disalbe Right click

Tuesday, September 20, 2016

ஆன்லைன் ரம்மி, ஆடுனா டம்மி


ஆன்லைன் ரம்மி, ஆடுனா டம்மி - என்ன செய்ய வேண்டும்?
அப்படி என்னதான் நடக்கிறது ஆன்லைன் ரம்மியில்?
 - கலங்கடிக்கும் பின்னணி!
‘ஒண்ணு வெச்சா ரெண்டு.. ரெண்டு வெச்சா நாலு’ கணக்காக, நாளொரு விளம்பரமும் பொழுதொரு அறிவிப்புமாக நம்மைச் சீட்டு விளையாட அழைத்துக் கொண்டிருக்கின்றன பல இணைய தளங்கள். ரம்மி சர்க்கிள், ஜங்கிள் ரம்மி, க்ளாஸிக் ரம்மி, ரம்மி மில்லியனர் என்று தொடங்கி பலரும் இதை ஒரு மிகப்பெரிய வியாபாரமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

பிரகாஷ்ராஜ், ராணா போன்ற பிரபலங்கள் தோன்றும் விளம்பரங்கள் இழுப்பது ஒருபுறம் என்றால், ‘நான் ஒரு லட்சம் ஜெயித்தேன்.. நான் 50000 ஜெயித்தேன்’ என்று ஷமீர், குல்கர்னி என யாராரோ இன்னொரு புறம் நம்மை ஈர்க்கப் பாடுபடுகிறார்கள்.

இந்த ஆன் லைன் விளையாட்டுகள், பாதுகாப்பானதா என்பதைவிட தேவையா என்று பார்க்க வேண்டியதாய் இருக்கிறது. மக்களை ஈஸியாக இழுக்கிற, வலையில் விழவைக்கிற ஆட்டங்களில் ரம்மிக்கு முதலிடம் தரலாம். உள்ளே செல்பவர்கள், தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்கலாம் என்பதால், ஒருமுறை தோற்றாலும் அடுத்தமுறை ஜெயிக்கிற ஆசையில் விளையாடிக்கொண்டேதான் இருப்பார்கள்.

இந்தத் தளங்களில், விளையாடி வரும் சிலரைத்தொடர்பு கொண்டோம். அவர்கள் சொல்கிற விஷயமெல்லாம் கொஞ்சம் கிலி ஏற்படுத்தத்தான் செய்கின்றன.

“ஒரு தடவை விளையாடிட்டீங்கன்னா.... அப்பறம் அது உங்களை உள்ள இழுத்துடும். ரம்மி ஒரு மிகப்பெரிய அடிக்‌ஷன். என் தம்பி ஃப்ரெண்ட் விளையாடிட்டிருந்தப் பார்த்து திட்டின நானே ஒரு நாள் அதில் அப்படி என்னதான் இருக்கிறதென பார்ப்போமே என இணைந்தேன். ஒரு கட்டத்துல, ஆஃபீஸ் லீவு போட்டுட்டு விளையாடும் அளவுக்குப் போய்விட்டது” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூர்த்தி.

”நேரத்தை ரொம்பவும் சாப்பிடும்” என்று பயமுறுத்துகிறார் போரூரைச் சேர்ந்த பொறியாளர் ஆதிமூலகிருஷ்ணன். “ஒரு முழு ஞாயிற்றுக்கிழமையும் இதுல உட்கார்ந்தேன் நான். அதுக்கு முந்தின நாள்தான் ஐநூறு ரூபா ஜெயிச்சிருந்தேன். அந்த உற்சாகம்! போகிற காசை விட, இதுக்கு செலவழிக்கற நேரம்தான் ரொம்பவே பயமுறுத்த ஆரம்பிச்சது. அடுத்த நாளே அன் இன்ஸ்டால் பண்ணிட்டேன்” என்கிறார் இவர்.

‘உங்க அக்கவுண்ட்ல பணம் போட்டவுடனே வர்ற முதல் கேம், நல்லா ஜெயிக்கிறாப்பல வரும். ஆர்வத்துல தொடர்ந்து விளையாடினிங்கன்னா அப்புறம் நாமம்தான்! ஆனா ஒண்ணு, ஜெயிச்ச காசை ரிக்வஸ்ட் கொடுத்தா, ரெண்டு நாளில் நம்ப வங்கிக் கணக்குக்கு போட்டுவிட்டுடுறாங்க’ இப்படிச் சொல்கிறார் பேர்லாம் வேண்டாங்க எனும் நண்பர். 

இந்த விளையாட்டில் உங்களுடன் விளையாடுவது யார் என்பது உங்களுக்குத் தெரியாது. நாம் தொடர்பு கொண்ட பலரும் ஒப்புக்கொள்கிற விஷயம் ஒன்று உள்ளது. ’ஏதாவது ஒரு ஆட்டத்தில், நீங்க நூறோ, இருநூறோ ஜெயிச்சீங்கன்னா தொடர்ந்து வர்ற பல ஆட்டங்கள்ல ஜெயிக்கவே முடியாது. 99% அப்படித்தான் அமையும். 

விளையாட வேண்டாம்னு கார்டை ஸ்கூட் (டிராப்) பண்ற மாதிரி சேரவே சேராத கார்டுகள் வந்தாலும் பரவால்லை, மூணு ஜோக்கர், நிறைய ரம்மி சான்ஸ்னு கார்டு வரும். ஒரு கார்டு வந்தா முடிஞ்சுடும் என்பது மாதிரி இருக்கும். ஆனா கூட விளையாடற அஞ்சாறு பேருக்கு கார்டு போய்ட்டு வர்றதுக்குள்ள ஹார்ட் அட்டாக் வர்ற அளவுக்கு டென்ஷனாகும். எத்தனை ரவுண்ட் போனாலும் உங்களுக்கான அந்த ஒரு கார்டு வரவே வராது. மொத்தப் பணமும் போய்விடும்’ என்கிறார்கள். 

அது அப்படி ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கலாம், விளையாடும் ஐந்தில் நிச்சயம் ஒன்றோ, இரண்டோ கம்ப்யூட்டரால் இயக்கப்படும் ப்ரோக்ராமோ என்கிற சந்தேகம் எங்களுக்கு அழுத்தமாக உண்டு என்கிறார்கள் இவர்கள். இன்னும் கூட பல டிரிக்கியான அமைப்புகள் உள்ளன என்றும் சந்தேகிக்கிறார்கள். நீங்கள் வெறுமனே ரம்மியில் தேர்ந்த நபராக மட்டும் இருந்தால் உங்கள் பணம் கோவிந்தா ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்!

இதில் பல வகையான விளையாட்டுகள் உண்டு.

*இரண்டு பேர் கொண்ட டேபிள், மற்றும் ஆறு பேர் விளையாடும் டேபிள் என நம் விருப்பத்துக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வகை ரம்மிகளும் உள்ளன. நாக்கவுட் வகை, பாயிண்ட்ஸ் வகை, 101 பாயிண்ட்ஸ், டீல்ஸ் வகை என நமக்குப் பிடித்த வகையில் விளையாட முடியும்.

*ஒரு பாய்ண்டுக்கு ஐந்து பைசா முதல், 50 ரூபாய், 100 ரூபாய் வரை வைத்து விளையாடலாம். ஒரு கேமில் ஜெயித்தாலும் தோற்றாலும் நிறுத்திவிட்டு வெளியே வந்துவிடலாம்.

*Pool Rummy. இரண்டு பேர் அல்லது ஆறு பேர் சேர்ந்து விளையாடலாம். ஆளுக்கு நூறு ரூபாய் என்றால் ஜெயிக்கறவருக்கு 500 ரூபாய்க்கு மேல் கிடைக்கும்.

*அத்தனை விளையாட்டுகளிலுமே, யார் ஜெயித்தாலும் குறிப்பிட்ட சதவீத தொகை  ‘கம்பேனி’க்குப் போய்விடுகிறது.

* டோர்னமெண்ட் என்றொரு வகை இருக்கிறது. 8 மணிக்கு டோர்னமெண்ட் என்றால், இரண்டு மூன்று மணிநேரங்களுக்கு முன்னதாக ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். ஐயாயிரம் பேர் எல்லாம் கூட விளையாடுவார்கள். ஒவ்வொரு ரவுண்டாக ஆட்கள் வெளியேறி கடைசி டேபிளில் ஆறு பேர் விளையாடுவார்கள். அதில் ஜெயிக்கறவர் ஒரு பெரிய தொகையை ஜெயிக்க முடியும். இதில்தான் ஆயிரங்களில் கட்டணமும், லட்சங்களில் பரிசுத்தொகையும் இருக்கிறது. இதில் ஜெயிப்பவர்கள்தான் விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள். 

*புதிய ஆட்களைக் கவரவும், தோத்தாக்குளிகளை ஆறுதல் படுத்தவும் சில டோர்னமண்ட்களில் இலவச அனுமதியும் உண்டு. இது வாரத்துக்கு ஒன்றிரண்டு கேம்கள் நடக்கும். கூட்டம் பிய்ச்சுக்கும்!

*இதுபோக, புதியவர்கள் பழக டிரையல் கேம்களும் உண்டு. இதற்கு பணம் எதுவும் இல்லை. ஒப்புக்கு சப்பாணியாக விளையாடி, வார்ம் அப் செய்துகொள்ளலாம். 

இதில் சூட்சுமம் அல்லது சூழ்ச்சி என்னவென்றால், இந்தத் தளங்களை நிர்வகிக்கறவர்களே Blog உருவாக்கி ரம்மி விளையாட சிறந்த தளம் இதுதான். இதில் நிறைய பணம் சம்பாதிக்கலாம், அதில் நிச்சயம் பணம் சம்பாதிக்க முடியும் என்கிற ரீதியில் வாசகர்கள் எழுதியதுபோல எழுதிக் கொள்கிறார்கள்.  எல்லா வகை கேம்களும், புதியவர்கள் கூட எளிதாக புரிந்துகொள்ளும்படி, எளிதாக விளையாடும்படி யூஸர் ப்ஃரெண்ட்லியாக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ரொம்பவே கவர்ச்சியாகத்தான் இருக்கும்! உள்ளே போனால், டவுசர் தப்புவது கஷ்டம்தான்! 

அரண்மனைக்கிளி ராஜ்கிரண் போல டவுசர் ஸ்ட்ராங்காக இருந்தால் இறங்கி விளையாடிப்பாருங்கள்!!

கேமிங் என்பது சட்டத்தால் சரிவர நடைமுறைப்படுத்தப்படாததால்,  இதைத் தடை செய்யச் சொல்லி ராமதாஸ் போன்றவர்கள் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்திலிருக்கும் ஒன்றிரண்டு ஓட்டைகளை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு இப்படியான விளையாட்டுக்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொல்பவர்களுக்கு மத்தியில், ‘அதெல்லாம் கரெக்டாதான் இருக்கும்’ என்று நினைப்பவர்களும் உண்டு. 

அதற்காக இந்த கேம் டெவலப்பர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தால், ம்ஹும்! அவ்வளவு ஈஸியாக இல்லை அது. இந்த விளையாட்டின் மெக்கானிசம் குறித்து அதை நடத்துபவர்கள் விரிவாக விளக்கமளிக்க முன்வந்தால், அதைப் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்!

-பரிசல் கிருஷ்ணா

நன்றி : விகடன் செய்திகள் - 20.09.2016



காவல்துறை சட்டங்கள்


காவல்துறை சட்டங்கள் - என்ன செய்ய வேண்டும்?

காவல்நிலையத்தில் எழுத்து மூலமாக புகார் அளிக்கும் மனுதாரரிடம், தங்கள் புகார் மீது இன்ன காரணத்தினால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று காவல்நிலையத்தில் உள்ளவர்கள்தான் எழுதித்தர வேண்டும். அதுதானே நியாயம்!

ஆனால், இன்ன காரணத்தினால் எனது புகார்மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்பதை நான் தெரிந்து கொண்டேன்! அதனால் என் புகார் மனுமீது மேல்நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று மனுதாரரை எழுதிக் கொடுக்க காவல் துறையினர் நிர்ப்பந்தம் செய்கின்றனர்.

இதன்மூலம் மனுதாரர் தானாகவே தனது புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டது போன்ற ஒரு பொய்யா்ன தோற்றத்தை காவல்துறையினர் ஏற்படுத்துகின்றனர்.

பல வருட காலமாக இதுதான் நடந்து வருகிறது.

எந்த சட்டத்தின் அடிப்படையில் இதுபோல தாங்கள் எழுதி வாங்குகிறீர்கள்? என்று காவல்துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நான் தகவல் கேட்டுள்ளேன். 

பதில் தரவில்லை. 01.09.2016 அன்று மேல்முறையீடு செய்துள்ளேன். இது வரையில் பதிலில்லை.

பதில் வாங்காமல் விடமாட்டேன்.

வாடகைத்தாய் - சட்ட என்ன சொல்கிறது?


வாடகைத்தாய் - சட்ட என்ன சொல்கிறது?

ஒரு பிரசவத்தில் ஆணும், பெண்ணும் தவிர மூன்றாவதாக இன்னொரு பெண்ணின் கர்ப்ப்பையை சம்பந்தப்படுத்துவது குறித்த சமீபத்திய மசோதாவில், பணம் கொடுத்து, அதாவது ஒரு பெண்ணின் கர்பப்பையை வாடகைக்கு எடுத்து, அந்த உதவியுடன் பிள்ளை பெறுவதைத்தான் இம்மசோதா ஆதரிக்கவில்லை. மற்றபடி, பணம் கொடுக்காமல் உறவுப் பெண் மூலம் அப்படி பிள்ளை பெறுவதை எதிர்க்கவில்லை.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது என்பது எந்த அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்ததோ அதே அளவுக்கு பல சட்ட சிக்கல்களையும் கொண்டது.

ஒரு குழந்தை எந்தப் பெண் வழி பிறக்கிறதோ அந்தக் குழந்தைக்கு அந்தப் பெண்ணே சட்டபூர்வ தாயார் ஆவார். ஆனால் வாடகைத்தாய் முறையில் ஒரு பெண் வழி குழந்தை பிறந்தாலும், அதன் கரு முட்டை வேறொரு பெண்ணுடையதாக இருக்கிறது. இந்நிலையில் அக்குழந்தையின் பெற்ற தாயார் யார் எனும் கேள்வி எழுகிறது.

பெற்ற தாய் யார்:
ஒரு சிலர் பெற்றவளையும், வேறு சிலர் கருமுட்டையின் சொந்தக்காரியை பெற்றவளாகவும் ஏற்கின்றனர். ஏனெனில், பிள்ளை பெற விரும்பும் ஒரு பெண்ணுக்கு கருமுட்டை வளர்ச்சி சரியாக இல்லாத போது, கருமுட்டை தானம் பெறப்படுவதும் உண்டு. இது போன்ற சூழல்களில், கருமுட்டையின் சொந்தக்காரியை தாயார் எனச் சொல்லாமல், எவர் பிள்ளை பெற விரும்பினாரோ அவரைத்தான் தாயார் என்கிறோம்.

ஆக, பொதுவாகப் பார்க்கையில் எந்தப் பெண் பிள்ளை பெற விரும்புகிறாரோ அவரையே தாயாராகச் சொல்லலாம். எனினும், இப்படிப் பிள்ளை பெறுவதில் பல்வேறு தொழில் நுட்பங்கள் இருப்பதால் பிள்ளை பெற விரும்பும் தம்பதியர், மற்றும் பிள்ளையைச் சுமந்த பெண் இரு தரப்புக்கும் இடையே எழும் ஒப்பந்தங்களே யார் தாயார் என்பதை நிர்ணயிப்பதாக இருந்தன. இப்போதும் இருக்கின்றன.

புதிய மசோதா:
இந்தியாவில் வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்தும் வகையில் இதுவரை தனிச் சட்டம் ஏதும் இல்லை. இதை ஒழுங்குபடுத்தவே, சமீபத்தில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்ட்த்திற்கான மசோதா கொண்டு வரப்பட்ட்து.

இந்தியாவில் 1978ல் கல்கத்தாவில் பிறந்த கனுப்ரியா எனும் துர்காவே IVF (In Vitro Fertilization )இந்த முறையில் பெற்றெடுக்கப்பட்ட முதல் குழந்தை ஆவார். அதன் பிறகிருந்தே Assisted Reproductive Technology (ATR) எனும் தொழில் நுட்பம் பெரிதாக வளர ஆரம்பித்த்து.

இதற்கென தனியானதொரு சட்டம் இல்லாத நிலையில் இந்திய வாடகைத் தாயைப் பயன்படுத்தி பிள்ளை பெற்றுக் கொண்ட ஜெர்மானிய தம்பதிகள் சார்பில் வழக்கிடப்பட்டது. ஜெர்மனியில் வாடகைத் தாய் முறை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதால் அக்குழந்தையை அவர்கள் இந்தியாவிலிருந்து ஜெர்மனி கொண்டு செல்ல இயலவில்லை. இது குறித்த வழக்கை ஒட்டி வாடகைத்தாய் முறை, போன்ற இனப்பெருக்க முறைகளின் சட்ட செல்லுதன்மை குறித்து பேச்சு பெரிதாக எழுந்தது.

யார் வாடகைத் தாய்:
பொதுவாக ஒரு தம்பதியின் கருமுட்டை, விந்தணு இவற்றை இணைத்து அக்கருவை மூன்றாம் பெண்ணின் கர்பப்பையில் வைத்து வளர்ப்பது, அல்லது, ஒரு தம்பதியரில் ஆணின் விந்தணுவை, செயற்கை முறையிலோ, இயற்கை முறையிலோ பெண்ணின் கர்பப்பையில் செலுத்தி கரு உருவாக்கம் செய்து வளர்ப்பது என வெவ்வேறு வழி முறைகள் உண்டு.
இதில் பல்வேறு சட்டச் சிக்கல்களும் உண்டு.

சமீபத்தில் பேசு பொருளாக இருக்கும் வாடகைத்தாய் ஒழுங்குபடுத்து மசோதாவானது வாடகைத்தாய் முறையில் வாடகைத் தாய்க்கு பணம் கொடுத்து பிள்ளை பெறுவதையும், குறிப்பிட்ட இன்னார்தான் வாடகைத்தாயாக இருக்க இயலும் எனவும், குறிப்பிட்ட இன்னார்தான் அப்படி பிள்ளை பெற்றுக் கொள்ள இயலும் எனவும் சொல்கிறது.

முக்கியமாக சொந்தமற்ற ஒருவர் பணம் பெற்றுக் கொண்டு வாடகைத் தாயாக இருப்பதை இந்த மசோதா ஆதரிக்கவில்லை.

இந்நிலையில் மேற்படி ஜெர்மானிய தம்பதியின் வழக்கினை ஒட்டி உச்ச நீதிமன்றம் சில கேள்விகளை இந்திய அரசாங்கத்தின் முன் வைத்த்து.

ஒப்பந்தம் செல்லுமா:

இதுவரை தம்பதியர் மற்றும் வாடகைத் தாய் இரு தரப்பின் ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்தே இது சட்ட செல்லுதன்மை பெற்றிருந்தது. அதாவது, இந்த ஒப்பந்தங்களுக்கு இந்திய ஒப்பந்தச் சட்டம்-1872 தான் அடிப்படையாக இருந்த்து. இதற்கு ART Guidelines பயன்படுத்தப்படுகிறது.
இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் செல்லுதன்மையே இந்த ஒப்பந்தங்களுக்கும் எனில், இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் பிரிவு 23ன் படி, பணம் பெற்றுக் கொண்டு வாடகைத் தாயாக இருப்பது (பொதுக் கொள்கைக்கு எதிரான ஒப்பந்தங்கள் செல்லுபடியாகாது) தவறானது எனச்சொல்லக் கூடியதாக இருக்கிறதா?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 21 ஒரு பெண்ணின் மரியாதைக்குக் குந்தகம் விளைவிப்பதைக் கண்டிக்கிறது. மேற்படி பணம் பெற்று வாடகைத்தாயாக இருக்கும் முறை அப்படியாக பெண்ணின் மரியாதைக்கு குந்தகத்தை விளைவிக்கிறதா? ஒரு ஏழைப்பெண்ணின் ஏழ்மை சுரண்டப்படுகிறதா?

குழந்தையை விற்பதாகுமா
Child trafficking என்பது மற்றவரிடம் பெற்ற பணத்திற்காக தமது குழந்தையை ஈடாக்க் கொடுப்பது எனவும் சொல்லலாம். இந்நிலையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அப்பணத்திற்கு ஈடாக பெற்ற பிள்ளையைத் தருவது என்பது Child trafficking ஆகுமா?

உண்மையில் விந்தணு தவிர இரு வெவ்வேறு பெண்கள் கருவும், உருவும் கொடுத்திருப்பதால் அவ்விரு பெண்களையும் தாய் எனச் சொல்லலாமா? ஏனெனில் உரு கொடுத்த வாடகைத்தாயின் வலியும், கால இழப்பும், உணர்வுப் போராட்டமும் கணக்கில் வைக்கத் தக்கவையே.

இந்த கேள்வியானது அந்த ஜெர்மானியத் தம்பதி வழக்கில் முன் வைக்கப்பட்ட ஒரு வாதமாகும்.
பெற்ற பின் குழந்தையை விற்றால் குற்றம். ஆனால் பெறும் முன்பே பணத்திற்காக குழந்தை விற்கப்படுவதாக இதைக் கொள்ளலாமா?

மேற்கண்ட கேள்விகளால் பணம் பெற்று பிள்ளை பெற்றுத்தரும் இம்முறையை தடை செய்தால் வேறு சில பிரச்சனைகளும் முன் நிற்கின்றன.

பணம் பெற தடை?
சமீபத்திய மசோதா வாடகைத் தாய் பணம் பெறுவதைத் தடுக்கிறது, அதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது என்னவெனில், இது போல பிள்ளை பெற்றுத் தரும் பெண்கள் பெரிதும் பொருளாதாரத்தில் அடிமட்ட நிலையில் இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் ஏமாற்றப்படவே அதிக வாய்ப்பும் உள்ளது.

ஏனெனில், வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்கள் அதிக அளவில் பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களாகவும், தமது குடும்பத்தின் பணத்தேவைக்காகவும் மட்டுமே அப்படி பிள்ளை பெற்றுத் தரத் தயாராக இருப்பதும் கண்கூடு.

இந்த வாடகைத் தாய் முறையில் ஈடுபடுபவர்கள் எவர் எனக் கேட்டால், வாடகைத் தாய், பிள்ளை பெற விரும்பும் தம்பதி, தவிர இதற்கான ஏஜன்சிகளின் பங்கும் பெரிது. லாபம் அடைபவர்கள் எனப்பார்த்தால் இந்த ஏஜன்சிகளே கொள்ளை லாபம் பெறுகின்றன.

இதுவும் போக பிரசவத்தின் போது இவர்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்? அதே சமயத்தில் இவர்களுக்கு ஏதும் ஊறு ஏற்பட்டால், அவர்களின் சொந்த குடும்பத்திற்கும், அவர்களின் சொந்த பிள்ளைகளுக்கும் என்ன பதில்?வலித்துத் துடித்துப் பெற்ற அந்த பிள்ளை பிரசவித்தவுடன் ஒரு வேளை மரணித்தால்? பிள்ளை பெற்றவளுக்கு என்னென்ன உரிமைகள் அக்குழந்தையிடம் உண்டு?

உறவிலேயே வாடகைதாய் சாத்தியமா
எனவேதான் கமர்ஷியலாக பணம் பெற்று பிள்ளை பெறுவதை மேற்சொன்ன மசோதா தடை செய்ய முயற்சிக்கிறது. அதற்கு மாற்றாக, பிள்ளை பெற விரும்பும் தம்பதியினரின், உறவுகளுக்குள்ளேயே பணம் மாற்றாகப் பெறாமல், அவர் ரத்த சம்பந்தமற்றவராக இருப்பினும் குடும்பத்திற்குள்ளேயே வாடகைத் தாயை ஏற்பாடு செய்துகொள்ள சிபாரிசு செய்கிறது.

இந்திய சமூகத்தில் அறிமுகம் இல்லாத நபரிடம் பணம் கொடுத்து பிள்ளை பெறுவதை விடக் கடினம் ஏற்கனவே அறிந்த நபரிடம் உதவி பெறுவது. ஏனெனில், பிள்ளை பெற்ற பிறகு, குழந்தையையும் கொடுத்த பிறகும் அக்குழந்தை பெற்றவளின் பார்வையில் இருக்கும் என்பதால் அதுவே அத்தாய்க்கும், குழந்தைக்கும், பெற்றோர் இருவருக்கும் மன உளைச்சலைத் தரும். இது போக, சமூகத்தில் பிள்ளை பெற இயலாதவர்களை இரக்கத்துடன் பார்ப்பதே நடக்கும். இந்நிலையில் சமமானவர்களிடம் பிள்ளை பெறுவதென்பது இயலாத ஒன்றே.

வாடகைத் தாய் முறையில் பொதுவாக பிள்ளை பெறுவதில் சிக்கல் உள்ள உடல் நிலையிக் கொண்ட தம்பதிகளே ஈடுபடுகிறார்கள் எனினும், பிரசவ துன்பத்தை அனுபவிக்கப் பயந்த பெண்களும், தொழிலில் வளர்ந்து வருகையில் பிள்ளைப் பேற்றுக்கு நேரம் ஒத்துக்க இயலாதவர்களும், ஓரினச் சேர்க்கயாளர்களும், திருமணத்தை விரும்பாத நபர்களும் கூட இந்த முறையில் தன் இனத்தைப் பெருக்க இயலும்.

மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே அனுமதி
ஆனால், இதில் மருத்துவ காரணங்கள் கொண்ட தம்பதியரைத் தவிர மற்றவர்கள் இவ்விதத்தில் பிள்ளை பெறுவதை இம்மசோதா ஏற்கவில்லை. வேறு வழியில்லாத சமயத்திலேயே மூன்றாம் நபர் கர்ப்பப்பை உதவிக்கு வரலாம் என சட்டம் நினைக்கிறது.
இம்முறையைத் தவறாகப் பயன்படுத்தி இயற்கைக்கு மாறாக மட்டுமே பிள்ளை பெறுதல் எனும் நிகழ்வு அமைந்துவிடலாம் எனும் கருத்தும் நிலவுகிறது.

அதாவது, பிள்ளை பெறுதல் எனும் நிகழ்வில் ஆண் பெண் தவிர, பிள்ளை பெற என்றே ஒரு இனம் உருவாகும் அளவுக்கு இது ஒரு தொழிலாக மாறிவிடுமோ எனும் அச்சமும் மசோதாவின் இந்தத் தடைகளுக்குக் காரணம் எனலாம்.

க்ளோனிங் போன்ற இனப்பெருக்கம் சார்ந்த தொழில் நுட்பம் வளரத் தொடங்கியபோது, மனித க்ளோனிங் தடை செய்யப்பட இந்தக் கருத்தே காரணம். ஆனால் வாடகைத் தாய் முறையில், எப்படியும், ஆணின் விந்து எனும் ஒரு அம்சம் தேவையானதாகவே இருக்கிறது.
மேலும் ஒரு நபர் (single parent), ஓரினச் சேர்க்கையாளர்கள் போன்றோர் இப்படிப் பிள்ளை பெறுவதை இச்சட்டம் தடுப்பது என்பது கால மாற்றத்தை எதிர்ப்பது போலவே உள்ளது.

வாடகைத்தாய் முறையில் உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு விடை காண்பதோடு, வேறு சிலவற்றையும் இந்தச் சட்டம் கணக்கில் கொள்ள வேண்டும்.

வாடகைத்தாய் முறை ஏஜன்ஸிகள், தமது சேவை குறித்த விளம்பரங்களை வெளியிடுதல் கூடாது எனவும், வாடகைத்தாய் கருவுற்றிருக்கும் போது அபார்ஷன் ஆனால் அந்த மருத்துவச் செலவு, பிள்ளை பெற்ற பின் அவளுக்கு மருத்துவ உதவி, ஆயுள் காப்பீடு போன்றவற்றை தம்பதியிடமிருந்து பெற்றுக் கொடுத்தாலும், அப்பெண்களுக்கு அந்த ஏஜன்சிகளே முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதை Ministry of Health and Family welfare கண்காணிப்பின் கீழ் செய்ய வேண்டும் எனவும் இச்சட்டத்தின் மூலம் வலியுறுத்தலாம்.

வாடகைத்தாய் முறையில் பிறந்த குழந்தை பிறந்த பின் இறந்துவிட்டால், பிறந்த குழந்தை ஊனத்துடன் பிறந்தால், குழந்தை பிறந்த உடன் பெற்றவள் குழந்தையைத் தர மறுத்தால், வாடகைத்தாய்க்காக பேசிய தொகை, இம்முறையில் கரு உருவாக்கம் செய்ய பெறப்பட்ட, கருமுட்டை, மற்றும் விந்தணுக்களின் பயன்படுத்தப்படாத பகுதிகளை அழிப்பது, போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

வாடகைத்தாய் முறையில் அத்தாய் ஏமாற்றப்படுவாள் என்பதே இம்முறையை சட்டபூர்வமாகத் தடுப்பதற்குக் காரணம் எனில், ஏற்கனவே பிள்ளைகாக, பிறந்த குழந்தைகளைக் களவாடுவதும், கடத்துவதும் நடக்கிற சூழலில், பிள்ளைக்காகத் தவம் இருக்கும் பெற்றோர், மறைமுகமாக வாடகைத் தாய் முறையில் பிள்ளை பெறவே முயற்சிப்பர். இந்நிலையில் வாடகைத்தாய் இன்னும் அதிகமாகவே ஏமாற்றப்படவே வாய்ப்புள்ளது.

ஒரு சட்டம் /செயல்பாடு தவறாகப் பயன்படுத்தப்படும் எனில், அப்பிழையைக் களையவே சட்டமும் அரசும் முன் நிற்கவேண்டுமேயல்லாது, அம்முறையையே தடுப்பதாக இருக்கக்கூடாது.

சமூகத்தின் சில தேவைகளை வேறு வழி இல்லாமல் சமூகம் ஏற்கின்ற சூழலில் சட்டம் அதை முழுமுற்றாக தடுத்தால் இல்லீகலாக அதுவே தொடரும் என்பதே அனுபவம்.

வாடகைத் தாய் முறையில் நாம் என்ன செய்யப் போகிறோம்?

-ஹன்ஸா (வழக்கறிஞர்)
legally.hansa68@gmail.com
Ph.9994949195

நன்றி : தினமலர் நாளிதழ் - 11.08.2016

Sunday, September 18, 2016

அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம்


என்ன சொல்கிறது அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம்?

கல்வி, வேலை வாய்ப்புக்காகப் பெரு நகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கும் காலம் இது. இதன் காரணமாக நகரங்களில் வீட்டுத் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கேற்ப பெரு நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

பலரது சொந்த வீடு கனவையும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் நனவாக்குகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புக்கென ஒவ்வொரு மாநிலத்திலும் தனிச் சட்டங்கள் உள்ளன. இங்கேயும்கூட, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம் 1994 உள்ளது. அந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?

சட்டத்துக்கான காரணம்
தனி அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான உரிமையை ஒருவருக்கு இந்தச் சட்டம் வழங்குகிறது. குறிப்பிட்ட கட்டிடத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு மாற்றும் வகையிலும் அசையா சொத்தாகவும் இந்தச் சட்டம் காட்டுகிறது.


சட்டத்தின் பயன்பாடு
இந்தச் சட்டமானது ஒவ்வொரு அடுக்கு மாடிக் கட்டிடம் கட்ட விண்ணப்பிக்கத் தொடங்கு வதிலிருந்தே அமலுக்கு வந்துவிடும். ஒரு குறிப்பிட்ட கட்டுமானத்தில் 5 அல்லது அதற்கு மேல் அடுக்குமாடி வீடுகளை 3 தளங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டு அமைக்கலாம். கட்டிடத் திட்ட அனுமதியைப் பொறுத்து கட்டுமானத்தை மேற்கொள்ளலாம். சம்பந்தப்பட்ட அமைப்புகளால் வழங்கப்படும் முறைப்படியான கட்டிடத் திட்ட ஒப்புதலைப் பெற்றுக் கட்டிடத்தைக் கட்ட இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.


அடுக்குமாடி மாற்றக்கூடியது
ஒவ்வோர் அடுக்குமாடிக் குடியிருப் பிலும் மனையில் பிரிக்கப்படாத பாகம் இருக்கும். இதேபோல அடுக்குமாடிக் குடியிருப்பில் எல்லாத் தேவைகளுக்காகவும் வசதிகளும் இருக்கும். அடுக்குமாடிக் குடியிருப்பானது பரம்பரையானதாகவும் மாற்றக்கூடியதாகவும் அசையா சொத்துகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றலாம்.

ஒருவருடைய பிரிக்கப்பாத பாகம் மற்றும் வசதிகளை வேறு ஒருவருக்கு மாற்றி தர முடியும். இதன்படி அடுக்குமாடிக் குடியிருப்பை விற்கலாம், மார்ட்கேஜ் மூலம் அடமானம் வைக்கலாம், குத்தகைக்கு (லீஸ்) விடலாம், பரிசாகக் கொடுக்கலாம்.

அசையாச் சொத்தை சட்டப்படி விற்க என்ன உரிமைகள் இருக்கின்றனவோ அதே உரிமை அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் உண்டு.


விதிமுறைகள்

ஒவ்வொரு அடுக்குமாடி வீட்டு உரிமையாளருக்கும் பொதுப் பகுதிகளில் பிரிக்கப்படாத பாகம் என்ற தலைப்பில் குறிப்பிட்ட சதவீதப் பகுதி மற்றும் வசதிகள் பற்றி அடுக்குமாடி விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு அடுக்குமாடி வீட்டு உரிமையாளரும் சட்டப்படி உடன்படிக்கை, நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு உடன்பட வேண்டும்.

அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதங்களுக்குள் சொசைட்டி அல்லது சங்கம் ஒன்றை நிறுவி, அதைத் தமிழ்நாடு சொசைட்டி சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி உரிமையாளர்கள் சங்கம் மூலம் எல்லா வசதிகளையும் பராமரிக்கலாம். பொதுப் பகுதிகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்த எல்லா உரிமையாளர்களுக்கும் உரிமை உண்டு. என்றாலும் துணை விதிகள் ஒன்றை ஏற்படுத்திப் பொதுவான விஷயங்களை ஆலோசித்து முடிவு செய்யலாம்.


துணை விதிகளின்படி சொத்து நிர்வகிக்கப்பட வேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்பில் பிரிக்கப்படாத பாகம் மற்றும் பொதுவான பகுதிகளிலிருந்து கிடைக்கும் லாபத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். இதேபோலப் பொது செலவினங்களை ஒவ்வொரு உரிமை யாளரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டத்தில் ஐந்து அத்தியாங்கள் உள்ளன. இந்த அத்தியங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர்களுக்கென சட்டத்திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

நன்றி : தி இந்து (தமிழ்) நாளிதழ் - 20.08.2016

Saturday, September 17, 2016

இலவச கேஸ் இணைப்பு


இலவச கேஸ் இணைப்பு - என்ன செய்ய வேண்டும்?

4 லட்சம் இலவச காஸ் இணைப்புகள் வழங்கும் பணி தமிழகத்தில் துவக்கம்

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று, தமிழகத்தில், நான்கு லட்சம் இலவச காஸ் இணைப்பு வினியோகம் துவங்கியது; காஸ் ஏஜன்சி அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர்.

பிரதமர் மோடியின், 'உஜ்வாலா' திட்டத்தில், நாடு முழுவதும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு, ஐந்து கோடி இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், தமிழகத்தில், நான்கு லட்சம் இணைப்புகள் வழங்கும் பணி நேற்று துவங்கியது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ் ஏஜன்சிகள், இலவச சிலிண்டருடன் கூடிய காஸ் இணைப்பு வினியோகத்தைதுவங்கின.

இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு, சிலிண்டர் டிபாசிட், 1,250 ரூபாய், ரெகுலேட்டர், 150, கேஸ் புக், 25, அட்மிஷன் சார்ஜ், 75, டியூப், 100, ஸ்டவ் 1,000, சிலிண்டர் தொகை, 568 என, மொத்தம், 3,168 ரூபாயில், ஸ்டவ், சிலிண்டர் தொகை கடனாக வும், மற்றவை மானியமாகவும் வழங்கப்படுகிறது.

இந்த கடன் தொகை, மத்திய அரசு, சிலிண்டருக்கு வழங்கும் மானியத்தில் இருந்து பிடித்தம் செய்யப் படும். கடன்முழுவதும் கழிக்கப்பட்டதும், மானிய தொகை, பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இதில் பயன் பெறுவோர், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை (ரேஷன் கார்டில் பெயர் உடைய அனைவருக்கும் தேவை), வங்கி பாஸ் புத்தகம், புகைப்படம் இரண்டு வழங்க வேண்டும். இத் திட்டத்தில் இணைய, நேற்று தமிழகம் முழுவதும் உள்ள, காஸ் ஏஜன்சி அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. 

இதுகுறித்து, காஸ் ஏஜன்சி உரிமையாளர் ஒருவர் கூறுகையில், 'பாரத் பெட்ரோலியம் சார்பில், தமிழகம் முழுவதும், 1.25 லட்சம் இணைப்புகளும், சேலத்தில், 3,000 இணைப்பு களும் இலவசமாக வழங்கப் படுகின்றன' என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.09.2016

ஒரே சொத்து, இரண்டு பத்திரம்


ஒரே சொத்து, இரண்டு பத்திரம் -  என்ன செய்ய வேண்டும்?

ஒரே சொத்தை இருவருக்கு விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு ஒருவர் விற்பனை செய்திருந்தால் இரண்டாவதாக செய்த விற்பனை செல்லாது. இருந்தாலும், அந்த சொத்தை முதலாவதாக வாங்கியவர் சட்டப்படி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அந்த இரண்டாவது பத்திரத்தை முறைப்படி  ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்? 

இரண்டாவதாக பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரத்தின் பதிவுகளை ரத்து செய்யக் கோரி, பதிவுச்சட்டம், 1908 - பிரிவு 82ன் கீழ் பதிவுத்துறைத் தலைவர் அவர்களுக்கு முதலில்  உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி தங்களின் விண்ணப்பமானது  தங்களது மாவட்டப் பதிவாளர்  (நிர்வாகம்) அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும்.

மாவட்டப் பதிவாளர் அவர்கள், சமபந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை ஆய்வு செய்வார். 

உங்களது புகாரில் உண்மை இருப்பது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு தெரிய வந்தால், இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட பத்திரஙளை ரத்து செய்ய சார்பதிவாளர் அவர்களுக்கு உத்தரவிடுவார்.

பதிவுச்சட்டம், 1908 - பிரிவு 83ன் கீழ் சட்டத்திற்கு புறம்பாக இரண்டு நபர்களுக்கு ஒரே சொத்தை விற்பனை செய்த நபர் மீது, காவல்நிலையத்தில் புகார் அளித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் சார்பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

தகவல் உதவிக்காக, நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 17.09.2016


Wednesday, September 14, 2016

ஆரோக்கியமாக வாழ


ஆரோக்கியமாக வாழ என்ன செய்ய வேண்டும்?

இன்று''நான் வியக்கும் ஒரே இனம் மனித இனம்.

 தன் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து, செல்வத்தை சேர்க்க ஓடுகிறான். பின் ஆரோக்கியத்தை சீர்படுத்த சேர்த்து வைத்த பணத்தை செலவழித்து, இழக்கிறான்'' என மார்டின் லுாதர் கிங் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்''

''சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்''என ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தி பல பொன் மொழிகள் இருந்தாலும், இயந்திர கதியில் சுழன்று கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இவை வெறும் பொன் மொழிகளாக மட்டுமே இருப்பது வேதனைக்குரியது.

நோய்களுக்கு குறைவில்லை 

குழந்தைகள் முதல் முதியவர் வரை பலவித குறைபாடுகள், நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்று நோய், காச நோய், சிறுநீரக பாதிப்பு என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே பூப்பெய்தல், பெண்கள் மாதவிடாய் கோளாறு, குழந்தை பேறின்மை, எலும்பு பலவீனமடைதல் என அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

மனிதனும், மாத்திரையும் பிரிக்க முடியாத இணைப்பாகி விட்டது. அதிலும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட ஞாபகத்திறனுக்கும், உடல் வளர்ச்சிக்கும் மாத்திரைகளை கொடுத்து கொண்டிருப்பது வேதனைக்குரியது.

'பில்டிங் ஸ்டிராங், பேஸ்மென்ட் வீக்' என தமாஷாக சொல்வது போலத்தான் பலரும் நடமாடிக் கொண்டிருக்கிறோம். அடித்தளத்தை செப்பனிடாமல், மேலே விழும் கீறலுக்கு மட்டும் மருத்துவம் செய்து வந்தால், என்றாவது ஒரு நாள் பெரிய பூகம்பத்தில் நம்மை நிறுத்தி விடும் என்பதே உண்மை.

வாழ்க்கைமுறை 
''நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்''

நோயின் தன்மையை ஆராய்ந்து, அந்நோயின் காரணத்தை ஆராய்ந்து, அதை தீர்க்கும் வழியை ஆராய்ந்து, உடலுக்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும். ஒவ்வொரு படைப்புக்குள்ளும் அவற்றை பராமரிக்கும் ஆற்றலும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. காட்டில் வாழும் விலங்குகள், நோய் வாய்ப்படுவதில்லை.பல ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பலவித நோய்கள், குறைபாடுகளுக்கு காரணம் 'வாழ்க்கை முறை மாற்றம்' என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நலமாக வாழ, மூன்று மந்திரங்களை நாம் கடைபிடிக்க வேண்டும்.

1. தேவையான உடற்பயிற்சி, 
2. ஆரோக்கியமான உணவு, 
3. மனநலம்.

தேவையான உடற்பயிற்சி 
'தேவையான' என்ற வார்த்தையை அழுத்தமாக பிரயோகிக்க வேண்டும். ஏனென்றால், சமீபத்தில் என்னிடம் முதுகு வலி சிகிச்சைக்கு வந்த ஒருவரை, பரிசோதனை செய்தபோது, அவருடைய தினசரி வேலைகளை கேட்டறிந்தபொழுது, அவர் தினமும் நடை பயிற்சியுடன், பலவித ஆசனங்களையும் செய்து வருவதாக கூறினார். 

அதில் சில ஆசன வகைகள், அவருடைய முதுகு வலிக்கு ஏற்றதல்ல என்பதைக் கூறி, வேறு சில பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தினேன். ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டதாக கூறினார். இங்கு இதை வலியுறுத்த காரணம், அனைத்து பயிற்சிகளும் அனைவருக்கும் பொதுவானது அல்ல. மூட்டுவலி, குதிகால் வலி உள்ளவர்கள் அந்த வலியை குறைத்த பின்னரே நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் சிலவகை பயிற்சிகளை செய்யக்கூடாது. கர்ப்பிணிகளுக்கு, பெண்களுக்கு, 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு என தனித்தனி பயிற்சி உள்ளன. அதனால் யார், என்ன பயிற்சி மேற்கொள்ளலாம் என்பதை, தகுந்த இயன்முறை மருத்துவரிடம் (பிசியோதெரபிஸ்ட்) கேட்டு தெளிவு பெற்ற பின்னர் செய்வது நல்லது.

'யோகா' கற்றுக்கொள்ளும் போதும், உடல் அமைப்பியல் (அனட்டாமி), உடல் இயக்கவியல் தேர்ச்சி பெற்று யோகா கற்று கொண்டவர்களிடம் கற்பது நல்லது.

அளவான உணவு 

'மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு'

அதாவது உடலுக்கு மாறுபாடில்லாத உணவை தேவையறிந்து அளவோடு உண்டால், உடம்பில் உயிர் வாழ்வதற்கு இடையூறான துன்ப நோய் இல்லை. நம் நாட்டின் கால நிலைக்கும், நம் உடலுக்கும் ஒவ்வாத உணவை உட்கொண்டு பலவித நோய்களை இலவசமாக பெற்றுக் கொண்டிருக்கிறோம். 

ஒவ்வொருவரின் வயது, உடல்நிலை, செய்யும் வேலையின் தன்மையை பொறுத்து தேவைப்படும் கலோரிகள் மாறுபடும். அதற்கேற்றார்போல் நாம் நம் உணவு பட்டியலை தயார் செய்து கொள்ள வேண்டும். அதிலும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சரிவிகித உணவாக இருப்பது அவசியம்.

உணவில் கார்போ ஹைட்ரேட் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்கள் என அனைத்தும் குறிப்பிட்ட அளவில் எடுத்து கொண்டால், நம் உடலில் நோய் பறந்து விடும் என்பது உண்மை. 

மன நலம் 
மன நலம் மிகவும் இன்றியமையாதது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏதாவது மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறோம்.

 மனதை நாம் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்றால்,

1. நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.

2. மனிதர்களை, நல்ல உறவுகளை சம்பாதிக்க பழகுங்கள்.

3. தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள்.

4. வாழ்க்கையை ரசிக்க பழகுங்கள்.

5. அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள். முடிந்தவரை உதவி செய்யுங்கள்.

6. உற்சாகத்துடன் பேசுங்கள். இல்லையென்றால் உற்சாகத்துடன் பேசுபவர்கள் மத்தியில் இருங்கள். (தேவையற்ற அரட்டை அடிப்பவர்களை பற்றி கூறவில்லை.)

7. முடியும் என்பதை முடியும் என்றும், 'கண்டிப்பாக முடியாது' என்பதை முடியாது என்றும் சொல்லி பழகுங்கள்.

8. தினமும் கற்று கொள்ளும் ஆர்வம்.

9. நேர்மறை செயலுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்.

10. பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காண பழகுங்கள்.

உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய, தினமும் அரைமணி நேரத்தை ஒதுக்குங்கள். மேற்கூறிய மந்திரங்களை பின்பற்றினால் நாம் 'மார்க்கண்டேயனாக' வாழ்வது உறுதி.

---------- ஆர்.கோகிலா, பிசியோதெரபிஸ்ட்,  காரைக்குடி. 94421 55456----------

நன்றி : தினமலர் நாளிதழ் - 15.09.2016

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482


குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482

உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் அளிக்கப்படுகின்ற புகார்களை அவர்கள் பதிவு செய்ய மறுக்கின்ற போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ்வர்களிடம் அதுபற்றிய  புகாரினை ( ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத்தபால் மூலம்) அனுப்பி, உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளுக்கு ஒரு நெருக்கடியை மனுதாரர் ஏற்படுத்த முடியும். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நமது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது?

இதுபோன்ற சூழ்நிலையில் குற்ற விசாரனை முறைச் சட்டம் பிரிவு 156(3)ன் கீழ், நாம் நீதிமன்றத்தை நாடுவது நல்ல பலனைத்தரும்.  இதனையே சுருக்கமாக கோர்ட் டைரக்‌ஷன் என்கிறார்கள்.

சிலர் இதற்காக நேரடியாக உயர்நீதிமன்றத்தினை நாடுகிறார்கள். அது அவசியமில்லை. நேரடியாக இதற்காக தங்களை அணுகக்கூடாது என்று உயர்நீதி மன்றமும் அறிவித்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகினாலே போதுமானது. 

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482ன் கீழ் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு சாதகமாக நீதிமன்றமானது   உத்தரவிடலாம்.

இந்தப் பிரிவின் கீழ், போலீசில் அளிக்கப்படும் புகார்களை அவர்கள்   பதிவு செய்யாதபோது, அவற்றை பதிவு செய்ய அவர்களுக்கு  உத்தரவிடும் படியும், நடைபெறுகின்ற விசாரணையை வேறு ஏஜன்சிக்கு மாற்றவும், வழக்கை ரத்து செய்யவும் நாம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கலாம்.

*******************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Monday, September 12, 2016

மொட்டைக்கடிதம்


மொட்டைக்கடிதம் - என்ன செய்ய வேண்டும்?

மொட்டை கடிதத்தால் இடமாற்றம், பள்ளிக்கல்வி துறை உத்தரவு ரத்து!

சென்னை: போலி கடிதத்தின் அடிப்படையில், கல்வித்துறை அதிகாரிகள் இருவரை, இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில், கணேசன் மற்றும் ராஜன், அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர். இவர்கள் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கடிதம் வந்தது.

மனு தாக்கல் : 

அதில், பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலில் சிலரை சேர்ப்பதற்கு பணம் கேட்டதாக கூறப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தின் அடிப்படையில், இருவரையும் இடமாற்றம் செய்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், இருவரும் மனு தாக்கல் செய்தனர்; மனுக்களை, நீதிபதி பி.ராஜேந்திரன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் டி.ஆனந்தி, 'லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்த கடிதம், மனுதாரர்களுக்கு தரப்படவில்லை' என்றார். அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர், 'லஞ்ச ஒழிப்பு துறை பெற்ற கடிதம் போலியானது' என்றார்.

 நீதிபதி பி.ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவு: 

எந்த விசாரணையும் நடத்தாமல், போலி கடிதத்தின் அடிப்படையில் இயந்திரத்தனமாக இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன; அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. 

இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிப்பதற்கு முன், அந்த கடிதம் உண்மையானது தானா என, அதிகாரிகள் விசாரணை செய்திருக்க வேண்டும்; 

மனுதாரர்களுக்கு கடித நகல்களை அளித்திருக்க வேண்டும்.

லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்த கடிதத்தின் அடிப்படையில் தான், இந்த இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன; 

நிர்வாக தேவைக்காக, இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை.

விசாரணை

எனவே, இடமாறுதல் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. இவர்கள், விடுமுறையில் இருந்த நாட்களை, பணியில் இருந்ததாக கருத வேண்டும். கடிதத்தை அனுப்பியது யார், பின்னணி என்ன என்பது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 10.09.2016



Sunday, September 11, 2016

வேட்பாளரின் தகுதி


வேட்பாளரின் தகுதி - என்ன செய்ய வேண்டும்?

ஓட்டளித்து வேட்பாளரைத் தேர்வு செய்யும் வாக்காளராகிய நமக்கு என சில தகுதிகளும், தகுதிக்கேடுகளும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போலவே, வேட்பாளருக்கு என சில தகுதிகளும், தகுதிக்கேடுகள் பற்றியும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ( Representation of the People Act 1951) -ல் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பாகம் II ல் தகுதிகள் மற்றும் தகுதிக் கேடுகள் எனும் தலைப்பில் அத்தியாயம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் குறிப்பிடப் பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினருக்கான தகுதியாக, இந்தியாவில் பாரளுமன்றத் தொகுதி ஒன்றில் அவர் வாக்காளராக இருந்தால் மட்டுமே ஏதேனும் மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் பிரதிநிதியாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படத் தகுதியுடையவர் ஆவார். இதில் உட்பொருளாக மற்றொன்றும் குறிப்பாகிறது.

வாக்காளர் தகுதி:
வாக்காளராக அவர் இருக்க வேண்டும் எனும் வாசகத்தின்படி, அவர் வாக்காளராக இருக்க வேண்டும் எனில் சென்ற கட்டுரையில் நாம் பார்த்தபடி வாக்காளருக்கான தகுதிகளோடும், தகுதிக் கேடுகள் ஏதும் இல்லாமலும் இருக்க வேண்டும். வேட்பாளராக இருப்பவர், வாக்காளராக இருக்க வேண்டும். 

வாக்காளராக இருப்பவர், இந்திய பீனல் கோடு படி 171 E (Punishment for Bribery) 171F-ன் கீழ் (Punishment for undue influence or persination at an election) ஆகிய குற்றங்களின் படி தண்டனை பெற்றவராக இருக்ககூடாது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி  
பிரிவு 8A (1) ன் கீழ் குடியரசுத் தலைவரின் முடிவினால் ஏதேனும் காலத்திற்கு தகுதியின்மை செய்யப்பட்டிருந்தால் அதே காலத்துக்கு வாக்களுக்கும் உரிமை கிடையாது.

பிரிவு 125 (தேர்தல் தொடர்பான குற்றச் செயல்கள்)
பிரிவு 135 (ஓட்டுச் சாவடியில் இருந்து ஓட்டுச் சீட்டுகளை அப்புறப்படுத்துவது ஒரு குற்றச் செயலாக இருத்தல்)
பிரிவு 136 (பிற குற்றச் செயல்களும் அதற்கான தண்டனைகளும்) ஆகிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருக்கக்கூடாது.

மேற்சொன்ன பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படத்தக்க ஒர் குற்றத்திற்காக குற்றத் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பின் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் ஓட்டளிக்கத் தகுதியற்றவர் ஆகிறார். 

ஆக, வாக்காளராக இருக்க மேற்சொன்ன சூழலில் இல்லாதவராகவும், மேலும் வாக்காளருக்கான தகுதிகளான வயது வரம்பு, வாக்காளர் பட்டியலில் பெயர் இருத்தல் ஆகியவையும் கொண்ட நபர் ஒருவர் வாக்காளர் ஆக ஆன பின்பு, வேட்பாளராகலாம் என்றே இந்தச் சட்டம் சொல்கிறது. 

அதாவது மேற்சொன்ன சூழலில் ஒருவர் தண்டிக்கப்பட்டிருந்தால் அவருக்கு வாக்காளராகும் தகுதி இல்லை. 

 வாக்காளர் ஆகாதவர் வேட்பாளராக இயலாது.

வேட்பாளராக தகுதி
மக்களவை உறுப்பினருக்கான தகுதிகளாக பிரிவு 4 சொல்வதாவது,

ஏதேனும் மாநிலத்தில் அட்டவணை சாதியினருக்கு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர் அந்த மாநிலத்தின் அல்லது வேரு ஏதேனும் மாநிலத்தின் அட்டவணை சாதியினைச் சார்ந்தவராகவும் மற்றும் ஏதேனும் மக்களவைத் தொகுதியில் வாக்களராகவும் இருக்க வேண்டும்.

பிரிவு 5 மாநில சட்டமன்றங்களின் உறுப்பினருக்கான தகுதிகள் என இவற்றையே சொல்கிறது.

சட்டமன்ற மேலவை உறுப்பினருக்கான தகுதிகள் என்பது, மேற்சொன்னபடியே, ஒருவர் ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவை இடத்தை தேர்தல் மூலம் நிரப்பபட் அதேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் அந்த மாநிலத்தின் வேறு ஏதேனும் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளராக இருக்கவேண்டும், 

மற்றும் மாநில சட்டமன்ற மேலவையில் ஒர்ர் இடத்தை நிரப்ப ஆளூனர் மூலம் நியமனம் செய்யப்பட தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் அந்த மாநிலத்தில் சாதாரணமாக வசிப்பிடம் கொண்டிருத்தல் வேண்டும் என சட்டமன்ற மேலவை உறுப்பினருக்கான தகுதிகள் பற்றி இதே சட்டத்தின் பிரிவு 6 கூறுகிறது.

தகுதியின்மைகள்
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு உறுப்பினராக தகுதிகளைப் பார்த்தோம். தகுதியின்மைகள் பற்றி இதே சட்டத்தின் அத்தியாயம் III விளக்குகிறது. இதில் பிரிவு 8-ல் ஒருவர் தண்டனைக் கைதியாக விதிக்கப்பட்டிருந்தால் கீழ்கண்ட தண்டனைக்குரியவராவார்.

இந்திய குற்றவியல் விதித்தொகுப்பு (மத்திய சட்டம் XLV-1860ல்)-ன் படி…

மதச் சார்பாக, இனம், பிறந்த இடம் குடியிருப்பு, மொழி, மற்ற பிற வகையில் பகைமை வளர்ப்பவராக, 
அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவராக (பிரிவு 152 A)
இந்தியன் பீனல் கோடு -படி…

லஞ்ச குற்றம் (பிரிவு171 E),
தகாத செல்வாக்கு செய்பவராக அல்லது தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்தவராக(171F),படி தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது.

பலாத்கார குற்றங்கள் (பிரிவு 376 - (1)), 376 - (2),
பலாத்காரம் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் சாவுக்கு காரணமாக இருத்தல்/வெஜிடேடிவ் நிலைக்கு ஆளாக்குதல்(பிரிவு376 A)

விவாகரத்து வழக்கு நிலுவையில் பிரிந்திருக்கும் மனைவியுடன் இணைதல் (பிரிவு376 B,)

Sexual intercourse by person in authority (பிரிவு376 C),
கூட்டுக் கற்பழிப்பு (பிரிவு376 D),

அல்லது

பெண்ணுக்கு கணவனால் அல்லது கணவனின் உறவினரால் கொடுமை செய்த குற்றத்திற்காக (பிரிவு 498-A),

Protection of civil rights 1955 -ன் கீழான தீண்டாமை போதித்தல், நடைமுறைப்படுத்துதல் போன்ற குற்றங்கள்,

சுங்க வரிச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்தல்,

Unlawful Activities (prevention) Act 1967 -இன் கீழ் சட்டத்திற்கு புறம்பான சங்கத்தில் உறுப்பினராக இருத்தல்

Foreign Exchange Act 1973, போதை மருந்து மற்றும் மயக்கம் தரும் பொருட்கள் சட்டம், Terrorist and Disruptives Activities (Prevention) Act-ன் பிரிவுகள் 3, 4 ந் கீழான குற்றங்கள்,

எனப் பலவேறு குற்றங்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8ல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

அவற்றின் கீழான குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர் எவரும் பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு உறுப்பினராக தகுதியாக முடியாது.

மேலும், தேர்தலின் போது ஊழல் புரிந்ததாகக் குற்றச் சாட்டு ஏதேனும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து, மேலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 99ல் குறிப்பிடப்பட்டவை காரணமாக நீதி மன்றத்தால் ஆணை வெளியிடப்பட்டிருந்து, அத்தகைய உத்தரவு/ஆணை அமலுக்கு வரும் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் தகுந்த அதிகாரியினால், அந்த நபர் தகுதியின்மையாக்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா? 

வேண்டும் எனில் அத்தனை காலத்திற்கு அது தகுதியின்மையாகக் கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கும் பொருட்டு குடியரசுத் தலைவரிடம் கருத்து சமர்ப்பித்தல் வேண்டும். அப்படியான தகுதியின்மை அந்த உத்தரவு அமலுக்கு வரும் தேதியில் இருந்து 6 வருடங்களுக்கு மேற்படக் கூடாது.

ஊழல் அல்லது தேசப்பற்றுறுதியின்மைக்காகப் பணி நீக்கத்தின் பேரில் தகுதியின்மையும் நேரலாம். 

அதாவது இந்திய / மாநில அரசின் கீழ் அரசுப் பதவி வகித்து, ஊழல் அல்லது தேசப்பற்றுறுதி காரணமாக வேலை இழந்திருந்தால், அதிலிருந்து 5 ஆண்டுகள் வரை தகுதியின்மை செய்யப்படுதல் வேண்டும்.

அரசுடன் வியாபார ஒப்பந்தம் இருந்தால்...
மேலும், அரசுடன், வியாபார ஒப்பந்தம் ஒன்று நிலுவையில் இருக்கையில், அவ்வாறு இருக்கின்ற வரையில் தகுதியின்மை ஆகும். அதாவது, அரசுடன் நேரடி காண்ட்ராக்டில் இருக்கும் ஒருவர், அப்படி இருக்கின்ற சமயத்தில், தகுதியின்மை ஆனவர் ஆகிறார்.

அதே சமயத்தில் அவர் அந்த ஒப்பந்தத்தின் கீழான தன் பகுதியை முடித்திருந்து, ஆனால் ஒப்பந்தத்தின் தன் பகுதியை அரசு நிறைவேற்றவில்லை என்பதால் மட்டுமே ஒப்பந்தம் நிகழ் நிலையில் இருப்பதாகக் கருதப்படக்கூடாது.

அரசு நிறுவனத்தின்கீழான பதவி வகித்தல் காரணமாகவும் தகுதியின்மை ஏற்படலாம்.

 மத்திய / மாநில அரசின் மூலதனப் பங்கு 25%க்கு குறையாமல் உள்ள ஏதேனும் நிறுவனத்தில் / கழகத்தில் மேலாண்மை முகவராகவோ, அல்லது மேலாளர், செயலாளராக இருப்பின் அவ்வாறு இருக்கும் வரை தகுதியின்மையாகும்.

தேர்தல் செலவு கணக்கு
தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்வதற்குத் தவறியுள்ளார் என்றாலோ, அவ்வாறு செய்வதற்கான உரிய சரியான காரணம் ஏதும் இல்லாதிருந்தாலோ, தேர்தல் ஆணையம் அரசிதழின் வாயிலாக அவர் தகுதியின்மை அறிவிக்கலாம்.

ஆனால், தேர்தல் ஆணையமானது காரணங்களைப் பதிவதன் பேரில், விதியின் ஏதேனும் தகுதியின்மையை நீக்கலாம், ஆல்லது தகுதியின்மைக் காலத்தைக் குறைக்கலாம். ஆனால் பிரிவு 8A - ல் குறிப்பிட்ட தகுதியின்மைகள் தவிர…

பொதுவாகச் சொன்னால்..

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தகுதி இழந்திருந்தல்,
தீர்க்கப்படாத கடனாளி, 
இந்தியக் குடிமகனாக இல்லாதிருத்தல், 
வெளீநாட்டின் குடியுரிமையை விரும்பிப் பெற்றிருத்தல், அல்லது ஒரு வெளி நாட்டின் மீது பற்றுக் கொண்டிருப்பதாக ஒப்புக் கொண்டிருத்தல்,
நீதி மன்றத்தால், மனநிலை சரியில்லாதவர் என அறிவிக்கப்பட்டிருத்தல்,
அரசின் கீழ் ஆதாயம் ஈட்டக்கூடிய பதவியில் இருத்தல் ஆகியவை உறுப்பினராகும் தகுதியின்மைகள் ஆகும்.

உறுப்பினர் தகுதி இழப்பு 
ஒரு சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரே நபர் உறுப்பினராக இருத்தல் இயலாது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினராக ஒரே நபர் ஒரே நேரத்தில் இருத்தல் இயலாது.

ஒரு் சட்டப்பேரவை உறுப்பினர் தமது கையெழுத்தில் பேரவைத் தலைவருக்கு விலகல் கடிதத்தை அனுப்பி பேரவைத் தலைவரால் அது ஏற்றுக் கொள்ளப்படுமே ஆனால், அவர் அப்பதவியை இழப்பார். 

ஆனால் அப்பதவி விலகல் தன்னிச்சையானதல்ல என்ற முடிவுக்கு பேரவைத் தலைவர் வருவாரேயானால் அப்பதவி விலகல் ஏற்கப்பட மாட்டாது.

ஒரு பேரவை உறுப்பினர் அவையின் அனுமதியின்றி தொடர்ந்து 60நாட்களுக்கு வாரமல் இருப்பின் அவ்வுறுப்பினரை பதவி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.

பதவி ஏற்புப் பிரமாணம் மேற்கொள்ளும் முன்பாகவோ,
உறுப்பினர் தகுதியை இழந்துள்ளதை அறிந்த பின்னரோ,
சட்டப் பேரவை விதிகளின்படி தடுக்கப்பட்ட பின்னரோ, ஒரு சட்டப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதும், வாக்களிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு ஒரு நபர் பங்கேற்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படும்.

இது வரை, வேட்பாளராக, உறுப்பினராக இருக்க வேண்டிய தகுதிகள், தகுதியின்மைகள், தகுதி இழப்புகள் பற்றி அறிந்தோம்.

அடுத்தடுத்த வாரங்களில், வாக்காளர்களாகிய நம் ஒவ்வொருவரும் தெரிந்திக்க வேண்டிய, தேர்தல் நடமுறை, தேர்தல் ஆணையம், போன்றவை பற்றி அலசுவோம்.

தொடருவோம் நம் பயணத்தை..நம் உரிமைகளை அறிந்தபடி…
- ஹன்ஸா

நன்றி : தினமலர் நாளிதழ் - 11.02.2016

வாக்காளர் தகுதி


வாக்காளர் தகுதி - என்ன செய்ய வேண்டும்?
தேர்தல் வருகிறது.

தேர்தலில் நிற்கும் வாக்காளருக்கான தகுதி பற்றி கொஞ்சமேனும் நாம் அறிவோம். 

ஆனால், வாக்களிக்கும் நமக்கும் சில தகுதிகளை தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. சட்டமும் அதையே வலியுறுத்துகிறது.

ஆம். வாக்காளப் பெருமக்களாகிய நமக்கும் வாக்களிக்க என சில தகுதிகளை சட்டம் வலியுறுத்துகிறது.

இனி இந்தக் கட்டுரைத் தொடரில், தேர்தல் சட்டங்கள் பற்றியும், கொஞ்சம் தேர்தல் வம்பும் பார்க்க்விருக்கிறோம்.

முதலில் நம்மைப் பற்றி அறிந்து கொள்வோம். 
அதாவது வாக்காளர் என்றால் யார் என சட்டம் ஏதும் சொல்லி இருக்கிறதா?

 சொல்லி இருக்கிறது என்றால் என்ன சொல்லி இருக்கிறது?

வாக்காளராக இருப்பதற்கு வயது தவிர வேறென்ன காரணிகள் என்பனவற்றை முதலில் தெரிந்து கொள்வோம்.

கள்ள ஓட்டு போடுதல், பொய்யான வாக்குச் சீட்டு வைத்திருத்தல், வாக்குப் பெட்டியைக் கைப்பற்றுதல், ஊழல், கையூட்டுக் குற்றம், தேர்தல் தொடர்பாக பகைமையை வளர்த்து விடுதல், போன்ற குற்றங்களுக்கு அதற்கு அந்தந்த பிரிவுகளில் குறிப்பிடப்ப்ட்ட தண்டனைகளோடு வாக்களிக்கும் உரிமையும் (சில கட்டளைகளுக்குட்பட்டு) பறி போகும் என்பது நாம் அனைவரும் அறிந்திந்திருக்குக்றோமா?

வாக்குப் பெட்டிக்குள் வாக்குச் சீட்டு தவிர வேறேதேனும் பொருட்களைப் போடுதல், வாக்குச் சீட்டில் பெயரை அல்லது குறிப்பிட்ட தகவல்களை அழித்தல், மாற்றுதல், உருக்குலைத்தல் என எதனைச் செய்தாலும், அல்லது அதிகாரம் இன்றி வாக்குப் பெட்டியை எடுத்துச் செல்லுதல், வாக்குச் சீட்டைப் பிரித்தல், படித்தல் என எதைச் செய்தாலும், இந்த சட்டத்தில் குறிப்பிட்ட தண்டனை தவிர, குற்றம் செய்தவருக்கு வாக்களிக்கும் உரிமையும் 6வருடங்கள் வரை கூட இல்லாமல் தகுதியின்மை ஆக்கப்படலாம்.

இனி வாக்காளர் தகுதியின்மை பற்றி சற்று விரிவாகக் காண்போம்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ”வாக்காளர்” என்றால் என்னவென்று பகுதி 1, பிரிவு 2-ல், உட்பிரிவு (e) -ல் வரையறுத்திருக்கிறது.

பிரிவு 2(e)வாக்காளர் எனில் தொகுதி ஒன்றின் தொடர்பில் நபரொருவரின் பெயர் அப்போதைக்கு செயல்லாற்றலிலுள்ள வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, பிரிவு 11ல் குறிப்பிடப்பெற்ற ஏதேனும் தகுதிக் கேடுகளுக்கு உட்படாத நபர் எனப் பொருள்படும்.

அதாவது வாக்காளர் என்றால், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும்.(அதில் பெயர் இடம் பெற வேறு தகுதிகள்) மற்றும் இதே சட்டத்தின் பிரிவு 11ல் வாக்காளராக இருப்பவருக்கு சில தகுதிக் குறைபாடுகள் இருக்ககூடாது எனச் சொல்கிறது. அந்தக் குறைப்பாடுகளுக்கு உட்படாத நபர் வாக்காளர் என்கிறது.

வாக்காளர் என்பதற்கான விளக்கத்தில் இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் இடம் பெறுதல்.

இதே சட்டத்தின் பிரிவு 11ல் குறிப்பிடப்பெற்ற ஏதேனும் தகுதிக் கேடுகளுக்கு உட்படாத நபர்.

பிரிவு 11, மற்றும் 11A கூறுவதாவது..

பிரிவு 11 தகுதி இன்மைக் காலத்தை நீக்குதல் அல்லது குறைத்தல் பற்றிச் சொல்கிறது. தேர்தல் ஆணையமானது, ஏதாவது காரணங்களின் அடிப்படையில், பதிவின் பேரில் இவ்விதியின் (பிரிவு 8A வின் கீழ் தவிர)(பிரிவு 8 வேட்பாளர்களின் தகுதியின்மை பற்றிச் சொல்கிறது.) கீழான ஏதேனும் தகுதியின்மையினை நீக்கலாம் அல்லது அத்தகைய தகுதியின்மைக் காலத்தைக் குறைக்கலாம்.

பிரிவு 11A சொல்லுவது: குற்றத் தீர்ப்பு மற்றும் ஊழல் செய் நடவடிக்கைகளினால் எழும் தகுதியின்மை பற்றிச் சொல்கிறது.

அதாவது வாக்களிக்கததகுதியாக குற்றத் தீர்ப்பு மற்றும் ஊழல் செய் நடவைக்கைகளினால் எழும் தகுதியின்மை பற்றித்தான் அப்படிச் சொல்கிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 171 E (Punishment for Bribery) அல்லது 171F-ன் கீழ் (Punishment for undue influence or persination at an election)அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவு 125 / பிரிவு 136 -ன் உட்பிரிவு (2) கூறு (அ) வின் கீழ் தண்டிக்கப்படத்தக்க ஒர் குற்றத்திற்காக குற்றத் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பின் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.

 அப்படியாயின் அந்த சட்டப்ப்பிரிவுகள் என்ன சொல்கின்றன?

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 125 சொல்வதாவது: 

தேர்தல் தொடர்பாக வகுப்புகளுக்கிடையே பகைமையை வளர்த்தல் பற்றி அதை வாக்காளருக்கான தகுதிக் குறைவாகச் சொல்கிறது.

மேற்கண்ட குற்றத்தைச் செய்து, மூன்றாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்கு சிறைத் தண்டனையோ அல்லது பணத் தண்டனையோ அல்லது இரண்டும் பெற்று பிரிவு 125ன் கீழ் தண்டனை பெற்றிருந்தால் அவர் அந்த குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.

அதே போல, பிரிவு 136ல் 'பிற குற்றச் செயல்களுக்கான தண்டனைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்ட குற்றங்களில் ஏதேனும் செய்து, தண்டனைத் தீர்ப்பு பெற்றவரும் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.

வேட்புமனு எதனையேனும் மோசடியாக உருக்குலைத்தல், அழித்தல் அல்லது தேர்தல் அதிகாரியால் அல்லது அவரது ஆணையின் கீழ் ஒட்டப்பட்டுள்ள பெயர்ப்பட்டியல், அறிவிப்பு பிற ஆவணங்கள், வாக்குச் சீட்டு, அதில் உள்ள அதிகாரக் குறியீடு எதையேனும், உருக்குலைத்தல், அழித்தல் என ஏதும் செய்தாலோ,

உரிய அதிகாரம் இன்றி, எவருக்கும் வாக்குச்சீட்டு வழங்குதல், பெறுதல், கைவசம் வைத்திருத்தல் இவற்றைச் செய்தாலோ,

வாக்குப் பெட்டிக்குள் போடுவதற்கு அதிகாரம் இல்லாத எதையேனும் மோசடியாகப் போட்டாலோ,

வாக்குப் பெட்டி, சீட்டு எதையும் அழித்தல், எடுத்துச் செல்லுதல், பிரித்துப் பார்த்தல் அல்லது அதற்கு இடையூறு விளைவித்தல் என எதுவும் செய்தாலோ,
மேற்குறியவற்றைச் செய்ய உதவி செய்தலோ,

அப்படிச் செய்தவர், தேர்தல் அலுவலராகவோ, உதவித் தேர்தல் அலுவலராகவோ, வாக்குச் சாவடி தலைமை அலுவலராகவோ அல்லது தேர்தல் தொடர்பான பணி அமர்த்தப்பட்டவராகவோ இருப்பின் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கத்தக்க சிறைத் தண்டனையோ, பணத்தண்டனையோ அல்லது இரண்டுமோ,
விதிக்கப்படும்.

இந்த குற்றங்களைச் செய்தவர், பிற நபராக இருக்கும்பட்சத்தில், 6 மாதம் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனையோ, பணத் தண்டமோ, அல்லது இரண்டுமோ தண்டனையாக அளிக்கப்படும். 

இந்த தண்டனையைப் பெற்றவர்கள்… அந்த குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.

மேலும் ஒரு நபர் பிரிவு 8A (1) -ன் கீழ் குடியரசுத் தலைவரின் முடிவினால் ஏதேனும் காலத்திற்கு தகுதியின்மை செய்யப்பட்டால் அதே காலத்திற்கு தேர்தலில் தகுதியின்மை செய்யப்படும். 

அதாவது இதே சட்டத்தின் பிரிவு 99ன் கீழ் ஓர் உத்தரவு மூலம் ஊழல் நடவடிக்கை செய்ததாகக் கண்டறியப்படும் நபர் தகுதியின்மையாக்கப்பட வேண்டுமா?

 வேண்டும் எனில் எவ்வளவு காலத்திற்கு எனும் வினாவை தீர்மானிக்கும் பொருட்டு குடியரசுத் தலைவரிடம் சமர்பிக்கப்பட்டு எடுக்கப்படும் முடிவின்படி தகுதியின்மை செய்யப்படலாம். 

அந்தத் தகுதியின்மைக் காலமானது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து என்னேர்விலும் 6 வருடங்களுக்கு மேற்படலாகது. 

இந்த முடிவு எடுக்க 90நாட்களே அதிகபட்சம் என இந்த சட்டப்பிரிவு குறிப்பிடுகிறது.

பிரிவு 11A(3) -ன் படி மக்களவையின் ஈரவைகளில் ஒன்றிற்கு உறுப்பினராக அல்லது மாநிலம் ஒன்றின் சட்டமன்றம் அல்லது சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது இருப்பதற்கு தகுதியிழப்பு பொறுத்து ஏதேனும் நபரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு மீது குடியரசுத் தலைவரின் முடிவானது, அதே அளவிற்கு, தேர்தல் சட்டங்கள் (திருத்தச்)சட்டம் 1975 தொடங்குவதற்கு உடன், முன்னர் இருந்தது போன்று, இந்தச் சட்டத்தின் பிரிவு 11-A (1)(b) -ன் கீழ் வாக்களிப்பதற்கு ஏற்பட்ட தகுதியிழப்பு பொறுத்து, அத்தகைய முடிவு சொல்லப்பட்ட வாக்களிப்பு தகுதி இழப்புக்கும் கூட அந்த முடிவு பொருந்துவனவாகும்.'”

மேற்சொன்ன பிரிவு 11 A முழுவதும் வாக்களிக்கத் தகுதி இன்மை பற்றிச் சொல்கிறது.

ஆனால், தேர்தல் ஆணையமானது, சரியான காரணத்தைப் பதிவதன் மூலம், மேற்சொன்ன 11A(3) தகுதி இழப்பை நீக்கலாம்.

மேற்சொன்னவை எல்லாம் எவை எல்லாம் 'வாக்காளருக்கான” தகுதி இன்மைகள்.

அப்படியாயின் வாக்காளர் என்றால் யாரெல்லாம்?
பொதுவாக வசிக்கும் இடத்தில், அந்தத் தொகுதியில், வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட, 18 வயதுக்கு மேல் வயதான, ஆனால், மனநிலைப் பிறழ்வு, மேற்குறிப்பிட்ட வாக்காளர் தகுதியின்மைக்குள் வராத, எவரும் வாக்காளரே.

இவற்றைக் குறிப்பிட்டு வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் வாக்காளர் அட்டை பெற்றுவிட்டதாலேயே நாம் வாக்களித்துவிட முடியாது.

 EPIC எனப்படும் Election Photo Idendy Card தேர்தல் வாக்களிக்க கட்டாயம் என்றே தேர்தல் கமிஷன் கூறுகிறது. 

அதே சமயம் இந்த அடையாள அட்டையுடன், கூட நம்முடைய பெயர் Electoral Roll -ல் இருந்தாக வேண்டும். இல்லை எனில் வாக்களிக்க இயலாது.

எனவே நமது பெயர், இருக்கிறதா, இல்லையா என்பதை நிச்சயித்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகிறது. ஏனெனில், ஓட்டளிப்பது நம் உரிமை.
வரும் வாரங்களில், ஓட்டளிப்பவர் செய்யக்கூடிய, செய்யக்கூடாதவை பற்றியும், அதற்கான பலன்கள் பற்றியும், சில வழக்குகளோடும், தொடர்ந்து எலக்ஷன் கமிஷன் பற்றிய முக்கிய வழக்குகளோடு ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டிய தகவல் பலவோடும் சந்திக்கவிருக்கிறோம்.
தொடர்வோம் நம் பயணத்தை.
- ஹன்ஸா

நன்றி : தினமலர் நாளிதழ் - 02.02.2016

அரசு வழக்கறிஞர்


அரசு வழக்கறிஞர் - என்ன செய்ய வேண்டும்?

சட்டம் தெரிஞ்சுக்கலாம் வாங்க...

அரசு வழக்கறிஞர் என்பவர் ஏன் நியமிக்கப்பட வேண்டும்? அதன் அவசியம் என்ன?

எந்த ஒரு குற்றம் நிகழ்ந்தாலும் அந்த குற்ற சம்பவம் சம்பந்தப்பட்டவரை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கும் தன்மை கொண்டது.

 குற்றம் செய்த ஒருவன் தன்னுடைய செல்வாக்கினால் வழக்கில் சிக்காமல் வெளியே வந்து மீண்டும், மீண்டும் குற்றங்களை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.

தவிர, பாதிக்கப்பட்டவர் பொருளாதாரத்தில் பின் தங்கியவராக, பின்புலம் இல்லாதவராக இருக்கும் பட்சத்தில் அவர் தனக்கென்று வழக்கறிஞர் ஒருவரை நியமித்து வழக்கு நடத்தும் போது அவர் மிரட்டப்படலாம். அதையடுத்து அந்த வழக்கு இல்லாமல் போகும் நிலை உருவாகலாம்.

இந்த நிலை வராமல் இருப்பதற்காகவே குற்றங்களை முற்றிலுமாக களையும் நோக்கில் பாதிக்கப்பட்டவர் சார்பாக அரசே வழக்கை நடத்தி வருகிறது.

 Cr.P.C. 1973, பிரிவு 24-இன் கீழ் அரசு குற்றத்துறை வழக்கறிஞரும், பிரிவு 25-இன் கீழ் அரசு குற்றத்துறை உதவி வழக்கறிஞர்களும் நியமிக்கப் படுகின்றனர்.

வழக்கமாக, ஒவ்வோர் அமர்வு நீதிமன்றத்தில் நடகும் வழக்கு விசாரணையில் “அரசு குற்றத்துறை வழக்கறிஞர் ( Public Prosecutor) ஏற்று நடத்த வேண்டும் என்று பிரிவு 225 உரைக்கிறது. 

அதே போல், மாஜிஸ்டிரேட் முன் நடத்தப்படும் வழக்குகளை Assitant Public Prosecutors என்று சொல்லப்படும் அரசு குற்றத்துறை உதவி வழக்கறிஞர்களால் நடத்தப்படுகின்றன.

இவர்கள் வழக்கு எந்த நீதிமன்றத்தின் முன் விசாரணையில் உள்ளதோ அந்த நீதிமன்றத்தின் முன் தோன்றி, எழுத்து மூலம் எவ்வித அதிகாரமும் இன்றி, வாதாடலாம் என்று பிரிவு 301(1) கூறுகிறது.

உண்மையிலேயே, அரசு சார்பாக வழக்கை ஏற்று நடத்தும் பொறுப்பும், கடமையும் வாய்ந்த இவர்கள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்டிரேட்டின் முன் அனுமதி பெற்றுத் தான் வழக்கை நடத்த வேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை என்று பிரிவு 302(1) அதிகாரம் அளிக்கிறது.

தன்னை நியமித்த அதிகார அமைப்பு உட்பட யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுயமாக செயல்படக்கூடிய கம்பீரமான இந்த பதவியில் உள்ள அரசுத்துறை வழக்கறிஞர்கள் காவல்துறை கொடுக்கும் சாட்சியம் மற்றும் ஆவணங்களை (ஒரு வேளை அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக இருந்தாலும் கூட) நீதிமன்றத்தில் சமர்ப்பித்து குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையிலேயே குற்றவாளி தானா என்பதை உறுதிப்படுத்த நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும்.

சுருக்கமாக சொன்னால், அரசு குற்றத்துறை வழக்கறிஞர் என்பவர் அரசின் பிரதிநிதியாக செயல்பட வேண்டுமேயன்றி காவல்துறையின் ஏஜண்ட் போல் செயல்படக்கூடாது. 

அவர் நீதியை நிலை நாட்ட உதவும் நீதி தேவதையின் பிரதிநிதியாக மட்டுமே இருக்க வேண்டும்!

சில நேர்வுகளில், அரசு குற்றத்துறை வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பாக ஆஜராக வேண்டிய அவசியம் கூட நேரலாம் என்பதற்கு சாட்சியாக நிற்கிறது பின் வரும் வழக்கு.

Suneel Kumar Pal Vs. Phota Sheikh [(1984) S.C.C. (Cri.) 18]

By, சரவண அர்விந்த், Founder, LAW FOUNDATION