disalbe Right click

Thursday, June 2, 2016

எப்போதும் தோல்வி, நஷ்டம்!


எப்போதும் தோல்வி, நஷ்டம்! என்ன செய்ய வேண்டும்?

"மாத ஊதியப் பணியில் என்னால் தொடர்ந்து பொருந்தியிருக்க முடியவில்லை. சரி, சுயதொழில் செய்யலாம் என்று காய்கறிக் கடை வைத்தேன். பிறகு சிறிய அளவில் உணவு விடுதி நடத்திப் பார்த்தேன். அதே தொழில்களில் எத்தனையோ பேர் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் எனக்கு எங்கே போனாலும் தோல்வி, எல்லாம் நஷ்டம். எனக்கு மட்டும் ஏன் அதிர்ஷ்டம் இல்லை? முன்பே தீர்மானிக்கப்பட்ட பாதையில் இயற்கை என்னை இழுத்துச் செல்கிறதா?"
சத்குரு:
"தூண்டிலோடு கரையில் நிற்பவன் கண்களில் 100 மீன்கள் தென்படும். எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டு தூண்டிலை இப்படியும் அப்படியும் நகர்த்திக்கொண்டே இருந்தால், ஒன்றுகூடச் சிக்காது. எதிலும் நிலைத்திருக்காமல் இதுவா, அதுவா என்று இடம் மாறிமாறித் தேடினால், எதிலும் திருப்தி கிடைக்காது.
ஒருவருக்கு, கிரிக்கெட் வெறும் விளையாட்டு. இன்னும் சிலருக்கு, அது வெறும் கேளிக்கை. விளையாடுபவருக்கோ, அதுதான் வாழ்க்கை. எதையும் அணுகும் கோணத்தில் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுவதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே இருக்கிறது. உங்களுக்கான தொழிலோ, பணியோ எது என்பதில் தெளிவு வேண்டும்.
சங்கரன் பிள்ளை ஒரு தெர்மாஸ் ஃபிளாஸ்க் வாங்க கடைக்குப் போயிருந்தார்.
'இது சூடான பொருட்களை ஆறு மணி நேரங்களுக்குச் சூடு குறையாமலேயே வைத்திருக்கும்' என்றார் விற்பனையாளர்.
'குளிரான பொருட்களை?'
'குறைந்தது ஆறு மணி நேரங்களுக்கு அதே குளிர்ச்சியுடன் வைத்திருக்கும்'.
சங்கரன்பிள்ளை ஃபிளாஸ்க்கை வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் போனார்.
'உங்களைக் கடைக்காரன் ஏமாற்றி இருப்பான்' என்றாள் அவருடைய மனைவி.
'அதைக் கண்டுபிடிக்கத்தான், வரும் வழியிலேயே, சுடச்சுட காபியும், ஜில் என்று குல்ஃபியும் வாங்கி வந்து இருக்கிறேன்' என்றார், சங்கரன்பிள்ளை.
இப்படி ஒரே சமயத்தில் இதுவாகவும் இருக்க வேண்டும், அதுவாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் என்னாகும் யோசியுங்கள்.
மாடு மாதிரி உழைத்தேன், பலன் இல்லை என்று புலம்புவதிலும் அர்த்தம் இல்லை. எவ்வளவு நேரம் உழைக்கிறீர்கள் என்பதைவிட ஒவ்வொரு கட்டத்திலும், உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்துகிறீர்களா என்பதுதான் உங்கள் வெற்றிகளை நிர்ணயிக்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு வகுப்புக்கு வந்திருக்க ஓர் அம்மா, 'வாழ்க்கையை வெறுத்து ஐந்துமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தவள் நான்' என்று ஆரம்பித்தார். நான் உடனே, 'நிறுத்துங்கள் அம்மா, போதும்!' என்றேன். வாழ்வதுதான் கஷ்டமான வேலை. சாவது கூடவா? தற்கொலை செய்துகொள்ளவே ஐந்துமுறை முயற்சித்துத் தோற்றார் என்றால், வாழ்க்கையைக் கையாள்வதில் அவருடைய திறன் எப்பேர்ப்பட்டதாக இருக்க வேண்டும்?
நீங்கள் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை, எல்லாமே இயற்கையின் விருப்பப்படிதான் நடக்கிறது என்கிறீர்கள். அப்படி இருந்தும், இன்னும் இந்த உலகில் வாழ்கிறீர்கள் என்றால், உங்களைச் சுற்றி உள்ளவர்கள் உங்களிடம் மிக நல்லவர்களாக நடந்துகொண்டு இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
உங்களை நீங்களே அதிர்ஷ்டம் கெட்டவராக நினைத்துக் கொள்வது,
எனக்கு ஒரு கதையை நினைவுபடுத்துகிறது.
அரசன் ஒருமுறை வேட்டைக்குப் புறப்பட்டபோது, முதலில் நாவிதன் ஒருவன் எதிர்ப்பட்டான். எவ்வளவு அலைந்து திரிந்தும் வேட்டையில் அரசனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. அந்த நாவிதனை இழுத்து வந்து தூக்கில் போடுங்கள். அவன் முகத்தில் விழித்ததுதான் எனக்குத் துரதிர்ஷ்டமாகிவிட்டது என்று அரசன் ஆணையிட்டான். நாவிதன் கதறக் கதற அரண்மனைக்கு இழுத்துவரப்பட்டான். தெனாலிராமன் இதைக் கேள்விப்பட்டான். அரசவைக்கு வந்தான். மன்னா, எனக்குத் தெரிந்த இன்னொருவரின் முகம் இதைவிட துரதிர்ஷ்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கப்படுமா?
'நிச்சயமாக யார் அந்த இன்னொருவர்?'
'நீங்கள்தான் மன்னா!'
'என்ன திமிர் உனக்கு?' என்று அரசன் சீறினான்.
'பொய் இல்லை மன்னா, நாவிதன் முகத்தைப் பார்த்தீர்கள். வேட்டையில்தான் வெற்றி இல்லை. ஆனால், காலையில் உங்கள் முகத்தைப் பார்த்த நாவிதனுக்கு உயிரே போகப்போகிறது. எந்த முகம் அதிகத் துரதிர்ஷ்டவசமானது,
நீங்களே சொல்லுங்கள்!'
இப்போது சொல்லுங்கள். நீங்கள் அதிர்ஷ்டம் அற்றவரா?
மேலே இருந்து உங்களைவிடச் சக்தி வாய்ந்த வேறு எவரோ உங்களை இயக்கிக்கொண்டு இருப்பதாக நினைப்பது எல்லாம் படுமுட்டாள்தனம்.
உங்களுக்கு நேர்வது ஒவ்வொன்றும் உங்களால் வரவழைக்கப்பட்டது. பிரச்சினை என்னவென்றால், பலசமயம் அதை நீங்கள் உணர்வதுகூட இல்லை.
உண்மையில், எல்லாவற்றையும்விட மிகச் சக்தி வாய்ந்தது எதுவோ, படைத்தலுக்கே மூல சக்தி எதுவோ, அதுவே உங்களிடம்தான் இருக்கிறது. விழிப்புணர்வைவிட மிக்க சக்தி வாய்ந்த எதுவும் இங்கே இல்லை. உங்கள் திறமை எது என்று புரிந்துகொள்ளாமல், அதை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பது உங்கள் வாழ்க்கையில் நேரும் மிகப்பெரும் துக்கமாகும்.
இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று மனதில் எதையும் நிர்ணயித்துக்கொள்ளாதீர்கள். எந்தத் தொழில் செய்ய விருப்பம் வந்தாலும், அதன் அடிப்படை நுணுக்கங்களை முழுமையாக முதலில் அறிந்துகொள்ளுங்கள். முழுத் திறமையைப் பயன்படுத்தாமல் செலவு செய்கிற ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் வீணடிக்கப்பட்ட நிமிடம். இதைக் கவனத்தில் கொள்ளுங்கள். 100 சதவிகிதத் திறமையைப் பயன்படுத்துங்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, கவனமாகச் செயலாற்றுங்கள்.
இயற்கை உங்களுக்குச் சாதகமாக வேலை செய்யத் துவங்கிவிடும்".

