disalbe Right click

Wednesday, October 19, 2016

சிறுநீரகம் காக்கும் டயாலிசிஸ்

சிறுநீரகம் காக்கும் டயாலிசிஸ் - என்ன செய்ய வேண்டும்?
டயாலிசிஸ்என்ற வார்த்தையை இப்போது எல்லாம் அடிக்கடி கேட்க முடிகிறது. தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என யாரோ ஒருவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுவதாக கேள்விப்படுகிறோம். “சர்க்கரை நோய் முற்றினால் டயாலிசிஸ் செய்ய வேண்டும்”, “சிறுநீரகங்கள் பழுதுபட்டால் டயாலிசிஸ் செய்ய வேண்டும்”,
டயாலிசிஸ் செய்யும் அளவுக்கு நிலைமை முற்றினால் ஆள் அவ்வளவுதான். காப்பாற்றுவது கஷ்டம்என்று ஆளாளுக்கு ஒரு புரிதல்
இவற்றில் எவை எல்லாம் உண்மை? டயாலிசிஸ் என்றால் என்ன
கடந்த தலைமுறையைவிட இப்போது மூன்று மடங்குக்கும் அதிகமானவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? டயாலிசிஸ் செய்துகொள்பவர்களுக்கு ஆயுள் குறைவா? இப்படிப் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.
நமது உடலில் உள்ள இரண்டு சிறுநீரகங்களும் 24 மணி நேரமும் ரத்தத்திலிருந்து கழிவுகளை பிரித்து சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. சிறுநீரகங்கள் பிரித்தெடுக்கும் சிறுநீர், சொட்டுச் சொட்டாகச் சிறுநீர்க் குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
தினமும், இரண்டு சிறுநீரகங்களுக்குள்ளும் 180 லிட்டர் ரத்தம் செல்கிறது. சிறுநீரகங்களில் உள்ள 140 மைல் நீளம்கொண்ட சல்லடை போன்ற நுண்ணியக் குழாய்கள் வழியாக ரத்தம் பயணித்து, அதில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
இந்தச் செயல்பாடு 15 சதவிகிதத்துக்குக் கீழ் குறையும் வரை எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். சிறுநீரகம் செயல்திறன் 15 சதவிகிதத்துக்கும் கீழ் குறையும்போது, அளவுக்கு அதிகமான நீர் வெளியேறாமல் கால், நுரையீரலில் தங்கும். நச்சுக்கள் வெளியேறாமல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதையே சிறுநீரக செயல் இழப்பு என்கிறோம். இதை, திடீர், நாட்பட்டது, முற்றியநிலை என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
திடீர் சிறுநீரகச் செயலிழப்பு (Acute kidney failure)
நன்கு வேலை செய்துகொண்டிருந்த சிறுநீரகங்கள், திடீரென செயலிழந்துவிடக்கூடும். விபத்தில் ரத்த இழப்பு, அதீத ரத்த அழுத்தக் குறைவு, சிறுநீரகங்களில் கிருமித் தொற்று, சில வகை மருந்துகளுக்கு எதிர் விளைவு, சிறுநீரக குழாய் கல் அடைப்பு, ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் சிறுநீர் அடைப்பு போன்றவற்றால் இது ஏற்படலாம். இவர்களுக்கு தற்காலிகமாக டயாலிசிஸ் சிகிச்சைத் தேவைப்படலாம். பெரும்பாலான சமயங்களில் இரண்டு முதல் நான்கு வாரங்களில் சிறுநீரகங்கள் சரியாகி வேலை செய்யத் தொடங்கும். டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தகுந்த சிகிச்சை எடுப்பதன்மூலம் முற்றிலும் பழைய நிலைக்கு சிறுநீரகங்கள் திரும்பிவிடும்.
நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு (Chronic kidney failure)
மாதக் கணக்கில் அல்லது வருடக் கணக்கில் சிறுநீரகங்கள் படிப்படியாகப் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. இதற்கு சர்க்கரைநோய், உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்டவை காரணமாக இருக்கின்றன.
முற்றிய, நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு (End stage kidney failure)
சிறுநீரகங்கள் மீண்டும் வேலை செய்ய வாய்ப்பே இல்லை. இந்தப் பிரச்னை ஏற்பட, நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு, மரபணுக் கோளாறுகள், சிறுநீரகங்களில் கட்டி, சிறுநீரக நாள அழற்சி ஆகியவை முக்கியக் காரணங்கள். சிறுநீரகம் முற்றிலும் செயல்இழந்துவிட்டால் டயாலிசிஸ் என்ற செயற்கை முறையில் சுத்தப்படுத்தும் சிகிச்சை தேவைப்படும்.
இதில், ஹீமோடயாலிசிஸ், பெரிட்டோனியல் டயாலிசிஸ் என இரண்டு வகை உள்ளன. இவை இரண்டும் தற்காலிக தீர்வு மட்டுமே. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே இவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்.
ஹீமோடயாலிசிஸ் (Hemodialysis – எந்திர ரத்தச் சுத்திகரிப்பு)
அசுத்த ரத்தத்தைச் செயற்கைமுறையில் சுத்தப்படுத்துவதுதான் ஹீமோடயாலிசிஸ். டயாலிசிஸ் சிகிச்சையின்போது, ரத்தத்தில் உள்ள நச்சுக்கள், நீர் உள்ளிட்டவை எந்திரங்கள் உதவியுடன் நீக்கப்பட்டும். இதற்கு, உடலில் இருந்து ஒரு ட்யூப் வழியாக ரத்தம் டயாலிசிஸ் இயந்திரத்துக்குள் அனுப்பப்படும். அங்க அது சுத்திகரித்து, மற்றொரு குழாய் வழியாக உடலுக்குள் திரும்ப அளிக்கப்படும்.
ஹீமோடயாலிசிஸ் செய்யப்படும் முறை
முதன் முறையாக டயாலிசிஸ் செய்யும்போது, தற்காலிகமாக கழுத்துப் பகுதியில் சிறு துளையிட்டு குழாய்கள் பொருத்தப்படும். அதேநேரத்தில், கையில் ஆர்டீரியோவீனஸ் ஃபிஸ்டுலா (Arteriovenous fistula) எனும் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
அதாவது, இவர்கள் இடது கை மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, சிறிய இயந்திரம் பொருத்தப்படும். இது, ரத்தத்தை போதுமான அழுத்தத்தில் டயாலிசிஸ் இயந்திரத்துக்குள் செலுத்த உதவும்.
இந்த அறுவைசிகிச்சை செய்து ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை, கழுத்துப் பகுதியில் குழாய் வழியாக டயாலிசிஸ் செய்யப்படும். ஃபிஸ்டுலா தயாரானதும், கையில் உள்ள ரத்தக் குழாய் வழியே டயாலிசிஸ் செய்யப்படும்.
