disalbe Right click

Saturday, September 19, 2015

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது


அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது என்ன செய்ய வேண்டும்?

சென்னை போன்ற பெருநகரங்களில் தனியாக மனை வாங்கி, வீடு கட்டுவது என்பதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான். இவர்களின் விருப்பத் தேர்வு, அடுக்குமாடி வீடுகள் எனப்படும் ஃப்ளாட்தான். அடுக்குமாடி வீடுதான் என முடிவுசெய்துவிட்டால், பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பல ஆவணங்களை ஆராய வேண்டும். அடுக்குமாடி வீடு வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
l மனை மூலப் பத்திரத்தின் ஒரிஜினல் யார் பெயரில் இருந்தது, ஒரிஜினல் பெயரிலிருந்து யார் பெயருக்குச் சொத்து மாறியது, கட்டிடம் யார் கட்டிக் கொடுத்தது, லே-அவுட் மற்றும் பிளான் அப்ரூவல் வாங்கியிருக்கிறார்களா, ஆகிய கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளைத் தேடி அடைய வேண்டும்.
l மின் கட்டண இணைப்பு, குடிநீர் இணைப்பு யார் பெயரில் இருக்கிறது, நீங்கள் வீடு வாங்கும்போது கட்டணங்கள் எதுவும் நிலுவையில் உள்ளனவா என்பதைக் கவனியுங்கள். அதை உங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளவும் வீடு வாங்கும்போதே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டால் பிறகு பில்டர் அவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார். பின்னர் அலைச்சல்தான் மிச்சமாகும்.
அடுக்கு மாடி கட்டிடத்தில் UDS என்பது பிரிக்கப்படாத மனை என்பதைக் குறிக்கும்.
2,400சதுர அடி மனை பரப்பில் 500 சதுர அடியில் 2 வீடுகள் (500*2=1000), 750 சதுர அடியில் 4 (750*4=3000) வீடுகள் என மொத்தம் 4,000 சதுர அடியில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது, , 2,400 சதுர அடி பரப்பில் உள்ள மனையில், 4,000 சதுர அடியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதன் விகிதம் என்ன தெரியுமா? 2400/ 4000 = 0.6. இதனைக் கொண்டு நீங்கள் வாங்கும் வீட்டின் சதுர அடியால் பெருக்கினால் அதற்கான பிரிக்கப்படாத மனை.

அதாவது 500 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு (யூ.டி.எஸ்.) 300 சதுர அடி. 750 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு 450 சதுர அடி.

பிரிக்கப்படாத மனையின் அளவு சரியா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? மொத்தம் உள்ள ஃபிளாட்டுகளுக்கான பிரிக்கப்படாத மனையின் அளவைக் கூட்டினால் மொத்த மனையின் பரப்பு வர வேண்டும்.

இப்போது நாம் பார்த்த கணக்குப்படி 500 சதுர அடி உள்ள 2 வீடுகளின் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 600 (300*2) சதுர அடி. 750 சதுர அடி உள்ள 4 வீடுகளின் மொத்த பிரிக்கப்படாத மனையின் பரப்பு 1,800 (450*4) சதுர அடி. இரண்டையும் கூட்டினால் மொத்தம் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 2,400 சதுர அடி வந்துவிட்டதா? ஒரு வேளை கணக்குச் சரியாக வராவிட்டால், குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
l அடுக்குமாடி வீட்டில் பிரிக்கப்படாத மனை என்றழைக்கப்படும் யு.டி.எஸ். மனை சரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதா, என்பதைப் பொறியாளர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதே நல்லது. பில்டர் சொல்வதைக் கேட்டு அப்படியே விட்டுவிட்டால், 20, 25 ஆண்டுகள் கழித்து அடுக்குமாடியை வேறொருவரிடம் விற்க எல்லா ப்ளாட் உரிமையாளர்கள் முடிவு செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் யு.டி.எஸ். வித்தியாசம் இருந்தால் அது உங்களுக்குத்தான் இழப்பை ஏற்படுத்திவிடும். பில்டர் சொல்வதை அப்படியே கேட்காமல் அதை அளந்து பார்ப்பதையும் மனதில் போட்டுக்கொள்வது நல்லது.
l அடுக்குமாடி வீட்டில் அனைத்துத் தளங்களுக்கும் கட்டிட அனுமதி பெறப்பட்டி ருக்கிறதா என்று ஆவணங்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சில சமயங்கள் 2 அல்லது 3 மாடி வீடு கட்ட அனுமதி வாங்கியிருப்பார்கள். ஆனால், கூடுதலாக ஒரு மாடியைக் கட்டிவிடுவார்கள். வரைபடங்களில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். எத்தனை வீடுகள் ஃப்ளாட்டில் உள்ளன என்று பாருங்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் நிச்சயம் ஒரு சமையலறைதான் இருக்கும். அதை எண்ணிப் பார்ப்பது போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
l மனை அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பு எதுவாக இருந்தாலும் அந்தச் சொத்தை வாங்குவதற்கு முன்பாக அந்தச் சொத்து சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களின் அசல் பத்திரங்கள், விற்பவரிடம் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். சிலர் அசல் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் வாங்கி இருப்பார்கள். ஆனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் டூப்ளிகேட் பத்திரம் வாங்கி விற்பனை செய்வார்கள். எனவே அசல் பத்திரத்தைக் கண்ணால் பார்த்த பிறகு முடிவு எடுங்கள். அசல் பத்திரம் தொலைந்துவிட்டது என்று கூறினால் அதுதொடர்பாக போலீசில் கொடுத்த புகார், அந்தப் புகார் எண் ஆகியவற்றைக் கேட்டு பாருங்கள். பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்ன காரணம் சொல்லி டூப்ளிகேட் பத்திரம் வாங்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராயுங்கள்.
l ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்ய இன்னொருவருக்கு அதிகாரம் கொடுப்பதே ‘பவர் ஆஃப் அட்டர்னி’. அதிகாரம் வைத்திருக்கும் நபரிடமிருந்து ஒரு சொத்தை வாங்கும்போது, அந்த அதிகாரம் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா? அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறரா? இல்லையா என்பதைக் கவனிக்கத் தவறாதீர்கள். சில நேரங்களில் அதிகாரம் கொடுத்தவர் அதை ரத்து செய்திருக்கலாம். அதை மறைத்து சொத்தை விற்க முயல்வார்கள். அந்தச் சொத்தில் கட்டப்பட்டு வாங்கப்படும் அடுக்குமாடி வீடுகளுக்கு பின்னர் சிக்கல்கள் வர வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பித்தலாட்டத்தைத் தவிர்க்க, தற்போது அதிகாரம் ரத்தானால் அந்த விவரம் அசல் அதிகாரப் பத்திரத்தின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை ஆராய்வது அவசியம்.
l அடுக்குமாடி கட்டி முடிக்கப்பட்டதற்குக் கட்டுமான நிறைவுச் சான்றிதழை பில்டர் வாங்கி வைத்திருக்கிறாரா என்பதையும் கேட்டு வாங்க வேண்டும். சில இடங்களில் பில்டர்கள் கட்டுமானச் சான்றிதழ் வாங்கித்தராமல் விட்டுவிடுவார்கள். வீடு வாங்குபவர்களும் கேட்காமல் விட்டுவிடுவார்கள். ஒரு பில்டர் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் வாங்கித் தரவில்லை என்றால், கட்டிய வீட்டில் விதிமுறை மீறல் இருக்கலாம் என்று அர்த்தம் கொள்வது கட்டுமானத் துறையில் வழக்கம். எனவே கட்டுமான நிறைவுச் சான்றிதழ் மட்டுமல்ல, ஒவ்வொரு நிலையில் கட்டிடம் கட்டி முடித்ததற்கும் நிறைவுச் சான்றிதழ் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்கத் தவற வேண்டாம்.
நன்றி : தி இந்து நாளிதழ் - 05.09.2015 & 19.09.2015


