு தீர்வினைத் தந்துள்ளது. இந்தப் பிரிவில், உங்களுடைய செய்திப் பதிவு பக்கத்தில், கடந்த வாரத்தில் அதிகம் பதிவுகளைத் தந்த நண்பர்கள், பக்கங்கள் மற்றும் குழுக்கள் பட்டியலிடப்படும். இதில் யாரிடமிருந்து இத்தகைய பதிவுகளை நிறுத்த வேண்டுமோ, அவர்கள் பெயர் முன் ஒரு டிக் கிளிக் செய்து, அவர்கள் நம்மைப் பின் தொடர்ந்து வந்து செய்திப் பதிவுகளை இடுவதனை நிறுத்தலாம். இதனை நிறுத்திய பின்னரும், அவர்களுடன் தொடர்ந்து நீங்கள் நட்பாக இருக்கலாம். ஆனால், அவர்களிடமிருந்து நம்மை எரிச்சலடையச் செய்திடும் பதிவுகள், நிலைப்பாடுகள் நமக்கு வராது.
இதே பட்டியலில், கடந்த காலத்தில் நம்மைப் பின்பற்றி பதிவுகள் இடாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் பெயர்களையும் காணலாம். நீங்கள் முடிவெடுக்கும் எந்த நேரத்திலும், இவர்களுக்கு உங்களைப் பின்பற்ற அனுமதி அளிக்கலாம்.
இந்த News feed settings பிரிவு மொபைல் சாதனங்களிலும், நம் டெஸ்க்டாப்பிலும் இப்போது கிடைக்கிறது. இதனைப் பெற "more" மெனு கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில், கீழாகச் செல்லவும். அங்கு "help & settings" என்ற பிரிவில், நீங்கள் இந்த வசதியினைப் பெறலாம்.
இதற்கிடையே, இன்னொரு வேலையையும் நீங்கள் மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட விரும்பத்தகாத நபரிடமிருந்து வரும் தகவல்களை மறைத்து வைக்கலாம். அந்த பதிவில், வலது மேல் மூலையில் உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், hide என்பதை அழுத்தி, தகவலை மறைக்கலாம். இவ்வாறு மறைக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட நபரிடமிருந்து வரும் தகவல் பதிவுகள் மறைக்கப்படும் மற்றும் குறைக்கப்படும்.
“ஒரு நண்பர் நம்மைப் பின் தொடர அனுமதி அளிப்பதுவும், அனுமதியை நிறுத்துவதும் இனி உங்கள் கைகளில் உள்ளது” என்று  பேஸ்புக் நிர்வாகி க்ரெய்க் மர்ரா தன் வலைப்பதிவில் (http://newsroom.fb.com/news/2014/11/news-feed-fyi-more-ways-to-control-what-you-see-in-your-news-feed/) தெரிவித்துள்ளார். இந்த செட்டிங்ஸ் இயக்குவது பற்றிய காணொளி விளக்கக் காட்சியையும் காணலாம்.
அண்மையில் இன்னொரு சமூக இணைய தளமான, ட்விட்டர் தளத்தில், இதே போன்ற தகவல்களை மறைக்கும் வசதி தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேஸ்புக் தளமும் இந்த வசதியைத் தந்துள்ளது.

பெண்களுக்கு ”வாட்ஸ் அப்”- பால் வரும் ஆபத்து


பெண்களுக்கு ”வாட்ஸ் அப்”- பால் வரும் ஆபத்து
***************************************************************

பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது.

 'வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?' என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில்.

என்ன ஆபத்துகள்?
******************************
1.யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.
2.உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும்.
3.கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும்.
4.உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.
5.உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட வாய்ப்புள்ளது.
எப்படி தவிர்க்கலாம்?
************************************
உங்களது வாட்ஸ்அப் தொந்தரவுகளை எப்படி தவிர்க்கலாம் என்றால் உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில்(செட்டிங்) உங்களது ப்ரைவஸி செட்டிங்கை மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம். குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.
முடிந்தவரை தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ்அப்பில் பேசுவது பாதுகாப்பானது. ஒருவேளை இதனை செய்ய தவறும்போது ஏற்படும் பாதிப்புகள் சமூக வலைதளங்களைவிட மோசமானதாக இருக்கும்.
உஷார் தோழிகளே!
நன்றி -விகடன் செய்திகள்-

குடும்ப அட்டை பெறுவது எப்படி?


குடும்ப அட்டை பெறுவது எப்படி?
*******************************************************
குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? தொலைந்து போனால் எப்படிப் பெறுவது போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள் இங்கே...
குடும்ப அட்டையின் அவசியம்:
***********************************
பொதுவிநியோகத் திட்டத்தில் பொருட்கள் பெற மட்டுமல்லாது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கக்கூடிய ஆவணமாகவும், இருப்பிடச் சான்றுக்கான மிக முக்கிய ஆவணமாகவும் பயன்படுகிறது.
குடும்ப அட்டை பெறுவதற்கான தகுதிகள்:
1.தனிக்குடும்பமாக வசிக்கும் தமிழக மக்கள் எவருமே குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
2.விண்ணப்பதாரர் தனது குடும்பத்துடன் தனி சமையலறையைப் பயன்படுத்துபவராக, தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
3.விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர் தமிழகத்தில் வேறு எந்தக் குடும்ப அட்டையிலும் இருக்கக்கூடாது.
விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
*************************************
அனைத்து தாலுகா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் விண்ணப்பப் படிவங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கின்றன. தமிழக அரசின் இணையதளத்தில் http://www.consumer.tn.gov.in/pdf/ration.pdf  ஆங்கிலத்திலும்,

 http://www.consumer.tn.gov.in/pdf/rationt.pdf    தமிழிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எங்கே / யாரிடம் விண்ணப்பிப்பது?
****************************************
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
கட்டணம்:
************
புதிய குடும்ப அட்டை பெறும்போது ரூ10 கட்டணமாகப் பெறப்படும்.

