disalbe Right click

Saturday, July 30, 2016

இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு


இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு
என்ன செய்ய வேண்டும்?

ஒருவருடைய முதல் மனைவி இறந்துவிட்ட பிறகோ அல்லது அவருடைய முதலாவது திருமணம் சட்டப்படி ரத்தான பிறகோ அவர் வேறோரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அந்த இரண்டாவது திருமணமானது சட்டப்படி செல்லும்.
அவருடைய சட்டப்படியான மனைவி என்கிற அந்தஸ்தும் அந்தப் பெண்ணிற்கு கிடைக்கும். அந்த வகையில் அந்தப் பெண்ணிற்கு தன் கணவர் இறந்த பிறகு, கணவரின் மூதாதையர் சொத்தில் உரிமை தானாகவே வந்துவிடும்.
அதே நேரத்தில் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது அவரை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்து கொண்டால், அந்தப் பெண்ணிற்கு சட்டப்படி மனைவி என்ற அந்தஸ்தோ, கணவன்வழி சொத்தோ கிடைக்காது.
இருந்தாலும் சட்டப்படி செல்லாத அந்த திருமணம் மூலமாக அந்தப் பெண்ணிற்கு பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் கணவன்வழி சொத்தில் பங்குண்டு.
முதல் மனைவி வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு என்ன பங்கு வழங்கப்படுகின்றதோ, அதே அளவு இரண்டாவது மனைவி வயிற்றில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கு வழங்க வேண்டும்.

Friday, July 29, 2016

குற்றவியல் வழக்குகளில் தண்டணை


குற்றவியல் வழக்குகளில் தண்டணை- நீதிமன்றங்களின் அதிகாரம்
என்ன செய்ய வேண்டும்?

* J.M COURT (இரண்டாம் நிலை) : ஒரு வருட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

*J.M COURT (முதல் நிலை) : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

* SUB DIVISIONAL JUDICIAL MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

* METROPOLITAN MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

* SPECIAL METROPOLITAN MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

* CHIEF JUDICIAL MAGISTRATE COURT : 7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* CHIEF METROPOLITAN MAGISTRATE COURT : 7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* ADDITIONAL SESSIONS COURT : 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* SESSIONS COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* MAHILA COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* SPECIAL COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* HIGH COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* SUPREME COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* district &sessions court can impose DEATH SENTENCE WITH THE CONFORMATION OF TWO HIGH COURT JUDGES.

நன்றி ;  திரு T.S.ARUN KUMAR - 29.07.2016

Thursday, July 28, 2016

புகார் பற்றிய புலனாய்வு அறிக்கை பெற


புகார் பற்றிய புலனாய்வு அறிக்கை பெற என்ன செய்ய வேண்டும்?

நாம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்மீது, காவல் நிலைய அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை எழுத்து மூலமாக அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு பெற்றுக் கொண்டால்தான் அதனை நீதிமன்றத்தில் நாம் சமர்ப்பித்து காவல் நிலையத்தில் புகார் செய்ததையும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் நிரூபிக்க முடியும். அதன்மூலம் காவல் அதிகாரியின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக புகார் அளித்த நம்மிடம் வாய்மொழியாக உங்கள் புகார்மீது முதல் தகவல் அறிக்கை பதிய வழியில்லை என்று சொல்லி, காவல்நிலைய அதிகாரி  நாம் அளித்த புகாரை “குளோஸ்” செய்து விடுவார். ஆனால், அவர் புகார் அளித்தவரிடம் புகாரின்மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்ற காரணத்தை அறிவிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

Cr.P.C. பிரிவு : 157 - 2 (ஆ)

அவர் அந்தப் புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்பதற்கான காரணத்தை  புகார் அளித்தவரிடம் அறிவிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157 - 2(ஆ)வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை தங்கள் மனுவில் குறிப்பிட்டு, புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தை எழுத்து மூலம் காவல் நிலைய அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 

இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 76

புகாரின்மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்ற அறிக்கையின் நகலை தனது மேலதிகாரிக்கு எழுத்து மூலம்  காவல் நிலைய அதிகாரி தெரிவிக்க வேண்டும். 
அந்த அறிக்கையின் நகலை மனுதாரர் காவல்நிலைய அதிகாரி அவர்களிடம் இருந்து இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 76ன் கீழும் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த புகார் சம்பந்தமாக நீதிமன்றத்தில் சென்று முறையிடும் போது மேற்கண்டவாறு பெற்ற ஆவணங்கள் புகார்தாரருக்கு கண்டிப்பாக உதவும்.

Tuesday, July 26, 2016

பி.எஃப். இருப்பை தெரிந்து கொள்ள


பி.எஃப். இருப்பை தெரிந்து கொள்ள - என்ன செய்ய வேண்டும்?
வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎஃப் கணக்குகளே பெரும்பாலானவர்களுடைய பணி ஓய்வுக் காலத்தின் பிந்தைய காலத்திற்கான முக்கிய சேமிப்பாக விளங்குகிறது. 

பிஎஃப் கணக்கின் இருப்பைத் தவறாமல் தொடர்ந்து சரிபார்க்க ஊழியர் சேமலாப நிதி அமைப்பு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. 

பின்வரும் இந்த ஐந்து முறைகளைப் பயன்படுத்தி உங்கள் பிஎஃப் இருப்பை எளிதாகச் சரிபார்க்கலாம்.

UAN பயன்படுத்திச் சரிபார்த்தல் 

யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) ஊழியர் சேமலாப நிதி அமைப்பினால் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 

UAN இணையதளத்தில் உங்கள் பிஎஃப் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்து UAN எண்ணை உருவாக்க வேண்டும். பின்னர் அதைப் பயன்படுத்தி உள்நுழைந்து சந்தாதார்கள் பிஎஃப் பங்களிப்பு மற்றும் நடப்பு இருப்புத் தொகை போன்றவற்றைக் காணலாம்.

