disalbe Right click

Saturday, May 21, 2016

குடும்ப அட்டை சம்பந்தமான கேள்விகள், பதில்கள்


குடும்ப அட்டை சம்பந்தமான கேள்விகள், பதில்கள்  
என்ன செய்ய வேண்டும்?

குடும்ப அட்டையின் அவசியம் என்ன ?

பொதுவிநியோகத் திட்டத்தில் பொருட்கள் பெற மட்டுமல்லாது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கக்கூடிய ஆவணமாகவும், இருப்பிடச் சான்றுக்கான மிக முக்கிய ஆவணமாகவும் பயன்படுகிறது.

தனியாக புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையவர் யார்?

1). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும்.
3). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
4). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் இந்தியாவில் எங்கும் குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது.
5). விண்ணப்பதாரரோ மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ்நாட்டில் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்க கூடாது.
6). விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.
குடும்ப அட்டைகளின் வகைகள் (விருப்பங்களின் அடிப்படையில் )

அனைத்து அத்தியாவசிய பொருட்கள் .குடும்ப அட்டைகள் ( பச்சை நிற அட்டைகள் ) அரிசி மற்றும் இதர இன்றியமையாப் பொருட்கள் பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பச்சை நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் ( வெள்ளை நிற குடும்ப அட்டைகள்) அரிசிக்கு பதிலாக சர்க்கரை பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சர்க்கரை விருப்ப அட்டை ( வெள்ளை நிறம் ) வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி*க்கு பதிலாக 3 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படுகிறது.
எந்த பொருளும் பெற விருப்பமில்லை என்ற குடும்ப அட்டைகள். வெள்ளை நிற குடும்ப அட்டைகள்: பொது விநியோக திட்டத்தின் கீழ் எந்த பொருளும் வாங்க விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு, எப்பொருளும் வேண்டா ( வெள்ளை நிறம் ) குடும்ப அட்டை வழங்கப்படுகின்றன.

குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம்?

தமிழக அரசு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்ணயித்துள்ளது . இப்படிவம்http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf 
என்ற இணைய தளத்தில் உள்ளது. பயன்படுத்த விரும்புவோர் படிவத்தினை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து எடுத்து பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கீழ்கண்ட ஆவணங்களின் நகல் ஒன்றை இணைக்க வேண்டும்.
1. தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றாக தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை, மூன்று மாதங்களுக்குள்ளான வீட்டு வரி / மின்சாரக் கட்டணம் / தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீதுகளில் ஏதாவது ஒன்று அல்லது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் / பாஸ்போர்ட் நகல்/ வாடகை ஒப்பந்தம் இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் போதுமானது. ஒரு வேளை இந்தச் சான்றுகள் ஏதும் இல்லையென்றால், நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் பெற்றுக் கொடுக்கலாம்.
2. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கப்பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று.
3. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கும் அதிகாரியிடம் (TSO) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
4.முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் குடும்ப அட்டை இல்லை என்ற சான்று.
5.எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர் போன்றவை அடங்கிய விவரங்கள் கொடுக்க வேண்டும்.
6.விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தை வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகைச் சீட்டை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவுத் தபாலில் அனுப்புவர்கள் சுயமுகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்பு ஆவணங்கடன் அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் (மண்டல) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவர் வசிக்கும் பகுதி எந்த உதவி ஆணையாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்தால் தொலைபேசி மூலம் இந்த அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியைச் சார்ந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வட்ட வழங்கல் அலுவலர், உதவி பங்கீட்டு அலுவலர்*, (கோயம்புத்தூர் நகரம் மட்டும்) குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வார்கள்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்புகை சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இருந்தபோதிலும் விண்ணப்பம் சென்றடைந்ததை உறுதி செய்துக் கொள்ள ஆதாரமாக ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பது நல்லது.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா?

கூடுதல் ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டியது இருந்தால் தவிர, மனுதாரர் 30 நாட்களுக்கு முன்னதாக உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொள்ள தேவையில்லை.
விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் மனுவின் மீதான இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
விண்ணப்பம் தகுதியுடையதாக இருந்தால், குடும்ப அட்டை அச்சிட அனுப்பப்படும். அச்சிடப்பட்ட குடும்ப அட்டை உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் பெறப்பட்டவுடன்* அலுவலகத்திலிருந்து ஒப்புகைச்சீட்டுடன் 15 தினங்களுக்குள் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளுமாறு அஞ்சல் அட்டை மனுதாரருக்கு அனுப்பப்படும்.
ஒரு வேளை, விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தை விண்ணப்பித்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மனுதாரருக்கு அஞ்சல் அட்டை மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப படிவத்தில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் குறிப்பிட்டிருந்தால், விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட இறுதி முடிவின் நிலையினை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

ரேஷன் கார்டு விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் யாரிடம் முறையீடு செய்வது ?

சென்னை நகர் மற்றம் புற நகர் பொறுத்த வரையில் துணை ஆணையாளர் (நகரம்) வடக்கு மற்றும் துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அவர்களிடம் மேல் முறையீடு செய்யலாம் .
பிற பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

குடும்ப அட்டை குறித்து எங்கே புகாரளிப்பது?

வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளருக்கும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய வேண்டும் அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும் அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
மாநில நுகர்வோர் மையத்தை 044 2859 2858 என்ற எண்ணில் தொலைபேசியிலோ, consumertn.gov.in, schtamilnadugmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் பொய்யான அல்லது தவறான தகவல்களை அளித்தால்?

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு தோராயமாக ஆண்டுக்கு ரூ.2000/- மானிய செலவு ஆகிறது என்பதை விண்ணப்பதாரர் அறிந்து கொள்ள வேண்டும். எனவே குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான விவரங்கள் மற்றும் தவறான முகவரி அளித்தல் போன்றவை பொது விநியோக திட்ட பொருட்களை கடத்துதலுக்கு வழிகோலும் என்பதுடன் 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பண்ட சட்டம் பிரிவு 7 ன் கீழ் தண்டனைக்குரியதாகும். இத்தகைய விண்ணப்பதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டப் படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் சரியான குடும்ப உறுப்பினரின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர் தனது குடும்ப அட்டையினை எவ்விதம் பெற்றுக் கொள்ள வேண்டும் ?

குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலகத்தில் தயாராக உள்ளது என்ற தகவலை விண்ணப்பதாரர் பெறப்பட்டவுடன், 15 தினங்கக்குள் நேரடியாக திங்கள் அல்லது வெள்ளிக் கிழமை அல்லது அஞ்சல் அட்டை, சிக்கன சேமிப்பு தகவல் / மின்அஞ்சல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பம் சமர்ப்பித்த பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகை சீட்டுடன் கொடுத்து குடும்ப அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை, அசல் குடும்ப அட்டை தொலைந்து விட்டால் , நகல் அட்டை பெற விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக மனுதாரர் குடும்ப அட்டையின் முதல் பக்கமும் கடைசி பக்கமும் நகல் எடுத்து அல்லது குடும்ப அட்டை எண் ,கடையின் குறியீடு எண் ஆகியவற்றை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை, குடும்ப தலைவர் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வர இயலவில்லை என்றால் குடும்ப தலைவர் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் அதிகாரம் அளிப்பு கடிதத்துடன் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள அனுப்பலாம். குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வரும் உறுப்பினரின் கையொப்பத்தினை மனுதாரர் மேலொப்பம் செய்து அங்கீகாரம் அளிப்பு கடிதம் அளிக்க வேண்டும். இந்த அதிகாரம் வழங்கப்பட்ட நபர் விண்ணப்பம் வழங்கிய பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகைச் சீட்டினை சமர்ப்பித்து குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர் அங்கிகாரம் செய்யப்பட்ட நபர் சந்தேகப்படும் வகையில் இருப்பின் குடும்ப அட்டை வழங்குவதை மறுக்கலாம்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?

தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெற ரூ.10/- கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த தொகை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் / வட்டவழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்படும்.

குடும்ப அட்டை தொலைந்து போனால்:

தொலைந்து போன குடும்ப அட்டையின் நகலுடன் ஏதாவது ஓர் அடையாள அட்டையின் நகலையும் சேர்த்து கிராமப்புறங்களில் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும், நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையரையும் அணுக வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புதுக் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைத்துவிடும். இதற்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.
பெயர் நீக்கம் மற்றும் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?

ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்றால் குடும்ப தலைவர் விண்ணப்ப படிவம் மற்றும் ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும். குடும்ப தலைவர் மரணம் அடைந்திருந்தால், இறப்பு சான்றுடன் அவரது வாரிசுதாரர் மனு கொடுக்கலாம். பெயர் சேர்க்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குடும்ப
தலைவர் அதற்கான விண்ணப்பிக்க படிவத்தை அளிக்க வேண்டும்.

மேலதிக விவரங்களுக்கு:

தங்கள் பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
உங்கள் பகுதியின் பொது விநியோகக் கடைக்கான பொருட்களின் ஒதுக்க்கீடு குறித்து அறிய
http://cscp.tn.nic.in/allotmentver2/repallotmentshopwise.jsp
இத்தளத்திற்குச் செல்லவும்.

 புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள்
http://egov-civilmis.pon.nic.in/SearchCardPondyAppNo.aspx
 இத்தளத்திற்குச் சென்று விண்ணப்பத்தின் நிலையறியலாம்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளhttp://www.consumer.tn.gov.in/fairprice.htm 
இத்தளத்திற்குச் செல்லவும்.

நன்றி : நாணயம்விகடன் & புதிய தலைமுறை இதழ்கள்

முயல் வளர்ப்பு


முயல் வளர்ப்பு - என்ன செய்ய வேண்டும்?

இறைச்சிக்கான கால்நடை வளர்ப்புத் தொழிலில் இறங்கி, கையைச் சுட்டுக் கொண்டவர்கள் பலர் உண்டு. குறிப்பாக, முயல் வளர்ப்பில் இறங்கிய பல விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால், முயல் வளர்ப்பு என்றாலே பலரும், 'வேண்டாம்’ என்றுதான் துள்ளி ஓடுவார்கள் முயலைவிட வேகமாக! ஆனால், இவர்களுக்கு மத்தியில் மிகுந்த முனைப்புடன் முயல் வளர்த்து, அதில் நல்ல லாபமும் ஈட்டி வருகிறார், விழுப்புரம் மாவட்டம், வித்யா நகரைச் சேர்ந்த முரளிதரன்.
பசுமை நிறைந்த மரங்கள் சூழ்ந்திருந்த முயல் பண்ணையில், கூண்டுகளுக்குள் முயல்கள் ஓடித்திரிந்து கொண்டிருந்தன. அந்த ரம்மியமான சூழலில் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த முரளிதரனைச் சந்தித்தோம்.
''எங்கப்பா 'லேப் டெக்னீசியன்’ வேலை பார்த்தாலும்... விவசாயத்தை விடாம செய்துகிட்டிருந்தார். விவசாயத்துல சம்பாதிச்ச பணத்துலதான், 'இன்ஜினீயரிங்’ படிக்க வெச்சார். படிப்பை முடிச்சுட்டு, ஸ்ரீ ஹரிகோட்டாவுல இருக்குற 'இஸ்ரோ’ நிறுவனத்துல... விஞ்ஞானியா 16 வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, சவுதி அரேபியாவுல ஏழு வருஷம் வேலை பார்த்தேன். அதன் பிறகு, இந்தியாவுக்கே திரும்பிட்டேன். மூணு வருஷமா ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்திட்டு வர்றேன். அது மூலமா, கல்வராயன் மலையில இருக்குற மலைவாழ் மக்களுக்கு, சில உதவிகளைச் செஞ்சுக்கிட்டிருக்கோம்.
இதுக்கு நடுவுல இணையதளம் மூலமா முயல் வளர்ப்பைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்காக, கொடைக்கானல்ல இருக்குற மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் ரோம ஆராய்ச்சி மையத்துல பயிற்சி எடுத்துக்கிட்டேன். ஆரம்பத்துல, 10 முயல்களை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். மூணு வருஷத்துல 1,500 முயல்கள் கிடைச்சுது. அதுல ஆயிரம் முயலை வித்துட்டேன். இப்போ 500 முயல்களை வெச்சுருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த முரளிதரன், தொடர்ந்தார்.
Image result for முயல் வளர்ப்பு
''சாப்பிடுற உணவை, கறியா மாத்துற திறனும், இன விருத்தியும்... மத்த விலங்குகளைவிட முயலுக்கு அதிகம். முயலை நம்ம வசதியைப் பொருத்து, எந்த இடத்துல வேணும்னாலும் வளக்கலாம். நான் என்னோட வீட்டைச் சுத்திக் கூண்டு வெச்சு வளக்குறேன். முயல் கறி, சாப்பிட்ட உடனே ஜீரணமாயிடும். இந்தக் கறியில கம்மியான கொழுப்பு, அதிக புரதம், குறைஞ்ச கலோரிதான் இருக்கு. முயல் கறி மிருதுவா, சுவையா இருக்கறதால குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லோருமே சாப்பிடலாம். இவ்ளோ இருந்தும், யாரும் இந்தத் தொழிலுக்கு வர்றதில்லைன்றதுதான் ஆச்சரியம்.
'இதை விக்க முடியாது’னுதான் நிறைய பேர் காரணம் சொல்றாங்க. என்னோட அனுபவத்துல விற்பனை ஒரு பிரச்னையே இல்லை. தமிழ்நாட்டுல போதுமான அளவுக்கு முயல் இல்லை. எந்தப் புதுப்பொருளா இருந்தாலும் அதைச் சாப்பிட்டு ருசி கண்டாத்தான்... அடுத்தடுத்து சாப்பிடத்தோணும். நம்ம ஊர்ல ஆட்டுக்கறி, கோழிக்கறி கிடைக்கிற அளவுக்கு முயல் கறி கிடைக்கறதில்லை. அதனால மக்கள் வாங்கி சாப்பிடுறதில்லை. அதில்லாம, முயல் மென்மையான, சாதுவான பிராணி. அதனால, அதைக் கொன்னு சாப்பிடுறது பாவம்ங்கிற எண்ணமும் இருக்கு. அதனாலதான் பயன்பாடு கம்மியா இருக்கு.
விழுப்புரத்துல ஒரு ஹோட்டல்ல நான் ஆர்டர் கேட்டப்ப, 'தினம் 5 முயல் உங்களால கொடுக்க முடிஞ்சா நாங்க முயல்கறி பிரியாணி போடத் தயார்’னு சொன்னாங்க. ஆனா, அந்தளவுக்கு என்னால கொடுக்க முடியாதுங்றதுதான் உண்மை.
விற்பனைக்கு உதவி செய்வேன்!
வளர்ப்புக்கு, இனப்பெருக்கத்துக்கு, சோதனைக் கூடங்களுக்கு, கறிக்குனு பலவகையிலும் முயல்களுக்குத் தேவை இருந்துக்கிட்டுத்தான் இருக்கு. என்கிட்ட இருக்குற ஆர்டருக்கே என்னால் சப்ளை செய்ய முடியல. முயல் வளத்துக்கிட்டு இருக்கறவங்களுக்குத் தேவையான ஆலோசனை கொடுக்கவும், விற்பனை செய்து கொடுக்கவும் நான் தயாராக இருக்கேன்'' என்று அனுபவப் பாடத்தை முடித்த முரளிதரன், வளர்ப்புப் பாடத்தை ஆரம்பித்தார்.
மூன்று மாதங்களில் 3 கிலோ!

முயலின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இன விருத்திக்காக வளர்க்கும்போது, 5 ஆண்டுகள் வரை வளர்ப்பதுதான் சிறந்தது. வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், சோவியத் சின்சிலா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய ரகங்கள் வளர்ப்புக்கு ஏற்றவை. இவை மூன்று மாதங்களில் 2 கிலோ முதல், 3 கிலோ அளவுக்கு வளரக் கூடியவை.

வலை கவனம்!
கொட்டகைக்கு அதிகச் செலவு செய்யாமல், வீட்டைச் சுற்றி நிழலுள்ள இடங்களில் கூண்டுகளை அமைத்து முயல் வளர்க்கலாம். ஒரு முயலுக்கு நான்கு சதுரடி இடம் தேவை.
Image result for முயல் வளர்ப்பு
அதாவது, இரண்டடிக்கு இரண்டடி என்ற அளவில் கூண்டு இருக்க வேண்டும். தனித்தனியாக கூண்டு செய்யாமல், பத்தடி நீளம், நான்கடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் ஒரே கூண்டை செய்து, அதை இரண்டு இரண்டு அடியாகப் பிரித்துக் கொண்டால்... செலவு குறையும். இது வளரும் முயல்களுக்கான கூண்டு.
குட்டி ஈனும் முயலுக்கு... இரண்டரை அடி சதுரம், ஒன்றரை அடி உயரத்தில் இதேபோல கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 'கேஜ்’ கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலுக்குக் காலில் புண்கள் உண்டாகாது. அதேபோல தண்ணீருக்கு 'நிப்பில்’ அமைப்பை அமைத்து விட்டால்... தண்ணீர் வீணாகாது.
ஒரு யூனிட்டுக்கு 10 முயல்!


