disalbe Right click

Tuesday, January 19, 2016

சிபில் ஸ்கோர் பற்றி அறிய


சிபில் ஸ்கோர் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்?

சிபில் என்பது CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD என்பதன் சுருக்கம் ஆகும். இந்த அமைப்பானது நம் நாட்டில் கிரடிட் கார்டு பயன்படுத்துபவர்களைப்பற்றியும்,கடன் வாங்குபவர்களைப் பற்றி்யும் தகவல்களை சேகரித்து பராமரிப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு அமைப்பாகும்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்கள் பற்றிய தகவலையும், அவர்கள் அதனை திருப்பிச் செலுத்துவது பற்றிய தகவலையும் இந்த அமைப்பிற்கு தெரிவிக்கும். இதனை இந்த சிபில் அமைப்பு சேகரித்து வைக்கும். இதனை வைத்து ஒருவர் வாங்கியுள்ள கடனைப்பற்றியும் அதனை திருப்பிச் செலுத்தும் அவரது திறனைப் பற்றியும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். 

வீடு வாங்க ஹோம் லோன், கார் வாங்க கார் லோன், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என்று கடன் வாங்குவதற்காக விண்ணப்பிக்கும்போது முதலில் கேட்கப்படுவது இந்த சிபில்ஸ்கோர் தான்.

நீங்கள் வாங்கிய கடனை அடைக்க, செலுத்தும் தொகையை ஒருமுறை தாமதமாக செலுத்தினால்கூட அதனது பாதிப்பு இந்த சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும். 

கடன் வாங்குவபரின் சம்பளத் தொகையில் 60% அளவுக்கே அதிகபட்சம் கடன் இருக்க வேண்டும். அதற்கு மேல் கடன் வாங்கினால்கூட அதன் தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.

அதேபோல் கிரடிட்கார்டு லிமிட் தொகையில் அதிகபட்ச தொகையை பயன்படுத்திவிட்டு, குறைந்தபட்ச தொகையை செலுத்தினாலும் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.

ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பிப்பதும் தவறு. வங்கிக்கடன் அல்லது கிரடிட் கார்டு பெற்று ஆறு மாதங்கள் கழித்தே அடுத்த கடனுக்கு அல்லது அடுத்த கிரடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கிக்கடனை சரியாக செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கடனை செலுத்திய 3 மாத்தித்தில் இருந்து 6 மாதங்களுக்குள் சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டை விண்ணப்பித்து பெற வேண்டும். சில வேளைகளில் தாங்கள் கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தியிருந்தால்கூட வங்கி அதனை சிபில் அமைப்பிடம் தெரிவிக்காமல் இருந்தால், வங்கி மேலாளரிடம் பேசி அதனை சரிசெய்ய வைக்கவேண்டும்.

எதற்கு எவ்வளவு வெயிட்டே்ஜ்?

கடனை திருப்பி செலுத்தும் வகைக்கு 30%

கடனி்ன் கால அளவிற்கு 25%

கடனுக்கும் சம்பளத்திற்கும் உள்ள வித்தியாசம் 25%

கிரடிட்கார்டு பயன்படுத்துவதற்கு 20% மும் வெயிட்டேஜ் இருக்கும்.

இன்றைய நிலையில் கை நிறைய கடன் வாங்கிவிட்டு, அதை சரிவர திரும்பக் கட்டாமல், சிபிலில் மாட்டி கடைசியில் புதிதாக கடன் பெறும் தகுதியை இழந்து, அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் பலர். 

வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தி, சிபிலில் நூற்றுக்கு நூறு எடுக்க என்ன செய்ய வேண்டும் ?

''வங்கிகளில் கடன் வாங்க நினைக்கிற வர்கள் முதலில் ரூ.500 செலுத்தி தங்களுடைய பெயர், தந்தை பெயர், தங்களுடைய முகவரி, பிறந்த தேதி, தொலை பேசி எண்கள் மற்றும் பான் நம்பர், ஓட்டுநர் உரிமம் எண், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் நம்பர் ஆகியவற்றில் அடையாளத்துக்குக் கொடுக்கப்பட்ட ஒன்றை சிபில் அமைப்புக்கு அனுப்பி, 
தங்களின் சிபில் ஸ்கோர் மற்றும் தங்கள் மீது தங்களுக்கே தெரியாமல் ஏதாவது, கடன் நிலுவை உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

சிபில் ஸ்கோர்!

சிபில் ஒவ்வொருவருக்கும் 300 முதல் 900 வரை ஸ்கோர் கொடுக்கிறது. ஏற்கெனவே கடன் வாங்கிய ஒருவர், இன்னொரு கடனுக்கு விண்ணப்பித்து, அவருக்கு 800-க்கு மேல் ஸ்கோர் இருந்தால், அவரது கடன் விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்படும். அவர்களுக்கு கிரீன் சேனல் கடன் வழங்கப்படும்.


ஸ்கோர் 700 முதல் 800 வரை இருந்தால், ஆவணங்களை சரி பார்த்துவிட்டு வங்கிகள்/நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும். ஸ்கோர் 600 முதல் 700-ஆக இருந்தால் தீவிர பரிசீலனைக்குப் பின் விண்ணப்பதாரர் மேல் எந்தத் தவறும் இல்லை என்று விண்ணப்பதாரர் நிரூபித்தால், அவர்களுக்கும் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு. 

ஆனால், விண்ணப்பதாரரின் ஸ்கோர் 600-க்கு கீழே இருந்தால் கடன் கேட்டு வருபவரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்படும். இவர்களுக்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது.

விண்ணப்பத்தாரரின் ஸ்கோர் சான்றிதழில் விவரம் இல்லை என்பதை என்.ஏ. அல்லது என்.ஹெச். (NA or NH) என்று இருந்தால் அவர்கள் கடனுக்கு புதியவர்கள்.

இதுவரை கடந்த 2 வருடங்களில் அவர்கள் எந்த கடனும் வாங்கவில்லை என்று அர்த்தம். இது மாதிரியான புதியவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்படும்.

'CIBIL Score sheet-ல் XXX’ என்றோ அல்லது DPD (Days Past Dues) என்றோ போட்டிருந்தால் கவலை வேண்டாம். அவர்கள் வாங்கிய கடனை சரியாக திருப்பிச் செலுத்துகிறார்கள் என்று அர்த்தம்.

ஸ்கோர் குறைய காரணங்கள்..!

கடனை உரிய காலத்தில், உரிய தவணையில் செலுத்தத் தவறினால் ஸ்கோர் குறையும்.

கிரெடிட் கார்டு கடன், குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்திவிட்டு மீதமுள்ள தொகையை தவணையில் செலுத்தினால் அபராதத்திலிருந்து தப்பிக் கலாம். ஆனால், ஸ்கோர் உடனடியாக குறையும். அந்த தவணைக் காலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் உங்கள் ஸ்கோர் குறைந்து கொண்டே போகும்.

நீங்கள் வாங்கும் வீட்டுக் கடன் அல்லது கார் கடன் அதிகமாக இருந்து பெர்சனல் லோன் குறைவாக இருந்தால், உங்கள் ஸ்கோர் பாதிக்கப் படாது. 

அடமானம் இல்லாத கடன் (உதா. பெர்சனல் லோன்), அடமானக் கடனைவிட (உதா. வீட்டுக் கடன்) அதிகமாக இருந்தால் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படும். 

உதாரணமாக மொத்த கடன் 25 லட்ச ரூபாயாக இருந்தால், இதில் கிரெடிட் கார்டு இரண்டு லட்ச ரூபாய், அடமானம் இல்லாத கடன் 12 லட்ச ரூபாய், கார் லோன் இரண்டு லட்சம் ரூபாய், வீட்டுக் கடன் 9 லட்சம் ரூபாயாக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும். ஏனெனில் கடனில் 44% மட்டுமே அடமானத்துடன் கூடிய கடன் (வீட்டுக் கடன்) மீதமுள்ள 56% அடமானம் இல்லாத கடன் (பெர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்). 

ஆகவே, பெர்சனல் லோன் கடனையும், கிரெடிட் கார்டு கடனையும் அதிகம் வாங்காமல் இருந்தால் ஸ்கோர் நன்றாகவே இருக்கும். 

வீட்டுக் கடனையும், கார் கடனையும் அதிகபட்சமாக 75% முதல் 80% வரை வாங்கி பயன் அடையலாம்.

ஒருவர் வீட்டுக் கடன் வாங்க வேண்டுமென்றால் குறைந்த வட்டியுள்ள ஒரே ஒரு வங்கியைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தை அங்கு மட்டுமே விண்ணப்பித்தாலே போதும். ஒரே நேரத்தில் ஐந்தாறு வங்கிகளில் விண்ணப்பித்தால் அனைத்து வங்கிகளிலும் உங்கள் பெயர் விசாரிக்கப்பட்டு, அதனால் உங்கள் ஸ்கோர் குறைய வாய்ப்பிருக்கிறது. இரண்டு கடனுக்கு மத்தியில் குறைந்தபட்சம் 4 முதல் 6 மாத இடைவெளி இருக்க வேண்டும்.
முடிந்த வரை யாருக்கும் கடன் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருந்தால் நல்லது. அவர்கள் பணம் கட்டவில்லை என்றாலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப் பட்டு உங்களுக்கு கடன் கிடைக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

கடன் கிடைக்காது!