நன்றி : தினமலர் நாளிதழ் - 02.06.2016

கைபேசியில் தமிழ் அகராதி


கைபேசியில் தமிழ் அகராதி -  என்ன செய்ய வேண்டும்?

ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் இனி புரட்டலாம் 
'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'!

சமகாலத் தமிழைத் தொழில்நுட்பரீதியாக அடுத்த யுகத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சிகளில் ஒரு மைல்கல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ‘க்ரியா பதிப்பகம்’. ஆண்ட்ராய்டு செல்பேசிகளுக்கான ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் செயலியைப் பதிவிறக்கிக்கொண்டால், இனி செல்பேசியிலேயே தமிழ் அகராதியைப் புரட்டலாம். தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கங்களோடு அவற்றுக்கு இணையான ஆங்கில வார்த்தைகளையும் விளக்கங்களையும் பெறலாம்.

வையாபுரிப்பிள்ளை ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘தமிழ்ப் பேரகராதி’ (Tamil Lexicon) பழந்தமிழ்ச் சொற்களிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையிலான சொற்களுக்கான அகராதி என்றால் ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’தற்காலப் பொதுத் தமிழுக்கான அகராதி. மொழியியல் அறிவு, கணினித் தொழில்நுட்பம் போன்றவை ஒருங்கே இந்த அகராதியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ‘க்ரியா’ அகராதி யின் முதல் பதிப்பு சிறப்பு வாய்ந்த அறிஞர்கள் குழு, நிபுணர்கள் குழுவின் ஆறு ஆண்டுகால உழைப் பில் 1992-ல் வெளியானது. அதற்குப் பிறகு, தமிழில் நிகழ்ந்த மாற்றங்களையும் சேர்க்கைகளையும் கணக்கில் கொண்டு, அந்த அகராதியை விரிவாக்கி 2008-ல் வெளியிட்டார்கள். 75 லட்சம் தமிழ்ச் சொற் களைக் கொண்ட ‘சொல்வங்கி’யின் உதவியுடன் உருவாக்கப் பட்டது இந்தப் பதிப்பு. 21,000 தலைச்சொற்கள், 38,000 எடுத்துக்காட்டு வாக்கியங்கள், 1,700 இலங்கைத் தமிழ்ச் சொற்கள் போன்றவை இதன் முக்கியமான அம்சங்கள்.

இணையத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், க்ரியா அகராதியை மேம்பட்ட தேடல் வசதிகளுடன் க்ரியா இணையதளத்தில் வெளியிட்டார்கள். கூடவே, ஐபேட், ஐஃபோன் சாதனங்களிலும் இந்த அகராதியின் ஆப் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆண்ட்ராய்டில் இந்த அகராதி தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

செல்பேசியில் அகராதியைப் புரட்டுவதே அலாதியான அனுபவமாக இருக்கிறது. ‘அ’ என்ற எழுத்தைத் தட்டினாலே அகரத்தில் தொடங்கும் எழுத்துகளைக் கைபேசித் திரை காட்டுகிறது. அது மட்டுமல்லாமல், Options என்ற பகுதியில் சொற்களை அவற்றின் இலக்கண வகை, வழக்குக் குறிப்புகள், துறைகள் ரீதியாகவும் தேட முடியும். உதாரணத்துக்கு, ஒருவர் அச்சுப் பதிப்பு அகராதியில் இயற்பியல் சார்ந்த சொற்களைப் பக்கம் பக்கமாகப் புரட்டித் தேடுவதென்றால், ஒரு வாரம் பிடிக்கலாம். ஆனால், இந்த ‘ஆப்’பில் இயற்பியல் என்ற துறையை அழுத்தினால், ஒரு நொடிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட சொற் களின் பட்டியல் விரிகிறது. இந்த அம்சம் மாணவர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

இது ‘தமிழ்-தமிழ்- ஆங்கிலம்’ அகராதி என்பதால், ஆங்கிலச் சொல்லைத் தட்டச்சு செய்தால், அதற்குத் தமிழில் நிகரான பொருள் என்ன என்பதையோ அது தொடர்பான மற்ற தமிழ்ச் சொற்களையோ தேடலாம். தமிழறிவைத் தாண்டி, ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். தேடல் வசதியும், இண்டிக் கீபோர்டு என்ற விசைப்பலகையும் திறன் பொருந்தியவையாகவும் எளிமையாகவும் இருக்கின்றன. கணினித் தமிழில் நடந்திருக்கும் சாதனைகளில் ஒன்று என்றே இதைச் சொல்லலாம்!

