disalbe Right click

Sunday, May 22, 2016

குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்காமலிருக்க


குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்காமலிருக்க 
என்ன செய்ய வேண்டும்?

முதல் ஐந்து வயது வரை அதிக குளிரினால், அல்லது ஆழ்ந்த தூக்கத்தினால் குழந்தைகள் தூக்கத்திலேயே சிறு நீர் கழிப்பார்கள். இது நார்மலான விஷயம்தான். பத்துவயதிற்கும் மேலே இருக்கும் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் அது சற்று கவனிக்கப்பட வேண்டிய விஷயம். உடனே மருத்துவரை அணுகி அதற்கு உரிய தீர்வினை நீங்கள் காண வேண்டும். சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள் என்னென்ன? முன்னமே சொன்னது போல் மிகச் சிறிய வயதில் கழித்தால் பெரியதாய் கவலைப்பட தேவையில்லை. வளர்ந்த பின் படுக்கையிலேயே சிறுநீர்கழிப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
மூளைக்கு சரியான முறையில் தகவல் அனுப்பாதிருத்தல், சிறு நீர்பாதையில் தொற்று, மன அழுத்தம், நீண்ட நாட்களாய் இருக்கும் மலச்சிக்கல், என பல காரணங்கள் உண்டு. இதற்காக கவலைப்பட தேவையில்லை. வீட்டிலேயே அதனைக் குணப்படுத்தும் எண்ணற்ற மூலிகைகள் நம் சமையலறையில் கொட்டிக் கிடக்கின்றன. 

ஆலிவ் எண்ணெய் மசாஜ் : 
home remedies for bed wetting
இது எளிய வழி. ஆனால் அருமையான தீர்வினைத் தரும். ஆலிவ் எண்ணெயை சூடு படுத்தி உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் தடவுங்கள். தினமும் செய்யலாம். காலை மாலை என இரு வேளைகளிலும் செய்தால் பாஸிடிவான ரிசல்ட் விரைவில் கிடைக்கும்.
பட்டை : 
home remedies for bed wetting
பட்டை எல்லாருக்கும் தெரிந்த மருத்துவ குணங்கள் கொண்ட உணவுப் பொருள். இது படுக்கையில் சிறு நீர் கழிக்கும் குழந்தைகளுக்கு சிறந்த தீர்வு தரும். நம் பாட்டி காலத்திலிருந்து இந்த வழி எல்லோராலும் அறியப்பட்டதே. பட்டையை தினமும் வெறும் வாயில் மெல்லச் சொல்லுங்கள். அல்லது பட்டையைப் பொடி செய்து பாலிலோ அல்லது உணவிலோ கலந்து சாப்பிடச் செய்யலாம். தினமும் பட்டையை எடுத்துக் கொண்டால், உங்கள் குழந்தை தூக்கத்தில் சிறு நீர் கழிப்பதை எளிதில் மறந்துவிடுவார்கள். வீட்டில் முயன்று பாருங்கள்.
நெல்லிக்காய் : 
home remedies for bed wetting
பெரிய நெல்லிக்காய் அட்டகாசமான தீர்வை தரும். நெல்லிக்காயுடன் சிறிது தேனையும், மிளகுப் பொடியையும் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன் சாப்பிடச் சொல்லுங்கள் அல்லது தேனில் ஊற வைத்த நெல்லிக்காயையும் அவர்கள் உண்ணலாம். விரைவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை மறந்துவிடுவார்கள்.
களாக்காய் : 
களாக்காயில் ஜூஸ் செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது கெளாக்காயையும் அப்படியே சாப்பிட வைக்கலாம். தூங்கப்போகும் முன் அவர்களை சாப்பிட சொல்லுங்கள். விரைவில் தீர்வு கிடைக்கும். கெளாக்காய், சிறுநீரகத்தில் தொற்று இருந்தாலும் அதனை சரி செய்யும்.
வெல்லம் : 
home remedies for bed wetting
அதிக குளிர்ச்சியால் உங்கள் குழந்தைகள் சிறுநீர் படுக்கையிலேயே கழிக்க வாய்ப்புகள் உண்டு. வெல்லம் உடலிற்கு சூட்டினை அளிக்கிறது. ஆகவே இதனை உண்ணும்போது, சிறு நீர்பையில் சிறுநீர் கழிக்கச் செய்யும் உந்துதல் ஏற்படாது. வெல்லத்தை சர்க்கரைக்கு பதிலாக பாலில் கலந்து குடிக்கச் செய்யலாம். வெல்லதுடன் எள்ளை கலந்து உண்டாலும் நல்ல தீர்வினை அளிக்கும். வெறுமனே சாப்பிடவும் தரலாம். சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கச் செய்ய வேண்டும் மறக்காதீர்கள்.