சினை முயல் ஒன்று, பருவத்துக்கு வந்த இரண்டு பெட்டை முயல்கள் (4 மாதம் வயதுடையவை ), 6 மாத வயதுடைய ஒரு ஆண், ஒரு கிலோ அளவுடைய இரண்டு ஆண் முயல்கள், நான்கு பெட்டைக் குட்டிகள் என ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் என பத்து முயல்களைக் கொண்டது ஒரு யூனிட். முயல் வளர்ப்பில் இறங்குபவர்கள், ஒரே வயதுடைய முயல்களை வாங்கி வளர்க்கும்போது, வளர்ப்பு நிலை தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த முறையில் வளர்க்கும்போது, 3 மாதங்களில் அனைத்து நிலைகளையும் கடந்து விடலாம். ஒரு யூனிட் முயல்களை, ஒரு கூண்டுக்கு ஒரு முயல் எனத் தனித்தனியாக விட்டுவிட வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை பருவம்!
முயல், ஐந்து மாத வயதில் பருவத்துக்கு வரும். பெண் முயலின் பிறப்புறுப்பு சிவந்து தடித்திருப்பதைப் பார்த்து பருவமடைந்ததைக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து பருவத்துக்கு வரும். பருவம் வந்த பெண் முயலை, ஆண் முயல் இருக்கும் கூண்டுக்குள் விட வேண்டும். விட்ட ஓரிரு நிமிடங்களில் இனச்சேர்க்கை நடந்து விடும். பிறகு, பெண் முயலை அதனுடைய கூண்டில் விட்டுவிட வேண்டும். இன விருத்திக்காக ஆணுடன், பெட்டையைச் சேர்க்கும்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முயல்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், மரபு ரீதியான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
ஆணுடன் சேர்த்த 15 நாட்கள் கழித்து, பெண் முயலின் அடி வயிற்றைத் தடவிப் பார்த்தால் குட்டி தென்படும். உடனே, சினை முயலுக்கான கூண்டுக்கு மாற்றிவிட வேண்டும். குட்டி உருவாகவில்லையெனில், மீண்டும் அடுத்த பருவத்தில் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
ஆண்டுக்கு 8 முறை குட்டி!
குட்டி ஈனும் கூண்டில் தனிப்பெட்டி வைத்து, அவற்றில் தேங்காய் நார் கழிவுகளை வைக்க வேண்டும். முயலின் சினைக்காலம் முப்பது நாட்கள். ஆண்டுக்கு 6 முதல் 8 முறை குட்டி ஈனும். குட்டி ஈன்ற உடனே அடுத்த சினைக்குத் தயாராகிவிடும். அடுத்தப் பருவத்திலேயே மீண்டும் இனச்சேர்க்கை செய்யலாம். முதல் ஈற்றில் மூன்று குட்டிகள் வரைதான் கிடைக்கும்.
அடுத்தடுத்து குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு ஈற்றில் 5 முதல் 9 குட்டிகள் வரை கிடைக்கும். பிறந்த குட்டியின் எடை 60 கிராம் இருக்கும்.
குட்டிகள் ஒரு மாதம் வரை தாயிடம் பால் குடிக்கும். அதன் பிறகு குட்டிகளைப் பிரித்துவிட வேண்டும். முதலில் தாய் முயலைப் பிரித்து விட்டு, ஐந்து நாட்கள் கழித்து குட்டிகளை இடம் மாற்ற வேண்டும். பால் குடிக்கும் பருவத்தில் ஒரு குட்டி 750 கிராம் அளவுக்கு வந்துவிடும். தொடர்ந்து தீவனம் கொடுத்து வரும்போது, நான்கு மாதங்களில் இரண்டு கிலோ அளவுக்கு எடை வந்துவிடும்.
பசுந்தீவனமாக தட்டைச்சோளம்!
முயலுக்கு அருகம்புல், வேலிமசால், அகத்தி, மல்பெரி இலைகள், தட்டைச்சோளம் ஆகியவற்றைப் பசுந்தீவனமாகக் கொடுத்து வளர்க்கலாம். அடர் தீவனமாக கடையில் கிடைக்கும் தீவனங்கள் விலை அதிகமாகவும், தரமில்லாமலும் இருக்கின்றன. அதனால், நாமே அடர் தீவனத்தைத் தயாரித்துக் கொள்ளலாம்.

பருவமடைந்த முயல் ஒன்றுக்கு தினமும் 250 கிராம் பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டி ஈன்ற முயலுக்குத் தினமும் 150 கிராம் அடர் தீவனமும், 250 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 50 கிராம் அடர் தீவனமும், 100 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். முயல்கள் பகல்வேளையில் தூங்கும் பழக்கம் கொண்டவை. அதனால், காலை ஏழு மணிக்கு மொத்தத் தீவனத்தில் கால் பங்கு; இரவு ஏழு மணிக்கு முக்கால் பங்கு என பிரித்துக் கொடுக்க வேண்டும்'' வளர்ப்புப் பாடத்தை முடித்த முரளிதரன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
ஆண்டுக்கு 210 முயல்கள்!
''ஒவ்வொரு முயலும் சராசரியாக வருஷத்துக்கு ஆறு முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் சராசரியா 5 குட்டினு வெச்சுக்கிட்டா, ஒரு யூனிட்ல இருக்கற ஏழு பெண் முயல்கள் மூலமா...வருஷத்துக்கு 210 குட்டிகள் கிடைக்கும். நாலு மாசம் கழிச்சு விக்கும்போது, ஒரு முயல் சராசரியா ரெண்டு கிலோ இருக்கும். சராசரியா ஒரு கிலோவுக்கு 175 ரூபாய் விலை கிடைக்குது. ஒரு முயல் 350 ரூபாய்னு 210 முயல்களையும் விக்கிறப்போ...
73 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, தீவனம், மருத்துவச் செலவு, பராமரிப்புக்கு 52 ஆயிரத்து 800 ரூபாய் போக 20 ஆயிரத்து 700 ரூபாய் லாபம்.
இது, பத்து முயல்கள் அடங்கிய ஒரு யூனிட்டுக்கான கணக்கு. ஆடு கோழி வளர்ப்பைவிட இதுல லாபம் குறைவா இருக்குறது போல தோணலாம். ஆனா, இதுல பராமரிப்பு குறைவு. அதாவது, இதுக்காக நீங்க செலவிடற நேரம் ரொம்பவே குறைவாத்தான் இருக்கும். பகுதி நேர வேலையாவே இதைச் செய்யலாம். அதேபோல நோய் தாக்குதலும் அதிகம் இருக்காது.
5 யூனிட்டா... அதாவது 50 முயல்களைக் கொண்டு பண்ணையைத் தொடங்கினா, வருஷத்துக்கு 1 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும். சினை முயலா வித்தோம்னா, ஒரு முயல் 600 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விற்பனை ஆகும். சோதனைக் கூடங்களுக்கு வித்தா, ஒரு முயலை 1,500  ரூபாய் வரைக்கும்கூட விக்க முடியும்'' என்றார், மகிழ்ச்சியாக!  
உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்!
முயல் வளர்ப்பு பற்றி பேசும், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் குமரவேல், ''தமிழ்நாட்டில் ஒரு அழகுப் பிராணியாகத்தான் முயலைப் பார்க்கிறார்கள். சென்னை, செங்கல்பட்டு போன்ற நகரங்களிலும், பெரிய ஹோட்டல்களிலும் முயல் கறிக்கான தேவை இருக்கிறது. ஆனால், உற்பத்திதான் இல்லை. எல்லோரும் தற்பொழுது இன விருத்திக்கான முயலை விற்பனை செய்வதில்தான் கவனம் செலுத்துகின்றனர். கறிக்கான முயல் வளர்ப்பு செய்தால், விற்பனை வாய்ப்பை அதிகப்படுத்தலாம். எங்கள் மையத்தில் இதற்கான பயிற்சிகளைக் கொடுத்து வருகிறோம். மேலும், இனவிருத்திக்கான முயலை 200 ரூபாய் வீதம் விற்பனை செய்து வருகிறோம்'' என்று சொல்கிறார்.
இப்படித்தான் அடர் தீவனம் தயாரிக்கணும்!
மக்காச்சோளம்-20 கிலோ, கம்பு-15 கிலோ, கேழ்வரகு-3 கிலோ, அரிசி-15 கிலோ, கோதுமை தவிடு-12 கிலோ, கடலைப்பொட்டு-20 கிலோ, தாது உப்பு- ஒன்றரை கிலோ, உப்பு- அரை கிலோ ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். தீவனம் வைப்பதற்கு 12 மணி நேரம் முன்பு 13 கிலோ கடலைப் பிண்ணாக்கை ஊறவைத்து, இக்கலவையுடன் கலந்து முயல்களுக்குக் கொடுக்க வேண்டும். இது 100 கிலோ தீவனம் தயாரிப்பதற்கான உதாரண அளவு. எவ்வளவு முயல் இருகின்றனவோ... அதற்கு ஏற்ற அளவில் தீவனத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.  
முயல் கறியில் உள்ள சத்துகள்!
புரதம்-21%, கொழுப்பு-11%, நீர்ச்சத்து 68%. 100 கிராம் கறியில்... 50 மில்லி கிராம் கொழுப்புச் சத்து, 20 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து 40 மில்லி கிராம் சோடியம், 350 மில்லி கிராம் பாஸ்பரஸ் சத்து ஆகியவை இருக்கின்றன.
விளம்பரத்தை நம்பாதீர்கள்!
கொடைக்கானலில் இயங்கிக் கொண்டிருக்கும் மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் உரோம ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானியான ராஜேந்திரன் முயல் வளர்ப்பு பற்றி சில தகவல்களை இங்கு சொல்கிறார்.

