disalbe Right click

Monday, October 10, 2016

குழந்தைகளைக் காக்க புது இணையதளம்


குழந்தைகளைக் காக்க புது இணையதளம் - என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் இந்தச் சமூகத்தில்தான் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 

குறிப்பாக இணையதளம் மூலம் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் நடப்பதும் அதிகரித்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆன் லைன்களில் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்காக முதன்முறையாக நம் நாட்டில் aarambhindia.org என்ற இணையத்தைத் தொடங்க உள்ளது. இது இங்கிலாந்தைச் சேர்ந்த Internet Watch Foundation (WIF) -உடன் தொடர்புடையது. WIF- ஆன் லைனில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காவே இயங்கிவரும் நிறுவனம்.

நாம் ஆன் லைன் பயன்படுத்தும்போது குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டால் அதன் லிங்கை  aarambhindia.org  அனுப்பிவைத்தால் போதும். 

 உடனே அந்த லிங்க் செயல்படாமல் முடக்குவதுடன், அதை யார் செயல்படுத்துகிறார், இதற்கு காரணமானவர்கள் யார் எனக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் இந்த இணையதளம் முயற்சிகளை எடுக்கும். 

பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய, குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் பற்றிய குறும்படங்களும் இந்தத் தளத்தில் உள்ளன.

தொடக்கமாக, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவர இருக்கும் aarambhindia.org இணையதளம், விரைவிலேயே இந்தியாவின் 22 பிரந்திய மொழிகளிலும் செயல்படும். 

அடுத்த வாரம் முதல் இந்த இணையதளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற செயல்கள் தொடர்புடைய 'லிங்க்' களைப் பதிவு செய்யலாம். 

இந்த இணையதளம் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும்.

குரூர எண்ணம் கொண்டவர்களிடமிருந்து குழந்தைகளைக் காப்போம்.

-------------------------------------------------------------------------------------------என்.மல்லிகார்ஜுனா

நன்றி : விகடன் செய்திகள் - 14.09.2016

Sunday, October 9, 2016

தங்க நகைக் கடன் லாபமா, நஷ்டமா?


தங்க நகைக் கடன் லாபமா, நஷ்டமா? - என்ன செய்ய வேண்டும்?

தங்கம் மீது நம் மக்களுக்கு இருக்கும் ஆசை அளவில்லாதது. அக்‌ஷய திருதி வந்தால் தங்கம் வாங்குவார்கள்; தீபாவளிக்கு முன்பு தாந்த்ரேயாஸ் வந்தாலும் வாங்குவார்கள். இதுபோக, குழந்தைகளின் எதிர்காலத்துக்கென பணம் கிடைக்கும் போதெல்லாம் தங்கம் வாங்கிப் போடுவார்கள். மகன் அல்லது மகளின் திருமண செலவுக்குத் தேவையான பணத்தைக்கூட பிறகு ஏற்பாடு செய்துகொள்ளலாம்; முதலில் தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் நம்மவர்கள். 

நம் மக்கள் மட்டுமல்ல, பல்வேறு நாட்டின் அரசாங்கங்களே தங்கள் நாணயத்தின் ஏற்ற இறக்கத்துக்கு தங்கத்தைத்தான் காப்பாகக் கொள்கின்றன. 

தவிர, சர்வதேச நிதியம் (IMF) போன்ற அமைப்புகளிடம் கடன் வாங்கும்போது, அதற்கு காப்பாக தங்கம் மற்றும் டாலர் நோட்டுக்களைத்தான் நாடுகள் கொடுக்கின்றன.

ஆக, தங்கம் என்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் முக்கியமான சொத்து என்பதில் சந்தேகமே வேண்டாம். இதற்கு முக்கியமான காரணம்,  எப்போது வேண்டுமா னாலும் இதை வைத்து கடன் வாங்கலாம் என்பதினால்தான்.

நான் ஒருமுறை, ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கியின் கிளைக்கு ஒரு ஆய்வுக்குச்  சென்றிருந்தேன். வங்கியின் கடன் சதவிகிதம் எவ்வளவு என்று பார்ப்பதுதான் நான் செய்த ஆய்வு. அப்போது அதிர்ச்சியான ஒரு உண்மையைத் தெரிந்துகொண்டேன், வங்கிகள் தந்த கடனில் கிட்டத்தட்ட 80% தங்க நகைக் கடன்.

சரி, ஏன் பலரும் தங்கத்தை அடமானமாக வைத்துக் கடன் வாங்குகிறார்கள்

இந்தக் கேள்விக்கான காரணங்கள் பல…
************************************************************
* கடன் பெறுவதற்கு கடன் மதிப்பீடு செய்யப்படுவதில்லை.

* கடன் பெறுவதற்கு மாத வருமானச் சான்றிதழ்கள் கேட்கப்படுவதில்லை.

* சில மணி நேரத்தில் (தனியார் நிறுவனங்களில் சில நிமிடங்கள்தான்) பெற இயலும்.

* ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் கடனைத் திருப்பிச் செலுத்த அவசியமில்லை.

* தனிநபர் கடனைவிட வட்டி விகிதம் குறைவு.

* தங்கம் ஈடாக இருப்பதால், எந்தக் கேள்வியும் கேட்கப்படுவது  இல்லை.
* தங்கத்தை அடமானமாக வைத்துக் கடன் வாங்குவதால், எந்தவித நஷ்டமும் கிடையாது.

இந்த காரணங்களைத் தவிர, மற்றொரு முக்கியமான காரணமும் சொல்லப்படுகிறது. தங்கம் என்பது ஒரு இறந்த சொத்து (Dead asset). அதிலிருந்து எந்த வருமானமும் கிடைப்பதில்லை. எனவே, அதை வைத்துக் கடன் வாங்குவதால், எந்தவித நஷ்டமும் கிடையாது என்று சொல்பவர்களும் பலர் இருக்கவே செய்கிறார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால், இது உண்மை போலத் தோன்றும். ஆனால், இதில் உண்மை இல்லை. தங்கத்தை அடமானமாக வைத்து நாம் பெறும் கடனுக்கான வட்டி, செயலாக்கக் கட்டணம், அபராதக் கட்டணம், மதிப்பீட்டுக் கட்டணம், முன்கூட்டியே கடனை திரும்பச் செலுத்துவதற்கான கட்டணம் எனப் பல செலவுகள் இருக்கின்றன. இவை வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள் இவற்றை வசூலிக்காமலும் இருக்கும்.

ஆனால், தங்க நகைக் கடன்களை தேசியமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளிலும் பெறலாம். அதிகமானவர்கள் இந்த நிறுவனங்களில் தான் நகைக் கடன் வாங்குகிறார்கள். ஓரளவுக்கு நியாயமான வட்டி, அரசு விதித்த விதிமுறைகளைப் பின்பற்றுவது என பல பாசிட்டிவ் அம்சங்கள் இதில் இருப்பதால், நகை அடமானக் கடன் பெற இந்த நிறுவனங்களையே மக்கள் நாடுகிறார்கள்.

தனியார் நிதி நிறுவனங்களிலும், பான் புரோக்கர்கள் என்று சொல்லப்படுகிற நகை அடமானக் கடைகளிலும் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்கலாம் என்றாலும் இங்கு வட்டி விகிதம் மிக மிக அதிகம். தவிர, அடமானம் வைக்கப்படும் தங்கத்துக்கு பாதுகாப்புக் கான உறுதியும் இருக்காது.