சென்னைப் புத்தகக் காட்சியில் ‘க்ரியா பதிப்பகம்’ பங்கேற்றிருக்கிறது. அரங்கு எண்: 51, 52. இந்த அகராதிச் செயலியை அங்கு நேரடியாகப் பெறலாம் அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு கைபேசியில் உள்ள ‘பிளே ஸ்டோ’ருக்குச் சென்று creatamildictionary என்று ஆங்கிலத்தில் அடித்தால், இந்தச் செயலி வந்துவிடுகிறது. முதல் பத்துச் சொற்கள் வரை கட்டணமின்றிப் பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்பாடு பிடித்திருக்கும் பட்சத்தில் ரூ.199 செலுத்தினால், ஆயுளுக்கும் பயன்படுத்தலாம்!

நன்றி  :  இந்து நாளிதழ் - 03.06.2016

சொந்தக் கார் நல்லதா? வாடகைக் கார் நல்லதா?


சொந்தக் கார் நல்லதா? வாடகைக் கார் நல்லதா?
என்ன செய்ய வேண்டும்?
வ்வொரு குடும்பத்தின் எதிர்கால ஆசைப் பட்டியலிலும் கார் நிச்சயம் இருக்கும். கார் தேவையாக இருக்கிறதோ இல்லையோ, பயன்படுத்துகிறோமோ இல்லையோ, வீட்டு வாசலில் ஒரு அழகான காரை நிறுத்தி வைக்கவே எல்லோரும் விருப்பப்படுவது உண்டு.
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் கார்களில் மாருதி ஆல்டோ, இயான், நானோ போன்ற சிறிய கார்கள்தான் முதலிடங்களில் உள்ளன. இந்தச் சிறிய கார்கள் நடுத்தர மக்களின் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வருகின்றன. இந்திய கார் மார்க்கெட்டின் ஆணிவேர் இந்தச் சிறிய கார்கள்தான்.
ஆனால், நகரங்களில் கார்களை நிர்வகிப்பது என்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருப்பதால் இப்போதெல்லாம் மொபைலை எடுத்தோமா, ஆப் மூலம் டாக்ஸியை புக் செய்தோமா, வேண்டிய இடத்துக்கு போய் வந்தோமா என்பதுதான் ட்ரெண்ட்-ஆக இருக்கிறது.
நகரங்களில் உபர், ஓலா போன்ற பல டாக்ஸி சேவை நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. அதுவும் ஆட்டோவில் செல்வதைவிடவும் டாக்ஸிகளில் செல்வது மலிவாக இருப்பதாகச் சொல்லப்படு கின்றன. இதனால் சொந்தமாக ஒரு காரை வாங்கி பயன்படுத்து வதைவிட வாடகை கார் பயன்படுத்திக் கொள்ளவே பலரும் நினைக்கிறார்கள். இந்த நிலையில், ஒருவர் சொந்தமாக காரை வாங்கி பயன்படுத்துவது லாபமா அல்லது வாடகை காரைப் பயன்படுத்துவது லாபமா என்கிற கேள்வி முக்கியமானது. இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.
சொந்தக் கார் என்னும் கனவு!
காரில் பயணிக் கிறோம் என்பதைக் காட்டிலும் நம்மிடம் சொந்த கார் இருப்பது ஒரு ஸ்டேடஸ் கெளவரமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சொந்தமாக கார் வாங்கும்முன் நம் வருமானம், தேவை, எத்தனை பேர் பயணிப்போம் என்கிற விஷயங்கள் முக்கியமானவை. ஏனெனில், பெரும்பாலான நகரங்களில் இருப்போரின் வருமானம் ரூ.30,000-க்கும் அதிகமாக இருப்பதால் எளிதில் கார் வாங்கும் முடிவை எடுத்து விடு கிறார்கள். அதற்கேற்ப கார் நிறுவனங்களும், கார் கடன் விளம்பரங்களும் அவர்களை கவர்ந்து இழுக்கின்றன.
ஆனால், சென்னை போன்ற பெரு நகரங்களில் கார் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால், பெரும் போக்குவரத்து நெருக்கடி உருவாகி இருக்கிறது. இதனால் சொகுசாக அலுவலகம் போகலாம் என்று நினைத்து, கார் வாங்கியவர்கள் அதனை வீட்டில் வைத்து விட்டு, இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
போக்குவரத்து நெருக்கடி என்பதுடன், பார்க்கிங் பிரச்னையும் முக்கிய காரணம். நம் ஊரில், அதுவும் சென்னையில் கார் பாக்கிங் செய்வதற்கு பாதுகாப்பான இடம் இல்லாத தால், காவல் துறை எப்போது வேண்டுமானாலும் காரை   ‘டோ’ செய்து, எடுத்துக் கொண்டு போகலாம். அல்லது யாராவது வந்து இடித்து சேதப்படுத்தி விடவும் வாய்ப்புண்டு. 
அதுமட்டுமல்லாமல் கார் வாங்கிய ஒரு ஆண்டில் உங்கள் காரின் மதிப்பு ஒரிஜினல் விலையில் இருந்து கிட்டத்தட்ட 20% வரை குறைய வாய்ப்புண்டு.  இரண்டாவது ஆண்டு, காரின் மதிப்பில் கிட்டத்தட்ட 35 சதவிகிதமும், மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டால், 45% குறையும்.  ஐந்து ஆண்டுகளுக்குப்பின்  காரின் மதிப்பு அதிகளவில் குறையும்.
இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? கார் வாங்கும் ஆசையே இருக்கக் கூடாதா என்று கேட்கிறீர்களா?

