disalbe Right click

Tuesday, May 17, 2016

கடன் வாங்கி கார் வாங்கலாமா?


கடன் வாங்கி கார் வாங்கலாமா - என்ன செய்ய வேண்டும்?
யணிகள் கார் விற்பனை இந்த வருடம் அதிகரித்துள்ளது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை, குறைவான விலை, சுலபமான தவணைக் கடன் போன்ற காரணங்களினால் கார் வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடன் மூலம் கார் வாங்குவது சரியா, கடன் மூலம் கார் வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், இதன் மூலம் வரும் சிக்கல்களுக்கு எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்துப் பார்ப்போம்.
கார் வாங்கும்முன், அதை வாங்கி வைத்துக்கொள்கிற அளவுக்கு ஒருவருக்கு  வருமானம் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். ஒருவரது   வருமானம் கணிசமாக இருந்து, குறிப்பிட்ட அளவு பணம் உபரியாக மாதம்தோறும் மிஞ்சும்பட்சத்தில் கடன் வாங்கி கார் வாங்குவதில்  தவறில்லை. ஆனால், வாழ்க்கையில் அவசியம் நிறைவேறியிருக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் நிறைவேறாத நிலையில், கடன் மூலம் கார் வாங்க வேண்டிய அவசியமில்லை.
அடிப்படை தேவைகள்!
கார் வாங்கும்முன், நீங்கள் சொந்தமாக வீடு வாங்கிவிட்டீர்களா, இதற்கான கடனை முழுவதுமாக திரும்பச் செலுத்தும் திறன் உங்களுக்கு இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். காரணம், வீடு என்பது அனைவருக்கும் அவசியம் தேவை. தவிர, அதன் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும். ஆனால், கார் என்பது தேயும் சொத்து. அதன் மதிப்பு குறையவே செய்யும்.   எனவே, சொந்த வீடு வாங்காதவர்கள், முதலில் அதை வாங்கிவிட்டு, பிற்பாடு கார் வாங்க முயற்சிக்கலாம்.
ஓய்வுக்காலம்!
நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமிப்பது அவசியம். கணவன் - மனைவியின் ஓய்வுக் காலத் தேவையை நிறைவேற்றாமல், கார் வாங்க நினைப்பது சரியல்ல.   
பிள்ளைகளின் படிப்பு!                   
   நம் பிள்ளைகளுக்கு நாம் தரும் மிகப் பெரிய சொத்து, அவர்களுக்கு அளிக்கும் கல்விதான். பிள்ளைகளின் உயர்கல்விக்குத் தேவையான பணத்தை போதுமான அளவுக்கு சேர்த்தபின்போ அல்லது அதற்கான மாதச்  சேமிப்பை ஒதுக்கியபின்போ கார் வாங்கினால் மகிழ்ச்சி. கடனில் கார் வாங்கிவிட்டு, பிள்ளைகளின் படிப்புக்கும் கல்விக் கடன் வாங்கி னால், இரண்டு கடனுக்கும் வட்டி கட்ட வேண்டியிருக்கும். இதனால் நம் வருமானத்தில் பெரும்பகுதி வட்டி கட்டவே சரியாக இருக்கும்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
இன்றைய நிலையில் மருத்துவச் செலவுகளை சமாளிக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியும் ஆயுள் பாதுகாப்புக்கு ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியும் மிக அவசியம். இதற்கான ஏற்பாடு களையும் ஒருவர் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியபின்பு, உங்களுக்கு வேறு ஏதாவது கடன் இருக்கிறதா என்று பாருங்கள். இப்படி வாங்கும் கடன் அனைத்தும் (கார் கடன் உள்பட) உங்கள் மொத்த வருமானத்தில் 40-50 சதவிகிதத்துக்குக் குறைவாக இருப்பது நல்லது.
எதிர்கால சம்பள உயர்வு!
தற்போது சம்பளம் குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் சம்பளம் உயர்ந்து, வருமானம் அதிகரிக்கும். அதனால் கார் கடனுக்கான தவணையை சமாளித்துக் கட்டி விடலாம் என்கிற எதிர்பார்ப்பில்  சிலர் கார் வாங்குகிறார்கள்.  எதிர்காலத்தில் சம்பள உயர்வு வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்பதால், முன்கூட்டியே கார் கடன் வாங்குவது தவறு.
கூடுதல் செலவு!
கடன் வாங்கி கார் வாங்கும்போது,   வீட்டில் கார் நிறுத்துவதற்கான இடம் இல்லை என்றால் பார்க்கிங்குக்கு வாடகை வேறு தரவேண்டும். காரை சாலையோரத்தில் நிறுத்தும்போது, பலவகையிலும் சேதம் ஆவதற்கு வாய்ப்புண்டு. இதனாலும் செலவு ஏற்படும்.
இன்ஷூரன்ஸ் க்ளைம்!
காருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இன்ஷூரன்ஸில் க்ளைம் செய்யும் போது குறைவான தொகைதான் கிடைக்கும். மேலும், பாதுகாப்பு இல்லாமல் காரை பார்க் செய்யும்போது ஏற்படும் அசாம்பவிதங்களுக்கு 50 சதவிகித தொகைக்குதான் க்ளைம் கிடைக்கும்.
இதெல்லாம் பொதுவான செலவுகள்தான். கார் வாங்கியபின்  வரும் குறிப்பான செலவுகள் பற்றி கூறினார் ஜெயின் கார் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆல்ரின் டேவிட்.
பராமரிப்புச் செலவு!
கார் வாங்கியவுடனே அதில் சில கூடுதல் வசதிகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதாவது, ஸ்ட்ரீயோ, பவர்டோர் போன்ற இந்த வசதிகளுக்கு ரூ.10-12 ஆயிரம்  செலவாகும்.
10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை காரை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும். இலவச சர்வீஸ்களில் இதற்கான செலவு ரூ.2-3 ஆயிரம் செலவில் முடிந்து விடும். அதற்குப்பிறகு செய்யும் சர்வீஸ்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.8-10 ஆயிரம் செலவாகும். இதுவே 50-75 ஆயிரம் கிலோ மீட்டருக்குப் பிறகு ரூ.15 ஆயிரம் வரை  செலவாகவும் வாய்ப்புள்ளது. எனவே, மாத பட்ஜெட்டில் கார் சர்வீஸுக்காக ரூ.1,500 தனியாக ஒதுக்கவேண்டியிருக்கும்.
வசதி Vs செலவு!
கார் வாங்கும்போது முதலில் அலுவலகத்துக்கு மட்டும் என்று நினைத்து வாங்குவோம்.
பிறகு, குடும்பத்துடன் வெளியே செல்லும் போது காரை எடுத்துக்கொண்டு போவோம். இதனால் கூடுதல் செலவுதான் ஏற்படும். இதனால் ஒரு மாதத்துக்கு 300-400 கிலோ மீட்டர் செல்ல நினைத்து, மாதக் கடைசியில் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக காரை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
டீசல், பெட்ரோல் செலவு!
கார் வாங்கும்போது லிட்டருக்கு 15 கிலோ மீட்டர் கிடைக்கும் எனக் கூறுவார்கள். சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் 12-13 கிலோ மீட்டர்தான் கிடைக்கும். அதிக கிலோ மீட்டர் கார் ஒட்டும்போது எரிபொருளுக்கான செலவு அதிகமாகும். பிறகு இது அத்தியாவசிய செலவாக மாறிவிடும்.
இந்த செலவுகளை எல்லாம் சமாளிக்கக்கூடிய அளவுக்கு உங்களிடம் வருமானம் இருந்தால் மட்டுமே, நீங்கள் கார் வாங்கலாம். இல்லாவிட்டால், கார் வாங்கும் ஆசையை தற்காலிகமாக ஒத்தி வைப்பதே சரி!
யாருக்கு எந்த கார்?
கார் வாங்கும்போது உங்களின் பயன்பாடு என்ன என்பதைப் பொறுத்து காரை தேர்வு செய்வது நல்லது. அதாவது, அடிக்கடி வெளியூர் அல்லது அதிகத் தூரம் பயணம் செய்பவர்கள் டீசல் காரை தேர்வு செய்வது நல்லது. ஆனால், பெட்ரோல் காரைவிட டீசல் காரின் விலை 1 - 2 லட்சம் ரூபாய் கூடுதலாக இருக்கும். பெட்ரோலின் விலை அதிகம். டீசல் விலை குறைவு. எனவே, டீசல் காரை தேர்ந்தெடுப்போம் என நினைக்கக்கூடாது. டீசல் காரில் பராமரிப்புச் செலவு அதிகமாக இருக்கும்.
இரா.ரூபாவதி
நன்றி : நாணயம் விகடன் - 31.05.2016

