disalbe Right click

Saturday, June 20, 2015

பிராணாயாமம்


பிராணாயாமம் பற்றி தெரிந்து கொள்வோமா?

இன்றைய அவசர யுகத்தில், மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். சுற்றுப்புறக் காற்றும் சுத்தமாக இல்லை. மாசு படிந்த காற்றை சுவாசிப்பதன் விளைவு, சுவாசப் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், சளி, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி... போன்ற பல்வேறு நோய்களும் வரிசைகட்டி நம்மை வாட்டுகின்றன.  
'தியானம், பிராணாயாமம், யோகா செய்தாலேபோதும்; நோய் எதுவும் நெருங்காது’ என்று ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுவதும், பிராணாயாமப் பயிற்சி எப்படிச் செய்வது என்பது பற்றி கூகுளில் தேடுவதும், யாரிடம் கற்பது என்று குருவைத் தேடி ஓடுவதுமாக ஒருவிதத் திணறலுடனே காலமும் ஓடுகிறது.  
''உடலிலும் மனதிலும் சக்தியைப் பெருக்கி, இரண்டிலும் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும், வெளியில் உள்ள காற்றுக்கும், உடலில்  இருக்கும் காற்றுக்கும் பாலமாக உள்ள சுவாசத்தைக் குறிப்பிட்ட வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடியதுமான அற்புதக் கலைதான் 'பிராணாயாமம்’ '' என்கிறார், இந்தக் கலையில் அனுபவம் பெற்ற என்.ஆர்.சம்பத்.
இவர், சிறு வயது முதலே உபநிடதம், பிரம்ம சூத்திரம், இதிகாசங்கள், சாத்வீகப் புராணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். தமிழக அரசின் விருதுகள் உள்பட, பல விருதுகளைப் பெற்றவர்.
பிராணாயாமக் கலையின் சிறப்புகளையும், பயிற்சி முறைகளையும், பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்களைப் பற்றிய வியத்தகு விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
''முனிவர்களும் யோகிகளும் நமக்கு அளித்த மிகப் பெரிய வரப்பிரசாதம்தான் இந்தப் 'பிராணாயாமக் கலை’. தீர்க்கமான சிந்தனையும் தெளிவான அறிவும் அமைய உதவும் கலை இது. மூச்சுக்காற்றானது, உள்ளே வருவதும் வெளியே போவதும் நிகழாமல் போனால், உயிர் ஓர் உடலில் நிலை கொள்ளாது.  
துக்கமான உணர்வில் ஒருவிதமாகவும், வியப்பு உணர்வில் இன்னொரு விதமாகவும், சோர்வாக இருக்கும்போதும்  ஒரு வகையாகவும், உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்போது வேறு ஒரு வகையாகவும் மூச்சின் தன்மை இருப்பது இயற்கை.  
இதைத்தான் அந்தக் காலத்தில், மனம் ஒவ்வோர் உணர்வில் இருக்கும்போதும் சுவாசம் எப்படி நடக்கிறது என்பதைக் கண்டறிந்து, நமக்கு எந்த உணர்வு தேவையோ அந்த உணர்வு உண்டாகும்படி சுவாசத்தை மாற்றி அமைத்துக்கொண்டனர்.
சுவாசமானது,  ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, மூக்கின் இடது பக்கத் துவாரத்தில் இருந்து வலது பக்க துவாரத்தின் வழியாக மாறிமாறி நடைபோடுவதை அறிந்தனர். இதன் நன்மை தீமைகளைக் கண்டறிந்து, இரு துவாரங்கள் வழியிலும் ஒரே நீளமும் தன்மையும் இருக்கும்படியாக மூச்சை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் மூச்சுப்பயிற்சி செய்வதைக் கண்டுபிடித்தனர்.  
உடலை உரப்படுத்தி, மனதை நிலைப்படுத்தி, சுவாசத்தையும் மூச்சையும் ஒழுங்குப்படுத்தி, அதன் மூலம் பயனடைய பிராணாயாமக் கலையை அறிந்து சாத்திரமாக்கினர். மனம் இல்லையேல் மனிதன் இல்லை. அந்த மனதைக் கட்டுப்படுத்தவே பிராணாயாமம் உதவுகிறது.
சுவாசத்தை நாம் மூக்கு வழியாக உள்ளிழுத்ததும், அது தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குப் போகிறது. பிறகு, இடம் வலம் பிரியும் குழல்களின் வழியே நுரையீரல்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான காற்று அறைகளுக்குச் செல்கிறது. இது நம் மார்பில் அடங்கியிருந்தாலும், இதை வெளியே எடுத்துப் பிரித்துப் பரப்பி வைத்தால் 1,40,000 சதுர அடி பரந்திருக்குமாம்!
சுவாசிக்கும் ஐந்து இடம்
மூக்கு வழியாக சுவாசிக்கும்போது, உட்புகும் காற்றானது, பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன் என்ற  ஐந்து இடங்களில் இருந்து ஐந்து வேலைகளைப் புரிகின்றது.
1. பிராணன்:  உடலின் மேலே இயங்கும் இது 'தலைமை சுவாசம்’ எனப்படுகிறது.  மேலும், நுரையிரலை இயக்கி சுவாசம் மற்றும் ரத்த ஓட்டத்தை நிகழ்த்துவதோடு புலன்களையும் இயக்குகிறது.
2. அபானன்: கீழ் உடலில் இருந்து கீழ்நோக்கிய வேலைகளை நிகழ்த்துகிறது. கழிவுகளை வெளியேற்றுகிறது. 'குதம்’ எனும் மலத்துளையே இதனுடைய இடம்.
3. உதானன்: உடலை எழுந்து நிற்கச் செய்வது, மேல் நோக்கி இயங்கும். உணவை விழுங்குதல், உறங்க வைப்பது. தொண்டையில் இருக்கும் இது, உயிர் பிரிகையில் ஸ்தூல உடலில் இருந்து நுட்ப உடலைப் பிரிக்கிறது.
4. சமானன்: உணவைச் செரித்து, சக்தியை ரத்தத்தில் கலக்கச் செய்வது. தொப்புள் பகுதி இதனுடையது. வாயுக்களைச் சமப்படுத்தும்.
5. வியானன்: ரத்த ஓட்டத்தை நடத்துகிறது. உடலின் உறுப்புகளிலும் பரவி வேலை செய்கிறது.
தேவைகள்
நம்மை நாமே பயிற்சிக்குத் தயார் செய்துகொள்ளத் தேவையானவை:
 தேர்ந்த குரு
 பயிற்சிக்கு ஏற்ற இடம்
 முறையான உணவு
 தகுந்த காலம்
 நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்
 உடல் தூய்மை
 தொடர்ச்சி பயிற்சி
குரு: அதிக நேரம் மூச்சை நிறுத்திப் பழகவும், வகை வகையான பிராணாயாமங்களில் திறமை பெறவும் சிறந்த குருவின் நேரடிப் பார்வையில் பயிற்சி செய்வது.  
ஏற்ற இடம்: மூச்சுப்பயிற்சிக்கு என்று தனியாக ஓர் இடம் வைத்துக்கொண்டால் நல்லது. திறந்தவெளி, இயற்கைக் காட்சிகள் நிறைந்த சூழல், கடற்கரை, ஆற்றங்கரை, வீட்டின் மொட்டைமாடி... என நல்ல காற்றும் வெளிச்சமும் வரும் இடமாகத் தேர்வு செய்யவேண்டும்.  
முறையான உணவு: மனதுக்கும் உணவுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆன்மிகம், யோகம் போன்ற பயிற்சிகளைப் பழகுபவர்களுக்கு மன அமைதி அவசியம். மனதை சாந்தமாக வைத்திருக்க, சாத்வீக உணவு உட்கொள்வதே நல்லது. இதனால், உள்ளேயோ, வெளியேயோ மூச்சைக் கும்பகம் செய்யும்போது, விரும்பும் நேரம் வரை நிறுத்த முடியும்.  
எளிதில் ஜீரணமாகக்கூடிய தானிய உணவுகள், சாறுள்ள பழங்கள், பச்சைப் பயறு, காய்கறிகள், எலுமிச்சம்பழச் சாறு, பால், வெண்ணெய், நெய், கைக்குத்தல் அரிசி, சிவப்பரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு மாவால் ஆன உணவுகள் ஆகியவை  எடுத்துக்கொள்ளலாம்.
உப்பு, புளிப்பு, காரம், கசப்பு மிகுந்த உணவுகளை உண்பதைத் தவிர்க்கவேண்டும். சமைத்து வெகுநேரம் ஆன, பழைய, கெட்டுப்போன உணவுகளைச் சாப்பிடக் கூடாது. பச்சைக் காய்கறிகள், தேங்காய் போன்றவற்றைச் சாப்பிடலாம். அதிகம் வெயிலில் அலைவதோ, நெருப்புக்கு அருகில் இருப்பதோ கூடாது.  
அரை வயிறு உணவும், கால் வயிறு காற்றும், கால் வயிறு தண்ணீரும் உட்கொள்ள வேண்டும். அதிகப் பசியுடனோ, சாப்பிட்ட உடனோ பிராணாயாமம் செய்யக்கூடாது.
தகுந்த காலம்: மார்ச் முதல் ஏப்ரலில் அதாவது வசந்த காலத்தில் பயிற்சியைத் தொடங்கலாம். இலையுதிர் காலமான செப்டம்பர் முதல் அக்டோபர் வரைகூட, பயிற்சியைத் தொடங்க ஏற்ற காலம். பிற்பகலில் காற்றில் சூடு அதிகம் இருப்பதால், பயிற்சிகளை தவிர்த்துவிடலாம். காலை 4 மணியில் இருந்து 6 மணி வரையிலான குளிர்ந்த சமயத்தில் பயிற்சி செய்வது உசிதம்.
நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்: அதிகாலை வெயில் வருமுன் பழகுதல் நல்லது. மாலை சூரியன் மறையும் நேரம் அதாவது 6 மணிக்குச் செய்யலாம்.
முதலில் நாடி சுத்தீயில் தொடங்கும்போது, காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு என நான்கு வேளைகளில் பழகுவார்கள். இப்படி ஒரு மாதம் செய்து, நாடிகளைத் தூய்மை செய்துகொள்ளலாம்.  
உடல் தூய்மை: தினமும் காலையில் எழுந்ததும், பல் துலக்கி, கை, கால்களை நன்றாக கழுவவேண்டும்.  பிறகு, கடவுளை வணங்கிவிட்டு, பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.
உடல் சுத்தம் மனதையும் புத்துணர்ச்சியாக்கும். கோபம், வெறுப்பு, கூடாத உணவு, மாறான நடவடிக்கை, கூடா குணம், நடத்தைக் கோளாறு உள்ளவர்களுக்குப் பிராணாயாமக் கலை கை கூடாது.
தொடர் பயிற்சி: அன்றாட கடமைகளை செய்வது போல், மூச்சுப்பயிற்சியையும் தொடர்ந்து செய்துவந்தால், ஆர்வம் அதிகரிக்கும்.  தினமும் ஒருவித புத்துணர்ச்சி கிடைப்பதை உணரமுடியும்.
கடவுள் மீதான நம்பிக்கை, உணவு, பேச்சு, செயல், உறக்கம்... என எதிலும் மிதமாக இருத்தல், அக்கறையுடனும் விடாமுயற்சியுடனும் ஈடுபடுதல் இதுவே பிராணாயாமத்தில் வெற்றிபெறத் தேவையான தகுதிகள்.  
பிராணாயாமத்தின் நிலைகள்
மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை , உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
முதல் நிலை:
இது சாதாரணப் பிராணாயாமம்.
'தாழ்ந்த வகை’ எனப்படும் இந்த முதல் விதத்தில், 12 முறை உள்ளே இழுத்து (பூரகம் செய்து), 48 முறை உள்ளே வைத்திருந்து (கும்பகம் செய்து), 24 முறை மூச்சை வெளியே (ரேசகம்) விடுவது.  (ஒரு முறை என்பது, கண் மூடி கண் திறக்கும் கால அளவு. இதை ஒரு மாத்திரை என்றும் கணக்கிடலாம்.)
ஒரு மாதம் வரை திணறல், சிரமம் இல்லாதபடி செய்ய பழகியதும், நடுநிலைக்குப் போகலாம்.
நடு நிலை:
இதில், மூச்சை 16 முறை உள்ளிழுத்து 64 முறை நிறுத்தி, சீராக 32 முறை வெளியே விடலாம்.  உடம்பில் வியர்வை வழியும். அதைத் துண்டால் துடைத்துக்கொள்ளாமல் வெறும் கைகளாலேயே துடைப்பது நலம்.
இந்தவிதமான பிராணாயாமத்தை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து பழகிட வேண்டும். இதன் பிறகே உயர்நிலை பிராணாயாமத்தை அடையவேண்டும்.
உயர் நிலை:
இதில் 24 முறை மூச்சை உள்ளே இழுக்கவும். உடனே, 96 முறை  உள்ளே நிறுத்திக் கும்பகம் செய்யவும்.  கும்பகம் செய்தவுடன் 48 முறை வெளிவிடவும்.  இப்படி ஒழுங்காக உயர்த்தி, திணறல் இன்றியும், மூச்சை விரைவின்றி சீராகவும் இழுக்கவும் விடவும் பழகவேண்டும்.  
காலை 4 மணிக்கு அதாவது சூரிய உதயத்துக்கு முன் எழுந்து விரும்பும் தெய்வத்தை வணங்கிவிட்டு, பிராணாயாமத்தை ஆசன நிலையில் பயிற்சி செய்யவேண்டும்.  
காலை 11 மணி, மாலை 5 மணி, இரவு 11 மணி என வைத்துக்கொண்டு நான்கு முறை பயிற்சியில் ஈடுபடவேண்டும்.  ஒரு தடவையில் 80 என்று 320 பிராணாயாமங்கள் ஒரு நாளில் பயிற்சி செய்வதுதான் தீவிர பயிற்சி.
பலன்கள்: பயிற்சியில் நாம் பிரணவ மந்திரத்தை ஜெபிக்குபோது உடலில் வெப்பம் உண்டாகிறது. இது அழுக்குகளைப் போக்கும். புது நிலையில் நாடிகள் தூண்டப்படுகின்றன. சிலருக்கு, உடலின் பல பாகங்களில் வலிகூட ஏற்படலாம். இருந்தாலும் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வரவேண்டும்.  உடல் வெப்பத்துக்கு ஏற்ப, பால், வெண்ணெய் ஆகியவை பயன்படுத்தவேண்டும்.  எண்ணெய்க் குளியல் அவசியம் தேவை.
எளிய பிராணாயாமங்கள்
உடலின் உதவியின்றி மனம் ஒன்றும் செய்ய முடியாது. மனம் அனுசரிக்காமல் உடலாலும் ஒன்றும் சாதிக்க முடியாது. ஆகவே, இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயல்படுமாறு பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தலைவலி, வயிற்றுவலி, சூடு, குளிர்... என வேறு உபாதைகளுடன் உடல் இருந்தால், அது நோய் கொண்ட நிலை. இந்த நிலையில் மனதால் பிரயோகப் பயிற்சிகள் செய்ய முடியாது. ஆகவே, உடலை ஆசன சாத்திரப்படி பல ஆசனங்களால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். உடல் நினைவே இன்றி இயங்க முடியும்போதே நாம் உடல் நல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று பொருள்.
எளிமையான ஓர் ஆசனத்தில் நீண்ட நேரம் உட்காரக்கூடிய பக்குவத்துக்கு நாம் தயாராக வேண்டும். நெஞ்சு, கழுத்து, தலை போன்றவை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். உடல் முன்னால், பின்னால், இடம், வலம் என எப்படியும் சாயாமல், வளையாமல் நேராக உட்கார்ந்து, நிமிர்ந்திருக்க வேண்டும்.  
தொடர்ந்து உட்காரும்போது ஆசன நிலை சரியாக அமைந்துவிடும். சற்றே குண்டாக இருப்பவர்களுக்கு பத்மாசனம் உடனே வந்துவிடாது. ஆசனம், சரியாக வரும் வரை பயிற்சியைத் தொடங்காதிருக்க வேண்டியதில்லை. ஆசன நிலையுடன் இதையும் பழகிவரலாம்.
வயோதிகர்களும் முடியாதவர்களும் நாற்காலியில் உட்கார்ந்தபடியே பிராணாயாமம் செய்யலாம்.  
            