சொந்த கார்தான் வாங்குவேன்!
சொந்த கார் வாங்குவது தவறே இல்லை. ஆனால், அது ஒரு செலவுதானே தவிர, முதலீடு அல்ல என்பதை முதலில் உணர வேண்டும்.
கார்களின் விலை குறைந்த பட்சமாக ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சத்துக்கு மேல் விற்பனை ஆகிறது. ஆனால், உங்களுடைய வருமானம் எவ்வளவு, ஒரு வருடத்துக்கு மொத்தமாக எரிபொருள், பராமரிப்பு, சர்வீஸ் மற்றும் சாலைக் கட்டணம் (toll), பார்க்கிங் உட்பட பல்வேறு செலவுகளையும் பட்டியலிட்டு உங்களுடைய காருக்கான பட்ஜெட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, அவசியமான வசதிகள் கொண்ட ஒரு காரின் விலை ரூ.5 லட்சம் எனில், முழுத் தொகையையும் அப்படியே கட்டி வாங்க முடியாத நிலையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது.   முன்பணமாக ரூ. 1  லட்சம் செலுத்தி, பாக்கியை கடனுதவி மூலம் கட்டி காரை வாங்குகிறார்கள் பலர். கடன் வாங்கிய தொகைக்கான தவணைக் காலம் ஐந்து ஆண்டுகள் எனில், மாதம் சுமார் ரூ.8,400 மாதத் தவணை (9.5% வட்டியில்) செலுத்த வேண்டும். மாதத் தவணை மட்டுமல்லாமல் மற்ற செலவுகளையும் கணக்கிடுங்கள்.
சராசரியாக லிட்டருக்கு 13 கிமீ மைலேஜ் தரும் காரில் மாதம் 1000 கிமீ பயணிப்பீர்கள் எனில், பெட்ரோலுக்கு மட்டுமே மாதம் சுமார் 5000 ரூபாய் செலவாகும். சர்வீஸ், இன்ஷூரன்ஸ், பார்க்கிங், டோல் போன்றவற்றுக்கு மொத்தமாக மாதம் ரூ.3,500 வரை செலவாகும். மொத்தமாக மாதத்துக்கு சொந்த காருக்கு ஆகும் செலவு ரூ.16,900 ஆகும். டிரைவிங் தெரியாதவர்கள் டிரைவர்களை வேலைக்கு எடுக்க வேண்டும். டிரைவர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.12,000 ஆகும்.
உங்கள் ஆண்டு வருமானத்தில் இந்தத் தொகையை மைனஸ் செய்யுங்கள். மீதமுள்ள தொகையிலிருந்து வீட்டுக் கடன் அல்லது வாடகை, வீட்டு இதர செலவுகள், பள்ளி/கல்லூரிக் கட்டணம் என அனைத்தையும் கழித்தால், மீதி என்ன இருக்கிறது என்று பாருங்கள். உங்களுடைய செலவுகளுக்கு மீறி 20% தொகை கையில் சேமிப்புக்காக நின்றால் மட்டுமே நீங்கள் கார் வாங்குவது சரியான முடிவாக இருக்கும்.
மேலும், சிலர் கார் வாங்கியே ஆகவேண்டும் என்ற ஆசையில் பட்ஜெட் சரியாக இல்லா விட்டாலும்கூட கடனை வாங்கி கார் வாங்குவார்கள். அது தவறு. கிட்டத்தட்ட 80% பேர் கடனுதவி மூலம்தான் கார் வாங்குகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. இதில் எத்தனை பேர் தங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப வாங்கி இருப்பார்கள் என்பது சந்தேகமே.  பட்ஜெட்டை முடிவு செய்யாமல், காரின் அழகைப் பார்த்து வாங்கிவிட்டு, பிறகு பராமரிப்பு, மைலேஜ் என பட்ஜெட்டில் பஞ்சர் ஆனவர்கள் அதிகம். அதே போல், அவசரப்பட்டு பழைய கார்களை வாங்காமல், எத்தனை வருடம் ஓடியது, என்ன காரணத்துக்கு விற்றார்கள் என்று தெரியாமல் வாங்குவதும் தவறு. பழைய கார்களுக்கு பராமரிப்பு செலவு அதிகம்.
சொந்த காரா, டாக்ஸியா? 
சொந்த காரைப் பொறுத்த வரை, முதலில் அதற்கு ஆகும் செலவை சமாளிக்கும் வகையில் பணம் இருக்க வேண்டும். இரண்டாவது, காரைப்  பாதுகாப்பாக நிறுத்தி வைக்கத் தேவையான இடவசதி இருக்க வேண்டும். இது பெரும்பாலும் நகரத்தில் உள்ள நடுத்தர மக்களுக்கு சாத்தியமே இல்லை. அப்படிப்பட்டவர்கள் சொந்த காருக்கு பதிலாக வாடகை கார்களைப் பயன்படுத்துவதே சிறந்தது.
ஏனெனில் சொந்த கார் வைத்திருக்கும் பலரும் மாதச் சம்பளக்காரர்கள் என்பதால், அவர்களால் குடும்பத்தை அழைத்துக் கொண்டு அடிக்கடி சுற்றுலாவோ, ஊர் சுற்றவோ போக முடியாது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வதே அதிசயம்தான். மேலும், தினசரி அலுவலகம் காரில் செல்பவர்கள் சொந்தமாக கார் வாங்கலாம். மற்றவர்கள் மாதாமாதம் செலவு வைக்கும் காரை ஏன் வாங்கி வீணாக்க வேண்டும்; அழகாக டாக்ஸியை புக் செய்துவிட்டு போய் வரலாம். 
முன்பு ஃபாஸ்ட் ட்ராக், என்டிஎல் என்று டாக்ஸிகள் இயங்கின. இப்போது ஓலா, உபர் என்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உயர் ரக கார்கள்கூட டாக்ஸி சேவையில் இயக்கப்பட்டு வருகின்றன. சொந்த கார் வாங்கி அதிகம் பயணிக்காதவர்கள் டாக்ஸியைப் பயன்படுத்துவது லாபகரமானதா கவே இருக்கும். டாக்ஸியில் பயணிக்கும்போது, நாம் செலுத்தும் கட்டணம் எரிபொருள் செலவு, டிரைவர் ஊதியம், காரின் இன்ஷூரன்ஸ் மற்றும் கம்பெனியின் லாபம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
கால் டாக்ஸி நிறுவனங்களின் கட்டண அடிப்படையில் பார்க்கும்போது, மாதம் 1000 கிமீ பயணிக்கும் ஒரு நபர் டாக்ஸிக்கு செய்யும் செலவு குறைந்தபட்சமாக ரூ.8000 மட்டுமே. அதிகபட்சமாக சொகுசு கார்களுக்கு ரூ.20,000 வரை ஆகலாம். அதேபோல், நகரங்களுக்குள் பயணிப்பவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 15 – 20 கிமீ மட்டுமே பயணிக்கிறார் கள். மாதத்துக்கு 600 கிமீ பயணம் செய்தால், ஆகும் செலவு மேலும் குறையும்.
இது மட்டுமல்லாமல் டாக்ஸி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதால் தரப்படும் ஏராளமான சலுகைகள், ரைட் ஷேரிங் வசதிகள் ஆகியவை மேலும் லாபகரமானதாகவே இருக்கும். டாக்ஸி நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களுக் கான பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன. ஜிபிஎஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் டாக்ஸிகளில் புகுத்தப் பட்டுள்ளன.
எனவே, அதிகம் காரைப் பயன்படுத்தாததவர்கள்,  தனியாக மட்டுமே காரில் பயணம் செய்பவர்கள் சொந்தக் காரை வாங்குவதைக் காட்டிலும் டாக்ஸியைப் பயன் படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம்.

