எப்போதும் தோல்வி, நஷ்டம்! என்ன செய்ய வேண்டும்?
"மாத ஊதியப் பணியில் என்னால் தொடர்ந்து பொருந்தியிருக்க முடியவில்லை. சரி, சுயதொழில் செய்யலாம் என்று காய்கறிக் கடை வைத்தேன். பிறகு சிறிய அளவில் உணவு விடுதி நடத்திப் பார்த்தேன். அதே தொழில்களில் எத்தனையோ பேர் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் எனக்கு எங்கே போனாலும் தோல்வி, எல்லாம் நஷ்டம். எனக்கு மட்டும் ஏன் அதிர்ஷ்டம் இல்லை? முன்பே தீர்மானிக்கப்பட்ட பாதையில் இயற்கை என்னை இழுத்துச் செல்கிறதா?"
சத்குரு:
"தூண்டிலோடு கரையில் நிற்பவன் கண்களில் 100 மீன்கள் தென்படும். எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டு தூண்டிலை இப்படியும் அப்படியும் நகர்த்திக்கொண்டே இருந்தால், ஒன்றுகூடச் சிக்காது. எதிலும் நிலைத்திருக்காமல் இதுவா, அதுவா என்று இடம் மாறிமாறித் தேடினால், எதிலும் திருப்தி கிடைக்காது.
ஒருவருக்கு, கிரிக்கெட் வெறும் விளையாட்டு. இன்னும் சிலருக்கு, அது வெறும் கேளிக்கை. விளையாடுபவருக்கோ, அதுதான் வாழ்க்கை. எதையும் அணுகும் கோணத்தில் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுவதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே இருக்கிறது. உங்களுக்கான தொழிலோ, பணியோ எது என்பதில் தெளிவு வேண்டும்.
சங்கரன் பிள்ளை ஒரு தெர்மாஸ் ஃபிளாஸ்க் வாங்க கடைக்குப் போயிருந்தார்.
'இது சூடான பொருட்களை ஆறு மணி நேரங்களுக்குச் சூடு குறையாமலேயே வைத்திருக்கும்' என்றார் விற்பனையாளர்.
'குளிரான பொருட்களை?'
'குறைந்தது ஆறு மணி நேரங்களுக்கு அதே குளிர்ச்சியுடன் வைத்திருக்கும்'.
சங்கரன்பிள்ளை ஃபிளாஸ்க்கை வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் போனார்.
'உங்களைக் கடைக்காரன் ஏமாற்றி இருப்பான்' என்றாள் அவருடைய மனைவி.
'அதைக் கண்டுபிடிக்கத்தான், வரும் வழியிலேயே, சுடச்சுட காபியும், ஜில் என்று குல்ஃபியும் வாங்கி வந்து இருக்கிறேன்' என்றார், சங்கரன்பிள்ளை.
இப்படி ஒரே சமயத்தில் இதுவாகவும் இருக்க வேண்டும், அதுவாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் என்னாகும் யோசியுங்கள்.
மாடு மாதிரி உழைத்தேன், பலன் இல்லை என்று புலம்புவதிலும் அர்த்தம் இல்லை. எவ்வளவு நேரம் உழைக்கிறீர்கள் என்பதைவிட ஒவ்வொரு கட்டத்திலும், உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்துகிறீர்களா என்பதுதான் உங்கள் வெற்றிகளை நிர்ணயிக்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு வகுப்புக்கு வந்திருக்க ஓர் அம்மா, 'வாழ்க்கையை வெறுத்து ஐந்துமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தவள் நான்' என்று ஆரம்பித்தார். நான் உடனே, 'நிறுத்துங்கள் அம்மா, போதும்!' என்றேன். வாழ்வதுதான் கஷ்டமான வேலை. சாவது கூடவா? தற்கொலை செய்துகொள்ளவே ஐந்துமுறை முயற்சித்துத் தோற்றார் என்றால், வாழ்க்கையைக் கையாள்வதில் அவருடைய திறன் எப்பேர்ப்பட்டதாக இருக்க வேண்டும்?