எல்லா வகையான உணவுகளிலும் வெல்லத்தை கலந்து கொடுப்பது உகந்த பலனைத் தரும். இந்த டிப்ஸ் தினமும் செய்தால் நீங்கள் மாற்றத்தை காண்பீர்கள். 

வளர்ந்த பின் சிறு நீர் படுக்கையில் கழிப்பது, குழந்தைகளுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மையை தரும். வெளியில் எங்கும் செல்ல வெட்கப்படுவார்கள். சொல்லவும் முடியாது. 

ஆகவே விரைவில் அதற்கு தீர்வு காண மேற்கூறிய எல்லா வழிகளுமே உங்களுக்கு பெட்டர் ரிசல்ட் தான் தரும். முயன்று பாருங்கள் பெற்றோர்களே!

By: Hemalatha 

நன்றி : போல்ட் ஸ்கை » தமிழ் » மகப்பேறு » Kids - 23.05.2016







மார்பக புற்றுநோய்


மார்பக புற்றுநோய் - என்ன செய்ய வேண்டும்?

மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த மார்பகப் புற்றுநோய் சிறப்பு நிபுணர் செல்வி ராதா கிருஷ்ணா

மார்பகப் புற்றுநோயை எதிர்க்க, அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி, ஹார் மோன் தெரபி மற்றும் டார்கெட்டட் (targetted) தெரபி என பல மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. நோயின் நிலை, தன்மையைப் பொறுத்து அது முடிவுசெய்யப்படும். சிலருக்கு அறுவை சிகிச்சையே முதல்கட்ட சிகிச்சையாக மேற்கொள்ளப்படும். அந்த சிகிச்சையின் பலன்களைப் பார்த்த பிறகே, பிற சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.

கீமோ தெரபி: செல்லின் மாறுபாட்டினை கேன்சர் என்கிறோம். அந்த மாறுபட்ட ஆகாத செல்லினை அழிக்க ட்ரிப்ஸ் வழியாக மருந்து செலுத்தப்படும். அப்படி செலுத்தப்படும்போது மற்ற நல்ல செல்களும் பாதிக்கப்படக்கூடும். அதனால் முடி உதிர்வு, வாந்தி, பேதி, சோர்வு, எதிர்ப்புச் சக்தி குறைவு போன்ற வெளிப்பாடுகள் தென்படும். ஆனாலும், அவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இந்த சிகிச்சையானது 21 நாளுக்கு ஒருமுறை என... 4, 6, 8 முறை என வியாதியைப் பொறுத்து வழங்கப்படும்.

ரேடியோ தெரபி: கதிர்வீச்சு வழியாக காமா, போட்டான் (மார்பகப் புற்றுநோயில் அதிகம் இதைத்தான் பயன்படுத்துவார்கள்) மற்றும் எலெக்ட்ரான் போன்ற கதிர்களை (தேவைக்கு ஏற்ப) செலுத்தி அதன் மூலமாக புற்று செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் முறையே ரேடியோ தெரபி சிகிச்சை முறையாகும்.  இந்த சிகிச்சையானது  5 வாரங்களுக்கு 25 முறை செய்யப்படும்.