''இப்போ, முயல் வளக்க ஆசைப்படுறவங்க, தனியார் நிறுவனங்களோட விளம்பரங்களை நம்பி... 10 முயல்கள் கொண்ட யூனிட்டை... 20 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய்னு வாங்குறாங்க. ஆனா, 10 முயல், கூண்டு எல்லாம் சேர்த்தே அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். இதுமாதிரியான ஏமாற்று வேலைகளை நம்பாதீங்க.
முயல் வளர்ப்பு லாபகரமான தொழில்தான். விற்பனைக்காக மற்றவர்களை சார்ந்திருக்காம நேரடியா கறி விற்பனையில் இறங்கறது நல்லது. கேரளா மாநிலத்துல அரசுத் துறைகள் மூலமாவே முயல் வளர்த்து, மக்களுக்கு இனவிருத்தி முயலா கொடுக்கிறாங்க. நம்ம மாநிலத்துலயும் இதேமாதிரி கொடுத்து, பயிற்சிகளையும் கொடுத்தா, ஏமாற்றும் நிறுவனங்கள்கிட்ட இருந்து மக்களைக் காப்பாத்தலாம். முயல் உற்பத்தியையும் அதிகரிக்கலாம்'' என்று அருமையான தகவல்களைத் தந்த ராஜேந்திரன்,
''முயல் வளர்ப்பு பத்தின ஆலோசனைகளுக்கு, எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்'' என்றும் அழைப்பு வைத்தார்!
தொடர்புக்கு,
முரளிதரன், செல்போன்: 94431-82960,
செம்மறி ஆடுகள் மற்றும்
ரோம ஆராய்ச்சி மையம்,
கொடைக்கானல்,
தொலைபேசி: 04542-276414.
வேளாண் அறிவியல் நிலையம்,  காட்டுப்பாக்கம்.
தொலைபேசி: 044-27452371.

நன்றி : பசுமை விகடன் - 10.06.2012

பல வருடங்களுக்கு முன் வந்த செய்தியாயிற்றே, இப்போதும் தொடர்பில் இருக்கின்றாரா? என்று அறிய  திரு முரளிதரன் அவர்களிடம் தொடர்பு கொண்டேன். மற்றவர்களுக்கு உதவ இப்போதும் தயாராக இருப்பதாக அவரது மற்றொரு செல்போன் (9443182960) எண் வழியாக உறுதிபடக் கூறினார். 

வாய்ப்புள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி!

                                                                                                   அன்புடன் செல்வம்பழனிச்சாமி


Thursday, May 19, 2016

பிறப்புச் சான்றிதழ் பெற 12 யோசனைகள்


பிறப்புச் சான்றிதழ் பெற 12 யோசனைகள் என்ன செய்ய வேண்டும்?

பிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்!
வாழ்க்கையில் நாம் செய்தாக வேண்டிய பல்வேறு விஷயங்களை அதிக சிரமமின்றி செய்து முடிக்க உதவும் ‘ஒரு டஜன் யோசனைகள்’ பகுதியில், இந்த இதழில் இடம்பெறுவது... உங்கள் வீட்டுக்குப் புதுவரவாக வரும் சின்னஞ்சிறு மனிதர்களுக்குப் பெறவேண்டிய முக்கிய மற்றும் முதல் அரசு ஆவணமான பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள்!
குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் குழந்தையின் பிறப்பை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதற்குக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கிராமத்தில் வசிப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடமும்... பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் வசிப்பவர்கள் சுகாதார ஆய்வாளரிடமும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த உடனே சம்பந்தப்பட்ட அதிகாரி, குழந்தையின் பிறப்பை உறுதி செய்து ஆவணத்தை வழங்குவார். 15 நாட்களுக்குள் குழந்தையின் பிறப்பு இணையதளத்திலும் பதிவு செய்யப்படும்.
குழந்தை பிறந்த மருத்துவமனை யிலேயே கூட பதிவு செய்ய முடியும். குடும்ப அட்டையின் நகல், குழந்தைக்குப் பெயர் வைத்திருந்தால், அதையும் சேர்த்துப் பிறப்பை பதிவு செய்துகொள்ளலாம். சம்பந்தப்பட்ட மருத்துவமனை, உங்கள் குழந்தையின் பிறப்பை, பிறப்பு - இறப்புப் பதிவு அலுவலரிடம் பதிவு செய்து, அதற்கான அத்தாட்சி ரசீதை உங்களுக்கு தரும். அதை, பிறப்பு - இறப்புப் பதிவு அலுவலரிடம் கொடுத்து சான்றிதழைப் பெற்றுகொள்ளலாம்.
குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்யவில்லை எனில், காலதாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். 30 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்யும்போது கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். 30 நாட்களுக்குப் பிறகு, ஒரு வருடத்துக்குள் எப்போது பதிவு செய்தாலும் தாமதக் கட்டணம் ரூபாய் 5.
குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குள் பதிவு செய்யாவிட்டால், பிறகு நீதிமன்றத்தில் முறையிட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் பதிவு செய்ய முடியும். பல வருடங்களாகியும் நீங்கள் பிறப்புச் சான்றிதழ் வாங்காமல் இருந்தாலும் நீதிமன்றத்தில் முறையிட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிந்துதான் நீங்கள் பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் பெறும்போது குழந்தைக்குப் பெயர் வைக்கப்படாமல் இருந் தால், பின்னர் குழந்தையின் ஒரு வயதுக்குள் மீண்டும் சம்பந்தப்பட்ட அலுவலகம் சென்று, சான்றிதழில் குழந்தை யின் பெயரைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.
சான்றிதழில் குழந்தையின் பெயரில் ஏதேனும் எழுத்துப்பிழை அல்லது தவறு இருந்தால் பிறப்பு /இறப்பு பதிவாளரிடம் மனு செய்து திருத்திக்கொள்ளலாம். பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், செய்தித்தாள்களில் அறிவிப்பாக வெளியிட்டு, பின்னர் முறையாக விண்ணப்பித்து, அரசு கெஜெட் மூலமாக மட்டுமே மாற்றமுடியும்.
பிறப்புச் சான்றித ழில் பெற்றோரின் பெயர் அல்லது முகவரியில் பிழை இருந்தால், பெயர் பதிவு செய்த அலு வலகத்தில் பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டையைக் கொடுத்து திருத்தத்துக்கு விண்ணப் பிக்கலாம்.
பிறப்புச் சான்று எங்கெல்லாம் கட்டாயம்?
பள்ளிச் சேர்க்கை, பாஸ்போர்ட், சட்டபூர்வ ஆவணங்கள் பெற, இன்ஷூரன்ஸ் க்ளெய்ம், சொத்துப் பிரிவினைகள், புதிய வாக்காளர் அட்டை பெற.
பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் பெயர்கள் போன்றவற்றுக்கு பிறப்புச் சான்றிதழ் மட்டுமே முதன்மை சட்டபூர்வ ஆவணம் என்பதை நினைவில் கொள்க.
தாய், பிரசவத்துக்கு பிறந்த வீட்டுக்கு வந்து, அந்த ஊர் மருத்துவமனையில் குழந்தை பெற்றிருக்கலாம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், குழந்தை எந்த ஊரில் பிறந்ததோ அந்த ஊரில்தான் பிறப்பை பதிவு செய்ய முடியும். குழந்தையின் பெற்றோ ருடைய வசிப்பிடத்தில் பதிவு செய்ய முடியாது.
பிறப்புப் சான்றிதழுக்கு உரிய அனைத்து விதிகளும் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கும் பொருந்தும். ஒருவரின் வசிப்பிடம் எதுவாக இருந்தாலும், எந்த ஊரில் இறக்கிறாரோ அங்குதான் இறப்பினைப் பதிவு செய்து சான்றிதழ் பெற முடியும். ஒருவர் இறந்து ஒரு வாரத்துக்குள் அவரது இறப்பினை பதிவு செய்ய வேண்டும். 21 நாட்களுக்குப் பிறகு என்றால், சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் இறப்புச் சான்றிதழைப் பெற இயலும்.
சில இடங்களில் அலுவல் தேவைக்கு குழந்தையின் அசல் பிறப்புச் சான்றிதழ் கேட்பார்கள். இதனால் எத்தனை எண்ணிக்கை யில் நகல்கள் வேண்டுமோ அதைக் குறிப்பிட்டு, உரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
பிறப்புச் சான்றிதழ் தொலைந்து விட்டால். சான்றிதழின் நகலுடன் குடும்ப அட்டையை இணைத்து... நீங்கள் இதற்கு முன் எங்கு பதிவு செய்தீர் களோ, அதே அலுவலகத்தில் மீண்டும் விண்ணபிக்கலாம். உங்களிடம் நகலும் இல்லையென்றால்... குடும்ப அட்டையின் நகல், நீங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றை கூறினால் போதும். இதற்கான கட்டணம் 20 ரூபாய்.
பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு:
http://www.tn.gov.in/dtp/birthdeath.htm
சு.சூர்யா கோமதி
நன்றி : அவள் விகடன் - 12.01.2016

