disalbe Right click

Friday, October 14, 2016

பேஸ்புக் பதிவுகள்


பேஸ்புக் பதிவுகள் -  என்ன செய்ய வேண்டும்?

எச்சரிக்கைப்பதிவு 

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து பகிர்ந்த உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "மீரட் நகரின் சார்தானா நகரில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வர் முதாசிர் ரானா. 

இவர் நடந்து முடிந்த தசரா பண்டிகையின்போது பிரதமர் மோடி குறித்தும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குறித்தும் விமர்சித்து ஃபேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார். 

பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் ராவணனின் பத்து தலைகளில் அடங்குவர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு இந்துதுவா அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. 

போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் ரானா கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153-ஏ, ஐ.டி. சட்டம் 66-ஏ ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

டெலீட் செய்தும் நடவடிக்கை:

தனது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ரானா தனது பதிவை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார். இருந்தும் போலீஸில் கொடுக்கப்பட்ட புகாரின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணா, "யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அதனால்தான் அந்தப் பதிவை நீக்கினேன். 

எனது கருத்தால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன். யாரையும் வேதனைப்படுத்த நினைக்கவில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.10.2016

ரேஷன் கடைகளில் வழங்கும் பொருள்கள் குறைபாடு


ரேஷன் கடைகளில் வழங்கும் பொருள்கள் குறைபாடு 
என்ன செய்ய வேண்டும்?

ரேஷன் பொருள்கள் வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் குறித்த குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் அலுவலகத்துக்கு 

044-28592828 என்ற எண்ணிலும், 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகத்துக்கு 

9445190660, 
9445190661, 
9445190662 
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

நன்றி : தினமணி நாளிதழ் - 14.10.2016

Wednesday, October 12, 2016

தேசிய தகுதித் தேர்வு


தேசிய தகுதித் தேர்வு - என்ன செய்ய வேண்டும்?

’நெட்’ தகுதி தேர்வு; சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

கோவை: நெட் தகுதி தேர்வுக்கு, 2017 ஜன., 22ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கு, வரும், 17ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

பல்கலை, கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியில் சேர்வதற்கும், பி.எச்.டி., மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கும், மத்திய கல்வி வாரியத்தால் நெட் தகுதி தேர்வு, ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 

இதன்படி, 2017ம் கல்வியாண்டிற்கான தேர்வு, ஜன., 22ம் தேதி நடக்கவுள்ளது.

தேர்வர்கள் வரும், 17ம் தேதி முதல் நவ., 16ம் தேதி வரை,  "ஆன்-லைன்" மூலமாக விண்ணப்பிக்கலாம். 

இதற்கான கட்டணங்களை, நவ.,17ம் தேதிக்குள் செலுத்துவது அவசியம். 

தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, டிச., 21ம் தேதி சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த, தெளிவான விபரங்களை சி.பி.எஸ்.இ., இணையதளம் www.cbsenet.nic.in மூலம் அறிந்து கொள்ளலாம்.

நன்றி : தினமலர் - கல்வி மலர் - 12.10.2016



Tuesday, October 11, 2016

ஆன்லைன் பர்சேஸ்


ஆன்லைன் பர்சேஸ் - என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைன் பர்ச்சேஸ்… நில்… கவனி… வாங்கு!
ராஜேஷ், சென்னையின் பிரபலமான ஐ.டி நிறுவனம் ஒன்றில் அட்டகாசமான சம்பளத்தில் வேலை செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். இன்னும் திருமணமாகாத இளைஞன் என்பதால், தனி வீட்டில் வாசம். பேஸ்ட், பிரஷ் தொடங்கி காய்கறி, கம்ப்யூட்டர் வரை ஆன்லைன் ஷாப்பிங் அவருக்கு கைவந்த கலை.

நன்றாகச் சென்றுகொண்டிருந்த ஆன்லைன் ஷாப்பிங் வாழ்க்கையில், ஆசைக்காக ஒரு செல்போன் வாங்கப் போய் அவர் பட்டபாடு… செல்போன் மாடல், விலை எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்தவர் செய்த ஒரே தவறு, அதை பெயர் தெரியாத ஒரு விற்பனைத் தளத்தில் ஆர்டர் செய்ததுதான்.

செல்போனுக்காக ஆர்வமாகக் காத்திருந்தவருக்கு பார்சலில் வந்து சேர்ந்தது ஒரு செங்கல். அதிர்ந்து போனவர் கஸ்டமர்கேர்க்கு போன் போட்டால்,  பதிலாக எதிர்முனையில் கிடைத்தது வெறும் ‘பீப்’ ஒலி. 

இதில் கொசுறாக அவருடைய கிரெடிட் கார்டு நம்பரை அந்த ஆன்லைன் வெப்சைட் மூலமாக மனப்பாடம் செய்த மற்றொரு வெப்சைட், கிட்டதட்ட பத்தாயிரம் ரூபாயை அவருக்கே தெரியாமல் தீட்டிவிட்டது. 

என்ன செய்வதென்றே தெரியாமல் கஸ்டமர் கேருக்கும், கிரெடிட் கார்டு புகார் தரும் நம்பருக்கும் ஓயாமல் அழைத்து நொந்துபோன ராஜேஷ் இப்போதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே அலறியடித்து ஓடுகிறார்.

ஆனால் ராஜேஷைப் போல நம் எல்லோராலும் ஆன்லைன் பர்ச்சேஸை முழுவதுமாகத் தவிர்க்க இயலாது. உலக அளவில் மூன்று கோடி பேர் ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்குவதை பழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். 

அப்படி இருக்கையில் ஆன்லைன் பர்ச்சேஸை  நம்மால் மட்டும் எப்படி தவிர்க்க முடியும்..? ஆனால், பர்ச்சேஸ் செய்யும்போது எதையெல்லாம் வாங்கலாம், எதையெல்லாம் வாங்கக்கூடாது, எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனப் பார்ப்போம்.

வெப்சைட்டின் நம்பகத்தன்மை!

உண்மையில் ஐந்து நிமிடத்தைக்கூட வேஸ்ட் செய்ய முடியாத டெக்னாலஜி வளர்ச்சி அடைந்துள்ள இந்த வைரல் உலகில், வெளியில் சென்று பொருள் வாங்க முடியாத பலருக்கும் ஆன்லைன் ஷாப்பிங்தான் தக்க சமயத்தில் கைகொடுக்கிறது. ஆனால், ஒரு பெட்டிக் கடையில்கூட பேரம் பேசி பொருள் வாங்கும் நாம், ஆன்லைன் தளங்களில் மட்டும் கண்ணை மூடிக்கொண்டு பொருள் கிடைத்தால் போதும் என க்ளிக் செய்து விடுகிறோம். 

அந்தத் தளத்தின் உண்மைத் தன்மை, இதுவரை பொருட்கள் வாங்கியவர் களின் கருத்துக்கள், பொருளின் தயாரிப்பு முறைகள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆன்லைன் ஷாப்பிங் உலகுக்குள் கொட்டிக் கிடக்கும் வெப்சைட்கள் கணக்கிலடங்காதவை.

அமேசான், ஃப்ளிப்கார்ட், ஜபாங், லைம்ரோடு என்று ஆடைகள், புத்தகங்கள், கேட்ஜெட் என்னும் எலெக்ட்ரானிக் அயிட்டம்கள் தொடங்கி அரிசி, பருப்பு, கேக் என்று உணவுப் பொருட்கள் வரை விற்கும் தளங்களும் எக்கச்சக்கம். அதில் நியாயமான விலை, நம்பகத்தன்மை கொண்ட வெப்சைட்களைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே உங்கள் பொருள், பத்திரமாக உங்கள் கைகளுக்கு வந்துசேரும்.

 கவனிக்கவேண்டிய கஸ்டமர் ரெவியூ!

நீங்கள் ஒரு புடவையோ, டீ-சர்ட்டோ அழகாக இருக்கிறது. விலையும் கம்மி என்று முடிவு செய்து ஆர்டர் செய்திருப்பீர்கள். ஆனால், கைகளுக்கு வந்து சேர்வதோ நிறம் மங்கிய, இல்லையெனில் வேறு டிசைன், வேறு கலரில் என்று உங்களை கொலைவெறிக்கு உள்ளாக்கும் ஒரு ஆடையாக இருக்கும். 

