disalbe Right click

Thursday, March 31, 2016

மொபைல் போன் பேட்டரி தடித்தால்


மொபைல் போன் பேட்டரி தடித்தால் என்ன செய்ய வேண்டும்?
பலர் தங்களுடைய மொபைல் போனில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி, சற்று தடித்துப் போய் விட்டதாகவும், இது நாளுக்கு நாள் அதிகமாவதாகவும் தெரிவித்து, இதன் காரணத்தை அறிய விரும்புகின்றனர். சிலர், பேட்டரி தொடர்ந்து செயல்படவில்லை என்றும் கூறி, இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் கேட்டுள்ளனர்.

ஏன் பேட்டரி தடித்துப் பெரிதாகிறது?: 
தற்போது பயன்பாட்டில் இருக்கும், எடுத்துச் செல்லக் கூடிய, லேப்டாப் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், டேப்ளட் பி.சி. இ புக் ரீடர், உடல்நலம் காட்டும் சிறிய கடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில், லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. குறுக்கப்பட்ட சிறிய அளவில் ஆக்கப்பட்ட பேட்டரிகள் நமக்குக் கூடுதல் வசதிகளையே அளிக்கின்றன. ஆனால், இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளைக் காட்டிலும், லித்தியம் அயன் பேட்டரிகள் சில எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. இந்த வகை பேட்டரிகளில், அதில் உள்ளாக உள்ள செல்களுக்கும், மேல் உலோக கவசங்களுக்கும் இடையே மிகச் சிறிய இடைவெளி மட்டுமே உள்ளது. இதனால், பேட்டரி எப்போதும் ஒருவித அழுத்தத்திலேயே உள்ளது. 
லித்தியம் அயன் பேட்டரிகளை அதிக வெப்பம் பாதிக்கும் போது, அவை தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்யப்படுகையில், அதிக நாட்கள் பயன்பாட்டில் இருந்ததனால், சில வேளைகளில், உள்ளே இருக்கும் செல்களிலிருந்து, எளிதில் நெருப்பு பிடிக்கக் கூடிய எலக்ட்ரோ லைட் மிக்சர் (electrolyte mixture) உருவாகலாம். 
அதிர்ஷ்டவசமாக, நெருப்பு பிடிக்காமல் இருக்க உள்ளாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெருப்பு பிடித்து, கேஸ் வெளியேறாததால், பேட்டரியின் தடிமன் பெருகத் தொடங்குகிறது. இந்த தடிமன் குறைவாக இருக்கும் நிலையில், நாம் அதிகம் அது குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால், அது ஸ்மார்ட் போனின் உருவத்தைப் பாழடிக்கும் நிலைக்கு வரும்போது, நாம் இந்த பேட்டரியின் தடிமன் குறித்து கவலைப் படுகிறோம். சில வேளைகளில், நாம் போனுக்குள் மைக்ரோ எஸ்.டி. கார்ட் போன்றவற்றை இணைக்கையில், பின்புற மூடியைக் கழட்டி எடுக்கையில், இந்த தடிமன் அதிகமான லித்தியம் அயன் பேட்டரி, ஸ்பிரிங் விசையில் இருந்து விடுபட்டது போல, வெளியே துள்ளிக் குதிக்கிறது. அல்லது பின்புற போன் மூடியை வெளியே தள்ளுகிறது.

பேட்டரியை நீக்கும் வழிகள்: 
இதனால், லித்தியம் அயன் பேட்டரி பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்ற முடிவிற்கு வருவது தவறாகும். பேட்டரியின் உள்ளாக, பல நிலைகளில் பாதுகாப்பான வழி முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்யப்பட்டல், அதனை நிறுத்தும் வழிகள், உள்ளாக வெப்பம் பரவுவதை அளந்து, அறிந்து நிறுத்தும் வழிகள் போன்றவற்றைக் கூறலாம். இத்தகைய பேட்டரிகள், எந்த நிலையிலும், தீ பிடித்தது என்ற நிலை ஏற்பட்டதில்லை என்றே கூறலாம்.

வீணான பேட்டரியை என்ன செய்திடலாம்?: 
எனவே, பயன்படுத்த முடியாத நிலைக்கு, உங்கள் சாதனத்தின் லித்தியம் அயன் பேட்டரி சென்றுவிட்டால், அதனை எடுத்துவிட்டு, அதே அளவிலான, மின் திறன் கொண்ட பேட்டரியைப் புதியதாக வாங்கிப் பொருத்த வேண்டியதுதான் சரியான வழியாகும். 
இருப்பினும், அந்த பழைய பேட்டரியை திடீரென குப்பையில் எரிந்துவிடக் கூடாது. அதனை அழிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அவை வெடித்து அல்லது நெருப்பினை உண்டாக்கும் என்ற அச்சத்துடன், சில வழிமுறைகளைப் பின்பற்றி அழிக்க வேண்டும். அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.

பேட்டரி தடிமன் அதிகமாகி விட்டது என்பதை உறுதி செய்தால், உடனடியாக அதனைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அது இணைக்கப்பட்டுள்ள சாதனத்தினையும் இயக்கக் கூடாது. சாதனத்தினை ‘பவர் ஆப்’ (power off) செய்து, பேட்டரியிலிருந்து மின் சக்தி செல்வதை நிறுத்த வேண்டும். 
குறிப்பாக அதனை சார்ஜ் செய்திடவே கூடாது. தடிமன் அதிகமாகிப் போன பேட்டரியில், பாதுகாப்பு வளையங்கள் வேலை செய்யாது. எனவே, அது எப்போதும் வெடிக்கக் கூடிய சிறிய பந்து என்று கருத வேண்டும். நம் அறையில், நெருப்பு பிடிக்கக் கூடிய வாயுவை வெளியிடும் சாதனம் ஒன்று உள்ளதாகவே கருத வேண்டும். 

பேட்டரியை உடனே நீக்குக:
 
பயனற்றுப் போன பேட்டரியை உடனே சாதனத்திலிருந்து நீக்கிவிட வேண்டும். அதை அழுத்தியோ, அதன் உருவினை மாற்றியோ, வெளியில் உள்ள பின்புற மூடியைச் சரி செய்தோ, பயன்படுத்த முயற்சிக்கவே கூடாது. 
பேட்டரியைத் துளையிட்டு, அதன் தடிமனைக் குறைக்க முயற்சிப்பது, முட்டாள்தனமான வேண்டாத முயற்சியாகும். 
உள்ளிருக்கும், உங்களுக்கு அழிவைத் தரக்கூடிய வாயுவினை நீங்களாகவே வலிந்து பெறும் வழி இது.

நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தினை நீங்களே திறந்து பார்க்க முடியும் என்றால், அதிலிருந்து பேட்டரியை உங்களால் எடுத்து நீக்க முடியும் என்றால், உடனே பேட்டரியை நீக்கவும். 

அல்லது அதற்கான தொழில் நுட்ப பணியாளரிடம் கொடுத்து பேட்டரியை எடுத்துவிடவும். அல்லது உங்கள் சாதனத்தினை இந்த பேட்டரி கெடுத்துவிடும் வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. பேட்டரிக்குள்ளாக, கூர்மையான ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி, இந்த வீக்கமுற்ற பேட்டரியின் தடிமனைக் குறைத்துவிடலாம் என்று ஒரு போதும் எண்ண வேண்டாம். 

உங்களால் பேட்டரியை நீக்க முடியாவிட்டால், அதனை ஒரு டெக்னீஷியனிடம் கொண்டு செல்ல நாளாகும் என்றால், அந்த சாதனத்தினை, குளிர்ச்சியான இடத்தில் வைத்துப் பாதுகாக்கவும். பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம். 