சொந்த கார் Vs டாக்ஸி செலவு விவரம்:
சொந்த கார்

மாதம் 1000 கிமீ பயணம்
(காரின் விலை – ரூ. 5 லட்சம்
கடன் – ரூ. 4 லட்சம்)
மாதத் தவணை: ரூ.8,400 (9.5 % வட்டியில்)
பெட்ரோல்: ரூ.5000
சர்வீஸ், இன்ஸ்பெக்‌ஷன், டோல், பார்க்கிங், கார் வாஷ்: ரூ.2,000
இன்ஷூரன்ஸ்: ரூ.1500
மொத்தம் (தோராயமாக): ரூ.16,900 (டீசன்டான வசதி கொண்ட குறைந்தபட்ச விலை கார். சற்று விலை அதிகமான கார் என்றால் இந்த செலவு மேலும் அதிகம். டிரைவர் வைத்துக் கொண்டால் மாதம் ரூ.12,000 கூடுதல் செலவு ஆகும்)
வாடகை கார்:
அடிப்படைக் கட்டணம்: ரூ.30 – ரூ.50
கிமீ கட்டணம்: ரூ.6 -ரூ.8
காத்திருப்புக் கட்டணம்: ரூ.1 -ரூ. 5
மொத்தம் (தோராயமாக): ரூ.8,000
(1000 கிமீ பயணம், எடுத்துக்கொள்ளும் காரைப் பொறுத்து கட்டணம்)
வாடகை கார்களை ஆப் மூலம் இப்போது எளிதில் புக் செய்ய முடியும். அலுங்காமல் குலுங்காமல் பயணத்தை ஓய்வெடுத்துக்கொண்டே செல்ல முடியும். நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு பயணம் செய்தால் செலவு இன்னும் குறையும்.

கார் வாங்குபவர்கள் என்ன செய்யவேண்டும்?
* உங்கள் தேவையைப் பொறுத்து என்ன கார் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். ஐந்து பேர் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய பெரிய செடான் காரா அல்லது அதிக மைலேஜ் தரக்கூடிய காரா?
* ஒரு காரை வாங்கும்முன் அந்த காரின் நிறை, குறைகள் குறித்த ரிவ்யூக்களைப் படித்து விட்டுச் செல்லுங்கள். அந்த காரின் பவர் என்ன, அது எந்த ஆண்டு மாடல், அதில் இருக்கும் வசதிகள் என்னென்ன என்று ஒரு புரிதலுடன் செல்வது பயன்தரும்.
*  பயன்படுத்தப்பட்ட பழைய  கார்கள் எனில், சிங்கிள் ஓனர் கார்களை வாங்குவதே நல்லது. இரண்டு மூன்று பேர்களிடம் கை மாறிய கார் என்றால், அந்த கார்களின் பராமரிப்பு சரியாக இருக்காது!
ஜெ.சரவணன்
நன்றி : நாணயம் விகடன் - 29.05.2016

