disalbe Right click

Wednesday, September 14, 2016

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482


குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482

உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் அளிக்கப்படுகின்ற புகார்களை அவர்கள் பதிவு செய்ய மறுக்கின்ற போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ்வர்களிடம் அதுபற்றிய  புகாரினை ( ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத்தபால் மூலம்) அனுப்பி, உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளுக்கு ஒரு நெருக்கடியை மனுதாரர் ஏற்படுத்த முடியும். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நமது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது?

இதுபோன்ற சூழ்நிலையில் குற்ற விசாரனை முறைச் சட்டம் பிரிவு 156(3)ன் கீழ், நாம் நீதிமன்றத்தை நாடுவது நல்ல பலனைத்தரும்.  இதனையே சுருக்கமாக கோர்ட் டைரக்‌ஷன் என்கிறார்கள்.

சிலர் இதற்காக நேரடியாக உயர்நீதிமன்றத்தினை நாடுகிறார்கள். அது அவசியமில்லை. நேரடியாக இதற்காக தங்களை அணுகக்கூடாது என்று உயர்நீதி மன்றமும் அறிவித்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகினாலே போதுமானது. 

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482ன் கீழ் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு சாதகமாக நீதிமன்றமானது   உத்தரவிடலாம்.

இந்தப் பிரிவின் கீழ், போலீசில் அளிக்கப்படும் புகார்களை அவர்கள்   பதிவு செய்யாதபோது, அவற்றை பதிவு செய்ய அவர்களுக்கு  உத்தரவிடும் படியும், நடைபெறுகின்ற விசாரணையை வேறு ஏஜன்சிக்கு மாற்றவும், வழக்கை ரத்து செய்யவும் நாம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கலாம்.

*******************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Monday, September 12, 2016

மொட்டைக்கடிதம்


மொட்டைக்கடிதம் - என்ன செய்ய வேண்டும்?

மொட்டை கடிதத்தால் இடமாற்றம், பள்ளிக்கல்வி துறை உத்தரவு ரத்து!

சென்னை: போலி கடிதத்தின் அடிப்படையில், கல்வித்துறை அதிகாரிகள் இருவரை, இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில், கணேசன் மற்றும் ராஜன், அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர். இவர்கள் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கடிதம் வந்தது.

மனு தாக்கல் : 

அதில், பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலில் சிலரை சேர்ப்பதற்கு பணம் கேட்டதாக கூறப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தின் அடிப்படையில், இருவரையும் இடமாற்றம் செய்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், இருவரும் மனு தாக்கல் செய்தனர்; மனுக்களை, நீதிபதி பி.ராஜேந்திரன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் டி.ஆனந்தி, 'லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்த கடிதம், மனுதாரர்களுக்கு தரப்படவில்லை' என்றார். அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர், 'லஞ்ச ஒழிப்பு துறை பெற்ற கடிதம் போலியானது' என்றார்.

 நீதிபதி பி.ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவு: 

எந்த விசாரணையும் நடத்தாமல், போலி கடிதத்தின் அடிப்படையில் இயந்திரத்தனமாக இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன; அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. 

இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிப்பதற்கு முன், அந்த கடிதம் உண்மையானது தானா என, அதிகாரிகள் விசாரணை செய்திருக்க வேண்டும்; 

மனுதாரர்களுக்கு கடித நகல்களை அளித்திருக்க வேண்டும்.

லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்த கடிதத்தின் அடிப்படையில் தான், இந்த இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன; 

நிர்வாக தேவைக்காக, இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை.

விசாரணை

எனவே, இடமாறுதல் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. இவர்கள், விடுமுறையில் இருந்த நாட்களை, பணியில் இருந்ததாக கருத வேண்டும். கடிதத்தை அனுப்பியது யார், பின்னணி என்ன என்பது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 10.09.2016



Sunday, September 11, 2016

வேட்பாளரின் தகுதி


வேட்பாளரின் தகுதி - என்ன செய்ய வேண்டும்?

ஓட்டளித்து வேட்பாளரைத் தேர்வு செய்யும் வாக்காளராகிய நமக்கு என சில தகுதிகளும், தகுதிக்கேடுகளும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போலவே, வேட்பாளருக்கு என சில தகுதிகளும், தகுதிக்கேடுகள் பற்றியும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ( Representation of the People Act 1951) -ல் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பாகம் II ல் தகுதிகள் மற்றும் தகுதிக் கேடுகள் எனும் தலைப்பில் அத்தியாயம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் குறிப்பிடப் பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினருக்கான தகுதியாக, இந்தியாவில் பாரளுமன்றத் தொகுதி ஒன்றில் அவர் வாக்காளராக இருந்தால் மட்டுமே ஏதேனும் மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் பிரதிநிதியாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படத் தகுதியுடையவர் ஆவார். இதில் உட்பொருளாக மற்றொன்றும் குறிப்பாகிறது.

வாக்காளர் தகுதி:
வாக்காளராக அவர் இருக்க வேண்டும் எனும் வாசகத்தின்படி, அவர் வாக்காளராக இருக்க வேண்டும் எனில் சென்ற கட்டுரையில் நாம் பார்த்தபடி வாக்காளருக்கான தகுதிகளோடும், தகுதிக் கேடுகள் ஏதும் இல்லாமலும் இருக்க வேண்டும். வேட்பாளராக இருப்பவர், வாக்காளராக இருக்க வேண்டும். 

வாக்காளராக இருப்பவர், இந்திய பீனல் கோடு படி 171 E (Punishment for Bribery) 171F-ன் கீழ் (Punishment for undue influence or persination at an election) ஆகிய குற்றங்களின் படி தண்டனை பெற்றவராக இருக்ககூடாது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி  
பிரிவு 8A (1) ன் கீழ் குடியரசுத் தலைவரின் முடிவினால் ஏதேனும் காலத்திற்கு தகுதியின்மை செய்யப்பட்டிருந்தால் அதே காலத்துக்கு வாக்களுக்கும் உரிமை கிடையாது.

