disalbe Right click

Friday, April 10, 2015

பான்கார்டு பெறுவது எப்படி?


பான்கார்டு பெறுவது எப்படி?
******************************************
வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும், பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கும் அடிப்படைத் தேவை பான் கார்டு (PAN card – Permanent Account Number Card) எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை. பான் கார்டுக்கு எங்கே விண்ணப்பிப்பது? குழந்தைகளுக்கும் வாங்க முடியுமா? பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது? ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் இங்கே பார்ப்போமா?

பான்கார்டு என்பது என்ன? 
ஆங்கில எழுத்துக்களும், எண்களும் கலந்த பத்து இலக்க எண் கொண்ட புகைப்பட அடையாள அட்டையாகும். இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.

பான் கார்டின் அவசியம்:
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய பங்குகளை வாங்க மற்றும் விற்பதற்கான டீமேட் கணக்கைத் துவக்க, வங்கியின் ஒரு கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை மாற்ற / டெபாசிட் செய்ய / கணக்கிலிருந்து எடுக்க, மற்றும் வரி கழித்த தொகையினை திரும்பப் பெற ஆகியவற்றுக்கு பான்கார்டு அவசியம்.

பான் கார்டு பெறுவதற்கான தகுதிகள்: 
இந்திய குடிமக்கள் அனைவருமே பான்கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பான் கார்டு பெறுவதற்கு வயது வரம்பு இல்லை. குழந்தைகளுக்குக் கூட பான்கார்டு பெற முடியும். பான் கார்டு பெறுவதற்கு ஒரு குழுமமோ, நிறுவனமோ, சங்கமோ, தனிநபரோ விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்:
இந்தியாவில் வசிப்பவர்களுக்கு 105 ரூ கட்டணமும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு 962 ரூ கட்டணமும் பெறப்படுகிறது. ஏஜெண்டுகள் மூலம் விண்ணப்பித்தால் 250ரூ முதல் 300ரூ வரை செலவாகும்.

எங்கே விண்ணப்பிப்பது?
 மத்திய வருமான வரித்துறையின் அங்கீகாரம் பெற்ற யூ.டி.ஐ.டெக்னாலஜி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் இதற்கான சேவை மையங்களைத் திறந்துள்ளது. இங்கு சென்று நேரடியாக விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். இந்தியர்கள் 49ஏ என்ற விண்ணப்பத்தையும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் 49ஏஏ என்ற விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பப்படிவத்தை https://www.tin-nsdl.com/என்ற தளத்திற்குச் சென்றும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:
பான் கார்டு பெற அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று மற்றும் பிறந்த தேதி சான்று தேவை.
அடையாள மற்றும் இருப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

 இருப்பிடச் சான்றாக கடைசி 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் போன்றவற்றின் நகல்களைக் கொடுக்கலாம்
பிறந்த தேதிச் சான்றாக பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளிச் சான்றிதழ் கொடுக்கலாம்.
விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றிதழ்கள் போதுமானவை. மைனர் விண்ணப்பதாரருக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
ஒரு வேளை மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

மீண்டும் பான்கார்டு பெற:
ஏற்கனவே பான்கார்டு வழங்கப்பட்டு ஒருவேளை தொலைந்து போயிருந்தால் அல்லது  சேதமாகியிருந்தால்  அதே பான்நம்பரை வைத்து புதிய பான்கார்டு பெற 
மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதற்கும் மேற்கூறிய சான்றுகள் தேவை. புதிய பான் கார்டுக்கான கட்டணமே இதற்கும் பொருந்தும். அப்படிப் பெறும்போது ஏற்கனவே உள்ள எண்ணே வழங்கப்படும்.

பான்கார்டில் பெயர் மாற்றமோ, பிறந்த தேதி மாற்றமோ, வேறு திருத்தங்களோ செய்ய வேண்டுமெனில் அதற்கான ஆதாரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பான் நம்பர் வைத்திருப்பவர்கள் மீண்டும் மற்றுமொரு பான் நம்பரைப் பெற முடியாது. அப்படி பெறுவதும் / வைத்திருப்பதும் சட்டப்படிக் குற்றமாகும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:
ஆன்லைனில் http://www.myutiitsl.com/PANONLINE/ இத்தளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எப்படி அனுப்புவது என்ற விவரமும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளிட்டு அதை சரிபார்த்து பின் உறுதி செய்து அதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். அதில் கையெழுத்திட்டு அத்துடன் ஒரு புகைப்படத்தையும், தேவையான சான்றுகளையும் இணைத்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
PAN PDC Incharge – Chennai region
UTI Infrastructure Technology And Services Limited
STC Trade Centre, First Floor, A-29,
Thiru- Vi- Ka Industrial Estate, Guindy
CHENNAI – 600032
Tel No:(044) 22500426

உங்கள் விண்ணப்பத்தின் நிலையறிய :http://www.myutiitsl.com/PANONLINE/panTracker.doஇத்தளத்திற்கு சென்று கூப்பன் எண்ணைக் கொடுத்து தெரிந்து கொள்ளலாம். அல்லது PAN என டைப் செய்து சிறிது இடைவெளிவிட்டு 15 இலக்க அக்னாலெட்ஜ்மெண்ட் எண்ணை டைப் செய்து 53030 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

மேலதிக விவரங்களுக்கு:

அருகிலுள்ள பான்கார்டு விண்ணப்பங்களைப் பெறும் மையங்களைத் தொடர்பு கொள்வதற்குhttp://www.myutitsl.co.in/intra/web/search_psa.jspஎன்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பகுதியை அல்லது ஊரை க்ளிக் செய்தால் தொடர்பு முகவரியையும், தொலைபேசி எண்ணையும் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளhttps://www.tin-nsdl.com/ அல்லதுhttp://www.utitsl.co.in/ ஆகிய தளங்களுக்குச் செல்லவும்.

கிரெடிட் கார்டு தொலைந்து போனால்


கிரெடிட் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
********************************************************************நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை
15 வேலை நாட்கள்.