இந்த பிரச்னைகளைத் தவிர்க்க, ஆடைகளை ஆன்லைனில் தேர்ந்தெடுக்கும்போது அதிக அளவிலான கஸ்டமர் ரெவியூக்கள் பெற்ற தளத்தினைத் தேர்ந்தெடுத்தல் அவசியம். ஆடையின் நிறம், சைஸ் ஆகியவற்றையும் ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்துகொள்ளுங்கள். கூடுமானவரையில் உங்களுக்கு பரிட்சயமான பிராண்ட் துணிகளையே தேர்ந்தெடுங்கள்.

விலை உயர்ந்த பொருட்களைத் தவிர்க்கலாம்!

ஒரு துணிக்கே இவ்வளவு யோசிக்க வேண்டுமென்றால், விலையுயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்களான செல்போன், டிவி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வாங்க எவ்வளவு யோசிக்க வேண்டும் என நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆன்லைனில் கொட்டிக் கிடக்கும் கம்பேரிசன் வெப்சைட்கள் மூலமாக ஒரு பிராண்டின் விலை மாறுபாடுகள், தர நிர்ணயம் போன்றவற்றில் கவனமாக வையுங்கள். 

45 இன்ச் டிவிக்கு பதில், 16 இன்ச் டிவியையோ, பிராண்ட் செல்போ னுக்கு பதில் சைனா மேட் செல்போன் ஒன்றையோ ஆன்லைன் டீலர் உங்களுக்கு அனுப்பிவைத்துவிட்டால் அதை திருப்பி அனுப்பி, அவர்களிடமிருந்து ரீஃபண்ட் பெறுவதற்குள் நீங்கள் கடையிலேயே நேரடியாக அதை வாங்கியிருக்கலாம் என்று தோன்றிவிடும்.

பெரும்பாலும் விலையுயர்ந்த தங்க நகைகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், முக்கியமாக உணவுப் பொருட்களை ஆன்லைனில் வாங்குவதைத் தவிர்ப்பது நலம். 

ஏனெனில், தங்க நகைகளைப் பொறுத்தவரை, ஆன்லைன் பர்ச்சேஸில் ஒருமுறை விற்பனை செய்துவிட்டால், 15 நாட்கள் கெடுக்குள் திரும்பி மாற்றிக்கொள்ளமுடியும் என்கிற கெடுவெல்லாம் பெரும்பாலான விற்பனைத் தளங்களில் கிடையாது. 

அதேபோன்று ஆன்லை னில் விற்பனையாகும் பிராண்ட் இல்லாத எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பதும் முக்கியம். ஏனெனில், ஒரு சிறிய கோளாறு என்றால்கூட நீங்கள் வீதி வீதியாக சர்வீஸ் ஷோருமைத் தேடி அலைய வேண்டி வரும்.

உணவுப் பொருட்கள், உஷார்!

உணவுப் பொருட்களை வாங்கியே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் வாங்குங்கள். அடிக்கடி வாங்கிப் பழகிய வெப்சைட் என்றால் பிரச்னை இல்லை. 

புதிதாக வாங்கத் தொடங்கும்போது கூடியவரை கூகுள் சஜஷனில் முன்னிலையில் உள்ள வெப்சைட்டைத் தேர்ந்தெடுங்கள். தேதி முடிவடைந்த பொருட்களைக்கூட வேறு கவர்களில் மாற்றி விற்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆன்லைன் உணவுப் பொருள் ஷாப்பிங்கில் அதிகம்.

லெக்ட்ரானிக் பொருட்கள், எச்சரிக்கை!

எலெக்ட்ரானிக் பொருட்களைப் பொறுத்த வரையில், நம்பகமான தளத்தில் ஆஃபர்களைக் கணக்கிட்டு வாங்குங்கள். ஒரு நல்ல, தரமான பொருளுக்காகக் காத்திருப்பதில் தவறில்லை. அதை விட்டுவிட்டு ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தில் இரண்டே நாளில் பொருள் கைக்கு வந்துவிட வேண்டும் என்று ஓட்டை, உடைசல் செல்போனையோ, வாரண்டி இல்லாத டிவி, மிக்ஸியையோ வாங்கிவிட்டால் அவதிப்படப் போவது நீங்கள்தான். அதுவும், 

இஎம்ஐ போட்டு கடனில் வாங்கும் பொருட்களில் தரம் இல்லையென்றால், அதிக விலை கொடுத்தும் வேஸ்ட்தான். இவற்றையெல்லாம் தாண்டி குறைந்த விலையில் கிடைக்கும் காஸ்மெட்டிக் பொருட்கள், சார்ஜர், பர்னிச்சர் என்று எல்லாவற்றையும் முடிந்தவரை நேரில் சென்று ஒன்றுக்கு நான்கு பொருட்களின் விலை மாறுபாடுகளை ஆராய்ந்து வாங்குவதே நல்லது.

எனினும், ஆன்லைன் ஷாப்பிங்கில்தான் இவற்றையெல்லாம் வாங்குவேன் என்பவர்கள் பொருள் கைக்கு கிடைத்த அன்றே அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் வாங்கிய இணைய தளத்தில் புகாரினைப் பதிவு செய்துவிடுங்கள். 

அதிக அளவிலான பயனாளர்களின் வருகை இருக்கும் ஆன்லைன் வெப்சைட்களையே பொருட்கள் வாங்கத் தேர்ந்தெடுங்கள். ரீஃபண்ட் பாலிசிகளைத் தெளிவாக மெயின்டெய்ன் செய்யும் தளங்களில் எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்குங்கள். விலை அதிகமாக இருந்தாலும் தரமான, நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய பிராண்ட் பொருட்களையேத் தேர்ந்தெடுங்கள்.

பணம் பத்திரம்!

உங்கள் சொந்தக் கணினி இல்லாமல், வெளியில், அலுவலகக் கணினிகளில் பொருட்களை ஆர்டர் செய்யும்போது வைரஸோ, மால்வேரோ உள்நுழைந்து உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைத் திருடிவிடலாம். அதனால், ஹைப்பர் லிங்கில் தேவை இல்லாத இணையப் பக்கங்களுக்கு அழைத்துச் செல்லும் தளங்களில் பர்ச்சேஸ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

ஜிகினா ஆஃபர்களை நம்பாதீர்!

முக்கியமாக, ஆன்லைன் ஜிகினா வேலைகளை நம்பி பொருட்களை வாங்குவதைப் பழக்கமாக வைத்துக்கொள்வது ஆபத்து. முடிந்தவரை,  ‘இன்றே கடைசி’,  ‘விசாலமான ஹோட்டல் அறை 750 ரூபாய் மட்டுமே’ போன்ற ஆஃபர்களை தவிர்த்துவிடுங்கள். ஹோட்டல் ஆஃபர்களை ஏதோ ஒரு தளத்தில் புக் செய்துவிட்டு, புது ஊர், புது இடத்தில் சென்று தவிக்கும் நிலை ஏற்பட்டால் ரொம்பக் கஷ்டம்.

கடைசியாக ஒன்றே ஒன்று… இது ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்ட உலகம். முடிந்தவரை எச்சரிக்கை உணர்வோடு பர்ச்சேஸ் செய்வது மட்டுமே உங்கள் பணத்துக்கான பாதுகாப்பாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------------------பா.விஜயலட்சுமி

நன்றி : நாணயம் விகடன் - 02.10.2016

நாய்க்கடி


நாய்க்கடி - என்ன செய்ய வேண்டும்?

கேள்வி : 

நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி ஊசி போடுவார்கள் என்று பயமுறுத்துகிறார்களே, உண்மையா?

பதில் : 

நாய்க்கடி என்பது மிகவும் ஆபத்தானது... அதனால் வரும் விளைவுகள் பயங்கரமானவை.. சரியான முதலுதவியும் சிகிச்சையும் செய்துகொண்டால் அச்சப்படத் தேவையில்லை.

வீட்டில் நீங்கள் செல்லமாக வளர்க்கும் நாய் கடித்தால், தொற்றுத் தடுப்பு (டி.டி.) ஊசி போட்டாலே போதுமானது.