என்றாலும் தனியார் நிறுவனங்களை மக்கள் தேடிச் செல்லக் காரணம், டாப் சினிமா நடிகர்களை வைத்து செய்யப்படும் விளம்பரம்தான். இந்த விளம்பரங்கள் டிவிக்களில் திரும்பத் திரும்ப போட்டுக் காட்டப் படுவதால், மக்கள் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். 

ஆனால், ப்ரைம் டைமில் இந்த விளம்பரங்களை ஒளிபரப்ப இந்த நிறுவனங்கள் எவ்வளவு செலவு செய்கிறது என்பதை நாம் மறந்தே விடுகிறோம். எந்தவொரு தொழிலிலும் லாபம் ஈட்டாமல் வீண் செலவு செய்யப்படுவதில்லை. இந்த நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு செய்யும் செலவுகளை வைத்தே அவை சம்பாதிக்கும் கொழுத்த லாபத்தை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த லாபத்தைக் கொடுப்பது யார்…? வேறு யார், நாம்தான்; நாம் கொடுக்கும் வட்டிதான். ஒருவரின் லாபம், இன்னொருவரின் நஷ்டம்.  தங்க நகைக் கடன் கொடுத்தவருக்கு லாபம் என்றால்,  வாங்கியவருக்கு…? சொல்லவே வேண்டாம், நஷ்டம்தான்

சரி, கடன் கொடுக்கும்போது தங்கத்தின் விலை இருந்ததைவிட குறைந்துவிட்டால் என்ன ஆகும்? முன்பெல்லாம், வங்கிகள் இதைப் பற்றி  அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை. ஒரு பவுன் (எட்டு கிராம்) ரூ.32,000-ஆக இருந்த தங்கம், தடாலடியாக வீழ்ச்சிக் கண்டு ரூ.18,000-க்கு வந்தபோது, வங்கிகள் மார்ஜின் தொகை போதாமல் தவித்துப் போனது. சாதாரணமாக தங்கம் விலை நிலையாக இருக்கும். 

ஆனால், பல வருடங்களுக்குப்பிறகு திடீர் சரிவு நிகழ்ந்தது சமீபத்தில்தான். அதனால் இப்போது மாத ஆரம்பத்தில், சென்ற மாதத்தின் சராசரி தங்கத்தின் விலை நிலவரம் கொண்டு கடனாகத் தரப்படும் பணத்தின் அளவு மாற்றி அமைக்கப்படுகிறது. கடன் வாங்கியவர் இந்த வேறுபாட்டுத் தொகையைக் கட்ட வேண்டாம்.  

ஆனால், இந்தத் தொகைக்கு அபராத வட்டி அதிகமாக வசூலிக்கப்படும். இந்த அபராத வட்டியைக் குறைக்க வேண்டுமானால், இந்த வேறுபாட்டுத் தொகையை வங்கிக் கணக்கில் கடன் வாங்கியவர் செலுத்தவேண்டும்.

ஏலமோ ஏலம்!
***********************
தங்க நகையை அடமானமாக வைத்து வாங்கப்படும் கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்தாவிட்டால் என்ன ஆகும்?

இதைப் பற்றி வங்கிகள் கடன் கொடுக்கும்போது விளக்கிச் சொல்வதில்லை. அடமானம் வைப்பவர் களும் படிவத்தை ஒழுங்காகப் படிக்காமல் கையெழுத்திட்டுவிடுகிறார்கள். காரணம் அவசரம். நம் பணத் தேவை என்கிற ஒன்றை மட்டுமே பார்க்கிறோம். வட்டியை எல்லாம் கணக்குப் போட்டுப் பார்ப்பதில்லை. ஆக, சில மாதங்களுக்கு என்று தேவைப்பட்ட கடன், ஒரு நிரந்தர தேவையாகி திரும்பக் கட்டமுடியாமல் போகும்போது, வங்கியானது அடமானம் வைக்கப்பட்டிருக்கும் நகைகளை ஏலத்தில் விற்று விட்டு, அதற்கு கொடுக்கவேண்டிய அசல் மற்றும் வட்டியை எடுத்துக்கொள்ளும்.

வங்கிகளின் லாபம் நமது நஷ்டம் என்பதை ஏற்கெனவே சொல்லி இருந்தேன். இப்படி நகைக் கடன் எடுப்பதைவிட, நகையை நம் தேவைக்கேற்ப விற்றுவிட்டு, பின் சிறிது சிறிதாக வாங்கினால் நஷ்டத்தைத் தடுப்பது மட்டுமல்லாமல், லாபம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. ஆனால், தங்க நகைகளை விற்பதற்கு நம்மில் பலருக்கும் தயக்கம் நிறைய உள்ளது.

காரணம், நாம் போட்டு பயன்படுத்திய நகைகள் மீது நமக்கொரு அலாதியான பாசம் வந்துவிடுகிறது. சில நேரம் இது பயமாகவும் உருவெடுக்கிறது. பெண்கள் தங்கள் பாதுகாப்பு என்பதே தங்களிடம் இருக்கும் நகைதான் என்று உணர்வதால், எங்கே நகையை விற்றுவிட்டால் மறுபடியும் வாங்காமல் போய்விடுவோமோ என்று பயப்படுகிறார்கள். 

தவிர, நகையை அடமானம் வைத்து வாங்கப்படும் கடனில் முக்கால்வாசி, குறித்த காலத்தில் செலுத்தப் படாமல் ஆண்டுக் கணக்கில் நீட்டிக்கப்படுகிறது. அந்த சமயம், பழைய கடன் நேர் செய்யப்பட்டு, புதுக் கடன் போல கணக்குக் காட்டப்படுகிறது. இவ்வளவு செய்தும், கடனைத் திரும்ப அடைக்க முடியாமல், நகையை ஏலத்தில் விடுவதைவிட, இரண்டு வருடத்துக்கு முன்பே அதை விற்றிருந்தால் குறைவான நஷ்டமே வந்திருக்கும். இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்

நம் பணத் தேவை – ரூ.1 லட்சம்
கடன் காலம் – 24 மாதம்
வட்டி விகிதம் – 14% 
மாதத் தவணை – ரூ.4,800.
தங்கம் விலை – கிராம் ரூ.2,900 (உதாரணமாக)
மார்ஜின் பிடித்தம் – 30%
சந்தையில் விற்கும்போது நமக்கு கிடைக்கும் விலை – ரூ.2,500 
வங்கியானது ஒரு கிராம் தங்கத்துக்குப் போட்ட கடன் மதிப்பு – ரூ.2,000 (916 சுத்த தங்கம், கல் பதிக்காத நகை என்கிற கணக்கில்)
தேவையான தங்கம் – 50 கிராம் (50X2000 = 1,00,000)  
கடன் வாங்கும்போது கொடுக்கப் படும் கட்டணங்கள்
செயலாக்கக் கட்டணம் – ரூ.1,000
ஆவணச் சான்றிதழ் – ரூ.350
மொத்தக் கட்டணம் – ரூ1,350
வட்டி – 4,800X24-1,00,000 = ரூ.15,200
மொத்தச் செலவு – ரூ.16,550

(இங்கு அபராத வட்டிக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.)

சரி, இப்போது மூன்று வகையான வாய்ப்புகளை எடுத்துக்கொள்வோம்.

1. தங்கம் விலை அப்படியே இருக்கும்போது!
*****************************************************************
சந்தையில் விற்கவேண்டிய தங்கம் – 40 கிராம்
40X2500=ரூ.1,00,000
மாதம் மாதம் தவணையாக செலுத்தும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் வாங்கினால்…
21X4,800=1,00,800
21 மாதங்களில் விற்ற தங்கத்தை மறுபடியும் வாங்கிவிடலாம். அப்போது நமக்குக் கிடைக்கும் லாபம் 3X4,800+1,350=ரூ.15,750. எனவே, லாபம் = ரூ.15,750.

