disalbe Right click

Saturday, July 23, 2016

காவல்துறையில் புகார் அளித்தும் எஃப்.ஐ.ஆர்.


காவல்துறையில் புகார் அளித்தும் எஃப்.ஐ.ஆர். போடவில்லையா?
என்ன செய்ய வேண்டும்?

ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே.

1. புகார் ரசீது அல்லது எப்.ஐ.ஆர் கொடுக்காத நிலையில் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம்.

பிரிவு 154 (2) சி.ஆர்.பி. சி படி விசாரனை செய்ய சொல்லி காவல் கண்காணிப்பாளருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் தபால் மூலம் அணுபவும்

இவற்றை ஆதாரமாக கொண்டு உரிய குற்றவியல் நீதி துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிய உத்திரவு பெறலாம் பிரிவு 156 (3) சி.ஆர்.பி. சி மற்றும் 190 சி.ஆர்.பி. சி

மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம்.

2. குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்றத்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது.

3. பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழிகாட்டுகிறது. இச்சட்டத்தின் அத்தியாயம் 15இல் உள்ள பிரிவு 200 இதுகுறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம்.

இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதல் புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருபவரையும், அவரது சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஏனென்றால் குற்றவியல் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் ஏராளமான வழக்குகளோடு, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக வழங்கப்படும் புகார்கள் கூடுதல் பணிச்சுமை என்பதால் நீதிமன்றங்கள் இதுமாதிரியான மனுக்களை பரிவுடன் அணுகுவதில்லை. மேலும் புகாரில் கூறப்படும் குற்றச்செயலை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவரிடமே விடப்படுவதும் உண்டு. குற்றப்புலனாய்வில் அறிவோ, அனுபவமோ இல்லாத சாமானியர்களிடம் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்ள சிறப்புத் திறமைகள் தேவையில்லை. ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதையும் மறுக்கமுடியாது.

ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே.

சில காவல்நிலையங்களில், யார் மீது புகார் கூறப்படுகிறதோ – அவரையே தொடர்பு கொண்டு, அவரிடம் முதல் புகாரைதாரர் மீது வேறுபுகாரை பெற்று அதை முதல் புகாராக பதிவு செய்வதும் வழக்கத்தில் உள்ளது.

இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்குரைஞர் உதவியுடன் புகார்களை அளிப்பது நல்லது. இந்தப்புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம். இதன் மூலம் காவல்துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தத்தை அளிக்கலாம். குறிப்பிட்ட புகார் சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல் குறித்ததாக இருந்தால், அந்தப் புகார் குறித்து அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர்களை தொடர்பு செய்தி வெளிவரச்செய்வதும், அந்தப் புகார் மீது விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும்.

இவ்வாறு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்காது, அந்தப்புகாரை உரிய முறையில் விசாரிக்காமல் தள்ளிவிட முயற்சிக்கும் அதிகாரிகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. இத்தகைய சூழ்நிலையில், புகார்தாரர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் சட்டம் வழிகாட்டுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறிஞருக்கு துணையாக, அரசு வழக்கறிஞர் அல்லாத ஒரு வழக்கறிஞர் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கிறது. குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு ஆவணங்களையும் புகார்தாரர் பெறமுடியும். இதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் வழி வகுக்கிறது. இதன் மூலம் ஆவணங்களைப் பெறும் புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றாதாரங்கள் ஆய்வு முடிந்தபின்னர், அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகுவது நல்லது.

இந்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையிலும், காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது வழக்கின் போக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளிப்பதாக நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும்கூட புகார்தாரர் அதில் தலையிடலாம். காவல்துறை நியாயமாக நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால், அந்த வழக்கின் விசாரணையேயோ, வழக்கையோ உள்ளூர் காவல்துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுக சட்டம் இடம் அளிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தினஅ அடிப்படையில் இத்தகைய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.

அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறைக்கோ அல்லது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்புக்கோ மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு புகார் மீதான விசாரணையோ, வழக்கோ வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்படும்போது, புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரிகளை அணுகி, தங்கள் ஐயப்பாடுகளை எடுத்துரைக்க முடியும்.

இவை அனைத்திற்கும் தேவை, புகார் அளிக்கும் நிலையிலும் அதைத் தொடர்ந்த நிலையிலும் குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்குரைஞரின் உதவியே!

ஒரு புகார் காவல்துறையின் கவனத்தை கவர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அடுத்த நடவடிக்கை கைது செய்வதாகவே அமையும். மிகச்சில நேரங்களில் குற்றவாளிகளும், மிகப்பல நேரங்களில் குற்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர்களும் கைது செய்யப்படுவர். சில அரிதான நேரங்களில் நாம் மேலே பார்த்ததுபோல புகார் தரும் நபர் மீதே வேறு புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நடவடிக்கையாக “கைது” இருக்கிறது. தற்போது, குறிப்பிட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, நடவடிக்கை இல்லாவிட்டால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது ஆணையாளருக்கு மனு அனுப்பி, அஞ்சல் ஒப்புதல் அட்டை பெற்று கொண்டு, அதன் பின்பும் நடவடிக்கை இல்லை என்றால், குற்றவியல் நீதிமன்றத்தை நாட வேண்டும். அங்கும் பலன் இல்லாவிட்டால், உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்று, குற்றவியல் சட்டத்தில் உள்ளதை, பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்லி உள்ளது. இன்னொரு கருத்தாக, உரிய காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று, உயர்நீதிமன்றத்தை அணுகினால், பத்து நாட்களுக்குள் மனுதாருக்கு, புகார் மீதான நடவடிக்கையை காவல் துறை தெரிவிக்க வேண்டும். ஒன்று, அவர் அளிக்கும் புகாரில், உண்மை இருந்தால், வழக்கு பதிய வேண்டும். அல்லது அவரது மனுவை close செய்து, அதை மனுதாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று, இன்னொரு தீர்ப்பும் உள்ளது. அதே போல, ஏழு வருடங்கள் சிறை தண்டனை, குற்றம் நிரூபிகபட்டால் என்று இருக்கும் குற்ற பிரிவுகளில் வழக்கு பதிந்தால், குற்றவாளியை ஏன் கைது செய்ய வேண்டும் என்று, காவல் அதிகாரி உரிய காரணம் தெரிவிக்க வேண்டும். குற்றவியல் நீதிபதியும், உரிய காரணம் எழுதி, remand செய்ய வேண்டும் என்று, மற்றொரு உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. நன்றி : மக்கள் சட்டம்

முதல் தகவல் அறிக்கை (F.I.R) - தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் !

முதல் தகவல் அறிக்கைப் பதிவு குற்றவழக்குப் புலனாய்வின் முதல் கட்டமாகும். முதல் தகவல் அறிக்கை (FIR - First Information Report) என்பது ஒரு காவல் நிலையத்தில் ஒரு குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்து மூலமான ஆவணமாகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 154 இது பற்றிக் கூறுகிறது. "ஒரு புலன்கொள் குற்றம் குறித்த முதல் தகவலைப் பெறும் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடும் சட்டக்கடப்பாடு கொண்டவர் ஆவார்".

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை படித்துப் பார்க்கும் காவல் நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா என்று பார்ப்பார். அவ்வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார். ஏனெனில் அனைத்து வகை குற்றங்களிலும் அவர் உடனடியாகவும், நேரடியாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதிகாரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பிணையில் விடத்தகுந்த குற்றமும், பிணையில் விடத்தகாத குற்றமும்

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே

(1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் (Bail able)மற்றும்

(2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் (Non - Bail able)ஆகும்.

