disalbe Right click

Saturday, April 25, 2015

வாகனங்கள் மூலம் விபத்து நடந்தால் இழப்பீடு


வாகனங்கள் மூலம் விபத்து நடந்தால் இழப்பீடு பெற 
என்ன செய்ய வேண்டும்?
************************************************************
சட்டம் உன் கையில்: வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி


நிறைவான ஒரு வாழ்வை எண்ணி இருக்கும் பலரின் கனவுகளை, வாழ நினைத்த வாழ்வை, எதிர்காலத்தை சிதைக்க வல்லது எதிர்பாராமல் நடைபெறும் விபத்து. அதுவும் மோட்டார் வாகனங்களினால் ஏற்படும் விபத்து களால் ஏற்படக்கூடிய இழப்பு பல நேரங்களில் ஈடு செய்ய முடியாதது. இன்று உலக அளவில் சாலைகளின் தரமும் போக்குவரத்தின் தரமும் உயர்ந்துள்ளது. அது உலகின் பொருளாதார வளர்ச்சியை பறை சாற்று கிறது. ஆனால், இந்த பொருளாதார வளர்ச்சி வாகன நெரிசலை ஏற்படுத்துவதுடன் பல விபத்து களுக்கும் வழிவகை செய்கிறது.

WHO  (World Health Organisation) வின் கணிப்புப்படி கிட்டத்தட்ட உலகில் ஓர் ஆண்டில் சுமார் 1 கோடி மக்களுக்கு மோட்டார் வாகன விபத்துகளால் பலவிதமான உடல் காயங்கள், ஊனங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 6 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள் என்றும் கூறுகிறது. இது பொருளாதார வளர்ச்சி யின் விளைவா அல்லது மனித இனத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமா? இந்தியாவை பொறுத்தவரை வாகன விபத்தினால் ஏற்படக்கூடிய உயிர் இழப்பும், விபத்து களை சந்தித்தவர்களுக்கு உடல் உறுப்புகளில் ஏற்படும் காயங்களும், நிரந்தர ஊனங்களும், பலரின் வாழ்வின் தரத்தில் பெரும் அளவில் மாறுதல்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. இவ்வாறான விபத்துகளில் மாட்டிக் கொள்பவர்களுக்கு இன்று பெரிதும் கை கொடுப்பது ‘MOTOR VEHICLES ACT   1988’

‘மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988’

இந்த சட்டம் ஜூலை 1989ம் ஆண்டில் இருந்து நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் இதற்கு முன் இருந்த 1939ம் ஆண்டு சட்டத்துக்கு மாற்றாக இயற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்துக்கான விதிகளும் 1989ம் ஆண்டே வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் முன் இழப்பீடு யாரெல்லாம் கேட்க முடியும்?

- விபத்தில் காயம் அடைந்தவர்கள்.
- சேதமடைந்த சொத்தின் உரிமையாளர்கள்.
- மோட்டார் வாகன விபத்தில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகள் அல்லது சட்டமுறை பிரதிநிதிகள்.
- வாரிசு அல்லது சட்டமுறை பிரதிநிதிகளின் சார்பாக ஒருவர்... ஆகியோர் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்யலாம். 

மனுவை எங்கே தாக்கல் செய்யலாம்?

1. விபத்து நடைபெற்ற இடத்தில் இருக்கும் தீர்ப்பாயம்.
2. இழப்பு நேர்கிறவர் வசிக்கும் அல்லது தொழில் நடத்தும் வரையறைக்குள் இருக்கும் தீர்ப்பாயம்.
3. எதிர்மனுதாரர் வசிக்கும் வரையறைக்குள் இருக்கும் தீர்ப்பாயம் ( Tribunal). 

மேலும் விபத்து பற்றி அறிவிப்பு எட்டியவுடன் தீர்ப்பாயமே தானே முன்வந்து (Suomotto) வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது. விபத்து நடந்தவுடன் அதன் எல்லைக்குட்பட்ட காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க, காப்பாற்ற துரித நடவடிக்கை எடுப்பதுடன் விபத்து பற்றி முதல் தகவல் அறிக்கை தயாரித்து, அது தயாரிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அதிகார வரம்புக்குட்பட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை சட்டம் வலியுறுத்துகிறது. தீர்ப்பாயத்துக்கு முன் இருக்கும் மனுவினை இயற்கை நீதிக்கு உட்பட்டும், சட்டத்துக்கு உட்பட்டும் தகுந்த விசாரணை மேற்கொண்ட பின்னர் தீர்ப்பாயம் நிர்ணயிக்கும் இழப்பீட்டு தொகையை 

- விபத்தில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரோ,
- வாகன ஓட்டுநரோ,
- மோட்டார் வாகனம் காப்பீடு செய்யப்பட்டுள்ள காப்பீடு கழகமோ அல்லது மேற்குறிப்பிட்ட மூவரும் கூட்டாக கொடுக்க கடமைப் பட்டவர் ஆவர். இழப்பீட்டு தொகையை நீதிமன்ற நடவடிக்கையின் மூலமாகவோ அல்லது மக்கள் நீதிமன்றத்தின் ( Lok adalath  ) மூலமாகவோ பெறுவதற்கு சட்டம் வழிவகை செய்துள்ளது.

மோட்டார் வாகன விபத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்படும் இழப்பீடு கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கான அதிகாரம் இதற்கு அமைக்கப்பட்ட மோட்டார் விபத்து கோரிக்கை தீர்ப்பாயத்துக்கு (Motor Accidents Claims Tribunal) தான் உள்ளது. அது ஓர் உரிமையியல் நீதிமன்றத்தின் ( Civil Court  ) அதிகாரத்தை பெற்றுள்ளது. இழப்பீடு உத்தரவுக்கு எதிராக எதிர்தரப்பினர் மேல்முறையீடு, தீர்ப்பு தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் செய்யலாம். அவ்வாறு மேல்முறையீடு செய்யும் பொழுது ரூபாய் 20,000 அல்லது தீர்ப்பளிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் 50%, அதில் எது குறைவோ, வைப்பீடு செய்தால் மட்டுமே மேல் முறையீடு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் ஓட்டுநரின் மேல் தவறே இல்லாமல் விபத்து நடந்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பது இந்த சட்டத்தின் சிறப்பம்சம். விபத்து ஏற்படுத்திய வாகனம் அடையாளம் தெரியாத நிலையிலும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய அரசு ஓர் ஆதரவு நிதி ஏற்படுத்தி உள்ளது. அதன் மூலம் ஒரு தொகையை இழப்பீடாக பெறலாம்.