நடைமுறை :
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

பாஸ்போர்ட் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
**************************************************************மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 
20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை: 
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை: 
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

மனைப் பட்டா தொலைந்து போனால் யாரை அணுகுவது?
*****************************************************************வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை: 
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: 
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

டெபிட் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை:
 வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

பங்குச் சந்தை ஆவணம் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
**************************************************************************சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.
எவ்வளவு கட்டணம்? 
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: 
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை: 
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
*************************************************************************மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: 
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை:
 காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

கிரயப் பத்திரம்

தொலைந்து போனால் யாரை அணுகுவது?!
****************************************************************
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? 
ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: 
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: 
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.


இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்தால்



இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்து போனால் யாரை அணுகுவது?
**************************************************************************பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: 
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
 நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

மதிப்பெண் பட்டியல் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
***********************************************************************பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 
கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்? 
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை: 
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை: 
காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

ரேஷன் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
****************************************************************
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது 
ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: 
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை: 
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

பான் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
*************************************************************


பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள்      அல்லது 
வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: 
விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை:
 பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
 —

யாரெல்லாம் வாரிசு?


யாரெல்லாம் வாரிசு?
*****************************

வாரிசுகள் யார் என்பதை தனியாக வேறு தெரிந்து கொள்ள வேண்டுமா? எனக் கேட்பவர்களுக்குத்தான் இந்த கட்டுரை. ஒருவருக்குப் பிறகு அவரது பிள்ளைகள், மனைவி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்கள் வாரிசாக இருக்கலாம்.

இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா? ஆனால் யாரெல்லாம் வாரிசாக முடியாது அல்லது வாரிசு என்பதற்கான சட்ட அனுமதிகள் ஏன் வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால் வாரிசு சான்றிதழின் அவசியம் புரிந்து விடும்.

ஏன் வாரிசுச் சான்றிதழ்  வேண்டும்?
*****************************************
அரசுப் பணியிலிருந்து ஒருவர் இறந்துவிடுகிறார். முன்னுரிமை அடிப்படையில் அந்த வேலைக்கு அவரது மகனோ/ மகளோ வாரிசு என்கிற அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். வங்கி அல்லது நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். இப்போது அந்த சொத்தை வாரிசுகள் பெற வேண்டும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இவருக்கு இவர்தான் வாரிசு என்கிற வாய்மொழி உறுதியின் மூலமோ அல்லது வழக்கமான குடும்ப ஆவணங்களின் மூலமோ மட்டும் உறுதிபடுத்த முடியாது.

சட்டபூர்வமான வாரிசு சான்றிதழ் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தேவைப் படுகிறது. நேரடியாக இன்னாருக்கு இவர்தான் வாரிசு என்று குடும்ப ஆவணங்கள் சொன்னாலும், சில சிக்கலான நிலைமைகளில் சொத்துகளை / உரிமையை அனுபவிப்பதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.

இந்த வாரிசு சான்றிதழ் வட்டாட்சியர் மூலமாக வாங்க வேண்டும். வாரிசு சான்றிதழ் கோருபவருக்கு உள்ள உறவு நிலை, குடும்ப உறுப்பினர்கள், சட்ட சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்ந்து இந்த சான்றிதழை அவர் வழங்குவார்.

ஆனால் வாரிசுச் சான்றிதழ் வாங்குவதற்கு நீதிமன்றம் வரை செல்வதற்கான காரணங்களும் உள்ளன. எந்தெந்த சூழ்நிலைகளில் நீதிமன்றம் மூலம் வாரிசு சான்றிதழ் தேவையாக இருக்கிறது

ஒரு ஆண் இறந்துவிட்டார் அல்லது காணாமல் போனவர் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் என்றால் அவர் மூலமான சொத்துக்கள் மற்றும் பண பலன்களை பெறுவதற்கு சட்டபூர்வமான சான்றிதழ் தேவை. தங்களது சொத்துகள் குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிந்துகொள்ளும் வாரிசுகள் அதன் மீதான உரிமை பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் தேவை

யாரெல்லாம் வாரிசுகள்?
****************************
ஒரு ஆண் இறந்துவிட்டால் அவரது அப்பா, அம்மா, மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் வாரிசுகளாக கருதப்படுவார்கள். இறந்தவரின் இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் இருப்பின் அந்த குழந்தைகளும் வாரிசாக கருதப்படுவர். இந்த வகையில் நேரடி வாரிசுகள் இல்லாதவர்களுக்கு அவர்களது நெருங்கிய ரத்த உறவுமுறை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் வாரிசு உரிமை கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.

இறங்குரிமை சான்றிதழ்
******************************
இறந்தவரின் பெயரிலுள்ள முதலீடுகள், வங்கி சேமிப்பு, மற்றும் பண பலன்களை வங்கி அல்லது சம்பந்தபட்ட நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவு பெறாத வாரிசுகளுக்கு அவற்றை உரிமை மாற்ற தயங்குவார்கள்.

ஒருவருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கும்பட் சத்தில் இவர்களில் யாரேனும் ஒருவரிடம் கொடுக்க முடியாது. அல்லது பிற்காலத்தில் வேறு நபர்கள் உரிமை கோரி வந்தால் என்ன செய்வது என்கிற சந்தேகமும் நிறுவனங்களுக்கு ஏற்படும். இதனால் சம்பந்தப்பட்ட வாரிசுகள் நீதிமன்றத்தை அணுகி சட்டபூர்வ உரிமை வாங்கி வருவது இறங்குரிமை சான்றிதழ் எனப்படுகிறது .


இதனைப் பெறுவதற்கு 20 ரூபாய் பத்திரத்தாளில் இறந்தவருடைய வாரிசுகள் 

அனைவரும் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரிடம் பண 

பலன்களை அல்லது வேலையை கொடுப்பதற்கு தங்களுக்கு எந்தவித 

ஆட்சேபணையும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட்டு 

சம்பந்தப்பட்ட வட்டாட்சி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

நடைமுறை என்ன?
***********************
இறந்தவரின் வாரிசுகள் நேரடியாக வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து வாரிசு சான்றிதழ் வாங்கலாம். இதற்கு சட்டபூர்வமான குடும்ப ஆவணங்களே சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும்.

ஆனால் குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து அவர்களுக்குள் வாரிசு குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிறபோதும், சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்.

குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்கு பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.

குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார். போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றதை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்.


ஃபான் கார்டு பற்றி முழுமையாகத் தெரியுமா?


