disalbe Right click

Tuesday, April 26, 2016

குழந்தை நலம்


குழந்தை நலம் - என்ன செய்ய வேண்டும்?
‘உங்கள் குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா?’ என்றால், ‘நல்ல ஸ்கூல்ல சேர்த்துவிட்டிருக்கேன். ரெண்டு, மூணு எக்ஸ்ட்ரா கரிக்குலர் கிளாஸ் போறாங்க. ரிச் ஃபுட். கம்ப்யூட்டர், யூடியூப்னு டெக்னாலஜியிலும் பிரில்லியன்ட். சூப்பரா இருக்காங்க!’ என்பது, பெற்றோர் பலரின் பொதுவான பதிலாக இருக்கும். ஏனெனில், இதையெல்லாம்தான் ‘நலம்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள்; நம்புகிறார்கள். ஆனால், குழந்தைகளின் நலம் என்பது, இந்த வெளிப்புறக் காரணிகளையும் கடந்து, உள்ளார்ந்து நோக்க வேண்டிய ஒன்று. உடல்நலம், மனநலம், பாதுகாப்பு, கல்வி, ஊட்டச்சத்து என முக்கிய ஐந்து அம்சங்களில், வெளிப்பூச்சைக் கடந்து உங்கள் குழந்தையின் உண்மையான நலனை ஸ்கேன் செய்து அறிந்துகொள்ள, இங்கே ஆலோசனைகள் தருகிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள்!
‘பியூட்டி ஸ்லீப்’ கிடைக்கிறதா உங்கள் குழந்தைக்கு?!
‘‘தடுப்பூசியில் இருந்து தூக்கம் வரை, ஒவ்வொன்றையும் பிள்ளைகளுக்குத் தெளிவுற அமைத்துக் கொடுப்பது பெற்றோரின் பொறுப்பு!’’
- மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் இளங்கோவன், இப்படி  அடிக்கோடிட்டு ஆரம்பித்தார்...
 தாய்ப்பாலைப் போலவே, தடுப்பூசியும் குழந்தையின் பிறப்புரிமை. சிலர், ‘என் குழந்தை ஆரோக்கியமா, நோய்த் தொற்றுக்கான சூழலில் இருந்து பாதுகாப்பா இருக்கு. எதுக்கு தடுப்பூசி?’ என்ற அர்த்தமற்ற மனநிலையிலும், இன்னும் சிலர், தடுப்பூசி ஏதோ குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை பாதிக்கும் காரணி என்பது போன்ற தவறான நம்பிக்கையிலும் இருப்பார்கள். கொடிய நோய்களில் இருந்து குழந்தைகளின் உயிர் காக்கும் கவசமே, தடுப்பூசி. கடந்த 2015 பிப்ரவரியுடன், போலியோ இந்தியாவில் முழுமையாக ஒழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிறது என்பது நற்செய்தி. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, தடுப்பூசி முதல் புள்ளி.
 குழந்தைக்குக் குறைந்தது 9 மணி நேரத் தூக்கம், அதன் உடலின் அவசியத் தேவை. தூக்கம், நிலை 1, நிலை 2, நிலை 3 எனக் கடந்தே ஆழ்ந்த உறக்கமாகும். இடையில் குழந்தை விழித்தால், மீண்டும் அது நிலை 1-ல் இருந்து தன் தூக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்படி எந்தத் தொந்தரவும் அற்ற, 9 - 12 மணி நேரத் தூக்கமான ‘பியூட்டி ஸ்லீப்’பை குழந்தைக்குக் கிடைக்கச் செய்யுங்கள். இரவு 9  மணிக்கெல்லாம் தூக்கம், அதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன் குடும்பத்துடன் உணவு என்று பழக்கப்படுத்துங்கள். அதிக ரத்த ஓட்டம் செரிமானத்துக்காக வயிற்றுக்குச் சென்றால் தூக்கம் தாமதமாகும் என்பதால்... எளிதாக ஜீரணமாகக்கூடிய, கொழுப்பில்லாத இரவு உணவு அவசியம்.
 காலை உணவைக் குழந்தைகள் ‘ஸ்கிப்’ செய்வது, அடிப்படைத் தவறு. இரவு 9 மணிக்கு சாப்பிட்ட குழந்தை, காலை உணவைச் சாப்பிடாமல் பள்ளி சென்றால், பகல் 12 மணி உணவு இடைவேளை வரை, கிட்டத்தட்ட 15 மணி நேரம் அதன் வயிறு காலியாக இருக்கும். எனில், வகுப்புகளை கவனிக்கும் ஆற்றல், ஆர்வம் அதுக்கு எப்படிக் கிடைக்கும்? சோர்வு, கோபம், வயிற்றுவலி என்று அது படும் பாட்டுக்கு, பெற்றோர்தான் பொறுப்பு.
 ‘அல்ட்ரா சாஃப்ட்’ டூத் பிரஷ், குழந்தைகளுக்கானது. ஒன்றரை வயதில் இருந்து மூன்று வயது வரை அரிசி அளவு பற்பசையும், ஐந்து வயது வரை பட்டாணி அளவு பற்பசையும் குழந்தைகளுக்குப் போதும்.
 ‘வெயிலுக்குக் காட்டாமல்’ குழந்தை களை வளர்ப்பதால் பெருகி வருகிறது விட்டமின்-டி குறைபாடு. தினமும் ஐந்து நிமிடங்கள் சூரிய ஒளி வாங்க வேண்டியது உடலுக்கு  அவசியம்.
 குழந்தைக்குச் சீரான இடைவெளியில் பூச்சிமருந்து கொடுக்க வேண்டும். தூக்கத்தில் குழந்தைகள் பற்களைக் கடித் தால், வயிற்றில் பூச்சி இருக்கிறது என்பது பழைய மருத்துவக்கூறு. ‘பிரக்சிஸம்’ என்ற அந்தச் செயலுக்கு, குழந்தை மனதில் உள்ள விடைகிடைக்காத கேள்விகளும், குழப்பங் களும் காரணம் என்கிறது நவீன மருத்துவம். எனவே, ஒவ்வோர் இரவும் குழந்தை தெளிவுபெற்ற மனதுடன் உறங்கச் செல்ல வேண்டும். அதற்கு பெற்றோருடனான ‘இன்டராக்‌ஷன்’ மிக அவசியம்!’’
- வலியுறுத்திச் சொன்னார், டாக்டர் இளங்கோவன்
‘‘பேரன்டிங்கா, சைல்டிங்கா...’’
‘‘குழந்தையை, பெற்றோர் தாங்கள் விரும்பும்படி வளர்க்க அவர்கள் செய்யும் அல்லது தவிர்க்கும் செயல்களை, பேரன்டிங் என்கிறோம். 10, 15 வருடங்கள் முன்வரை இதுதான் எல்லா வீடுகளிலும் நடந்தது. ஆனால், இன்று பிள்ளைகள் தங்கள் விருப்பத்துக்கு பெற்றோரை நடக்க வைக் கிறார்கள். இதை நான்‘சைல்டிங்’ என்று கேலியாகச் சொல்வதுண்டு. இதுதான் இன்று எல்லா குடும்பங்களிலும் நடக்கிறது!’’
- சுடும் உண்மைகள் அடங்கியது, மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல ஆலோசகர், ‘டாப்கிட்ஸ்’ குழந்தைகள் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மையத்தின் இயக்குநர், டாக்டர் தீப் பகிர்ந்த விஷயங்கள்...
 குழந்தையின் கையில் கொடுத்த ஒரு பொருளை மீண்டும் வாங்குவது, எளிதான காரியமல்ல. அது பொம்மையைவிட, ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப், டேப் (tab) என்று கேட்ஜட்களுக்கு இப்போது மிகப்பொருந்தும். ‘இன்டர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’, ‘இன்டர்நெட் கேமிங் டிஸார்டர்’ என்று பிரச்னைகள் முளைத்துக் கொண்டே இருக்கும் இந்த யுகத்தில், ப்ளஸ் டூ முடிக்கும் வரை ஸ்மார்ட்ஃபோன், ` டேப்’, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டூ-வீலர் அனைத்துக்கும் குழந்தைகளுக்கு ‘ஸ்ட்ரிக்ட் நோ’ சொல்லுங்கள்.
 ‘டியூஷன்னு போறதால, சேஃப்டிக்கு நான் தான் வாங்கிக்கொடுத்தேன்’ - பிள்ளையின் அடத்துக்குப் பணிந்து ஸ்மார்ட்ஃபோன் வாங்கித் தந்துவிட்டு பெற்றோர் சொல்லும் சாக்கு இது. தகவல் பரிமாற்றத்துக்கு பேஸிக் மாடல் போன் போதும்.
 கணினியில், மொபைலில், சமையலில், அரட்டையில் பிஸியாக இருக்கும் உங்களை, குழந்தை தொந்தரவு செய்யாமல் இருக்க, ‘இந்தா நீயும் ஒரு `டேப்’ பிடி!’, ‘கார்ட்டூன் பாரு, இதோ ரிமோட்!’ என்று டெக்னாலஜியை ‘மாற்று பெற்றோர்’ (சப்ஸ்டிட்யூட் பேரன்ட்) என ஆக்குபவர்கள் இங்கு அதிகம். அவர்களே தங்கள் குழந்தையின் கேட்ஜட் போதைக்கு, சைபர் விபரீதங்களுக்குக் காரணமான குற்றவாளிகள். தன் அம்மாவிடம் வந்து ‘ரேப்னா என்னம்மா?’ என்று கேட்கும் மூன்றாம் வகுப்புச் சிறுவன், அவர் திகைத்ததும், ‘சரி, ஸ்பெல்லிங் சொல்லு, நான் யூடியூப்ல போட்டு பார்த்துக்குறேன்!’ என்று தன் ‘மாற்று பெற்றோரை’த் தேடி ஓடுகிறான். நன்மையோ, தீமையோ... ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள, ‘ஸ்பெல்லிங்’ மட்டும் போதும் இன்றைய குழந்தைகளுக்கு!
 குழந்தைக்கு நேரத்தைச் செலவழிக்க முடியாததை ஈடுகட்ட, பணத்தைச் செலவழிக்கிறார்கள் பலர். ‘இல்லை, வார இறுதியில் குழந்தைகளைத் தவறாமல் அவுட்டிங் அழைத்துச் செல்கிறோமே!’ என்கிறீர்களா? எங்கே..? மால், தியேட்டர், ஷாப்பிங், ரெஸ்டாரன்ட் என்று பொருள் சார்ந்த பொழுதுபோக்கையே அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறீர்கள். இதில் பெற்றோரின் அன்பு, அரவணைப்பு, பகிர்வது, மனம்விட்டுப் பேசுவது எல்லாம் அவர்களுக்கு எங்கு கிடைக்கிறது? குடும்பத்துடன் நூலகம் சென்று, வாசிப்பின் சுவாரஸ்யத்தை குழந்தைக்கு அறிமுகப்படுத்துவதைப் பற்றி யோசித்ததுண்டா? 
 வளரும் பிள்ளைகளுக்கு உணர்ச்சிகள், எண்ணங்கள், எனர்ஜி லெவல் எல்லாமே நிரம்ப இருக்கும். அதற்கெல்லாம் ஒரு பாஸிட்டிவ் வடிகால் கொடுக்கவில்லை எனில், அது நெகட்டிவ் வழியில் வெடித்துச் சிதறும். எனவே, ஆடிக் களைக்கும் விளையாட்டுப் பொழுதுகளை தினமும் கொடுங்கள்.
 ‘என் குழந்தையை சிறப்பா வளர்க்கணும்’ என்று குழந்தையைக் காரணம் காட்டி, உங்கள் சுதந்திரத்துக்கு கூட்டுக் குடும்பத்தில் இருந்து வெளியேறினீர்கள். எனில், குழந்தை பற்றிய 100% பொறுப்பையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். நடப்பது என்ன? பெற்றோரான பின்னும் டீன் ஏஜ் லைஃப் ஸ்டைலில் நீங்கள் நாட்டமிழக்காமல் இருக்க...  கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற கடிவாளம் அற்றுக் கிடக்கிறார்கள் ‘நியூக்ளியர் ஃபேமிலி’ குழந்தைகள்.
 ‘எது கேட்டாலும் கிடைக்கும்’ என்ற, ஏமாற்றங்களே அறியாத வாழ்க்கையை குழந்தைகளுக்குத் தரத் துடிக்கிறீர்கள். அது அவர்களுக்கு நீங்கள் செய்யும் கெடுதல்களில் மற்றொன்று. தோல்விகளைக் கடந்தே வெற்றியை அடைய முடியும். எனவே, ஏமாற்றங்கள், தோல்விகள் கடந்தே வளரட்டும் குழந்தைகள்!
இனி உங்கள் வீடுகளில் ‘சைல்டிங்’ நிறுத்தி, ‘பேரன்டிங்’ ஆரம்பியுங்கள்! இது அவசியமாகச் செயல்படுத்த வேண்டிய மாற்றம்’’
- அழுத்தமாகச் சொன்னர் டாக்டர் தீப்.
‘‘கத்தக் கற்றுக்கொடுங்கள்!’’
‘உங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது என்பது உங்களது நம்பிக்கை மட்டுமே, உண்மையல்ல!’’
- நிதர்சனம் சொன்னார் மானாமதுரை, அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாரதிப்ரியா.