மொபைல் எண் 

இணையதளம் பயன்படுத்தி பார்க்க கூடிய இந்த முறையில் உங்கள் பிஎஃப் பகுதியை தேர்வு செய்து பின்னர் உங்கள் பிஎஃப் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடுவதன் மூலமாக பிஎஃப் பங்களிப்பு மற்றும் நடப்பு இருப்புத் தொகை போன்றவற்றை மொபைலில் குறுந்தகவலாகப் பெறலாம்

எஸ்எம்எஸ் சேவை 

ஊழியர் சேமலாப நிதி அமைப்பு SMS சேவை மூலமாகவும் பேஃப் தொகை அறியும் சேவை அறிமுகப்படுத்தியுள்ளது. EPFOHO UAN என்று உங்கள் 12 இலக்க UAN-ஐ 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி நீங்கள் பிஎஃப் விவரங்களைப் பெறலாம்.

மிஸ்டு கால் சேவை 

இந்தச் சேவை மூலமாக UAN-ஐ பதிவு செய்துள்ள மொபைல் எண்ணில் இருந்து மிஸ்டு கால் அளித்தும் இலவசமாக உங்கள் பிஎஃப் விவரங்களைப் பெறலாம்.

செயலி

 ஆண்ட்ராட்டு ஸ்மார்ட் ஃபோன் பயனர்கள் ஊழியர் சேமலாப நிதி அமைப்பு (EPFO) மொபைல் செயலியான எம்-சேவா (M-Sewa)-ஐ மொபைலில் பதிவிறக்கி UAN-ஐ உள்ளிட்டு பிஎஃப் இருப்பை சரிபார்த்துக் கொள்ளலாம்.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 25.07.2016

Monday, July 25, 2016

வீடுகட்டும்போது வருவாய்த்துறையில் என்.ஓ.சி.


வீடுகட்டும்போது வருவாய்த்துறையில் என்.ஓ.சி. இனி வாங்க வேண்டாம்
என்ன செய்ய வேண்டும்?

வீடுகட்டுவோருக்கு வசதி

கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது, சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான கிராம வரைபடங்களை ஆய்வு செய்ய, நகரமைப்பு துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

இதனால், வீடு கட்டுவோர், என்.ஓ.சி., எனப்படும், தடையின்மை சான்றுக்காக, வருவாய் துறையினரிடம் நிற்பதில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது.

தமிழகத்தில், சென்னை பெருநகருக்கு வெளியே உள்ள பகுதிகளில் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம், நகர் மற்றும் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,க்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, திட்ட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அவர்கள் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், இதில் திட்ட அனுமதி கோரப்படும் நிலம் தொடர்பான உண்மை நிலவரத்தை சரி பார்க்க வேண்டும்.

சிக்கல்

இதற்கான வசதி நகரமைப்பு துறை அதிகாரிகளுக்கு இல்லாததால், சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று வர, அவர்கள் விண்ணப்பதாரரை அறிவுறுத்துவர். 

இதன்படி, ஒவ்வொரு விண்ணப்பதாரரும், தடையின்மை சான்று கேட்டு வருவாய் துறை அலுவலகங்களை அணுகுவதால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.

குறிப்பாக, ஏற்கனவே பணி சுமையில் இருக்கும் வருவாய்துறை அதிகாரிகள், தடையின்மை சான்று வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியே ஆர்வம் காட்ட முன்வந்தாலும், உரிய முறையில், 'கவனிக்கும்' விண்ணப்பதாரருக்கு மட்டுமே சான்று கிடைக்கும். 

இதனால், வீடு கட்ட அனுமதி பெறுவோர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
'இத்தகைய சான்று பெறும் நடைமுறையில் உரிய மாற்றங்கள் செய்ய வேண்டும்' என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பான, 'கிரெடாய்' உட்பட, சில அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

சுற்றறிக்கை

இது தொடர்பாக, நகர் மற்றும் ஊரமைப்பு துறை ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் தர்மேந்திர பிரதாப் யாதவ், நகரமைப்பு துறையில் அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:திட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நில விவரங்களை வருவாய் துறையில் நில நிர்வாக பிரிவின் இணையதளத்துக்கு சென்று நகரமைப்பு துறை அதிகாரிகளே ஆய்வு செய்யலாம்.

இதற்காக, நில நிர்வாகத்துறை ஒப்புதலுடன் நகரமைப்பு துறையின் அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கு தனித்தனியாக, 'யூசர் ஐடி' எனப்படும்பயனாளர் பெயர்; 'பாஸ்வேர்டு' எனப்படும் ரகசியகுறியீடு ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

பயன்பாடு

இதை பயன்படுத்தி கிராம அளவில் நிலங்களின் தன்மை, உரிமை நிலை, பயன்பாடு, வகைபாடு, அரசுக்காக கையகப்படுத்துவதா, உச்சவரம்பு சிக்கல் உள்ளதா என்பது போன்ற விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரரிடம் தனியாக வருவாய் துறை தடையின்மை சான்று கேட்காமல், அனைத்து விவரங்களையும் இணையதளம் வாயிலாகவே சரிபார்த்து கொள்ளலாம். இந்த வசதியை அனைத்து பிரிவு அதிகாரிகளும் முறையாக பயன்படுத்தும்படி அறுவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 26.07.2016

கருவில் உள்ள குழந்தை குறைபாட்டுடன் இருந்தால்


கருவில் உள்ள குழந்தை குறைபாட்டுடன் இருந்தால்- 
என்ன செய்ய வேண்டும்?
கருவில் உள்ள சிசு, குறைபாட்டுடன் இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவரை, அவருடன் பழகிவந்த நபர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் கருவுற்ற அந்த பெண், 24 வாரங்களுக்குப் பிறகு அந்தக் கருவைக் கலைக்க முயன்றபோது கருக்கலைப்பு தொடர்பான சட்டம் தடையாக இருந்தது.' 20 வாரங்களுக்கு மேலான கருவைக் கலைக்கக் கூடாது' என்று 1971 ம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்பு சட்டப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், "நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்குப் பிறக்கும் குழந்தை மூளை, உடல் குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், கருக்கலைப்பு மட்டும் செய்ய மறுத்துவிட்டனர்"  என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவிற்கு மத்திய அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த பெண்ணின் வயிற்றில் உள்ள கருவின் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து மருத்துவ ஆய்வு நடத்த, மும்பை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மருத்துவ அறிக்கை கடந்த 23 ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கருவின் வளர்ச்சி தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேராமல், கருவைக் கலைக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த மருத்துவ அறிக்கையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கருவில் உள்ள சிசு குறைபாட்டுடன் இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும், குறைபாடு பற்றி மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டிருந்தால் சிசுவைக் கலைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

நன்றி : விகடன் செய்திகள் - 25.07.2016

Saturday, July 23, 2016

காவல்துறையில் புகார் அளித்தும் எஃப்.ஐ.ஆர்.


