disalbe Right click

Friday, April 10, 2015

தொழில் உரிமம் வாங்க

தொழில் உரிமம் வாங்க என்ன செய்ய வேண்டும்?
அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் கண்டிப்பாக வாங்க வேண்டும்.
ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதியையும் வாங்க வேண்டும் என்கிறது சட்டம். இதைத்தான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என்கிறோம். 
உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போதுதான் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும். தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இதுதான் வகை செய்கிறது.

அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.

தொழில் உரிமம் யாருக்குத் தேவை?
ஒரு தொழிலை தொடங்குவதற்கு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கியிருந்தாலும், மாநகர, நகர பகுதியில் தொடங்குபவர்களுக்கு இந்த அனுமதி வேண்டும்.
குறிப்பாக தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், பதப்படுத்தும் நிறுவனங்கள், தீப்பெட்டி தயாரிப்பு, அச்சகம், வெல்டிங் பட்டறைகள், பெட்ரோல் பங்க் போன்றவை பிற அரசு துறைகள் மூலம் அனுமதிகள் வாங்கியிருந்தாலும் நகராட்சி அனுமதியும் வாங்க வேண்டும்.
தவிர உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள், பால் மற்றும் இறைச்சி விற்பனை யாளர்கள், பள்ளி, கல்லூரி உணவு விடுதிகள், சமையல் ஒப்பந்தக்காரர்கள் திருமண மண்டபம், ஓட்டல், மளிகை கடைகள், தேநீர் கடைகள், குளிர்பான கடைகள், மொத்தம் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்களும் இந்த அனுமதி வாங்க வேண்டும்.
அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களில் தொழில் நடத்துபவர்கள் என்றும், உணவு பொருள் தயாரிப்பு மற்றும் சாப்பிடும் நிலை வரை உள்ள அனைத்து உணவு வணிகர்கள் என்றும், மின்சக்தி மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தி தொழில் செய்பவர்கள் என்றும் பல வகைகளில் இந்த தொழில்களை எல்லாம் வகைப்படுத்துகிறது சட்டம்.

உரிமம் பெறுவது எவ்வாறு?
விண்ணப்பதாரர் தனது பெயர் மற்றும் தொழில் விவரம், தொழில் நடத்தப்பட உள்ள இடத்தின் முகவரி போன்ற விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ரூ.20க்கான முத்திரைத் தாளில் தொழில் உரிமத்திற்கான திட்டங்களைப் பின்பற்றுவேன்! என்பதற்கான உறுதி மொழி பத்திரம் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் தொழில் உரிமம் கிடைக்கும். இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் உரிமம் புதுப்பிக்கப் படவில்லையென்றால் புது உரிமம் எடுக்க வேண்டும்.

ஏன் வாங்க வேண்டும்?
இது போன்ற அனுமதிகளை நகராட்சிகள் மூலம் வாங்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் தொழிற்சாலைகள் அமைத்தால் அது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதால்தான். என்ன தொழில் எந்தப் பகுதியில் தொடங்க உள்ளனர்? என்பதை அறிந்து அதற்கேற்ப அனுமதி நகராட்சியால் வழங்கப்படும். இதற்கு எழுத்து பூர்வமாக ஆவணங்களின் அடிப்படையில், தொழில் தொடங்குபவர் விண்ணப்பிக்க வேண்டும்.

நடைமுறைகள் என்ன?
தொழில் அமைய உள்ள கட்டடத்தின் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் அல்லது மண்டல செயற்பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட கட்டடச் சான்றிதழ், அந்த கட்டிடத்தின் உரிமையாளரிடம் பெற்ற ஆட்சேபணையில்லா சான்றிதழ், நடப்பு ஆண்டு வருமான வரியின் நகல், தொழில் வரியின் நகல், மாவட்ட தீயணைப்புத்துறை  அதிகாரியின் ஆட்சேபனையில்லா சான்றிதழ், தொழிற்சாலை ஆய்வாளர்களிடமிருந்து பெற்ற சான்றிதழ், அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் என சட்டம் பல  நடைமுறைகளை இதற்காக வைத்துள்ளது.
தங்கும் விடுதிகள் மற்றும் உணவகம் என்றால் குடிநீர் வாய்ப்புகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் என்றால் பணியிடம், கட்டிடம், அதற்கான இதர அனுமதிகள், எத்தனை பணியாளர்கள் பணிபுரிய உள்ளனர்? என்கிற விவரங்கள் கொடுக்க வேண்டும். தவிர குறிப்பிட்ட தொழிற்சாலையை தொடங்குவதற்கான திட்ட வரைபடம் போன்றவைகளை அத்துடன்  இணைக்க வேண்டும்.
அந்த இடத்தின் காற்றோட்ட வசதி, தீ தடுப்பு வசதிகள், அறைகள், கட்டிட உயரம் போன்றவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தொழிற்சாலை ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டவர்களின் நேரடி ஆய்வுக் குறிப்பின்பேரில் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் பட்சத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் சட்டத்துக்குட்பட்ட தொழில்கள் என்கிற அடையாளமும் பாதுகாப்பும் தொழில் முனைவோருக்குக் கிடைக்கிறது.
இந்த தொழில் உரிமத்தினை  பெறவில்லை என்றாலோ அல்லது புதுப்பிக்கவில்லை என்றாலோ தொழிலை முடக்கி வைக்கவும் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 19.01.2015