அது கிருமிகள் பரவுவதைத் தடுத்து விடும்.

ஆனால், தெரு நாயோ அல்லது வெறி நாயோ கடித்துவிட்டால், கடிபட்ட இடத்தை உடனே சோப்பால் கழுவ வேண்டும். பிறகு டெட்டால் போன்ற கிருமிநாசினியால் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். நாய்க்கடி பட்ட 48 மணி நேரத்துக்குள் தடுப்பூசி போட்டாக வேண்டும். இல்லையென்றால் ஆபத்துதான்.

அதுவும் வெறிநாய்கள் (சில நாய்கள் பார்ப்பதற்கே பயங்கரமாகவும், எப்போதும் நாக்கைத் தொங்கப்பட்டுக்கொண்டு, நாக்கில் இருந்து நீர் வழிந்துகொண்டு, இரைத்துக் கொண்டும் பயங்கரமாக முழித்துக் கொண்டும் இருக்கும்) கடித்துத்தான் ஆக வேண்டும் என்றில்லை. தனது நாக்கினால் நக்கினாலே போதும். அந்த இடத்தில் புண்ணோ, சிராய்ப்போ இருந்தால், அந்த வழியாக "ரேபிஸ் வைரஸ்' (கிருமிகள்) உடம்பின் உள்ளே புகுந்து விடும்.

கடிபட்ட இடத்திலிருந்து, நரம்பு வழியே இந்தக் கிருமி, ஸ்லோ மோஷனில் மூளையை நோக்கிப் பயணிக்கும். அதுவும் மூளைக்கு அருகில் தலையிலோ கழுத்திலோ நாய் கடித்திருந்தால் மேட்டர் ரொம்பவும் சீரியஸ். உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும்.

தொப்புளைச் சுற்றி, ஊசி போட்டு, நல்லா இருந்த வயிற்றைச் சல்லடையாக்கி, பொத்தல் போட்டு விடுவார்களோ என்று பயப்பட வேண்டாம். கையிலேயே போடும் ஊசி வந்து விட்டது.
------------------------------------------------------------------------------------------------------- ரொசிட்டா

நன்றி : தினமணி - சிறுவர் மணி - 11.10.2016

கன்ஸ்யூமர் லோன் கிடைக்க


கன்ஸ்யூமர் லோன் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

கன்ஸ்யூமர் லோன்… உங்களுக்கு கிடைக்குமா?

பண்டிகை  என்றாலே ஷாப்பிங் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். அடுத்து ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து வர உள்ளன. இந்த பண்டிகை சமயங்களில் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி என ஏதாவது பொருட்களை நாம் வாங்குவோம்.

 நம்மில் பலரால் இந்த பொருட்களை முழுத் தொகை கட்டி வாங்க முடிவதில்லை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடனை வாங்கியே பல விதமான பொருட்களை வாங்குவது மிடில் கிளாஸ்வாசிகளான நமக்கு பழக்கமான விஷயமாகிவிட்டது. இது நுகர்வோர் கடன் (Consumer loan) எனப்படுகிறது.

இந்த கடன் எப்படி வழங்கப்படுகின்றன, இதற்கு என்ன ஆவணங்கள் தேவை, இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விசாரிக்க களமிறங்கினோம். ஷாப்பிங் மால்கள் மற்றும் பெரிய கடைகளில் இருக்கும் கன்ஸ்யூமர் லோன் வழங்கும் நிதி நிறுவனங்களின் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம்.

ஆவணங்கள்!

நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பவர்கள் தங்களுடைய முகவரிச் சான்று, அடையாளச் சான்று, கடைசி 3 மாத வங்கி அறிக்கை, காசோலை ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.   நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பம் செய்பவரின் முகவரி எல்லா ஆவணங்களிலும் ஒன்றாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றில் முகவரி மாறி இருந்தால் கடன் மறுக்கப்படலாம்.

கடன் வாங்கப் போகிறவர், எந்த வீட்டில் குடி இருக்கிறாரோ, அந்த வீட்டின் முகவரியைத்தான் முகவரிச் சான்றாக தரவேண்டும். 

ஒரு மாதத்துக்குமுன் வேறு ஒரு இடத்தில் வசித்துவிட்டு, கடன் வாங்கும்போது பழைய வீட்டின் முகவரியைத் தரக்கூடாது. கடைசியாக எந்த வீட்டில் வசிக்கிறாரோ, அந்த வீட்டின் முகவரியையே முகவரிச் சான்றாக வழங்க வேண்டும்.

 சிபில் ஸ்கோர்!

நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது ஆவணங்கள் அனைத்தும் ஒரிஜினலாக இருக்க வேண்டும். 

ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து வழங்கினாலும் ஒரிஜினல் ஆவணங்களைச் சரிபார்த்த பிறகுதான் இந்தக் கடன் வழங்கப்படும். 

ஆவணங்கள் சரியாக இருந்தாலும் அவருடைய சிபில் ஸ்கோரைப் பொறுத்தே கடன் வழங்கப்படும் என்பதால் கடன் பெற விண்ணப்பிக்கிறவரின் சிபில் ஸ்கோர் அதிகமாக இருப்பது அவசியம். 

கடன் தொகை!

ஒருவர் ரூ.30,000 மதிப்புள்ள டிவியை வாங்குகிறார் எனில், அதில் மூன்றில் ஒரு பங்கை, அதாவது 10,000 ரூபாயை முதலில் செலுத்த வேண்டும். 

மீதி 20,000 ரூபாயை எட்டு மாதத் தவணையில் திரும்பக் கட்டலாம். 

இதுவே  விலை உயர்ந்த பொருட்கள் எனில், உதாரணமாக ரூ.5 லட்சம் மதிப்புடைய பொருட்களை வாங்கும்போது அதற்கு 18 மாதத் தவணையாக எடுத்துக்கொண்டு, அதில் முதல் நான்கு மாத தவணையைக் கடன் வாங்குபவர் முதலில் செலுத்த வேண்டியிருக்கும். 

மீதியுள்ள தொகையை மாதத் தவணையாகச் செலுத்த வேண்டும்.

நுகர்வோர் கடனுக்கு குறைந்தபட்ச பரிசீலனைக் கட்டணம் ரூ.500-ஆக உள்ளது. இது பொருட்களுக்கு தகுந்தாற்போல் மாறுபடும். 

உதாரணத்துக்கு, ரூ.20,000 மதிப்புடைய டிவி வாங்கினால், 2% பரிசீலனைக் கட்டணம் ரூ.400-ஆக இருந்தாலும் ரூ.500 வசூலிக்கப்படும். இதுவே வாங்கும் பொருளின் மதிப்பு ரூ.2,00,000 எனில், பரிசீலனைக் கட்டணமாக ரூ.4,000 வசூலிக்கப்படும். இது பிராண்டுக்கு தகுந்தாற்போல் மாறுபடும்.

எவ்வளவு கடன்?

மாதச் சம்பளதாரர்களின் சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்பட்டால் மட்டுமே கடன் கிடைக்கும். 

குறைந்தபட்சம் மாதச் சம்பளம் 10,000 ரூபாய் இருந்தால்தான் கடன் கிடைக்கும். 

ரூ.2 லட்சம் நுகர்வோர் கடன் வாங்கவேண்டும் எனில், அவருக்கு மாதச் சம்பளம் குறைந்தது ரூ.30,000-ஆக இருக்க வேண்டும். 

நுகர்வோர் ரூ.10,000 சம்பளம் பெறுகிறார் எனில், அவருக்கு அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே கன்ஸ்யூமர் லோன் வழங்கப்படும். இதுவே ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை சம்பளம் பெறுகிறார் எனில் அவருக்கு ரூ.50,000 வரை கடன் வழங்கப்படும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நுகர்வோர் கடன் வேண்டும் எனில் அவர்களுடைய வங்கிப் பரிவர்த்தனையைப் பொறுத்தே கடன் வழங்கப்படுகிறது. 

வங்கிப் பரிவர்த்தனை மாதம் குறைந்தது ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை நடைபெற்று இருக்க வேண்டும்.