Wednesday, June 1, 2016

உங்களது RESUME நன்றாக தோற்றமளிக்க

உங்களது RESUME நன்றாக தோற்றமளிக்க என்ன செய்ய வேண்டும்?
ன்டர்வியூவுக்கு சீவி சிங்காரித்துப் போவதுடன், `சி.வி’யையும் (CV – Curriculum Vitae) சிங்காரிக்க வேண்டும்.
‘‘சி.வி (Resume) என்பது நம்மை நாமே மார்க்கெட்டிங் செய்துகொள்ள ஏதுவானதொரு டாக்குமென்ட், ஒரு நிறுவனத்தில் நாம் சென்று பேசும் முன்பு, நம்மைப் பற்றி அவர்களுக்குச் சொல்லும் அறிமுக அறிக்கை. தகுதியிருந்தும் ஒழுங்கற்ற `சி.வி’யால் வேலை கிடைக்காமல் போனவர்கள் அதிகம் பேர். எனில், அதை எவ்வளவு கவனத்துடன் தயாரிக்க வேண்டும்?!’’ என்று வலியுறுத்தும் சென்னையைச் சேர்ந்த ஹெச்.ஆர் கன்சல்டன்ட் நந்தினி, தேவையான அம்சங்களுடன் தெளிவான `சி.வி’ தயாரிப்பதற்காக தந்த குறிப்புகள் இங்கே…
ஃபான்ட் சைஸ்: 10 (அ) 12
ஃபான்ட் டைப்: Times New Roman
பெயர்: பெரிதாக போல்டு (BOLD) செய்திருக்க வேண்டும்
பணி நோக்கம் (Objective): எந்தத் துறையில் திறம்பட செயல்பட விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிடவும். ‘க்ளிஷே’வாக வெப்சைட்டு களிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்படும் அப்ஜெக்ட் டிவ்களை தவிர்த்து, தனித்துவமாக எழுதவும்.
கல்வித் தகுதி (Educational Qualification): ரிவர்ஸ் க்ரோ னாலாஜிக்கல் ஆர்டரில், அதாவது சமீபத்திய டிகிரி முதலிலும், அதன் கீழே இளங்கலை, பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு என்ற வரிசையில், மதிப்பெண்களுடனும் படித்த பள்ளி, கல்லூரி விவரங்களுடனும் எழுதவும். கட்டம் கட்டி இடத்தை நிரப்ப வேண்டும் என்றில்லை… பாயின்ட்டுகளாகக் கொடுத்தாலே போதுமானது.
முன் அனுபவம் (Experience): முன் அனுபவமுள்ளவர்கள் தற்போது வேலைசெய்யும் நிறுவனத்தின் பெயர், வகிக்கும் பதவி, எந்த வருடம், மாதம் முதல் எந்த வருடம், மாதம் வரை அங்கு பணிபுரிகிறீர்கள் போன்ற விவரங்களைக் குறிப்பிடவும். அங்கு நீங்கள் வகிக்கும் பொறுப்புகள் (Roles & Responsibilities) என்னென்ன என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவும். நீங்கள் பணிபுரிந்த ப்ராஜெக்ட்டின் பெயர், அதன் சுருக்கம், ஆரம்பித்த தேதி, முடித்த தேதி, முக்கியமாக அதில் உங்கள் பங்கு என்ன என்பதை ஹைலைட் செய்யவும். இதுவே உங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும்.
திறன்கள் (Skills): எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அதற்குத் தேவையான திறன்களைக் குறிப்பிடவும். அதாவது, விற்பனைப் பிரதிநிதி வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அங்கு உங்களின் எழுத்துத் திறன் குறிப்பிடத் தேவையில்லாத ஒன்று. மாறாக, உங்களின் கம்யூனிகேஷன் ஸ்கில் பற்றிக் குறிப்பிடலாம்.
புகைப்படம்: ஜாப் போர்ட்டல்களில் அப்லோடு செய்யும்போது மட்டுமே புகைப்படம் தேவைப்படும். `சி.வி’யை நிறுவனத்துக்கு அனுப்பும்போதோ, நேர்காணலுக்குச் செல்லும்போதோ `சி.வி’யில் புகைப்படம் இணைப்பதைத் தவிர்த்துவிடலாம். அவசியம் வேண்டும் என்றால், `சி.வி’யின் மேல் வலது மூலையில் சந்தனம், குங்குமம், விபூதி ஏதுமில்லாத, கோட் – சூட் என ஃபார்மல் உடையில் உள்ள புகைப்படத்தை இணைக்கலாம்.
கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!
 ஒன்றுக்கு இரண்டு முறை ஸ்பெல்லிங் செக், கிராமர் செக் செய்யவும். இது மிகவும் அடிப்படையான விஷயம்.
 மார்க்கெட்டிங், சேல்ஸ், கஸ்டமர் சப்போர்ட் போன்ற வேலைகளுக்கு கிரியேட்டிவ் `சி.வி’-க்கள் பயன்படும். மற்ற வேலைகளுக்கு வழக்கமான டெம்ப்ளேட்களையே பின்பற்றவும். இணையத்தில் ஆயிரக்கணக்கான டெம்ப்ளேட்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை முன்மாதிரியாக வைத்து நீங்களே ஒன்று தயார் செய்யவும். `சி.வி’ உங்கள் கைவண்ணத்தில் இருப்பதே சிறப்பு.
 மூன்று பக்கங்களுக்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.
 ஜாப் டிஸ்க்ரிப்ஷன்களுக்கு ஏற்ப உங்கள் திறமைகளை ஹைலைட் செய்ய வேண்டும்.
 எல்லா வேலைகளுக்கும் ஒரே `சி.வி’யை ஃபார்வேர்டு செய்யக்கூடாது.
 நிறுவனம் தங்களுக்குத் தேவையான தகுதிகள் உள்ள `சி.வி’யை, கீவேர்ட்ஸ் கொடுத்துத் தேடுவார்கள். அந்தத் தேடலுக்குத் தகுந்தவாறு `சி.வி’ அம்சங்களை அமைக்கவும்.
சி.வி ரெடி… இனி தயாராகவேண்டியது நீங்கள்தான். வாழ்த்துகள்!’’
********************************************நன்றி : அவள்விகடன் - 31.05.2016 

நேர்முகத்தேர்வு


நேர்முகத்தேர்வு - என்ன செய்ய வேண்டும்?

ரு நிறுவனம் தனக்கான ஊழியரைக் கண்டடையும் தேர்வுகளின் முக்கியமான கட்டம், நேர்முகத் தேர்வு. அதில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு அலுவலர் தீபா சுந்தரராமன்…
கவனம் செலுத்த வேண்டியவை..!
 நேர்முகத் தேர்வுக்குச் சொல்லும் நிறுவனம் குறித்தும், நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலை குறித்தும் நன்கு தெரிந்துகொண்டு செல்லவும்.

 தேவையான சான்றிதழ்கள், சி.வி அனைத்தையும் முதல் நாளே சரிபார்த்து எடுத்துவைக்கவும்.

 ஃபன்கி, கேஷுவல் ஆடைகள் தவிர்த்து, ஃபார்மல் ஆடையில் செல்லவும்.

 ஒருவரின் பெர்சனாலிட்டி குறித்து, அவர் அணிந்துள்ள காலணியில் இருந்தும் முடிவெடுக்கப்படும். எனவே, சுத்தம் செய்யப்பட்ட காலணி முக்கியம்.
 மொபைலை சைலன்ட் மோடில் வைக்க வும் அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடவும்.
 நேர்முகத் தேர்வு அறைக்குள் செல்லும் முன் அனுமதி கேட்டுச் செல்லவும்.
 உள்ளே சென்றவுடன், அங்குள்ள அலுவலர்களை `கிரீட்’ செய்யவும். இது மிகவும் முக்கியம்.
 அவர்கள் `அமருங்கள்’ என்று கூறும்வரை காத்திருக்கவும். அல்லது, ‘நான் அமரலாமா?’ என்று கேட்டுவிட்டு அமரவும்.
 கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால் சரியான பதிலைச் செல்லவும். தெரியவில்லை என்றால் அதை நேர்மையாக ஒப்புக்கொண்டு, ‘இதைப்பற்றி நான் நிச்சயம் தெரிந்துகொள்கிறேன்’ என்று அதையும் பாசிட்டிவாகச் சொல்லவும். மழுப்பலான, குழப்பமான பதில்கள் வேண்டாம்.
 அங்குள்ள அனைத்து அலுவலர்களிடமும் சாந்தமாக நடந்துகொள்ளவும். அதில் ஒருவருக்கு உங்களின் மேனரிஸம் பிடிக்கவில்லை என்றாலும் வேலை கிடைக்காமல் போகக்கூடும்.
 கேள்வி கேட்கும் அலுவலரின் கண்களை அவ்வப்போது பார்த்தபடி பேசுவது, உங்கள் உறுதியை வெளிப்படுத்தும்.
 நேர்முகத் தேர்வுக்குப் பிறகு அவர்கள் உங்களைப் பற்றித் தரும் பின்னூட்டங்களை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொள்ளவும்… நெகட்டிவாக இருந்தாலும் கூட! வாதிட வேண்டாம்.