ஜீமெயில் இன்பாக்ஸ் வசதிகளைப் பயன்படுத்த


ஜீமெயில் இன்பாக்ஸ் வசதிகளைப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்? 


மின் அஞ்சல் மற்றும் இணையம் பயன்படுத்தும் அனைவரும், ஜிமெயில் வசதியைப் பயன்படுத்துபவராகவே உள்ளனர். தொடர்ந்து பயன்படுத்தாவிட்டாலும், ஏதேனும் ஒரு வசதிக்காக, ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி வைத்து, எப்போதாவது அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பணிக்காகப் பயன்படுத்தி வருபவர்கள் பலர் உள்ளனர். பலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தியும் வருகின்றனர்.
2014 ஆம் ஆண்டு முதல், கூகுள் நிறுவனம், தன் ஜிமெயில் தளத்தில் Inbox by Gmail என்னும் புதிய வகை இமெயில் கிளையண்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல், இது பலராலும் விரும்பப்படும் ஒரு மெயில் கிளையண்ட் புரோகிராமாக இயங்கி வருகிறது.
ஏனென்றால், இதில் பல புதிய, மற்ற கிளையண்ட் புரோகிராம்களில் காணப்படாத அம்சங்களைக் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி, பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளைகத் தருவதாகவும் உள்ளது. கூகுள் தன் வழக்கமான அஞ்சல் சேவைத் தளத்தின் பயனர் இடைமுகத்திற்குப் பதிலாக, அதன் இடத்தில் தான் Inbox by Gmail கிளையண்ட் புரோகிராமினைச் செயல்படுத்தியது. கூகுள் தன் பழைய மின் அஞ்சல் தளத்தினை மூடிவிட்டு இதனைக் கொண்டு வந்திருந்தாலும், நாம் அனைவரும் Inbox by Gmail ஐ அதன் கூடுதல் வசதிகளுக்காகப் பயன்படுத்துவதே நல்லது.
அதன் வசதிகளை மேலும் பயனுள்ளதாக்க, இங்கு சில குறிப்புகள் தரப்படுகின்றன. இவை உங்களுக்குப் புதியவையாகத் தோற்றமளித்தாலும், அவற்றைப் பயன்படுத்திப் பார்த்தால், அவை தரும் கூடுதல் வசதிகளைப் புரிந்து கொள்ள இயலும்.
மற்றவர்களுக்கான அழைப்பு:
தொடக்கத்தில், ஜிமெயிலுக்கான இன்பாக்ஸ், பயனாளர் ஒருவர் இன்னொருவருக்கு அழைப்பு அனுப்பினால் மட்டுமே கிடைத்து வந்தது. தாமாக, ஒருவர் ஜிமெயில் இன்பாக்ஸ் திறந்து பயன்படுத்த முடியாது. தற்போது, அது போன்ற தடைகள் எல்லாம் இல்லை. அழைப்பு எதுவும் கிடைக்காமலேயே, ஒருவர் இதனைப் பயன்படுத்த முடியும். இருப்பினும், ஒருவருக்கு Inbox by Gmail பயன்படுத்துவதில் பிரச்னை இருந்தால், நீங்கள் அவரை Inbox by Gmail பயன்படுத்தும்படி அழைப்பு விடுக்கலாம். அதன் அடிப்படையில் அவரும் இதனைப் பயன்படுத்தலாம். இதற்கு Inbox by Gmail நுழைந்து, அதில் உள்ள (+)அடையாளத்தில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில், Invite to Inbox என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். யாரை அழைக்கிறீர்களோ, அவரின் மின் அஞ்சல் முகவரியை இங்கு உள்ளீடு செய்திட வேண்டும். அந்த முகவரிக்கு உரியவர், அடுத்து எந்த பிரச்னையும் இல்லாமல், ஜிமெயில் இன்பாக்ஸினைப் பயன்படுத்தலாம்.
நினைவு படுத்த குறிப்பு:
ஜிமெயில் இன்பாக்ஸ் தளத்தில், நமக்கான நினைவூட்டல் குறிப்புகளை அமைத்துக் கொள்ளலாம். வழக்கமான ஜிமெயில் தளத்தில் கிடைக்காத ஒரு வசதி இது. இந்த நினைவூட்டல் குறிப்புகள் Google Keep உடன் இணைக்கப்பட்டு, Reminder ஆப்ஷன் மூலம் இதனை நீங்கள் பெற்று அறிந்து கொள்ளலாம். நினைவூட்டல் குறிப்பினை (Reminder) உருவாக்க, ஜிமெயில் இன்பாக்ஸ் (Inbox by Gmail) சென்று, அதில் மேலாக உள்ள + அடையாளத்தில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Reminder என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் இடத்தில், உங்களுக்கான நினைவுக் குறிப்பினை நீங்கள் எழுதி வைக்கலாம். இந்தக் குறிப்பினை, email, call போன்ற சொற்களுடன் டேக் (Tag) செய்து வைத்தால், இன்னும் சிறப்பாக, இந்த நினைவூட்டல் குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.
லேபிலை அமைப்பது:
நமக்கு வரும் அனைத்து மெயில்களையும் வகை வாரியாகப் பிரித்து வைத்து படிக்க, லேபில் டூல் வசதி நமக்கு உதவிடுகிறது. இந்த லேபில் பெயரை மாற்றி அமைக்க வேண்டுமானால், பின் நாளில் அமைத்துக் கொள்ளலாம். ஆனால், வழக்கமான ஜிமெயில் தளத்தில் இது சற்று சுற்றி வளைத்துச் செய்திடும் செயல்பாடாக அமைந்துள்ளது. Inbox by Gmailலில், லேபில் பெயர் திருத்துவதனை, இரண்டு பட்டன்களை மட்டும் கிளிக் செய்து மேற்கொள்ளலாம். இதற்கு, மூன்று சிறிய கோடுகளாக உள்ள ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு Main Menu கிடைக்கும். இங்கு settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இமெயில் லேபில் என்பதை அடுத்து காணப்படும். இங்கு காட்டப்படும் ஆப்ஷன்களில், Edit Name என ஒன்று காணப்படும். இதனைக் கிளிக் செய்து, குறிப்பிட்ட லேபிலுக்கு, புதிய பெயரினைத் தரவும்.
லேபில் நீக்கம்:
மேலே தரப்பட்ட லேபில் பெயர் மாற்றம் போலவே, லேபில் நீக்கமும் மிக எளிதே. சில வேளைகளில், நாம் நிறைய லேபில்களை உருவாக்கிய நிலையில் இருப்போம். இவற்றின் எண்ணிக்கை அதிகமானால், இவற்றைப் பயன்படுத்துவது, அதிக நேரத்தினை எடுக்கும் செயலாக மாறிவிடும். எனவே, தேவைப்படாதவற்றை நீக்குவதே நல்லது. மேலே காட்டியபடி, Main Menu பெற்று, அதில் செட்டிங்ஸ் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் ஆப்ஷன்களில் Delete என்பதுவும் இருக்கும். இதில் கிளிக் செய்தால், லேபில் நீக்கப்படும்.
ஒரே வீச்சில் அனைத்து அஞ்சல்கள்:
Inbox by Gmailல் உள்ள ஒரு பெரிய வசதி, நமக்கு வந்துள்ள மின் அஞ்சல்கள், தொகுப்புகளாகக் (Promo, Social, Finance, Updates, Forums) காட்டப்படுவதுதான். இது நமக்கு பயன் தரும் சேவையாகும். ஜிமெயில் நம் அஞ்சல்களில் உள்ள டெக்ஸ்ட்டைப் படித்து, இந்த தொகுப்புகளுக்கு அனுப்புகிறது. பொதுவாக, நமக்கு வரும் தேவையற்ற அஞ்சல்கள் (Junk mails) Promos மற்றும் Social ஆகிய தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கும். இவற்றை மொத்தமாக ஒரே வீச்சில் பார்க்க, இமெயில் பாக்ஸின் மேலாக உள்ள Sweep என்பதில் கிளிக் செய்தால் போதும்.
அஞ்சல்களைத் தொகுப்பு மாற்ற:
மேலே குறிப்பிட்டுள்ளபடி, நமக்கு வந்துள்ள ஜிமெயில் அஞ்சல்கள் அனைத்தும், அதன் தன்மை அடிப்படையில், வகைப்படுத்தப்பட்டு சில தொகுதிகளின் கீழாகக் காட்டப்படும். உங்களுக்கு வந்துள்ள, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அஞ்சல்கள் தவறான தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக நீங்கள் கருதினால், அவற்றை மொத்தமாக வேறு ஒரு தொகுதிக்கு மாற்றிக் கொள்ளலாம். மாற்ற வேண்டிய அஞ்சல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், Options பட்டனில் கிளிக் செய்து, தொடர்ந்து எந்த தொகுப்பிற்கு மாற்ற வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்தால் போதும்.
முக்கிய அஞ்சலை 'கவனத்தில்' வைத்திட:
Inbox by Gmailலில், குறிப்பிடத்தக்க வசதி ஒன்றுள்ளது. நாம் நினைவில் வைத்திருக்க விரும்பும் மின் அஞ்சல் ஒன்றை, மேலாகக் குத்தி வைக்கலாம். நமக்கு அதிக அளவில் அஞ்சல்கள் வருகையில், சில முக்கிய அஞ்சல்களை நினைவில் வைக்க மறந்துவிட்டு, பின்னர் தேடுவோம். இந்த “பின்” செய்திடும் வசதி, இக்குறையைத் தீர்க்கிறது. நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய அஞ்சல்களை, மேலாக வைத்திடலாம். குறிப்பிட்ட அஞ்சலைத் திறந்து, பின்னர் மேலாக மெனு பாரில் உள்ள Pin பட்டனில் கிளிக் செய்தால், இந்த அஞ்சல் மேலாக “பின்” செய்யப்பட்டு, எப்போதும் நம் கண்களில் படும் வகையில் வைக்கப்படும்.
அஞ்சலைத் தூங்கப்போட:
நமக்குப் பல அஞ்சல்கள் வரும். சிலவற்றை நாம் படிக்காமலேயே ட்ரேஷ் பெட்டிக்குத் தள்ளிவிடுவோம். சிலவற்றை அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிடுவோம். அதற்குப் பதிலாக, நமக்கு அஞ்சல்களைப் படிக்க உடனடியாக நேரம் இல்லாத பட்சத்தில், அவற்றைப் படிக்க என ஒதுக்கி வைக்கலாம். அப்படி ஒதுக்கப்படுவதால், அவற்றை நாம் நமக்கு நேரம் கிடைக்கும்போது எளிதில் தேர்ந்தெடுத்துப் படிக்க இயலும். இவற்றைத் தூங்கப்போட (snooze), அஞ்சலைத் தேர்ந்தெடுத்து, பின்னர் clock என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். உடன் கிடைக்கும் பாக்ஸில், எவ்வளவு நாட்கள் அவற்றைத் தூங்கப்போட வேண்டும் என்பதற்கான நாளைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். அல்லது, குறிப்பிட்ட இடம் சென்ற பின்னர், அந்த அஞ்சலைப் பார்த்து செயல்படத் திட்டமிட்டால், கூகுள் மேப் பயன்படுத்தி, இடத்தையும் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள், ஐரோப்பா அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தால், குறிப்பிட்ட நாடு சென்ற பின்னர், அஞ்சலைப் படிக்க என செட் செய்திடலாம்.
தொகுப்பிலிருந்து அஞ்சலை நீக்க:
குறிப்பிட்ட ஒரு தொகுப்பில் இருந்து (Finance, Promo, Social etc) உங்களுக்கு வந்திருக்கும் மின் அஞ்சல் ஒன்றை நீக்க வேண்டும் என எண்ணினால், அந்த அஞ்சலைத் திறந்து, பின்னர், மூன்று புள்ளி கோடுகள் உள்ள பட்டனில் கிளிக் செய்து, கிடைக்கும் விருப்பத் தேர்வுகளில் Remove From [தொகுப்பின் பெயர்]' என்பதில் கிளிக் செய்திடவும். மிகவும் எளிய முறையில் அஞ்சலை எடுத்துவிடலாம்.
குறைந்த முக்கியத்துவம்:
சில அஞ்சல்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்க மாட்டோம். அஞ்சல்களைப் படிப்போம். படித்த பின்னர், அதன் செய்தி அப்போதைக்கு முக்கியத்துவம் இல்லாததாக இருக்கும். இந்நிலையில் நமக்கு இரு வழிகள் உள்ளன. முதலிலேயே படிக்காமல், அதனை unread என வைத்திடலாம். இன்னொரு வழி அதனை Low priority என்ற வகையில் அமைத்து வைப்பது. இவ்வாறு அமைத்தால், அது தனி ஒரு தொகுதிக்கு எடுத்துச் செல்லப்படும். இதனை Menu கிளிக் செய்து பெறலாம். இங்கு 'Low Priority' என்ற பிரிவினைப் பார்க்கலாம். எனவே, குறிப்பிட்ட அஞ்சலைத் திறந்து, பின்னர் மெனு சென்று, 'Low Priority' தேர்ந்தெடுத்தால், அந்த அஞ்சல் இதில் பத்திரமாக வைக்கப்ப்படும். பின் ஒரு நாளில், நீங்கள் இதனைப் படித்துப் பார்த்து செயல்படலாம்.
ஒரு தொகுதியை குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க:
உங்களுக்கு வரும் பெரும்பாலான அஞ்சல்கள், Promo பிரிவில் வைக்கக் கூடியதாக வருகின்றன என்று வைத்துக் கொள்வோம். இதனால், உங்கள் கவனம் சிதறலாம். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில், பகல் அல்லது இரவு, இரண்டு அல்லது ஐந்து நாட்கள் கழித்து, என நீங்கள் அவற்றைப் பார்க்க விரும்பலாம். இதற்கான வசதி Inbox by Gmailல் தரப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்க As messages arrive, Once a day, Once a week என செட் செய்திடலாம். முதலாவது ஆப்ஷனைத் தேர்வு செய்தால், அந்த தொகுப்பில் வைக்கப்படும் வகையில் அஞ்சல் வந்தவுடனேயே, உங்களுக்கு ஓர் அறிவிப்பு (Notification) கிடைக்கும். நீங்கள் “Once a day”, தேர்ந்தெடுத்தால், காலை 7 மணிக்கு அதற்கான அறிவிப்பு கிடைக்கும். வாரம் ஒரு முறை என்பதைத் தேர்ந்தெடுத்தால், திங்கள் கிழமை அன்று காலை 7 மணிக்கு அஞ்சல்கள் குறித்த அறிவிப்பு கிடைக்கும். இதனை அமைத்திட, மெயின் மெனு சென்று, settings பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர், மேலே தரப்பட்டுள்ள மூன்று பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து செட் செய்திடவும்.
அஞ்சல் திறக்காமல், இணைப்பை இறக்கிட:
ஜிமெயில் தளத்தில் அஞ்சல்களைப் பெறுகையில், அஞ்சலுடன், இணைப்பாக ஏதேனும் ஒரு கோப்பு இருந்தால், அது அஞ்சல் பட்டியலில் காட்டப்படும். அதனைக் கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்திட, அஞ்சலைத் திறந்து, பின், இணைப்பு குறித்த ஐகானில் கிளிக் செய்து கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்து சேவ் செய்திடுவோம். ஆனால், Inbox by Gmailல், அஞ்சலைத் திறக்காமலேயே, இணைப்பில் உள்ள பைல்களைத் தரவிறக்கம் செய்திடலாம். Inbox by Gmailல், இணைப்பு கோப்புகள் திறக்கப்பட்ட நிலையிலேயே காட்டப்படும். இதனால், இணைப்பு பட்டனில் கிளிக் செய்து, அதனைக் கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்திடலாம்.
குறிப்பிட்ட தொகுதியை ஜிமெயிலில் மறைக்க:
பொதுவாக, நமக்கு வரும் அஞ்சல்கள், மாறா நிலையில், Purchases, Finance, Social, Updates, Forums and Promos ஆகிய தொகுப்புகளில் இடம் பெற்று காட்டப்படும். Inbox by Gmailல், இவற்றில் ஏதேனும் ஒன்று தேவை இல்லை என நீங்கள் எண்ணினால், அதனை மறைத்து வைக்கலாம். இதற்கு Main Menu பட்டன் அழுத்தி, அதற்கான செட்டிங்ஸ் பட்டன் அழுத்தவும். பின்னர், Bundle messages in the inbox என்ற பட்டனை அழுத்தினால், குறிப்பிட்ட தொகுப்பு மறைக்கப்படும்.
நன்றி : தினமலர் - கம்ப்யூட்டர் மலர் - 16.05.2016