இந்தமுறையில், மணிக்கட்டு பகுதியில் உள்ள நல்ல ரத்தம் செல்லும் பெரிய ரத்தநாளத்திலும் (Artery), அசுத்த ரத்தம் செல்லும் சிறிய ரத்தநாளத்திலும் (Vein) ரத்தம் ஏற்றுவதுபோல ஊசி குழாய் செலுத்தப்படும். உடலில் இருந்து வரும் கெட்ட ரத்தம், டயலைஸர் (Dialyzer) இயந்திரத்துக்குள் செல்லும்.
இந்த இயந்திரத்தின் உள்ளே டயாலிசேட் (Dialysate) எனும் திரவம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும். டயலைஸரின் உட்பகுதியில் உள்ள ஃபைபர்கள், வேண்டாத சிவப்பணுக்கள், நீர் மற்றும் கழிவுகளை வடிகட்டும். சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் மட்டும் மீண்டும் உடலுக்குச் சென்றுவிடும்.
நோயாளிகளின் பாதிப்புக்குத் தகுந்தவாறு வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டும். டயாலிசிஸ் செய்வதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும். வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்தாலும், சிறுநீரகத்தின் வேலையில் 30 சதவிகிதம்தான் நிகழும். வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த டயாலிசிஸ் முறை ஏற்றது. ஆனால், வேலைக்குச் செல்பவர்களுக்கு டயாலிசிஸ் உகந்தமுறை அல்ல. இவர்கள் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதே சிறந்தது.
பெரிடோனியல் டயாலிசிஸ் (Peritoneal Dialysis – வயிற்று ஜவ்வு வழி திரவச் சுத்திகரிப்பு)
சிறு அறுவைசிகிச்சை மூலம் வயிற்றில் ட்யூப் ஒன்றை நிரந்தரமாகப் பொருத்தி, அதனுள் டயாலிஸேட் எனும் சுத்திகரிப்பு நீரைச்செலுத்தி, நோயாளிகளே டயாலிசிஸ் செய்துகொள்வது பெரிட்டோனியல் டயாலிசிஸ். பொதுவாக, நமது நாட்டில் இந்த சிகிச்சைமுறை மேற்கொள்ளப்படுவது இல்லை. எனவே, ஹீமோடயாலிசிஸ் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும் என்றால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையே பரிந்துரைக்கப்படுகிறது.
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை (Kidney transplantation)
தொடர்ந்து டயாலிசிஸ் செய்வதால் ஏற்படும் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளைத் தவிர்க்கவும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாகப் பெற்றோ, விபத்து போன்ற காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாகப் பெற்றோ பாதிக்கப்பட்டவருக்கு சிறுநீரகத்தைப் பொருத்தலாம்.
பொதுவாக, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி, சிறுநீரகத்தை தாக்காமல் இருப்பதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும்.
சிறுநீரகம் செயலிழப்பு நோயாளிகளுக்கான டயட்
தண்ணீர் அளவாகக் குடிக்க வேண்டும். அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால், கால், நுரையீரலில் நீர் கோத்து பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தத்தில் நச்சுக்கள் அளவும் அதிகமாகிக்கொண்டே செல்லும். இதன் விளைவாக ரத்த அழுத்தம் அதிகமாகிறது.
அன்றாட உணவில் உப்பைத் தவிர்க்க வேண்டும். உப்பு சேர்க்கப்பட்ட கொழுப்பு நிறைந்த நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்க வேண்டும். உப்பு தாக்கத்தை அதிகரிக்கும்.
ஜூஸ், குளிர்பானங்கள், காபி, டீ போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அதிகம் நீர் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.
பொட்டாசியம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். புரதச்சத்துள்ள உணவை மிதமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்க
சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், மருந்தே தேவை இல்லை. நமது உணவுப் பழக்கத்தின் வாயிலாகவே அதனைச் சரி செய்துகொள்ள முடியும்.
ரத்தத்தில் கலந்திருக்கும் யூரியா, கிரியாட்டினின் உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றவும், உடலின் நீர் சமநிலையைக் காக்கும் பணியையும் சிறுநீரகம் செய்கிறது. எனவே, அதன் பணியைக் குறைக்கும் பொருட்டு எளிமையாகச் செரிமானம் ஆகக்கூடிய காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். முள்ளங்கி, வெள்ளரிக்காய், தர்பூசணி என நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மசாலாக்கள் மற்றும் மோனோசோடியம் குளுட்டமேட் போன்ற உப்புகள் உள்ள உணவைத் தவிர்ப்பது நல்லது. உணவுப்பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் ரசாயனங்களைத் தவிர்ப்பதும் அவசியம்.
அதிகாலையில் எழுந்து மூச்சுப் பயிற்சி செய்யும்போது ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் சிறுநீரக ரத்த நாளங்கள் வலுவாகின்றன.
சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகள்
சிறுநீரகங்கள் படிப்படியாகச் செயலிழக்கும்போது, ஒருகட்டத்தில் அவற்றின் செயல்திறன் 70 சதவிகிதத்துகுக் கீழ் குறையும்.அது வரை பெரும்பாலானவர்களுக்கு பெரிய தொந்தரவு என்று எதுவும் வராமலும் இருக்க வாய்ப்பு உள்ளது. கீழ்கண்ட அறிகுறிகள் சிறுநீரகச் செயலிழப்பினால் ஏற்படலாம்.
சிறுநீர் வழக்கத்தைவிடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ கழித்தல்
கை, கால், முகத்தில் திடீர் வீக்கம்
உயர் ரத்த அழுத்தம்
பசியின்மை, குமட்டல், வாந்தி
வாயில் கசப்புத்தன்மை
உடல் சோர்வு, களைப்பு, மயக்கம்
எதிலும் ஆர்வமின்மை, இரவில் தூக்கமின்மை, பகலில் தூக்கம் போன்ற உளவியல் பிரச்னைகள்
தலைவலி, உடல்வலி, எலும்புகளில் வலி.

