வங்கியில் பயன்படுத்தும் வார்த்தைகள் என்ன செய்ய வேண்டும்?
சென்னை: வங்கி சேவைகள் நம் வாழ்வின் முக்கிய பகுதிகளாக உள்ளன. ஏ.டி.எம்-களை பயன்படுத்தும் போது, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போதும், இணைய வழியாக பணத்தை பரிமாற்றம் செய்யும் போது என பல்வேறு இடங்களிலும் நமக்கு வங்கி சேவைகள் அவசியமாக உள்ளன.
இத்தகைய வங்கி சேவையை பயன்படுத்தும் போது வங்கியாளர்கள் நமக்கு தெரியாத சில வார்த்தைகளை பயன்படுத்துவர், அதை என்ன என்று நாம் குழம்பிகொள்ளும் நிலை ஏற்படும். அது மட்டும் இல்லைங்க வங்கி சேவை குறித்து நீண்ட வரிசைகளில் நின்று வங்கி அலுவலரை பார்க்கும் போது சொல்ல வேண்டிய வார்த்தைகளை மறந்து விடுவோம் இதில் இந்த அலுவலர் நம்மை ஏளனமாக பார்ப்பார்.
இது போன்ற சங்கடமான சூழ்நிலையை தவிர்க்க சில முக்கிய வங்கியியல் வார்த்தைகளையும் அதன் விளக்கங்களை இங்கு குறிப்பிட்டுள்ளோம். அதனை முழுமையாக படித்து வங்கி அதிகாரிகளிடம் தைரியமாக பேச துவங்கலாம்.
அடிப்படை விலை (Base Rate)
தன்னிடம் உள்ள மிகவும் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களின் கடன்கள் மீது வங்கிகள் வசூலிக்கும் குறைந்தபட்ச தொகை தான் இந்த Base Rate. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி, இந்த பேஸ் ரேட்டிற்கு குறைவாக எந்த வங்கியும் கடன்களை வழங்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கடன் அளிக்கும் வங்கியில் பணி புரிபவராக இருந்தாலோ அல்லது தாங்கள் வைத்துள்ள டெபாசிட்டின் மேல் கடன் பெறும் சேமிப்பாளர்களுக்கும் பேஸ் ரேட்டிற்கு குறைவான விகிதத்திலும் கடன் கொடுக்கப்படுகிறது.
இணைப்பு கணக்கு (Linked Account)
ஒரே வங்கியில் உள்ள ஏதாவது இரண்டு அல்லது அதற்கும் மேலான கணக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தப்பட்டு, அதன் மூலம் பணம் மின்னணு முறையில் பரிமாற்றம் செய்யப்படுவதை இந்த வார்த்தை குறிப்பிடுகிறது. இது போன்று குறிப்பிடத்தக்க வசதிகளை, பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகள் வங்கிகளில் உள்ளன.
செயல்பாட்டு கட்டணம் (Processing Fee)
கடன் பெறுபவரிடமிருந்து கடன் வழங்கும் செயல்பாடுகளை செய்யும் பொருட்டாக வங்கி விதிக்கும் கட்டணம் தான் செயல்பாட்டு கட்டணம். கடனில் ஒரு சிறு சதவீதத்தை இவ்வாறு கட்டணமாக விதிப்பார்கள். திருவிழா போன்ற நாட்களில், வாடிக்கையாளர்களை கவரும் வியாபார உத்தியாக, இந்த கட்டணங்களை அவர்கள் தற்காலிகமாக விலக்கிக் கொள்வர்.
பிடிப்பில்லாத கணக்கு (No-Frills Account)
நோ-ஃபிரில்ஸ் அக்கவுண்ட் என்றால் ஜிரோ பேலன்ஸ் கணக்கு என்று அர்த்தமாகும். இந்த வகை சிறப்பு கணக்குகளில் நீங்கள் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லை. இலவசமாக நீங்கள் செக் புக் பெறுவதை கட்டுப்படுத்தவோ அல்லது இணைய வழி வங்கி பரிமாற்றங்களையோ இது கட்டுப்படுத்துவதில்லை.