ஹார்மோன் தெரபி: மாத்திரை மூலமாக ஹார்மோன் தூண்டுதலால் ஏற்படக்கூடிய புற்று செல்களைத் திரும்ப வராமல் தடுக்கும் முறையே ஹார்மோன் சிகிச்சை முறையாகும். 5 வருடங்களுக்கு தினமும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.  கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்றவற்றை ஒப்பிடும்போது இதனால் வரக்கூடிய பக்கவிளைவுகள் மிக மிகக் குறைவே.

டார்கெட்டட் தெரபி: ஊசி மூலமாக (சில நேரங்களில் மாத்திரை மூலமாக) குறிப்பிட்ட பாதிப்பு விளைவிக் கக்கூடிய செல்களை மட்டும் டார்கெட் வைத்து அழிக்கும் முறை டார்கெட்டட் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் ஒரு வருட காலத்துக்கு... 21 நாட்களுக்கு ஒருமுறை என 9 முதல் 17 ஊசிகள் வரை போடப்படும்.

மார்பகத்தை அகற்றாமல் சிகிச்சை... சாத்தியமா?

மார்பகப்புற்றால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணுக்கு, அதை அகற்றாமல் சிகிச்சை செய்வது சாத்தியமா? சாத்தியம்தான். ஒரு பெண்ணின் மார்பக அளவின் விகிதத்தைவிட கட்டி பெரியதாக இருந்தால், அங்கு விட்டுவைக்க மார்பகப் பகுதி எதுவும் மிஞ்சி இருக்காது. அதுபோன்ற சூழ்நிலையில், நோயாளியின் மார்பகத்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று விருப்பப்பட்டால் சில வழிமுறைகள் உள்ளன. கீமோதெரபி கொடுத்து கட்டியின் அளவைக் குறைத்து பின்னர் அறுவை சிகிச்சை செய்யலாம். சில சமயம் கட்டியின் அளவைக் குறைப்பதற்குக் கொடுக்கும் வைத்தியத்தால் கட்டி கரைந்தேபோகக்கூடும். அந்தச் சமயத்தில் கட்டிதான் கரைந்துவிட்டதே என்று விட்டுவிடக்கூடாது. அது போன வேகத்தில் மீண்டும் வந்துவிடக்கூடும். எனவே, மருத்துவரின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுவது அவசியம். இதைத் தாண்டி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட இன்னும் பல சிகிச்சை முறைகள் உள்ளன.

மார்பக மறு உருவாக்கம்!

இழந்த மார்பகத்தை மீண்டும் உருவாக்குதலில், அந்தப் பெண்ணின் உடலின் பிற பகுதிகளிலிருந்து தசையை எடுத்து, அல்லது செயற்கை சிலிக்கான் மார்பகத்தைப் பொருத்தி சிகிச்சை செய்ய முடியும். இப்படிப் புதிதாக உருவாக்கப்படும் மார்பகம், மற்றொரு மார்பகத்தைவிட வித்தியாசமாக இருக்கலாம். அதோடு புதிதாக உருவாக்கப்பட்ட மார்பகத்தில் எந்தவித தொடு உணர்ச்சியும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. நம் உடம்பின் வேறு பகுதியில் இருந்து தசைகள் எடுத்துச் செய்தாலும் உணர்ச்சி இருக்காது. சிலருக்கு மார்பக அறுவை சிகிச்சை செய்யும் அதே நேரத்திலேயே இந்த மறு உருவாக்க அறுவை சிகிச்சையையும் செய்யமுடியும். ஒரு சிலருக்கு சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து இந்த மறு உருவாக்கத்தைச் செய்ய வேண்டிவரும். இதில் அந்தப் பெண்ணின் உடல்நிலை, வயது, என்ன வகையான மார்பகப் புற்றுநோய், இதுவரை என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இனி என்ன விதமான சிகிச்சை தேவைப்படும் என எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில்தான் எப்போது, என்னவிதமான மறு உருவாக்கம் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். இந்த சிகிச்சையின் விளைவுகள் பின்வருமாறு...


