disalbe Right click

Tuesday, April 5, 2016

வாஷிங் மெஷின் பராமரிப்பு


வாஷிங் மெஷின் பராமரிப்பு - என்ன செய்ய வேண்டும்?

விதம் விதமா இருக்குதுங்க... வாஷிங் மெஷின்!
வாஷிங் மெஷினில் மார்க்கெட்டில் உள்ள வகைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றி விரிவாகச் சொல்கிறார், ‘வசந்த் அண்ட் கோநிறுவனத்தின் சென்னைக் கிளை மேனேஜர் கார்த்திகேயன்.
‘‘வீட்டின் பவர் சப்ளை, தண்ணீர் வசதி, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற கூறுகளின் அடிப்படையில், அதற்கேற்ற வாஷிங் மெஷினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 6.5 கிலோ கொள்ளளவு வரையிலான வாஷிங் மெஷின் ஓ.கே! வாஷிங் மெஷினில் செமி ஆட்டோமேட்டிக், ரெகுலர் செமி ஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என்று மூன்று வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்
செமி ஆட்டோமேட்டிக்

துவைக்கும் வாஷர் மெஷின் மட்டுமே இருக்கும்.
டிரையர் ஆப்ஷன் இல்லை என்பதால் இதைப் பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.
ரெகுலர் செமி ஆட்டோமேட்டிக்

பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தும், வாஷர், டிரையர் இரண்டும் இருக்கும் மாடல் இது.
வாஷரில் துவைத்து முடித்ததும், நாம்தான் டிரையருக்கு மாற்ற வேண்டும்.
ஃபுல்லி ஆட்டோமேட்டிக்

தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வதில் இருந்து, டப் நிரம்பியதும் தண்ணீரை நிறுத்திக்கொள்வது, துவைப்பது, தண்ணீரை வெளியேற்றுவது, டிரையரில் பிழிவது என்று அனைத்தையும் தானே செய்யும். ஒருமுறை துணியை லோடு செய்து ஆன் செய்த பின், அருகில் ஆள் இருக்க வேண்டிய அவசியமில்லை. துவைத்து, அலசி, டிரையரில் பிழிந்து முடித்ததும் ஒலி எழுப்பும். பின் துணிகளை எடுத்துக் கொடியில் உலர்த்தினால் போதும்.
டாப் லோடு, ஃப்ரன்ட் லோடு என்று இதில் இரண்டு வகைகள் உள்ளன.
பொதுவாக, 460 வாட்ஸ் மெஷின் மோட்டார் கொண்ட டாப்லோடிங்தான் வசதியாக இருக்கும். காரணம், இதில் குறிப்பிட்ட அளவு பிரஷர் இருக்க வேண்டும், குறிப்பிட்ட வாட்ஸ் கரன்ட் சப்ளை இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் இல்லை. 5 ஆம்ப்ஸ் மின்சாரம் கிடைத்தால் போதும். மேலும் இதில் இன்பில்ட் ஹீட்டர் இருக்காது என்பதால், அதிகமாக பவர் கன்ஸ்யூம் செய்யாது.
ஆனால், ஃப்ரன்ட் லோடிங்கில் 2,000 வாட்ஸ் வரை ஹீட்டர், மெஷினின் மோட்டார் 460 வாட்ஸ் வரை இருந்தாலும், மேற்சொன்ன பிரஷர், கரன்ட் சப்ளை நிபந்தனைகள் உண்டு. டாப் லோடிங் மெஷினைவிட இது சற்று விரைவாகத் துவைத்துவிடும் என்பது ப்ளஸ்.
ஃபுல்லி ஆட்டோமேட்டிக்... பல வெர்ஷன்கள்!

ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மாடலில் பல வெர்ஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன.
சமீபத்தில் வந்த மாடலில் 100% டிரையர் கான்சப்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். முந்தைய மாடல் டிரையரில் துணிகள் 70% காய்ந்திருக்கும். பிறகு, நாம் கொடியில் உலர்த்த வேண்டும். இந்த, 100% டிரையரில் முழுவதும் காய்ந்துவிடும். இதில் வாஷிங் கொள்ளளவு 6 கிலோ என்றால், டிரையர் கொள்ளளவு 3 கிலோ வரை இருக்கும்.
அடுத்தது, டைரக்ட் டிரைவ் மாடல். 

பொதுவாக வாஷிங் மெஷினில் பெல்ட்டுடன் இருக்கக்கூடிய ரெகுலர் மோட்டார்தான் இருக்கும். இதில் பெல்ட் லூஸாவது, அதனால் சத்தம் வருவது, அதிர்வது, பெல்ட் அறுந்துவிடுவது போன்ற கம்ப்ளெயின்ட்கள் இருக்கும். ஆனால், டைரக்ட் டிரைவ் மாடலில் பெல்ட் டைப் மோட்டாராக அல்லாமல் டைரக்ட் மோட்டாராக இருப்பதால், மோட்டாரின் ஆயுட்காலம் அதிகரிக்கும். அதேசமயம், இந்த மாடலில் அதிக மின்சாரம் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக்டிவ் வாஷ்என்ற ஆப்ஷன், அடுத்த புது வரவு. வழக்கமாக சட்டையின் காலர், பிள்ளைகளின் யூனிஃபார்ம் டிராயர், பேன்ட்டின் பின்புறம் போன்றவற்றை மெஷின் சலவை முழுமையாக சுத்தம் செய்யாது என்பதால், அந்தத் துணிகளைத் தனியாகத்தான் துவைக்க வேண்டும். ஆனால் ஆக்டிவ் வாஷ்மாடலில் மெஷினிலேயே ஒரு பிளேட் அட்டாச்மென்ட் இருக்கிறது. அதில் வைத்துத் துவைத்துக்கொள்ளலாம். சைடில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால், பிளேட்டின் மீது தண்ணீர் விழும்.
ஜெட் ஸ்ப்ரேமாடல், தண்ணீர்ப் பற்றாக்குறைக்கான தீர்வாக இருக்கும். ஒரு ஃபுல்லி ஆட்டோமேட்டிக் ஃப்ரன்ட் லோடிங் மெஷினில், 153 லிட்டர் தண்ணீர் வரை செலவாகும். அதுவே ஜெட் ஸ்பிரேமாடல் ஸ்பிரே செய்துகொண்டே துவைப்பதால் இதில் பாதியளவு, அதாவது 70 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகும்.
மொத்தத்தில், சலவை வேலையை சுலபமாக்கும் வாஷிங் மெஷினில் உள்ள மாடல்கள் இவைதான். வீட்டுச் சூழலைப் பொறுத்துத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்!’’ என்று சொன்னார் கார்த்திகேயன்.
--------------------------------------------ந.ஆஷிகா
மெஷினில் துணிகளைப் போடும்போது, துணிகளைவிட இரண்டு இன்ச் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
பைப்பில் தண்ணீர் தடைப்படாமல் வரும் என்ற சூழலில் மட்டுமே ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மாடல் மெஷின் வாங்கவும்.
துணிகளின் தன்மைக்கேற்ப துவைக்கும் வசதி தற்போது அனைத்து மெஷின்களிலும் உள்ளது. அந்த ஆப்ஷனைப் பயன்படுத்தினால் துணிகள் சேதமடையாமல் இருக்கும்.
பொதுவாக எல்லா மெஷின்களிலும் லின்ட்ஃபில்டர் (lintfilter) வசதி இருக்கும். இது ஷர்ட், பேன்ட், சேலையில் இருந்து வெளியேறும் நூல்களை எல்லாம் சேகரித்து, வடிகட்டி வைக்கும். ஒவ்வொரு முறை துவைத்ததும் இந்த ஃபில்டரையும் சுத்தம் செய்யவும்.
மெஷினுக்கு வெளியே இன்லெட் வால் ஃபில்டர்என்ற வடிகட்டி இருக்கும். இது தூசு, அழுக்குகளை எல்லாம் வடிகட்டி, தண்ணீரை மெஷினுக்குள் அனுப்பும். குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை இந்த ஃபில்டரை சுத்தம் செய்யவும்.
சுவிட்ச் போர்டில் இருந்து நேரடியாகத்தான் வாஷிங் மெஷினுக்குக் கனெக்‌ஷன் கொடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எக்ஸ்டன்ஷன் பாக்ஸ் பயன்படுத்தக் கூடாது.
வாஷிங்மெஷினை அதிகம் வெயில் படக்கூடிய இடங்களில் வைக்கக் கூடாது.
எப்போதும் எர்த் கனெக்‌ஷனை செக் செய்துகொள்வதுடன், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வாஷிங் மெஷினை சர்வீஸ் செய்வது நல்லது.
நன்றி : அவள்விகடன்-15.12.2015