Thursday, August 27, 2015

பி.ஃஎப் - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்


பி.ஃஎப் - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்
மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் ( ஆகஸ்ட், 2015) விளக்குகிறார்.
நாமினி!
"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.
பென்ஷன்!
பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.
மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.
இடையில் பணம் எடுத்தல்!
பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.
மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதைhttp://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.
பிஎஃப் கணக்கை முடிப்பது!
பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.
இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)
பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.
அனைத்தும் ஆன்லைன்!
பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.
எதற்கு எந்தப் படிவம்?
பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதைhttp://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தைhttp://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
புகார் தெரிவிக்க!
பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும்.http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx…& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.
டிடிஎஸ்!
பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ் (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில் உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும்.
http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541
நிரந்தரக் கணக்கு எண்!
பிஎஃப் அமைப்பு UAN(Universal Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.
இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே வாங்க முடியும். இந்த எண்ணைhttp://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.
இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”
*****************************************************************************************************************************************
மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம் எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர, மொத்த சம்பளம் எவ்வளவு?  அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்? எதற்கு பிடிக்கிறார்கள்? என்பது தெரியாது.

வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது  வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர். 

இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.

எவ்வளவு பிடிக்கிறார்கள்?


பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.

நிரந்தர கணக்கு எண்

புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.

தெரிந்துகொள்வது எப்படி?

சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும்.

இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம்.

பணம் எடுப்பது எப்படி?

பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனை

வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.

பங்குச் சந்தையில் பி.எஃப்.

ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்

நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.

ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.

நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.

நன்றி : தி இந்து நாளிதழ் - 26.10.2015

குறிப்பு: பி.எஃப். அலுவலகத்தில் தாங்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலமாக, 

                  01122901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், தங்களது பி.எஃப். இருப்புத்                          தொகையை தெரிந்து கொள்ளலாம்.

Thursday, July 16, 2015

தமிழகத்திலுள்ள சட்டக் கல்லூரிகளில் சேர


தமிழகத்திலுள்ள சட்டக் கல்லூரிகளில் சேர என்ன செய்ய வேண்டும்?
********************************************************************************
தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகள் அனைத்தும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பல்கலைக்கழகத்தில் 7 அரசு கல்லூரிகளும், ஒரு சுயநிதிக் கல்லூரியும் இணைப்பு பெற்றுள்ளன. இங்கு இளநிலை சட்டப் படிப்பில் ஐந்து ஆண்டுகள் படிப்பும், மூன்று ஆண்டு படிப்பும் என இரு வகையான பட்டப்படிப்புகள் உள்ளன.
ஐந்தாண்டு பட்டப்படிப்பிற்கு நுழைவுக் கல்வித் தகுதியாக மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியும், மூன்றாண்டு பட்டப்படிப்பிற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு கல்லூரிகள்
*******************************

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலூர் ஆகிய ஊர்களில் அரசினர் சட்டக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையிலுள்ள கல்லூரி மட்டும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்றும் பிற கல்லூரிகள் அரசினர் சட்டக் கல்லூரி என்றும் பெயரிடப்பட்டு செயல்படுகின்றன.
சுயநிதிக் கல்லூரி
******************************

சேலம் நகரில் சுயநிதி சட்டக் கல்லூரி ஒன்றும் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.
சட்டப் படிப்புகளில் யார் சேரலாம்?
******************************************************
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.,பி.எல்., சட்டப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் பிளஸ் டூ தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பொதுப் பிரிவினர், 20 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 22 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். இப்படிப்பில் மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன.
பிளஸ் டூ வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒற்றைச் சாளர முறையில், வேலூர் நீங்கலாக (வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் இப்படிப்பு இல்லை) தமிழகம் முழுவதிலும் உள்ள 6 அரசு சட்டக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூன் மாதம் 13-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தர வரிசைப் பட்டியல் (ரேங்க் லிஸ்ட்) ஜூன் மாதம் 23-ஆம் தேதி வெளியிடப்படும்.