அறுவை சிகிச்சைத் தழும்புகள் இயல்பு நிலைக்குத் திரும்ப, கூடுதலாக சில நாட்கள் ஆகலாம்.

புதிதாக உருவாக்கிய மார்பகத்துக்கு ரத்த ஓட்டம் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் அதில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாகவோ இழக்க நேரிடலாம்.

கிருமித் தொற்று ஏற்படக்கூடும்.

புண் ஆறுவதற்கு சற்று அதிக காலம் ஆனால், அடுத்தகட்ட சிகிச்சையைத் தொடர்வதும் தாமதப்படும்.

மார்பக மறு உருவாக்கலில் இந்தியாவின் நிலை!

இந்தியாவில் மார்பக மறு உருவாக்க சிகிச்சை கோரும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காரணங்கள்...

நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் மார்பக மறு உருவாக்கத்தைச் செய்ய முடியாது.

இந்த அறுவை சிகிச்சைக்கு செலவு மிக அதிகம்.

நம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் பலர் பலவிதமான யோசனைகளைச் சொல்வார்கள். அவர்களுடைய புரிதல் எல்லாம் முழுமையானதாக இருக்காது. ஆனால், அவை நோயாளியின் முடிவை வலுவாகப் பாதிக்கக்கூடியதாக இருக்கும்.

சிலிக்கான் செயற்கை மார்பகம் எளிதில் கிடைப்பதில்லை. நிறைய செலவும் ஆகும். அதோடு மார்பகத்தின் வடிவம் நன்றாக அமைய மறுபரிசீலனை செய்யும் நோக்கில் பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கின்றன. இதற்கு ஆகும் செலவும் மிக மிக அதிகம்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் மார்பக மறு உருவாக்கத்தை ஆர்வத்துடன் பரிந்துரைப்பதில்லை.
சா.வடிவரசு
___________________________________________________

உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறையும்! 

எந்தவொரு நோயாக இருந்தாலும் உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். அதுபோலத்தான் மார்பகப் புற்றுநோய்க்கும் அது அவசியமானது. குறிப்பாக, கீமோ தெரபி சிகிச்சையின்போது நோயாளி தன் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

சமச்சீரான உணவே மிகச்சிறந்த மருந்து. அதை உண்டால்தான் நோய் சீக்கிரம் குணமாகும். அதோடு உடம்பும் சிகிச்சையை சந்திக்கும் அளவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். பிடித்த உணவை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம்.

உணவில் தினமும் ஐந்து வகைப் பழங்களும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் நார்ச்சத்து உட்பட அனைத்துவிதமான சத்துக்களும் கிடைத்துவிடும்.

சரியான உணவுப் பழக்கமும், முறையான உடற்பயிற்சியும் மார்பகப் புற்றுநோயாளிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சி, கலிஃபோர்னியா மாகாணத்தில் லா ஜோலாவில் உள்ள `UCSD' புற்றுநோய் மையத்தில் இயங்கும் புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது. 1,490 பெண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் 30 பெண்கள் மட்டுமே ஐந்து விதமான காய்கறிகள் மற்றும் பழங்களுடன் உணவு உண்பதாகவும், வாரத்தில் ஆறு நாட்கள் தினமும் 45 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். நோய் பாதிப்பில் இந்தப் பெண்களுக்கு, மற்ற பெண்களைவிடக் குறைவான அபாயமே உண்டு என்று, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

புற்றுநோயாளிகள் பால் பொருட்கள் சாப்பிடக்கூடாது என்று ஜோன் பிளான் என்ற விஞ்ஞானி சொல்லியிருக்கிறார். ஆனால், அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. கோதுமைப் புல் சாறு அல்லது பவுடர், காளான் போன்றவற்றைச் சாப்பிடலாம். ஆனால், கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்படும்போது மட்டும் இவற்றைச் சாப்பிடக்கூடாது.