Monday, April 4, 2016

சிசேரியன்


சிசேரியன் - என்ன செய்ய வேண்டும்?

பிரசவம், ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு; ஒரு புதிய உயிரைப் பூமிக்கு அழைத்துவரும் 10 மாதத் தவத்தின் பரபரப்பு. எல்லா பெண்களுக்கும் `சுகப் பிரசவம்சாத்தியமாவது இல்லை. பல்வேறு காரணங்களால் சில பிரசவங்களில் சிசேரியன் அவசியமாகிறது. உலகம் முழுதும் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சிசேரியன் அறுவைசிகிச்சை முறை இருக்கிறது. ரோமானியப் பேரரசர் சீசர் அப்படியான அறுவைசிகிச்சையில் பிறந்தவர்தான் என்கிறது வரலாறு.
நெருக்கிய உறவினருக்கு சமீபத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. நார்மல் டெலிவரி ஆகிவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், எப்படி சிசேரியன் என்று கேட்டேன், “டாக்டர் குறிப்பிட்ட நாளில் நான் மருத்துவமனையில் சேர்ந்தேன். அங்கே, எனக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வந்து அலறினார். அந்த பயத்தில், எனக்கு சிசேரியன் செய்திடுங்க பிளீஸ் என்று நான் அலற ஆரம்பித்துவிட்டேன். கடைசியில், எனக்கும் சிசேரியன்என்றார்.
இன்று பல பெண்கள், `சிசேரியனே வலி இல்லாத பிரசவத்துக்குச் சிறந்த வழிஎன, சுகப் பிரசவ வாய்ப்பு இருந்தும் தாங்களாக முன்வந்து சிசேரியன் செய்துகொள்கின்றனர். சிலர், ஜோதிடத்தை நம்பி சிசேரியன் செய்கின்றனர். பொதுவாக, சுகப் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு தாய் அல்லது சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலேயே சிசேரியன் பரிந்துரைக்கப்படும்.
சிசேரியன் ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?
முன்பே தீர்மானிக்கப்பட்ட சிசேரியன், சுகப் பிரசவம் சாத்தியப்படாத நேரத்தில் செய்யப்படும் அவசர சிசேரியன் என இரண்டு வகைப்படும்.
கருவுற்று 38-வது வாரத்தில் பனிக்குடம் உடைந்து, பெண்ணின் பிறப்புறுப்பு வழியாகக் குழந்தையை வெளியே எடுப்பது சுகப் பிரசவம். இதற்கு, பெல்விஸ், பேசேஜ், பவர், பாசஞ்சர் எனும் நான்கு ‘P’ முக்கியம்.
பெல்விஸ்என்பது இடுப்புக் குருத்தெலும்புப் பகுதி. `பாசேஜ்என்பது கர்ப்பப்பையில் இருந்து செர்விக்ஸ், வெஜைனா வழியாகக் குழந்தை பயணிக்கும் பாதை. `பவர்என்பது பிரசவத்தின்போது கர்ப்பப்பையில் இயற்கையாக உருவாகும் அழுத்தம். குழந்தையை `பாசஞ்சர்’ (பயணி) என்கிறோம்.
உயரம் குறைந்த பெண்களின் இடுப்பு எலும்பின் சுற்றளவு சிறிதாக இருக்கும். இது, செபலோபெல்விக் டிஸ்புரோபோர்ஷன் (Cephalopelvic disproportion (CPD) எனப்படும்.
உடலுறவின்போது விந்து கர்ப்பப்பைக்குள் செல்ல அனுமதிக்கும் பாதை, செர்விக்ஸ். விரிந்து சுருங்கும் தன்மை உடைய இதன் சராசரி குறுக்கு அளவு இரண்டு முதல் மூன்று செ.மீ. கரு உருவான உடன் இது இறுக மூடிக்கொள்ளும். பிறகு, பிரசவத்தின்போது குழந்தை இதன் மூலமாகவே வெளியே வரும். முதல் சுகப்பிரசவத்துக்குப் பிறகு இதன் சுருங்கி விரியும் தன்மை சற்றுக் குறைய வாய்ப்பு உள்ளது.