காவல்துறையில் புகார் அளித்தும் எஃப்.ஐ.ஆர். போடவில்லையா?
என்ன செய்ய வேண்டும்?

ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே.

1. புகார் ரசீது அல்லது எப்.ஐ.ஆர் கொடுக்காத நிலையில் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம்.

பிரிவு 154 (2) சி.ஆர்.பி. சி படி விசாரனை செய்ய சொல்லி காவல் கண்காணிப்பாளருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் தபால் மூலம் அணுபவும்

இவற்றை ஆதாரமாக கொண்டு உரிய குற்றவியல் நீதி துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிய உத்திரவு பெறலாம் பிரிவு 156 (3) சி.ஆர்.பி. சி மற்றும் 190 சி.ஆர்.பி. சி

மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம்.

2. குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்றத்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது.

3. பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழிகாட்டுகிறது. இச்சட்டத்தின் அத்தியாயம் 15இல் உள்ள பிரிவு 200 இதுகுறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம்.

இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதல் புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருபவரையும், அவரது சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஏனென்றால் குற்றவியல் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் ஏராளமான வழக்குகளோடு, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக வழங்கப்படும் புகார்கள் கூடுதல் பணிச்சுமை என்பதால் நீதிமன்றங்கள் இதுமாதிரியான மனுக்களை பரிவுடன் அணுகுவதில்லை. மேலும் புகாரில் கூறப்படும் குற்றச்செயலை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவரிடமே விடப்படுவதும் உண்டு. குற்றப்புலனாய்வில் அறிவோ, அனுபவமோ இல்லாத சாமானியர்களிடம் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்ள சிறப்புத் திறமைகள் தேவையில்லை. ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதையும் மறுக்கமுடியாது.

ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே.

சில காவல்நிலையங்களில், யார் மீது புகார் கூறப்படுகிறதோ – அவரையே தொடர்பு கொண்டு, அவரிடம் முதல் புகாரைதாரர் மீது வேறுபுகாரை பெற்று அதை முதல் புகாராக பதிவு செய்வதும் வழக்கத்தில் உள்ளது.

இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்குரைஞர் உதவியுடன் புகார்களை அளிப்பது நல்லது. இந்தப்புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம். இதன் மூலம் காவல்துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தத்தை அளிக்கலாம். குறிப்பிட்ட புகார் சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல் குறித்ததாக இருந்தால், அந்தப் புகார் குறித்து அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர்களை தொடர்பு செய்தி வெளிவரச்செய்வதும், அந்தப் புகார் மீது விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும்.

இவ்வாறு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்காது, அந்தப்புகாரை உரிய முறையில் விசாரிக்காமல் தள்ளிவிட முயற்சிக்கும் அதிகாரிகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. இத்தகைய சூழ்நிலையில், புகார்தாரர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் சட்டம் வழிகாட்டுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறிஞருக்கு துணையாக, அரசு வழக்கறிஞர் அல்லாத ஒரு வழக்கறிஞர் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கிறது. குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு ஆவணங்களையும் புகார்தாரர் பெறமுடியும். இதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் வழி வகுக்கிறது. இதன் மூலம் ஆவணங்களைப் பெறும் புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றாதாரங்கள் ஆய்வு முடிந்தபின்னர், அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகுவது நல்லது.

இந்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையிலும், காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது வழக்கின் போக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளிப்பதாக நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும்கூட புகார்தாரர் அதில் தலையிடலாம். காவல்துறை நியாயமாக நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால், அந்த வழக்கின் விசாரணையேயோ, வழக்கையோ உள்ளூர் காவல்துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுக சட்டம் இடம் அளிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தினஅ அடிப்படையில் இத்தகைய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.

அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறைக்கோ அல்லது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்புக்கோ மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு புகார் மீதான விசாரணையோ, வழக்கோ வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்படும்போது, புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரிகளை அணுகி, தங்கள் ஐயப்பாடுகளை எடுத்துரைக்க முடியும்.

இவை அனைத்திற்கும் தேவை, புகார் அளிக்கும் நிலையிலும் அதைத் தொடர்ந்த நிலையிலும் குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்குரைஞரின் உதவியே!

ஒரு புகார் காவல்துறையின் கவனத்தை கவர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அடுத்த நடவடிக்கை கைது செய்வதாகவே அமையும். மிகச்சில நேரங்களில் குற்றவாளிகளும், மிகப்பல நேரங்களில் குற்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர்களும் கைது செய்யப்படுவர். சில அரிதான நேரங்களில் நாம் மேலே பார்த்ததுபோல புகார் தரும் நபர் மீதே வேறு புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நடவடிக்கையாக “கைது” இருக்கிறது. தற்போது, குறிப்பிட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, நடவடிக்கை இல்லாவிட்டால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது ஆணையாளருக்கு மனு அனுப்பி, அஞ்சல் ஒப்புதல் அட்டை பெற்று கொண்டு, அதன் பின்பும் நடவடிக்கை இல்லை என்றால், குற்றவியல் நீதிமன்றத்தை நாட வேண்டும். அங்கும் பலன் இல்லாவிட்டால், உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்று, குற்றவியல் சட்டத்தில் உள்ளதை, பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்லி உள்ளது. இன்னொரு கருத்தாக, உரிய காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று, உயர்நீதிமன்றத்தை அணுகினால், பத்து நாட்களுக்குள் மனுதாருக்கு, புகார் மீதான நடவடிக்கையை காவல் துறை தெரிவிக்க வேண்டும். ஒன்று, அவர் அளிக்கும் புகாரில், உண்மை இருந்தால், வழக்கு பதிய வேண்டும். அல்லது அவரது மனுவை close செய்து, அதை மனுதாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று, இன்னொரு தீர்ப்பும் உள்ளது. அதே போல, ஏழு வருடங்கள் சிறை தண்டனை, குற்றம் நிரூபிகபட்டால் என்று இருக்கும் குற்ற பிரிவுகளில் வழக்கு பதிந்தால், குற்றவாளியை ஏன் கைது செய்ய வேண்டும் என்று, காவல் அதிகாரி உரிய காரணம் தெரிவிக்க வேண்டும். குற்றவியல் நீதிபதியும், உரிய காரணம் எழுதி, remand செய்ய வேண்டும் என்று, மற்றொரு உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. நன்றி : மக்கள் சட்டம்

முதல் தகவல் அறிக்கை (F.I.R) - தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் !