அதிகப் புரதச்சத்து கொண்ட உணவான சோயாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும் என்று சொல்லப்பட்டாலும், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

மீன், கோழி போன்றவற்றை எண்ணெயில் பொரிக்காமல் வேகவைத்த சமையலாகச் சாப்பிடலாம். மாட்டுக் கறி வேண்டாம்.


துணை சிகிச்சைகள்!
மார்பகப் புற்றுநோயாளிகள் பலருக்கு வலியைக் குறைக்கவும், பக்கவிளைவுகளைக் குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் துணை சிகிச்சைகள் ஏராளமாக உள்ளன. அந்தப் பட்டியல் இங்கே. இது முழுமையான பட்டியல் கிடையாது. மேலும், இதைச் செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டியது மிக மிக அவசியம்.   

தியானம் 

பிரானிக் ஹீலிங்  

ரெய்கி 

யோகா 

யோகா நித்ரா

சுவாசப் பயிற்சி

பிரணாயாமம்

மந்திரம் ஜெபித்தல்

ரெஃப்ளெக்ஸாலஜி

அரோமா தெரபி 

ஆயுர்வேத மசாஜ்

அக்குபஞ்சர்

இசை சிகிச்சை

கலை சிகிச்சை

ஜர்னலிங் 

உணர்ச்சிபூர்வ சிகிச்சை
________________________________________________
சிகிச்சையும் தாம்பத்ய உறவும்!

மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததில் இருந்து சிகிச்சை முடியும்வரை பெண்கள் பல வகைகளில் பாதிக்கப்படுவார்கள். அதில் தாம்பத்ய உறவும் அடங்கும். இது பற்றி மருத்துவர்கள்கூட வெளிப்படையாக எதுவும் பேசுவதில்லை. இதைக் காரணம் காட்டி சில திருமண உறவுகள் முறிவதைக்கூட நாம் பார்த்திருக்கலாம். அதற்கான காரணங்களாக... உடல் அழகு போய்விடுவதால் ஏற்படும் பதற்றம்,  மார்பகம் மற்றும் பிறப்புறுப்பில் வரக்கூடிய வலி, சிகிச்சை காலகட்டத்தில் வரக்கூடிய மன அழுத்தம்... இன்னும் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும் இவையெல்லாம் கடந்த ஒரு புரிதல் இருந்தால் அது கொடுக்கும் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டுவர மிகப்பெரிய மருந்தாக விளங்கும்!

நன்றி : அவள்விகடன் - 09.02.2016





மூட்டுவலிக்கு மூலிகை வைத்தியம்


மூட்டுவலிக்கு மூலிகை வைத்தியம் 
 என்ன செய்ய வேண்டும்?

முடக்கறுத்தான்.... இதை முடக்கத்தான், மொடக்கத்தான் என்ற வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். முடக்கு + அறுத்தான். அதாவது, வாதநோயால் கை, கால்களில் ஏற்படும் பிடிப்பு, வாதக்கோளாறுகளை சரிசெய்வதால் இந்த மூலிகைக்கு அந்தப் பெயர் வந்தது. வேலியோரங்களிலும், சாலையோரங்களிலும் தானாகவே வளரக்கூடிய இந்த முடக்கத்தான், கீரை வகையைச் சேர்ந்தது. 
இதை சாம்பார், காரக்குழம்பு அல்லது புளிக்குழம்புகளில் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் உடல்வலி, பிடிப்பு, வீக்கம் போன்றவை குணமாகும். இதைப் பயன்படுத்தும்போது சிலருக்கு பேதியாகலாம், ஆனால், அதற்காக பயப்படத் தேவையில்லை.
Image result for முடக்கத்தான் கீரை

வாதப்பிடிப்பு, இரைப்பு இருமல், மூலம், பித்தம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் முடக்கத்தான் கீரையை நீர் விட்டு காய்ச்சி, தினமும் 2 தடவை 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடனடி பலன் கிடைக்கும். இதேபோல் முடக்கத்தான் ரசம் வைத்தும் சாப்பிடலாம். 