பிணை (Bail) அல்லது ஜாமீன் என்பது கைது செய்யப்பட்ட நபரை வெளியில் விடுவதற்கான பெறப்படும் உத்தரவாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பையும் வலியையும் ஏற்படுத்திய நபரை – நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்கவும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலைத்துவிடாமல் இருப்பதற்காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட்டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவருக்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பிணையில் விடுவிக்கும் செயலை செய்வதில் சில நடைமுறைகள் உள்ளன. மிகச்சிறிய குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரியே பிணையில் விடுவிக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.

காவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப்பாக வழங்கப் பட்டுள்ளது.

சுமார் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க கூடிய குற்றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாகவும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுவது உண்டு. இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்டரீதியாக இதை அங்கீகரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவதே நல்லது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விடமுடியாத குற்றங்களை செய்வோரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியும். இவ்வாறு கைது செய்வதற்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் கைது ஆணை (வாரண்ட்) தேவையில்லை. எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல்துறை அதிகாரியே பிணையில் விடத்தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது.

அத்தகையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும். இந்த அம்சங்களை பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வருவது, காவல்துறை அதிகாரியின் முக்கியமான கடமையாகும். ஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது.

அந்த நடவடிக்கை எம்மாதிரியானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு முக்கிய இடம் வகிக்கிறது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பிணையில் விடமுடியாத குற்றமாக இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை சட்டரீதியாக விசாரணை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மிக எளிய தன்மை வாய்ந்ததாக இருந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அந்தப் புகாரை காவல் நிலையத்தில் இருக்கும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அப்பகுதிக்கான குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பின்னர், குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டால் மட்டுமே, அப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய முடியும். 
எனவே, புகாரை பெற்றுக்கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் எத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும் விதத்தில் புகார் எழுதப்பட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கை :

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப்பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக்கை” ஆகும். இந்த தகவல் எழுத்திலோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய்மொழித் தகவலாக இருந்தால் அதை எழுத்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப்படித்துக் காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கையின் சாராம்சங்கள் :

குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. குற்ற நிகழ்வு குறித்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம்.

ஒரு குற்ற வழக்கின் அடிப்படையே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம்.

ஒரு முதல் தகவல் அறிக்கை படிவத்தில், மாவட்டம், காவல் நிலையம், ஆண்டு, முதல் தகவல் அறிக்கையின் எண், நாள், குற்றவியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்றும் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ்வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்றத்தில் தொடர்புடையவர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும்.

பின்னர் குறிப்பிட்ட புகாரின் உள்ளடக்கத்தை அப்படியே பதிவு செய்து, குறிப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார். 
குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும்.

ஆனால் நடைமுறையில் மிகத்தீவிரமான கொலை, கொள்ளை, கலவரம் போன்ற குற்றநிகழ்வுகளைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் வரும் புகார்களை ஏற்க காவல் நிலைய அதிகாரிகள் தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும், குற்றம் நடந்த இடம் தங்கள் காவல் நிலையத்தின் ஆளுகைக்குள் வரவில்லை என்றும், எனவே குற்றம் நடந்த இடத்திற்கு தொடர்புடைய காவல்நிலையத்தில் புகாரை அளிக்குமாறு கூறி பொதுமக்கள் அலைக்கழிப்படுவதாகவும் பொதுவான புகார்கள் காவல்துறை மீது உண்டு.

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் புகாரில் இயன்றவரை முழுமையான, உண்மையான தகவல்களை தருவது நல்லது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும். 
https://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-fir/788162451214363

நன்றி :
நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்

நிலுவையிலுள்ள வழக்குகள் நிலையறிய


வழக்கறிஞர் உதவியில்லாமல் நிலுவையிலுள்ள வழக்குகள் நிலையறிய என்ன செய்ய வேண்டும்?

இன்றைய சூழ்நிலையில் நமது வழக்குகளை நாமே வாதாடி நீதி பெற வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கின்றது.
இதற்கா்க LAW FOUNDATION போன்ற அமைப்புகள் வழக்கறிஞர் உதவி இல்லாமல் எப்படி நீதிமன்றத்தில் வாதாட வேண்டும்? என்ற பயிற்சி வகுப்புக்ளை பல ஊர்களுக்கு நேரில் சென்று “இலவச சட்ட வகுப்பு முகாம்” களை நடத்தி வருகின்றது.
அது போன்ற பயிற்சிகளை பெறுகின்றவர்களுக்கு உதவும் வகையில் இந்தப் பதிவு வெளியிடப் படுகின்றது.
வழக்கறிஞர் உதவி இல்லாமல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலையை அறிந்து கொள்ள நீதிமன்றம் செல்ல வேண்டிது இல்லை.
இதற்கென ஒரு இணையதளத்தை அரசு உருவாக்கியுள்ளது
வழக்கறிஞர் உதவி இல்லாமல் நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ள வழக்கின் நிலையை அறியhttp://ecourts.gov.in/services/ செல்ல வேண்டுகிறேன்.
நன்றி : 
வழக்கறிஞர் திரு. நல்வினை விஸ்வராஜு அவர்கள்

சீக்கிரமாக மரம் வளர்க்க


சீக்கிரமாக மரம் வளர்க்க என்ன செய்ய வேண்டும்?

புதிதாய் நிலம் வாங்கி வீடு கட்டுபவர்கள் அனைவருக்கும் வீட்டைச் சுற்றி மரம் வளர்க்க ஆசைதான். ஆனால் சிறிய மரக் கன்றுகளை நட்டு அதனைப் பராமரித்து வளர்க்கும்போது உள்ள சிரமங்கள்தான் மரம் வளர்க்கும் ஆசையையே போக்கி விடுகிறது. ஆடு மாடுகள் மரக் கன்றுகளை கடிக்காமல் வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும். ஆடு மாடு வராத இடமாயிருந்தால் காற்றில் வளைந்து ஒடிந்துவிடாமல் கம்புகளை நட்டு மரக்கன்றுகளைப் பாதுகாக்க வேண்டும். இப்படிப் பல வேலைகள் உள்ளதாலேயே பலருக்கும் மரம் வளர்ப்பு மீது இனம் புரியாத வெறுப்பு ஏற்படுகிறது.

மரம் வெட்டி நடுதல்
*******************************
இந்தக் கஷ்டம் எதுவும் இல்லாமல் விரைவில் மரம் வளர்க்கக் கூடிய எளிதான முறை மரத்தை வெட்டி நடுதல் ஆகும். வீட்டின் முன்பும் வீட்டைச் சுற்றியும் பெரும்பாலும் வேப்பமரம் வளர்ப்பதையே அதிகம் விரும்புவார்கள். வேப்பமரம் குளுமையான காற்றைத் தருவதோடு மருத்துவ குணமும் உள்ளதால் எல்லோராலும் பெரிதும் விரும்பப் படுகிறது. வெட்டி வைத்தால் நன்கு வளரக்கூடிய மரங்களுள் வேப்பமரம் முதன்மையானது.

மரம் நடும் காலம்
***************************
வேப்பமரம் எல்லா காலங்களிலும் நன்கு வளரும் மரம் என்றாலும் வெட்டி மரம் நடுவதற்கு மிகவும் ஏற்ற காலம் மழைக் காலத்திற்கு முந்தைய மாதமாகும். அதாவது ஜுலை ஆகஸ்ட் மாதங்களில் வெட்டி நடுவது சிறந்ததாகும். ஏனெனில் வெட்டி நட்ட மரம் வேர் விட ஆரம்பிக்கும் போது செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மழைக் காலம் தொடங்குவதால் இதமான சூழ்நிலை நிலவும். இந்தச் சூழல் மரம் நன்கு வளர உதவும்.

விவசாயப் பகுதிகளிலும் தோட்டங்களிலும் வேப்பமரங்கள் தானாய் அதிகம் வளரும் மரமாகும். இம்மரங்களில் இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டு வரையுள்ள மரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நேராக ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளர்ந்துள்ள மரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மரங்களை உடனடியாக வெட்டி எடுக்காமல் முதலில் கிளைகளை வெட்டிவிட வேண்டும்.