தமிழகம் முழுவதிலும் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகளிலும் சேர்த்து மூன்று ஆண்டு பி.எல். பட்டப் படிப்பில் மொத்தம் 1,262 இடங்கள் உள்ளன.
மூன்றாண்டுகளுக்கான பி.எல். பட்டப் படிப்பில் சேர, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்கவேண்டும்.
பொதுப் பிரிவினராக இருந்தால், 30 வயதுக்குட்பட்டவர்களாகவும், மற்ற வகுப்பினராக இருந்தால் 35 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும்.
மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடங்களில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இப்படிப்பில் சேர மே 26-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் (School of Excellence in Law ) என்னென்ன சட்டப் படிப்புகள் உள்ளன?
இங்கு 5 ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எல். (ஆனர்ஸ்) பி.காம்.,பி.எல். (ஆனர்ஸ்) பட்டப் படிப்புகளும், 3 ஆண்டு பி.எல். (ஆனர்ஸ்) பட்டப் படிப்பும் கற்றுத் தரப்படுகின்றன. இந்த மூன்று படிப்புகளிலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக 15 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
5 ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எல். (ஆனர்ஸ்) பட்டப் படிப்பில் சேர விரும்புவோர், பிளஸ் டூ வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இப்படிப்பில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. மொத்த இடங்களில் 4 சதவீத இடங்கள், பிளஸ் டூ வகுப்பில் வொகேஷனல் பிரிவை எடுத்துப் படித்த மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
5 ஆண்டு பி.காம்., பி.எல். (ஆனர்ஸ்) பட்டப் படிப்பிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிளஸ் டூ வகுப்பில் காமர்ஸ் குரூப்பை எடுத்துப் படித்து 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 6-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். தர வரிசைப் பட்டியல் ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்படும்.
3 ஆண்டு பி.எல் (ஆனர்ஸ்) பட்டப் படிப்பில் சேர, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்புக்காக 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 26-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 11-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தர வரிசைப் பட்டியல் ஜூலை 21-ஆம் தேதி வெளியிடப்படும்.
சட்டப் படிப்புகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள்
************************************************************************************************

தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்கான பி.ஏ. பி.எல்., பட்டப் படிப்பில் சேர தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், 1,625-ரூபாயை ரொக்கமாக செலுத்தவேண்டும். கவுன்சலிங்கிற்குப் பிறகு, ஓராண்டுக்கான அட்மிஷன் கட்டணமாக ரூ.1,205 செலுத்த வேண்டும்.
3 ஆண்டுகளுக்கான பி.எல். பட்டப் படிப்பில் சேர தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், கவுன்சலிங்கின்போது 1,520- ரூபாயை ரொக்கமாகச் செலுத்த வேண்டும். அட்மிஷனின்போது ரூ.1,205-ஐ ரொக்கமாகச் செலுத்த வேண்டும்.
ஓராண்டிற்கான கட்டணம் இவை மட்டுமே. மிகக் குறைந்த கட்டணத்தில் சட்டப் படிப்பை வழங்கும் சட்டக் கல்லூரிகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன.
5 ஆண்டுகளுக்கான பி.ஏ., பி.எல் (ஆனர்ஸ்), பி.காம்., பி.எல். (ஆனர்ஸ்), 3 ஆண்டு பி.எல். (ஆனர்ஸ்) படிப்புகளுக்குக் கட்டணமாக ஆண்டுக்கு தலா ரூ.65,620 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அட்மிஷன் கட்டணம், டியூஷன் கட்டணம், இன்டர்நெட் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் அடங்கும்.
அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள மற்ற சட்டப் படிப்புகள்
******************************************************************************************

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டப் படிப்பில், அதாவது எம்.எல். பட்டப் படிப்பில் 8 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 20 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். வணிகச் சட்டம் (பிஸினஸ் லா), அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் (கான்ஸ்டிடியூஷனல் லா அண்ட் ஹியூமன் ரைட்ஸ்), அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் (இன்டலக்ச்சுவல் புராப்பர்டி லா), சர்வதேசச் சட்டம் மற்றும் அமைப்பு (இன்டர்நேஷனல் லா அண்ட் ஆர்கனைசேஷன்), சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் லீகல் ஆர்டர், கிரிமினல் சட்டம் மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் அட்மினிஸ்டிரேஷன், லேபர் லா அண்ட் அட்மினிஸ்டிரேட்டிவ் லா, ஹியூமன் ரைட்ஸ் அண்ட் டியூட்டீஸ் எஜுகேஷன் போன்ற பல பிரிவுகளில் முதுநிலை சட்டப் படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் மே 26-ஆம் தேதி தொடங்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தர வரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்படும்.
இவை தவிர, சட்டத்தில் பிஎச்டி படிக்கலாம். தொலை நிலைக் கல்வி முறையில் 11 வகையான முதுநிலை பட்ட டிப்ளமோ (பிஜி டிப்ளமோ) படிப்புகளையும், டாக்குமெண்டேஷனில் சான்றிதழ் படிப்பு ஒன்றையும் வழங்குகிறோம். பிஸினஸ் லா, என்விரான் மெண்டல் லா, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி லா, இன்டலக்ச்சுவல் பிராப்பர்ட்டி லா, லேபர் லா, ஹியூமன் ரைட்ஸ் அண்ட் டியூட்டீஸ் எஜூகேஷன், லா லைஃப் ரேரியன்ஷிப், கன்ஸ்யூமர் லா அண்ட் புரடக்ஷன்,சைபர் ஃபோரன்சிக் அன்ட் இன்டர்நெட் செக்யூரிட்டி, கிரிமினல் லா, கிரிமினாலஜி அண்ட் ஃபோரன்சிக் சயின்ஸ், மெடிக்கோ - லீகல் ஆஸ்பெக்ட்ஸ் போன்ற 11 பிரிவுகளில் முதுநிலை பட்ட டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 26-ஆம் தேதி தொடங்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 8-ஆம் தேதி அனுப்ப வேண்டும்.
சட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள்
***************************************************************************************

