காசு இல்ல, காலிமனை இருக்கு வீடு கட்டணும்! என்ன செய்ய வேண்டும்?
எனது அந்தஸ்து உயர காரணமே பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி போட்டிருந்த சொத்துக்களின் விலையேற்றம்தான். அதனை இப்போது விற்றால் பின்பு இந்த சமூகம், என்னை தூக்கி வைத்திருந்த அதே உயரத்தில் வைத்துப் பார்க்குமா?
அதனால் அந்த சொத்தை நான் விற்க மாட்டேன், கட்டப்போகிறேன். ஆனால் கையில் கட்டுவதற்கான பணம் இல்லை. என்ன செய்யலாம்? சேமிப்பை காலி மனையாக (Vacant Land) வாங்கி போட்டிருந்த பலரின் மனக்கேள்வியும் இதுதான்.
சொத்தில் நான் இருக்க வேண்டும். ஆனால் கையில் பணம் புரள வேண்டும். அப்போது நம் முன்னே தெரிவது கூட்டு கட்டுமானப்பணி எனப்படும் “Joint Venture” புராஜெக்ட்.
நகரங்களில் இடப்பற்றாக்குறை, மக்களின் தேவைகள், அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி, இதனை கவனத்தில் கொண்டு, தற்போது கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியார் கட்டுமான தொழில் புரிவோர் என பலரின் பார்வையும் இந்த JV எனப்படும் கூட்டு கட்டுமான முறை மீது தான்.
சொத்து உங்கள் சொத்து. கட்டுமானம் அவர்களது. கட்டிய பின்பு உங்களுக்கு வசிக்க ஒரு வீட்டினை கொடுத்து, இதர வீடுகளை விற்று அதில் வரும் பணத்தில் கட்டுமானச் செலவுகள் போக உள்ள லாபத்தில் உங்களுக்கும் பில்டருக்கும் 50-50. இது தான் அடிப்படை.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
முதலில் உங்கள் சொத்தினை தகுந்த முறையில் அபிவிருத்தி செய்ய தகுந்த பில்டரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு, அந்த பில்டர் தகுதியான நபர்தானா? பில்டிங் கட்டுவதற்கு ஏற்ற கட்டமைப்பு (infrastructure) கொண்ட நிறுவனமா? அவர்களின் முந்தைய புராஜெக்ட் எப்படி முடிக்கப்பட்டது?
அந்த இடத்தின் உரிமையாளருக்கு அந்த JV புராஜெக்ட் லாபகரமாக இருந்ததா? கட்டப்பட்ட கட்டடத்தின் ஸ்திரத்தன்மை எப்படி இருந்தது? பில்டரின் பேப்பர் ஒர்க்ஸ், அரசு வழி ஆவணங்களான பிளான், அப்ரூவல் போன்றவை அவரால் முறைப்படி பெறப்பட்டு சொத்தின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டுவிட்டதா போன்ற எல்லா விஷயங்களையும் நுணுக்கமாகக் கேட்டு அறிந்த பின்னர் அந்த பில்டருடன் தக்க ஆவணங்கள் மூலமாக உடன்படிக்கை (Agreement for Joint Venture) எற்படுத்துவது முதல்படி.
நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கையானது, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி உங்களையும், உங்கள் சொத்தினையும் முழுமையாகப் பாதுகாப்பதாக இருத்தல் முக்கியம். சொத்தினை முதலீடு செய்யும் நீங்கள் தான் முழு கவனத்துடன் இருத்தல் வேண்டும்.
எக்காரணம் கொண்டும் உங்கள் சொத்தின் மூல ஆவணங்களை பில்டர் வசம் சமர்ப்பித்தல் கூடாது. அது போல பில்டருக்கு நீங்கள் கொடுக்கும் பவர் ஆப் அட்டார்னியும் மிக கவனமாக கொடுத்தல் வேண்டும். அந்த பவர் அதிகாரத்தின் மூலம், பில்டர், புராஜெக்ட் லோன் எதுவும் வாங்கிவிடாதவாறு கவனமாக இருத்தல் மிக மிக அவசியம்.
என்னென்ன விஷயங்களுக்கு பவர் கொடுக்கலாம் என்பதை தெளிவாக பேசி, அக்ரிமென்ட்டில் குறிப்பிட்டுக்கொள்ளுதல் நல்லது. பிளான், அதன் அப்ரூவல், கார்ப்பரேசன் மற்றும் பெரு நகர வளர்ச்சி குழுமம் போன்ற அரசு அலுவலகங்களில் உங்களுக்காக ஆஜராகி அனுமதி பெறவும், கட்டுமானம் கட்ட, மின் இணைப்பு பெற, மற்றும் கட்டி முடித்தவுடன் அவர் பகுதியை மட்டும் விற்க என மிக தெளிவாக அதில் குறிப்பிட்டுக் கொண்டால் பிற்கால பிரச்னைகளை தவிர்க்கலாம்.
அது போல, கட்டடம் கட்டும்போது, என்னென்ன கட்டுமானப் பொருட்கள் உபயோகித்தல் வேண்டும்? செங்கல், மணல், மரம், இரும்பு போன்றவை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதையும் குறிப்பிடலாம். இதர மின் ஒயர்கள், மின் சாதனங்கள், குளியலறை தேவைகள் என அனைத்தையும் தெளிவு படுத்துவதில் தவறு எதுவும் இல்லை. தேவைப்படும் பெயின்ட் கலர் முதற்கொண்டு குறிப்பிடலாம் .
கட்டுமானத்திற்கான கால அவகாசம் மிகவும் முக்கியம்.
தவிர்க்க முடியாத தாமதம் தவிர, இதர தாமதங்களுக்கு, பில்டர் பொறுப்பேற்று உங்களுக்கு தர ஒப்புக்கொண்டுள்ள மொத்த பரப்பளவுக்கு, சதுரடிக்கு, மாதம் ஒன்றுக்கு இவ்வளவு என, கால தாமத அபராத தொகையும் குறிப்பிட்டு, கட்டுமானத்தை, விரைந்து முடிக்க வழிவகை செய்யலாம் .
பில்டர் கட்டிக் கொடுத்துள்ள பகுதிக்கு ஈடாக நீங்கள் அவருக்கு வழங்கும் பிரிபடாத பாக நிலத்திற்கான தகுந்த ஆவணங்கள் என்ன தரப்போகிறீர்கள்? எப்பொழுது? எனவும் அதில் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.
கட்டுமானம் முடித்து, கம்ப்லீசன் சர்டிபிகேட்டுடன், உங்களுக்கென ஒதுக்கப்படும் வீட்டின் சுவாதீனத்தை பில்டரிடம் இருந்து சுவாதீன ஒப்படைப்பு கடிதத்துடன் பெறுவது அவசியம். இப்போது உங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதி, உங்கள் வசம்.
இப்போது பணமும் உங்கள் கைவசமாகும். வசிக்க ஒரு வீடும் புதிதாக உங்கள் வசம் வந்திருக்கும் .
கே. அழகு ராமன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதி மன்றம்.
நன்றி : விகடன் பைனான்ஸ் - 06.05.2016