சொந்தக் கார் நல்லதா? வாடகைக் கார் நல்லதா?
என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்கால ஆசைப் பட்டியலிலும் கார் நிச்சயம் இருக்கும். கார் தேவையாக இருக்கிறதோ இல்லையோ, பயன்படுத்துகிறோமோ இல்லையோ, வீட்டு வாசலில் ஒரு அழகான காரை நிறுத்தி வைக்கவே எல்லோரும் விருப்பப்படுவது உண்டு.
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் கார்களில் மாருதி ஆல்டோ, இயான், நானோ போன்ற சிறிய கார்கள்தான் முதலிடங்களில் உள்ளன. இந்தச் சிறிய கார்கள் நடுத்தர மக்களின் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வருகின்றன. இந்திய கார் மார்க்கெட்டின் ஆணிவேர் இந்தச் சிறிய கார்கள்தான்.
ஆனால், நகரங்களில் கார்களை நிர்வகிப்பது என்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருப்பதால் இப்போதெல்லாம் மொபைலை எடுத்தோமா, ஆப் மூலம் டாக்ஸியை புக் செய்தோமா, வேண்டிய இடத்துக்கு போய் வந்தோமா என்பதுதான் ட்ரெண்ட்-ஆக இருக்கிறது.
நகரங்களில் உபர், ஓலா போன்ற பல டாக்ஸி சேவை நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. அதுவும் ஆட்டோவில் செல்வதைவிடவும் டாக்ஸிகளில் செல்வது மலிவாக இருப்பதாகச் சொல்லப்படு கின்றன. இதனால் சொந்தமாக ஒரு காரை வாங்கி பயன்படுத்து வதைவிட வாடகை கார் பயன்படுத்திக் கொள்ளவே பலரும் நினைக்கிறார்கள். இந்த நிலையில், ஒருவர் சொந்தமாக காரை வாங்கி பயன்படுத்துவது லாபமா அல்லது வாடகை காரைப் பயன்படுத்துவது லாபமா என்கிற கேள்வி முக்கியமானது. இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.
சொந்தக் கார் என்னும் கனவு!
காரில் பயணிக் கிறோம் என்பதைக் காட்டிலும் நம்மிடம் சொந்த கார் இருப்பது ஒரு ஸ்டேடஸ் கெளவரமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சொந்தமாக கார் வாங்கும்முன் நம் வருமானம், தேவை, எத்தனை பேர் பயணிப்போம் என்கிற விஷயங்கள் முக்கியமானவை. ஏனெனில், பெரும்பாலான நகரங்களில் இருப்போரின் வருமானம் ரூ.30,000-க்கும் அதிகமாக இருப்பதால் எளிதில் கார் வாங்கும் முடிவை எடுத்து விடு கிறார்கள். அதற்கேற்ப கார் நிறுவனங்களும், கார் கடன் விளம்பரங்களும் அவர்களை கவர்ந்து இழுக்கின்றன.
ஆனால், சென்னை போன்ற பெரு நகரங்களில் கார் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால், பெரும் போக்குவரத்து நெருக்கடி உருவாகி இருக்கிறது. இதனால் சொகுசாக அலுவலகம் போகலாம் என்று நினைத்து, கார் வாங்கியவர்கள் அதனை வீட்டில் வைத்து விட்டு, இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
போக்குவரத்து நெருக்கடி என்பதுடன், பார்க்கிங் பிரச்னையும் முக்கிய காரணம். நம் ஊரில், அதுவும் சென்னையில் கார் பாக்கிங் செய்வதற்கு பாதுகாப்பான இடம் இல்லாத தால், காவல் துறை எப்போது வேண்டுமானாலும் காரை ‘டோ’ செய்து, எடுத்துக் கொண்டு போகலாம். அல்லது யாராவது வந்து இடித்து சேதப்படுத்தி விடவும் வாய்ப்புண்டு.
அதுமட்டுமல்லாமல் கார் வாங்கிய ஒரு ஆண்டில் உங்கள் காரின் மதிப்பு ஒரிஜினல் விலையில் இருந்து கிட்டத்தட்ட 20% வரை குறைய வாய்ப்புண்டு. இரண்டாவது ஆண்டு, காரின் மதிப்பில் கிட்டத்தட்ட 35 சதவிகிதமும், மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டால், 45% குறையும். ஐந்து ஆண்டுகளுக்குப்பின் காரின் மதிப்பு அதிகளவில் குறையும்.
இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? கார் வாங்கும் ஆசையே இருக்கக் கூடாதா என்று கேட்கிறீர்களா?
சொந்த கார்தான் வாங்குவேன்!
சொந்த கார் வாங்குவது தவறே இல்லை. ஆனால், அது ஒரு செலவுதானே தவிர, முதலீடு அல்ல என்பதை முதலில் உணர வேண்டும்.
