disalbe Right click

Friday, August 26, 2016

துணிவு இல்லாத அதிகாரிகள், குவியும் வழக்குகள்


துணிவு இல்லாத அதிகாரிகள்,  குவியும் வழக்குகள் 
 என்ன செய்ய வேண்டும்?

திறமையான பல அதிகாரிகளின் செயல்பாடுகளால் தான் அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது; அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் சாதாரண மக்களைச் சென்று அடைகின்றன. அந்த வகையில், தன் நம்பிக்கைக்கு பாத்திரமான அதிகாரிகளைத் தான் அரசு, முக்கிய பொறுப்பில் அமர்த்துகிறது என்பதில் சந்தேகமில்லை. 

ஆனால், எதிரணியில் இருப்பவர்கள் அதற்கு வேறு விதமாக காரணம் கற்பித்து கொண்டிருந்தாலும், ஆளும் அரசுக்கு விசுவாசமாக இருப்பது தான் அதிகாரிகளின் கடமை. அதிகாரிகள் அரசுக்கு காட்டும் விசுவாசம், அரசை தேர்ந்தெடுத்த மக்களுக்கு காட்டும் விசுவாசம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு சில, திறமையற்ற, நேர்மையற்ற, அனுபவமற்ற அதிகாரிகள் தான் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துபவர்; இத்தகையவர்கள், விரைவாகவும், துணிந்தும் முடிவெடுக்கும் திறமையற்றவர்கள்.

இத்தகையவர்களுக்கு எந்த முடிவெடுப்பதற்கும், எந்தவொரு செயலைச் செய்வதற்கும் அச்சம். 'சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ' என்ற பயம். அதனால் தான், பிறர் செய்வதற்கெல்லாம் தலையை ஆட்டி, காலத்தைத் தள்ளிக் கொண்டிருப்பர். 

துறைமுகத்திலேயே கப்பல் நங்கூரமிட்டிருப்பது அதன் பாதுகாப்புக்கு உகந்தது தான். ஆனால், அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் அதுவல்ல. 

ஆங்கிலத்தில், 'கரேஜ் ஆப் கன்விக் ஷன்' என்ற அருமையான வார்த்தை உண்டு. தாம் செய்யும் செயல் குறித்து மிகத் தெளிவாக இருக்கும் போது நமக்கு ஏற்படும் துணிவு தான், வலிமையான, தெளிவான நம்பிக்கையின் காரணமாக ஏற்படும் துணிவு அது. மனதில் அந்த துணிவு இருந்தால் செய்யும் செயலில் தயக்கம் ஏற்படாது.

இத்தகைய திறமை இல்லாத சிலர் முக்கிய பொறுப்பில் அமர்ந்து, கடமையில் துாங்கி, புகழை இழந்து கொண்டிருக்கின்றனர்; எதைச் செய்வதற்கும் இவர்களிடம் துணிவு இருப்பதில்லை.

சட்டத்தைக் காரணமாகக் காட்டி, தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதைத் தான், ஒரு சில அதிகாரிகள் தெரிந்தே செய்கின்றனர். சுய லாபத்துக்காகவும், சொந்த விருப்பு, வெறுப்புக்காகவும் செய்கின்றனர். ஒரு சிலர் தங்கள் அறியாமையால் செய்கின்றனர். 

இதனால் பல அப்பாவி அலுவலர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகமாக படித்து, அகில இந்திய அளவில் தேர்வு எழுதி, வெற்றி பெற்று அதிகாரிகளாக வந்தவர்களில் சிலர், பணியில் இருக்கும் போது, சாமானியர்கள் கொடுக்கும் மனுக்களைப் படிக்குமளவுக்கு கூட பொறுமையாக இருப்பதில்லை. 

உயரதிகாரிகளை அணுகும் ஒரு சாதாரண குடிமகனின் மனு, பரம பத விளையாட்டில் பாம்பிடம் கடிபட்ட காய் போல, அலட்சியம் காட்டிய அதிகாரியிடமே வந்து சேர்ந்து, மனு கொடுத்தவரை ஏளனமாகப் பார்க்கும் நிலை தான் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நிலவுகிறது. 

அதற்காக, இந்த அதிகாரிகள் எல்லாருமே நேர்மையற்றவர்கள்; கையூட்டு பெற்று கீழ்மட்ட அலுவலர்களைக் கண்டுகொள்வதில்லை என, சொல்லி விட முடியாது. 

சமூகத்தில் தாதாக்கள் உருவாவது போல, இதுபோன்ற அதிகாரிகளின் தலைமையின் கீழ் சில தாதாக்கள் உருவாகி கோலோச்சி கொண்டிருப்பர்; அவர்களுக்கு பயந்து அப்பாவி ஊழியர்கள் அடிமைகள் போல் வேலை செய்து கொண்டிருப்பர்; பணிய மறுப்பவர்கள் பழிவாங்கப் படுவர். பழிவாங்கப்பட்டு, தண்டிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு மறுக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்திற்கு ஓடிக் கொண்டிருப்பர். 

பொதுமக்கள் பலர் சின்னச் சின்ன பிரச்னைகளுக்கும், அரசு அலுவலர்கள் தங்கள் மீது அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கைக்காகவும் நீதிமன்றத்துக்கு ஓடவேண்டிய கட்டாயத்தை உருவாக்குவது, இதுபோன்ற திறமையற்ற, பொறுப்பற்ற அதிகாரிகள் தான்.

இப்போதெல்லாம் சில அதிகாரிகளே, 'கோர்ட்டுக்கு போய், உத்தரவு வாங்கி வாருங்கள்' என, தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதும், அப்படிப் போய் வாங்கி வந்தாலும், தங்கள் துறை சட்ட ஆலோசகரிடம் கருத்துரை பெற வேண்டும் என்ற சாக்கில், நாளை கடத்தி, எதிர் தரப்பினர் அதற்கு மாற்று உத்தரவு வாங்க ஆலோசனையும் வாய்ப்பும், வழங்குவதும் வாடிக்கையாக உள்ளது.

இதனால், நீதிமன்றங்களில் வழக்குகள் நிரம்பி வழிகின்றன. 'வாய்தா' தேதி தெரிந்து கொள்ளவே நிறைய பேர் நீதிமன்றத்தில் கூட்டம் சேர்ந்து, அங்கு சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.போலி வழக்கறிஞர்கள் சிலர் நீதிமன்றத்தை விட்டு, அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையத்திலும் நேரடியாக வந்து மோத ஆரம்பித்து விட்டனர். 

இதில் பல நல்ல, மூத்த வழக்கறிஞர்களுக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டுமல்ல; வழக்கறிஞர்கள் சிலரின் போக்கு, மூத்த வழக்கறிஞர்களுக்கு மன வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது.

முன்பெல்லாம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வெளியே வந்து கட்சிக்காரரை சந்திப்பதையும், அவர்களுக்காக காவல் நிலையம் மற்றும் பிற அரசு அலுவலகங்களுக்கு செல்வதையும் விரும்ப மாட்டார்கள்; தங்கள் தொழிலுக்கு இழுக்கு என்று நினைப்பர். 

ஆனால் இன்று, இளம் வழக்கறிஞர்கள் அரசு அதிகாரிகளை, அலுவலகங்களுக்கு சென்று சந்திக்கின்றனர்.

உண்மையில் வழக்கறிஞர்களும், அரசு அதிகாரிகளும் சுயநலம் இல்லாமல், சமூக பொறுப்போடு நடந்து கொண்டால், கோர்ட்டுக்கு போகாமலேயே பல பிரச்னைகளை சுமுகமாக முடிக்க முடியும்; ஏழை, எளியவர் களுக்கு வீண் செலவு இல்லாமல் நீதி கிடைக்கச் செய்ய முடியும்.

பல சிறிய பிரச்னைகள், திறமையற்ற அதிகாரிகளாலும், பொறுப்பற்ற, லாப நோக்கத்தோடு செயல்படும் போலி வழக்கறிஞர்களாலும் பெரிதாக்கப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

இ - மெயில்: spkaruna@gmail.com

- மா.கருணாநிதி -
காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு), 
சென்னை.

நன்றி : தினமலர் நாளிதழ் - 20.08.2016



Thursday, August 25, 2016

92 பைசாவில் பயணக் காப்பீடு


92 பைசாவில் பயணக் காப்பீடு - என்ன செய்ய வேண்டும்?

92 பைசாவில் முன்பதிவு பயணிகளுக்கு பயணக் காப்பீடு

ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் கொண்டுவரப்பட்டுள்ள பயணக் காப்பீட்டுத் திட்டம் ஆக. 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ரயில்கள் விபத்துக்குள்ளாகும்போது, பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விருப்பத் தேர்வாக பயணக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ரயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் பயணக் காப்பீடுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

ஆன்லைன் மூலம் பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்யும்போது, விருப்பத் தேர்வாக இந்த பயணக் காப்பீடு திட்டம் இருக்கும். பயணிகள் விரும்பினால், ரயில் கட்டணத்துடன் கூடுதலாக 92 பைசாவை செலுத்தி பயணக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். 

பயணக் காப்பீடு 5 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கும், வெளிநாட்டினருக்கும் பொருந்தாது. 

அதேபோல், புறநகர் ரயில்களில் பயணிப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது.

 ரயில்கள் விபத்தை சந்தித்தாலோ அல்லது பயங்கரவாதத் தாக்குதலின்போதோ பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

விபத்தில் பயணிகள் முழுமையாக செயல்படாத அளவுக்கு ஊனமடைந்தால் ரூ.10 லட்சமும், கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகளை இழக்க நேரிட்டால், ரூ.7.5 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும். 

இதேபோல், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். 

முன்பதிவு செய்த பிறகு பயணச்சீட்டை ரத்து செய்தால் பயணக் காப்பீட்டுத் தொகை திருப்பி அளிக்கப்படமாட்டாது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

நன்றி : தினமணி நாளிதழ் - 26.08.2016

Tuesday, August 23, 2016

ஆவணப்பதிவு - தடை கோரி விண்ணப்பம்

ஆவணப்பதிவு - தடை கோரி விண்ணப்பம் - என்ன செய்ய வேண்டும்?

கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

நன்றி : எனது முகநூல் நண்பர் திரு A Govindaraj Tirupur.


Monday, August 22, 2016

டூ வீலர் இன்சூரன்ஸ்


டூ வீலர் இன்சூரன்ஸ் - என்ன செய்ய வேண்டும்?

டூவீலர் இன்ஷூரன்ஸ்... மூன்றாண்டு பாலிசி லாபமா?

இரு சக்கர வாகனங்களுக்கு பாலிசி எடுப்பவர்களில் பலரும் தொடர்ந்து அதை புதுப்பிப்பது இல்லை. இந்தியாவில் சுமார் 75% பேர் இரு சக்கர வாகன இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லாமல் இருப்பதாக 2015, மே மாதத்தில் ஐ.ஆர்.டி.ஏ. நடத்திய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

நகர்ப்புறங்களைவிட கிராமப் புறங்களில் இந்தப் போக்கு மிக அதிகமாக உள்ளது. பாலிசிக் காலம் முடிந்தபின்பு, அந்த பாலிசியை தொடர முடியாமல் போவதற்கு முக்கியக் காரணம், விழிப்பு உணர்வின்மையும் நேரமின்மையும்தான். இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வாக, மூன்றாண்டு பாலிசிகளுக்கு பிரீமியம் கட்டும் நடைமுறை இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகன பாலிசி களில் இரு வகைகள் உள்ளன. 

ஒன்று, நம் வாகன பாதிப்புக்கான ஓன் டேமேஜ் பாலிசி (Own Damage Policy). 

அடுத்து, நம் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கான மூன்றாம் நபர் பாலிசி (Third Party Insurance).

இந்த பாலிசிகளை ஒருவர் தனியாகவோ அல்லது குரூப்  பாலிசியாகவோ எடுக்கலாம்.  இந்த இரு பாலிசிகளை ஓராண்டுக்கு பதிலாக தற்போது மூன்றாண்டுகளுக்கு எடுக்கலாம்.   

ஒரு வருட பாலிசிக்கும், மூன்று வருட பாலிசிக்கும் என்ன வித்தியாசம், எதற்காக இந்த மூன்று வருட பாலிசி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது, 

இதனால் என்ன பயன் என்பது குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜர் கேசவனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“இரு சக்கர வாகனக் காப்பீடு பாலிசிகளை ஒரு வருட பாலிசியாகத்தான் வழங்கி வந்தோம். இப்போது நீண்ட கால பாலிசியாகவும் மூன்றாண்டுகளுக்கு கவரேஜ் இருக்கும்படியும் வழங்கி வருகிறோம். 

இருசக்கர வாகனங் களுக்கான இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, போலீஸ் அதிகாரிகள் கேட்கும்போதும், அல்லது வாகன விபத்து ஏற்படும் போதுதான் பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்ற எண்ணமே நினைவுக்கு வருகிறது. இதுவே மூன்று வருட பாலிசி என்கிறபோது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத் தேவை இல்லை. ஒருமுறை புதுப்பித்து விட்டால் அடுத்த மூன்று வருடங்களுக்கு அந்த பாலிசியை வைத்திருக்கலாம். 

ஆண்டுதோறும் மூன்றாம் நபர் பாலிசியின் பிரீமியம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதாரணத்துக்கு, ரூ.50,000 கவரேஜ், 150 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்துக்கு 2012-13-ல் ரூ.357 -ஆக இருந்த மூன்றாம் நபர் பாலிசி பிரீமியம், 2013-14-ல் ரூ.422-ஆகவும், 2014-15-ல் ரூ.464-ஆகவும், 2015-16-ல் 538 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. 

மூன்றாண்டு கால பாலிசியை எடுக்கும்போது அதிகரிக்கும் பிரீமியத்தை செலுத்த தேவையில்லை என்பது பாசிட்டிவ்-ஆன விஷயம்” என்றவர் சற்று நிறுத்தி, ஓராண்டு பாலிசிக்கு பதில் மூன்றாண்டு பாலிசி எடுத்தால், எவ்வளவு பிரீமியம் மிச்சமாகும் என்பதைச்  சொன்னார். 

‘‘ரூ.50 ஆயிரம் மதிப்புடைய 150சிசி திறன் கொண்ட புதிய வாகனம் அல்லது 5 ஆண்டுகள் ஆன பழைய வாகனம் என்றால், ஒரு வருட பாலிசியில் ஓன் டேமேஜ் பிரீமியம் முதல் ஆண்டுக்கு 854 ரூபாயும், இரண்டாம் ஆண்டில் 683 ரூபாயும், மூன்றாம் ஆண்டில் 640 ரூபாயும் என மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.2,177 செலுத்த வேண்டும். இந்த  மூன்று ஆண்டுகளுக்கும் க்ளெய்ம் எதுவும் இல்லை என்கிற கணக்கில் (நோ க்ளெய்ம் போனஸ் சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில்) செலுத்தும் மொத்த பிரீமியம் ஆகும். 

இதுவே மூன்று ஆண்டு பாலிசி என்றால் 30%  தள்ளுபடியுடன் ரூ.1,793 செலுத்தினால் போதும். பாலிசி எடுப்பவர்கள் அதிகமான சலுகையை எதிர்பார்த்தால், கூடுதலாக 20% தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உண்டு.  இந்தத் தள்ளுபடியும் கிடைத்தால், மூன்று ஆண்டு பாலிசிக்கு பிரிமீயம் ரூ.1,281 மட்டும் செலுத்தினால் போதும். ஆக, மூன்று ஆண்டு பாலிசி பிரீமியத்தில் குறைந்தது 18 % முதல் 41% வரை, அதாவது ரூ.384 முதல் ரூ.896  வரை சேமிக்க முடியும். 

மூன்றாண்டு பாலிசியை புதுப்பிக்கும்போது எந்த க்ளெய்மும் செய்யவில்லை என்றால் 30% நிச்சய தள்ளுபடி மற்றும் 20% சிறப்புத் தள்ளுபடி கிடைக்கலாம். இதுவே ஒருமுறை க்ளெய்ம் செய்திருந்தால், 30% நிச்சய தள்ளுபடியுடன், 10% சிறப்புத் தள்ளுபடி கிடைக்கலாம். 

இரண்டு முறை க்ளெய்ம் செய்திருந்தால், 30% நிச்சய தள்ளுபடி மட்டுமே கிடைக்கும். ஒரு வருட பாலிசியில் ஆண்டுக்கு ஒரு க்ளெய்ம் செய்திருந்தால், நோ க்ளெய்ம் போனஸ் கிடைக்காது. தவிர, ரெனிவல் பிரீமியம் அதிகரிக்கும்.   

தற்போது, ஐ.ஆர்.டி.ஏ. மூன்றாண்டு பாலிசியை இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதித்து உள்ளது. விரைவில் நான்கு சக்கர வாகனங்களுக்கும் இந்த பாலிசி தரப்படலாம்” என்றார்.

மூன்றாண்டு பாலிசியில் பணம் மிச்சமாவதோடு, நேரமும் மிச்சமாகிறது. இனி பாலிசியை புதுப்பிக்க நேரமில்லை என்று சொல்ல மாட்டீர்கள்தானே?

ஓன் டேமேஜ் பாலிசி -  பிரீமியத்தில் எவ்வளவு லாபம்?

ஒரு வருட பாலிசி - (மூன்றாண்டுகளுக்கு சேர்த்து மொத்த பிரீமியம்) - ரூ.2,177

3 ஆண்டு பாலிசி  (நிச்சயம் 30% தள்ளுபடி, 20% சிறப்புத் தள்ளுபடி) - ரூ.1,281

லாபம் - ரூ.896(வாகனத்தின் மதிப்பு ரூ.50,000, 150 சிசி, புதிய அல்லது பழைய வாகனம்.)

சோ.கார்த்திகேயன்

நன்றி : நாணயம்விகடன் - 07.02.2016

Friday, August 19, 2016

நிறுவனங்களின் அனுமதி இல்லாமலேயே பி.எஃப்.


நிறுவனங்களின் அனுமதி இல்லாமலேயே பி.எஃப். 
பணம் பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஓய்வூதிய நிதியை நிர்வகித்து வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) பிஎப் சந்தாதாரர்களுக்கு புதிய பொதுக் கணக்கு எண்ணை (யுஏஎன்) அடிப்படையாக கொண்ட 10டி படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் நிறுவனங் களின் ஒப்புதல் இல்லாமலேயே சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதிய தொகையை பெற்றுக் கொள்ளமுடியும். தற்போதைய நிலையில் ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் சந்தாதாரர்கள் அவர்களது ஓய்வு கால பலன்களை பெறுவதற்கு நிறுவனங்களின் ஒப்புதல் வேண்டும்.
சந்தாதாரர்களின் பொதுக் கணக்கு எண்ணைக் அடிப்படை யாக கொண்டு 10-டி யுஏஎன் என்ற புதிய படிவம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக இபிஎப்ஓ வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்த புதிய படிவத்துக்கு நிறுவனங்களின் ஒப்புதல் தேவையில்லை.
நேரடி யாக இபிஎப்ஓ அலுவலகம் சென்று விண்ணபிக்கலாம். மேலும் இபிஎப் சந்தாதார்கள் தங்களது ஓய்வூதிய பலன்களை உயர்த்திக் கொள்ளுவதற்கு வாய்ப்பையும் தற்போது வழங்கி வருகிறது.
58 வயதுக்கு மேல் பங்களிப்பு செய்தோ அல்லது பங்களிப்பு இல் லாமலேயே தங்களது ஒய்வூதிய பலன்களை 58 வயதிலிருந்து 60 வயதுக்குள் எப்போது வேண்டுமா னாலும் பெற முடியும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தி இந்து நாளிதழ் - 20.08.2016

Wednesday, August 17, 2016

அனஸ்தீசியா (மயக்க மருந்து)


அனஸ்தீசியா(மயக்க மருந்து) - என்ன செய்ய வேண்டும்?