ATM ல் சிக்கலின்றி பணம் எடுக்க


ATM ல் சிக்கலின்றி பணம் எடுக்க என்ன செய்ய வேண்டும்?

வங்கி ஏடிஎம்-ல் சில நேரங்களில் எடுக்க வேண்டிய பணம் பதிவு செய்தபின், பணம் கைக்கு வருவதில்லை ஆனால் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப் படுகின்றது.
என்ன காரணம்?
நமது நடவடிக்கைதான் இதற்குக் காரணம்.
இதற்கான காரணத்தை முன்னாள் வங்கியாளர் திரு.ப்ளெமிங் டையஸ் அவர்கள் கீழ்கண்டவாறு பதிவு செய்கின்றார்.
ஓவ்வொரு ATM - லும் நீங்கள் உங்களது ATM / debit கார்டை அதற்கூரிய slot - ல் நுழைப்பதிலிருந்து பணம் வெளி வரும் வரை என்ன நடக்கிறது என்பதைப் பார்போம்.
மெஷினில் நமது கார்டை நுழைத்தவுடன் என்ன நடக்கிறது?

கார்டை நுழைத்தவுடன் Language ? கேட்கும்...
அடுத்து உங்களது PIN கேட்கும். PIN enter பண்ணினவுடன் கார்ட் நம்பரையும் PIN - ஐயும் பரிசீலித்து சரி எனில் சில பல option கொடுக்கும்.. withdrawal / Fast Cash / Statement / Balance etc...,
பணம் எடுத்தல் எனில் நீங்கள் withdrawal - ஐ தேர்ந்தெடு.ப்பீர்கள்....
உடனே எவ்வளவு என்று வினா வரும். தொகையினை enter பண்ணினவுடன் அது சரிதானா என்று வினவும்.
Yes என்று நீங்கள் enter பண்ணினதும் சில விநாடிகளில் பணம் உங்கள் கையில் வரும்.
வேறு வங்கி ATM என்றால் type of account - ம் கேட்கும்....
இது நம் கண் முன்னே நடப்பது.
மேற்கண்ட நேரத்தில் உள்ளே என்ன நடக்கிறது? 
நீங்கள் கார்ட் வைத்திருக்கும் வங்கியில் ஒரு server இருக்கும். Central Server என்றும் ஒன்று உண்டு..
நீங்கள் PIN enter பண்ணி உங்கள் கணக்கும் கார்டும் tally ஆன வுடன் தொகையை enter பண்ணினவுடன் ATM, Central Server - ஐ தொடர்பு கொண்டு இந்த கணக்கில் இவ்வளவு தொகை கேட்கிறார்கள்.. கணக்கில் பணம் இருக்கிறதா ? எனறு வினவும்.
Central Server Branch Server - ஐ தொடர்பு கொண்டு கணக்கை verify பண்ணச் சொல்லி போதுமான பணம் இருப்பின் நீங்கள் கேட்ட தொகையினை debit பண்ண சொல்ல, branch server தொகையினை debit செய்து, செய்தாகி விட்டது... என்று Central Server -க்கு செய்தி அனுப்பும்.
Central Server ATM- க்கு கேட்ட தொகை debit செய்யப்பட்டு விட்டது, பணம் கொடுக்கலாம் எனறு instruction கொடுக்கும்.
ATM தனது vault - ல் இருந்து பணம் எடுத்து கொடுக்கும்.
இவ்வளவு சமாச்சாரமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் நடக்க வேண்டும் ( say 90 sec ).
ஆனால், நம்மில் பலர் PIN நம்பரையோ அல்லது எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதையோ ATM - ல் நுழைந்து கார்டை insert பண்னின பிறகுதான் யோசிப்போம். சில நேரங்களில் வீட்டிற்கு போன் செய்து கேட்போம்.
குறிப்பிட்ட நேரம் ஓடிக் கொண்டே இருக்கும். கணக்கு debit ஆகி பணம் கொடுக்கலாம் என்று instruction வரும் முன்னர் நேரம் முடிந்து போகும்.
பணம் வராது...
ஆனால் கணக்கு debit ஆகி விடும்...
எனவே ATM - ல் பணம் எடுக்க செல்லும் போதே PIN நம்பர், நாம் எடுக்கப்போகும் தொகை இவற்றை தெரிந்து கொண்டு தயாராகப் போனால் இந்த மாதிரி தொல்லையை தவிர்க்கலாம்.
நன்றி திரு.ப்ளெமிங் டையஸ் அவர்களுக்கு.
நண்பரும், வழக்கறிஞருமான  
Leenus Leo Edwards's Profile Photo
திரு  Leenus Leo Edwards  அவர்களுடன் இணைந்து

Wednesday, May 18, 2016

சொத்துரிமை மாற்றம் -


சொத்துரிமை மாற்றம் - என்ன செய்ய வேண்டும்?
ஐ.டி. வேலை நிமித்தமாக அமெரிக்காவில் பத்தாண்டுகள் குடும்பத்துடன் இருந்துவிட்டு அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பிய அகிலனுக்கு பயங்கர அதிர்ச்சி. அவரது அப்பாவின் சொத்தை அண்ணன்கள் மூன்றுபேரும் சமபாகப் பங்குப்போட்டு பத்திரமும் பதிவு செய்துவைத்திருந்தார்கள். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதுக்கு, ''நீதான் அமெரிக்காவில் வசதியாக இருக்கியே! உனக்கு தனியாக சொத்து தரமுடியாது'' என்றார்கள்.
அப்செட் ஆகிப்போன அகிலனோ அவரது நண்பரான வக்கீலைப் பார்த்து பேச, 'நீங்கள் உங்கள் அண்ணன்கள் மீது வழக்குத் தொடர்ந்து, உங்களுக்குரிய பங்கை பெறலாம்’ என்றபோதுதான் நிம்மதியானார்.
பொதுவாக, நம் நாட்டில் சொத்து பாகப்பிரிவினை என்பது பல நேரங் களில் சுமுகமாக நடப்பதில்லை. வாரிசு களுக்குள் எழும் முரண்பாடுகளால் சிக்கலானதாகவே மாறிவிடுகிறது. சொத்து பாகப்பிரிவினை மற்றும் இதர சொத்து பரிமாற்றங்களை சிக்கல் இல்லாமல் எப்படி நிறைவேற்றுவது? சொத்தில் யாருக்கு என்ன உரிமை இருக்கிறது? என விளக்கிச் சொன்னார் சென்னையின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான அழகுராமன்.
பாகப்பிரிவினை..!
''தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை. அதாவது, குடும்பச் சொத்து உடன்படிக்கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப்படாதபட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப்பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம்.
தான பத்திரம்..!
சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்துகொள்ளும்போது இந்த முறையைக் கையாளலாம்.
ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முத்திரைத்தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்துகொள்ளலாம்.
ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.
உயில்..!
இது விருப்ப ஆவணம்; சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.
தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாய மில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.
மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படு மாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
பெண்களுக்கான சொத்துரிமை!
பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திருமணமான பெண்களுக்கான சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
2005-ம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி, பெண்கள் தனது தந்தையின் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியும். மேலும், 25.3.1989-க்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியும். அதேவேளையில், சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பிரிவினை கோர முடியாது. ஒருவேளை அந்த சொத்து விற்கப்படாமல் அல்லது பாகம் பிரிக்கப்படாமல் இருந்தால் உரிமை கோர முடியும்.
வாரிசுச் சான்றிதழ்..!
வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும்.
பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரியவரும்போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.
முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்'' என்றார் அழகுராமன்.
பொதுவாக, சொத்து பாகப்பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