பின்னர் மரத்தைச் சுற்றி குழியைத் தோண்டி ஆணி வேர் தவிர மற்ற வேர்களை அரிவாளால் வெட்டி விட்ட பின் மண்ணைத் தள்ளி மூடி விட வேண்டும். ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ கழித்து மீண்டும் மண்ணைத் தோண்டி ஆணி வேரை வெட்டி எடுத்து மரத்தை உடனடியாக நட வேண்டும். ஏற்கெனவே வெட்டிவிட்ட இடங்களில் புதிய வேர்கள் வளர ஆரம்பித்திருக்கும். கிளைகளும் துளிர் விட்டிருக்கும். இதனால் மரங்கள் வைத்த உடனேயே முளைக்க ஆரம்பித்துவிடும்.

மரம் நடும் இடத்தில் செய்ய வேண்டியவை
****************************************************************
மரம் நடும் இடத்தில் மூன்று அடி ஆழக் குழியை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தோண்டி வைத்திருக்க வேண்டும். மரம் நடும் நாளில் குழிக்குள் முதலில் மாட்டுச் சாணம் போன்ற இயற்கை உரங்களைப் போட வேண்டும். பின்னர் களிமண் அல்லது செம்மண் கொஞ்சம் போட்டு நன்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன் பின் மரத்தை நட்டு குழியை மண் போட்டு மூட வேண்டும். மூடிய மண்ணை நன்கு இறுக காலால் மிதித்து விட வேண்டும். மண்ணை நன்கு இறுக மிதிப்பதால் மரம் எந்த விதத்திலும் ஆடாது. இப்படி நடும் மரங்களில நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது சதவீத மரங்கள் முளைத்துவிடும்.

மரத்தின் விலை
****************************
மிகப் பெரிய வேப்பமரத்தை வெட்டி நட்டால்கூட முளைக்கும். ஆனால் உறுதியாய்ச் சொல்ல முடியாது. இரண்டு முதல் ஐந்து வருட வயதுள்ள வேப்ப மரங்களைத் தேர்ந்தெடுத்து வெட்டி நடும்போது அம்மரங்கள் பட்டுப் போகாமல் நிச்சயம் வளரும். தோட்டங்களில் மொத்தமாக மரங்களை வாங்க முடியும்.

வேப்பமரம் ஒன்று 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கிடைக்கின்றன. வீட்டு வேலை ஆரம்பிக்கும் போது மரத்தை வெட்டி நட்டால் வேலை முடிவதற்குள் மரங்கள் நிழல் தரும் அளவிற்கு வளர்ந்துவிடும். தண்டு தடிமனான மரங்களை நடுவதால் ஆடு மாடு கடிக்கவோ காற்றில் முறிந்து விழவோ வாய்ப்பே இல்லை.

கிராமங்களில் அதிகம் நடைமுறையில் உள்ள இம்முறையை நகரங்களிலும் பயன்படுத்தி உடனடிப் பலன் பெறலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 05.06.2015

Friday, July 22, 2016

உறுத்துக்கட்டளை

உறுத்துக்கட்டளை - என்ன செய்ய வேண்டும்?
Injunction Order என்பதை உறுத்துக் கட்டளை என்று அழைக்கிறோம். உறுத்துக்கட்டளை என்றால் ஒருசில செயல்களை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் அல்லது அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும்.
உறுத்துக்கட்டளையின் வகைகள் 
1) இடைக்கால (தற்காலிக) உறுத்துக் கட்டளை  (Interim Injunction  or  Temporary Injunction)
ஒரு வழக்கில் மறு உத்தரவு வரும்வரை நீதிமன்றம் இடும் கட்டளைக்கு இடைக்கால உறுத்துக்கட்டளை என்று பெயர்.
2) செயலுறுத்து கட்டளை  (Mandatory Injunction)
ஒரு செயலை ஒருவர் செய்ய வேண்டும் என்று  நீதிமன்றம் இடும் கட்டளைக்கு செயலுறுத்துக் கட்டளை என்று பெயர்.
3) நிலைக்கால உறுத்துக்கட்டளை    (Perpetual Injunction)
நிலைக் கால உறுத்துக் கட்டளை என்பது நிரந்தர உறுத்துக்கட்டளை ஆகும்.. சொத்து சம்பந்தமான பிரச்சனையில் இந்தக் கட்டளைக்கான தீர்ப்பாணையை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் வழங்கினால்தான், அதில் குறிக்கப்பட்ட சொத்து அதில் குறிப்பிடப்பட்டவருக்குச் சொந்தமானது என்று அர்த்தம்.
4) தடை உறுத்துக்கட்டளை     (Prohibitory Injunction) 
ஒரு செயலை ஒருவர் செய்யக்கூடாது என்று  நீதிமன்றம் இடும் கட்டளைக்கு தடையுறுத்துக் கட்டளை என்று பெயர்.
யாரெல்லாம் உறுத்துக் கட்டளை பெற முடியும்?
உறுத்துக் கட்டளையினை ஒருவர் நீதிமன்றத்தில் பெறுவதற்கு அவர் தொடுத்த அல்லது அவர்மீது வேறு எவராவது தொடுத்த  வழக்கு ஒன்று நிலுவையில் இருக்க வேண்டும். 
எந்த சூ்ழ்நிலையில் உறுத்துக்கட்டளை பெறமுடியாது?
⧭ வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தாலோ, அல்லது அந்த வழக்கு முடிவடைந்து விட்டாலோ உறுத்துக் கட்டளை பெறமுடியாது.
⧭ உறுத்துக்கட்டளையினை வழங்குவதற்கு நீதிமன்றம் ஒன்றுக்கு அதிகாரம் இல்லாத போது அந்த வழக்கில் உறுத்துக்கட்டளை வழங்கக்கூடாது.
⧭ பாகப்பிரிவினை சம்பந்தமான வழக்கில் உறுத்துக் கட்டளை பெற முடியாது.
⧭ ஒரு நிர்வாகமானது தன்னுடைய வேலையாளுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைக்கு எதிராக உறுத்துக் கட்டளை பெறமுடியாது.
⧭ வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல்  செய்யாமல் இருக்கும்போது உறுத்துக்கட்டளை பெறமுடியாது.
நடைமுறைக்கு எப்போது வரும்?
எப்போது எதிர்தரப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டதோ அப்போது முதலே உறுத்துக்கட்டளை நடைமுறைக்கு வரும்.
எப்போது முடிவுக்கு வரும்?
ஒரு வழக்கில் உறுத்துக்கட்டளை வழங்கப்பட்டு இருந்தால் அந்த வழக்கு முடிந்தவுடன் உறுத்துக்கட்டளையும் முடிவுக்கு வந்துவிடும்.
இதில் உள்ள சிக்கல்கள் 
வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அந்த வழக்கில் உறுத்துக்கட்டளை பெற்றவர் முன்னிலை ஆக தவறிய காரணத்தால் வழக்கு தள்ளுபடி ஆகியிருந்தால், பெறப்பட்டிருந்த உறுத்துக் கட்டளையும் தள்ளுபடி ஆகிவிடும். அந்த வழக்கு மீண்டும் கோப்பில் எடுக்கப்பட்டால் உறுத்துக்கட்டளையையும் தானாக கோப்பில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
உறுத்துக்கட்டளையை ஒருவர் மீறுவது தண்டணைக்குரிய குற்றமாகும்.
எதிர்தரப்பினர் உறுத்துக்கட்டளையை மீறுகிறார்கள் என்பதை, தக்க ஆதாரத்துடன் உறுத்துக் கட்டளையை பெற்றவர்தான் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.
----------------------புலமை வெங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூலில் இருந்து----------

தடையாணை & உறுத்துக்கட்டளை


தடையாணை & உறுத்துக்கட்டளை என்ன செய்ய வேண்டும்?
Stay Order என்பதை தமிழில் தடையாணை என்று அழைக்கிறோம்.
தடையாணைகள் என்றால், ஒரு அதிகார அமைப்பையோ அல்லது கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவினை செயல்படுத்தக் கூடாது என்பதற்கு மேலமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தடை செய்து பிறப்பிக்கின்ற ஒரு உத்தரவாகும்.
Injunction Order என்பதை உறுத்துக் கட்டளை என்று அழைக்கிறோம்.
உறுத்துக்கட்டளை என்றால் ஒருசில செயல்களை ஒரு
குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்று அந்த நபர் அல்லது
அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும்.