நுகர்வோர் ஒரே வங்கிக் கணக்கை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார்; பான் கார்டை வங்கிக் கணக்குடன் இணைத்துள்ளார். அவர் பெயரில்  எந்தவொரு செக் பவுன்ஸ் புகாரும் கிடையாது எனில் அவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை நுகர்வோர் கடன் கிடைக்கக்கூடும். வருமானம் குறித்த ஆவணங்களை வைத்தே இந்தக் கடன் தீர்மானிக்கப்படுவதால், அந்த ஆவணங்களைச் சரியாக வைத்திருப்பது அவசியம்.

தவணை உஷார்!

நுகர்வோர் கடன் கிடைத்தபிறகு ஒவ்வொரு மாதமும் எந்தத் தேதியில் இஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதை நிறுவனங்கள் தெரியப்படுத்தும். அந்த தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கடனைத் திருப்பிச் செலுத்துவது நல்லது. 

கெடு தேதிக்குப் பிறகு செலுத்தினால் 500 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டியதாக இருக்கும். மேலும், உங்களுடைய சிபில் ஸ்கோர் குறையவும் அது காரணமாக அமையும். அடுத்த முறை கடன் வாங்கும்போதும் சிரமங்கள் ஏற்படும். 

கடனை திருப்பிச் செலுத்த தவறினால், மூன்று மாதங்களுக்குப் பின் வாங்கிய பொருளை கடன் வழங்கிய நிறுவனம் எடுத்துச் செல்லும் சூழ்நிலை உருவாகும்.

நுகர்வோர் கடன் வாங்குவதற்கு முன்னரே வேறு ஏதாவது கடன் வங்கிகளில் இருந்தால் அதற்கு தகுந்தாற்போல்தான் கடன் வழங்கப்படும்.

நுகர்வோரைக் கவரும் வகையில் பண்டிகைக் காலங்களில் பரிசீலனைக் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆகையால் பொருட்களை வாங்கும்போது இதுகுறித்து விசாரித்து வாங்குவதே நல்லது. 

வட்டி விகிதம்!

நுகர்வோர் கடன்களுக்கு வட்டி விகிதம் எவ்வளவு என்பது குறித்து தனியார் வங்கி அதிகாரி விஜயகுமாரிடம் கேட்டோம்.

 ‘‘சில நிதி நிறுவனங்கள்தான் ஜீரோ இன்ட்ரஸ்ட் கடன் வழங்கி வருகின்றன. வங்கிகளால் இப்படிக் கடன் வழங்க முடியாது. வங்கியில் ரூ.1 லட்சம் அல்லது ரூ.2 லட்சம் தனிநபர் கடன் வாங்கி, அதில் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கிக் கொள்ளலாம். 

வாடிக்கையாளரின் தகுதியைப் பொறுத்து வட்டி 12% முதல் 20% வரை இருக்கும்” என்றார்.

பண்டிகை நாட்களில் புதிய பொருட்களை குறைந்த விலையில் கடனில் வாங்க முடியும் என்றாலும் மேலே கூறப்பட்ட விஷயங்களைக் கவனிப்பது அவசியம். 

கன்ஸ்யூமர் லோன் வாங்கப் போகும் முன்  டாக்குமென்டுகள் உள்பட எல்லா விஷயங்களையும் சரியாக வைத்துக்கொண்டால் மட்டுமே உங்களுக்குக் கடன் மறுக்கப்படாமல் கிடைக்க வாய்ப்புண்டு.   

சோ.கார்த்திகேயன்

நன்றி : நாணயம் விகடன் - 02.10.2016

தேசிய ஓய்வூதிய திட்டம்


தேசிய ஓய்வூதிய திட்டம் - மாற்றங்கள் - என்ன செய்ய வேண்டும்? 

தேசிய ஓய்வூதியத் திட்டம்…– புதிய மாற்றங்கள் நன்மை செய்யுமா?
இன்றைய தேதியில் அனைவருக்குமான ஓய்வூதியத் திட்டம் என்றால் அது என்பிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படுகிற ‘தேசிய ஓய்வூதியத் திட்டம்’.

இதில் முதலீடு செய்பவர்கள், தங்களுக்கு விருப்ப மான திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வழி இருக் கிறது. ஆனால், எவ்வளவு சதவிகிதம் நிறுவனப் பங்குகளில் (ஈக்விட்டி) முதலீடு செய்யவேண்டும், எவ்வளவு சதவிகிதம் கடன் பத்திரங்களிலும் பாண்டுகளிலும் முதலீடு செய்யவேண்டும் என்று முதலீடு செய்பவரால் தீர்மானிக்க முடியாத நிலை நேற்று வரை இருந்தது.

அந்தக் குறையை இப்போது தீர்த்து வைத்திருக்கிறது என்பிஎஸ் திட்டத்தை நிர்வகிக்கும் பென்ஷன் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (பிஎஃப்ஆர்டிஏ). 

இரண்டு முக்கிய மாற்றங்களைச் செய்திருக்கிறது பிஎஃப்ஆர்டிஏ. அந்த மாற்றங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளும் முன்பு முந்தைய திட்டம் எப்படி இருந்தது என்று முதலில் பார்ப்போம்.

முந்தைய திட்டம்!                
35 வயதுள்ள ஒருவர் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்கிறார் என்றால், அவர் செய்யும் முதலீடுகளில் 50 சதவிகிதம் பங்குகளிலும், 30 சதவிகிதம் கார்ப்பரேட் பாண்டுகளிலும், 20 சதவிகிதம் அரசு பாண்டுகளிலும் முதலீடு செய்யப்படும். இதுவே அவர்  55 வயதாகும்போது, அவருடைய பங்கு சார்ந்த முதலீடுகள், அவர் முதலீடு செய்திருக்கும் மொத்த பணத்தில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே இருக்கும்.

10 சதவிகிதம் கார்ப்பரேட் பாண்டுகளில் இருக்கும். மீதமுள்ள 80 சதவிகிதம் அரசு பாண்டுகளில் இருக்கும்.

இவற்றில்தான் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றம் 1…
தற்போது வந்துள்ள புதிய மாற்றத்தின்படி, 35 வயதுக்குள் இருக்கும் ஒருவரின் மொத்த முதலீட்டில் 75 சதவிகிதம் வரை ஈக்விட்டி சார்ந்த திட்டங்களிலும், 10 சதவிகித முதலீடுகளை கார்ப்பரேட் பாண்டுகளிலும், மீதமுள்ள 15 சதவிகித முதலீடுகளை அரசு பாண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

இவரின் வயது 35-ஐ தாண்டும்போது படிப்படியாக ஈக்விட்டியிலிருந்து இருந்து கார்ப்பரேட் பாண்டு மற்றும் அரசு பாண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

இவர் 55 வயது அடையும்போது ஈக்விட்டி 15%, கார்ப்பரேட் பாண்டுகளில் 10% ஜி-செக் பாண்டுகளில் 75% என இருக்கும்.

இதில் ஈக்விட்டியில் அதிகம் முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கலாமே தவிர, எதில் அல்லது எந்த வகையான திட்டங்களில், எந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்று பரிந்துரைக்க முடியாது.

மாற்றம் 2…
35 வயதுக்குள் இருக்கும் ஒருவரின் மொத்த முதலீட்டில் 25 சதவிகிதம் வரை ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீட்டைக் குறைத்துக் கொள்ளலாம்.

அதனைத் தொடர்ந்து 45 சதவிகித முதலீடுகளை கார்ப்பரேட் பாண்டுகளிலும், மீதமுள்ள 30 சதவிகிதத்தை அரசு பாண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

இவரின் வயது 35-ஐ தாண்டும்போது படிப்படியாக ஈக்விட்டி மற்றும் கார்ப்பரேட் பாண்டு திட்டங்களில் இருந்து பணம் ஜி.செக் பாண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

இவர் 55 வயது அடையும்போது ஈக்விட்டி 5 சதவிகிதம், கார்ப்பரேட் பாண்டுகளில் 5 சதவிகிதம், அரசு பாண்டுகளில் 90 சதவிகிதம் என முதலீட்டுத் தொகை இருக்கும்.

முடிவுகள் ஜாக்கிரதை!
இப்படி ஈக்விட்டி முதலீட்டைக் குறைத்துக் கொள்வதும், அதிகரித்துக் கொள்வதும் ஒரு வகையில் நல்லது என்றாலும், நன்றாக ஆராய்ந்தபின்பே நடவடிக்கை எடுப்பது நல்லது. 