குற்றப்பத்திரிக்கை

குற்றப்பத்திரிக்கை என்றால் என்ன?
ஒரு சட்டத்தை அமலாக்கம் செய்யும் பிரிவு, (உதாரணமாக, காவல்துறை ) குற்றம் செய்தவர்களை பற்றி தயாரிக்கும் ஒரு ஆவணம். 
இது நீதிமன்றத்தில் சமர்பிக்கபடுகிறது. நீதிமன்றத்தில் இது சமர்பிக்கபட்டவுடன், யார் குற்றம் இழைத்தார்கள் என்று நீதிமன்றம் கருதுகிறதோ, அவர்கள் மேல், வழக்கை தொடர்ந்து நடத்த, உத்தரவிடும்.

முதல் தகவல் அறிக்கையின் (F.I.R) தொடர்ச்சியே, (CHARGE SHEET) குற்ற பத்திரிக்கை ஆகும். 
குற்ற பத்திரிக்கையில், முதல் தகவல் அறிக்கையில் உள்ள நபர்களை சேர்க்காமலும் விடலாம். ஆனால், சேர்க்காமல் விட்ட,  காரணத்தை போலீஸ்  சொல்ல வேண்டும்.
புகார் மனுதாருக்கு, காவல் துறை சரியாக விசாரிக்காமல், விட்டு விட்டதாக எண்ணம் இருந்தால், மீண்டும் விசாரிக்க சொல்லி, அதே வழக்கில், அதே நீதிமன்றத்தில் மனு செய்யலாம். அல்லது உயர்நீதிமன்றத்தில் மனு செய்யலாம்.
குற்றப்பத்திரிக்கையில் என்ன இருக்கும்?
குற்ற பத்திரிக்கையில் புகார் மனுதார், மற்றும் நடந்த சம்பவத்தை விவரிக்கும் சாட்சிகள் ஆகியோரின் வாக்கு மூலங்கள் இருக்கும். விசாரணை அதிகாரி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த அதிகாரி அனைவரது வாக்கு மூலங்களும் இருக்கும்.
புகார் மனு, முதல் தகவல் அறிக்கை, குற்ற பத்திரிக்கை ஆகியவற்றில் உள்ள முரண்களை வைத்தே, குற்றவாளிகள் விடுதலை ஆகிறார்கள்.
குற்றப்பத்திரிக்கை எத்தனை நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்?
முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து, அறுபது நாட்கள் முதல் தொண்ணூறு நாட்களுக்குள், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தொண்ணூறு நாட்களுக்குள், குற்ற பத்திரிக்கை 
தாக்கல் செய்யத் தவறினால்

அப்படி செய்ய தவறினால், பிணை கிடைக்காத குற்றவாளிக்குக்கூட பிணை கிடைக்க கூடும். 
உரிய காலத்தில் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், புகார் மனுதார், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ, உயர் நீதிமன்றத்திலோ, வழக்கு தொடுத்து, குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்ய சொல்லலாம்.

நீங்கள் கைதானால் உடனடியாக விடுதலை பெற


நீங்கள் கைதானால் உடனடியாக விடுதலை பெற...?
****************************************************************
பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி (BAIL BOND) எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71).
சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி (BAIL BOND) எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம்   நீங்கள் கேட்கலாம்.
ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல், பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436). 

உடனடியாக உங்களை பிணையில் விடுவிக்காவிட்டால், உங்களது வழக்கறிஞருக்கோ, நண்பர் அல்லது உறவினருக்கோ தொலைபேசியில் தகவல் கூற உங்களுக்கு உரிமை உண்டு. 