ஒரு விபத்து நேரிடும் போது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்:

- விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவி.
- விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண்.
- ஓட்டுநரின் பெயர், வயது, முகவரி 
சேகரித்தல்.
- காவல்துறையினர் வரும் வரை விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பாதுகாத்தல்.
- காவல்துறையினரை முதல் தகவல் அறிக்கை தயாரிக்க உதவுதல்.
- சாட்சிகளை காவல்துறையினரிடம் அடையாளம் காட்டுதல்.
- மருத்துவ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை சரியாக செய்தல்.

இந்தியாவை பொறுத்தவரை இன்று மோட்டார் வாகன விபத்து குறித்த வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்யப்பட்டும் நிலுவையில் உள்ளன. அவ்வப்போது மக்கள் நீதிமன்றம் மூலமும் தீர்வுகள் பெறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் கனரக வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனம் போன்ற சிறிய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் பலர் விபத்துகளை அதிக அளவில் சந்திக்கிறார்கள். அது போல பல புள்ளி விவரங்களை பார்க்கும்போது பெண்களை விடவும் ஆண்கள் பலர் வாகன விபத்துகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.மேலும்,

- குடித்து விட்டோ, போதை வஸ்துகளை பயன்படுத்தி விட்டோ ஓட்டுபவர்கள்,
- அதிவேகத்துடன் ஓட்டுபவர்கள்,
- ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வயது 
வரம்பில்லாமல் ஓட்டுபவர்கள்,
-  சரிவர பயிற்சி இல்லாமல் ஓட்டுபவர்,
என்று விபத்துகளுக்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

 National Insurance Co. Ltd Vs Minor Deepika என்ற வழக்கின் தீர்ப்பு,  பெண்கள் பலரால் வரவேற்கப்பட்டு ஊடகங்களால் பாராட்டப்பட்ட. பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய ஒரு தீர்ப்பு. இந்த தீர்ப்பினை வழங்கியது முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசி திருமதி பிரபா ஸ்ரீதேவன் அவர்கள். ஒரு மைனர் குழந்தை விபத்தில் தன் பெற்றோர் இருவரையும் இழந்து விட்ட நிலையில் இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தந்தையின் வயது, வருமான இழப்பு போன்றவற்றை கணக்கில் கொண்டு ஒரு தொகை நிர்ணயிக்கப்படுகிறது. தாயை பொறுத்தவரை இல்லத்தரசி என்பதால் இழப்பீடு தொகை என்று வரும்போது ஊதியம் ஈட்டாதவர் என்ற நிலைப்பாடு. 

ஆனால், இங்கு ஒரு பெண் அதுவும் ஒரு குடும்பத் தலைவி குடும்பத்துக்காக செய்யும் பணிகள், வீட்டை பராமரிப்பது, குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குடும்ப கணக்கு வரவு செலவு பாரத்தை ஏற்று அவள் செய்யும் பணி ஈடு இணை இல்லாதது என்று கூறி அவளின் பணியை,  பெண்மையை போற்றி எழுதப்பட்ட தீர்ப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.மோட்டார் விபத்துகளை பொறுத்தவரை இயற்கையான விபத்துகள் என்பதை காட்டிலும் செயற்கையாக (man made mistakes) என்று சொல்லக்கூடிய நிகழ்வுகள் தான் அதிகம். மனித உயிர் என்பது மதிப்பிட முடியாத ஒன்று. மேலும் ஒரு விபத்து என்பது ஒரு குடும்பத்தின் தலைவனுக்கு ஏற்படும் எனில் அந்த தலைவனை நம்பியுள்ள குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் ஒரு கடமை உணர்வுடன் செயல்பட்டால் விபத்துகள் பெருமளவில் தவிர்க்கப்படும்.விபத்தை தடுப்போம்.. வாழ்வை நேசிப்போம்!

நன்றி : தினகரன் நாளிதழ் 09.01.2015


நில அளவை தொடர்பான ஆவணங்கள்

நில அளவை தொடர்பான ஆவணங்களும், அலுவலகங்களும்
************************************************************************
              நம் நாட்டில் பிரச்சனை என்று ஆரம்பிப்பது, அதிகபட்சம் நிலங்களை வைத்துத்தான். அந்த நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை முன்பு வாங்குவது என்பது மிகுந்த சிரமமானது ஆகும். ஆனால், இப்போது அப்படி அல்ல. ஆன்லைன் மூலமாகவே அனைத்தையும் பெற முடியும். இருந்தாலும், அப்படிப் பெறும் ஆவணங்களை அதிகாரபூர்வமான ஆதாரங்களாக பயன்படுத்த முடிவதில்லை. எனவே, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நில ஆவணங்களை பெற்று அதனை நாம் பயன்படுத்துகிறோம்.
                நில ஆவணங்களில் எந்த வகையான ஆவணங்களை எந்த அலுவலகத்தில் இருந்து எப்படி பெறுவது?, அதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் யாரிடம் நாம் விண்ணப்பிப்பது?  போன்ற சந்தேகங்களுக்கு இந்தப் பதிவு விடை தருகிறது. படித்து பயன் பெறுங்கள்.



****************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Friday, April 24, 2015

டின் நம்பர் பெற


டின் நம்பர் பெற என்ன செய்ய வேண்டும்? 
*******************************************************
தமிழ்நாட்டில் தொழில் செய்பவர்கள் அரசுக்கு வரி செலுத்துவதற்காக  உள்ள ஒரு அடையாள எண்ணை டின் (Taxpayer identification number) நம்பர் என்று சொல்கிறோம்.  புதியதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள், தங்கள் தொழில் சம்பந்தமான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து இந்த எண்ணை வாங்க வேண்டும்.

உங்களது தொழில்  எந்த (உற்பத்தி, சேவை ,  வர்த்தகம் அல்லது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி)  ரீதியாக இருந்தாலும் தாங்கள் அதன் சம்பந்தமான அறிக்கையை  தமிழக அரசிடம் சமர்ப்பித்து  டின் நம்பரை கண்டிப்பாக வாங்க வேண்டும்.

இதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, “வணிகவரித்துறை” அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம். 

உங்களது தொழிலை வேறு ஒரு மாநிலத்தில்  தொடங்குவதாக இருந்தால், தாங்கள் அந்த மாநிலத்திடமிருந்தே டின் நம்பரை பெறவேண்டும்.

தங்களது தொழிலானது நமது மாநிலத்தைத் தாண்டி, வேறு மாநிலத்திலும் நடைபெறுகிறது என்றால், அதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்து, மத்திய விற்பனை வரி எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த எண் மொத்தம் 11 இலக்கங்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறியீடு உள்ளது.