2. தங்கம் விலை கிராம் ரூ.3,000-ஆக உயரும்போது!
***************************************************************************
நாம் வாங்கும் தங்கத்தின் விலை சிறிது சிறிதாக உயரும்போது – 40X3000=ரூ.1,20,000
நமக்கு ஏற்படும் நஷ்டம்=3X4,800+1,350 =15,750-20,000=4,250.
ஆக, நஷ்டம் = ரூ.4,250.

3. தங்கம் விலை ரூ.2,800-ஆகக் குறையும்போது! 
************************************************************************
நாம் வாங்கும் தங்கத்தின் விலை குறையும்போது – 40X2800=1,12,000.
நம் லாபம் = 3X4,800+1,350=15,750+12,000= 27,750. 
ஆக, லாபம் = ரூ.27,750.

மேற்சொன்ன கணக்குகளை எல்லாம் பார்த்தால், நகையை அடமானம் வைத்து கடன் வாங்குவதைக் காட்டிலும், நகையை விற்று அவசர செலவுகளைச் சமாளிப்பதே சரி என்கிறீர்களா என நீங்கள் கேட்கலாம். இல்லை; நகையை அடமானம் வைத்து மிகக் குறுகிய காலத்தில், அதாவது 3 அல்லது 4 மாதங்களில் பணத்தைக் கட்டி நகையை மீட்டுவிட முடியும் என்பவர்கள் அடமானம் வைக்கலாம். 
அடுத்து, நகைக் கடன் மூலம் கிடைக்கும் பணத்தை பிசினஸில் போட்டு நல்ல லாபம் சம்பாதிக்க வாய்ப்புள்ளவர்கள் இந்தக் கடனை வாங்கலாம்.

ஆனால், எப்போது பணம் கிடைக்கும், எப்போது நகையை மீட்போம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையெனில், அடமானக் கடனை வாங்கும்முன் யோசித்து முடிவெடுப்பதே நஷ்டத்தைத் தவிர்க்க உதவும்.

நகைக் கடன் – ஒரு விளக்கம்!
*********************************************
நகையின் தரமும், எடையும் சரிபார்க்கப்பட்ட பின்பே நகைக் கடன் வழங்கப்படும். தரத்தையும் எடையையும் சரிபார்க்க ஒவ்வொரு வங்கியிலும் மதிப்பீட்டாளர் ஒருவர் இருப்பார். அவருக்கு உரிய கட்டணம் செலுத்தவேண்டும்.

இது முடிந்தபின், வங்கி மேலாளர் ஒரு கிராம் கணக்கில் நகைக்கு உண்டான தொகையை நிர்ணயம் செய்வார். சில வங்கிகளில் மதிப்பீட்டாளரே அந்த வேலையைச் செய்வார். கடன் தொகை ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். ஹால்மார்க் முத்திரை உள்ள நகை 24 காரட் என்றால் கிராமுக்கு சுமார் ரூ.2100, 22 காரட் என்றால் ரூ.2,000 என கடன் தொகை கணக்கிடப்படுகிறது. அதேபோல் நகையில் உள்ள கல் அது வைரமாகவே இருந்தாலும், அந்த எடை கழிக்கப்படும். நகைக்கான முழுத் தொகையும் நமக்கு கடனாகத் தரமாட்டார்கள். ஒரு மார்ஜின் தொகையைப் பிடித்து வைத்துக்கொண்டு மீதமுள்ளதைத்தான் தருவார்கள். இதுவும் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

அதேபோல், கடனின் காலமும், வட்டி விகிதமும் மாறுபடும். தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் ஆறு மாதம் முதல் மூன்று வருடங்கள், தனியார் நிதி நிறுவனத்தில் மிகக் குறைந்த நாள் கணக்கில் திருப்பிக் கட்டும் விதமாக கடன் கொடுக்கப்படும். அதேபோல்,  மார்ஜின் தொகை 20-30% பிடிக்கப்படும். வட்டி விகிதம் 12% முதல் 17% வரை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது.

இந்த வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது. வங்கியின் கடன் விகிதம் மாறும்போது இந்த விகிதமும் மாறுபடக்கூடும். நிதி நிறுவனங்களில் வட்டி 24% வரை செல்கிறது. தவிர, அதிகபட்ச கடன் தொகையும் ரூ.50,000 முதல் ரூ.20 லட்சம் வரையில் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இன்னும் சற்று கூடுதலான அதிகபட்ச தொகையை வழங்குகிறார்கள். தவிர வங்கிகளில் விவசாயத்துக்குக் குறைவான வட்டியாக 8 – 8.5% வசூலிக்கிறார்கள்.

ஒரு வருடம் அல்லது குறைவான காலத்துக்கு எடுக்கப்பட்டால், மாதத் தவணை இல்லாமல் வட்டி மட்டும் மாதம்தோறும் கட்டிவிட்டு, வருடக் கடைசியில் ஒரே தொகையாக கடன் தொகையைக் கட்டமுடியும். ஆனால், ஒரு வருடத்துக்கு மேலான கடன் என்றால் வட்டி அத்துடன் அசல் தொகையும் நிர்ணயிக்கப்பட்டு, மாதம்தோறும் கட்டவேண்டும்.

நன்றி – நாணயம் விகடன் 16.10.2016

குடும்ப வன்முறைச் சட்டத் திருத்தம்


குடும்ப வன்முறைச் சட்டத் திருத்தம் - என்ன செய்ய வேண்டும்?

குடும்ப வன்முறைச் சட்டப்படி பெண்கள், சிறார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் உள்ள பெண்கள் மீதும், சிறார் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஜோசப் குரியன், ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:

2005-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி, திருமணமான ஒரு பெண்ணை, அவரது புகுந்த வீட்டில் உள்ளவர்கள் சித்திரவதை செய்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள வயது வந்த ஆண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்.

அந்தச் சட்டத்தின், 2-(கியூ) பிரிவில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக கொடுமை செய்யும் "வயது வந்த ஆண்களுக்கு எதிராக' நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறைச் சட்டத்தில் உள்ள இந்தப் பிரிவு, பாலின சமத்துவத்தை வலியுறுத்தும், அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவை மீறும் வகையில் உள்ளது. எனவே, குடும்ப வன்முறைச் சட்டத்தின் 2-(கியூ) பிரிவில் உள்ள "வயதுவந்த ஆண்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அந்த இடத்தில் "நபர்' என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே விடப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

முன்னதாக, குடும்ப வன்முறை தொடர்பான ஒரு வழக்கில், ஒரு சிறுவன், 2 சிறுமிகள், ஒரு பெண் என 4 பேரை விடுவித்து, மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

குடும்ப வன்முறைச் சட்டத்தில், பெண்களுக்கு தீங்கிழைக்கும் "வயதுவந்த ஆண்'களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது; 

குற்றம்சாட்டப்பட்டவர்கள் வயது வந்த ஆண்கள் இல்லை என்பதால் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று அந்த நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி யார் மீது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. 

நன்றி : தினமணி நாளிதழ் - 10.10.2016


ஜனாதிபதி சம்பளம் உயரப்போகிறது


ஜனாதிபதி சம்பளம் உயரப்போகிறது - என்ன செய்ய முடியும்?

ஜனாதிபதி சம்பளத்தை உயர்த்த மத்திய அரசு திட்டம்
புதுடில்லி: 7 வது சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட உள்ளதை தொடர்ந்து ஜனாதிபதியின் சம்பளத்தை மாதத்திற்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டம்:
7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையடுத்து அமைச்சரவை செயலாளர் சம்பளம் மாதத்திற்கு ரூ.2.5 லட்சமாக உயர்கிறது. 