நடராஜன் செழியன்,

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.
நன்றி : டாக்டர் விகடன் - 16.10.201

கோவில் இல்லாத ஊரில்


கோவில் இல்லாத ஊரில் ..... என்ன செய்ய வேண்டும்?

‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற முதுமொழியின் உட்கருத்து என்னவாக இருக்கும்? அக்காலக் கோயில்கள் எப்படி செயல்பட்டன? 

இதுபற்றிச் சொல்கிறார், டாக்டர்.எஸ்.சாந்தினிபீ… 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியை; தமிழ்ப் பெண்மணி; பல வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்கள் எழுதியுள்ளவர்.

மின் விளக்குகள் இல்லாத காலத்தில் எல்லாக் கோயில்களிலும் எண்ணெய் மற்றும் நெய் தீபங்களே இரவின் இருளை நீக்கி, வெளிச்சம் தந்தன. அந்தி விளக்கு, சந்தி விளக்கு, நந்தா விளக்கு எனப் பல வகைகள் இருந்தன. 

இவற்றுக்கான எரிபொருள், பெரும்பாலும் மன்னர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அள்ளித்தந்த தான தர்மங்களில் இருந்து வந்தவையே. 

அணையா விளக்கான ஒரு நந்தா விளக்கை பராமரிக்க 96 ஆடுகள் தானமாக வழங்கப்பட்டன. இந்த ஆடுகள், கோயில் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்த ஆடு மேய்ப்போர்களிடம் கொடுக்கப் பட்டன. கைம்மாறாக, ஆடுமேய்ப்பவர்கள் நாள்தோறும் ஓர் ஆழாக்கு நெய் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும். 

இப்படி ஒரு விளக்குக்கு 96 ஆடுகள் எனில், ஆயிரக்கணக்கான தீபங்களுக்கு எத்தனை ஆடுகள் விடப்பட்டிருக்கும்! இதன் மூலம் ஆடு மேய்ப்பவர்கள் வாழ்வாதாரம் பெற்றனர். 

கோயிலுக்கு வரும் நெய், நெல், பழம், காய்கறி, பூமாலை மற்றும் அபிஷேகப் பொருட்களை அளக்கும் மற்றும் எண்ணும் பணியினாலும் எண்ணற்றோர் பலன் அடைந்தனர். நெல்லைக் குத்தவும், தரம் பிரிக்கவும் நூற்றுக்கணக்கானோர் தேவைப்பட்டனர். கோயில் நந்தவனங்களைப் பராமரிக்க, பூக்களைப் பறிக்க, மலர் மாலைகளைத் தொடுக்க ஒரு சிறு தொழில்கூடம்போல பலரும் செயல்பட்டனர். 

அதிகாலை, காலை, மதியம், மாலை, இரவு மற்றும் அர்த்த ஜாமம் என பல வேளை பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தமையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பலனடைந்தன. 

ஒவ்வொரு வேளை பூஜையின்போதும் கடவுளுக்குப் படைக்கப்படும் உணவு வகைகள் கோயிலுக்கு உள்ளே சமைக்கப்பட்டன. இத்துடன், இலையில் எத்தனை வகை காய், கூட்டு, வெற்றிலை, பாக்கு இடம்பெற வேண்டும் என்பதை தானம் வழங்கியவரே நிர்ணயித்தார். இவை அனைத்தும் சேர்ந்ததே ஒரு தளிகை எனப்படும். 

இப்படி ஒரே ஒரு வேளைக்காக ஆயிரக்கணக்கான தளிகைகள் தயாரிக்கப்பட்டதாக ரங்க கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. 

கடவுளுக்கான துணிகளை நெய்பவர்கள், ஆபரணங்களைச் செய்பவர்கள், ஆடையில் விலையுர்ந்த கற்களைப் பதிப்பவர்கள், துப்பரவாளர்கள் என பலர் தங்கள் பணிகளினால் பயன்பெற்று வந்தார்கள்.
கோயில் நிலங்களில் வேளாண்மை நடந்தது. 

தானங்களைப் பரிபாலனம் செய்பவர், கோயிலை அழகுபடுத்துபவர், கோலமிடுபவர், மேளதாளம் வாசிப்பவர், வாய்ப்பாட்டு வாசிப்பவர், நடனமாடுபவர் என தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பணியாற்றி பயன் பெற்றனர். 

கோயில்களின் நாற்புற வாசல்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் உள்ள பானைகளில் எந்நேரமும் தண்ணீர் நிரப்பி வைக்கவும், அருந்துவதற்கு எடுத்துக் கொடுக்கும் பணிகளிலும் பலர் அமர்த்தப்பட்டனர். 

உதாரணமாக, தஞ்சை பெரிய கோயிலை பேரரசன் ராஜராஜன் கட்டிய புதிதில் 900 பேரை பணி அமர்த்தியதாக கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. பணியாற்றியவர் களுக்கு என அரசு சார்பில் அளிக்கப்பட்ட குடியிருப்புகளின் விலாசம் மற்றும் ஊதிய விவரமும் அங்குள்ள கல்வெட்டுகளில் துல்லியமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. 

இவ்வளவு பெரிய அளவில் மக்களுக்கு வேலைவாய்ப்பினை தந்த வேறு ஓர் அமைப்பு அக்காலத்தில் இருந்திருக்குமா என்பது ஐயமே! 

தானமாக வரும் பணம், தங்கம் போன்றவற்றை கிராம சபைகளுக்கும், மக்களுக்கும் தேவையான காலங்களில் வட்டிக்குக் கடன் உதவி செய்து நவீன கால வங்கிகள்போல் செயல் பட்டன கோயில்கள். முக்கியமாக, இயற்கை சீற்றங்களின்போது, கிராமங்களின் மறுவாழ்வுக்காக கோயில் சொத்து பயன்பட்டது. 

மக்கள் கடவுளுக்கு அளித்த காணிக்கை அவர்களுக்கே பயன்பட்டது. இதற்கு ஆதாரமாக தஞ்சையின் ஆலங்குடியில் கிடைத்த சோழர் காலத்து கல்வெட்டுகளில் `பொதுமக்கள் கால தோஷம் காரணமாக கோயிலின் பண்டாரத்திலிருந்து எல்லா தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள் மொத்தம் 1011 கழஞ்சு தங்கம், 464 பலம் வெள்ளி கடனாக பெற்றுக் கொண்டனர்’ எனக் பொறிக்கப்பட்டுள்ளது.