பிரிவு 125 (தேர்தல் தொடர்பான குற்றச் செயல்கள்)
பிரிவு 135 (ஓட்டுச் சாவடியில் இருந்து ஓட்டுச் சீட்டுகளை அப்புறப்படுத்துவது ஒரு குற்றச் செயலாக இருத்தல்)
பிரிவு 136 (பிற குற்றச் செயல்களும் அதற்கான தண்டனைகளும்) ஆகிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருக்கக்கூடாது.

மேற்சொன்ன பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படத்தக்க ஒர் குற்றத்திற்காக குற்றத் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பின் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் ஓட்டளிக்கத் தகுதியற்றவர் ஆகிறார். 

ஆக, வாக்காளராக இருக்க மேற்சொன்ன சூழலில் இல்லாதவராகவும், மேலும் வாக்காளருக்கான தகுதிகளான வயது வரம்பு, வாக்காளர் பட்டியலில் பெயர் இருத்தல் ஆகியவையும் கொண்ட நபர் ஒருவர் வாக்காளர் ஆக ஆன பின்பு, வேட்பாளராகலாம் என்றே இந்தச் சட்டம் சொல்கிறது. 

அதாவது மேற்சொன்ன சூழலில் ஒருவர் தண்டிக்கப்பட்டிருந்தால் அவருக்கு வாக்காளராகும் தகுதி இல்லை. 

 வாக்காளர் ஆகாதவர் வேட்பாளராக இயலாது.

வேட்பாளராக தகுதி
மக்களவை உறுப்பினருக்கான தகுதிகளாக பிரிவு 4 சொல்வதாவது,

ஏதேனும் மாநிலத்தில் அட்டவணை சாதியினருக்கு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர் அந்த மாநிலத்தின் அல்லது வேரு ஏதேனும் மாநிலத்தின் அட்டவணை சாதியினைச் சார்ந்தவராகவும் மற்றும் ஏதேனும் மக்களவைத் தொகுதியில் வாக்களராகவும் இருக்க வேண்டும்.

பிரிவு 5 மாநில சட்டமன்றங்களின் உறுப்பினருக்கான தகுதிகள் என இவற்றையே சொல்கிறது.

சட்டமன்ற மேலவை உறுப்பினருக்கான தகுதிகள் என்பது, மேற்சொன்னபடியே, ஒருவர் ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவை இடத்தை தேர்தல் மூலம் நிரப்பபட் அதேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் அந்த மாநிலத்தின் வேறு ஏதேனும் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளராக இருக்கவேண்டும், 

மற்றும் மாநில சட்டமன்ற மேலவையில் ஒர்ர் இடத்தை நிரப்ப ஆளூனர் மூலம் நியமனம் செய்யப்பட தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் அந்த மாநிலத்தில் சாதாரணமாக வசிப்பிடம் கொண்டிருத்தல் வேண்டும் என சட்டமன்ற மேலவை உறுப்பினருக்கான தகுதிகள் பற்றி இதே சட்டத்தின் பிரிவு 6 கூறுகிறது.

தகுதியின்மைகள்
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு உறுப்பினராக தகுதிகளைப் பார்த்தோம். தகுதியின்மைகள் பற்றி இதே சட்டத்தின் அத்தியாயம் III விளக்குகிறது. இதில் பிரிவு 8-ல் ஒருவர் தண்டனைக் கைதியாக விதிக்கப்பட்டிருந்தால் கீழ்கண்ட தண்டனைக்குரியவராவார்.

இந்திய குற்றவியல் விதித்தொகுப்பு (மத்திய சட்டம் XLV-1860ல்)-ன் படி…

மதச் சார்பாக, இனம், பிறந்த இடம் குடியிருப்பு, மொழி, மற்ற பிற வகையில் பகைமை வளர்ப்பவராக, 
அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவராக (பிரிவு 152 A)
இந்தியன் பீனல் கோடு -படி…

லஞ்ச குற்றம் (பிரிவு171 E),
தகாத செல்வாக்கு செய்பவராக அல்லது தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்தவராக(171F),படி தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது.

பலாத்கார குற்றங்கள் (பிரிவு 376 - (1)), 376 - (2),
பலாத்காரம் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் சாவுக்கு காரணமாக இருத்தல்/வெஜிடேடிவ் நிலைக்கு ஆளாக்குதல்(பிரிவு376 A)

விவாகரத்து வழக்கு நிலுவையில் பிரிந்திருக்கும் மனைவியுடன் இணைதல் (பிரிவு376 B,)

Sexual intercourse by person in authority (பிரிவு376 C),
கூட்டுக் கற்பழிப்பு (பிரிவு376 D),

அல்லது

பெண்ணுக்கு கணவனால் அல்லது கணவனின் உறவினரால் கொடுமை செய்த குற்றத்திற்காக (பிரிவு 498-A),

Protection of civil rights 1955 -ன் கீழான தீண்டாமை போதித்தல், நடைமுறைப்படுத்துதல் போன்ற குற்றங்கள்,

சுங்க வரிச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்தல்,

Unlawful Activities (prevention) Act 1967 -இன் கீழ் சட்டத்திற்கு புறம்பான சங்கத்தில் உறுப்பினராக இருத்தல்

Foreign Exchange Act 1973, போதை மருந்து மற்றும் மயக்கம் தரும் பொருட்கள் சட்டம், Terrorist and Disruptives Activities (Prevention) Act-ன் பிரிவுகள் 3, 4 ந் கீழான குற்றங்கள்,

எனப் பலவேறு குற்றங்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8ல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

அவற்றின் கீழான குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர் எவரும் பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு உறுப்பினராக தகுதியாக முடியாது.

மேலும், தேர்தலின் போது ஊழல் புரிந்ததாகக் குற்றச் சாட்டு ஏதேனும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து, மேலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 99ல் குறிப்பிடப்பட்டவை காரணமாக நீதி மன்றத்தால் ஆணை வெளியிடப்பட்டிருந்து, அத்தகைய உத்தரவு/ஆணை அமலுக்கு வரும் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் தகுந்த அதிகாரியினால், அந்த நபர் தகுதியின்மையாக்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா? 

வேண்டும் எனில் அத்தனை காலத்திற்கு அது தகுதியின்மையாகக் கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கும் பொருட்டு குடியரசுத் தலைவரிடம் கருத்து சமர்ப்பித்தல் வேண்டும். அப்படியான தகுதியின்மை அந்த உத்தரவு அமலுக்கு வரும் தேதியில் இருந்து 6 வருடங்களுக்கு மேற்படக் கூடாது.