சட்டப் படிப்பு படித்தவர்களுக்கு வானமே எல்லை. உலகில் இதுவரை மூன்று வகையான புரட்சிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்று, விவசாயப் புரட்சி, இரண்டாவது தொழிற்புரட்சி, மூன்றாவது பணிப் புரட்சி. பணிப் புரட்சியில் சர்வீஸ் செக்டார் எனப்படும் சேவைகள் பிரிவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. 

உலகிலேயே இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. பணிப் புரட்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. இந்த சர்வீஸ் செக்டாரில், சட்ட சேவை மிக மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. அதாவது, லீகல் புராசஸ் அவுட்சோர்ஸ் மற்றும் நாலெட்ஜ் புராசஸ் அவுட்சோர்ஸ் போன்ற பணிகளிலும் சட்டம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் நீங்கலாக அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழிலேயே வழக்குகள் நடைபெறுகின்றன.

சட்டப் படிப்பை முடித்துவிட்டு, பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பதிவு செய்து கொள்பவர்கள், வழக்குரைஞர்களாக நீதிமன்றங்களில் வாதாடலாம். வழக்குரைஞராகப் பணியாற்ற விரும்பாதவர்கள், சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்துகொண்டு வழக்கறிஞர்களாகி, மற்றவர்களுக்கு சட்ட சேவை புரியலாம். 

பல்வேறு கம்பெனிகளுக்கு சட்ட ஆலோசகர்களாகப் பணியாற்றலாம். சட்டம் படித்துவிட்டு, யுஜிசி நெட் தேர்வு எழுதி, சட்டக் கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றலாம். 

பி.எல். படித்தவர்கள், கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளாகப் பணியாற்ற, சிவில் சர்வீஸ் பயிற்சி பெறலாம். லீகல் ஜர்னலிசம், லீகல் டூரிஸம் என்று சட்டம் நுழையாத துறையே இல்லை. சட்டத்தைத் தெளிவாக அறிந்துகொண்டு, முனைப்போடும், முறையான பயிற்சியோடும், ஆக்கப்பூர்வமாகச் செயல்படுபவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

மேலும் விபரங்களுக்கு http://www.tndalu.ac.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

பசுமை வீடு கட்டும் திட்டம்


பசுமை வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெற என்ன செய்ய வேண்டும்?
*********************************************************************************

பசுமை வீடு திட்டம்

ஏழைகளின் வீடுகளுக்கான தேவையை நிறைவு செய்யும் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தமிழக அரசின் முன்னோடி திட்டம் ஆகும். நமது நாட்டிலேயே 300 சதுர அடி பரப்பளவில் சூரிய மின்சக்தி விளக்குகளுடன் கூடிய வீடுகள் வழங்குவது இதுவே முதன் முறையாகும்.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்

1. ஊரகப் பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும்மக்கள் அனைவரும்
  சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் பெற தகுதியானவர்கள்.

2. ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில், ரூ.2.10 இலட்சம் அலகுத்   தொகையுடன் மாநில அரசின் முழு நிதி உதவியுடன் கட்டப்படுகிறது.

3. ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகியவசதிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கட்டப்படுகிறது.

4. ஒவ்வொரு வீட்டிலும் சூரிய ஒளி சக்தியில் எரியும் அடர்குறு விளக்குகள் (5) அமைக்கப்படும். இவை படுக்கை அறை, வசிக்கும் அறை, சமையல்அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகிய பகுதிகளில் ஒரு விளக்கு வீதம் அமைக்கப்படும். 

5. பயனாளிகளின் விருப்பத்தின்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து மின் இணைப்பு பெறும் விருப்பத்திற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

6. வீடுகள் கட்டும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 110 சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணியை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை செயல்படுத்தும்.

7. பசுமை வீடுகள், பயனாளிகளின் குடியிருப்பு அமைந்துள்ள இடம் (அவன்/அவளின் வசிப்பிடத்தை மாற்றியமைத்து) அல்லது கிராம ஊராட்சியின் பிற பகுதியில் அமைந்துள்ள பயனாளிக்குச் சொந்தமான இடங்களில் கட்டித்தரப்படும். 

8. மேலும், இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கென நில எடுப்புகள் ஏதும் செய்யப்படமாட்டாது. வீட்டுமனைப் பட்டா அல்லது சரியான நில உரிமை உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியானவர்கள் ஆவார்கள்.

பயனாளிகளின் தகுதிகள்

1. சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

2. சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் உள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

3. 300 சதுர அடிக்கு குறையாத வீட்டு மனை இடத்திற்கு சொந்தக்காரராக இருக்க வேண்டும்.

4. குடும்பத் தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினரில் எவரேனும் ஒருவர் பெயரிலோ வில்லங்கமற்ற வீட்டுமனைப் பட்டா இருக்க வேண்டும்.