முதல் தகவல் அறிக்கைப் பதிவு குற்றவழக்குப் புலனாய்வின் முதல் கட்டமாகும். முதல் தகவல் அறிக்கை (FIR - First Information Report) என்பது ஒரு காவல் நிலையத்தில் ஒரு குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்து மூலமான ஆவணமாகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 154 இது பற்றிக் கூறுகிறது. "ஒரு புலன்கொள் குற்றம் குறித்த முதல் தகவலைப் பெறும் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடும் சட்டக்கடப்பாடு கொண்டவர் ஆவார்".

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை படித்துப் பார்க்கும் காவல் நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா என்று பார்ப்பார். அவ்வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார். ஏனெனில் அனைத்து வகை குற்றங்களிலும் அவர் உடனடியாகவும், நேரடியாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதிகாரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பிணையில் விடத்தகுந்த குற்றமும், பிணையில் விடத்தகாத குற்றமும்

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே

(1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் (Bail able)மற்றும்

(2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் (Non - Bail able)ஆகும்.

பிணை (Bail) அல்லது ஜாமீன் என்பது கைது செய்யப்பட்ட நபரை வெளியில் விடுவதற்கான பெறப்படும் உத்தரவாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பையும் வலியையும் ஏற்படுத்திய நபரை – நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்கவும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலைத்துவிடாமல் இருப்பதற்காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட்டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவருக்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பிணையில் விடுவிக்கும் செயலை செய்வதில் சில நடைமுறைகள் உள்ளன. மிகச்சிறிய குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரியே பிணையில் விடுவிக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.

காவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப்பாக வழங்கப் பட்டுள்ளது.

சுமார் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க கூடிய குற்றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாகவும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுவது உண்டு. இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்டரீதியாக இதை அங்கீகரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவதே நல்லது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விடமுடியாத குற்றங்களை செய்வோரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியும். இவ்வாறு கைது செய்வதற்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் கைது ஆணை (வாரண்ட்) தேவையில்லை. எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல்துறை அதிகாரியே பிணையில் விடத்தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது.

அத்தகையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும். இந்த அம்சங்களை பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வருவது, காவல்துறை அதிகாரியின் முக்கியமான கடமையாகும். ஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது.

அந்த நடவடிக்கை எம்மாதிரியானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு முக்கிய இடம் வகிக்கிறது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பிணையில் விடமுடியாத குற்றமாக இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை சட்டரீதியாக விசாரணை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மிக எளிய தன்மை வாய்ந்ததாக இருந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அந்தப் புகாரை காவல் நிலையத்தில் இருக்கும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அப்பகுதிக்கான குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பின்னர், குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டால் மட்டுமே, அப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய முடியும். 
எனவே, புகாரை பெற்றுக்கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் எத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும் விதத்தில் புகார் எழுதப்பட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கை :

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப்பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக்கை” ஆகும். இந்த தகவல் எழுத்திலோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய்மொழித் தகவலாக இருந்தால் அதை எழுத்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப்படித்துக் காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கையின் சாராம்சங்கள் :

குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. குற்ற நிகழ்வு குறித்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம்.

ஒரு குற்ற வழக்கின் அடிப்படையே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம்.

ஒரு முதல் தகவல் அறிக்கை படிவத்தில், மாவட்டம், காவல் நிலையம், ஆண்டு, முதல் தகவல் அறிக்கையின் எண், நாள், குற்றவியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்றும் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ்வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்றத்தில் தொடர்புடையவர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும்.

பின்னர் குறிப்பிட்ட புகாரின் உள்ளடக்கத்தை அப்படியே பதிவு செய்து, குறிப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார். 
குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும்.

ஆனால் நடைமுறையில் மிகத்தீவிரமான கொலை, கொள்ளை, கலவரம் போன்ற குற்றநிகழ்வுகளைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் வரும் புகார்களை ஏற்க காவல் நிலைய அதிகாரிகள் தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும், குற்றம் நடந்த இடம் தங்கள் காவல் நிலையத்தின் ஆளுகைக்குள் வரவில்லை என்றும், எனவே குற்றம் நடந்த இடத்திற்கு தொடர்புடைய காவல்நிலையத்தில் புகாரை அளிக்குமாறு கூறி பொதுமக்கள் அலைக்கழிப்படுவதாகவும் பொதுவான புகார்கள் காவல்துறை மீது உண்டு.

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் புகாரில் இயன்றவரை முழுமையான, உண்மையான தகவல்களை தருவது நல்லது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும். 
https://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-fir/788162451214363

நன்றி :
நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்

நிலுவையிலுள்ள வழக்குகள் நிலையறிய


வழக்கறிஞர் உதவியில்லாமல் நிலுவையிலுள்ள வழக்குகள் நிலையறிய என்ன செய்ய வேண்டும்?

இன்றைய சூழ்நிலையில் நமது வழக்குகளை நாமே வாதாடி நீதி பெற வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கின்றது.
இதற்கா்க LAW FOUNDATION போன்ற அமைப்புகள் வழக்கறிஞர் உதவி இல்லாமல் எப்படி நீதிமன்றத்தில் வாதாட வேண்டும்? என்ற பயிற்சி வகுப்புக்ளை பல ஊர்களுக்கு நேரில் சென்று “இலவச சட்ட வகுப்பு முகாம்” களை நடத்தி வருகின்றது.
அது போன்ற பயிற்சிகளை பெறுகின்றவர்களுக்கு உதவும் வகையில் இந்தப் பதிவு வெளியிடப் படுகின்றது.
வழக்கறிஞர் உதவி இல்லாமல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலையை அறிந்து கொள்ள நீதிமன்றம் செல்ல வேண்டிது இல்லை.
இதற்கென ஒரு இணையதளத்தை அரசு உருவாக்கியுள்ளது
வழக்கறிஞர் உதவி இல்லாமல் நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ள வழக்கின் நிலையை அறியhttp://ecourts.gov.in/services/ செல்ல வேண்டுகிறேன்.
நன்றி : 
வழக்கறிஞர் திரு. நல்வினை விஸ்வராஜு அவர்கள்

சீக்கிரமாக மரம் வளர்க்க


சீக்கிரமாக மரம் வளர்க்க என்ன செய்ய வேண்டும்?