நீங்கள் கடன் வாங்கி அதை குறிப்பிட்ட தேதியில் செலுத்த தவறி இருந்தால், வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, மீதமுள்ள கடனையோ அல்லது மொத்தத் தொகையையும் தள்ளுபடி செய்திருக்கலாம். இதனால் உங்களுடைய சிபில் சான்றிதழில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது (Written-off) என்றோ, செட்டில் செய்யப் பட்டது (settled) என்றோ வரும். இந்நிலையில் உங்களை அடுத்த ஏழு வருடங்களுக்கு கறுப்புப் பட்டியலில் (Black List) சேர்த்துவிடுவார்கள். இதன் பிறகு அத்தியாவசிய கடனுக்காக நீங்கள் அழுது புலம்பினாலும் கடன் கிடைக்காது.

ஐந்து கட்டளைகள்!

நீங்கள் சிபிலில் அதிக ஸ்கோர் வாங்கி நல்ல பெயர் எடுக்க வேண்டுமெனில் பின்வரும் ஐந்து விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

1. உங்களுடைய இ.எம்.ஐ.-யை நிலுவை தேதிக்கு முன்னதாகவே செலுத்தி விடுங்கள். கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம்.

2. கிரெடிட் கார்டு நிலுவையை மொத்தமாக செலுத்துவது நல்லது. குறைந்த பட்ச தொகையைச் செலுத்தி விட்டு மீதியை இ.எம்.ஐ-ல் செலுத்தக் கூடாது.

3. அடமானமில்லாத கடன் மற்றும் பெர்சனல் லோன் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

4. அதிக கிரெடிட் கார்டுகள் இருந்தால் இரண்டு மட்டும் வைத்துக் கொண்டு மீதியை சரண்டர் செய்துவிடுங்கள். அதில் குறைந்த தொகையை பயன்படுத்தவும்.

5.ஒரே நேரத்தில் வீட்டுக் கடன் அல்லது கார் கடனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.

இந்த விதிமுறைகளை 24 மாதங்களுக்கு சரியாக பின்பற்றி வந்தால் உங்கள் ஸ்கோர் 300-ஆக இருந்தாலும் அது 800ஆக உயர வாய்ப்பு இருக்கிறது. ஆல் த பெஸ்ட்..!

நன்றி: திரு.கார்த்திகேயன்.

https://www.cibil.com/online/credit-score-check.do என்ற இணையதளத்தில் இருந்து சிபில் ஸ்கோர் படிவத்தை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

சிபில் ஸ்கோர் வந்த பிறகு அதனைப்பற்றி புரிந்துகொள்ள 
https://www.cibil.com/video-credit-report-meaning இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கேஷ் கார்டு பற்றி


கேஷ் கார்டு பற்றி தெரிந்து கொள்வோமா?

உங்களுக்கு கிரெடிட்கார்டு தெரியும்; டெபிட்கார்டு தெரியும், காஷ்கார்டு தெரியுமா? 


அதான் பிரீபெய்ட் வெர்சுவல் கார்டு, மொபைல்வாலட் என்றெல்லாம் சொல்கிறார்களே! உங்கள் கைபேசிக்குள் ஒளிந்திருக்கும் பணம் இது!



வங்கிக்குப் போகாமல், ஏன் உங்களுக்கு வங்கிக் கணக்கே இல்லையென்றால் கூட நீங்கள் இதைப் பயன்படுத்தி மற்றொரு ஊரிலிருப்பவருக்குப் பணம் அனுப்பலாம். கரண்ட் பில் கட்டலாம். டாப்அப் செய்யலாம். ரயில் டிக்கெட்டும் சினிமா டிக்கெட்டும் கூட எடுக்கலாம். 

பேடிஎம் போன்ற பல நிறுவனங்கள் இச்சேவையை அளித்தாலும் இன்று இச்சந்தையைக் கலக்கிக் கொண்டிருப்பது ஐகேஷ் எனும் காஷ்கார்டு சேவையே!

பீஹாரிலிருந்து சென்னை வந்து கட்டிட வேலை செய்பவரை எடுத்துக் கொள்ளுங்கள். அத்தொழிலாளியிடம் இணைய வசதி இருக்காது; வங்கிக்குச் செல்ல நேரம் இருக்காது. ஆனால் கைபேசி இல்லாமல் இருக்குமா? அம்மாதிரியான ஆட்கள் தெருக்கோடியில் இருக்கும் ஸ்மார்ட்ஷாப் எனும் முகவரின் கடைக்குச் சென்று தங்களது கணக்கில் பணத்தைச் செலுத்திவிடலாம். 

பின்னர் தேவையான பணத்தை கைபேசி மூலமாக அனுப்பினால், சில நொடிகளில் அவரது உறவினர் தமது ஏடிஎம் கார்டு மூலம் அதை எடுத்துக் கொள்ளலாம். கோயம்பேடு சந்தைகளிலுள்ள சிறு வியாபாரிகள் இச்சேவையைப் பயன்படுத்துகிறார்கள்!

இதன் பின்னணி சுவாரஸ்யமானது! 2008ல் கைபேசிகளின் ஆதிக்கத்தால் எஸ்டீடி பூத்துகளுக்கு தேவை குறைந்ததால் பல ஆயிரம் கடைகளை மூடிவிடக்கூடிய சூழ்நிலை உருவா யிற்று. ஆனால் அதே சமயம் பல லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் வங்கி மூலம் பணம் அனுப்புவதில் சிரமப்பட்டனர்.

இவையிரண்டையும் பார்த்த ராமுஅண்ணாமலை, பழனியப்பன் எனும் நம்மூர் சகோதரர்களுக்கோ இதில் ஒரு அரிய சேவை மற்றும் வர்த்தக வாய்ப்பு கண்ணுக்குத் தெரிந்திருக்கிறது.

வங்கிகளே தயங்கிய காலத்தில் அவர்கள் தைரியமாக இறங்கினார்கள். இவ்விரண்டையும் இணையத்தினால் இணைத்தார்கள். ஐகேஷ் என்னும் கைபேசி பணப்பரிமாற்றச் சேவையை உருவாக்கி ஒரு அமைதிப் புரட்சியே செய்துவிட்டார்கள். இன்று இந்தியாவெங்கும் 90,000 ஸ்மார்ட்ஷாப்புகளில் ஐகேஷ்-ஐ பயன்படுத்தி நடக்கும் பரிவர்த்தனைகள் நாளொன்றுக்கு இரண்டரை லட்சமாம்!

தி இந்து தமிழ் நாளிதழ் - 18.01.2016

குறிப்பு: இந்த சேவையைப் பெற www.icashcard.in செல்லுங்கள்.


Wednesday, December 23, 2015

பசுமை தீர்ப்பாயம்


பசுமை தீர்ப்பாயம் என்றால் என்ன? 
அதன் அதிகாரம் மற்றும் பணிகள் என்ன?

தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி, 21ன் படி, 2010, அக்., 18ம் தேதி அமைக்கப்பட்டது.
இந்த தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை, தாமாகவே "விரைவு கோர்ட்' முறையில் விசாரிக்கிறது.

இதன் தலைமையிடம் டில்லியில் உள்ளது. 

National Green Tribunal
Faridkot House, 
Copernicus Marg, 
New Delhi-110 001
Phone : 011-23043501
Fax : 011-23077931
Email : rg.ngt@nic.in

நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் எளிதாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சென்னை, போபால், புனே, கோல்கட்டா ஆகிய இடங்களில், இதன் பெஞ்ச் செயல்படுகிறது.
சுற்றுச்சூழல், காடுகள், அனைத்து விதமான இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றை பேணிக் காப்பது, இதன் கடமை. இயற்கை வளங்களை   சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பது, சேதப்படுத்துவது போன்ற பிரச்னைகளின் போது, ஆராய்ந்து முடிவு எடுக்கும் உரிமை இதற்கு உள்ளது.
இயற்கை இடர்பாடுகள் மூலம் தனிநபருக்கு ஏற்படும் இழப்புக்கு, இழப்பீடு பெற்று தரும் பணியையும் செய்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை இந்த அமர்வு எடுத்துக் கொள்வதால், ஐகோர்ட்டின் பணி குறைக்கப்படுகிறது.
இதன் தென்மண்டல அலுவலகம் சென்னை, அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரிய அலுவலக கட்டடத்தில் இயங்குகிறது.
முகவரி:
தேசிய பசுமை தீர்ப்பாயம்
தென்மண்டலம்,
No.:950/1, 
முதலாவது, இரண்டாவது மற்றும் மூ்ன்றாவது தளங்கள்
பூந்தமல்லி நெடுஞ்சாலை
அரும்பாக்கம்,
சென்னை=600 106.
*************************************************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி


Saturday, December 19, 2015

சொத்து பத்திரங்கள் தொலைந்தால்

சொத்து பத்திரங்கள் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?
சொத்து உரிமையாளர்கள், சொத்து ஆவணங்களை பழுதுபடாத விதத்தில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்துக்கொண்டாலும் கூட, சொத்து ஆவணங்கள் தொலைந்து போகும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி புகார்கள் கொடுக்கப்படுகின்றன. சில சொத்து பரிமாற்ற தீர்வுகளின் போது அல்லது வீட்டைப் புனரமைப்பதற்கு உங்களுக்கு வங்கி கடன் தேவைப்படும் நேரத்தில், நீங்கள் தான் சொத்து உரியாளர் என்பதற்கான கையடக்க ஆதாரமாக சொத்து ஆவணங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், வங்கி அதிகாரிகள் கடன் வழங்க மாட்டார்கள் மற்றும் சொத்துப் பரிமாற்றங்கள் தீர்க்கப்படுவதில் சிக்கல் உருவாகும். இருப்பினும், சொத்து ஆவணங்களை இழப்பதனால் ஒருவர் முழுமையாக தவிக்க விடப்படுவதில்லை. சொத்து உரிமையாளர்கள் முயற்சி செய்து நகல் ஆவணங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இங்கு நகல் சொத்து ஆவணங்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. நகல் சொத்து ஆவணங்களை எப்போதும் சொத்து உரிமையாளர் பெறமுடியும். ஆனால், இதற்கு கணிசமான செலவு, முயற்சி மற்றும் நேரம் ஆகியவை தேவை.
எஃப் ஐ ஆர் தாக்கல் செய்தல்சொத்து ஆவணம் தொலைந்து விட்டால் முதல் வேலையாக போலீஸில் எஃப்ஐஆர் தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் புகார் பற்றிய நகலை சொத்து உரிமையாளர் பெற்றுக்கொள்ள வேண்டும். அடமான சொத்து ஆவணங்கள், வங்கி மூலம் இடந்தவறி வைக்கப்பட்டாலும் கூட, புகார் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.
செய்திதாளில் விளம்பரம் செய்தல்சொத்து உரிமையாளர் சொத்து ஆவண இழப்புப் பற்றி உடனடியாக ஒரு ஆங்கில மற்றும் பிராந்திய மொழி தினப்பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்தை வாங்க ஆர்வமுள்ள நபரும் இது பற்றி விளம்பரம் செய்யலாம்.
என்ஓசி மற்றும் நகல்
பங்குச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தல் சொத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான எஃப்ஐஆர் காப்பி ஆதாரத்தைக் கொண்டு, ஹவுசிங் சொசைட்டியிலிருந்து, என்ஓசி மற்றும் டூப்பிளிகேட் ஷேர் சர்டிபிக்கேட் பெறுவதற்கு சொத்து உரிமையாளர் விண்ணப்பிக்க முடியும். சில வேளைகளில் வங்கிகள் என்ஓசி இல்லாமல் கடன் வழங்குவதில்லை. ஆகையால் கண்டிப்பாக நோ அப்ஜக்ஷன் சர்டிபிக்கேட் பெற்றுகொள்வது அவசியம்.
தொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுதல் சொத்து விபரங்கள், எஃப்ஐஆர் நம்பர் மற்றும் பத்திரிகையில் வெளியான விளம்பரம் ஆகியவை அடங்கிய ஒரிஜினல் சொத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுவதற்கான அனைத்து விபரங்களும் ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் இருக்க வேண்டும். இந்த ஆவணத்தில் கூறப்பட்டவை உண்மை என்பதை உறுதிபடுத்த, ஒரு நோட்டரி மூலம் இது கையெழுத்திடப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.
விற்பனைப் பத்திர நகலைப் பெறுதல் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, வேண்டிய கட்டணத்தை செலுத்தினால், பதிவாளர் அலுவலகம் விற்பனைப் பத்திரத்தை வழங்கும். நியாயமாக ஒரு பழைய சொத்தாக இருந்தால், குறிப்பிடப்பட்ட சொத்தின் மீது எந்தவொரு வில்லங்கமும் இல்லை என்பதை உறுதிபடுத்த ஒருவர் உறுதி அறிக்கை பெற வேண்டும். 
இந்த உறுதி அறிக்கையும் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற முடியும். ஆகவே, ஒருவேளை நீங்கள் சொத்து ஆவணங்களை தொலைத்து விட்டால், தாமதிக்காமல் நகல் ஆவணங்களைப் பெறுவதற்கு மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்.
********************************************************************************************************நன்றி : தினகரன் நாளிதழ் - 18.09.2013 

Friday, December 18, 2015

பத்திரங்கள் பத்திரமாக இருக்க


பத்திரங்கள் பத்திரமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஒருவரின் அந்தஸ்து அவர் வைத்திருக்கும் சொத்துக்கள்தான். நீங்கள் வாங்கிய சொத்துக்கள் உங்களுக்கே உங்களுக்குத் தான் என்பதை எடுத்துச் சொல்வதற்கு ஆதாரமாக இருப்பவை பத்திரங்கள் தான். உங்களிடம் இருக்கும் பத்திரங்கள் மிக பத்திரமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
பதிவு!

சொத்துப் பத்திரங்களை பத்திரமாக வைக்க வேண்டியதால்தான் பத்திரங்கள் எனப் பெயர் வந்ததோ என்னவோ. பத்திரங்கள் மூலமாக ஒருவரது விருப்பம், எண்ணம் போன்றவை செயலாக்கம் பெறப்பட்டு உயிரூட்டும் விதமாக சட்டபூர்வமாக செல்லத்தக்க விதத்தில், ஆவணங்களாக ஏற்படுத்தப்பட்டு, மோசடிகளை தவிர்க்கும் விதமாக ஒரு நபருக்கு ஒரு சொத்து எந்த பிரச்னையுமின்றி, பிறர் உரிமை கோராதவாறு அந்த நபரை சென்றடைவதற்கு வழிவகை செய்து தருவதே பதிவு எனப்படும். 
ஒரு சொத்தை, கிரயத்தொகையான பிரதிபலனை (Sale Consideration) கொடுத்து, விற்பவர் உங்கள் பெயருக்கு எழுதிக்கொடுத்து, உங்கள் பெயருக்கான உரிமை மாற்றம் (Title Transfer) செய்து கொடுத்து, அந்த பதிவு முடிந்தபின் சில வாரங்களில் சம்மந்தப் பட்ட பதிவு அலுவலகம் சென்று பதிவு செய்யப்பட்ட கிரயப் பத்திரத்தினை (Sale Deed) திரும்பப் பெறுதல் வேண்டும். அந்த கிரயப் பத்திரத்துடன் நகல் சேர்த்து பதிவு செய்யப்பட்டிருப்பின், அதனையும் மறக்காமல் திரும்பப் பெறுதல் வேண்டும். இப்போது உங்கள் சொத்துக்கான ஒரிஜினல் பத்திரங்கள் உங்கள் வசம் வந்துவிடும்.
சரிபார்த்தல்!

பதிவான பத்திரத்தின் அனைத்து பக்கங்களிலும் விற்ற நபரின் கையொப்பம், அவரது அடையாள அட்டை விவரங்கள், பதிவாளர் கையொப்பம், ஸ்கேன் செய்துகொண்ட விவரங்கள், குறைவான முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தி இருந்தால் அதுகுறித்த விவரங்கள், புகைப் படங்கள், களப்பணி மேற்கொள்ளப் பட்டிருப்பின் சொத்தின் மதிப்பு சரி என்ற சான்றிதழ், ஆவணங்களுக்கு வழங்கப்பட்ட எண், ஆவணத்தின் மொத்தப் பக்கங்கள் என அனைத்தையும் சரிபார்த்தல் அவசியம்.
இந்த அசலுடன், சம்பந்தப்பட்ட இதர மூல ஆவணங்களின் ஒரிஜினல், அதன் தாய்பத்திரங்களின் நகல்கள், வில்லங்கமில்லா சான்றிதழ்கள், பட்டா, சிட்டா, போன்ற வருவாய் துறை ஆவணங்கள், வரி ரசீதுகள், லே அவுட் பிளான் மற்றும் சட்டரீதியான கருத்து பெறப்பட்டிருந்தால், அதனையும் இணைத்துக்கொண்டால் நாம் அந்த சொத்தினை அபிவிருத்தி செய்யும்போதோ, விற்பனை செய்யும்போதோ, குழம்பி நிற்கவேண்டிய அவசியமில்லை.
எப்படி பத்திரப்படுத்துவது?

பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக பத்திரங்களை லேமினேஷன் செய்தல் கூடாது. ஆவணங்களின் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகிவிடும். ஆவணங்களை தனித்தனியே பிரித்து, தைத்து வைத்தல் நல்லது. ரப்பர் பேண்ட், கிளிப்புகள் போன்றவைகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. அடுத்து, ஆவணங்களை பாலித்தீன் கவரில் போட்டு, அதற்குள் அந்துருண்டை போன்ற ரசாயன பொருட்களைப் போட்டு வைப்பதன் மூலம் ஆவணங்கள் பாழ்படும் அபாயம் அதிகம்.
பத்திரங்களை சாதாரண ஃபைல்களில் வைத்து பத்திரப்படுத்துவதே நல்லது. முடிந்தால் அனைத்து ஆவணங்களையும் தேதிப்படி வரிசைப்படுத்தி, பென்சிலால் பக்க எண்கள் கொடுத்து வைக்கலாம். பயணங்களின்போது, ஒரிஜினல் மற்றும் இதர பத்திரங்களை பத்திரமாக கையாள்கிறோம் என சுமந்துசெல்வதை தவிர்த்தல் வேண்டும். அடிக்கடி பத்திரங்களை எடுத்து, நல்ல சூரிய வெளிச்சத்தில் ஒவ்வொரு தாளாக, தனித்து, பிரித்து, சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் அவ்வாறே பத்திரப்படுத்தி வைத்தாலே போதுமானது.
வங்கி லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை, ஆண்டுக்கு இரண்டு முறையாவது இவ்வாறு, எடுத்து, வெளி உலகை காட்டிய பின்பு மீண்டும் பெட்டகப்படுத்தலாம்.
எதிர்கால பாதுகாப்பு!

அய்யா, என் கெணத்தைக் காணோம் என்பது வெறும் காமெடி சீன் அல்ல. பத்திரப்பதிவுக்குப்பின் பாதுகாத்தல் என்ற ஒரு விஷயத்தையே நாம் கவனிக்கத் தவறுவதுதான். பல லட்சம் ரூபாய் கிரய தொகையாகவும், சில லட்சங்கள் பத்திர வகையறாக்களுக்குமாக செலவு செய்து கிரயம் பெற்ற சொத்தை, அதன்பின்பு என்ன செய்ய வேண்டும், எப்படி பாதுகாத்து பராமரிக்க வேண்டும்?
முதலில், பத்திரப்பதிவு முடிந்தபின்னர், சம்பந்தப்பட்ட பதிவகம் சென்று பதிவு செய்யப்பட்ட பத்திரத்தினை திரும்ப பெறுதல் வேண்டும். சில நாட்களுக்குப்பின் அதே பதிவகத்தில், உங்கள் பத்திரத்தின் பதிவு எண்ணை குறிப்பிட்டு, ஒரு சான்றிட்ட நகல் (Certified Copy of Sale Deed) வேண்டி மனு கொடுத்து, அதனை அந்த அலுவலகத்திலிருந்து, 20 ரூபாய் பத்திரத்தில் சான்றிட்ட நகலாக தருவதை பெற்று, ஏற்கனவே பதிவு செய்து திரும்பப் பெற்றிருந்த ஒரிஜினல் ஆவணத்துடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்தல் நல்லது. தற்போது, உங்கள் சொத்துக்கான பத்திரங்களைப் பொறுத்தமட்டில் உங்களது கிரயப்பத்திரம் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது.
இப்போது, கிரயப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து, உங்கள் சொத்துக்கான வரி விதிப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காலி இடம் என்றாலும் சரி, கட்டப்பட்ட வீடு என்றாலும் சரி, அதன் அளவுக்கேற்பவும், சொத்து அமைந்துள்ள கிராமம், அமைவிடம், போன்றவைகளுக்கேற்பவும் சொத்து வரி விதிப்பு செய்யப்படும். நீங்கள் வாங்கிய சொத்துக்கான வரி விதிப்பு உங்கள் பெயருக்கு ஏற்படுத்துவதும் உங்கள் உரிமையை நிலைநாட்டக்கூடிய ஒரு கூடுதல் ஆவணமே. எனவே, நம் சொத்துதானே, பதிவு செய்யப்பட்ட கிரயப்பத்திரம்தான் நம் வசம் உள்ளதென பலகாலம் பார்க்காமல் இருக்கும்பட்சத்தில், ‘கிணத்தை காணோம்’ என்று நீங்களும் கூப்பாடு போடத்தான் வேண்டியிருக்கும்.
பட்டா!

கிரயப் பத்திரம், சொத்து வரி என உங்கள் பெயரிலுள்ள உரிமையை நன்கு பரிசீலித்து வருவாய்த் துறையின் பதிவேடுகளில் ஏற்றி, உங்கள் பெயருக்கு பட்டயமாக வழங்கப்படுவதுதான் பட்டா எனப்படுவது. சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அவர்களால் வழங்கப்பட்ட பட்டாவின் அடிப்படையில் சிட்டா, அடங்கல், போன்ற அந்தந்த கிராம கணக்கினங்களில் உங்கள் பெயரும், சொத்து விவரமும், பதிவேற்றம் செய்யப்படும்.
இப்போது வருடத்துக்கு ஒருமுறை அல்லது இரு முறை என உங்கள் சொத்துக்கான வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate) தாக்கல் செய்து தேவையில்லாத வில்லங்கம் எவையும் உள்ளனவா அல்லது உருவாக்கப்பட்டுள்ள னவா என பார்த்து வருதல் அவசியம்.
சொத்துக்கள் பத்திரமா?

இதை எல்லாம் செய்துவிட்டால் பத்திரங்கள் பத்திரம். ஆனால், உங்கள் சொத்துக்கள் பத்திரமா?
‘‘போன வருஷம்தான் செங்கல்பட்டு பக்கம் ஒரு மனை வாங்கினேன். எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கவே முடியல. நேரா கார்ல கூட்டிவந்துதான் காட்டினாங்க… அதுக்கப்புறம் இப்பத்தான் பார்க்க வருகிறேன். அடையாளமே தெரியல. லே அவுட் போர்டுகூட பெருசா இருந்துச்சு. இப்ப எங்கன்னு தெரியல.”
அப்ரூவல் இல்லாத லேஅவுட்டில் வாங்கும் மனைகளில் பல இடங்களை இப்படித்தான் தேடவேண்டி வரும். காரணம், அருகருகே முளைத்துவரும் இதர அங்கீகாரமில்லா மனைப் பிரிவுகளும், அதன் விற்பனைக்காக மாற்றப்படும் ஏற்கெனவே இருந்த மனைப்பிரிவின் கட்டமைப்புகள், அணுகுச்சாலைகள், இதர வசதிகள் போன்றவை உங்கள் சொத்தை கபளீகரம் செய்யும் காரணிகள். இந்த குழப்படிகள் வராதிருக்க, வாங்கிய சொத்துக்கள் எதுவாக இருப்பினும், அதனை மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது சென்று பார்வையிடுதல் அவசியம்.
பேப்பர் ஒர்க்ஸ் எனப்படும் பதிவு, பட்டா போன்ற ஏற்கெனவே விவரித்த வேலைகள் அனைத்தும் முடிந்தபின்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை. நீங்கள் வாங்கிய மனையானது அப்ரூவ்டு லே அவுட்-ல் உள்ளதெனில் பல பிரச்னைகள் தவிர்க்கப்படும். அதுவே அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவெனில், பிரச்னை எந்த ரூபத்தில், எப்போது, எப்படி வரும் என்றே தெரியாத ஒருநிலை. இதனை தவிர்ப்பதுதான் வேலி இடுவது (Fencing) என உங்கள் சொத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய அம்சம்.
உங்கள் பத்திரத்தில், சொத்து விவரத்தில் கண்டுள்ள அளவுகளின் படியும், நான்குமால் எனப்படும் (boundaries) நான்கு புறமும் உள்ள எல்லைகளின் விவரப்படியும் உங்கள் சொத்தினை அளவிட்டு, நான்கு எல்லைக்குமான கல் ஊன்றி, உங்கள் சொத்தினை அருகருகே உள்ள மற்ற சொத்துக்களிலிருந்து தனித்து, பிரித்து காட்டும்படியாக வேலி அமைத்து, அதனை அடையாளப்படுத்தல் (Demarcation) மிகவும் அவசியம்.
அடையாளப்படுத்த வலைப்படுத்தல், காம்பௌண்டு சுவர் கட்டுதல் போன்ற எதனையும் மேற்கொள்ளலாம். அதற்கான செலவிடல் நிச்சயம் உங்கள் சொத்து மதிப்பினை உயர்த்தும். முடிந்தால் அந்த இடத்தில் கிணறு எடுத்தும், பயன் தரும் மரங்கள் வைத்து, ஒரு மின்சார இணைப்பும் உங்கள் பெயரில் பெற்றுக் கொள்ளலாம். அது உங்களது சொத்தின் சுவாதீனத்தை மேலும் உறுதிபடுத்தும்.
Thanks to vayal on 19/12/2015







Sunday, December 6, 2015

வெள்ளத்தில் தொலைந்துபோன ஆவணங்களை மீண்டும் பெற


வெள்ளத்தில் தொலைந்துபோன ஆவணங்களை மீண்டும் பெற என்ன செய்ய வேண்டும்?