உங்களது வழக்கறிஞரிடம் பிணையாளிகளாக வரக்கூடிய நபர்களின் பெயர், முகவரிகளைத் தரவும், உங்களுக்கு வழக்கறிஞர் இல்லாவிட்டால், நண்பர் அல்லது உறவினருக்கு கீழ்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.
நீங்கள் ஆஜராகப் போகும் குற்றவியல் நீதிமன்றம்.
நீதிமன்றம் துவங்கும் நேரம்.
உங்களுக்காக பிணையாளிகளாக வரத்தயாராக உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரச்செய்வது.
முடிந்தால், ஒரு வழக்கறிஞரை தொடர்புக் கொள்ளச் சொல்வது.
நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்பாக, இத்தகையவற்றைக் கவனித்துக் கொண்டால், தேவையில்லாமல் காவலில் வைக்கப்படுவதிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.

குற்றவியல் நீதித்துறை நடுவரால் பிணையில் விடுவிக்கப்படல்:


பிணையில் விடுவிக்கப்பட முடியாத குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் குற்றம் புரிந்திருக்கக் கூடும் என்பதற்கு நியாயமான காரணங்களிருந்தால் காவல்துறை அதிகாரி அவரை பிணையில் விடுவிக்க மறுத்துவிடலாம். அவ்வாறான நிலைமையில், பிணையில் விடுவிக்கும் படி நீதிமன்றத்தில் எழுத்து மூலமான மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களாக இருந்தாலன்றி, நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும். அவ்வாறான குற்றங்களுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதி மன்றம் மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.

பிணையில் விடுவிப்பதை எதிர்த்து காவல் துறையினர் கூறும் பொதுவான காரணங்கள்:

குற்றவாளி, விசாரணையின் போது ஆஜராகமாட்டார்.
சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, மேலும் குற்றம் புரிவார்.
காவல்துறையினரின் புலன் விசாரணை முடியவில்லை.
மேலும் குற்றச்சாட்டுகள் தொடர வேண்டியுள்ளது.
களவு போன பொருட்கள் கைப்பற்றப்படவில்லை.
சக குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.
குற்றம் புரிவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப் படவில்லை.
பொதுவாக, குற்றவாளியை காவலில் வைக்கும்படி, காவல் துறையினர் மனுச் செய்வார்கள். அத்தகைய மனுவில், குற்றவாளியை மேலும் காவலில் வைக்க வேண்டியதற்கான காரணங்களை அவர்கள் அளித்திருப்பார்கள். கூடுமான அளவிற்கு, காவல் துறையினர் கூறும் காரணங்களை மறுத்துரைக்க வேண்டும்.

பிணையில் விடுவிக்க மனு:
*****************************************

குற்றவாளியால் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள முடியுமென்றால், அவர் நீதிபதியின் முன்பாக குற்றவாளிக்காக மனுக் கொடுத்து ஆஜராகலாம்.
வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள இயலாதென்றால், குற்றவாளியே நீதிபதிக்கு மனுச் செய்து கொள்ளலாம். இதற்காக சிறை அலுவலரிடமிருந்து மனுவைப்பெற்று, பூர்த்தி செய்து, நீதிபதியைத் திருப்திப்படுத்தும் வகையில், தான் பிணையில் விடுவிக்கப்பட வேண்டியதற்கு தகுந்த காரணங்களைக் கூற வேண்டும்.


அம்மனுவில், தாம் விடுவிக்கப்படுவதற்காக, 

கீழ்க்கண்ட சிறப்பு காரணங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
பிணையில் விடுவிக்கப்படாவிட்டால் வெளியேற்றபட நேரிடுமா?
பணியை இழக்க நேரிடுமா?
பிணையில் விடுவிக்க மறுக்கப்பட்டால், தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு எத்தகைய துன்பம் ஏற்படும்?
காவலில் வைத்திருப்பதால் நலிவுற்ற உடல் நிலையும், சிகிச்சையும் எவ்வாறு பாதிக்கப்படும்?

குற்றவியல் நீதித் துறை நடுவர் பிணையில் விடுவிக்க மறுத்தல்:

*********************************************************************************************
பிணையில் விடுவிக்க மறுத்தால், குற்றவியல் நீதித் துறை நடுவர், அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும். உயர்நீதி மன்றங்களில் மேல் முறையீடு செய்வதற்கு அத்தகைய பதிவுக் குறிப்பு அவசியமாகும்.

மேல் முறையீடு:
************************

ஒரு வேளை பிணையில் விடுவிக்கக் கோரும் மனுவானது குற்றவியல் நீதித்துறை நடுவரால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டால், குற்றவாளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். 

பிணையில் விடுவிப்பதற்கு மறுப்பு அல்லது நீதிமன்றத்தில் ஆட்சேபணை தெரிவிக்கப்படவில்லை என்பதையும் பிணை விடுவிப்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஒருவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டால், மறுபடியும்  மனுச் செய்து முயற்சிக்கலாம்.