கோயில்களின் பரந்த இடம் கல்வி நிலையங்களாக செயல்பட்டன. பாகூர், திருபுவனி, எண்ணாயிரம், திருமுக்கூடல், திருவாடுதுறை மற்றும் திருவற்றியூர் ஆகிய ஆறு இடங்களில் உயர் கல்விக்கூடங்கள் இருந்தது பற்றியும், அதன் மாணவர்கள், ஆசிரியர்கள், இவர்களது சம்பள விவரம் மற்றும் போதிக்கப்பட்ட பாட விவரங்கள் என அனைத்தும் அந்த ஆறு இடங்களில் உள்ள கோயில்களின் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 

கோயில்கள் விழாக்காலங் களில் கலைகளை வளர்க்கும் கூடங்களாகவும் செயல்பட்டன. அதே போல, போக்கற்ற வர்களுக்கும், யாத்ரிகர்களுக்கும் உணவும் உறைவிடமும் தரும் இடமாகவும் திகழ்ந்தன. தன் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்ட நிலையிலும் கோயில்கள் வாழ்வளித்துள்ளன. 

இந்நிலைக்கு ஆளான மக்கள் தம்மை கோயிலுக்கு விற்றுக்கொண்டு அடிமையாகிவிடும் வழக்கம் இருந்துள்ளது. 

இதில் கிடைக்கும் தொகையில் அம்மக்கள் தாம் பட்ட கடனை அடைத்துவிட்டு, வாழ்நாள் முழுவதும் கோயிலுக்குப் பணி செய்து கிடப்பார்கள். திருபுவனியின் கல்வெட்டுகளில் மூன்று தலைமுறைகளாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 உறுப் பினர்கள் தங்களை கோயிலுக்கு அடிமைகளாக விற்றுக்கொண்ட செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

தற்போது கடன் சுமையால் நடைபெறும் தற்கொலைகள் அக்காலத்தில் நடைபெறாமல் காத்துள்ளன கோயில்கள். 

கோயில் அமையப்பெற்ற ஊர் மக்கள் மட்டுமின்றி, அவ்வூரைச் சுற்றியிருந்த மக்களும் அந்தக் கோயிலால் பயன்பெற்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படாமலும் கோயில்கள் உதவின. 

இப்படிப் பன்முகப் பயனாக செயல்பட்டமை தான்… ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற பழமொழி ஏற்படக் காரணம்.

ஆலயங்கள் போற்றுவோம்!

நன்றி : அவள்விகடன் - 01.11.2016

Tuesday, October 18, 2016

PPF கணக்கை HDFC வங்கியில் தொடங்க


PPF கணக்கை HDFC வங்கியில் தொடங்க என்ன செய்ய வேண்டும்?

லாபம் அளித்தரும் பிபிஎப் கணக்கை  'எச்டிஎஃப்சி' வங்கியில் திறப்பது எப்படி..? 

ஐசிஐசிஐ வங்கிக்குப் போட்டியாக இரண்டாம் மிகப் பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கியும் இப்போது பிபிஎப் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. உங்கள் முதலீட்டுக்கு லாபத்தை அள்ள தயாராகுங்கள். 

 [IST] இந்தியாவில் மிகவும் பிரபலமான பிபிஎப் (PPF: Public Provident Fund) கணக்கைத் திறக்கும் வசதியை எச்டிஎஃப்சி வங்கி புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது. 

தனியார் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கி நீண்ட காலமாகவே தங்களது வாடிக்கையாளர்களுக்கு பிபிஎப் கணக்கு சேவை அளித்து வருகிறது. 

இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கிக்குப் போட்டியாக இரண்டாம் மிகப் பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கியும் இப்போது பிபிஎப் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிபிஎப் கணக்கு என்றால் என்ன? 

இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அதிக வட்டியுடன் வரி இல்லாமல் சிறந்த லாபத்தை அளிக்கும் பொதுமக்களுக்கான சேமிப்பு திட்டமே பிபிஎப் ஆகும்.

 பிபிஎப் கணக்கைத் திறக்க தேவையான ஆவனங்கள் எவை? 

அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், இரண்டு புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள எச்டிஎப்சி வங்கிக் கிளையை அணுகி பிபிஎப் கணக்கை திறப்பதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவற்றைச் செய்த பிறகு கணக்கு திறக்கப்பட்டு உங்கள் தனிநபர் வங்கி கணக்குடன் இணைக்கப்படும்.  

 பிபிஎப் கணக்கில் இணையதளம் மூலமாக பணத்தை எப்படி முதலீடு செய்வது..? 

பிபிஎப் கணக்கை உங்கள் தனிநபர் வங்கி கணக்குடன் இணைத்தன் மூலம் பணத்தை நேரடியாக நீங்களே முதலீடு செய்யலாம். தானாகவே உங்கள் கணக்கில் இருந்து தவனை தொகையைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்றால் இணையதள வங்கி சேவையில் இணைக்கப்பட்ட பிபிஎப் கணக்கில் உள்நுழைந்து ஆடோ டெபிட் தெரிவைத் தேர்வு செய்ய வேண்டும் அல்லது ஈசிஎஸ் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தும் முதலீட்டைத் தொடரலாம்.   

பிபிஎப் கணக்கு விவரங்கள்

 வருடத்திற்குக் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரையிலான தவணையுடன் முதலீட்டைத் தொடரலாம். பணத்தை அதிகபட்சமாக வருடத்திற்கு 12 தவணையில் செலுத்தலாம். அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தில் பணத்தை சேமிக்க இயலும். 

இத்திட்டத்தின் கீழ் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு 8 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். மேலும் இதன் மூலம் நீங்கள் பெறும் லாபத்திற்குப் பிரிவு 80சி-இன் கீழ் வரி ஏதும் விதிக்கப்படாது. 

ஒருவேளை, ஏதேனும் ஒரு வருடம் உங்களது கணக்கில் 500 ரூபாய் செலுத்தமுடியாமல் போனால் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி வரும்.   