வாரிசு சான்றிதழ் - கேள்விகள்-பதில்கள்


வாரிசு சான்றிதழ் - கேள்விகள்-பதில்கள் - என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்
வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?
ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.
வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?
நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.
எங்கே விண்ணப்பிப்பது?
வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் மற்றும் ஜெராக்ஸ் கடைகளில்  கிடைக்கிறது.
வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் நகல்
வாரிசுகளின் இருப்பிடச் சான்றிதழ் நகல்
எவ்வளவு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?
ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உடனடியாக இறப்பைப் பதிவு செய்ய முடியாத நிலையில் அதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். 
ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ஆனால், அதற்கு அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று விண்ணப்பித்து, வழக்கறிஞர் மூலமாக பிரபல தமிழ் நாளிதழில் வாரிசு சான்றிதழ் கோரியுள்ள விளம்பரத்தை வெளியிட்டு, 15 நாட்களுக்குள் ஆட்சேபணை யாரும் தெரிவிக்காத பட்சத்தில் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் அதனை வட்டாட்சியர் அவர்களிடம் சமர்ப்பித்து சான்றிதழ் பெறமுடியும்.
சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால்?
ஒருவேளை பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால் அவரின் இறப்புப் பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் இறப்புப் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழைப் பதிவுத்துறையில் பெற்று நீதிமன்றத்தில் கொடுத்தால் நீதிமன்றம் இறப்புச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிடும்.
விண்ணப்பித்து எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்?
விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தாமதமாவதற்கான அல்லது மறுப்பதற்கான காரணத்தை வட்டாட்சியர் அவர்கள் கூற வேண்டும்.
எப்போது மறுக்கப்படும்?
இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது, தத்து எடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம். நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.
இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)
இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.
எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள்/முதலீடுகள் முதலியவற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.
மாற்று வழி
இறங்குரிமை சான்றிதழ் பெறுவதற்கு 20 ரூபாய் பத்திரத்தாளில் ஒன்றில் இறந்தவருடைய வாரிசுகள் அனைவரும் தங்களுக்குள் ஒருவரை ஒரு மனதாக தேர்ந்தெடுத்து, அவரிடம் பண பலன்களை அல்லது வாரிசுக்கான வேலையை கொடுப்பதற்கு தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பரிசீலணை செய்து அவர் சான்றிதழ் வழங்குவார்.
ஒருவர் காணாமல் போயிருந்தால்..?
வாரிசுதாரர்களில் ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர, அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து புகார் அளித்து, காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, ‘அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்.

எப்போதெல்லாம் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்?
குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து அவர்களுக்குள் வாரிசு குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிறபோதும், சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 
இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்.
குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்கு பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.
குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார்.
போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றதை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்.
நன்றி : புதிய தலைமுறை - 19.10.2013

வாட்ஸ்அப்பில் வீடியோ ஃகால்


வாட்ஸ்அப்பில் வீடியோ ஃகால் - என்ன செய்ய வேண்டும்?

வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் அம்சத்தினை வழங்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ கால் சோதனையானது பீட்டா பதிப்புகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

வாட்ஸ்ஆப் செயலியின் போன் ஐகானை க்ளிக் செய்து வீடியோ கால் மேற்கொள்ள முடியும். முன்னதாக வாய்ஸ்கால் செய்ய வழங்கப்பட்ட இந்த ஐகான் மூலம் வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் என இரு அம்சங்களை வழங்கும். தற்சமயம் வரை இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

முயற்சி 
வாட்ஸ்ஆப் வீடியோ கால் அம்சத்தினை உடனடியாக பயன்படுத்த விரும்புவோர் தற்சமயம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு கருவிகளில் முயற்சிக்க முடியும்.
செயலி
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் தங்களது ப்ளே ஸ்டோர்களில் இருந்து பூயா எனும் செயலியை கொண்டு பயன்படுத்த முடியும். 

காண்டாக்ட்

இந்த செயலியை இன்ஸ்டால் செய்ததும் வாட்ஸ்ஆப் காண்டாக்ட், புகைப்படம், மீடியா, கேமரா, வை-பை போன்றவைகளை ஆய்வு செய்யும். 

வீடியோ கால் 
வீடியோ கால் அம்சத்தினை க்ளிக் செய்தவுடன் காண்டாக்ட்களை இணைக்க லின்க் அனுப்பப்படும். ஒரு வேளை வீடியோ கால் செய்யும் போது செயலியை க்ளோஸ் செய்தால் வீடியோ கால் வாய்ஸ் கால் போன்று மாற்றப்பட்டு விடும்.

க்ரூப் வீடியோ கால் 
பூயா செயலியை பயன்படுத்தி க்ரூப் வீடியோ கால் செய்யும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அம்சம் பயன்படுத்த கருவியில் பூயா செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Written By: Meganathan

நன்றி : கிஸ்பாட் » News - 16.05.2016





Saturday, May 14, 2016

கொளுத்தும் வெயில்! குழந்தைகளை காக்க


கொளுத்தும் வெயில்! குழந்தைகளை காக்க என்ன செய்ய வேண்டும்?