கார்களின் விலை குறைந்த பட்சமாக ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சத்துக்கு மேல் விற்பனை ஆகிறது. ஆனால், உங்களுடைய வருமானம் எவ்வளவு, ஒரு வருடத்துக்கு மொத்தமாக எரிபொருள், பராமரிப்பு, சர்வீஸ் மற்றும் சாலைக் கட்டணம் (toll), பார்க்கிங் உட்பட பல்வேறு செலவுகளையும் பட்டியலிட்டு உங்களுடைய காருக்கான பட்ஜெட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, அவசியமான வசதிகள் கொண்ட ஒரு காரின் விலை ரூ.5 லட்சம் எனில், முழுத் தொகையையும் அப்படியே கட்டி வாங்க முடியாத நிலையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. முன்பணமாக ரூ. 1 லட்சம் செலுத்தி, பாக்கியை கடனுதவி மூலம் கட்டி காரை வாங்குகிறார்கள் பலர். கடன் வாங்கிய தொகைக்கான தவணைக் காலம் ஐந்து ஆண்டுகள் எனில், மாதம் சுமார் ரூ.8,400 மாதத் தவணை (9.5% வட்டியில்) செலுத்த வேண்டும். மாதத் தவணை மட்டுமல்லாமல் மற்ற செலவுகளையும் கணக்கிடுங்கள்.
சராசரியாக லிட்டருக்கு 13 கிமீ மைலேஜ் தரும் காரில் மாதம் 1000 கிமீ பயணிப்பீர்கள் எனில், பெட்ரோலுக்கு மட்டுமே மாதம் சுமார் 5000 ரூபாய் செலவாகும். சர்வீஸ், இன்ஷூரன்ஸ், பார்க்கிங், டோல் போன்றவற்றுக்கு மொத்தமாக மாதம் ரூ.3,500 வரை செலவாகும். மொத்தமாக மாதத்துக்கு சொந்த காருக்கு ஆகும் செலவு ரூ.16,900 ஆகும். டிரைவிங் தெரியாதவர்கள் டிரைவர்களை வேலைக்கு எடுக்க வேண்டும். டிரைவர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.12,000 ஆகும்.
உங்கள் ஆண்டு வருமானத்தில் இந்தத் தொகையை மைனஸ் செய்யுங்கள். மீதமுள்ள தொகையிலிருந்து வீட்டுக் கடன் அல்லது வாடகை, வீட்டு இதர செலவுகள், பள்ளி/கல்லூரிக் கட்டணம் என அனைத்தையும் கழித்தால், மீதி என்ன இருக்கிறது என்று பாருங்கள். உங்களுடைய செலவுகளுக்கு மீறி 20% தொகை கையில் சேமிப்புக்காக நின்றால் மட்டுமே நீங்கள் கார் வாங்குவது சரியான முடிவாக இருக்கும்.
மேலும், சிலர் கார் வாங்கியே ஆகவேண்டும் என்ற ஆசையில் பட்ஜெட் சரியாக இல்லா விட்டாலும்கூட கடனை வாங்கி கார் வாங்குவார்கள். அது தவறு. கிட்டத்தட்ட 80% பேர் கடனுதவி மூலம்தான் கார் வாங்குகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. இதில் எத்தனை பேர் தங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப வாங்கி இருப்பார்கள் என்பது சந்தேகமே. பட்ஜெட்டை முடிவு செய்யாமல், காரின் அழகைப் பார்த்து வாங்கிவிட்டு, பிறகு பராமரிப்பு, மைலேஜ் என பட்ஜெட்டில் பஞ்சர் ஆனவர்கள் அதிகம். அதே போல், அவசரப்பட்டு பழைய கார்களை வாங்காமல், எத்தனை வருடம் ஓடியது, என்ன காரணத்துக்கு விற்றார்கள் என்று தெரியாமல் வாங்குவதும் தவறு. பழைய கார்களுக்கு பராமரிப்பு செலவு அதிகம்.
சொந்த காரா, டாக்ஸியா?
சொந்த காரைப் பொறுத்த வரை, முதலில் அதற்கு ஆகும் செலவை சமாளிக்கும் வகையில் பணம் இருக்க வேண்டும். இரண்டாவது, காரைப் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கத் தேவையான இடவசதி இருக்க வேண்டும். இது பெரும்பாலும் நகரத்தில் உள்ள நடுத்தர மக்களுக்கு சாத்தியமே இல்லை. அப்படிப்பட்டவர்கள் சொந்த காருக்கு பதிலாக வாடகை கார்களைப் பயன்படுத்துவதே சிறந்தது.
ஏனெனில் சொந்த கார் வைத்திருக்கும் பலரும் மாதச் சம்பளக்காரர்கள் என்பதால், அவர்களால் குடும்பத்தை அழைத்துக் கொண்டு அடிக்கடி சுற்றுலாவோ, ஊர் சுற்றவோ போக முடியாது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வதே அதிசயம்தான். மேலும், தினசரி அலுவலகம் காரில் செல்பவர்கள் சொந்தமாக கார் வாங்கலாம். மற்றவர்கள் மாதாமாதம் செலவு வைக்கும் காரை ஏன் வாங்கி வீணாக்க வேண்டும்; அழகாக டாக்ஸியை புக் செய்துவிட்டு போய் வரலாம்.