இந்த மாற்றங்களில் உள்ள ஒரு பெரிய குறை என்னவெனில், ‘நமது முதலீடு ஈக்விட்டியில் அதிகம் இருக்கவேண்டும்’ என்று நினைப்பவர் களுக்கு இந்தத் திட்டம் சற்றே ஏமாற்றமளிப்பதாகவே இருக்கும்.

ஏனெனில் ஒருவருக்கு ஈக்விட்டியைப் பற்றிய சரியான புரிதல் வருவதற்கு சில வருடங்கள் தேவைப்படலாம் எனும்போது, 35 வயதிலேயே ஈக்விட்டி திட்டங்களில் இருந்து படிப்படியாக பாண்டுகளுக்கு முதலீடு மாற்றப்படும் விதமாக திட்டம் வரையறுக்கப்பட்டிருப்பதை ஒரு குறையாகவே சிலர் சொல்கிறார்கள்.

என்பிஎஸ் திட்டத்தைப் பொறுத்தவரை, அதில் நல்ல பல மாற்றங்கள் கொண்டுவந்த பின்பும் அதை மக்களிடம் இன்னும் பெரிய அளவில் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எதுவும் இல்லாமல் இருப்பது கவலைக்குரியது.

நன்றி- நாணயம் விகடன் - 16.10.2016

Monday, October 10, 2016

லாபகரமான முதலீடு


லாபகரமான முதலீடு - என்ன செய்ய வேண்டும்?

லாபகரமான முதலீட்டுக்கு… 
கட்டாயம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்!

எந்தவொரு திட்டத்தில் முதலீடு செய்யும் முன்பும் முக்கியமான 10 கேள்விகளை முதலீட்டு ஆலோசகர்களிடமோ, விவரம் தெரிந்தவர்களிடமோ கேட்டு அதற்கான தெளிவான பதிலைத் தெரிந்துகொள்வது லாபகரமான முதலீட்டுக்கு கைகொடுக்கும். 

அந்த 10 கேள்விகள்…

1. குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?

2. வருமானம் எவ்வளவு?

3. வருமானத்துக்கு உத்தரவாதம் இருக்கிறதா?

4. எவ்வளவு காலம் கழித்து முதலீட்டை எடுக்க முடியும்?

5. இடைப்பட்ட காலத்தில் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் ஏதாவது அபராதம் இருக்கிறதா?

6. முதலீட்டு திட்டத்தில் உள்ள ரிஸ்க்குகள் என்னென்ன?

7. முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறதா?

8. வட்டி அல்லது வருமானத்துக்கு வரி கட்ட வேண்டுமா?

9. வருமான வரி எவ்வளவு கட்ட வேண்டும்?

10. குறுகிய கால / நீண்ட கால மூலதன ஆதாய வரி எவ்வளவு?

நன்றி : நாணயம் விகடன் - 02.10.2016

நொறுங்கத் தின்றால் 100 வயது


நொறுங்கத் தின்றால் 100 வயது - என்ன செய்ய வேண்டும்?

பசித்துப் புசி, ருசித்துப் புசி’என்று சொன்னது எல்லாம் வெறும் வார்த்தைகளாக மாறிவிட்ட அவசர உலகம் இது. அவசர அவசரமாய் நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு அடுத்த வேலைக்குச் செல்லும் இயந்திர வாழ்வில் இரவு உணவையாவது ரசித்து, ருசித்து சாப்பிடுகிறோமா என்றால், அதுவும் இல்லை. டிவியைப் பார்த்துக்கொண்டும், செல்போனை பார்த்துக்கொண்டும் ஏதோ கடமைக்குச் சாப்பிட்டுவிட்டு எழுகிறோம்.

செரிமானம் என்ற செயல் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை பல கட்டங்களாக நடக்கிறது. உமிழ்நீரில் இருக்கும் நொதிப்பொருட்கள், வாயிலிருந்தே உணவு செரிமானத்தைத் தொடங்கிவிடுகின்றன. 

உணவை, உமிழ்நீருடன் கலந்து நன்றாக மென்று உண்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியம். சரியான தொடக்கம், பாதி வெற்றி என்பதைப் போல, சரியாக மென்று விழுங்கினாலே, செரிமானப் பணியில் 50 சதவிகிதம் முடிந்தது போலத்தான்.

உணவு உண்ணும் முறை

சிறிய சிறிய விள்ளல்களாக உண்ண வேண்டும்.

நிதானமாகச் சீராக மெல்ல வேண்டும்.

வாயில் உள்ள உணவு உமிழ்நீரோடு கலந்து, அதன் தன்மையை இழந்த பிறகே விழுங்க வேண்டும். ஒரு வாய் உணவை 32 முறை மெல்ல வேண்டும் எனக் கூறுவது ஒரு உதாரணம்தான். அதன் அர்த்தம், நன்றாக உணவு கூழாகும் வரை மெல்ல வேண்டும் என்பதே.

ஒரு வாய் உணவை முழுதாக மென்று விழுங்கிய பிறகே, அடுத்த வாய் உணவை உண்ண வேண்டும்.

பேசாமல் உணவு உண்பது நல்லது.

சரியாக மென்று உண்ணாவிட்டால்…

சரியாக மெல்லப்படாததால், இரைப்பைக்குள் சென்ற உணவு மீண்டும் உணவுக் குழாய்க்கு வந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

உணவில் இருக்கும் சத்து முழுமையாக கிடைக்காது.

அதிக அளவு உணவை உட்கொள்ளும் நிலை ஏற்படும்.

பற்களுக்குப் போதிய செயல்பாடு இல்லாமல், வலுவற்றுப்போகும்.

மென்று உண்பதன் பலன்கள்

சராசரியாக நாம் உண்ண தொடங்கியதில் இருந்து 20 நிமிடங்களில் நம் மூளைக்கு நம் வயிறு நிறைந்துவிட்டது என்ற தகவல் செல்லும். நாம் மெதுவாக மென்று உண்ணும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறையும். இதனால், உடல் எடைக் குறைவதோடு, உடல் பருமன் 
ஏற்படாமல் தடுக்கவும் செய்யலாம்
நம் உமிழ்நீரில் உள்ள என்சைம், கொழுப்பை உடைக்கக்கூடியது. இதனால், நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு, நன்கு செரிமானம் ஆகும்.

உணவு சிறிய பகுதிகளாக மாறுவதால் சீக்கிரமாக ஜீரணமாகிவிடுகிறது.

உணவை மெல்லும்போது, பற்களுக்கு அது நல்ல பயிற்சியாக உள்ளது. மேலும், வாயில் சுரக்கும் உமிழ்நீர், வாயில் உள்ள கிருமிகளை அழிக்கக்கூடியது.

உமிழ்நீர் நம் உணவில் உள்ள பச்சையம் (Starch), ஃப்ரக்டோஸ் (Fructose), மற்றும் குளுக்கோஸ் (Glucose) ஆகியவற்றைப் பிரித்து செரிமானத்துக்கு ஏற்ப மாற்றுகிறது.

மெதுவாக மென்று உண்பதால், உணவின் ருசியை உணர்ந்து உண்ணும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், மனதுக்கு முழுமையான திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

‘நொறுங்கத் தின்றால் நூறு ஆண்டு’ என்ற நம் மூத்தோர் வாக்கில் பொய் ஏதுமில்லை. பொறுமையாக மென்று உண்டால் ஆரோக்கிய வாழ்வு அனைவருக்குமே நிச்சயம்.

சுவிங்கம் மெல்வது நல்லதா?

சூயிங்கம் மெல்வதால் பற்களும் ஈறுகளும் வலுவாகின்றன என்று சொல்வார்கள். அதில் உண்மை இல்லை. அடிக்கடி சூயிங்கம் மெல்வதும் உடலுக்குத் தீங்கானதுதான். 

நாம் அதை மெல்ல ஆரம்பித்ததும், மூளைக்கு உணவு உள்ளே வருகிறது என்ற தகவல் அனுப்பப்படுகிறது. இதனால், செரிமானத்துக்குத் தேவையான ரசாயனங்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன. 