வெயில் அனலாகக் கொதிக்கிறது. வெளியே சில நிமிடங்கள் நின்றால், அப்படியே உருகி ஓடிவிடுவோமோ என்கிற அளவுக்குச் சுட்டெரிக்கிறது அக்னி. பெரியவர்களுக்குச் சரி... பள்ளி விடுமுறையில் விளையாட நினைக்கும் குழந்தைகளுக்கு? சித்திரை வெயிலில் இருந்து சிறுவர் - சிறுமியரைப் பாதுகாக்க முத்தான யோசனைகளைச் சொல்கிறார் சருமப் பாதுகாப்பு நிபுணர் ஜி.ஆர்.ரத்னவேல் 
நம் மொத்த உடல் எடை 70 கிலோவாக இருந்தால், அதில் 5.5 கிலோ சருமத்தின் எடைதான். அதாவது 12-ல் ஒரு பங்கு சருமத்தின் எடை. ஒரு சிறுவனின் எடை 12 கிலோவாக இருந்தால், அதில் ஒரு கிலோ தோலின் எடை. கைக்குழந்தை மூன்று கிலோ எடை இருந்தால் அதில் 500 கிராம் வரை தோலின் எடை. நம் உடலில் தோல்தான் பெரிய உறுப்பு. 70 கிலோ எடை உள்ளவர்களின், 5.5 கிலோ சரும எடையில், 2/3 பாகம் தண்ணீர்தான் இருக்கும். தண்ணீர்ச் சத்துதான் நம் சருமத்துக்கு அழகூட்டுகிறது. சருமத்துக்குத் தேவையான பாதுகாப்பைத் தருகிறது. உடலில் சரியான அளவில் நீர்ச்சத்து இருந்தால் வயதாவதுகூட தள்ளிப்போகும். தண்ணீர்க் குறையும்போதுதான் தோல் வறட்சி அடையும்; சுருங்க ஆரம்பிக்கும்; வயதானதற்கான அறிகுறிகள் தென்படும்.
கோடைக் காலத்தில் நம் உடலில் இருந்து, அதிகமாகத் தண்ணீர் வெளியேறிவிடுகிறது. இதற்குக் காரணம் வியர்வை. இதைச் சமன்செய்ய, தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
பொதுவாக ஒரு மனிதருக்குத் தேவையான தண்ணீரின் அளவு  1.5 முதல் 2 .5 லிட்டர் ஆகும். இதையே வெயில் காலத்தில் இரண்டு மடங்காக்கி குடிக்க வேண்டும். இல்லை என்றால் உடல் நிலை பாதிக்கும்.
வெயில் காலத்தில் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் பாக்டீரியல், ஃபங்கஸ் மற்றும் வைரல் பிரச்னைகள் வரும்.
பாக்டீரியல்
வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அதிகம் வருவது வேர்க்குரு பிரச்னைகள்தான். இதன் ஆரம்பம்  வியர்வைக் குழாயில் அடைப்பு ஏற்படுவதே. வியர்வை வெளியே வராமல் இருந்துவிட, வியர்வை உள்ளே தங்கிவிடுவதால், வியர்வைச் சுரப்பி வீங்க ஆரம்பிக்கும். அதன்பின் சிறு சிறு கொப்புளம் வந்துவிடும். அதைக் குத்திப் பார்த்தால் அதனுள் தண்ணீர்தான் இருக்கும். எரிச்சல் அதிகரிக்க, குழந்தை அரிப்பு தாளாமல் சொறிய ஆரம்பிக்கும். இதனால் இன்ஃபெக்ஷன் பரவி வேனல் கட்டியாகிவிடும்.
உடனே அதைச் சரிசெய்வதாக நினைத்து சுண்ணாம்பு, நாமக்கட்டி தடவுவார்கள் ஆனால், அப்படிச் செய்யக் கூடாது. சிலர் குளிர்சியாக இருக்கட்டும் என்று சந்தனம், மஞ்சள், பயத்தம் மாவு அல்லது வியர்க்குரு பவுடர்களைக் குழந்தையின்மேல் அப்புவார்கள். அப்படிச் செய்யவே கூடாது. அது வியர்வைக் குழாயின் அடைப்பை மேலும் அதிர்கரித்துவிடும். அடைப்புதான் பிரச்னை. எனவே அடைப்பை நீக்கவேண்டும். கேலமைன் லோஷன் பயன்படுத்தினால் வியர்க்குரு வேனல் கட்டி ஆகியவை வராது. வேனல்கட்டி இருந்தாலும் குணமாகிவிடும். வேறு எதையும் பயன்படுத்தாமல் கேலமைனை மட்டுமே காலையும் இரவும் தடவி வர, நல்ல பலன் கிடைக்கும்.
ஃபங்கஸ்
எங்கே எல்லாம் தண்ணீர் நிற்குமோ அங்கே பூஞ்சைத் தொற்று வந்துவிடும். குழந்தைங்களுக்கு எங்கே ஈரம் இருக்கும் என்றால் நாப்கின் ஏரியா மற்றும் அக்குளில்தான். நாப்கின் போட்டுவிடும்போது அந்தப் பகுதியில் காற்று புகாது. வியர்வை அந்த இடத்தில் நிற்க, பூஞ்சைத் தொற்று உடனே வந்துவிடும். வெயில் காலங்களில் குழந்தைக்கு நாப்கின் அணிவிப்பதைக் கூடுமானவரையில் குறைத்துக்கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் சிவப்பு நிறத்தில்  இன்பெக்ஷன் வந்துவிட்டால், அங்கு உடனடியாக ஆன்டிஃபங்கல் பவுடரைத் தடவிவிட வேண்டும். இது வியர்வையை நன்கு உள்வாங்கும். இது ஃபங்கஸை மேலும் வளர விடாது தடுக்கும்.
வைரஸ்
குழந்தைகளுக்கு வெயில் நேரத்தில் அதிகம் வரக்கூடிய வைரஸ் நோய்களில் குறிப்பிடத்தக்கது அம்மை. அம்மை வருவதற்கு மூன்று, நான்கு நாட்கள் முன்பே காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஆரம்பிக்கும். பிறகு தோலில் எரிச்சலும், அரிப்பும் ஏற்பட்டு, முகம், கழுத்து, முதுகு, மார்பு என்று உடல் முழுவதும் கொப்புளங்கள் வரும். அம்மைக்கு என்றே தனியாக மாத்திரைகள், சிரப், ஆயின்மென்ட்டுகள் இருக்கின்றன. டாக்டரிடம் முதலிலேயே காட்டி சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோயின் வீரியத்தில் இருந்தும், பக்க விளைவுகளில் இருந்தும் தப்பலாம்.
உமா ஷக்தி 