ஒழுங்குமுறை
பிராணனின் வெளித்தோற்றம் - உடல்மூச்சு. எனவே, ஒழுங்கற்று நடக்கும் மூச்சை முதலில் ஒழுங்குபடுத்தவேண்டும்.  இதில் இருந்து பிராணாயாமம் தொடங்கிவிடுகிறது.
இதில் ஜெயித்தால் உடல், மன இயக்கங்கள், பிறருடைய செயல்கள், பிரபஞ்ச இயற்கை... என எல்லாவற்றையும் படிப்படியாகக் கட்டுப்படுத்தும் திறன் வந்தடையும்.
மனநிலைக்கு ஏற்ப மூச்சு விரைவாகவும் மெதுவாகவும் இல்லாமல், அதை அடக்கி, மாற்றி அமைக்கும்போது,  மாறுபடும் மனநிலையைக்கூட மூச்சு கட்டுப்படுத்திவிடுகிறது.
பலன்கள்: உடலும் மனமும் கட்டுப்பட்டு இருக்கும். நினைத்ததைச் சாதிக்க முடியும். நல்ல தோற்றப் பொலிவு, உடல் பலம், மன உறுதி, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம். வீரியமும் ஒருமுகப்பட்ட மனமும் எதையும் வசீகரிக்கும் சக்தியும் மேம்படும்.
சுவாசக் கணக்கு
ஒருவர் நாள் ஒன்றுக்கு சுமார் 21,600 முறை மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகிறார். அவர் வேகவேகமாக மூச்சு விடும்போது, இந்த எண்ணிக்கை சீக்கிரமே குறைந்து, ஆயுளும் குறைகிறது. யோகி, ஆயுளை ஆண்டுக்கணக்கால் அளவிடுவது இல்லை. மூச்சுக் கணக்கில்தான் அளக்கின்றனர். உயிராற்றல் அதாவது பிராணன், வெளி மூச்சுக்குப் பிறகு உள்ளே இழுத்துக்கொள்ளும் மூச்சின் அளவிலேயே அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். ஒருவர், நிமிடத்துக்கு 15 முறை மூச்சை இழுப்பதால் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறார் என்று கணக்கிடப்படுகிறது.
சுவாச ஒழுங்கு
உள்ளிழுக்கும் மூச்சை மெதுவாக இழுத்துப் பழகுவதுபோல, வெளிவிடுவதையும் மெள்ளச் செய்தால், இதுவே சுவாச ஒழுங்கு.உள்ளிழுப்பதை 'சுவாசம்’ என்றும், வெளிவிடுவதை 'பிரச்வாசம்’ என்றும் கூறுவர். இரண்டின் வேகத்தையும் குறைத்தால் அதை நிகழ்த்தும் பிராணன் நமக்கு லாபமாகிறது. ஆகவே, நிமிடத்துக்கு 15 முறை மூச்சுவிடும் மனிதனுக்கு, 100 ஆண்டு ஆயுள். ஒரு நிமிடத்துக்கு நான்கே மூச்சுவி டும் ஆமை எத்தனை காலம் வாழ்கிறது தெரியுமா? 400 ஆண்டுகள்! ஆச்சரியமாக இருக்கிறதுதானே!? பிராணாயாமம் மூலம் சக்தி அதிகரிக்கிறது. சக்தி இல்லையெனில் சுகம் இல்லை. எனவே, பிராணனே உடலுக்கான பலத்தையும் சுகத்தையும் தரவல்லது.  
பிராணாயாமங்களிலும் பல வகை  
சீத்காரி - உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
சீதளி - உடல் குளிர்ச்சியை உணரச் செய்யும்.
உஜ்ஜாயி - மார்புப் பகுதி நலம் அடையும்.
பிரமரீ - வண்டு போல ரீங்காரம் செய்வது.
நாடி சுத்தீ - நாடிகளைத் தூய்மையாக்குதல்.
பிளவனீ - வயிற்றில் பிராணனை நிரப்புதல்.
சுரியபேதா - பிங்கலை வழி பூரகம் செய்தல்.
  மேல் உடலைத் தூய்மையாக்கும்.
மூர்ச்சா - மூர்ச்சை வரும் வரை செய்தல்.
கபாலபாதி - கபாலத்தை ஒளிமிகச் செய்தல்.
பிராணாயாமத்துக்கான எளிய  பயிற்சிகள்
நாடி சுத்தீ
நாடிகள் அழுக்குகளால் அடைப்பட்டு இருந்தால் அவற்றுள் வாயு வடிவப் பிராணன் நுழைய முடியாது. எனவே, நாடிகளைத் தூய்மையாக்கும் முறைகளில் நிர்மானு, சமானு என்ற இரண்டு வகைகள் உண்டு. நிர்மானு என்பது, உடலைத் தூய்மை ஆக்கும் முறைகளில் நாடி சுத்தம் செய்வது. சமானு என்பது வேதமந்திர பீஜ மந்திரத்துடன் மூச்சை இழுத்துவிட்டுச் செய்வது.
பிராணாயாமத்தின் பொதுவான அளவு 1:4:2. அதாவது, உள் மூச்சு ஒன்று, கும்பகம் நான்கு, வெளி மூச்சு இரண்டு. இப்படி ஒரே ஒரு பிராணாயாமம் தினமும் பழகினாலும் போதும்.  
செய்முறைகள்:
1 முதலில் கால்களைக் குறுக்காகப் போட்டுப் பத்மாசனத்தில் அமரவும். கண்களை மூடி, புருவ மையத்தில் மனதைப் பதிக்கவேண்டும். வலது கையின் பெருவிரலையும், கடை மூன்று விரல்களையும் பிரித்துக்கொண்டு மூக்கைப் பிடியுங்கள். வலது பெருவிரலால் மூக்கின் வலதுபக்கத் துளையை அடைத்துக்கொள்ளவும்.  இடது மூக்குத் துளை வழியே முடிந்தமட்டும் மூச்சை ஒரே சீராக ஓசையின்றி உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்குத் துளை மூலம் மூச்சை மெள்ள, சீராகத் தொடர்ந்து வெளியே விடுங்கள். மீண்டும் மீண்டும் 12 முறை இப்படிச் செய்யவும். இது ஒரு சுற்று.
பிறகு, வலது மூக்கைத் திறந்து மற்ற மூன்று விரல்களால் இடது மூக்கை அடையுங்கள். பெருவிரலை எடுத்து மூக்கின் வலது பக்கமாக முடிந்த அளவு மூச்சை மெள்ள உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்கு மூலம் மூச்சைச் சீராக வெளியே விடுங்கள். இதையும் 12 முறை செய்தால் ஒரு சுற்று. மூச்சை இழுக்கும்போதும் விடும் போதும் 'ஓம்’ அல்லது ஏதாவது மந்திரத்தை ஜபிக்கலாம்.
முதல் வாரம், ஒரு சுற்று இரு மூக்கிலும் சேர்த்துச் செய்யுங்கள். இரண்டாம் வாரத்தில் இரண்டு சுற்றும், மூன்றாம் வாரத்தில் மூன்று சுற்றும் செய்யுங்கள். ஒரு சுற்றுச் செய்தவுடன் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இந்த ஓய்வில் சாதாரணமாகவே சுவாசிக்கலாம். இதுவே ஓய்வுதான்.
இந்தப் பயிற்சியில் உள்ளே மூச்சை நிறுத்தும் கும்பகம் இல்லை. உங்கள் திறமைக்கேற்ப அதிகச் சுற்றுகளைப் பழகலாம்.
பலன்கள்: இது மூச்சை ஒழுங்குப்படுத்தும்.  இதனால் மூச்சளவு ஒரே சீராகி, நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும். உடலில் பலமும் கூடும்.  
2 இரு மூக்குத் துளைகளின் மூலமும் முடிந்த அளவுக்கு மூச்சை ஓசையின்றி ஒரே சீராக மெள்ள இழுத்து, நுரையீரல்களில் நிரப்பிக்கொள்ளவும். உடனே, அதேபோல இரண்டு மூக்குத் துளைகள் மூலமும் மூச்சை வெளியே விடவும். இதை 12 முறைகள் செய்ய ஒரு சுற்றாகும். நேரம், திறமைக்கு ஏற்ப அதிகச் சுற்றுகள் செய்யலாம். இதிலும் கும்பகம் இல்லை.
3உங்களுக்குத் தெரிந்த ஆசனம் எதுவோ அதுபோல் அமருங்கள். மூக்கின் வலதுபக்கத்துளையை வலப் பெருவிரலால் மூடி, மூக்கின் இடதுபக்கத் துளையில் சுவாசத்தை இழுங்கள். இடது துளையை மூடியவாறு வலது மூக்கு வழியாக மெள்ள இழுத்த காற்றை வெளியே விடுங்கள். வலமூக்கு வழியே முடிந்த அளவு காற்றை உள்ளிழுங்கள். இடமூக்கைத் திறந்து அதன் மூலம் உள்ளே இழுத்த காற்றை வெளியே விடுங்கள். இதிலும் கும்பகம் இல்லை. 12 முறை இதைச் செய்யலாம்.  இது, ஒரு சுற்றுக் கணக்கு. இதில் மூக்கு மாற்றிச் செய்வதே சிறப்பு.
4நாற்காலி, சோபாவில் வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள். இரு மூக்குத் துளைகள் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மூச்சை உள்ளே இழுங்கள். முடிந்தவரை உள்ளே நிறுத்திக்கொள்ளுங்கள். பிறகு வெளியே சீராக மெள்ள நியமப்படி வெளியே விடுங்கள். இது எளிய கும்பகமாகும். உள்ளிழுத்தல், நிறுத்தல், வெளியேவிடலில் குறிப்பிட்ட விகிதம் எதுவும் அளவாக இல்லை. ஆனால், நன்கு இழுப்பது, முழுவதும் வெளிவிடுவதும், சுகமாக இருக்கும் வரை மட்டுமே அடக்குதலும் உண்டு.
பலன்கள்: ரத்த ஓட்டம் சீராகும். களைப்பு அகலும். உடல் உறுப்புகளிடையே ஒழுங்கு, ஒருங்கிணைப்பு உண்டாகும்.  மனம் ஒருநிலைப்படும். கோபம், தீய சிந்தனை அகலும். மன உறுத்தல், உளைச்சல் நீங்கும். படிப்பவர்களுக்கு நல்ல ஞாபகசக்தி தங்கும். மன ஆற்றல் அதிகரிக்க இந்தப் பயிற்சியைப் பழகலாம். சோர்வு இருக்காது. 30 வருட ஆஸ்துமா பிரச்னைகூட தீரும். ஒரு முறை செய்துவிட்டாலே அடிக்கடி செய்யத் தூண்டும் பயிற்சி இது.  
சீத்காரி
இதற்கு 'குளிரானது’ என்று பொருள். செய்வது மிகவும் எளிது. இந்தக் கோடை காலத்தில் இதைச் செய்வதன் மூலம் உடல் வெப்பத்தைத் தணித்துக்கொள்ளலாம்.
ஏதேனும் ஓர் ஆசனம் போட்டு அமருங்கள். இரு வரிசைப் பற்களையும், சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். வாய்க்குள் நாக்கை மேலண்ணத்தில் ஒட்டியவாறு  கொஞ்சம் மடித்துக்கொள்ளுங்கள். 'இஸ்ஸ்ஸ்...’ என்று காற்றை வாய்வழியே உள்ள பல் இடுக்கு வழியாக உறிஞ்சவேண்டும். முடிந்தவரை கும்பகம் செய்யலாம்.
காரம் நாவில் பட்டதும், அல்லது ஜில்லென ஐஸ் பட்டால் 'ஸ்..ஸ்’ என்று காற்றை இழுப்பது போலத்தான். பிறகு,  மெள்ள  மூக்கின் வழியே காற்றைச் சீராக வெளியேற்றுங்கள்.
வாயால் இழுத்து மூக்கால் வெளிவிடுவதால், முடிந்தவரை பற்கள் ஒன்றாக சேர்ந்தபடி இருக்கவேண்டும். கும்பகம் செய்யும்போது நாக்கின் நுனி மேலண்ணத்தில் தொட்டு அமுத்தியிருக்கவேண்டும். காலை, மாலையில் 10 முறை செய்யப் பழகுங்கள்.  
 