காயம், அறுவைசிகிச்சை என்றால் வலிநிவாரணிகள், மயக்க மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மயக்க மருந்து இல்லை என்றால், நம் நிலை என்ன என்று யோசித்துப்பார்த்தாலே பயம் வரும். அந்தக் காலத்தில், நம் பாரம்பரிய மருத்துவங்களில் வலி நிவாரணியாக அபின், கஞ்சா போன்ற போதைவஸ்துக்கள் பயன்படுத்தப்பட்டன. 

டாக்டர் வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன் முதன்முதலில் ஈதர் என்ற மயக்க மருந்தை நோயாளிக்கு அளித்தார். அதன் மூலம், நோயாளிக்குக் கழுத்தில் இருந்த கட்டி, வலி இன்றி அகற்றப்பட்டது. இன்று, பல் பிடுங்குவதில் இருந்து சிசேரியன் வரை எந்த அறுவைசிகிச்சையாக இருந்தாலும், மயக்க மருந்து இல்லாமல் செய்யப்படுவது இல்லை.

அனைவராலும் மயக்க மருந்தை எளிதில் கொடுத்துவிட முடியாது. சிறிது அதிகமானாலும், உயிரிழப்புகூட ஏற்படும் என்பதால், இதற்கு எனப் பிரத்யேகப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மட்டும்தான் மயக்க மருந்தைக் கொடுக்க முடியும். இதற்கு, அனஸ்தீசியா என்ற பிரத்யேக மருத்துவப் பிரிவே உள்ளது.

அனஸ்தீசியா

நோயாளிக்கு உடல் முழுவதையுமோ அல்லது குறிப்பிட்ட பகுதியையோஉணர்வற்றதாக, வலியற்றதாக மாற்ற, மருந்து அளிப்பதை அனஸ்தீசியா என்கிறோம். மொபைலில் சைலன்ட் மோடு இருப்பது போல, முழு உடல் அல்லது குறிப்பிட்ட பகுதியைத் தற்காலிகமாக ஸ்லீப் மோடுக்கு மாற்றுவதுதான் அனஸ்தீசியா. இதன் மூலம், வலி என்ற விஷயமே நோயாளிக்குத் தெரியாது.

யாருக்கு, என்ன அளவு, என்ன மாதிரியான மயக்க மருந்து என்பதை முடிவுசெய்யும் திறன் பெற்றவரை ‘மயக்க மருந்தியல் நிபுணர்’ என்கிறோம். ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னை மற்றும் செய்யப்படும் அறுவைசிகிச்சை ஆகியவற்றைப் பொறுத்து, எந்த வகை மயக்க மருந்தைச் செலுத்துவது என்பதை மருத்துவர் தீர்மானிப்பார். எந்த வகையாக இருந்தாலும், அதைத் தேர்ந்த மருத்துவர் மட்டுமே அளிக்க வேண்டும். பொது மருத்துவர், செவிலியர் என்று யார் வேண்டுமானாலும் மயக்க மருந்தைக் கொடுக்க முடியாது.

 லோக்கல் அனஸ்தீசியா

உடலில் ஒரு சிறு இடத்தை மட்டும் மரத்துப்போகச் செய்வதற்காக லோக்கல் அனஸ்தீசியா பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பற்களில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகளுக்கு லோக்கல் அனஸ்தீசியா அளிக்கப்படும். குறிப்பிட்ட பகுதியைச் சுற்றிலும் தேவைப்படும் அளவுக்கு ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தப்படும். இதனால், அந்தப் பகுதி மட்டும் மரத்துப்போகும். ஆனால், அறுவைசிகிச்சை செய்யப்படும்போது, நோயாளி சுயநினைவுடன் இருப்பார்.

ரீஜனல் அனஸ்தீசியா

உடலின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பு என்றால், அந்தப் பகுதி முழுவதுமே உணர்வு நீக்கம் செய்ய மருந்து அளிப்பதை ‘ரீஜினல் அனஸ்தீசியா’ என்பார்கள். உதாரணமாக, கை மூட்டு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனில், ஒரு பக்க கை, கால் மரத்துப்போக மயக்க மருந்து தரப்படும். ஊசி மூலமாகவே இந்த வகை மயக்க மருந்துகள் செலுத்தப்படும். ரீஜினல் அனஸ்தீசியாவில் இரண்டு வகை இருக்கின்றன.

அடிவயிறு, இடுப்பு, மலக்குடல், கால் மூட்டு  போன்ற இடுப்புக்குக் கீழே இருக்கும்  இடங்களில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதாக இருந்தால், முதுகுத்தண்டுக்கு கீழே குறிப்பிட்ட இடத்தில் ஒரே ஒரு ஊசி மட்டும் போடுவார்கள். இதனால், இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகள் மட்டும் முற்றிலும் மரத்துப்போகும். இதை, ‘ஸ்பைனல் அனஸ்தீசியா’ என்பார்கள்.

சிசேரியன் முதலான அறுவைசிகிச்சைகளுக்கு ‘எபிடியூரல் அனஸ்தீசியா’ என்ற முறை கையாளப்படுகிறது. சில அறுவைசிகிச்சைகளில், வலி மிக அதிகமாக இருக்கும் என்பதால், அதைக்  கட்டுப்படுத்த இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. முதுகுத்தண்டுக்குக் கீழே ஊசி மூலம் கதீடர் எனும் குழாய்  இணைக்கப்பட்டு, அதன் வழியே தொடர்ச்சியாக மயக்க மருந்துகள் செலுத்தப்படும். மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் செய்யப்படும்  அறுவைசிகிச்சைகளுக்கு இந்த முறையில் மயக்க மருந்துகள் செலுத்தப்படும்.

ஜெனரல் அனஸ்தீசியா 

‘புரொப்பஃபால்’ (Propofol) முதலான மயக்க மருந்துகள் ‘ஜெனரல் அனஸ்தீசியா’ வகையைச் சேர்ந்தவை. ஒரு சில அறுவைசிகிச்சையின்போது நோயாளியைத் தற்காலிகமாக சுயநினைவை இழக்கச்செய்ய  ஜெனெரல் அனஸ்தீசியா முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் நோயாளி முற்றிலும் சுயநினைவு இன்றி இருப்பார். செயற்கை ஆக்சிஜன் கொடுக்கப்படும். மயக்க மருந்துகள் டிரிப்ஸ் வழியாகச் செலுத்தப்படும். 

இதில் கொடுக்கப்படும் மயக்க மருந்துகளால், தசைகள் செயற்கையாகச் செயல் இழக்க வைக்கப்பட்டு அறுவைசிகிச்சைக்குத் தயாராக்கப்படும். இந்தத் தசைகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர தனி மருந்துகள் தந்து, படிப்படியாக நோயாளியை மீட்டு, இயல்புநிலைக்குக் கொண்டுவருவார்கள். அதுவரை, மயக்கவியல் நிபுணர், செவிலியர்கள் உடன் இருந்து கண்காணிப்பர்.

யாருக்கு, என்ன அளவு தர வேண்டும்?

நோயாளியின் எடையைப் பொறுத்தே மயக்க மருந்தின் அளவு தீர்மானிக்கப்படும். ஒரு கிலோவுக்கு குறிப்பிட்ட அளவில் கொடுக்கப்படுகின்றன. ரிஸ்க் என்பது எல்லாவற்றிலும் உள்ளதுபோல, இதிலும் இருக்கிறது. மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கம் இல்லாத, இயல்பான ஆரோக்கியமான நபருக்குப் பாதிப்பு மிகமிகக் குறைவாக இருக்கும். 

பல் அறுவைசிகிச்சைகளில் லிக்னோகைன் எனும் லோக்கல் அனஸ்தீசியா கொடுக்கப்படும். இது, 30 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை வாயை மரத்துப்போகச்செய்யும். இது போல, ஒவ்வொரு மயக்க மருந்துக்கும் கால அளவு இருக்கிறது. இதனை, மருத்துவர்கள் அனுமதி இன்றி எந்தக் காரணம் கொண்டும் யாரும் பயன்படுத்தக் கூடாது. 

ஒரு நோயாளி, அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் முன்பு, பிரீமெடிகேஷன்  கொடுப்பது, தொடர்ந்து அறுவைசிகிச்சையின் போது உடல்நலனில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது, அதற்கு ஏற்ப உடனடியாக மருந்துகள் தர வேண்டியது, அறுவைசிகிச்சை முடிந்து மீண்டும் நலம் பெற்றுத் திரும்பும் வரை கண்காணிக்க வேண்டியது மயக்க மருந்தியல் மருத்துவரின் கடமை.

ஏன் மயக்க மருந்தியல் மருத்துவர் ஆலோசனை தேவை?

எல்லா பிரச்னைகளையும் கண்டறிய பரிசோதனைகள் பயன்படாது. சிகிச்சை வரலாறு தெரிந்தாலேபோதும். ஒரு நோயாளியின் கடந்த காலத்தில் ஏற்பட்ட மருத்துவப் பிரச்னைகளை சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் மட்டும் அல்லாமல் மயக்க மருந்தியல் மருத்துவரிடம் தவறாமல் சொல்ல வேண்டும்.   சிலருக்கு, சாதாரண குரோசின் முதலான வலி நிவாரணி மாத்திரைகளேகூட அலர்ஜியாக இருக்கும். எனவே, எந்தப் பொருள் அலர்ஜி என்பதை மறைக்கக் கூடாது. பெற்றோர்களுக்கு என்னென்ன நோய்கள் இருந்தன என்பதைச் சொல்ல வேண்டும். ஏற்கெனவே அறுவைசிகிச்சை செய்திருந்தால், அதுபற்றி தெரிவித்து, ரிப்போர்ட் இருந்தால் எடுத்து வர வேண்டும். ஏனெனில், எந்த மயக்க மருந்து எப்படி வேலை செய்தது என்பதை அப்போதுதான் கண்டுபிடிக்க முடியும். 