ஃபான் கார்டு பற்றி முழுமையாகத் தெரியுமா?
***********************************************************

நீங்கள் இந்திய பிரஜையாக இருந்தாலும் சரி அல்லது வெளி நாட்டில் வாழும் இந்தியராக இருந்தாலும் சரி, இந்திய அரசாங்கத்திடம் வரி கட்டினாலோ அல்லது பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தாலோ உங்களிடம் கண்டிப்பாக பான்(PAN) கார்டு இருக்க வேண்டும். (4 reasons why you should not buy gold now)
பான் என்றால் என்ன?
*************************

பான்(PAN) என்பதன் விரிவாக்கம் "பெர்மனெண்ட் அக்கௌன்ட் நம்பர்" (நிரந்தர கணக்கு எண்). இது ஒரு 10 இலக்கு வரிவடிவ எண் குறியீடு. இதனை ஒரு பிளாஸ்டிக் தகடு வடிவத்தில் இந்திய வருமான வரி துறை வழங்குகிறது. ஒவ்வொரு தனி நபர், ஹிந்து கூட்டுக் குடும்பம், நிறுவனம் முதலியவற்றுக்கு ஒரு தனித்தன்மையான எண் வழங்கப்படும். இந்த என்னை பற்றி விரிவாக சிறிது நேரத்தில் பார்ப்போம். பான் என்பது ஒரு நிரந்தரமான எண்ணாகும். உங்கள் முகவரி மாறினாலோ அல்லது நீங்கள் வாழும் மாநிலத்தை மாற்றினாலோ இதில் எந்த பாதிப்பும் இருக்காது. மேலும் ஒருவருக்கு அல்லது ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பான் கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

பான் கார்டு வழங்கும் முக்கிய காரணம்?
**********************************************

உலகளாவிய அடையாளத்தை ஏற்படுத்தவே. இதனை வைத்து வரி, பணப் பரிமாற்றங்கள், கடன்கள், முதலீடுகள், நிலம் வாங்குதல் மற்றும் விற்றல் மற்றும் வரி கட்டுபவரின் இதர செயல்பாடுகளின் பல ஆவணங்கள் மற்றும் தகவல்களை ஒரு மையத்தில் இணைத்து கண்காணிக்கலாம். இதனை கண்காணிப்பதால் இவை மறைமுகமாக வரி ஏய்ப்பை தடுக்கிறது. இந்த எண் அமெரிக்க பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அளிக்கும் சோசியல் செக்யூரிட்டி எண்ணிற்கு நிகரானவையாகும்.
பான் பற்றிய புனைகதை:
*****************************

பான் கார்டு என்பது வரி கட்டும் காரணத்திற்காக மட்டுமே பயன்படுகிறது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. பான்எண்கள் வருமான வரிக்காக தேவைபடுகிறது, ஆனால் அதற்கும் பான் கார்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பான் கார்டின் நகல் பல வணிக பரிமாற்றங்களுக்கு அடையாளத்தை நிரூபிக்க பயன்படுகிறது. உதாரணத்திற்கு புது வங்கி கணக்கு திறக்க, ஒரு சொத்தை அல்லது வண்டியை வாங்கவோ விற்கவோ, வீட்டிற்கு தொலைபேசி இணைப்பு பெற, டீமாட் மற்றும் மியூசுவல் பண்ட் போன்ற முதலீடுகள் செய்ய PAN கார்டின் நகல் தேவைப்படும்.

பான் கார்டிற்கு விண்ணப்பிக்க:
***********************************

பான் கார்டு வேண்டும் என்றால், யார் வேண்டுமானாலும் அதற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு நீங்கள் வேலை பார்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதற்கு வயது, குடியுரிமை என்று எந்த வரம்பும் கிடையாது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மற்றும் பிறந்த குழந்தைக்கு கூட விண்ணப்பிக்கலாம். அவர்களுக்காக அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் கையெழுத்திட வேண்டும்.

புதிய பான்: -
**************

விண்ணப்பதாரர் இதற்கு முன் பான் கார்டிற்கு விண்ணப்பித்ததில்லை என்றாலும், அவருக்கு ஏற்கனவே பான் ஒதுக்கப்படாமல் இருந்தாலும் சரி, அவர் வருமான வரித்துறை (ITD) இணையதளத்திற்கு செல்லலாம். அவர்களுக்கு பான் ஒதுக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதே முதல் படி. - ஒரு வேளை அவருக்கு பான் ஒதுக்கப்படாமல் இருந்தால் கீழ்கண்ட இணையதளத்தில் போய் விண்ணப்பிக்கலாம். அங்கயே உங்கள் விண்ணப்பத்தின் இருப்பு நிலையையும் அறிந்துக் கொள்ளலாம்.
அந்த இணையதளங்கள்:
*****************************

o யூடிய் பான்(UTI) கார்டு விண்ணப்ப படிவம் o என்ஸ்டிஎல்(NSDL) விண்ணப்ப படிவம் -

பான் - நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டுமென்றால் உங்கள் அருகில் இருக்கும் டின்-பான்(TIN-PAN) மையங்கள், என்ஸ்டிஎல் டின்(NSDL-TIN) அல்லது யூடிய் பான்(UTI PAN) விண்ணப்ப மையத்தை அனுகலாம். புதிய பான் கார்டு விண்ணப்பிக்க கீழ்கண்ட பட்டியலில் இருந்து குறைந்தது இரண்டு அடையாள சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும்: - மெட்ரிகுலேஷன் சான்றிதழ் - அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவன பட்டம் - கடன் அட்டை - வங்கி அறிக்கை - ரேஷன் கார்டு - ஓட்டுனர் உரிமம் - வாக்காளர் அடையாள அட்டை -

பாஸ்போர்ட் பான் கார்டின் மறு அச்சடிப்பு: -
***********************************************

உங்களுக்கு பான் எண் ஒதுக்கப்பட்ட பின்பு, பான் கார்டை பெறுவதற்கு விண்ணப்பத்தை உபயோகிக்க வேண்டும். இந்த புது பான் கார்டில் அதே பான் எண் தான் இருக்கும். என்ஸடிஎல்(NDSL) இணையதளத்திற்கு சென்று மறு அச்சடிப்புக்கு விண்ணப்பிக்கலாம். என்ஸடிஎல் மற்றும் யூடிய் இணையதளங்களில் உங்கள் பான் எண்ணை தேடி கண்டுப்பிடிக்கலாம்.

