disalbe Right click

Wednesday, May 11, 2016

இணையதளம் மூலம் கடன் பெற


இணையதளம் மூலம் கடன் பெற என்ன செய்ய வேண்டும்?

இணையதளம் மூலம் கடன்: நல்லதா கெட்டதா?

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

உங்களுக்கு திடீரென்று கடன் வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? முதலில் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் கேட்டுப் பார்ப்பீர்கள். இல்லையென்றால் வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களை நாடிச் செல்வீர்கள்.

அதேபோல், உங்களிடம் பணம் உபரியாக உள்ளது எனில்,  அக்கம்பக்கத்தினர் யாரேனும் கடன் கேட்டால் கொடுப்பீர்கள். இன்னும் சிலர் வங்கியில் டெபாசிட்டாக போடுவார்கள் அல்லது வேறு சொத்துக்களில் முதலீடு செய்வார்கள். 

ஆனால், நீங்கள் சொந்தக்காரர்களிடம் அல்லது நண்பர்களிடம் கடன் கேட்கக் கூடாது என்ற கொள்கையை உடையவர் என்று வைத்துக் கொள்வோம்; அதே சமயம், வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களிடம் சென்று கடன் வாங்கவும் விருப்பமில்லை எனில் இருக்கவே இருக்கிறது, பி2பி லெண்டிங் வெப்சைட்டுகள். 

இந்த இணையதளங்களில் சென்று உங்களது தேவைகளை (கடன் கொடுப்பதென்றாலும் சரி, கடன் வாங்குவதென்றாலும் சரி) நீங்கள் பதிவு செய்யலாம். உங்களது தேவையைப் பூர்த்தி செய்ய பலர் உங்களுடன் இந்த இணையதளங்கள் மூலமாக உடனே தொடர்புகொள்வார்கள். முன்பின் தெரியாத காஷ்மீரில் இருக்கும் ஒருவர் கன்னியாகுமரியில் இருக்கும் மற்றொருவருக்கு கடன் கொடுக்க அல்லது வாங்க இந்த பி2பி லெண்டிங் வெப்சைட்டுகள் வழி செய்கின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக இந்த வெப்சைட்டுகள் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே கடன் கொடுக்கலாம் அல்லது வாங்கலாம். உதாரணமாக, மாதாந்திர சம்பளம் வாங்குபவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் போன்றோருக்கு இந்த பி2பி கடன் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இந்தியாவில் இந்தத் தொழிலில் தற்போது கிட்டத்தட்ட 30 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டில் (2015) மட்டும் புதிதாக 20 பி2பி வெப்சைட்டுகள் துவங்கப்பட்டதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இந்த வெப்சைட்டுகள் நிதி சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் இதுவரை எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இந்த நிறுவனங்களுக்கு இல்லை. 

இந்தத் தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்குமென்றும், கடன் வாங்குபவர்களுக்கு இதனால் வட்டி விகிதம் குறையும் என்றும் நமது மத்திய ரிசர்வ் வங்கி நம்புகிறது. ஆகவேதான், இந்தத் தொழிலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முறைப்படுத்தவும், நெறிப்படுத்துவதற்காகவும் பொதுமக்களிடமிருந்து ஆலோசனை கோரி விவாத அறிக்கையை (Discussion paper) ஆர்.பி.ஐ. தனது இணையதளத்தில் சென்ற மாதத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த விதமான நிறுவனங்களை வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFC – Non Banking Finance Companies) கேட்டகிரியில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது  ஆர்.பி.ஐ. குறைந்தபட்ச நெட்வொர்த் ரூ.2 கோடியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. இது போன்ற நிறுவனங்களை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவது அவசியமா அல்லது இல்லையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது ஆர்.பி.ஐ.

 மேலும், இந்த நிறுவனங்கள் வெறும் மத்தியஸ்தர் வேலையை மட்டும் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறது. இந்த விவாத அறிக்கையைப் படித்தபின் பொதுமக்கள் சொல்லும் கருத்துக்கள் அடிப்படையில் குழந்தைப்பருவத்தில் இருக்கும் இந்தத் தொழிலுக்குத் தேவையான சட்டதிட்டங்களை ஆர்பிஐ கொண்டுவரும். 

உலகெங்கிலும் இந்த விதமான பி2பி வெவ்வேறு விதமான வளர்ச்சியிலும், கட்டுப்பாட்டிலும் உள்ளன. ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்த விதமான பி2பி கடன் வழங்கும் தொழில்களை தடை செய்துள்ளன. அமெரிக்காவில் மத்திய மற்றும் மாநில அளவில் கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு டெக்ஸாஸ் போன்ற மாகாணங்கள் முழுவதுமாக இந்தத் தொழிலை தடை செய்துள்ளன. சீனா போன்ற நாடுகளில் பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் கொண்டு வரப்படவில்லை. அந்த நாட்டில் பல நூறு நிறுவனங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இத்தாலி, ஜெர்மனி, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த நிறுவனங்கள் வங்கிகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆதலால், பி2பி கடன் தொழிலை ஆரம்பிப்பதற்கு அந்த நாடுகளில் வங்கி லைசென்ஸ் பெற வேண்டும். 

பி2பி லெண்டிங் நிறுவனங்களின் வேலை என்ன?

** கடன் கொடுப்பவரையும் வாங்குபவரையும் சந்திக்கச் செய்கின்றன

**  வாடிக்கையாளர்களின் கேஒய்சி-யை பூர்த்தி செய்கின்றன

**   கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப பெறுவதில் உதவி செய்கின்றன

**  பிரச்னைகள் ஏதும் ஏற்பட் டால் சட்ட ஆலோசனையில் உதவி செய்கின்றன

**  பலர் ஒரு நபருக்கு கடன் கொடுப்பதை அல்லது ஒருவர் பலருக்கு கடன் கொடுப்பதை வழிமுறை செய்கின்றன

என்ன லாபம்? 

இந்த வகையில் கடன் வாங்கிக் கொடுக்கும்போது, ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை தங்களின் சர்வீஸ் சார்ஜாக எடுத்துக் கொள்கின்றன இந்த பி2பி நிறுவனங்கள். பொதுவாக, கடன் தொகையில் 1% – 2% சர்வீஸ் சார்ஜாக இருக்கும். இது தவிர, வேறு சேவைகளுக்கு தனியாகவும் கட்டணம் கிடைக்கும்.

வளர வாய்ப்புள்ள துறை!

இந்தியாவில் இந்த சந்தையின் அளவை தெரிந்துகொள்ள தற்போது புள்ளிவிபரங்கள் ஏதும் இல்லை. உலகளவில் 2012-ம் ஆண்டு ரூ.20 கோடிக்கும் சற்று அதிகமாக இருந்த சந்தை, கடந்த ஆண்டு இறுதியில் ரூ.42,000 கோடிக்கும் அதிகமாக ஆகியுள்ளதாக யூ.கே-வைச் சார்ந்த பி2பி அஸோசியேஷன் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இச்சந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாம் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்? 

தனிநபராகிய நாம் அல்லது சிறுதொழில் செய்யும் நாம் இந்தத் திட்டத்தின் மூலம் எவ்வாறு பயனடையலாம்?

நாம் பல சமயங்களில் அடமானம் ஏதும் இல்லாத, அதே சமயத்தில் சீக்கிரமாக கிடைக்கக்கூடிய கடனை எதிர்பார்க்கிறோம். வட்டியும் குறைவாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அல்லது சிறு தொகை வைத்திருப்பவர்கள், வங்கி டெபாசிட் அல்லது பிற முதலீடுகளைவிட அதிகமான வருமானம் வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இது போன்றோருக்கு, இந்த விதமான வாய்ப்பு உபயோகமாக இருக்கும்.