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருந்தால், கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். இல்லை எனில் நுரையீரல், கல்லீரல் போன்றவற்றில் சிகிச்சையளிக்கும்போது பாதிப்புகள் ஏற்படலாம். ஆஸ்துமா, வலிப்பு நோய், மஞ்சள் காமாலை, டெங்கு  காய்ச்சல், சர்க்கரை நோய், நெஞ்சு வலி போன்றவை ஏற்கெனவே வந்திருந்தால், மறைக்காமல் தெரிவிக்க வேண்டும்.

சந்தேகங்கள் கேட்கத் தயங்கக் கூடாது. அறுவைசிகிச்சை முடிந்து நலமான பிறகு அறுவைசிகிசசையின்போது, எந்தெந்த சமயங்களில் என்னென்ன மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன, அதற்கு உங்கள் உடல் என்ன எதிர்வினை செய்தது என்பதை எழுத்துப்பூர்வமாக கேட்டுப் பெறுவதும்கூட நோயாளியின் உரிமை.

 பரிசோதனை அவசியம்!

மயக்க மருந்தால் உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பக்கவிளைவு ஏற்படும் என்பதால், பல பரிசோதனைகள் செய்த பிறகே ஒருவருக்கு என்ன மயக்க  மருந்து தர வேண்டும் என்பதை மருத்துவர் தீர்மானிக்க முடியும். உதாரணமாக, ஒருவருக்கு ரத்தம் வெளியேறும் பிரச்னை இருந்தால், அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்வது எளிதான விஷயம் இல்லை. அதேபோல, கல்லீரல் செயல்பாடுகள் சரியாக இல்லை என்றால், மயக்க மருந்தால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே, அறுவைசிகிச்சை செய்துகொள்ளப்போகும் நபருக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை, யூரியா கிரியாட்டின் பரிசோதனை, குளுக்கோஸ் அளவுகள், ஈ.சி.ஜி, எக்கோ, எக்ஸ்ரே, நுரையீரல் பரிசோதனை மற்றும் நேரடிப் பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்ட பிறகுதான், ஒருவருக்கு எந்த வகையான மயக்க மருந்து தருவது என முடிவுசெய்யப்படும்.

நிபுணரிடம் பேசுங்கள்!

பெரும்பாலானவர்கள், அறுவைசிகிச்சை  செய்யும் சமயத்தில் தனக்கு என்ன மருந்து செலுத்தப்பட்டது, அதன் இயல்பு என்ன என்பதைக்கூட தெரிந்து வைத்துக் கொள்வது கிடையாது. ஒரு நோயாளி அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருடன் மட்டும் அல்லாமல், மயக்க மருந்தியல் நிபுணரிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டியதும் முழுத் தொடர்பில் இருக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.