இதனையடுத்து, ஜனாதிபதியின் சம்பளத்தை ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் மாநில கவர்னர்களின் மாத சம்பளத்தை ரூ.1.10 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சம் சட்டத்தை தயாரித்துள்ளதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக்கூறப்படுகிறது.

பரிசீலனை:
இதேபோல் துணை ஜனாதிபதிக்கு சம்பளம் என தனியாக நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால், ராஜ்யசபா தலைவர் என்ற முறையில், அவரது மாதசம்பளம் ரூ.1.25 லட்சமாக உள்ளது. 

துணை ஜனாதிபதி சம்பளத்தை உயர்த்த வேண்டுமானால், பார்லிமென்ட் உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. எம்.பி.,க்கள் சம்பளத்தை உயர்த்த பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்யாநாத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. 

எம்.பி.,க்கள் சம்பளத்தை உயர்த்தும் போது துணை ஜனாதிபதி சம்பளத்தை உயர்த்துவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்யும் என டில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர் சம்பளம் கடைசியாக கடந்த 2008 ஆண்டு 3 மடங்கு உயர்த்தப்பட்டது. 

அதுவரை, ஜனாதிபதி சம்பளம் ரூ.50 ஆயிரமாகவும், துணை ஜனாதிபதி ரூ.40 ஆயிரமாகவும், கவர்னர் சம்பளம் ரூ.36 ஆயிரமாக இருந்தது

நன்றி : தினமலர் நாளிதழ் - 09.10.2016

Saturday, October 8, 2016

விவாகரத்தை தவிர்க்க


விவாகரத்தை  தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மணமுறிவு செய்து கொள்வதற்காக யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. 

ஒன்று சிறப்பாக அமைய நாம் நேரத்தை ஒதுக்கி நிறைய முயற்சி செய்கிறோம். அவ்வாறுதான் திருமண வாழ்கையும். மண வாழ்க்கை பந்தம் தொடர்ந்திருக்க தம்பதிகள் பரஸ்பரம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும். 

திருமண வாழ்க்கை எல்லாவற்றிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. வெளியிலிருந்து பார்த்தால், இருவரும் இணை பிரியா தம்பதிகளாக தெரிவர். 

ஆனால் அவர்களுக்குள் எத்தனையோ கசப்புகள் இருக்கலாம். இவற்றை களைந்து உள்ளும் புறமும் இணை பிரியாமல் இருப்பதற்கு அத்தம்பதிகள் சேர்ந்து செயலாற்ற வேண்டும்.

எனவே புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களே அல்லது இன்றோ நாளையோ மணமுறிவு கோரி நீதிமன்றத்தில் வழக்கிட சிந்தித்து கொண்டிருக்கும் தம்பதிகளே, உங்கள் இல்வாழ்க்கை இனிதாக எந்த இடர்படும் இன்றி தொடர இங்கு சில ஆலோசனைகளை உங்களுக்கு சொல்ல ஆசைபடுகிறோம். 

கடைபிடித்துப் பாருங்கள்.... உங்கள் துணை உங்கள் அன்புக்கு அடிமை ஆவது உறுதி.

1. ஆணும் பெண்ணும் வேறுபட்டவர்கள், மாறுபட்ட உணர்ச்சி கொண்டவர்கள் என்பதை முதலில் ஏற்று கொண்டு அதன்பின் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மண வாழ்க்கை இறுதி வரை சிறக்கும்.

2. சின்ன விஷயமோ பெரிய விஷயமோ, உங்கள் துணையை கலந்தாலோசித்தே எதையும் செய்யுங்கள். அவர் கூறும் கருத்தை கூர்ந்து கேளுங்கள். 

3. இருவரும் தவறுகளை செய்யக் கூடியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அத்தவறுகளில் இருந்து சரியானதை அறிந்து கொள்ளுங்கள். ஒருமுறை செய்த தவறை அடுத்த முறை செய்யாதீர்கள்.

4. உங்கள் துணையிடம் மன‌ம் விட்டு பேசுங்கள், அவரின் பிரச்சனையை காது கொடுத்துக் கேளுங்கள்.

5. திருமணத்துக்கு முன்போ அல்லது அதன் பின்னரோ, மண வாழ்க்கைக்கு புறம்பான தொடர்புகளை கை விடுங்கள்.

6. எத்தகைய பிரச்சனை இருந்தாலும் அது இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் கூட, இரவில் தனித்தனி படுக்கைகளில் படுக்காதீர்கள். உறங்குவதற்கு முன் அப்பிரச்சனையை தீர்க்க ஏதேனும் வழிகளை கண்டுபிடிக்க முயலுங்கள். பிரச்சனையை சுமுகமாக முடிக்கவே முயல வேண்டும்.

7. உங்களை பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அது உங்கள் துணையை சலிப்படைய செய்து விடும்.இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் அதிக அக்கறையுடன் இருப்பது நல்லது.

8. சிறு சிறு கேலியும் கிண்டலும் இருக்கலாம். ஆனால் அது வன்மமாக மாறி விடக்கூடாது. அந்தந்த கோப தாபத்தை அப்படியே விட்டுவிட வேண்டும். 

9. ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாகவும், அன்பான காதலர்களாகவும் இருங்கள்.

10. உங்கள் துணையின் நண்பர்களை உங்கள் துணையை அருகில் வைத்து கொண்டு குறை கூறாதீர்கள். குறிப்பாக உங்கள் நண்பர்களின் முன்னிலையில் உங்கள் துணையை குறை கூறாதீர்கள்.

11. உங்கள் துணையின் பெற்றோர்களை இழிவு படுத்தாதீர்கள் அல்லது குறை கூறாதீர்கள்.

12. கொடுத்து பெற்று கொள்ளுங்கள்.

13. உடலுறவு கொள்வதை ஏதோ ஒரு வழக்கமாக மேற்கொள்ளாதீர்கள். ஆசையும், காதலும் கொண்டு அணுகுங்கள்.

14. என்ன சொல்லி விடப் போகிறாள்/றார் என்ற எண்ணத்தில் செயல்படுவதை தவிர்க்கவும். அதாவது உரிமை என்ற பெயரில் அத்து மீறாதீர்கள்.

15. உங்கள் துணையர் சோர்ந்திருக்கும் போது அவரை உற்சாகப்படுத்துங்கள், ஊக்கப்படுத்துங்கள், நம்பிக்கை கொடுங்கள். மாறாக அவரது சோர்வை அதிகப்படுத்தி விட வேண்டாம்.

16. உங்கள் தோற்றத்தை பொலிவாக வைத்திருங்கள். ஆரோக்கியம் பேணுங்கள்.  அழகு படுத்திக் கொள்ளுங்கள். 

17. ஒருவருக்கொருவர் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.

18. சமாதானம்தான் தீர்வு என்பதை உணருங்கள்.

19. மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

20. எதையாவது கடனாக பெற விரும்பினால், அது பற்றி உங்கள் துணையிடம் கேளுங்கள்.

21. உங்களது எல்லா தகவல்களையும் உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

22. நீங்கள் உங்கள் துணையரை அதிகம் நேசிப்பதாக அவரிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருங்கள்.

23. ஒருவருக்கொருவர் பாராட்ட பழகுங்கள். உள்ளன்போடு வாழ்த்துகளை சொல்லி மகிழுங்கள்.

24. சுகத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்ளுங்கள். குறிப்பாக துக்கத்தின் போது ஆறுதல் கூறி ஆதரவாக இருங்கள்.

25. பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

26. ஒருவருக்கொருவர் நன்றி மறவாதீர்.. உங்கள் துணையை ஒருபோதும் ஏமாற்ற முயலாதீர்கள்.

28. "என்னை மன்னித்துவிடு" என்று சொல்ல தயங்காதீர்கள்.

29. இயன்ற அளவு உங்கள் துணையை திருப்திபடுத்துங்கள். இயலாத நிலைக்கு வருத்தம் தெரிவியுங்கள்.

30. சகிப்புத்தன்மையை இருவரும் வளர்த்துக் கொள்ளுங்கள். சச்சரவுகளை கலந்து பேசி தீருங்கள். குறிப்பாக கணவன் எச்சமயத்திலும் மனைவியிடம் வன்முறையை கையாளக் கூடாது.

சேர்ந்து வாழ்ந்து இன்பம் காண்பதே இல்வாழ்க்கை என்பதை அடிக்கடி நினைவில் நிறுத்தி சந்தோஷங்களை இரட்டிப்பாக்குங்கள்.

நன்றி : தினமணி நாளிதழ் - 07.10.2016

தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை


தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை - என்ன செய்ய  வேண்டும்?

பத்திரப் பதிவுத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழ்நாடு முன்னேற வேண்டுமானால் தற்போது உள்ள நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். நாம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பத்திரப் பதிவு தொடர்பான நடவடிக்கைகள் பலவற்றை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்.

சமீபத்தில் அம்மாநிலம் பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே பத்திரப் பதிவுகளைக் கணினிப் பதிவேடு (E-Registration) செய்யும் முறை உள்ளது. 

இந்த வசதியானது குத்தகைப் பத்திரம் மற்றும் புதிய குடியிருப்புகளுக்கான விற்பனைப் பதிவுப் பத்திரங்கள் ஆகியவற்றுக்கு உள்ளது.

மேலும் மகாராஷ்டிரம் இந்தியாவில் முதல் முறையாக IGR (Inspector General Of Registration) அழைப்பு மையத்தைப் பத்திரப் பதிவுத்துறைக்காகவே அமைத்துள்ளது. 

தற்போது இந்தச் சேவையானது மத்திய பிரதேசத்திலும், கேரளத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் வேலை நேரமானது அனைவரும் எளிதில் அணுகும் முறையில் உள்ளது. 

மும்பை, மும்பை புறநகர் மாவட்டம், தானே, கல்யாண், பன்வால் மற்றும் புனேவில் பதிவுத் துறை அலுவலங்கள் அமைந்துள்ளன. இவ்வலுவகங்கள் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், சில அலுவலகங்கள் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் செயல்படுகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் உபயோகிக்கப்படும் மென் பொருளானது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இவை அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றவாறு உள்ளன. நாள் ஒன்றுக்கு எவ்வளவு பத்திரம் பதியப்படுகிறது, எவ்வளவு வருமானம் போன்ற தகவல்களை ஆன்லைனில் அத்துறை தினமும் வெளியிடுகிறது. 
மாதம் மற்றும் ஆண்டுக்கான மொத்த வருமானமும் ஆன்லைனில் பதியப்படுகிறது. 

ஆன்லைன் பொதுத் தரவு நுழைவு வசதிகள் பல மாநிலங்களில் உள்ளன. இதன் மூலம் ஆவணங்களை ஸ்கேன் செய்வது எளிதாகிறது. 

மேலும் பதிவுசெய்த பத்திரமானது பதிவுசெய்த அரை மணிநேரத்துக்குள் சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

தற்போது தமிழ்நாடு, அசல் பத்திரத்தைப் பதிவுசெய்த இரண்டு நாட்களில் சம்பந்தப்பட்ட நபரிடம் வழங்குகிறது.

மகாராஷ்டிர சாரதி (SARATHI) என்ற சிற்றேடை நிறுவியுள்ளது 

இது ஆவணங்கள் பதிவு,முத்திரைவரி மதிப்பீடு, இ-கட்டணம் (E-PAYMENT), இ-சேவை (E-SERVICE) மற்றும் திருமணப் பதிவு போன்ற முழுமையான தகவல்களைக் கொண்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 1985-ம் ஆண்டு முதல் ஸ்கேன் செய்த ஆவணச் சான்றிதழ்கள் கிடைக்கப் பெறுகின்றன. கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்திச் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

இது போன்ற ஆன்லைன் வசதி ஆந்திரப் பிரதேசத்திலும் உள்ளது. 
அங்கு 1999-ம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்கள் கிடைக்கப் பெறுகின்றன. 

ஆனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் certificed copy (பதிவு சார் தகவல்கள்) பெறும் வசதி இல்லை.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் e-GPA என்ற ஆன்லைன் வசதி உள்ளது. 

அங்கு பதிவாகும் பொது அதிகாரப் பத்திரத்தின் தகவல்களை ஆன்லைனில் சரி பார்க்கும் வசதி உள்ளது. அந்தப் பொது அதிகாரப் பத்திரம் யார் எழுதியது, இப்போது அந்தப் பத்திரம் செல்லுபடியாக உள்ளதா, அந்தப் பொது அதிகாரப் பத்திரம் மூலம் எத்தனை ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன போன்ற தகவல்கள் ஆன்லைன் மூலம் கிடைக்கும்.

மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளம் போன்ற மாநிலங்களில் பத்திரப் பதிவு செய்யும் நபர்கள் பதிவுசெய்யும் சொத்தின் அனைத்துத் தகவல்களையும் கணினியில் பதிவு செய்த பின்னர் மட்டுமே பத்திரங்களைப் பதிவு செய்ய முடியும்.

குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் சொத்து விற்ற விற்பனைப் பத்திரங்களில் சம்பந்தப்பட்ட சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும்.
இதைப் போன்ற நடவடிக்கைகளைத் தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்: 
வழக்கறிஞர் ஷியாம் சுந்தர்
கேரள அரசின் சட்ட ஆலோசகர்

நன்றி : தி இந்து (தமிழ்) நாளிதழ் - 08.10.2016

அடல் பென்சன் யோஜனா


அடல் பென்சன் யோஜனா - என்ன செய்ய வேண்டும்?

அடல் பென்ஷன் திட்டம்… ஏன்? எதற்கு? எப்படி?
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம் ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் இணைய என்ன செய்ய வேண்டும், எப்படி பணம் வசூலிக்கப்படும், யார் இதை நிர்வகிப்பார்கள், எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்கும் என்று பல கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தந்தார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வங்கிப் பரிமாற்றம் மற்றும் அரசுக் கணக்குகள் பிரிவின் இணைப் பொது மேலாளர் வி.வி.கணேசன்.

‘‘இந்தத் திட்டத்தின் நோக்கமே அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வுக்காலத்துக்குப் பின், அதாவது 60 வயதுக்குப்பின் மாதம் ரூ.1,000 – 5,000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அரசு தன் சார்பாக ஒரு சிறு தொகையைச் செலுத்தும்.

யார் இணையலாம்?
18  வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

இந்தத் திட்டத்தில் டிசம்பர் 31, 2015-க்குள் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 அல்லது நாம் செலுத்தும் தொகையில் 50 சதவிகிதம், இவற்றில் எது குறைவோ அந்த தொகையைச் செலுத்தும். 

பென்ஷன் தொகை தரக்கூடிய திட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இணைந்திருப்பதாக கருதப்படு வார்கள். அப்படிப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என்றாலும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது. அதேபோல், வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றாலும் அவர்களுக்கும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகை கிடைக்காது.