ஆனால், உள்ளே உணவு போகாத நிலையில் அது வயிற்றில், குடலில் புண்களை ஏற்படுத்துகிறது. மேலும், தொடர்ந்து அதிக நேரம் ஒரே இடத்தில் வைத்து மெல்வதால், பல்வலி ஏற்படவும், தாடையில் பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

நன்றி : டாக்டர் விகடன் - 01.10.2016

குழந்தைகளைக் காக்க புது இணையதளம்


குழந்தைகளைக் காக்க புது இணையதளம் - என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் இந்தச் சமூகத்தில்தான் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 

குறிப்பாக இணையதளம் மூலம் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் நடப்பதும் அதிகரித்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆன் லைன்களில் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்காக முதன்முறையாக நம் நாட்டில் aarambhindia.org என்ற இணையத்தைத் தொடங்க உள்ளது. இது இங்கிலாந்தைச் சேர்ந்த Internet Watch Foundation (WIF) -உடன் தொடர்புடையது. WIF- ஆன் லைனில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காவே இயங்கிவரும் நிறுவனம்.

நாம் ஆன் லைன் பயன்படுத்தும்போது குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டால் அதன் லிங்கை  aarambhindia.org  அனுப்பிவைத்தால் போதும். 

 உடனே அந்த லிங்க் செயல்படாமல் முடக்குவதுடன், அதை யார் செயல்படுத்துகிறார், இதற்கு காரணமானவர்கள் யார் எனக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் இந்த இணையதளம் முயற்சிகளை எடுக்கும். 

பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய, குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் பற்றிய குறும்படங்களும் இந்தத் தளத்தில் உள்ளன.

தொடக்கமாக, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவர இருக்கும் aarambhindia.org இணையதளம், விரைவிலேயே இந்தியாவின் 22 பிரந்திய மொழிகளிலும் செயல்படும். 

அடுத்த வாரம் முதல் இந்த இணையதளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற செயல்கள் தொடர்புடைய 'லிங்க்' களைப் பதிவு செய்யலாம். 

இந்த இணையதளம் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும்.

குரூர எண்ணம் கொண்டவர்களிடமிருந்து குழந்தைகளைக் காப்போம்.

-------------------------------------------------------------------------------------------என்.மல்லிகார்ஜுனா

நன்றி : விகடன் செய்திகள் - 14.09.2016

Sunday, October 9, 2016

தங்க நகைக் கடன் லாபமா, நஷ்டமா?


தங்க நகைக் கடன் லாபமா, நஷ்டமா? - என்ன செய்ய வேண்டும்?

தங்கம் மீது நம் மக்களுக்கு இருக்கும் ஆசை அளவில்லாதது. அக்‌ஷய திருதி வந்தால் தங்கம் வாங்குவார்கள்; தீபாவளிக்கு முன்பு தாந்த்ரேயாஸ் வந்தாலும் வாங்குவார்கள். இதுபோக, குழந்தைகளின் எதிர்காலத்துக்கென பணம் கிடைக்கும் போதெல்லாம் தங்கம் வாங்கிப் போடுவார்கள். மகன் அல்லது மகளின் திருமண செலவுக்குத் தேவையான பணத்தைக்கூட பிறகு ஏற்பாடு செய்துகொள்ளலாம்; முதலில் தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் நம்மவர்கள். 

நம் மக்கள் மட்டுமல்ல, பல்வேறு நாட்டின் அரசாங்கங்களே தங்கள் நாணயத்தின் ஏற்ற இறக்கத்துக்கு தங்கத்தைத்தான் காப்பாகக் கொள்கின்றன. 

தவிர, சர்வதேச நிதியம் (IMF) போன்ற அமைப்புகளிடம் கடன் வாங்கும்போது, அதற்கு காப்பாக தங்கம் மற்றும் டாலர் நோட்டுக்களைத்தான் நாடுகள் கொடுக்கின்றன.

ஆக, தங்கம் என்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் முக்கியமான சொத்து என்பதில் சந்தேகமே வேண்டாம். இதற்கு முக்கியமான காரணம்,  எப்போது வேண்டுமா னாலும் இதை வைத்து கடன் வாங்கலாம் என்பதினால்தான்.

நான் ஒருமுறை, ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கியின் கிளைக்கு ஒரு ஆய்வுக்குச்  சென்றிருந்தேன். வங்கியின் கடன் சதவிகிதம் எவ்வளவு என்று பார்ப்பதுதான் நான் செய்த ஆய்வு. அப்போது அதிர்ச்சியான ஒரு உண்மையைத் தெரிந்துகொண்டேன், வங்கிகள் தந்த கடனில் கிட்டத்தட்ட 80% தங்க நகைக் கடன்.

சரி, ஏன் பலரும் தங்கத்தை அடமானமாக வைத்துக் கடன் வாங்குகிறார்கள்

இந்தக் கேள்விக்கான காரணங்கள் பல…
************************************************************
* கடன் பெறுவதற்கு கடன் மதிப்பீடு செய்யப்படுவதில்லை.

* கடன் பெறுவதற்கு மாத வருமானச் சான்றிதழ்கள் கேட்கப்படுவதில்லை.

* சில மணி நேரத்தில் (தனியார் நிறுவனங்களில் சில நிமிடங்கள்தான்) பெற இயலும்.

* ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் கடனைத் திருப்பிச் செலுத்த அவசியமில்லை.

* தனிநபர் கடனைவிட வட்டி விகிதம் குறைவு.

* தங்கம் ஈடாக இருப்பதால், எந்தக் கேள்வியும் கேட்கப்படுவது  இல்லை.
* தங்கத்தை அடமானமாக வைத்துக் கடன் வாங்குவதால், எந்தவித நஷ்டமும் கிடையாது.

இந்த காரணங்களைத் தவிர, மற்றொரு முக்கியமான காரணமும் சொல்லப்படுகிறது. தங்கம் என்பது ஒரு இறந்த சொத்து (Dead asset). அதிலிருந்து எந்த வருமானமும் கிடைப்பதில்லை. எனவே, அதை வைத்துக் கடன் வாங்குவதால், எந்தவித நஷ்டமும் கிடையாது என்று சொல்பவர்களும் பலர் இருக்கவே செய்கிறார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால், இது உண்மை போலத் தோன்றும். ஆனால், இதில் உண்மை இல்லை. தங்கத்தை அடமானமாக வைத்து நாம் பெறும் கடனுக்கான வட்டி, செயலாக்கக் கட்டணம், அபராதக் கட்டணம், மதிப்பீட்டுக் கட்டணம், முன்கூட்டியே கடனை திரும்பச் செலுத்துவதற்கான கட்டணம் எனப் பல செலவுகள் இருக்கின்றன. இவை வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள் இவற்றை வசூலிக்காமலும் இருக்கும்.

ஆனால், தங்க நகைக் கடன்களை தேசியமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளிலும் பெறலாம். அதிகமானவர்கள் இந்த நிறுவனங்களில் தான் நகைக் கடன் வாங்குகிறார்கள். ஓரளவுக்கு நியாயமான வட்டி, அரசு விதித்த விதிமுறைகளைப் பின்பற்றுவது என பல பாசிட்டிவ் அம்சங்கள் இதில் இருப்பதால், நகை அடமானக் கடன் பெற இந்த நிறுவனங்களையே மக்கள் நாடுகிறார்கள்.

தனியார் நிதி நிறுவனங்களிலும், பான் புரோக்கர்கள் என்று சொல்லப்படுகிற நகை அடமானக் கடைகளிலும் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்கலாம் என்றாலும் இங்கு வட்டி விகிதம் மிக மிக அதிகம். தவிர, அடமானம் வைக்கப்படும் தங்கத்துக்கு பாதுகாப்புக் கான உறுதியும் இருக்காது.

என்றாலும் தனியார் நிறுவனங்களை மக்கள் தேடிச் செல்லக் காரணம், டாப் சினிமா நடிகர்களை வைத்து செய்யப்படும் விளம்பரம்தான். இந்த விளம்பரங்கள் டிவிக்களில் திரும்பத் திரும்ப போட்டுக் காட்டப் படுவதால், மக்கள் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். 