நான்கு கிலோவுக்கு அதிகமான எடை உள்ள குழந்தையால், வெளியேற முடிவது இல்லை. குழந்தையின் மிருதுவான மண்டைஓடு வெளியே வரும் முயற்சியில் ஒன்றன் மேல் ஒன்று நகர்ந்து அழுத்தப்பட்டு தலையின் அளவு குறையும். இதனால் 37 வாரங்கள் முடிவதற்குள் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது . இதைத் தவிர்க்க, சிசேரியன் செய்யப்படுகிறது.
பனிக்குடம் உடைந்து, குழந்தை வெளியே வர முற்சிக்கும்போது, தாயின் சிறுநீர்ப்பையை குழந்தையின் தலை அழுத்த நேரிடும். திரும்பத் திரும்ப அழுத்தும்போது, சிறுநீர்ப்பை அழுகிவிட வாய்ப்பு உள்ளது. இது, `பிஸ்டுலாஎனப்படுகிறது. இதைத் தவிர்க்க சிசேரியன் பயன்படும்.
கர்ப்பப்பையில் உள்ள நீரில் மிதக்கும் சிசுவானது கை, கால்களைக் குறுக்கிக்கொண்டு மடங்கி இருக்கும். இந்த நிலையில் இல்லாமல் குழந்தையின் எலும்பு, உடல் தசை வளர்ச்சி அதிகமாக இருந்தால் குழந்தை செர்விக்ஸ் வழியாக வெளியேறுவது கடினம்.
பிரீச் பொசிஷன் (Breech position)
பிரசவ வலி வந்ததும் குழந்தை, தானாகத் தலைகீழாகத் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பாமல் போனால், `பிரீச் பொசிஷன்எனப்படும். இந்த நிலையில், முதலில் குழந்தையின் தலை வெளிவருவதற்குப் பதிலாக, கால் மற்றும் புட்டம் வெளியே வரும். இந்த பொசிஷனில் பல குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. ஆனால், தலை கடைசியாக வெளிவருவதால், மூளைக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே, இந்த நிலை இருந்தால், சிசேரியன் பரிந்துரைக்கப்படும்.
ட்ரான்ஸ்வெர்ஸ் லெய்டு (Transverse laid)
37 வாரங்கள் முடிந்தும் குழந்தை மேலிருந்து தலைகீழாகத் திரும்புகையில், இடையே அகப்பட்டு திரும்ப முடியாமல் மாட்டிக் கொள்ளும். இந்த நிலையிலும் சிசேரியன் செய்யப்படும்.
பிளசன்டா ப்ரேவியா (Placenta praevia)
கரு உருவானதும் பிளசன்ட்டா எனப்படும் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் மேல் அல்லது கீழ் சுவரில் உருவாகும். இது வட்டு வடிவில் கருஞ்சிவப்பாக இருக்கும். இது சராசரியாக 23 செ.மீ நீளமும், மூன்று செ.மீ உயரமும் இருக்கும். இது, தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பு ஏற்படுத்தும். தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை குழந்தைக்குக் கொடுத்தல், கழிவுகளை வெளியேற்றுதல் ஆகிய முக்கியப் பணிகளைச் செய்யும். ஒன்பது மாதங்களாகக் கரு முழு வளர்ச்சி பெற உறுதுணையாக இருக்கும். இது, கர்ப்பப்பையின் மேல் சுவரில் உருவாகி இருந்தால் பிரச்னை இல்லை. கீழ் சுவரில் (லோயர் யூட்ரின் செக்மென்ட்) உருவானால், அதுவே குழந்தை வெளியேறத் தடையாக இருக்கும். பிரசவத்தின் போது பிளசன்டா இவ்வாறு பாதையை அடைத்துக்கொண்டால், தாய்க்கு அதிகமான ரத்தப்போக்கு உண்டாகும். ஆனால், வலி இருக்காது. இந்த நிலையே பிளசன்டா ப்ரேவியா எனப்படும். இந்த நிலையில் சிசேரியன்தான் குழந்தையைக் காப்பாற்ற ஒரே வழி. இந்தக் கோளாறு நிறைய முறை கருக்கலைப்பு செய்பவர்கள், ஏற்கெனவே சிசேரியன் ஆனவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.