கெட்டுப் போன பேட்டரியை விட்டெரிய வேண்டாம்:
 
வீணாகிப் போன லித்தியம் அயன் பேட்டரியை, எந்த நிலையிலும், குப்பைகள் உள்ள இடத்தில் விட்டெறியும் பழக்கத்தினை விட்டுவிடுங்கள். கூர்மையான சாதனம் கொண்டு திறக்க முயற்சித்த பேட்டரியையும் பயன்படுத்த வேண்டாம். எடுத்து எறிந்துவிட வேண்டாம். அதுவரை சாதாரண பேட்டரியாய் இருந்தது, திறக்க வேண்டி முயற்சி எடுத்ததனால், எளிதில் நெருப்பினை வழங்கும் அபாயமான ஒரு பொருளாக மாறுகிறது. 
எனவே, வீட்டில் வைத்திருப்பதும் சரியல்ல. எனவே, சரியான முறையில் அதனை அழித்திட, இதனை விற்பனை செய்திடும் கடைகளை அணுகி அவர்களிடம் தந்துவிடலாம். வெளிநாடுகளில், இதற்கெனவே மறு சுழற்சி மையங்கள் இருக்கின்றன. இந்தியாவில், நம் நகரங்களில் அது போன்ற மையங்கள் இல்லை. 

பேட்டரியை நீக்கியவுடன், அதன் முனைகளை, மின் சாதனங்களை முடக்கப் பயன்படுத்தும் டேப்களைக் கொண்டு மூடவும். இதனால், எதிர்பாராத சூழ்நிலைகளில், இரு முனைகளுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு, பெரும் விபத்து நேரும் அபாயம் தடுக்கப்படுகிறது. 
உங்களால் பேட்டரியை நீக்க முடியாத நிலையில், அது பயன்படுத்தப்படும் சாதனத்தையே பேட்டரி மற்றும் சாதனம் பழுது பார்க்கும் கடைகளுக்குச் சென்று, அவர்கள் உதவியுடன் பேட்டரியை நீக்கி அவர்களிடமே தந்துவிட்டு வந்துவிடலாம்.

பேட்டரிகள் தடிப்பதனை எப்படி தடுக்கலாம்?:
 மேலே தரப்பட்டுள்ள தகவல்களைப் படித்தவுடன், “என்னிடம் இது போல தடிமன் அதிகரித்த பேட்டரி எதுவும் என் சாதனங்களில் இல்லை. ஆனால், இது போல தடிமன் கூடுவதை எப்படி தடுப்பது?” என்ற வினா வரலாம். அதற்கான சில வழிமுறைகள் இதோ:

1. லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு வெப்பம் என்பதே ஆகாது. எனவே, அது பயன்படுத்தப்படும் சாதனங்களை, குளுமையான இடத்தில் வைத்துப் பயன்படுத்தவும். அல்லது, வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் வைத்திருப்பதனைத் தடுக்கவும். சிலர் காரில் டேஷ் போர்டில், இந்த வகை சாதனங்களை வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். நேரடியாக வெயிலில் சாதனமும், பேட்டரியும் வெப்பமடையத் தொடங்கும். இது பேட்டரியின் தடிமனை நிச்சயம் அதிகரிக்கச் செய்திடும்.

2. உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தப் போவதில்லையா? உள்ளிருக்கும் பேட்டரியை எடுத்து, குளுமையான இடத்தில் வைத்துவிடவும்.

3. சரியான சார்ஜரைப் பயன்படுத்த வேண்டும். லித்திய அயன் பேட்டரியைத் தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்வது அதில் பாதிப்பினை ஏற்படுத்தும். பெரும்பாலானவர்கள், சாதனத்துடன் தரப்பட்ட சார்ஜர் பழுதாகிப்போன பின்பு, குறைந்த விலைக்குக் கிடைக்கும் வேறு நிறுவன சார்ஜரை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். இந்த செயலினை மேற்கொள்வது, லித்தியம் அயன் பேட்டரியை, அதிகமாக சார்ஜ் செய்திடும் வழிக்குக் கொண்டு சென்று, விரைவில், அதன் தடிமனை அதிகரிக்கிறது.

4. பழைய பேட்டரிகளை உடனே மாற்ற வேண்டும். உங்கள் லேப் டாப் பேட்டரி, இதுவரை 5 மணி நேரம் வரை மின் சக்தியினைக் கொடுத்துவிட்டு, தற்போது 30 நிமிடங்களிலேயே தன் பணியை முடித்துக் கொள்கிறதா? பேட்டரியின் உள்ளிருக்கும் பொருட்கள் வீணாகிவிட்டன என்று இது காட்டுகிறது. உடனடியாக அதனை மாற்ற வேண்டும். 

5. தொடர்ந்து சார்ஜ் செய்திடும் நிலையில், உங்கள் சாதனத்தினை வைத்திருக்க வேண்டாம். பேட்டரி ஒன்றைக் கட்டாயமாக முழுமையாக 100% சார்ஜ் செய்திட வேண்டும் என்பது கட்டாயமல்ல. சற்றுக் குறைவாக சார்ஜ் செய்வதே, லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு நல்லது. எனவே, மின் இணைப்பில் வைத்துவிட்டு 100% சார்ஜ் ஆன பின்னரும், அதனை இணைப்பில் வைத்திருப்பது நல்லதல்ல. வெகுநேரம் தொடர்ந்து பணியாற்றச் செல்வதால், தொடர் மின் இணைப்பில் சார்ஜ் செய்கிறேன் என்ற நிலையை ஏற்க வேண்டாம். இப்போதெல்லாம், இவற்றை சார்ஜ் செய்திட பவர் பேக் எனப்படும் பேட்டரிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம்.

லித்தியம் அயன் பேட்டரியில் நீங்கள் இதுவரை அதிகக் கவனம் செலுத்தாமல் இருந்தால், இனி அடிக்கடி அதன் நிலையினைப் பார்த்து மேலே தரப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 21.03.2016

முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யவேண்டும்?


முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யவேண்டும்?

திக நடைமுறைச் சிக்கல் இல்லாத முதலீடு, உத்திரவாத வருமானம், அரசே நடத்தும் திட்டம், மாதாமாதம் சிறு சேமிப்பு என அனைத்து வகையிலும் இந்தியாவின் கடைக்கோடி மனிதர்களையும் தொட்டவை அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்.
இந்தத் திட்டங்கள் வந்தபிறகுதான் குடியிருக்கச் சொந்தமாய் ஒரு வீடு, பிள்ளைகளின் நல்ல படிப்பும் திருமணமும் என நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள மக்களின் கனவுகள் நனவாகத் தொடங்கின.

ஆனால், இன்று அந்தக் கனவுக்கும் பங்கம் வந்துவிட்டது. சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு இதுவரை கொடுத்துவந்த வட்டியைத் தற்போது குறைத்திருக்கிறது மத்திய அரசு. வருகிற 1-ம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் நடைமுறைக்கு வருகிறது. இப்படியொரு அதிர்ச்சியை யாரும் எதிர்பார்க்கவில்லை. 
இந்த வட்டி குறைப்பு பற்றிய விஷயம் தெரியாமலே பலரும் இந்த சேமிப்புத் திட்டங்களை இன்னும் மலை போல் நம்பியிருக்கிறார்கள்.
சேமிப்புத் திட்டங்களும் வட்டி குறைப்பும்!
நாட்டின் பெரும்பாலான நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களின் இரண்டாவது வருவாயாக இருந்து வருபவை, தபால் நிலையம் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் செயல்பட்டு வந்த அரசு சிறுசேமிப்புத் திட்டங்கள். இந்த சேமிப்புத் திட்டங்களில் இருப்பவர் களுக்குக் கணிசமான வருவாய் அதன் வட்டி மூலம் கிடைத்து வந்தது.

இதில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுபவை பிபிஎஃப் என்று சொல்லப்படும் பொது சேமநல நிதி சேமிப்புத் திட்டம், செல்வ மகள் என்று அழைக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான சுகன்யா சம்ரிதி சேவிங்ஸ் திட்டம், கிஸான் விகாஸ் பத்ராஸ் திட்டம் ஆகியவை.
சமீபத்திய அரசு அறிக்கையின்படி, கிஸான் விகாஸ் பத்திராஸில் டிசம்பர் 2015 வரை ரூ.17,000 கோடிக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தில் 80 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் டெபாசிட்டுகள் ரூ.3,400 கோடியைத் தாண்டியிருக்கிறது.