தேவையான ஆவணங்கள்:
********************************
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கீழ்கண்ட ஆவணங்களின் நகல் ஒன்றை இணைக்க வேண்டும்.
1. தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றாக தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை, மூன்று மாதங்களுக்குள்ளான வீட்டு வரி / மின்சாரக் கட்டணம் / தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீதுகளில் ஏதாவது ஒன்று அல்லது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் / பாஸ்போர்ட் நகல்/ வாடகை ஒப்பந்தம் இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் போதுமானது. ஒரு வேளை இந்தச் சான்றுகள் ஏதும் இல்லையென்றால், நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் பெற்றுக் கொடுக்கலாம்.
2. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கப்பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று.
3. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கும் அதிகாரியிடம் (TSO) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
4.முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் குடும்ப அட்டை இல்லை என்ற சான்று.
5.எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர் போன்றவை அடங்கிய விவரங்கள் கொடுக்க வேண்டும்.
6.விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தை வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகைச் சீட்டை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவுத் தபாலில் அனுப்புவர்கள் சுயமுகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.
குடும்ப அட்டை தொலைந்து போனால்:
*******************************************
தொலைந்து போன குடும்ப அட்டையின் நகலுடன் ஏதாவது ஓர் அடையாள அட்டையின் நகலையும் சேர்த்து கிராமப்புறங்களில் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும், நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையரையும் அணுக வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புதுக் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைத்துவிடும். இதற்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.
குடும்ப அட்டை குறித்து எங்கே புகாரளிப்பது?
***************************************************
வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள அதாவது அதிகாரிகள் மனுதாரரின் வீட்டுக்கு நேரில் சென்று தனியாக சமையல் செய்யப்படுகின்றதா விண்ணப்பதாரர் சொன்னது உண்மையா என ஆய்வு செய்வார்கள்.
விண்ணப்பித்த 30 நாட்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை கொடுக்கப்படவேண்டும் அல்லது குடும்ப அட்டை கொடுக்கப்படாததற்கு காரணம் சொல்லவேண்டும். அதையும் மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளருக்கும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய வேண்டும் அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும் அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
மாநில நுகர்வோர் மையத்தை 044 2859 2858 என்ற எண்ணில் தொலைபேசியிலோ, consumertn.gov.in, schtamilnadugmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலதிக விவரங்களுக்கு:
******************************
தங்கள் பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
உங்கள் பகுதியின் பொது விநியோகக் கடைக்கான பொருட்களின் ஒதுக்க்கீடு குறித்து அறிய http://cscp.tn.nic.in/allotmentver2/repallotmentshopwise.jsp இத்தளத்திற்குச் செல்லவும்.

புதுச்சேரியைச்  சேர்ந்தவர்கள்  
இத்தளத்திற்குச் சென்று விண்ணப்பத்தின் நிலையறியலாம்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ள http://www.consumer.tn.gov.in/fairprice.htm 
இத்தளத்திற்குச் செல்லவும்.

வீட்டுக்கடன் வாங்க வங்கியை அணுகும் முறை


வீட்டுக்கடன் வாங்க வங்கியை அணுகும் முறை 

தகுதிகளும்! சமர்ப்பிக்க வேண்டிய‌ ஆவணங்களும்!

***************************************************************************
இன்றைக்கு பல வங்கிகள், வீட்டுக் கடன் தர தயாராக இருந்தாலும் அதை வாங்குவதற்கு பல படிகளை தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது. 
வீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்? அதற்கு என்ன தகுதிகள் வேண்டும்? 
வங்கிகளி டம் என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?

அடிப்படைத் தகுதி:
****************************
‘வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிப்பவர் மாதச்சம்பளம் வாங்குபவராக இருந் தால் அவர் நிரந்தரமான பணியில் இருப்பவராக இருக்க வேண்டும். தனி நபராகவோ அல்லது கணவன், மனைவி அல்லது தந்தை, மகன், நெரு ங்கிய சொந்த பந்தம் என இருவர் இணைந்தும் வீட்டுக் கடனை வாங்கலாம்.
வீட்டுக் கடன் வாங்கும்போது கடன் வாங்கும் நபர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிகர சம்பளத்தை
கணக்கில் எடுத்து கொள்வார்கள். கணவன், மனைவி என இருவர் சேர்ந்து கடன் வாங்க விண்ணப் பித்தால் இருவரின் நிகர சம்பளத்தை கணக்கில் கொண்டு கடன் தொகையை நிர்ணயிப்பார்கள். இதனை ”நெட் மன்த்லி இன்கம்” என்பார்கள். வங்கி ஸ்டேட்மென்ட், சம்பளச் சான்றிதழ், கடந்த 3 வருடங்கள் வருமான வரி தாக்கல் செய்த விவரங்கள் உள்ளிட்டவைகளை முதலில் வங்கி யில் கொடுக்க வேண்டும். மேலும், உங்களது வயது, சொத்து, வீடு கட்டப்போகும் அல்லது வாங்கப்போகும் இடத்தின் மதிப்பு, கடனை திரும்பச் செலுத்தும் திறன் உள்ளிட்டவற்றை வைத்து உங்களுக்கு கடன் தரலாமா என்று முடிவு செய்வார்கள்.