‘‘ஸ்கூல் பஸ் டிரைவரில் இருந்து, பக்கத்துக் கடைக்காரர் வரை உங்கள் குழந்தையின் உலகத்தில் உள்ள அனைவரையும் பற்றி நீங்கள் அறிந்துகொள்வது முக்கியம். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் `குட் டச், பேட் டச்’ சொல்லிக்கொடுங்கள். ஒருவேளை யாரேனும் ‘பேட் டச்’ செய்தால், உரக்கக் கத்தி அருகில் உள்ளவர்களை அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துங்கள். குறிப்பிட்ட நபரிடம் குழந்தை பேச, பழக மறுத்தால், தனிமையில் பக்குவமாக அதற்கான காரணத்தை கேட்டறியுங்கள்.
புதியவர்கள் யாரிடமும் பேசவோ, அவர்கள் தரும் பொருட்களை வாங்கவோ கூடவே கூடாதென்று வலியுறுத்திச் சொல்லுங்கள். வீட்டு விலாசம், பெற்றோர் தொலைபேசி எண்களுடன், இப்போது பரவலாகிவரும் ‘குடும்ப பாஸ்வேர்ட்’ ஒன்றையும் உருவாக்கி அவர்களிடம் சொல்லி வையுங்கள். ‘அப்பா கூட்டிட்டு வரச் சொன்னாங்க’ என்று யாராவது அழைத்தால், ‘பாஸ்வேர்டு சொல்லுங்க’ என்று முதலில் கேட்கச் சொல்லுங்கள். அம்மாவிடம் குழந்தை அனைத்தையும் பகிரும் சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்’’ என்று எச்சரித்தார் பாரதிப்ரியா.
‘குழந்தையின் திறனுக்கேற்ற சிலபஸ்!’’
‘‘கல்வி விஷயத்தில் பெற்றோர் கொண் டிருப்பது பெரும்பாலும் பேராசையே!’’
- படிப்பு என்ற பெயரில் குழந்தைகளுக்கு பெற்றோர் தரும் சிரமங்கள் பற்றிச் சொன்னார் டாக்டர் விவேகானந்தர். ஓய்வுபெற்ற பேராசிரி யரான இவர் மதுரை, ‘எலீட்’ போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய கௌரவ இயக்குநர்.
‘‘மாநில அரசின் ‘சமச்சீர்’ கல்வித்திட்டம், எளிமையானது. மத்திய அரசின் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ கல்வித்திட்டங்கள் சிரமமானவை. பெற்றோர் ‘பிலோ ஆவரேஜ்’ குழந்தையை, தங்களின் ஆசைக்காக, சொஸைட்டல் ஸ்டேட்டஸுக்காக சென்ட்ரல் போர்டு சிலபஸில் சேர்க்கும்போது, அவர்களின் திறனுக்கு மீறிய அந்தச் சுமையால் மதிப்பெண் களுடன் தன்னம்பிக்கையையும் இழக்கும் மாணவர்கள் பலர். எனவே, குழந்தையின் ஆற்றலுக்கேற்ற சிலபஸை தேர்ந்தெடுங்கள்.
ஒன்பதாம் வகுப்புப் பாடத்தை நடத்தாமல் பத்தாம் வகுப்புப் பாடத்தை நடத்துவது, பதினொன்றாம் வகுப்புப் பாடத்தை ‘ஹை ஜம்ப்’ செய்து பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்துக்குச் செல்வது, கல்லூரிகளில் ‘பிளேஸ்மென்ட் செல்’ என்ற பெயரில், பாடம் நடத்த வேண்டிய வகுப்புகளை பலிகொடுத்து, ஒரு நிறுவனத்தின் நேர்காணலில் தேர்வாகும் டெக்னிக்குகளை சொல்லிக் கொடுப்பது... இப்படிக் குறுக்குவழிகள் பெருகிப்போய்க் கிடக்கிறது இன்றைய கல்விச் சாலை. ‘உணவு வேண்டாம்... விட்டமின் டேப்லட் சாப்பிட்டுக் கொள்ளலாம்’ எனும் இந்த கொள்கைக்கு உங்கள் பிள்ளையையும் பலி கொடுக்காமல், பாடங்களைப் புரிந்து, முழுமையாகப் படிக்கும் பண்பை அவர்களிடம் வளர்த்தெடுங்கள். அப்போதுதான், பணியில் ஏணி கிட்டும்.
படிப்பே வரவில்லையா? பரவாயில்லை. விளையாட்டு, அனிமேஷன், கிராஃபிக்ஸ், மீடியா, கேட்டரிங், ஃபேஷன் என்று அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் அவர்களை மடை மாற்றுங்கள். 
எட்டாம் வகுப்பு ஃபெயிலானவர்தான், சச்சின் டெண்டுல்கர்!’’
- குருவி தலையில் பனங்காய் வைக்கும் கல்வி நம்பிக்கைகளை களைந்து பேசினார், விவேகானந்தர்.
இப்போது சொல்லுங்கள், உங்கள் குழந்தை உண்மையிலேயே நலமா?!
ஜெ.எம்.ஜனனி  

நன்றி : அவள்விகடன் - 08.09.2015

Sunday, April 24, 2016

ஆண்ட்டிரய்டு போன் பாதுகாக்க


ஆண்ட்டிரய்டு போன் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில்  பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை  பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா.

ஸ்கிரீன் லாக்!
எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைபயன்படுத்துவது கட்டாயம்.
இதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர் கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி.
என்க்ரிப்ட் வசதி!
மேலே சொன்ன செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் பகுதிக்குக் கீழ் ‘என்க்ரிப்ட்’ என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டுவிடும். ஒவ்வொருமுறை போனை ஆன் செய்யும்போதும் நாம் ‘டிகிரிப்ட்’ செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நம் போன் தொலைந்துபோனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது.
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்!
செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் அடுத்ததாக இருக்கும் வசதிதான் இது. இதன்மூலம் நமது போன் காணாமல் போகும்போது android.com/device manager என்ற முகவரிக்குச் சென்று, ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி அல்லது டிவைஸ் லாக் ஆகும்படி அல்லது தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி (Erase) செய்ய முடியும். இதற்கு, போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். அதேபோல, போன் சுவிட்ச்ஆஃப் ஆகி இருக்கவும் கூடாது. இதுவும் ஒருவகையில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிதான்.
அலுவலக/பொது இணையத்தைப் பயன்படுத்துதல்!
பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான  ESET சொல்லும் கணக்கின் படி, அலுவலகங்களில் வை-ஃபை மூலம் இணையத்தைப் பயன்படுத்து வதால், 30-40% வைரஸ் பிரச்னையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வை-ஃபை பயன்படுத்துவதற்குமுன், அது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை நெட்வொர்க் அட்மினிடம் கேட்டு, அதற்குப் பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.
இதேபோல, பொது இடங்களில் கிடைக்கும் இலவச வை-ஃபை இணைப்பின் பாதுகாப்பும் கேள்விக்குரியதே. பொது இடங்களில் கட்டாயம் இணையம் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளவர்கள், 2ஜி/3ஜி டேட்டா ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
முக்கியமான தகவல்கள் பத்திரம்!
உங்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும் எந்தத் தகவலையும் உங்கள் போனில் பதிவு செய்து வைக்காதீர்கள். இதனால் போன் திருடுபோவது தவிர, போன் பழுதாகி அதை சர்வீஸ் சென்டரில் தரும்போதும் பாதுகாப்பாக இருக்க முடியும்.
நம்பகமில்லா அப்ளிகேஷன்கள் வேண்டாம்!
குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோடு செய்யும்முன் அதன் தேவை, பாதுகாப்பு போன்றவற்றைத் தெரிந்துகொண்டு டவுன்லோடு செய்வது நல்லது.
குறிப்பாக, கூகுள் ப்ளே இல்லாமல் வேறு எங்கிருந்தும் இன்ஸ்டால் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் போனுக்குப் பாதுகாப்பானதில்லை.
அப்ளிகேஷன் லாக்!
முக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளிகேஷன்களை எப்போதும் லாக் செய்து வைக்கலாம்.
இதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. இது, ஒவ்வொருமுறை குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு பாஸ்வேர்டு/பின் (PIN) நம்பர் கேட்கும்.
ரூட் (Root) செய்ய வேண்டாம்!
போனை ரூட் செய்வது என்பது நம் விண்டோஸ் கணினியில் அட்மின் கணக்கை பயன்படுத்துவதுபோல. இதன்மூலம் போனுக்குத் தேவையான லேட்டஸ்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் முதல், இயங்காத அப்ளிகேஷனை இயங்கவைப்பது வரை என பல்வேறு வசதிகள் கிடைக்கும்.
ஆனால் ரூட் அக்சஸ் உள்ள அப்ளிகேஷன், போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அறியும் வசதியைப் பெறும். இதனால் பாதுகாப்பற்ற ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.
பிரவுஸர்கள் எச்சரிக்கை!
போனில் பிரவுஸர்களைப் பயன்படுத்தும்போது பாஸ்வேர்டு அல்லது இதர தகவல்களைக் கொடுத்தால், பயன்படுத்தி முடித்தபின் ஹிஸ்டரியை அழித்துவிடுவது (Delete) முக்கியமானது.
அதேபோல, பணப் பரிவர்த்தனை தொடர்பான வேலைகளுக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனை டவுன்லோடு செய்வதுதான் பாதுகாப்பானது.
அப்டேட் அவசியம்!
போனின் சாஃப்ட்வேரை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்துவைத் திருப்பது அவசியமான ஒன்று. அதேபோல, அப்ளிகேஷன்களுக்கும் அப்டேட் வசதி வரும்போதெல்லாம் அதைச் செய்துகொள்ள வேண்டும்.
ஆனால், அந்தசமயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்ளிகேஷன்கள் நம்மிடம் கேட்கும் அனுமதிகளை நன்கு படித்துப் பார்த்த பிறகே, அனுமதி வழங்க வேண்டும்.
போன் தொலைந்துவிட்டால்..?
இறுதியாக, இத்தனை பாதுகாப்பாக இருந்தும் உங்கள் போன் தொலைந்துபோய்விட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஜிமெயில், ஃபேஸ்புக் போன்றவற்றின் பாஸ்வேர்டை மாற்றுவது.
அடுத்தபடியாக, ‘ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்’ மூலம் போனில் இருக்கும் தகவல்களை அழிக்க முயற்சி செய்வதுதான்.
ஆண்ட்ராய்டு போனின் பாதுகாப்புக்கான வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த வழிகளை நீங்களும் பின்பற்றலாமே!
நன்றி : நாணயம் விகடன் - 23.11.2014