 அதிகப்படியாகத் தண்ணீர்க் குடிக்கவேண்டும்
 வெயில் காலத்தில் குழந்தையை இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பாட்ட வேண்டும்.
வியர்க்குரு பவுடர் அல்லது டால்கம் பவுடரைப் பூசி வியர்க்குரு குழாய்களின் அடைப்பைக் கூட்டக் கூடாது
இவற்றைப் பின்பற்றினால்போதும்... குழந்தை நிம்மதியாகத் தூங்கும்.
நன்றி : டாக்டர்விகடன் - 16.05.2013

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்கள்


வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்கள்

''கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். இந்தக் காலக்கட்டத்தில் நம் உடல், நம்முடைய கட்டுக்குள் இருக்காது. நாள் முழுக்க வேலை செய்ததுபோன்ற உணர்வு இருக்கும். அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும். தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தை அதிகப் பாதிப்புக்கு உள்ளாகலாம். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் என்பதும் சற்றுப் பிரச்னைதான். வேலைப் பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்குப் போதிய ஆக்ஸிஜன், ரத்தம், சத்துக்கள் கிடைக்காமல் போகும். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்'' என்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பிரேமலதா.

உணவு
கர்ப்பக் காலத்தில் செரிமான மண்டலம் மெதுவாகத்தான் இயங்கும். குழந்தையின் வளர்ச்சியால் வயிறும் பெரிதாகிக்கொண்டே போகும். இதனால், ஒரே நேரத்தில் நன்றாகச் சாப்பிட முடியாது. ஆனால், இந்தத் தருணத்தில்தான் உடலுக்கு அதிக அளவு சத்துக்கள் தேவைப்படும். எனவே, மூன்று வேளை என்பதை, சிறிது சிறிதாகப் பிரித்து ஆறு வேளைகளாகச் சாப்பிடுங்கள். சரியான நேரத்தில், போதிய இடைவெளியில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் என்பதை மனதில்கொள்ள வேண்டும்.
வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப் பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், எடுத்துச்செல்ல வேண்டும். பழங்களைக் கடித்துச் சாப்பிடுவது நல்லது. முடியாதபட்சத்தில் ஜூஸாகச் செய்து சாப்பிடலாம். உடல் வறட்சி நீங்குவதுடன் வயிறும் நிறையும்.  
எப்போதும் காய்ச்சி ஆறவைத்த நீரை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.  
உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிக வேலைச் சுமையின்போது, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.  
நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். இதனால், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனவே, எப்போதும் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைவைத்துக் கொண்டு, வயிற்றைக் காயப்போடாமல், பசிக்கும்போது சாப்பிடுவது அவசியம்.
இரவில் ஆவியில் வேகவைத்த அல்லது எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், வறுத்த, பொரித்த, அதிகம் காரம், எண்ணெய் உணவுகளைச் சாப்பிடக் கூடாது.  
உடற்பயிற்சி
அலுவலகத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் காலில் ரத்தம் தங்குதல், வெரிகோசிஸ் வெய்ன், ரத்தம் கட்டிப்போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்கான வாய்ப்பை நடைப்பயிற்சி தடுக்கிறது. கடினமான உடற்பயிற்சிகள், அதிக எடைகொண்ட பொருள்களைத் தூக்குவது போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், நல்ல வெளிச்சமான பகுதியில் காலாற சிறிது நேரம் நடக்கலாம். கடின வேலைகளைத் தவிர்த்து, முடிந்தவரை கர்ப்பக் காலத்தில் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.  
அலுவலகத்தில் போதிய இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஓய்வாக அமர்ந்து மனதை அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது, வேலையால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்க உதவும்.
பயணம்
வேலைக்குச் செல்லும்போது, பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம், இறுக்கத்தைத் தவிர்க்கலாம்.
பஸ்ஸில் அலுவலகம் செல்லும்போது குமட்டல், வாந்தி, சோர்வு ஏற்படலாம்.  தானாகவே மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது.    
பேருந்து, அலுவலகம் என எந்த இடத்திலும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து நிற்பது நல்லதல்ல. கால் நரம்புகள் சுருண்டுகொள்ளும். கெண்டைக்கால் வலி வரலாம். Deep Vein Thrombosis பிரச்னை ஏற்படும். உட்கார்ந்து பயணிப்பது நல்லது. வீடு திரும்பியதும் மிதமான வெந்நீரில் கால்களைவைத்து எடுக்கவும். இரண்டு வேளைகள் குளிப்பது நல்லது.
இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை, அவசியம் சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீரை அடக்கிவைப்பதால், நீர்க்கடுப்பு, கல் அடைப்பு வரலாம்.  
கணவருடன் டூவீலரில் பயணிக்கும்போதும், வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும்போதும் மேடு பள்ளம் பார்த்துச் செல்ல வேண்டும். இதனால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
ஹீல்ஸ் அணியவே கூடாது. தடுக்கி விழ நேரலாம். இதுவும் குழந்தைக்கு அதிர்வை ஏற்படுத்தும்.
 நிம்மதியான தூக்கம்
பேறு காலத்தில் மசக்கையால் வாந்தி, மயக்கம், அஜீரணம், சோர்வு காரணமாக சாப்பாட்டில் நாட்டமின்மை ஏர்படலாம். தூக்கமின்றித் தவிக்கலாம். அல்லது அதீதத் தூக்கம் வரலாம். அலுவலகத்தில் நடந்த சில கசப்பான விஷயங்களால் தூக்கம் இல்லாமல் போகலாம். தூக்கம் தொலைந்தால், மறுநாள் அன்றாடக் கடமைகளைக்கூடச் செய்ய முடியாமல் அவதிப்பட வேண்டியிருக்கும். மேலும், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக எழுவதும், கால் நரம்புகள் முறுக்கேறிக்கொள்வதும் சகஜம்.
குறிப்பிட்ட நேரத்தில் தூங்கிவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தது ஆறு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். இது, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது.  
படுக்கச் செல்வதற்கு முன்பு, அகலமான வாளியில் வெந்நீரை நிரப்பி, அதில் எலுமிச்சைச் சாறுவிட்டு 10 நிமிடங்கள் கால்களை அதில்வைத்து, எடுத்துத் துடைத்த பின் தூங்கச் செல்லலாம்.
கர்ப்பிணிகளுக்கென்று விற்கப்படும் சற்றே உயர்ந்த தலையணைகளை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.  
- ரேவதி
நன்றி : டாக்டர்விகடன் - 16.02.2014

Friday, May 13, 2016

செக் (காசோலை) மோசடி


செக் (காசோலை) மோசடி - என்ன செய்ய வேண்டும்?
தெரிந்தோ, தெரியாமலோ பெரும்பாலனவர்கள் காசோலைகளை சரியாக எழுதுவதில்லை. அது தகவல்களை நிரப்பும் செயல்பாடு மட்டுமல்லாமல், நீங்கள் எப்படி அந்த தகவல்களை நிரப்புகிறீர்கள் என்பதைத் பொறுத்த காசோலையில் பல விஷயங்கள் உள்ளது. 