பிணையில் விடுவிப்பதற்கான நிபந்தனைகள்:
*******************************************************************

குற்றவியல் நீதித்துறை நடுவர்,
நிபந்தனை எதுவும் இல்லாமல்
சிறப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு
பிணையாளிகளுடன் அல்லது பிணையாளிகளின்றி பிணை முறி எழுதிக் கொடுத்தால் பிணையில் விடுவிக்கலாம்.
சிறப்பு நிபந்தனைகளில், குறிப்பிட்ட நேரங்களில் காவல் நிலையத்தில் குற்றவாளி ஆஜராக வேண்டும் அல்லது அவரது பாஸ் போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்று கூறப்பட்டிருக்கும். குற்றவியல் நீதித்துறை நடுவரால் விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற நிபந்தனைகள் நீதிமன்றத்தில் ஆட்சேபிக்கலாம். நிபந்தனைகளை மாற்ற நீதிமன்றம் மறுத்தால், குற்றவாளி அதை மறுத்துவிடலாம். ஆனால். அவ்வாறான நிலைமையில், மேல் முறையீடு விசாரிக்கப்பட்டு. அவருக்குச் சாதகமான முடிவு செய்யப்படும் வரையில் அவர் விடுதலை செய்யப்படமாட்டார்.

பிணை முறிவும், பிணையாளிகளும்:
******************************************************

பிணையாளிகளுடனோ அல்லது பிணையாளிகள் இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை விடுவிக்கலாம்.
குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜராவதற்கு, குறிப்பிட்ட தொகையைப் பிணையாக உத்திரவாதம் அளிக்கும் நபர்களே பிணையாளிகள் ஆவர்.
பிணையாளிகளாக உள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். கேட்கப்பட்டால் பிணையாளியாக இருக்கத் தயார் என்பதையும் போதிய நிதிவசதி உண்டு என்பதையும் பிரமாணத்தின்பேரில் நீதி மன்றத்திற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
அவர்களுக்குப் பிணை அளிப்பதற்குப் போதிய நிதிவசதி உள்ளது என்பதோடு வேறு வகையிலும் பிணையாளிகளாக இருக்கத் தகுதியுடையவர்கள் என்பதை எடுத்துக்காட்டி, நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யலாம்.
எந்தவிதக் காரணமும் கூறாமல். பிணையாளியை ஏற்க மறுத்துவிடக் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் உண்டு. பிணையாளிகள் நீதிமன்றத்தில் இல்லாவிட்டால், காவல் துறையினர் அவர்களை விசாரித்து, ஏற்றுக் கொள்ளத்தக்கவர்கள் எனத் தீர்மானிக்கும் வரை, கைது செய்யப்பட்ட நபர் காவலில் வைக்கப்பட்டிருப்பார்.
பிணையாளிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், நிரந்தர முகவரியும், பிணையளிப்ப தற்கு அவர்களது கடன்கள் நீக்கி, போதுமான அளவிற்கு நிதி வசதியும் இருக்க வேண்டும். பிணையாளிகள் தங்களது ரேஷன் கார்டு, வாடகை ரசீது, வைப்பீட்டு நிதி அட்டை, சம்பளப் பட்டியல். வருமான வரி ரசீது போன்ற ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
தொழில் முறையில் பிணையாளிகளாக இருந்தால் அன்றி, அவர்களது தனிப்பட்ட குண இயல்பு, அரசியல் கருத்துக்கள், பழைய குற்றவாளியா, ஆணா, பெண்ணா என்பதைக் காரணங்காட்டி பிணையாளிகளைத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் காவல் துறைக்கும், குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் இல்லை.

மாற்றுத்திறனாளிகள் - தொழில் தொடங்க - கடன்


மாற்றுத்திறனாளிகள் - தொழில் தொடங்க கடன் பெற ...?
தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் 
(NHFDC) National Handicapped Finance and Development Corporation) வழங்கும் கடன் உதவி:-
1) மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்குவத்ற்கு, ”தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்” பலவித சலுகைக் கடன்களை வழங்குகிறது.  
2) விற்பனை மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும், சேவைப்பிரிவுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் மாற்றுத்திறனாளிகள் கடன் பெறலாம். தொழில் செய்ய ஆட்டோ ரிக்சா, வேன் போன்ற வாகனங்கள் வாங்கவும், விவசாயப் பணிகளுக்கும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு  10 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். பொருட்கள் உற்பத்தி, தயாரிப்புக்காக சிறு தொழிற்கூடங்கள் அமைக்க மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 25 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படுகிறது .
3) மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், செரிபிரல்கஃபேல்சி மற்றும் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க அவர்களின் வாழ்க்கைத்துணை  மற்றும் அவர்களின்  பெற்றோர் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
4) இந்தியாவில் படிக்க ரூ.7.50 லட்சம், வெளிநாடுகளில் படிக்க ரூ.15 லட்சம் வரை கல்விக்கடன் கிடைக்கும்.
5) நுண் கடன் திட்ட்த்தின் கீழ் (Micro Credit Scheme) தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம், பயனாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை கடன் தரப்படும்.
நிபந்தனைகள்: 

1) இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும். 
     குறைந்தது 40% அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் திறன் பாதிப்பு.
2) 18லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
3) நகர் பகுதியில் வசிப்பவராக இருந்தால் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாகவும், கிராமப் பகுதியில் வசிப்பவராக ரூ.3 லட்சத்துக்குக் குறைவாகவும்  அவரது ஆண்டு வருமானம் இருக்கவேண்டும்.
4) தொடர்புடைய கல்வி, தொழில்நுட்பச் சான்றிதழ்களை வைத்திருக்கவேண்டும். தேவையான அனுபவமும் அவர் பெற்றிருக்கவேண்டும்.
வட்டி விகிதம்:
5) 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு ஆண்டுக்கு 5%. 

50 ஆயிரத்துக்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு 6%. 
5 லட்சத்துக்கு மேல் ஆண்டுக்கு 8%.
திருப்பிச்செலுத்தும் காலம்:
6) பொதுக் கடன்களை 10 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும்.
7) கல்விக் கடன்களை 7 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும். (படிப்பு முடித்த 6 மாதங்கள் அல்லது வேலை கிடைத்த பிறகு எது முன்னதாகவோ அதிலிருந்து தவணை).
கடன் தள்ளுபடி:
1) தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வழங்கும் கடன் திட்டங்களில் பெண்களுக்கு வட்டியில் 1 சதவிகிதமும், சில திட்டங்களுக்கு 0.5 சதவிகிதமும் சிறப்புத் தள்ளுபடி செய்யப்படுகிறது
எப்படி விண்ணப்பிப்பது?
1) தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில முகவர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

 தமிழக முகவரி:
 தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி லிமிடெட் (TNSC Bank), 
233, நேதாஷி சுபாஷ் சந்திரபோஷ் சாலை, 
சென்னை-600001. 
போன்: 044-25302300
2) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெறலாம்.
3) கடன் உதவி பெற கால தாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய முகவரி: 

முதன்மைச் செயலாளர்/ மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், 
மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், 
ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, 
கே.கே.நகர், 
சென்னை-600 078. 
போன்: 044-24719948, 044-24719949

மாற்றுத் திறனாளிகள்-அரசு சலுகை பெற


மாற்றுத் திறனாளிகள்-அரசு சலுகை பெற.....? 
**************************************************************
1) கல்வி உதவித் தொகை:
**************************************
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 500 ரூபாய்
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை 1,500 ரூபாய்
9-முதல் 12-ஆம் வகுப்பு வரை 2,000 ரூபாய்
இளநிலை பட்டப்படிப்பு 3,000 ரூபாய்
முதுநில பட்டயப் படிப்பு 3,500 ரூபாய்

இணைக்க வேண்டிய சான்றுகள்:

தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
9-ஆம் வகுப்புக்கு மேல் முந்தைய ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல்
குடும்ப அட்டை நகல்

எப்போது விண்ணப்பிப்பது?
கல்வி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்

2) வங்கிக் கடன் உதவி
***********************************

வங்கிக் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அதிகபட்சமாக 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
குடும்ப அட்டை நகல்

எப்போது விண்ணப்பிப்பது?
ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை
குறிப்பு: பெட்டிக்கடை வங்கிக் கடனுக்கு அரசு மானியம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

3)மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் 
 மாற்றுத் திறனாளி இல்லாதவர்களுக்கான நிதியுதவித் திட்டம்

அளிக்கப்படும் பணம் எவ்வளவு? 
ரொக்கத் தொகை 25,000. 
டிகிரி முடித்தவர்களுக்கு 50,000 ரூபாயும் 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். கொடுக்கப்படும் தொகையில் பாதி (ரூ.25,000) தேசிய சேமிப்புப் பத்திரமாக வழங்கப்படும்.

யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
பார்வையற்றவரைத் திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு
கை கால் ஊனமுற்ற (ஆர்த்தோ)திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு.
பேசும் திறனற்ற மற்றும் காது கேளாதோரை திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு.

இணைக்க வேண்டிய சான்றுகள்:

தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
வயதுச் சான்று
திருமணப் பத்திரிகை மற்றும் சான்று
குடும்ப அட்டை நகல்

யாருக்கு விண்ணப்பிப்பது?

மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

4) மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை

மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
குடும்ப அட்டை நகல்
ஊனத்தின் தன்மை குறைந்தது 40 சதவிகிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

எப்போது விண்ணப்பிக்கலாம்?
அனைத்து அரசாங்க வேலை நாட்களும்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

5) இலவசப் பேருந்து சலுகை யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
****************************************************************************************
பார்வையற்றோர், அவர் குடியிருக்கும் மாவட்டத்திற்குள்ளே பயணம் செய்யலாம்.

இதர மாற்றுத் திறனாளிகள் தனது இருப்பிடத்திலிருந்து பணி செய்யும் இடம் அல்லது  கல்வி பயிலும் இடம் வரை பயணம் செய்யலாம்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
விண்ணப்பம்
மூன்று புகைப்படங்கள்
கல்விநிலையம், தொழிற்கல்வி நிலையம் அல்லது பணிபுரியும் இடத்தின் சான்று.

எப்போது விண்ணப்பிக்கலாம்?

மார்ச் மாதம் முதல்விண்ணப்பிக்கலாம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
ஒரு மாதத்திற்குள் கிடைக்கும்.

6)தேசிய அடையாள அட்டை
*******************************************

தேசிய அடையாள அட்டை பெறுவது முக்கியமானது. இதனைப்  பெற்றவர்களே மாற்றுத் திறனாளிகளாக உதவி பெற தகுதி உள்ளவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். இந்த அட்டை பெற சிறப்பு மருத்துவர் ஒருவரிடம் மாற்றுத் திறனாளி   எனச் சான்று பெற்று அளிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
இரண்டு போட்டோ மற்றும் மாற்றுத் திறனுடையோர் பற்றிய முழு விவரம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
ஒரே நாளில் வழங்கப்படும்.

7) உபகரணங்கள் உதவி
***********************************

சிறப்பு மருத்துவர் கருத்துரைக்கு இணங்க,  கீழ்க்கண்ட உபகரண உதவி வழங்கப்படும்.
அ) மூன்று சக்கர வண்டி
ஆ) சக்கர நாற்காலி
இ) காதொலிக் கருவி
ஈ) பார்வையற்றோர் கைக்கடிகாரம்
உ) பார்வையற்றோர் ஊன்றுகோல், கண்ணாடி
ஊ) காலிப்பர்
எ) கைதாங்கி ஊன்றுகோல்
ஏ) செயற்கைக் கால்
ஐ) சூரியஒளி பேட்டரி

இணைக்க வேண்டிய சான்றுகள் :
தேசிய அடையாள அட்டை
விண்ணப்பம்
சிறப்பு மருத்துவச் சான்று
வருமானச் சான்று

எப்போது விண்ணப்பிக்கலாம்?
அனைத்து அரசு வேலை நாட்களிலும் விண்ணப்பிக்கலாம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர்.
மாற்றுத் திறனாளிகளின் கவனத்திற்கு...

***********************************************************

பேருந்தில் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் ஓர் உதவியாளருடன் பயணம் செய்யலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலை நடத்துநரிடம் அளித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் மாற்றுத் திறனாளிகள் பேருந்தில்  தனியாகவும் பயணம் செய்யலாம். உதவியாளருக்கான சான்றிதழை வைத்திருப்பவர்கள், அதன் நகலையும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் அளித்து, இருவரும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பேருந்தில்  பயணம் செய்யலாம். 

உதவியாளருக்கான பேருந்து சலுகைப் படிவம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும். இதனைப் பெற்று முறையாக மருத்துவரிடம் கையொப்பம் வாங்கி, அதன் நகலையும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் பயன்படுத்தலாம். இதனைப் புதுப்பிக்கத் தேவையில்லை. இது நிரந்தரமானது.

இந்திய ரயில்வேயில் முழுமையான பார்வையற்றவர்களும், காது கேளாத, வாய் பேச இயலாதவர்களும் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்துடன் தனியாகப் பயணம் செய்யலாம். முதல் வகுப்பு, குளிரூட்டப்பட்ட வகுப்புகளில் 50 சதவிகிதம் கட்டணத்தில் பயணம் செய்யலாம். அதற்கு முறையான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ரயிலில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய, குறிப்பிட்ட படிவத்தில் மருத்துவச் சான்றிதழ் பெற்று அதன் நகலைக் கொடுத்து பயணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். 5 வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். 35 வயதுக்குப் பின்னர் பெறப்படும் சான்றிதழானது நிரந்தரமானது. அதன் பின்னர் புதுப்பிக்க வேண்டாம். ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம்.

இரண்டு கால்களும் செயலிழந்து, கைகள் நல்ல முறையில் இயங்கும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் அதே அலுவலகத்தில் கிடைக்கும்.