ஆனால், ப்ரைம் டைமில் இந்த விளம்பரங்களை ஒளிபரப்ப இந்த நிறுவனங்கள் எவ்வளவு செலவு செய்கிறது என்பதை நாம் மறந்தே விடுகிறோம். எந்தவொரு தொழிலிலும் லாபம் ஈட்டாமல் வீண் செலவு செய்யப்படுவதில்லை. இந்த நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு செய்யும் செலவுகளை வைத்தே அவை சம்பாதிக்கும் கொழுத்த லாபத்தை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த லாபத்தைக் கொடுப்பது யார்…? வேறு யார், நாம்தான்; நாம் கொடுக்கும் வட்டிதான். ஒருவரின் லாபம், இன்னொருவரின் நஷ்டம்.  தங்க நகைக் கடன் கொடுத்தவருக்கு லாபம் என்றால்,  வாங்கியவருக்கு…? சொல்லவே வேண்டாம், நஷ்டம்தான்

சரி, கடன் கொடுக்கும்போது தங்கத்தின் விலை இருந்ததைவிட குறைந்துவிட்டால் என்ன ஆகும்? முன்பெல்லாம், வங்கிகள் இதைப் பற்றி  அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை. ஒரு பவுன் (எட்டு கிராம்) ரூ.32,000-ஆக இருந்த தங்கம், தடாலடியாக வீழ்ச்சிக் கண்டு ரூ.18,000-க்கு வந்தபோது, வங்கிகள் மார்ஜின் தொகை போதாமல் தவித்துப் போனது. சாதாரணமாக தங்கம் விலை நிலையாக இருக்கும். 

ஆனால், பல வருடங்களுக்குப்பிறகு திடீர் சரிவு நிகழ்ந்தது சமீபத்தில்தான். அதனால் இப்போது மாத ஆரம்பத்தில், சென்ற மாதத்தின் சராசரி தங்கத்தின் விலை நிலவரம் கொண்டு கடனாகத் தரப்படும் பணத்தின் அளவு மாற்றி அமைக்கப்படுகிறது. கடன் வாங்கியவர் இந்த வேறுபாட்டுத் தொகையைக் கட்ட வேண்டாம்.  

ஆனால், இந்தத் தொகைக்கு அபராத வட்டி அதிகமாக வசூலிக்கப்படும். இந்த அபராத வட்டியைக் குறைக்க வேண்டுமானால், இந்த வேறுபாட்டுத் தொகையை வங்கிக் கணக்கில் கடன் வாங்கியவர் செலுத்தவேண்டும்.

ஏலமோ ஏலம்!
***********************
தங்க நகையை அடமானமாக வைத்து வாங்கப்படும் கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்தாவிட்டால் என்ன ஆகும்?

இதைப் பற்றி வங்கிகள் கடன் கொடுக்கும்போது விளக்கிச் சொல்வதில்லை. அடமானம் வைப்பவர் களும் படிவத்தை ஒழுங்காகப் படிக்காமல் கையெழுத்திட்டுவிடுகிறார்கள். காரணம் அவசரம். நம் பணத் தேவை என்கிற ஒன்றை மட்டுமே பார்க்கிறோம். வட்டியை எல்லாம் கணக்குப் போட்டுப் பார்ப்பதில்லை. ஆக, சில மாதங்களுக்கு என்று தேவைப்பட்ட கடன், ஒரு நிரந்தர தேவையாகி திரும்பக் கட்டமுடியாமல் போகும்போது, வங்கியானது அடமானம் வைக்கப்பட்டிருக்கும் நகைகளை ஏலத்தில் விற்று விட்டு, அதற்கு கொடுக்கவேண்டிய அசல் மற்றும் வட்டியை எடுத்துக்கொள்ளும்.

வங்கிகளின் லாபம் நமது நஷ்டம் என்பதை ஏற்கெனவே சொல்லி இருந்தேன். இப்படி நகைக் கடன் எடுப்பதைவிட, நகையை நம் தேவைக்கேற்ப விற்றுவிட்டு, பின் சிறிது சிறிதாக வாங்கினால் நஷ்டத்தைத் தடுப்பது மட்டுமல்லாமல், லாபம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. ஆனால், தங்க நகைகளை விற்பதற்கு நம்மில் பலருக்கும் தயக்கம் நிறைய உள்ளது.

காரணம், நாம் போட்டு பயன்படுத்திய நகைகள் மீது நமக்கொரு அலாதியான பாசம் வந்துவிடுகிறது. சில நேரம் இது பயமாகவும் உருவெடுக்கிறது. பெண்கள் தங்கள் பாதுகாப்பு என்பதே தங்களிடம் இருக்கும் நகைதான் என்று உணர்வதால், எங்கே நகையை விற்றுவிட்டால் மறுபடியும் வாங்காமல் போய்விடுவோமோ என்று பயப்படுகிறார்கள். 

தவிர, நகையை அடமானம் வைத்து வாங்கப்படும் கடனில் முக்கால்வாசி, குறித்த காலத்தில் செலுத்தப் படாமல் ஆண்டுக் கணக்கில் நீட்டிக்கப்படுகிறது. அந்த சமயம், பழைய கடன் நேர் செய்யப்பட்டு, புதுக் கடன் போல கணக்குக் காட்டப்படுகிறது. இவ்வளவு செய்தும், கடனைத் திரும்ப அடைக்க முடியாமல், நகையை ஏலத்தில் விடுவதைவிட, இரண்டு வருடத்துக்கு முன்பே அதை விற்றிருந்தால் குறைவான நஷ்டமே வந்திருக்கும். இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்

நம் பணத் தேவை – ரூ.1 லட்சம்
கடன் காலம் – 24 மாதம்
வட்டி விகிதம் – 14% 
மாதத் தவணை – ரூ.4,800.
தங்கம் விலை – கிராம் ரூ.2,900 (உதாரணமாக)
மார்ஜின் பிடித்தம் – 30%
சந்தையில் விற்கும்போது நமக்கு கிடைக்கும் விலை – ரூ.2,500 
வங்கியானது ஒரு கிராம் தங்கத்துக்குப் போட்ட கடன் மதிப்பு – ரூ.2,000 (916 சுத்த தங்கம், கல் பதிக்காத நகை என்கிற கணக்கில்)
தேவையான தங்கம் – 50 கிராம் (50X2000 = 1,00,000)  
கடன் வாங்கும்போது கொடுக்கப் படும் கட்டணங்கள்
செயலாக்கக் கட்டணம் – ரூ.1,000
ஆவணச் சான்றிதழ் – ரூ.350
மொத்தக் கட்டணம் – ரூ1,350
வட்டி – 4,800X24-1,00,000 = ரூ.15,200
மொத்தச் செலவு – ரூ.16,550

(இங்கு அபராத வட்டிக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.)

சரி, இப்போது மூன்று வகையான வாய்ப்புகளை எடுத்துக்கொள்வோம்.

1. தங்கம் விலை அப்படியே இருக்கும்போது!
*****************************************************************
சந்தையில் விற்கவேண்டிய தங்கம் – 40 கிராம்
40X2500=ரூ.1,00,000
மாதம் மாதம் தவணையாக செலுத்தும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் வாங்கினால்…
21X4,800=1,00,800
21 மாதங்களில் விற்ற தங்கத்தை மறுபடியும் வாங்கிவிடலாம். அப்போது நமக்குக் கிடைக்கும் லாபம் 3X4,800+1,350=ரூ.15,750. எனவே, லாபம் = ரூ.15,750.

2. தங்கம் விலை கிராம் ரூ.3,000-ஆக உயரும்போது!
***************************************************************************
நாம் வாங்கும் தங்கத்தின் விலை சிறிது சிறிதாக உயரும்போது – 40X3000=ரூ.1,20,000
நமக்கு ஏற்படும் நஷ்டம்=3X4,800+1,350 =15,750-20,000=4,250.
ஆக, நஷ்டம் = ரூ.4,250.

3. தங்கம் விலை ரூ.2,800-ஆகக் குறையும்போது! 
************************************************************************
நாம் வாங்கும் தங்கத்தின் விலை குறையும்போது – 40X2800=1,12,000.
நம் லாபம் = 3X4,800+1,350=15,750+12,000= 27,750. 
ஆக, லாபம் = ரூ.27,750.