Monday, April 18, 2016

அசல் பத்திரம் தொலைந்த சொத்தை விற்க

அசல் பத்திரம் தொலைந்த சொத்தை விற்க என்ன செய்ய வேண்டும்?
சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்களின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.
காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்துவிடுவார்கள்.
அதனைப் பெற்றுக்கொண்டவுடன், அதைக் காண்பித்து தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர் மூலமாக இரண்டு பிரபலமான நாளிதழ்களில் (ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு தமிழ் நாளிதழ்) பத்திரங்கள் காணவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டெடுப்பவர் வழக்கறிஞரிடம் தரவேண்டும் என்றும் விளம்பரம் செய்ய வேண்டும்.
தொலைந்த சொத்து பத்திரங்களை யாராவது கண்டெடுத்து, வழக்கறிஞரிடம் தந்தால், நாம் அந்த ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு கிடைக்கவில்லை எனில், பத்திரப் பதிவு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட பத்திரங்களின் நகலை (Certified Copies of the Documents)    காணாமல் போன அசல் (Original) ஆவணங்களுக்கு பதிலாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆவணங்களை தொலைத்தவர், அவருடைய மனைவி அல்லது மகன் எவருக்காவது அந்த சொத்தினை தான செட்டில்மென்ட் (Settlement Deed) மூலம் எழுதிக் கொடுக்கலாம். இதற்கான செலவு என்பது சொத்தின் மதிப்பு 25,00,000 ரூபாய்க்கு மேல் இருப்பின் ரூ.33,000 வரை செலவாகும். அந்த செட்டில்மென்ட் பத்திரத்தில், அந்த சொத்தினை வாங்கிய விவரம், சொத்தின் ஆவணங்கள் விவரம், அவை காணாமல் போன விவரம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விவரம், வழக்கறிஞர் மூலம் பத்திரிகைகளில் விளம்பரம் அளித்த விவரம் ஆகியவற்றை முறையாக எழுதிப் பதிவு செய்யலாம்.
இந்த செட்டில்மென்ட் பத்திரத்தை கொண்டு, வீடாக இருந்தால் பட்டா, வீட்டு வரி ரசீது, மின் வாரிய ரசீது ஆகியவற்றை சொத்து செட்டில்மென்ட் செய்தவர் மேல்மாற்றம் செய்துவிடலாம்.
இதனால் அந்த செட்டில்மென்ட் ஆவணத்தில் உங்கள் புகைப்படத்துடன், தற்போதைய விலாசம், அதற்குறிய சான்றுகள் ஆகியவை மூலம் நீங்கள்தான் அந்த சொத்தின் உரிமையாளர் எனவும், நீங்கள் அதை மனைவிக்கோ, மகனுக்கோ செட்டில்மென்ட் செய்துவிட்டீர்கள் எனவும் வில்லங்க சான்றிதழ் மூலம் தெரியவரும். பின்பு உங்கள் மனைவியோ அல்லது மகனோ இந்த சொத்தினை மேற்கூறிய ஆவணங்களைக் காட்டி சுலபமாக விற்கலாம்.
*************************************************************நன்றி : நாணயம் விகடன், 15.11.2015 

Sunday, April 17, 2016

வெயில்காலம் வசப்பட


வெயில்காலம் வசப்பட என்ன செய்ய வேண்டும்?
கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டுக்கான கோடை வெப்ப நிலை இரண்டு அல்லது மூன்று டிகிரி அதிகமாக இருக்கும் என்கின்றன வானிலை கணிப்புகள். தகிக்கும் வெயில், வறண்டுபோகும் உடல், கொதிக்கும் தேகம் ஆகிய மூன்றே வார்த்தைகளில் தற்போதைய சூழ்நிலையைச் சொல்லிவிடலாம். இந்த வேனிற் காலத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள விழிப்பு முதல் உறக்கம்வரை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?:
குளியல்

வேனிற் காலத்தில் சூரிய உதயத்துக்கு முன் கண் விழிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இந்தக் காலத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் குளிப்பது சிறந்தது. உடலில் வியர்வை அதிகம் கசிவதால் உண்டாகும் அசுத்தத்தைப் போக்கவும் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் நீராடுவது பயன்தரும். வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் செய்வதால், வெயில் கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.
கற்றாழை கூழ் அல்லது எலுமிச்சையைத் தலையில் தேய்த்துக் குளிப்பதால் உடலுக்குத் தேவையான குளிர்ச்சியை அதிகரித்துக்கொள்ளலாம். நீரோட்டம் உள்ள ஆறுகளில் குளித்து, வேனிற் காலத்தைக் கடத்திய நம்முடைய முன்னோர்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு. எனவே நீரோட்டம் மிக்க ஆறுகள், அருவிகளில் குளிப்பது உடலுக்குக் குளிர்ச்சியை மட்டுமல்லாமல் உற்சாகத்தையும் தரும்.
உணவு அறிவியல்

மருத்துவ அறிவியலை முன்னி றுத்தியே நம் முன்னோர்கள் ஒவ்வொரு பருவ காலத்துக்கும் தகுந்த உணவு முறைகளைக் கடைப்பிடித்துவந்தனர். வெயில் காலத்தில் காரம், புளிப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையும் செரிக்காத உணவையும் ஒதுக்குவது அவசியம். உடலுக்கு வெப்பம் தரும் அசைவ உணவு, எண்ணெய்ப் பதார்த்தங்கள், புளிக் குழம்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நீர்க்காய்களான பீர்க்கம், சுரை, பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம். உணவு முறை தவறாக இருந்தால் செரியாமை, வயிற்றுப்போக்கு, ஆசனவாய் எரிச்சல், மூலம் போன்ற தொந்தரவுகள் வரக்கூடும்.
பேயன் வாழைப்பழம், சீத்தா, கொய்யா, திராட்சை, பலா, வெள்ளரி, முலாம் (கிர்ணி) போன்ற பழங்களை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடலுக்குத் தட்பத்தைக் கொடுக்கும். வெயில் காரணமாக வறண்டுவிட்ட உடல்தாதுகளுக்கு வலுவூட்ட, உணவில் நெய்யைச் சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்வது அவசியம். கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத், இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்றவை வேனிற் காலத்தைக் குளிர் விக்கும் பானங்கள்.
மண்பானை மகத்துவம்

வேனிற் காலத்தில் நீரைக் குளிரவைத்துக் குடிப்பதற்காக வாய் குறுகிய மண்பாண்டங்களைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். வாய் சிறுத்த பானைகளை, ‘தொகுவாய் கன்னல்’ (வாய் குறுகிய நீர்ப்பாண்டம்) என்று பத்துப்பாட்டில் ஒன்றான `நெடுநல்வாடை’ நூல் குறிப்பிடுகிறது. நீரைக் குளிர்விப்பதற்குக் குளிர்பதனப் பெட்டியைவிட, மண்பானைகளே ஆரோக்கியமானவை. ஃபிரிஜ்ட்களில் குளிரூட்டப்பட்ட நீரைக் குடிப்பதால், தொண்டை அலர்ஜி, தலை பாரம், காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அத்துடன் கிருமித் தொற்றுகளின் தாக்கம் பெருகவும் ஃபிரிட்ஜ் நீர் வழிவகுக்கிறது. பானையில் ஊற்றிக் குடிக்கும் நீரோடு சந்தனச் சக்கைகள், நன்னாரி வேர், வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து, வடிகட்டி குடிப்பது சுட்டெரிக்கும் வெயிலுக்குச் சிறந்த பானம் என்கிறது சித்த மருத்துவம். குளிர்பதனப் பெட்டிகளைத் தவிர்த்து நீரையும் பானங்களையும் பானைகளில் வைத்தே குளிர்ச்சியாகப் பயன்படுத்தலாம்.
ஆடையில் அக்கறை

ஜீன்ஸ் பேன்ட் மற்றும் நம் தட்பவெப்ப நிலைக்குப் பொருந்தாத இறுக்கமான ஆடைகளை அணிவது, உடலுக்குத் தீங்கானதே. குறிப்பாக வெயில் காலத்தில் இவ்விதமான இறுக்கமான உடைகளால், பலவிதமான தோல் நோய்கள் உண்டாகின்றன. உடலை உறுத்தாத மெல்லிய உடைகளே வெயில் காலத்துக்கு ஏற்றவை. அதிலும் மகாத்மா முன்மொழிந்த கதர் ஆடைகளை பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. வெயில் காலத்தில் ஆபரணங்கள் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதனால் தேவைப்படும்போது மட்டும் அணிந்துகொள்ளலாம்.
வாசனைப் பொருட்கள்