ரிஸ்க் என்ன?

கடன் கொடுக்க நினைப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காரணம், கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வராமல் போவதற்கு வாய்ப்புண்டு.  மேலும், உங்களின் முக்கியமான தேவைகளுக்காக வைத்திருக்கும் பணத்தை வட்டிக்கு விடாதீர்கள். கடனை முறையாக வசூலிப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

கடன் வாங்க நினைப்பவர்கள் வேறு எங்கும் கடன் கிடைக்கவில்லையே என அதிக வட்டிக்கு கடனை வாங்கிவிட்டு, திரும்பச் செலுத்துவதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.  

ஆக மொத்தத்தில் இது ஒரு பெரிய தொழிலாக எதிர்காலத்தில் மாற வாய்ப்பிருக்கிறது. ஆர்.பி.ஐ இந்த வகையான சந்தைத் தளங்களை முறைப்படுத்துவது இது போன்ற தொழில்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பதுடன், கடன் கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கும் ஒரு நல்ல சந்தை அமைப்பை உருவாக்கும். 

இணையதளம் மூலம்கடன் தரும் சில நிறுவனங்கள்!

www.faircent.com

www.i2ifunding.com

www.worldoflending.com

www.lendenclub.com

www.kiva.org

www.loanmeet.com

www.lendbox.in

www.indialends.com

www.loanzen.in

நன்றி :நாணயம் விகடன் - 15 May, 2016



இண்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ்


இண்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் பெற என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவிலிருந்து, வெளி நாடுகளுக்குச் செல்பவர்கள், அங்கே சென்றவுடனே வாகனம் ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம். அந்த நாட்டில் உள்ள அதற்குரிய அலுவலகத்தில் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பித்து, அது கிடைக்கும் வரை காத்திருக்க முடியாத சூழ்நிலையில், செல்லும்போது இங்கிருந்தே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பர்மிட் வாங்கிக்கொண்டு செல்லலாம்.
மற்ற உலக நாடுகளுக்கும் நம் நாட்டிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் வாங்குகின்ற டிரைவிங் பர்மிட், வெளிநாடுகளில் ஓராண்டு காலத்துக்கு மட்டும்தான் செல்லுபடியாகும்.
நமது நாட்டில் வசிக்கும் ஒருவர் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே, இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் லைசென்ஸ் வேண்டி விண்ணப்பிக்க முடியும். அதற்குரிய 4ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனுடன் டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், விண்ணப்பதாரர் எந்த நாட்டுக்குச் செல்கிறாரோ அதற்குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் ஆகியவற்றின் ந்கல்களை இணைத்து் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இதனை பெறுவதற்கு 30 நாட்கள் பிடிக்கும்.
நமது நாட்டில் பெறுகின்ற சாதாரண டிரைவிங் லைசன்ஸை வைத்து, சில வெளிநாடுகளில் மட்டும் IDL இல்லாமலே்யே வாகனங்களை ஓட்டலாம்.
ஜெர்மனி:
ஜெர்மனியில் நுழைந்த நாள் முதல் 6 மாதங்களுக்கு இந்திய லைசென்ஸை வைத்துக் கொண்டு கார், பைக் ஓட்ட முடியும். 
ஆனால், உங்களது டிரைவிங் லைசென்ஸின் மொழியாக்கம் செய்யப்பட்ட நகலை தூதரகத்திலிருந்து பெற்றுக் கொள்வது அவசியம். இல்லையெனில், சர்வதேச ஓட்டுனர் பர்மிட் இருந்தால் பிரச்னை இல்லை. வேக வரம்பு இல்லாத ஆட்டோபான் சாலைகளில் காரில் ஒரு சூப்பரான டிரிப் அடித்து வர இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியாவிலும் இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து கார், பைக் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், உங்களது பாஸ்போர்ட்டும், டிரைவிங் லைசென்ஸும் ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம். அத்துடன் இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் இருக்க வேண்டும்.
சுவிட்சர்லாந்து:
பலரின் கனவு சுற்றுலா பிரதேசமாக விளங்கும் சுவிட்சர்லாந்து நாட்டிலும் ஓர் ஆண்டுக்கு தாய் நாட்டு டிரைவிங் லைசென்ஸை வைத்து கார், பைக் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. 
அங்குள்ள செயின்ட் கோத்தார்டு கணவாய்க்கு ஒரு ரவுண்டு செல்ல மறவாதீர்.
நியூஸிலாந்து:
நியூஸிலாந்து நாட்டிலும் இந்திய டிரைவிங் லைசென்ஸ் வைத்து வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதியுண்டு. அங்குள்ள தேம்ஸ் பகுதியிலிருந்து கோரமென்டெல் சாலையில் பயணிக்க தவறாதீர்.
மொரிஷியஸ் தீவு:
மொரிஷியஸ் தீவிலும் இந்திய டிரைவிங் லைசென்ஸுடன் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கப்படுகிறது.
பிரான்ஸ்:
பிரான்ஸ் நாட்டிலும் இந்திய ஓட்டுனர் உரிமத்துக்கு அனுமதி உண்டு. ஆனால், உங்களது டிரைவிங் லைசென்ஸை இந்திய தூதரகம் மூலமாக பிரெஞ்ச் மொழியில் மொழியாக்கம் செய்து கொள்வது அவசியம். அங்குள்ள கார்சிகா மலைப்பகுதி சாலையில் உங்களது ஓட்டுனர் திறனுக்கு சவால் விடும் சாலைகளில் பயணிக்க தவறாதீர்.
நார்வே:
உலகின் அழகிய பிரதேசங்களில் ஒன்றான நார்வே நாட்டிலும் இந்திய ஓட்டுனர் உரிமத்துடன் வாகனங்களை இயக்க முடியும். மூன்று மாதங்களுக்கு மட்டும் இந்த அனுமதி. நடுராத்தியில் சூரியன் உதிக்கும் நாடு என்று பெருமையுடைய நார்வேயின் இயற்கை அழகை காண செல்லும் இந்தியர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
இங்கிலாந்து:
இங்கிலாந்தில் ஓர் ஆண்டுக்கு இந்திய டிரைவிங் லைசென்ஸுடன் கார், பைக்குகளை ஓட்ட முடியும். சரி, இங்கிலாந்து புறப்பட்டு விடலாம் என்று முடிவு செய்திருக்கும் ஆட்டோமொபைல் பிரியர்கள், ஐலே ஆஃப் மேன் சாலையில் பயணிக்க தவறாதீர். இங்கு வேக வரம்பு இல்லை என்பதையும் மனதில் வையுங்கள்.
அமெரிக்கா:
சொந்தக்காரர், நட்பு வட்டத்தில் விசாரணையை போட்டால் முக்கால்வாசி பேரின் வீட்டில் ஒருவராவது அமெரிக்காவில் இருப்பதாக சொல்கின்றனர். எனவே, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு மிக நெருக்கமாகிவிட்டது. எனவே, சுற்றமும், நட்பும் வட்டாரத்தை வைத்து சுற்றுலா சென்றாலும், பணி நிமித்தமாக சென்றாலும் இந்திய ஓட்டுனர் உரிமத்திற்கு ஓர் ஆண்டு அனுமதி உண்டு. ஆனால், சர்வதேச ஓட்டுனர் பர்மிட்டும் அவசியமாகிறது. அங்குள்ள ரூட்-66 சாலையில் செல்ல தவறிவிடாதீர்.

