ஃபைப்ராய்ட்ஸ் தடுக்க, கர்ப்பப்பை காக்க
என்ன செய்ய வேண்டும்?
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவரும் நிஷாவுக்கு, மாதவிலக்கு நேரத்தில் அதிகப்படியான உதிரப்போக்கு, தாங்க முடியாத வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படவே மகப்பேறு மருத்துவரை அணுகினார். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தபோது, நிஷாவின் கர்ப்பப்பையில் கிரிக்கெட் பந்து அளவுக்குக் கட்டி.
ரிப்போர்ட்டைக் கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்வதற்குள்,
‘இது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமோ...
கர்ப்பப்பையை அகற்றிவிடுவார்களோ...
நீண்ட நாள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டுமோ...
அதிக செலவாகுமோ...
வேலைக்கே போக முடியாத நிலை வருமோ,
குழந்தைகளைக் கவனிக்க முடியாமல் போய்விடுமோ’
என்று நிஷாவின் மனதுக்குள் மிகப்பெரிய பூகம்பமே வெடித்துவிட்டது. ‘இதை எல்லாம் மிகச் சாதாரணமாகக் குணப்படுத்திவிட முடியும் என்பதால், பயப்பட ஒன்றும் இல்லை’ என்று ஒரு வரியில் சொல்லி அனுப்பிவிட்டார் மருத்துவர்.
நிஷாவுக்கு மட்டும் அல்ல... நிஷாவைப்போல ஏராளமான பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னை ஃபைப்ராய்டு கட்டி. உலக அளவில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும். பலருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், எளிய சிகிச்சை முறைகள் மூலமாகவே இதைச் சரிப்படுத்தும் அளவுக்கு மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
ஃபைப்ராய்டு என்றால் என்ன?
ஃபைப்ராய்டு (Fibroid) என்பது, கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய தசைக்கட்டி. இது புற்றுநோய்க் கட்டி இல்லை. பொதுவாக, இது குழந்தைப்பேறுக்குத் தயாராக உள்ள காலகட்டத்தில் ஏற்படும். இந்தக் கட்டி கர்ப்பப்பையின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். இந்தக் கட்டிகளை அது தோன்றும் இடத்தைப் பொருத்து மூன்று விதமாகப் பிரிக்க முடியும்.
சப்செரோசல் ஃபைப்ராய்ட்ஸ் (Subserosal fibroids): கர்ப்பப்பையின் வெளிப்புறச் சுவரில் வரக்கூடிய கட்டி. 55 சதவிகிதக் கட்டிகள் கர்ப்பப்பையின் வெளிப்பகுதியில்தான் வருகின்றன.
இன்ட்ராமியூரல் ஃபைப்ராய்ட்ஸ் (Intramural fibroids): இது, கர்ப்பப்பையின் வெளி மற்றும் உள் சுவருக்கு இடைப்பட்ட தசைப்பகுதியில் ஏற்படக்கூடியது. 40 சதவிகிதக் கர்ப்பப்பைக் கட்டிகள் இந்தப் பகுதியில்தான் ஏற்படுகின்றன.
சப்மியுகோசல் ஃபைப்ராய்ட்ஸ் (Submucosal fibroids): இது, கர்ப்பப்பையின் உள் சுவர் பகுதி. இந்தப் பகுதியில் கட்டிகள் வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. 5 சதவிகித கர்ப்பப்பை கட்டிகள் இங்கு ஏற்படுகின்றன. கர்ப்பப்பை உள் சுவரில் கட்டி ஏற்பட்டால், அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும். கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை ஏற்படலாம்.
எதனால் வருகிறது?
எதனால் கர்ப்பப்பை கட்டி ஏற்படுகிறது என்பதற்குத் தெளிவான முடிவுகள் இல்லை. இருப்பினும், மரபணு, ஹார்மோன், சுற்றுப்புறச் சூழல் தாக்கம் காரணமாக கர்ப்பப்பை கட்டிகள் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பரம்பரையால் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே, இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
சாதாரணமாக 20-40 வயது வரை உள்ள பெண்களுக்குத்தான் இந்தக் கட்டிகள் அதிகமாக வருகின்றன. மெனோபாஸ் அடைந்துவிட்டால், கர்ப்பப்பை கட்டி வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு.
அறிகுறிகள் என்னென்ன?
மாதவிலக்கு சமயத்தில் அதிக வலி, அதிக ரத்தப்போக்கு இருக்கும். ரத்தப்போக்கு மூன்று நாட்களுக்கு பதில் ஏழு நாட்கள் வரைகூட இருக்கலாம்.
எந்தத் தொந்தரவும் இல்லாமலே குழந்தைப்பேறு தடைப்படலாம்.
பெரிய கட்டியாக இருப்பின் பக்கத்து உறுப்பில் அழுத்தம் ஏற்பட்டு, அதனால் சில தொந்தரவுகள் ஏற்படலாம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு, மலச்சிக்கல் ஏற்படும்.
கீழ் முதுகு, கால் வலி ஏற்படலாம்.
மூன்று வகைக் கட்டிகளில், எந்த வகைக் கட்டி எனக் கண்டறிந்த பின், கர்ப்பப்பையில் எந்த இடத்தில், எவ்வளவு பெரிதாக இருக்கிறது எனக் கண்டறிவதன் மூலம் இந்தக் கட்டிகள் எந்த அளவுக்குத் தொந்தரவு தரும் எனத் தீர்மானிக்க முடியும்.
யாருக்குக் கட்டிகள் வரலாம்?
குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு ஃபைப்ராய்டு கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுபோல, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொண்ட பெண்களுக்குக் கட்டிகள் வரலாம். இவர்களுக்கு, ‘ஹார்மோன் மாறுதல்’ அதிகமாக இருக்கும் என்பதால், கட்டிகள் உருவாக வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைப்பேற்றைப் பாதிக்கும் கட்டிகள் எவை?
குழந்தைப்பேறு இல்லை என்று சிகிச்சைக்கு வரும் பெண்களில் 5-10 சதவிகிதம் பேருக்கு குழந்தையின்மைக்குக் காரணமாக இருப்பது இந்தக் கர்ப்பப்பை கட்டிகள்தான். ஸ்கேன் பரிசோதனை செய்யும்போதுதான் இது வெளிப்படும்.
பொதுவாக, குழந்தைபேற்றைப் பாதிப்பது உள் சுவரில் ஏற்படும் சப்மியுகோசல் வகை கட்டிகள்தான். மேலும், இன்ட்ராமியூரல் கட்டிகள் பெரிதாக இருந்தாலும் கர்ப்பம் தரிப்பதில் பாதிப்பு ஏற்படும். மற்ற கட்டிகள் குழந்தைப்பேற்றைப் பாதிக்காது.
சிகிச்சைகள் என்னென்ன?
மருந்து, மாத்திரைகளால் இந்தக் கட்டிகளை கரைக்க முடியாது, தானாகவும் இந்தக் கட்டி கரையாது. சப்செரோசல் கட்டிகள், குழந்தையின்மையைப் பாதிக்காது. அதற்கு சிகிச்சையும் தேவை இல்லை. இந்தக் கட்டிகளால் ஏதாவது தொந்தரவுகள் வந்தால் மட்டுமே இதனைக் கவனிக்க வேண்டும். மற்றபடி இந்தக் கட்டிகளுக்குக் கவலை வேண்டாம்.
இன்ட்ராமியூரல் கட்டிகளை லேப்ராஸ்கோப்பிக் மயோமக்டெமி (Myomectomy) மூலமாக எளிதில் அகற்ற முடியும். லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவைசிகிச்சையில் சிறிய துளைகள் இடப்படுவதால், பெரிய காயம், தழும்பு தவிர்க்கப்படும். குணமடைந்து வீடு திரும்பும் காலமும் விரைவாகும்.
சப்மியுகோசல் கட்டிகளை அகற்ற, ஹிஸ்ட்ரோஸ்கோபிக் (Hysteroscopic) மயோமக்டெமி என்ற சிகிச்சை செய்யப்படும். ஒரு நாளிலேயே இந்த சிகிச்சையைச் செய்து கொள்ள முடியும். வலியே இருக்காது. சிகிச்சையால் பாதிப்புகள் எதுவும் கிடையாது. இந்த சிகிச்சைகளுக்குப் பிறகு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.
தடுக்கும் முறைகள் உண்டா?
இந்தக் கட்டிகள் வராமல் இருக்க தடுப்புமுறைகள் எதுவும் கிடையாது. ஆனால், ஆரோக்கிமான உணவுகள் உண்டு, போதுமான உடலுழைப்பு இருந்தால், பொதுவாகவே கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். கீரைகள், பழங்கள், நட்ஸ், லோ கலோரி உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம். இதனுடன், உடற்பயிற்சியும் அவசியம். எண்ணெய் உணவுகள், துரித உணவுகள், அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.
--------------------------------------------------------------------ப்ரீத்தி
அறுவைசிகிச்சை இன்றி கட்டியைப் பொசுக்கலாம்
எம்.ஆர்.ஐ துணையோடு செய்யும் சிகிச்சை ஃபோக்கஸ்டு அல்ட்ரா சவுண்ட். இந்த சிகிச்சையில், எம்.ஆர்.ஐ கருவியினுள் நோயாளி அனுப்பப்படுவார். அப்போது, கட்டி எங்கே இருக்கிறது, எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை நிபுணர்கள் வெளியே இருந்து துல்லியமாகப் பார்த்து சிகிச்சையைத் திட்டமிடுவார்கள்.
பின்னர், ஃபோக்கஸ்டு அல்ட்ரா சவுண்ட் ஒலி அலை செலுத்தப்படும். பொதுவாக, அல்ட்ரா சவுண்ட் ஒலி அலையானது ஒரு மையத்தில் இருந்து வெளிபட்டு, விரிவடைந்து செல்லும். அது செல்லும் இடத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். ஆனால், இந்த அல்ட்ராசவுண்ட் சிகிச்சையில், மிக அகன்ற பகுதியில் இருந்து ஒலிஅலை செலுத்தப்படும். அதன் குவி மையம் கர்ப்பப்பை கட்டி மீது இருக்கும்படி வல்லுநர்கள் திட்டமிடுவார்கள்.
இந்தக் குவிமையத்தில் சேரும் ஒலி அலை கட்டி திசுவைப் பொசுக்கும். இதனால், மற்ற உறுப்புக்களுக்கு, ஆரோக்கியமான திசுக்களுக்குப் பாதிப்பு இருக்காது. புறநோயாளியாக வந்தே சிகிச்சை பெற்று வீடு திரும்பலாம். ஆனால், இது 100 சதவிகிதம் துல்லியமான தீர்வைக் கொடுக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சில ஃபைப்ராய்டு கட்டிகள் இந்த சிகிச்சையால் சரியாகலாம். அதனால், எந்த மாதிரியான கட்டிக்கு, என்ன மாதிரியான சிகிச்சை என்பதை டாக்டரிடம் கலந்து ஆலோசித்து முடிவு பெற வேண்டும்.
நன்றி : டாக்டர் விகடன் - 16.06.2016