சவாசனத்தில் பிராணாயாமம்
இது உடல் முழுவதுக்குமான பிராணாயாமம்.
சூடு இல்லாத சமமான ஒரு தரையில் விரிப்பைப் போட்டு, தரையில் முதுகு படும்படி மல்லாந்து படுங்கள்.  கைகளையும் கால்களையும் நன்றாக நீட்டிக்கொள்ளுங்கள். உடல் உறுப்புகளை விறைப்பு இன்றி கிடத்துங்கள். பக்கவாட்டில் நீண்டு கிடக்கும் கைகளில் உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி இருக்கட்டும். மூட வேண்டாம். பாதங்கள் நேரே சற்று விலகி இருக்கட்டும். உடலின் தசைகள், நரம்புகள், உறுப்புகள் எல்லாம் தளர்ந்து இருக்கட்டும். அகலமாக இருந்தால் கட்டிலில் கிடந்து இதைப் பண்ணலாம்.
இரு மூக்குத் துளைகள் மூலமாக ஓசையின்றி மூக்கு சுருங்குதலோ, விரிதலோ இல்லாமல் மெள்ள சீராக மூச்சை உள்ளே இழுங்கள். முடியும் வரை சிரமம் இல்லாத வரையில் மூச்சை உள்ளே நிறுத்துங்கள். விடத் தோன்றும்போது இரு மூக்கின் வழியாகவும் மெள்ளச் சீராக மூச்சை, தொடர்ச்சியாக வெளியே விடுங்கள்.
இப்படி காலையில் 10 முறையும், மாலையில் 10 முறையும் செய்து பழகுங்கள். மூச்சை இழுக்கும்போதும் விடும்போதும் 'ஓம்’ என்று ஜபிக்கலாம். கும்பகத்தின்போதும் ஜபிக்கலாம்.  
பலன்கள்: மனமும் உடலும் பூரண ஓய்வுகொள்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் சுகமாக இதைப் பயிற்சிக்கலாம். மனக்கொதிப்பு, மன அழுத்தம், மறதி, படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும். இதயம் இதமாக இருக்கும்.
    
நடந்துகொண்டே பயிற்சி
தோள் பட்டைகள் பின் செல்ல, தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். ஓர் அடிக்கு ஒன்று என, மூன்று அடிகள் எடுத்து, மூன்று 'ஓம்’ அல்லது ஏதாவது ஒரு மந்திரம் சொன்னபடி மெள்ள மூச்சை இழுங்கள். பிறகு, 12 அடிகள் எடுத்து வைத்து 12 'ஓம்’களை ஜபித்து மூச்சை உள்ளே நிறுத்தி வையுங்கள். பிறகு, ஆறு அடிகள் எடுத்துவைத்து ஆறு 'ஓம்’களைச் சொல்லி மெள்ள மூச்சை வெளியே விடவேண்டும். இது ஒரு சுற்று.  
இதன் பிறகு, சற்று ஓய்வாக நடக்கலாம். காலடி வைக்கும்போது 'ஓம்’ எனச் சொல்வது சிரமமாகத் தெரிந்தால், காலடி எடுத்து வைத்தல் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதிக வேலைச் சுமையுள்ளவர்கள் வாக்கிங் போகும்போது காலையிலும் மாலையிலும் இதைச் செய்யலாம். சுத்தமான காற்றில் நடந்தபடியே பிராணாயாமம் செய்வது, உடலுக்கு மிகவும் சந்தோஷத்தைத் தரும். அமர்ந்திருந்து செய்தே பழகியவர்கள், இப்படி நடந்தபடியே செய்யலாம்.  
பலன்கள்: தாகமாக இருக்கும்போது இந்தப் பயிற்சியைச் செய்தால் தாகம் தீரும். முக அழகு கூடும். உடல் வலிமை உண்டாகும். பசி, தாகம், தூக்கத்தை வெல்லலாம். விஷத்தைக்கூட முறியடிக்கும் வல்லமை பெற்ற இந்தப்பயிற்சி, உடல் வெப்பத்தையும் குறைக்கும்.
நின்றுகொண்டே பிராணப் பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.
சீதளிப் பிராணாயாமம்
இதுவும் குளிர்ந்த பிராணாயாமம்தான். சீதளம் எனில், குளிர்ச்சி என்று பொருள். கோடையில் வெளியில் அதிகம் அடிக்கும்போது செய்தால் குளிர்ச்சியாக இருக்கும். உடலில் இருந்து வெப்பம் காதுகள் வழியே வெளியேறுவதை உணரமுடியும்.
ஆசனத்தில் வசதியாக உட்கார்ந்துகொள்ளுங்கள். இரு உதடுகளின் இடையிலும் நாக்கைத் துருத்தி குழல் போல் மடித்து வெளியே நீட்டவும். இருபுறமும் மடிந்த நாக்கு நடுவில் குழல்போலப் பள்ளமாக இருக்கும். 'ஷ்’ என்று சீறும் ஓசையுடன் காற்றை வாய் வழியாக உள்ளே இழுத்திடுங்கள். பிறகு காற்றை விழுங்கிடுங்கள். சுகமாகப் படும்வரை மூச்சை உள்ளே அடக்கிக் கும்பகம் செய்திடுங்கள். (வெப்பத்தை மட்டும் குறைத்துக்கொள்ள விரும்புபவர்கள் கும்பகம் செய்ய தேவையில்லை.)  
பிறகு இரு மூக்குகளின் வழியே மெள்ள சீராக வெளியே விடுங்கள். இந்தப் பயிற்சி செய்வது எளிது. 10 முதல் 20 முறை பயிலலாம். நிற்கும்போது, நடக்கும்போது, எந்த நிலையிலும் எப்போதும் செய்யலாம்.
பலன்கள்: இது உடலை குளிர்விக்கும். செரிமானத்தைச் சரி செய்யும். பித்தக் கோளாறுகள், கபத் தொல்லை, தீராத நோய்களின் வீக்கம், புண், காய்ச்சல், இருமலை போக்கும். நா வறட்சி ஏற்படாது. தாகத்தைத் தீர்க்கும்.
நோய், களைப்பை அகற்றலாம்!
மனிதனின் உயர்வைக் கட்டுப்படுத்துவது களைப்புதான். அதன் அதீதம் அல்லது நீட்டிப்பேநோயை உண்டாக்குகிறது. வலி, வீக்கம், உடல் உறுப்பு கெடுதலுடன் அதிகம் முடியாமை  போன்றவை நோயினால் வருவதே. களைப்பை நீக்கும் பிராணாயாமம் நோயையும் விலக்குகிறது. காரணம், எல்லாமே மூச்சுதான்!
ஆழ்ந்து சுவாசிப்பதே ஆரோக்கியம் நீட்டிக்க உதவிடும். இருந்தாலும், பிராணனை மையப் படுத்தும் நுணுக்கங்கள் சில.  
 பிராணனை வெளியிலிருந்து உள்ளே இழுங்கள். வயிற்றில் அப்படியே நிரப்புங்கள்.
 தொப்புளுக்கு நடுவிலும், மூக்கின் முனையிலும், இரு கால் பெருவிரல்களிலும் இந்தப் பிராணன் இருப்பதாக மனதில் ஆழ்ந்து எண்ணவேண்டும். இது, அந்தந்த இடங்களில் பிராணனை மையப்படுத்தும்.
 இதை, சூரிய உதயத்துக்கு முன்பும், சூரியன் மறையும் மாலை வேளையிலும் செய்யலாம்.
 இப்படிச் செய்யும்போது அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடமுடியும். உடனடி பலனாகக் களைப்பு நீங்கும்.
தொப்புள் பகுதியில் பிராணன் நிறுத்தப்படுவதால் எல்லா நோய்களும் விலகுகின்றன. காரணம், அங்கே எல்லாப் பாகங்களுடனும் தொடர்புள்ள நாடிகள் வந்து சேரும் பகுதி உள்ளது. 'தம் கட்டுதல்’தான் இந்த மூச்சுப் பயிற்சி.  எனவே, அது நீட்டிக்கும்போது களைப்பும் காணாமல் போய்விடும்.
மூக்கின் முனையில் மையப்படுத்துவதால் காற்றினுடைய தனித்தனிப் பொருள்கள் அத்தனையையும் ஆளும் திறன் உண்டாகும். அசுத்தம் நீங்கி, தூய பிராணன் நிலைபடும்.
கால் பெருவிரல்களில் நிறுத்தப்படுவதால் உடல் லேசாகும். உடல் கனம் நீங்குவது என்பது அழுக்கு நீங்குவதுதான்.
கும்பகம்:
குறிப்பிட்ட கால அளவில் மூச்சை நிறுத்துவதே கும்பகம் எனப்படும். அதாவது, மூச்சைச் சலனமின்றி, சஞ்சாரம் இன்றி ஓரிடத்தில் அடக்கிவிடுவது அல்லது நிறுத்திவிடுவது. இதையே பிராணன் ஆயமம் = பிராணாயாமம் என்கிறார்கள். இதைச் சார்ந்த மற்ற மூச்சு முறைகளும் அந்தப் பெயரிலேயே கூறப்படுகின்றன.
தம் கட்டுதல் என்கிறோமே அதுதான் இது. இதுவே பலம் ஆகிறது. பளு தூக்கும்போதோ, பேசும்போதோ பிராணாயாமம் நடக்கிறது. 'மூச்சைப் பிடித்துக்கொண்டு வேலை செய்கிறான்’ என்பார்கள்.  இது 'தம்’, 'ஸ்டாமினா’ எனப்படும் மூச்சை அடக்கும் திறனையே குறிப்பதாகும்.  
அந்தர்முக கும்பகம் - மூச்சை உள்ளே நிறுத்துவது.
பஹிர்முக கும்பகம் - வெளியே மூச்சை நிறுத்துவது.
கேவல(தனி) கும்பகம் - உடனடியாக சுவாசம் தடைப்படுவது. அதாவது, மூச்சை உள்ளே இழுத்தல், வெளியே விடுதல் இல்லாமல் ஒருவருக்குள் மூச்சு திடீரென நிற்பது. இதுவே கேவல கும்பகம்.
மந்திரங்கள்:
பிராணாயாமப் பயிற்சியில் மூச்சை அளக்கவே மந்திரம் கூறப்படுகிறது.  'ஓம்’ எனும் பிரணவ மந்திரம், நாபிக் கமலத்தில் இருந்து உச்சரிக்கப்படுவதால், சுவாசத்தை சீராக இயக்கும். மந்திரத்தை ஜபித்தபடி செய்யும் பயிற்சியால் மனமும் ஒருநிலைப்படும். கும்பகத்தோடு மந்திரம் நல்ல பலனைத் தரும். காயத்ரி, ஓம், விருப்பமான தெய்வ மந்திரம், பஞ்சபூத பீஜாட்சரங்கள் சொல்லலாம். இவை, மூச்சின் அளவை அறியவும் உதவி செய்யும். மூச்சை முடிந்தவரை உள்ளிழுத்து, விடுவதும் கும்பகம் செய்வதும் இயற்கையாக அமைந்துவிடும். மந்திர நீளத்தில் சுவாசிப்பதும் கும்பகிப்பதும் அப்படியே.
கால அளவு:
மூச்சை வெளியிலோ, உள்ளேயோ நிறுத்தும் இடத்தையும் காலத்தையும் மாத்திரைகளின் மூலமாக அளக்கப்படும். கண்ணிமைத்துக் கண் திறப்பது ஒரு மாத்திரை. கையை மூடிவிட்டு திறக்கும் அளவே ஒரு மாத்திரையின் கால அளவை நிர்ணயித்துள்ளனர். மூச்சு விட்டு மூச்சு இழுப்பது ஓர் அளவே. சிறுசிறு நிகழ்ச்சிகளால் இப்படிக் கால அளவு கணிக்கப்படும். 'ஓம்’ என்பது அ, உ, ம அடங்கிய ஓர் எழுத்து.  இதைக் கொண்டும் மூச்சின் காலம் அளக்கப்படும். இதுவே ஆன்மிகமானது; நற்பயன் தருவது.  எனவே, பலரும் இந்தக் கால அளவை 'ஓம்’ என்றே அளந்துகொள்வார்கள்.
தரை விரிப்பு:      
தரைவிரிப்போ, பருத்தித் துணி, பலகை அல்லது கம்பளி இன்றி வெறும் தரையில் உட்கார்ந்து பிராணாயாமம் செய்யக் கூடாது. இதனால் உடலின் பிராணனை தரை இழுத்துக் கொண்டுவிடும். பூச்சிகளால் இடையூறு ஏற்படலாம். தரையின் சூடோ, குளிரோ உடலைத் தாக்கலாம்.  
ஆசன அவசியம்
18 ஆசனங்களைப் பழகினால், பிராணாயாமப் பயிற்சியில் இடையூறு இருக்காது. அஜீரணமோ, மலச்சிக்கலோ, வாயுத் தொல்லையோ இருக்காது. இது, நாடிகளைத் தூய்மை செய்ய மிகவும் உதவும். சூட்டையும் குளிரையும் தாங்கும் சக்தி நமக்குள் பெருகும். மேலும், உடலை நிமிர்த்தி உட்காரும் முறையும் ஒழுங்குப்படும்.
காலத்துக்கேற்ப பயிற்சி!
வெயிலின்போது காலையில் மட்டும் பயிற்சி செய்தால் போதும். உடலில் உஷ்ணம் மிகுந்தால், உடலில் வெண்ணெய் தடவியும், தலையில் நெல்லிக்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெயைத் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.  சர்க்கரை அல்லது கற்கண்டை தண்ணீரில் கரைத்துக் குடிக்கலாம்.  நீர் மோராக கரைத்துக் குடிக்கலாம்.  துண்டை தண்ணீரில் நனைத்து உடலில் போட்டுக்கொள்ளலாம்.  அடிக்கடி உடலில் தண்ணீர் படும்படி செய்யலாம்.  இவை அனைத்தும் உடல் உஷ்ணமாகாமல் தடுக்கும்.
குளிர்ச்சியைத் தரவல்ல கேப்பைக் கூழில் மோர் கலந்து, வெண்டைக்காய், வெந்தயம் சேர்த்து உண்ணலாம்.  இரவிலும் பகலிலும் வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாம்.  
தக்காளி, முலாம், தர்ப்பூசணி போன்ற பழங்கள் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
குளியல்
குளித்துவிட்டுதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பது இல்லை.  குளித்தால் தலையில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மெல்லிய துணியால் தலையை மூடிக்கொண்டு செய்யலாம்.  சிலருக்கு ஆசனம் போட குளித்தால்தான் உடல் வளையும்.  குளியல் குளிர்ந்த நீரிலா, வெந்நீரிலா என்று இடம், காலம் பார்த்து தேர்வு செய்துகொள்ளலாம்.  
செயலில் ஆரோக்கியம்!
இடது கைக்கு ஏதாவது தலையணையை அண்டக் கொடுத்து படிப்பது, டி.வி. பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.  தூங்கும்போது எப்போதும் இடதுபுறம் ஒருக்களித்துப் படுங்கள். எப்போதும் பகலில் வலதுபுறம் சாய்ந்து வலதுபுற கைக்கு அடியில் ஏதாவது திண்டை வைத்துக்கொண்டு படிக்கலாம். அலுவலகம் எனில், வலதுபுறம் சாய்ந்த நிலையில் வேலையைப் பாருங்கள்.  இடதுகாலின் மேல் வலதுகாலைப் போட்டுக்கொள்ளுங்கள். இயற்கையாகவே இப்படி நடக்கலாம்.  ஆனால், பிறருக்கு விநோதமாகப் படக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். சுவாசம் சுகமானது!
- ரேவதி,
நன்றி : டாக்டர் விகடன் - 01.04.2014