பான் எண்ணுடைய அமைப்பு:
*********************************

பான் எண்களின் புதிய அமைப்பு போனெடிக் சவுண்டெக்ஸ் கோட் நெறிமுறைபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒவ்வொரு எண்ணும் தனித்தன்மையுடன் விளங்கும். இது போனெடிக் பான் (PAN) எண் உருவாக உதவி புரியும்: i. வரி கட்டுபவரின் முழுப்பெயர் ii. பிறந்த தேதி/நிறுவனம் தோன்றிய தேதி iii. ஸ்டேடஸ் iv. தனி நபர் என்றால் பாலினம் v. தனி நபர் என்றால் தந்தையின் பெயர் (திருமணமான பெண்களாக இருந்தாலும் சரி). பான் கார்டு வழங்கப்பட்ட தேதி பான் கார்டில் உங்கள் புகைப்படத்திற்கு வலது பக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
10 இலக்கு வரிவடிவ எண்ணின் வரிசை:
*********************************************

பான் எண்ணின் 10 இலக்கு எண்ணின் வரிசையத்தை பற்றி விலாவரியாக பார்ப்போமா:
 1. முதல் ஐந்து எழுத்துக்கள் முக்கியமானவை. அவை வரிவடிவ எண் அமைப்போடு இருக்கும்.

 2. அவைகளில் முதல் மூன்று எழுத்துக்கள் அகர வரிசைப்படி அமைந்திருக்கும். இந்த வரிசையம் AAA-வில் ஆரம்பித்து ZZZ-ல் முடியும்.
3. நான்காவது எழுத்து விண்ணப்பதாரரை பொறுத்து தீர்மானிக்கப்படும்: C - குழுமம் (கம்பெனி) P - தனி நபர் H - ஹிந்து கூட்டு குடும்பம்(HUF) F - நிறுவனம் A - தனி நபர்களின் இணக்கம் (AOP) T - அறக்கட்டளை B - பாடி ஆப் இண்டிவிஜூவல்ஸ் (BOI) L - லோக்கல் அதாரிட்டி J - செயற்கையான வழக்கு மன்ற நடவடிக்கை சார்ந்த நபர் G - அரசாங்கம் (உதாரணம் - கம்பெனி = AAACA; செயற்கையான வழக்கு மன்ற நடவடிக்கை சார்ந்த நபர் = AAAJA; HUF = AAAHA;) 
4. ஐந்தாவது எழுத்து கீழ்கண்டவைகளின் முதல் எழுத்தாகும்:
 a) தனிநபர் என்றால் உங்கள் குடும்பப் பெயரின் முதல் எழுத்து       அல்லது
 b) மற்ற அனைவருக்கும் தங்களின் நிறுவனம், டிரஸ்ட், குழுமம் போன்றவற்றின் முதல் எழுத்து. (உதாரணத்திற்கு - லிசா சனமொலு [தனிநபர்] = AAAPC4444A; லிசா சனமொலு [HUF] = AAAHL4444A; பொது நிறுவனம் = AAAFG4444A) 

5. அடுத்த நான்கு எழுத்துக்கள் 0001-லிருந்து 9999 வரை செல்லும் வரிசைய எண்கள்.

 6. கடைசி எழுத்து அகர வரிசைச் சார்ந்த சரிபார்ப்பு இலக்கம்

புதிய போனெடிக் பான் (PPAN):
*********************************

புதிய போனெடிக் பான் (PPAN)-ஆல் ஒரே பெயரைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒரு பான்-னிற்கு மேல் ஒதுக்கப்படும் தவறு நடக்காது. பொருந்தும் பான் கார்டு கண்டுபிடிக்கப்பட்டால், பயனாளிக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்படும். இரட்டிப்பான பான் கார்டு அறிக்கை ஒன்றும் வெளியிடப்படும். இந்த நேரத்தில் சரிப்பார்க்கும் அதிகாரி இந்த பான் கார்டு இரட்டிப்பை நிராகரித்தால் தான் புதிய பான் ஒடுக்கப்படும். இந்த புதிய அமைப்பின் படி ஒரு தனித்துவம் பெற்ற பான் எண்ணை வரி கட்டுபவர்கள் 17 கோடி பேருக்கு ஒதுக்கலாம்.

முடிவுரை:
************

உங்கள் பான் கார்டின் முக்கியத்துவத்தை, அந்த கார்டு மற்றும் பான் எண்ணின் தேவைகளை இப்போது புரிந்திருப்பீர்கள்.

உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் சிறிது நேரம் செலவழித்து இன்றே விண்ணப்பம் செய்யவும்.


ரிட் மனு என்றால் என்ன?


ரிட் மனு என்றால் என்ன?
************************************

ஒரு “ரிட்” ட போடு!, 
தன்னால வழிக்கு வருவாய்ங்க!ன்னு சிலர் பேசுறத கேட்டுருப்பீங்க. அப்படீன்னா என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

"WRITTEN ORDER" என்பதைத்தான் ரிட் மனு என்று சொல்கிறோம். 
அதாவது அரசாங்கத்திடம் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்க சொல்லி நாம் தாக்கல் செய்யும் மனுவிற்கு பெயர்தான் ”ரிட்” மனு. இப்ப புரியுதா? சரி, எது எதுக்கெல்லாம் இந்த மனுவை தாக்கல் செய்யலாம்! என்பதை பார்ப்போமா? 

அரசாங்கம் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கல் தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு “ரிட்” மனு தாக்கல் செய்யலாம்.

பொதுநல வழக்குகளை (PUBLIC INTEREST LITIGATION), பொதுநலம் பாதிக்கும் போது வழக்கு தொடரலாம்.

உங்கள் ஏரியாவில், சாலை ரொம்ப மோசமாக இருந்து, அதனை சரிசெய்யச் சொல்லி நீங்கள் அதற்குரிய துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும், அவர்கள் அது சம்பந்தமாக ஏதும், நடவடிக்கை எடுக்கவில்லை! என்றால், அந்தத்துறை அதிகாரிக்கு, அதனை சரி செய்யச்சொல்லி உத்தரவு போட அரசாங்கத்தைக் கேட்கலாம்.

நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் இருக்கின்ற ஒரு தொழிற்சாலையில் இருந்து புகை அல்லது தூசிகள் வந்து, அவை அந்தப்பகுதியின் சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் புகார் செய்யலாம். 
நீங்கள் புகார் அளித்து 60 நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசாங்கத்தை அதற்குரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லி “ரிட்” மனு தாக்கல் செய்யலாம். 

“ரிட்” மனுவை ஐந்து வகைகளில் தாக்கல் செய்யலாம்.


1.Writ of Mandamus நீதிப்பேராணை:
***************************************************

தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாவிட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்டவிரோதமான உத்தரவை பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று “ரிட்” மனு தாக்கல் செய்யலாம். இதற்கு நீதிப்பேராணை என்று பெயர். இதனை பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

2.Certiorari writ செர்ஷயோரரி ரிட் 
***********************************************

ஒரு ஹை கோர்ட் அதிகாரத்தில் உள்ள ஒரு கோர்ட் அல்லது தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள அரசு அதிகாரி சட்ட விரோதமாக ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவோ அல்லது அந்த குறிப்பிட்ட நீதிமன்றத்துக்கோ/ அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக் கோரி கேட்பதுதான் இதன் அடிப்படை. இதனையும் பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

3.Quowarranto Writ கோவாரண்டோ ரிட் மனு
**************************************************************

எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது தகுதி இல்லாமல் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ, அல்லது தனது பதவியுன் அதிகார வரம்பை மீறி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்தாலோ, அதனை எதிர்த்து போடப்படுவது இந்த மனுவாகும். இதனை யார் வேண்டுமானாலும் போடலாம்.

4.Prohibition Writ பிராகிபிஷன் ரிட் மனு
********************************************************

ஒரு நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படும்போது, அதனை தடுக்க போடப்படும் மனு இதுவாகும். இதனையும் பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

5.Hebeas Corpus Writ ஹேபியஸ் கார்பஸ் ரிட் மனு
**********************************************************************

இதற்கு ஆள் கொணர்வு ஆணை என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவரை காணவில்லை என்றாலோ, அல்லது ஒருவரை காவல்துறையினர் தவறாக காவலில் வைத்திருந்தாலோ, அல்லது ஒருவரை யாரோ கடத்தி எங்கோ அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ இந்த ரிட் மனுவை தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரித்து, நீதிமன்றமானது அந்த நபரை நீதிம்ன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிடும்


புகாரை காவல்துறை ஏற்க மறுத்தால்?


புகாரை காவல்துறை ஏற்க மறுத்தால்?

ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, சந்திரனுக்கு பயணம் செய்வதைப் போன்ற சவாலான அம்சம்தான். ஏனெனில் ஒரு குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் நிலவும் மிகக்குறைந்த மனிதவளம் உள்ளிட்ட வசதிக்குறைவுகளை யாரும் மறுக்க முடியாது.

எனவே காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுவதும் உண்மைதான்.

காவல்துறைக்கான பல அத்தியாவசிய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுவதில்லை என்பதும் ஏற்கத்தகுந்த வாதம்தான்.

எனினும், இதற்காக சாமானிய மனிதனை, காவல்துறையினர் புறக்கணிப்பதையும் அங்கீகரிக்க முடியாது. 

நடைமுறையில் காவல்நிலையத்திற்கு வரும் எந்த ஒரு புகாரையும் விசாரணைக்கு ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கான காரணத்தை தேடுவதிலேயே ஒரு காவல்துறையின் அதிகாரியின் மூளை முதன்மையாக செயல்படுகிறது.

சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் தரப்படும் புகாரையோ, செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரையுடன் வருபவர்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படும் முனைப்பு, சாமானிய மக்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படுவதில்லை! என்பதை காவல்துறையினரே ஒப்புக்கொள்வர்.

செல்வாக்கு மிக்கவர்களால் அனுப்பப்படும் புகார்களை புறக்கணித்தால், காவல்துறையினருக்கு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறில்லாத நிலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ஆதாயம் இல்லாத நிலையில் அந்தப் புகார்கள் கவனிக்கப்படுவதில்லை.

இந்தச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழிகாட்டுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அத்தியாயம் 15இல் உள்ள பிரிவு 200 இதுகுறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம். 

இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதல் புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருபவரையும், அவரது சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யலாம்.

இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் நடைமுறையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது.

ஏனென்றால் குற்றவியல் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் ஏராளமான வழக்குகளோடு, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக வழங்கப்படும் புகார்கள் கூடுதல் பணிச்சுமை என்பதால் நீதிமன்றங்கள் இதுமாதிரியான மனுக்களை பரிவுடன் அணுகுவதில்லை.

மேலும் புகாரில் கூறப்படும் குற்றச்செயலை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவரிடமே விடப்படுவதும் உண்டு.

குற்றப்புலனாய்வில் அறிவோ, அனுபவமோ இல்லாத சாமானியர்களிடம் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்ள சிறப்புத் திறமைகள் தேவையில்லை. ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதையும் மறுக்கமுடியாது.

இதற்கு மாற்றாக குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்றத்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது.

ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே.

சில காவல்நிலையங்களில், யார் மீது புகார் கூறப்படுகிறதோ – அவரையே தொடர்பு கொண்டு, அவரிடம் முதல் புகாரைதாரர் மீது வேறுபுகாரை பெற்று அதை முதல் புகாராக பதிவு செய்வதும் வழக்கத்தில் உள்ளது.

இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்குரைஞர் உதவியுடன் புகார்களை அளிப்பது நல்லது.

இந்தப்புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம்.

இதன் மூலம் காவல்துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தத்தை அளிக்கலாம். குறிப்பிட்ட புகார் சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல் குறித்ததாக இருந்தால், அந்தப் புகார் குறித்து அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர்களை தொடர்பு செய்தி வெளிவரச்செய்வதும், அந்தப் புகார் மீது விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும்.

இவ்வாறு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்காது, அந்தப்புகாரை உரிய முறையில் விசாரிக்காமல் தள்ளிவிட முயற்சிக்கும் அதிகாரிகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. இத்தகைய சூழ்நிலையில், புகார்தாரர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் சட்டம் வழிகாட்டுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறிஞருக்கு துணையாக, அரசு வழக்கறிஞர் அல்லாத ஒரு வழக்கறிஞர் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கிறது.
குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு ஆவணங்களையும் புகார்தாரர் பெறமுடியும். இதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் வழி வகுக்கிறது. இதன் மூலம் ஆவணங்களைப் பெறும் புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றாதாரங்கள் ஆய்வு முடிந்தபின்னர், அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகுவது நல்லது.