ஒருவேளை இப்போது அமைப்புசாரா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பிற்காலத்தில் அமைப்பு சார்ந்த துறையில் பணியில் சேர்ந்தால், எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தார் களோ, அந்த வங்கிக் கிளைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு தெரியப் படுத்தியவுடன் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை நிறுத்திக்கொள்ளும்.

எப்படி இணைவது?
எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தரவேண்டும். வங்கி உங்களுக்கு ஒரு ‘ப்ரான் எண்’ணை (PRAN NO) வழங்கும். அந்த ‘ப்ரான் எண்’ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.

யார், எவ்வளவு தொகை செலுத்தலாம்?
நாம் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்போதே 60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்பார்கள். குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஒருவர் பென்ஷனாக பெற நினைக்கும் தொகையைக் குறிப்பிடலாம். பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும். (பார்க்க  அட்டவணை!)

முதல்முறையாக இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன், இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு சாட்சியாக ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதுதான் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். அதேபோல் ஒவ்வொரு தவணை செலுத்தும்போதும் உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பப்படும்.

எப்படி பணம் செலுத்துவது?
ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தபின் மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம்.  நம் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வரவு வைக்கப்படும். நம் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, அது நம் ‘ப்ரான்’ கணக்கில்   வரவு வைக்கப் பட்டதும் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

எப்போது பணம் எடுக்கப்படும்?
நாம் முதல் முறையாக அடல் திட்டத்தில் இணையும்போது எந்த தேதியில் பணம் செலுத்து கிறோமோ, அந்த தேதிதான் நம் அடுத்தடுத்த  மாதத்தின் கெடு தேதி. உதாரணமாக, ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 8-ம் தேதி அன்று தவணைக்கான பணம் எடுக்கப்படும்.

தொகையை அதிகரிக்கலாமா?
வருடத்துக்கு ஒருமுறை நாம் செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வசதி மூலம் நாம் மாதாமாதம் செலுத்தும் பென்ஷன் தொகையை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும்.

பணம் கட்டாவிட்டால்..?
இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின் சரியாக பணம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப் படும். ரூ.1 முதல் 100-க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும், ரூ.101 முதல் 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், நம் சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டு, திட்டத்திலிருந்து நீக்கப்  படுவார்கள்.

யார் நிர்வகிக்கிறார்கள்?
இந்தத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்கிற அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 85%  அரசுப் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப் படும். மீதமுள்ள 15% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

என்ன உறுதி?
நாம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு  கூடுதல் தொகை கிடைத்தால், அந்த தொகை திட்டத்தில் முதலீடு செய்தவருக்கே  வழங்கப்படும். ஒருவேளை உறுதி செய்யப்பட்ட தொகையைவிட குறைந்த அளவே வருமானம் ஈட்டி இருந்தால், அதை அரசாங்கம் சரிகட்டும்.

எப்போது க்ளெய்ம் கிடைக்கும்?
இந்தத் திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்குப் பிறகு இறந்துவிட்டால், அவரது இறப்புச் சான்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார்  அட்டை விவரங்கள், நாமினியின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை திட்டத்தை நிர்வகிக்கும் வங்கிக் கிளையில் சமர்பித்தால், வங்கி அந்த ஆவணங்களின் நகலை பிஎஃப்ஆர்டிஏவுக்கு அனுப்பும். பிஎஃப்ஆர்டிஏ  சான்றிதழ்களை சரிபார்த்து பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும். ஒருவேளை 60 வயதுக்குமுன் இறந்தால் அல்லது உயிர் போகக்கூடிய நோய் காரணமாக பணத்தைத் திட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என்றால், திட்டத்தில் இணைந்தவர் எவ்வளவு தொகை செலுத்தினாரோ அந்த தொகையும், அரசு தன் சார்பாக வழங்கிய தொகை மட்டும்தான் வழங்கும்.

60 வயதுக்குப் பின் இறந்தால்…?
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒருவர் 60 வயது முடித்து எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகளுக்கும் அவர் கோரி இருந்தபடி பென்ஷன் தொகை கிடைக்கும்.

அவருக்குப்பின் அவர் சொல்லும் நாமினி, அதாவது முதல் நாமினி, இறக்கும் வரை அதே அளவு தொகை ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். முதல் நாமினியும் இறந்துவிட்டால், அவர் நாமினியாக நியமித்தவருக்கு, அதாவது இரண்டாவது நாமினிக்கு உறுதி செய்திருந்த மொத்த தொகையும்  (Lumpsum) வழங்கப்படும்.

உதாரணமாக, சேகர் என்பவர் தன் 30-வது வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.577 செலுத்தி வருகிறார். அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 செலுத்தி வருகிறது. இவருக்கு 61-ஆவது வயதிலிருந்து மாதம் ரூ.5,000 கிடைக்கும். சேகர் தன் 71-வது வயதில் இறந்துவிடுகிறார். ஆக சேகருக்கு  61 – 71 வயது வரை 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 கிடைத்திருக்கும்.

சேகர் இந்தத் திட்டத்தில் இணையும்போது நாமினியாக தனது மனைவி கமலாவைக் குறிப்பிட்டிருக்கிறார்.  (நாமினி கணவன் /மனைவி யாகத்தான் இருக்க வேண்டும்) எனவே, சேகர் இறந்தபின், கமலா உயிரோடு இருக்கும் வரை மாதம் ரூ. 5,000 கிடைக்கும். கமலா தனது நாமினியாக தன் மகன் ரமேஷை நியமித்திருப்பார். கமலா இறந்த பிறகு, ரமேஷுக்கு மொத்தத் தொகையான 8.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

நாமினியை மாற்றிக் கொள்ளலாமா?
இந்தத் திட்டத்தில் இணைபவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது கட்டாயம் நாமினியை குறிப்பிட வேண்டும். ஒருவேளை, நாமினி இறந்துவிட்டால், எந்த வங்கிக் கிளையில் இந்தத் திட்டம் நிர்வகிக்கப்பட்டு வருகிறதோ, அந்த வங்கியில் சென்று புதிதாக வேறு ஒரு நாமினியை நியமித்துக் கொள்ளலாம்.

வேறு வங்கிக் கிளைக்கு மாற்றலாமா?
இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின், ஒருவர் எந்த வங்கிக் கிளைக்கு வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், க்ளெய்ம் சமயத்தில் ஒருவரின் ‘ப்ரான் கணக்கு’ எங்கு நிர்வகிக்கப்படுகிறதோ, அங்குதான் க்ளெய்ம் கிடைக்கும்.

தரப்பட்ட தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், திட்டத்தில் இணைந்தவர் செலுத்திய தொகை மட்டும் திரும்ப வழங்கப்பட்டு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அரசு தன் சார்பாக வழங்கிய தொகை கிடைக்காது” என்றார் கணேசன்.

By vayal on 11/06/2015

Friday, October 7, 2016

பெற்றோர் பராமரிப்பு - விவாகரத்து


பெற்றோர் பராமரிப்பு - விவாகரத்து - என்ன செய்ய வேண்டும்? 

விவாகரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

வயதான பெற்றோரை உடன்வைத்து பராமரிக்க சம்மதிக்காத மனைவியை, கணவன் விவாகரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், விவகாரத்து கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் ஆர் தவே அளித்த தீர்ப்பில், "பெற்றோரால் வளர்த்து, கல்வி புகட்டி வளர்க்கப்படும் மகனுக்கு, வயதான, வருமானம் இல்லாத அல்லது குறைவான வருமானமே உடைய தனது பெற்றோரை பராமரிக்கும் தார்மீக பொறுப்பம், சட்டப்பூர்வ கடமையும் இருக்கிறது. 