முன்பு ஃபாஸ்ட் ட்ராக், என்டிஎல் என்று டாக்ஸிகள் இயங்கின. இப்போது ஓலா, உபர் என்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உயர் ரக கார்கள்கூட டாக்ஸி சேவையில் இயக்கப்பட்டு வருகின்றன. சொந்த கார் வாங்கி அதிகம் பயணிக்காதவர்கள் டாக்ஸியைப் பயன்படுத்துவது லாபகரமானதா கவே இருக்கும். டாக்ஸியில் பயணிக்கும்போது, நாம் செலுத்தும் கட்டணம் எரிபொருள் செலவு, டிரைவர் ஊதியம், காரின் இன்ஷூரன்ஸ் மற்றும் கம்பெனியின் லாபம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
கால் டாக்ஸி நிறுவனங்களின் கட்டண அடிப்படையில் பார்க்கும்போது, மாதம் 1000 கிமீ பயணிக்கும் ஒரு நபர் டாக்ஸிக்கு செய்யும் செலவு குறைந்தபட்சமாக ரூ.8000 மட்டுமே. அதிகபட்சமாக சொகுசு கார்களுக்கு ரூ.20,000 வரை ஆகலாம். அதேபோல், நகரங்களுக்குள் பயணிப்பவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 15 – 20 கிமீ மட்டுமே பயணிக்கிறார் கள். மாதத்துக்கு 600 கிமீ பயணம் செய்தால், ஆகும் செலவு மேலும் குறையும்.
இது மட்டுமல்லாமல் டாக்ஸி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதால் தரப்படும் ஏராளமான சலுகைகள், ரைட் ஷேரிங் வசதிகள் ஆகியவை மேலும் லாபகரமானதாகவே இருக்கும். டாக்ஸி நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களுக் கான பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன. ஜிபிஎஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் டாக்ஸிகளில் புகுத்தப் பட்டுள்ளன.
எனவே, அதிகம் காரைப் பயன்படுத்தாததவர்கள், தனியாக மட்டுமே காரில் பயணம் செய்பவர்கள் சொந்தக் காரை வாங்குவதைக் காட்டிலும் டாக்ஸியைப் பயன் படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம்.
சொந்த கார் Vs டாக்ஸி செலவு விவரம்:
சொந்த கார்
மாதம் 1000 கிமீ பயணம்
(காரின் விலை – ரூ. 5 லட்சம்
கடன் – ரூ. 4 லட்சம்)
மாதத் தவணை: ரூ.8,400 (9.5 % வட்டியில்)
பெட்ரோல்: ரூ.5000
சர்வீஸ், இன்ஸ்பெக்ஷன், டோல், பார்க்கிங், கார் வாஷ்: ரூ.2,000
இன்ஷூரன்ஸ்: ரூ.1500
மொத்தம் (தோராயமாக): ரூ.16,900 (டீசன்டான வசதி கொண்ட குறைந்தபட்ச விலை கார். சற்று விலை அதிகமான கார் என்றால் இந்த செலவு மேலும் அதிகம். டிரைவர் வைத்துக் கொண்டால் மாதம் ரூ.12,000 கூடுதல் செலவு ஆகும்)
வாடகை கார்:
அடிப்படைக் கட்டணம்: ரூ.30 – ரூ.50
கிமீ கட்டணம்: ரூ.6 -ரூ.8
காத்திருப்புக் கட்டணம்: ரூ.1 -ரூ. 5
மொத்தம் (தோராயமாக): ரூ.8,000
(1000 கிமீ பயணம், எடுத்துக்கொள்ளும் காரைப் பொறுத்து கட்டணம்)
வாடகை கார்களை ஆப் மூலம் இப்போது எளிதில் புக் செய்ய முடியும். அலுங்காமல் குலுங்காமல் பயணத்தை ஓய்வெடுத்துக்கொண்டே செல்ல முடியும். நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு பயணம் செய்தால் செலவு இன்னும் குறையும்.
கார் வாங்குபவர்கள் என்ன செய்யவேண்டும்?
* உங்கள் தேவையைப் பொறுத்து என்ன கார் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். ஐந்து பேர் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய பெரிய செடான் காரா அல்லது அதிக மைலேஜ் தரக்கூடிய காரா?
* ஒரு காரை வாங்கும்முன் அந்த காரின் நிறை, குறைகள் குறித்த ரிவ்யூக்களைப் படித்து விட்டுச் செல்லுங்கள். அந்த காரின் பவர் என்ன, அது எந்த ஆண்டு மாடல், அதில் இருக்கும் வசதிகள் என்னென்ன என்று ஒரு புரிதலுடன் செல்வது பயன்தரும்.
* பயன்படுத்தப்பட்ட பழைய கார்கள் எனில், சிங்கிள் ஓனர் கார்களை வாங்குவதே நல்லது. இரண்டு மூன்று பேர்களிடம் கை மாறிய கார் என்றால், அந்த கார்களின் பராமரிப்பு சரியாக இருக்காது!
ஜெ.சரவணன்
நன்றி : நாணயம் விகடன் - 29.05.2016