தற்போது காசோலையானது, ஒரு முனையத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு அனுப்பப்படுவதற்குப் பதிலாக, அந்த காசோலையை மின்னணு முறையில் ஸ்கேன் செய்து, அந்த ஸ்கேன் காப்பியை பணம் எடுக்க டெபாசிட் செய்த கிளையிலிருந்து, மற்றொரு வங்கி கிளைக்கு அனுப்புவார்கள். 

இதன் காரணமாக, நீங்கள் எழுதும் காசோலையில் ஒரு சிறிய தவறு இருந்தால் கூட, அந்த காசோலை ஏற்கப்படுவதில்லை. இது மட்டுமல்லாமல், காசோலைகளை சரியாக எழுதுவதன் மூலம் அதனால் ஏற்படும் அபாயங்களையும், மோசடிகளையும் தவிர்க்க முடியும். பணம்-சாராத காரணங்களுக்காக ஏற்கப்படாமல் பவுன்ஸ் ஆன காசோலைகளுக்காக, வங்கிகள் சில நூறு ரூபாய்களை அபராதமாக விதிப்பதையும் மறுப்பதற்கில்லை. 

எனவே, காசோலைகளை எழுதும் வேளைகளில் நீங்கள் சில முக்கிய விஷயங்களைப் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றைத் தவறாமல் பின்பற்றி வங்கிகள் விதிக்கும் அபராதம் மற்றும் மோசடிகளில் இருந்து உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள். 

இந்த முறையில் தான் காசோலையை எழுத வேண்டும் என்றில்லாவிட்டாலும், நீங்கள் இடது புறமிருந்து வலப்புறத்திற்கு எழுதும் போது காசோலையை எழுதும் வேலைக்கு அது உதவியாக இருக்கும். மேலும், அது காசோலையில் உள்ள அனைத்து பகுதிகளையும் சரியாக நிரப்புவதற்கு ஒரு திட்டமிட்ட வழிமுறையை ஏற்படுத்தும். அங்கொன்றும் இங்கொன்றுமாக காசோலையின் தகவல்களை நீங்கள் நிரப்பும் வேளைகளில், ஏதாவதொரு இடத்தை நீங்கள் மறந்து விட அல்லது விட்டு விட நேரலாம். இதன் காரணமாக, பணம்-சாராத காரணங்களுக்காக காசோலைகள் பவுன்ஸ் ஆகும் சூழலை எதிர்கொள்ள நேரிடலாம். 

காசோலையில் நீங்கள் தேதியைச் சேர்ந்தது என்று குறிப்பிடப்படா விட்டால், அந்த காசோலை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 
காசோலைகளில் தேதிகளை எழுதாமல் மறப்பவர்களின் எண்ணிக்கையைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எனவே, உங்களுடைய காசோலை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று நினைத்தால், அப்போதைய தேதியை உடனடியாக குறிப்பிடவும். சில நாட்கள் கழித்து எடுக்கும் வகையில் காசோலையைத் தர நினைத்தால், சரியான தேதியைக் குறிப்பிடுங்கள். போதிய அளவு பணம் இல்லாத நேரங்களில், முந்தைய தேதியை தவறுதலாக குறிப்பிட்டிருந்தால் அந்த காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் பவுன்ஸ் ஆகலாம். 

மக்களுக்கு இடையில் இடைவெளிகளை விடுவது நல்லது. ஆனால், காசோலைகளில் இவ்வாறு இடைவெளிகளை விடுவது மோசடி அபாயங்களை எதிர்கொள்ளும் நிலையும் மற்றும் காசோலைகள் சேதமடையும் நிலையும் உருவாகலாம். காசோலையில் 'Payee' என்று எழுதப்பட்டுள்ள இடத்தைத் தொடர்ந்த கோடிட்ட இடத்தில், நீங்கள் யாருக்கு கொடுக்க நினைக்கிறீர்களோ அவருடைய பெயரை அல்லது நிறுவனத்தின் பெயரை எழுதவும். 

நீங்கள் ஒரு தனிநபருக்கு காசோலையை வழங்குகிறீர்கள் என்றால் பெயரை சரியாக எழுதுங்கள். குறிப்பிட்டு சொல்லும் படியாக ஒரு நபருக்கு நீங்கள் காசோலையை கொடுத்தால், அந்த காசோலையில் அச்சிடப்பட்டிருக்கும் 'Bearer' என்ற வார்த்தையை அடித்து விடவும். 
இந்த 'Bearer' என்ற வார்த்தை வழக்கமாக காசோலையின் வலது பக்கத்தில் இருக்கும், சில காசோலைகளில் தேதிக்கு கீழாக இருக்கும். 'Bearer' என்ற வார்த்தைக்கு, இந்த காசோலையை கொண்டு வரும் நபர் யாராக இருந்தாலும், அவருக்கு காசோலையை கொடுக்கலாம் என்று பொருளாகும். எனவே, நீங்கள் ‘Bearer' என்ற வார்த்தையை அடிக்காமல் விட்டு விட்டால், மோசடி செய்வதற்கான வாய்ப்பை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். 

நீங்கள் எழுதும் காசோலை எந்தவொரு வங்கியின் கவுண்டரிலும் கொடுத்து பணமாக மாற்றத் தக்கதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதில் குறுக்கு கோடிட வேண்டாம். 
குறுக்கு கோடிடுதல் என்ற பெயரில் இரண்டு கோடுகளை காசோலையின் மேல் வலது மூலையில் வரைவதற்கு 'கணக்கில் வரவு வை (Account Payee)' என்று பொருளாகும். இவ்வாறு குறுக்கு கோடிடும் போது, அந்த காசோலையில் உள்ளவருடைய வங்கிக் கணக்கில் மட்டுமே பணம் வரவு வைக்கப்படும் என்பதையும், அதை வங்கியின் கவுன்டரில் கொடுத்து பணமாக பெற முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவும். 

காசோலையில் எழுதப்பட வேண்டிய பணத்தின் அளவை எண்ணில் எழுதும் பொருட்டாக கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் சரியாக எழுதவும். 
அதாவது, Rs999, என்று எழுதுவதற்குப் பதிலாக Rs.999/- என்று எழுதுங்கள். /- என்ற குறியீட்டை தொகையின் முடிவில் குறிப்பிடும் போது, அந்த எண்ணிற்குப் பின்னர் மற்றொரு இலக்கத்தை எழுத முடியாது. 