தேவையான ஆவணங்கள்:
****************************************
1) சொத்து ஆவணங்கள்: 

விற்பனை ஒப்பந்தம், லே அவுட் பிளான் அப்ரூவல், வீடு கட்ட அனுமதி வாங்கிய ஆவணம், அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் மூலம் தரப்பட்ட சொத்தின் மதிப்பீடு, கட்டிய வீட்டை வாங்குவதற்கு கடன் என்றால் வீட்டு வசதி வாரியம் / கூட்டுறவு சங்கம் / பில்டர்களிடமிருந்து பெறப்பட்ட ஒதுக்கீட்டு கடிதம்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை/ பாஸ் போர்ட்/ டிரைவிங் லைசன்ஸ்/ பான் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டை.

பிஸினஸ் செய்யும் நபர் எனில் அவர்கள் பிஸினஸ் செய்யும் முகவரிக்கு உரிய அடையாளச் சான்றிதழ். வங்கிக் கணக்கின் கடந்த ஆறு மாத பரிவர்த்தனை. 

2)சொத்து மற்றும் கடன் விவரம்:

சமீபத் திய சம்பளச் சான்றிதழ். வருமான வரி படிவம் 16 அல்லது கடந்த இரண்டு நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்த விவரம்.
பிஸினஸ் செய்யும் நபர்கள் எனில் 3 வருட வருமான வரி தாக்கல் செய்த விவரம்.

மார்ஜின் தொகை:
**************************
முதலில் நீங்கள் கட்டப்போகும் அல்லது வாங்கப் போகும் வீட்டின் மதிப்பில் 20,25 சதவிகித மார்ஜின் தொகையை நீங்களே போட வேண்டும். 
மீதித் தொகையை மட்டுமே வங்கியிலிருந்து கடனாகப் பெற முடியும். 
வீடு கட்டுவதற் கான மனை ஒரு ஊரில் இருக்கிறது; உங்கள் வங்கிக் கணக்கு வேறு ஊரில் இருக்கிறது எனில், இந்த இரண்டில் ஏதாவது ஒரு ஊரில் வீட்டுக் கடன் பெற முடியும். 

அஸ்திவாரம் போட, ரூஃப் கான்கிரீட் போட, ஃபினிஷிங் செய்ய என பல்வேறு கட்டமாகத்தான் வங்கிகள் கடன் தரும். கட்டி முடிக்கப்பட்ட வீடாக இருந்தால், உரிய ஆவணங்களை ஒப்படைத்து அனைத் தும் சரியாக இருப்பின் முழுத் தொகையும் வழங் கப்படும்.

எதற்கெல்லாம் கடன்?
*********************************
வீடு கட்ட அல்லது வாங்க, ஃப்ளாட் கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு. வீட்டுப் பராமரிப்பு வேலைகள் செய்வதற்கு. மேலும், வீடு கட்ட ஆரம்பித்து சில ஆண்டுகள் கழித்து மேற்கொண்டு கட்ட டாப்,அப்லோன் பெறலாம். உங்கள் சம்பள உயர்வு மற்றும் சொத்து மதிப்பு உயர்வுக்கு ஏற்ப இந்தக்கடன் தொகை இருக் கும்.

தெரிந்து கொள்ளுங்கள்! என்ஆர்ஐகளுக்கான ஆர்பிஐ விதிகள்:
*******************************************************************************************
வெளிநாடு வாழ் இந்தியர் என்பவர் இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்து வரும் இந்திய குடிமகனாவார். ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் இந்தியாவில் விவசாயம்/பயிர் வளர்ப்பு/பண்ணை வீடுகளை தவிர்த்து எந்த அசையா சொத்தினையும் வாங்கலாம். 

அவர் இந்தியாவில் வசி க்கும் ஒரு நபருக்கு இந்தியாவிலுள்ள எந்த அசையா சொத்தையும் உரிமை மாற்றம் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா வுக்கு வெளியே எந்த இடத்திலிருந் தும் இந்தியாவுக்குள் பணம் செலுத்துவதன் மூலம் அல்லது திணிவிகி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்கு முறைகளுக்கிணங்க பராமரிக்கப்படும்

ஏதேனும் வெளிநாடு வாழ் இந்தியர் கணக்கில் இருக்கு ம் நிதிகள் மூலம் இந்தியாவில் பணம் பெற்றுக் கொண்டு இந்த கொள் முதல் செய்யப்படும்.

வெளிநாடுவாழ் இந்தியர் குடியிருப்பு வீட்டை வாங்குவதற்கு இந்தியாவிலு ள்ள வீட்டுவசதி நிதி நிறுவ னத்திடமிருந்து வீட்டுக்கடன்களை பெற முடியும். 
இப்படிப்பட்ட கடன் சாதாரண வங்கி சேவை வழியாக இந்தியாவுக்குள் பணம் செலுத்துதல்மூலம், இவ்வித சொத்திலிருந்து கிடைக்கும் வாடகை வருமானத்தில், கணக்கில் கழிப்பதன் மூலம் திருப்பி செலுத்தப்பட வேண்டும். திணிவிகி சட்ட விதிகளுக்கிணங்க, வெளிநாடு வாழ் இந்தியர், இந்தியாவில் இருக்கும் குடியிருப்பு வீட்டு சொத்தின் விற்பனை வருமானத்தை, அயல் நாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும்.


காய்கறிகளை வாங்குவது எப்படி?