ஜெனிடல் ஹெர்பீஸ் (Genital Herpies)
பிறப்புறுப்புப் பாதையில் வரும் தொற்றுதான், ஜெனிடல் ஹெர்பீஸ். குறிப்பாக, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் நோய்கள் தாக்கப்பட்ட தாய்க்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். சுகப்பிரசவத்தின்போது குழந்தைக்கும் இந்தத் தொற்று பரவும். எனவே, இவர்களுக்கும் சிசேரியன் அவசியம்.
ஃபீட்டல் டிஸ்ட்ரெஸ் (Fetal distress)
இது தொப்புள்கொடி, குழந்தையின் கழுத்தில் மாலையாகச் சுற்றிக்கொண்ட நிலை. சில குழந்தைகளின் தொப்புள்கொடி மிக நீளமாக இருக்கும். கர்ப்பப்பையில் சிசு மிதக்கும்போது, கழுத்தில் சுற்றிக்கொள்ளும். ஒரு சுற்று சுற்றி இருந்தால், சுகப் பிரசவம் செய்ய முடியும். ஐந்தாறு சுற்று சுற்றி இருந்தால், குழந்தையின் சுவாசம் தடைப்படும். இதயத் துடிப்பு சிக்கலாகும்.
மல்ட்டிபிள் பர்த் (Multiple birth)
இரட்டைக்குழந்தைகளில், முதலில் வெளியே வர வேண்டிய குழந்தையின் தலை வெளியே வராமல் புட்டம் வந்தால், கண்டிப்பாக இரண்டு குழந்தைகளையும் சிசேரியன் மூலமாகவே வெளியே எடுக்க வேண்டும். பொதுவாகவே, இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் தாய்க்கு பிளசன்ட்டா ப்ரேவியா இருக்க வாய்ப்புகள் அதிகம். ஓட்டிப் பிறந்த இரட்டைக்குழந்தைகளை வெளியே எடுக்க சிசேரியன்தான் ஒரே வழி.
சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் சாத்தியமா?
பலருக்கும் உள்ள பொதுவான சந்தேகம், முதல் சிசேரியன் ஆன பிறகு, அடுத்து சுகப் பிரசவம் சாத்தியமா என்பதுதான். சிலருக்குச் செங்குத்தாகத் தோலைக் கிழித்து சிசேரியன் செய்தால், அடுத்து சுகப் பிரசவம் நடக்க வாய்ப்பு இல்லை என முடிவுக்கு வந்துவிடுகின்றனர். சிசேரியனின்போது தோல் எவ்வாறு கிழிக்கப்படுகிறது என்பது முக்கியம் அல்ல. உள்ளே இருக்கும் கர்ப்பப்பை எவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்பதுதான் முக்கியம். முதல் பிரசவத்தில் கர்ப்பப்பை குறுக்கே வெட்டி தையல் போடப்பட்டிருந்தால், அடுத்த சுகப் பிரசவம் செய்வது சுலபம். செங்குத்தாக வெட்டப்பட்டுத் தையல் போட்டிருந்தால், அடுத்த பிரசவத்தில், தையல் பிரிய வாய்ப்பு உள்ளது. சிசேரியனில் கர்ப்பப்பையை எவ்வாறு கிழிப்பது என்பது, குழந்தையின் தலை இருக்கும் திசை மற்றும் நிலையை ஸ்கேனில் பரிசோதித்த பிறகுதான் சொல்ல முடியும். எனவே, சிசேரியன் என்றாலே தவறான விஷயம் என்று எண்ண வேண்டாம். யாருக்கு சிசேரியன் தேவை என்று மருத்துவர் முடிவு செய்வார். மருத்துவர் வழங்கிய ஆலோசனையைப் பின்பற்றி, டயட், உடற்பயிற்சி பின்பற்றினால், சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதையும் மீறி, குழந்தையின் பொசிஷன் மாறும்போது, சிசேரியன் செய்யத் தயங்க வேண்டாம். இதன் மூலம், தாய் - சேய் இருவரது உயிரையும் பாதுகாக்க முடியும்.