இந்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையிலும், காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது வழக்கின் போக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளிப்பதாக நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும்கூட புகார்தாரர் அதில் தலையிடலாம். காவல்துறை நியாயமாக நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால், அந்த வழக்கின் விசாரணையேயோ, வழக்கையோ உள்ளூர் காவல்துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுக சட்டம் இடம் அளிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தினஅ அடிப்படையில் இத்தகைய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.

அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறைக்கோ அல்லது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்புக்கோ மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு புகார் மீதான விசாரணையோ, வழக்கோ வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்படும்போது, புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரிகளை அணுகி, தங்கள் ஐயப்பாடுகளை எடுத்துரைக்க முடியும்.

இவை அனைத்திற்கும் தேவை, புகார் அளிக்கும் நிலையிலும் அதைத் தொடர்ந்த நிலையிலும் குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்குரைஞரின் உதவியே!

ஒரு புகார் காவல்துறையின் கவனத்தை கவர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அடுத்த நடவடிக்கை கைது செய்வதாகவே அமையும்.

மிகச்சில நேரங்களில் குற்றவாளிகளும், மிகப்பல நேரங்களில் குற்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர்களும் கைது செய்யப்படுவர். சில அரிதான நேரங்களில் நாம் மேலே பார்த்ததுபோல புகார் தரும் நபர் மீதே வேறு புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நடவடிக்கையாக “கைது” இருக்கிறது.

லீகல் நோட்டீஸ் - ஒரு விளக்கம்


லீகல் நோட்டீஸ் - ஒரு விளக்கம்
*************************************************

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்றாலே, அது வக்கீல் மூல மாக அனுப்பப்படும் நோட்டீஸ் என்றே நாம் நினைக்கிறோம். அது தவறு. அதாவது எதிர் தரப்பினர் மீது, அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கை பற்றிய அறிவிப்பு கடிதம் தான் அது. அதை நாமே அனுப்பலாம். நமக்கு அது பற்றிய விபரம் தெரியாத பட்சத்தில், வழக்கறிஞர் மூலமாக அனுப்பவேண்டும்.

நமது நாட்டு சட்டப்படி, வழ்க்கு தொடுப்பவர் ( Petitioner / Complainant) மற்றும் எதிர் தரப்பினர் ( Opposite Party ) -தான் வழக்கு நடவடிக்கையில் நேரடியாக ப்ங்கேற்க வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. இதில் வழ்க்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பினருக்கோ போதுமான சட்ட அறிவு இல்லாத நிலையில் வழ்க்கறிஞர் மூலமாக செய்ய வேண்டும்.

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்பது நாம் அனுப்பும் நோட்டீஸ் மற்றும் வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் , இவை இரண்டையுமே குறிப்பிடும் சொல்லாகும். வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் அட்வகேட் நோட்டீஸ் ஆகும்.

லீகல் நோட்டீஸ் தயாரிப்பது எப்படி?

******************************************************
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு குளிர்சாதனப்பெட்டி வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அத்ற்கு ஒரு வருட உத்திரவாதம் உற்பத்தியாளரால் வழ்ங்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். வாங்கிய ஒரு சில நாட்களி லேயே அது பழுதடைந்து விடுகிறது. 

நீங்கள் எந்த கடைக்காரரிடம் வாங்கினீர்களோ, அவரிடம் புகார் செய்கிறீர்கள். அவர் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் டீலராக இருந்தால் அவரே பழுது பார்த்து கொடுப்பார். அப்படி இல்லை என்றால் கம்பெனியின் சர்வீஸ் செண்டர் முகவரியை தருவார். அங்கு புகார் செய்கிறீர்கள். அவர்கள் பழுது பார்த்து த்ருகிறார்கள். மறுபடியும் குறுகிய காலத்தில் பழுது ஏற்படுகிறது. மீண்டும் பழுது பார்க்கப்படுகிறது. பழுதடைவது தொடர்கிறது .

இதனால், உங்களால் தொடர்ச்சியாக மிஷினை பயன்படுத்தாத நிலை. இந்நிலை யில், உங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பொருள் தரம் குறைந்தது அல்லது உற்பத்தியில் குறைபாடுள்ள பொருள் (Manufacturing Defect) என கருதுகிறீர்கள். அதனால் அந்த மிஷினுக்கு பதில் வேறு மிஷின் தருமாறு கேட்கிறீர்கள். கம்பெனிக்கரர்கள் அவ்விதம் செய்ய மறுக்கிறார்கள்.

அதனால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர போகிறீர்கள். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

இந்த விஷயத்தில், விற்பனையாளரை பொறுத்த வரையில் அவர் மீது எவ்வித தவறும் கிடையாது. எனவே வழக்கில் அவரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சேர்த்தாலும் தவறு கிடையாது.
லீகல் நோட்டீஸ்
**********************************

BY REGISTERD POST WITH A/D, OR BY FAX OR E-MAIL

அனுப்புநர்: 
செல்வம் பழனிச்சாமி,
11A, 1 வது மெயின் ரோடு,
கிருஷ்ணா நகர்
சென்னை -600 095

பெறுநர்:
LG Electronics Pvt Ltd,
AA11, 2nd avenue,
Fatima Tower,
Anna Nagar West,
Chennai - 600 040.

சட்ட பூர்வ அறிவிப்பு.

********************************

தங்கள் நிறுவன தயாரிப்பாகிய LG FAWM -9987 மாடல் குளிர் சாதனப்பெட்டி ஒன்றை M/s.Mohan Traders , 2nd Main Road, Besant Nagar West, Chennai - என்ற் டீலரிடம்13-06-2014 ல் வாங்கியுள்ளேன். பில் நம்ம்பர். 5678 /13-06-2014. மேற்படி மிஷின் இரண்டு மாத காலத்தில் மூன்று முறை பழுது ஏற்பட்டு, தங்கள் சர்வீஸ் சென்டரால் சரி செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. 15-08-2014 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 4670
2. 25 -10-2014 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 9738
3. 27-11-2014 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 2510

இதனால் என்னால் தொடர்ந்து உபயோகிக்க இயலவில்லை. இவ்விதம் அடிக்கடி பழுது ஏற்பட காரணம், எனக்கு விற்பனை செய்யப்பட்ட மெஷின் உற்பத்தி குறை பாடான ஒன்றாகும். எனவே உடனடியாக மேற்படி மெஷினுக்கு பதில், வேறு ஒரு மெஷின் மாற்றித்தரும்படி தங்களிடம் கூறியதற்கு மறுத்து விட்டீர்கள்.