இந்த எண்ணானது, மதிப்புக் கூட்டு வரி விதிப்பு (Value added tax)  எனப்படும் வாட் கணக்கோடு தொடர்புடையதாகும். இந்த எண்ணைப் பெற்று தொழில் நடத்தும் ஒருவர், முறையாக அரசுக்கு வரியை செலுத்திவிட்டுத்தான்  தொழில் செய்றார்! என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த எண்ணைப் பெறுவதற்காக Form-F, Form-A விண்ணப்பிக்கும் போது, அதனுடன்
1.   தொழில் செய்பவரது புகைப்படம்  2 
2.  குடும்ப அட்டை நகல்
3.  பான் கார்டு நகல்
4.  சொத்து தொடர்பான ஆவணங்கள் நகல்
5.  வாடகை ஒப்பந்த பத்திரத்தின்  நகல்
6. செய்யும் தொழிலுக்கு ஏற்ப வங்கி வரைவோலை (Demand Draft) 
இது வணிக வரித்துறையின் பெயருக்கு எடுக்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருக்கும் இருவரது பரிந்துரை கடிதத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஆவணங்களை சரிபார்த்தபின்  விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு வணிகவரித்துறையில் இருந்து, சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

இந்த டின் நம்பரை வைத்து ஒருவர், பல தொழில்களை  தொடங்கிக் கொள்ளலாம். ஆனால் எந்த ஒரு தொழிலை தொடங்கினாலும் வணிகவரித்துறை அலுவலகத்தில் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டு  தொடங்க வேண்டும்.

யார் பெயரில் டின் நம்பர் பெறப்பட்டுள்ளதோ, அவர் பெயரில்தான் தொழில்களை தொடங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Wednesday, April 22, 2015

ஃபான் கார்டு பற்றி தெரிந்து கொள்வோமா?


ஃபான் கார்டு பற்றி தெரிந்து கொள்வோமா?
******************************************************
 இந்தியாவில் தற்போது ஏராளமானோர் பான் (பெர்மனன்ட் அகௌண்ட் நம்பர்) கார்டு வைத்துள்ளனர். ஆனால் எத்தனை பேருக்கு இந்த பான் கார்டின் முக்கியத்துவமும் அதன் பயன்பாடும் தெரிந்திருக்கிறது என்பது கேள்விக்குறியே. எனவே பான் கார்டின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது நல்லது.

 பான் என்றால் என்ன? 
பான் என்றால் இந்திய வருமான வரித் துறை வழங்கும் 10 இலக்க எண்களாகும். இந்த 10 இலக்க எண்களில் ஆங்கில எழுத்துக்களும் மற்றும் எண்களும் கலந்து இருக்கும். இந்த பான் எண்கள், ஒரு கார்டில் பதிவு செய்யப்பட்டு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கார்டை பான் கார்டு என்கிறோம். விண்ணப்பம் செய்பவர்களுக்கு இந்த பான் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

 பான் கார்டின் முக்கியத்துவம் 
ஒருவரின் வங்கி நடவடிக்கைகளை, அதாவது அவருடைய வரி கட்டுதல், டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் கிரெடிட்டுகள், அவருடைய வரி சேமிப்பு, சொத்து, அன்பளிப்பு மற்றும் எப்பிடி போன்றவற்றை அவர் வைத்திருக்கும் பான் கார்டு வருமான வரித் துறைக்குத் தெரிவித்துவிடும். எனவே இந்த பான் கார்டின் உதவியுடன் வருமானத் துறை ஒரு இந்திய குடிமகனின் வங்கி வரவு செலவு நடவடிக்கைகளை மிக எளிதாகத் தெரிந்து கொள்ளும். 

பான் எண்களை எளிதாக தெரிந்து கொள்ள:
 எடுத்துக்காட்டாக ஒருவருடைய பான் எண்கள் ஏஎஃப்இசட்பிகே7190கே (AFZPK7190K) என்று வைத்துக் கொள்வோம். இதில் இருக்கும் முதல் மூன்று எண்கள் ஆங்கில எழுத்துக்களான ஏ முதல் இசட் வரையிலான எழுத்துக்களிலிருந்து கொடுக்கப்படும் 3 எழுத்துக்களாகும். நான்காவது எழுத்து எப்போதுமே பான் கார்டை வைத்திருப்பவரின் நிலையைக் குறிக்கும். பி என்று கொடுக்கப்பட்டுள்ளதால் அது ஒரு தனி நபரைக் குறிக்கிறது. ஒரு வேளை எஃப் என்று கொடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு ஃபர்மை குறைக்கும். அல்லது சி என்று குறிப்பிட்டிருந்தால் அது ஒரு கம்பெனியைக் குறிக்கும். ஹெச் என்று குறிக்கப்பட்டிருந்தால் அது இந்து கூட்டு குடும்பத்தை குறிக்கும். ஏ என்று இருந்தால் அது ஒரு ஏஓபியைக் குறிக்கும். டி என்று இருந்தால் அது ஒரு ட்ரஸ்டைக் குறிக்கும். ஐந்தாவது எண்ணான கே, பான் அட்டையை வைத்திருப்பவரின் இறுதிப் பெயர் அல்லது அவருடைய பட்டப் பெயரின் முதல் எழுத்தைக் குறிக்கும். அடுத்த நான்கு எண்கள் 0001 முதல் 9999 வரையிலான எண்களுக்குள் இருக்கும் வரிசை எண்களாகும். இறுதி எண்ணான கே, ஆங்கில எழுத்தில் இருக்கிறது. இது ஒரு சோதனை இலக்க எண்ணாகும்.

 பான் கார்டு முக்கியமா? 
ஆம். பான் கார்டு மிகவும் முக்கியம். ஏனெனில் நம்முடைய எல்லா பொருளாதார வங்கி நடவடிக்கைகளிலும் இந்த பான் எண்களைக் குறிப்பிட வேண்டும் என்பது அவசியம் என்று வருமான வரித் துறை தெரிவித்திருக்கிறது. 