இதுதவிர, ஸ்பெயின், கனடா, இத்தாலி, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய டிரைவிங் லைசென்ஸிற்கு அனுமதியுண்டு. ஆனால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரங்களை அணுகி வழிமுறைகளை தெரிந்து கொள்வதுடன், குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்றவுடன் அங்குள்ள இந்திய தூதரகங்களிலும் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை தெரிந்துகொண்டு செல்வது அவசியம்.
வெளிநாட்டில் கார் ஓட்டுவது பரவசத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அங்குள்ள சாலைகள் தட அமைப்பு, இடது புற ஸ்டீயரிங் வீல் அமைப்பு, சாலை விதிகள், சாலை நிலைகள் போன்றவற்றை உணர்ந்து கொள்வதில் சிரமங்கள் உண்டு. எனவே, ஓரளவு பரிட்சயமான இடங்களிலும், வழிகாட்டியை வைத்துக் கொள்வதும் பயன் தரும்.

தகவல் உதவி : டிரைவ் ஸ்பார்க் * எப்படி - 11.05.2016

ஹாஸ்டல் தேடும் பெண்கள்

ஹாஸ்டல் தேடும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
ஹாஸ்டல் தேடும் பெண்கள் கவனிக்க வேண்டிய 10 முக்கிய பாயின்ட்கள்!
புதிதாக சென்னையில் ஹாஸ்டல் தேடும் பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான 10 பாயின்ட்கள் இதோ...
1.தொலைவு
தங்களுடைய அலுவலகத்திற்கு அருகிலேயே ஹாஸ்டல் இருந்தால் நல்லது. சென்று வரக்கூடிய தொலைவு வேலை நேரத்தினைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்பதற்கே இந்த முதல் பாயின்ட். டிஸ்டன்ஸ்தான் பெரிய ப்ராப்ளம்.
2.போக்குவரத்து
அடுத்ததாக அலுவலகம் சென்று வருவதற்கு பேருந்து வசதிகள், வண்டியில் செல்வதென்றால் அதற்கான வழி, அருகாமையில் இருக்கும் கடை, மருத்துமனை போன்றவற்றின் விவரங்கள் ஆகியவற்றையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
3.அடிப்படை வசதிகள்
ஹாஸ்டலைத் தேர்வு செய்யும் போதே அங்கிருக்கும் அறையின் வசதி, தேவையான காற்றோட்டம், சரியான பாதுகாப்பு, கழிவறை வசதிகள், குடிநீர் போன்றவைக் குறித்த தெளிவான விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டே சேர வேண்டும்.
4.ஹாஸ்டலின் சட்டதிட்டங்கள்
நீங்கள் அலுவலகத்தில் இருந்து இரவு நேரப் பணி முடித்தெல்லாம் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக அதனை ஏற்றுக் கொள்ளும் ஹாஸ்டல்களில் சேருவது நல்லது. இல்லையெனில் இரவு நேரத்தில், கதவு திறக்கப்படாமல் நடு ரோட்டில் நிற்கும் பரிதாபகரமான நிலை வரலாம் ஜாக்கிரதை.
5.மாற்று வழிகள்
பெரும்பான்மையான சென்னை ஏரியாக்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், சென்டர் ஆப் தி சிட்டி பகுதிகளில் ஹாஸ்டல் தேடும் பெண்கள் பாதுகாப்பான குறுக்கு வழிகளையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
6.ஹாஸ்டலின் அங்கீகாரம்
சென்னையின் புறநகர் பகுதிகளில் ஹாஸ்டல்களைத் தேர்வு செய்யும் பெண்கள், கண்டிப்பாக அவற்றின் உண்மைத் தன்மையை பரிசோதித்துக் கொள்வது நலம். ஏனெனில், உரிய அங்கீகாரம் இல்லாமல் தவறான பாதையில் பெண்களைத் தள்ள நினைக்கும் கும்பல்கள், ஹாஸ்டல் என்ற பெயரில் பொய்யாக பெண்களை ஏமாற்றவும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
7.புறநகர் பெண்களின் கவனத்திற்கு
சென்னை பொண்ணுங்களுக்கு மட்டுதான் சொல்வீங்களா எங்களுக்கெல்லாம் கிடையாதா என்று கேட்கும் மற்ற பகுதி பெண்களுக்கு, மாநகரம் அல்லாத ஊர்களில் இவற்றுடன் கூடுதலாக சுற்று வட்டார மனிதர்களையும் கவனித்து வைத்துக் கொள்ளுதல் அவசியம். ஏனெனில், வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பகுதிகளில் அமைந்துள்ள ஹாஸ்டல்களில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
8.உணவு
உணவு என்பது கண்டிப்பாக வீட்டின் சுவைக்கு கிடைக்காதுதான். ஆனாலும், தேவையில்லாத நிறமூட்டிகள், சுவைக் காரணிகள், அஜினமோட்டோ போன்றவை சேர்க்காமல் சமைக்கும் ஹாஸ்டல்கள் பெஸ்ட். 
அதிலும், சுத்தமான கிச்சன் அமைந்திருக்கின்றதா என்பதையும் கண்டிப்பாக கணக்கில் கொள்ள வேண்டும். ஏற்கனவே இடம் மாறுபவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் வரலாம் என்கின்ற நிலையில் சுகாதாரமற்ற உணவால் மேற்கொண்டு வாந்தி, வயிற்றுவலி போன்றவையாவது தாக்காமல் பார்த்துக் கொள்வது நலம்.
9.வாகனம் நிறுத்த
வண்டி வைத்திருப்பவர்கள் என்றால், வண்டி நிறுத்துவதற்கான இட வசதி, திருட்டு போகாமல் இருக்க பாதுகாப்பு வசதி இருக்கின்றதா என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். கைக்காசினைப் போட்டு வாங்கும் ஸ்கூட்டி தொலைந்து போய்விட்டால் பின்பு வீட்டில் வண்டி, வண்டியாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.
10.உடன் தங்குபவர்கள்
ஹாஸ்டலில் சிங்கிள் ரூம் என்றால் பிரச்னையில்லை. பழக்கமில்லாத பெண்களுடன் அறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில், அவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். மேலும், உங்களுடைய எண்ணத்திற்கு ஏற்றவர்களாக இருந்தால் மட்டுமே ஹாஸ்டல் வாழ்க்கை நல்லபடியாக அமையும். அதனால் அறைத் தோழிகளை புரிந்து கொள்வதுடன், தேவையில்லாத பிரச்னைகளை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது உங்களுடைய ஹாஸ்டல் வாழ்க்கை அருமையான ஒன்றாக அமைய வழிவகுக்கும். ஃபிரெண்ட்ஸாகிடுங்க
- பா.விஜயலட்சுமி 
நன்றி : விகடன் செய்திகள் -10.05.2016

Tuesday, May 10, 2016

பிரதமர் இன்சூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேர


பிரதமர் இன்சூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேர என்ன செய்ய வேண்டும்?

கடந்த ஆண்டு இதே நேரத்தில் மக்கள் மத்தியில் சுடச்சுட பேசப்பட்டு வந்த விஷயம் ‘பிரதான் மந்த்ரி சுரக்‌ஷா பீமா யோஜனா’ (தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி) மற்றும் ‘பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ (ஆயுள் காப்பீட்டு பாலிசி) என்கிற மத்திய அரசின் இரண்டு இன்ஷூரன்ஸ் திட்டங்கள்தான். 