காய்கறிகளை  வாங்குவது எப்படி?
*********************************************
சமையலுக்கு புதுசா நீங்க....அப்போ சரி காய்கறியை எப்படி பார்த்து வாங்கனும்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பு குறைவு தான்.. எந்தெந்த காய்களை எப்படி பார்த்து வாங்கலாம்னு தெரிஞ்சிகோங்க.....

பீன்ஸ்: பீன்ஸில் இரண்டு வகைகள் உள்ளன. பிரெஞ்ச் பீன்ஸில் நார் அதிகமாக இருக்கும். புஷ் பீன்ஸில் நார் இருக்காது. அதிகம் பேர் விரும்புவது புஷ் பீன்ஸ்தான். இதில் தோல் சாஃப்ட்டாக இருப்பதே சுவை அதிகம் தரும்.

கோவைக்காய்: பொரியல் செய்யப் பயன்படுத்தும் கோவைக்காய்களை முழுக்க பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் வாங்குங்கள். கோவைக்காயில் ஆங்காங்கே லேசாக சிவப்பு இருந்தால் அது உடனே பழுத்துவிடும். ருசியும் குறைவாகத்தான் இருக்கும்.

காலிஃப்ளவர்: காலிஃப்ளவர் வாங்கும்போது பூக்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும். இதில்தான் காம்புகளும் தடிமனாக இருக்காது.

முருங்கைக்காய்: முருங்கைக்காயை சற்றே முறுக்கிப் பார்த்து வாங்க வேண்டும். முறுக்கும்போது நன்றாக வளைந்து கொடுத்தால் காய் முற்றவில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு: சர்க்கரை வள்ளிக் கிழங்கு வாங்கும்போது ஆங்காங்கே அடிபட்டு கறுப்பாகி இருப்பதை தவிர்த்து வாங்குங்கள். இது கசக்கும். உருண்டையான கிழங்குகள்தான் அதிகம் இனிக்கும்.

பூண்டு: பூண்டை வாங்கும்போது பல் பல்லாக வெளியே தெரிவதையே வாங்க வேண்டும்.

மாங்காய்: மாங்காயை காதருகே வைத்து தட்டிப் பாருங்கள். தேங்காயில் வருவது போலப் பெரிதாகச் சத்தம் வர வேண்டும். அதில்தான் கொட்டை சிறிதாக இருக்கும்.

உருளைக் கிழங்கு: இந்தக் கிழங்கு முளை விடாமல் பச்சை, பச்சையாக நரம்பு ஓடாமல் இருக்க வேண்டும். லேசாகக் கீறினாலே தோல் உடனே கையோடு பெயர்ந்து வர வேண்டும்.

அவரை: நாட்டு அவரையைத் தொட்டுப் பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும். இளசாகப் பார்த்து வாங்கினால்தான் நார் அதிகமாக இருக்காது.

சேப்பங்கிழங்கு: முளைவிட்டதுபோல் ஒரு முனை நீண்டிருக்கும் சேப்பங்கிழங்கு சமையலில் சுவை சேர்க்காது. சேப்பங்கிழங்கு வாங்கும்போது உருண்டையாக இருப்பனவற்றைப் பார்த்து வாங்குங்கள்.

பெரிய வெங்காயம்: பெரிய வெங்காயம் வாங்கும்போது அதன் மேல் பகுதியில் இருக்கும் தண்டுப்பகுதி பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.

கருணைக் கிழங்கு: கருணைக் கிழங்கை முழுசாக வாங்கும்போது பெரிய சைஸில் வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை வாங்கும்போது அதன் உள்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

கத்தரிக்காய்: பெரிய கத்தரிக்காய் வாங்கும்போது தோல் சாஃப்ட்டாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். முற்றல் கத்தரிக்காயின் தோல் ரஃப்பாக இருக்கும்.

பீர்க்கங்காய்: பீர்க்கங்காயை அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே சைஸில் இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.

புடலங்காய்: புடலங்காயைக் கெட்டியாக இருப்பதாகத்தான் வாங்க வேண்டும். அதில்தான் விதைப்பகுதிகுறைவாகவும் சதைப் பகுதி அதிகமாகவும் இருக்கும்.

பரங்கிக்காய்: பரங்கிக்காயைப் பொறுத்தவரை உள்ளே இருக்கும் விதைகள் முற்றியதாகப் பார்த்து வாங்குவதுதான் நல்லது.

தக்காளி: நன்றாக சிவந்த தக்காளிகளாகப் பார்த்து வாங்க வேண்டும். ஒரு வாரம் வரை இந்த பெங்களூரு தக்காளி கெடாது என்பதால் நன்கு பழுத்த பழமாகவே பார்த்து வாங்கலாம்.

வாழைத்தண்டு: பொரியலுக்கும் சூப்புக்கும் பயன்படும் வாழைத் தண்டின் அடிப்பகுதியில் நார் அதிகமாக இருக்கும் என்பதால் மேல் பகுதியாகப் பார்த்து வாங்குங்கள். உள்ளிருக்கும் தண்டுப் பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினாலே போதும்.

முள்ளங்கி: முள்ளங்கியை லேசாகக் கீறிப்பார்த்தால் தோல் மென்மையாக இருக்க வேண்டும். அதுவே இளசு.

வெள்ளரி: வெள்ளரிக்காயின் மேல் நகத்தால் குத்திப் பார்த்தால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்படிப்பட்ட காய்களில்தான் விதைகள் குறைவாக இருக்கும்.

பாகற்காய்: பெரிய பாகற்காயைப் பொறுத்தவரை உருண்டையான ஷேப் காய்களை வாங்குவதைவிட தட்டையான நீண்ட காய்களாகப்ப் பார்த்து வாங்க வேண்டும்.