பான் கார்டை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது?
 பான் கார்டைப் பெற படிவம் 49ஐ நிரப்பி, விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிவம் 49ஐ, வருமான வரித் துறை அல்லது யுடிஐஐஎஸ்எல் அல்லது என்எஸ்டிஎல் ஆகியவற்றின் இணைய தளங்களான www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த படிவம் 49ஐ, ஐடி பான் சேவை மையங்கள் மற்றும் டிஐஎன் பெசிலிடேஷன் மையங்கள் போன்றவற்றிலும் கிடைக்கும். மேலே சொல்லப்பட்ட இணையதளங்களுக்கு சென்று பான் நிலவரத்தையும் அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே பான் கார்டு வைத்திருந்தால் www.https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையதளத்திற்கு சென்ற உங்களது பான் கார்டின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம். பான் கார்டுக்காக விண்ணப்பிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றுகளில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.
1. பள்ளி மாற்றுச் சான்றிதழ் 
2. மெட்ரிகுலேஷன் சான்றிதழ் 
3. கல்லூரி சான்றிதழ் 
4. வங்கிக் கணக்கு அறிக்கை 
5. கிரெடிட் கார்ட் அறிக்கை 
6. வங்கி பாஸ்புக் அறிக்கை 
7. தண்ணீர் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது 
8. ரேஷன் அட்டை 
9. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை 
10. பாஸ்போர்ட் 
11. வாக்காளர் அடையாள அட்டை 
12. ஓட்டுனர் உரிம அட்டை 
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று. 

வாழ்விடத்திற்கான சான்றுகள் 
1. மின் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது 
2. தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது 
3. வங்கிக் கணக்கு அறிக்கை 
4. கிரெடிட் கார்டு அறிக்கை 
5. வங்கி பாஸ்புக் அறிக்கை 
6. வீட்டு வாடகை செலுத்தியதற்கான ரசீது 
7. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் சான்று 
8. பாஸ்போர்ட் 
9. வாக்காளர் அடையாள அட்டை 
10. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை 
11. ஓட்டுநர் உரிம அட்டை 
12. ரேஷன் அட்டை 
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.

 விண்ணப்பம் செய்பவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் மேற்கூறிய சான்றுகளோடு அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றும் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்.

நன்றி:Tamil Good Returns




முதியோர் உதவித்தொகை பெற


முதியோர் உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?
*******************************************************************

                       சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் முதியோர், மாற்றுத்திறனாளிகள் கணவரால் கைவிடப்பட்டோமற்றும் விதவைகளுக்கு  மாதாந்திர உதவியாக ரூ.1000/- வீதம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 
                   ஆதரவு ஏதும் இல்லாமல் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசினுடைய  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர். 
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
                  இத் திட்டத்தில் ஆதரவற்ற தகுதியுடைய முதியோர்களான ஆண், பெண்  அனைவரும் சேரலாம்.  இதற்குரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதனுடன், குடும்ப அட்டை நகல், அரசு மருத்துவமனை அல்லது அரசு பதிவுபெற்ற டாக்டரால் வழங்கப்பட்ட வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ்  மற்றும் இருப்பிடச்சான்று ஆகியவற்றை இணைத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
                        வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். அதன்பிறகு அதனை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்.
                         கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் நேரில் விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கு  வந்து விண்ணப்பத்தில் தெரிவிக்கப் பட்ட தகவல்கள் உண்மைதானா? என்று ஆய்வு செய்வார்கள். உண்மைதான் என்று தெரிந்தால், விண்ணப்பதாரருக்கு உதவித்தொகை வழங்கலாம் என்று வருவாய் வட்டாட்சியருக்கு, கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்வார்.
                             வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பதாரருக்கு  பணவிடை (Money Order)  மூலமாக  மாதந்தோறும் ரூ.1000/- வழங்க உத்தரவிடுவார்கள். விண்ணப்பதாரர் தனது ஆயுட்காலம் முழுவதும் இதனை பெற முடியும்.
                              தற்போது (2015) இந்த திட்டத்தில் சில மாறுதல்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
 * வருமான வரம்பு, 5,000 ரூபாய்க்குள் என்று இருந்ததை, 50 ஆயிரம் ரூபாய்க்குள் என, 10 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தாலும் பயன்பெறலாம்.
* வாரிசுகள் இருந்தாலும், அவர்களால் பயனில்லை என்றால், மாதாந்திர உதவி பெற, முதியோர் தகுதி பெறுவர்.
* எல்லா விதமான உதவித்தொகை திட்டத்திலும், 'ஆதரவற்றோர்' என்ற பிரிவு கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளது.
* மாற்றுத்திறனாளிகளுக்கான விதிமுறைகளில், 'வேலை செய்ய முடியாத தன்மை' என்ற பிரிவு நீக்கப்பட்டு உள்ளது. 60 சதவீத பாதிப்பு உள்ள, அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கும்.
* உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்டோர் மாதாந்திர உதவி பெற, 'மகன், மகள் ஆதரவு இல்லாமல் இருந்தால்...' என்ற விதிமுறையும் நீக்கப்பட்டு உள்ளது. இதற்கான, அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
                                                                                  நன்றி: தினமலர் நாளிதழ் - 22.04.2015
               

Tuesday, April 21, 2015

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற


அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற என்ன செய்ய வேண்டும்?
*********************************************************************************
          சென்னை உயர்நீதிமன்றப் பேராணை மனு எண்:26722/2013-க்கு 11.08.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி அரசாணை எண்:540 வருவாய் எல் டி 6 (2) துறை நாள்  : 04.12.2014-ல் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள்மீது நடவடிக்கை மேற்கொண்டு முடிவு செய்வதற்கு வட்ட/கோட்ட/மாவட்ட அளவில் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 
வட்ட அளவிலான குழு:
                       1.வருவாய் வட்டாட்சியர் 2. காவல் ஆய்வாளர் 3. வட்ட துணை ஆய்வாளர் (நில அளவை) 
கோட்ட அளவிலான மேல் முறையீட்டுக் குழு:
                           1. சார் ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியர் 3. துணை காவல் கண்காணிப்பாளர் 3. உதவி இயக்குநர் (நில அளவை)
                    ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அவர்களுக்கு மனு அளிக்க வேண்டும்.
      ஷை வட்டாட்சியர் அவர்கள் 60 நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றாலோ அல்லது ஷை வட்டாட்சியர் அவர்களின்  பதில் திருப்திகரமாக இல்லை என்றாலோ , 60 தினங்களுக்குப் பிறகு கோட்ட அளவிலான மேல்முறையீட்டுக்குழுத் தலைவரான சார் ஆட்சியர்/ வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம்  மேல்முறையீடு செய்ய வேண்டும். இம் மேல்முறையீட்டு மனு 30 நாட்களுக்குள் விசாரணை செய்து ஆணை வழங்கப்படும். 
       கோட்ட அளவிலான மேல்முறையீட்டுக் குழுவின் ஆணை கிடைக்கப்பெறவில்லை என்றாலோ அல்லது அவர்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்றாலோ, 30 தினங்களுக்குப் பிறகு, மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு தலைவரான மாவட்ட வருவாய் ஆய்வாளர் அவர்களுக்கு ஆய்வு மனு செய்ய வேண்டும். இம்மனுமீது 30 தினங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு ஆணை வழங்கப்படும். 
அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணையின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது


Sunday, April 19, 2015

கேஸ் சிலிண்டர் மூலம் விபத்து ஏற்பட்டால்?


