குற்றவியல் திருத்தச் சட்டம், 2013 - என்ன செய்ய வேண்டும்?
உலக நாடுகளின் முன் இந்தியாவை வெட்கி தலை குனிய வைத்த அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் நடந்தேறிய நாள் 2012 டிசம்பர் 16. இந்தியத் தலைநகரான புதுடெல்லி யில் மருத்துவ மாணவி ஒருவர் தன் ஆண் நண்பருடன் இரவு வேளையில் திரைப்படம் பார்த்துவிட்டு வருகின்ற போது கயவர்கள் சிலரால் வஞ்சகமாக ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு... அதன் பிறகு இருவருக்கும் நடந்த விஷயங்கள் உலகம் அறிந்த ஒரு செய்தி.
பெண்ணை போற்றுகிறோம் என்று பறைசாற்றும் இந்த தேசத்தில் பெண்ணினத்துக்கு ஏற்பட்ட மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி, அதனால் ஏற்பட்ட உயிர்பலி - ‘நிர்பயா’ என்று ஊடகங்களால் பெயரிடப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட சம்பவம் - குற்றவியல் சட்டங்களின் திருத்தத்துக்கு வழிவகை செய்தது.
நிர்பயா வழக்குக்கு முன்னரும் பின்னரும் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கும் அமில வீச்சுக்கும் பலியாகி தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். இதோடு, உடலளவிலும் மனதளவிலும் காயப்பட்டவர்கள் பலர் உண்டு. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பாலியல் வன்முறைகளும் தொடர் சம்பவமாகிவிட்ட நிலையில் நீதியரசர் வர்மா கமிஷனின் பரிந்துரையின் பேரில் திருத்தம் செய்யப்பட்டு, 2013 பிப்ரவரி 3 முதல் அமலுக்கு வந்திருக்கும் குற்றவியல் சட்டத்திலிருக்கும் சில முக்கிய திருத்தங்கள் என்னவெனப் பார்ப்போம்.
அமில வீச்சும் அதற்கான தண்டனையும்
அமில வீச்சினால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு இந்த சட்ட திருத்தம் வரும்வரை ஒரு குற்றமாக இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. புதிய திருத்தம் பிரிவு 326A யின் படி எவர் ஒருவர் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ அமில வீச்சினாலோ, அமிலத்தை புகட்டியதினாலோ, உடலுக்கோ அல்லது உடலின் ஒரு சில பாகங்களுக்கோ ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தால் அவர்களுக்குத் தண்டனையாக 10 ஆண்டுகள் முதல் வாழ்நாள் சிறையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவச் செலவுக்காகவும் அவரின் நலனுக்காகவும் நஷ்டஈடாக கொடுக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
புதிய திருத்தம் 326 B யின் படி
எவர் ஒருவர் மற்றொருவரின் உடலுக்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ பாதிப்பு ஏற்படுத்தும் எண்ணத்தில் அவர் மீது அமிலத்தை வீசவோ, அமிலத்தை புகட்டவோ முயற்சி செய்யும் பட்சத்தில் அவருக்கு 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். அமிலம் என்பது ஒருவரின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோ, உடல் பாகத்தை அரித்தெடுப்பதோ, மாறாத வடுவை ஏற்படுத்தும் ஒரு திரவமே ஆகும். மத்திய, மாநில அரசாங்கங்கள் இந்த கொடிய அமிலத்தை எளிதாக விற்பனை செய்வதைத் தடை செய்யும் முயற்சியை வெறும் பெயரளவுக்கு இல்லாமல் செவ்வனே செய்ய வேண்டிய நேரம் இது.
இந்திய தண்டனைச் சட்டம் 354வது பிரிவின்படி யார் ஒருவர் ஒரு பெண்ணின் பெண்மையை நிலைகுலைக்கும் எண்ணத்துடனோ, அவமானப்படுத்தும் தவறான எண்ணத்துடனோ, தங்களுடைய பலம் கொண்டு செயலாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்தப் பிரிவுடன் புதிய பிரிவுகளாக சேர்க்கப்பட்டுள்ளவை
354 A
பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் அதற்கான தண்டனை.
(i) உடல் ரீதியான தொடுதல், உரசுதல் அல்லது தவறான எண்ணத்துடன் பாலியல் ரீதியாக ஒரு பெண்ணின் உடலைக் கையாளுதல்.
(ii) தவறான எண்ணத்துடன் உடல்
இச்சையை பூர்த்தி செய்ய அழைப்பது அல்லது கட்டாயப்படுத்துவது.
(iii) பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக
ஆபாசமான பாலியல்களை காட்சிக்கு வைத்தல்.
(iv) ஆபாசமான கொச்சை வார்த்தைகளால் பெண்ணை கேலி செய்வது.