புதிதாய் நிலம் வாங்கி வீடு கட்டுபவர்கள் அனைவருக்கும் வீட்டைச் சுற்றி மரம் வளர்க்க ஆசைதான். ஆனால் சிறிய மரக் கன்றுகளை நட்டு அதனைப் பராமரித்து வளர்க்கும்போது உள்ள சிரமங்கள்தான் மரம் வளர்க்கும் ஆசையையே போக்கி விடுகிறது. ஆடு மாடுகள் மரக் கன்றுகளை கடிக்காமல் வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும். ஆடு மாடு வராத இடமாயிருந்தால் காற்றில் வளைந்து ஒடிந்துவிடாமல் கம்புகளை நட்டு மரக்கன்றுகளைப் பாதுகாக்க வேண்டும். இப்படிப் பல வேலைகள் உள்ளதாலேயே பலருக்கும் மரம் வளர்ப்பு மீது இனம் புரியாத வெறுப்பு ஏற்படுகிறது.

மரம் வெட்டி நடுதல்
*******************************
இந்தக் கஷ்டம் எதுவும் இல்லாமல் விரைவில் மரம் வளர்க்கக் கூடிய எளிதான முறை மரத்தை வெட்டி நடுதல் ஆகும். வீட்டின் முன்பும் வீட்டைச் சுற்றியும் பெரும்பாலும் வேப்பமரம் வளர்ப்பதையே அதிகம் விரும்புவார்கள். வேப்பமரம் குளுமையான காற்றைத் தருவதோடு மருத்துவ குணமும் உள்ளதால் எல்லோராலும் பெரிதும் விரும்பப் படுகிறது. வெட்டி வைத்தால் நன்கு வளரக்கூடிய மரங்களுள் வேப்பமரம் முதன்மையானது.

மரம் நடும் காலம்
***************************
வேப்பமரம் எல்லா காலங்களிலும் நன்கு வளரும் மரம் என்றாலும் வெட்டி மரம் நடுவதற்கு மிகவும் ஏற்ற காலம் மழைக் காலத்திற்கு முந்தைய மாதமாகும். அதாவது ஜுலை ஆகஸ்ட் மாதங்களில் வெட்டி நடுவது சிறந்ததாகும். ஏனெனில் வெட்டி நட்ட மரம் வேர் விட ஆரம்பிக்கும் போது செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மழைக் காலம் தொடங்குவதால் இதமான சூழ்நிலை நிலவும். இந்தச் சூழல் மரம் நன்கு வளர உதவும்.

விவசாயப் பகுதிகளிலும் தோட்டங்களிலும் வேப்பமரங்கள் தானாய் அதிகம் வளரும் மரமாகும். இம்மரங்களில் இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டு வரையுள்ள மரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நேராக ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளர்ந்துள்ள மரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மரங்களை உடனடியாக வெட்டி எடுக்காமல் முதலில் கிளைகளை வெட்டிவிட வேண்டும்.

பின்னர் மரத்தைச் சுற்றி குழியைத் தோண்டி ஆணி வேர் தவிர மற்ற வேர்களை அரிவாளால் வெட்டி விட்ட பின் மண்ணைத் தள்ளி மூடி விட வேண்டும். ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ கழித்து மீண்டும் மண்ணைத் தோண்டி ஆணி வேரை வெட்டி எடுத்து மரத்தை உடனடியாக நட வேண்டும். ஏற்கெனவே வெட்டிவிட்ட இடங்களில் புதிய வேர்கள் வளர ஆரம்பித்திருக்கும். கிளைகளும் துளிர் விட்டிருக்கும். இதனால் மரங்கள் வைத்த உடனேயே முளைக்க ஆரம்பித்துவிடும்.

மரம் நடும் இடத்தில் செய்ய வேண்டியவை
****************************************************************
மரம் நடும் இடத்தில் மூன்று அடி ஆழக் குழியை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தோண்டி வைத்திருக்க வேண்டும். மரம் நடும் நாளில் குழிக்குள் முதலில் மாட்டுச் சாணம் போன்ற இயற்கை உரங்களைப் போட வேண்டும். பின்னர் களிமண் அல்லது செம்மண் கொஞ்சம் போட்டு நன்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன் பின் மரத்தை நட்டு குழியை மண் போட்டு மூட வேண்டும். மூடிய மண்ணை நன்கு இறுக காலால் மிதித்து விட வேண்டும். மண்ணை நன்கு இறுக மிதிப்பதால் மரம் எந்த விதத்திலும் ஆடாது. இப்படி நடும் மரங்களில நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது சதவீத மரங்கள் முளைத்துவிடும்.

மரத்தின் விலை
****************************
மிகப் பெரிய வேப்பமரத்தை வெட்டி நட்டால்கூட முளைக்கும். ஆனால் உறுதியாய்ச் சொல்ல முடியாது. இரண்டு முதல் ஐந்து வருட வயதுள்ள வேப்ப மரங்களைத் தேர்ந்தெடுத்து வெட்டி நடும்போது அம்மரங்கள் பட்டுப் போகாமல் நிச்சயம் வளரும். தோட்டங்களில் மொத்தமாக மரங்களை வாங்க முடியும்.

வேப்பமரம் ஒன்று 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கிடைக்கின்றன. வீட்டு வேலை ஆரம்பிக்கும் போது மரத்தை வெட்டி நட்டால் வேலை முடிவதற்குள் மரங்கள் நிழல் தரும் அளவிற்கு வளர்ந்துவிடும். தண்டு தடிமனான மரங்களை நடுவதால் ஆடு மாடு கடிக்கவோ காற்றில் முறிந்து விழவோ வாய்ப்பே இல்லை.