கேஸ் சிலிண்டர் மூலம் விபத்து ஏற்பட்டால்........? 
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கும் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.
தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 50 லட்சம் பேர் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகிறார்கள். தேசிய குற்றப்பதிவகம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி குஜராத் மாநிலத்துக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகளவு காஸ் சிலிண்டர் விபத்துகள் நடைபெறுகின்றன.
இந்த விபத்தினால் பாதிக்கப்படும் நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.
காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தி வருகின்றன. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், அந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள் வார்கள். இந்த ஆய்வின்போது விபத்து நடைபெற்றதற்கான காரணங்கள் கண்டறியப்படும். விபத்தின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.
இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் காஸ் ஏஜென்சியையோ, சம்பந்தப் பட்ட எண்ணெய் நிறுவனத்தையோ அணுகலாம்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஸ் சிலிண்டர் விபத்து சம்பந்தப்பட்ட நுகர்வோரின் வீட்டில் நடந்திருக்க வேண்டும். வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் வணிக ரீதியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. அதேபோல் கோயில் திருவிழா மற்றும் சுற்றுலா செல்லும் இடங்களுக்கு சிலிண்டர் கொண்டு செல்லப்பட்டு விபத்து ஏற்பட்டிருந்தால் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காது. கூரை வீடுகளில் சிலிண்டர் விபத்து ஏற்பட்டாலும் இன்சூரன்ஸ் தொகையை பெற முடியாது. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் குறைந்தது ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் அதற்கான இன்சூரன்ஸ் தொகை பெறுவது குறித்து கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
சிலிண்டர் வெடி விபத்துகளை தவிர்க்க செய்ய வேண்டியவை:
டெலிவரி செய்யப்படும் சிலிண்டர் முறையாக சீல் செய்யப் பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
சிலிண்டரையும் அடுப்பையும் இணைக்கும் ரப்பர் டியூப்பை 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் வரை உழைக்கும் கடினமான டியூப்பை பயன்படுத்த வேண்டும்.
தினமும் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு ரெகுலேட்டரை 'ஆஃப்' செய்ய வேண்டும்.
மின்சார சுவிட்சை போடும் போது ஏற்படும் சிறிய தீப்பொறியே காஸ் தீப்பிடிக்க போதுமானது. எனவே காஸ் கசிவு ஏற்பட்டிருப்பதை அறிந்தால் மின் சுவிட்சை போடவோ, அணைக்கவோ கூடாது.
கசிந்த காஸ் வெளியேற கதவு, ஜன்னல் ஆகியவற்றை திறக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஜன்னல் கொக்கியை நீக்கும்போது ஏற்படும் சிறு உராய்வுகூட தீப்பொறியை உண்டாக்க போதுமானது.
* கசிவு ஏற்பட்டு இருப்பதை அறிந்தால் உராய்வு ஏற்படும் எந்த செயலையும் செய்யாமல் மெதுவாக வீட்டிலிருந்து வெளி யேறி, உடனடியாக தீயணைப்பு துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த முறைகளை பின்பற்றி னாலே 95 சதவீத விபத்துகளை தவிர்க்க முடியும்.

நன்றி: தி இந்து நாளிதழ் 2015

வெறிநாய்க்கடி


வெறிநாய்க்கடி
விலங்குகள் மூலம் நமக்குப் பரவும் நோய்களில் மிக முக்கியமானது ‘ரேபீஸ்’ (Rabies). தெருக்களில் அலையும் வெறிநாய்கள் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் ஏற்படுகிறது என்பதால், இதனை ‘வெறிநாய்க்கடி நோய்’ என்கிறோம். ரேபீஸ் எனும் வைரஸ் கிருமி, நாய், பூனை, நரி, கீரி, ஓநாய், குரங்கு, குதிரை போன்ற விலங்குகளைத் தாக்கி, அவற்றுக்கு நோயை உண்டாக்கும். இந்த வைரஸ் தாக்கப்பட்ட விலங்குகள், மனிதர்களைக் கடிக்கும்போது மனிதர்களுக்கும் ரேபீஸ் நோய் ஏற்படும்.
நோய் வரும் வழி:
ரேபீஸ் நோய் உள்ள நாயின் உமிழ்நீரில் இருந்து ரேபீஸ் கிருமி வெளியேறும். இந்த நாய், மனிதர்களைக் கடிக்கும்போது, அந்தக் காயத்தின் வழியாக, இந்தக் கிருமி உடலுக்குள் புகுந்துகொள்ளும். பிறகு, நரம்புகள் வழியாகவும், முதுகுத் தண்டுவடத்தின் வழியாகவும் மூளையை அடைந்து, அங்குள்ள திசுக்களை அழித்து ரேபீஸ் நோயை உண்டாக்கும். சிறிய அளவில் வெறிநாய் பிறாண்டினாலும், நம் காயங்களில் வெறிநாய், தன்  நாக்கினால் தீண்டினாலும் இந்த நோய் வரலாம்.