 வெளியே வரும் முன், மறக்காமல் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவும்.
இதையெல்லாம் செய்யாதீங்க..!
 முதல் மற்றும் முக்கியமான விஷயம், குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு நிமிடம்கூட தாமதமாக வரக்கூடாது. 15 நிமிடங்களுக்கு முன்னரே அந்த இடத்தை அடைந்துவிட வேண்டும்.

 பேக், லேப்டாப் போன்ற உடைமைகளை கால்களுக்கு அருகிலோ, நேர்காணல் செய்பவரின் மேஜை மீதோ வைக்கக் கூடாது.
 கொட்டாவி விடுவது, சூயிங்கம் மெல்வது கூடாது.
 கால் மேல் கால்போட்டு அமர்வது, நன்றாக சாய்ந்து அமர்வது கூடாது. அமர்ந்திருக்கும் நாற்காலியை சுற்றுவது, ஆட்டுவது கூடாது.
 இயல்பில் வாயாடியாக இருந்தாலும் அங்கே தேவைக்கும் அதிகமாகப் பேசக் கூடாது. கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் சுற்றி வளைக்காமல் பதில் சொன்னால் போதும்.
 கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லாமல், முழு வாக்கியங்களாகப் பேசவும்.
 சம்பளம் குறித்த கேள்விகளை நீங்களாகத் தொடங்கக் கூடாது.
 சொந்த வாழ்க்கை, குடும்பம் பற்றியெல்லாம் தேவையில்லாமல் பேசக்கூடாது.
 படித்த பள்ளி, கல்லூரி குறித்தோ, ஏற்கெனவே பணியாற்றிய நிறுவனம் குறித்தோ எதிர்மறையான கருத்துகள் சொல்லக் கூடாது.
 திமிர், அலட்சியம் போன்றவை உங்கள் பேச்சில் வெளிப்படுவதாக நேர்காணல் காணும் அலுவலர் நினைத்துவிடக் கூடாது.
 அவர்களாக கைகொடுக்கும் வரை காத்திருக்கவும். நீங்களாகவே கைநீட்டக் கூடாது.
 நேர்காணல் முடிந்த அடுத்த நாளே போனில், நேரில் என்று நீங்கள் தேர்வாகிவிட்டீர்களா என்பது பற்றி கேட்கக்கூடாது.

 நேர்முகத்தேர்வு என்பது, உங்கள் தகுதியை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நிரூபிக்கும் ஒரே வாய்ப்பு. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

தீபா சொன்னவற்றை குறித்துக்கொள்ளுங் கள், இன்டர்வியூவில் ஸ்கோர் செய்யுங்கள்!

 டெலிபோனிக் இன்டர்வியூ!
ப்போது பெரும்பாலான நிறுவனங்கள், தொலை பேசியிலேயே நேர்காணல்களை முடித்துவிடுகிறார்கள். அந்த டெலிபோனிக் இன்டர்வியூ, வீடியோ ரெஸ்யூம், வீடியோ இன்டர்வியூ என அடுத்தடுத்த வெர்ஷனுக்கு நகர்ந்துகொண்டே இருப்பதற்கேற்ப நாமும் மாற வேண்டியது சூழலின் அவசியம். ஒரு டெலிபோனிக் இன்டர்வியூவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே…

 டெலிபோனிக் இன்டர்வியூதானே என்ற அலட்சியம் இல்லாமல், நேர்முகத் தேர்வு போலவே தயாராகவும்.
 ஃபார்மல் உடையே அணிந்துகொள்ளுங்கள். அது உங்கள் பேச்சிலும் எதிரொலிக்கும்.
 சூழல் மிகவும் முக்கியம். உங்களைச் சுற்றி எந்த இடையூறும் இல்லாத அமைதியான இடமாக இருக்க வேண்டும்.
 சி.வி, சான்றிதழ்கள் என்று அனைத்தும் உங்கள் அருகில் இருக்கட்டும். அது சம்பந்தமாக ஏதாவது கேள்விகள் கேட்கப்படலாம்.
 நேர்காணலை ஆரம்பிக்கும்போது, ‘குட் மார்னிங்’, ‘ஹலோ’வைக்கூட தன்னம்பிக்கை வெளிப்படும்விதமாகச் சொல்லுங்கள். உங்கள் குரல் மட்டுமேதான் இங்கு உங்களின் பிரதிநிதி என்பதால், அதில் உங்களின் உணர்ச்சிகளை அளவோடும், அழகாகவும் வெளிப்படுத்த வேண்டியது முக்கியம்.
 போன் உங்கள் உதட்டில் இருந்து சிறிது இடைவெளி யில் இருக்கட்டும். சத்தமாகப் பேசி கடுப்பேற்றவும் வேண்டாம், தேவைக்கும் தணிந்த குரலில் பேசி அவர்கள் பொறுமையை சோதிக்கவும் வேண்டாம்.
 இன்டர்வியூ செய்பவர் ஒருவேளை வேகமாகவோ, மெதுவாகவோ பேசினால்கூட, நீங்களும் அதற்கேற்ப பேசாமல், நிதானமாகவே பேசவும்.
 குறுக்கே பேசாதீர்கள். அவர்கள் ஒரு விஷயத்தை கேட்டு முடிக்கும்வரை அல்லது சொல்லி முடிக்கும்வரை அமைதி காத்து, பின்னர் தொடருங்கள்.
 இன்டர்வியூவின் முடிவில் சொல்லும் ‘தேங்க்யூ’வரை உங்கள் குரலில் அந்த எனர்ஜி நீடித்திருக்க வேண்டும்.