2014-15-ல், சிறுசேமிப்புத் திட்டங்களில் இருப்பு வைக்கப்பட்ட தொகை ரூ.40,080.15 கோடி. நவம்பர் 30, 2015 நிலவரப்படி, சேமிப்பு மற்றும் பத்திரங்களில் இருப்பு வைக்கப்பட்ட தொகை ரூ.22,364.73 கோடியாக உயர்ந்திருக்கிறது. அந்த ஆண்டில்  எதிர்பார்க்கப்பட்ட டெபாசிட் ரூ.13,025.17 கோடி. இதைவிட இரண்டு மடங்கு அதிகமாக டெபாசிட் ஆனது. பிபிஎஃப்-ம் 19% அதிகரித்து, ரூ.12,446.15 கோடி இருப்பு வைக்கப்பட்டது.
இப்படி பெரும்பாலான மக்களால் வரவேற்கப்பட்ட இந்த சேமிப்புத் திட்டங்களின் வட்டியைச் சில மாதங்களாகவே அரசு குறைக்க முயற்சி செய்து வந்தது. இறுதியாக தற்போது குறைத்தும்விட்டது (பார்க்க பக்கம் 26-ல் உள்ள அட்டவணை-1). 

அரசு சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டிகளைக் குறைத்தது கிராமப்புற மக்கள், குறிப்பாகப் பெண்களை அதிகம் பாதிக்கும். ஏனெனில் பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள்தான் இந்தச் சிறு சேமிப்புத் திட்டங்களை அடையாளம் கண்டு மாதாமாதம் அஞ்சலகத்தில் சேமித்து வந்துள்ளனர்.
மேலும், வங்கிகளோ, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற மாற்று முதலீட்டு திட்டங்களோ இன்னும் நகரங்களைத் தாண்டி விழிப்பு உணர்வு அடையாத நிலையில், இந்த வட்டி குறைப்பு அவர்களுக்கு ஒரு இடி போலத்தான். இது குறித்து நிதி ஆலோசகர் அனிதாபட் சொல்கிறார்…

“இந்த வட்டி குறைப்புக்கு வங்கிகள் தந்த அழுத்தம்தான் காரணம். வங்கிகளில் இருப்பதைக் காட்டிலும், அஞ்சலகங்களில் டெபாசிட்டுகள் அதிகம் இருக்கின்றன. ஏனெனில் வங்கிகள் இல்லாத பட்டிதொட்டிகளிலெல்லாம் காலங்காலமாக அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், உத்தரவாத வருமானமும் அரசுத் திட்டம் என்ற நம்பிக்கையும் ஒரு காரணம். ஆனால், அஞ்சலகங்கள் கூடுதல் வட்டி தருவதை வங்கிகள் விரும்பவில்லை. இதன் காரணமாகவே இந்த வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

மற்ற சேமிப்புத் திட்டங்கள்கூட எதிர்காலத் தேவைகளுக்காகத் திட்டமிடுபவை என்பதால் பெரிய இழப்பு இல்லை என்று சொல்லலாம். ஆனால், மாத வருவாய் திட்டங்களுக்கு வட்டியைக் குறைத்திருப்பது சரியான முடிவல்ல. இன்று இருக்கிற விலைவாசியில் பலருக்கு இது போன்ற திட்டங்கள் கைகொடுப்பதாக இருந்து வருகின்றன. இதில் கணவன் – மனைவி சேர்ந்து ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மாதாமாதம் இதற்கு வட்டி வரும். இதில் சில வரையறைகள் உள்ளன. ஆனால், வங்கி நிரந்தர இருப்பில் வரையறைகளே இல்லை. மேலும், நிறைய நடைமுறைகள் இருப்பதால், கீழ்தட்டு மக்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் அஞ்சலகங்களையே நாடுகிறார்கள்.

ஆனால், பெரும்பாலான அரசின் திட்டங்கள் முதலில் மக்களை ஈர்க்கும் வகையில் விளம்பரப் படுத்தப்படுகின்றன. அதை நம்பி மக்களும் முண்டியடித்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து சேமிப்புக் கணக்கைத் தொடங்கி சேமித்தனர். ஆனால், முதிர்வுக் காலத்தின்போது அவர்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில்லை என்னும்போது ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, செல்வ மகள் திட்டத்தைச் சொல்லலாம். பிபிஎஃப் திட்டத்தையே வேறு வடிவத்தில் அறிமுகப்படுத்தி முதலீடுகளைத் திரட்டியது அரசு. ஆனால், இப்போது அதன் வட்டியையும் குறைத்திருக்கிறது.
அறியாமையால் மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் வருவாயை மட்டுமே பார்த்து முதலீடு செய்கின்றனர். எந்தவொருத் திட்டமாக இருப்பினும் அதனை முழுதாகத் தெரிந்துகொண்டு முதலீடு செய்பவர்கள் 10% பேர்தான்” என்று கூறினார்.
அரசு ஏன் இது போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது, சிறுக சிறுக பணத்தைச் சேர்த்து வந்த மக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்களா, இதனால் மக்கள் பாதிக்கப்படுவதோடு, அரசின் மீதான நம்பிக்கையும் குறையும் என்று அரசுக்குத் தெரியாதா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இது குறித்து பொருளாதார வல்லுநர் பேராசிரியர் சீனுவாசனிடம் கேட்டோம்.

“சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி குறைப்பு, அதில் மட்டுமே முதலீடு செய்தவர்களுக்கு உண்மையாகவே இழப்புதான். ஆனால், அரசு வட்டியைக் குறைக்காமல் இருந்தால் அரசு தன் பையிலிருந்து பணத்தை கூடுதலாக எடுத்து செலவு செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் சந்தையின் வட்டியைவிட கூடுதல் வட்டியைப் பல ஆண்டுகளாக அரசு வழங்கி வருகிறது. இதனால் அரசுக்கு செலவீனம் அதிகமாகி, நிதிப் பற்றாக்குறைக்கு ஆளாகிறது (பார்க்க மேலே உள்ள அட்டவணை). உதாரணமாக, 2015-16-ல் சேவிங் டெபாசிட்டுக்கு அரசு கொடுத்த வட்டி மட்டுமே ரூ.30,500 கோடி. இதனைத் தவிர்ப்பதற்காகவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

சிறு சேமிப்பு முதலீட்டாளர்களின் நலன் கருதி வட்டியைக் குறைக்காமல் இருந்தால், அரசு தன் செலவுகளைச் சமாளிக்கவும், நிதிப் பற்றாக்குறையைத் தடுக்கவும் வரிகளைக் கூட்ட வேண்டியிருக்கும். ஏற்கெனவே செஸ் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் விற்பனை வரி என்று இருப்பது எல்லோரும் அறிந்ததே. இந்த வரிகளைக் கூட்டுவதன் மூலமும், புதிய வரிகளை அமல்படுத்துவதன் மூலமும் அரசு தன் நிதிப் பற்றாக்குறையைப் போக்கிக்கொள்ள வேண்டிய சூழல் வரும். இந்த வட்டி குறைப்பு நடக்காவிட்டால், அது வரியாக மக்கள் தலையில்தான் விழும். அரசு கொடுப்பது போல் கொடுத்து, வேறு வழியில் வாங்கிக் கொள்வதற்கு இது எவ்வளவோ மேல் என்பதை  மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இவர் கூறியது போலவே, அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பதைப் பல்வேறு பொருளாதார அறிஞர்கள் வரவேற்றுள்ளனர். ஏனெனில் தற்போது இருக்கும் நிலையில் வட்டி குறைப்பு என்பது வங்கிக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்த பிறகே வங்கிகளும் டெபாசிட்  மற்றும் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்தன. 2015 ஜனவரியிலிருந்து தற்போது வரை ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை 100  அடிப்படைப் புள்ளிகள் குறைத்தது. ஆனால், வங்கிகள் தங்களது கடன் வட்டியில் 70 அடிப்படைப் புள்ளிகள் மட்டுமே குறைத்தன.

இந்த சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி குறைப்பினால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள், பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிதி ஆலோசகர் ராமலிங்கம் அவர்களிடம் கேட்டோம்.