எனவே, மேற்படி மெஷினை மாற்றி தர வேண்டும் என,தங்கள் நிறுவன்த்தின் மீது மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் , இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும். அவ்விதம் தெரியப் படுத்தாத பட்சத்தில், மேற்படி குற்றசாட்டை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் பிரசணையை சுமுகமாக தீர்க்க விரும்ப வில்லை எனவும் முடிவு செய்து, முறைப்படி வழக்கு தாக்கல் செய்யப்படும்! என்ற விபரம் இதன் மூலம் தங்களுக்கு தெரியப்படுத்தப் படுகிறது.

இப்படிக்கு


செல்வம்பழனிச்சாமி


வாரன்ட் இன்றி போலிஸ் எப்போது கைது செய்யலாம்?


வாரன்ட் இன்றி போலிஸ் எப்போது கைது செய்யலாம்?
***********************************************************************


வாரான்ட் என்கிற வார்த்தை நம் எல்லாருமே எப்போதோ ஒரு முறை உச்சரித்திருப்போம். " அந்த கேசில் அவர் மேலே வாரன்ட் குடுத்தாச்சாம். அரெஸ்ட் பண்ண போறாங்களாம்" என பேசி கொள்வோம். 



ஒரு நபரை வாரன்ட் இருந்தால் மட்டும் தான் அரஸ்ட் பண்ண முடியுமா? வாரன்ட் இல்லாமல் எப்போது அரஸ்ட் பண்ணலாம்; இப்பதிவின் மூலம் அறிவோம்.

முதலில் வாரன்ட் என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தகவல்கள் : 

கைதுக்கான வாரன்ட் (பிடிப்பாணை)
******************************************************

1. எழுதப்பட்டிருக்க வேண்டும் 

2. நீதிமன்றத்தின் தலைமை அலுவலர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும் 

3. நீதிமன்றத்தின் முத்திரை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்

4. குற்றவாளியின் பெயர், முகவரி, அவர் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன என்பதும் குறிப்பிட பட்டிருக்க வேண்டும்.  

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாமலிருந்தால் கூட வாரன்ட் சரியான ஒன்றல்ல. அத்தகைய வாரன்ட் மூலம் செய்யப்படும் கைது சட்ட விரோதமாகும். 

வாரன்ட் (பிடிப்பாணை) இன்றி கைது 
****************************************************

ஒரு நபர் கைது செய்வதற்குரிய குற்றம் செய்ததாக சந்தேகம் இருந்தால் அவரை வாரன்ட் இன்றி கைது செய்ய காவல் துறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. பிற குற்றங்களில் நீதிபதியிடமிருந்து வாரன்ட் பெறாமல் ஒரு நபரை கைது செய்ய முடியாது. 

Criminal Procedure Code-ல் எந்தெந்த குற்றங்கள் வாரன்ட் இன்றி கைது செய்ய முடியும், எவை வாரன்ட் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும் என்ற விபரங்கள் உள்ளன. 

கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி திருட்டு போன்ற குற்றங்கள் வாரன்ட் இன்றி கைது செய்ய கூடிய குற்றங்களாகும். 

வாரன்ட் இன்றி ஒரு நபரை எப்போது கைது செய்யலாம்?:
**********************************************************************************
1. அவர் நேரடியே வாரன்ட் இன்றி கைது செய்ய கூடிய அளவு குற்றம் புரிகிறார் அல்லது அதில் சம்பந்த பட்டுள்ளார் என்கிற சந்தேகம் இருந்தால் 

2. வீட்டை உடைப்பதற்கான (House breaking) சாதனங்கள் வைத்திருந்தால் 

3. களவு போன பொருட்களை வைத்திருந்தால் 

4. அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக (Declared offenders) இருந்தால் 

5. பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரியை தடுத்தால் 

6. சட்ட பூர்வ காவலில் இருந்து தப்பி ஓடினால் 

7. ராணுவன், கடற்படை, விமானபடையிலிருந்து பணியை விட்டு ஓடி வந்தவராக இருந்தால் 

8. விடுவிக்கப்பட்ட குற்றவாளி நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறியிருந்தால் 

9. கைது செய்யகூடிய குற்றம் புரிய அவர் சில வேலைகளை தயார் செய்கிறார் என சந்தேகம் இருந்தால் 

10. வாடிக்கையான குற்றவாளியாக இருந்தால் ( Habitual Offender) 

11. வாரன்ட் இல்லாமல் கைது செய்ய முடியாத சிறிய குற்றம் ஒன்றை புரிந்தவர் - காவல் துறை அதிகாரியிடம் தன பெயர், முகவரியை தர மறுத்தால் அல்லது தவறான பெயர், முகவரி தந்தால், அவரை வாரன்ட் இன்றி கைது செய்யலாம்.


வாகனங்களை வாங்குபவர்/விற்பவர்


வாகனங்களை வாங்குபவர்/விற்பவர் என்ன செய்ய வேண்டும்?
**************************************************************************

ஒரு வீட்டையோ, காலி மனையையோ விற்பவர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாங்குபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, விற்பனை செய்ததற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது. 

ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய கார், பைக் மற்றும் இதர வாகனங்களை விற்கும்போதும் வாங்கும்போதும் நாம் பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை. அதே சமயம், அந்த விற்பனை பற்றி மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது இருவருடைய கடமை ஆகிறது.

ஒருவர் தனது காரை பதிவு செய்யப்பட்ட அதே மாநிலத்துக்குள் இருப்பவருக்கு விற்பனை செய்திருந்தால், 14 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட்ட நபரின் பெயர் மற்றும் முழு விலாசத்தையும் படிவம் 29&ல் பூர்த்தி செய்து, மோட்டார் வாகனப் பதிவு அலுவலகங்களுக்கு அக்னாலெட்ஜ்மென்ட் அட்டையுடன் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அதன் நகலை நம்மிடமிருந்து வாகனத்தை வாங்கியவருக்கும் அனுப்ப வேண்டும். இது விற்பனை செய்பவரின் கடமை.