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பள்ளி சான்றிதழ்கள் பெறும் முறை:
பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்களைப் பெற காவல் துறையினரிடம் புகார் அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை பெற வேண்டும். அதன்பிறகு முன்பு படித்த பள்ளி, கல்லூரி மூலம் விண்ணப்பம் பெற்று அதை பூர்த்தி செய்து, வட்டாட்சியரிடம் அளித்து, அசல் சான்றிதழ் மீண்டும் திருப்பப் பெற வாய்ப்பின்றி இழக்கப்பட்டது என்ற சான்றிதழை வாங்க வேண்டும்.
அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம், இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.
தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பட்டப்படிப்பு, அதற்கு மேற்பட்ட உயர் கல்விச் சான்றிதழ்களுக்கு தொடர்புடைய பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
*பதிவு எண் கட்டாயம்:
சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும்போது, தேர்வு எழுதிய பதிவு எண், ஆண்டு, மாதம் ஆகிய விவரங்களைக் கட்டாயம் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும். மாற்றுச் சான்றிதழ்களை புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்களை அணுகி கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
ஓட்டுநர் உரிமத்தை பெறும் முறை:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்ட போக்குவரத்து அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், பழைய ஓட்டுநர் உரிமத்தின் நகல் அல்லது எண்ணை அளிக்க வேண்டும்.
குடும்ப அட்டை பெறும் முறை:
குடும்ப அட்டை தொலைந்துபோனால், கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், நகரப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கல் துறை மண்டல உதவி ஆணையர் ஆகியோரை அணுக வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் குடும்ப அட்டை காணாமல்போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் அளித்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன், காணாமல்போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலை இணைத்து அளிக்க வேண்டும்.
டெபிட் கார்டு பெறும் முறை:
பற்று அட்டை (டெபிட் கார்டு) தொலைந்துபோனால், உடனே தொடர்புடைய வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் தெரிவித்து, பணப்பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.
பின்னர், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுகி, கடிதம் மூலம் பற்று அட்டை தொலைந்ததை தெரியப்படுத்தி புதிய அட்டை வழங்குமாறு கோர வேண்டும். அப்போது, தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும்.
பட்டா பெறும் முறை:
வீட்டுமனைப் பட்டா தொலைந்துபோனால், முதலில் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அவரது பரிந்துரையின்பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா அளிக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
நன்றி : திரு தமிழ் நேசன் December 6, 2015, .todayindia.info

Monday, November 30, 2015

லஞ்ச ஒழிப்புத்துறை


லஞ்ச ஒழிப்புத்துறை எவ்வாறு செயல்படுகிறது?

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம், லஞ்சம் வாங்குவோர், அரசுத்துறைகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தனர். இவர்கள், நேர்மையான ஊழியர்களை கண்டு பயந்தனர். மக்களிடம் லஞ்சம் கேட்கவே கூச்சப்பட்டனர்; கைநீட்டி காசு வாங்க அச்சப்பட்டனர். இன்றோ, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
அரசுத்துறைகளில் லஞ்சம் வாங்குவோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. நேர்மையாக பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. லஞ்சம் வாங்குவோரை பார்த்து, லஞ்சம் வாங்காத ஊழியர்கள் அச்சப்படும் நிலையும் வந்துவிட்டது. இதற்குகாரணம், லஞ்சம் வாங்குவோரே, 'மெஜாரிட்டி'யாக உள்ளனர். 'லஞ்சம் வாங்குவது ஒன்றும் தப்பில்லை; அரசாங்க வேலை பெறவும், விரும்பிய இடத்துக்கு, 'டிரான்ஸ்பர்' பெறவும் பல லட்சங்களை செலவழிக்கிறோம். முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற வேண்டாமா' என, லஞ்சம் வாங்குவதை, நியாயப்படுத்தவும் துணிந்துவிட்டனர்.
அரசுத்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி அல்லது ஊழியர் லஞ்சம் வாங்காமல் பணியாற்றினால், தற்போது அது, அதிசயத்துக்குரிய செய்தியாக வெளியாகிறது. இந்த அவலத்தை என்னவென்று சொல்வது? ஒருவர் லஞ்சம் வாங்காமல், நேர்மையாக பணியாற்றுவது என்பது, வாழ்வில் அவர் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்க நெறி கோட்பாடுகளில் ஒன்று. ஆனால், அவ்வாறான ஒழுக்க நெறி கோட்பாட்டை ஒருவர் பின்பற்றுவதே ஆச்சரியத்துக்கும், பாராட்டுக்கும் உரியதாக மாறிவிட்டது. இது, நாம் சார்ந்திருக்கும் சமூகம் எப்படிப்பட்ட சீரழிவுப்பாதையில், பேரபாயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
முன்பெல்லாம், சட்டத்தை மீறி காரியங்களை செய்ய மட்டுமே, அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டார்கள். இப்போது, சட்டப்படியான ஒரு காரியத்தை செய்யக்கூட லஞ்சம் கேட்கிறார்கள்; அதுவும் மிரட்டிக் கேட்கிறார்கள். 'இந்த நடவடிக்கைக்கு, 'இன்ன ரேட்' என்று விலையையும் நிர்ணயம் செய்துவிட்டார்கள். 'கரன்சி'யை காட்டாதவர்களின் மனுக்கள், கசங்கிய காகிதமாக குப்பைக்கூடைக்கு போகின்றன.
நம் நாட்டில் லஞ்சமும்- ஊழலும் கக்கூஸ் முதல் சட்டமியற்றும் பார்லிமென்ட் வரை நாறடித்துக்கொண்டிருக்கிறது. எல்லா துறைகளிலும், கல்லாப்பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. லஞ்சம் கொடுப்போர் இருக்கும்வரை, வாங்குவோரும் இருக்கத்தான் செய்வர்.
வாங்குவது குற்றமெனில்; கொடுப்பதும் குற்றமே. அந்த குற்றத்தை இனி, செய்ய வேண்டாம். அரசு அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், சட்டப்படியாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது எப்படி? என்பதற்கு, இந்த இதழ் உங்களுக்கு வழிகாட்டும். 

கேட்டால் ஆத்திரப்படாதீர்கள்! 
அரசின் நலத்திட்ட உதவி பெற, உங்களுக்கு வருமானச் சான்று தேவைப்படுகிறது என, வைத்துக்கொள்வோம். வருவாய்த்துறை அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பம் அளிக்கிறீர்கள். அங்குள்ள அதிகாரியோ, '2000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் சான்று வழங்குவேன்' என்கிறார். அவரிடம் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். 'பணத்துடன் வருகிறேன்' என, பவ்யமாக கூறிவிட்டு வெளியேறிவிடுங்கள். லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் எழுத்து பூர்வமான புகார் அளியுங்கள். புகாரை பெற்றதும், லஞ்ச ஒழிப்புத்துறையின், ஆரம்பகட்ட விசாரணை இரு விதமாக நடக்கும்.

புகார்தாரரின் கூற்றில் உண்மை உள்ளதா ? லஞ்சம் கேட்ட அதிகாரி எப்படிப்பட்டவர் ?
அதிகாரி மீது லஞ்ச புகார் அளிப்பவர், நேர்மையானவராக இருக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கை (வருமானச் சான்று கோரி, வருவாய்த்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்த விவரங்கள்) சட்டப்படி நியாயமானதாக இருக்க வேண்டும். இது குறித்துதான், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணை மேற்கொள்வர். புகாரில் கூறிய விவரங்கள் உண்மை என்பதை உறுதிப்படுத்தியபின், லஞ்சம் கேட்ட அதிகாரி குறித்த விசாரணை ரகசியமாக நடக்கும். அவர் எப்படிப்பட்டவர், ஏற்கனவே புகார் உள்ளதா என, தகவல் திரட்டுவர். ஏனெனில், குற்றஞ்சாட்டப்படும் அதிகாரி, நேர்மையானவராகவும், கண்டிப்பானவராகவும் கூட இருக்கக்கூடும். அவரது பெயரைக்கூறி, புரோக்கர்கள் முறைகேட்டில் ஈடுபடவும் வாய்ப்புண்டு.
எதிரிகள், பொய் புகார் அளித்து பழிவாங்கவும்கூடும். எனவே, ரகசிய விசாரணை நடத்தி, புகார் உண்மை என்பதை உறுதி செய்த பிறகே, அடுத்தகட்ட கைது நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொள்ளும்.