“பிபிஎஃப், சுகன்யா சம்ரிதி ஸ்கீம், சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் போன்றவற்றில் முதலீடு செய்தவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த வட்டி குறைப்பு இப்போது சந்தையில் உள்ள அளவுக்கு மட்டுமே குறைத்து உள்ளதால், முதலீடுகளை வெளியே எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அஞ்சலக மாதாந்திர வருவாய் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் டைம் டெபாசிட் போன்றவற்றுக்கான வட்டி அவற்றின் முந்தைய வட்டியாகவே முதிர்வுக் காலம் வரை கிடைக்கும்.
ஆனால், சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி நிர்ணயம் ஒவ்வொரு காலாண்டுக்கும் பரிசீலனை செய்யப்படும் என்பது சரியான யோசனை அல்ல. தொடர்ந்து வட்டிக் குறைப்பு நடக்குமானால் பெரிய அளவில் பாதிப்பு மக்களுக்கு இருக்கும். எனவே, தொடர் வருமானம் எதிர்பார்ப்பவர்கள் தங்களின் பாதுகாப்புக்காக முதலீட்டில் 10 சதவிகிதத்தை பங்குகளில் ஐந்து ஆண்டு கால அடிப்படையில் முதலீடு செய்து, மிச்சத்தை சிறுசேமிப்புத் திட்டங்களில் போடலாம். இதுபோன்ற வட்டி குறைப்பினால் இழக்கும் வருமானத்தை, பங்குகளில் முதலீடு செய்வதில் கிடைக்கும் வருவாய் மூலம் சமன் செய்துவிடலாம்.

மேலும், இந்த வட்டி குறைப்பினால் வங்கிகள் தங்களது கடனுக்கான வட்டியைக் குறைக்குமா என்றால் இல்லை. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தைப் பொருத்துதான் வங்கிகளின் வட்டி குறைப்பு இருக்கும். சேமிப்புத் திட்டங்களின் வட்டிக் குறைப்புக்காக எல்லாம் வங்கிகள் கடன்களின் வட்டியைக் குறைக்காது” என்றார்.

இனி என்ன செய்யலாம்?
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இவற்றில் முதலீடு செய்துவந்த முதலீட்டாளர்கள் இனி என்ன செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிற கேள்வியை சர்ட்டிஃபைடு ஃபைனான்ஸியல் பிளானரும் ஃபார்ச்சூன் பிளானர்ஸ்.காம் நிறுவனத்தை நடத்தி வருபவருமான பத்மநாபனிடம் கேட்டோம்.

‘‘ஒரு கதவு மூடப்பட்டால், மறு கதவு திறக்கும். ஆனால், இப்போது பலரும் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பணவீக்கம் என்பது தினசரி வாழ்க்கையில் 8% மேலே. தவிர, பலருக்கும் கார் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்று பல ஆசைகளும் இருக்கின்றன. இந்தக் கனவுகளை நிஜமாக்க சிறுசேமிப்புத் திட்டங்கள் மட்டுமே கைதராது. இந்த சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை குறைத்து இருப்பதினால், வேறு முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டு உள்ளது.
பிபி.எஃப்.-ன் வட்டி விகிதம் 8.7%-லிருந்து தற்போது 8.1%-ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. வட்டி விகிதம் குறைக்கப் பட்டதால் நமக்கு ஏற்படும் இழப்பினை எடுத்துச் சொல்ல ஒரே ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். 
உதாரணமாக, ஒருவர் ஒவ்வொரு வருடமும் 1.5 லட்சத்தை இந்தத் திட்டத்தில் அடுத்த 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பழைய வட்டியின்படி அவருக்குக் கிடைப்பது ரூ.43 லட்சம் எனில், புதிய வட்டியில் அவருக்கு ரூ.41 லட்சம் மட்டுமே கிடைக்கும். 0.6% வட்டிக் குறைப்பதால், 15 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் நமக்குக் கிடைக்காமல் போகும்.

பாதுகாப்பு என்கிற ஒரே காரணத்துக்காக நம்முடைய மக்கள் குறைந்த வருமானத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள். சமீபத்தில் நபார்ட் நிறுவனம் வெளியிட்ட 10 வருட டாக்ஸ் ப்ரீ பாண்ட்-ன் வட்டி விகிதம் 7.29%. தொடங்கிய முதல் நாளிலே ரூ.14,000 கோடி முதலீடு வந்தது. அந்த பாண்டின் மொத்த வெளியீட்டு மதிப்பே வெறும் ரூ.3,500 கோடிதான். வரும் 10 வருடத்தில் நம்முடைய பணவீக்கம் என்னவென்று தெரி யாது; நம்முடைய பணத்தேவைகள் எப்படி இருக்கும் என்று தெரியாது. 10 வருடத்துக்கு உத்திரவாதம் என்கிற ஒரே காரணத்துக்காக அத்தனை பேரும் இதைத் தேர்வு செய்வது விநோதத்திலும் விநோதம்!
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஓரளவுக்கு ரிஸ்க் கொண்டவை என்றாலும் நல்ல லாபம் தரக்கூடியவை. தற்போது வட்டி குறைக்கப் பட்டிருக்கும் திட்டங்களைவிட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் எந்த அளவுக்கு சிறந்ததாக இருக்கும் என்பதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.

ஒருவர் 1994 ஏப்ரல் முதல் ஹெச்.டி.எஃப்.சி. ப்ரூடென்ஸ் ஃபண்டில் மாதம் ரூ.1000 வீதம் எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 2007-08 ஆகிய இரு ஆண்டுகளில் உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய சந்தை கடுமையாக சரிவடைந்தது. மார்ச் 9, 2009 அன்று பி.எஸ்.இ. குறியீட்டு 8160 புள்ளிகளுக்கு இறங்கியது. 21000 புள்ளிகளிலிருந்து சரிந்து 8160 புள்ளிகளைத் தொட்டது. சீ, இனி பங்குச் சந்தையே வேண்டாம் என்று வெறுத்துப் போய், கடந்த 15 ஆண்டுகளாக அவர் செய்திருந்த முதலீட்டை (ரூ.1.80 லட்சத்தை) திரும்ப எடுத்திருந்தால், அவருக்கு திரும்பக் கிடைக்கும் தொகை ரூ.7,74,632-ஆக இருக்கும். இது கூட்டு வட்டியில் 16.47% லாபம். நீண்ட கால நோக்கில் செய்யப்படும் முதலீடு என்பது ரிஸ்க் இல்லாதவை. அதிக லாபத்தை தருபவை என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதைச் சொன்னேன்.

நமது இந்தியா வளர்ந்து வரும் நாடு. வளர்ந்த நாடுகளில் வட்டி விகிதம் 1%தான். இன்னும் 10 வருடங்களில் நம் நாடும் வளர்ந்த நாடாக மாறும்போது, இப்போது கிடைக்கும் வட்டி  குறையவே வாய்ப்புகள் அதிகம். பாதுகாப்பு கருதி, குறைவான வருமானம் தரும் திட்டங்களை நாடுவதைவிட, நம் ரிஸ்க் அறிந்து, நமக்கேற்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
பொதுவாக, வயது குறைந்தவர்களுக்கு ரிஸ்க் எடுக்கும் காலம் அதிகமாக இருப்பதால், அவர்கள் மிட் அண்ட் ஸ்மால் கேப் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அடுத்த நிலையில் இருப்பவர்கள், டைவர்சிஃபைடு திட்டமான மல்டி கேப் முதலீட்டை அணுகலாம். ஓரளவுக்கு வயதானவர்கள் லார்ஜ் கேப் திட்டத்தையும், ஓய்வு பெற்றவர்கள் பேலன்ஸ்டு ஃபண்டுகளையும் தேர்வு செய்யலாம். (பார்க்க எதிர்பக்கத்தில் உள்ள அட்டவணை-2)

இந்த விதி எல்லோருக்கும் ஏற்றது என்றாலும் ஒருவருடைய குடும்ப நிதி நிலைமை, அடிப்படை ரிஸ்க் எடுக்கும் திறன் பொறுத்து இது மாறுபடும். ஒரு நிதி ஆலோசகருடன் கலந்தாலோசித்து, உங்கள் முதலீட்டை மேற்கொள்வது நலம். எனவே, இந்த வட்டி விகிதக் குறைவை ஒரு பாரமாக கருதாமல் நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக நினைத்தால், நம்மால் கூடுதலாக வருமானம் பார்க்க முடியும்’’ என்றார்.