தடுப்பூசி.. ஏன்? எதற்கு? எப்போது?


தடுப்பூசி.. ஏன்? எதற்கு? எப்போது?

குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்! குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன? அவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு பயன்படுத்த வேண்டும்? நோய்த் தொற்றல் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தடுக்கவேண்டியதன் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் சேலம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் ப.அருள் மற்றும் மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் குணா.
தடுப்பூசி
நோய்த் தடுப்பு என்பது, தினசரி நம்முடைய உடலில் நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. நோய்க் கிருமிகள் அல்லது உடலைச் சாராத ஏதேனும் பொருள் உடலுக்குள் நுழையும்போது அதை அழிக்கிற வேலையைப் பார்ப்பவை இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள்தான். சில செல்கள் தன்னால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக்கொண்டு, மீண்டும் அதுபோன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்குதலில் இருந்து என்று விழிப்புடன் நம்மைப் பாதுகாக்கிறது.
சில நோய்த் தாக்குதலைச் சமாளிக்க செயற்கையான நோய்த் தடுப்பு மருந்துகளும் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. அவைதான் தடுப்பூசிகள்!  இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் நோய்த் தடுப்பானது நோய்க் கிருமி தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது. முதன் முதலில் பெரியம்மைக்குத்தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன.
தடுப்பூசிகள் போடுவதற்கான காரணங்கள்
தடுப்பூசி நம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்கிறது! தவிர, நோய்த் தொற்றுக்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும்கால தலைமுறையைப் பாதுகாக்கிறது. நம் குடும்பத்தின் நேரம், பணத்தை மிச்சப்படுத்துகிறது.

ஒரு காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த போலியோ, அம்மை போன்ற நோய்கள் தடுப்பூசிகளால் பெருமளவு ஒழிக்கப்பட்டன! குழந்தைகளைத் தாக்கும் நோய்த் தொற்றில் இருந்து காப்பதோடு மட்டுமல்ல, குழந்தைகள் ஊனமாகி உயிர் இழப்பதில் இருந்தும் தடுப்பூசிகள்தான் தற்காக்கின்றன.
தடுப்பூசி அட்டவணை
ஒரு காலத்தில் உலக அளவில் தட்டம்மை, ரண ஜன்னி, காச நோய், இளம்பிள்ளை வாதம், தொண்டை அழற்சி போன்ற நோய்களால் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 10 குழந்தைகள் இறந்தனர். ஆனால் இன்றோ, பிறந்த உடனேயே இந்த நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இதனால், இந்த நோயால் குழந்தைகள் இறப்பு இல்லை என்ற அளவுக்கு மருத்துவம் முன்னேறிவிட்டது!

இந்திய அரசு குழந்தைப் பிறந்தது முதல் போடவேண்டிய தடுப்பூசி, சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்திய குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் உள்ள தடுப்பூசிகளுடன் சேர்த்து கூடுதலாக மேலும் சில தடுப்பூசி மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.
 என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்? பிறந்தவுடன்…
குழந்தைப் பிறந்ததும் காசநோய்க்கு பி.சி.ஜி., போலியோவுக்கு ஓ.பி.வி., ஹெபடைடிஸ் பி வைரஸுக்கு எச்.பி.வி. அளிக்கப்படுகின்றன. குழந்தை பிறந்ததும் மருத்துவமனைகளே குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்துகளை அளித்துவிடுவதால் கவலையில்லை.
பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)
பி.சி.ஜி.(BCG – Bacille Calmette-Guerin) – குழந்தைக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி. குழந்தையின் இடது கையில் தோள்பட்டைக்கு அருகில் (புஜத்தில்) போடப்படும். இது நோயை முற்றிலும் தடுத்துவிடும் என்று சொல்ல முடியாது. குழந்தையின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே இது வேலை செய்யும்.
எச்சரிக்கை: தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் சிறு வீக்கம் உண்டாகலாம். அது உடைந்து புண்ணாகி லேசான நீர்க்கசிவுகூட ஏற்படலாம். இதில் பயம் ஒன்றும் இல்லை. சில நாட்கள் வரை இருந்துவிட்டு பின்னர் அதுவாகவே சரியாகி அந்த இடத்தில் நிரந்தரத் தழும்பு உருவாகும். புண் ஆறாமல் இருந்தால் அல்லது அதிகமான வீக்கம் இருந்தால் குழந்தை நல மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. புண் ஆற வேண்டும் என்று எந்த ஒரு மருந்தையும் அதன் மீது தடவக்கூடாது.
இளம்பிள்ளைவாதத்துக்கு ஓ.பி.வி. சொட்டு மருந்து (கட்டாயம்)
போலியோ கிருமி, குழந்தையின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, கால்கள் சூம்பிப்போகச் செய்யக்கூடியது. இதனால் நிரந்தர ஊனம் ஏற்படும். இதைத் தவிர்க்க பல கட்டமாக அரசாங்கமே இலவச மருந்தை அளிக்கிறது.
குழந்தைப் பிறந்தவுடன் வாய் வழியாக ஓ.பி.வி. (OPV- oral polio vaccine)  மருந்து அளிக்கப்படும். இதை ‘ஜீரோ டோஸ்’ என்பர். போலியோ நோய்த் தடுப்பில் சொட்டு மருந்து / ஊசி என்று இரண்டு இருக்கின்றன. பொதுவாக நம் ஊரில் போலியோ சொட்டு மருந்துதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஹெபடைடிஸ் பி (எச்.பி.வி.) தடுப்பூசி (விருப்பத்தின் பேரில்)

உலக அளவில் பொதுவாகக் காணப்படும் நோய்த் தொற்று ‘ஹெபடைடிஸ் பி’. இது கல்லீரலைப் பாதிக்கிறது. எதிர்காலத்தில் கல்லீரல் சுருக்கம் (லிவர் சிரோசிஸ்), கல்லீரல் செயல் இழப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். இதைத் தவிர்க்க பிறந்ததும் ‘ஹெபடைடிஸ் பி முதல் டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியைப் பரிந்துரைக்கவில்லை. ஆனால், இதைப் போட்டுக்கொள்வது நல்லது என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆறு வாரங்களுக்குப் பிறகு…
டி.பி.டி. (DPT) எனப்படும் முத்தடுப்பு ஊசி, போலியோ தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து இரண்டாவது டோஸ், ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ், ரோட்டா வைரஸ், பி.சி.வி. முதல் டோஸ், எச்.ஐ.பி. முதல் டோஸ் அளிக்கப்படும்.
முத்தடுப்பு ஊசி (டி.பி.டி.) (கட்டாயம்)
‘டிப்தீரியா’ எனப்படும் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், டெட்டனஸ் எனப்படும் ரண ஜன்னி ஆகிய மூன்று தொற்று நோய்களுக்கு எதிரான மருந்து இது.
எச்சரிக்கை: டி.பி.டி. தடுப்பூசி போடப்பட்ட சில மணி நேரத்தில், சில குழந்தைக்கு காய்ச்சல் வரலாம். அது சாதாரணமான காய்ச்சல்தான். பயப்படத் தேவையில்லை. ஒரே நாளில் குணமாகிவிடும். காய்ச்சல் ஒரு நாளுக்கும் மேலாகத் தொடர்ந்தால் உடனடியாக குழந்தையை டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது.
ஓ.பி.வி. சொட்டு மருந்து (கட்டாயம்)
போலியோவுக்கு அளிக்கப்படும் மருந்தின் இரண்டாவது டோஸ் இது. வாய் வழி சொட்டு மருந்தாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
ரோட்டா வைரஸ் தடுப்பூசி  முதல் டோஸ்
(விருப்பத்தின்பேரில்)
வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உயிரைப் பறிக்கும் கொடிய கிருமி ரோட்டா வைரஸ். ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளையே இது அதிகம் பாதிக்கிறது. இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை. ஆனால் இந்தநோய் வராமல் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன.