கடன் வசதி கணக்கைத் துவங்கிய பிறகு மூன்றாவது நிதி ஆண்டு முதல் ஐந்தாம் நிதி ஆண்டின் இறுதி வரை கடன் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

ஒரு வேளை, நீங்கள் சேமித்து வந்துள்ள பணத்தை இடையில் எடுக்க வேண்டும் என்றால் கணக்கு காலாவதியான பிறகு 5 வருடத்திற்குப் பிறகு 50 சதவீத பணத்தை எடுக்க இயலும்.   

பிற வங்கிகள் அல்லது தபால் அலுவலகத்தில் உள்ள பிபிஎப் கணக்கை எப்படி எச்டிஎப்சி வங்கியிற்கு மாற்றுவது?

 தபால் அலுவலகத்தில் அல்லது பிற வங்கிகளில் நீங்கள் வைத்துள்ள பிபிஎப் கணக்கை எச்டிஎப்சி வங்கியில் நீங்கள் மாற்ற விரும்பினால் மாற்ற பிபிஎப் கணக்கு வைத்துள்ள உங்கள் வங்கியில் அல்லது தபால் அலுவலகத்தில் மாற்றச் செய்வதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கணக்கு புத்தகத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். 

இதனைத் தொடர்ந்து உங்கள் கணக்கு மூடப்பட்டு நீங்கள் விரும்பிய எச்டிஎப்சி வங்கி கிளைக்கு விவரங்கள் அனுப்பப்படும். பின்னர் அங்கு நீங்கள் உங்களது ஆவனங்களுடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளித்து கணக்கை மீண்டும் தொடரலாம்.       

Written by: Tamilarasu 

 நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் »  18.10.2016

Sunday, October 16, 2016

வாழ்க்கைத்துணையை நம்ப வேண்டும்


வாழ்க்கைத்துணையை நம்ப வேண்டும் - என்ன செய்ய வேண்டும்?

துணையை நம்பாததும் சித்ரவதையே:
41 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து!

புதுடில்லி:'கணவன், மனைவிக்குள் பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதை, புரிந்து கொள்ளும் குணம் போன்றவை இருக்க வேண்டும்; அவ்வாறு இல்லாததும் சித்ரவதையே' என, ராணுவ அதிகாரிக்கு, 41 ஆண்டுகளுக்குப் பின் விவாகரத்து வழங்கி, டில்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

துணை ராணுவப் படையான, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தொடர்ந்த வழக்கில், டில்லி ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு:

ஆண், பெண் இடையே, அனைத்து விஷயங்களிலும் மன ஒற்றுமை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. 

திருமணமான தம்பதி இடையே, பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதை அளிப்பது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் குணம் இருக்க வேண்டும்; அவ்வாறு இருந்தால் தான் திருமண வாழ்க்கை இனிக்கும்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு, 1975ல் திருமணம் நடந்துள்ளது. 

சி.ஆர்.பி.எப்., உயரதிகாரியான கணவன், ஜம்மு - காஷ்மீரில் பணியாற்றி உள்ளார். அவருக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்புள்ளதாக, சி.ஆர்.பி.எப்., தலைமைக்கு, மனைவி புகார் கொடுத்து உள்ளார்.

சரியாக விசாரிக்காமல், மனைவி அளித்த இந்த புகாரால், அவமானம், பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை கணவன் சந்திக்க நேர்ந்துள்ளது. 

இந்த புகாரால், உயர் அதிகாரிகள் மற்றும் தனக்கு கீழுள்ளவர்கள் இதுவரை அளித்து வந்த மரியாதை குறைந்து விட்டதாக கணவன் கூறியுள்ளார்.

இவ்வாறு பரஸ்பரம் நம்பிக்கையில்லாமல் சந்தேகப்படுவதும், அதனால் அவமானம் ஏற்படுவதும், ஒருவகையில் சித்ரவதையே. 

அதன்படி, இந்த வழக்கில், கீழ்க் கோர்ட் அளித்த விவாகரத்தை உறுதி செய்கிறோம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் – 16.10.2016

சிகிச்சையில் அலட்சியம்


சிகிச்சையில் அலட்சியம் - என்ன செய்ய வேண்டும்?

புதுடில்லி : கவனக்குறைவான சிகிச்சையால், மூளை சேதம் ஏற்பட்டு நோயாளி உயிரிழக்கக் காரணமான, சென்னையை சேர்ந்த, தனியார் மருத்துவமனை, 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தரும்படி, தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

மூளையில் சேதம் :
சென்னையை சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த, டாக்டர் எஸ்.ஜே.எஸ்.பால் என்பவருக்கு, செலுத்தப்பட்ட ஆக்சிஜன் அளவு சரிவர கண்காணிக்கப்படவில்லை என தெரிகிறது. 

ஆக்சிஜன் பற்றாக்குறையால், அவர் மூளையில் சேதம் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்தது. இதுதொடர்பாக, தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில், டாக்டர் பாலின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர். 

10 லட்சம் இழப்பீடு :
வழக்கை விசாரித்த நீதிபதி, வி.கே.ஜெயின் அளித்த தீர்ப்பு விபரம்: மருத்துவமனையில் உயிரிழந்த டாக்டர் பாலுக்கு, ஆக்சிஜன் சரியாக செலுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும், 'ஆக்சிமீட்டர்' தொடர்ச்சியாக பொருத்தப்பட்டிருந்ததை நிரூபிக்கும் ஆதாரத்தை மருத்துவமனை சமர்ப்பிக்கவில்லை. 

மருத்துவமனை அளித்த சிகிச்சையில், கவனக்குறைவு இருந்ததாக தெரிகிறது. 

சிகிச்சையின்போது இறந்த டாக்டர் பாலின் குடும்பத்தினருக்கு, இழப்பீடாக, 10 லட்சம் ரூபாயும், வழக்கு செலவு, 25 ஆயிரம் ரூபாயும், மருத்துவமனை வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் – 17.10.2016

வீட்டு கூட்டுக்கடன் பெற


வீட்டு கூட்டுக்கடன் பெற என்ன செய்ய வேண்டும்?

இன்றைய காலகட்டமானது வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு பொற்காலம். அதிக வரிச் சலுகைகள், குறைந்த வட்டி விகிதங்கள், கடன் மீது விலை குறைப்பு, தெளிவான விதிமுறைகள், வசீகரமான பரிசுகள் என எண்ணிலாச் சலுகைகளுடன் கிடைக்கிறது.