இவற்றை பாலியல் வன்முறையாக இந்தப் பிரிவு குறிப்பிடுகிறது. முதல் மூன்று உட்பிரிவுகளுக்கு
3 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். நான்காவது உட்பிரிவுக்கு ஒரு ஆண்டு சிறைத்
தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்.
354 B
ஒரு பெண்ணின் மீது தவறான எண்ணத்துடன் பலம் கொண்டு அவருடைய உடையை களைந்து கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்குவது குற்றமாகக் கருதப்படுகிறது. அதற்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும் (வட இந்தியாவில் பெரும்பாலும் இவ்வாறான குற்றங்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்கள் மீது அவர்களை அவமானப்படுத்தவும், அவர்களை தன் சொற்படி நடக்கச் செய்யவும் நடத்தப்படுகிறது).
354 C
ஒரு ஆண், ஒரு பெண் அந்தரங்கமாக இருக்கும்போது தவறான எண்ணத்துடன் அவரைப் பார்ப்பது, அந்த அந்தரங்க நிலையை படம் பிடிப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாக சட்டம் வரையறைத்துள்ளது (ஒரு பெண் உடை மாற்றும் போதோ, கழிப்பறை, குளியலறையை பயன்படுத்தும்போதா நிர்வாணமாகவோ, வெறும் உள்ளாடைகளுடன் இருக்கும் போது பார்ப்பதோ, படமெடுப்பதோ) முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு ஒன்றிலிருந்து 3 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும், தொடர்ந்து இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
354 D
ஒரு ஆண், ஒரு பெண்ணை தொடர்புகொள்ள முயற்சித்து அவரை பின்தொடர்தல், இவரின் இந்த செய்கையை அந்தப் பெண் எதிர்த்தும் தொடர்வது, மேலும் மின்னஞ்சல் போன்ற விஞ்ஞான சாதனத்தின் மூலம் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ய முயற்சி செய்தல் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுகின்றன. முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும், தொடர்ந்து இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் 5 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். இதற்கு விதிவிலக்காக எந்த ஒரு குற்றச்செயலை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் அல்லது சட்டத்தின் உதவியுடன் ஒருவர் ஒரு பெண்ணை பின்தொடர்வது குற்றமாக கருதப்படமாட்டாது.
370
370 இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வியாபார நோக்கில் ஆட்கடத்தல் செய்வது குற்றமாகக் கருதப்படுகிறது. அதனை இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் சற்று விரிவுபடுத்தியுள்ளார்கள். எவர் ஒருவர் மற்றொரு நபரையோ அல்லது நபர்களையோ தவறாக பயன்படுத்துவதற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ப்பது, யார் கண்ணிலும் தெரியாமல் மறைத்து வைப்பது, தவறான நோக்கில் வேறொருவரிடமிருந்து தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, இவற்றை மிரட்டல் மூலமாகவோ, கட்டாயத்தின் மூலமாகவோ, ஆட்கடத்தலின் மூலமாகவோ, தன்னுடைய அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து தன்வசப்படுத்துவதோ, வியாபார நோக்கில் செய்யப்படும் ஆட்கடத்தல் குற்றமாக கருதப்படுகிறது.
பெரும்பாலும் இந்த ஆட்கடத்தல் குற்றம் பாலியல் தொழிலுக்காகவோ, கடுமையான வேலை செய்ய கொத்தடிமைகளாக பயன்படுத்துவதற்காகவோ, உடல் உறுப்புகளை திருடுவதற்காகவோ நடைபெறுகிறது. கடத்தப்படும் நபர் தன்னுடைய ஒப்புதலை கொடுத்தாரா என்பதை சட்டம் பார்க்காது.