அறிகுறிகள்:
வெறிநாய் கடித்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஆறு வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் அறிகுறிகள் தொடங்கலாம். நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படும். காய்ச்சல், வாந்தி வரும். உணவு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாது. தண்ணீரைப் பார்த்தாலே, தொண்டைத் தசைகள் இறுக்கமடைந்து சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படும்.  ‘எங்கே உயிர் போய்விடுமோ’ என்று பயம் உண்டாகும்.  இவர்கள் தண்ணீரைக்  குடிக்க மாட்டார்கள். அதிக வெளிச்சம் அல்லது காற்று பட்டால் உடல் நடுங்கும். மனம் எந்த நேரமும் அமைதி இன்றி இருக்கும். எதையாவது பார்த்து ஓடப் பார்ப்பதும், மற்றவர்களைத் துரத்திக் கடிக்க வருவதுமாகவும் இருப்பார்கள். நோயின் இறுதிக் கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழக்க நேரிடும்.
ரேபீஸ் தடுப்பூசிகள்:
தற்போது, ரேபீஸ் நோயைத் தடுக்க நான்கு வகை தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளன. அவை, சுத்தப்படுத்தப்பட்ட கோழிக்கரு உயிரணுத் தடுப்பூசி (Purified Chick Embryo Cell Vaccine), மனித இரட்டை உயிரணுத் தடுப்பூசி (Human Diploid Cell Vaccine), சுத்தப்படுத்தப்பட்ட குரங்குச் சிறுநீரக உயிரணுத் தடுப்பூசி (Purified Vero Cell Vaccine), சுத்தப் படுத்தப்பட்ட வாத்துக் கரு உயிரணுத் தடுப்பூசி (Purified Duck Embryo Cell Vaccine). இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி ரேபீஸ் நோயைத் தடுக்கலாம். ஒருமுறை தரப்படும் ஊசிமருந்தின் அளவு 1 மி.லி. இதைப் புஜத்தில் தசை ஊசியாகச் செலுத்த வேண்டும்.
ரேபீஸ் தடுப்புப் புரதம்:
ரேபீஸ் நோயைத் தடுக்க, ‘ரேபீஸ் தடுப்புப் புரதம்’ (Human Rabies immunoglobulin) ஒன்றும் உள்ளது. இது, ரேபீஸ் கிருமிகள் காயத்தில் இருந்து உடலுக்குள் நுழைவதற்கு முன்பே, அவற்றை அழித்துவிடும் தன்மை உடையது. நாய் கடித்தவுடன், கடிபட்ட காயத்திலும், அதைச் சுற்றிலும் இது செலுத்தப்பட வேண்டும். நாய் கடித்த 7 நாட்களுக்குள் இதனைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும் பாதிக்கப்பட்ட வரின் ஒரு கிலோ உடல் எடைக்கு 20 யூனிட் என்ற அளவில் இதைச் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், ரேபீஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும்.
நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியவை:
குறைந்தது 10 நிமிடங்களுக்கு காயம்பட்ட இடத்தில், சோப்பு போட்டு, வேகமாக விழுகின்ற குழாய்த் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். காயத்தின் மீது பொவிடின் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான் போன்ற ஏதாவது ஒரு ‘ஆன்டிசெப்டிக்’ மருந்தைத் தடவலாம். முடிந்தவரை, காயத்துக்குக் கட்டுப் போடுவதையும், தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும். தையல் போடும் அளவுக்குக் காயம் மிகப் பெரிதாக இருந்தால், காயத்திலும் காயத்தைச் சுற்றிலும் தடுப்புப் புரதம் போட்ட பிறகே தையல் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து ரேபீஸ் தடுப்பூசி போட  வேண்டும். எந்த ஒரு காயத்துக்கும் ‘டெட்டனஸ் டாக்சாய்டு’ (Tetanus Toxoid) தடுப்பூசி அவசியம். கூடவே, காயம் குணமாக, தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளையும் சாப்பிட வேண்டும்.
தடுப்பூசி போடப்படும் முறை:
நாய் கடித்த நபருக்கு, நாய் கடித்த நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 14-வது நாள்,     28-வது நாள் என ஐந்து தவணைகள் (0, 3, 7, 14, 28) ரேபீஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். காயம் கடுமையாக ஏற்பட்டவர்கள் 6-வது ஊசியை 90-வது நாளில் போட்டுக்கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என்று எவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வீட்டு நாய் கடித்துவிட்டால், என்ன செய்வது?
வீட்டு நாய்க்கு முறைப்படி ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால்கூட, அந்த நாயால் கடிபட்டவரும் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் அந்த நாயை 10 நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். நாயின் குணத்தில் எந்தவித மாறுதலும் தெரியவில்லை எனில், முதல் மூன்று தடுப்பூசிகளுடன் (0, 3, 7-வது நாள்) நிறுத்திக்  கொள்ளலாம். நாயிடம் மாறுதல்கள் தெரிந்தால், மீதம் உள்ள தடுப்பூசிகளையும் (14,   28-வது நாள்) போட்டுக் கொள்ள வேண்டும்.
வெறிநாய் என்பதை  எப்படித் தெரிந்துகொள்வது?
ரேபீஸ் கிருமி தாக்கிய நாய் காரணமின்றிக் குரைக்கும். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும். பார்ப்போர் அனைவரையும் துரத்தும்; தூண்டுதல் இல்லாமல் கடிக்க வரும். நாக்கு வெளித்தள்ளி இருக்கும். எந்தநேரமும் எச்சில் ஒழுகிக்கொண்டிருக்கும். பொதுவாக, ரேபீஸ் நோய் வந்த நாய், 10 நாட்களுக்குள் இறந்துவிடும்.
முன்னெச்சரிக்கை தடுப்பூசி தேவைப்படுபவர்கள்:
சிலருக்கு நாய் கடிப்பதற்கான வாய்ப்புகள் அல்லது நாயிடமிருந்து ரேபீஸ் கிருமிகள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும், இப்படிப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
பெரும்பாலும், இந்தியக் குழந்தைகள்தான் பெற்றோர் துணையின்றி  தெருக்களில் விளையாடுகிறார்கள். நாய் பிறாண்டினாலோ, நாக்கினால் தீண்டினாலோ அதன் ஆபத்துகளை அறியாமல், பெற்றோரிடம் கூறாமல் விட்டுவிடுவார்கள்.
அடுத்ததாக, கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், நாய் வளர்ப்போர், நாய் பிடிப்போர், நாயைப் பழக்குவோர், தபால், காவல் துறைப் பணியாளர்கள், ரத்தப் பரிசோதனைக்கூடப் பணியா
ளர்கள், ரேபீஸ் நோய் ஆராய்ச்சியாளர்கள், ரேபீஸ் நோய்க்குச் சிகிச்சை தரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், விலங்குகளைப் பதப்படுத்துவோர், வன இலாகாவினர், மிருகக்காட்சி சாலையில் பணிபுரிவோர், தெருநாய்கள் கட்டுப்பாடின்றி அலையும் தெருக்களில் வசிப்போர் மற்றும் அதுபோன்ற ஊர்களுக்கு அடிக்கடி பயணம் செய்வோர், முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது அவசியம்.
முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி தவணை முறைகள்:
ரேபீஸ் தடுப்பூசியின் முதல் ஊசியை ஆரம்ப நாளில் போட்டுக்கொண்டு, இரண்டாவது ஊசியை ஏழாம் நாளிலும், மூன்றாவது ஊசியை 28-வது நாளிலும் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘ஊக்குவிப்பு ஊசி’யாக (Booster dose) இந்தத் தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை வெறி நாய் கடித்துவிட்டால், நாய்க்கடி காயத்தை நன்றாகச் சுத்தப்படுத்திவிட்டு, நாய் கடித்த நாளில் ஒரு தடுப்பூசியும், மூன்றாவது நாளில் ஒரு தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். இந்தக் காயத்தில் ரேபீஸ் தடுப்புப் புரதம் போட்டுக்
கொள்ளத் தேவை இல்லை.