அரசாங்கம் தனது பொருளாதார சுமையைக் குறைத்துக் கொள்ள இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றாலும் பிபிஎஃப் போன்ற சில திட்டங்களுக்கான வட்டி குறைப்பு மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதும், இதற்கு மேலும் வட்டி குறைக்காமல் இருந்தால் நல்லது என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு.

Friday, March 25, 2016

செல்போனில் அழைப்பவர் யாரென்று அறிந்து கொள்ள


செல்போனில் அழைப்பவர் யாரென்று அறிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?
நம் ஸ்மார்ட் போனில், அழைப்பு ஒன்று வருகிறது. அழைக்கும் எண் நம் போனில் பெயருடன் பதியப்படாமல் இருந்தால், அழைப்பது யாரென்று தெரியாது. யாரென்று தெரிந்தால், அவர் தவிர்க்கப்பட வேண்டிய நபர் என்றால் தவிர்க்கலாம். ஆனால், எப்படி புதிய, பதியாத எண் யாருடையது என்று தெரிந்து கொள்வது? இவர்களுக்கு உதவும் வகையில், ஸ்மார்ட் போனில் இயங்கும் செயலியாக இருப்பது, “ட்ரூ காலர்” என்னும் புரோகிராம் ஆகும். 

இது ஆண்ட்ராய்ட், ஐபோன், விண்டோஸ் போன், பிளாக் பெரி 10 ஆகியவற்றிற்கென தனித்தனியே இதன் இணைய தளத்தில் (https://www.truecaller.com/download) தரப்பட்டுள்ளது. 200 கோடிக்கும் மேலாக, இதன் தகவல் தளத்தில் மொபைல் போன்கள் உள்ளதாக, இதன் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை “உலகின் மிகப் பெரிய டெலிபோன் டைரக்டரி” என்றும் கூறலாம். இதன் இணைய தளத்திலும், நீங்கள் மொபைல் போன் ஒன்றைக் கொடுத்து, போனுக்குரியவர் குறித்து தகவல்களைப் பெறலாம். ஆனால், நீங்கள் யாரென்பதை, கூகுள் ஐ.டி. அல்லது மைக்ரோசாப்ட் ஐ.டி. யைத் தர வேண்டியதிருக்கும்.

ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் பயனாளர்களில், 60% பேர் இந்த 'ட்ரூ காலர்' என்னும் செயலியைப் பதிந்து பயன்படுத்துவார்கள். இதுவரை பயன்படுத்தாத ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்கள், True Caller செயலியை, கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று, தரவிறக்கம் செய்து, போனில் பதிந்து பயன்படுத்தலாம். ஒருவரின் எண் இன்னாருடையது என்று முதலில் பதியப்படும் பெயரே, ட்ரூ காலரில் காட்டப்படுகிறது. அந்தப் பெயர் இந்த செயலிக்கான சர்வரில் பதியப்பட்டு, நமக்கு அழைப்பு வருகையில் காட்டப்படுகிறது. இந்த செயலியைப் பயன்படுத்தி நாம் என்ன என்ன வசதிகளைப் பெறலாம் என்று இங்கு பார்க்கலாம்.



அழைப்புகளைத் தடுக்க: 

குறிப்பிட்ட எண்ணில் தொடங்கும் அழைப்புகளை, உங்கள் போனுக்கு வரவிடாமல் தடுக்கலாம். இதுவரை நீங்கள் அறியாத ஒருவர், புதிய எண்ணிலிருந்து உங்களை அழைத்து, தொல்லை கொடுக்கிறார் என்றால், அந்த எண்ணைக் கவனியுங்கள். அழைப்பினை நீங்கள் நிறுத்தியவுடன், உங்களுக்கு ஒரு சிறிய கட்டத்தில் ஆப்ஷன்ஸ் கிடைக்கும். அதில் இந்த குறிப்பிட்ட எண்ணிலிருந்து வரும் அழைப்புகளைத் தடுக்கும் வகையில், செட்டிங்ஸ் அமைத்துவிடலாம். அல்லது அந்த எண்ணின் முதல் நான்கு இலக்கங்களைக் கொடுத்தும் தடுக்கலாம். எடுத்துக் காட்டாக, அந்த எண் 8054ல் தொடங்குவதாக இருந்தால், இந்த நான்கு இலக்கங்களைக் கொடுத்தும் தடுக்கும் வகையில் அமைப்பினை ஏற்படுத்தலாம்.


இணைய இணைப்பு எப்போதும் தேவையில்லை: 

உங்கள் மொபைல் போனில் வரும் அழைப்பு எண் யாருக்குரியது என்று அறிய எப்போதும் இணைய இணைப்பில் உங்கள் போன் இருக்கத் தேவையில்லை. முதல் முறை ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வரும்போதே, அந்த எண்ணுக்குரியவரின் பெயர் எங்கேனும் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதனை, ட்ரூ காலர் அறிந்து வைத்துக் கொள்கிறது. அடுத்த முறை அழைப்பு வருகையில், தன் நினைவிலிருந்தே அதனை உங்களுக்குக் காட்டுகிறது.


தொல்லை கொடுப்பவரிடமிருந்து பாதுகாப்பு

தொடர்ந்து ஓர் எண்ணிலிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் எரிச்சல் தரும் பேச்சினைத் தொடர்ந்து அளிப்பவராயின், அந்த எண்ணுக்குரியவரை spammer என அடையாளக் குறியிட்டு வைக்கலாம். இது போல ஓர் எண்ணைப் பலர் ஸ்பேம் என அடையாளம் காட்டி இருந்தால், உங்களுக்கு அழைப்பு வருகையில், இந்த எண்ணை இத்தனை சதவீதம் பேர் ஸ்பேம் என குறித்துள்ளனர் என்று தகவல் காட்டப்படும். எனவே, நீங்களும் இதனை முடக்கி வைக்கலாம்.


ட்ரூ டயலர்: 

இதே செயலியைப் போன்று, இதனை வழங்கும் நிறுவனம், 'ட்ரூ டயலர்' என்ற (True Dialer) என்ற செயலியையும் தருகிறது. இதனை, உங்கள் போனின் டயலராக செயல்படுத்தலாம். நீங்கள் ஒருவரை அடையாளம் காட்டி அமைத்தால், நீங்கள் குறிப்பிட்ட அடையாளத்துடன், அந்த எண்ணிலிருந்து அழைப்பு வருகையில் தகவல் கிடைக்கும். வழக்கமாக, நீங்கள் டயல் செய்திடுவதனை, இந்த செயலியின் மூலமும் செயல்படுத்தலாம். 

எண் குறித்த தகவல்: 
ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் தான், அந்த எண்ணுக்குரியவரை அடையாளம் காட்டும் என்ற வரையறை, இந்த செயலிக்கு இல்லை. எந்த எண்ணையும் ட்ரூ காலரில் கொடுத்து, அந்த எண் யாருக்குரியது என்று நீங்கள் ட்ரூ காலர் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால், அந்த எண்ணுக்குரியவருக்கு, இந்த எண்ணிலிருந்து, உங்கள் எண் குறித்த தகவல் அறியப்பட்டது என்ற தகவல் அந்த எண் கொண்ட போனுக்குச் செல்லும்.



உங்களைப் பற்றிய தகவல் தொகுப்பு:

 ட்ரூ காலர் செயலியைப் பயன்படுத்தி, உங்களைப் பற்றிய தகவல் தொகுப்பினை உருவாக்கலாம். இதன் மூலம், நீங்கள் அழைக்கும் நபர்கள், உங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள இயலும். எடுத்துக் காட்டாக, உங்கள் முழுப் பெயர் மற்றும் படத்தினை இத்தொகுப்பில் இட்டு வைக்கலாம். அதே போல, Privacy என்ற வகையில், உங்களைப் பற்றிய தகவல்களைக் காட்டாமல் இருக்கவும் அமைக்கலாம்.