Thursday, July 21, 2016

பச்சை நிற குடும்ப அட்டை


பச்சை நிற குடும்ப அட்டை பெற என்ன செய்ய வேண்டும்?
அரசு அதிகாரிகளின் கவனக் குறைவாலும், நமது அலட்சியத்தாலும் சாதாரணக் கூலி வேலை செய்யும் பாமர மக்களுக்குக் கூட சீனி அட்டை என்று செல்லமாக கூறப்படுகின்ற “வெள்ளை நிற குடும்ப அட்டை” வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டைக்கு அரிசி கிடைக்காது. மேலும் அரசு இலவசமாக வழங்குகின்ற சில சலுகைகளும் கிடைக்காது. 

இதனால் சிரமப்படுகின்ற பல மக்கள் பச்சை நிற குடும்ப அட்டை பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கா்ன வழிமுறைகள் என்ன என்று தேடித் தவிக்கிறார்கள்.

அவர்களுக்கான பதிவு இது.

மேற்கண்டவாறு பச்சை நிற குடும்ப அட்டைக்கு மாற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்புனர்
             -----------------------------
             -------------------------------
             ------------------------------
பெறுநர்
             வட்ட வழங்கல் அலுவலர் அவர்கள்,
             வட்டாட்சியர் அலுவலகம்,
             ----------------------- 
ஐயா
             பொருள்: தவறுதலாக தரப்பட்ட வெள்ளை நிற குடும்ப அட்டையை ஒப்படைத்து, பச்சைநிற குடும்ப அட்டை பெறுவது சம்பந்தமாக.
           
             நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது குடும்பத்தில் நான் எனது மனைவி, எனது குழந்தைகள் இரண்டு பேர் ஆக மொத்தம் நான்கு பேர்கள் இருக்கின்றோம். எனது குடும்பத்தில் நான் மட்டுமே கூலிவேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நாங்கள் நான்கு பேர்களும் ஜீவனம் செய்து வருகின்றோம். எனது வருட வருமானம் 48,000 ரூபாய் ஆகும். அதற்கான வருமானச் சான்றிதழின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்.

            எனது குடும்ப அட்டை எண்: -------------------ஆகும். தவறுதலாக எனக்கு வெள்ளைநிற குடும்ப அட்டை தங்கள் துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் எனது குடும்பம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. 
எங்கள் குடும்பத்தின் ஜீவாதார பிரச்சணை தீர எனக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளை நிற குடும்ப அட்டையை பெற்றுக் கொண்டு பச்சை நிற அட்டையை வழங்குமாறு தங்களை பணிவுடன் வேண்டுகிறேன்.
இடம் :--------------------             தங்கள் உண்மையுள்ள
நாள்: --------------------

இணைப்பு : 1) குடும்ப அட்டை ஒருஜினல்
                      2) வருமான சான்றிதழ் நகல்.
                      3) எனது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2.

என்று விண்ணப்பம் எ்ழுதி தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் (தாலுகா) அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் அவர்களிடம் கொடுக்க வேண்டும்.
இதை பெற்றுக் கொண்டு ஒரு ஒப்புதல் அட்டையை அவர்கள் தருவார்கள். அதில் என்று புதிய அட்டை வழங்கப்படும் என்று நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நாளில் சென்று புதிய அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

Monday, July 18, 2016

ரேசன்கார்டு குறித்த 12 யோசனைகள்


ரேசன்கார்டு குறித்த 12 யோசனைகள் - என்ன செய்ய வேண்டும்?

குடும்ப அட்டை... இனி குழப்பம் வேண்டாம்!

ஒரு செயலில் இறங்குவதற்கு முன், அதைப் பற்றி தெளிவுற அறிந்துகொள்வது அதை சரியாக செய்து முடிப்பதை  சுலபமாக்கும். வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களை அதிக சிரமமின்றி கடக்க உதவிக்கரம் நீட்டும் பகுதி இது..!

குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை... என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ...

1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்... இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.

2.வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள், பெற்றோரின் குடும்ப அட்டையைப் பெற முடியாத சூழலில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டை எண்ணையும், திருமணப் பதிவு சான்றிதழ் மற்றும் இடது பக்கம் சொல்லி உள்ளவற்றில் ஏதேனும் ஓர் அடையாள அட்டையையும் கொடுத்து மனு தாக்கல் செய்யலாம்.

3.குடும்ப அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது மிகவும் பழுதடைந்திருந்தாலோ, வசிக்கும் ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் (பழைய குடும்ப அட்டையின் நகல்/எண் அல்லது பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகளுடன்) மனு தாக்கல் செய்தால், இரண்டு மாதங்களில் புதிய குடும்ப அட்டை கிடைக்கப் பெறலாம்.

4.புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க, குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து அதன் பிறப்புச் சான்றிதழை குடும்ப அட்டையுடன் இணைத்துக் கொடுத்தால் போதும்.

5.குடும்ப அட்டையில் இருந்து இறந்தவர் பெயரை நீக்கம் செய்ய, இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வாங்கியதும் மூன்று நாட்களுக்குள் குடும்ப அட்டையுடன் இணைத்து வட்டாட்சியர் அலுவலரிடம் கொடுத்து நீக்கம் செய்துகொள்ளலாம்.

6.குடும்ப அட்டைக்கான மனு விண்ணப்பிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. மேலும் குடும்ப அட்டை பெற செலுத்த வேண்டிய தொகை, ரூபாய் 5 மட்டுமே. இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால்,
http://www/consumer.tn.gov.in/contact.htm
என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.

7.குடும்ப அட்டை இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. பச்சை வண்ண அட்டையில் ரேஷனில் வழங்கும் அனைத்துப் பொருட்களையும் பெற முடியும், வெள்ளை வண்ண அட்டையில் அரிசி தவிர்த்து பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்றவற்றை பெறலாம். அடையாளச் சான்றாக மட்டும் குடும்ப அட்டை இருந்தால் போதும் என்பவர்களுக்கும் வெள்ளை நிற அட்டையே வழங்கப்படுகிறது.

8.ரேஷனில் எந்தப் பொருளும் வேண்டாம், அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வில் எடுக்கப்பட்ட 100 ரூபாய்க்கான டிடி-யுடன் பழைய குடும்ப அட்டையையும் ஒப்படைத்துவிட்டால்... ஒரு மாதத்தில் ‘என் கார்டு’ என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற அட்டை கிடைத்துவிடும்.

9.புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்த பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர் நேரடியாக வந்து வீடு, சமையல் அறை போன்றவற்றை மேற்பார்வையிடுவார் (தனியாக சமைக்கிறீர்களா, சமையல் எரிவாயுவை பயன்படுத்துகிறீர்களா போன்ற பரிசோதனைகள்). அப்படி வருபவர்களை அடையாள அட்டையைப் பார்த்து உறுதிசெய்த பிறகே அனுமதிக்கவும்.