வாழைப்பூ: வாழைப்பூவின் மேல் இதழைப் பிரித்தால் பூக்கள் கறுப்படிக்காமல் வெள்ளை நிறத்தில் இருந்தால்தான் அது புத்தம் புதுசாக இருக்கிறது என்று அர்த்தம்.

சௌசௌ: சௌசௌ வாங்கும்போது அதன் வாய் போன்ற பகுதியில் இருக்கும் விரிசல்கள் பெரிதாக இருக்காதபடி பார்த்து வாங்க வேண்டும். விரிசல்கள் அதிகமாக இருந்தால் காய் முற்றலாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இஞ்சி: லேசாகக் கீறிப்பார்த்தால் தோல் பெயர்ந்து வருவது மாதிரியே இருக்க வேண்டும். அப்போதுதான் நார்ப்பகுதி குறைவாக இருக்கும். இஞ்சி சமையலில் சேர்க்க நன்றாகவும் இருக்கும்.

பச்சை மிளகாய்: நீளமான பச்சை மிளகாயில் சற்றே காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டான பச்சை மிளகாயில் காரம் தூக்கலாக இருக்கும். இதை சமையலில் சேர்க்கும்போது வாசனையும் பிரமாதமாக இருக்கும்.


அதிகார பத்திரம் POWER OF ATTORNEY



அதிகார பத்திரம் POWER OF ATTORNEY
*************************************************
ஒருவர் தம்முடைய சொத்தை விற்பதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று கிரயப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும். தன்னுடைய நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய அரசாங்கத்தின் பல துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும்.சில சமயம் அரசாங்க அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்.

அரசாங்கத்தில் அங்கீகாரம் பெற்றபின் ஒவ்வொரு வீட்டு மனையை விற்கும் போதும் நில உரிமையாளர் சார்பதிவாளர் அலுவலகம் செல்லவேண்டும்.

அதையெல்லாம் நிலத்தின் உரிமையாளர் செய்ய முடியாத நிலையில் மேற்கண்ட வேலைகளைச் செய்வதற்கு தனது சார்பாக ஒருவரை நியமனம் செய்யலாம்.

அவரை நியமனம் செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) அதிகார பத்திரம் (Power of Attorney) பதிவு செய்ய வேண்டும். அதில் தம்மால் நியமிக்கப்படுபவருக்கு எதற்கெல்லாம் அதிகாரம்(Power) கொடுக்கப்படுகிறது என விபரங்கள் இருக்கும்.

Power of Attorney எதற்கெல்லாம் உதவும்?
********************************************

1. சொத்துகளை தனது பெயரில் வேறொருவர் மூலமாக வாங்கலாம்.
2. வெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது தன்னுடைய (visit) இல்லாமல் இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்து கொள்ளலாம்.
3. சொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆவணக்களுக்கு காலாவாதி ஆகாது.
4. எழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது.

Power of Attorney எத்தனை வகைப்படும்?
*******************************************

1. பொது அதிகார பத்திரம் (General Power of Attorney)
2. தனி அதிகார பத்திரம் (Special Power of Attorney)

1. பொது அதிகார பத்திரம் (General Power of Attorney)
இதில் Power of Attorney யாக நியமிக்கப்படுபவருக்கு சொத்தை விற்க, நிலமாக இருந்தால் மனைப்பிரிவுகளாக பிரிக்க மற்றும் அரசு அலுவலகங்களில் சொத்துதொடர்பான ஆவணங்களில் கையொப்பம் இட முதலிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.

2. தனி அதிகார பத்திரம் (Special Power of Attorney)
இதில் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரம் வழங்கப்படும் (எ.கா) சொத்தை விற்க அல்லது மனைப் பிரிவுகளாக பிரிக்க மட்டும் என்பது போன்ற செயல்கள். மேற்கண்ட செயலைத் தவிர வேறு எதையும் அவரால் செய்யமுடியாது.

மேற்கண்ட இரண்டிலுமே நீங்கள் வாங்க நினைக்கும் சொத்து எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்குதான் Power of Attorney பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். அதனால் வில்லங்க சான்றிதழில் (EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் ) இந்த விவரம் (Entry) இருக்காது. இப்படி EC-ல் entry வராத காரணத்தினால் Power of Attorney -யிடம் சொத்து வாங்குபவரால் அது ரத்து செய்யப் பட்டிருக்கிறதா? என்ற விவரத்தை தெரிந்து கொள்ளமுடிவதில்லை.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?
*************************************


1.நாம் சொத்து வாங்கும் போது நமக்கு அந்த சொத்தை விற்பனை செய்பவர்Power of Attorney-ஆக இருந்தால் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் Power of Attorney பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு நகல் (Copy of Document)விண்ணப்பம் செய்து பெறவேண்டும். அதில் இந்த Power of Attorney ரத்து செய்யப்பட்டிருந்தால் அதனுடைய விவரம் குறிக்கப்பட்டிருக்கும். நகல் பெறுவதற்கு சொத்தின் உரிமையாளர் அல்லது Power of Attorney இருவரில் ஒருவர் தான் விண்ணப்பம் செய்ய முடியும். அதே போல, பவர் agent, நாம் கொடுக்கும் பணத்தை உரிமையாளரிடம் கொடுத்து ரசீது பெற்று கொண்டிருக்க வேண்டும். அல்லது, பின்னாளில், பிரச்சினை வரும். இதை தவிர்க்க, தற்போது, பவர் பத்திரத்திலேயே, கிரைய ரசீதும் சேர்த்து பவர் வாங்குபவர்கள் பதிந்து கொள்கிறார்கள். தற்போது, பவர் பத்திரம் பதிய கட்டணமும் மாறி உள்ளது.