மன உறுதி பரிசோதிப்பு' 
புகார்தாரர் மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்கள் உண்மை' என, உறுதி செய்யப்பட்டதும், அவரது மன உறுதி பரிசோதிக்கப்படும். புகார்தாரர் தாமாக புகார் அளிக்க வந்துள்ளாரா? வேறு யாரேனும் தூண்டிவிட்டதன் காரணமாக புகார் அளிக்க வந்துள்ளாரா? லஞ்சம் கேட்ட அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாரா? என, பரிசோதிப்பர். ஏனெனில், லஞ்சம் கேட்ட அதிகாரியை, 'பொறி' வைத்து கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மனுதாரரின் மன உறுதி மிக முக்கியமானது.
காரணம், வழக்குப்பதிவு செய்து, லஞ்ச அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கையை துவக்கியபின், பாதிக்கட்டத்தில், புகார்தாரர் ஒத்துழைக்காமல் அச்சமடைந்து ஓடிவிடுவதும் உண்டு. இவ்வாறு பின்வாங்கிவிட்டால், லஞ்சம் கேட்ட அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கை தோற்றுவிடும். கைது நடவடிக்கையை துவக்கிய போலீஸ் அதிகாரி, துறைசார்ந்த நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும். எனவே, புகார்தாரர் மனஉறுதியுடன் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைக்க ஆலோசனைகள் வழங்கப்படும். அதன்பிறகே, லஞ்ச பேர்வழியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கும்.

ஒத்திகை... கைது!
அரசு தரப்பு சாட்சிகள் அழைப்பு: லஞ்சம் கேட்ட அரசு ஊழியரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, அரசு தரப்பு சாட்சிகள் இருவர் கட்டாயம் இருக்க வேண்டும், என்கிறது சட்டம். அதனால், அரசு தரப்பு சாட்சிகள் இருவர் தயார் செய்யப்படுவர்.
லஞ்ச வழக்கில் கைது செய்யப்படவுள்ள அதிகாரி எந்த பதவியில், என்ன பணி நிலையில் உள்ளாரோ, அதற்கு நிகரான பதவியில் இருக்கும் அதிகாரிகள் இருவர், அரசு தரப்பு சாட்சிகளாக அழைக்கப்படுவர். உதாரணமாக, 'குரூப் -1' பதவி நிலை அதிகாரியை கைது செய்யும் திட்டமிட்டிருந்தால், அதே பதவி நிலையில் இருக்கும் அதிகாரிகள் இருவரை, வேறு துறைகளில் இருந்து அழைப்பர். கைது செய்யப்படப்போகும் நபர் சாதாரண ஊழியராக இருப்பின், அதற்கு நிகரான பணி நிலையில் இருக்கும் ஊழியரை அழைப்பர்.
அரசு தரப்பு சாட்சிகளாக செயல்படுமாறு, இவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அழைக்க மாட்டார்கள். அழைக்கப்படும் சாட்சிகள், எந்த துறையில் பணியாற்றுகிறார்களோ, அந்த துறையின் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிக்கு கடிதம் அளிப்பர். அவர்தான், சாட்சியை தேர்வு செய்து அனுப்பி வைப்பார்.
இரு சாட்சிகள், வெவ்வேறு துறையை சார்ந்தவர்களாகவும் இருக்கக்கூடும். இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். எந்த துறையில் பணியாற்றும் அதிகாரியை, லஞ்ச வழக்கில் கைது செய்ய திட்டமிட்டிருக்கிறார்களோ, அந்த துறையில் இருந்து, அரசு தரப்பு சாட்சிகளை அழைக்கமாட்டார்கள். அவ்வாறு அழைத்தால், கைது நடவடிக்கை திட்டம் கசிந்து தோல்வியடைந்துவிடும் வாய்ப்புள்ளது.

ஒத்திகை: 
லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு வருகை தரும் இரு அரசு தரப்பு சாட்சிகளிடம், புகார்தாரரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிமுகம் செய்து வைப்பர். அப்போதுதான், எந்த துறையில் பணியாற்றும் அதிகாரியை கைது செய்ய, தாம் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே, அந்த சாட்சிகளுக்கு தெரியும்.
அதன்பின், லஞ்ச அதிகாரியை கைது செய்வது தொடர்பான ஒத்திகை, லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் நடத்தப்படும். லஞ்ச அதிகாரியை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, புகார்தாரரும், அரசு தரப்பு சாட்சிகளும் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என, காட்சி அமைப்புடன் கூடிய செயல் விளக்கம் அளிக்கப்படும். லஞ்ச ஒழிப்பு போலீசாரில் ஒருவர், லஞ்சம் கேட்ட அதிகாரியாக நடிப்பார். அரசு தரப்பு சாட்சிகள் தயார் நிலையில் இருப்பர். கைது செய்யப்போகும், போலீஸ் அதிகாரிகளும் இந்த ஒத்திகையில் நடிப்பர். ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததும், அடுத்ததாக, உண்மையான கைது நடவடிக்கைகள் துவங்கும்.

லஞ்ச பணம் தயாராகும்: 
அதிகாரிக்கு தரப்பட வேண்டிய லஞ்சப்பணம் தயாராகும். இத்தொகையை, புகார்தாரரே கொண்டுவர வேண்டும். ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றிருக்கும் 'சீரியல் எண்கள்' குறிப்பெடுக்கப்படும். அதன்பின், அவற்றின் மீது பினாப்தலின் எனும் ரசாயனம் தடவப்படும்.

நேரம் குறிக்கப்படும்: 
புகார்தாரர், தன்னிடம் லஞ்சம் கேட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு, 'நான் உங்களை சந்திக்க எப்போது வரலாம்' என, கேட்டு, நேரம் குறிப்பார். லஞ்ச பணத்தை வாங்கி பையில் போடும் ஆவலில், அந்த அதிகாரியும் ஓர் நேரத்தை சொல்வார்.
ஆம், அந்த நேரமே, அவர் அந்த அலுவலகத்தில் கடைசியாக பணியாற்றப்போகும், கைதாகப்போகும் நேரம் என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார். காசு தான் கண்களை மறைக்கிறதே! இப்போது, புகார்தாரர், அதிகாரியை சந்திக்கப்போவது உறுதியாகிவிட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை, புகார்தாரரின் சட்டை பாக்கெட்டில் வைத்து அனுப்பி வைப்பர்.

சாட்சி உடன் செல்வார்: 
அரசு தரப்பு சாட்சிகளில் ஒருவர், புகார்தாரருடன் செல்வார். மற்றொரு சாட்சி, லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் செல்வார். லஞ்ச பணத்தை எடுத்துச் செல்லும் புகார்தாரர், தப்பித்தவறிக்கூட ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தொடமாட்டார்; தொடவும் கூடாது. குறிப்பிட்ட அரசு அலுவலகத்துக்குச்சென்று, தன்னிடமுள்ள லஞ்சப் பணத்தை அதிகாரியிடம் அளிப்பார். ஒருவேளை அந்த அதிகாரி உஷாராக இருந்து, 'உங்களுடன் வந்திருப்பது யார்' எனக் கேட்டால், 'இவரா சார், என் சித்தப்பா, மாமா...' என, ஏதாவது ஒரு உறவுமுறையை கூறி நம்ப வைப்பார்.
கைமாறியதும் சிக்னல்: புகார்தாரர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதை, உடன் வந்த அரசு தரப்பு சாட்சி நேரில் காண்பார். அதன்பின் இருவரும் வெளியே வருவர். தனக்கு ஏற்கனவே அறிவுறுத்தியபடி, புகார்தாரர் வெளியே வந்ததும், சாதாரண உடையில், சாமானியரைப் போன்று சற்று தொலைவில் மறைந்து நின்றிருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு 'சிக்னல்' தருவார். (தலைமுடியை மூன்று முறை தன்னிடம் உள்ள சீப்பால் வாருவார் அல்லது கைக்குட்டையை பாக்கெட்டில் இருந்து எடுத்து முகத்தை துடைப்பார் அல்லது, தனக்கு அளிக்கப்பட்ட வேறு ஏதாவது சமிக்ஞையை காண்பிப்பார்).

அதிரடியாக கைது:
 'இதற்காகத்தானே இத்தனை நாட்களாய் காத்திருந்தோம்' என்பதைப் போன்று, அவர்கள் அதிரடியாக உள்ளே புகுந்து லஞ்ச அதிகாரியை கைது செய்வர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 01.12.2015

ஓ.பி.சி. சான்றிதழ் பெற


ஓ.பி.சி. சான்றிதழ் பெற என்ன செய்ய வேண்டும்?