கடந்த ஓராண்டு காலத்தில் இந்தத் திட்டங்கள் எப்படி செயல்பட்டன, இதுவரை இந்த பாலிசியின் மூலம் எத்தனை பேருக்கு க்ளெய்ம் தரப்பட்டிருக் கிறது, எத்தனை பேர் இந்த  திட்டத்தில் இணைந்திருக் கிறார்கள், புதிதாக இன்ஷூரன்ஸ் எடுக்க விரும்புபவர்களை இந்த திட்டத் தில் இணைக்கிறார்களா என்கிற கேள்விகளுக்குப் பதிலை தெரிந்து கொள்ளும்முன் இந்தத் திட்டங் களில் இதுவரை எத்தனை பேர் சேர்ந்து பயன் அடைந்திருக்கிறார்கள்       என்பதைப் பார்ப்போம். 

எத்தனை பேர்? 
கடந்த 29 ஏப்ரல் 2016 நிலவரப்படி, பிரதான் மந்த்ரி சுரக்‌ஷா பீமா யோஜனா (பி.எம்.எஸ்.பி.வொய்) திட்டத்தின் கீழ் 9,42,28,483 பேர் இணைந்து இருக்கிறார்கள். பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (பி.எம்.ஜே.ஜே.பி.வொய்) திட்டத்தின் கீழ் 2,95,96,415 பேர் இணைந்திருக்கிறார்கள். 

கலக்கும் க்ளெய்ம்கள்!
கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி வரையில், பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை 23,798 பேர் இழப்பீடு (க்ளெய்ம்) கோரினார்கள்.


அதில் 21,385 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக அரசு வலைதளங்கள் சொல்கின்றன. இதில் அதிகபட்சமாக எல்.ஐ.சி நிறுவனம் 8,345 பேருக்கும், எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 7,430 பேருக்கும் இழப்பீடு வழங்கி இருக்கின்றன. 364 பேருக்கு மட்டுமே இழப்பீடு  நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது இழப்பீடு கோரிய மொத்த நபர்களில் வெறும் 1.53% என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பிரதான் மந்த்ரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் மொத்தம் 4,950 நபர்கள் இழப்பீடு கோரி இருக்கின்றனர். அதில் 3,277 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. இழப்பீடு கோரிய மொத்த நபர்களில் 807 பேருக்கு (இது மொத்த நபர்களில் 16.30%) இழப்பீடு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.  866 பேருடைய இழப்பீட்டுக் கோரிக்கைகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

பி.எம்.எஸ்.பி.வொய் திட்டத்துக்கு அதிகபட்சமாக யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் 926 இழப்பீடுகளையும், நேஷனல் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் 803 இழப்பீடுகளையும், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் 791 இழப்பீடுகளையும் வழங்கி இருக்கின்றன.
ரெனீவல் பிரீமியம்! 
பிரதான் மந்த்ரி சுரக்‌ஷா பீமா யோஜனா (பி.எம்.எஸ்.பி.வொய்) திட்டத்துக்கு ஆண்டு பிரீமியமாக 12 ரூபாய், மே மாதம் 31-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்போ நம் வங்கிக் கணக்கிலிருந்து (எந்த வங்கிக் கணக்கு மூலமாக இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தோமோ அந்த வங்கிக் கணக்கு) ஆட்டோ டெபிட் முறையில் வசூலிக்கப்படும். அதற்கான நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்.களை வங்கிகள் இப்போது அனுப்பத் தொடங்கிவிட்டன. 

அதேபோல் பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்துக்கு ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும். அந்த தொகையும் மேற்கூறியது போலவே மே 31-ம் தேதி அல்லது அதற்கு முன்பே நம் வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் முறையில் வசூலிக்கப்படும். எனவே, இந்த இரண்டு பிரீமியத்துக்குத் தேவையான (330+12) 342 ரூபாயை இந்த இரண்டு பாலிசிகளையும் எடுத்தவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருப்பது அவசியம். 

புதிய நபர்கள் இணைப்பு!
பெரும்பாலான அரசு வங்கிகளில் இதற்கென்றே தனியாக ஆட்களை வைத்து நிர்வகித்து வருகிறார்கள். புதிதாக வருபவர்களையும் இதில் சேர்த்தும் வருகிறார்கள். சில கிராமபுறப் பகுதிகளில் குறைவான ஆட்கள் பணிபுரியும் வங்கிக் கிளைகளில் இந்த திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல், சாதாரண வங்கிப் பணிகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாக மக்களிடமிருந்து புகார் வருகிறது. 
 
சில வங்கிகளில் இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாமல் பல அதிகாரிகள் இருக்கின்றனர். இந்தத் திட்டம் கடந்த ஆண்டுடன் முடிந்துவிட்டதா கவும் சொல்கிறார்கள். ஆனால், இந்தத் திட்டம் இப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், வங்கி அதிகாரிகளை வற்புறுத்தி இந்தத் திட்டத்தில் சேர ஒவ்வொருவரும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
புதிதாக சேருபவர்கள் கவனிக்க! 

1. இந்த பாலிசிகளில் சேருவதற்கு எந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கி றீர்களோ, அந்த வங்கிக் கிளையைதான் அணுக வேண்டும்.

2. வங்கிக் கணக்கு எண், மின்னஞ்சல் முகவரி, ஏதாவது ஒரு அடையாளச் சான்று, முகவரிச் சான்று, ஆதார் (இருந்தால்), மொபைல் எண் போன்றவைகளை கட்டாயம் எடுத்துச் செல்லவும்.

3. எந்த திட்டத்தில் சேர இருக்கிறோமோ, அந்த  திட்டத்துக்குரிய  விண்ணப்பத்தையும் நாமே பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டு வங்கிக்குச் செல்வது நல்லது. பல வங்கிகளில் பிரின்டர் வேலை செய்யவில்லை, மின்சாரம் இல்லை, பிரின்டரில் டோனர் தீர்ந்துவிட்டது என்று சொல்லி நம்மை அலையவிடலாம். 

4. யாரை நாமினியாக நியமிக்க வேண்டும், நாமினி மைனராக இருக்கும்பட்சத்தில் மைனருக்கு யாரை காப்பாளராக நியமிக்க வேண்டும் என்பது போன்ற அதிமுக்கியமான விஷயங்களை வங்கிக்கு செல்வதற்குமுன்பே தீர்மானித்துக் கொண்டு செல்லவும்.
5. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர் 18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்கவேண்டும். பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். மேற்கூறிய திட்டங்களுக்கான, வயது வரம்பை பூர்த்தி செய்தவர்கள் எப்போது வேண்டுமானாலும், திட்டங்களில் இணையலாம்.

இந்த பாலிசிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியிடம் சமர்பித்தபின், அடுத்த இரண்டு அல்லது மூன்று வேலை நாட்களுக்குள் வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் முறையில் முதல் வருட பிரீமியம் வசூலிக்கப்படும். பிரீமியம் வசூலிக்கப்பட்டதற் கான எஸ்.எம்.எஸ், நாம் வங்கியிடம் கொடுத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். கூடவே, ஒரு அத்தாட்சி ஸ்லிப்பும் வழங்கப் படும். அதையும் கட்டாயம் வாங்கிக் கொள்வது அவசியம். இந்்த அத்தாட்சிக் கடிதம்தான் நாம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் சேர்ந்ததற்கான சான்று. அதோடு இந்த அத்தாட்சிக் கடிதம்தான் பாலிசிதாரரின் இன்ஷூரன்ஸ் சான்றிதழாகவும் கருதப்படும்.
குறைந்த பிரீமியத்தில் இழப்பீடு கிடைக்கும் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எல்லோரும் எடுத்துக் கொள்வது அவசியம். அதைவிட அவசியம், இந்த பாலிசியை எடுத்தபின், அது தொடர்பான விவரங்களை யும் நாமினி பற்றிய குறிப்புகளையும் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியப் படுத்துவது. செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா?
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய:

* PMSBY   http://jansuraksha.gov.in/Files/PMSBY/English/ApplicationForm.pdf#zoom=250

* PMJJBY  http://jansuraksha.gov.in/Files/PMJJBY/English/ApplicationForm.pdf#zoom=250 

ஆயுள் காப்பீட்டு பாலிசியில் இழப்பீடு கோரும்போது!
பி.எம்.ஜெ.ஜெ.வொய். திட்டத்தில் எளிமையாக க்ளெய்ம் பெறுவது எப்படி எனறு எல்.ஐ.சி வட்டாரத்தில் விசாரித்தோம்.