2.சொத்தின் உரிமையாளரிடம் நேரிடையாக பேசி Power of Attorney ரத்து செய்யப்பட்டிருக்கிறதா? என உறுதி செய்து கொள்வது மிகவும் நல்லது.
உரிமையாளரிடம் பேசாமல் எந்த ஒப்பந்தமும் Power of Attorney-யிடம்செய்யக்கூடாது.
01.11.2009 -லிருந்து Power of Attorney பதிவு செய்யும் புதிய முறை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி Power of Attorney தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதன் விவரம் முழுவதும் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த சார்பதிவாளருக்கு அனுப்பப்பட வேண்டும்.
இது பல மோசடிகளை தவிர்க்க உதவும். ஏனென்றால் இதன் விவரம் EC-ல் வந்து விடும். தற்போது பவர் கொடுத்தவர் உயிரோடு உள்ளாரா என்று சான்றிதழ் வாங்கியே, பதிகிறார்கள். பவர் பத்திரமும் வில்லங்கத்தில் வருகிறது. அந்த நகலையும் யார் வேண்டுமானாலும் தற்போது வாங்கலாம் .

Power of Attorney எழுத தேவையான ஆவணங்கள்:
******************************************************

பவர் எழுதி கொடுப்பவர் மற்றும் பவர் ஏஜன்ட் ( எழுதி வாங்குபவர் ) ஆகியோர்களின்
1. புகைப்பட அடையாள அட்டை (Photo Identity proof)

2. இருப்பிட சான்று (Residence Proof)

3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்

மற்றும்

4. ரூபாய் 20க்கான முத்திரைதாள் (பத்திரம்)

5. இரு சாட்சிகள் (Two witness)

பதிவு செய்யப்படாத அடமானம் மற்றும் கிரைய ஒப்பந்தம் போன்றவை
*******************************************************************************

 EC-ல் வராத பட்சத்தில் நாம் எப்படி அதை கண்டுபிடிப்பது ?
*****************************************************************

ஒருவர் சொத்தை அடமானம் செய்யும் போது அது பதிவு செய்யப்படாவிட்டாலும் சொத்தின் Original பத்திரத்தை அடமானம் பெற்றவர் வாங்கி வைத்துக்கொள்வார். அதனால் ஒரு சொத்தை நாம் கிரைய ஒப்பந்தம் செய்யும் போது Xerox copy-யை வைத்து நாம் மற்ற விவரங்களை உறுதி செய்து கொண்டாலும் Original பத்திரத்தை பார்த்த பிறகு தான் கிரைய ஒப்பந்தமே செய்ய வேண்டும். அது மிக முக்கியம். ஆனால் ஏற்கனவே ஒருவரிடம் சொத்தின் உரிமையாளர் கிரைய ஒப்பந்தம் செய்து இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வது அரிது. ஏனெனில் பொதுவாக கிரைய ஒப்பந்தம் செய்பவரிடம் Original பத்திரத்தை சொத்தின் உரிமையாளர் கொடுக்கத் தேவையில்லை.

மேலும் சொத்து சம்பந்தமான பதிவு செய்யப்படாத அடமானம், மற்றும் பதிவுசெய்யப்படாத எந்த நடவடிக்கைகளும் செல்லு படியாகாது என சட்டம் இருந்தால் இது போன்ற மோசடிகள் நடக்காது. சொத்து சம்பந்தமான எல்லா நடவடிக்கைகளுமே பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏனென்றால் பதிவு செய்யப்படும் எல்லா விவரங்களுமே EC-ல் வந்து விடுவதால் சொத்து அடமானத்தில் உள்ளதா அல்லது வேறு ஒருவரிடத்தில் கிரைய ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறதா என நாம்தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.


நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன?


நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன?
************************************************************

இந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) என்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இச்சட்டம் ஒரு நிலத்தை எப்படி கையப்படுத்த வேண்டும் என்பது, அதன் வரையறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது.
சட்டம் பற்றிய முன்னுரை:
*****************************************

பொது உபயோகம் மற்றும் தனியார் நிறுவன பயன்பாட்டிற்காக தனியார் நிலங்களை, பயன்பாடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பிற்கு தகுந்த இழப்பீடு வழங்கியபின், அரசு கையகப்படுத்தலாம். இவ்வாறு அரசால் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டங்கள், நிலம் கையகப்படுத்துதல் சட்டம்,1984 என அழைக்கப்படுகிறது.
சட்டம் பற்றிய விரிவான தகவல்கள்:
*********************************************************

1. முதல் அறிக்கை:
******************************

நிலம் மற்றும் சொத்துகளை பொது மக்களிடமிருந்து கையகப்படுத்தும் முன், அவ்வாறு கையகபடுத்துவதற்கு தனக்குள்ள ஆர்வம பற்றி அரசாங்கம் கீழ்க்கண்டவற்றில் அறிவிக்க வேண்டும்.
அ. அரசிதழ் ஆணை
ஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட்டார மொழியில் இருக்க வேண்டும்.
இ. நிலம் அமைந்துள்ள பகுதியில், பொதுமக்களுக்கு வசதியான இடங்களில் அறிவிக்கை.
இத்தகைய அறிவிப்புகளில் கடைசியாக வெளியிடப்பட்ட அறிக்கை வெளியான நாள், அறிவிக்கை நாளாக கருதப்படும்.
அறிக்கை வெளியான நாளன்று நிலம் மற்றும் சொத்தின் சந்தை விலையின் அடிப்படையில் நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
2. ஆட்சேபணைகளை விசாரணை செய்தல்:
********************************************************************