மேற்கத்திய கலாச்சாரத்தில் தான் திருமணம் ஆனதும் அல்லது வயது வந்ததும் மகன் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து விடுகிறார். 

ஆனால் இந்தியாவில் மக்கள் பொதுவாக மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுவதில்லை. 

இந்து சமூகத்தில் பிறந்த ஆண், அவரது பெற்றோரை பிரித்து வாழ்வது கலாசாரத்திற்கு எதிரானதாக கருதப்படுகிறது. 

பணம் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கும் பெற்றோர், தனது மகனை சார்ந்து வாழும் சூழலில் அவர்களை பிரிந்து செல்வது சரியான செயல் இல்லை.

 எனவே சரியான காரணமின்றி பெற்றோரிடமிருந்து கணவனை பிரிக்க மனைவி நினைப்பது கொடுமையாகவே கருதப்படும் 

அதுபோன்ற சூழலில் மனைவியை கணவன் விவகாரத்து செய்ய சட்டத்தில் இடமிருக்கிறது" என்று கூறியுள்ளார்

நன்றி : விகடன் செய்திகள் - 07.10.2016

ஆன்லைனில் ஆர்.டி.ஐ. கேள்வி பதில்கள்


ஆன்லைனில் ஆர்.டி.ஐ. கேள்வி பதில்கள் - என்ன செய்ய வேண்டும்?

புதுடில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த விபரங்களை, ஆன்லைனில் வெளியிடுமாறு, அனைத்து அரசுத் துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம்:

ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பொதுமக்கள் அரசுத் துறை செயல்பாட்டை அறிந்து கொள்ள முடியும். இந்த சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. 

எனினும், சில அரசுத் துறை அதிகாரிகள், ஆர்.டி.ஐ., மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்லைனில் பதிவேற்றம்:

அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு, சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் குறித்த தகவல்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 எனினும், ஆர்.டி.ஐ., மூலம் தகவல் பெறுபவர் மற்றும் பெறப்படுபவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடக் கூடாது. அனைத்து மத்திய அரசுத் துறைகளும் இதை கடைபிடிக்க வேண்டும். 

இவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

நன்றி : தினமலர் நாளிதழ் - 08.10.2016

சர்க்கரை நோயாளிகள்


சர்க்கரை நோயாளிகள் - என்ன செய்ய வேண்டும்?

பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகள் Type-2 சர்க்கரை நோயால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். Type-2 சர்க்கரை நோய் என்பது இன்சுலீன் பற்றாக்குறையால் வருவதில்லை. மாறாக சுரக்கின்ற இன்சுலீனை செயல்பட விடாமல் உடம்பிலுள்ள செல்கள் அதை எதிர்ப்பதனால் இந்த சர்க்கரை நோய் வருகிறது. 

நகரவாசிகள் பெரும்பாலும் இப்பொழுது அமர்ந்த இடத்திலேயே வேலை செய்வதால் உடம்பிற்கு தேவையான உடற்பயிற்சி கிடைக்காமல் போய்விடுகிறது. இது மட்டுமின்றி அளவுக்கதிகமாக செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்கள் இப்பொழுது சுலபமாகக் கிடைக்கின்றது. ஒரு வரம்பின்றி நாள்தோறும் மக்கள் இத்தகைய உணவுப் பண்டங்களை உண்பதால் ரத்த ஓட்டத்தில் ஏராளமான கார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்து சேர்ந்து விடுகிறது. 