வியர்வை நாற்றத்தைத் தடுக்கப் பல வகையான செயற்கை வாசனைத் திரவியங்கள், சந்தைகளில் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவை தரமானவையா, நம் உடலுக்கு ஏற்றவையா என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை. அதிகரிக்கும் வியர்வையோடு சேரும் செயற்கை திரவியம் வேதியியல் மாற்றம் அடைந்து, ஒரு வித்தியாசமான நாற்றத்தை உண்டாக்குவதோடு, அரிப்பு, ஒவ்வாமை போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.
வியர்வை நாற்றத்தைத் தடுக்கச் செயற்கைப் பொருட்களுக்குப் பதிலாகச் சந்தனச் சாந்து, ஜவ்வாது, பன்னீர் போன்றவற்றை அளவாகப் பயன்படுத்தலாம். ஆடைகளுக்கு நறுமணம் ஊட்டத் துவைக்கும்போது, சில வகை திரவங்களைச் சேர்ப்பதுபோல, முற்காலத்தில் அகிற் புகையூட்டி ஆடைகளுக்கு நறுமணம் சேர்த்ததாக `மதுரைக் காஞ்சி’ நூல் குறிப்பிடுகிறது. கூந்தலுக்கும் உடலுக்கும் மணமூட்ட அகிற்கட்டை புகையைச் சங்க கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இப்போதும் அதை முயற்சித்துப் பார்க்கலாம்.
ஆவாரை தலைப்பாகை

போக்குவரத்து வசதி இல்லாத காலங்களில் நெடுந்தூர நடைப்பயணம் மேற்கொள்வோரும் சரி, வெயிலில் உழைக்கும் விவசாயிகளும் சரி, வெப்பத்தைத் தடுப்பதற்குப் பயன்படுத்திய முக்கிய இயற்கை உபகரணம் ஆவாரை இலையும் பூவும். தலையில் ஆவாரை இலை, பூக்களை வைத்துக் கட்டிக்கொண்டு அல்லது முண்டாசுக்கு அடியில் வைத்துக்கொண்டு வெப்பத்தைத் தணித்துக்கொண்டனர். இன்றைய காலத்தில் அப்படித் தலையில் கட்டிக்கொண்டு வெளியே செல்ல முடியாது.
எனினும் வீட்டில் இருக்கும்போது, இதை முயற்சிக்கலாம். வெயிலில் தொப்பி அணிந்து செல்லும் பழக்கமுடையவர்கள் தொப்பிக்கு அடியில் ஆவாரை இலை, பூ மற்றும் வேப்ப இலைகளை வைத்துக்கொள்ளலாம். ஆவாரை தலைப்பாகையானது, உடலில் உண்டாகும் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. அதிக வெப்பத்தால் உண்டாகும் தலைவலியையும் தடுக்கும். வெப்பநிலை அதிகரித்து இருக்கும் பதினோரு மணி முதல் மூன்று மணிவரையிலான பகல் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அத்தியாவசியம் எனில் குடையுடன் செல்லலாம்.
மரங்களின் தாலாட்டு

மதிய நேரங்களில் வாய்ப்பிருந்தால் மரங்களின் நிழலில் சிறிது நேரம் இளைப்பாறுவது உடல் மற்றும் மனதுக்கு இதம் தரும். ஆனால், இரவில் அடர்ந்த மரங்களுக்கு அடியில் உறங்குவது கூடாது. ஏனெனில், பகலில் பிராண வாயுவை (O2) அள்ளிக் கொடுக்கும் மரங்கள், இரவில் கரியமில வாயுவை அதிக அளவில் உமிழ்கின்றன. இதை `இராமரமுஞ்சாரா’ என்கிறது `ஆசாரக்கோவை’ நூல். அனல் பறக்கும் வேனில் காலத்தில், அதிக நேரம் பகலில் உறங்குவதையும் தவிர்க்க வேண்டும். வேனிற் காலத்தில் மெத்தையையும் தவிர்க்கலாம். வீட்டில் ஜன்னலைத் திறந்து வைத்து, நல்ல காற்றோட்டத்தை உண்டாக்குவதும் அவசியம்.
ஏ.சி.நல்லதா?
ஜன்னல்களில் தென்னை அல்லது பனையோலை `தட்டி’ அமைத்து, அதில் வெட்டிவேர், வேம்பு இலை, புங்கன் இலைகளைச் செருகி வைத்து நீர் தெளித்து, இயற்கை `ஏர் கண்டிஷனர்’களைப் பயன்படுத்தி வந்தவர்கள் நாம். ஆனால், இன்றைக்குப் பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள்வரை `ஏ.சி’ இல்லாத வீடுகளே இல்லை என்பதுபோல் ஆகிவிட்டது. அதிக நேரம் ஏ.சி. பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை மணி அடிக்கின்றன சில நோய்களின் அறிகுறிகள்.
இதன் காரணமாகத் தோல் வறட்சி, நுரையீரல் சார்ந்த நோய்கள், உடல் சோர்வு, கப நோய்கள், நாளவிபாதம் (வெரிகோஸ் வெய்ன்) போன்றவை உண்டாகப் பல மடங்கு வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து நீண்ட காலத்துக்கு ஏ.சி. பயன்படுத்துவதால், நம் உடலை மாசுபடுத்துவது மட்டுமன்றி, சுற்றுச்சூழலையும் பெருமளவுக்குச் சீரழிக்கிறோம். ஏ.சி. பயன்படுத்தப்படும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக்கொண்டால், உடலுக்கும் பூமிக்கும் நலம் நிச்சயம்.