 நம்மில் அநேகம் பேர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வீடு வாங்க   முயற்சிப்போம். வீட்டுக்கு அலையோ அலையென்று அலைந்து கொண்டிருக்கும் போதே எந்த வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் கடன் வாங்கலாம் என்று ஒருவாறாக முடிவுசெய்து வைத்திருப்போம். 

நம் நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை ஒரு முறைதான் கட்டப்போகிறோம், எனவே அதில் அனைத்து சௌகரியங்களையும் இணைத்து மிக அழகாகக் கட்ட வேண்டும் என நாம் நினைப்பது இயல்பு. 

ஆனால் அது சாத்தியப்பட அதிக செலவாகும். அதனால் அதிக தொகைக்கு வீட்டுக்கடன் வாங்க வேண்டும். கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் அது கொஞ்சம் சுலபமாகும்.

அது சம்பந்தமாக என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம். கூட்டாகச் சேர்ந்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது அது நமக்கு பல நன்மைகள் கொண்டு வந்து தரும்.

கூட்டுக்கடன் தரும் நன்மைகள்
 அவற்றுள் முதலாவது மற்றும் முதன்மையானது அதிக கடன் தொகையைப் பெறலாம் என்பது. அதாவது அதிக அளவு கடன் தொகை தேவைப்பட்டால் கூட்டாக விண்ணப்பிக்கலாம். 

உதாரணமாக கணவன் மனைவி இருவருமே சேர்ந்து கூட்டாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது இருவருடைய மொத்த வருமானத்தின் அடிப்படையில் அதிக அளவு கடன் பெற முடியும். 

மனைவி வேலையில் இல்லாமலிருந்தால் அவருக்குக் கிடைக்கும் வட்டி அல்லது வாடகை அல்லது பிற வருமானங்களின் அடிப்படையில்கூட கூட்டாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

 இரண்டாவது  மற்றும் முக்கியமான விஷயம் வரி ஆதாயம்.

வருமானவரி சட்டம் பிரிவு 80C-யின் கீழ் ரூபாய் 1லட்சம் வரை வீட்டுக்கடனின் முதலுக்கு வருமான வரிச் சலுகை கிடைக்கும். அதாவது நீங்கள் ரூபாய் 1 லட்சம் அளவிற்கு வீட்டுக் கடனுக்கான முதலைத் திருப்பி செலுத்தும்பொழுது பொது வைப்பு நிதி, எல்.ஐ.சி. போன்ற வரி இல்லா முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டியதில்லை.

மேலும் வருமான வரிச்சட்டம் 24-இன் கீழ் உங்களுடைய வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு ரூபாய்1.5 லட்சம் வரை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே கூட்டாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ரூபாய் 2.5 லட்சம் வரை வரிச் சலுகைகள் கிடைக்கும். அதாவது உங்களுக்கு மொத்தமாக ரூபாய் 5 லட்சம் வரை வரியிலிருந்து விலக்கு கிடைக்கும்.

இணை கடன் வாங்குபவரும்,  இணை உரிமையாளரும்
கூட்டு வீட்டுக் கடன் என்பது ஒருவருக்கும் அதிகமானவர்கள் கடன் வாங்குவது ஆகும். அதனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் இணை கடன் வாங்குபவர் (co-borrower) மற்றும் இணை உரிமையாளர்(co- owner) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். 

இணை உரிமையாளர் என்பவர் நம்முடன் நம் சொத்தைப் பகிர்ந்துகொள்பவர். 

இணைக் கடன் வாங்கியவர் என்பவர் நம்முடன் கடனைப் பகிர்ந்து கொள்பவர். 

வீட்டுக் கடன் வாங்கும் போது, விதிகளின்படி, 6 பேர் இணைக் கடன் வாங்குபவர்களாகத் திகழலாம். பொதுவாக கணவன், மனைவி, மகன், தந்தை போன்றோர் இணைக் கடன் வாங்குபவராகத் திகழலாம்.

 உங்கள் தோழன், தோழி அல்லது உடன் வேலை செய்வோர் போன்றோருடன் இணைந்து வீட்டுக் கடன் வாங்க முடியாது. 

பொதுவாக வங்கிகள் இணை உரிமையாளர்களையே இணைக் கடன் வாங்குபவராக ஆக்கும்படி வலியுறுத்தும். சில சமயங்களில் சகோதரர்கள் இணை உரிமையாளர்களாக இல்லாமலேயே இணைக் கடன் வாங்குபவர்களாக இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

 கடன் காலம் எவ்வளவு?
 கூட்டு வீட்டுக் கடனின் இணைக் கடன் வாங்கியவர் மனைவி என்றால் கடன் காலம் என்பது 20 முதல் 25 வருடம் வரை நீடிக்கலாம். கூட்டு வீட்டுக் கடனின் இணைக் கடன் வாங்கியவர் தந்தை மகன் உறவு எனில் கடன் காலம் 10 ஆண்டுகளுக்குள் வரையறுக்கப்படுகிறது.

 கூட்டு வீட்டுக் கடன் தந்தையும் மகனும் வாங்குகின்றனர் பேமெண்ட் தந்தையின் வருமானத்தைச் சார்ந்தது என்றால், கடன் காலம் தந்தையின் ஓய்வு பெறும் வயதிற்குள்ளாக வரையறுக்கப்படுகிறது.

வீட்டுக் கடனை இருவராக எடுத்திருந்தாலும் ஈஎம்ஐ ஒரே ஒரு வங்கிக் கணக்கிலிருந்து தான் எடுக்கப்படும்.  அது ஜாயிண்ட் அக்கவுண்ட்டாகவும் இருக்கலாம் அல்லது தனி அக்கவுண்டாகவும் இருக்கலாம். 

கடன் வாங்குபவர்கள் எத்தனை முறை ஈஎம்ஐ அளிக்க வேண்டும் என்று தங்களுக்குள் பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம். 

கடன் பெறும்போது வங்கிகள் வங்கி ஸ்டேட்மெண்ட், சம்பளச் சான்றிதழ், கடந்த மூன்று வருடங்களாகத் தாக்கல் செய்த வருமான வரி விவரங்கள், வழக்கமாகக் கேட்கப்படும் அடையாளச்சான்றிதழ்கள், முகவரிச் சான்றிதழ்கள் ஆகியனவற்றைக் கேட்கும். 