10.முகவரி மாற்றத்துக்கு வீட்டு ரசீதுகளை (வாடகை வீடு என்றால் வீட்டு உரிமையாளரிடம் கேட்டுப் பெறலாம்) குடும்ப அட்டையுடன் இணைத்து புதிதாக குடியேறிய பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

11.குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கைக்கும், இடைத்தரகர்கள் தவிர்த்து உரிய அலுவலர்களை நேரில் அணுகுவதே சிறந்தது.

12.‘இதுவரை என் குடும்பத்துக்கு குடும்ப அட்டையே இல்லை’ அல்லது ‘நான் பெற்றோர் இன்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்’ என்பது போன்ற காரணங்களுடன் இருப்பவர்கள், வெள்ளைத்தாளில் மனு எழுதி ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்கவும். இரண்டு மாதங்களில் குடும்ப அட்டை கிடைக்கும்.

 சு.சூர்யா கோமதி

நன்றி : அவள்விகடன் - 03.11.2015

பொய் ஆவணம் தயாரித்தல்


பொய் ஆவணம் தயாரித்தல் - என்ன செய்ய வேண்டும்?
ஒருவர், அவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில் கையெழுத்தைப் போடாமல், அவரது பெயரை அவரே எழுதி்னால்கூட, அவர் பொய் ஆவணம் புனைந்தவர் ஆகிறார்.
உதாரணம் - 1
ராமசாமிக்கு வயதாகிவிட்டதால், பிள்ளைகளுக்கு தனது சொத்துக்களை பிரித்துக் கொடுக்க எண்ணி, இருக்கும் சொத்துக்கள் தன் மகன் முருகனுக்கும், தன் மகள் கோமதிக்கும் சரிசமமாக சேரவேண்டும் என்று உயில் எழுதுகிறார். அந்த உயிலில் இருந்த தனது சகோதரியின் பெயரை முருகன் அகற்றி விடுகிறார். முருகன் பொய் ஆவணம் தயாரித்தவர் ஆகிறார்.
உதாரணம் - 2
கணேஷ் என்பவரால் கையெழுத்து போடப்பட்டு கொணர்பவர் பெறக்கூடிய (Bearer cheque) தொகை நிரப்பப்படாத காசோலை ஒன்றை மூர்த்தி என்பவர் பாதையில் கண்டெடுக்கிறார். அதில் 10,000 ரூபாய் என்ற தொகையை மூர்த்தி நிரப்புகிறார். மூர்த்தி பொய் ஆவணம் புனைந்தவர் ஆகிறார்.
தண்டணை என்ன?
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 465ன்படி, பொய் ஆவணம் புனையும் எவரும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப் படுவார்கள்.

******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Saturday, July 16, 2016

நீதிமன்ற விசாரணை


நீதிமன்ற விசாரணை - என்ன செய்ய வேண்டும்?

இந்திய சாட்சிய சட்டத்தின் அடிப்படையில்தான் நமது நாட்டு நீதிமன்றங்கள் தனது தீர்ப்புகளை வழங்கி வருகின்றன.

உரிமையியல் நீதிமன்றத்தில், ஒரு வழக்கை தாக்கல் செய்பவர்கள் வாய்மொழிச் சான்றுகள் மற்றும் ஆவணச் சான்றுகள் ஆகியவற்றை சரியான முறையில் அளிக்கா விட்டால், வழக்கின் முடிவு அவர்களுக்கு எதிராகவே அமைந்துவிடும்.

உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற குற்றவியல் வழக்குகளில் செய்யப்படுகின்ற பொதுவான   விசாரணையைப் பற்றி நாம் இங்கு காணலாம்.

விசாரணைகள்  

1) முதல் விசாரணை 

2) குறுக்கு விசாரணை

3) மறு விசாரணை

என மூன்று விதமாக செய்யப்படுகிறது. 

முதல் விசாரணை என்றால் என்ன?

வழக்கு தொடுத்தவரை  அல்லது அவரது சாட்சியை அவரது வழக்கறிஞர் அழைத்து  விசாரிக்கப்படுவது முதல் விசாரணை எனப்படுகிறது.

குறுக்கு விசாரணை என்றால் என்ன?

வழக்குத் தொடுத்தவரை அல்லது அவரது சாட்சியை எதிர்தரப்பு வழக்கறிஞர் அழைத்து விசாரிக்கப்படுவது குறுக்கு விசாரணை எனப்படுகிறது.

இதனை செய்வது எதிர்தரப்பு வழக்கறிஞரின் விருப்பத்தைப் பொறுத்தது ஆகும்.

மறு விசாரணை என்றால் என்ன?

வழக்கு தொடுத்தவரை  அல்லது அவரது சாட்சியை அவரது வழக்கறிஞர் மறுபடியும் அழைத்து  விசாரிக்கப்படுவது மறு விசாரணை எனப்படுகிறது.

இதனை செய்வது வழக்குத் தொடுத்தவரின் வழக்கறிஞரின் விருப்பத்தைப் பொறுத்தது ஆகும்.

விடை பொதி வினா

 சாட்சியை கேள்விகள் கேட்கும் வழக்கறிஞர் தான் பெற விரும்புகின்ற அல்லது எதிர்பார்க்கின்ற விடையை குறிப்பாக உணர்த்தும் எந்த ஒரு வினாவும் விடை பொதி வினா என்று அழைக்கப்படுகிறது.

உதாரணமாக,

நீங்கள்தான் குணசேகரனா?

சம்பவத்தன்று நீங்கள் சென்னையில்தான் இருந்தீர்களா?

உங்களிடம் மணிகண்டன் 2 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியிருந்தாரா?

மேற்கண்ட கேள்விகள் விடை பொதி வினாக்கள் ஆகும்.  

குறுக்கு விசாரணையில் மட்டும் இதனை கேட்க நீதிபதியின் அனுமதி தேவை இல்லை.

விடை பொதி வி்னாக்கள் முதல் விசாரணையிலோ அல்லது மறு விசாரணையிலோ எதிர்தரப்பினரால் ஆட்சேபிக்கப்பட்டால் நீதிபதியின் அனுமதியின்றி அவற்றை கேட்கக் கூடாது.

மறுவிசாரணை செய்யப்பட்ட பின்பு, விருப்பப்பட்டால்  வழக்குத் தொடுத்தவரை அல்லது அவரது சாட்சியை எதிர்தரப்பு வழக்கறிஞர் நீதிபதியின் அனுமதியோடு மீண்டும் குறுக்கு விசாரணை செய்யலாம்.

 -புலமை வெங்கடாச்சலம் அவர்கள் எழுதிய இந்திய சாட்சியச் சட்டம் என்ற நூலில் படித்தது-
*************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி************ 


Friday, July 15, 2016

பாசிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி பெற


பாசிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி பெற என்ன செய்ய வேண்டும்?

ஒரு அறிவியல் பூர்வமான அலசல்

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம்.

இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

எளிய ஆங்கிலத்தில் மாற்றிக் கொள்ள


எளிய ஆங்கிலத்தில் மாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
ஒரு மொழியில் எழுதுகையில், எழுதப்படுவது அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் வகையில் எளிமையாக எழுதலாம். அடிக்கடி பயன்படுத்தாத, அல்லது சற்று நேரம் எடுத்துப் புரிந்து கொள்ளும் வகையிலான சொற்களைக் கொண்டும் எழுதலாம். 

எடுத்துக் காட்டாக, தமிழில் ‘ஜன்னல்’ என்பதை ஜன்னல் என்று எழுதினால், வழக்கு மொழிச் சொல் எனப் பலரும் புரிந்து கொள்வார்கள்.

 ‘சாளரம்’ என்று எழுதினால், “இதென்ன புலவர் தமிழாக உள்ளதே” எனச் சிலர் புரிந்து கொள்ளலாம். 