‘‘க்ளெய்ம் கோரும்போது இறப்புச் சான்றிதழ், இறந்தவரின் வங்கி பாஸ்புக் அல்லது திட்டத்துக்கு 330 ரூபாய் செலுத்தியதற்கான வங்கி ஆதாரம், (எஸ்.எம்.எஸ்.கூட எடுத்துக் கொள்ளலாம்), நாமினி மூலம் விண்ணப்பித்து கையெழுத்திட்ட இழப்பீட்டுப் படிவம், நாமினியின் வங்கிக் கணக்கு விவரங்கள், நாமினியின் வங்கிக் கணக்கு விவரங்களை உறுதிப்படுத்தும் விதத்தில் நாமினியின் வங்கி பாஸ்புக் அல்லது ரத்து செய்யப்பட்ட ஒரு காசோலையை கட்டாயம் இணைக்கவும். இறந்தவர் மற்றும் நாமினியின் ஆதார் அட்டை இருந்தால், அதையும் கட்டாயம் இழப்பீட்டுப் படிவத்துடன் இணைக்கவும்.

மேற்கூறியவை எல்லாம் இணைத்து எந்த வங்கியில் இன்ஷூரன்ஸ் எடுத்தோமோ, அதே வங்கிக் கிளையில் இவைகளை சமர்ப்பித்தால் போதும். க்ளெய்ம் தொகை சம்பந்தப்பட்ட நாமினியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.’’

தனிநபர் காப்பீட்டு பாலிசியில் இழப்பீடு கோரும்போது!

பி.எம்.எஸ்.பி.வொய் திட்டத்தில் எளிமையாக க்ளெய்ம் பெறுவது  எப்படி என்பதை குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜர் டி.ஏ.கேசவன் விளக்குகினார்.
விபத்து நடந்து நிரந்தர ஊனம் ஏற்பட்டிருந்தால் விபத்து ஏற்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர், பாலிசிதாரர் கையெழுத்திட்ட விண்ணப்பம், ஒருவேளை கைகள் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் கெஸட்டட் அதிகாரிகள் முன்னிலையில் பாலிசிதாரர் கைரேகை வைத்துக் கொள்ளலாம். வேறு விதமான விபத்தின் தன்மையைப் பொறுத்து பஞ்சநாமா மற்றும் எஃப்.ஐ.ஆர் தேவைப்படும். இழப்பீடு கோருபவரிடம் ஆதார் விவரங்கள் இருந்தால், கட்டாயமாக வங்கியிடம் சமர்பிக்கவும்.

இதுவே பாலிசிதாரர் இறந்துவிட்டால், அதற்கான இறப்புச் சான்றிதழ், எஃப்.ஐ.ஆர் விவரம், நாமினி பூர்த்தி செய்து கையெழுத்திட்ட இழப்பீட்டுப்  படிவம், நாமினியின் வங்கி விவரங்கள் மற்றும் அதை உறுதிப்படுத்தும் பாஸ்புக் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை போன்றவைகளை இணைத்து வங்கியிடம் சமர்பித்தாலே போதுமானது. வங்கி, இந்த விவரங்களை எல்லாம் உறுதிப்படுத்திவிட்டு, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் கொடுக்கும். அதன் பிறகு அடுத்த 7 - 15 நாட்களுக்குள் இழப்பீட்டை பரிசீலித்து பாலிசிதாரர் அல்லது நாமினிக்கு வழங்கப்படும்” என்று முடித்தார்.
மு.சா.கெளதமன்
நன்றி : விகடன் (பைனான்ஸ்) செய்திகள் - 10.05.2016


Monday, May 9, 2016

வீட்டுக்கடன் வாங்க


வீட்டுக்கடன் வாங்க என்ன (செய்ய) வேண்டும்?
மனை, வீடு வாங்க / கட்ட, ஃப்ளாட் வாங்க, இருக்கிற வீட்டை மேம்படுத்த / கூடுதல் அறைகள்/தளம் கட்ட.. இப்படி எல்லாத்துக்கும் கடன் வாங்கலாம்.
மனைப் பத்திரம்:
உங்களோட மனையை சார் பதிவாளர் அலுவலகத்துல பதிவு செய்து வாங்குன பத்திரம்.
தாய்ப் பத்திரம்:
இப்போ இருக்குறதுக்கும் முந்தைய மனை பத்திரம்.
வில்லங்கச் சான்றிதழ்:
இன்னைய நிலைமையில மனை உங்களுக்குதான் சொந்தம்ங்குறதை உறுதிப்படுத்துற சான்றிதழ் இது. சார் பதிவாளர் அலுவலகத்துல விண்ணப்பிச்சு வாங்கணும். குறைஞ்சது 13 வருஷத்துக்கும், அதிகபட்சம் 20 வருஷத்துக்கும் இந்த வில்லங்கச் சான்றிதழை வாங்கி வைச்சுக்குறது நல்லது.
சட்டக் கருத்து (லீகல் ஒப்பீனியன்):
இது வக்கீல்கிட்ட வாங்கவேண்டிய சான்றிதழ். இதை வாங்குறதுக்கு, மனை பத்திரம், ஒரிஜினல் வில்லங்கச் சான்றிதழ், தாய்பத்திரத்தோட ஜெராக்ஸ், அப்ரூவ்டு மனையா இருந்தா அதுக்கான லே-அவுட் வரைபடம்.. எல்லாத்தையும் கொடுக்கணும்.
மனை விலை மதிப்பீடு அறிக்கை:
நீங்க வீடு கட்டப்போற மனையோட சந்தை மதிப்பு என்ன, அரசு வழிகாட்டி மதிப்பு எவ்வளவு, இந்த ரெண்டின் சராசரி என்ன.. இதையெல்லாம் கணக்குப் பண்ணி, அங்கீகாரம் பெற்ற இன்ஜினீயர் ஒருத்தர் கொடுக்குற ரிப்போர்ட் இது.
அங்கீகரிக்கப்பட்ட பிளான்:
மாநகராட்சி/ நகராட்சி மாதிரியான உள்ளாட்சி அமைப்புகிட்ட வாங்கவேண்டிய கட்டட பிளான். கடன் வாங்கி வீடு கட்டுறதா இருந்தா முதல்லயே பிளான் போட்டு, உள்ளாட்சி அமைப்புகிட்ட அப்ரூவலுக்கு விண்ணப்பிச்சா... சீக்கிரம் வீட்டு வேலையை ஆரம்பிச்சிடலாம்.
கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு:
புதுசா வீடு கட்டுறதா இருந்தா அதுக்கான செலவு விவரங்கள்பத்தி விவரமா இன்ஜினீயர் தர்ற அறிக்கை. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுன்னா, அதை மதிப்பிட்டு இன்ஜினீயர் தரும் ரிப்போர்ட்.
வயதுக்கான ஆதாரம்:
கடனைத் திருப்பிச் செலுத்துற காலத்தை முடிவு செய்யறதுக்கு வயசு ரொம்ப முக்கியம். 10 அல்லது 12-ம் வகுப்பு மார்க் லிஸ்ட் அல்லது டி.சி-யே போதுமானதுதான். பொதுவா 21 வயசு முடிஞ்சிருந்தாதான் வீட்டுக்கடன் தருவாங்க. சில வங்கிகள் இதை 25 வயசுன்னு நிர்ணயிச்சிருக்கு. வீட்டுக்கடன் வாங்குறதுக்கான அதிகபட்ச வயசு 55.
வருமானச் சான்றிதழ்:
நீங்க வேலை பார்க்கிற அலுவலகத்தோட லெட்டர் பேடுல, உங்களோட சம்பள விவரங்களை தெளிவா குறிப்பிட்டு வழங்கப்படுற சான்றிதழ். பொதுவா, ஒரு நிறு-வனத்துல மூணு வருஷத்துக்கு மேல நிரந்தரப் பணியில இருக்குறவங்களுக்குத்தான் வீட்டுக் கடன் கிடைக்கும்.
வங்கி பாஸ்புக்:
கடந்த ஆறு மாச காலத்துக்கான வங்கி பாஸ்புக்கின் நகல்.
வருமான வரி செலுத்திய விவரம்:
வருமான வரித் துறை வழங்குற நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையின் நகல், வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செஞ்ச படிவத்தோட நகலையும் கொடுக்கணும். சுயதொழில் செய்யறவங்க இதை அவசியம் கொடுக்கணும்.