5. தொடர்புடைய கிராம ஊராட்சியில் அல்லது வேறு எங்கும் கான்கிரீட் கூரை போடப்பட்ட சொந்த வீடு எதுவும் இருக்கக் கூடாது.

6. அரசின் இதர வீடு கட்டும் திட்டங்களில் பயன்பெற்றவராக இருக்கக் கூடாது.

பயனாளிகள் தேர்வு செய்யும் முறை

1. ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோரின் நிரந்தர காத்திருப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் மிகவும் வறிய நிலையில் உள்ளோர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

2. மொத்தம் 60,000 வீடுகளில் 17,400 வீடுகள் அதாவது 29 விழுக்காடு ஆதி திராவிடர்களுக்கும், 600 வீடுகள் அதாவது 1 விழுக்காடு பழங்குடியினர்களுக்கும் மீதமுள்ள 42,000 வீடுகள் அதாவது 70 விழுக்காடு இதர இனங்களுக்கும் (ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாதோர்) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படவேண்டும்.

3. மாவட்ட வாரியான ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு மாற்றுதிறனாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

4. பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும் போது,மாற்றுத் திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றமற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள்,முன்னாள் இராணுவத்தினர் மற்றும் முன்னாள் துணை இராணுவப் படையினர் துறையினரால் அடையாளம் காணப்பட்ட கிராமப் பகுதிகளில் வாழும் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்ட
குடும்பங்கள், திருநங்கைகள், ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு, துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) சான்றிதழ் பெற்றவர்கள், வெள்ளம், தீ விபத்து போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். மேலும், மனநலம் குன்றியோர் உள்ள குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

5. தகுதியுள்ள ஏழை ஒருவரின் பெயர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் விடுபட்டிருப்பின், விடுபட்ட நபர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உதவி இயக்குநர் நிலையில் உள்ள அலுவலர், விவரங்களை சரிபார்த்து மாவட்ட ஆட்சியரின் இசைவுடன் அவரது பெயரை பட்டியலில் இடம்பெற செய்து அதனை கிராமசபையில் வைத்து ஒப்புதல் பெறவேண்டும். அவ்வாறு பெயர் சேர்க்கப்படும் நிகழ்வில், அவரது பெயரானது நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் ஒரு பகுதியாக்கப்பட்டு பயனாளி தேர்வுக்கு கருத்தில் கொள்ளப்படும்.

6. கிராம ஊராட்சிகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் தகுதியுள்ள பயனாளிகளின் பட்டியலை தயார் செய்து கிராம சபையின் ஒப்புதலுக்காக வைக்கவேண்டும். பயனாளிகள் தேர்வு, வீடுகள் ஒதுக்கீடு, கட்டுமானப் பொருட்கள் விநியோகம் மற்றும் இத்திட்டம் தொடர்பான நடைமுறைபடுத்தப்படும்.

அலைபேசி அடிப்படையிலான கண்காணித்தல் மற்றும் 

தொகை விடுவித்தல்

1. தற்பொழுது ஒன்றிய பொறியாளர்களால் மதிப்பீட்டு சான்றிதழ் தயார் செய்வதற்கும் பயனாளி காசோலை பெறுதற்கும் இடையே குறிப்பிட்ட காலதாமதம் ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் நிதி விடுவிப்பு, பணிமுன்னேற்றத்துடன் தொடர்பு படுத்தப்படாமல் இருப்பதால் ஒரு சில ஊராட்சிகளில் நிதி தேக்கமடைந்த நிலையிலும் மற்றும் வேறு சில ஊராட்சிகளில் நிதி பற்றாக்குறையாகவும்  உள்ளது. இந்நிலைகளிலிருந்து விடுபட, ஆன்லைன் நேரடிகண்காணித்தல் மற்றும் நிதி மேலாண்மை முறை என்ற ஒரு புதிய முறை 2014-15 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திறனான கணிப்பாய்வு மற்றும் மேலாண்மை முறை மற்றும் பயனாளிகளுக்கு விரைவாக பட்டியல் தொகையை அளிக்கும் பொருட்டும் பின்வரும் முறையில் பட்டியல் தயாரிப்பு மற்றும் நிதி மேலாண்மை 2014-15ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது

2. ஒவ்வொரு நிதியாண்டும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் ஒவ்வொரு மாவட்டத்திற்கான வீடுகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வார்.

3. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கிராம ஊராட்சிகளின் தேவையின் அடிப்படையில் அவற்றிற்கு வீடுகளை ஒதுக்கீடு செய்யும்.

4. வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி உண்மையாக வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்ந்தெடுத்து அப்பயனாளிகளின் பட்டியலை கிராம சபையின் முன் வைத்து ஒப்புதலைப் பெற வேண்டும்.

5. வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பயனாளியின் தகுதி, வீடு கட்ட தேவையான இடத்தின் நில உரிமை மற்றும் அளவு ஆகியவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களைக் கொண்டு ஆய்வு செய்து தகுதியிருப்பின் அப்பயனாளிக்கு பணி ஆணையினை வழங்கவேண்டும்.