எச்.ஐ.பி (ஹீமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி) தடுப்பூசி
(விருப்பத்தின்பேரில்)
ஹிமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி நோய்த்தொற்று ஏற்பட்டால் குழந்தைகளுக்கு மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகள் பாதிக்கப்படும். அதைத் தடுக்கவே இந்த தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது.
கவனம்: இந்த ஊசி போட்ட இடத்தில் சிவந்துபோதல், வீக்கம் அல்லது வலி இருக்கலாம். ஆனால், கவலைப்படத் தேவையில்லை.
பென்டாவேலன்ட் தடுப்பூசி
முத்தடுப்பு ஊசி என்பது மூன்று நோய்களுக்கு எதிராக அளிக்கப்படுகிறது. தற்போது அதற்குப் பதிலாக ஐந்து நோய்களைத் தடுக்கும் ‘பென்டாவேலன்ட்’ என்ற ஊசியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிசிஜி, ஓபிவி, டிபிடி, தட்டம்மை, மஞ்சள் காமாலை… உள்ளிட்ட ஐந்து நோய்களுக்கான ஒரே தடுப்பூசிக்கு பென்டாவேலன்ட் என்று பெயர். இந்தத் தடுப்பூசிகளின் மூலம் குழந்தைகளுக்கு காசநோய், இளம்பிள்ளைவாதம், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, மஞ்சள் காமாலை பி, தட்டம்மை உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. ஏற்கெனவே தடுப்பூசி திட்டத்தில் வழங்கப்படும் தடுப்பூசிகளுக்குப் பதிலாக பென்டாவேலன்ட் என்ற ஒரே தடுப்பூசியே சிறப்பாகச் செயல்படுகிறது.
10வது வாரம்
முத்தடுப்பு ஊசி, போலியோ, எச்.ஐ.பி., ரோட்டா வைரஸ், பி.சி.வி. இரண்டாவது டோஸ்… ஆகியவை குழந்தை பிறந்த 10-வது வாரத்தில் அளிக்கப்படும். இதில், முத்தடுப்பு ஊசி மற்றும் போலியோ மருந்தைத் தவிர மற்றவை விருப்பத்தின்பேரில் மட்டுமே போடப்படும்.
14வது வாரம் (மூன்றரை மாதம்)
இந்தக் கால கட்டத்தில் போலியோ, முத்தடுப்பு ஊசி கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். இதுதவிர, ஹெபடைடிஸ் பி, எச்.ஐ.பி. ரோட்டா வைரஸ், பி.சி.வி மூன்றாவது டோஸ் போன்றவைகளும் அளிக்கப்பட வேண்டும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு…
வாய்வழி போலியோ சொட்டு மருந்து மற்றும் ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் இந்தக் கால கட்டத்தில் அளிக்க வேண்டும். இன்ஃபுளுவென்சாவுக்கான தடுப்பூசி இந்த மாதம் முதல் கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். இதன்பிறகு ஆண்டுக்கு ஒரு முறை என்ற வகையில் இன்ஃபுளுவென்சாவுக்கு மருந்தும் கொடுக்க வேண்டும்.
ஒன்பதாவது மாதம்
போலியோ சொட்டு மருந்து, மற்றும் ஹெபடைடிஸ் பி 3-வது டோஸ் அளிக்கப்பட வேண்டும்.
தட்டம்மைத் தடுப்பூசி (கட்டாயம்)
குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் தட்டம்மைக்கான தடுப்பூசி போட வேண்டும். இதை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போட்டுக்கொள்ளலாம். ஒன்பதாவது மாதத்தில் இந்தத் தடுப்பூசி போடப்படாத குழந்தைக்கு ஒரு வயதுக்குப் பின் எம்.எம்.ஆர் போடலாம்.
மேலும், 5 அல்லது 12 வயதிலும்கூட இந்தத் தடுப்பூசியைப் போடுமாறு டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஒரு வயதுக்குப் பிறகு
இந்த காலகட்டத்தில் ஹெபடைடிஸ்- ஏ வைரஸுக்கான தடுப்பூசி முதல் டோஸ் அளிக்கப்பட வேண்டும். இதுவும் விருப்பத்துக்கு உட்பட்டது. ஹெபடைடிஸ் ஏ-வில் கொல்லப்பட்டது, உயிரோடு இருக்கக்கூடியது என இரண்டு வகையான டோஸ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இரண்டாவது (இறுதி) டோஸ், முதல் டோஸ் போட்டதில் இருந்து ஆறு முதல் 18 மாதங்களில் போடவேண்டும்.

காலரா தடுப்பூசி (விருப்பத்தின்பேரில்)
ஒரு வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு இந்த ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. காலரா என்பது ‘விப்ரியோ காலரே’ என்ற கிருமியால் ஏற்படுகிறது. இந்தக் கிருமி வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உடலில் உள்ள நீரை வெளியேற்றிவிடும். நீருடன் சேர்ந்து உடலில் உள்ள உப்புக்களும் வெளியேறிவிடுவதால் நீர் இழப்பு காரணமாக குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம். இந்த நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பால், இளநீர் போன்றவற்றைக் கொடுக்கலாம். அல்லது உப்பு- சர்க்கரைக் கரைசல் கொடுக்க வேண்டும்.
எச்சரிக்கை: குழந்தை வாந்தி எடுக்கிறது என்று தாய்ப்பால், இளநீர், உப்பு-சர்க்கரைக் கரைசல் கொடுக்காமல் இருந்துவிடக்கூடாது.
15வது மாதத்தில்
எம்.எம்.ஆர். தடுப்பூசி முதல் டோஸ், வேரிசெல்லா தடுப்பூசி, பி.சி.வி. பூஸ்டர் தடுப்பூசி இந்தக் காலக்கட்டத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. 

எம்.எம்.ஆர். தடுப்பூசி (கட்டாயம்)
மீசல்ஸ், மம்ஸ் மற்றும் ரூபெல்லா எனப்படும் தட்டம்மை, புட்டாலம்மை (பொன்னுக்கு வீங்கி) மற்றும் ஜெர்மன் அம்மையை ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசி இது. 
எச்சரிக்கை: இந்தத் தடுப்பூசி போட்டதும் குழந்தைக்கு காய்ச்சல்போல உடல் சூடாகும், மூட்டு வலி அல்லது உடலில் விரைப்புத்தன்மை ஏற்படலாம். குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.
வேரிசெல்லா தடுப்பூசி
(விருப்பத்தின்பேரில்)
வேரிசெல்லா சோஸ்டர் என்ற வைரஸ் கிருமியால் சின்னம்மை ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காக வேரிசெல்லா தடுப்பூசி 15-வது மாதத்தில் போட்டுக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒருவரை ஒருவர் தொடுவதன்மூலமும், சுவாசம், இருமல், தும்மல் மூலமும் காற்றில் பரவக்கூடியது. சிலருக்கு இந்தக் கிருமியால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், சில குழந்தைகளுக்கு இது வலிப்பு நோயை ஏற்படுத்தி உயிரிழப்பைக்கூட உண்டாக்கலாம். சின்னம்மை வந்து சென்றபிறகும்கூட இந்தக் கிருமி உடலிலேயே இருந்து எதிர்காலத்தில் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்ப்பதற்காக இந்தத் தடுப்பூசி அளிக்கப்படுகிறது. 12 முதல் 15 மாதக் குழந்தைகளுக்கு இது அளிக்கப்பட வேண்டும்.
16 முதல் 18வது மாதங்களில்
டி.டி.பி., ஐ.பி.வி., ஹெச்.ஐ.பி. முதலாவது பூஸ்டர் அளிக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு இந்த நோய்க் கிருமிகள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டிருக்கலாம். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்தக் கிருமிகளுக்குரிய நோய் எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும். அந்த நேரத்தில் மீண்டும் அதே தடுப்பூசி போடப்பட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இவ்வாறு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதற்காக, மீண்டும் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ‘பூஸ்டர் தடுப்பூசி’ என்று பெயர்.
முத்தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி (கட்டாயம்)
‘டிப்தீரியா’ எனப்படும் தொண்டை அடைப்பான், பெர்டூசிஸ் எனப்படும் கக்குவான் இருமல், டெட்டனஸ் எனப்படும் ரண ஜன்னி ஆகிய மூன்று தொற்று நோய்களுக் எதிரான பூஸ்டர் தடுப்பு மருந்து இது.
எச்சரிக்கை: குழந்தைக்கு சிறிய அளவில் காய்ச்சல் மற்றும் ஊசி போட்ட இடத்தில் வலி, வீக்கம் இருக்கலாம். கவலைப்படத் தேவையில்லை. 
போலியோ பூஸ்டர் மருந்து
போலியோ தடுப்பு மருந்து. வாய் வழியே எடுத்துக்கொள்ளக்கூடியது.
குறிப்பிட்ட காலத்தில் போட்டுவிட்டோமே என்று இருந்துவிட வேண்டாம். போலியோ ஒழிப்பு தினத்தன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அரசு சார்பில் இலவசமாக அளிக்கப்படுகிறது. அந்தநேரத்திலும் குழந்தைக்கு இந்தச் சொட்டு மருந்தை அளிக்கலாம்.
எச்.ஐ.பி. பூஸ்டர் (விருப்பத்தின்பேரில்)
எச்.ஐ.பி. பூஸ்டர் தடுப்பூசி போடும்போது ஊசிபோடும் இடத்தில் வலி, சிவந்துபோதல், வீக்கம் போன்றவை ஏற்படலாம். ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும்.
18வது மாதம்
ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி இரண்டாவது தவணை (விருப்பத்தின்பேரில்)

இதை அரசு பரிந்துரைப்பது இல்லை என்றாலும், இந்திய குழந்தைகள் மத்தியில் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்று பரவலாகக் காணப்படுவதால் ‘இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு’ இதனைப் பரிந்துரைக்கிறது. முதல் தவணைபோலவே, வைரஸ் கிருமி உயிருடன் உள்ளது, இறந்தது என இரண்டு டோஸ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இரண்டு வயது
இந்த வயதில் டைஃபாய்ட் மற்றும் ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதில் டைஃபாய்டு தடுப்பூசி மட்டும் கட்டாயம் போடப்படவேண்டும்!
டைஃபாய்டு காய்ச்சல் தடுப்பூசி (கட்டாயம்)
டைஃபாய்டு பாசிலஸ் என்ற கிருமி மூலம் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்தக் கிருமியானது பாதுகாப்பற்ற உணவு மற்றும் குடிநீர் மூலம் பரவும். பொதுவாக சுகாதார சீர்கேடு நிறைந்த பகுதிகளில் இந்தக் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. வளர்ந்த நாடுகளில் டைஃபாய்டு மிகவும் அரிதான நோய். ஆனால், இன்னும் வளரும் நாடுகள் சுகாதாரச் சீர்கேடு காரணமாக ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். இந்தத் தடுப்பூசியை குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நான்கரை முதல் ஐந்து வயது வரை
இந்த வயதில் டி.டி.பி இரண்டாவது பூஸ்டர், ஓ.பி.வி. மூன்றாவது தவணை, எம்.எம்.ஆர். மற்றும் வேரிசெல்லா தடுப்பூசிகள் இரண்டாவது தவணை, டைஃபாய்டுக்கான தடுப்பூசி, மெனிங்கோக்கல் தடுப்பூசி போன்றவை அளிக்கப்பட வேண்டும்.