இதை ஜீரணிப்பதற்காக நம்முடைய உடம்பும் ஏராளமான இன்சுலீனை சுரந்து கொண்டிருக்கிறது. இன்சுலீன் குறைந்தால் செல்கள் பாதிக்கப் படுவது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு இன்சுலீன் அதிகமானாலும் செல்கள் பாதிக்கப்படுவதும் உண்மை. ஆகவே இன்சுலீன் அளவு அதிகரிக்கும் பொழுது அதை உள்ளே விடாமல் செல்கள் தடுக்கின்றன. இப்படி குறைவான உடற்பயிற்சி மற்றும் தவறான உணவு பழக்கங்கள் மற்றும் செல்களைப் பாதிக்க கூடிய அளவிற்கு இன்சுலீன் சுரந்து போதல் அதற்கு உடம்பில் வருகின்ற எதிர்ப்பு என்று இவையெல்லாம் சேர்ந்து Type-2 சர்க்கரை நோயை கொண்டு வந்துவிடுகிறது. இம்மாதிரியான சர்க்கரை நோய் நகரவாசிகளிடையே வேகமாக பரவியும் வருகிறது.
இத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இப்பொழுது சுலபமாகக் கிடைக்கின்ற மாத்திரைகளை உட்கொள்கின்றனர். மருந்தின் விளைவாக சர்க்கரை லெவல் குறையும் பொழுதோ நார்மலுக்கு வரும் பொழுதோ இப்படியே ஆயுள் பூராவும் சர்க்கரையை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். இனிமேல் உடல் நலத்தை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை  என்று நோயாளிகள் எண்ணுகிறார்கள். 
ஆனால் இப்படி நம்புவது தவறான நம்பிக்கையாகும். மருந்து, மாத்திரைகள் நோயின் சின்னங்களையும், அறிகுறிகளையும்தான் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் அடிப்படைக் காரணங்களான உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் ஆகியவை தொடரும் வகையிலும் நோயின் பாதிப்பு தொடரத்தான் செய்யும். இந்த அடிப்படைக் குறைபாடுகளை தீர்க்காத பட்சத்தில் நோயாளி மேலும் மேலும் அதிகமாக மாத்திரைகளைச் சாப்பிட்டால்தான் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம் என்ற நிலை வரும். இரத்த ஓட்டம், அடர்த்தியாகி வேகமும் குறைந்து விடுகிறது. இதன் காரணமாக இதயம், ஈரல், சிறுநீரகம், கண்கள் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காமல் அவைகளுடைய செயல்பாடு பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் நீண்டகாலம் இருக்கும் பொழுது நோயாளியின் ஆயுட்காலம் 13.5 ஆண்டுகளுக்கு குறைவதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
Dewayne Mcculley என்ற அமெரிக்க என்ஜீனியர் ஒருவருக்கு திடீரென்று Type-2 சர்க்கரை நோய் உருவாகி அவருடைய சர்க்கரை லெவல் கிடுகிடுவென 1300 mg/dl புள்ளிகளுக்கு உயர்ந்து விட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அவர் பிழைப்பாரென்று யாருமே எதிர்ப் பார்க்கவில்லை. இருந்தாலும் உடனடியாக சிகிச்சை ஆரம்பித்ததன் பலனாக அவருடைய உயிரைக் காப்பாற்ற முடிந்தது. தன் உடம்புக்கு திடீரென்று இந்தப் பாதிப்பு எப்படி வந்தது? இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார். சர்க்கரை வியாதியைப் பற்றி கிடைத்த தகவல்களையெல்லாம் படித்து அந்த வியாதியைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டார். 
ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்ற நிலை அவருக்குப் பிடிக்கவில்லை. தனக்கு வந்துள்ள இந்தக் குறைபாடு தவறான உணவுப் பழக்கங்களாலும், போதிய உடற்பயிற்சியின்மையாலும்தான் வந்திருக்கிறது என்று நம்பினார். ஆகவே தன் உணவுப் பழக்கங்களை மாற்ற ஆரம்பித்து தான் சாப்பிடும் கார்போஹைட்ரேட் அளவை பெரும் அளவு குறைத்தார். மாவுச்சத்து மிக்க நன்கு பதப்படுத்தப்பட்ட செயற்கையாக சுவையூட்டப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடுவதைக் குறைத்தார். இதற்குப் பதிலாக super-meal என்ற ஒரு புது உணவுத் திட்டத்தைத் தயாரித்தார். இந்த உணவுத் திட்டத்தில் 50% கார்போஹைட்ரேட் 25% புரோட்டீன், 25% கொழுப்புச்சத்து கிடைக்குமளவிற்கு உணவுப் பண்டங்களைச் சேர்த்தார். இவற்றோடு கூட கால்சீயம் மற்றும் விட்டமின்கள் ஆகிய கூடுதல் சத்துப் பொருள்களையும் சேர்த்தார். இந்த super-meal திட்டத்தில் நிறைய காய்கறிகள் மற்றும் கீரை வகைகளையும் சேர்த்துக் கொண்டுள்ளார். பப்பாளி, பம்பளிமாஸ், என்ற பழவகை களையும், முட்டைகோஸ் ஆகியவற்றை சேர்க்கிறார். 
அரிசியானாலும், கோதுமையானாலும், பழுப்பு நிற அரிசியினால் செய்யப்பட்ட சாதம் மற்றும் பழுப்பு நிற கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டியைத்தான் சாப்பிடச் சொல்கிறார். இந்த முறையான உணவுத் திட்டம் மற்றும் போதிய உடற்பயிற்சி ஆகிய இரண்டின் காரணமாக நாலே மாதங்களில் தனக்கு வந்த சர்க்கரை நோயிலிருந்து விடுபட்டார். இப்பொழுது மருந்து மாத்திரைகளின் உதவியில்லாமலேயே வெறும் உணவு கட்டுப்பாட்டின் மூலமாகவே சர்க்கரை நோயின்றி ஆரோக்கியமாக இருக்கின்றார்.
அவர் தயாரித்த super meal அமெரிக்கர்களுக்காக தயார் செய்யப்பட்டது என்றாலும் நம் நாட்டில் கிடைக்கின்ற உணவுப் பொருட்களை வைத்துக் கொண்டு நமக்கேற்ற மாதிரி உணவு தயார் செய்து கொள்ளலாம். ஒரு பக்கம் அவர் காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டுமென்று வலியுறுத்துகிறார் என்றாலும் அதே சமயத்தில் இன்னொரு பக்கம் மணிலா எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற எண்ணெய்களுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை வறுவலுக்கு பயன் படுத்தச் சொல்கிறார். 
அவர் தவிர்க்க வேண்டுமென்று சொல்வதில் சர்க்கரை சத்து மிகுந்த பழங்களான வாழைப்பழம், திராட்சை, அன்னாசி போன்றவைகளும், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவைகளும் அடங்கும். நம்முடைய அன்றாட உணவில் 25%ஆவது கறி, மீன் வகைகள் இருக்கலாம் என்று அவர் சொல்கிறார் என்றாலும் சைவ சாப்பாடு சாப்பிடும் பல இந்தியர்களுக்குப் பொருந்தாது. ஆகவே அவர்கள் புரதச்சத்து பெறுவதற்காக நிறைய தயிர் மற்றும் சோயா, முந்திரி, மணிலா கொட்டைகளைச் சாப்பிடலாம்.
உடற்ப்பயிற்சியை மிக முக்கியமாக‌ ஆக எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் கருத்துப்படி தினசரி காலையிலும், மாலையிலும் ஒரு மணி நேரமாவது வேகமாக நடக்க வேண்டும் என்கிறார். எடை கூடுதலாக இருப்பது மற்றும் தொப்பை போட்டிருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். கூடுதல் எடைக்கும் உடம்பின் உடைய இன்சுலீன் எதிர்ப்பிற்கும் சம்மந்தம் இருக்கிறது என்கிறார். அவருடைய ஆராய்ச்சியில் கூடுதல் எடையை குறைத்தவர்களுக்கு சர்க்கரை அளவும் நன்றாக குறைந்துள்ளதாகச் சொல்கிறார்.
Dewayne Mcculley தான் சாதித்ததை மற்ற சர்க்கரை நோயாளிகளும் சாதிக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார். அந்த நம்பிக்கையில்தான், தன்னுடைய அனுபவங்களையும், தன்னுடைய super meal திட்டங்களையும், தான் இந்த சர்க்கரை நோயி லிருந்து மீண்ட விவரங்களையும், தான் எழுதியுள்ள Death to Diabetes என்ற புத்தகத்தின் மூலம் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடைய ஆலோசனைகளையும், வழி காட்டல்களையும் பின்பற்றுபவர்கள் எவரும் சர்க்கரை வியாதியிலிருந்து விடுபட்டு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்பது உறுதி.
 By vayal on 25/05/2011


Thursday, October 6, 2016

சிமேட் தேர்வு


சிமேட் தேர்வு - என்ன செய்ய வேண்டும்?
Common Management Admission Test - CMAT)  ’சிமேட்’   நுழைவுத்தேர்வு; 
10.10.2016 முதல் ஆன்லைன் பதிவு

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ( All India Council for Technical Education - AICTE)  கவுன்சிலான, அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிப்புகள் உள்ளன.

அதில், முதுநிலை டிப்ளமோ மேலாண் நிர்வாகம்;முதுநிலை டிப்ளமோ நிறுவன நிர்வாகம் போன்ற படிப்புகளில் சேர, சிமேட் நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.

ஆண்டுக்கு, இரு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது.
நடப்பு கல்வி ஆண்டு முதல், ஒரு முறை மட்டுமே தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஜன., 28, 29ம் தேதிகளில்,ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்;
10.10.2016ம் தேதி முதல், ஆன்லைன் பதிவு துவங்குகிறது; டிச., 10வரை விண்ணப்பிக்கலாம்.

அனைத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்களும், இளங்கலை இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களை, www.aicte-cmat.in/college/faq.aspx என்ற இணையதளத்தில் அறியலாம்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 06.10.2016

Wednesday, October 5, 2016

வாக்காளர் அட்டையில் உங்கள் போட்டோவை


வாக்காளர் அட்டையில் உங்கள் போட்டோவை அழகாக மாற்ற
என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; 

அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: 

தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன; இந்த ஆண்டுக்குள், சேவைகளின் எண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படும். அதன் ஒரு பகுதியாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வழங்கப்பட உள்ளது. 

அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் கீழ், 486 இ - சேவை மையங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சார்பில், சென்னையில், சில இடங்களில், இந்த சேவை நேற்று துவங்கியது. 

அதற்காக, வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம், தேர்தல் துறை வழங்கி உள்ளது.

வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்; 25 ரூபாய் செலுத்த வேண்டும். 

வாக்காளர் அட்டை தொலைந்தாலும், இந்த மையத்தில், அடையாள அட்டை எண்ணை தெரிவித்து, புதிய அட்டை பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அழகாக தெரிய வேண்டுமா? : 

வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படங்கள், மிக மோசமாக தெரிவதாக புகார்கள் உள்ளன. இ - சேவை மையங்களில், வாக்காளர்களை புகைப்படம் எடுத்து, அதை, வண்ண அடையாள அட்டையில் பதிந்து தர வசதிகள் உள்ளன. 

தேர்தல் கமிஷன் தந்த அட்டையில் உள்ள புகைப்படத்தை, விருப்பம் உள்ளோர், இந்த மையங்கள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம். 

- நமது நிருபர் - 

நன்றி : தினமலர் நாளிதழ் - 05.10.2016