தோசை மாவுடன் மிக்ஸியில் அரைத்த முடக்கத்தான் கீரையை கலந்து தோசை வார்த்து சாப்பிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். உடல் வலி உள்ளவர்களுக்கும், மூட்டுவலியால் அவதிப்படும் முதியோருக்கும் இந்த முடக்கத்தான் கீரை உணவுகள் கைகண்ட பலன் தரும்

எம்.மரிய பெல்சின் நன்றி : அவள்விகடன் - 20.10.2015

அலர்ஜி (அரிப்பு)


அலர்ஜி - என்ன செய்ய வேண்டும்?

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடலுக்குள் வேண்டாத பொருள் நுழைந்துவிட்டால், நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறி. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகின்ற ஓர் எதிர்வினை. இது, சில நேரங்களில் இதமாகவும் பல நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் மாறிவிடும். இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.
அடிப்படைக் காரணம்
அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளைக் கட்டுப்படுத்த ரத்தத்தில் உருவாகும் எதிர்புரதம்தான். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடலுக்குள் நுழைந்த பின், மீண்டும் வராமல் தடுக்க இந்தப் புரதம் உருவாகி, ரத்தத்தில் காத்திருக்கும். மீண்டும், அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின் (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை, ரத்தக் குழாய்களை விரிவடையச்செய்து அங்கு உள்ள நரம்புமுனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.
பெரும்பாலான நேரங்களில் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? ‘லேண்ட்-லைன்’ போன் வேலை செய்வதைப் போன்ற இயந்திரவியல் இது. லேண்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான்.
எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும். இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே நரம்புதான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகின்ற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச்செல்கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், இது அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால், அரிப்பு குறைகிறது.
நச்சு அரிப்பு
அரிப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, ‘அர்ட்டிகேரியா’ (Urticaria) என்று அழைக்கப்படுகிற ‘நச்சு அரிப்பு’ நோய். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்குத் தோலில் பல இடங்களில் பூரான் கடித்த மாதிரி வீங்கிவிடும். தோல் தடித்துச் சிவந்துவிடும். சிலருக்கு இந்தத் தடிப்பு தோலில் கத்தியால் கீறியதுபோல் கோடுகோடாக இருக்கும்; இன்னும் சிலருக்கு வட்ட வட்டமாகத் தோல் தடித்துவிடும். தோலில் வெவ்வேறு வடிவங்களில் தடிப்புகள் தோன்றி மறைவதும் உண்டு.
அரிப்பின் வகைகள்
சிலருக்கு இது திடீரென வரலாம். இன்னும் சிலருக்கு நாட்பட்டும் (Chronic) வரலாம். மிகவும் லேசான அரிப்பில் இருந்து கடுமையான அரிப்பு வரை தொல்லை தரலாம். இது சில நிமிடங்களிலும் மறைந்துவிடலாம். அரிப்பு பல வாரங்கள் வரை தொடரவும் செய்யலாம். ஆறு வாரங்கள் வரை நீடிப்பது ’திடீர்’ வகையைச் சேர்ந்தது. ஆறு வாரங்களுக்கு மேல் அரிப்பு நீடிக்குமானால், அது ‘நாட்பட்ட அரிப்பு’.