இருப்பிட முகவரிக்கான ஆதாரம்:
குடும்ப அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை.. இதுல ஏதாவது ஒண்ணோட ஜெராக்ஸ்.
புகைப்படம்:
மார்பளவு புகைப்படங்கள் 3-4 தேவைப்படும்.
இதையெல்லாம் தவிர, தேவைப்பட்டா கடனுக்கு ஜாமீன் குடுக்க யாரைச்சும் கேரன்டி கையெழுத்து போடச்சொல்லிக் கேட்க வாய்ப்பிருக்கு. வருமான வரி கட்டுற யாரும் இந்த கேரன்டி கையெழுத்துப் போடலாம். தேசிய சேமிப்பு பத்திரம், ஆயுள்காப்பீடு பத்திரம் இதையும் ஜாமீன் தொகைக்கு இணையா கொடுக்கலாம்.
கடனுக்கு அடமானமா சொத்து பத்திரத்தை வாங்கி வச்சுக்குவாங்க. கூடவே, சொத்து பேங்க்குல அடமானமா இருக்குற விவரத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிஞ்சிடுவாங்க. அடமானம் வைச்ச சொத்தை கடனை அடைக்கிறதுக்கு முன்னாடியே வித்துடக் கூடாது இல்லையா? அதுக்குத்தான் இது!
கட்டணங்கள்!
பரிசீலனைக் கட்டணம்:
வீட்டுக் கடன் விண்ணப்ப படிவத்தை பரிசீலனை செய்யறதுக்கும், இடத்தை நேர்ல வந்து பார்க்குறதுக்கும் வசூலிக்கிற கட்டணம் இது. எவ்வளவு கடன் தர்றதா ஒப்புதல் தர்றாங்களோ, அதுல சுமார் 0.5-1 சதவிகிதமா இது இருக்கும். அதுமட்டுமில்ல, லீகல் ஒப்பீனியன், இன்ஜீனியர் மதிப்பீட்டு அறிக்கை இவற்றுக்கும் கட்டணம் இருக்கு. இது கடன் தொகையைப் பொறுத்து மாறும். தோராயமா பார்த்தா இந்த வகைக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
சில வங்கிகள், அவங்களுக்குன்னு தனியா வக்கீல், இன்ஜினீ-யர்களை வச்சிருப்பாங்க. அந்த மாதிரி வங்கிகள்ல அவங்ககிட்டதான் ரிப்போர்ட் வாங்கித் தந்தாகணும். அப்ப, இந்த கட்டணங்களும் கடன் தொகையில சேர்ந்துடும். சில வங்கிகள் தனியே கட்டச் சொல்லும். எப்படிப் பார்த்தாலும் இந்த பரீசீலனைக் கட்டணமா கட்டுற பணத்தை, பெரும்பாலும் எந்த வங்கியும் திருப்பிக் கொடுக்குறது இல்லை. அதனால கடன் வாங்கற முடிவுக்கு உறுதியா வந்த பின்னாடிதான் பரீசீலனைக் கட்டணமெல்லாம் கட்டணும்.
கூடுதல் செலவுகள்!
இதெல்லாம் போக, வீட்டை உங்க பெயர்ல சார் பதிவாளர் அலுவலகத்துல பதிவு செய்ய தனியா செலவாகும். இந்தச் செலவு நகரங்கள்ல சில லட்ச ரூபாயைத் தாண்டிடுது. இந்தக் கட்டணத்துல 85% வரைக்கும் அதே வங்கியில், திருப்பிச் செலுத்துற தகுதி இருந்தால் கடனா வாங்கிக்க வசதி இருக்கு. இந்தக் கடன் வேணும்னா முன்கூட்டியே சொல்லிடணும். இதைக் கடன் தொகையோட சேர்த்து, அதுக்குத் தகுந்த மாதிரி இ.எம்.ஐ-யை மாத்துவாங்க.
புரோக்கர் மூலமா வீடு வாங்குனா சுமார் 2% கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும். தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு டெபாசிட், கடன் தொகை, வீட்டுக்கு காப்பீடுன்னு நிறைய மத்த செலவுகளும் இருக்கு. 'என்னப்பா இது.. இவ்வளவு செலவை சொல்லி பயமுறுத்துறாங்களே..'ன்னு நினைக்க வேண்டாம். எல்லாம் ஒரு முன்னேற்பாட்டுக்குதான்.
(நாணயம் விகடன் எல்.கே.ஜி. இணைப்பு புத்தகத்திலிருந்து...!)
-சி.சரவணன்
நன்றி :விகடன் செய்திகள் (பைனான்ஸ்) - 24.07.2015

கிராஜுவிட்டி


கிராஜுவிட்டி - என்ன செய்ய வேண்டும்?