கட்டுரையாளர்,
டாக்டர். வி. விக்ரம்குமார், அரசு சித்த மருத்துவர் 

தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

நன்றி :தி இந்து தமிழ் நாளிதழ் - 16.04.2016

Thursday, April 14, 2016

கட்சி ஆரம்பிக்க


கட்சி ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் உலகளவிலான கட்சிகளும், தமிழகத்தில் பல தேசிய கட்சிகளும், மாநிலகட்சிகளும் பல இருக்கின்றன. இருப்பினும், புதிது புதிதாகக் கட்சிகள் முளைத்துக் கொண்டேஇருக்கின்றன.
அரசியலில் விருப்பம் இருப்பவர்களுக்கு, கொஞ்சம் பிரபலமும் ஆன கூட்டத்தினர்களுக்கு மனதின் உள்ளூர ஒரு ஆசை அரித்துக் கொண்டே இருக்கும். எதோ ஒரு கட்சிக்குதொண்டனாக இருப்பதை விட, நாமே ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன?
ஆரம்பிக்கலாம்தான்.
ஆனால் அதன் சட்ட வழி முறை?
இதோ…சொல்லத்தானே இந்தக் கட்டுரையே…
தேர்தல் ஆணையத்தில் பதிவு:
ஒத்த கருத்துடையவர்கள், அவர்களின் சங்கங்கள் / கழகங்கள் மற்றும் அமைப்புகள் ஒருகட்சியாக உருவெடுக்க வேண்டும் எனில் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தல் வேண்டும்.
கட்சியாக விரும்பும் ஒரு குழு, அமைப்பு, கழகம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்- 1988 தொடங்கிய போது நிகழ் நிலையில் இருப்பின், தொடங்கியதில் இருந்து 60 நாட்களுக்குள்ளும், அந்தக் குழு, இந்த மக்கள் பிரதிதித்துவச் சட்டம் இதன் தொடக்கத்திற்கு பின்ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அமைக்கப்பட்ட தேதியின் பின்னிட்டு 30 நாட்களுக்குள் விண்ணப்பம்செய்யப்படுதல் வேண்டும்.
அந்த விண்ணப்பத்தில், விண்ணப்பித்த கழகத்தின் தலைமைச் செயல் அலுவலர், செயலாளர், கையொப்பமிட வேண்டும், அந்தக் கையெழுத்தானது தேர்தல் ஆணையத்தின் செயலருக்கு முன்நிகழ வேண்டும், அல்லது செயலருக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்படுதல் வேண்டும்.
விண்ணப்பத்தில் கட்சியின் பெயர், அது அமைந்துள்ள மாநிலம், அதற்கான கடிதங்கள் அனுப்பவேண்டிய முகவரி, அதன் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர் எண்ணிக்கையளவு, அவர்களில் பிரிவு இருந்தால் அந்தத் தகவல், வட்டார அலகுகள், மக்களவை அல்லது வேறுஏதேனும் மாநில சட்டமன்றத்தில் சார்பு செய்த உறுப்பினர் உண்டா?
ஆம் எனில் அது குறித்ததகவல், அந்த அமைப்பு/கட்சிக்குள் வேறுபட்ட கருத்து தோன்றினால் அதைத் தீர்க்கும் Dispute resolution பற்றிய தகவல்கள் ஏதும், அதன் விதிகளில் பின்னாளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் எனில் அதைக் கொண்டு வரும் முறை பற்றிய தகவல்கள், வேறு கட்சியுடன் இணைக்க விரும்பும் காலத்தில் அதைச் செய்ய வேண்டியமுறை குறித்த விதிகள், இணைப்பது, பிரிவது, கட்சி/அமைப்பை கலைப்பது ஆகியவை ஏறுபடுங்கால் அதைச் செய்ய வேண்டிய முறை குறித்தவிதிகள் அனைத்தும்…
இவை போக, அந்த கட்சியின் விதிகள், விதிகளின் விவரக்குறிப்புகள், இவை எல்லாம் போக, அந்தக் கழகம்/கட்சி/அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கைகொண்டிருக்கிறது என்றும், சமூகப் பொதுவுடமை, மதச் சார்பின்மை மற்றும் ஜனநாயகம் இவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றது எனவும், இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையைப் பாதுகாக்க கருத்தும் கொண்டிருக்க வேண்டும்.
(பிரிவு5)
தேர்தல் ஆணையமானது, தான் பொருத்தமெனக் கருதும், அத்தகைய பிற விவரங்களைக் கழகம்/கட்சி/அமைப்பிடம் இருந்து கேட்டுப் பெறலாம்.
அத்தோடு, தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும் தொகையினை டிமாண்ட் ட்ராஃப்டாக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இந்த தகவல்கள் எல்லாவற்றையும் பெற்ற பிறகு, தேர்தல் ஆணையம் விணப்பித்த அந்த குழு/அமைப்பு/கழகத்தை கட்சியாக ஏற்பதா வேண்டாமா என்பதைக் குறித்து முடிவு செய்து, பின்னர் அந்த முடிவை, அந்த அமைப்பிற்குத் தகவல் தரும்.
அந்த அமைப்பு, பிரிவு 5-ல் குறிப்பிட்ட காப்புரைகளுக்கு அனுசரித்திருக்க வேண்டும் என்பதேமுக்கியமாக கவனிக்கப்படும்.
இது குறித்து தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது.
நன்கொடைக்கான விதி
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது குறித்தும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்கிறது.
அரசியல் கட்சிகளுக்கு நிறுவனச் சட்டம் 1956 -ன் படி, கட்சி நபர் ஒருவரால், அல்லது அரசுநிறுவனம் அல்லாத நிறுவனத்தால், மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைத் தொகையினைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதில் கவனிக்க வேண்டிய விசயங்கள் இரண்டு.• 
அரசு நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற முடியாது.
• அந்த நன்கொடையானது மனமுவந்து அளிக்கப் பட்டிருக்க வேண்டும். வலுக்கட்டாயவசூல் கூடாது.
அந்த நன்கொடையானது, The Company's Act - 1956ன் காப்புரைகளுக்கு உட்பட்டுஇருக்க வேண்டும்.
நிறுவனம் என்றால் என்ன என The Company's Act - 1956ல் வரையறை செய்யப்பட்டுள்ளபடி, என்றும், அரசு நிறுவனம் என்றால் நிறுவனச் சட்டம் - 1956ன் பிரிவு 617ல் குறிப்பிட்டபடியும், நன்கொடை என்றால், அதே சட்டத்தின் பிரிவு 293 - A யின் கீழ் சொல்லப்பட்ட
பொருளிலும், அதே சமயம், அரசியல் கட்சிக்கு ஏதேனும் நபரால் அளிக்கப்பட்ட ஏதேனும் நன்கொடைஅல்லது சந்தா தொகையினையும் உள்ளடக்கும்…என இந்தப் பதங்களுக்கான பொருளைமக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் விளக்குகிறது.
பிரிவு 29B ல் குறிப்பிடப்பட்ட ”நபர்” ஒருவரால் எனும் பதத்தில் உள்ள நபர் எனும் சொல்லானது, வருமான வரிச்சட்டம் பிரிவு 2 (31)ன் கீழ் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பொருளைக்கொண்டிருக்கும். ஆனால், அரசு நிறுவனம் உள்ளாட்சி அமைப்பு மற்றும் அரசினால் நிதியுதவிமுழுமையாக அல்லது பகுதியாக அளிக்கப்படும் ஒவ்வொரு செயற்கையான சான்றாயர் 'நபர்'எனும் பதத்தினுள் அடங்காது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 2 (31) ”நபர்” எனும் பதத்திற்குப் பொருள் விளக்கம் தருகிறது. அதன் படி,
”person” includes-
An individual,
A Hindu undivided family,
A company,
A firm
An association of persons or a body of individuals,
whether incorporated or not,
A local authority, and
Every artificial juridical person, not falling within
any of the preceding sub-clauses;
ஆனால், அரசு நிறுவனம், உள்ளாட்சி அமைப்பு, மற்றும் அரசினால் நிதியுதவி பகுதியாக அல்லதுமுழுதுமாகப் பெறும் செயற்கையான நபர், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 'நபர்' எனும்வரையறையின் கீழ் வர மாட்டார். அதாவது, அரசு நிறுவனங்கள், மற்றும் மேற்கூறியவர்களிடமிருந்து, ஒரு அரசியல் கட்சியின் நபர் நன்கொடை வாங்குதல் கூடாது.
அப்படி அரசியல் கட்சிகளினால் வாங்கப்படும் மற்றும் வாங்கப்பட்ட நன்கொடையினை, அக்கட்சிகள், நிதியாண்டு அறிக்கையினை தயாரிக்க வேண்டும். அதாவது, அக்கட்சியின் பொருளாளர், அல்லது இதன் பொருட்டே அரசியல் கட்சியினால் ஏற்பளிக்கப்ப்ட்ட ஏதேனும் ஓர்நபர், ஒவ்வொரு நிதியாண்டிலும், அறிக்கை தயாரிக்க வேண்டும்.
அவை யாவன:
அந்தந்த நிதியாண்டில், நபர் எவரிடமிருந்தேனும், ரூபாய் 20,000/க்கு மேல் பெறப்பட்டநன்கொடை, அரசு நிறுவனங்கள் அல்லாத, நிறுவனங்களிடமிருந்து ரூபாய் 20,000/க்கு மேல் பெறப்பட்டநன்கொடை, ஆகிய தகவல்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கும் படிவத்தில்அமைந்திருக்க வேண்டும்.
வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 139ன் கீழ் அந்த நிதியாண்டிற்கான வருமான விவர அறிக்கைதாக்கல் செய்வதற்கான குறிப்பிட்ட தேதிக்கு முன், உட்பிரிவு (1) ந் கீழான நிதியாண்டு அறிக்கையினை அந்த அரசியல் கட்சியின் பொருளாளர் அல்லது இதன் பொருட்டு அரசியல்கட்சியினால் ஏற்பளிக்கப்பட்ட நபர் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த அரசியல் கட்சியின் பொருளாளர் அல்லது அரசியல் கட்சியினால் இதன் பொருட்டுஅதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு நபரானவர், உட்பிரிவு (3) ந் கீழ் அறிக்கை சமர்ப்பிக்கத் தவறினால், வருமான வரிச் சட்டத்தில் எப்படி இருப்பினும், அந்த அரசியல் கட்சி அந்தச்சட்டத்தின் கீழ் வரி நிவாரணம் ஏதும் பெற உரிமை உடையது அன்று.
மேற்சொன்னவை, ஒரு அமைப்பை கட்சியாக தேர்தல் ஆணையத்தின் கீழ் எப்படிப் பதிவுசெய்வது என்பதைப் பற்றி மட்டுமே.

நன்றி : தினமலர் நாளிதழ் - 14.02.2016


முதல்முறையாக ஜிம்முக்கு போகிறவர்கள்


முதல்முறையாக ஜிம்முக்கு போகிறவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆர்வக் கோளாறில் ஜிம் சேர்ந்து, ஒரு வாரம் உற்சாகமாக சென்று, அத்தோடு ஜிம்முக்கு டுக்கா விடுபவர்கள்தான் அனேகம் பேர். உண்மையில் முதல் முறை ஜிம் செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ன? அவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? 
சென்னையைச் சேர்ந்த பர்சனல் ஃபிட்னெஸ் ட்ரெயினர் ராஜேஷ் தரும் டிப்ஸ் இதோ...

நோக்கம் முக்கியம் பாஸ்
ஆர்வம் இருப்பதால்தான் ஜிம்மில் சேர்கிறீர்கள். அதனால் அது ஓ.கே. ஆனால் ஆர்வக் கோளாறில் நோக்கம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஜிம்மில் சேரக்கூடாது. நீங்கள் எதற்காக ஜிம் போக வேண்டும்? இந்தக் கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ‘ஃப்ரெண்டு போறான்; நானும் போறேன்’ என்ற பதில் எல்லாம் செல்லாது.
 1. நான் பாடி பில்டிங் செய்ய வேண்டும். 
2. உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 3. முதுகுவலி இருக்கிறது. அதற்கான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்... 
இப்படி நீங்கள் ஜிம் செல்வதற்கு ஒரு குறிப்பான நோக்கம் இருக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து செல்வீர்கள்.

உண்மையை சொல்லுங்க ப்ரோ...
  
டாக்டரிடம் மட்டும் அல்ல... ஜிம் ட்ரெயினரிடமும் உங்கள் உடல்நிலையைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாக சொல்ல வேண்டும். ’அதை எல்லாம் இவர்கிட்ட ஏன் சொல்லனும்?’ என்றோ, ‘இதை எல்லாம் போய் சொல்லனுமா?’ என்றோ நினைக்க வேண்டாம். 
முட்டி வலியோ, முதுகு வலியோ, சர்க்கரையோ, பி.பி-யோ, சைனஸோ, டயாபடிஸோ... எதுவாக இருந்தாலும் எனக்கு இன்னப் பிரச்னை என்பதை சொல்லுங்கள். அப்படி சொன்னால்தான் உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை அவர் முடிவு செய்ய முடியும். 

பழசை விடுங்க... ஃப்ரெஷ்ஷா வாங்க 
இங்கிலீஷ் பேச ஆசைப்படுபவர்கள், தன் வாழ்நாளில் குறைந்தது 5 ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ளாஸ்களுக்குப் போயிருப்பார்கள். அதுபோல தன் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள விரும்பும் பலர், ஒன்றுக்கும் மேற்பட்ட ஜிம்களுக்கு நிச்சயம் செல்வார்கள். ஒவ்வொரு ஜிம்மிலும் ஒவ்வொரு கருவியை இயக்கியிருப்பார்கள். அந்த அனுபவத்தில் ஒரு ஜிம்மில் உள்ளக் கருவிகள் குறித்து ஒரு மேலோட்டமான அறிவு அவர்களுக்கு இருக்கும். இதனால் புதிதாக சேரும் ஒரு ஜிம்மில் பழகிய வீட்டைப் போல எல்லா கருவிகளையும் இஷ்டத்துக்கு இழுத்து விளையாடுவார்கள். இது ஆபத்தானது. 
நீங்கள் ஒரு ஜிம்மிக்குச் செல்கிறீர்கள் என்றால், அதற்கு நீங்கள் முற்றிலும் புதிய நபர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடம்பையும், மனதையும் ஃப்ரெஷ்ஷாக வைத்துக்கொள்ளுங்கள். ஜீரோவில் இருந்து தொடங்குங்கள். ஏனென்றால் ஆண்ட்ராய்ட் போன் அப்டேட் ஆகிக்கொண்டே இருப்பதைப் போல ஜிம்  வொர்க்-அவுட்களும் ஒவ்வொரு நாளும் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன.
ஸ்டெப் பை ஸ்டெப் முக்கியம் 
ஜிம்மில் சேர்ந்து ஒரே மாதத்தில் அடித்துத் தூக்க வேண்டும் என்பது பலரது கனவு. அதனால் day 1-ல் இருந்து வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்வார்கள். மாஸ்டர் ‘10 கிலோ தூக்கு’ என்றால் இவர்கள் 15 கிலோவில் இருந்து ஆரம்பிப்பார்கள். உங்க ஆர்வக் கோளாறை ஓரமா வெச்சுட்டு ஸ்டெப் பை ஸ்டெப்பா போங்க. வருடக் கணக்கில் எந்த வேலையும் கொடுக்காமல் உடம்பை சுகவாசியாக வைத்திருந்துவிட்டு, திடீரென ஹெவியாக வேலைக் கொடுத்தால் அது பாவம், என்னத்துக்கு ஆகும்? 
வார்ம் - அப் அவசியம்
நீங்கள் ஜிம்மிலேயே கதியாகக் கிடக்கும் அப்பாடக்கராக இருக்கலாம். அதற்காக நேரடியாக ஹீரோ கேரக்டரில்தான் நடிப்பேன் என அடம் பிடிக்கக் கூடாது. வொர்க்-அவுட் செய்வதற்கு முன்பு உடல் தசைகளை தயார்ப்படுத்துவது அவசியம். அதற்கு வார்ம்-அப் முக்கியம். அதை எக்காரணம் கொண்டும் ஸ்கிப் செய்யக் கூடாது. ’நாலு மாசத்துக்குப் பிறகும் வார்ம்-அப் செய்யச் சொல்லி இந்த மாஸ்டர் நம்மளை சின்னப் பிள்ளையாவே ட்ரீட் பண்றாரே’ என  நினைக்காதீர்கள். அவர் உங்கள் நன்மைக்காகவே சொல்கிறார். 
அளவா தண்ணீர் குடிங்க... 
வொர்க்-அவுட் செய்யும்போது அதிகமாக வியர்வை வெளியேறும். தாகம் எடுக்கும். அதற்காக தண்ணீர்ப் பாட்டிலைத் திறந்து கடகடவென குடித்துவிடக் கூடாது. கொஞ்சம், கொஞ்சமாக சிப் செய்து குடிக்க வேண்டும். இதற்காகவே இப்போது sipper bottle-கள் வந்துவிட்டன. 
பாட்டில் நீரை அப்படியே வாயில் கவிழ்த்து மொத்தமாகக் குடிக்கும்போது, நீங்கள் ஏற்கெனவே மூச்சிரைத்துக் கொண்டிருப்பதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வெறும் வயிற்றுக்கு நோ..!
ஜிம்முக்கு செல்லும்போது வீட் ப்ரெட், வாழைப்பழம் என மாஸ்டர் பரிந்துரைக்கும் ஏதோ ஒரு உணவை சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள். வெறும் வயிற்றில் வொர்க்-அவுட் செய்தால் வயிற்றைப் புரட்டிக்கொண்டு வரும். மேலும் விரைவில் சோர்வடைந்துவிடுவீர்கள். 