-நீரை.மகேந்திரன்-்
நன்றி : நாணயம்விகடன் - 30.11.2001

காசோலை மோசடி வழக்குத் தொடர


காசோலை மோசடி வழக்குத் தொடர என்ன செய்ய வேண்டும்?

படத்தில் காணும் காசோலையை  திரு. செந்தில்குமார் அவர்களுக்கு  16.05.2016 தேதியிட்டு திரு ராமசாமி என்பவர் வழங்குகிறார். 

 காசோலை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் அதை செந்தில்குமார் வங்கி கணக்கில் போட்டு பணத்தை வசூலிக்க வேண்டும்.

( முன்பு காசோலை 6 மாதங்கள் வரை செல்லும்) 

 செந்தில்குமார் அதனை வங்கியில் போடுகிறார்.

வங்கியில் ராமசாமியின் அக்கவுண்டில் பணம் இல்லை என்று அந்த காசோலை திருப்பித் தரப்பட்டு, வங்கியில் இருந்து அதற்கான மெமோ  செந்தில்குமார் அவர்களிடம் வழங்கப்படுகிறது.

சட்ட அறிவிப்பு வழங்க வேண்டும்
.
காசோலை வழங்கியவர் (ராமசாமி) கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்து, வங்கி அதற்கான மெமோ வழங்கும் வழங்கும் பட்சத்தில், அந்த  மெமொ பெற்ற  தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை வழங்கிய ராமசாமிக்கு ஒரு சட்டப்படியான அறிவிப்பை காசோலையை பெற்றவரான செந்தில் குமார் வழங்க வேண்டும். 

இந்த அறிவிப்பு வழங்குவது மிக கட்டாயமானதாகும். 

.என்ன செய்ய வேண்டும் : 1
அறிவிப்பு வழங்கிய பின்னர் காசோலை வழங்கிய ராமசாமி அறிவிப்பை பெற்றுக்கொண்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் செந்தில்குமாருக்கு பணத்தை திருப்பி அளிக்க வேண்டும். 

காசேலை வழங்கியவரான ராமசாமிக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பான 15 நாட்கள் முடிந்ததும், அதன்பின்னர் 30 நாட்களுக்குள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கை ராமசாமி மீது செந்தில்குமார் தாக்கல் செய்யலாம். 

இந்த கால அளவில் ஏதாகிலும் தவறு ஏற்பட்டால், காசோலை மோசடி வழக்கு தொடரமுடியாது. 
.
என்ன செய்யக் கூடாது?
படத்தில் கண்ட காசோலையை 16.05.2015 அன்று வங்கியில் பணம் வசூலிக்க செந்தில்குமார் தாக்கல் செய்கின்றார். காசோலை வழங்கிய ராமசாமி கணக்கில் பணம் இல்லை என்று வங்கியாளர் செந்தில்குமாருக்கு தெரியப்படுத்துகின்றார். 

காசோலை வழங்கிய ராமசாமியை செந்தில்குமார் தொடர்பு கொண்டால், சற்று பொறுத்து கொள்ளுங்கள் இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை கொடுத்து விடுவேன் என்கின்றார். 

அவர் பேச்சை கேட்டு காசோலை பெற்றவரான செந்தில்குமார் சட்டப்படியான நோட்டிஸ் 30 நாட்களுக்குள் அனுப்பாமல் இருக்கிறார். 

ஒரு மாதம் கழிகின்றது. பணம் தரவில்லை.

பணத்தை செந்தில்குமார்  கேட்டால், காசோலை கொடுத்த ராமசாமி பணம் கொடுக்க மறுக்கின்றார். 

30 நாட்களுக்குள் சட்டப்படியான அறிவிப்பு அனுப்பவில்லை என்பதால். இப்போது திரும்பி வந்த காசோலையை வைத்து வழக்கிடமுடியாது. 

என்ன செய்ய வேண்டும் : 2
 காசோலையை தாக்கல் செய்வதற்கான கால அளவு 15.08.2016 வரை இருப்பதால், திரும்பவும் ஒரு முறை அந்த காசோலையை செந்தில்குமார் அவரது வங்கியில் தாக்கல் செய்யவேண்டும்.

 அது திரும்பி வந்த பிறகு, உடனடியாக ராமசாமி அவர்களுக்கு சட்ட அறிவிப்பு அனுப்ப வேண்டும். 

அனுப்புகின்ற அந்த சட்ட அறிவிப்பில் முதலாவதாக பணம் வசூலிக்க காசோலை வங்கியில் போட்ட விபரத்தையும், காசோலை திரும்பி வந்த விபரத்தையும், ராமசாமி பணத்தை ஒரு மாதத்துக்குள் தருவதாகக் கூறியதால் சட்டப்படியான அறிவிப்பு வழங்காமல் இருந்ததையும் தெளிவாக அதில் குறிப்பிடவேண்டும். 

பணத்தை வசூலிக்க 15.08.2016க்கு முன்னர் எத்தனை முறை வேண்டுமானாலும் வங்கியில் காசோலையை தாக்கல் செய்யலாம். காசோலை திரும்பி வந்ததும் சட்ட அறிவிப்பு வழங்கலாம். 

ஆனால், கடைசி 15 நாட்கள் இருக்கும் போது தாக்கல் செய்து, காசோலை திரும்பி வந்தால், காசோலை வழங்கியவர் சொல்லும் கதைகளை (பணத்தை இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்) கேட்காாமல் சட்ட அறிவிப்பு வழங்குவது நல்லது. 

என்ன செய்ய வேண்டும் : 3
காசோலை வழங்கியவர் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், புதிதாக ஒரு காசோலையை அவரிடம் பெற்ற பிறகே, அவர் நமக்கு பணத்தை கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.

காசோலை அளித்தவர் இறந்துவிட்டால்?

வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் உள்ள உறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அதன் பின்னர் வங்கியானது வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை கழிக்க முடியாது. 

வாடிக்கையாளர் இறந்துவிட்டார் என்று வங்கி காசோலையை திருப்பி அனுப்பினாலும் அதன் அடிப்படையில் காசோலை மோசடி வழக்கிடமுடியாது  ஏனெனில் சட்டப்படியான அறிவிப்பை காசோலை வழங்கியவருக்கு மட்டுமே அனுப்பவேண்டும். 

மேலும் இறந்தவர் மீது குற்றவியல் வழக்கு தொடரமுடியாது. 

ஆனால், காசோலை கொடுத்தவரின் வாரிசுதாரர்கள் மீது சிவில் வழக்கு போடலாம். இறந்தவர் ஏதாவது  சொத்தை விட்டு சென்றால் அந்த சொத்தின் மீது நீதிமன்றத்தின் வாயிலாக உரிமை கோரலாம். 

இறந்தவருக்கு எந்தவித சொத்தும் இல்லையென்றால் இறந்தவர் கடனை அடைக்க அவரின் வாரிசுதாரர்கள் கடமைபட்டவர்கள் அல்ல. 

வாரிசுதாரர்களின் கடமையானது இறந்தவரின் சொத்தில் அடையும் உரிமை அளவே ஆகும்.

நன்றி : 
Leenus Leo Edwards's Profile Photo

வழக்கறிஞர் திரு Leenus Leo Edwards அவர்கள்