6. பணி ஆணை வழங்கும் நேரத்தில், பயனாளியின் வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் அதாவது வங்கியின் பெயர், வங்கி கிளையின் பெயர், வங்கி கணக்கு எண், வங்கியின் ஐகுளுஊ குறியீட்டு எண் ஆகிய அனைத்தும் சேகரிக்கப்பட்டு பணி ஆணையில் குறிப்பிடப்படும். பயனாளியின் வங்கி கணக்கு குறித்த விவரங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கணக்குகளில் செய்யப்பட்டுள்ளதுபோல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலான அலுவலரால் சரிபார்க்கப்பட வேண்டும். பயனாளியின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், முதியோர் உதவித் திட்டம் அல்லது இதர வங்கிக் கணக்குகளை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். பயனாளிக்கு, வங்கியில் கணக்கு இல்லை எனில் ஒரு வங்கியில் புதிய கணக்குதுவங்கப்பட வேண்டும். ஆன்லைனில் உருவாக்கப்பட்ட பணி ஆணையினை பயனாளிக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் மேல் நடவடிக்கைக்காக இந்த பணி ஆணையின் நகல் பணி மேற்பார்வையாளர் மற்றும் உதவிப் பொறியாளருக்கு அனுப்பப்படவேண்டும்.


அலைபேசி அடிப்படையிலான ஆன்லைன் கண்காணிப்பு

1. பயனாளிகளின் வங்கி கணக்கு குறித்த விவரங்கள், பணி உருவாக்கத்தின் போதே ஒன்றிய அளவில் ஆன்லைன் திட்ட கண்காணித்தலில் நிரப்பப்படும்.

2. ஒன்றிய மேற்பார்வையாளர் / ஒன்றிய பொறியாளர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணி இடத்தை குறியீடு செய்யும்போதே, வீட்டின் கட்டுமானத்தின் வெவ்வேறு கூறுகள் பற்றியும், வீடு கட்டுதலில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் பட்டியல் வழங்குதல் உள்ளிட்ட துறையின் பங்கு மற்றும் பயனாளியின் பங்களிப்பு குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

3.. இந்த ஆன்லைன் கண்காணித்தல் முறையானது, ஒன்றிய மேற்பார்வையாளர் மற்றும் உதவி பொறியாளரிடம் உள்ள ஸ்மார்ட் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி மென்பொருள் (நேரடி கண்காணிப்பு முறை) இணைக்கப்பட்டிருக்கும். இம்முறையை பயன்படுத்தி, வீட்டின் முன்னேற்றத்தினை தளத்திலிருந்து நேரடியாகவே, புகைப்படம் மற்றும் புவியமைப்பு கூறுகளுடன் (அட்ச-தீர்க்க ரேகை) பதிவு செய்ய முடியும். இது தொகை வழங்குதலுக்கு அடிப்படையாக அமையும். (சென்னை தேசிய தகவல் மையம் சாலைப்பணிகளின் முன்னேற்றத்தை பதிவு செய்ய ஏற்கனவே ஸ்மார்ட் தொலைபேசி பயன்பாடு முறையை வடிவமைத்துள்ளது)

4. பணி இடத்தினை குறியீடு செய்த பிறகு, ஒன்றிய மேற்பார்வையாளர் / ஒன்றிய பொறியாளர் தன்னிடமுள்ள ழுஞளு பொருத்தப்பட்ட ஸ்மார்ட் அலைபேசியைக் கொண்டு வீடு கட்டப்படவுள்ள  இடத்தை புகைப்படம் எடுப்பார். இப்புகைப்படமானது 10 மீட்டர் தொலைவிற்குள் அதாவது வீட்டினை முழுமையாக பார்க்கும் அளவிற்கு எடுக்கப்பட வேண்டும். இந்த புகைப்படம் """"ஆன்லைன் திட்ட கண்காணித்தல் முறையில்"" புவியமைப்பு கூறுகளுடன் பதிவு செய்யப்பட்டு, குறிப்பிட்ட அப்பயனாளிகளுக்கு நிலை வாரியான தொகை விடுவித்தலுக்கு அடிப்படை ஆதாரமாகப் பயன்படுத்தப்படும்.

5. வீடு கட்டுமானத்தில் தரைமட்ட நிலை முடிந்த பிறகு, மேற்பார்வையாளர்/ஒன்றிய பொறியாளர் தள குறியீட்டின் போது எவ்விடத்தில் நின்று புகைப்படத்தினை எடுத்தாரோ முடிந்தவரை அவ்விடத்திலேயே நின்று மற்றொரு புகைப்படத்தை எடுக்க வேண்டும்.

6. மேற்பார்வையாளர்/ஒன்றிய பொறியாளர் பணி தளத்திலிருந்தே பணியின் நிலையினையும், புகைப்படத்துடன் கூடிய வீட்டின் நிலையினையும் ஆன்லைன் திட்ட கண்காணித்தல் முறையில் பதிவு செய்ய வேண்டும். புவியமைப்பு கூறுகள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம், வீடு குறிப்பிட்ட எந்த பயனாளியுடையது என்பதை சரிபார்க்க உதவுகிறது.




அலைபேசி அடிப்படையிலான மதிப்பீட்டுச் சான்றிதழ் மற்றும் 

நிதி மேலாண்மை

1. ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீட்டு சான்றிதழ் மற்றும் தொகை விடுவித்தலுக்கான குறிப்பாணையுடன் கூடிய பட்டியல் தொகுதி ஊரக வளர்ச்சி வலைதளத்தில் உருவாக்கப்படும். இவற்றை அலைபேசி பயன்பாடு மற்றும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள ஆன்லைன் திட்ட கண்காணித்தலுடன் இணைக்கப்படுவதின் மூலம்,  எப்பொழுதெல்லாம் வீட்டின் பணி முன்னேற்றம் அலைபேசியில் பதிவு செய்யப்பட்டு புவியியல் கூறுகளுடன் கூடிய புகைப்படத்துடன் சான்றுரைக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நிலைவாரியான மதிப்பீடு சான்றிதழ் மற்றும் தொகை தானியங்கி முறையில் உருவாகும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது.