எம்.எம்.ஆர். இரண்டாவது தவணை (கட்டாயம்)
எம்.எம்.ஆர். இரண்டாவது தவணை தடுப்பூசி என்பது மீசல்ஸ், மம்ஸ், ரூபெல்லா நோய்க் கிருமிகளுக்கு எதிரானது.
எச்சரிக்கை: தடுப்பூசி கொடுத்ததும் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஏற்படலாம்.
ஓ.பி.வி. பூஸ்டர் (கட்டாயம்)
இது போலியோவுக்காக அளிக்கப்படும் வாய்வழிச் சொட்டு மருந்து.
டி.டி.பி. பூஸ்டர் இரண்டாவது தவணை(கட்டாயம்)
இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி போட்ட பிறகு காய்ச்சலும், ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் வீக்கம் இருக்கலாம்.
தேவையெனில் போட வேண்டியது
ஷப்பான் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி
குறிப்பிட்ட பகுதியில் ஜப்பான் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமி பரவுகிறது என்றால், அந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டும் ‘ஜப்பான் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி’ போட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. அதுவும், எட்டு மாதங்கள் பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு மட்டும் இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
கர்ப்பப்பைவாய் புற்று தடுப்பூசி
பெண்களுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்தது ஒன்பது வயது முதல் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். மூன்று தவணைகளில் (0-2-6 மாதங்களில் அல்லது 0-1-6 மாதங்களில்) இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இது பெண்களுக்கானது என்றாலும் ஆண்களும் 11 அல்லது 12 வயதுக்கு மேல் இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்.
தேசியக் குடும்ப நலத்துறை மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் 43.5 சதவிகிதக் குழந்தைகள் மட்டுமே 12 மாதங்களுக்குட்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பெறுகின்றனர். அரசு பரிந்துரைக்கும் அட்டவணைப்படி தடுப்பூசி மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம்.
இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு பரிந்துரைக்கும் மற்ற மருந்துகளை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதைச் செய்வதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைப் பெற்றோர்கள் உறுதிப்படுத்த முடியும்.
இயற்கை நோய்த் தடுப்பு
பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். இந்த நேரத்தில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. குழந்தைக்கு தாய்ப்பாலே முழு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. எனவே, ஆறு மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும்.
பிரசவத்துக்குப் பிறகு முதன்முதலில் சுரக்கும் சீம்பால் குறைவாகவே இருக்கும். ஆனால் இதில் அடங்கியுள்ள சத்துகளும், அது தரக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியும் அளவிட முடியாதது. எனவே, எந்தக் காரணம் கொண்டும் குழந்தைக்கு சீம்பாலைப் புகட்டாமல் இருக்க வேண்டாம்!
குழந்தையின் எடை…
குழந்தைப் பிறந்த முதல் ஒரு வாரத்துக்கு எடை குறையும். பிறகு சரியானபடி பால் கொடுத்து, சரியான நேரக்கணக்குக்கு குழந்தை தூங்கி விழித்தால் வாரத்துக்கு 200 கிராம் வீதம் எடை கூடும்.
கவனிக்கவேண்டிய முக்கியமான விஜயங்கள்
சில தடுப்பூசி தருணத்தில் குழந்தை எதிர்கொள்ளும் சங்கடம் இயல்பானதே. தடுப்பூசி போட்டதுமே குழந்தைக்கு காய்ச்சல் மாதிரியான சிறு உபத்திரவங்கள் தலைகாட்டலாம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், டாக்டர் தரும் மாத்திரைகளைப் பயன்படுத்தினால் போதும். 
 தடுப்பூசி போடவேண்டிய காலகட்டத்தில் குழந்தைக்கு ஏதேனும் சளி, காய்ச்சல் அல்லது வேறு எதாவது உடல் நலப் பிரச்னை இருந்தால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம். தடுப்பூசியைத் தள்ளிப்போடவும்வேண்டாம். குழந்தைக்கு உள்ள உடல் நலப்பிரச்னைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைபடி நடப்பதே நல்லது.

  குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு இருக்கும்போது போலியோ சொட்டு மருந்து போடவேண்டாம். அதேபோல் கடுமையான காய்ச்சல் அல்லது அலர்ஜி ஏற்பட்டிருந்தால் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கலாம்! டாக்டரின் ஆலோசனையைப் பெற்று, முதலில் அவற்றைச் சரிபடுத்திய பிறகு தடுப்பூசி அளிக்க வேண்டும்.
  மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இடைவெளி மிகவும் முக்கியமானது. அதிலும் நான்கு வார இடைவெளியில் டி.பி.டி. தடுப்பூசி மற்றும் ஓ.பி.வி. சொட்டு மருந்து போடவேண்டும் என்பது அவசியம்.
  எல்லா தடுப்பூசியும் முழுதாகப் போடப்பட்ட குழந்தைகளுக்கு சிறு சிறு காயங்களுக்கு டிடி (டெட்டனஸ் டாக்ஸாய்ட்) கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. டி.பி.டி. பூஸ்டர் மீதம் இருக்கும்போது குழந்தைக்கு காயம் ஏற்பட்டால், ஏற்கெனவே போடப்பட்ட பூஸ்டர் டோஸ் டெட்டனசில் இருந்து உங்கள் குழந்தைக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கும்.
  குழந்தைக்கு ஊசி போட புட்டத்தை விட தொடையே சிறந்த இடம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட ஊசியைப் பயன்படுத்துதல் கூடாது. பெற்றோர்கள் இதை உறுதிப்படுத்துவது நல்லது. ஊசிப் போட்ட இடத்தில் சில குழந்தைகளுக்கு சிறு வீக்கம் தென்படும். இது பிரச்னையும் இல்லை. அதற்கு க்ரீம், மருந்து போடத்தேவையும் இல்லை.

Thursday, June 18, 2015

தேர்தல் விதிமீறலை தடுக்க'இ-நேத்ரா' திட்டம்


தேர்தல் விதிமீறலை தடுக்க'இ-நேத்ரா' திட்டம் அறிமுகம்
தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்கவும் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் 'இ - நேத்ரா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து (18.06.2015) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:
இந்தியாவில் முதன்முறையாக ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கிய இடங்களில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.மேலும் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் புகார் அளிப்பதற்கு வசதியாகவும், அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும் 'இ - நேத்ரா' திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
புகார் தெரிவிக்க ஆறு வழிகளை பின்பற்றலாம்.

* 'பிளே ஸ்டோரில்' இருந்து பதிவிறக்கம் செய்யப்படக் கூடிய ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனை https:/play.google.com/store/apps/details?id=com.uniphore.ecpublic&hl=enல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* enetra@chennaicorporation.gov.in என்ற முகவரிக்கு இ - மெயில் அனுப்பலாம்.
* 94441 23456 என்ற மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம்.
* '1950' என்ற டெலிபோன் எண்ணை அழைக்கலாம்.
* மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எழுத்து மூலம் புகார் அனுப்பலாம்.
* தேர்தல் உதவி மையங்களில் நேரடியாக சென்று புகார் அளிக்கலாம்; இம்மையம் 24 மணி நேரமும் செயல்படும்.

புகார் விவரம், பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் 45 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பர்.புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் 2 முதல் 24 மணி நேரத்திற்குள், புகார்தாரருக்கு தெரிவிக்கப் படும்.

'இ - நேத்ரா' திட்டம் முதன்முறையாக ஆர்.கே.நகர் தொகுதி யில் அறிமுகப்படுத்தப்படுகிறது, என்றார்.

Wednesday, June 17, 2015

ஸ்கேன் ரிப்போர்ட்


ஸ்கேன் ரிப்போர்ட் பற்றி தெரிந்து கொள்வோமா?
ஸ்கேன் ரிப்போர்ட்

“கழுத்து வலிக்குதேனு டாக்டர்கிட்ட போனேன்… உடனே, ஸ்கேன் எடுக்கச் சொல்லிட்டார். சாதாரண கழுத்து வலி, தலைவலிக்குக்கூட இப்ப ஸ்கேன் எடுக்க வேண்டியிருக்கு” என்று  புலம்புவார்கள் பலர்.  உண்மையில் ஸ்கேன் என்பதன் மருத்துவப் பயன்பாடு என்ன? சின்னச்சின்ன உபாதைகளுக்குக்கூட ஸ்கேன் தேவையா என்ன?
“நாடி பிடித்து நோய்களைக் கண்டறிந்த காலத்தில், மனிதனைத் தாக்கிய நோய்களுக்கும் ஒரு வரைமுறை இருந்தது. இதனால், ‘இந்த நோய்… இப்படித்தான் வெளிப்படும்…’ என்று அப்போது வரையறுக்க முடிந்தது. ஆனால், இன்றோ காய்ச்சல் வந்தால், பாராசிட்டமால் மாத்திரைக்கு கட்டுப்படா விட்டால், அது பன்றிக் காய்ச்சலா? பறவைக் காய்ச்சலா? டைபாய்டா? மலேரியாவா? என்று ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தாண்டி, உடலுக்குள் இருக்கும் உறுப்புகளுக்குள் என்ன நடக்கிறது என்பதையும் தாண்டி, உறுப்புகளின் ஒவ்வொரு செல்லிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
தேவை
உடலுக்குள் இருக்கும் உறுப்புகளையும் அந்த உறுப்புகளுக்குள் நடைபெறும் இயக்கத்தையும், 3-டி வடிவத்தில் வீடியோவாகவும், படங்களாகவும் ‘ஸ்கேன்’ காட்டிவிடும். அதன் பிறகுதான், அதற்கான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் முடிவுசெய்கின்றனர். விபத்து, மயக்கம், கட்டிகள், வயிற்றுக்கோளாறு என்ற அடிப்படையில் அவை பற்றி அறிய அல்ட்ராஸ்கேன், சி.டி, எம்.ஆர்.ஐ ஸ்கேன், ஆஞ்சியோகிராம், மேமோகிராம், பெட் ஸ்கேன் என பிரத்யேகக் கருவிகள் வந்துவிட்டன.
ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம், துல்லியமாக நோயின் தன்மை, எந்த இடத்தில் உருவாகி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். அந்தக் காலத்தில் ஒருவருக்கு வயிற்றுவலி வந்தால், வயிற்றுக்குள் என்ன நடக்கிறது? ஏன் அவருக்கு வயிற்று வலி வந்தது என்பதைப் பார்க்க முடியாது. அவர் சொல்லும் ஒரு சில தகவல்களை வைத்து, ஒரு கணிப்பில் மருத்துவம் பார்க்கப்பட்டது. தற்போது ஸ்கேன்செய்து பார்ப்பதன் மூலம் அனைத்தையும் கண்டறிய முடியும்.
கட்டாயமா?
டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். ‘தேவை’ என்ற நிலையில் ஸ்கேன் செய்து பார்த்துவிட வேண்டும். இல்லை எனில், ‘கட்டாயம்’ என்ற ஒரு நிலை வரும். அப்போது பார்க்கும்போது, நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் நோய் முற்றிவிடக்கூடும். மேலும், நோயின் வீரியமும் அளவும் குணப்படுத்த முடியாத நிலையை எட்டியிருக்கும்.
ஒரு சில ஆயிரங்களுக்காக, நமக்கெல்லாம் அந்த நோய் வராது என்று அசட்டுத்தனமாக இருந்துவிட்டால், அதன் பிறகு பல லட்சங்களையும் மிகப் பெரிய அவஸ்தைகளையும் அனுபவிக்க வேண்டி வரும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன்
கர்ப்பிணிகளுக்குச் செய்யும் ஸ்கேன், இரண்டு உயிர்களுக்கானது. எனவே, கூடுதல் கவனம் தேவை. கர்ப்பிணிகளுக்கு கதிர்வீச்சுப் பாதிப்பு இல்லாத அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மட்டுமே செய்யப்படும். கருத்தரித்த காலத்தில் இருந்து முதல் நான்கு வாரங்களுக்குச் செய்யப்படும் ஸ்கேன் மூலம்,  கரு சரியாகக் கருப்பையில்தான் உருவாகி உள்ளதா, அல்லது கருக்குழாயில் தங்கி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதன் பிறகு, குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறியவும், பாதிப்பு ஏதேனும் உள்ளதா  என அறியவும் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தனை ஸ்கேன்தான் எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்தது.
11 வாரம் 14வது வாரத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சியை அறியவும், 21 முதல் 24 வாரங்களுக்குள் குழந்தையின் முழு வளர்ச்சியை அறியவும், இறுதியாக 36 முதல் 38 வாரங்களுக்குள் தொப்புள் கொடி சுற்றியுள்ளதா, பனிக்குடத்தில் உள்ள நீரின் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை அறியவும் ஸ்கேன் அவசியம்.