                                                                                                                                                   -
வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்
கர்ப்பிணிகள் கவனத்துக்கு!
ஒவ்வொரு கர்ப்பிணியும் கட்டாயம் ஃபோலிக் அமில மாத்திரையை, கர்ப்பமான நாளிலிருந்து 12 வாரங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இது குழந்தைக்கு ஏற்படும் பிறவித் தண்டுவடக் குறைபாடுகளைத் தவிர்க்கும். இந்த மாத்திரை எல்லா ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.
சிசேரியனுக்கு பிறகு எவ்வளவு நாள் கழித்து உறவு வைத்துக்கொள்ளலாம்?
சிசேரியனுக்குப் பிறகு குறைந்தது 6 வாரங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எல்லா தம்பதியரும் காண்டம் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஆனால், இதைச் செய்யாததால், சிசேரியன் ஆன நான்கே மாதங்களுக்குள் மீண்டும் கர்ப்பமாகிவிடுகின்றனர். பொதுவாக, கர்ப்பிணிகள் தீர்மானிக்கப்பட்ட சிசேரியனுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. பிளசன்டா ப்ரெவியா போன்ற அதீத ரத்தப்போக்கு கோளாறு உள்ளவர்கள், இரண்டு மாதங்களுக்கு முன்பே நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
கர்ப்பிணிகளுக்கு அதிகப் புரதம், வைட்டமின், நார்ச்சத்து தேவை. பிரெட் உள்ளிட்ட மைதா பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இது மலச்சிக்கல் உண்டாவதைத் தவிர்க்கும்.
நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். பழத்தைச் சாறாக்கும்போது அதில் உள்ள நார்ச்சத்து இல்லாமல்போகிறது. எனவே, பழங்களை அப்படியே சாப்பிட வேண்டும்.
சுகப் பிரசவத்துக்கு 8 மாதம் வரை வீட்டில் இருந்தபடியே சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.
தினமும் காலை, மாலை நடைப்பயிற்சி செய்வது நல்லது.
கர்ப்ப காலத்தில் கடினமான வேலைகள், அதிக எடை தூக்காமல் இருப்பது நல்லது.
சிசேரியன் ஆன பிறகு, குறைந்தது இரண்டு மாதங்கள் ஓய்வு எடுப்பது நல்லது.
கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, வலிப்பு போன்ற கோளாறுகள் இருந்தால், அவசியம் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
பொதுவாக, கர்ப்பிணிகளுக்குப் பிரசவத்தின்போது வயிற்றைச் சுத்தம் செய்ய எனீமா கொடுத்தால், மலக்குடல் கழிவுகள் மட்டுமே வெளியேற்றப்படும். வயிற்றில் உள்ள ஜீரணமாகாத உணவு வெளியேற்றப்படாது. பிரசவ நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் கட்டாயத்தின் பேரில் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். இது தவறு. மருத்துவர்களின் அறிவுரையின் பேரிலேயே உணவு உட்கொள்ள வேண்டும்.