நாய்க்கடி ஓலம்!
உலக அளவில், ஆண்டுக்கு சுமார் 55,000 பேர் ரேபீஸ் நோயால் இறக்கின்றனர். இவர்களில் 40 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் ரேபீஸ் நோயால் இறக்கின்றனர். இவர்களில் 35 சதவிகிதத்தினர் 15 வயதுக்குட்பட்டவர்கள்.  தமிழ்நாட்டில், 2011-ம் ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 17,848 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர் என்றால், இதன் கொடூரமான தாக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

வீட்டு நாய்க்கு ரேபீஸ் வராமல் காத்துக் கொள்வது எப்படி?
வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் நாய்க்குட்டிக்கு மூன்று மாதம் முடிந்ததும், ஒன்பது மாதம் முடிந்ததும் என  இரண்டு தவணைகள் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். அடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை ரேபீஸ் தடுப்பூசியைக் கட்டாயம் போட வேண்டும். தெரு நாய்களுடன் வீட்டு நாய்கள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு நாய் சோர்ந்திருந்தால், சாப்பிடாமல் இருந்தால் அல்லது எல்லோரையும் கடித்துக் கொண்டிருந்தால், நாயைக் கட்டிப்போட வேண்டும். அந்த நாயைக் கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.

Thanks : vayal 16.03.2015

கையெழுத்து


கையெழுத்து 
கையெழுத்து என்பது நம் ஒவ்வொருவருக்கும் நாமாக வடிவமைத்துக்கொள்ளும் அடையாளம். இக்கையெழுத்தை நாம் எவ்வாறு, வடிவமைக்கின்றோமோ, அதை பொறுத்து நம் குணாதிசயங்கள் முடிவுசெய்யப்படுகின்றதாக கூறுகின்றனர். உங்கள் கையெழுத்துடன் ஒப்பிட்டு பாருங்களேன்.
பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாக பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள். சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையையும் திட்டவட்டமாக ஒழுங்காக செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள்
இவர்கள். எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள், எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள். 

எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள், பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள். எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள், எந்தப் பிரச்னைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல்களை எதிர்த்து நிற்கும், மனஉறுதி படைத்தவர்கள்.
வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள், சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள். சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.
எழுத்துக்களை நீட்டி, நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள், எந்தக் காரியத்திலும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள். எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையும் கொண்டவர்கள்.
பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள், வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள். எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.
எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாகச் சுழிப்பவர்கள், விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள். 
எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள், குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள். எழுதும்போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப் போக்குடையவர்கள்.
உங்கள் கையெழுத்து எப்படி இருக்கிறது என்பதை வைத்து உங்கள் குணம் தீர்மானிக்கப்படுவது, எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. 
மிக மோசமான கையெழுத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் எழுத்தில் உள்ள நல்ல கருத்துக்களால் புகழ் பெற்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
அழகான கையெழுத்தை உடையவர்கள் பலர், இன்று மாதக்கடைசியானால் பிறரிடம் கடன் வாங்குபவர்களாக உள்ளனர். ஆகவே, அவரவர்களின் திறமை, பேச்சு சாதுர்யம், படிப்பு, அனுபவம், புத்திசாலித்தனம் ஆகியவைதான், அவரது ஆளுமை, வாழ்வில் சிறந்த மனிதராக மாறுவது ஆகியவற்றை தீர்மானிக்கிறது. 
ஆனாலும் கிராபாலஜி எனும் இந்த கையெழுத்து கலையை அலட்சியம் செய்து விட முடியாது. ஓரளவுக்கு நிபுணர்கள் கணிப்பது சரியாகவே இருந்து வருகிறது.

இல்லத்தரசிக்கு இன்ஷூரன்ஸ்

 இல்லத்தரசிக்கு இன்ஷூரன்ஸ்
ன்ஷூரன்ஸை பொறுத்தவரையில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கி வருகின்றன. ஏனெனில், இன்ஷுரன்ஸ் என்பது ஒரு குடும்பத்தின் நிதி இழப்பை ஈடுகட்டுவதற்காக மட்டுமே என்று கருதுவதனால்தான். உதாரணத்துக்கு, ஒரு ஆணோ, பெண்ணோ வேலைக்குச் சென்றால், அவர்கள் ஈட்டும் வருமானத்தை வைத்து, அவர்களுக்கு எவ்வளவு இன்ஷூரன்ஸ் தேவை என்று கண்டறியப்படுகிறது.
ஆனால், வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு அல்லது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மட்டுமே காப்பீடு செய்ய வேண்டுமா, வேலைக்குப் போகாமல் குடும்பப் பொறுப்புகளை நிர்வகிக்கும் இல்லதரசிகளுக்கு ஏன் இன்ஷூரன்ஸ் இல்லை என்கிற கேள்வி எழுகிறது. 