 டெலிபோனிக் இன்டர்வியூவை ஒருமுறை ரிகர்சல் பார்த்துக்கொள்வது நலம்!

நன்றி : அவள்விகடன் - 31.05.2016

Tuesday, May 31, 2016

வேலைக்கு தேர்ந்தெடுத்து வெளியேற்றப்படும் மாணவர்கள்


வேலைக்கு தேர்ந்தெடுத்து வெளியேற்றப்படும் மாணவர்கள்
என்ன செய்ய வேண்டும்?
"பிளேஸ்மென்ட்' என்ற பெயரில் பொறியியல் மாணவர்கள் நூதன முறையில் ஏமாற்றப்படுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 சென்னையில் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்தியப் போராட்டம் இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

 பொறியியல் துறைகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, படிப்பை முடிப்பதற்கு முன்பே 100 சதவீத வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதத்தை அளித்து, கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்களையும் காண்பித்து தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை ஈர்த்து வருகின்றன.

 இந்த விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, இதுபோன்ற பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்குப் படிப்பை முடிக்கும் முன்பே வேலைவாய்ப்பு கிடைக்கும். படிப்பை முடித்த பின்னர் அந்த நிறுவனத்திலும் பணிக்குச் சேர்ந்துவிடுவார். ஆனால், 6 மாதம் கழித்து அந்த நிறுவனத்தின் சார்பில் மீண்டும் நடத்தப்படும் தேர்வில் 85 சதவீத மாணவர்கள் தோல்வியைச் சந்தித்து, அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்
படுகின்றனர்.

 இப்படி, "எல் அண்ட் டி இன்ஃபோடெக்' என்ற நிறுவனத்தின் சார்பில் வெளியேற்றப்பட்ட மாணவர்கள்தான் சென்னை சோழிங்கநல்லூரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 1500-க்கும் அதிமான மாணவர்களை இந்த நிறுவனம் இதுபோல நிராகரித்துள்ளது. கடந்த 2014-இல் இந்த மாணவர்களுக்கு பணி வாய்ப்புக்கான கடிதத்தை வழங்கிய இந்த நிறுவனம் அதன் பிறகு, பணியில் சேருவதற்கான தேதியை மாணவர்களுக்குத் தெரிவிக்காமலே இருந்து வந்துள்ளது.

 இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வை அந்த நிறுவனம் நடத்தியுள்ளது. அந்தத் தேர்வில் தகுதி பெறவில்லை என்று கூறி இந்த மாணவர்கள் அனைவரையும் நிராகரித்துள்ளது.

 "பிளேஸ்மென்ட்' விஷயத்தில் இந்த ஒரு சம்பவம்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. வெளியில் தெரியாமல் பல ஆயிரம் பொறியியல் மாணவர்கள் இதுபோன்று வேலைவாய்ப்பை இழந்து வருவதாக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
 நடவடிக்கை எடுக்க இயலாது: "பிளேஸ்மென்ட்' என்ற பெயரில் நூதனமாக மாணவர்கள் ஏமாற்றப் படுகின்றனர்.

 பெரும்பாலான கல்லூரிகள் மாணவருக்கு ரூ. 10 ஆயிரம் என்ற வீதத்தில் கமிஷன் கொடுத்தே நிறுவனங்களை வளாகத் தேர்வுக்கு கல்லூரிக்குள் அழைத்து வருகின்றன. அவ்வாறு வரும் நிறுவனங்கள் கல்லூரியில் நடத்தும் எழுத்துத் தேர்வில் மிக எளிமையான கேள்விகளையே கேட்கின்றன.

 இதில், சராசரிக்கும் குறைவாக படிக்கும் மாணவர்களும் தகுதி பெற்று, பணி வாய்ப்புக்கான கடிதத்தைப் பெற்று விடுகின்றனர்.

 பின்னர் படிப்பை முடித்ததும் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தில் 6 மாத கால பயிற்சியில் அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அந்தப் பயிற்சி முடிந்ததும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித் தேர்வை அந்த நிறுவனம் நடத்தும். அப்போது மிகவும் கடினமான கேள்விகளை நிறுவனங்கள் கேட்கின்றன.

 இதனால், தேர்வு செய்யப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் தோல்வியடைந்து, நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

 இந்த மோசடி குறித்து மாணவர்கள் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்க இயலாது. ஏனெனில், தெளிவாக தேர்வு வைத்து மாணவர்கள் அவர்கள் தகுதியிழக்கச் செய்கின்றனர்.

 எனவே, பொறியியல் சேர்க்கை நடைபெறும் இந்த நேரத்தில் கல்லூரி முன்னாள் மாணவர்களிடம் நன்கு விசாரித்து சிறந்த பொறியியல் கல்லூரியை மாணவர்கள் தேர்வு செய்வதுதான் ஒரே வழி என்கின்றனர் அண்ணா பல்கலைககழக பேராசிரியர்கள்.

 எங்கு புகார் தெரிவிப்பது?:

 இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் நல மைய இயக்குநர் இளையபெருமாள் கூறியது:

 சோழிங்கநல்லூரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. மாணவர்கள் புகார் அளித்தால்தான், அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியுமா அல்லது முடியாதா என்பது தெரியவரும். 

கடந்த ஆண்டு, இதுபோல வளாகத் தேர்வே நடத்தாமல் வேலைவாய்ப்புக்கான போலியான கடிதத்தை மாணவர்களுக்கு அளித்தது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு புகார் வந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட கல்லூரியை பல்கலைக்கழகம் எச்சரிக்கை செய்து அனுப்பியது.

 எனவே, போலியான பணிவாய்ப்பு தொடர்பாக 

044 - 22357080 மற்றும் 044-22357081 

என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம். 

அல்லது 

dsa@annauniv.edu 

என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

By  எம். மார்க் நெல்சன், சென்னை

நன்றி : தினமணி நாளிதழ் - 01.06.2016