தூண்டும் காரணிகள்
நச்சு அரிப்புக்கு நாம் சாப்பிட்ட உணவு ஒவ்வாதது முக்கியக் காரணி. பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல்மீன், கருவாடு, கடலை, நட்ஸ், சாக்லெட் போன்றவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். உணவுகளில் கலக்கப்படும் செயற்கை நிறமூட்டிகள், மணமூட்டிகள், பதப்படுத்த உதவும் வேதிப்பொருட்கள் போன்றவையும் நச்சு அரிப்பைத் தூண்டக்கூடியவையே.
கொசுக்கடியில் தொடங்கி சிலந்திக்கடி வரை பலதரப்பட்ட பூச்சிக் கடிகள் நச்சு அரிப்பை உண்டாக்கும். சிலருக்கு, தோலை அழுத்துவதுபோல் உடைகளை அணிந்தால், அந்த அழுத்தம் காரணமாக நச்சு அரிப்பு ஏற்படுவது உண்டு. சிலருக்கு, அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பும் தடிப்பும் ஏற்படும்.
சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டு, தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால், பலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.
எச்சரிக்கும் நோய்கள்
உடலில் இருக்கும் எந்த ஒரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்பு உண்டு.
சொத்தைப் பல், தொண்டை அழற்சி, சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப்பாதை அழற்சி, சைனஸ் பாதிப்பு போன்றவை நச்சு அரிப்பை உண்டாக்குகின்றன. குடலில் புழு இருந்தாலும் அரிப்பு ஏற்படலாம். கர்ப்பக்காலத்திலும் குழந்தை பிறந்த பிறகும் பல பெண்களுக்கு நச்சு அரிப்பு ஏற்படுவதற்கு தைராய்டு சுய எதிரணுக்கள் (Thyroid Auto Antibodies) காரணமாகின்றன.
கட்டுக்கு அடங்காத நச்சு அரிப்புக்கு முடக்குவாதம், ‘லூபஸ் எரித்திமட்டோசஸ் (Lupus Erythematosus) ஆகிய நோய்கள் காரணமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. தவிர, சர்க்கரைநோய், ரத்தசோகை, மஞ்சள்காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்னை, பித்தப்பை பிரச்னை, ஹார்மோன் பிரச்னை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’ எனும் மூளை நரம்புப் பிரச்னை, பரம்பரைத்தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த நோய்களின்போது தோலில் தடிப்பு தோன்றாது.
கோபம், கவலை, பயம், மனஅழுத்தம் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள், தங்கள் உடலில் ஒரு பூச்சி ஊர்வதுபோல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால், இவர்கள் எந்த நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் இந்த அரிப்பு சரியாகும்.
என்ன பரிசோதனை?
ரத்தப் பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலப் பரிசோதனை முதலில் மேற்கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து அலர்ஜியை அறிய உதவும் தோல் பரிசோதனைகள் செய்யப்படும். காரணம் தெரிந்ததும் அதற்கு ஏற்ப சிகிச்சை வழங்கப்படுவது நடைமுறை.
என்ன சிகிச்சை?
அரிப்பைக் குறைக்க ஆன்டிஹிஸ்டமின் மாத்திரைகளும் லோஷன்களும், வீக்கத்தைக் குறைக்க ஸ்டீராய்டு மாத்திரைகளும், அரிப்பைத் தடுக்க மான்டிலூகாஸ்ட் மாத்திரைகளும் தரப்படும். இவற்றை, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குச் சாப்பிட வேண்டியது மிக முக்கியம். அப்போதுதான் அரிப்பு மீண்டும் வராமல் இருக்கும்.

ஆஞ்சியோஎடீமா தெரியுமா?