எம்ஐசிஆர் (Magnetic Ink Character Recognition)
காசோலைகளிலும் மற்றும் கேட்பு வரைவோலைகளிலும் அச்சிடப்பட்டிருக்கும் 9 இலக்க எண் தான் மை-கெர் என்று உச்சரிக்கப்படும் MICR குறியீடு ஆகும். இது காந்த சக்தியுடைய சிறப்பு வகை மையினால் அச்சிடப்பட்டிருக்கும். இதன் 9 இலக்கங்களில் முதல் 3 இலக்கங்கள் நகரத்தையும், 4 முதல் 6 வது இலக்கங்கள் வங்கியையும் மற்றும் கடைசி 3 இலக்கங்கள் குறிப்பிட்ட அந்த வங்கியின் கிளையையும் குறிக்கின்றன. இந்த குறியீடுகளின் உதவியால் தவறுகள் ஏற்படுவது குறைக்கப்படுவதுடன், பண பரிவர்த்தனைகள் வேகமாகவும் நடைபெறுகின்றன.
தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT)
இதன் (National Electronic Funds Transfer) பெயரைப் போலவே ஏதாவது மின்னணு முனையத்தின் உதவியுடன் - தொலைபேசி அல்லது தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டு பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. அதே வங்கி அல்லது மற்ற வங்கிகளுடன் இந்த வகையான பண பரிமாற்றங்கள் செய்ய நெஃப்ட் உதவுகிறது. நெஃப்ட் முறையில் பணத்தை பரிமாற்றங்கள் செய்யும் போது அந்த செயல்பாடு குழுவாக நடைபெறும், ஆனால் ஆர்டிஜிஎஸ் தனித்தனியாக பரிமாற்றம் நடைபெறும். எனவே நெஃப்ட் செயல்பாடு வேகம் குறைவாக இருக்கும்.
இந்திய நிதி கணிணி குறியீடு (Indian Financial System Code)
இந்த 11 இலக்கங்கள் கொண்ட எழுத்து மற்றும் எண் கொண்ட குறியீடு தான் வங்கிகளை அடையாளம் காண உதவும் IFSC குறியீடு ஆகும். முதல் நான்கு எழுத்துக்களும் வங்கியின் குறியீடாகவும், 5-வது எண் கட்டுப்பாட்டு எழுத்தாகவும், அடுத்த 6 எண்கள் வங்கியின் கிளையையும் குறிப்பிடுகின்றன. நீங்கள் NEFT அல்லது RTGS முறையில் பணத்தை பரிமாற்றம் செய்யும் போது, பணம் பெறக்கூடிய வங்கியின் IFSC குறியீட்டை அறிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
காசோலையின் இடதுபுறத்தில் கீழே இது காணப்படும்.
டிராவலர்ஸ் செக் (Travellers Check)
முன்கூட்டியே அச்சிடப்பட்ட, ஒரு குறிப்பிட்ட பண மதிப்பு உள்ள வங்கியின் காசோலைகள் அதில் கையெழுத்து போடும் நபர் வேறொருவருக்கு பணம் தருவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த காசோலைகள் தான் டிராவலர்ஸ் செக் என்று அழைக்கப்படுகின்றன. பயணம் செய்யும் போது பணத்தை கையில் எடுத்துச் செல்வதற்கு பதிலாக பயன்படுத்தும் வகையில் இந்த காசோலைகள் பயன்படுகின்றன. இந்த காசோலைகள் தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அதனை கொடுத்த வங்கியினால் வேறு காசோலை தரப்படும்.
அட்டை சரிபார்க்கும் மதிப்பு (CVV)
உங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் கையெழுத்து போடும் பகுதியைத் தொடர்ந்து 3 இலக்க எண் இருக்கும் அது தான் அட்டையை அடையாளம் காணும் எண் அல்லது CVV ( Card Verification Value) எண் ஆகும். தவறுகளை தடுக்கவும் மற்றும் அதே சமயம் நீங்கள் அட்டையைப் பயன்படுத்தி பண பரிமாற்றங்கள் செய்யவும் இந்த எண் உதவுகிறது. நீங்கள் இணைய வழியிலோ அல்லது தொலைபேசி வழியாகவோ அட்டையை பயன்படுத்தும் போது இந்த எண் கண்டிப்பாக தேவைப்படும்.
எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் (ECS)
உங்களுடைய பொறுப்பில், உங்களுடைய கணக்கில் பணம் நேரடியாக வரவு வைக்கப்படுவதற்கு வங்கிகள் வழங்கும் சேவை தான் ECS (Electronic Clearing Service) என்று அழைக்கப்படுகிறது. பரஸ்பர நிதிகள், மாதாந்திர இ.எம்.ஐ கட்டணங்கள் அல்லது உங்களுடைய மாதாந்திர இன்டர்நெட் கட்டணங்கள் ஆகியவற்றை இந்த பொறுப்பு சார்ந்திருக்கும். அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் பணத்தை செலுத்த வேண்டும் என்று உங்களுடைய வங்கிக்கு நீங்கள் ஒரு ஆணையை கொடுக்க வேண்டும்.
ஆர்டிஜிஎஸ் (RTGS)
ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு, அதே நேரத்தில் மற்றும் மொத்தமாக பரிமாற்றம் செய்யப்படும் விதத்தில் வழங்கப்படும் சேவை தான் RTGS சேவை ஆகும். அதன் முழு வரிவாக்கம் Real Time Gross Settlement ஆகும். இதில் கால தாமதம் ஏற்படுவதில்லை. Gross என்றால் வேறு எந்த பரிமாற்றத்துடனும் சேர்க்காமல் தனியாக செய்யப்படுகிறது என்று பொருளாகும்.
பேப் (PAP) அல்லது எம்சிசி (MCC)
காசோலைகள் இந்தியாவில் எங்கு வழங்கப்பட்டிருந்தாலும், எந்த இடத்தில் வேண்டுமானலும் பணமாக மாற்றக் கூடிய காசோலைகளாக PAP (Payable at Par) அல்லது MCC (Multi-City Cheques) காசோலைகள் உள்ளன. இந்தியா முழுவதுமாகவே அவை உள்ளூரில் மாற்றத்தக்க காசோலைகளாகவே கருதப்படுகின்றன. வரவு வைக்கப்பட்ட அதே நாளில் கணக்கில் பணம் கொண்டு வரப்படவும் மற்றும் சாதாரணமாக பிற காசோலைகளில் வரும் பிற கட்டணங்கள் எதுவும் இல்லாமலும் இந்த காசோலைகள் வழங்கப்படுகின்றன.
சிபில் (CIBIL)
ஒரு தனிநபர் வாங்கிய கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள் மற்றும் பிற தரப்பட அனைத்து நிலுவைகள் ஆகியவற்றையே கடன் வரலாறு குறிப்பிடுகிறது. இந்திய கடன் தகவல் மையம் (Credit Information Bureau of India Limited) என்று அழைக்கப்படும் CIBIL நிறுவனம் இந்தியாவில் தனிபர்களின் கடன் அறிக்கைகளை வழங்குகிறது. ஒரு தனிநபரின் கடந்த கால மற்றும் நடைமுறையில் இருக்கும் கடன்கள் மற்றும் கிரெடிட் அட்டைகள் பற்றிய தகவல்கள் இந்த அறிக்கையில் இருக்கும்.
சிபில் ஸ்கோர்
கடன் பெற விரும்புபவர்களுக்கு சிபில் ஸ்கோர் நல்ல மாதிரியான கடன் வரலாறு இருக்க வேண்டும். இந்த கடன் வரலாற்றில் உங்களுடைய கடனை திரும்ப செலுத்திய அல்லது செலுத்தாமல் தவற விட்ட தகவல்கள் இருக்கும்.
கேஒய்சி (Know Your Customer)
இந்திய ரிசர்வ் வங்கியால் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் முன்மொழியப்பட்ட 'உங்களுடைய வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' என்ற விதிமுறை, வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளரின் உண்மையான அடையாளத்தை தெரிந்து கொள்ள உதவுகின்றன.
அடிப்படை அடையாள தகவல்களை சேகரிப்பதும் மற்றும் ஆய்வு செய்வதும் மற்றும் வாடிக்கையாளர் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை அவருடைய பரிமாற்றங்களுடன் கவனிப்பதும் மற்றும் அவருடைய மற்றும் உடன் இருப்பவர்களைப் பற்றிய தகவல்களை பதிவு செய்வதும் இந்த KYC கட்டுப்பாட்டில் இருக்கும்.
கேஒய்சி-யின் பயன்பாடு
இந்த கேஒய்சி படிவ முறை பணத்தை மோசடி (Anti-Money Laundering) செய்வதை தவிர்க்கவும் அல்லது கவனிக்கவும் மற்றும் நிதியை அடிப்படையாக கொண்ட தீவிரவாதத்தை (combat the financing of terrorism) எதிர்கொள்ளவும் உதவுகிறது.
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள் - 04.05.2016