டிஜிட்டல் லாக்கரில் பத்திரங்களை பாதுகாக்க


டிஜிட்டல் லாக்கரில் பத்திரங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

சமீபத்திய சென்னைப் பெருமழையில் வீடு, கார் சேதமானதுடன், பலரது விலை மதிப்பற்ற ஆவணங்களும் தண்ணீரில் நனைந்து நாசமாகின. பல இடங்களில் உடனடி ஆவணங்கள் வழங்கும் முகாம் நடத்தி, பலரது ஆவணங்களை தரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், மழை, வெள்ளம், தீ என எந்தவிதமான இன்னல்கள் வந்தாலும் அதிலிருந்து உங்கள் ஆவணங்கள் எந்த வகையிலும் தீங்கு விளையாமல் பத்திரமாக வைத்திருப்பதற்கான வழி இப்போது பிறந்துள்ளது, அதுவும் இலவசமாக நயா, பைசா செலவில்லாமல்.
டிஜி லாக்கர் (Digi Locker) எனப்படும் இணையப் பெட்டகம்தான், நம்மிடம் இருக்கும் ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கும் புதுமையான வழி. இது ஆன்லைனில் இயங்குவதாகும் (Online Document Storage Facility). இதன் மூலம் நீங்கள் எந்தவொரு பிரச்னையும் இன்றி ஆவணங்களைப் பாதுகாத்து, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தேவைப்படும் நபருக்கோ, துறைக்கோ அனுப்ப முடியும்.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ஆவணங்களையும் தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும். ‘பேப்பர் இல்லா செயல்பாடு’ (Paperless Governance) என்கிற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்திய அரசால் டிஜிட்டல் (Digital India) திட்டத்தின் ஒரு அங்கமாக உருவாக்கி தரப்பட்டிருப்பதுதான் இந்த டிஜி லாக்கர்.
தேவைகள்!
இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த உங்களிடம் சில அடிப்படை விஷயங்கள் இருக்க வேண்டும். இதனைப் பயன்படுத்த ஆதார் எண்ணும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணும் உங்களிடம் அவசியம் இருக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் அவர்களது இருப்பிட உறுதிக்கென பிற ஆவணங்களை கொடுத்து அதன் சரிபார்ப்பிற்கு பின்னர் இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த முடியும்.
பதிவு செய்வது அவசியம்!
இந்த டிஜி லாக்கரில் பதிவு செய்த பின்புதான் இந்தப் பெட்டகத்தை நீங்கள் பயன்படுத்த இயலும். இதற்கென இருக்கும் இணையதளத்திற்குச் சென்று (www.digilocker.gov.in), உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்தபின்பு, நீங்கள் குறிப்பிடும் மொபைல் எண்ணுக்கு ஒரே முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பப்படும். உடனடியாக அந்த பாஸ்வேர்டு பதிவு செய்தபின்பு நமது கணக்கு ஒன்று, இதர விவரங்களை தெரிவித்தவுடன் திறக்கப்படும். பின்னர் உங்களது யூசர் நேம் (User Name) பாஸ் வேர்டைக் குறிப்பிட்டு உங்களுக்கான இந்தப் பெட்டகத்தை பயன்படுத்தலாம். ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, மின் வருடல் மூலமான ஆவணங்களாக இணையப் பெட்டகத்தில் இணைக்கப்படும்.
ஆவணங்களின் சேமிப்பு!
நமது ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, இந்த இணையப் பெட்டகத்தில் ஃபைல்களாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அவைகள் தனித்தனியே சேமித்து வைக்கப்படும் விதமாக, உங்களால் பதிவேற்றம் செய்விக்கப்படும் ஆவணங்கள், அப்போதே தனித்தனி ஃபைல்களில் உங்கள் ஆதார் எண்ணின் தனித்துவத்தின்படி சேமிக்கப்படும்.