கிராமங்களில் அதிகம் நடைமுறையில் உள்ள இம்முறையை நகரங்களிலும் பயன்படுத்தி உடனடிப் பலன் பெறலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 05.06.2015

Friday, July 22, 2016

உறுத்துக்கட்டளை

உறுத்துக்கட்டளை - என்ன செய்ய வேண்டும்?
Injunction Order என்பதை உறுத்துக் கட்டளை என்று அழைக்கிறோம். உறுத்துக்கட்டளை என்றால் ஒருசில செயல்களை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் அல்லது அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும்.
உறுத்துக்கட்டளையின் வகைகள் 
1) இடைக்கால (தற்காலிக) உறுத்துக் கட்டளை  (Interim Injunction  or  Temporary Injunction)
ஒரு வழக்கில் மறு உத்தரவு வரும்வரை நீதிமன்றம் இடும் கட்டளைக்கு இடைக்கால உறுத்துக்கட்டளை என்று பெயர்.
2) செயலுறுத்து கட்டளை  (Mandatory Injunction)
ஒரு செயலை ஒருவர் செய்ய வேண்டும் என்று  நீதிமன்றம் இடும் கட்டளைக்கு செயலுறுத்துக் கட்டளை என்று பெயர்.
3) நிலைக்கால உறுத்துக்கட்டளை    (Perpetual Injunction)
நிலைக் கால உறுத்துக் கட்டளை என்பது நிரந்தர உறுத்துக்கட்டளை ஆகும்.. சொத்து சம்பந்தமான பிரச்சனையில் இந்தக் கட்டளைக்கான தீர்ப்பாணையை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் வழங்கினால்தான், அதில் குறிக்கப்பட்ட சொத்து அதில் குறிப்பிடப்பட்டவருக்குச் சொந்தமானது என்று அர்த்தம்.
4) தடை உறுத்துக்கட்டளை     (Prohibitory Injunction) 
ஒரு செயலை ஒருவர் செய்யக்கூடாது என்று  நீதிமன்றம் இடும் கட்டளைக்கு தடையுறுத்துக் கட்டளை என்று பெயர்.
யாரெல்லாம் உறுத்துக் கட்டளை பெற முடியும்?
உறுத்துக் கட்டளையினை ஒருவர் நீதிமன்றத்தில் பெறுவதற்கு அவர் தொடுத்த அல்லது அவர்மீது வேறு எவராவது தொடுத்த  வழக்கு ஒன்று நிலுவையில் இருக்க வேண்டும். 
எந்த சூ்ழ்நிலையில் உறுத்துக்கட்டளை பெறமுடியாது?
⧭ வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தாலோ, அல்லது அந்த வழக்கு முடிவடைந்து விட்டாலோ உறுத்துக் கட்டளை பெறமுடியாது.
⧭ உறுத்துக்கட்டளையினை வழங்குவதற்கு நீதிமன்றம் ஒன்றுக்கு அதிகாரம் இல்லாத போது அந்த வழக்கில் உறுத்துக்கட்டளை வழங்கக்கூடாது.
⧭ பாகப்பிரிவினை சம்பந்தமான வழக்கில் உறுத்துக் கட்டளை பெற முடியாது.
⧭ ஒரு நிர்வாகமானது தன்னுடைய வேலையாளுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைக்கு எதிராக உறுத்துக் கட்டளை பெறமுடியாது.
⧭ வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல்  செய்யாமல் இருக்கும்போது உறுத்துக்கட்டளை பெறமுடியாது.
நடைமுறைக்கு எப்போது வரும்?
எப்போது எதிர்தரப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டதோ அப்போது முதலே உறுத்துக்கட்டளை நடைமுறைக்கு வரும்.
எப்போது முடிவுக்கு வரும்?
ஒரு வழக்கில் உறுத்துக்கட்டளை வழங்கப்பட்டு இருந்தால் அந்த வழக்கு முடிந்தவுடன் உறுத்துக்கட்டளையும் முடிவுக்கு வந்துவிடும்.
இதில் உள்ள சிக்கல்கள் 
வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அந்த வழக்கில் உறுத்துக்கட்டளை பெற்றவர் முன்னிலை ஆக தவறிய காரணத்தால் வழக்கு தள்ளுபடி ஆகியிருந்தால், பெறப்பட்டிருந்த உறுத்துக் கட்டளையும் தள்ளுபடி ஆகிவிடும். அந்த வழக்கு மீண்டும் கோப்பில் எடுக்கப்பட்டால் உறுத்துக்கட்டளையையும் தானாக கோப்பில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
உறுத்துக்கட்டளையை ஒருவர் மீறுவது தண்டணைக்குரிய குற்றமாகும்.
எதிர்தரப்பினர் உறுத்துக்கட்டளையை மீறுகிறார்கள் என்பதை, தக்க ஆதாரத்துடன் உறுத்துக் கட்டளையை பெற்றவர்தான் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.
----------------------புலமை வெங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூலில் இருந்து----------

தடையாணை & உறுத்துக்கட்டளை


தடையாணை & உறுத்துக்கட்டளை என்ன செய்ய வேண்டும்?
Stay Order என்பதை தமிழில் தடையாணை என்று அழைக்கிறோம்.
தடையாணைகள் என்றால், ஒரு அதிகார அமைப்பையோ அல்லது கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவினை செயல்படுத்தக் கூடாது என்பதற்கு மேலமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தடை செய்து பிறப்பிக்கின்ற ஒரு உத்தரவாகும்.
Injunction Order என்பதை உறுத்துக் கட்டளை என்று அழைக்கிறோம்.
உறுத்துக்கட்டளை என்றால் ஒருசில செயல்களை ஒரு
குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்று அந்த நபர் அல்லது
அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும்.

Thursday, July 21, 2016

பச்சை நிற குடும்ப அட்டை


பச்சை நிற குடும்ப அட்டை பெற என்ன செய்ய வேண்டும்?
அரசு அதிகாரிகளின் கவனக் குறைவாலும், நமது அலட்சியத்தாலும் சாதாரணக் கூலி வேலை செய்யும் பாமர மக்களுக்குக் கூட சீனி அட்டை என்று செல்லமாக கூறப்படுகின்ற “வெள்ளை நிற குடும்ப அட்டை” வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டைக்கு அரிசி கிடைக்காது. மேலும் அரசு இலவசமாக வழங்குகின்ற சில சலுகைகளும் கிடைக்காது. 

இதனால் சிரமப்படுகின்ற பல மக்கள் பச்சை நிற குடும்ப அட்டை பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கா்ன வழிமுறைகள் என்ன என்று தேடித் தவிக்கிறார்கள்.

அவர்களுக்கான பதிவு இது.