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இல்லதரசிகள் அவர்களின் வாழ்நாளின் பெறும் பகுதியை தங்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகவே  செலவு செய்கின்றனர். அவர்களின் நேரம் முழுவதும், குடும்பத்தினருக்கு உணவு தயாரிப்பது, குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பது முதல்  அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது என்ற வடிவில் ஒரு குடும்பத்துக்கு முக்கிய பங்களிப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இல்லத்தரசிகள் மனப்பூர்வமாக, பாசத்தோடு செய்யும் இந்த செயல்பாடுகள் விலை மதிப்பிட முடியாதவை. அதற்கெல்லாம் இவ்வளவுதான் சம்பளம் என ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்ய முடியாது. ஆனாலும் ஒருபேச்சுக்கு அவர்கள் செய்யும் செயல்பாடுகளுக்கு பண அடிப்படையில் குறைந்தபட்ச அளவிலான மதிப்பீட்டை செய்துபார்த்தால், உண்மையாகவே பெண்களின் பங்களிப்பை நம்மால் உணர முடியும்.
சிறுவர் பராமரிப்பு!
ஒரு தனிநபர் வருமானம் ஈட்டும் வீட்டில், இல்லத்தரசிகள் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பை சிறப்பாகச் செய்கின்றனர். இந்தப் பொறுப்பை அவர்கள் செய்யாமல், குழந்தையை பராமரிப்பு மையத்தில் வைத்து பராமரிக்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் மாதமொன்றுக்கு ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை ஆகிறது. இதுவும் ஒரு குழந்தைக்கு மட்டுமே. இரண்டு குழந்தை என்றால் பராமரிப்புச் செலவு இரு மடங்காக உயரும். மேலும், குழந்தைகளை, பள்ளிக்கு அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வருவதற்கு மட்டுமே மாதமொன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.2,000 வரை செலவாகும்.
சமையல் கலை!
ஒவ்வொரு இல்லத்தரசியும் குழந்தைகளின் தேவைக்கேற்ப அன்போடு உணவு தயாரிக்கிறார்கள். இதற்காக, அவர்கள் எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல், அனைவருக்கும் ஆரோக்கியமான உணவை தயார் செய்து தருகின்றனர். இந்த சமையல் கலை சேவையை அவர்கள் இல்லாதபோது, நன்கு சமைக்கத் தெரிந்த ஒருவரை வைத்து செய்தால் மாதமொன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை செலவாகும்.
வீட்டுப் பராமரிப்பு!
நாம் இருக்கும் வீட்டை சுத்தமாக பேணிப் பாதுகாத்து நிர்வகிப்பதை கலைநயத்துடன் ஒவ்வொரு இல்லத்தரசியும் சிறப்பாகச் செய்கின்றனர். அவர்கள் இல்லாதபோது, ஒரு பணியாளரை நியமனம் செய்து வீட்டை ஒருநாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய ஆகும் செலவு மாதமொன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 ஆகும்.
இதற்கான தீர்வுகள்!
ஒரு உதாரணத்துக்காக இப்படி வைத்துக் கொள்வோம். வீட்டில் இல்லத்தரசிகள் இல்லாத சூழல் வருகிறபட்சத்தில் மேற்கூறிய பொறுப்புக் களைச் செய்து முடிக்க ஆகும் செலவை குறைந்த அல்லது நடுத்தர வருமானம் வாங்கும் ஒரு குடும்பத் தலைவரால் நிச்சயம் சமாளிக்க முடியாது. பணக்காரக் குடும்பங்களால் மட்டுமே இந்த பணஇழப்பை சிறிதளவு சமாளிக்கலாம். இந்த பிரச்னைக்கு மிக நம்பகமான மற்றும் பாதுகாப்பான வழி என்றால் அது ஆயுள் காப்பீடுதான். குடும்பத்தில் ஒரு தலைவி இல்லாத போது ஏற்படும் இந்தச் செலவுகளுக்கு ஒரு வருடத்துக்கு ரூ.1,80,000 எனக் கொண்டால், அந்தத் தொகை கிடைக்குமளவுக்கு ஒரு ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இல்லத்தரசி களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்குவதில் பல விதிமுறைகளை வைத்துள்ளது. ஒரு இல்லத்தரசியின் கணவரின் வருமானம் இவ்வளவு இருக்க வேண்டும் என்றும், இல்லத்தரசிகள் பட்டப் படிப்பு முடித்திருக்கவேண்டும், மருத்துவப் பரிசோதனை கண்டிப்பாக எடுக்கவேண்டும் என்றும் சொல்கின்றன. மேலும், கவரேஜின் அளவு குறைந்தபட்சமாக ரூ.5 லட்சமாகவும் அதிகபட்சமாக ரூ.25 லட்சமாகவும் இருக்க வேண்டும் என்கிறது. ஆரோக்கியமான 30 வயதுள்ள ஒரு இல்லத்தரசிக்கு 30 வருடத்துக்கு, ரூ.25 லட்சம் ஆயுள் காப்பீடு எடுக்க சுமாராக ஆண்டுக்கு ரூ.3,000 பிரீமியம் கட்டினால் போதும்.
ஆனால், பாரம்பரிய பாலிசிகளான எண்டோவ்மென்ட் பாலிசியை எடுப்பது சுலபம். இருப்பினும், இதிலும் ஒருவருடைய வருமானம், குடும்பப் பின்னணி முதலியவற்றைக் கருத்தில் கொண்டே வழங்கப்படுகிறது. இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும், மேற்கூறிய மதிப்பீட்டைக் கருத்தில்கொண்டு, இல்லத்தரசிகளுக்கு காப்பீடு வழங்கினால், நடுத்தர வர்க்க மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
மருத்துவக் காப்பீடு!
மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு அவசியம்.  இவை தவிர, பெண்களுக்கென்று ஒருசில பிரத்தியேக காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. உதாரணத்துக்கு, பெண்கள் சம்பந்த நோய்களான மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், மகப்பேறு மற்றும் மகப்பேறு சம்பந்தமான நோய்களை கவர் செய்யும் பிரத்தியேக பாலிசிகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
Thanks :vayal 19.04.2015

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்


சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்

வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) மூலம் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 15 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இதில் ஏப்ரல் 17-ஆம் தேதி நிலவரப்படி 12.40 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
3 நாள்களில் மானியம்: வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்தவுடன், அவர்களது வங்கிக் கணக்கில் முன்வைப்புத் தொகையாக ரூ.568 செலுத்தப்படுகிறது.
அதன் பின்னர் அந்தந்த மாதங்களுக்கான மானியத் தொகை, வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து எரிவாயு உருளைகளைப் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து 3 வங்கி வேலை நாள்களில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
ஆனால், வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் மானியத்தொகை செலுத்தப்பட்ட பின்னரும் அதற்கான தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படுவதில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால் இணையதள வங்கிச் சேவை வசதி உள்ளவர்கள் அதன் மூலமாகவும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்றும் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்தத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள் அல்லது இணைய விரும்பி விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து இணையதளத்தின் மூலமோ அல்லது எரிவாயு முகவரின் அலுவலகத்துக்கு நேரில் சென்றோதான் அறிய முடிந்தது.
எஸ்.எம்.எஸ். வசதி: இதனைப் போக்கும் வகையில், இணையதளத்தைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களும், எளிய முறையில் நேரடி மானியத் திட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்களைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தாங்கள், சமையல் எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
இதன்படி, "இண்டேன்' வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு ஏற்ற குறியீடுகளை "டைப்' செய்து 81307 92899 என்ற எண்ணுக்கும், "பாரத் கேஸ்' வாடிக்கையாளர்கள் 77382 99899 என்ற எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.
பின்னர் உடனடியாக வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி : தினமணி நாளிதழ் 18.04.2015