ஒரு வேளை நாம் வெளி மாநிலத்தில் இருப்பவருக்கு வாகனத்தை விற்பனை செய்து இருந்தால், விற்பனை செய்த 45 நாட்களுக்குள் எந்தப் பதிவு அலுவலக எல்லைக்குள் வாகனத்தை வாங்கியவர் இருக்கிறாரோ, அந்த அலுவலகத்துக்கு நாம் தகவல் தரவேண்டும். அப்படி வெளி மாநிலத்தில் விற்பனை செய்யும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ‘தடை இல்லாச் சான்று’ (No objection Certificate) அல்லது தடையில்லா சான்றுக்கு மனு செய்து 30 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை வைத்து அனுப்ப வேண்டும்.

வாகனத்தை வாங்கியவர், அவர் குடியிருக்கும் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில், எங்கு அந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறாரோ அந்த மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்தில் பதிவுப் புத்தகம், இன்ஷ¨ரன்ஸ் அதற்குரிய கட்டணம் ஆகியவற்றுடன் வெளி மாநிலமாக இருப்பின், தடையில்லா சான்று அல்லது அந்தச் சான்றுக்கு மனு செய்து 30 நாட்களுக்குள் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்-களுடன் மனு செய்து, ஆர்.சி. புத்தகத்தை தங்கள் பெயருக்கு 30 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இப்படி வாங்குபவரோ, விற்பவரோ தங்கள் கடமைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யாவிட்டால், மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் செலுத்தக் கடமைப்பட்டவராவர். வாகனத்தை வாங்கியவர் பெயர் மாற்றம் செய்யாமல், பழைய உரிமையாளரின் பெயரிலேயே வாகனத்தை ஓட்டி ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதற்கு இன்ஷ¨ரன்ஸ் இருந்தாலும் இழப்பீடு தொகை பெற முடியாது.

புதிய உரிமையாளரின் பெயர் ஆர்.சி.புத்தகத்தில் மாற்றப்பட்டதும் அதன் நகலை இன்ஷ¨ரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, ஏற்கெனவே பழைய உரிமையாளர் பெயரில் உள்ள இன்ஷ¨ரன்ஸ் பாலிசியையும் குறிப்பிட்ட கட்டணம் (டிரான்ஸ்ஃபர் பீஸ்) செலுத்தி அவர் பெயருக்கு மாற்றிவிட்டால் சட்டப்படி எந்தச் சிக்கலும் வராது! ஒருமுறை பதிவு செய்த வாகனத்தை மறுபதிவு செய்யமுடியுமா?

ஒருமுறை வாகனத்தைப் பதிவுசெய்துவிட்டால், மீண்டும் பதிவுசெய்து புதிய எண் பெற முடியாது. அந்த வாகனத்தின் பதிவுக் காலம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மட்டும்தான் முடியும். எத்தனை உரிமையாளர்கள் மாறினாலும் மறு பதிவு செய்ய முடியாது. அந்த வாகனம் முழுவதும் பயன்படுத்த முடியாத காலம் வரையிலும் அதற்கு ஒரே பதிவு எண்தான். உரிமையாளரின் பெயர், விலாசம் மாறலாம். இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு எந்த மூலைக்குச் சென்றாலும் நமக்கு அதே பதிவு எண்தான். ஆனால், நாம் ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலத்தில் 12 மாதங்கள் வரைதான் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பழைய பதிவு எண்ணுடன் பயன்படுத்த முடியாது. அப்படிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். நாம் சென்னையில் பதிவு செய்த வாகனத்தில் பெங்களூர் சென்று 12 மாதங்களுக்கு மேல் அங்கு பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்தும்போது கர்நாடகப் பதிவு " ரீ&ரெஜிஸ்ட்ரேஷன் " கட்டாயம் செய்ய வேண்டும்!

பதிவை மறுக்க முடியுமா?
******************************

ஒரு வாகனம் திருடப்பட்டது என்று சந்தேகிக்கக் காரணம் இருந்தாலும், வாகனம் சாலையில் ஓடும்போது இயந்திரக் கோளாறு காரணமாக பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு இருந்தாலும், மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரைமுறைகளுக்குள் அந்த வாகனத்தின் தன்மை, அமைப்பு போன்றவை இல்லை என்றாலும், பதிவுக்கு வரும்போது தேவையான அனைத்து விவரங்களையும் மனுதாரர் தரவில்லை என்றாலும், தவறான தகவல்களை மனுதாரர் கொடுத்திருந்தாலும், வேறு மாநில வாகனம் என்றால் அதன் முந்தைய பதிவு எண் விவரங்கள், சான்றுகள் ஆகியவற்றை தரவில்லை என்றாலும் பதிவு செய்யும் அதிகாரி எழுத்துப்பூர்வமாக, உத்தரவில் காரணங்கள் குறிப்பிட்டு பதிவு செய்ய மறுக்கலாம். இதன் ஒரு நகலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும்!

ஒரு வேளை, வாகன உரிமையாளர் இறந்துவிட்டால்?
************************************************************

ஒரு வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், அதனைப் பயன்படுத்தப்போகும் வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு 30 நாட்களுக்குள் உரிமையாளர் இறந்துபோனது பற்றியும், அதை தான் பயன்படுத்தப் போவதையும் தகவல் கொடுத்துவிட்டு, இறந்து போனவரின் பெயரிலேயே மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து உபயோகப்படுத்தலாம்.

இந்தக் காலகட்டத்துக்குள் ஆர்.சி.புத்தகம், இன்ஷ¨ரன்ஸ், உரிமையாளரின் இறப்புச் சான்று மற்றும் அதற்குரிய கட்டணம் செலுத்தி, படிவம் 31&ல் இறந்துபோனவரைப் பற்றிய முழு விவரங்களையும், தற்போது பயன்படுத்துபவர் பெயர், விலாசம், உறவுமுறை ஆகியவற்றையும் குறிப்பிட்டு, இறந்துபோனவரின் வாரிசுதாரர் என்பதற்கான சான்றுகளுடன் மனு செய்து, தங்கள் பெயருக்கு பதிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.