அதே ஜன்னலை, ‘காலதர்’ என எழுதினால், (கால்=காற்று, அதர்= வரும் வழி. காலதர் = காற்று வரும் வழி, ஜன்னல்) பெரும்பாலானவர்கள் பொருள் தெரியாமல் கலக்கமடைவார்கள். 

சொல்லில் மட்டுமின்றி, வாக்கியத்திலும் கூட இதே போல, எளிமையின்றி எழுதும் வகையும் உண்டு. ஆங்கிலத்தில் இது சற்று அதிகமாகவே இருக்கும். 

நமக்கு வேண்டிய பொருள் குறித்த கட்டுரை ஒன்று, சற்று கடினமான ஆங்கிலத்தில் இருந்தால், யாராவது இதனை எளிமைப்படுத்தி எழுதினால் நன்றாக இருக்குமே என்று நாம் விரும்புவோம். 

இந்த செயலில் நமக்கு உதவிட, இணையத்தில் ஒரு தளம் உள்ளது. Rewordify! என்பது இந்த தளத்தின் பெயர். 

இந்த தளத்திற்குச் சென்று, நாம் எளிமைப்படுத்த வேண்டிய கடினமான உரைக்கோவையினை இட்டால், அது அந்த டெக்ஸ்ட்டை எளிமைப்படுத்தித் தருகிறது. 

எடுத்துக் காட்டாக, இந்த தளத்தில் தரப்பட்டுள்ள வாக்கியத்தினையும், அது எளிமைப்படுத்தப்பட்டு தரப்படும் வாக்கியத்தினையும் நீங்கள் படித்துப் பார்த்தால், இதன் செயல்பாட்டினை அறியலாம்.

கடினமான வாக்கியம் (ஆங்கிலத்தில்): The ravenous throng scampered toward the delectable viands, which was impeccably arrayed on the table. 

இதன் எளிமையான வாக்கியம்: The extremely hungry crowd ran toward the delicious food, which was extremely well organized (into rows) on the table. 

இன்னொரு எடுத்துக் காட்டு: Four score and seven. படிக்கும் போது எளிமையாகத் தோன்றினாலும், சிலருக்கு மட்டுமே இது எளிமையாக இருக்கும். Score என்பது 20. எனவே, இது 87 ஐக் குறிக்கிறது.

இந்த செயல்பாடு மட்டுமின்றி, இந்த தளம் மூலம் நாம் ஆங்கிலத்தில் சொற்களைக் கற்றுக் கொள்ளலாம்.
பயனாளர்கள் இந்த தளத்தினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்; என்ன என்ன பயன்களை அடையலாம் என்று விரிவாக இந்த தளத்தின் முகப்பு பக்கத்திலேயே தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு. 

ஆங்கிலத்தில் கட்டுரைகளைத் தேடுவோர் மட்டுமின்றி, சொற்களைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கும், இது ஒரு பயனுள்ள தளமாகும்.

இதன் இணைய முகவரி: https://rewordify.com/

நன்றி : தினமலர் நாளிதழ் - 04.07.2016


Wednesday, July 13, 2016

காசோலை பற்றிய முழு விபரம்


 காசோலை A-Z , என்ன செய்ய வேண்டும்?

காசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா?
 அ முதல் ஃ வரை உங்களுக்காக...
காசோலை என்பது, வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கப் பணத்தைச் செலுத்துவதற்கு, கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டண கருவியாகும். தவிர, காசோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்க்கிக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். நம் அன்றாட செலவுகளைப் பணத்திற்குப் பதிலாக காசோலை மூலம் செய்து கொள்ளலாம். காசோலை என்பது ஒரு முக்கியமான செலாவணி. காசோலையின் மூலம், அதிகளவு தொகையை எளிமையாகக் கையாளலாம். 

ஒரு காசோலையில் இடம்பெற வேண்டிய முக்கியமான தகவல்கள்:

1.   ஒரு காசோலை குறிப்பிட்ட வங்கி மீது மட்டுமே வரையப்பட வேண்டும். (Drawee)

2.   காசோலையில் கொடுப்பவர் அதாவது விநியோகிப்பவரின் கையெழுத்து நிச்சயமாக இடம்பெற  வேண்டும். (Drawer)

3.   காசோலையில் பணம் பெறுபவரின் பெயர் இடம்பெற வேண்டும். (Payee)

4.   காசோலையில் எவ்வளவு பணம் என்பதை வார்த்தைகளில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்

5.   காசோலையில் கண்டிப்பாக தேதி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

காசோலைகளின் வகைப்பாடு:

பணம் செலுத்த மிகவும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றுதான், காசோலை. காரணம், ஒவ்வொரு காசோலை பரிமாற்றமும் வங்கிகளில் பதிவு செய்யப்படுகிறது. நமக்குத் தேவைப்பட்டால் காசோலை விவரங்களை எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.

இடத்தை மையப்படுத்தி காசோலைகள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.

1.   உள்ளூர் காசோலை (Local cheque):

பணம் பெறுபவர் வசிக்கும் அதே ஊரிலுள்ள வங்கியில் காசோலை வழங்கப்பட்டால், அது உள்ளூர் காசோலை எனப்படும்.

2.   வெளியூர் காசோலை (Outstation cheque):

ஒரு குறிப்பிட்ட நகரின் உள்ளூர் காசோலை, பிற இடங்களில் வழங்கப்படுகிறது என்றால் அது வெளியூர் காசோலை எனப்படும். இந்த காசோலைகளைப் பயன்படுத்துவது மூலம், வங்கிகள் நம்மிடம் இருந்து நிலையான கட்டணங்களை வசூலிக்கலாம்.

3.   சம காசோலை (At Par cheque):

இது நாடு முழுவதும் ஒரு வங்கியின் அனைத்து கிளைகளிலும் இணையாக ஏற்கப்படுகின்ற ஒரு காசோலை. உள்ளூர் காசோலை போல கூடுதல் வங்கிக் கட்டணங்களை ஈர்க்காமல் நாடு முழுவதும் இந்த காசோலை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மதிப்பின் அடிப்படையில் காசோலைகளின் வகைப்பாடு.

1.   சாதாரண மதிப்புடைய காசோலைகள் (Normal Value Cheque):

ரூ. 1 லட்சத்திற்கும் கீழ் மதிப்புடைய காசோலைகள் சாதாரண மதிப்புடைய காசோலை எனப்படும்.

2.   உயர் மதிப்புடைய காசோலைகள் (High value cheque):

ரூ. 1 லட்சத்தை விட அதிகளவு மதிப்புடைய காசோலைகள் உயர் மதிப்பு காசோலைகள் எனப்படும்.

3.   பரிசு காசோலைகள் (Gift Cheque):

அன்பிற்குரியவர்களுக்கு பரிசாகக் கொடுக்கும் காசோலைகள் பரிசு காசோலைகள் எனப்படும்.

காசோலைகள் பொதுவாக நான்கு வகைப்படும்.

1.   கீறாக் காசோலை (Open cheque):

வங்க்கியில் கவுண்டரிலேயே ஒரு காசோலையைக் கொடுத்து பணத்தைப் பெற முடிந்தால், அது கீறாக்காசோலை எனப்படும். ஒருவர் தனது சொந்தக் கணக்கில் இருந்து தானே பணத்தைப் பெறலாம். இல்லையெனில், வேறு யாரிடமாவது கையெழுத்திட்டு கொடுத்து பணத்தைப் பெற சொல்லலாம்.

2.   கொணர்பவர் காசோலை (Bearer cheque):

கொணர்பவர் காசோலை மூலம் ஒரு வங்கியில் காசோலை கொடுப்பவர் யாராயினும் பணத்தைப் பெற முடியும். இந்த காசோலையை ஒப்புதல் இல்லாமல் யார் வேண்டுமானாலும் வேறொருவருக்குக் கொடுக்கலாம்.