நீங்கள் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை, எல்லாமே இயற்கையின் விருப்பப்படிதான் நடக்கிறது என்கிறீர்கள். அப்படி இருந்தும், இன்னும் இந்த உலகில் வாழ்கிறீர்கள் என்றால், உங்களைச் சுற்றி உள்ளவர்கள் உங்களிடம் மிக நல்லவர்களாக நடந்துகொண்டு இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
உங்களை நீங்களே அதிர்ஷ்டம் கெட்டவராக நினைத்துக் கொள்வது,
எனக்கு ஒரு கதையை நினைவுபடுத்துகிறது.
எனக்கு ஒரு கதையை நினைவுபடுத்துகிறது.
அரசன் ஒருமுறை வேட்டைக்குப் புறப்பட்டபோது, முதலில் நாவிதன் ஒருவன் எதிர்ப்பட்டான். எவ்வளவு அலைந்து திரிந்தும் வேட்டையில் அரசனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. அந்த நாவிதனை இழுத்து வந்து தூக்கில் போடுங்கள். அவன் முகத்தில் விழித்ததுதான் எனக்குத் துரதிர்ஷ்டமாகிவிட்டது என்று அரசன் ஆணையிட்டான். நாவிதன் கதறக் கதற அரண்மனைக்கு இழுத்துவரப்பட்டான். தெனாலிராமன் இதைக் கேள்விப்பட்டான். அரசவைக்கு வந்தான். மன்னா, எனக்குத் தெரிந்த இன்னொருவரின் முகம் இதைவிட துரதிர்ஷ்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கப்படுமா?
'நிச்சயமாக யார் அந்த இன்னொருவர்?'
'நீங்கள்தான் மன்னா!'
'என்ன திமிர் உனக்கு?' என்று அரசன் சீறினான்.
'பொய் இல்லை மன்னா, நாவிதன் முகத்தைப் பார்த்தீர்கள். வேட்டையில்தான் வெற்றி இல்லை. ஆனால், காலையில் உங்கள் முகத்தைப் பார்த்த நாவிதனுக்கு உயிரே போகப்போகிறது. எந்த முகம் அதிகத் துரதிர்ஷ்டவசமானது,
நீங்களே சொல்லுங்கள்!'
இப்போது சொல்லுங்கள். நீங்கள் அதிர்ஷ்டம் அற்றவரா?
மேலே இருந்து உங்களைவிடச் சக்தி வாய்ந்த வேறு எவரோ உங்களை இயக்கிக்கொண்டு இருப்பதாக நினைப்பது எல்லாம் படுமுட்டாள்தனம்.
உங்களுக்கு நேர்வது ஒவ்வொன்றும் உங்களால் வரவழைக்கப்பட்டது. பிரச்சினை என்னவென்றால், பலசமயம் அதை நீங்கள் உணர்வதுகூட இல்லை.
உண்மையில், எல்லாவற்றையும்விட மிகச் சக்தி வாய்ந்தது எதுவோ, படைத்தலுக்கே மூல சக்தி எதுவோ, அதுவே உங்களிடம்தான் இருக்கிறது. விழிப்புணர்வைவிட மிக்க சக்தி வாய்ந்த எதுவும் இங்கே இல்லை. உங்கள் திறமை எது என்று புரிந்துகொள்ளாமல், அதை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பது உங்கள் வாழ்க்கையில் நேரும் மிகப்பெரும் துக்கமாகும்.
இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று மனதில் எதையும் நிர்ணயித்துக்கொள்ளாதீர்கள். எந்தத் தொழில் செய்ய விருப்பம் வந்தாலும், அதன் அடிப்படை நுணுக்கங்களை முழுமையாக முதலில் அறிந்துகொள்ளுங்கள். முழுத் திறமையைப் பயன்படுத்தாமல் செலவு செய்கிற ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் வீணடிக்கப்பட்ட நிமிடம். இதைக் கவனத்தில் கொள்ளுங்கள். 100 சதவிகிதத் திறமையைப் பயன்படுத்துங்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, கவனமாகச் செயலாற்றுங்கள்.
இயற்கை உங்களுக்குச் சாதகமாக வேலை செய்யத் துவங்கிவிடும்".
நன்றி : தினமலர் நாளிதழ் - 02.06.2016