ஸ்கேன் வகைகள்
மேமோகிராம்:  40 வயதைத் தாண்டிய பெண்கள் கண்டிப்பாக, மேமோகிராம் சோதனை செய்துகொள்ள வேண்டும். பெண்களின் மார்புப் பகுதியில் சாதரணமாகத் தோன்றும் சிறிய கட்டிகளை, 1 எம்.எம் ஸ்லைஸ் வடிவத்தில் துல்லியமாகக் காட்டும் ஸ்கேன் இது. இதன் மூலம், அவை சாதாரணக் கட்டிகளா? புற்றுநோய்க் கட்டிகளா என்பதை அறிய முடியும்.
சி.டி ஸ்கேன்: மூளைக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க சி.டி ஸ்கேன் உதவுகிறது. மூளைக்குள் செல்லும் ரத்தக்குழாய்கள், அதற்குள் நிகழும் மாற்றம் போன்றவற்றை அறிய, இந்த ஸ்கேன் உதவுகிறது. விபத்துகளில் தலையில் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சி.டி ஸ்கேன் மிகப் பெரிய பங்களிப்பை வழங்குகிறது.
ஆஞ்சியோகிராம்: மூளை மற்றும் இதய ரத்தக் குழாயில் என்ன நடந்துள்ளது, என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது. வயதானவர்கள், உடல் பலவீனமானவர்களுக்கு இதயம் தொடர்பான சில சோதனைகளைச் செய்ய முடியாது. அவர்களுக்கு, ஆபத்பாந்தவன் இந்த ஆஞ்சியோகிராம்தான். இவற்றின் மூலம்தான், இதயம் மற்றும் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்க்குள் ஏற்பட்டுள்ள அடைப்பு (ஸ்டினோஸிஸ்) மற்றும் விரிவு (அனியூரிசம்) ஆகியவற்றைக் கண்டறிய முடிகிறது.
எம்.ஆர்.ஐ ஸ்கேன்: கதிர்வீச்சு இல்லாமல், காந்தப் புலத்தை வைத்து செய்யப்படும் பரிசோதனை. இதன்மூலம் மூளையின் செய்திறனைக்கூட துல்லியமாக அறிய இந்த ஸ்கேன் பயன்படுகிறது. கர்ப்பிணிகளுக்குக்கூட பாதிப்பு இல்லாத ஸ்கேன் இது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம்.
பெட் ஸ்கேன்:  இன்றைய தேதியில் பெட் ஸ்கேன்தான் இந்த உலகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. புற்றுநோய் மருத்துவத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. சி.டி., எம்.ஆர்.ஐ போன்றவற்றின் உதவியால், ஓர் இடத்தில் கேன்சர் தாக்குதல் இருப்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால், அது உடலின் எந்தெந்த இடத்தில் பரவி உள்ளது என்பதைக் கண்டறிய உதவுகிறது பெட் ஸ்கேன். எலும்பு, மூளை, நுரையீரல் போன்றவற்றில் பரவி உள்ள கேன்சர் செல்களைத் துல்லியமாக வெளிச்சம் போட்டுக்காட்டும். இதற்காக ‘ரேடியோ நியூக்ளியெட்’ என்ற மருந்து ஊசி மூலம் செலுத்தப்படும். அந்த மருந்து கேன்சர் செல்கள் எங்கெங்கு உள்ளதோ, அங்கெல்லாம் போய் படிந்துவிடும். அதன் பிறகு, ‘பெட் ஸ்கேன்’ செய்து பார்க்கும்போது, கேன்சர் செல்களில் படிந்துள்ள ‘ரேடியோ நியூக்ளியெட்’ பிரகாசமாக ஒளிர்ந்து, கேன்சர் பரவி உள்ள அனைத்து இடங்களையும் காட்டிக்கொடுத்துவிடும். அதுபோல், கேன்சருக்குக் கொடுக்கப்படும் மருந்துகளை, ஒருவரின் உடல் எந்த அளவுக்கு ஏற்றுக்கொண்டது என்பதை அறிய இன்டர்வெல் ஸ்கேன் பார்ப்பதற்கும் பெட் ஸ்கேன்தான் உதவுகிறது.

Monday, June 15, 2015

12 ரூபாய்க்கு விபத்து பாலிசி!


12 ரூபாய்க்கு விபத்து பாலிசி!
***************************************
அந்த இரண்டு இன்ஷூரன்ஸ் ஏன், எதற்கு, எப்படி ?பாரதி தம்பி
'வெறும் 12 ரூபாய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்ஷூரன்ஸ்!’ என்பதுதான் இன்று தீயாகப் பரவும் செய்தி. அரசின் விளம்பரங்களும் அமோகமாக இருப்பதால், ஆளாளுக்கு இதைப் பற்றி விசாரிக்கிறார்கள். '12 ரூபாய்க்கு ரெண்டு லட்ச ரூபாய் பாலிசியா? அப்படின்னா எனக்கு 10 பாலிசி போடுங்க’ என்கிறார் ஒருவர். 'ஏற்கெனவே நாம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறோமே... அதுவும் இதுவும் வேறு வேறா..?’ என்பது பலரின் குழப்பம். சந்தேகங்களுக்கு விடை தேடுவோமா? 
இப்போது மத்திய அரசு இரண்டுவிதமான காப்பீட்டுத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஒன்று,விபத்துக் காப்பீட்டுப் பாலிசி. இதில், 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியம். குறிப்பிட்ட ஆண்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு, கை, கால், கண் ஆகிய உறுப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பீடாக அதிகபட்சமாக 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் செய்ய முடியும். விபத்தில் மரணம் அடைந்தால் இரண்டு லட்சம் வரையிலும் க்ளெய்ம் செய்யலாம். '12 ரூபாய்தானே’ என்பதற்காக 10, 20 பாலிசிகள் எடுக்க முடியாது. ஓர் ஆளுக்கு ஒரு பாலிசிதான். அதற்கும் வங்கியில் சேமிப்புக் கணக்கு அவசியம். பிரீமியம் தொகை, ஒவ்வோர் ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்துதான் எடுக்கப்படும். இந்தத் தொகைத் திருப்பித் தரப்பட மாட்டாது.
'பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்பது இரண்டாவது திட்டம். அதாவது, 'பிரதம மந்திரி வாழ்க்கை ஒளி காப்பீடுத் திட்டம்’. இதன்படி ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும். பாலிசிதாரர் எந்தக் காரணத்தினால் மரணம் அடைந்திருந்தாலும் அவரது நாமினிக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். வருடாவருடம் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். இதில் கட்டப்படும் பிரீமியமும் திரும்பத் தரப்பட மாட்டாது.
'இந்த இரண்டு பாலிசிகளுக்கும் என்ன வித்தியாசம்? ஏன், ஒன்றில் அவ்வளவு குறைந்த தொகை..?’ என்றெல்லாம் பலப்பல குழப்பங்கள் நிலவுகின்றன. காப்பீடு தொடர்பான அடிப்படை விவரங்களை இன்ஷூரன்ஸ் நிபுணர் ஸ்ரீதரன் விளக்குகிறார்.
''இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் எடுப்பது எண்டோமென்ட் பாலிசி (Endowment policy). இதில் நாம் கட்டும் தொகையின் ஒரு பகுதி இன்ஷூரன்ஸாகவும், இன்னொரு பகுதி முதலீடாகவும் செல்கிறது. ஆனால், முழுக்க முழுக்க இன்ஷூரன்ஸ் என்றாலே ஒரு முதலீடு என்பதைப்போல நம் ஊரில் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
முதலீடு செய்ய லாபகரமான வேறு வழிமுறைகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி கட்டுகிறீர்கள் என்றால், ஒட்டுமொத்தமாக நான்கு லட்சம் ரூபாய் கட்டியிருப்பீர்கள்.          20 ஆண்டுகள் கழித்து, கட்டிய தொகை இரு மடங்காகக் கிடைக்கும் எனச் சொல்வார்கள். இது 4 முதல் 6 சதவிகித லாபம்தான். ஆனால், பாதுகாப்பான பி.பி.எஃப் திட்டத்தில் 8.5 சதவிகிதம் உறுதியான லாபம் கிடைக்கிறது. அதனால் இன்ஷூரன்ஸ் என்பதை முதலீடாகப் பார்க்கும் மனநிலையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்.
உண்மையில் டேர்ம் பாலிசிதான் இன்ஷூரன்ஸின் முழுமையான அர்த்தத்தை வழங்குகிறது. குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் ஒருவேளை இறந்துவிட்டால், அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு அவர் எவ்வளவு சம்பாதித்துத் தருவாரோ, அந்தப் பணத்தைப் பெற்றுத் தருவதற்கான காப்பீடு இது. ஒருவரது ஆண்டு வருமானத்தைப்போல 10-ல் இருந்து         15 மடங்கு தொகைக்கு டேர்ம் பாலிசி எடுக்கலாம். உங்கள் ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய் என்றால், 30 முதல் 45 லட்சம் வரையிலும் டேர்ம் பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.
விபத்துக் காப்பீடுத் திட்டம் என்பது, முழுக்க முழுக்க விபத்து நேர்ந்தால் மட்டுமே க்ளெய்ம் செய்யக்கூடியது. இதற்கான பிரீமியம் குறைவுதான். உதாரணத்துக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு தோராயமாக 200 ரூபாய் பிரீமியம் வரும். உங்களின் வருமான வரம்பைப் பொறுத்து, விபத்துக் காப்பீடு தொகையும் முடிவு செய்யப்படும். இதில் பிரீமியம் எனக் கட்டும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பெறலாம். இல்லையெனில், சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்துக்கு பணம் சென்றுவிடும். டேர்ம் பாலிசி எடுக்கும்போதே, விபத்துக் காப்பீடையும் அதனுடன் இணைத்துக்கொள்ளலாம். இதற்கு 'ரைடர்’ எனப் பெயர்.
மெடிக்கல் இன்ஷூரன்ஸ் அல்லது மெடிக்ளெய்ம் என்பது மற்றொரு முக்கியமான பாலிசி. நோய்கள் பெருகிவிட்ட இந்த நாட்களில், நம் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய பாலிசி. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து 3 முதல்           5 லட்சம் ரூபாய்க்காவது மெடிக்ளெய்ம் எடுத்துக்கொள்வது நல்லது.
இன்றைய சூழலில் ஒருவர் விபத்துக் காப்பீடு பாலிசி, டேர்ம் பாலிசி, மெடிக்ளெய்ம் பாலிசி ஆகிய மூன்று பாலிசிகளை வைத்திருப்பது அவசியம். விபத்துக் காப்பீடுப் பாலிசியை தனியாக எடுக்காமல், டேர்ம் இன்ஷூரன்ஸுடன் ஒரு ரைடராகச் சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி ஒருவரிடம் எத்தனை எண்டோமென்ட் பாலிசி இருந்தாலும், அத்தனையையும் அவர் க்ளெய்ம் செய்ய முடியும்!''
ஏன்... எதற்கு... எப்படி?
தற்போது அரசு அறிவித்துள்ள விபத்துக் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 12 ரூபாய், ஆயுள் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 330 ரூபாய். இரண்டிலும் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அடிப்படை சந்தேகங்களுக்கான விளக்கங்கள் இங்கே...
''யாரெல்லாம் இந்த பாலிசிகளை எடுக்க முடியும்?''
''தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர் எவரும் இதில் சேரலாம்!''  
''சேர என்ன செய்ய வேண்டும்?''
''நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று விசாரித்தால் விண்ணப்பம் தருவார்கள். அதை நிரப்பிக்கொடுத்தால் போதுமானது!''
''வயது வரம்பு என்ன?''
''12 ரூபாய் பிரீமியம் கட்டும் விபத்துக் காப்பீடு பாலிசியில் சேர, 18-70 வயது உடையவராக இருக்க வேண்டும். 330 ரூபாய் பிரீமியம் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசியில் சேர்வதற்கு 18-50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்!''
''ஒருவர், எத்தனை பாலிசிகள் எடுக்கலாம்?''
''ஒரு நபர் ஒரு விபத்துக் காப்பீடு பாலிசியும்,
ஒரு டேர்ம் பாலிசியும் மட்டுமே எடுக்க முடியும்!''
''ஒருவேளை ஒருவர் மூன்று வங்கிக் கணக்குகள் வைத்திருந்தால், ஒவ்வொன்றின் மூலமாகவும் ஒரு பாலிசி எடுக்கலாமா?''
''முடியாது. அப்படியே எடுத்தாலும் ஏதேனும்
ஒரு பாலிசிதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்!''
''இந்த பாலிசி எனக்கு மட்டும்தானா... குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளலாமா?''
''குடும்பத்தினருக்குக் காப்பீடு அளிக்காது. விபத்துக் காப்பீடு பாலிசியின்படி விபத்து ஏற்பட்டால் அவரோ, வாரிசுதாரரோ இழப்பீட்டைப் பெறலாம். ஆயுள் காப்பீடு பாலிசியின்படி, மரணம் ஏற்பட்டால் அவர் குறிப்பிட்டுள்ள வாரிசுக்கு, அந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்!''
''இப்போது பாலிசியில் சேர்ந்துவிட்டு, வேண்டாம் என்றால் இடையில் விலக முடியுமா?''
''இது தொடர்பான அறிவிப்புகளில், பாலிசியை இடையில் நிறுத்திக்கொள்வது குறித்த விவரங்கள் இதுவரை குறிப்பிடப்படவில்லை!''
''பாலிசி அமைந்த வங்கிக் கணக்கை மாற்ற வேண்டியிருந்தால் என்னவாகும்?''
''நீங்கள் கட்டும் பிரீமியம் தொகை, அந்த         ஓர் ஆண்டுக்கானது மட்டுமே. எனவே அடுத்த ஆண்டு வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இல்லை என்றாலோ, நீங்கள் அந்த பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்றாலோ,  உங்கள் பாலிசி காலாவதியாகிவிடும். வேறொரு வங்கிக் கணக்கின்மூலம் புதிதாக விண்ணப்பித்து திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்!''
''க்ளெய்ம் செய்ய, என்ன செய்ய வேண்டும்?''
''விபத்துக் காப்பீடு பாலிசியின் மூலம் க்ளெய்ம் செய்ய, விபத்து ஏற்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர்., காப்பீடுத் தொகை செலுத்தியதற்கான ரசீது, விபத்து மூலம் மரணம் நேர்ந்திருந்தால் மரணச் சான்றிதழ்... ஆகியவற்றை எந்த வங்கிக் கணக்கின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். 330 ரூபாய் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசிக்கும் இதே நடைமுறைதான்!''
நன்றி : ஆனந்த விகடன் - 14.06.2015 

Thursday, June 11, 2015

இனி ஈஸி ஆகுமா இன்கம்டாக்ஸ் ஃபைலிங்?