அறிவிக்கப்பட்ட நிலம் மற்றும் சொத்தில் ஆர்வமுடைய அல்லது சம்பந்தப்பட்ட அனைவரும் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபணைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.
நிலம் கையகப்படுத்துவதில் பொது நல நோக்கம் இல்லாதது, தேவைக்கு மேல் அதிக நிலம் கையகப்படுத்துவது, கையகப்படுத்தும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது அல்லது அந்த இடத்தில பொது மக்கள் பயன்பாடு, வழிபாட்டுத்தலம், சமாதிகள் அல்லது மயானங்கள் இருப்பது போன்ற காரணங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு
சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்.
இந்த கட்டத்தில், அறிவிக்கப்பட்ட இடத்திற்கு பதில் வேறு மாற்று இடத்தை கையகப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியருக்கு ஆலோசனைகள் கூறலாம். அத்தகைய ஆலோசனைகளுக்கு மதிபளிக்கவிட்டால் மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக உயர் மன்றத்தில் வாதாடலாம்.
அறிவிக்கைக்கெதிராக ஆட்சேபணை தெரிவித்தோரின் கருத்துகளை மாவட்ட ஆட்சியர் கண்டிப்பாக கேட்க வேண்டும். எனினும் அவசர நேரங்களில் அவ்வாறு அவர் கேட்பதை தவிர்க்கலாம்.
3. கையகப்படுத்தும் முடிவை அறிவித்தல்:
*****************************************************************

கையகப்படுத்தும் முடிவை அரசாங்கம் கீழ்க்கண்டவற்றில் மீண்டும் ஒரு முறை அறிவிக்க வேண்டும்
அ. அரசிதழ் ஆணை
ஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட்டார மொழியில் இருக்க வேண்டும்.
இ. நிலம் அமைந்துள்ள பகுதியில், இந்த அறிக்கை அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 1 வருடத்திற்குள்செய்யப்பட வேண்டும்.
இதில் கையகப்படுத்தப்படும் நிலம் இருக்குமிடம் மற்றும் நிலத்தினை கையகப் படுத்தபடும் நோக்கம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடப்படவேண்டும்.
4. சம்பந்தபட்ட அனைவருக்கும் அறிவிப்பு கொடுத்தல்:
*************************************************************************************

கையகப்படுத்தபடும் நிலத்தில் அல்லது அதன் அருகே மாவட்ட ஆட்சியரால் பொது அறிவிப்பு செய்யப்பட வேண்டும். இழப்பீடு கோருதல் மற்றும் அளவைகளில் உள்ள ஆட்சேபணைகளை 
தன்னிடம் குறிப்பிட்ட தேதியில் தெரிவிக்குமாறு, அந்த நிலத்தை பயன்படுத்தும் மற்றும் சம்பந்தபட்ட அனைவருக்கும் தனித்தனியே அறிவிப்பு அனுப்ப வேண்டும்.
அறிவிப்பு அளித்தபின், கோரிக்கைகளை தெரிவிக்க 15 நாட்கள் கால அவகாசம் தர வேண்டும்
5. மாவட்ட ஆட்சியரின் உறுதி:
************************************************

சம்பந்தபட்டவர்களின் கோரிக்கைகளை கேட்ட பின் கையகப்படுத்தபடும் நிலத்தின் அளவு மற்றும் அதற்கான இழப்பீடு ஆகியவற்றை தெரிவித்து மாவட்ட ஆட்சியரால் உறுதி அளிக்கப்படும்.
உறுதி அறிக்கை, முதல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 2 வருடத்திற்குள் செய்யப்பட வேண்டும்.
சந்தை மதிப்பு, சந்தை மதிப்பிற்கான 12% விகிதத்தில் கணக்கிடப் பட்ட வட்டி மற்றும் சந்தை மதிப்பின் 30% மதிப்பில்
( கட்டாய கையகப்படுத்துதலுக்கான ஆறுதல் ) ஆறுதல் தொகை ஆகியவை இழப்பீடாக வழங்கப்படும்.
தீர்வுக்கான வழிமுறைகள்:
*******************************************

எந்த சட்டபிரிவுகளின் கீழ் புகார் செய்யலாம்?
சட்டபிரிவு 4: முதல் அறிக்கை 
சட்டபிரிவு 6: கையகபடுத்தும் முடிவை அறிவித்தல்:
சட்டபிரிவு 11: விசாரணைகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உறுதி
சட்டபிரிவு 18: நீதிமன்றத்திற்கு பரிந்துரை
சட்டபிரிவு 28-A: இழப்பீட்டை மறுமதிப்பீடு செய்தல்
யாரிடம்/எப்போது புகார் செய்யலாம்?
**********************************************************

மாவட்ட ஆட்சியரின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் திருப்தியடையாவிட்டால், நீதிமன்றத்திற்கு வழக்கை பரிந்துரை செய்யுமாறு அவர்கள் மாவட்ட ஆசியரை கோரலாம்.
வழக்கை எவ்வாறு பதிவு செய்வது?
********************************************************

சம்பந்தப்பட்டவர்களின் கோரிக்கை அடிப்படையில், ஆட்சியர் வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பர். இதற்கு நீதிமன்ற கட்டணங்கள் செலுத்த தேவையில்லை. இழப்பீட்டை அதிகரித்தோ, அளவீடு மற்றும் பாகபடுதுத்தல் தொடர்பான ஆட்சியரின் உறுதியை மாற்றியோ நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம்.
என்றாலும்,
இழப்பீட்டு அளவை நீதிமன்றம் குறைக்க முடியாது.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்:
***********************************************