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு,
சமூக நீதிக் காவலர், நமது முன்னாள் பாரதப்பி்ரதமர் காலஞ்சென்ற வி.பி. சிங் அவர்களின் முயற்சியால், 1993 முதல் மத்திய அரசு வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான IIT, IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும்.
அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான்றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், பி.சி., எம்.பி.சி. சான்றிதழ் வழங்கும், அதே வட்டாட்சியரால் தான் (தாசில்தார்) தரப்படுகிறது.
ஓபிசி, சான்றிதழ் பெறுவதற்கு பெற்றோர் ஆண்டு வருமானம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஓபிசி சான்றிதழ் யாருக்குக் கிடையாது?
1) தமிழ் நாட்டில், பி.சி., எம்.பி.சி. பட்டியலில் உள்ள ஜாதிகளில், சில ஜாதிகள், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கின்றன. அந்த ஜாதிகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது.
இந்த ஜாதிப்பிரிவைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, பொதுப்பிரிவில்தான் அதாவது திறந்த போட்டியில்தான் விண்ணப்பிக்க முடியும். இதனை, www.ncbc.nic.in என்ற இணைய தளத்தில் பார்த்து விபரம் அறிந்துகொள்ளலாம்.
2) IAS, IPS போன்ற குரூப் ஏ பதவியில் பெற்றோர்கள் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, இந்த ஓபிசி சான்றிதழ் கிடையாது.
3) GROUP - C அல்லது GROUP - B யில் பணியில் சேர்ந்து, 40 வயதுக்குள், GROUP - A பதவிக்குச் சென்றாலும், அந்த தகப்பனாரின் குழந்தைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடையாது. அதே நேரத்தில்  அந்தக் குழந்தையின் தாய் , GROUP – A பணியில் 40 வயதுக்குள் பதவி உயர்வு பெற்றால், சான்றிதழ் பெற தடையில்லை
4) பெற்றோர்களது வருமானம் மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூபாய் ஆறு லட்சத்தைத் தாண்டி இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, ஒபிசி சான்றிதழ் பெற முடியாது.
இதில், வியாபாரிகள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், பொறி யாளர்கள் என தனியே நிறுவனம் அமைத்து, வருமானம் இருந்தால், அந்த வருமானம், ஆண்டுக்கு, ரூபாய் ஆறு லட் சத்தைத் தாண்டினால், அவர்களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது.
அப்படி என்றால், யாருக்குத்தான் ஓபிசி சான்றிதழ் கிடைக்கும்?
a). GROUP - A GROUP - B போன்ற பதவி தவிர்த்து, , GROUP - C, GROUP - D போன்ற பதவிகளில் பணிபுரிந்தால், அப்போது, அவர்களது சம்பளம், ஆண்டுக்கு, ரூபாய் ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.
b) மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்ற வற்றில் பணிபுரியும், பிற்படுத்தப்பட் டோர், அவர்களது ஆண்டு வருமானம், ரூபாய் ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.
c) விவசாய வருமானம் ரூபாய்  ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், அந்த பிற்படுத்தப்பட்டோரின் பிள்ளைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் பெறலாம்.

கிரிமி லேயர் (Creamy Layer-கிலே) முறை:
ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, கிரிமிலேயர் (Creamy Layer-கிலே) முறை முக்கிய பங்கு வகிக்கிறது. கிரிமி லேயர் என்றால் பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் - பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள் என்று அர்த்தம்.  இதன்படி பார்த்தால் ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பெறுபவருடைய பெற்றோரின் வருமானம் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும். சான்றிதழ் பெறுபவரின் வருமானம் கணக்கில் வராது.
சான்றிதழை பெறும் நபரின் ஆண்டு வருமானம் ரூபாய் 6 இலட்சத்திற்கு மேல் இருந்து அவரின் பெற்றோரின் வருமானம் ரூபாய் 6 இலட்சத்திற்கு குறைவாக இருந்தாலும், அவர் அந்த சான்றிதழை பெற தகுதியானவர்தான்.

தமிழக அரசின் ஆணை:
ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும்போது, மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது;
அதே போன்று, விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. இதனை, மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த ஆணையின்படி, பிற்படுத்தப் பட்டோரின் பெற்றோர், அரசின் பதவிகளில் இருந்தாலும், வங்கி உள்ளிட்ட எந்த பொதுத்துறை நிறுவனங் களில் பணிபுரிந்தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்களது, மாதச் சம்பள வருமானத்தை, கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை, ஜாதி சான்றிதழ் வழங்கும் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது?
இதனைப் பெறுவதற்கு முதலில் தமிழக அரசு வழங்குகின்ற ஜாதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
ஜாதி சான்றிதழ் வழங்கும், வட்டார ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது ஜெராக்ஸ் கடைகளில் ஓபிசி சான்றிதழ் பெறுவதற்குரிய விண்ணப்பம் கிடைக்கும். அதனை பூர்த்தி (டைப்பிங்) செய்து, ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ள ஜாதி சான்றிதழ் நகலையும், குடும்ப அட்டை நகலையும், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகலையும், வருமானச் சான்றிதழ் நகலையும் இணைத்திட வேண்டும்.
யாருடைய பெயருக்கு சான்றிதழ் பெற வேண்டுமோ, அவரது பெயருக்கு 20 ரூபாய்க்கான பத்திரம் வாங்கி, நோட்டரி பப்ளிக் வக்கீலிடம் அபிடவிட் பெற்று அதனையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பமிட்டு முதலில் கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சாதாரணமாக நாம் ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பி்ப்பது போலவே, இதற்கும் வி.ஏ.ஓ, ஆர்.ஐ. மற்றும் தாசில்தாரிடம் கையொப்பம் பெறவேண்டும்.
அந்த விண்ணப்பப் படிவத்தில், பாரா 12-ல் வருமானம்/சொத்து பற்றிய விவரம் கேட்கப்படுகிறது. அதில் ஆண்டு வருமானம் என்பதில், மாதச்சம்பளம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த படிவம், www.persmin.gov.in என்ற இணைய தளத்தில்,OM and Orders என்கிற பகுதி யில், O.M. No.36012/22/93-Estt.(SCT),Date: 15.11.1993 என்கிற அரசு ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆகவே, மாதச் சம்பளம் பெறுவோர், விவசாயி போன்றோர், இந்த விண்ணப்ப படிவத்தில், வருமானம் என்ற இடத்தில், மாதச்சம்பளம், அல்லது விவசாய வருமானம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆணையின் நகலையும் இணைத்து, விண்ணப்பித்தால், ஓபிசி சான்றிதழ் நிச்சயம் கிடைக்கும்.

செல்லுபடியாகும் காலம்
இந்த ஓபிசி சான்றிதழ், வருமானமும் சம்பந்தப்பட்ட சான்றிதழ் என்பதாலும், கிரிமிலேயர் என்கிற முறை இருப்பதாலும், இந்த ஓபிசி சான்றிதழை ஒரு ஆண்டுக்குத்தான் பயன்படுத்தமுடியும்.
அதாவது, ஒரு ஆண்டின், ஏப்ரல் மாதத்திலிருந்து, அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த ஓபிசி சான்றிதழ் பயன்படும். மேலும், தேவைப்பட்டால், மீண்டும் அதே வட்டார அலுவலகத்தில், புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
தற்போது, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், வேலை வாய்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு பயன் தங்களது பிள்ளைகளுக்கு கிடைத்திட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாய மக்களும் மாதச்சம்பளம் பெறுவோரும், இந்த விவரங்களைப் பயன்படுத்தி, ஓபிசி சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வீடியோ எனது நண்பரும், வழக்கறிஞருமான திண்டுக்கல்லைச் சேர்ந்த திரு Leenus Leo Edwards  அவர்களின்  உன்னத படைப்பாகும். அவர் இந்த விடியோவில் ஓ.பி.சி. சர்டிபிகேட் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதனையும் பார்த்து பயனடைய தங்களை வேண்டுகிறேன். 


Saturday, November 14, 2015

லோன் மூலம் காலிமனை வாங்க


லோன் மூலம் காலிமனை வாங்க என்ன செய்ய வேண்டும்?

வீடு கட்டுவதற்கு வங்கிகள், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் அளிக்கும் வீட்டுக் கடன் குறித்துப் பலருக்கும் தெரியும். வீடு கட்ட வேண்டுமென்றால் மனை வேண்டுமல்லவா? அந்த மனையை வாங்க வங்கிகள் கடன் அளிக்குமா?
வங்கிகளில் மனை வாங்கு வதற்குகூடக் கடன் வசதிகள் உள்ளன. மனை வாங்கக் கடன் கேட்பதற்கும் வங்கிகள் சில விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளன. வீட்டுக் கடன் கொடுப்பது போலவேதான் இதற்கும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமின்றி வெளி நாட்டு வாழ் இந்தியர்களுக்கும் இந்தக் கடன் கிடைக்கும். ஈட்டும் வருவாய், கடனைச் செலுத்தும் தகுதி ஆகியவை இந்த விஷயத்தில் ஆராயப்படும்.