எளிதாகும் நடைமுறைகள்…இனி ஈஸி ஆகுமா இன்கம்டாக்ஸ் ஃபைலிங்?

By vayal on 
ருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது என்றாலே பெரும் சவாலான விஷயம் என்கிற நிலைதான் நேற்று வரை இருந்து வந்தது. ஏறக்குறைய 15 பக்கங்களை நிரப்பி, வரி கணக்குத் தாக்கலை சரியாக பின்பற்றி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. இதற்கு பேசாமல் வரியே கட்டிவிடலாம் போலிருக்கிறது என்று புலம்பித் தீர்த்தவர்கள்தான் அதிகம்.
இனி இந்த கஷ்டம் இல்லை. கடினமான வருமான வரி கணக்குத் தாக்கலை எளிமையாக்கி மூன்று பக்கத்துக்குள் வரி கணக்குத் தாக்கலை முடித்துவிடலாம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலும், வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான வழக்கமான கெடு தேதியை ஜூலை 31-லிருந்து ஆகஸ்ட் 31-க்கு நீடித்து இருக்கிறது. மே 31, ஞாயிற்றுக்கிழமை அன்று நிதி அமைச்சகம், வரி கணக்குத் தாக்கல் படிவத்தில் மாற்றம் செய்திருப்பதாக அறிவித்தது. இதுபோல, வரி கணக்குத் தாக்கல் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய மாற்றங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
 வெளிநாட்டு பயண விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமா? 
வரி கணக்குத் தாக்கல் செய்யும் வரிதாரர் வெளிநாடுகளுக்குச் சென்ற விவரங்கள், வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும் என  ஒரு மாதத்துக்குமுன் மத்திய அரசு சொன்னது. இதற்கு வரிதாரர்கள் மற்றும் அனைத்துத் தரப்பில் இருந்தும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், வெளிநாட்டு பயண விவரங்களை ரிட்டர்ன் படிவத்தில் குறிப்பிடத் தேவை இல்லை என மத்திய அரசு தற்போது தெளிவுப்படுத்தி இருக்கிறது. இதற்குப் பதிலாக பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிட்டால் போதும் என்று அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் சொத்து விவரம்!
இதற்குமுன் (2011-12-ம் ஆண்டு முதல்) வெளிநாட்டில் சொத்து இருந்தால், அதன் விவரத்தை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐகள்) வரி கணக்குத் தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்று இருந்தது. தற்போது அந்த வெளிநாட்டு சொத்து மூலம் ஏதாவது வருமானம் வந்தால் மட்டுமே அதுபற்றி வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என்று மாற்றப் பட்டிருக்கிறது. ஆனால், இந்தியர்களுக்கு வெளிநாட்டில் சொத்து இருக்கும்பட்சத்தில் அதன்மூலம் வருமானம் வரவில்லை என்றாலும்கூட ரிட்டர்ன் படிவத்தில் குறிப்பிடுவது அவசியம்.
வரிக் கணக்குப் படிவங்களில் மாற்றங்கள்!
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருப்பவர்களுக்கு வரி கணக்குத் தாக்கல் செய்வதில் அதிக நிவாரணம் அளிக்கப் பட்டிருக்கிறது. இவர்களுக்கு பிசினஸ் அல்லது நிபுணத்துவ வருமானம் அல்லது மூலதன ஆதாயம் எதுவும் இல்லை என்றால் அவர்களுக்கு என புதிய படிவம் ஐடிஆர்2ஏ (ITR2A ) கொண்டு வரப்படுகிறது. இதில், மூலதன ஆதாயங்கள் குறித்துக் கேள்விகள் எதுவும் கேட்கப்பட்டிருக்காது.
இது தவிர, ஐடிஆர்2 (ITR2), ஐடிஆர்2ஏ(ITR2A) படிவங்கள் மொத்தமே மூன்று பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும். இதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களும் வரிதாரர் தாமாகவே எளிதாக நிரப்பக்கூடியதாக இருக்கும் என மத்திய அரசு சொல்லி இருக்கிறது. இதற்குமுன் இந்தப் படிவங்கள் 14 பக்கங்களைக் கொண்டிருந்தது.
ஐடிஆர்2 படிவத்தில் இதற்குமுன் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளப்பட்டது, எத்தனை முறை பயணம் மேற்கொள்ளப்பட்டது, வெளிநாட்டில் சொந்தப் பணம் எவ்வளவு செலவிடப்பட்டது என்கிற விவரத்தை குறிப்பிட வேண்டியிருந்தது. இப்போது ஐடிஆர்2 மற்றும் ஐடிஆர்2 ஏ-ல் பாஸ்போர்ட் எண்ணை மட்டும் கொடுத்தால் போதும்.
 வெளிநாட்டில் உள்ள சொத்து மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்தால் 3 முதல் 7 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. மேலும், வெளிநாட்டிலுள்ள சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை வரி கணக்கு விவரத்தில் தெரிவிக்கவில்லை என்றால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரையில் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும்.
பாஸ்போர்ட் எண் மூலம் ஒருவர் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார், எத்தனை முறை குறிப்பிட்ட நாட்டுக்குச் சென்றிருக்கிறார் என்கிற விவரத்தை மத்திய அரசு எளிதில் அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில், உண்மையில் வரி ஏய்ப்பு செய்பவரை அடையாளம் கண்டுகொள்ள முடியும். எனவேதான், அது வெளிநாட்டு பயண விவரங்களை விரிவாகத் தெரிவிக்க வேண்டாம். பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும் என்று சொல்லி உள்ளது. இதில், வரி தாரருக்கும் ஒரு லாபம் இருக்கிறது. அவர் அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்பவராக இருந்தால், பயண விவரங்கள் மற்றும் செலவு விவரங்களை முழுமையாக நினைவில் வைத்து, அதனை வருமான வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிடத் தேவையில்லை. எனவே, இந்த மாற்றம் வரவேற்கக் கூடியதாக இருக்கிறது.
 வங்கிக் கணக்கு விவரம்!
ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட வருமான வரிப் படிவத்தில் நிதி ஆண்டு இறுதியில் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையைக் குறிப்பிட வேண்டும் எனச் சொல்லப் பட்டிருந்தது. அதற்குப் பதில், வங்கிக் கணக்கு எண் (சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு எண்), ஐஎஃப்எஸ் கோடு எண்ணை படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டில் இல்லாத (dormant) கணக்குகள் பற்றிய விவரங்களையும் வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என இதற்குமுன் சொல்லப்பட்டிருந்தது.
இப்போது இந்த விவரத்தை குறிப்பிடத் தேவையில்லை. வங்கிக் கணக்கு பற்றிய விவரத்தை   மட்டும் குறிப்பிட்டால்  போதும்.
மாத சம்பளம் மட்டுமே இருக்கிறவர்கள் 4 பக்கங்களைக் கொண்ட ஐடிஆர்1 (சஹாஜ்) படிவத்தில் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். வணிக வருமானம் கொண்டவர்களுக்கு ஐடிஆர்4எஸ் (சுகம்) கொண்டு வரப்பட்டிருக்கிறது.
கால அவகாசம் அதிகரிக்க வேண்டும்!
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள், சாதகமா அல்லது பாதகமா என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் சதீஷ்குமார் விளக்கிச் சொன்னார்.
‘‘வரி கணக்குப் படிவம் மூன்று பக்கங்களாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அதில் அதிக விவரங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒருவருக்கு ஐந்து வங்கிகளில் கணக்கு இருந்தால், அவை அனைத்தின் விவரமும் ரிட்டர்ன் படிவத்தில் கணக்கு எண், கிளையின் விவரம், ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மேலும், ஜாயின்ட் அக்கவுன்ட் இருந்தாலும் அந்த விவரத்தையும் குறிப்பிட வேண்டும். அது வரிதாரருக்கு அதிக வேலை வைக்கும்.
ஐடிஆர் படிவத்தை எப்படி நிரப்ப வேண்டும் என்கிற ஸ்கிமா (schema) இன்னும் தயாரிப்பு நிலையில்தான் இருக்கிறது. இந்த நிலையில் எப்படி ஐடிஆர் படிவத்தை ஆன்லைனில் நிரப்ப முடியும்? பொதுவாக, ஜூலை 31, வரி கணக்குத் தாக்கல் செய்யக் கடைசித் தேதி. அந்த வகையில் ஏப்ரல் 1 தொடங்கி, ஜூலை 31 வரைக்கும் நான்கு மாதங்கள் வரி கணக்குத் தாக்கல் செய்ய வரிதாரருக்கு அவகாசம் கொடுக்கப்படும். ஆனால், இப்போது ஏறக்குறைய இரண்டரை மாதத்தை மத்திய அரசு ஐடிஆர் படிவம் தயாரிப்புக்கே எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், வரி கணக்குத் தாக்கலுக்கான காலம் ஒரு மாதம் மட்டுமே நீடிக்கப்பட்டிருப்பது நிச்சயம் வரிதாரர்களுக்கு கஷ்டத்தையே தரும். எனவே, என்றைக்கு வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கிறதோ, அதிலிருந்து நான்கு மாதங்கள் வரி கணக்குத் தாக்கல் செய்ய அனுமதிப்பது சரியாக இருக்கும்.
இப்போது செய்யப் பட்டிருக்கும் ஆகஸ்ட் 31 வரைக்குமான நீடிப்பு மாதச் சம்பளக்காரர்கள் மற்றும் ரூ.1 கோடிக்கு கீழே டேர்னோவர் கொண்ட நிறுவனங்களுக்குதான். ரூ.1 கோடிக்கு மேல் டேர்னோவர் கொண்ட நிறுவனங்களுக்கு வரி கணக்குத் தாக்கல் செய்ய செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள். இப்போது இரண்டரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அவர்களை அரசு மறந்துபோனது ஏன் என்று தெரியவில்லை.
அரசு ஒவ்வொரு ஆண்டும் இப்படி நிதி ஆண்டு முடிந்தபிறகு வரி கணக்குத் தாக்கல் செய்யப் போகிற நிலையில்தான் வரி கணக்குப் படிவங்களில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது அல்லது கூடுதல் விவரங்களைப் படிவத்தில் நிரப்ப வேண்டும் என்று சொல்கிறது. இது வரிதாரர்களுக்கு சிரமத்தையே தரும். முன்னரே குறிப்பிட்டிருந்தால், அந்த விஷயங்கள் தொடர்பான விவரங்களை முன்பே குறித்து வைத்துக்கொள்வார்கள்.
இது ரிட்டர்ன் தாக்கல் செய்யும்போது உதவியாக இருக்கிறது. இனிவரும் ஆண்டுகளிலாவது இப்படி வரிதாரர்களை வதைப்பதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
எது எப்படியோ ஐடிஆர் படிவங்கள், வரி கணக்குத் தாக்கல் சாஃப்ட்வேர் வெளியானால்தான் வருமான வரி கணக்கு தாக்கல் சுகமாக அமையுமா அல்லது சோகமாக இருக்குமா என்பது தெரியும்!
ரியல் எஸ்டேட்டை பாதிக்கும் அரசு நடவடிக்கை!
 மனை, சொத்து வாங்கும்போது ரூ.20,000-க்கு மேல் ரொக்கமாகத் தரக்கூடாது. அப்படித் தந்தால் 100% அபராதம் விதிக்கப்படும். ரூ.20,000-க்கு மேல் தொகை செல்லும்போது, காசோலை அல்லது கேட்பு காசோலையாகதான் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் நிபந்தனை இருக்கிறது. விவசாயிகளுக்கு விவசாயம் தவிர வட்டி, வாடகை, சம்பளம் என எந்த வருமானமும் இருக்கக்கூடாது. இவை ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கெனவே மந்தநிலையில் இருக்கும் ரியல் எஸ்டேட் துறையை மத்திய அரசின் இந்த நடவடிக்கை மேலும் மந்தமாக்கிவிடும் என ஆடிட்டர் சதீஷ்குமார் தெரிவித்தார். ‘‘ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்க, புரமோட்டருக்கு ரூ.1 லட்சம் ரொக்கமாக முன்பணம் கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது புதிய சட்டப்படி புரமோட்டர் ரூ.1 லட்சம் அபராதம் கட்ட வேண்டும். வீடு பிடிக்காமல் பணமாக இந்த ஒரு லட்சத்தைத் திரும்ப வாங்கினால், அதற்கும் ரூ.1 லட்சம் அபராதம் கட்ட வேண்டும். ரியல் எஸ்டேட்டில் வழக்கமாக ரூ.5 லட்சம் வரைக்கும் ரொக்கமாகக் கையாளப்படும். இந்த நிலையில் இது ரூ.20,000-ஆகக் குறைக்கப்படும்போது, ரியல் எஸ்டேட் தொழில் இன்னும் மந்தமாக வாய்ப்புள்ளது” என்றார்.