உங்கள் எண்ணை நீக்க: 

ட்ரூ காலர் உங்கள் எண் குறித்த தகவல்களை யாருக்கும் காட்டக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், அதனுடைய தகவல் தொகுப்பிலிருந்து, உங்கள் எண்ணை முழுமையாக நீக்கலாம். http://www.truecaller.com/unlist என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்று, உங்கள் மொபைல் எண்ணை, இந்தியாவிற்குரிய குறியீட்டு எண்ணுடன் இணைத்து தர வேண்டும். ஏன் எண்ணை பதிவிலிருந்து நீக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான காரணத்தை, அதில் தரப்படும் ஆப்ஷன்களிலிருந்து தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர், அதில் காட்டப்படும் 'கேப்சா (Captcha)' சோதனையை மேற்கொண்ட பின்னர், 'Unlist' என்பதில் கிளிக் செய்தால், உங்கள் எண் நீக்கப்படும். நீங்கள் அழைப்புகளை மேற்கொள்கையில், உங்கள் எண் குறித்த தகவல் ட்ரூ காலர் வழியாகத் தரப்பட மாட்டாது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 14.03.2016


Monday, March 14, 2016

வெளிநாட்டில் படிக்க


வெளிநாட்டில் படிக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவர்கள் ஐ.ஐ.டி-க்களையும் ஐ.ஐ. எம்-களையும் எல்லை இலக்காக நினைத்துப் படித்த காலம் மாறி, இன்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குப் படிக்கச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்வதேச தரத்திலான கல்வி, புதுப்புது அனுபவங்கள் மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகள் என இதில் அட்வான்டேஜ்கள் நிறைய இருப்பதால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா எனக் கிளம்புகிறார்கள் பலரும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் பெறுவதில் கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், கல்வி ஆலோசகர் போர்ஷியா ரிச்சர்ட்.

நாடு, பல்கலைக்கழகம்!
‘‘நண்பர்கள் படிக்கிறார்கள், உறவினர்கள் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் தாண்டி, ஒரு நாட்டில் கிடைக்கக் கூடிய அனுபவங்கள் மற்றும் வாழ்க்கைச் சூழலின் அடிப்படையில், எந்த நாட்டில் படிக்கச் செல்லலாம் என்பதை முடிவெடுங்கள். அடுத்ததாக, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ரேங்க் பட்டியலை இணையம் அல்லது ஏதேனும் ஒரு கன்சல்டன்ஸியிடம் பெற்று, நீங்கள் படிக்கவிருக்கும் துறையில் டாப் ரேங்கில் இருக்கும் பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்யுங்கள். சில நேரம், ஒட்டுமொத்தமாக ஒரு பல்கலைக்கழகம் தரவரிசையில் முன்னணியில் இருக்கும். ஆனாலும், உங்கள் துறையில் அது பின்தங்கியே இருக்கும். எனவே, துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தே பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்வு செய்திருக்கும் பல்கலைக்கழகம் கோரும் மாணவர் தகுதியை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை செக் செய்துகொள்ளுங்கள்.
இதன் பின்னர் பாஸ்போர்ட் வேலைகளை ஆரம்பிக்கலாம். நீங்களாகவே அப்ளை செய்து பாஸ்போர்ட் பெறுவது ஒரு வழி. இதற்கென பிரத்யேகமாக இருக்கும் ஏஜென்சி மூலம் பாஸ்போர்ட் பெறுவது இன்னொரு வழி. தகுந்த சான்றிதழ்கள் சமர்ப்பித்து பாஸ்போர்ட் வாங்கிய உடனே நீங்கள் செல்லவிருக்கும் நாட்டுக்கான விசா வேலைகளையும் முடித்துக்கொள்ளலாம். அமெரிக்கா, கனடா போன்ற சில நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்போதே பாஸ்போர்ட் ஹோல்டராக இருக்க வேண்டியது கட்டாயமாதலால் இது மிக முக்கியமான வேலை.
IELTS
TOEFL தேர்வு கடினம் என்று நினைப்பவர்களின் ஆல்டர்நேட்டிவ் ஆப்ஷன், IELTS தேர்வு. இதில் வாங்கும் மதிப்பெண்களையும் பல பல்கலைக்கழகங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இது சற்றே எளிமையான தேர்வாதலால் ஒரு சில மாதங்கள் தயார் செய்தால் நல்ல ஸ்கோர் பெறலாம். பிரிட்டிஷ் கவுன்சிலால் நடத்தப்படும் இந்தத் தேர்வில் படித்தல், கவனித்தல், பேசுதல், எழுதுதல் என நான்கு வகையான திறன்கள் சோதிக்கப்படும். தேர்வு எழுதி முடித்த 12, 13 நாட்களில் முடிவுகள் தெரிந்துவிடும். உடனடியாக அந்த மதிப்பெண்களை வைத்து விண்ணப்பிக்கலாம்.
படிப்பும், பார்ட் டைம் வேலையும்!
இந்த மொழித்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதி, நல்ல மதிப்பெண்களோடு விண்ணப்பித்தால், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் இடம் கிடைப்பதோடு அங்கே சென்ற பிறகு பகுதி நேர வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கும் உதவியாக இருக்கும். சில பல்கலைக்கழகங்கள் விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரிக் காலங்களில் நல்ல மதிப்பெண்களோடு தேர்வாகியிருந்தாலே அட்மிஷன் கொடுத்துவிட்டாலும், அவர் ஏதேனும் ஒரு மொழித்தேர்வை எழுதி கிளியர் ஆகும் வரை ‘கண்டிஷனல் ஆஃபர்’ மட்டுமே கொடுப்பார்கள். எனவே, இந்தத் தேர்வு மிக அவசியம். மொத்தத்தில், முறையான திட்டமிடல், தகுந்த பயிற்சி, தெளிவான வழிகாட்டுதலோடு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தால், ரூட் க்ளியர்!
TOEFL
மாணவர்களின் ஆங்கிலத் திறனை மதிப்பிட்டு சர்வதேச பல்கலைக்கழகங்களில் இடம் பெறுவதற்கு உதவும் தேர்வுகளில் முதன்மையானது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒரு குறிப்பிட்ட TOEFL ஸ்கோரை நிர்ணயித்து இருப்பார்கள். அதற்கு மேல் வாங்கும் மாணவர்களின் விண்ணப்பங்களையே பரிசீலிப்பார்கள். படித்தல், கவனித்தல், பேசுதல், எழுதுதல் - இந்த நான்கு திறன்களையும் சோதிக்கும் இந்தத் தேர்வு வருடத்தில் கிட்டத்தட்ட 50 தடவைக்கு மேல் நடத்தப்படும். மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரை நடத்தப்படும் ஆன்லைன் தேர்வு இது. இதில் வாங்கும் மதிப்பெண்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்கு மட்டுமே செல்லும். எப்போது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.
மொழித் தேர்வுகள்!
பல வெளிநாட்டுப் பல்கலை கழகங்கள், ஆங்கிலம் தாய்மொழி அல்லாத நாடுகளில் இருந்து தங்களிடம் விண்ணப்பிப்பவர்களை TOEFL, IELTS, Pearson போன்ற ஏதாவதொரு ஆங்கில மொழித்திறன் தேர்வை எழுதி, அதன் மதிப்பெண்களோடு விண்ணப்பிக்கச் சொல்வார்கள்.
Pearson Test
பிரபலமாகி வரும் மொழித்தேர்வு இது. TOEFL, IELTS, தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலாதவர்கள், அவற்றைவிட எளிமையான இதை முயற்சிக்கலாம். ஆனால், பலருக்கு இதைப் பற்றிய விழிப்பு உணர்வு இல்லை. பலர் இத்தேர்வெழுதி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோ.இராகவிஜயா
நன்றி : அவள்விகடன் - 09.02.2016