மேற்சொன்ன கணக்குகளை எல்லாம் பார்த்தால், நகையை அடமானம் வைத்து கடன் வாங்குவதைக் காட்டிலும், நகையை விற்று அவசர செலவுகளைச் சமாளிப்பதே சரி என்கிறீர்களா என நீங்கள் கேட்கலாம். இல்லை; நகையை அடமானம் வைத்து மிகக் குறுகிய காலத்தில், அதாவது 3 அல்லது 4 மாதங்களில் பணத்தைக் கட்டி நகையை மீட்டுவிட முடியும் என்பவர்கள் அடமானம் வைக்கலாம். 
அடுத்து, நகைக் கடன் மூலம் கிடைக்கும் பணத்தை பிசினஸில் போட்டு நல்ல லாபம் சம்பாதிக்க வாய்ப்புள்ளவர்கள் இந்தக் கடனை வாங்கலாம்.

ஆனால், எப்போது பணம் கிடைக்கும், எப்போது நகையை மீட்போம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையெனில், அடமானக் கடனை வாங்கும்முன் யோசித்து முடிவெடுப்பதே நஷ்டத்தைத் தவிர்க்க உதவும்.

நகைக் கடன் – ஒரு விளக்கம்!
*********************************************
நகையின் தரமும், எடையும் சரிபார்க்கப்பட்ட பின்பே நகைக் கடன் வழங்கப்படும். தரத்தையும் எடையையும் சரிபார்க்க ஒவ்வொரு வங்கியிலும் மதிப்பீட்டாளர் ஒருவர் இருப்பார். அவருக்கு உரிய கட்டணம் செலுத்தவேண்டும்.

இது முடிந்தபின், வங்கி மேலாளர் ஒரு கிராம் கணக்கில் நகைக்கு உண்டான தொகையை நிர்ணயம் செய்வார். சில வங்கிகளில் மதிப்பீட்டாளரே அந்த வேலையைச் செய்வார். கடன் தொகை ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். ஹால்மார்க் முத்திரை உள்ள நகை 24 காரட் என்றால் கிராமுக்கு சுமார் ரூ.2100, 22 காரட் என்றால் ரூ.2,000 என கடன் தொகை கணக்கிடப்படுகிறது. அதேபோல் நகையில் உள்ள கல் அது வைரமாகவே இருந்தாலும், அந்த எடை கழிக்கப்படும். நகைக்கான முழுத் தொகையும் நமக்கு கடனாகத் தரமாட்டார்கள். ஒரு மார்ஜின் தொகையைப் பிடித்து வைத்துக்கொண்டு மீதமுள்ளதைத்தான் தருவார்கள். இதுவும் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

அதேபோல், கடனின் காலமும், வட்டி விகிதமும் மாறுபடும். தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் ஆறு மாதம் முதல் மூன்று வருடங்கள், தனியார் நிதி நிறுவனத்தில் மிகக் குறைந்த நாள் கணக்கில் திருப்பிக் கட்டும் விதமாக கடன் கொடுக்கப்படும். அதேபோல்,  மார்ஜின் தொகை 20-30% பிடிக்கப்படும். வட்டி விகிதம் 12% முதல் 17% வரை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது.

இந்த வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது. வங்கியின் கடன் விகிதம் மாறும்போது இந்த விகிதமும் மாறுபடக்கூடும். நிதி நிறுவனங்களில் வட்டி 24% வரை செல்கிறது. தவிர, அதிகபட்ச கடன் தொகையும் ரூ.50,000 முதல் ரூ.20 லட்சம் வரையில் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இன்னும் சற்று கூடுதலான அதிகபட்ச தொகையை வழங்குகிறார்கள். தவிர வங்கிகளில் விவசாயத்துக்குக் குறைவான வட்டியாக 8 – 8.5% வசூலிக்கிறார்கள்.

ஒரு வருடம் அல்லது குறைவான காலத்துக்கு எடுக்கப்பட்டால், மாதத் தவணை இல்லாமல் வட்டி மட்டும் மாதம்தோறும் கட்டிவிட்டு, வருடக் கடைசியில் ஒரே தொகையாக கடன் தொகையைக் கட்டமுடியும். ஆனால், ஒரு வருடத்துக்கு மேலான கடன் என்றால் வட்டி அத்துடன் அசல் தொகையும் நிர்ணயிக்கப்பட்டு, மாதம்தோறும் கட்டவேண்டும்.

நன்றி – நாணயம் விகடன் 16.10.2016

குடும்ப வன்முறைச் சட்டத் திருத்தம்


குடும்ப வன்முறைச் சட்டத் திருத்தம் - என்ன செய்ய வேண்டும்?

குடும்ப வன்முறைச் சட்டப்படி பெண்கள், சிறார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் உள்ள பெண்கள் மீதும், சிறார் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஜோசப் குரியன், ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:

2005-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி, திருமணமான ஒரு பெண்ணை, அவரது புகுந்த வீட்டில் உள்ளவர்கள் சித்திரவதை செய்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள வயது வந்த ஆண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்.

அந்தச் சட்டத்தின், 2-(கியூ) பிரிவில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக கொடுமை செய்யும் "வயது வந்த ஆண்களுக்கு எதிராக' நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறைச் சட்டத்தில் உள்ள இந்தப் பிரிவு, பாலின சமத்துவத்தை வலியுறுத்தும், அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவை மீறும் வகையில் உள்ளது. எனவே, குடும்ப வன்முறைச் சட்டத்தின் 2-(கியூ) பிரிவில் உள்ள "வயதுவந்த ஆண்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அந்த இடத்தில் "நபர்' என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே விடப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

முன்னதாக, குடும்ப வன்முறை தொடர்பான ஒரு வழக்கில், ஒரு சிறுவன், 2 சிறுமிகள், ஒரு பெண் என 4 பேரை விடுவித்து, மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

குடும்ப வன்முறைச் சட்டத்தில், பெண்களுக்கு தீங்கிழைக்கும் "வயதுவந்த ஆண்'களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது; 

குற்றம்சாட்டப்பட்டவர்கள் வயது வந்த ஆண்கள் இல்லை என்பதால் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று அந்த நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி யார் மீது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. 

நன்றி : தினமணி நாளிதழ் - 10.10.2016


ஜனாதிபதி சம்பளம் உயரப்போகிறது


ஜனாதிபதி சம்பளம் உயரப்போகிறது - என்ன செய்ய முடியும்?

ஜனாதிபதி சம்பளத்தை உயர்த்த மத்திய அரசு திட்டம்
புதுடில்லி: 7 வது சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட உள்ளதை தொடர்ந்து ஜனாதிபதியின் சம்பளத்தை மாதத்திற்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டம்:
7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையடுத்து அமைச்சரவை செயலாளர் சம்பளம் மாதத்திற்கு ரூ.2.5 லட்சமாக உயர்கிறது. 

இதனையடுத்து, ஜனாதிபதியின் சம்பளத்தை ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் மாநில கவர்னர்களின் மாத சம்பளத்தை ரூ.1.10 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சம் சட்டத்தை தயாரித்துள்ளதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக்கூறப்படுகிறது.

பரிசீலனை:
இதேபோல் துணை ஜனாதிபதிக்கு சம்பளம் என தனியாக நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால், ராஜ்யசபா தலைவர் என்ற முறையில், அவரது மாதசம்பளம் ரூ.1.25 லட்சமாக உள்ளது. 

துணை ஜனாதிபதி சம்பளத்தை உயர்த்த வேண்டுமானால், பார்லிமென்ட் உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. எம்.பி.,க்கள் சம்பளத்தை உயர்த்த பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்யாநாத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. 

எம்.பி.,க்கள் சம்பளத்தை உயர்த்தும் போது துணை ஜனாதிபதி சம்பளத்தை உயர்த்துவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்யும் என டில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர் சம்பளம் கடைசியாக கடந்த 2008 ஆண்டு 3 மடங்கு உயர்த்தப்பட்டது. 

அதுவரை, ஜனாதிபதி சம்பளம் ரூ.50 ஆயிரமாகவும், துணை ஜனாதிபதி ரூ.40 ஆயிரமாகவும், கவர்னர் சம்பளம் ரூ.36 ஆயிரமாக இருந்தது

நன்றி : தினமலர் நாளிதழ் - 09.10.2016