2. தற்போது உதவிப் பொறியாளர் குறிப்பிட்டுள்ள பயனாளிக்கான குறிப்பிட்ட நிலைக்கான ஆன்லைன் மதிப்பீட்டு சான்றிதழை, புகைப்படத்துடன் உருவாக்க முடியும். இந்த மதிப்பீட்டு சான்றிதழ், ஆய்வு செய்யும் அதிகாரியான உதவி செயற் பொறியாளரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு ஆன்லைன் திட்ட கண்காணித்தல் முறை மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) க்கு அனுப்பப்படும்.

3. இந்த மதிப்பீட்டு சான்றிதழின் ஒரு நகல் உதவிப்பொறியாளரால் ஆன்லைன் கண்காணிப்பு தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு, உதவி செயற்பொறியாளரின் கையொப்பத்துடன், அலுவலகத்தில் ஆவணப்படுத்தலுக்கு சமர்ப்பிக்கப்படும்.

4. வீட்டின் அடித்தள நிலையில், தொகை விடுவிக்க வேண்டுமெனில் அந்நிலையில் வீட்டின் புகைப்படம் பதிவு செய்யப்பட வேண்டும். தொடர்புடைய அலுவலர் ஊரக வளர்ச்சித் துறை வலைதளத்தினுள் சென்று, ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மதிப்பீட்டுச் சான்றிதழை நகல் எடுத்து, கையொப்பமிட்டு மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

5. உதவிப் பொறியாளர் / உதவிச் செயற் பொறியாளரிடமிருந்து மதிப்பீட்டுச் சான்றிதழை பெற்ற பிறகு தொடர்புடைய உதவியாளர் / கணக்காளர்/ துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊரக வளர்ச்சித் துறை வலைதளத்தினுள் சென்று குறிப்பிட்ட அந்த வீட்டிற்கான தொகை விடுவித்தலுக்கான குறிப்பாணையை உருவாக்கி கோப்பினை தயாரித்து, பட்டியலை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) க்கு வைக்க வேண்டும்.

6. வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பயனாளிக்கு வழங்கப்பட்ட கட்டுமானப் பொருட்களுக்கான தொகை ஏதேனும் இருப்பின் அதனை கழித்த பிறகு பட்டியலை அனுமதிக்க வேண்டும். தேவையான பதிவுகளை மதிப்பீட்டு ஒதுக்கீடு புத்தகம் மற்றும் தொடர்புடைய திட்ட ரொக்க புத்தகத்தில் பதிவு செய்தபிறகு, அந்த பட்டியல் மற்றும் தொகை விடுவித்தலுக்கான குறிப்பாணையை பயனாளிக்கு தொகை வழங்கும் பொருட்டு தொடர்புடைய கிராம ஊராட்சியின் தலைவருக்கு அனுப்ப வேண்டும். 121 பட்டியல் மற்றும் தொகை வழங்குதலுக்கான குறிப்பாணையை பெற்ற பிறகு கிராம ஊராட்சியின் தலைவர், நடைமுறையில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி, தொடர்புடைய பயனாளிக்கு தொகையை வழங்க வேண்டும்.


அலைபேசி அடிப்படையிலான 

ஆன்லைன் கண்காணித்தல் முறையின் அனுகூலங்கள்

1. அலைபேசி அடிப்படையிலான ஆன்லைன் கண்காணித்தல் முறையின் மூலம், பணி ஆணை வழங்குதல், மதிப்பீட்டு சான்றிதழ் தயாரித்தல் மற்றும் பயனாளிகளுக்கு தொகை வழங்குதல் ஆகியவற்றிற்கான கால அளவு குறைகிறது.

2. மேலும், ஒவ்வொரு நிலையின் போதும் புகைப்படங்கள் பதிவு செய்யப்படுவதால், ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள், திட்டத்தை நுண்ணிய முறையில் கண்காணித்தலுக்கு உதவுவதுடன் வீடுகளின் பணி முன்னேற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு ஊராக வளர்ச்சித்துறை

Saturday, July 11, 2015

சீராய்வு மனு என்றால் என்ன?

சீராய்வு மனு என்றால் என்ன?


சீராய்வு மனு உத்தரவு நகல் கிடைத்த 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 13.05.2018       

கேவியட் மனு தாக்கல்


கேவியட் மனு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறை
**************************************************************
மாவட்ட  உரிமையியல் நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரையில்  (Caveat Petition) கேவியட் மனு படிவம் ஒரே மாதியானதாகவே இருக்கும்.

நபர் ஒருவருக்கு எதிராக, மற்றொரு நபர்  மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலோ
 ( District Munisif Court),  மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் மன்றத்திலோ
 ( District Munisif Cum Magistrate Court), சார்பு நீதிமன்றத்திலோ (Sub Court) , மாவட்ட நீதிமன்றத்திலோ (District Court), உயர்நீதிமன்றத்திலோ (High Court),  தடையாணை (Stay Order) அல்லது உறுத்துக்கட்டளை (Injection Order) யை அவசரத்தன்மையுடன் (Emergent Petition) அறிவிப்புக் கொடுக்காமல் பெற்றிடுவத்ற்கு வாய்ப்புண்டு என்று கருதிடும் சூழ்நிலையில் நபர் ஒருவர் கேவியட் மனுவை தாக்கல் செய்யலாம்.

மேல்முறையீட்டுக் காலங்களிலும்  கேவியட் மனுவை தாக்கல் செய்யலாம். அதற்கான படிவமும் இதே மாதிரியானதாகும்.

கேவியட் மனுவை அவசரத்தன்மையுடனோ அல்லது சாதாரண நிலையிலோ தாக்கல் செய்யலாம். 

அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப்படும் கேவியட் மனுவை, அவசரத்தன்மை மனு மற்றும் அபிடவிட்டுடன் இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டும். சாதாரணமாக தாக்கல் செய்யப்படும் கேவியட் மனுவுக்கு அவசரத்தன்மை மனு மற்றும் அபிடவிட்டை இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

கேவியட் மனுவை அவசரத்தன்மை மனுவுடன் கொடுத்தால் மனு சரியாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அன்றைய தினமே எண் கொடுத்து விடுவார்கள்.
  
கேவியட் மனுவை சாதாரணமாக தாக்கல் செய்தால், அடுத்தடுத்த நாட்களில்தான் எண் கொடுப்பார்கள்.

கேவியட் மனுசாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும்போது, அந்த மனுவில் எண் கொடுப்பதற்கு முன்னர், நபர்கள் எவரும் தமது வழக்கை அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்து தடையாணை அல்லது உறுத்துக் கட்டளையைப் பெற்றிட முடியும்.

கேவியட் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர், அசல் மனுவில் மனுதாரரிடம் கையொப்பத்தைப் பெறுதல் வேண்டும். நகலின் மனுதாரரின் மையொப்பத்தைப் பெறுதல் கூடாது. நகலில் உண்மை நகல் அல்லது T.C (True Copy) என்று குறிப்பிட்டு மனுதாரரின் வழக்கறிஞர் மட்டும் கையொப்பம் இட்டால் போதுமானதாகும். ஆனல், அசல் கேவியட் மனுவில் மனுதாரரும், வழக்கறிஞரும் கையொப்பம் இடுதல் வேண்டும். கேவியட் மனுவில் ரூ.10/-க்கான நீதிமன்ற கட்டண முத்திரை வில்லை ஒட்டப்படுதல் வேண்டும்.

கேவியட் மனுவின் நகல் ஒன்றை எதிர் மனுதாரருக்கு மனுதாரரின் வழக்கறிஞர் பதிவு அஞ்சலில் ஒப்புகை அட்டை இணைப்புடன் அனுப்பி வைத்தல் வேண்டும். பதிவு அஞ்சல் உறை மற்றும் ஒப்புகை அட்டையின் பெறுநர் முகவரியில் எதிர்மனுதாரரின் முகவரியையும், அனுப்புனர் முகவரியில் மனுதாரரின் வழக்கறிஞரின் முகவரியையும் குறிப்பிடுதல் வேண்டும்.

கேவியட் மனுவின் நகலை எதிர்மனுதாரருக்கு அனுப்பி வைத்த பின்பே கேவியட் அசல் மனுவை நீதிமன்றத்தில் தக்கல் செய்ய வேண்டும்.

கேவியட் மனு, அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப்படும்போது,  அதில்
1.  கேவியட் அசல் மனு (Caveat Original Petition)
2. எதிர்மனுதாரருக்குப் பதிவுத்தபாலில் கேவியட் மனுவின் நகலை அனுப்பியதற்குச் 
     சான்றாதாரமாக உள்ள அஞ்சல் பற்றுச் சீட்டு (Postal Receipt)
3. வழக்குரைக்கும் அதிகார ஆவணம் (Vakalat)
4. அவசரத்தன்மை மனு (Emergent Petition) 
5. அபிடவிட் (Affidavit)
ஆகியவற்றைத் திறந்த நீதிமன்றத்தில் (Open Court) நீதிபதியிடம் கொடுத்தல் வேண்டும்.

 கேவியட் மனுவை சாதாரண முறையில் தாக்கல் செய்திடும்போது,  அதில்
1. கேவியட் அசல் மனு  (Caveat Original Petition)
2.வழக்குரைக்கும் அதிகார ஆவணம் (Vakalat)
3. எதிர் மனுதாரருக்கு கேவியட் மனுவின் நகலை அனுப்பியதற்குச்  சான்றாதாரமாக உள்ள அஞ்சல் பற்றுச் சீட்டு  (Postal Receipt)
ஆகியவற்றை தலைமை எழுத்தர் (Head Clerk) அல்லது செரஸ்தாரிடம் (Sheristadar ) கொடுத்தால் போதுமானதாகும்.

மனுக்கள், அபிடவிட், வழக்குரைக்கும் ஆவணம் ஆகியவற்றின் மேலுரையில் வழக்கறிஞர் பெயர், ஊர், நீதிமன்றம், மனு விபரம் ஆகியவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும்.

அஞ்சல் பற்றுச் சீட்டை தனியே ஒரு வெள்ளைத்தாளில் இணைத்து, அந்த வெள்ளைத்தாளில் மேல்குறிப்பை (Docket) எழுதுதல் வேண்டும்.

கேவியட் அசல் மனுவில் ரூ.10/-க்கும், வழக்குரைக்கும் அதிகார ஆவணத்தில் வழக்கறிஞர் நல நிதி முத்திரை வில்லையுடன் ரூ.5க்கும், அவசரத்தன்மை மனுவில் ரூ.2/-க்கும் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையை ஒட்டுதல் வேண்டும். அபிடவிட்டில்  நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையை  ஒட்ட வேண்டிய அவசியமில்லை. 

கேவியட் மனுவில் வாத-பிரதிவாதங்கள் கேட்கப்பட மாட்டாது. அதனால், அதில் எதிர்மனுதாரர் கட்சியாடுகின்ற வகையில் எதிர்வுரையோ, பதிலறிவிப்போ செய்ய வேண்டியதில்லை.

ஒருமுறை தாக்கல் செய்யப்படுகின்ற கேவியட் மனு மூன்று மாதங்கள் வரையில் மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு புதிதாகத்தால் கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

கேவியட் மனு இரண்டாவது முறையாக அல்லது அடுத்தடுத்து எத்தனை முறை தாக்கல் செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் பின்பற்றப்படும் அதே நடைமுறையையே பின்பற்றுதல் வேண்டும்.

நன்றி : சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம், M.A, B.L.,