தொகையை எழுத வேண்டி வரும் போது, இடைவெளிகள் எதையும் விட வேண்டாம். உதாரணமாக, Rs.5,000 என்று எழுதும் போது 5000 என்ற எண்ணிற்கு முன்னதாக இடைவெளி விட வேண்டாம். இல்லாவிடில், அதற்கு முன்னதாக யாராவது ஒருவர் 3 என்ற எண்ணை எழுதி, 35000 ரூபாயாக மாற்றி விடலாம். இதே விஷயம், தொகையை எழுத்தில் எழுதும் போதும் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. ஐந்து ஆயிரம் என்று எழுதியிருப்பதை, எளிதில் முப்பத்து ஐந்து ஆயிரமாக மாற்றி விட முடியும். எனவே, தொகையை எண்ணிலோ அல்லது எழுத்திலோ எழுதும் போது, முன்னதாக இடைவெளி விட வேண்டாம். 

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தையும் நிரப்பிய பின்னர் மட்டுமே, உங்களுடைய கையொப்பத்தை இடவும். 
அதே போல முன்னோக்கி செல்லவும் மறந்து விட வேண்டாம்; காசோலைகளில் கையொப்பமிட அடர்த்தியான மையை கொண்டுள்ள பேனாவைப் பயன்படுத்தவும். காசோலையில் அச்சிடப்பட்டிருக்கும் உங்களுடைய பெயருக்கு மேல், கையொப்பமிடவும். மேலும், எக்காரணத்தைக் கொண்டும் உங்களுடைய காசோலைப் புத்தகத்தில் உள்ள வெற்றுக் காசோலைகளில் கையொப்பங்களை போட்டு வைக்க வேண்டாம். அந்த காசோலைப் புத்தகம் தொலைந்து போனால், அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். 

நன்றி :  குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 13.05.2016

பெண்ணுக்கு 2வது திருமணமா?


பெண்ணுக்கு 2வது திருமணமா? என்ன செய்ய வேண்டும்?

என்னதான் நேரம், காலம் பார்த்து திருமணம் செய்தாலும், சில திருமணங்கள் தோல்வியில் முடிவதுதான் சோகம். முதல் திருமணத்தில் ஏதாவது பிரச்னை அல்லது தோல்வி அடையும் போது அதிலிருந்து விலகிவிடுவது வழக்கம். முதல் திருமண வாழ்க்கையிலிருந்து விலகிய பிறகு, பல்வேறு காரணங்களினால் மீண்டும் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகி வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றம்தான் என்றால், இரண்டாவது திருமணத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
அப்படி என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற  வழக்கறிஞர் சுதா இங்கே பகிர்கிறார்...
1. இரண்டாவது திருமணம் செய்யும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் ஆணுக்கு இது முதல் திருமணம் எனில், அதை நன்கு விசாரித்துக்கு கொள்வது நலம். அதாவது அவர் ஏன் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை  திருமணம் செய்கிறார். அதற்கான காரணம் என்ன? அவர் கூறும் காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தால், அந்த ஆணை திருமணம் செய்வது குறித்து யோசிக்கலாம்.  

2. திருமணம் செய்துக் கொள்ளும் நபர் விவாகரத்து பெற்றுள்ளார் எனில், அதற்கான சான்றிதழ்களை சரிபார்ப்பது மிக முக்கியம். அந்த விவாகரத்து சான்றிதழில் என்னென்ன விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை பார்க்கவும். அதாவது, முதல் மனைவிக்கு குழந்தை இருந்தால் அந்த குழந்தைக்கு என்ன உரிமை உள்ளது. முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமா? என்பதையும் கவனிக்க வேண்டும். ஒருவேளை முதல் மனைவி இறந்துவிட்டார் எனில், அதை உறுதி செய்வதோடு, எந்த காரணத்தினால் அவர் இறந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
3. இணையதளங்களில் வரன் தேடும்போது, அதிலுள்ள விவரங்களை அப்படியே நம்பிவிடக்கூடாது. அதனுடைய உண்மை தன்மையை மணமகனின் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் விசாரிப்பது அவசியம். ஏனெனில், இணையதளங்களில் பொய்யான தகவல்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அவர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் ஆகியவற்றில் அவருடைய நடவடிக்கைகளை எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். மேலும் அவரின் முகவரி, எத்தனை வருடங்களாக அந்த முகவரியில் வசித்து வருகிறார் என்பதையும் விசாரிப்பது அவசியம்.
4. மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாக உடல் ரீதியான பிரச்னை சற்று அதிகமாகி வருகிறது. இது போன்ற பிரச்னை உள்ள ஆண்கள், இரண்டாவது திருமணம் செய்யும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு குழந்தை பிறக்கவில்லை எனில் அந்த பிரச்னையை உங்களின் மீது குறையாக கூற வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து விசாரித்து, மருத்துவ ரீதியாக விசாரித்துக் கொள்வது அவசியம். அதே சமயத்தில் இது சற்று கடினமான வேலைதான்.

5. இரண்டாவதாக, திருமணத்துக்காக தேர்வு செய்து வைத்திருக்கும் நபரின் மீது ஏதாவது கிரிமினல் வழக்கு உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும். அப்படி ஏதாவது சிக்கல் இருந்தால் அவர்களை தவிர்ப்பது நல்லது.


6.  அடுத்தது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு குழந்தை இருந்தால், அந்த குழந்தையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவருக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைதான். எனவே இதில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பதில் தெளிவாக இருங்கள்.
7. முதல் திருமண வாழ்க்கையில், பிரச்னையில் சிக்கி விவாகரத்து பெற்று இருக்கும் பெண்கள் அல்லது எதிர்பாரத விதமாக கணவர் மரணம் அடைந்ததது போன்ற பிரச்னையில் இருக்கும் பெண்கள், இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு முன் மனநல ஆலோசகரை கலந்து ஆலோசித்து, மன ரீதியாக தயார் ஆவது முக்கியம். இதில் ஏதாவது சிக்கல் இருந்தால் திருமணத்தை சில மாதங்களுக்கு ஒத்தி வைப்பது நல்லது.
8. 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'தமிழ்நாடு கட்டாய திருமணப் பதிவு சட்டத்தின்' படி  இரண்டாவது திருமணத்தை பதிவு செய்வது அவசியம். இதை திருமணமான 3 மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் திருமணம் செய்யும் நபர், ஏற்கனவே  திருமணம் செய்து, அதை பதிவு செய்து வைத்துள்ளாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.
மேற்கூறிய, விஷயங்கள் அனைத்தும், முதல் திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்தும். இரண்டாம் திருமணம் செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இது, பெண்களுக்கு மட்டும் அல்ல...ஆண்களுக்கும் பொருந்தும்!
-வே. கிருஷ்ணவேணி
நன்றி : விகடன் செய்திகள் - 12.05.2016

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால்?


ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவருக்கு எவ்வளவு அபராதத் தொகை விதிக்கப்படுகிறது?

ஒருவருக்கு வாகனம் ஓட்டத் தெரியும் என்பதை உறுதி செய்வதே வாகன ஓட்டுநர் உரிமம்தான். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வருவது வாகனத் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால் மோட்டார் வாகனச் சட்டம் 181, விதி 3 மற்றும் 4-ன் கீழ் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்.