3.   ஆணைக் காசோலை (Order cheque):

இது ஒரு குறிப்பிட்ட நபருக்கு அளிக்கப்படும் காசோலையாகும். இத்தகைய காசோலையில் “bearer” என்ற வார்த்தை அடிக்கப்பட்டு “order” என எழுதப்படலாம். பணம் பெறுபவர் (Payee), காசோலைக்குப் பின்புறத்தில் கையெழுத்திட்டு வேறொருவருக்கு அதே காசோலையை மாற்றிவிடலாம்.

4.   கோடிட்ட காசோலை (crossed cheque):

கோடிட்ட காசோலையை கவுண்டரில் கொடுத்து பணத்தை பெற முடியாது. இத்தகைய காசோலை மூலம் வங்கி, பணம் பெறுபவர் கணக்கில் மட்டுமே பணத்தை வரவாக வைக்கும். ஒரு காசோலையின் மேல் இடப்பக்கத்தில் 2 கோடுகள் வரையப்பட்டாலோ, “account payee”  என எழுதப் பட்டாலோ அது கோடிட்ட காசோலையாகக் கருதப்படும்.

இதுதவிர, பண உத்திரவாதம் அளிக்கும் பல காசோலைகளை வங்கிகள் வழங்க்குகின்றன.

சுய காசோலை (Self cheque):

சுய காசோலை என்பது, வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் தனக்குத் தானே வரைந்து கொள்ளும் காசோலையாகும். இவர் கணக்கு வைத்திருக்கும் கிளையில் தானே சென்று பணத்தைப் பெற்றுக் கொள்வார். இதற்கு மாற்றாக ஏடிஎம் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பின் தேதியிட்ட காசோலை (Post dated cheque):

இந்த காசோலை, எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, பின் தேதியிட்டு அளிக்கப்படும். காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் இருந்து 3 மாதங்கள் வரை இது செல்லுபடியாகும்.

வங்கியாளரின் காசோலை (Banker’s cheque):

வங்கியாளரின் காசோலை மூலம் கணக்கை வைத்திருப்பவரிடம் இருந்து பணததைப் பெறாமல், தனது சொந்த நிதியில் இருந்து வங்கி பனத்தை எடுத்துக் கொள்ளும். சாதாரன காசோலையைப் போல வங்கியாளரின் காசோலையை நிராகரித்து விட முடியாது.

பயணியின் காசோலை (Traveller’s cheque):

ஒரு பயணி, வெளிநாட்டுப் பயணாத்தின்போது பணத்திற்குப் பதிலாகக் கொண்டு செல்லக் கூடிய காசோலை. பயணியின் காசோலை ஒரு திறந்த வகை காசோலை. ,வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகக் கூடியது. பயணியின் காசோலை உணவகங்களிலும், அனைத்து இடங்க்களிலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பயணத்தின் போது, பயன்படுத்தாத காசோலைகளை மறு பயணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

-ந. ஆசிபா பாத்திமா பாவா

(மாணவப் பத்திரிக்கையாளர்)

நன்றி : நாணயம் விகடன் - 13.07.2016

காவல்நிலையத்தில் CSR பெற


காவல்நிலையத்தில் CSR பெற என்ன செய்ய வேண்டும்?

இந்திய தண்டணைச் சட்டங்களிலுள்ள (சில) பிரிவுகளின்படி  தண்டிப்பதற்கான குற்றம் ஏதாவது நடந்து இருந்தாலும், அல்லது நடக்கப் போவதை அறிந்தாலும் பொதுமக்களாகிய நாம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) பிரிவு 39ல் குறிப்பிடப் பட்டுள்ளது. 
ஆனால், பொதுமக்களாகிய நாம் நமக்கு சம்பந்தம் இருந்தால் மட்டுமே அல்லது நமக்கு துன்பம் நேர்ந்தால் மட்டுமே  போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து வருகின்றோம். இது மிகவும் தவறு.
எந்தத் தவறு நடந்து இருந்தாலும் முதலில் போலீஸ் ஸ்டேஷனில்தான் புகார் அளிக்க வேண்டும் என்று நம் நாட்டில் சட்டம் வகுத்தவர்கள் ஒரு மரபை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். 
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நீங்கள் நேரடியாக சென்று புகார் அளித்தாலும், அந்தப் புகாரை பற்றி விசாரணை செய்யச் சொல்லி லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கே அவர் அனுப்பி வைப்பார்.
நீங்கள் நேரடியாக கோர்ட்டுக்கே சென்றால் கூட, அந்தப் புகார் பற்றி விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி,  அந்தப் புகாரானது நீதிமன்றத்தால் காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆகவே, முதலிலேயே நாம் அருகிலுள்ள காவல்துறை அலுவலகத்தில் புகார் அளிப்பது நல்லது. 
 நாம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்போது அந்தப் புகாரை ஏற்றுக் கொண்டதாக காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச் சான்றிதழ் (CSR - Community Service Register)  என்று அழைக்கப்படுகிறது. 
எந்த ஒரு புகாராக இருந்தாலும் அதனை பதிவுசெய்து அந்தப்புகாரை தந்தவர்களுக்கு புகார் மனு ஏற்புச் சான்றிதழ் தருவது காவல்துறையினரின் கடமை ஆகும். 
மேலும், புகார் மனு ஏற்புச் சான்றிதழ் அளித்தது பற்றி அது பற்றிய குறிப்புடன் காவல்நிலையத்தில் வைத்து பராமரித்து வருகின்ற பதிவேட்டில் பதிவு செய்யவும் வேண்டும்.
அந்தப் புகாரின்படி விசாரணை செய்து, கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கை தயார் செய்து, குற்ற விசாரணை முறைச் சட்டம்,  (Cr.P.C) 1973 - பிரிவு 154ன்படி குற்றவாளிகளை கைது செய்து  நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். 
புகார் அளித்தவர்க்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்க வேண்டும்.
ஒரு வேளை  கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், , குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973 -  (Cr.P.C) பிரிவு -155ன்படி புகாரையும், புகார் தந்தவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். 
ஆன்லைன் மூலமாகவும் புகார் செய்து புகார் மனு ஏற்புச் சான்றிதழ் பெற முடியும். ஆனால், நேரில் செல்வதே சிறந்தது.
புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்தாலோ அல்லது புகார் மனு ஏற்புச் சான்றிதழ் தர மறுத்தாலோ உங்கள் புகாரை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத்தபாலில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து புகார் செய்யப்பட்டதற்கான  ஒரு ஆதாரத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.
எச்சரிக்கை:
பொய்யான புகாரைக் கொடுத்தால், புகார் கொடுத்தவர் இந்திய தண்டணைச் சட்ட்ம், பிரிவு - 211ன்படி இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டணை மற்றும் அபராதம் விதித்து தண்டிக்கப்படுவார்.
காவல்துறை இயக்குநர் அவர்களின் ஆணை
காவல்நிலையங்களில் எந்தப்புகார் அளித்தாலும், அதற்கு தாமதமில்லாமல் உடனடியாக மனு ஏற்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கடந்த 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழக அரசின் உள்துறை வெளியிட்ட ஆணை நகல்,  காவல்துறை இயக்குநர் அவர்கள் வெளியிட்ட ஆணை நகல், மனு ஏற்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற  முகநூல் நண்பர் திரு Saravanan Palanisamy  அவர்கள் முகநூல் நண்பர் திரு  A.Govindaraj Tirupur அவர்கள் மூலமாக நமக்கு வழங்கி உதவியிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் நன்றி. அதன் இணைப்பு கீழே உள்ளது.
https://drive.google.com/file/d/1-Lm3tVu8dHVE9eYQjwUtMEfvEpXht0Ky/view?fbclid=IwAR3xMs9rfQuFR04INEtS8uMmMOUwJiMNGcyPPsNuo7eEZaOgbfxYvoqWWto

********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 13.07.2016 

Tuesday, July 12, 2016

நல்ல நட்பு


நல்ல நட்பு - என்ன செய்ய வேண்டும்?
அறிவியலின் ஆற்றலை அறிய நமக்கு உறுதுணையாக அமைவது எண்களாகும். எண்களைப் பற்றிய சிந்தனைகள் நெடுங்காலமாக இந்தியாவில் தோன்றியுள்ளன. இன்றளவும் எண்களின் பண்புகளை விளக்குவதில் இந்தியர்கள் மிகவும் சிறந்து விளங்குவதை காண்கிறோம். உலகைத் தன்வசப்படுத்திய எண்களின் வெவ்வேறு பண்புகளையும் பரிமாணங்களையும் அறிய முற்படுவோம்.