கிராஜூவிட்டி என்றால் என்ன?
நிறுவனங்களில் வேலை செய்து மாத சம்பளம் வாங்கும் ஒரு சிலருக்கு, நிறுவனங்கள் வழங்கும் கிராஜூவிட்டியைப் பற்றியத் தெளிவு தேவைப்படுகிறது. நிறுவனங்களில் சேர்ந்து, நெடுங்காலமாக சிறப்பான முறையில் பணி புரிந்ததற்காக தனது ஊழியர்களுக்கு, நிறுவனங்கள் வழங்கும் ஒரு நன்றித் தொகையே கிராஜூவிட்டி என்று அழைக்கப்படுகிறது.
இந்த கிராஜூவிட்டி, பணியாளர்கள் நிறுவனங்களை விட்டு விலகும் போது வழங்கப்படுகிறது. பல காரணங்களுக்காக பணியாளர்கள் நிறுவனங்களை விட்டு விலகலாம். ஆனால் ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு இந்த கிராஜூவிட்டித் தொகை ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
கிராஜூவிட்டி பெற தகுதி வருமானவரி சட்டத்தின்படி, ஒரு ஊழியர் ஒருவர், ஒரு நிறுவனத்தில் சேர்ந்து 5 ஆண்டுகள் முழுமையாக பணிபுரிந்தாலோ அல்லது தான் ஓய்வு பெறும் வரை அங்கு பணிபுரிந்தாலோ அவர் கிராஜூவிட்டி பெற தகுதி பெறுகிறார்.
கிராஜூவிட்டி எப்போது வழங்கப்படுகிறது?
ஒரு நிறுவனம் குறைந்தது 10 ஊழியர்களையாவது தனது பே-ரோலில்(pay roll) வைத்திருக்க வேண்டும். அந்த ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாக இருக்கக் கூடாது. மாறாக அவர்கள் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களாக இருக்க வேண்டும். ஊழியர் ஒருவர் குறைந்தபட்சமாக 5 ஆண்டுகளாவது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும்.
ஒரு வேளை அந்த நிறுவனத்தில் பணி புரியும் காலத்தில் 5 ஆண்டுகளுக்குள்ளாகவே இறந்துவிட்டால், அவருக்கு விதிவிலக்கு உண்டு. ஆனால் அந்த ஊழியர் 1 ஆண்டாவது அந்த நிறுவனத்தில் முழுமையாகப் பணிபுரிந்து இருக்க வேண்டும்.
கிராஜூவிட்டிக்கு வரி செலுத்த வேண்டுமா?
ஆம். கிராஜூவிட்டி தொகைக்கு வரி செலுத்த வேண்டும். வருமானவரி தாக்கல் செய்யும் போது "இன்கம் ஃப்ரம் சேலரி" என்ற பகுதியின் கீழ் கிராஜூவிட்டித் தொகையைக் காண்பிக்க வேண்டும்.
ஒருவேளை ஒருவர் அரசு ஊழியராக இருந்தால், அவர் வாங்கும் கிராஜூவிட்டித் தொகைக்கு வருமானவரி சட்டம் 10வது பிரிவின் கீழ் விதிவிலக்கு உண்டு. எனவே கிராஜூவிட்டி விஷயத்தில், அரசு ஊழியர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஊழியரின் 15 நாள்களுக்கான சம்பளம் வீதம் கிராஜூவிட்டியாக் கணக்கிடப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகோ அல்லது அவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பணியில் இருந்து விலகும் போதோ அல்லது அவர் ஓய்வு பெறும் போதோ, அல்லது 1 ஆண்டு முழுமையாக பணி செய்து முடித்து இறந்துவிட்டோலோ வழங்கப்படுகிறது.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் - 08.06.2013

Sunday, May 8, 2016

வங்கியில் பயன்படுத்தும் வார்த்தைகள்


வங்கியில் பயன்படுத்தும் வார்த்தைகள் என்ன செய்ய வேண்டும்?

சென்னை: வங்கி சேவைகள் நம் வாழ்வின் முக்கிய பகுதிகளாக உள்ளன. ஏ.டி.எம்-களை பயன்படுத்தும் போது, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போதும், இணைய வழியாக பணத்தை பரிமாற்றம் செய்யும் போது என பல்வேறு இடங்களிலும் நமக்கு வங்கி சேவைகள் அவசியமாக உள்ளன.
இத்தகைய வங்கி சேவையை பயன்படுத்தும் போது வங்கியாளர்கள் நமக்கு தெரியாத சில வார்த்தைகளை பயன்படுத்துவர், அதை என்ன என்று நாம் குழம்பிகொள்ளும் நிலை ஏற்படும். அது மட்டும் இல்லைங்க வங்கி சேவை குறித்து நீண்ட வரிசைகளில் நின்று வங்கி அலுவலரை பார்க்கும் போது சொல்ல வேண்டிய வார்த்தைகளை மறந்து விடுவோம் இதில் இந்த அலுவலர் நம்மை ஏளனமாக பார்ப்பார்.
இது போன்ற சங்கடமான சூழ்நிலையை தவிர்க்க சில முக்கிய வங்கியியல் வார்த்தைகளையும் அதன் விளக்கங்களை இங்கு குறிப்பிட்டுள்ளோம். அதனை முழுமையாக படித்து வங்கி அதிகாரிகளிடம் தைரியமாக பேச துவங்கலாம்.

அடிப்படை விலை (Base Rate) 


தன்னிடம் உள்ள மிகவும் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களின் கடன்கள் மீது வங்கிகள் வசூலிக்கும் குறைந்தபட்ச தொகை தான் இந்த Base Rate. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி, இந்த பேஸ் ரேட்டிற்கு குறைவாக எந்த வங்கியும் கடன்களை வழங்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கடன் அளிக்கும் வங்கியில் பணி புரிபவராக இருந்தாலோ அல்லது தாங்கள் வைத்துள்ள டெபாசிட்டின் மேல் கடன் பெறும் சேமிப்பாளர்களுக்கும் பேஸ் ரேட்டிற்கு குறைவான விகிதத்திலும் கடன் கொடுக்கப்படுகிறது.


இணைப்பு கணக்கு (Linked Account) 
ஒரே வங்கியில் உள்ள ஏதாவது இரண்டு அல்லது அதற்கும் மேலான கணக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தப்பட்டு, அதன் மூலம் பணம் மின்னணு முறையில் பரிமாற்றம் செய்யப்படுவதை இந்த வார்த்தை குறிப்பிடுகிறது. இது போன்று குறிப்பிடத்தக்க வசதிகளை, பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகள் வங்கிகளில் உள்ளன.


செயல்பாட்டு கட்டணம் (Processing Fee) 

கடன் பெறுபவரிடமிருந்து கடன் வழங்கும் செயல்பாடுகளை செய்யும் பொருட்டாக வங்கி விதிக்கும் கட்டணம் தான் செயல்பாட்டு கட்டணம். கடனில் ஒரு சிறு சதவீதத்தை இவ்வாறு கட்டணமாக விதிப்பார்கள். திருவிழா போன்ற நாட்களில், வாடிக்கையாளர்களை கவரும் வியாபார உத்தியாக, இந்த கட்டணங்களை அவர்கள் தற்காலிகமாக விலக்கிக் கொள்வர்.


பிடிப்பில்லாத கணக்கு (No-Frills Account) 
நோ-ஃபிரில்ஸ் அக்கவுண்ட் என்றால் ஜிரோ பேலன்ஸ் கணக்கு என்று அர்த்தமாகும். இந்த வகை சிறப்பு கணக்குகளில் நீங்கள் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லை. இலவசமாக நீங்கள் செக் புக் பெறுவதை கட்டுப்படுத்தவோ அல்லது இணைய வழி வங்கி பரிமாற்றங்களையோ இது கட்டுப்படுத்துவதில்லை.


எம்ஐசிஆர் (Magnetic Ink Character Recognition) 

காசோலைகளிலும் மற்றும் கேட்பு வரைவோலைகளிலும் அச்சிடப்பட்டிருக்கும் 9 இலக்க எண் தான் மை-கெர்  என்று உச்சரிக்கப்படும் MICR குறியீடு ஆகும். இது காந்த சக்தியுடைய சிறப்பு வகை மையினால் அச்சிடப்பட்டிருக்கும். இதன் 9 இலக்கங்களில் முதல் 3 இலக்கங்கள் நகரத்தையும், 4 முதல் 6 வது இலக்கங்கள் வங்கியையும் மற்றும் கடைசி 3 இலக்கங்கள் குறிப்பிட்ட அந்த வங்கியின் கிளையையும் குறிக்கின்றன. இந்த குறியீடுகளின் உதவியால் தவறுகள் ஏற்படுவது குறைக்கப்படுவதுடன், பண பரிவர்த்தனைகள் வேகமாகவும் நடைபெறுகின்றன.


தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) 
இதன் (National Electronic Funds Transfer) பெயரைப் போலவே ஏதாவது மின்னணு முனையத்தின் உதவியுடன் - தொலைபேசி அல்லது தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டு பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. அதே வங்கி அல்லது மற்ற வங்கிகளுடன் இந்த வகையான பண பரிமாற்றங்கள் செய்ய நெஃப்ட் உதவுகிறது. நெஃப்ட் முறையில் பணத்தை பரிமாற்றங்கள் செய்யும் போது அந்த செயல்பாடு குழுவாக நடைபெறும், ஆனால் ஆர்டிஜிஎஸ் தனித்தனியாக பரிமாற்றம் நடைபெறும். எனவே நெஃப்ட் செயல்பாடு வேகம் குறைவாக இருக்கும்.

இந்திய நிதி கணிணி குறியீடு (Indian Financial System Code) 

இந்த 11 இலக்கங்கள் கொண்ட எழுத்து மற்றும் எண் கொண்ட குறியீடு தான் வங்கிகளை அடையாளம் காண உதவும் IFSC குறியீடு ஆகும். முதல் நான்கு எழுத்துக்களும் வங்கியின் குறியீடாகவும், 5-வது எண் கட்டுப்பாட்டு எழுத்தாகவும், அடுத்த 6 எண்கள் வங்கியின் கிளையையும் குறிப்பிடுகின்றன. நீங்கள் NEFT அல்லது RTGS முறையில் பணத்தை பரிமாற்றம் செய்யும் போது, பணம் பெறக்கூடிய வங்கியின் IFSC குறியீட்டை அறிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

காசோலையின் இடதுபுறத்தில் கீழே இது காணப்படும்.

டிராவலர்ஸ் செக் (Travellers Check)

முன்கூட்டியே அச்சிடப்பட்ட, ஒரு குறிப்பிட்ட பண மதிப்பு உள்ள வங்கியின் காசோலைகள் அதில் கையெழுத்து போடும் நபர் வேறொருவருக்கு பணம் தருவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த காசோலைகள் தான் டிராவலர்ஸ் செக் என்று அழைக்கப்படுகின்றன. பயணம் செய்யும் போது பணத்தை கையில் எடுத்துச் செல்வதற்கு பதிலாக பயன்படுத்தும் வகையில் இந்த காசோலைகள் பயன்படுகின்றன. இந்த காசோலைகள் தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அதனை கொடுத்த வங்கியினால் வேறு காசோலை தரப்படும்.

அட்டை சரிபார்க்கும் மதிப்பு (CVV) 

உங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் கையெழுத்து போடும் பகுதியைத் தொடர்ந்து 3 இலக்க எண் இருக்கும் அது தான் அட்டையை அடையாளம் காணும் எண் அல்லது CVV ( Card Verification Value) எண் ஆகும். தவறுகளை தடுக்கவும் மற்றும் அதே சமயம் நீங்கள் அட்டையைப் பயன்படுத்தி பண பரிமாற்றங்கள் செய்யவும் இந்த எண் உதவுகிறது. நீங்கள் இணைய வழியிலோ அல்லது தொலைபேசி வழியாகவோ அட்டையை பயன்படுத்தும் போது இந்த எண் கண்டிப்பாக தேவைப்படும்.


எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் (ECS) 

உங்களுடைய பொறுப்பில், உங்களுடைய கணக்கில் பணம் நேரடியாக வரவு வைக்கப்படுவதற்கு வங்கிகள் வழங்கும் சேவை தான் ECS (Electronic Clearing Service) என்று அழைக்கப்படுகிறது. பரஸ்பர நிதிகள், மாதாந்திர இ.எம்.ஐ கட்டணங்கள் அல்லது உங்களுடைய மாதாந்திர இன்டர்நெட் கட்டணங்கள் ஆகியவற்றை இந்த பொறுப்பு சார்ந்திருக்கும். அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் பணத்தை செலுத்த வேண்டும் என்று உங்களுடைய வங்கிக்கு நீங்கள் ஒரு ஆணையை கொடுக்க வேண்டும்.


ஆர்டிஜிஎஸ் (RTGS) 

ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு, அதே நேரத்தில்  மற்றும் மொத்தமாக பரிமாற்றம் செய்யப்படும் விதத்தில் வழங்கப்படும் சேவை தான் RTGS சேவை ஆகும். அதன் முழு வரிவாக்கம் Real Time Gross Settlement ஆகும். இதில் கால தாமதம் ஏற்படுவதில்லை. Gross என்றால் வேறு எந்த பரிமாற்றத்துடனும் சேர்க்காமல் தனியாக செய்யப்படுகிறது என்று பொருளாகும்.


பேப் (PAP) அல்லது எம்சிசி (MCC) 

காசோலைகள் இந்தியாவில் எங்கு வழங்கப்பட்டிருந்தாலும், எந்த இடத்தில் வேண்டுமானலும் பணமாக மாற்றக் கூடிய காசோலைகளாக PAP (Payable at Par) அல்லது MCC (Multi-City Cheques) காசோலைகள் உள்ளன. இந்தியா முழுவதுமாகவே அவை உள்ளூரில் மாற்றத்தக்க காசோலைகளாகவே கருதப்படுகின்றன. வரவு வைக்கப்பட்ட அதே நாளில் கணக்கில் பணம் கொண்டு வரப்படவும் மற்றும் சாதாரணமாக பிற காசோலைகளில் வரும் பிற கட்டணங்கள் எதுவும் இல்லாமலும் இந்த காசோலைகள் வழங்கப்படுகின்றன.


சிபில் (CIBIL)

ஒரு தனிநபர் வாங்கிய கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள் மற்றும் பிற தரப்பட அனைத்து நிலுவைகள் ஆகியவற்றையே கடன் வரலாறு குறிப்பிடுகிறது. இந்திய கடன் தகவல் மையம் (Credit Information Bureau of India Limited) என்று அழைக்கப்படும் CIBIL நிறுவனம் இந்தியாவில் தனிபர்களின் கடன் அறிக்கைகளை வழங்குகிறது. ஒரு தனிநபரின் கடந்த கால மற்றும் நடைமுறையில் இருக்கும் கடன்கள் மற்றும் கிரெடிட் அட்டைகள் பற்றிய தகவல்கள் இந்த அறிக்கையில் இருக்கும்.


சிபில் ஸ்கோர்

கடன் பெற விரும்புபவர்களுக்கு சிபில் ஸ்கோர் நல்ல மாதிரியான கடன் வரலாறு இருக்க வேண்டும். இந்த கடன் வரலாற்றில் உங்களுடைய கடனை திரும்ப செலுத்திய அல்லது செலுத்தாமல் தவற விட்ட தகவல்கள் இருக்கும்.


கேஒய்சி (Know Your Customer) 
இந்திய ரிசர்வ் வங்கியால் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் முன்மொழியப்பட்ட 'உங்களுடைய வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' என்ற விதிமுறை, வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளரின் உண்மையான அடையாளத்தை தெரிந்து கொள்ள உதவுகின்றன. 

அடிப்படை அடையாள தகவல்களை சேகரிப்பதும் மற்றும் ஆய்வு செய்வதும் மற்றும் வாடிக்கையாளர் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை அவருடைய பரிமாற்றங்களுடன் கவனிப்பதும் மற்றும் அவருடைய மற்றும் உடன் இருப்பவர்களைப் பற்றிய தகவல்களை பதிவு செய்வதும் இந்த KYC கட்டுப்பாட்டில் இருக்கும்.


கேஒய்சி-யின் பயன்பாடு 
இந்த கேஒய்சி படிவ முறை பணத்தை மோசடி (Anti-Money Laundering) செய்வதை தவிர்க்கவும் அல்லது கவனிக்கவும் மற்றும் நிதியை அடிப்படையாக கொண்ட தீவிரவாதத்தை (combat the financing of terrorism) எதிர்கொள்ளவும் உதவுகிறது.


நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள் - 04.05.2016