திருமணப்பதிவு - என்ன செய்ய வேண்டும்


திருமணப்பதிவு - என்ன செய்ய வேண்டும்?
திருமணப் பதிவு 90 நாட்களுக்குள்!
திருமணப் பதிவுக்காக marriage-certificate.in என்ற வலைதளத்தை நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த ஷகிலா பானு, மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷன் ஃபார்மாலிட்டிகள் குறித்த சந்தேகங்களுக்கு இங்கே விளக்க மளிக்கிறார்.
திருமணப் பதிவு என்பது எதற்கெல்லாம் பயன்படும்?
‘‘பாஸ்போர்ட்டில் இணையின் பெயரை இணைக்க, விசா வாங்க, வங்கிகளில் தன் இணை பெயரில் ஜாயின்ட் அக்கவுன்ட் ஆரம்பிக்க, கணவர் அல்லது மனைவியின் பென்ஷன் பணத்தைப் பெற, திருமணம் தொடர்பான அரசு சலுகைகள் பெற... இதற்கெல்லாம் திருமணப் பதிவுச் சான்றிதழ் அவசியம்.''
திருமணத்தைப் பதிவு செய்வதற்குத் தேவையானவை எவையெவை?
``திருமணத்தைப் பதிவு செய்ய, மணமக்கள் இருவரின் வயதுச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 6 எடுத்து வருவதுடன், சாட்சிகளும் தங்களின் அடையாள அட்டையுடன் வர வேண்டும். சாட்சிகளுக்கு வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும். மணமகனுக்கு 21, மணமகளுக்கு 18 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். துணையை இழந்தவர்கள் அல்லது விவாகரத்தானவர்கள் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளும்போது, அந்தத் திருமணத்தையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம். பதிவுக்கு கொண்டு வர வேண்டிய சான்றிதழ்களுடன், இறந்த துணையின் இறப்புச் சான்றிதழையும், விவாகரத்து பெற்றவர் அது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
திருமணத்தை எத்தனை நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்?
``பொதுவாக திருமணம் முடிந்த 90 நாட்களுக்குள் அதைப் பதிவு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு பெனால்டியுடன் பதிவு செய்ய 60 நாட்கள் வரை அவகாசம் இருக்கிறது. திருமணத்தில் யாருக்காவது எதிர்ப்பு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள பதிவு அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டுவார்கள். 30 நாட்கள் வரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், அந்தத் திருமணம் பதிவு செய்யப்படும்''
திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆனாலும் பதிவு செய்ய முடியுமா?
``பல வருடங்கள் ஆகியும் பதிவு செய்யாதவர்கள் மற்றும் திருமணப் பதிவு சான்றிதழைத் தொலைத்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய முடியும். தங்களது வயது மற்றும் முகவரிச் சான்றிதழ், திருமண அழைப்பிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மற்றும் சாட்சிகளை அடையாள அட்டையுடன் அழைத்து வந்து, திருமணத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்.
திருமணம் பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்தில், ஒரு சான்றிதழ் டிராஃப்ட் கேட்டு வாங்கலாம். அதில் ஏதாவது தவறு இருந்தால் திருத்திக் கொடுக்கலாம். இறுதியாக வழங்கப்பட்ட திருமணப் பதிவு சான்றிதழில் தவறு ஏதும் இருந்தால், இரண்டு மாதங்களுக்குள் திருத்திக் கொள்ளலாம். அதற்கு தம்பதி திருமணப் பதிவுச் சான்றுடன், அடையாள அட்டையும் கொண்டு செல்ல வேண்டும்.
திருமணப் பதிவுச் சான்றிதழின் ரசீது (receipt) எண்ணை தனியாக குறித்துவைத்துக் கொள்ளவும். ஒருவேளை சான்றிதழ் தொலைந்துவிட்டால், அந்தத் திருமணம் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் சென்று, பதிவு செய்த தேதி மற்றும் ரசீது எண்ணைத் தெரிவித்து விண்ணப்பித்தால், ஒரு வாரத்துக்குள் புதிய சான்றிதழ் கிடைத்துவிடும்.''
கலப்புத் திருமணத்தை பதிவு செய்ய முடியுமா?
``தாரளமாக பதிவு செய்யலாம். மற்ற திருமணங்களைப் போலவேதான் இதற்கான நடைமுறையும்.''
ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி திருமண முறைகள் இருப்பதுபோல பதிவு செய்வதிலும் தனி முறைகள் உண்டா?
``ஆம் தனித்தனியான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஹிந்து மேரேஜ் ஆக்ட்: இந்து மணமக்கள் இருவரும் திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும்.
ஸ்பெஷல் ஆக்ட்: மணமக்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் அல்லது இஸ்லாமியர்களாக இருந்தாலோ, இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலோ, இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்.
சிவில் ஆக்ட்: மணமக்கள் எந்த மதச் சடங்குகளையும் பின்பற்றாமல் திருமணம் செய்தால், இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும்.’’
ந.ஆஷிகா
நன்றி : அவள் விகடன் - (16/06/2015)

Saturday, March 12, 2016

மரபணுக் குறைபாடு


மரபணுக் குறைபாடு - என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளை பாதிக்கும் டவுண் சிண்ட்ரோம்

உண்மையில், மரபணுக் குறைபாடு எங்கேயோ யாரோ ஒருவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு வருவது அல்ல. அதிகரிக்கும் வாகன மற்றும் தொழிற்சாலை  மாசு, புகை, மாறிவரும் உணவுப்பழக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தூக்கமின்மை, மதுப்பழக்கம் போன்ற நம்முடைய வாழ்க்கைமுறைத் தவறுகள் காரணமாக, இன்று டவுண் சிண்ட்ரோம் எனும் மரபணுக் குறைபாடு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 46 குரோமோசோம்கள் (23 ஜோடிகள்) இருக்க வேண்டும். சிலருக்கு, 21-வது ஜோடி குரோமோசோமில், கூடுதலாக ஒரு குரோமோசோம் சேர்த்துவிடுவதால், அவர்களுக்கு 46-க்குப் பதில் 47 குரோமோசோம்கள் இருக்கும். இதனால், இந்தக் குழந்தைகள் மரபணுக் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். உலகில் ஆயிரத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது. இந்தக் குறைபாட்டை முற்றிலும் குணமாக்க முடியாவிட்டாலும் முறையான சிகிச்சை மூலம் எதிர்காலப் பாதிப்பைக் குறைக்கலாம்.
பிறவிக்குறைபாடு 
கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்திலேயே குழந்தை டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ளதா எனக் கண்டுபிடிக்க இயலும். சில பெற்றோர் டவுண் சிண்ட்ரோம் கருவைக் கலைத்துவிடுகின்றனர். ஆனால், இன்றைய  சூழலில் கல்வியறிவு மற்றும் மருத்துவ விழிப்புஉணர்வு ஓரளவு வளர்ந்துள்ளதால், பல பெற்றோர்கள் டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர் என்பது ஆரோக்கியமான விஷயம்.

ஐ.க்யூ அளவு  
சராசரி மனிதர்களின் ஐ.க்யூ அளவானது 70 முதல் 130 ஆகும். டவுண் சிண்ட்ரோம் குறைபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து குழந்தைகளின் ஐ.க்யூ அளவு 50 முதல்  70 வரை  இருக்கும். மிகத் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சராசரி ஐ.க்யூ  50 ஆக இருக்கும்.  
வாழ்நாள் முழுதும் எட்டு வயதுக் குழந்தைக்கு உரிய அறிவே இவர்களுக்கு இருக்கும். ஐ.க்யூ அளவு 70 உள்ளவர்கள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் எல்லா வகையிலும் சராசரியாக இருப்பார்கள். ஆனால், இவர்களுக்கு டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளுக்கான தோற்றம், உடல்நலக் குறைபாடுகள் இருக்கும். இவர்களுக்கு, தங்களுக்குள் இப்படி ஒரு குறைபாடு இருப்பதும், மற்றவர்களிடம் இருந்து தாங்கள் வேறுபடுகிறோம் என்பதும் தெரியும். 
முன்பு, ஐ.க்யூ அளவு மிகக் குறைவாக உள்ள டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் ஏழு வயது வரை சாதாரணப் பள்ளியில் பயின்று, அதற்குப் பின்னர் அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இப்போது, இந்தக் குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு சமமாக நடத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அறிகுறிகள் பெரும்பாலும் டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளைப் பிறக்கும்போதே அடையாளம் காண இயலும். பெரிய கண்கள் அல்லது மாறுகண், அகலமான முன்நெற்றி, வாய் பாதி மூடியதுபோல இருக்கும் சிறிய தாடை, கண் இமைகள், ஒழுங்கற்ற பல் வரிசை ஆகியவை மற்ற குழந்தைகளிடம் இருந்து இவர்களை வேறுபடுத்திக்காட்டும் அம்சங்கள். பெரும்பாலானோர்,  ஐந்து அடிக்கு மேல் வளர மாட்டார்கள். கண் பார்வை மற்றும் செவித்திறன் கோளாறுகள் வர வாய்ப்புகள் அதிகம்.
குணாதிசயங்கள் 
டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியான குணாதிசயங்களோடு இருக்க மாட்டார்கள். சிலர் மிகவும் சுறுசுறுப்பாகவும், சிலர் மந்தமாகவும் இருப்பார்கள். வாலிபப் பருவத்தில் தங்களுக்கு இதுபோன்ற ஒரு குறை இருப்பது தெரிந்ததும், சிலர் மூர்க்கமாக மாறுவர். அதேசமயம் அனைவரிடமும் இன்முகத்துடனும் புன்சிரிப்புடனும் நட்பாகப் பழகுபவர்களும் உள்ளனர். 
டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளைத்  தாக்கும்  நோய்கள்   

இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதால், பலவகையான நோய்களும் குறைபாடுகளும் தாக்க வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, தைராய்டு சுரப்பி பாதிக்கப்படுவதால், மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான தைராக்ஸின் ஹார்மோன் தடைப்படுகிறது. இதனால், இதயக்குழாய் அடைப்பு, இதயச் சுவரில் துளை, நுரையீரல் பாதிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள்  
இந்தக் குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனை, வருடத்துக்கு ஒருமுறை கண் பார்வை மற்றும் செவித்திறன் பரிசோதனை மிகவும் அவசியம். மேலும், குழந்தைகளின் தனித்திறமைகளைக் கண்டுபிடித்து, ஊக்கப்படுத்தவேண்டியது அவசியம்.
பாலுணர்வு 
மிதமான டவுண் சிண்ட்ரோம் குறைபாடு உள்ள டீன்ஏஜ் வயதினருக்கு பாலுணர்வு சராசரி மனிதர்களுடன் ஒப்பிடும்போது இயல்பாகவே உள்ளது. அமெரிக்க இளைஞர்கள் டவுண் சிண்ட்ரோம் பாதிப்புள்ள பெண்ணைக் காதலித்து மணந்துகொள்கின்றனர். டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் மணம் புரிந்து இயல்பான தாம்பத்தியத்தில் ஈடுபட இயலும். டவுண் சிண்ட்ரோம் பரம்பரை வியாதி கிடையாது என்பதால், டவுண்ட் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு, இந்தக் குறைபாடு இருக்க வாய்ப்பு இல்லை.  மேலைநாடுகளில் டவுண் சிண்ட்ரோம் தம்பதிகளின் விவாகரத்து எண்ணிக்கை, சராசரி தம்பதிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிகவும் குறைவு. இந்தத் தம்பதிகள் அனைவரும் தங்களுடைய குறையை நன்கு அறிந்தவர்களாக உள்ளதால், இவர்களுக்குள் நல்ல பிணைப்பும் பந்தமும் ஏற்படுகிறது.

35 வயது தாய்மார்களின் கவனத்துக்கு!
இந்தக் குறைபாட்டுக்கு முக்கியக் காரணியாக அமையும் மற்றொரு விஷயம், கருத்தரிக்கும் தாயின் வயது. 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்களுக்கு டவுண் சிண்ட்ரோம் குழந்தை பிறக்க வாய்ப்புகள்  அதிகம். கருவுற்ற 10-வது வாரத்தில், அம்னியோசென்டீசிஸ் (Amniocentesis) எனும் பரிசோதனை செய்வதன் மூலம் இதை ஆரம்பத்திலேயே கண்டறியலாம். இந்த சோதனையில் கர்ப்பப்பையில் சிசு மிதக்கும் திரவம், ஊசி மூலம் சிறிய அளவில் எடுத்து பரிசோதிக்கப்படும். இதன் மூலம் வயிற்றில் உள்ள கருவுக்குப் பிறவிக்குறைபாடு ஏதேனும் நேர வாய்ப்பு உள்ளதா எனக் கண்டுபிடிக்க முடியும்.
நன்றி : டாக்டர் விகடன் - 16.03.2016

Tuesday, March 1, 2016

ஸ்மார்ட் ஃபோன் தொலந்துவிட்டால்


ஸ்மார்ட் ஃபோன் தொலந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

நாம் அனைவரும் ஒரு முறையாவது போனை தொலைத்திருப்போம். ஒன்று தெரியாமல் தொலைத்திருப்போம் அல்லது யாராவது திருடி இருப்பார்கள். அந்த மாதிரி நேரத்தில் நாம் பதட்டப்படுவதால் எந்த ஒரு பலனும் இல்லை. அமைதியாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினால் போதும். இதனால் சில நேரத்தில் போனை கண்டு பிடிக்கலாம் அல்லது யாரும் அதை தகாத காரியங்களுக்கு பயன்படுத்தாமல் பாதுகாத்து கொள்ளலாம். அது எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

ரிங்

உங்கள் போனுக்கு ரிங் அல்லது மெசேஜ் கொடுக்கவும்
முதலில் உங்கள் போனுக்கு ரிங் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பவும்.
யாரிடமாவது உங்கள் போன் இருந்தால் அவர்கள் உங்களுக்கு தொடர்பு கொள்வார்கள் இல்லையென்றால் அடுத்த முயற்சிக்கு செல்லவும்.
கடவுச்சொல்
கடவுச்சொல்லை மாற்றவும்.
உங்கள் போன் தொலைந்துவிட்டால் உடனே உங்கள் கணினியில் உள்ள அனைத்து கடவுச் சொல்லையும் மாற்றிவிடவும். நம்மில் பலர் இமெயில், முகநூல், வங்கி கணக்கு போன்றவற்றின் கடவுச்சொற்களை மொபைலில் சேமித்து வைக்கும் பழக்கத்தில் இருப்போம். ஆகவே உடனே அவைகளின் கடவுச் சொல்லையும் மாற்றி விடுவது நல்லது.
டிவைஸ் மேனேஜர்
ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜரை பயன்படுத்தவும்
ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜரின் உதவியுடன் உங்களை போனை கண்டுபிடிக்க முடியும். இதில் ரிங், லாக் அல்லது போனை செயலற்று போக செய்வதற்கான ஆப்ஷன்கள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி உங்கள் போனை கண்டுபிடிக்கலாம், இல்லாவிட்டால் செயலற்று போக செய்யலாம். குறிப்பு இந்த ஆப்ஷன் கருவி தொலைந்து போகும் முன் நீங்கள் எனேபிள் செய்திருந்தால் மட்டுமே வேலை செய்யும்.
சிம் பிளாக்
சிம் கார்டை பிளாக் செய்யவும்
போன் தொலைந்தவுடன் உங்கள் டெலிகாம் ஆப்ரேட்டரை தொடர்பு கொண்டு உங்கள் சிம் கார்டை பிளாக் செய்யவும். இதனால் உங்கள் போனை எடுத்தவர்கள் உங்கள் சிம் கார்டை பயன்படுத்த முடியாது. இதன் மூலம் உங்கள் சிம் கார்டை தகாத செயல்களுக்கு பயன்படுத்தப்படாமல் பாதுகாக்க முடியும்.
காவல் நிலையம்
காவல் நிலையம் செல்லவும்
போனை கண்டுபிடிக்க காவல் நிலையம் செல்வதால் ஒரு பயனும் இல்லையென்றாலும் அதை செய்வது நல்லது. உங்கள் போனை கண்டுபிடிக்க முடியாவிட்டால் உடனே அருகில் உள்ள காவல் நிலையம் சென்று புகாரை பதிவு செய்தல் அவசியம்.
கண்காணிப்பு
எல்லா கணக்குகளையும் கண்காணிக்கவும்
உங்கள் மின்னஞ்சல், முகநூல், சமூக வலைதளம் போன்றவற்றின் கணக்குகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். இதனால் யாராவது உங்கள் கணக்குகளை பார்வையிடுகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்
Written by: Aruna Saravanan 
நன்றி : கிஸ்பாட் - 27.02.2016