மனைக் கடன் வாங்கும்போது வங்கிகள் முக்கியமாகப் பார்க்கும் விஷயம், மனை எந்த நிலத்தில் அமைந்துள்ளது என்பதுதான். வாங்க உத்தேசித்துள்ள மனை குடியிருப்புப் பகுதியாக அரசால் வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
விவசாய நிலமாகவோ, வணிக ரீதியான நிலமாகவோ நிச்சயம் இருக்கக் கூடாது.
குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சி என வரையறுக்கப்பட்ட உள்ளாட்சியின் எல்லைக்குள் மனை இருக்க வேண்டும். வீடு கட்டும் எண்ணத்திலோ முதலீட்டு எண்ணத்திலோ மனையை வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது.
வீட்டுக் கடனுக்கு 80 சதவீதம் வரை வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. 20 சதவீதத் தொகையை நம் கையில் இருந்து செலவு செய்வது போலத்தான் மனைக் கடனுக்கும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
மனையின் மதிப்பு பெரு நகரம், சிறு நகரம் சார்ந்த பகுதிகளில் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதால் அதற்குத் தகுந்தாற்போல் மனைக் கடன் கிடைக்கும். பெரு நகரங்கள் என்றால் அரசு வழிகாட்டு மதிப்புக்கு ஏற்ப 70 சதவீதம் வரை மனைக் கடன் கிடைக்கும்.
சில வங்கிகள் 80 முதல் 85 சதவீதம் வரையிலும்கூட மனைக் கடன் வழங்குகின்றன. சிறிய நகரங்கள் என்றால், மனையின் மொத்த மதிப்பீட்டில் 50 முதல் 60 சதவீதம் வரை மனைக் கடன் கிடைக்கும்.
வங்கியில் மனைக் கடன் கேட்க முடிவு செய்துவிட்டால் சில ஆவணங்கள், சான்றிதழ்களைத் தயார் செய்ய வேண்டும். 
வீட்டுக் கடனுக்குரிய விதிமுறைகள்தான் இங்கும் பின்பற்றப்படுகின்றன.
புகைப்படம், அரசு வழங்கிய அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், மாதச் சம்பளச் சான்றிதழ் (வேலை செய்யும் நிறுவனம் வழங்கும் பே ஸ்லிப்) , கடன் கேட்கும் தேதியிலிருந்து முந்தைய 6 மாத வங்கி கணக்கு அறிக்கையின் நகல் ஆகியவற்றை வங்கியில் சமர்பிக்க வேண்டும்.
இதுமட்டுமல்ல, இன்னும் சில ஆவணங்கள் கேட்கப்படும். விற்பவரின் நில உரிமை ஆவணத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
விலைக்கு வாங்கும் மனையில் வில்லங்கம் எதுவும் இல்லை என்பதற்கான சான்றிதழ் (ஈ.சி.), சிட்டா சான்றிதழ், இடத்துக்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் வங்கியில் சமர்பிக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற நிலத்தின் வரைபடம், நிலத்தின் உரிமையாளர் மனைக்கு வரி செலுத்திய ரசீதையும் சமர்பிக்க வேண்டும்.
உங்கள் கடன் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கப் பரிசீலனைக் கட்டணமும் செலுத்த வேண்டும்.
மனைக் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
வீட்டுக் கடன் வாங்கும்போது அந்தக் கடனை அடைக்கும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும். ஆனால், மனைக் கடனை அடைக்கச் செலுத்தப்படும் தவணைத் தொகைக்கு வரி விலக்கு எதுவும் கிடையாது.
அதேசமயம் வாங்கிய மனையில் வீடு கட்டும் பணியைத் தொடங்கினால், அந்தக் கடனின் ஒரு பகுதிக்கு வரி விலக்குகளைப் பெற முடியும். கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றால் முழுமையாக வரி விலக்கு பொருந்தும்.

நன்றி : தி இந்து நாளிதழ் - 14.11.2015

Wednesday, November 11, 2015

சொத்துப் பத்திரத்தில் பிழை திருத்த


சொத்துப் பத்திரத்தில் பிழை திருத்த என்ன செய்ய வேண்டும்?

மாறுபாடுகளுடன் சொத்தினை விற்பனை செய்ய தாங்கள் முயற்சி செய்யும்போது, பல கேள்விகளை சொத்தை வாங்கும் நபர் எழுப்பக்கூடும்!
என் பத்திரத்தில் பிழையா?
நோ சான்ஸ்.
இருக்கவே இருக்காது என தைரியமாக இருப்பவரா நீங்கள்?
இதோ உங்களுக்காக சில கேள்விகள்…
1. முதலில் உங்கள் பத்திரத்தில் உங்களின் முழுப் பெயர், அடையாள அட்டை, ரேஷன் கார்டில் உள்ள முகவரி, வயது போன்றவை சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா?
2. அதேபோல உங்கள் சொத்தினை விற்பனை செய்தவரின் விவரங்கள், அவரது அடையாள அட்டை மற்றும் மூல ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களுடன் ஒத்து போகின்றனவா?
3. பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூல ஆவணத்தின் விவரங்கள், தேதி, பத்திர எண், சொத்து விவரம் போன்றவைகள் சரியாகக் குறிப்பிடப் பட்டுள்ளனவா?
4. உங்கள் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களான சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், பிளாக் எண், மற்றும் நான்கு மால் எனப்படும் நான்கு எல்லைகள் அதன் அளவுகள் அனைத்தும் மூல ஆவணத்துடன் சரியாக உள்ளனவா?
5. உங்களுக்கு விற்பனை செய்த நபர், அந்த சொத்தினை கிரயம் பெற்றபின்பு, அந்த சொத்தின் தன்மை மாறி இருப்பின் அதன் விவரங்களோ அல்லது சொத்துக்காக புதிய விலாசம் கொடுக்கப் பட்டிருந்தால் அது குறித்த விவரங்களோ தெளிவாக உங்கள் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனவா?
மேலே கூறப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் பத்திரம் பதிவு செய்யும் முன் கவனமாகப் பார்க்க வேண்டும். இவற்றில் எதுவும் தவறாகக் குறிப்பிடப் பட்டிருந்தால், அதனை நிவர்த்தி செய்யும்விதமாக, உங்களுக்கு விற்பனை செய்து, ஆவணம் ஏற்படுத்தி கொடுத்த அதே நபரால் அந்தப் பிழையைத் திருத்தும் விதமாக ஏற்படுத்தி தரப்படும் ஆவணம்தான் ‘பிழை திருத்தல் பத்திரம்’ (Rectification Deed) எனப்படுகிறது.
நான் சொத்து (மனை / வீடு) வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது; வீடும் கட்டி விட்டேன். இப்போது சிறிய பிழை உள்ளதென தெரிகிறது. இந்த பிழை திருத்தல் பத்திரம் அவசியமா என்றால், உங்களுக்கு விற்பனை செய்திருந்த நபர், பிழையைத் திருத்தி பத்திரம் பதிவு செய்துதர தயாராக இருக்கும்பட்சத்தில், அந்தப் பிழையை சரிசெய்து கொள்வதுதான் நல்லது. இல்லையென்றால் பத்திரத்தின் சொத்து விவரமானது, பட்டாவுடன் பொருந்தி வராது. பத்திரமும், பட்டாவும் உங்கள் சொத்தின் அனுபவ அளவுகளுடன் பொருந்தாது.
இந்த மாறுபாடுகளுடன் அந்த சொத்தினை விற்பனை செய்ய முயற்சி செய்யும்போது பல கேள்விகள் சொத்தை வாங்கும் நபர் எழுப்பக்கூடும். சொத்தின் விலை நிர்ணயத்தில், இந்த விஷயம் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்தப் பிழையானது ஆவணத் தயாரிப்பின்போது தவறான தட்டச்சு காரணமாகவோ, பழைய எண், புதிய எண், குழப்பத்தினாலோ, லே அவுட் பெயர் அதன் அங்கீகாரம் குளறுபடி களினாலோ ஏற்பட வாய்ப்புள்ளது.
சொத்து விஸ்தீரணத்தின்(அளவு) வேறுபாடு குறித்த மாற்றம் தவிர, வேறு எந்த ஒரு திருத்தத்துக்கும் அதிக முத்திரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதிக விஸ்தீரணம் மாற்றப்பட்டால், வித்தியாசப்படும் விஸ்தீரணத்தின் முத்திரைத் தீர்வையாக, அரசு நிர்ணயம் செய்துள்ள வழிகாட்டி மதிப்பீட்டின்படி (Guide Line Value) கட்டணம் செலுத்த வேண்டும்.
கண்டுபிடிப்பதில் அதிக காலதாமதம் இருந்து, அப்போதைய அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப் பட்டிருப்பின், தற்போதைய மதிப்புக் கான வித்தியாசப்படும் முத்திரைத் தீர்வையை உரிய கட்டணத்துடன் செலுத்த வேண்டும்.
எனவே, பத்திரம் எழுதியபிறகு கூடுதல் கவனத்துடன் படித்துப் பார்ப்பதும், மூலப் பத்திர விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று கவனிப்பதும் வீண் செலவுகளையும் அலைச்சலையும் தவிர்க்க உதவும்.

நன்றி : நாணயம் விகடன் - 08 Nov, 2015