காத்திருத்தல் நலம்

ஜிம் சேர்ந்த ஒரே மாதத்தில் உடல் தசைகள் முறுக்கேற வேண்டும் என எதிர்பார்ப்பது நம் இளைஞர்களின் உளவியல். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமே இல்லை.
ஒரு மாதம் தொடர்ந்து ஜிம் சென்றாலும், கண்ணால் பார்க்க ஒரு மாற்றமும் தெரியாது. ஆனால் உடம்பின் உள்ளே தசைகள் துடிப்புடன்  செயல்பட தொடங்கியிருக்கும். ஆண்டுக் கணக்கில் சோம்பேறி கழுதைகளாக இருந்த உங்கள் உடல் தசைகள் ஆக்டிவேட் ஆகவே ஒரு மாதம் தேவை. அதன்பிறகுதான், ‘என்னப்பா, ஜிம்மிக்கு எல்லாம் போற போல’ என மற்றவர்கள் சொல்லும்படியான தோற்றம் வரும். எனவே பொறுமையாக காத்திருத்தல் முக்கியம். 
வலி பொறுத்தால் வெற்றி நிச்சயம்
திடீரென ஜிம் செல்லும்போது, அது வெறும் வார்ம்-அப் பயிற்சி என்றால் கூட உடம்பு பயங்கரமாக வலிக்கும். முதல் மூன்று நாளைக்கு கொடுமையாக வலிக்கும். மாடிப்படி ஏறினால் கூட கெண்டக்கால் சதை இழுத்துக்கொள்ளும். உடனே அடுத்த ஒரு வாரத்துக்கு ரெஸ்ட் எடுப்பார்கள். மறுபடியும் ஜிம் சென்றால் திரும்பவும் மூன்று நாளைக்கு வலி பின்னி எடுக்கும். அதனால் இந்த வலியை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். நான்கைந்து நாள் சென்றுவிட்டால் வலியும் ஓடோடிவிடும். அதை செய்யாமல் இப்படி ரெஸ்ட் ரெடுத்து, ரெஸ்ட் எடுத்து ஜிம் போனால் அதனால் ஒரு பலனும் இல்லை. 

வலி பொறுப்போம்... வலிமை பெறுவோம்... 
நன்றி : விகடன் செய்திகள் - 13.04.2016

Wednesday, April 13, 2016

ஒத்தி வீடு நல்லதா? வாடகை வீடு நல்லதா?


ஒத்தி வீடு நல்லதா? வாடகை வீடு நல்லதா? என்ன செய்ய வேண்டும்?

ன்றைய தேதிக்கு வேலை காரணமாக சொந்த ஊரை விட்டு பெரிய ஊர்களுக்கு இடம்பெயர்வது சகஜமாகி விட்டது. இப்படி மாறும்போது பலரும் வாடகை வீட்டிலேயே தஞ்சமடை கிறார்கள்.  ஒவ்வொரு மாதமும் வாடகை  தர விருப்பம் இல்லாதவர்கள் லீஸ் எனப்படும் குத்தகைக்கு வீட்டை எடுக்கின்றனர். ஆனால், வாடகை வீடு, குத்தகை வீடு – இந்த இரண்டில் எது பெஸ்ட் என்கிற கேள்வி இன்றைக்கும் பலருக்கு இருக்கிறது.  முதலில் வாடகை வீட்டில் உள்ள சாதகமான அம்சங்களைப் பார்ப்போம்.
வாடகை வீடு – சாதகம்!
1. ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் ஒரு மாத வாடகையை மட்டும் அட்வான்ஸ் தொகையாக கொடுத்துவிட்டு குடியேறி விடலாம். அதோடு வாடகைக்கு வீடு பிடிப்பது எளிமையான விஷயமும்கூட. ஆனால், ஒரு மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸாக வாங்கும் வீட்டுக்காரர் தமிழகம் முழுக்க தேடினாலும் கிடைக்க மாட்டார். சென்னையில் பத்து மாதம், திருநெல்வேலி மற்றும் கும்பகோணத்தில் ஐந்து மாதம், திருப்பூரில் ஆறு மாதம் என ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமாக அட்வான்ஸ் வாங்கப்படுகிறது.

2. மாதாமாதம் வாடகை கொடுக்க வேண்டும் என்பதால் பெரிய தொகை கையில் இருக்க வேண்டும் என்பதில்லை.

3. வீடு பிடிக்கவில்லை எனில், ஒன்றிரண்டு மாதங்களில் அட்வான்ஸை திரும்பப் பெற்று வீட்டை காலி செய்துவிடலாம்.
வாடகை வீடு – பாதகம்!
1. வீட்டு ஓனர் எப்போது வேண்டுமானாலும் காலி செய்யச் சொல்லலாம்.

2. சட்டப்படி ஒரு மாத வாடகையை அட்வான்ஸ் தொகையாக யாரும் வாங்குவதில்லை.

3. மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் என வாடகை தவிர பெரிய தொகையையும் ஒவ்வொரு மாதமும் கட்ட வேண்டியிருக்கும்.
லீஸ் (ஒத்தி) வீடு – சாதகம் !
1. மாதா மாதம் வாடகை தர வேண்டும் என்கிற பிரச்னை இல்லை. லீஸ் தொகையை ஒப்பந்தம் முடிந்ததும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

2. லீஸுக்கு வீடு தருகிறவர்கள் அதன் மூலம் கிடைக்கும் பெரிய தொகையை அவசரத் தேவைக்கோ அல்லது பிசினஸுக்கோ பயன்படுத்து பவர்களாகவே இருப்பார்கள். இந்த அவசரத்தைப் பயன்படுத்தி கொஞ்சம் குறைவான தொகைக்கு லீஸில் வீடு எடுக்க முடியும்.
லீஸ் (ஒத்தி) வீடு –  பாதகம் !
1. வாடகை வீட்டுக்கு வாரக் கணக்கில் தேட வேண்டும் என்றால், லீஸ் வீட்டுக்கு மாதக் கணக்கில் தேட வேண்டி இருக்கும். ஏதோ ஒரு அவசரத் தேவை, வெளிநாட்டில் செட்டிலாக நினைப்பவர்கள் தான் இப்படி வீட்டை லீஸுக்கு விடுகிறார்கள். 

2. லீஸ் தொகை கொடுத்த அளவுக்கே திரும்பக் கிடைக்குமா என்பது சந்தேகமே. வீட்டில் ஆணி அடித்திருக்கிறீர்கள், மீண்டும் பெயின்ட் அடிக்க வேண்டும் என்று சொல்லி பாதிப் பணத்தை திரும்ப எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள்.
3. லீஸ் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று கணக் கிட்டுதான் லீஸ் தொகையை நிர்ணயிக்கிறார்கள் வீட்டின் ஓனர்கள். எனவே, லீஸ் தொகை ஒரு சிறிய வீட்டை விலைக்கு வாங்கும் தொகையாக இருக்கிறது.
உதாரணமாக, இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டின் வாடகை மாதம் ரூ.10,000 என்றால் வீட்டுக்கு லீஸ் தொகையாக ரூ.15 லட்சம் வரை கேட்கிறார்கள். இந்த 15 லட்சம் ரூபாயை வங்கியில் 8% வட்டி கிடைக்கும் விதத்தில் டெபாசிட் செய்தால், ஆண்டுக்கு 1,20,000 ரூபாய் கிடைக்கும். (வங்கி வட்டிக்கு லீஸ் தொகை கணக்கீடு அட்டவணை 1-ல்) 
இதுவரை வாடகை வீடு, லீஸ் வீடு சாதக, பாதகங்களை பார்த்துவிட்டோம். இனி யாருக்கு எது பொருந்தும் என்பதைப் பார்ப்போம்.
வாடகைக்கு வீடு விடுகிற பலரும் இப்போது சட்டப்படி நடந்துகொள்வதில்லை. 11 மாதங்களுக்கு மட்டுமே வாடகை ஒப்பந்தம் போடுகிறார்கள். 12 மாதம் வாடகைக்கு விட்டால், அதை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதை தவிர்க்கவே, இந்த 11 மாதம் ஒப்பந்தம். குறுகிய காலத்தில் வீட்டை வாடகைக்கு விடுவதால், வாடகை வீட்டுக்காரர்கள் எப்போது வீட்டை காலி செய்யச் சொல்வார்களோ என்கிற பதைபதைப்பில் இருப்பார்கள். லீஸுக்கு வீடு எடுத்துவிட்டால், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு வீடு மாறவேண்டிய அவசியம் இருக்காது.