யாரொருவர் வியாபாரத்துக்காக ஆட்கடத்தல் குற்றம் செய்கிறாரோ, அவருக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். யாரொருவர், ஒருவருக்கு மேற்பட்ட நபர்களை வியாபார ரீதியான நோக்கத்தில் ஆட்கடத்தல் செய்யும் பட்சத்தில் அந்தக் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
யாரொருவர் வயது வராத சிறுவனையோ, சிறுமியையோ வியாபார ரீதியாக ஆட்கடத்தல் குற்றம் செய்ததற்கு 10 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். யாரொருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்களை வியாபார ரீதியாக ஆட்கடத்தல் குற்றம் செய்யும் பட்சத்தில் அவருக்கு 14 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
யாரொருவர் ஒரு சிறுவனை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வியாபார ரீதியாக ஆட்கடத்தல் செய்கிறாரோ அவருக்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஒரு காவல் துறை அதிகாரியோ, பொது அலுவலரோ வியாபார ரீதியாக ஆட்கடத்தலில் ஈடுபடும்போது அவருக்கு தன் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பதற்கான தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
பிரிவு 370 A
யாரொருவர் பாலியல் ரீதியாக பயன்படுத்துவதற்காக சிறார்கள் மீது ஆட்கடத்தல் குற்றம் செய்கிறாரோ அவர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். யாரொருவர் ஆட்கடத்தல் மூலம் தாங்கள் வசப்படுத்திய ஒரு நபரை பாலியல் ரீதியாக பயன்படுத்தினால் அதற்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
பாலியல் வன்புணர்ச்சி
பிரிவு 375
-ஒரு ஆண் மகன் தவறான நோக்கில் ஒரு பெண்ணின் மீது பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு அவருடைய அந்தரங்க பாகங்களை தொடுவது, காயப்படுத்துவது அல்லது வேறு ஏதேனும் முறையில் அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுப்பது, அதுவும் அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக அவளின் அனுமதியின்றி, மேலும் அவளிடம் அனுமதி பெற்றாலும் அந்த அனுமதி அவள் பிரியப்பட்ட ஒரு நபரை பணயம் வைத்து அவளை பயமுறுத்தி பெற்ற அனுமதியாக இருப்பினும், மேலும் கணவரல்லாத ஒரு நபர் கணவர் என்ற போர்வையில் உறவு வைத்துக்கொள்வதும், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அல்லது நடக்கும் செய்கையை புரிந்துகொள்ள இயலாத நிலையிலிருக்கும் ஒரு பெண் அல்லது 18 வயதுக்குட்பட்ட ஒரு பெண் ஆகியோருடன் வைத்துக் கொண்டிருக்கும் பாலியல் உறவுகள் பாலியல் வன்புணர்ச்சி குற்றத்துக்குச் சமம்.
பிரிவு 376ன் கீழ் இதற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத் தண்டனை உண்டு.
ஒரு காவல் துறை அதிகாரி தான் பணிபுரியும் காவல் நிலையத்திலேயோ அல்லது அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண்ணிடமோ பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...
ஒரு பொது அலுவலர் தன்னுடைய பாதுகாப்பில் இருக்கும் ஒரு பெண்ணிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...
ராணுவத்தில் பணிபுரிபவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் ஒரு பெண்ணுடன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...
சிறைக் காவலர் அல்லது சிறை அதிகாரி அல்லது பெண்களும் குழந்தைகளும் தங்கும் பாதுகாப்பு இல்லங்களின் பொறுப்பாளர் மற்றும்
விடுதியிலிருப்பவர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...
மருத்துவமனையின் பராமரிப்பில் இருப்பவர் அல்லது அதில் பணிபுரிபவர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...
ஒரு பெண்ணின் உறவினரோ, காப்பாளரோ, ஆசிரியரோ அவர் பாதுகாப்புக்கு நம்பிக்கையானவரோ பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...
ஜாதிக் கலவரத்தின் போது ஏற்படுத்தும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது...
கர்ப்பிணி என்று தெரிந்தும் ஒரு பெண்ணின் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடுவது...
16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...
ஒப்புதல் கொடுக்க இயலாத நிலையிலிருக்கும் ஒரு பெண்ணுடன் வல்லுறவு கொள்வது...
மனநலம் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளியின் மீது பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...
ஒரே பெண்ணின் மீது மீண்டும் மீண்டும் வல்லுறவு வைத்துக்கொள்வது...
ஒரு பெண்ணின் மீது பாலியல் உறவின் போது அவள் உடலைக் காயப்படுத்துவதோ, அவள் உயிருக்கு பங்கம் விளைவிப்பதோ...
இவையனைத்துக்கும் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனையும், அதிக பட்சமாக
வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பதற்கான அபராதத்துடன் கூடிய தண்டனையும் விதிக்கப்படும்.
பிரிவு 376 A ’
யாரொருவரின் பாலியல் வன்புணர்ச்சி செய்கையினால் ஒரு பெண்ணுக்கு மரணம் ஏற்படின் அல்லது மரக்கட்டை போன்ற ஒரு நிலை ஏற்படின்... குற்றம் இழைத்த அந்த நபருக்கு 20 ஆண்டுகள் வரை அல்லது சாகும் வரை வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
பிரிவு 376 B
யாரொருவர் நீதிமன்ற அனுமதியுடனோ, தன்னிச்சையாகவோ பிரிந்து வாழும் தன் மனைவியின் முன் அனுமதி இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபடுகிறாரோ அவருக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
பிரிவு 376 C
யாரொருவர் தன் பதவி மற்றும் அதிகாரத்தின் மூலம் தனக்கு அடங்கி இருப்பவர் மீது பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறாரோ அந்த நபருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
பிரிவு 376 D
ஒரு பெண்ணின் மீது கூட்டு பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு வருக்கும் 20 ஆண்டுகளிலிருந்து ஆயுட்காலம் வரை அபராதத்துடன் கூடிய வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
பிரிவு 376 E
யாரொருவர் ஏற்கனவே குற்றவாளியாக நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் அதே பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபடுவாராயின் அவருக்கு, வாழ்நாள் சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். இதுவரை இந்திய தண்டனைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சில சட்ட திருத்தங்களைப் பற்றி பார்த்தோம்.