கல்லூரியில் பயிலும் கை, கால் ஊனமுற்ற மாணவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் கைகள் நன்கு இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். தற்போது இத்திட்டம் சுயவேலை வாய்ப்பு செய்பவர்களுக்கும், பணிக்குச் செல்பவர்களுக்கும் என்று அனைத்து கை, கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 

அனைத்து மத்திய, மாநில அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகளிலும் 3 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. இந்திய ஆட்சிப் பணியில் இருந்து, கடைநிலை ஊழியர் வரை அனைத்துப் பணிகளுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். இதில் பார்வையற்றோர், காது கேளாதோர், கை, கால் ஊனமுற்றோர் தலா ஒரு சதவிகிதத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை 100 கிலோமீட்டர் வரை இலவசப் பேருந்துப் பயணம் மேற்கொள்ளலாம்.

என்ன மாதிரி ஊனம் உள்ளதோ, அந்தப் பிரிவு சிறப்பு மருத்துவர் உள்ளிட்ட 3 நபர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான  விண்ணப்பப் படிவம் அவர் பயிலும் கல்விக் கூடத்திலேயேகிடைக்கும். வேறு ஏதும் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்று பள்ளித் தலைமை ஆசிரியர் சான்றளிக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை பெற


வாக்காளர் அடையாள அட்டை பெற....

**************************************************************

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம் - படிவம் எண்:6
****************************************************
*******

ஜனவரி 01, 2015 அன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடைந்திருந்தால், தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு ஒருவர் விண்ணப்பிக்க முடியும்.
ஒருவர் வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச்  சேர்ப்பதற்கு படிவம் - 6 ஐ பயன்படுத்தவேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை பெற தேவையான ஆவணங்கள்:
வாக்காளர் அடையாள அட்டை பெற அடையாளச் சான்று, பிறப்புச் சான்று 
மற்றும் முகவரிச் சான்று ஆகியவை அவசியம். 

1.முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது
 பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். 
வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், 
குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரி மதிப்பீட்டின்
 ஆணை அல்லது சமீபத்திய குடிநீர்,தொலைபேசி, மின்சாரம், எரிவாயு 
இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் 
விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற அல்லது  பட்டுவாடா 
செய்யப்பட்ட அஞ்சல் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக 
இணைக்க வேண்டும்.

2.பிறப்புச் சான்றாக மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் 
அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் சான்றிதழ் ஆகியன
ஏற்றுக் கொள்ளப்படும்.

3.அடையாளச் சான்றாக புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, 
அரசு ஐ.டி. கார்டு ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும்.

4.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால்,
 எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் 
தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய 
இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

படிவம்- 6 உடன், 2 வண்ணப் புகைப்படம் இணைக்கவேண்டும்.

பிறப்பு சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும்.

 (அதாவது மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ் அல்லது மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது பள்ளி அல்லது  கல்லூரியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்)

விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி அல்லது  அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் அல்லது  உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் அல்லது  தொலைபேசி அல்லது  மின்சாரம் அல்லது எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற அல்லது  பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.

பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம் - படிவம் எண்:7
****************************************************
*********

வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம், அல்லது தவறுதலான பதிவு செய்யப்பட்டிருந்தால், ஒருவர் பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கமுடியும்.
.
பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம் - படிவம் எண்:8
************************************************************

உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில்  அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எடுத்துக்காட்டாக  பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
அதற்கு நீங்கள் அடையாளச் சான்றாக, பிறப்பு சான்றிதழின் நகலை சமர்பிக்க வேண்டும்.

இடமாற்றத்திற்கான விண்ணப்பம் - படிவம் எண்:8A
************************************************************

வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும்.
இதற்காக படிவம்-8A வை பயன்படுத்தவேண்டும்.
விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி அல்லது/ அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் அல்லது வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் அல்லது/ தொலைபேசி அல்லது மின்சாரம் அல்லது/ எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற அல்லது பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்
***************************************************

நகராட்சி பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்களுடைய விண்ணப்பத்தை கீழ்கண்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
துணை ஆணையர் அலுவலகம் ( நகராட்சி அலுவலகம் )

நகராட்சி எல்லைக்குள் நீங்கள் வசிப்பவராக இருந்தால், உங்களுடைய மாவட்டங்களில்  கீழ்கண்ட அலுவலரிடம் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
துணை ஆட்சியரின் அலுவலகம்
வருவாய் டிவிசன் அலுவலரின் அலுவலகம் (வாக்காளர் பதிவு அலுவலர்)
வட்டாட்சியர் அலுவலகம்(துணை வாக்காளர் பதிவு அலுவலர் )