ஆனால், லீஸுக்கு வீடு எடுக்க வேண்டுமெனில் பெரிய தொகை வேண்டும். மாதச் சம்பளம் வாங்குகிற பலரால் இந்த பெரிய தொகையை ஏற்பாடு செய்து தரமுடியாது. ஆனால், ஓரளவுக்கு பணத்தை சேர்த்து வைத்திருந்தால் அல்லது பெரிய தொகை ஒன்று எதிர்பாராத விதமாக கிடைக்கும்பட்சத்தில் அதை லீஸுக்கு தந்து வீடு எடுக்கலாம்.
அதேபோல, லீஸுக்கு விடுகிறவர்கள், கிடைக்கும் தொகையை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்தே அது லாபகரமாக இருக்குமா, இல்லையா என்பது தெரியும். உதாரணமாக, 800 சதுர அடி இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு ஃப்ளாட்டுக்கு மாதம் ரூ10,000 வாடகை என்றால் ஆண்டுக்கு 1,20,000 ரூபாய்  கிடைக்கும். இந்த ஃப்ளாட்டுக்கு ரூ.15 லட்சம் லீஸ் தொகை கொடுத்து, அதை அப்படியே வங்கி டெபாசிட்டில் தொடர்ந்து 5 வருடத்துக்கு (கிடைக்கும் வட்டியைகூட அதிலேயே மறுமுதலீடு செய்ய வேண்டும்) 8 சதவிகித வட்டிக்கு முதலீடு செய்தால், ரூ.22,04,000 கிடைக்கும். ஆக வருடத்துக்கு ரூ.1,20,000-க்கு பதில் இரண்டாவது ஆண்டிலிருந்தே கூடுதலான தொகை கிடைக்கத் தொடங்கிவிடும்.
மேற்கூறியபடி லீஸ் தொகையை வங்கி டெபாசிட்டில் 9 ஆண்டுகள் முதலீடு செய்திருந்தால் 9-வது ஆண்டின் இறுதியில் முதலீடு செய்யப்பட்ட தொகை இரட்டிப்பாகும். (பார்க்க  அட்டவணை 2)
வீட்டை லீஸுக்கு வாங்கும் நமக்கும் மேற்கூறிய உதாரணம் பொருந்தும். மொத்தமாக, 15 லட்சம் ரூபாயை வீட்டு ஓனருக்கு கொடுத்துவிட்டு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு வீட்டு வாடகை உயர்வு பிரச்னையிலிருந்து தப்பித்து விடலாம். உதாரணமாக, 10,000 ரூபாய் வாடகை வசூலிக்கும் வீட்டில் ஆண்டுக்கு 6% வாடகை உயர்த்துகிறார்கள் என்றால் 10 ஆண்டு முடிவில் 17,908 ரூபாயாக இருக்கும்.
எப்படி பார்த்தாலும் நீண்ட காலத்துக்கு (9 – 10  வருடத்திற்கு) லீஸுக்கு வீடு எடுத்து, அந்த தொகையை வீட்டு ஓனர் வங்கியில் கூட்டு வட்டி முறையில் டெபாசிட் செய்தால் நிச்சயம் 9 – 10 ஆண்டு முடிவில் இரண்டு மடங்காகிவிடும். எனவே, வங்கியிலோ அல்லது உறவினர்களிடமோ வட்டிக்கு கடன் வாங்காமல் பெரிய தொகையை திரட்ட முடியும் என்பவர்கள் லீஸுக்கு வீடு எடுப்பது நல்லது.
ஒருவேளை வட்டிக்கு கடன் வாங்கித்தான் லீஸ் தொகை கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் லீஸுக்கு எடுக்கும் வீட்டின் மாத வாடகையைவிட 20%  குறைவாக வட்டித் தொகை இருப்பது போல் பார்த்துக் கொள்ளவும். அப்படி வட்டிக்கு பணம் கிடைக்கிறது என்றால் தாராளமாக வட்டிக்கு கடன் வாங்கி லீஸுக்கு வீடு எடுக்கலாம்.
ஆனால் எந்த வங்கியிலும் தனிநபர் கடன் 14 சதவிகிதத்துக்குக் கீழே குறைந்து கிடைப்பதில்லை. இந்த லீஸ் தொகையை திரட்ட  முடியாதவர்கள் வாடகை வீட்டை தேர்வு செய்வதே நல்லது.
அடுத்து நீங்கள் தேடப் போவது வாடகை வீடா அல்லது லீஸ் வீடா என்பதை முடிவு செய்துவிட்டீர்களா?
மு.சா.கௌதமன்
நன்றி :நாணயம் விகடன் - 10.04.2016

Tuesday, April 12, 2016

தொடர்ந்து இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டமுடியாத சூழ்நிலை


தொடர்ந்து இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டமுடியாத சூழ்நிலை, என்ன செய்ய வேண்டும்?

ராம், தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவருக்குக் கை நிறைய வருமானம் வந்துகொண்டிருந்தது.   திருமணமாகி மூன்று மற்றும் ஐந்து வயதில் இரண்டு குழந்தைகள் அவருக்கு இருந்தன. அவரை ஒரு இன்ஷூரன்ஸ் ஆலோசகர் அணுகி, குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்காக ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்குமாறு கூறினார்.
ராமுவும் தன் தேவைக்கேற்ப பாலிசி இருப்பதாக நினைத்து இரண்டு பாலிசிகளை வாங்கினார். அவை இரண்டும் 15 வருடம் பிரீமியம் செலுத்தும் எண்டோவ்மென்ட் பாலிசி. ஒரு வருடத்துக்கு ரூ.50,000 வீதம் பிரீமியமாக இரண்டு பாலிசிகளுக்கும் ரூ.1,00,000 கட்டிக்கொண்டு வந்தார்.
ஐந்து வருடம் கழித்து அவருடைய நிறுவனம் சரியாக இயங்காத காரணத்தி னால் மூடும் நிலை ஏற்பட்டதால், அவருக்கு வேலை இல்லாமல் போனது.  இதனால் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் கட்ட முடியாமல் போனது.

அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு நிதி ஆலோசகரை அணுகினார். அந்த நிதி ஆலோசகரோ அந்த பாலிசிகளை அலசி ஆராய்ந்து விட்டு, ‘‘நீங்கள் வைத்திருப்பது எண்டோவ்மென்ட் பாலிசி. இந்த பாலிசியை எடுக்கும்முன் நன்கு யோசித்து முடிவெடுப்பது  முக்கியம். ஏனெனில், இந்த பாலிசிகளை எடுத்துவிட்டால், நீண்ட கால அடிப்படையில் பிரீமியம் செலுத்தும் பொறுப்பை  நீங்கள் ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவீர்கள்.   பிரீமியத்தை முழுக்க  செலுத்தி னால் மட்டுமே இந்த பாலிசி மூலம் முழுமையான பலனை  நீங்கள் அனுபவிக்க முடியும். இடையில் பாலிசியில் பிரீமியம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டால், அந்த பாலிசியை சரண்டர் செய்யலாம். அல்லது ‘பெய்ட் அப் பாலிசி’யாகவோ மாற்றிக் கொள்வதுதான் ஒரே வழி’’ என்றார்.
இப்போது ‘பெய்ட் அப் பாலிசி’ என்றால் என்ன என்று தெரியாமல் குழம்பிப் போயிருக் கிறார் ராம். இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருக்கும் பலரும் ‘பெய்ட் அப் பாலிசி’ என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள்.
ஒரு பாலிசியின் பிரீமியத்தை குறைந்தபட்சமாக 3 அல்லது 5 வருடத்துக்கு தொடர்ந்து செலுத்தி இருந்தால், அதை ‘பெய்ட் அப் பாலிசி’யாக மாற்ற முடியும். 

இவ்வாறு செய்வதால், பாலிசியின் பிரீமியத்தை தொடர்ந்து கட்டும் அவதியில் இருந்து தப்பிப்பதுடன், குறைந்த பட்ச பாலிசிப் பலன்களையும் அனுபவிக்க முடியும். 

உதாரணமாக, 
ரூ.50,000 வீதம் 15 வருடம் பிரிமீயம் கட்ட வேண்டிய பாலிசியின் காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் என்று எடுத்துக் கொள்வோம்.  பாலிசிதாரர் 5 வருட பிரீமியம் தொடர்ந்து செலுத்தி இருக்கும் நிலையில், இந்த பாலிசியை தொடர முடியாமல் ‘பெய்ட் அப் பாலிசி’ யாக மாற்றினால் என்ன ஆகும் என்பதற்கான சூத்திரம் இதோ: 
பெய்ட் அப் மதிப்பு  =
 (பிரீமியம் கட்டிய வருடங்கள் X காப்பீட்டுத் தொகை) / மொத்த பிரீமியம் கட்டும் வருடம்
அதாவது, பெய்ட் அப் மதிப்பு = (5 X ரூ.10,00,000) / 15 = ரூ.3.33 லட்சம் ஆகும். இந்த பாலிசியை பெய்ட் அப்பாக மாற்றினால், ரூ.3.30 லட்சத்துக்குக் காப்பீடு கிடைப்ப துடன், பாலிசியின் போனஸ் மற்றும் இதர வருமானங்களை பாலிசி முதிர்வில் மொத்தமாக பெற முடியும். தோராயமாக, இப்போது உள்ள பெரும்பாலான பாலிசிகளில் 4% முதல் 5% வரை வருடாந்திர போனஸாக வழங்கப் படுகிறது. இந்த பாலிசியை ‘பெய்ட் அப்’பாக மாற்றினால், பாலிசியின் முதிர்வுத் தொகையாக சுமார் ரூ.3.5 லட்சம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுவே பாலிசிதாரர் பாலிசி முதிர்வுக்குமுன் இறக்கும் தருவாயில், குறைக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையான ரூ.3.33 லட்சம் காப்பீட்டாளரின் குடும்பத்துக்குப் போய் சேரும்.
இதே பாலிசியை சரண்டர் செய்ய விரும்பினால், எவ்வளவு கிடைக்கும் என்பதற்கான சூத்திரம் இதோ:
சரண்டர் மதிப்பு = 
(30% அல்லது 40% X பிரீமியம் செலுத்தி யது) – முதல் வருட பிரீமியம்

அதாவது, சரண்டர் மதிப்பு = (30% X ரூ. 2,50,000) – ரூ. 50,000 = ரூ. 1,00,000 ஆகும். அதாவது, இவர் ஐந்து வருட பாலிசித் தொகையாக ரூ.2.5 லட்சம் கட்டி இருந்தாலும், பாலிசி சரண்டர் தொகையாக ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
இரண்டில் எது பெஸ்ட்? 
சரண்டர் தொகையான ரூ.1 லட்சத்தை  மீதமுள்ள 10 வருடத்துக்கு 8% வட்டியில் வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்தால், சுமாராக ரூ.2.15 லட்சம் கிடைக்கும். இதுவே, சிறிது ரிஸ்க் எடுத்து பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்தால், 12% முதல் 15% வரை வருமானம் கிடைக்கும். சரண்டர் தொகையான ரூ.1 லட்சத்தை 10 வருடத்துக்கு 15% வருமானத்தில் முதலீடு செய்தால், சுமாராக ரூ.4 லட்சம் வரை கிடைக்கும். ஆனால், இப்படி செய்யும் போது, ‘பெய்ட் அப் பாலிசி’ மூலம் கிடைக்கும் ரூ.3.33 லட்சம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் உங்களுக்குக் கிடைக்காது.
பிரீமியம் கட்டாமல் ஏதாவது ஆயுள் காப்பீடு பாலிசி உங்களிடம் இருந்தால், ‘பெய்ட் அப்’ மதிப்பு, சரண்டர் மதிப்பு ஆகியவற்றை கணக்கிட்டு, எது லாபம் என கவனித்து முடிவு எடுங்கள்.
நன்றி : நாணயம் விகடன் - 10.04.2016

Monday, April 11, 2016

எளிதாக இன்சூரன்ஸ் க்ளெய்ம் பெற


எளிதாக இன்சூரன்ஸ் க்ளெய்ம் பெற என்ன செய்ய வேண்டும்?