இழப்பீட்டு தொகையை அதிகரித்து நீதிமன்றம் ஆணையிட்டால் மறுமதிப்பீடு செய்யக் கோரி சம்பந்தப்பட்டவர் ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தீர்பளித்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து60 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
மாற்று வழிமுறைகள்:
************************************

இந்த சட்டத்தின் கீழ் மாற்று வழிமுறைகள் இல்லை என்று இருந்தது.
ஆனால் தற்போது நிலம் கையகப்படுத்துதல் மசோதா என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இது தொடர்பாக புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.
அரசுக்கு சாதகமாக அதில் திருத்தங்கள் செய்யப்பட்டு இருக்கலாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005


தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005
*************************************************
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
************************

அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
எங்கிருந்து தகவல் பெறலாம்?
************************************************

மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம்.
தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
என்ன தகவல் பெறலாம்?
****************************************

அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள். ஆவணங்கள், சுற்றறிக்கைகள். ஆணைகள், ஈமெயில்கள், நோட் பைல் எனப்படும் அலுவலக குறிப்புகள் ஆகியவை பெறலாம். இது தவிர சாலை போடுதல், அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மாதிரிகள் கேட்டுப் பெறலாம்.
எடுத்துக்காட்டாக,
1. நமது மாவட்ட எம்.பி. அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
2. அதேபோல் நமது தொகுதி எம்.எல்.ஏ. அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
எவ்வாறு பெறுவது?
**********************************

ஒரு தகவல் பெறுவதற்கென தனியான படிவம் ஏதும் கிடையாது. ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் வேண்டிய தகவல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம்,
மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும்.
குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும்,
அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.
மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும்.
மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.
மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும்
தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.
நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.
கட்டணம் விவரம்:
*****************************

மத்திய அரசும். தமிழ்நாடு அரசும் தகவல் பெற ரூ.10/- என கட்டணம் நிர்ணயித்துள்ளன. இக்கட்டணத்தை ரொக்கமாகவோ, வரைவேலையாகவோ, நீதிமன்ற கட்டண வில்லை மூலமாகவோ செலுத்தலாம். நகல் பெறுகையில் ஒரு தாளுக்கு ரூ. 2/- எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாரிடம் தகவல் கேட்பது?
****************************************

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொதுத் தகவல் அலுவலர்களின் மத்திய அரசுக்கான பட்டியல் www.tn.gov.in என்ற தளத்திலும் உள்ளன.
தகவல் ஏன் கேட்கிறோம் என சொல்ல வேண்டுமா?
*********************************************************************************

பிரிவு 6 (2)ன்படி தகவல் கேட்பவர் எதற்காக தகவல் கேட்கப்படுகிறது என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. பதில் அனுப்ப ஒரு தொடர்பு முகவரியைத் தவிர வேறு எந்த விபரத்தையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எவ்வளவு நாட்களில் தகவல் பெறலாம்?
****************************************************************

பிரிவு 7 (1)ன் படி ஒரு பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தர வேண்டும். கேட்கப்படும் தகவல் ஒரு நபரின் உயிர்ப்பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி நேரத்தில் தர வேண்டும்.
முதல் மேல் முறையீடு:
************************************

பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம்.
இரண்டாம் மேல்முறையீடு:
********************************************
மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.
முகவரி:
*************

மாநில தலைமை தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம், 
ஆலையம்மன் கோவில் அருகில்
தியாகராயர் ரொடு,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580
தகவல் தராவிட்டால் தண்டனை உண்டா?
******************************************************************

பிரிவு 20ன் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள், உரிய நியாயமான காரணங்கள் எதுவுமின்றி தகவல் தர மறுத்தாலோ, தவறான தகவல் அளித்தாலோ அரைகுறையான முழுமையற்ற தகவல்கள் அளித்தாலோ, தகவல்களை அழித்தாலோ பிரிவு 20ன் கீழ் அதிகபட்சமாக ரூ.25,000/- அபராதம் மற்றும் துறை நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.
விதி விலக்குகள் :
******************************

பிரிவு 8ன் படி நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கும், சட்டமன்ற, பாராளுமன்ற உரிமைகள் மீறும், வியாபார ரகசியங்கள், வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு வந்த ரகசியங்கள், காவல் துறையின் ரகசிய தகவலாளர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்கள், புலனாய்வில் உள்ள வழக்குகள், அமைச்சரவை கூட்ட குறிப்புகள் போன்றவை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் பிரிவு 24ன் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பட்டியலிடப்படும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை நிறுவனங்கள் ஆகியன இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு இச்சட்டத்தை உபயோகமாய் பயன்படுத்தலாம்?
******************************************************************************************

இச்சட்டத்தை பயன்படுத்திட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிமேம்பாடு நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கேட்கலாம்.
நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வழங்கப்படும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது எனக் கேட்கலாம்.
ஊழல் நடைபெறக் கூடும் என்று சந்தேகப்படும் அலுவலகங்களில் தகவல் கேட்கலாம்.
உங்கள் தெருக்களில் போடப்படும் சாலைகளிலோ அரசு கட்டுமானப் பணிகளிலோ மாதிரிகள் எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம்.
டெண்டர் விபரங்களைக் கேட்கலாம்.
இதற்கான இணையதளங்கள்:
*************************************************

http://www.righttoinformation.gov.in
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.comஎன்ற தளத்தைப் பார்வையிடலாம்.