இரு நபர்களில் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டால் அவர்களை சிறந்த நண்பர்கள் என அழைப்போம். இவ்வாறு இருவரும் அதிக ஆண்டுகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் அவர்களை நட்புக்கு இலக்கணமானவர்கள் என இவ்வுலகம் போற்றும். மனித உறவுகளில் மட்டும்தான் நட்பைக் காண இயலுமா? சில எண்களிலும் இப்பண்பைக் காண முடியும் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக அமையும்.

எண்களின் தந்தை!

இதை விளக்குவதற்கு நாம் 2500 ஆண்டுகள் முன் வாழ்ந்த கிரேக்க அறிஞர் பைதாகரஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் நிகழ்வைக் காணலாம்.

எண்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஓர் குழு அமைத்து மிகச் சிறப்பாக அதை விளக்கியவர் பைதாகரஸ். அக்காலத்தில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்பவர்களைக் கடவுளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் எனக் கருதினார்கள். எனவே, பைதாகரஸ் அவரது சீடர்களுடன் இரவில் ரகசியமாக இந்த ஆய்வுகளை மேற்கொண்டார். எண்களில் பல புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்த இக்குழுவினரே உலகப் புகழ் பெற்ற பைதாகரஸ் தேற்றத்தையும் கண்டறிந்ததாக நம்பப்படுகிறது.

இன்று பைதாகரஸ் தேற்றம் இல்லையென்றால் உலகில் எந்தக் கட்டிடத்தையும் துல்லியமாகக் கட்ட இயலாது. பிரமிடு போன்ற பிரம்மாண்ட சின்னங்களில்கூட இந்தத் தேற்றம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பைதாகரஸ், அந்தக் காலத்தில் மிகப் பிரபலமான மேதையாக திகழ்ந்தார். எண்களின் தந்தையாகவும் இன்று அவர் கொண்டாடப்படுகிறார்.

ஆனால், பைதாகரஸ் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம் “உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” என்று கேட்டார்.

நான் அவ்வாறு பழகத்தான் விரும்புகிறேன், ஆனால், நான் எதிர்பார்க்கும் நபரைக் காண இயலவில்லை என பைதாகரஸ் பதிலளித்தார். அவ்வாறென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் மனிதருக்கு என்ன தகுதிகள் தேவைபடுகின்றன? என அந்த நபர் கேட்டார்.

நட்புக்கு இலக்கணமான எண்கள்

“220, 284 ஆகிய இரு எண்களைப் போல, நானும் என் நண்பரும் விளங்க ஆசைப்படுகிறேன்” என பைதாகரஸ் கூறினார். “நீங்கள் கூறிய எண்களுக்கும், என் கேள்விக்கும் என்ன தொடர்புள்ளது?” என்று குழம்பிய நிலையில் அந்த நபர் கேட்டார்.

குழம்பியவரைத் தெளிவுபடுத்த விரும்பிய பைதாகரஸ், 220, 284 ஆகிய இரு எண்களின் வகுத்திகளை (Divisors) முதலில் கண்டறியும்படி கூறினார். சிறிது சிரமப்பட்டு அந்த நபர் இவ்விரு எண்களின் வகுத்திகளைப் பட்டியலிட்டார்.

220 → 1,2,4,5,10,11,20,22,44,55,110,220

284 →1,2,4,71,142,284

இந்தப் பட்டியலில் 220, 284 ஆகிய இரு எண்களை நீக்கி, இவ்விரு எண்களின் வகுத்திகளின் கூடுதலைக் கண்டறியும் படி பைதாகரஸ் கூறினார். அதன்படியே செய்த நபர் சிறிது நேரத்தில் ஆச்சரியமடைந்தார். இதற்கு என்ன காரணமாய் இருக்க முடியும்? பைதாகரஸ் கூறியபடி கொடுத்த எண்களைத் தவிர்த்து மற்ற வகுத்திகளை கூட்டினால் கிடைப்பது,

220 → 1+2+4+5+10+11+20+22+44+55-110=284

284 →1+2+4+71+142=284

இதிலிருந்து 220 என்ற எண்ணிலிருந்து 284 என்ற எண் வெளிப்படுவதும், அதேபோல் 284 என்ற எண்ணிலிருந்து 220 என்ற எண் கிடைப்பதையும் உணர முடிகிறது. 220, 284 என்ற எண்களின் வகுத்திகளை, சம்பந்தப்பட்ட எண்களைத் தவிர்த்து, கூட்டினால் மற்றொரு எண் கிடைப்பதே அந்நபரின் வியப்புக்குக் காரணமாய் அமைந்தது. இவ்விரு எண்களில் எவ்வாறு ஒன்று மற்றொன்றை பிரதிபலிக்கிறதோ அதைப் போலவே நானும் என் நண்பரும் அமைய வேண்டும் என பைதாகரஸ் விளக்கினார்.

வியப்பின் விளிம்புக்கே சென்ற அந்நபர், இவரை ஏன் அனைவரும் “எண்களின் தந்தை” என போற்றுகின்றனர் என புரிந்துகொண்டார். எனவே ஒருவர், அவர் இல்லாத தருணத்தில்கூட மற்றொருவரை முழுமையாக வெளிப்படுத்தினால், அவ்விரு நபர்களும் நட்பின் இலக்கணமாக திகழ்வார்கள் என்பதே இந்நிகழ்வின் மூலம் பைதாகரஸ் புரிய வைக்கும் தத்துவமாகும்.

நட்பிலக்கண இணைகள்

நட்பின் பண்பை வெளிபடுத்தும் 220, 284 ஆகிய எண்களை நாம் ‘நட்பிலக்கண இணைகள்’ (Amicable Pairs) என அழைக்கலாம். இவ்விரு எண்கள் சிறிய அளவில் அமைந்த நட்பிலக்கண இணைகளாக அமைகின்றன. அதிவேகக் கணினியின் துணையுடன் இன்று நாம் கிட்டத்தட்ட 1.2 கோடி நட்பிலக்கண இணைகளை அறிவோம். பைதாகரஸ் கண்டறிந்த சிறிய நட்பிலக்கண இணைக்கு அடுத்த இணையான 1184, 1210 என்ற எண்களை நிக்காலோ பகணினி என்ற 15 வயது இத்தாலி மாணவர் 1866-ல் கண்டறிந்தார். இந்த நட்பிலக்கண இணையைப் பல கணித மேதைகள் தவறவிட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது. எனவே, இன்றும் மாணவர்கள் சரியான முறையில் சிந்தித்தால் பல கணித உண்மைகளைக் கண்டறிந்து உலகை பிரமிக்க வைக்கலாம் என இது உணர்த்துகிறது.

நட்பின் மகத்துவத்தை உணர்த்தும் இந்த எண்களைக் கண்டு மகிழாதவர் இருக்க முடியுமா?

கட்டுரையாளர் :

கணிதப் பேராசிரியர், நிறுவனர், பை கணித மன்றம். 

தொடர்புக்கு: piemathematicians@yahoo.com

நன்றி : தி இந்து தமிழ் இந்து நாளிதழ் - 12.07.2016