இதன் பிறகு பல கட்ட சரிபார்த்தலுக்குப் பின்பே வங்கிகள் கடன் வழங்க அனுமதிக்கும். வயது, சொத்து, வீடு கட்டப்போகும் இடத்தின் மதிப்பு, கடனைத் திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே வங்கிகள் கடன் தொகையை முடிவு செய்யும்.

கூட்டுக் குடும்பத்தின் மூலமும் வீட்டுக் கடன் வாங்க இயலும். ஆனால் அதில் நிறைய வரையறைகள் உண்டு. வீட்டுக்கடன் வாங்க மார்ஜின் தொகைகடன் தொகையில் சுமார் 15 முதல் 20 சதவீதம்) வைத்திருக்க வேண்டும்.

இதன் பிறகுதான் கூட்டுக் குடும்பத்தின் பெயரில் வீடு வாங்குவதற்கான மீதித் தொகையை வீட்டுக் கடன் மூலமாகப் பெறலாம். சில சமயங்களில் கேரண்டாராக (guarantor) சிலரை வங்கிகள் இணைத்துக்கொள்வதும் உண்டு. 

இது போன்ற சந்தர்ப்பங்களில் கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்த மறுக்கிறார் எனில் இணைக் கடன் பெற்றவர் அதனைச் செலுத்த வேண்டிய கட்டாயப் பொறுப்பு உள்ளது என்று எச்சரிக்கப்படுவார். 

இருவரும் ஸ்டாம்ப் பேப்பர் மூலம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது நல்லது. 

வங்கிகள் தனது ஒப்புதல் கடிதத்திலேயே அனைவரின் பொறுப்பையும் தெளிவாக உணர்த்திவிடும்.

வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் யாவற்றையும் பங்கு போட்டுக் கொள்வதைப் போலவே வாழ்வின் உன்னத லட்சியமான சொந்த வீட்டை உரிமையாக்கிக் கொள்வதற்கு; இந்த கூட்டு வீட்டுக்கடன் பெரிதும் உதவுகிறது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 15.10.2016

எலிக்காய்ச்சல்


எலிக்காய்ச்சல் - என்ன செய்ய வேண்டும்?
கிலியை ஏற்படுத்தும் எலிக்காய்ச்சல்!
சாதாரணமாக வீட்டைச் சுற்றித் திரியும் எலியால் என்ன பிரச்னை என்று   நினைப்போம். ஆனால், அது எலிக்காய்ச்சல் என்ற கொடிய பாதிப்பை பரப்புகிறது என்றால் நம்பமுடிகிறதா?

மழைக்காலம் வந்தாலே கொசுவால் பரவும் டெங்கு,  மலேரியா தலைதூக்க ஆரம்பித்துவிடுகிறது. இதனுடன், தேங்கும் மழை நீரில் எலியின் கழிவு கலப்பதன் மூலம் எலிக்காய்ச்சல் ஏற்படுகிறது.

எலிக்காய்ச்சல்
தெருக்களில், சாக்கடைகளில் வசிக்கும் எலியின் சிறுநீரில் லெப்டோஸ்பைரா (Leptospira) என்ற திருகாணி போன்ற தோற்றம் கொண்ட பாக்டீரியா கிருமி இருக்கிறது. எலியின் சிறுநீரை மிதிக்கும்போது அல்லது எலியின் சிறுநீர் கலந்த மழைநீர், கழிவுநீரை மிதிக்கும்போது, எலி கடிப்பதன் மூலமாக இந்த பாக்டீரியா கிருமி மனித உடலுக்குள் நுழைகிறது. 

இந்தக் கிருமி எலியின் உடலில் மட்டும் வசிப்பது இல்லை, நாய், பூனை போன்ற விலங்குகள் மூலமாகவும் பரவலாம்.

உடலில் காயங்கள், புண்கள் உள்ள மனிதர்கள் இந்த நீரில் புழங்கும்போது, இந்தக் கிருமிகள் அவர்களது உடலுக்குள் நுழைகின்றன. ரத்தத்தின் மூலம் கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலத்தை அடைந்து அங்கு வளர்ச்சி அடைகின்றது. 

பின்னர், அது பாதிப்பை வெளிப்படுத்துகிறது.

அறிகுறிகள்

தொடர் காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, கண் எரிச்சல், உடல் வலி போன்றவை எலிக்காய்ச்சலின் முக்கிய அறிகுறி. இந்த அறிகுறிகள் யாருக்கு இருந்தாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

பரிசோதனைகள்

காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டவுடன், உடனடியாக மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். ரத்த மாதிரிகள் பிசிஆர், எலிசா, டார்க் ஃபீல்டு எக்ஸாமினேஷன் (PCR , ELISA, dark field examination) ஆகிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும். 

இந்தப் பரிசோதனைகளில் லெப்டோஸ்பைரா ஆன்டிபாடி மற்றும் ஆன்டிஜன்கள் இருந்தால், அது நுண்ணோக்கியில் தெரியும். இதைக் கொண்டு இந்தக் காய்ச்சலை உறுதிப்படுத்தலாம். சிலருக்கு, அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ப சிறுநீர்ப் பரிசோதனையும் செய்ய வேண்டி இருக்கும்.

பாதிப்புகள்

எலிக்காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை எடுக்காமல் விடும்போது, மஞ்சள் காமாலை, சிறுநீரகப் பாதிப்பு, கணையப் பாதிப்பு, பித்தப்பை பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். 

மேலும், நோய் முற்றும்போது விஷத்தன்மை உடலில் அதிகமாகி செப்டிக் ஷாக் (Septic shock) ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்பதால், உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

சிகிச்சைகள்

எலிக்காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உறுதி செய்யப்பட்ட எலிக்காய்ச்சலுக்கு, தகுந்த மருத்துவரின் ஆலோசனைப்படி பெனிசிலின் (penicillin) மருந்துடன் கூடிய ஊசியை 6 மணி நேர இடைவெளியில்  தரலாம். பெனிசிலின் ஒவ்வாத ஆட்களுக்கு டெட்ராசைக்கிளின் (tetracycline), டாக்ஸிசைக்கிளின் (doxycycline) மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தரலாம். 

உணவு

எலிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் காரம் இல்லாத, எண்ணெய் அதிகம் இல்லாத, நன்கு வேகவைத்த உணவுகளை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.
மனிதர்களுக்கு  எலிக்காய்ச்சல் வராமல் இருப்பதற்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஆனால் விலங்குகளுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. 