மேற்கண்டவாறு பச்சை நிற குடும்ப அட்டைக்கு மாற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்புனர்
             -----------------------------
             -------------------------------
             ------------------------------
பெறுநர்
             வட்ட வழங்கல் அலுவலர் அவர்கள்,
             வட்டாட்சியர் அலுவலகம்,
             ----------------------- 
ஐயா
             பொருள்: தவறுதலாக தரப்பட்ட வெள்ளை நிற குடும்ப அட்டையை ஒப்படைத்து, பச்சைநிற குடும்ப அட்டை பெறுவது சம்பந்தமாக.
           
             நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது குடும்பத்தில் நான் எனது மனைவி, எனது குழந்தைகள் இரண்டு பேர் ஆக மொத்தம் நான்கு பேர்கள் இருக்கின்றோம். எனது குடும்பத்தில் நான் மட்டுமே கூலிவேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நாங்கள் நான்கு பேர்களும் ஜீவனம் செய்து வருகின்றோம். எனது வருட வருமானம் 48,000 ரூபாய் ஆகும். அதற்கான வருமானச் சான்றிதழின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்.

            எனது குடும்ப அட்டை எண்: -------------------ஆகும். தவறுதலாக எனக்கு வெள்ளைநிற குடும்ப அட்டை தங்கள் துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் எனது குடும்பம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. 
எங்கள் குடும்பத்தின் ஜீவாதார பிரச்சணை தீர எனக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளை நிற குடும்ப அட்டையை பெற்றுக் கொண்டு பச்சை நிற அட்டையை வழங்குமாறு தங்களை பணிவுடன் வேண்டுகிறேன்.
இடம் :--------------------             தங்கள் உண்மையுள்ள
நாள்: --------------------

இணைப்பு : 1) குடும்ப அட்டை ஒருஜினல்
                      2) வருமான சான்றிதழ் நகல்.
                      3) எனது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2.

என்று விண்ணப்பம் எ்ழுதி தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் (தாலுகா) அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் அவர்களிடம் கொடுக்க வேண்டும்.
இதை பெற்றுக் கொண்டு ஒரு ஒப்புதல் அட்டையை அவர்கள் தருவார்கள். அதில் என்று புதிய அட்டை வழங்கப்படும் என்று நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நாளில் சென்று புதிய அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

Monday, July 18, 2016

ரேசன்கார்டு குறித்த 12 யோசனைகள்


ரேசன்கார்டு குறித்த 12 யோசனைகள் - என்ன செய்ய வேண்டும்?

குடும்ப அட்டை... இனி குழப்பம் வேண்டாம்!

ஒரு செயலில் இறங்குவதற்கு முன், அதைப் பற்றி தெளிவுற அறிந்துகொள்வது அதை சரியாக செய்து முடிப்பதை  சுலபமாக்கும். வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களை அதிக சிரமமின்றி கடக்க உதவிக்கரம் நீட்டும் பகுதி இது..!

குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை... என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ...

1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்... இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.

2.வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள், பெற்றோரின் குடும்ப அட்டையைப் பெற முடியாத சூழலில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டை எண்ணையும், திருமணப் பதிவு சான்றிதழ் மற்றும் இடது பக்கம் சொல்லி உள்ளவற்றில் ஏதேனும் ஓர் அடையாள அட்டையையும் கொடுத்து மனு தாக்கல் செய்யலாம்.

3.குடும்ப அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது மிகவும் பழுதடைந்திருந்தாலோ, வசிக்கும் ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் (பழைய குடும்ப அட்டையின் நகல்/எண் அல்லது பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகளுடன்) மனு தாக்கல் செய்தால், இரண்டு மாதங்களில் புதிய குடும்ப அட்டை கிடைக்கப் பெறலாம்.

4.புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க, குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து அதன் பிறப்புச் சான்றிதழை குடும்ப அட்டையுடன் இணைத்துக் கொடுத்தால் போதும்.

5.குடும்ப அட்டையில் இருந்து இறந்தவர் பெயரை நீக்கம் செய்ய, இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வாங்கியதும் மூன்று நாட்களுக்குள் குடும்ப அட்டையுடன் இணைத்து வட்டாட்சியர் அலுவலரிடம் கொடுத்து நீக்கம் செய்துகொள்ளலாம்.

6.குடும்ப அட்டைக்கான மனு விண்ணப்பிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. மேலும் குடும்ப அட்டை பெற செலுத்த வேண்டிய தொகை, ரூபாய் 5 மட்டுமே. இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால்,
http://www/consumer.tn.gov.in/contact.htm
என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.

7.குடும்ப அட்டை இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. பச்சை வண்ண அட்டையில் ரேஷனில் வழங்கும் அனைத்துப் பொருட்களையும் பெற முடியும், வெள்ளை வண்ண அட்டையில் அரிசி தவிர்த்து பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்றவற்றை பெறலாம். அடையாளச் சான்றாக மட்டும் குடும்ப அட்டை இருந்தால் போதும் என்பவர்களுக்கும் வெள்ளை நிற அட்டையே வழங்கப்படுகிறது.

8.ரேஷனில் எந்தப் பொருளும் வேண்டாம், அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வில் எடுக்கப்பட்ட 100 ரூபாய்க்கான டிடி-யுடன் பழைய குடும்ப அட்டையையும் ஒப்படைத்துவிட்டால்... ஒரு மாதத்தில் ‘என் கார்டு’ என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற அட்டை கிடைத்துவிடும்.

9.புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்த பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர் நேரடியாக வந்து வீடு, சமையல் அறை போன்றவற்றை மேற்பார்வையிடுவார் (தனியாக சமைக்கிறீர்களா, சமையல் எரிவாயுவை பயன்படுத்துகிறீர்களா போன்ற பரிசோதனைகள்). அப்படி வருபவர்களை அடையாள அட்டையைப் பார்த்து உறுதிசெய்த பிறகே அனுமதிக்கவும்.

10.முகவரி மாற்றத்துக்கு வீட்டு ரசீதுகளை (வாடகை வீடு என்றால் வீட்டு உரிமையாளரிடம் கேட்டுப் பெறலாம்) குடும்ப அட்டையுடன் இணைத்து புதிதாக குடியேறிய பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

11.குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கைக்கும், இடைத்தரகர்கள் தவிர்த்து உரிய அலுவலர்களை நேரில் அணுகுவதே சிறந்தது.