 நண்பர் அல்லது பிறரது வாகனங்களை இரவல் வாங்கி சிலர் ஓட்டுவார்கள். அப்படி ஓட்டுபவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பிடிபட்டால் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமின்றி, ஓட்டுநர் உரிமம் இல்லாதவருக்கு வாகனம் வழங்கியதற்காக அதன் உரிமையாளருக்கும் ரூ.500 என மொத்தம் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.

வாகனக் காப்பீடு சான்று இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுமா?

வாகனக் காப்பீடு மிக அவசியம். விபத்துக் காலங்களில் நமக்கு அல்லது வாகனங்கள் சேதமடைந்தால் காப்பீடு நடப்பில் இருந்தால் மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு பெறமுடியும். அதற்காகவே காப்பீடு சான்று இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. காப்பீடு சான்று இல்லாமல் வாகனங்களை இயக்குவது வாகனத் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால் மோட்டார் வாகனச் சட்டம் 146, 196-ன் கீழ் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் இருந்தால், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படுமா?

விபத்து நேரிடும்போது வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே தலைக்கவசம், சீட் பெல்ட் அணிய வலியுறுத்தப்படுகிறது. இதைப் பின்பற்றாமல் இருப்பது விதிமீறலாகும். இதற்கு மோட்டார் வாகனச் சட்டம் 177-ன்படி ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.200 வரை அபராதம் விதிக்கலாம்.

 பேருந்தில் பயணிக்கும்போது சலுகை விலை கட்டண அட்டை (பாஸ்) அல்லது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோருக்கு என்ன தண்டனை?

 போக்குவரத்து துறையினர் மட்டுமின்றி வட்டார போக்குவரத்து துறையினரும் பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளலாம். அந்த ஆய்வின்போது டிக்கெட் அல்லது சலுகை விலை கட்டண அட்டை இல்லாமல் பயணிப்போருக்கு மோட்டார் வாகனச் சட்டம் 178-ன் கீழ் ரூ.200 வரை அபராதம் விதிக்க முடியும்.

 வாகனத் தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளிடம் முறையான தகவல் அளிக்காமல், ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

வாகனத் தணிக்கை என்பது சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைவரும் வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. வாகனத் தணிக்கை சமயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்கும் தகவலை வழங்காமலும் , ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டால் இரண்டுக்கும் மோட்டார் வாகனச் சட்டம் 179 (1) மற்றும் (2)-ன் கீழ் தலா 250 ரூபாய் வீதம் அபராதம் விதிக்க முடியும்.

 ஒருவரது வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட பின்னரும் அவர் வாகனத்தை இயக்கினால் என்ன தண்டனை?

ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட பின்பும் ஒருவர் வாகனங்களை இயக்கினால் அவருக்கு மோட்டார் வாகனச் சட்டம் 182 (1)-ன் கீழ் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.

ஒருவர் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை எப்படி கண்டறிவது? அதற்கு அபராதம் எவ்வளவு?

அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதை வட்டார போக்குவரத்து துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள கருவி மூலம் எளிதாக கண்டறிய முடியும். அவ்வாறு வேகமாக வாகனம் ஓட்டி வருபவருக்கு மோட்டார் வாகனச் சட்டம் 183 (1)-ன் கீ்ழ் 400 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒருவரது வாகனத்தை இன்னொருவர் அதிவேகமாக ஓட்டினால், வாகன உரிமையாளருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் 183 (2)-ன் கீழ் 300 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். அதுபோல் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டம் 184-ன் கீழ் 1000 ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.

 விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள வாகனங்களை இயக்கலாமா?

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி முறையான பாதுகாப்பு வசதியில்லாமல் வாகனங்களை சாலைகளில் இயக்கக் கூடாது. உதாரணமாக, பஸ்களின் படிக்கெட்டு உடைந்திருந்தால், அவற்றில் பயணிகள் ஏறும்போது கீழே விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு இயக்கினால் மோட்டார் வாகனச் சட்டம் 190 (2)ன் கீழ் 600 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.

 வாகனப் பதிவுச் சான்று இல்லாமலும் புதுப்பிக்காமலும் இருந்தால் எவ்வளவு அபராதம்?

வாகனத் தணிக்கையின்போது பதிவுச் சான்று இல்லாமல் இருந்தாலோ அல்லது புதுப்பிக்காமல் இருந்தாலோ மோட்டார் வாகனச் சட்டம் 192 (1)-ன் கீழ் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

வரி செலுத்தாமல் சரக்கு போக்குவரத்து வாகனங்களை இயக்க முடியுமா?

சரக்கு போக்குவரத்து வாகனங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் வரி செலுத்தவேண்டும்; அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வரி செலுத்தவேண்டும். வரி செலுத்தவில்லை என்றால், மோட்டார் வாகனச் சட்டம் 86 விதி 172 (1)ன் கீழ் அபராதம் விதிக்கலாம் அல்லது வாகனங்களை பறிமுதல் செய்யலாம். இது வாகனத்துக்கு வாகனம் மாறுபடும்.

உதாரணமாக, சரக்கு போக்குவரத்தில் ஈடுபடும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் வரி செலுத்தவில்லை என்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். அபராதத்தையும் செலுத்தாவிட்டால் வாகனங்களை பறிமுதல் செய்து 2 நாட்கள் போக்குவரத்தில் ஈடுபட முடியாதபடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்படும்.

 அனுமதி (பர்மிட்) பெறாமல் சரக்கு போக்குவரத்து வாகனங்களை இயக்கலாமா? அப்படி இயக்கினால் என்ன தண்டனை?

பர்மிட் இல்லாமல் வாகனங்களை இயக்கக் கூடாது. அவ்வாறு இயக்கினால் மோட்டார் வாகனச் சட்டம் 66 பிரிவு 192-ன் கீழ் ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும்.

 சரக்கு போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொருட்கள் ஏற்றிச் செல்லலாமா?

வாகனங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சரக்குகளை (ஓவர் லோடு) ஏற்றிச் செல்லக்கூடாது. விபத்துகளை தவிர்ப்பதற்காக இச்சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகனத் தணிக்கையின்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் சரக்கு ஏற்றிவந்தால் மோட்டார் வாகன சட்டம் 194 பிரிவு 113, 114-ன் கீழ் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமின்றி, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் உள்ள சரக்கை கணக்கிட்டு ஒரு கிலோவுக்கு ரூ.1 வீதம் அபராதம் விதிக்கப்படும். தவிர, குறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்ள சரக்குகளை இறக்கி வைத்துவிட்டு (அன் லோடு) செல்ல வேண்டும்.

சரக்கு ஆட்டோ, லாரி போன்ற சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லலாமா?

சரக்கு வாகனங்களில் ஆட்களை கட்டாயம் ஏற்றிச் செல்லக்கூடாது. விபத்தை தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறு ஏற்றிச் சென்றால் மோட்டார் வாகனச் சட்டம் 177 விதி 236-ன் கீழ் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்.

கி.பார்த்திபன் 
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ், ஜூன், 2014

ஃபேஸ்புக்கில் பெண்கள்

ஃபேஸ்புக்கில் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

ப்போது இருக்கும் டிஜிட்டல் உலகில் வங்கியில் கணக்கில்லாத மனிதர்கள் கூட இருக்கலாம், ஆனால் முகநூலில் கணக்கில்லாத மனிதர்களைக் காண முடியாது.
ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்:
இதுதான் பிரச்னை ஆரம்பமாகும் இடம். நாம் ஒருவரை நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்க்கும் முன், முதலில் அவரது புரொஃபைல் புகைப்படம், நண்பர்கள் லிஸ்ட், அவர் பதிவிடும் ஸ்டேட்டஸ்கள் எல்லாவற்றையும் கவனியுங்கள். பெண்களைக் குறித்து தவறாகவோ அல்லது குறையாகவோ, அல்லது கோபமாகவோ ஸ்டேட்டஸ் போட்டால் யோசிக்காமல் அவரை நிராகரிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு அவர் கொடுக்கும் கமென்ட்டுகளையும் கவனிப்பது அவசியம். இல்லையேல் நீங்கள் போடும் கமென்ட்டுகள் அல்லது புகைப்படங்களுக்குக் கொஞ்சம் நக்கலாகவோ அல்லது மனதைப் புண்படுத்தும்படியோ கமென்ட்டுகள் வருவதைத் தவிர்க்க முடியாது.
மெசேஜ் பூதம்:
அலுவலகத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு மெசேஜ் பாக்ஸை முடிந்தவரை ஆஃப் செய்து வைத்து விடுங்கள். “ஹாய் பேபி”, ” ஹலோ டியர்” என வரும் நல்லுள்ளங்களை மியூட்டில் வைத்து விடுவது அதைவிட நல்லது. அவர்களைக்கூட மன்னிக்கலாம். சில மிக நல்லவர்கள், டக்கென மோசமான புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ பகிர்ந்துவிடுவார்கள். பெண்களைப் பொறுத்தவரை இதற்கு ஒரே தீர்வு மெசேஜ்களை, முடிந்தவரை பொது இடங்களில் ஓபன் செய்யாமல் இருப்பதுதான். சில மோசமான இன்பாக்ஸ் மக்களின் ஃப்ரெண்ட் லிஸ்டை கட் செய்வது நல்லது. வேண்டுமானால் மெசேஜை மட்டும் ப்ளாக் செய்யலாம்
மெனக்கெட வைக்கும் மெசெஞ்ஜர் கால்
உண்மையில் பல பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் பிரச்னை இந்த மெசெஞ்சர் காலாகத்தான் இருக்கும். நம் மொபைல் அலைபேசிபோல், சைலன்ட்டில் போட்டாலும் மெசெஞ்சர் கால் சப்தத்தை கட் செய்ய முடியாது. இதற்கு ஒரே தீர்வு முக்கிய மீட்டிங், வீட்டில் இருக்கும்போது என நோட்டிஃபிகேஷன்களை அணைத்து விடுவது நல்லது. அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதிகபட்சம் உங்களால் மெசெஞ்சரில் 24 மணி நேரம் மட்டுமே நோட்டிபிகேஷன் அல்ர்ட்டை கட் செய்ய முடியும். அதனால் அதையும் நீங்கள் ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கு ஒருமுறை செக் செய்து அணைத்து வையுங்கள்.
கமென்ட்டில் வரும் கலகம்
நீங்கள் போடும் ஸ்டேட்டஸ்களில்கூட உங்கள் மனதைப் புண்படுத்தும்படி கமென்ட்கள் கொடுக்க முடியும். முடிந்த வரை புரட்சி, போர் என நீங்கள் போடும் ஸ்டேட்டஸ்களைக் கவனிப்பிலேயே வைத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் பல்ப் வாங்கக் கூடும்.
ஷேரிங்:
நாம் சொல்லும் கருத்தை மற்றவர்கள் ஷேர் செய்கிறார்கள் எனில், அதற்கு என்ன கருத்தை அவர்கள் சொல்கிறார்கள் என செக் செய்யுங்கள். எல்லாவற்றிற்கும் மேல் உங்கள் புரொஃபைல் புகைப்படங்களையோ அல்லது செல்ஃபிக்களையோ யாரேனும் ஷேர் செய்தால், உடனே சந்தேகப்படுங்கள். சற்றே அந்த ஆசாமியின் அக்கவுன்ட்டைப் பார்த்தால், உங்களைப்போன்றே பல பெண்களின் புகைப்படங்களைப் பகிர்ந்திருப்பார்.
அப்படி இருந்தால் கேள்வியே இல்லாமல் அந்த நபரை அன்ஃப்ரெண்ட் செய்யுங்கள். அன்ஃப்ரெண்ட் செய்த அடுத்த கணம் உங்கள் புகைப்படம் அவரது ஸ்டேட்டஸில் இருந்து மறைந்து விடும். காரணம் அவர்களுக்கு வேலையே இப்படி சில பெண்களின் புகைப்படங்களை ஷேர் செய்து லைக்குகளையும், கமென்ட்டுகளையும் பெறுவதே! மேலும் அப்படிப்பட்ட நபர்களைப் பின்தொடர்பவர்களும் அதே நோக்கத்துடன் இருப்பார்கள் என்பதால், உங்களுக்கு இன்பாக்ஸ்களிலும் பிரச்னைகள் எழ வாய்ப்பு உள்ளது.
நாம் செய்யும் தவறு:
ஒரு நபர் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து, அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் 'ஹாய்' என அடித்து விடுவார்கள். ஆனால், அந்தக் கால இடைவெளியை நாம் தருவதே இல்லை. ரெக்வெஸ்ட் கொடுத்த அடுத்த நொடி, ஓகே கொடுத்து விடுகிறோம்; அதுதான் பிரச்னை. அதே சமயம் யாரையும் நாம் திருத்த முடியாது. ஒரு நபர் நம்மைத் தவறாகப் பாவித்து சாட் செய்கிறார் எனில், கேட்காமல் ப்ளாக் செய்வதே நல்லது. அதை விடுத்து அறிவுரை கூறுகிறேன், நல்வழிப்படுத்துகிறேன் என ஆரம்பித்தால் பஞ்சாயத்துதான். முடிந்தவரை அதைத் தவிர்த்து விடுங்கள். 
தீ என்றால் சுடத்தான் செய்யும். முடிந்தவரை எட்ட நிற்பது சிறப்பு.
(இது ஆண்களுக்கும் பொருந்தும் மக்கா!)
- ஷாலினி நியூட்டன் 
நன்றி : விகடன் செய்திகள் - 12.05.2016