இனி, குற்றவியல் நடைமுறை சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களைப் பற்றி பார்ப்போம்.
பிரிவு 54 A
இந்தப் புதிய திருத்தத்தின் கீழ் ஒருவர் குற்றம் சாட்டப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில், மன நலமோ, உடல் நலமோ பாதிக்கப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும் பட்சத்தில் அவரை அடையாளம் காண்பது குற்றவியல் நீதிபதி முன்னர் நடைபெற வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காணும் நபர் மனநலமோ, உடல்நலமோ பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அந்த அடையாள அணிவகுப்பை படப்பதிவு செய்வது அவசியம்.
பிரிவு 154
இந்தச் சட்ட திருத்தத்தின் கீழ் அமில வீச்சு, பாலியல் வன்முறை, கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணை செய்ய ஒரு பெண் காவலரையே நியமிக்க வேண்டும்.
தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ, மனதளவிலோ, உடலளவிலோ பாதிக்கப்பட்டிருக்கும் நபரை அவருடைய இல்லத்திலோ, அவருக்கு சௌகர்யமான இடத்திலோ, அவருடைய செய்கை மொழியை மொழிமாற்றம் செய்யத் தெரிந்தவர் முன்னிலையிலேயோ அல்லது சிறப்புக் கல்வியாளர் முன்னிலையிலேயோ விசாரணை மேற்கொள்வது அவசியம். மேலும் அவ்விசாரணையை படப்பதிவு செய்வது நன்மை பயக்கும்.
பிரிவு 161
இந்தப் பிரிவின் கீழ் அமில வீச்சு, பாலியல் வன்முறை, கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து வாக்குமூலம் கோரும்போது அவ்வாறான வாக்குமூலத்தை ஒரு பெண் காவல் அதிகாரி பதிவு செய்வது அவசியம்.
பிரிவு 357 B
இந்தப் பிரிவின் கீழ் பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் நஷ்ட ஈடு, இந்திய தண்டனைச் சட்டம்
பிரிவு 326 அல்லது 376ன் கீழ் கொடுக்கப்படும் நஷ்டஈடுக்கு கூடுதலாக கொடுக்கப்படுவதேயாகும்.
பிரிவு 357 C
மத்திய, மாநில மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமில வீச்சு, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச முதல் உதவியோ, மருத்துவ உதவியோ செய்யத் தவறும் பட்சத்தில் அதைப் பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். இந்திய சாட்சிய சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களைப் பற்றி பார்ப்போம்
பிரிவு 53 A
பாலியல் வன்முறை அல்லது கற்பழிப்பு குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்ணின் நன்னடத்தை பற்றியோ, அதற்கு முன்னர் இருக்கும் பாலியல் அனுபவம் பற்றி கேட்பது சாட்சி விசாரணையின்போது அவசியமானதல்ல.
பிரிவு 114 A
கொடுமையான பாலியல் வன்முறை அல்லது பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண், தான் அந்த பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும்.
பிரிவு 119
ஒரு வழக்கின் சாட்சி பேச முடியாதவராயிருப்பின் அவர் நீதிமன்றத்தின் முன் எழுத்து மூலமாகவோ, சைகை மூலமாகவோ மற்றவருக்குப் புரியும் வண்ணம் கொடுக்கும் சாட்சியம் வாய்மொழி சாட்சியத்துக்கு ஒப்பாக ஏற்றுக் கொள்ளப்படும். 2013ம் ஆண்டு குற்றவியல் திருத்த சட்டத்தின் சில முக்கிய திருத்தங்களைப் பற்றி பார்த்தோம்.
மேலும் நிர்பயாவின் மரணம் பல பெண்களின் மானம் காக்க சட்ட திருத்தமாக உருப்பெற்றுவிட்டாலும், பெண்களுக்கு எதிரான இவ்வாறான கொடுமையான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால், நம் சமுதாயம் ஒரு பெண்ணை ஆணுக்கு இணையாகவே பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களுக்கான சட்டங்களும் சட்ட திருத்தங்களும் மட்டுமே அவளுக்குப் பாதுகாப்பல்ல. எனினும், பெண்களை பாதுகாக்கும் இந்த சட்ட திருத்தம் பெண்ணினத்துக்கு ஒரு வரப் பிரசாதமே. குற்றமற்ற சமுதாயமே பெண்களுக்கு பாதுகாப்பு!
நன்றி குங்குமம் தோழி
சட்டம் உன் கையில்:
வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி
-----------------------------------------------------------28.06.2014 தினகரன் நாளிதழில் இருந்து