நன்றி : டாக்டர் விகடன் - 01.08.2016

பத்திரப்பதிவு சந்தேகங்கள்

பத்திரப்பதிவு சந்தேகங்கள் - என்ன செய்ய வேண்டும்?
பத்திரப் பதிவு குறித்த ட்விட்டர் கேள்வி பதில்
1. சொத்தின் மதிப்பில் எத்தனை சதவிகிதம், பத்திரம் பதிய செலவாகும்? 
 பதில்: நீங்கள் என்ன வகை ஆவணம் என்பதை இங்கே குறிப்பிடவில்லை. ஆகையால் விற்பனை ஆவணம் (Sale Deed) என்று எடுத்துக்கொண்டால், அந்தச் சொத்தின் சந்தை மதிப்பில் (அரசு வழிகாட்டி மதிப்பு) 7 சதவிகிதம் முத்திரை கட்டணமாகவும், 1 சதவிகிதம் பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.  
2. சொத்தின் மதிப்பு எவ்வளவுக்கு அதிகமாக இருந்தால், அந்தச் சொத்தை பதிவு செய்ய வேண்டும்? 
பதில்: ரூ. 100 க்கு அதிகமான மதிப்பு கொண்ட அசையாத சொத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும்.  
3. குறிப்பிட்ட மதிப்புக்கு கீழ் இருந்தால், மனையை பதிவு செய்ய கட்டணம் கிடையாது என்று என் நண்பன் சொன்னான். அந்தத் தொகை எவ்வளவு என்று குறிப்பிட முடியுமா? 
பதில்: ஆம், அந்தக் குறிப்பிட்ட தொகை ரூ. 25,000. 
4. நான் வாங்கப் போகிற மனையின் அரசு மதிப்பு சதுர அடி ரூ. 1,000. சந்தை விலை ரூ. 500. எந்த மதிப்புக்கு நான் பத்திரம் பதிவு செய்ய வேண்டும்?
பதில்: நீங்கள் அரசு வழிகாட்டி மதிப்புக்குத்தான் ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் குறைந்த மதிப்பிற்குப் பதிவு செய்திருந்தால் சார் பதிவாளர் அந்த ஆவணத்தை, சிறப்பு துணை மாவட்ட ஆ ட்சியர் (முத்திரைத்தாள்) அலுவலகத்திற்கு அந்தச் சொத்தின் சந்தை மதிப்பை அறிய அனுப்பி வைப்பார். அவர் கண்டறிந்த மதிப்பும் நீங்கள் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள மதிப்பும் ஒன்றாக இருந்தால், உங்கள் ஆவணம் உங்களிடம் ஒப்படைக்கப்படும். ஒருவேளை அந்த மதிப்பு நீங்கள் குறிப்பிட்டுள்ள மதிப்பை விட அதிகமாக இருந்தால், கூடுதல் மதிப்புக்கு முத்திரை, பதிவு கட்டணம் நீங்கள் தனியே செலுத்த வேண்டியிருக்கும். மேலும், சில நேரங்களில் அப்போதைய சந்தை நிலவரத்தை வைத்து சந்தை மதிப்பை சிறப்பு துணை மாவட்ட ஆட்சியர் அரசு வழிகாட்டி மதிப்பை விட அதிகமாகக் கணக்கிட வாய்ப்பும் உள்ளது. 
5. கடந்த 5 வருடங்களுக்கு முன் வீட்டு மனை ஒன்று வாங்கினேன். அதனை இப்போது விற்க முயற்சிக்கும் போது சர்வே எண் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதற்கு திருத்தல் பத்திரம் போட வேண்டும் என்கிறார்கள். 2010-ல் சதுர அடி அரசு மதிப்பு 1000 ரூபாய். இப்போது ரூ. 2,000. வித்தியாசப்படும் தொகைக்கு முத்திரைத் தீர்வை பதிவு கட்டணம் அலுவலகத்தில் கட்டச் சொல்கிறார்கள். இந்தத் தொகையை எனக்கு தவறாக பதிவு செய்து கொடுத்த எனக்கு இடத்தை விற்றவரிடம் கேட்க முடியுமா?
பதில்: பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் எந்தத் திருத்தம் செய்யப்படுவதாக இருந்தாலும் பிழை திருத்தல் ஆவணம் மூலம் தான் செய்யப்படும். எல்லா பிழை திருத்தல் ஆவணத்திற்கும், அதிலுள்ள கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகளுக்காக கூடுதல் முத்திரை வரியோ கட்டணமோ வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் தாய் பத்திரத்தில் சர்வே எண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் ஆகிய மற்ற குறிப்பிட்ட விஷயங்கள் தாய் பத்திரத்தில் உள்ளபடியே இருந்தால், பிழை திருத்துவதற்கு ரூ. 200 முதல் 300 வரை செலவாகலாம். ஒருவேளை ஆவண மதிப்பில் உள்ள புதிய விகிதப்படி சார் பதிவாளர், கூடுதல் முத்திரை கட்டணத்தை கட்ட சொன்னால், நீங்கள் உயர் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்யலாம். உங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
6. புதிதாக ஃபிளாட் பதிவு செய்யும்போது, பத்திரப் பதிவுக்கு என்னென்ன கட்டணங்கள் செலுத்த வேண்டி இருக்கும்? விரிவாக விளக்கவும்.
பதில்: புதிய ஃபிளாட்டுக்கு, முதலில் நீங்கள் கட்டுமான உடன்படிக்கைப் பத்திரத்தைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு கட்டட மதிப்பில் 1 சதவிகிதம் முத்திரை கட்டணமாகவும், 1 சதவிகிதம் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். பின்னர், பிரிபடாத மனை விற்பனை ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பிரிபடாத மனை (யூடிஎஸ்) வழிகாட்டி மதிப்பில் 7 சதவிகிதத்தை முத்திரை கட்டணமாகவும் 1 சதவிகிதத்தைப் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.  
7. நான்கு வருட பழைய அடுக்குமாடி குடியிருப்பை வாங்குகிறேன். வீட்டின் பரப்பு 1000 சதுர அடி. யூடிஎஸ் 600 சதுர அடி. வீட்டை 35 லட்ச ரூபாய்க்கு வாங்குகிறேன். எனக்கு பத்திரப் பதிவுக்கு எவ்வளவு செலவாகும்?
பதில்: நீங்கள் வாங்கும் கட்டடம் எவ்வளவு பழையதாக இருந்தாலும், பொதுப்பணி துறையினர் வழங்கியுள்ள மதிப்பின் அடிப்படையில் உங்கள் கட்டடம் மதிப்பிடப்படும். இந்த மதிப்பு ஒவ்வொரு வருடமும் இவ்வாறு கணக்கிடப்படும். இதன் விவர அட்டவணை சார் பதிவாளரிடம் இருக்கும். இதன்படி சொத்தின் தற்போதைய மதிப்புக்கு 7% முத்திரை கட்டணமும் 1% பதிவு கட்டணமும் செலுத்த வேண்டும். 
முதலில் நீங்கள் அந்த நிலத்தின் பிரிபடாத பங்கின் அரசு வழிகாட்டி மதிப்பையும் அந்தக் கட்டத்தின் ஒரு சதுர அடிக்கான விலையையும் கேட்டு அறிந்து அதற்கேற்ப பத்திரத்தை உருவாக்க வேண்டும். அந்த பழைய ஃப்ளாட்டை பதிவிற்கு பின் சார் பதிவாளர் நேரில் வந்து சோதனை செய்வார். அவர் இடும் மதிப்பு ஆவண மதிப்பை விட கூடுதலாக இருந்தால் அதற்கு எவ்வளவு கூடுதல் முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை சொல்வார். மதிப்பு சரியாக இருந்தால் ஆவணத்தை அப்படியே திருப்பி தருவார். 
8. என் பெயரில் இருக்கும் சொத்தை என் மனைவிக்கு தானமாக கொடுக்க விரும்புகிறேன். சொத்தின் மதிப்பு ரூ. 40 லட்சம். என் மனைவியின் பெயருக்கு சொத்தை மாற்ற எவ்வளவு செலவாகும்? 
பதில்: அசையாத சொத்து மனைவி பெயருக்கு மாற்றப்படும்போது, அதன் மதிப்பு ரூ 40 லட்சமாக இருந்தால் ரூ. 25,000 முத்திரை கட்டணமாகவும், ரூ. 5,000 பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். 
9. நான் வாங்கும் சொத்துக்கு அரசு வழிகாட்டி மதிப்பு, சந்தை மதிப்பை விட இரு மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனை குறைத்து, சரியான சந்தை மதிப்பில் பத்திரம் பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?
பதில்: 4வது கேள்விக்கான பதிலை பார்க்கவும். 
10. நான் புதிதாக ஒரு வீடு வாங்க இருக்கிறேன், வீட்டின் மதிப்பு 50 லட்சம் ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவுக் கட்டணமாக சொத்து மதிப்பில் 12 சதவிகிதம் பில்டர் கேட்கிறார். சரி தானா? 
பதில்: 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டுக்கு முத்திரைக் கட்டணம் 3,50,000 ரூபாய், பதிவுக் கட்டணம் 50,000 ரூபாய் மட்டுமே. 
11. நான் 28 வருடங்களுக்கு முன் ஒரு வீட்டை என் பெயரில் வாங்கினேன், தற்போது என் மகனின் பெயருக்கு அதை மாற்றி பதிவு செய்ய வேண்டும் அதற்கு என்ன நடைமுறைகள் என்று விளக்கவும்? அதோடு எவ்வளவு செலவாகும் என்பதையும் குறிப்பிடவும்.
பதில்: உங்கள் பெயரில் உள்ள வீட்டை உங்களுடைய மகன் பெயருக்கு மாற்ற தான ஏற்பாடு பத்திரம் எழுதி பதிவு செய்ய வேண்டும். இதற்கு முத்திரைக் கட்டணம் தற்போதைய சந்தை மதிப்பில் 1 சதவிகிதமாக இருக்கும். ஆனால், இந்த கட்டணம் அதிகபட்சம் 25,000 ரூபாய் மட்டுமே. இதைத் தவிர்த்து சொத்து மதிப்பில் 1 சதவிகிதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் அதிகபட்சம் 5,000 ரூபாய் மட்டுமே. 
12. சொத்து பதிவு மற்றும் முத்திரைக் கட்டணம் யாருக்கு செல்கிறது. இதனால், பொது மக்களுக்கு என்ன நன்மை?
பதில்: முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் அரசின் வருவாய்க்கு செல்கிறது. இது பொது நோக்கங்களுக்காக வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) மூலம் செலவழிக்கப்படுகிறது. 
13. நில மோசடிகளில் கிரிமினல் வழக்கு எப்படி தொடுப்பது? எந்தெந்த சட்டப் பிரிவுகளில் தொடுப்பது?
பதில்: நில மோசடி, நில அபகரிப்பு ஆகியவற்றில் இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி)பிரிவு 120 பி (குற்றச்சதி), பிரிவுகள் 405, 406 (நம்பிக்கை மோசடி), பிரிவுகள் 441, 447 (குற்ற ஆக்கிரமிப்பு), பிரிவுகள் 465, 466, 468 (ஃபோர்ஜரி) பிரிவுகள் 472, 473, 474, 475, 476 (போலி உருவாக்கல்), 416, 419 (ஆள்மாறாட்டம்), பதிவுச்சட்டம் பிரிவு 81, 82, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் முதலில் காவல் நிலையத்தில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகாரை சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்தால் அவர் அதை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அருகில் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பார். 
14. நான் ஒரு ஆவணத்தைக் கையெழுத்து வாங்கி உடனடியாக பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது. இந்த ஆவணம் எதுவரை செல்லுபடி ஆகும்?
பதில்: ஒரு ஆவணத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்துப் போட்டுவிட்டால் நான்கு மாதங்களுக்குள் சார் பதிவாளர் முன்பாக பதிவுக்கு தாக்கல் செய்யவேண்டும். இயலாதவர்கள் அரசு விதித்த விகிதச்சாரப்படி அபராதம் கட்டி மேலும் நான்கு மாத காலம் முடிவதற்குள் தாக்கல் செய்துகொள்ளலாம். ஆவணத்தை எழுதிக்கொடுத்தவர்களில் எவராவது சார் பதிவாளர் முன்பு தோன்றி ஒப்புதல் கையெழுத்து செய்யவும், ரேகை பதிவு செய்யவும் இயலாவிட்டால் மேலும் நான்கு மாதங்கள் அபராதம் கட்டுவதன் மூலம் காலத்தை நீட்டிக்கலாம். எனவே ஆவணத்தைத் தாக்கல் செய்வதற்கு எட்டு மாதங்களும் சார் பதிவாளர் முன்பு தோன்றுவதற்கு நான்கு மாதங்களும் ஆகமொத்தம் ஒரு ஆவணத்தின் ஆயுள் ஒரு ஆண்டு காலம் ஆகும். கையெழுத்து போடப்பட்டு எட்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் சார் பதிவாளர் தாக்கல் செய்யப்படாத ஆவணம் செல்லாமல் போய்விடும். அதே போல் சார் பதிவாளர் முன் தாக்கல் செய்யப்பட்ட பின் நான்கு மாதங்களுக்குள் கையெழுத்திட்ட அனைவரும் வந்து ஒப்புதல் கையெழுத்து, கைரேகை இடுதல் முதலியன செய்யாவிட்டால் ஆவணம் பதிவு செய்ய மறுக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும். 
15. பதிவு செய்த விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா?
பதில்: பதிவு செய்த ஆவணத்தை ஒருதலைபட்சமாக விற்பவர் மட்டும் வந்து ரத்து செய்ய இயலாது. விற்றவர், வாங்கியவர் இருவரும் வந்து ரத்து செய்தாலும் கூட அந்த ரத்து முறைப்படியான மறுவிற்பனை ஆவணத்தின் மூலமே செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மேற்படி பதிவானது, சட்டப்படி நடைமுறைப்படுத்தப்படாது என்று ஆவணத்தில் மேற்குறிப்பு செய்யப்படும். 
16. நில அபகரிப்பைப் பற்றி காவல் துறையில் புகார் செய்யும்போது சிவில் கேஸ் என்று சொல்லி சிவில் கோர்ட்டுக்கு போங்கள் என்று சொல்கிறார்கள், இது சரியா?   
பதில்: சில நிகழ்வுகளில் இது சரியாக இருக்கலாம். ஒரு சொத்தின் மீது பங்காளி சண்டை இருந்தால் அந்தச் சொத்தின் மீது உரிமையுள்ள ஒருவர் தனக்கு மட்டும் நிலத்தை அபகரித்துக்கொண்டு மற்றவர்களை விரட்ட முயற்சி செய்தால் அதில் யாருக்கு உண்மையான உரிமை உள்ளது என்பதை சிவில் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாத ஒருவர் உங்கள் சொத்தை ஃபோர்ஜரி, ஆள்மாறாட்டம், போலி ஆவணம் முதலிய வழிகளில் அபகரிக்க முயற்சிக்கும்போது அது முழுக்க முழுக்க கிரிமினல் குற்றம் ஆகும்.  
17. மைனர் சொத்தை அவரது தந்தை அல்லது காப்பாளர் விற்பனை செய்தால் வாங்கலாமா?
பதில்: இளையவர் சொத்தை நீதிமன்றத்தின் அனுமதியோடுதான் விற்பனை செய்ய முடியும். அதே போல் அறக்கட்டளைகள் சொத்தையும் நீதிமன்ற அனுமதியோடுதான் விற்பனை செய்ய முடியும்.
18. என் வீட்டின் உண்மையான மதிப்பு 32 லட்சம் தான் ஆனால் சந்தை விலை 41 லட்சமாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த பிரச்னையை யாரிடம் சொல்லி புரிய வைத்து என் வீட்டின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய முடியும்?
பதில்:  கேள்வி 4-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
19. இரண்டு மாதங்களுக்கு முன், என் வீட்டின் சந்தை மதிப்பை விட 5 லட்சத்திற்கு கூடுதலாக பதிவு மற்றும் முத்திரைக் கட்டணத்தை செலுத்திவிட்டேன். இதை திரும்பப் பெற வழி இருக்கிறதா? 
பதில்: நீங்களாக முன் வந்து வற்புறுத்தலின்றி செலுத்தியிருந்தால் அதைத் திரும்பப் பெற சாத்தியமில்லை. மாறாக வலியுறுத்தலின் பேரில் எதிர் உணர்வின் அடிப்படையில் (under protest) செலுத்தியிருந்தால் மேலதிகாரிக்கு முறையீடு செய்து திருப்புத் தொகை (refund) பெறலாம். 
20 என் மனைவியின் அப்பா எனக்கு 10 சென்ட் வீட்டு மனையை தருவதாக சொல்கிறார். இதற்கு நான் எப்படி முத்திரை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்?
பதில்: உங்கள் மனைவியின் பெயரிலோ அல்லது உங்கள் பிள்ளைகள் பெயரிலோ சொத்தை எழுதிக்கொடுப்பதாக இருந்தால், கேள்வி 8-க்கான பதிலை பார்க்கவும். 
உங்களுக்கு நேரடியாக எழுதிக்கொடுப்பதாக இருந்தால் கேள்வி 1-க்கான பதிலைப் பார்க்கவும்.
21. அரசு மதிப்பை விட மனையின் சந்தை விலை குறைவாக இருந்தால், எந்த மதிப்புக்கு நான் பதிவு செய்வது?
பதில்: கேள்வி 4-க்கான பதிலைப் பார்க்கவும்
22.பதிவு செய்த விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. கட்டிய முத்திரை மற்றும் பதிவு கட்டணம் திரும்பக் கிடைக்குமா?
பதில்: ஒரு ஆவணம் பதிவு செய்யப்பட்டுவிட்டால் முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது. ஆவணம் பதிவு செய்யப்படாமல் நிலுவை ஆவணமாக வைக்கப்பட்டு அப்படியே திருப்பி பெறப்பட்டால் முத்திரைத்தீர்வை பதிவுக் கட்டணத்திற்கு திருப்பு தொகை பெறலாம்.
23.பத்திரப் பதிவிற்கு செல்லும்போது சார்பதிவாளர்கள் அதைக் கொண்டு வா? இதை கொண்டு வா என்று அழைக்கழிக்கிறார்கள். பதிவிற்கு நாம் என்னென்ன கையில் கொண்டு செல்ல வேண்டும்?
பதில்: 
A. தயாரிக்கப்பட்ட ஆவணம்
B. வீடு இருந்தால் அதன் முழு விவரம் அடங்கிய படிவம், வரைபடம், மனைப்பிரிவின் அங்கீகாரம் பெற்ற நிலப்படம்.
C. ஆவணதாரர்களின், சாட்சிகளின் புகைப்பட அரசு/அரசுசார்பு அடையாள அட்டைகள் அசலில் மற்றும் சீராக்கப்படிவத்துடன்.
D. பதிவுக் கட்டணம் ரூ. 1000/-க்கு மேல் இருந்தால் கேட்பு காசோலை, முத்திரைத் தீர்வை இட்டது குறைவாக இருப்பின் குறைவுத் தொகை ரூ. 1000/-க்கு மிகுமானால் அதற்கான கேட்பு காசோலை
E. ஆவணதாரர்களை நன்கு அறிந்த இரண்டு சாட்சிகள் (சாட்சிகளை அழைக்காது சென்றுவிட்டு யாரிடமாவது ரூ. 50, ரூ 100 கொடுத்து சாட்சி கையெழுத்து போட வைக்க வேண்டாம். ஏனெனில் பின்னர் சொத்துப் பிரச்சனை வந்தால் சாட்சி சொல்ல ஆளைத் தேடிப் போனால் கிடைக்கமாட்டார்கள். கிடைத்தாலும் சாட்சி சொல்ல ரூ. 1 லட்சம் கொடு ரூ. 2 லட்சம் கொடு என்று கேட்ட முன் உதாரணங்கள் உண்டு)
F. தாய்ப்பத்திரங்கள் அல்லது தாய்ப்பத்திரங்கள் வங்கியில் இருப்பின் அதற்கான வங்கிச்சான்று மற்றும் தொலைந்து போயிருந்தால் அதற்கான காவல்துறை சான்று
G. விவசாய நிலம் என்றால் அரசு வழங்கிய பட்டா முதலிய வருவாய்த்துறை சான்றுகள்
H. வீடு என்றால் விற்பவர், எழுதிக்கொடுப்பவர் பெயரில் உள்ள சொத்துவரி முதலிய விவரங்கள். 
I. வாரிசு முறைப்படி சொத்து வந்திருந்தால் சொத்து உரிமையாளரின் வாரிசு இவர்தான் என்பதை நிலைநாட்ட வாரிசுச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ்
J. சொத்து பற்றிய நடப்பு வில்லங்கச் சான்று விற்பவர், எழுதிக்கொடுப்பவர் பெயரில் இருக்க வேண்டும் (கடந்த 10 நாட்களுக்குள் வாங்கி இருக்க வேண்டும்)
K. ஆலய, வக்பு நிலம் என்றால் தடையின்மைச் சான்று (NOC)
L. விவசாய நிலம் மனைப் பிரிவு ஆக்கப்படுமானால் மாவட்ட ஆட்சியரின் தடையின்மை சான்று 
M. மனைப்பிரிவுக்கான DTCP/CMDA ஏற்பளிப்பு.
N. ஆவணதாரர்களில் வயோதிகம் காரணமாக வர இயலாதவர்கள் மருத்துவமனைகளில் உள்ளவர்கள் பொருட்டு பதிவாளர் அங்கே வர வேண்டுமென்றால் முன்பே மருத்துவர்களிடம் சான்று பெற்று உரிய கட்டணம் செலுத்தி பதிவாளரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
O. குறைவு முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டுமென்றால் அதற்கு தனியான விண்ணப்பம்
P. இரண்டாம், மூன்றாம் படி ஆவணங்கள் (Duplicate,Triplicate) பதிவு செய்ய தனியே விண்ணப்பம்.
Q. ஆவணதாரர்களில் எவரேனும் பதிவு அன்று வர இயலாவிட்டால் அவர்களுக்காக ஆவணத்தை (வந்தவர்கள் பொறுத்து பதிவை முடித்து) நிலுவையில் வைக்க தனியே விண்ணப்பம்.
R. பொது அதிகார ஆவணத்தின் மூலம் பதிவு செய்ய வரும்பொழுது பொது அதிகாரம் வழங்கிய முதல்வர் (பிரின்சிபால்) உயிரோடிருக்கிறார் என்பதற்கான சான்று.
24. எனக்கு கிரயம் எழுதிக்கொடுத்தவர் எழுதிக்கொடுத்த பின் பின் வாங்குகிறார். என்ன செய்வது?
பதில்: எழுதிக்கொடுத்தவர் திடீரென பின்வாங்கினால் பதற வேண்டாம். ஆவணத்தை எழுதி வாங்கியவர் அதைத் தாக்கல் செய்து வராமலிருப்பவருக்கு அழைப்பானை அனுப்பும் "கட்டாயப் பதிவு" என்று அழைக்கப்படும் நடைமுறையைப் பின்பற்றலாம். இதில் எழுதிக்கொடுத்தவர் சார் பதிவாளர் முன்பு வந்து எழுதிக்கொடுத்தது உண்மைதான் ஆனால் இப்பொழுது எனக்கு விற்க சம்மதமில்லை அல்லது கூடுதல் தொகை வேண்டும் என்று கேட்பாரானால் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் ஒப்புதல் கையெழுத்து போடாமலேயே ஆவணத்தைப் பதிவு செய்து வில்லங்கச் சான்றில் இடம்பெறச் செய்ய சட்டத்தில் வழி உள்ளது.    
25. உயிலை எழுதி வைத்தவர் அதனை பதிவு செய்யாமலேயே இறந்துவிட்டார். அதனை தற்போது பதிவு செய்ய இயலுமா?
பதில்: உயில் மட்டுமல்ல கிரயம் போன்ற ஆவணங்களைக் கூட எழுதிக்கொடுத்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களது சட்டபூர்வமான வாரிசுகள், சாட்சிகள், ஆவண எழுத்தர் முதலியவர்களை அழைத்து விசாரித்து ஆவணம் இறந்து போனவரால்தான் எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது குறித்து பதிவாளர் மனநிறைவடைந்தால் அந்த உயிலையோ அல்லது கிரய ஆவணத்தையோ பதிவு செய்து வில்லங்கச் சான்றில் ஏற்ற முடியும்.
26. வில்லங்கம், வில்லங்கச் சான்று என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன?
பதில்: உங்கள் அசையாச் சொத்தின் மீது எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் வில்லங்கக் குறிப்பு என்றே அழைக்கப்படும். அது வில்லங்கச் சான்றில் குறிக்கப்படும். உதாரணமாக உங்கள் தந்தை பூர்விகமாக அனுபவித்து வந்த ஒருவரிடமிருந்து அறுபது ஆண்டுகளுக்கு முன் சொத்து ஒன்றை வாங்கியிருந்தால் அந்தக் குறிப்பும் அதன் பின் உங்கள் தந்தையார் வாங்கிய கடன் மீதான அடைமானம், அது செல்லடித்ததற்கான ரசீது அனைத்தும் பதிவு செய்யப்பட்டால் வில்லங்கச் சான்றில் இடம்பெறும். இதே சொத்தை அவர் உங்களுக்கு தான பத்திரம் எழுதி கைமாற்றிக்கொடுத்திருந்தால் அதுவும் வில்லங்கச் சான்றில் இடம்பெறும். எனவே சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், அவர் சம்மதம் இல்லாமல் சொத்தின் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதுதான் உண்மையான வில்லங்கம் ஆகும். மற்றவையெல்லாம் சாதாரண பதிவு குறிப்புகளே. எனவே வில்லங்கச் சான்றை பதிவு குறிப்பு சான்று என்று அழைப்பதே சரி.      
****************************************நன்றி : நாணயம்விகடன் - 05.11.2015 