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
என்ற இந்த இணையதள முகவரிக்குச் சென்று உங்களுடைய கைபேசி எண் 
மற்றும் உங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும்.
 உங்களுடைய கைபேசிக்கு, 'verification code' என்ற குறுஞ்செய்தி வரும். 
அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கைப் படிவம் 
வரும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைக் கொடுத்த பின்னர் save 
என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய செல்பேசிக்கு confirmation செய்தி
வரும். பின்னர், 'online application' என்பதை கிளிக் செய்து விவரங்களைக் 
கொடுக்க வேண்டும்.

இத்தளத்திலும் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம். 
 உங்களுக்குத் தேவையான விண்ணப்பத்தைத் தேர்வு செய்து விவரங்களைக்
 கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து 
இலக்க எண் தரப்படும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 
தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து 
அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் 
அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
உங்கள் விண்ணப்பத்தின் நிலை என்னவென்று நீங்கள்
 http://elections.tn.gov.in/apptrack/  என்ற இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இத்தளத்திற்குச் சென்று உங்கள் பகுதி அதிகாரியின் தொடர்பு 
எண்ணைத் தெரிந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டை  வைத்திருப்பவர்கள்     
இத்தளத்திற்குச் சென்று தமது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.


மேலும் விவரங்களுக்கு www.elections.tn.gov.in/ இத்தளத்திற்குச் செல்லவும்.


உச்சநீதிமன்றம் - வழக்குகளின் நிலை அறிய


உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட 
வழக்குகளின் நிலையை அறிவது எப்படி?
இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் மற்றும் தீர்க்கப்பட்ட வழக்குகள் குறித்த தகவல்களை, வழக்கறிஞர்கள், வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் கீழ் நீதிமன்ற (Lower court) நீதிபதிகள் ஆகியோர் தெரிந்து கொள்ளும் வகையில் இத்தகவல் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றின் மூலம், வழக்குகள் குறித்த செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

• வழக்கு எண் வாரியாக (Case Number wise)
• தலைப்பு வாரியாக (வாதி/பிரதி
வாதியின் பெயர்) (Title wise (Petitioner or Respondent’s Name))
• வழக்கறிஞரின் பெயர் வாரியாக (Advocate’s Name wise)
• உயர்நீதிமன்ற வழக்கு எண் வாரியாக (High Court Number wise)
• நாட்குறிப்பு எண் வாரியாக (Diary Number wise etc.)


1. வழக்கின் நிலையை CASE STATUS PORTAL OF SUPREME COURT OF INDIA (http://www.courtnic.nic.in/courtnicsc.asp)) என்ற இணைய முகவரியில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்
2. வழக்கின் நிலையை பின்வரும் வழியின் மூலம் நீங்கள் அறியலாம்.
• மேலே கூறப்பட்டுள்ள அனைத்து செய்திகளும் இடது பக்கத்தில் இருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து வழக்கின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கு எண் வாரியாக (Case Number wise)

• கீழிறங்குப் பெட்டியில் இருந்து (drop down box) வழக்கின் வகையைத் தேர்வு செய்ய 
வேண்டும்..
• வழக்கின் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்..
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்..

தலைப்பு (வாதி/பிரதிவாதியின் பெயர்) வாரியாக. 
(Title (Petitioner or Respondent’s Name) wise)

• வாதி அல்லது பிரதிவாதியின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
• கீழிறங்குப் பெட்டியில் இருந்து (drop down box) ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்
• தெரியாது (Don’t Know) 
• மனுதாரர் (Petitioner) அல்லது 
• பிரதிவாதி (Respondent)
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க 
வேண்டும்..

வழக்கறிஞர் பெயர் வாரியாக (Advocate’s Name wise) 

• வழக்கறிஞரின் பெயரைப்பதிவு செய்யவேண்டும்.
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க
வேண்டும்..

உயர்நீதிமன்ற எண் வாரியாக (High Court Number wise)

• உங்கள் மாநிலத்தை கீழிறங்குப்பெட்டியில் இருந்து 
 (drop down box) தேர்ந்தெடுக்க வேண்டும்..
• கீழ் நீதிமன்ற எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்..
• தீர்ப்பு தேதியைக் கீழிறங்குப் பெட்டியிலிருந்து தேர்ந்தெடுத்துச் சமர்ப்பிக்க வேண்டும்..

நாட்குறிப்பு வாரியாக (Diary Number wise)

• நாள் குறிப்பு எண்ணைப் பதிவு செய்ய 
வேண்டும்..
• கீழிறங்கு பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.