ஊழல் அல்லது தேசப்பற்றுறுதியின்மைக்காகப் பணி நீக்கத்தின் பேரில் தகுதியின்மையும் நேரலாம். 

அதாவது இந்திய / மாநில அரசின் கீழ் அரசுப் பதவி வகித்து, ஊழல் அல்லது தேசப்பற்றுறுதி காரணமாக வேலை இழந்திருந்தால், அதிலிருந்து 5 ஆண்டுகள் வரை தகுதியின்மை செய்யப்படுதல் வேண்டும்.

அரசுடன் வியாபார ஒப்பந்தம் இருந்தால்...
மேலும், அரசுடன், வியாபார ஒப்பந்தம் ஒன்று நிலுவையில் இருக்கையில், அவ்வாறு இருக்கின்ற வரையில் தகுதியின்மை ஆகும். அதாவது, அரசுடன் நேரடி காண்ட்ராக்டில் இருக்கும் ஒருவர், அப்படி இருக்கின்ற சமயத்தில், தகுதியின்மை ஆனவர் ஆகிறார்.

அதே சமயத்தில் அவர் அந்த ஒப்பந்தத்தின் கீழான தன் பகுதியை முடித்திருந்து, ஆனால் ஒப்பந்தத்தின் தன் பகுதியை அரசு நிறைவேற்றவில்லை என்பதால் மட்டுமே ஒப்பந்தம் நிகழ் நிலையில் இருப்பதாகக் கருதப்படக்கூடாது.

அரசு நிறுவனத்தின்கீழான பதவி வகித்தல் காரணமாகவும் தகுதியின்மை ஏற்படலாம்.

 மத்திய / மாநில அரசின் மூலதனப் பங்கு 25%க்கு குறையாமல் உள்ள ஏதேனும் நிறுவனத்தில் / கழகத்தில் மேலாண்மை முகவராகவோ, அல்லது மேலாளர், செயலாளராக இருப்பின் அவ்வாறு இருக்கும் வரை தகுதியின்மையாகும்.

தேர்தல் செலவு கணக்கு
தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்வதற்குத் தவறியுள்ளார் என்றாலோ, அவ்வாறு செய்வதற்கான உரிய சரியான காரணம் ஏதும் இல்லாதிருந்தாலோ, தேர்தல் ஆணையம் அரசிதழின் வாயிலாக அவர் தகுதியின்மை அறிவிக்கலாம்.

ஆனால், தேர்தல் ஆணையமானது காரணங்களைப் பதிவதன் பேரில், விதியின் ஏதேனும் தகுதியின்மையை நீக்கலாம், ஆல்லது தகுதியின்மைக் காலத்தைக் குறைக்கலாம். ஆனால் பிரிவு 8A - ல் குறிப்பிட்ட தகுதியின்மைகள் தவிர…

பொதுவாகச் சொன்னால்..

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தகுதி இழந்திருந்தல்,
தீர்க்கப்படாத கடனாளி, 
இந்தியக் குடிமகனாக இல்லாதிருத்தல், 
வெளீநாட்டின் குடியுரிமையை விரும்பிப் பெற்றிருத்தல், அல்லது ஒரு வெளி நாட்டின் மீது பற்றுக் கொண்டிருப்பதாக ஒப்புக் கொண்டிருத்தல்,
நீதி மன்றத்தால், மனநிலை சரியில்லாதவர் என அறிவிக்கப்பட்டிருத்தல்,
அரசின் கீழ் ஆதாயம் ஈட்டக்கூடிய பதவியில் இருத்தல் ஆகியவை உறுப்பினராகும் தகுதியின்மைகள் ஆகும்.

உறுப்பினர் தகுதி இழப்பு 
ஒரு சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரே நபர் உறுப்பினராக இருத்தல் இயலாது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினராக ஒரே நபர் ஒரே நேரத்தில் இருத்தல் இயலாது.

ஒரு் சட்டப்பேரவை உறுப்பினர் தமது கையெழுத்தில் பேரவைத் தலைவருக்கு விலகல் கடிதத்தை அனுப்பி பேரவைத் தலைவரால் அது ஏற்றுக் கொள்ளப்படுமே ஆனால், அவர் அப்பதவியை இழப்பார். 

ஆனால் அப்பதவி விலகல் தன்னிச்சையானதல்ல என்ற முடிவுக்கு பேரவைத் தலைவர் வருவாரேயானால் அப்பதவி விலகல் ஏற்கப்பட மாட்டாது.

ஒரு பேரவை உறுப்பினர் அவையின் அனுமதியின்றி தொடர்ந்து 60நாட்களுக்கு வாரமல் இருப்பின் அவ்வுறுப்பினரை பதவி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.

பதவி ஏற்புப் பிரமாணம் மேற்கொள்ளும் முன்பாகவோ,
உறுப்பினர் தகுதியை இழந்துள்ளதை அறிந்த பின்னரோ,
சட்டப் பேரவை விதிகளின்படி தடுக்கப்பட்ட பின்னரோ, ஒரு சட்டப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதும், வாக்களிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு ஒரு நபர் பங்கேற்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படும்.

இது வரை, வேட்பாளராக, உறுப்பினராக இருக்க வேண்டிய தகுதிகள், தகுதியின்மைகள், தகுதி இழப்புகள் பற்றி அறிந்தோம்.

அடுத்தடுத்த வாரங்களில், வாக்காளர்களாகிய நம் ஒவ்வொருவரும் தெரிந்திக்க வேண்டிய, தேர்தல் நடமுறை, தேர்தல் ஆணையம், போன்றவை பற்றி அலசுவோம்.

தொடருவோம் நம் பயணத்தை..நம் உரிமைகளை அறிந்தபடி…
- ஹன்ஸா

நன்றி : தினமலர் நாளிதழ் - 11.02.2016

வாக்காளர் தகுதி


வாக்காளர் தகுதி - என்ன செய்ய வேண்டும்?
தேர்தல் வருகிறது.

தேர்தலில் நிற்கும் வாக்காளருக்கான தகுதி பற்றி கொஞ்சமேனும் நாம் அறிவோம். 

ஆனால், வாக்களிக்கும் நமக்கும் சில தகுதிகளை தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. சட்டமும் அதையே வலியுறுத்துகிறது.

ஆம். வாக்காளப் பெருமக்களாகிய நமக்கும் வாக்களிக்க என சில தகுதிகளை சட்டம் வலியுறுத்துகிறது.

இனி இந்தக் கட்டுரைத் தொடரில், தேர்தல் சட்டங்கள் பற்றியும், கொஞ்சம் தேர்தல் வம்பும் பார்க்க்விருக்கிறோம்.

முதலில் நம்மைப் பற்றி அறிந்து கொள்வோம். 
அதாவது வாக்காளர் என்றால் யார் என சட்டம் ஏதும் சொல்லி இருக்கிறதா?

 சொல்லி இருக்கிறது என்றால் என்ன சொல்லி இருக்கிறது?

வாக்காளராக இருப்பதற்கு வயது தவிர வேறென்ன காரணிகள் என்பனவற்றை முதலில் தெரிந்து கொள்வோம்.

கள்ள ஓட்டு போடுதல், பொய்யான வாக்குச் சீட்டு வைத்திருத்தல், வாக்குப் பெட்டியைக் கைப்பற்றுதல், ஊழல், கையூட்டுக் குற்றம், தேர்தல் தொடர்பாக பகைமையை வளர்த்து விடுதல், போன்ற குற்றங்களுக்கு அதற்கு அந்தந்த பிரிவுகளில் குறிப்பிடப்ப்ட்ட தண்டனைகளோடு வாக்களிக்கும் உரிமையும் (சில கட்டளைகளுக்குட்பட்டு) பறி போகும் என்பது நாம் அனைவரும் அறிந்திந்திருக்குக்றோமா?

வாக்குப் பெட்டிக்குள் வாக்குச் சீட்டு தவிர வேறேதேனும் பொருட்களைப் போடுதல், வாக்குச் சீட்டில் பெயரை அல்லது குறிப்பிட்ட தகவல்களை அழித்தல், மாற்றுதல், உருக்குலைத்தல் என எதனைச் செய்தாலும், அல்லது அதிகாரம் இன்றி வாக்குப் பெட்டியை எடுத்துச் செல்லுதல், வாக்குச் சீட்டைப் பிரித்தல், படித்தல் என எதைச் செய்தாலும், இந்த சட்டத்தில் குறிப்பிட்ட தண்டனை தவிர, குற்றம் செய்தவருக்கு வாக்களிக்கும் உரிமையும் 6வருடங்கள் வரை கூட இல்லாமல் தகுதியின்மை ஆக்கப்படலாம்.

இனி வாக்காளர் தகுதியின்மை பற்றி சற்று விரிவாகக் காண்போம்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ”வாக்காளர்” என்றால் என்னவென்று பகுதி 1, பிரிவு 2-ல், உட்பிரிவு (e) -ல் வரையறுத்திருக்கிறது.

பிரிவு 2(e)வாக்காளர் எனில் தொகுதி ஒன்றின் தொடர்பில் நபரொருவரின் பெயர் அப்போதைக்கு செயல்லாற்றலிலுள்ள வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, பிரிவு 11ல் குறிப்பிடப்பெற்ற ஏதேனும் தகுதிக் கேடுகளுக்கு உட்படாத நபர் எனப் பொருள்படும்.

அதாவது வாக்காளர் என்றால், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும்.(அதில் பெயர் இடம் பெற வேறு தகுதிகள்) மற்றும் இதே சட்டத்தின் பிரிவு 11ல் வாக்காளராக இருப்பவருக்கு சில தகுதிக் குறைபாடுகள் இருக்ககூடாது எனச் சொல்கிறது. அந்தக் குறைப்பாடுகளுக்கு உட்படாத நபர் வாக்காளர் என்கிறது.

வாக்காளர் என்பதற்கான விளக்கத்தில் இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் இடம் பெறுதல்.

இதே சட்டத்தின் பிரிவு 11ல் குறிப்பிடப்பெற்ற ஏதேனும் தகுதிக் கேடுகளுக்கு உட்படாத நபர்.

பிரிவு 11, மற்றும் 11A கூறுவதாவது..

பிரிவு 11 தகுதி இன்மைக் காலத்தை நீக்குதல் அல்லது குறைத்தல் பற்றிச் சொல்கிறது. தேர்தல் ஆணையமானது, ஏதாவது காரணங்களின் அடிப்படையில், பதிவின் பேரில் இவ்விதியின் (பிரிவு 8A வின் கீழ் தவிர)(பிரிவு 8 வேட்பாளர்களின் தகுதியின்மை பற்றிச் சொல்கிறது.) கீழான ஏதேனும் தகுதியின்மையினை நீக்கலாம் அல்லது அத்தகைய தகுதியின்மைக் காலத்தைக் குறைக்கலாம்.

பிரிவு 11A சொல்லுவது: குற்றத் தீர்ப்பு மற்றும் ஊழல் செய் நடவடிக்கைகளினால் எழும் தகுதியின்மை பற்றிச் சொல்கிறது.

அதாவது வாக்களிக்கததகுதியாக குற்றத் தீர்ப்பு மற்றும் ஊழல் செய் நடவைக்கைகளினால் எழும் தகுதியின்மை பற்றித்தான் அப்படிச் சொல்கிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 171 E (Punishment for Bribery) அல்லது 171F-ன் கீழ் (Punishment for undue influence or persination at an election)அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவு 125 / பிரிவு 136 -ன் உட்பிரிவு (2) கூறு (அ) வின் கீழ் தண்டிக்கப்படத்தக்க ஒர் குற்றத்திற்காக குற்றத் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பின் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.

 அப்படியாயின் அந்த சட்டப்ப்பிரிவுகள் என்ன சொல்கின்றன?

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 125 சொல்வதாவது: 

தேர்தல் தொடர்பாக வகுப்புகளுக்கிடையே பகைமையை வளர்த்தல் பற்றி அதை வாக்காளருக்கான தகுதிக் குறைவாகச் சொல்கிறது.

மேற்கண்ட குற்றத்தைச் செய்து, மூன்றாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்கு சிறைத் தண்டனையோ அல்லது பணத் தண்டனையோ அல்லது இரண்டும் பெற்று பிரிவு 125ன் கீழ் தண்டனை பெற்றிருந்தால் அவர் அந்த குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.

அதே போல, பிரிவு 136ல் 'பிற குற்றச் செயல்களுக்கான தண்டனைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்ட குற்றங்களில் ஏதேனும் செய்து, தண்டனைத் தீர்ப்பு பெற்றவரும் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.

வேட்புமனு எதனையேனும் மோசடியாக உருக்குலைத்தல், அழித்தல் அல்லது தேர்தல் அதிகாரியால் அல்லது அவரது ஆணையின் கீழ் ஒட்டப்பட்டுள்ள பெயர்ப்பட்டியல், அறிவிப்பு பிற ஆவணங்கள், வாக்குச் சீட்டு, அதில் உள்ள அதிகாரக் குறியீடு எதையேனும், உருக்குலைத்தல், அழித்தல் என ஏதும் செய்தாலோ,

உரிய அதிகாரம் இன்றி, எவருக்கும் வாக்குச்சீட்டு வழங்குதல், பெறுதல், கைவசம் வைத்திருத்தல் இவற்றைச் செய்தாலோ,

வாக்குப் பெட்டிக்குள் போடுவதற்கு அதிகாரம் இல்லாத எதையேனும் மோசடியாகப் போட்டாலோ,

வாக்குப் பெட்டி, சீட்டு எதையும் அழித்தல், எடுத்துச் செல்லுதல், பிரித்துப் பார்த்தல் அல்லது அதற்கு இடையூறு விளைவித்தல் என எதுவும் செய்தாலோ,
மேற்குறியவற்றைச் செய்ய உதவி செய்தலோ,

அப்படிச் செய்தவர், தேர்தல் அலுவலராகவோ, உதவித் தேர்தல் அலுவலராகவோ, வாக்குச் சாவடி தலைமை அலுவலராகவோ அல்லது தேர்தல் தொடர்பான பணி அமர்த்தப்பட்டவராகவோ இருப்பின் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கத்தக்க சிறைத் தண்டனையோ, பணத்தண்டனையோ அல்லது இரண்டுமோ,
விதிக்கப்படும்.

இந்த குற்றங்களைச் செய்தவர், பிற நபராக இருக்கும்பட்சத்தில், 6 மாதம் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனையோ, பணத் தண்டமோ, அல்லது இரண்டுமோ தண்டனையாக அளிக்கப்படும். 

இந்த தண்டனையைப் பெற்றவர்கள்… அந்த குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.

மேலும் ஒரு நபர் பிரிவு 8A (1) -ன் கீழ் குடியரசுத் தலைவரின் முடிவினால் ஏதேனும் காலத்திற்கு தகுதியின்மை செய்யப்பட்டால் அதே காலத்திற்கு தேர்தலில் தகுதியின்மை செய்யப்படும். 

அதாவது இதே சட்டத்தின் பிரிவு 99ன் கீழ் ஓர் உத்தரவு மூலம் ஊழல் நடவடிக்கை செய்ததாகக் கண்டறியப்படும் நபர் தகுதியின்மையாக்கப்பட வேண்டுமா?

 வேண்டும் எனில் எவ்வளவு காலத்திற்கு எனும் வினாவை தீர்மானிக்கும் பொருட்டு குடியரசுத் தலைவரிடம் சமர்பிக்கப்பட்டு எடுக்கப்படும் முடிவின்படி தகுதியின்மை செய்யப்படலாம். 

அந்தத் தகுதியின்மைக் காலமானது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து என்னேர்விலும் 6 வருடங்களுக்கு மேற்படலாகது. 

இந்த முடிவு எடுக்க 90நாட்களே அதிகபட்சம் என இந்த சட்டப்பிரிவு குறிப்பிடுகிறது.

பிரிவு 11A(3) -ன் படி மக்களவையின் ஈரவைகளில் ஒன்றிற்கு உறுப்பினராக அல்லது மாநிலம் ஒன்றின் சட்டமன்றம் அல்லது சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது இருப்பதற்கு தகுதியிழப்பு பொறுத்து ஏதேனும் நபரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு மீது குடியரசுத் தலைவரின் முடிவானது, அதே அளவிற்கு, தேர்தல் சட்டங்கள் (திருத்தச்)சட்டம் 1975 தொடங்குவதற்கு உடன், முன்னர் இருந்தது போன்று, இந்தச் சட்டத்தின் பிரிவு 11-A (1)(b) -ன் கீழ் வாக்களிப்பதற்கு ஏற்பட்ட தகுதியிழப்பு பொறுத்து, அத்தகைய முடிவு சொல்லப்பட்ட வாக்களிப்பு தகுதி இழப்புக்கும் கூட அந்த முடிவு பொருந்துவனவாகும்.'”

மேற்சொன்ன பிரிவு 11 A முழுவதும் வாக்களிக்கத் தகுதி இன்மை பற்றிச் சொல்கிறது.

ஆனால், தேர்தல் ஆணையமானது, சரியான காரணத்தைப் பதிவதன் மூலம், மேற்சொன்ன 11A(3) தகுதி இழப்பை நீக்கலாம்.

மேற்சொன்னவை எல்லாம் எவை எல்லாம் 'வாக்காளருக்கான” தகுதி இன்மைகள்.

அப்படியாயின் வாக்காளர் என்றால் யாரெல்லாம்?
பொதுவாக வசிக்கும் இடத்தில், அந்தத் தொகுதியில், வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட, 18 வயதுக்கு மேல் வயதான, ஆனால், மனநிலைப் பிறழ்வு, மேற்குறிப்பிட்ட வாக்காளர் தகுதியின்மைக்குள் வராத, எவரும் வாக்காளரே.

இவற்றைக் குறிப்பிட்டு வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் வாக்காளர் அட்டை பெற்றுவிட்டதாலேயே நாம் வாக்களித்துவிட முடியாது.

 EPIC எனப்படும் Election Photo Idendy Card தேர்தல் வாக்களிக்க கட்டாயம் என்றே தேர்தல் கமிஷன் கூறுகிறது. 

அதே சமயம் இந்த அடையாள அட்டையுடன், கூட நம்முடைய பெயர் Electoral Roll -ல் இருந்தாக வேண்டும். இல்லை எனில் வாக்களிக்க இயலாது.

எனவே நமது பெயர், இருக்கிறதா, இல்லையா என்பதை நிச்சயித்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகிறது. ஏனெனில், ஓட்டளிப்பது நம் உரிமை.
வரும் வாரங்களில், ஓட்டளிப்பவர் செய்யக்கூடிய, செய்யக்கூடாதவை பற்றியும், அதற்கான பலன்கள் பற்றியும், சில வழக்குகளோடும், தொடர்ந்து எலக்ஷன் கமிஷன் பற்றிய முக்கிய வழக்குகளோடு ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டிய தகவல் பலவோடும் சந்திக்கவிருக்கிறோம்.
தொடர்வோம் நம் பயணத்தை.
- ஹன்ஸா

நன்றி : தினமலர் நாளிதழ் - 02.02.2016

அரசு வழக்கறிஞர்


அரசு வழக்கறிஞர் - என்ன செய்ய வேண்டும்?

சட்டம் தெரிஞ்சுக்கலாம் வாங்க...

அரசு வழக்கறிஞர் என்பவர் ஏன் நியமிக்கப்பட வேண்டும்? அதன் அவசியம் என்ன?

எந்த ஒரு குற்றம் நிகழ்ந்தாலும் அந்த குற்ற சம்பவம் சம்பந்தப்பட்டவரை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கும் தன்மை கொண்டது.

 குற்றம் செய்த ஒருவன் தன்னுடைய செல்வாக்கினால் வழக்கில் சிக்காமல் வெளியே வந்து மீண்டும், மீண்டும் குற்றங்களை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.

தவிர, பாதிக்கப்பட்டவர் பொருளாதாரத்தில் பின் தங்கியவராக, பின்புலம் இல்லாதவராக இருக்கும் பட்சத்தில் அவர் தனக்கென்று வழக்கறிஞர் ஒருவரை நியமித்து வழக்கு நடத்தும் போது அவர் மிரட்டப்படலாம். அதையடுத்து அந்த வழக்கு இல்லாமல் போகும் நிலை உருவாகலாம்.

இந்த நிலை வராமல் இருப்பதற்காகவே குற்றங்களை முற்றிலுமாக களையும் நோக்கில் பாதிக்கப்பட்டவர் சார்பாக அரசே வழக்கை நடத்தி வருகிறது.

 Cr.P.C. 1973, பிரிவு 24-இன் கீழ் அரசு குற்றத்துறை வழக்கறிஞரும், பிரிவு 25-இன் கீழ் அரசு குற்றத்துறை உதவி வழக்கறிஞர்களும் நியமிக்கப் படுகின்றனர்.

வழக்கமாக, ஒவ்வோர் அமர்வு நீதிமன்றத்தில் நடகும் வழக்கு விசாரணையில் “அரசு குற்றத்துறை வழக்கறிஞர் ( Public Prosecutor) ஏற்று நடத்த வேண்டும் என்று பிரிவு 225 உரைக்கிறது. 

அதே போல், மாஜிஸ்டிரேட் முன் நடத்தப்படும் வழக்குகளை Assitant Public Prosecutors என்று சொல்லப்படும் அரசு குற்றத்துறை உதவி வழக்கறிஞர்களால் நடத்தப்படுகின்றன.

இவர்கள் வழக்கு எந்த நீதிமன்றத்தின் முன் விசாரணையில் உள்ளதோ அந்த நீதிமன்றத்தின் முன் தோன்றி, எழுத்து மூலம் எவ்வித அதிகாரமும் இன்றி, வாதாடலாம் என்று பிரிவு 301(1) கூறுகிறது.

உண்மையிலேயே, அரசு சார்பாக வழக்கை ஏற்று நடத்தும் பொறுப்பும், கடமையும் வாய்ந்த இவர்கள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்டிரேட்டின் முன் அனுமதி பெற்றுத் தான் வழக்கை நடத்த வேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை என்று பிரிவு 302(1) அதிகாரம் அளிக்கிறது.

தன்னை நியமித்த அதிகார அமைப்பு உட்பட யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுயமாக செயல்படக்கூடிய கம்பீரமான இந்த பதவியில் உள்ள அரசுத்துறை வழக்கறிஞர்கள் காவல்துறை கொடுக்கும் சாட்சியம் மற்றும் ஆவணங்களை (ஒரு வேளை அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக இருந்தாலும் கூட) நீதிமன்றத்தில் சமர்ப்பித்து குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையிலேயே குற்றவாளி தானா என்பதை உறுதிப்படுத்த நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும்.

சுருக்கமாக சொன்னால், அரசு குற்றத்துறை வழக்கறிஞர் என்பவர் அரசின் பிரதிநிதியாக செயல்பட வேண்டுமேயன்றி காவல்துறையின் ஏஜண்ட் போல் செயல்படக்கூடாது. 

அவர் நீதியை நிலை நாட்ட உதவும் நீதி தேவதையின் பிரதிநிதியாக மட்டுமே இருக்க வேண்டும்!

சில நேர்வுகளில், அரசு குற்றத்துறை வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பாக ஆஜராக வேண்டிய அவசியம் கூட நேரலாம் என்பதற்கு சாட்சியாக நிற்கிறது பின் வரும் வழக்கு.

Suneel Kumar Pal Vs. Phota Sheikh [(1984) S.C.C. (Cri.) 18]

By, சரவண அர்விந்த், Founder, LAW FOUNDATION

Friday, September 9, 2016

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா


‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’- என்ன செய்ய வேண்டும்?
சொந்த வீடு என்பது மனித வாழ்க்கையில் பெருங்கனவு. அதிக வருவாய் ஈட்டுவோருக்குச் சொந்த வீடு கனவு எளிதாக நிறைவேறிவிடும். நடுத்தரக் குடும்பத்தினர் பெரும்பாலும் வங்கிகளில் கடன் வாங்கி சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக்கொள்கிறார்கள். ஆனால், ஏழை மக்களுக்குச் சொந்த வீடு என்பதெல்லாம் கனவாக மட்டுமே இருக்கும். 
காலம் முழுவதும் வாடகை வீட்டிலேயே வாழக்கையை நகர்த்தும் அவர்களுக்கும் வீடு கட்டும் ஆசையை நிறைவேற்றுகிறது அனைவருக்கும் வீடு திட்டம்.
தற்போது தமிழகத்தின் பல பகுதிகளிலும் அனைவருக்கும் வீடு திட்டத்தின்படி தகுதியுள்ள பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற சொந்தமாக 325 சதுர அடிக்குச் குறையாமல் இடம் இருக்க வேண்டும். மூன்று லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு வங்கியில் 2.10 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாத கடன் வழங்கப்படும் என்று அறிவிப்புகளைச் செய்தித் தாள்களிலும், அரசு அலுவலக அறிவிப்புப் பலகைகளிலும் பார்த்திருப்பீர்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எனப் பல அலுவலங்களில் இதற்கான விண்ணப்பங்களை வாங்க மக்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
‘அனைவருக்கும் வீடு’ திட்டம் என்பது என்ன?
‘அனைவருக்கும் வீடு’ என்பது மத்திய அரசின் திட்டம். 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் இதை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும் வீடு கட்டலாம். அடிப்படை உரிமையான சொந்த வீட்டை ஏழை மக்களும் அடைய வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள திட்டம். ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிரதம மந்திரி குடியிருப்புக் கட்டும் திட்டம்) என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும் ‘அனைவருக்கும் வீடு’ என்று அறிவிக்கப்பட்ட திட்டம்தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டமாக மாறியது. இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த 7 ஆண்டுகளில் இரண்டு கோடிக்கும் அதிகமாக வீடுகளை நாடு முழுவதும் கட்ட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் குறிக்கோள். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2022-ம் ஆண்டில் நிறைவு பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவார்கள்?
இந்தத் திட்டத்தை மூன்று கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுக்குள் 100 நகரங்களில் ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதற்கான மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி முடிப்பது, அடுத்த கட்டமாக 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மொத்தம் 200 நகரங்களில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்வது, மூன்றாவது கட்டமாக எஞ்சிய நகரங்களில் 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுக்குள் வீடு கட்டும் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்வது எனத் திட்டமிடப்பட்டு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீடு கட்டுவதில் மானியம்
இந்தத் திட்டம் பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரை இலக்காகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவினர் முதன் முறையாக வீடு கட்டினாலோ வாங்கினாலோ மானியம் அளிப்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயம். ஒரு லட்சம் ரூபாய் முதல் 2.30 லட்சம் ரூபாய் வரை மானியமாகக் கிடைக்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் பெறும் பயனாளி ஒருவருக்கு வட்டியில் 6.5 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் பெண் உறுப்பினர்களுக்கு இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. பொதுவாக வீடு பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டால் முன்னுரிமை கிடைக்கும். எனவே இந்தத் திட்டத்தைப் பெண்கள் நலம் சார்ந்த திட்டம் என்றும் அழைத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காத (பசுமை வீடு) வகையிலான தொழில்நுட்பங்களைப் புகுத்திக் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.
அதிக வருவாய் ஈட்டுவோராக இருந்தாலும், நடுத்தரக் குடும்பத்தினராக இருந்தாலும் வீட்டுக் கடன் வாங்கி தவணையைச் செலுத்தி முடிப்பதற்குத் திணறிவிடுவார்கள். பொருளாதரத்தில் நலிந்த பிரிவினர் என்றால் அவர்களுக்கு இன்னும் சிக்கலாகிவிடும். இதைக் கருத்தில்கொண்டு இந்தத் திட்டத்தில் வீட்டுக் கடன் பெறுவர்களுக்கு மாதத் தவணை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்தியாவில் வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி வீதம் 9.40 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உள்ளது.
ஆனால், வீடு வாங்க 6 லட்சம் ரூபாயை 15 ஆண்டு கால அவகாசத்தில் கடனாகப் பெற்றால் மாதத் தவணை மாதந்தோறும் 6,632 ரூபாய் என்ற அளவில் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 6.5 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளதால், கடன் பெற்றவர் மாதந்தோறும் 4,050 ரூபாய் செலுத்தினாலே போதுமானது. எனவே தவணைத் தொகையில் சுமார் 2000 ரூபாய் குறைந்துவிடும்.
இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு மத்திய அரசு சராசரியாக ஒரு லட்சம் ரூபாயை வழங்கும். பொருளாதரத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருவாய் ஈட்டுவோருக்கு 6.5 சதவீதம் மானியமும் வழங்கப்படும். நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்கள் கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய் பெறலாம். இவர்கள் நகர்ப்புறங்களில் சொந்த வீட்டை கட்டலாம் அல்லது ஏற்கெனவே வீடு இருந்தால் அந்த வீட்டைப் புதுப்பித்துக்கொள்ளவும் செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் பெறுவதற்கு வசதியாக மானியம் இணைக்கப்பட்ட கடன் திட்டம் வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சில தனியார் வங்கிகளில்கூட இந்த வீட்டுக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 10.09.2016
Related image
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் புதிய மாற்றம்..!
அனைவருக்கும் வீடு திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்குத் தாழ்வார பகுதியை கூடுதலாக விரிவு படுத்திக் கட்ட வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தரக் குடும்பங்கள் அதிகப் பயன் அடைய முடியும். எனவே இந்தத் திட்டத்தில் என்னவெல்லாம் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று விளக்கமாகப் பார்க்கலாம்.
நடுத்தர வருவாய் குடும்பப் பிரிவு -1 
நடுத்தர வருவாய்க் கொண்ட குடும்பங்கள் பிரிவு 1 சேர்ந்தவர்களுக்கு 90 சதுர மீட்டராக இருந்த தாழ்வாரப் பகுதி 120 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது

Image result for பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா

நடுத்தர வருவாய் குடும்பப் பிரிவு -2 
நடுத்தர வருவாய் குடும்பப் பிரிவு -2ன் கீழ் வருபவர்களுக்கு 110 சதுர மீட்டராக இருந்த தாழ்வாரப் பகுதியின் அளவை 150 சதுர மீட்டராக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது
9 லட்சம் கடன் நடுத்தரக் குடும்பப் பிரிவு 1 சேர்ந்தவர்களுக்கு 6 லட்சம் முதல் 12 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 9 லட்சம் வரை 4 சதவீத வட்டி விகித சலுகையுடன் கடன் பெற முடியும்
12 லட்சம் கடன் நடுத்தரக் குடும்பப் பிரிவு 2 சேர்ந்தவர்களுக்கு 12 லட்சம் முதல் 18 லட்சம் ரூபாய் வருவாய் இருந்தால் 12 லட்சம் வரை 3 சதவீத வட்டி சலுகையுடன் கடன் பெற முடியும்
இலக்கு 2022-ம் ஆண்டுக்குள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர் புறங்களில் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள் – 22.11.2017 

குற்றவாளிகளின் ஜாதகம் பெற


குற்றவாளிகளின் ஜாதகம் பெற என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் முதல் முறையாக, கோபியில் கைதான, ஏ.டி.எம்., கார்டு மோசடி மன்னனின் ஜாதகம், குற்றப் பின்னணி வலைப்பின்னல் திட்டத்தில், பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏ.டி.எம்., மோசடி : 

ஈரோடு மாவட்டம், கோபியைச் சேர்ந்தவர் குருசாமி, 70; ஓய்வு பெற்ற ஆசிரியர். இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கச் சென்ற இவரை ஏமாற்றி, 20 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்ற வழக்கில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளையராஜா, 42, என்பவனை கைது செய்தனர்.

 அவனிடம் விசாரித்ததில், மேலும் பலரது வங்கி கணக்குகளிலும் பணம் திருடியது தெரியவந்தது. அவனிடம், 23 ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின், இளையராஜாவின் அங்க அடையாளம், கை ரேகை, தோற்றம், உருவம், நண்பர்கள், உறவினர்கள், அவனுடன் தொடர்புள்ளவர்கள் என, அவனது ஜாதகம் அனைத்தையும் சேகரித்து, சி.சி.டி.என்.எஸ்., என்ற குற்றம் மற்றும் குற்றப் பின்னணி கண்டறியும் வலைப்பின்னல் திட்டத்தில் பதிவேற்றம் செய்து உள்ளனர்.

2013ல் அமல் : 

இதனால், அவன் தேசிய அளவில், எங்கு கைவரிசை காட்டியிருந்தாலும், வழக்கில் சிக்கியிருந்தாலும் தெரிந்துவிடும். சி.சி.டி.என்.எஸ்., திட்டம், ஈரோடு மாவட்டத்தில், 2013 செப்., 19ல் அமலானது. 

தற்போது, ஈரோடு மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழக அளவிலும், இளையராஜா ஜாதகம் தான் முதலாவதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என, போலீசார் தெரிவித்தனர்.

நன்றி : தி்னமலர் நாளிதழ் - 09.09.2016

Thursday, September 8, 2016

வாகன ஆவண நகல்களை


வாகன ஆவண நகல்களை கையில் வைத்திருக்கத் தேவையில்லை
என்ன செய்ய வேண்டும்?

வாகனங்களுக்கான ஆவணங்களை எந்நேரமும் கைவசம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதனால் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. காரில் செல்வோர் பையில் வைத்து பத்திரமாக எடுத்துச் சென்றாலும், மறந்துவிட்டு சென்றால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். 


இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், இந்த ஆவணங்களை பராமரிக்க தனி கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. என்னதான் கவர் போட்டு எடுத்துச் சென்றாலும், தவிர்க்க முடியாத நிலைகளில் மழையிலும், வாட்டர் சர்வீஸ் செய்யும்போது நனைந்து அவை சேதமடைந்துவிடுகின்றன.

வாகன தணிக்கையின்போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அறிந்ததுதான். இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு அசத்தலான வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. 

டிஜிலாக்கர் என்று அழைக்கப்படும் இந்த மின்னணு ஆவண பாதுகாப்பு பெட்டகத்திற்கான மொபைல் அப்ளிகேஷன் மூலமாக, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும்.  இந்த வசதி மூலமாக, இனி அரசு துறைகளில் காகிதமில்லா ஆவண புரட்சிக்கு வித்திடும் என்று கருதப்படுகிறது. 

மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன. 

அதாவது, இது ஆன்லைனில் நமது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் தொழில்நுட்பம்தான் இந்த டிஜிலாக்கர். கூகுள் டிரைவ் போன்றே இந்த வசதி தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. எனவே, இது மிகவும் நம்பகமான ஆவண பாதுகாப்பு முறை. 

மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் தனிநபர் சான்றுகள், ஆவணங்களை இந்த டிஜிலாக்கர் மூலமாகவே நேரடியாகவே பெற முடியும். இதன்மூலமாக, டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், வாகன பதிவு ஆவணம் போன்றவற்றை எளிதாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதிலேயே பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். 

இதேபோன்று, சாலை விதிமுறைகளை மீறுவோர்க்கும் இந்த செயலி மூலமாகவே தகவல் அளித்து, அபராதத்தை செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த டிஜிலாக்கரை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது மொபைல்போன் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து கணக்கை துவங்கிக் கொள்ளலாம். 

உங்களது ஆவணங்களை அதிகாரி சரிபார்த்தபின், அந்த ஆவணங்களை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். இயற்கை சீற்றங்கள், ஆவணங்கள் காணாமல் போகும் பிரச்னைகளுக்கும் இது தீர்வாக அமையும். 

டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் என்றில்லை, இதர அரசு ஆவணங்களை பெறுவதற்கும், தற்போதுள்ள ஆவணங்களை ஸ்கேனர் கருவி மூலமாக, சுய கையொப்ப அத்தாட்சியுடன் நீங்களே இதில் பதிவேற்றி பாதுகாக்கும் வசதியையும் அளிக்கும். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. 

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பெற முடியும். தெலங்கானா மற்றும் டெல்லியில் இந்த வசதி முதலில் நடைமுறைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேநேரத்தில், ஹேக்கர்கள் மூலமாக தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதுதான் இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

 Thanks to Mr. Saravana Rajan Updated: Wednesday, September 7, 2016, 

டிரைவ் ஸ்பார்க் ஆப் பீட்