Tuesday, August 16, 2016

கிரிமினல் கேஸ் - எக்ஸ்பார்ட்டி - தீர்ப்பு


கிரிமினல் கேஸ்-எக்ஸ்பார்ட்டி-என்ன செய்ய வேண்டும்?

மதுரை: 'கிரிமினல் வழக்கில் மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்பதற்காக ஒருதலைப்பட்சமாக (எக்ஸ்பார்ட்டி) தீர்ப்பளிக்க சட்டத்தில் இடமில்லை. ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரம் செல்வம். அருப்புக்கோட்டை கற்பகம். இவர்களுக்கு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். 

செல்வத்திற்கு எதிராக அவதுாறு வழக்கு மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நிவாரணம் கோரி அருப்புக்கோட்டை நீதித்துறை நடுவர் (ஜே.எம்.,) நீதிமன்றத்தில் கற்பகம் மனு செய்தார்.

செல்வத்திற்கு 2 மாதம் சிறை தண்டனை, 2000 ரூபாய் அபராதம் விதித்து, கற்பகத்திற்கு சில நிவாரணம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செல்வம் மேல்முறையீடு செய்தார். செல்வம் தரப்பில் தொடர்ந்து முறையாக யாரும் ஆஜராகாததால், நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக (எக்ஸ்பார்ட்டி) தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து செல்வம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.தேவதாஸ் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் நாகேந்திரன் ஆஜரானார்.
நீதிபதி: கிரிமினல் வழக்கில், மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தொடர்ந்து முறையாக ஆஜராகவில்லை எனக்கூறி, கீழமை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தது சரியான நடை முறையல்ல. அவ்வாறு செய்ய சட்டத்தில் இடமில்லை.