எல்லாம் முடிந்து இந்தப் பெட்டகத்தில் உள்ள உங்கள் சுய விவரப்பக்கத்துக்கு சென்றால், அதில் உங்கள் புகைப்படம், பெயர், முகவரி போன்ற ஆதார் அட்டை விண்ணப்பத்தின் போது நீங்கள் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து விவரங்களும் அந்த இணையதளத்திலிருந்து பெறப்பட்டு இங்கு பகிரப்பட்டிருக்கும்.
அளவு!
தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம். கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டினைப் பொறுத்து இதன் அளவும் உயர்த்தப்படவுள்ளது.
பாதுகாப்பு!
இது அனைத்து வகையிலும் பாதுகாப்பும் கொண்ட ஒரு சிஸ்டம். இதன் அமைப்பு மற்றும் மையமானது ஐஎஸ்ஓ 27001 (ISO 27001) சான்றிதழ் பெறப்பட்டதால், உங்கள் தனித்துவம் முழுவதுமாக பாதுகாக்கப்படும். அனுமதி இல்லாத பிற நபர்களின் பயன்பாடு ‘தானியங்கி நேரப் பாதுகாப்பு’ (Auto Time Log-Out) மூலம் தடை செய்யப்படும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பயனாளர் மட்டுமே இந்தப் பெட்டகத்திலிருந்து பயன்படுத்த முடியும். ஆதார் எண் இணைக்கப்படாதபட்சத்தில் பயனாளர்களின் ஆவணப் பிரிவில் ஆவணங்கள் இணைக்கப்பட்டதே காட்டப்படாது.
ஆவணங்களின் பயன்பாடு!
இணைய கையெழுத்து (e-Sign) எனும் தொழில்நுட்பம் இந்த இணையப் பெட்டகத்தில் முழுமையான அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கம்பெனி பதிவகங்கள் மற்றும் வருமான வரித்துறைகளில்தான் இந்த இணைய கையெழுத்து பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த டிஜி லாக்கரில் இணைய கையெழுத்து தொழில்நுட்பம் இந்தப் பெட்டகத்தில் உள்ள ஃபைல்களையும், ஆவணங்களையும், கையெழுத்து செய்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு அனுப்பவேண்டிய ஆவணங்களைக்கூட இந்த முறையில் அனுப்ப முடியும். மேலும், ஆவணங்களையும், சான்றிதழ்களையும் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இந்தப் பெட்டகத்தில் இருந்து பதிவேற்றி நேரடியாக அனுப்ப இயலும். இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படும்.
கூகுள் போன்ற இதர தளங்களிலிருந்து செய்யப்படும் அவ்வாறான பதிவேற்றங்கள், இதுவரை அதன் மூலங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அரசால் அங்கீகாரம் செய்யப்படு வதில்லை. ஆனால், இந்த தளத்தில் இருந்து செய்யப் படும் ஆவணப் பதிவேற்றத்துக்கு அரசு அங்கீகாரம் தந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் சுமார் 14 லட்சம் ஆவணங்களை இதில் பதிவேற்றி இருக்கிறார்கள்.
எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானா லும் உங்கள் ஆவணங் களை இணையம் மூலம் பகிர்ந்துகொள்ளலாம் (Any Time, Any Where, Share your Documents Online) என்ற கோட்பாட்டில் அரசால் துவங்கப் பட்டுள்ள, வரவேற்று பயன்படுத்தவேண்டிய அரசின் பெட்டகம் இது.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது ஆவணங்களை தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம்.
கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை.
நன்றி :