12.‘இதுவரை என் குடும்பத்துக்கு குடும்ப அட்டையே இல்லை’ அல்லது ‘நான் பெற்றோர் இன்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்’ என்பது போன்ற காரணங்களுடன் இருப்பவர்கள், வெள்ளைத்தாளில் மனு எழுதி ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்கவும். இரண்டு மாதங்களில் குடும்ப அட்டை கிடைக்கும்.

 சு.சூர்யா கோமதி

நன்றி : அவள்விகடன் - 03.11.2015

பொய் ஆவணம் தயாரித்தல்


பொய் ஆவணம் தயாரித்தல் - என்ன செய்ய வேண்டும்?
ஒருவர், அவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில் கையெழுத்தைப் போடாமல், அவரது பெயரை அவரே எழுதி்னால்கூட, அவர் பொய் ஆவணம் புனைந்தவர் ஆகிறார்.
உதாரணம் - 1
ராமசாமிக்கு வயதாகிவிட்டதால், பிள்ளைகளுக்கு தனது சொத்துக்களை பிரித்துக் கொடுக்க எண்ணி, இருக்கும் சொத்துக்கள் தன் மகன் முருகனுக்கும், தன் மகள் கோமதிக்கும் சரிசமமாக சேரவேண்டும் என்று உயில் எழுதுகிறார். அந்த உயிலில் இருந்த தனது சகோதரியின் பெயரை முருகன் அகற்றி விடுகிறார். முருகன் பொய் ஆவணம் தயாரித்தவர் ஆகிறார்.
உதாரணம் - 2
கணேஷ் என்பவரால் கையெழுத்து போடப்பட்டு கொணர்பவர் பெறக்கூடிய (Bearer cheque) தொகை நிரப்பப்படாத காசோலை ஒன்றை மூர்த்தி என்பவர் பாதையில் கண்டெடுக்கிறார். அதில் 10,000 ரூபாய் என்ற தொகையை மூர்த்தி நிரப்புகிறார். மூர்த்தி பொய் ஆவணம் புனைந்தவர் ஆகிறார்.
தண்டணை என்ன?
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 465ன்படி, பொய் ஆவணம் புனையும் எவரும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப் படுவார்கள்.

******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Saturday, July 16, 2016

நீதிமன்ற விசாரணை


நீதிமன்ற விசாரணை - என்ன செய்ய வேண்டும்?

இந்திய சாட்சிய சட்டத்தின் அடிப்படையில்தான் நமது நாட்டு நீதிமன்றங்கள் தனது தீர்ப்புகளை வழங்கி வருகின்றன.

உரிமையியல் நீதிமன்றத்தில், ஒரு வழக்கை தாக்கல் செய்பவர்கள் வாய்மொழிச் சான்றுகள் மற்றும் ஆவணச் சான்றுகள் ஆகியவற்றை சரியான முறையில் அளிக்கா விட்டால், வழக்கின் முடிவு அவர்களுக்கு எதிராகவே அமைந்துவிடும்.

உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற குற்றவியல் வழக்குகளில் செய்யப்படுகின்ற பொதுவான   விசாரணையைப் பற்றி நாம் இங்கு காணலாம்.

விசாரணைகள்  

1) முதல் விசாரணை 

2) குறுக்கு விசாரணை

3) மறு விசாரணை

என மூன்று விதமாக செய்யப்படுகிறது. 

முதல் விசாரணை என்றால் என்ன?

வழக்கு தொடுத்தவரை  அல்லது அவரது சாட்சியை அவரது வழக்கறிஞர் அழைத்து  விசாரிக்கப்படுவது முதல் விசாரணை எனப்படுகிறது.

குறுக்கு விசாரணை என்றால் என்ன?

வழக்குத் தொடுத்தவரை அல்லது அவரது சாட்சியை எதிர்தரப்பு வழக்கறிஞர் அழைத்து விசாரிக்கப்படுவது குறுக்கு விசாரணை எனப்படுகிறது.

இதனை செய்வது எதிர்தரப்பு வழக்கறிஞரின் விருப்பத்தைப் பொறுத்தது ஆகும்.

மறு விசாரணை என்றால் என்ன?

வழக்கு தொடுத்தவரை  அல்லது அவரது சாட்சியை அவரது வழக்கறிஞர் மறுபடியும் அழைத்து  விசாரிக்கப்படுவது மறு விசாரணை எனப்படுகிறது.

இதனை செய்வது வழக்குத் தொடுத்தவரின் வழக்கறிஞரின் விருப்பத்தைப் பொறுத்தது ஆகும்.

விடை பொதி வினா

 சாட்சியை கேள்விகள் கேட்கும் வழக்கறிஞர் தான் பெற விரும்புகின்ற அல்லது எதிர்பார்க்கின்ற விடையை குறிப்பாக உணர்த்தும் எந்த ஒரு வினாவும் விடை பொதி வினா என்று அழைக்கப்படுகிறது.

உதாரணமாக,

நீங்கள்தான் குணசேகரனா?

சம்பவத்தன்று நீங்கள் சென்னையில்தான் இருந்தீர்களா?

உங்களிடம் மணிகண்டன் 2 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியிருந்தாரா?

மேற்கண்ட கேள்விகள் விடை பொதி வினாக்கள் ஆகும்.  

குறுக்கு விசாரணையில் மட்டும் இதனை கேட்க நீதிபதியின் அனுமதி தேவை இல்லை.

விடை பொதி வி்னாக்கள் முதல் விசாரணையிலோ அல்லது மறு விசாரணையிலோ எதிர்தரப்பினரால் ஆட்சேபிக்கப்பட்டால் நீதிபதியின் அனுமதியின்றி அவற்றை கேட்கக் கூடாது.

மறுவிசாரணை செய்யப்பட்ட பின்பு, விருப்பப்பட்டால்  வழக்குத் தொடுத்தவரை அல்லது அவரது சாட்சியை எதிர்தரப்பு வழக்கறிஞர் நீதிபதியின் அனுமதியோடு மீண்டும் குறுக்கு விசாரணை செய்யலாம்.

 -புலமை வெங்கடாச்சலம் அவர்கள் எழுதிய இந்திய சாட்சியச் சட்டம் என்ற நூலில் படித்தது-
*************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி************