வாடகைத்தாய் - சட்ட என்ன சொல்கிறது?
ஒரு பிரசவத்தில் ஆணும், பெண்ணும் தவிர மூன்றாவதாக இன்னொரு பெண்ணின் கர்ப்ப்பையை சம்பந்தப்படுத்துவது குறித்த சமீபத்திய மசோதாவில், பணம் கொடுத்து, அதாவது ஒரு பெண்ணின் கர்பப்பையை வாடகைக்கு எடுத்து, அந்த உதவியுடன் பிள்ளை பெறுவதைத்தான் இம்மசோதா ஆதரிக்கவில்லை. மற்றபடி, பணம் கொடுக்காமல் உறவுப் பெண் மூலம் அப்படி பிள்ளை பெறுவதை எதிர்க்கவில்லை.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது என்பது எந்த அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்ததோ அதே அளவுக்கு பல சட்ட சிக்கல்களையும் கொண்டது.
ஒரு குழந்தை எந்தப் பெண் வழி பிறக்கிறதோ அந்தக் குழந்தைக்கு அந்தப் பெண்ணே சட்டபூர்வ தாயார் ஆவார். ஆனால் வாடகைத்தாய் முறையில் ஒரு பெண் வழி குழந்தை பிறந்தாலும், அதன் கரு முட்டை வேறொரு பெண்ணுடையதாக இருக்கிறது. இந்நிலையில் அக்குழந்தையின் பெற்ற தாயார் யார் எனும் கேள்வி எழுகிறது.
பெற்ற தாய் யார்:
ஒரு சிலர் பெற்றவளையும், வேறு சிலர் கருமுட்டையின் சொந்தக்காரியை பெற்றவளாகவும் ஏற்கின்றனர். ஏனெனில், பிள்ளை பெற விரும்பும் ஒரு பெண்ணுக்கு கருமுட்டை வளர்ச்சி சரியாக இல்லாத போது, கருமுட்டை தானம் பெறப்படுவதும் உண்டு. இது போன்ற சூழல்களில், கருமுட்டையின் சொந்தக்காரியை தாயார் எனச் சொல்லாமல், எவர் பிள்ளை பெற விரும்பினாரோ அவரைத்தான் தாயார் என்கிறோம்.
ஆக, பொதுவாகப் பார்க்கையில் எந்தப் பெண் பிள்ளை பெற விரும்புகிறாரோ அவரையே தாயாராகச் சொல்லலாம். எனினும், இப்படிப் பிள்ளை பெறுவதில் பல்வேறு தொழில் நுட்பங்கள் இருப்பதால் பிள்ளை பெற விரும்பும் தம்பதியர், மற்றும் பிள்ளையைச் சுமந்த பெண் இரு தரப்புக்கும் இடையே எழும் ஒப்பந்தங்களே யார் தாயார் என்பதை நிர்ணயிப்பதாக இருந்தன. இப்போதும் இருக்கின்றன.
புதிய மசோதா:
இந்தியாவில் வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்தும் வகையில் இதுவரை தனிச் சட்டம் ஏதும் இல்லை. இதை ஒழுங்குபடுத்தவே, சமீபத்தில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்ட்த்திற்கான மசோதா கொண்டு வரப்பட்ட்து.
இந்தியாவில் 1978ல் கல்கத்தாவில் பிறந்த கனுப்ரியா எனும் துர்காவே IVF (In Vitro Fertilization )இந்த முறையில் பெற்றெடுக்கப்பட்ட முதல் குழந்தை ஆவார். அதன் பிறகிருந்தே Assisted Reproductive Technology (ATR) எனும் தொழில் நுட்பம் பெரிதாக வளர ஆரம்பித்த்து.
இதற்கென தனியானதொரு சட்டம் இல்லாத நிலையில் இந்திய வாடகைத் தாயைப் பயன்படுத்தி பிள்ளை பெற்றுக் கொண்ட ஜெர்மானிய தம்பதிகள் சார்பில் வழக்கிடப்பட்டது. ஜெர்மனியில் வாடகைத் தாய் முறை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதால் அக்குழந்தையை அவர்கள் இந்தியாவிலிருந்து ஜெர்மனி கொண்டு செல்ல இயலவில்லை. இது குறித்த வழக்கை ஒட்டி வாடகைத்தாய் முறை, போன்ற இனப்பெருக்க முறைகளின் சட்ட செல்லுதன்மை குறித்து பேச்சு பெரிதாக எழுந்தது.
யார் வாடகைத் தாய்:
பொதுவாக ஒரு தம்பதியின் கருமுட்டை, விந்தணு இவற்றை இணைத்து அக்கருவை மூன்றாம் பெண்ணின் கர்பப்பையில் வைத்து வளர்ப்பது, அல்லது, ஒரு தம்பதியரில் ஆணின் விந்தணுவை, செயற்கை முறையிலோ, இயற்கை முறையிலோ பெண்ணின் கர்பப்பையில் செலுத்தி கரு உருவாக்கம் செய்து வளர்ப்பது என வெவ்வேறு வழி முறைகள் உண்டு.
இதில் பல்வேறு சட்டச் சிக்கல்களும் உண்டு.
சமீபத்தில் பேசு பொருளாக இருக்கும் வாடகைத்தாய் ஒழுங்குபடுத்து மசோதாவானது வாடகைத்தாய் முறையில் வாடகைத் தாய்க்கு பணம் கொடுத்து பிள்ளை பெறுவதையும், குறிப்பிட்ட இன்னார்தான் வாடகைத்தாயாக இருக்க இயலும் எனவும், குறிப்பிட்ட இன்னார்தான் அப்படி பிள்ளை பெற்றுக் கொள்ள இயலும் எனவும் சொல்கிறது.
முக்கியமாக சொந்தமற்ற ஒருவர் பணம் பெற்றுக் கொண்டு வாடகைத் தாயாக இருப்பதை இந்த மசோதா ஆதரிக்கவில்லை.
இந்நிலையில் மேற்படி ஜெர்மானிய தம்பதியின் வழக்கினை ஒட்டி உச்ச நீதிமன்றம் சில கேள்விகளை இந்திய அரசாங்கத்தின் முன் வைத்த்து.
ஒப்பந்தம் செல்லுமா:
இதுவரை தம்பதியர் மற்றும் வாடகைத் தாய் இரு தரப்பின் ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்தே இது சட்ட செல்லுதன்மை பெற்றிருந்தது. அதாவது, இந்த ஒப்பந்தங்களுக்கு இந்திய ஒப்பந்தச் சட்டம்-1872 தான் அடிப்படையாக இருந்த்து. இதற்கு ART Guidelines பயன்படுத்தப்படுகிறது.
இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் செல்லுதன்மையே இந்த ஒப்பந்தங்களுக்கும் எனில், இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் பிரிவு 23ன் படி, பணம் பெற்றுக் கொண்டு வாடகைத் தாயாக இருப்பது (பொதுக் கொள்கைக்கு எதிரான ஒப்பந்தங்கள் செல்லுபடியாகாது) தவறானது எனச்சொல்லக் கூடியதாக இருக்கிறதா?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 21 ஒரு பெண்ணின் மரியாதைக்குக் குந்தகம் விளைவிப்பதைக் கண்டிக்கிறது. மேற்படி பணம் பெற்று வாடகைத்தாயாக இருக்கும் முறை அப்படியாக பெண்ணின் மரியாதைக்கு குந்தகத்தை விளைவிக்கிறதா? ஒரு ஏழைப்பெண்ணின் ஏழ்மை சுரண்டப்படுகிறதா?
குழந்தையை விற்பதாகுமா
Child trafficking என்பது மற்றவரிடம் பெற்ற பணத்திற்காக தமது குழந்தையை ஈடாக்க் கொடுப்பது எனவும் சொல்லலாம். இந்நிலையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அப்பணத்திற்கு ஈடாக பெற்ற பிள்ளையைத் தருவது என்பது Child trafficking ஆகுமா?
உண்மையில் விந்தணு தவிர இரு வெவ்வேறு பெண்கள் கருவும், உருவும் கொடுத்திருப்பதால் அவ்விரு பெண்களையும் தாய் எனச் சொல்லலாமா? ஏனெனில் உரு கொடுத்த வாடகைத்தாயின் வலியும், கால இழப்பும், உணர்வுப் போராட்டமும் கணக்கில் வைக்கத் தக்கவையே.
இந்த கேள்வியானது அந்த ஜெர்மானியத் தம்பதி வழக்கில் முன் வைக்கப்பட்ட ஒரு வாதமாகும்.
பெற்ற பின் குழந்தையை விற்றால் குற்றம். ஆனால் பெறும் முன்பே பணத்திற்காக குழந்தை விற்கப்படுவதாக இதைக் கொள்ளலாமா?
மேற்கண்ட கேள்விகளால் பணம் பெற்று பிள்ளை பெற்றுத்தரும் இம்முறையை தடை செய்தால் வேறு சில பிரச்சனைகளும் முன் நிற்கின்றன.
பணம் பெற தடை?
சமீபத்திய மசோதா வாடகைத் தாய் பணம் பெறுவதைத் தடுக்கிறது, அதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது என்னவெனில், இது போல பிள்ளை பெற்றுத் தரும் பெண்கள் பெரிதும் பொருளாதாரத்தில் அடிமட்ட நிலையில் இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் ஏமாற்றப்படவே அதிக வாய்ப்பும் உள்ளது.
ஏனெனில், வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்கள் அதிக அளவில் பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களாகவும், தமது குடும்பத்தின் பணத்தேவைக்காகவும் மட்டுமே அப்படி பிள்ளை பெற்றுத் தரத் தயாராக இருப்பதும் கண்கூடு.
இந்த வாடகைத் தாய் முறையில் ஈடுபடுபவர்கள் எவர் எனக் கேட்டால், வாடகைத் தாய், பிள்ளை பெற விரும்பும் தம்பதி, தவிர இதற்கான ஏஜன்சிகளின் பங்கும் பெரிது. லாபம் அடைபவர்கள் எனப்பார்த்தால் இந்த ஏஜன்சிகளே கொள்ளை லாபம் பெறுகின்றன.
இதுவும் போக பிரசவத்தின் போது இவர்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்? அதே சமயத்தில் இவர்களுக்கு ஏதும் ஊறு ஏற்பட்டால், அவர்களின் சொந்த குடும்பத்திற்கும், அவர்களின் சொந்த பிள்ளைகளுக்கும் என்ன பதில்?வலித்துத் துடித்துப் பெற்ற அந்த பிள்ளை பிரசவித்தவுடன் ஒரு வேளை மரணித்தால்? பிள்ளை பெற்றவளுக்கு என்னென்ன உரிமைகள் அக்குழந்தையிடம் உண்டு?
உறவிலேயே வாடகைதாய் சாத்தியமா
எனவேதான் கமர்ஷியலாக பணம் பெற்று பிள்ளை பெறுவதை மேற்சொன்ன மசோதா தடை செய்ய முயற்சிக்கிறது. அதற்கு மாற்றாக, பிள்ளை பெற விரும்பும் தம்பதியினரின், உறவுகளுக்குள்ளேயே பணம் மாற்றாகப் பெறாமல், அவர் ரத்த சம்பந்தமற்றவராக இருப்பினும் குடும்பத்திற்குள்ளேயே வாடகைத் தாயை ஏற்பாடு செய்துகொள்ள சிபாரிசு செய்கிறது.
இந்திய சமூகத்தில் அறிமுகம் இல்லாத நபரிடம் பணம் கொடுத்து பிள்ளை பெறுவதை விடக் கடினம் ஏற்கனவே அறிந்த நபரிடம் உதவி பெறுவது. ஏனெனில், பிள்ளை பெற்ற பிறகு, குழந்தையையும் கொடுத்த பிறகும் அக்குழந்தை பெற்றவளின் பார்வையில் இருக்கும் என்பதால் அதுவே அத்தாய்க்கும், குழந்தைக்கும், பெற்றோர் இருவருக்கும் மன உளைச்சலைத் தரும். இது போக, சமூகத்தில் பிள்ளை பெற இயலாதவர்களை இரக்கத்துடன் பார்ப்பதே நடக்கும். இந்நிலையில் சமமானவர்களிடம் பிள்ளை பெறுவதென்பது இயலாத ஒன்றே.
வாடகைத் தாய் முறையில் பொதுவாக பிள்ளை பெறுவதில் சிக்கல் உள்ள உடல் நிலையிக் கொண்ட தம்பதிகளே ஈடுபடுகிறார்கள் எனினும், பிரசவ துன்பத்தை அனுபவிக்கப் பயந்த பெண்களும், தொழிலில் வளர்ந்து வருகையில் பிள்ளைப் பேற்றுக்கு நேரம் ஒத்துக்க இயலாதவர்களும், ஓரினச் சேர்க்கயாளர்களும், திருமணத்தை விரும்பாத நபர்களும் கூட இந்த முறையில் தன் இனத்தைப் பெருக்க இயலும்.
மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே அனுமதி
ஆனால், இதில் மருத்துவ காரணங்கள் கொண்ட தம்பதியரைத் தவிர மற்றவர்கள் இவ்விதத்தில் பிள்ளை பெறுவதை இம்மசோதா ஏற்கவில்லை. வேறு வழியில்லாத சமயத்திலேயே மூன்றாம் நபர் கர்ப்பப்பை உதவிக்கு வரலாம் என சட்டம் நினைக்கிறது.
இம்முறையைத் தவறாகப் பயன்படுத்தி இயற்கைக்கு மாறாக மட்டுமே பிள்ளை பெறுதல் எனும் நிகழ்வு அமைந்துவிடலாம் எனும் கருத்தும் நிலவுகிறது.
அதாவது, பிள்ளை பெறுதல் எனும் நிகழ்வில் ஆண் பெண் தவிர, பிள்ளை பெற என்றே ஒரு இனம் உருவாகும் அளவுக்கு இது ஒரு தொழிலாக மாறிவிடுமோ எனும் அச்சமும் மசோதாவின் இந்தத் தடைகளுக்குக் காரணம் எனலாம்.
க்ளோனிங் போன்ற இனப்பெருக்கம் சார்ந்த தொழில் நுட்பம் வளரத் தொடங்கியபோது, மனித க்ளோனிங் தடை செய்யப்பட இந்தக் கருத்தே காரணம். ஆனால் வாடகைத் தாய் முறையில், எப்படியும், ஆணின் விந்து எனும் ஒரு அம்சம் தேவையானதாகவே இருக்கிறது.
மேலும் ஒரு நபர் (single parent), ஓரினச் சேர்க்கையாளர்கள் போன்றோர் இப்படிப் பிள்ளை பெறுவதை இச்சட்டம் தடுப்பது என்பது கால மாற்றத்தை எதிர்ப்பது போலவே உள்ளது.
வாடகைத்தாய் முறையில் உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு விடை காண்பதோடு, வேறு சிலவற்றையும் இந்தச் சட்டம் கணக்கில் கொள்ள வேண்டும்.
வாடகைத்தாய் முறை ஏஜன்ஸிகள், தமது சேவை குறித்த விளம்பரங்களை வெளியிடுதல் கூடாது எனவும், வாடகைத்தாய் கருவுற்றிருக்கும் போது அபார்ஷன் ஆனால் அந்த மருத்துவச் செலவு, பிள்ளை பெற்ற பின் அவளுக்கு மருத்துவ உதவி, ஆயுள் காப்பீடு போன்றவற்றை தம்பதியிடமிருந்து பெற்றுக் கொடுத்தாலும், அப்பெண்களுக்கு அந்த ஏஜன்சிகளே முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதை Ministry of Health and Family welfare கண்காணிப்பின் கீழ் செய்ய வேண்டும் எனவும் இச்சட்டத்தின் மூலம் வலியுறுத்தலாம்.
வாடகைத்தாய் முறையில் பிறந்த குழந்தை பிறந்த பின் இறந்துவிட்டால், பிறந்த குழந்தை ஊனத்துடன் பிறந்தால், குழந்தை பிறந்த உடன் பெற்றவள் குழந்தையைத் தர மறுத்தால், வாடகைத்தாய்க்காக பேசிய தொகை, இம்முறையில் கரு உருவாக்கம் செய்ய பெறப்பட்ட, கருமுட்டை, மற்றும் விந்தணுக்களின் பயன்படுத்தப்படாத பகுதிகளை அழிப்பது, போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
வாடகைத்தாய் முறையில் அத்தாய் ஏமாற்றப்படுவாள் என்பதே இம்முறையை சட்டபூர்வமாகத் தடுப்பதற்குக் காரணம் எனில், ஏற்கனவே பிள்ளைகாக, பிறந்த குழந்தைகளைக் களவாடுவதும், கடத்துவதும் நடக்கிற சூழலில், பிள்ளைக்காகத் தவம் இருக்கும் பெற்றோர், மறைமுகமாக வாடகைத் தாய் முறையில் பிள்ளை பெறவே முயற்சிப்பர். இந்நிலையில் வாடகைத்தாய் இன்னும் அதிகமாகவே ஏமாற்றப்படவே வாய்ப்புள்ளது.
ஒரு சட்டம் /செயல்பாடு தவறாகப் பயன்படுத்தப்படும் எனில், அப்பிழையைக் களையவே சட்டமும் அரசும் முன் நிற்கவேண்டுமேயல்லாது, அம்முறையையே தடுப்பதாக இருக்கக்கூடாது.
சமூகத்தின் சில தேவைகளை வேறு வழி இல்லாமல் சமூகம் ஏற்கின்ற சூழலில் சட்டம் அதை முழுமுற்றாக தடுத்தால் இல்லீகலாக அதுவே தொடரும் என்பதே அனுபவம்.
வாடகைத் தாய் முறையில் நாம் என்ன செய்யப் போகிறோம்?
-ஹன்ஸா (வழக்கறிஞர்)
legally.hansa68@gmail.com
Ph.9994949195
நன்றி : தினமலர் நாளிதழ் - 11.08.2016