ன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் மிகப் பெரிய சவாலாக இருப்பது க்ளெய்ம்தான். இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டாலே, எளிதாக க்ளெய்ம் கிடைத்துவிடும் என்று நினைத்து பாலிசி எடுப்பவர்கள், பிற்பாடு இழப்பீடு கிடைக்கவில்லை என்றதும் ஏமாந்து போகிறார்கள். எதற்கு, எவ்வளவு க்ளெய்ம் கிடைக்கும் என்பது தெரியாமல் பாலிசி எடுப்பதே இதற்கு காரணம். தவிர, க்ளெய்ம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் பலருக்கு தெரிவதில்லை. நாம் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு க்ளெய்ம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களை எப்படி தவிர்க்கலாம் என்று மெட்சேவ் ஹெல்த்கேர் டிபிஏ நிறுவனத்தின் மேலாளர் மாரியப்பனிடம் கேட்டோம்.
க்ளெய்ம் நடைமுறை!
‘‘ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இரண்டு வகையில் க்ளெய்ம் பெற முடியும். ஒன்று கேஷ்லெஸ். இதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது பாலிசிதாரர் பணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. இன்னொன்று, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தபிறகு பாலிசியில் க்ளெய்ம் செய்வது. இதில்தான் க்ளெய்ம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க அல்லது குறைக்க பாலிசியில் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பம் செய்யும்போது சில விஷயங்களை கவனிப்பது அவசியம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை 24 மணி நேரத்துக்குள் டிபிஏவுக்கு தெரிவிப்பது அவசியம். அதேபோல சிகிச்சை எடுத்துக் கொண்ட 15 நாட்களுக்கு க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்!
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்ததற்கான ஒரிஜினல் பில், மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது மருத்துவமனையில் வழங்கப்படும் அறிக்கை (Discharge Summary Report of Patient), சிகிச்சைக்கு தொடர்புடைய ஆவணங்கள் அதாவது, லேப் ரிப்போர்ட், ஸ்கேன் ரிப்போர்ட் போன்றவை, மருந்து வாங்கியதற்கான ஆதாரம், அதற்குரிய மருத்துவர் அறிக்கை, மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் படிவத்துடன் இணைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனம் அல்லது டிபிஏவிடம் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கலாம் ’’ என்றார்.
பல பாலிசிகள்!
ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிகள் மற் றும் டாப்அப் பாலிசியில் எப்படி க்ளெய்ம் செய்வது என்பது குறித்து ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பாகுபலி விளக்கமாக கூறுகிறார்.
“வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் குரூப் பாலிசி, தனிநபர் பாலிசி, டாப் அப் பாலிசி என பல பாலிசிகள் வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் குரூப் அல்லது தனிநபர் பாலிசியில் எதில் வேண்டு மானாலும் பாலிசிதாரர் க்ளெய்ம் செய்துகொள்ள முடியும்.
சில நேரங்களில் மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும் போது இரண்டு பாலிசியிலும் க்ளெய்ம் செய்ய வேண்டிவரும். அதாவது, குரூப் மற்றும் தனிநபர் பாலிசியில் தலா ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ் தொகை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் க்ளெய்ம் 1.5 லட்சம் ரூபாய் வருகிறது. அப்போது இரண்டு பாலிசியிலும் நீங்கள் க்ளெய்ம் செய்யலாம். அப்படி செய்யும்போது முதலில் எடுத்த பாலிசி மூலம் அதிகபட்ச கவரேஜ் தொகை எவ்வளவோ, அது  க்ளெய்மாக கிடைத்துவிடும். மீதமுள்ள க்ளெய்ம் தொகைக்கு இரண்டாவதாக எடுத்த பாலிசியில் க்ளெய்ம் செய்யலாம்.
முதலில் க்ளெய்ம் செய்யும் பாலிசி நிறுவனத்திடம் ஒரிஜினல் பில்களை தர வேண்டும். மீதமுள்ள தொகையை மற்றொரு நிறுவனத்தில் க்ளெய்ம் செய்வதற்கு வசதியாக ஒரு சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
டாப் அப் க்ளெய்ம்!
டாப் அப் பாலிசியை பொறுத்தவரை, குறிப்பிட்ட தொகைக்கு மேல்தான் க்ளெய்ம் செய்ய முடியும். அதாவது, ரூ. 2.5 லட்சத் துக்கு க்ளெய்ம் வருகிறது எனில் டாப் அப் பாலிசியில் உங்களுடைய அடிப்படை பாலிசி கவரேஜ் தாண்டி, மீதமுள்ள தொகைக்கு க்ளெய்ம் செய்யலாம். அடிப்படை பாலிசியின் கவரேஜ் தொகை எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். 2.5 லட்சம் ரூபாய் க்ளெய்ம் தொகையில், அடிப்படை பாலிசி 2 லட்சம் ரூபாய் கவரேஜ் எனில் மீதமுள்ள 50 ஆயிரம்  ரூபாய்க்குதான் டாப்அப் பாலிசியில் க்ளெய்ம் செய்ய முடியும். க்ளெய்ம் தொகை 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும்போது டாப் அப் பாலிசியில் க்ளெய்ம் செய்ய முடியாது.
பாலிசி எடுத்தபிறகு!
பாலிசி பத்தி ரம் கையில் கிடைத்த வுடன் உங்கள் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் இருந்தால், அதற்கான ஆதாரத்தை தந்து மாற்றுவது நல்லது. மேலும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனை பட்டியல், எந்தெந்த சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்கும், எந்த வியாதி களுக்கு காத்திருப்புக் காலம் உண்டு என்பதை கேட்டுத் தெரிந்துக் கொள்வது முக்கியம். 
பாலிசி எடுப்பதற்கு முன்பு உள்ள நோய்களுக்கு காத்திருப்புக் காலம் இருக்கும். இது பொதுவாக 48 மாதங்கள் இருக்கும். ஏற்கெனவே உள்ள நோய்களை தெரிவிக்காமல் இருந்தால் க்ளெய்ம் நிராகரிப் பதற்கான வாய்ப்புள்ளது.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது சில பொருட்களுக்கு க்ளெய்ம் கிடைக்காது. அதாவது சிரஞ்ச், கையுறை போன்றவை இருக்கும். எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடையாது என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.  
மாற்றங்கள் அப்டேட்!
இன்ஷூ ரன்ஸ் பாலிசி எடுத்தபிறகு பாலிசி தாரரின் முகவரியில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதை உடனடியாக அப்டேட் செய்வது நல்லது. ஏனெனில் முகவரி மாற்றத்தை அப்டேட் செய்யவில்லை என்றால் க்ளெய்ம் கிடைக்க காலதாமதம் ஆகலாம்” என்றார்.
டேர்ம் இன்ஷூரன்ஸ்! (ஆயுள் காப்பீடு)
ஆயுள் காப்பீடான டேர்ம் இன்ஷூரன்ஸிலும் க்ளெய்ம் சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது. இதை சமாளித்து எளிதாக க்ளெய்ம் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து பார்தி அக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை துணைத் தலைவர் சி.எல்.பரத்வாஜிடம் கேட்டோம்.
‘‘டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை பாலிசிதாரரின் மரணத்துக்கு பிறகு நாமினிதான் க்ளெய்ம் செய்ய முடியும். எனவே, க்ளெய்ம் விஷயத்தில் சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
க்ளெய்ம் நடைமுறை!
பாலிசிதாரர் மரணம் அடைந்தபிறகு பாலிசியின் ஒரிஜினல் பத்திரம், நாமினியின் (நாமினி பற்றிய விரிவான கட்டுரையைப் படிக்க:http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10958 அடையாளம் மற்றும் முகவரி சான்று, பாலிசிதாரரின்  இறப்புச் சான்றிதழ், விபத்து மூலமாக மரணம் ஏற்பட்டிருந்தால் மருத்துவரின் அறிக்கை ஆகியவற்றுடன் நாமினி, இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் க்ளெய்ம் கேட்டு கடிதம் எழுத வேண்டும். க்ளெய்ம் படிவத்தை பூர்த்திசெய்து, மேற்கூறிய ஆவணங்களை இணைத்து க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசி வைத்திருப்பவர்கள் மேற்கூறிய ஆவணங்களை இணைத்து அந்தந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் க்ளெய்ம் செய்யலாம். பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழ் வாங்கும் போது கூடுதல் படிகள்(copy) வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இறப்புச் சான்றிதழ் ஒரிஜினல் கொடுப்பது அவசியம்.
மேலும், பாலிசிதாரர் மரணம் அடையும் சூழ்நிலையின் அடிப்படையில் உடற்கூறு ஆய்வறிக்கை கேட்கப்படும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும் போது மரணம் அடைந்திருந்தால் மருத்துவரின் அறிக்கை அவசியம். இதன் மூலமாக பாலிசிதாரரின் மரணத்துக்கான  காரணத்தை தெரிந்துகொள்ள இது உதவும்” என்றார்.
நிராகரிப்பை தவிர்க்க!
டேர்ம் இன்ஷூ ரன்ஸ் பாலிசியில் பெரும்பாலா னவர்கள் தங்களின் விவரங்களை தவறாக தந்துவிடுகிறார்கள். வயது, ஏற்கெனவே உள்ள நோய், அதற்கான சிகிச்சை குறித்த விவரத்தை குறிப்பிடுவது அவசியம். ஏஜென்ட் மூலமாக பாலிசி எடுத்தாலும், ஆன்லைனில் பாலிசி எடுத்தாலும் பாலிசிதாரர்கள் தகவல்களை தவறாக தருகிறார்கள். இது முற்றிலும் தவறு. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது எந்த தகவல் தந்தாலும் அது உண்மையான தகவலாக இருப்பது அவசியம்.
இரா.ரூபாவதி
நன்றி : நாணயம் விகடன் 18.10.2015