இது திருமண விவகாரம் தொடர்பான வழக்கு. மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகாவிட்டாலும், நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறேன். ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் மனுதாரர், எதிர்மனுதாரர் ஆக.,22 ல் ஆஜராக வேண்டும்.
அந்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 16.08.2016

Monday, August 15, 2016

மரங்களுக்கும் இன்சூரன்ஸ்


மரங்களுக்கும் இன்சூரன்ஸ் - என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மரங்களுக்கு காப்பீடு செய்யும் திட்டத்தை கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி தமிழகத்தில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இதை செயல்படுத்த முன்வந்துள்ளது. மனிதர்களின் எதிர்காலத்தை காப்பீடு முடிவுசெய்வதுபோல் பயிர்களுக்கும் காப்பீடு என்பது இன்றைய சூழலில் அவசியமானதாகிறது.அந்த வரிசையில் மரங்களுக்கான இன்சூரன்ஸ் விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அடிப்படை நிபந்தனைகள்

* இன்சூரன்ஸ் என்றதும்,  'இருக்கிற செலவில் இதுவேறயா' என எரிச்சலாகாதீர்கள். உற்பத்திச் செலவில் வெறும் 1.25 சதவீத தொகையை பிரிமியமாக செலுத்தினால் போதுமானது.

* தமிழ்நாட்டில் ஏழு வகையான மரங்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அமலில் உள்ளது. தைலம், சவுக்கு, சூபாபுல், சிசு, மலைவேம்பு, தீக்குச்சி , குமிழ் போன்ற மரங்களை பயிர் செய்து வரும் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

* இயற்கையாக ஏற்படக்கூடிய தீ விபத்துக்கள், வன விலங்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், புயலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், வெள்ளம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் போன்ற அனைத்து விபத்துகளுக்கும் இந்த காப்பீட்டுத்திட்டம் பொருந்தும்.

* இவை மட்டுமல்லாது பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கும் இந்த காப்பீட்டுத் திட்டமானது பொருந்தும். ஆனால் இதற்கான பிரிமியம் தொகை சற்று அதிகம்.

* 300 ரூபாயிலிருந்து 750 ரூபாய் வரை ஒரு ஏக்கருக்கு ஓர் ஆண்டிற்கான பிரிமியம் தொகையை நாம் இன்சூரன்ஸ்  நிறுவனத்திடம் செலுத்த வேண்டி இருக்கும். மேற்குறிப்பிட்ட இடர்ப்பாடுகள் நமக்கு நேரிடும்போது நாம் செய்துள்ள இன்சூரன்ஸ் நமது நஸ்டத்தை சமாளிக்க வல்லதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

* தமிழகத்தில் இந்தத் திட்டமானது தமிழ்நாடு காகிதக் கூழ் நிறுவனம் மூலம்வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒப்பந்த முறை சாகுபடியை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி இது வரை சுமார் 5000 ஏக்கர் தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மரங்களின் பரப்பளவும் அதிகரித்ததோடு மரங்களின் பயன்பாடுகள் அதிகமுள்ள தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான மரத் தேவைகளை தாமே நிவர்த்தி செய்து கொள்கின்றன.

* இத்திட்டத்தில் பயன்பெற நாம் ஒப்பந்த முறை சாகுபடி திட்டத்தில் உறுப்பினராக சேர வேண்டும்.

இதில் உறுப்பினராக சேர விரும்புவோர், 

முதல்வர், 
வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
தமிழ் நாடு வேளாண் பல்கலைக் கழகம், 
மேட்டுப்பாளையம் – 641 301 

ஐ தொடர்பு கொள்ளலாம்.

- மு.முருகன்
(மாணவப் பத்திரிகையாளர்)

நன்றி : விகடன் செய்திகள் - 15.08.2016

குழந்தைகளை காணவில்லை - புகார்


குழந்தைகளை காணவில்லை - புகார் - என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் மாயமான 47 குழந்தைகளின் பெற்றோருக்கு 4 மாதத்துக்குள் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘சென்னையில் ரோட்டோரங்களில் வசிக்கும் குழந்தைகள் கடத்தப் படுவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் கடத்தல்காரர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் தெரு வோரம் வசித்து வந்த 8 மாத குழந்தை ரோசன், 9 மாத குழந்தை சரண்யா ஆகியோர் கடத்தப் பட்டுள்ளனர். அந்த பச்சிளம் குழந்தைகளைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. எனவே அவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு:

போலீஸார் தாக்கல் செய் துள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் 47 குழந்தை கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப் பதாகவும், இந்த வழக்கில் தொடர் புடைய 2 குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும் கூறி யுள்ளனர். குழந்தை கடத்தலை தடுக்க ரேஞ்ச் வாரியாக தனிப் பிரிவு தொடங்கவும், குழந்தை கடத்தலை சிபிசிஐடி ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை மாயமாகி 4 மாதங்களுக்குள் மீட்கப்பட வில்லை என்றால் அந்த வழக்கை சிபிசிஐடி ஆள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவு இதுவரை கடை பிடிக்கப்படவில்லை. பெரும் பாலான குழந்தை கடத்தல் வழக்குகளில் இன்னும் எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். குழந்தை ஒருவேளை மீட்கப்பட்டாலும்கூட கடத்தல் கும்பலின் பின்னணியை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட அளவில் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு போதிய போலீஸார் இல்லை என்பதால் குழந்தை கடத்தல் வழக்குகளை சரியாக விசாரிக்க முடியவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு மாவட்டத் திலும் பிரத்யேகமாக தனிப் பிரிவை ஏற்படுத்தி போதிய எண்ணிக்கையில் போலீஸாரை பணியமர்த்த வேண்டும்.

இழப்பீட்டை பொறுத்தவரை 47 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டியுள்ளது. ஏற் கெனவே 7 ஆண்டுகளுக்கு மேலான வழக்குகளுக்கு ரூ.3 லட்ச மும், 3 ஆண்டுகளுக்கு மேலான வழக்குகளுக்கு ரூ.2 லட்சமும், ஓராண்டுக்கு மேலான வழக்கு களுக்கு ரூ.1 லட்சமும் இடைக் கால நிவாரணமாக வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் உள்ள 47 குழந்தைகளின் குடும்பத்தா ருக்கும் இந்த தொகையை 4 மாதத்தில் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.08.2016

Saturday, August 13, 2016

செல்வமகள் சேமிப்புத்திட்டம்


செல்வமகள் சேமிப்புத்திட்டம் - என்ன செய்ய வேண்டும்?

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். 

இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் மோடி அரசினால் பெண் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். 

இத்திட்டத்தின் கீழ் இது வரை 76 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டுளதாகவும் 3,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது இந்தக் கணக்கின் பழைய விதி முறைகளில் இருந்து சில விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் இங்குச் செல்வ மகள் திட்டத்தைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விதிமுறைகளை பார்ப்போம்.

கணக்கைத் திறத்தல் 

ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை துவங்க இயலும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கைத் திறக்க இயலும்.

தகுதி 

இத்திட்டத்தின் பதிவு காலம் முழுவதும் இந்தப் பெண்குழந்தை பெண் குழந்தை கண்டிப்பாக இந்திய குடியுரிமை பெற்றி இருத்தல் வேண்டும். ஒருவேலை குடியுரிமை மாற்றப்பட்டால் வட்டி பெற இயலாது மற்றும் கணக்கை அத்துடன் உரியக் காலத்திற்கு முன்னரே மூடப்படும்.

காலம் 

கணக்கைத் திறப்பதில் இருந்து 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய இயலும். இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதிகபட்ச முதலீடு 14 வருடங்களே இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டு முறை 

பணம் மற்றும் செக் வாயிலாக பணம் செலுத்தும் முறை மட்டும் இல்லாமல் நீங்கள் கணக்கு துவங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் மைய வங்கித் தீர்வு இருந்தால் மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம்.

வட்டி விகிதம் 

சிறு சேமிப்பு திட்டம் போல செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறிக் கொண்டே வரும். 2015-2016 வரை 9.2 சதவீதம் இருந்த வட்டி விகிதம் ஜூன் 2016 முதல் 8.6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளை துவங்கு உள்ளவர்கள் எல்லா மதமும் 10-ம் தேதிக்குள் தவணையை கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு வேலை தவறினால் வட்டி குறைந்துவிடும்

முதலீட்டு அளவுகள் 

குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும். ஏதேனும் அதிகப்படியான தொகையை டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் இல்லை. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்பப்பெறலாம்.

கணக்கைத் தொடராத போது

குறைந்தபட்ச தொகையான 1,000 ரூபாயை சரியாகச் செலுத்தவில்லை என்றால் 15 வருடங்கள் கழித்து வரும் போது தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான வருடத்திற்கு 4 சதவீதமாக மட்டுமே பெற இயலும்.

இடை நிறுத்தப்பட்ட கணக்கை மீண்டும் துவங்குதல்:

கணக்கை இடை நிறுத்தப்பட்டு இருக்கும் போது ரூ.50 கடனமாக செலுத்தி மீண்டும் துவங்கலாம்.

வரி 

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த தொகைக்குப் பிரிவு 80சி-இன் கீழ் வரிவிலக்கைப் பெறலாம்.

முதிர்வு 

இந்தக் கணக்கு 21 வயது ஆகும் போது அதன் முதிர்வு காலத்தை அடைந்துவிடும். அதற்குப் பிறகு வட்டி ஏதும் அளிக்கப்படாது. ஆனால் முன்பு கணக்கை மூடும் வரை வட்டி அளிக்கப்படும் என்று இருந்தது.