அலர்ஜியின் வெளிப்பாடாகத் தோலில் தோன்றுகிற இன்னொரு முக்கிய அறிகுறி ஆஞ்சியோஎடீமா (Angioedema).
இதில் தோலில் அரிப்புடன் ஏற்படுகிற தடிப்பும் வீக்கமும் பெரிதாகக் காணப்படும். அடித்தோலும் அங்குள்ள ரத்தக்குழாய்களும் சேர்ந்து வீங்குவதால் இந்த வீக்கம் பெரிய அளவில் ஏற்படுகிறது. இது நச்சு அரிப்பைப் போலவே காணப்படும் அறிகுறிதான் என்றாலும் சிறிதளவு வித்தியாசம் உண்டு.
இது தோலில் எல்லா இடங்களிலும் தோன்றாது. குறிப்பாக, கண்ணுக்குக் கீழ் வீக்கம் ஏற்படும். உதடுகள் வீங்கும். சிலருக்கு கை, கால் பாதங்களிலும், பிறப்பு உறுப்புப் பகுதிகளிலும் இந்த வீக்கம் தோன்றலாம். இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்; இந்த வீக்கம் தொண்டையில் தோன்றினால், மூச்சு விட சிரமப்படுத்தும். உணவை விழுங்க முடியாது. இதை அலட்சியப்படுத்தாமல் உடனே கவனிக்க வேண்டும். தவறினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
அரிப்பைத் தடுக்க 8 வழிகள்

ஒவ்வாத உணவுகளைப் பட்டியலிட்டு அவற்றை ஒதுக்க வேண்டும்.
சுய மருத்துவம் தவிர்க்க வேண்டும்.
கடுமையான ரசாயனங்களால் ஆன சோப்பைப் பயன்படுத்தக் கூடாது.
தளர்ந்த உடைகளை அணிய வேண்டும்.
குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டாம்.
சருமத்துக்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.
வீட்டில் பூச்சிகள் வளர்வதைத் தடுக்க, வீட்டுச் சுவர்களில் சில வேதிப்பொருள்களைத் தடவ வேண்டும்.
குடல் புழுவுக்கு முறைப்படி மருந்து சாப்பிட வேண்டும்.
கு.கணேசன், பொதுநல மருத்துவர்,
நன்றி : டாக்டர் விகடன் - 01.06.2016

Saturday, May 21, 2016

கண்டிப்பா பட்டா வாங்கணுமா?


கண்டிப்பா பட்டா வாங்கணுமா? என்ன செய்ய வேண்டும்?

வீட்டுமனை வாங்குவதில் முக்கியமான ஒரு விஷயம் பட்டா வாங்குவது ஆகும். வீட்டு மனை வாங்கும்போது பத்திரப்பதிவு செய்தால் மட்டுமல்லாமல் பட்டாவும் வாங்க வேண்டும்.
வாரிசு முறையில் எழுதிவைக்கப்பட்ட வீட்டு மனையின் பட்டாவையும் நம்முடைய பெயரில் மாற்றம் செய்துகொள்ள வேண்டும். அது அவசியமானது.
நம் சொத்து, எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்பந்தமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பம்
www.tn.gov.in/LA/forms
என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.
Image result for பட்டா
இந்த விண்ணப்பத்தை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பிறகு பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்.
ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும்
ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும்
பட்டா மாற்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நமக்கு செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இதற்கான கட்டணமாக ரூ.80. தாலுகா அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார்/கணவர் பெயர், இருப்பிட முகவரி, பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் (அதாவது மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண்/மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைபிரிவு மனை எண், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்), மனை அங்கீகரிக்கப்பட்டதா, அங்கீகாரம் இல்லாத மனையா, என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பிறகு சொத்து எந்த வகையில் விண்ணப்பதாரருக்குக் கிடைக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட சொத்தை விண்ணப்பதாரர் அனுபவித்து வருவதற்கான சான்றுகளையும் இணைக்க வேண்டும். அதாவது சொத்து வரி ரசீது, மின் கட்டண அட்டை, குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்ற சான்றுகளில் ஒன்றை இணைக்க வேண்டும்.
பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டும்.
தங்கள் விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். குறித்த காலத்துக்குள் பட்டா வழங்கப்படவில்லை என்றால் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம்.

நன்றி : தி இந்து நாளிதழ் - 21.05.2016