தக்க சமயத்தில் கண்டறிந்து, முறையான சிகிச்சை அளித்தால், ஒரு வாரத்தில் இந்தக் காய்ச்சல் குணமாக வாய்ப்பு உள்ளது. மேலும், செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவது, எலி உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டத்தை மட்டுப்படுத்துவது, மழைக்காலத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது போன்றவை மூலமாக எலிக்காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும்.

________________________________________________________________________________

எலிக்காய்ச்சலைத் தடுக்க, தவிர்க்க!

மழைக்காலங்களில் வெளியில் செல்லும்போது செருப்பு அல்லது ஷூ அணிந்துகொள்வது நல்லது. வெளியில் சென்று வந்ததும் கை, கால், முகம் ஆகியவற்றைச் சோப்பு போட்டு நன்கு கழுவிவிட வேண்டும். 

குறிப்பாக, கால்களில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில், காயங்கள் மூலமாக, இந்த வகை நோய்த் தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது. வீட்டில் எப்போதும் எலி ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, நம் வீட்டுக்கு அருகில் மழை நீர் சேராமல் பார்த்துக்கொள்வது ஆகியவை, நமக்கும் நம் குடும்பத்தாரின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

எலிக்காய்ச்சல் Vs உலகம்

உலக அளவில் ஒரு வருடத்துக்கு 10 லட்சம் பேருக்கும் மேல் எலிக்காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில், ஒரு லட்சம் பேருக்கு எலிக்காய்ச்சலின் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. இதில், ஒரு சதவிகிதத்தினர் இறந்து விடுகின்றனர்.

நன்றி : டாக்டர் விகடன் - 16.10.2016

வீடியோ கேம் வில்லன்


வீடியோ கேம் வில்லன் - என்ன செய்ய வேண்டும்?

உங்கள் குழந்தை எப்போது பார்த்தாலும், வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டே இருக்கிறார்களா? 

யார்கிட்டயும் அதிகம் பேசாமல் தனி உலகத்தில் இருப்பதைப் போல இருக்கிறார்களா?

அப்படியென்றால், அவர்களுக்கு வரக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். 

இதுபற்றி குழந்தைகள் நல மருத்துவர் பிரேம் குமார் தரும் தகவல்கள் 

வீடியோ கேம்ஸ்கள் பெரும்பாலும் மற்றவர்களை அடிப்பது, கீழே தள்ளுவது, சுடுவது போன்ற அடிப்படையிலே வடிவமைக்கபட்டு இருக்கிறன. 

இந்த மாதிரி விளையாட்டுகளை குழந்தைகள் தொடர்ந்து விளையாடும்போது, நிஜத்திலும் அதுதான் வெற்றி என்று மனநிலையில் மற்றவர்களை அடிப்பது போன்ற பண்புடைய மூர்க்கர்களாக வளர வாய்ப்பு உள்ளது.

கற்பனையான வெற்றிக்காக மணிக்கணக்கில் ஆடும் குழந்தைகள், அதீத உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். இது மனதின் சமநிலையாக வைத்திருக்க முடியாமல் உங்கள் குழந்தைக்கு செய்துவிடும். 

பிரச்னை வரும்போது அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டிய மூளையின் தன்மை, நேரெதிராக மாற்றப்பட்டு விரைவாக செயல்படும் தன்மைக்கு மாற்றப்படும். 

இதனால் குழந்தைகள் நிஜவாழ்க்கையிலும் பிரச்னைகளைக் கையாளத் தெரியாதவர்களாக மாறிவிடுவர்.

வழக்கமான விளையாட்டுகள் இருவருக்கு மேல் ஆடுவதாக இருக்கும். இதனால் ஒற்றுமையுடன் சேர்ந்து விளையாடுவது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுப்பது போன்ற பண்புகள் வளரும். 

ஆனால் வீடியோ கேம்ஸ் விளையாடும் போது, குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிக்கொள்ள வேண்டும், அடுத்தவர்களைக் காயப்படுத்தியாவது வெற்றியடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி விடும். 

மேலும், அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைபடும் குணமும் வளரக்கூடும்.

உடலைக் களைப்படையச் செய்யும் விளையாட்டுகளில், குழந்தைகளின் உடல் தசை வலுப்படும், ரத்தம் சுத்திகரிக்கப்படும். 

ஆனால் வீடியோ கேம் குழந்தையை ஒரே இடத்தில் உட்கார வைத்து, சோம்பல் தன்மையை அதிகரிக்கும்.

வீடியோ கேம்ஸ் அதிக நேரம் விளையாடும்போது, அந்த கேம்ஸில் வரும் காதாபாத்திரமாகவே குழந்தைகள் தங்களை மாறிவிடுகிறார்கள். 

இதனால் உங்கள் குழந்தை அவர்களின் தனித்துவத்தை இழந்து, தாங்கள் விளையாடும் விளையாட்டில் வரும் கதாபாத்திரங்கள் போன்று ஆடை அணிந்து கொள்வது அவர்களைப் போன்றே செயல்படுவது என்பதை என… தனக்கான ரசனை, விருப்பம் ஆகியவற்றைத் தொலைத்துவிடுகின்றனர்

உடல் சார்ந்த விளையாடுக்கள் விளையாடும்போது உங்கள் குழந்தையை ஏதேனும் ஒரு வகையில் யோசிக்க வைத்து, கற்பனை ஆற்றலை வளர்த்தெடுக்கும். 

ஆனால் எலக்ட்ரிக் கேம்ஸில் சிந்தனைக்கு இடமே இல்லாமல் மூளையை மழுங்கச் செய்துவிடும். இதனால் அவர்கள் புதிது புதிதாக யோசிக்கும் தன்மையை இழந்து விடுகின்றனர். 

மேலும். வேறு வேலைகள் செய்யும் போதும், படிக்கும்போதும்கூட அந்த விளையாட்டின் எண்ணங்கள் குழந்தைக்கு அடிக்கடி ஏற்படும். இதனால் மனதை ஒருமுகப் படுத்த முடியாமல் போய்விடுகின்றனர்.

விளையாடு என்பது உடலைக் களைப்படையச் செய்து, மனதை சிந்திக்கத் தூண்ட வேண்டும். அதை செய்யத் தடையாக இருக்கும் எந்த ஒன்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு எதிரானதே.

நன்றி : விகடன் செய்திகள் - 15.10.2016