கணக்கை இடமாற்றுதல்

கணக்கை வெறு வங்கிகளுக்கோ, அல்லது வேறு தபால் நிலைய கிளைகளுக்கோ மாற்ற விரும்பினால் ரூ.100 கட்டணமாகச் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் வீடு மாற்றத்திற்கான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

திரும்பப் பெறுதல் 

முன்பு ஒருவர் 50 சதவீதம் வரை திரட்டப்பட்ட தொகையில் இருந்து 18 வயது நிரம்பியதற்கான சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்களை செலுத்தி செலவுக்காக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இப்போது எவ்வளவு தொகை கட்டணமாகச் செலுத்த வேண்டுமோ அதை மட்டுமே பெற இயலும். மொத்தமாக எடுக்க வேண்டும் என்றால் ஐந்து தவணையாக எடுத்துக்கொல்லலாம்.

முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுதல் 

முன்பு எப்போது வேண்டும் என்றால் சாத்தியம். ஆனால் இப்போது குறைந்தது 5 ஆண்டுகளை நிறைவு செய்த பிறகே கணக்கை மூட இயலும். சில சமயங்களில் ஏதேனும் மருத்துவ உதவி, நோய், காப்பாளர் போன்ற சில காரணங்களின் போது முன்பாகவே பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்குகளின் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

மூடல் நேரத்தில் தேவைப்படும் ஆவணங்கள் 

கணக்கை மூடும் நேரத்தில் அடையாள அட்டை, வீட்டு முகவைச் சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்.

செல்வ மகள் திட்டம் எதனால் முக்கியம்?

முதலீடு செய்து சேமிப்பதற்கு மியூச்சுவல் ஃபண்ட் பொன்று நிறையப் பல திட்டங்கள் இருந்தாலும் செல்வ மகள் திட்டம் திட்டத்தில் எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லை என்பதே இதன் மிகப்பெரிய சாதகமாகும். மேலும் இதன் மூலம் எவ்வளவு சேமிக்க இயலும், லாபம் பெற இயலும் என்று எல்லா வற்றையும் எளிதாக கணக்கிட இயலும்.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 14.08.2016

பெண்கள் மொபைலில் பதிவு


பெண்கள் மொபைலில் பதிவு - என்ன செய்ய வேண்டும்?

பெண்கள் தங்கள் மொபைலில் பதிந்திருக்க வேண்டிய 10 ஆப்ஸ்!

1. சேஃப்டி பின்:

இந்த ஆப் முழுவதும் பர்சனல் செக்யூரிட்டியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. இது அவசர எண் பதிவு, திசை வழிகாட்டல் என பல அம்சங்களை உள்ளடக்கியது. இதில் பாதுகாப்பான இடங்களைப்  பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த ஆப் ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பானிஷ் என மூன்று மொழிகளில் கிடைக்கிறது. நமக்கு ஏற்ற மொழிகளை இதில் பதிவிறக்கம் செய்யலாம்.

2. ரக்‌ஷா:


இதில் உங்களுக்கு நெருங்கியவரின் எண்ணை பதிந்து வைத்து விட வேண்டும். நீங்கள் ஆபத்தான தருணத்தில் இருந்தால், கொடுக்கப்பட்டிருக்கும் பட்டனை அழுத்தினால் போதும், அவர்களுக்கு அலர்ட் மெசேஜ் செல்லும். அதாவது அந்த குறிப்பிட்ட நபருக்கு தகவல் சென்று சேர, வால்யூம் பட்டனை மூன்று நொடிகள் அழுத்தினால் போதும், அவருக்கு அலர்ட் சென்று சேரும்.

3. ஹிம்மாட்:

டெல்லி போலீஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ஆப். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்தவுடன் டெல்லி போலீஸ் வெப்சைட்டில் தேவைப்படும் தகவல்களைப் பதிய வேண்டும். பதிவு நிறைவு செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். இந்த எண்ணை டைப் செய்து உங்களுடைய பதிவை உறுதி செய்து கொள்ளலாம். 

எதிர்பாராத விதமாக பிரச்னைகள் ஏற்படும் போது SOS Alert இந்த ஆப் வழியாக, இருக்கும் இடத்தின் விபரத்தோடு, ஆடியோ மற்றும் வீடியோ பதிவானது டெல்லி போலீஸாருக்கு தெரிவிக்கப்படும்.

4.பெண்கள் பாதுகாப்பு:


நீங்கள் ஆபத்தான ஒரு இடத்திலோ அல்லது சூழ்நிலையிலோ மாட்டிக் கொண்டால், நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்திருக்கும் எண்ணுக்கு, நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியானது கூகுள் மேப் மூலம்  டைப் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுவிடும். மேலும், உங்களின் எதிரில் இருக்கும் இரண்டு படங்களையும் எடுத்து, சர்வருடன் தானாக இணைப்பட்டு குறிப்பிட்டுள்ள நபருக்கு அனுப்பிவிடும். இதில், மூன்று பட்டன்கள் இருக்கின்றன. சூழல்களைப் பொறுத்து அந்த பட்டன்களை அழுத்துவதன் வாயிலாகச் செய்தியானது உங்களின் நெருங்கியவருக்குச் சென்று விடும். அதைப் பொறுத்து உங்களைக்  காப்பாற்றும் முயற்சியினை அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

5. ஸ்மார்ட் 24X7


பல மாநிலங்களின் போலீஸாருடன் இணைக்கப்பட்டிருக்கிறது இந்த ஆப். முக்கியமாகப் பெண்கள் மற்றும் முதியோருக்கு இது பெருமளவில் உதவுகிறது. இந்த ஆப் வாயிலாக பேனிக் அலர்ட்டானது அவரச காலத்தில் அனுப்பப்படும். இந்த ஆப்பில் பேனிக் பட்டனுடன், வாய்ஸ் மற்றும் அந்த இடத்தின் படங்கள் என அனைத்து தகவல்களும், ஒரு சேர குறிப்பிட்டுள்ள நபருக்குச் சென்றுவிடும். எந்த மாதிரியான உதவிகள் வேண்டும் என்பதைப் பொறுத்து பட்டன்களை தட்டி, சப்மிட் கொடுத்து விட்டால் உங்களுக்கான உதவியானது உங்களைச் சார்ந்தவரிடமிருந்து வரும்.

6. ஷேக் 2 சேஃப்டி:


மிகவும் சுலபமாகப் பயன்படுத்தக் கூடிய ஆப் இது. அவசர காலத்தில் ஸ்மார்ட்போனை ஷேக் செய்தால் போதும் அல்லது பவர் பட்டனை நான்கு முறை அழுத்தினாலே நீங்கள் பதிவு செய்துள்ள நபருக்கு உங்களுடைய 'உதவி தேவை' என்ற செய்தியானது சென்று விடும். லாக் ஸ்கிரீனுடன் இதனை பதிவு செய்து கொள்ளலாம். உங்களைத் தவிர மற்றவரும் இந்த எண்ணைப் பார்த்துவிட்டு அவருக்குப் பதிலளிக்கலாம். இதற்கு இன்டர்நெட் கனெக்‌ஷன் தேவையில்லை. விபத்து, பாலியல் தொந்தரவு, கொள்ளை, இயற்கை சீரழிவு போன்ற காலங்களில் பெரும் உதவியாக இருக்கும்.

7. என் பில்:


குழந்தைப்பேறுக்காக காத்திருக்கிறீர்களா?... உங்களுக்கே உங்களுக்கான ஆப் தான் இது. மாதவிடாயின் போது எவ்வளவு உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. எப்பொழுது நீங்கள் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுது, நீங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும். எந்தெந்த நாட்களில், என்னென்ன மாதிரியான சிம்டம்ஸ் இருக்கும் என அவ்வப்போது உங்களுக்கு தகவல் சொல்லிவிடும் இந்த ஆப்.

8. சிடோர் ஸ்குவாட்:


பெண்களுக்குப் பெரிய பிரச்னையே டாய்லெட் பிரச்னைதான். பயணம் செய்யும் இடங்கள் அல்லது புது இடங்களில் ரெஸ்ட் ரூம் எங்கே இருக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிடும், இந்த ஆப். உங்களுக்கு அருகாமையில் உள்ள ரெஸ்ட் ரூம்களை பயன்படுத்தியவர்களின் கமெண்ட்ஸ் அனைத்தையும் காண்பித்து விடும் என்பதால் உங்களுக்கு சிரமம் கொடுக்காமல் நல்ல ரெஸ்ட்ரூம்களை உங்களுக்குக் கண்டுபிடித்து தந்து விடும். ஸோ, கூலாகப் பயணம் செய்யலாம்.  

9.ஒ.பி.ஐ:


எந்த கலர் நெயில் பாலிஷ் உங்களது உடல் நிறத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என்பதை உங்களுக்குக் காட்டிவிடும் இந்த ஆப். இந்த ஆப்பின் கேமரா வாயிலாக உங்கள் விரலை படம் எடுத்தால்,  எந்த கலர் உங்களுக்கு கச்சிதமாக இருக்கும் என்பதற்கான ஆப்ஷன்களை காட்டிவிடும். அதற்கு பிறகு என்ன...? உங்களுக்கு ஏற்ற நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாமே..?

10. மிண்ட்:


பட்ஜெட்டை எப்படி மெயின்டெயின் செய்வது என்று தெரியவில்லை. எழுதி வைக்கவோ, நினைவில் வைக்கவோ நேரம் இல்லை என்பவர்களுக்கு இந்த ஆப் ஒரு வரப் பிரசாதம். இதில் உங்களுடைய பேங்க் அக்கவுன்ட் மற்றும் கிரடிட் கார்ட் போன்ற தகவல்களைப் பதிவு செய்து, உங்களுடைய செலவுகளை டைப் செய்து பதிவு செய்து கொண்டே வந்தால், ஒவ்வொரு மாதத்திலும் நீங்கள் செய்திருக்கும் செலவு கணக்கினை துல்லியமாக காண்பிக்கும். கடந்த மாதம் எவ்வளவு செலவாகியிருக்கிறது. இந்த மாதம் எவ்வளவு செலவு என்பதையும் உங்களுக்கு கம்பேர் செய்து காண்பித்து விடும்.

- வே. கிருஷ்ணவேணி

நன்றி : விகடன் செய்திகள் - 12.08.2016