குழந்தை - தத்து எடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருவதை அடிக்கடி செய்திகளின் வாயிலாக அறிகிறோம். ஆனால் அதற்கு, சட்டத்துக்குப் புறம்பான தத்தெடுத்தல்களும் முக்கிய காரணம் என்பது பலருக்கும் தெரியாது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பிறந்த பல மணிநேரங்களில் அல்லது சில நாட்களில் கடத்தப்பட்டு குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு விற்கப்படுகின்றன
.
குழந்தையைத் தத்தெடுப்பது எதற்காக?
குழந்தை இல்லாதவர்கள், குழந்தை இருந்தும் சில ஜோதிட காரணங்கள், சொத்துக்களை நிர்வகிக்க, ஈமச்சடங்குகள் செய்ய ஆண் வாரிசு இல்லாதவர்கள், வீடு மங்களகரமாக இருக்க பெண் குழந்தை வேண்டுவது போன்ற பல காரணங்களுக்காக குழந்தைகளைப் பலரும் தத்தெடுக்கிறார்கள்.
சில பெற்றோரே தங்கள் முழு மனதுடன் பணம் வாங்கியோ அல்லது வாங்காமலோ தங்கள் குழந்தையை மற்றவர்களுக்குத் தத்துக்கொடுக்கிறார்கள். ஆனால், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர்கள் தங்கள் பிள்ளை மீது உரிமை கோர நேரலாம். அப்போது வளர்ப்புப் பெற்றோருக்கு சிக்கல் ஏற்படும்.
இப்படி குழந்தை தத்தெடுத்தலில் உள்ள பாசப் பிரச்னைகள் மற்றும் சட்ட விரோதச் செயல்களுக்குத் தீர்வு காணும் விதமாக, குழந்தையைக் கொடுப்பவர், வாங்குபவர், இடைத்தரகர் என இந்த மூன்று தரப்புகளுக்கு உள்ளாகவே குழந்தையைத் தத்தெடுப்பது, தத்துக்கொடுப்பது தற்போது சட்டத்துக்குப் புறம்பான செயல்களாகப் கருதப்படுகின்றன.
சட்டத்துக்குப் புறம்பாக தத்தெடுக்க நினைப்பது ஏன்?
சட்டரீதியாக ஒரு குழந்தையைத் தத்தெடுக்க அதிக காலம் காத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள், நாம் தத்தெடுப்பது பலருக்கும் தெரிந்துவிடுமே என நினைப்பவர்கள், தவறான வழிகளில் குழந்தைகளைப் பயன்படுத்தும் நோக்கம் கொண்டவர்கள் எல்லாம், சட்டத்துக்குப் புறம்பான தத்தெடுத்தல்களை செய்கிறார்கள்.
எனவே, கடத்தப்படும், திருடப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும், 20 - 30 பேர் வரை காத்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் எந்தவித உடல்நலக் குறைபாடுகளும் இல்லாத குழந்தைகளைத்தான் தேர்வு செய்கிறார்கள். தவிர குழந்தைகளைத் தத்தெடுத்து பிச்சையெடுத்தல், சட்ட விரோத செயல்களிலும் சிலர் ஈடுபடுத்துவதும் அதிகரித்துவிட்டது.
சட்டரீதியாக குழந்தையைத் தத்தெடுப்பது எப்படி?
தங்கள் குழந்தையைத் தத்துக்கொடுக்க முன்வரும் பெற்றோரிடமோ அல்லது அரசு மற்றும் தனியார் காப்பகங்களில் வளரும் குழந்தைகளையோ சட்டப்படியான வழிமுறைகளில் தத்தெடுக்கலாம்.
அதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்ததும் அக்குழந்தை சம்பந்தப்பட்ட தம்பதியின் சொந்தக் குழந்தையாக சட்டப்படி உரிமை பெறும். அப்போதிலிருந்து அந்தத் தம்பதியிடம் அக்குழந்தைக்கு சொத்துரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளும் உள்ளது.
சட்டப்படி தத்தெடுக்க...
* முதலில் குழந்தையில்லாத தம்பதி முழு மனதோடு, நம் வாழ்க்கைத் துணைக்காக ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளலாம் எனவோ, அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக நாம் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளலாம் எனவோ, அல்லது ஏற்கனவே குழந்தை இருந்தும் மற்றொரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளலாம் எனவோ ஒருமித்த கருத்துடன் ஒரு குழந்தையை தத்தெடுக்கும் முடிவினை எடுக்க வேண்டும்.
* மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்கும் தம்பதி இருவரின் வயது கூட்டுத்தொகை 90-க்கு மிகாமலும், மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் தம்பதியரின் வயது கூட்டுத்தொகை 105-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். தம்பதியர் இருவரின் தனிப்பட்ட வயது 45-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* திருமணமாகி விவாகரத்தாகியோ, கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தாலோ, தம்பதியினரில் ராவது ஒருவர் மரணமடைந்து இருக்கும் பட்சத்திலோ, தனிமையில் இருக்கும் தங்கள் வாழ்க்கைக்குத் துணையாக ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் அவரது வயது 30-45 -க்குள் இருக்க வேண்டும்.
* தத்தெடுப்பவருக்கும், தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் இடையே 21 வயது இடைவெளி இருக்க வேண்டும். அத்தோடு தத்தெடுப்பவருக்கு அவரது குடும்ப நபர்களின் உதவியும் இருக்க வேண்டும்.
* பிறந்த கைக்குழந்தை முதல் 12 வயது வரையிலான சிறுவர்களை மட்டுமே தத்தெடுக்க முடியும். ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அவர்களின் ஒப்புதலுடன்தான் தத்துக்கொடுக்க முடியும். கணவனின் துணையின்றி வாழும் பெண், ஓர் ஆண் அல்லது பெண் குழந்தையை தத்தெடுக்கலாம். ஆனால் மனைவியின் துணையின்றி வாழும் ஆண், ஆண் குழந்தையை மட்டும்தான் தத்தெடுக்க முடியும்.
* தத்தெடுப்பவர்களின் வருமானம், குழந்தைகளை முறையாக வளர்க்கும் தகுதி, தத்தெடுப்பவர்களுக்கு பிற்காலத்தில் ஏதாவது உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் அக்குழந்தைக்கு மாற்று பாதுகாப்பு போன்ற பல்வேறு கூறுகளும் தத்தெடுக்கும் சமயத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
* தத்தெடுப்பவர் எந்தவித குற்றப்பின்னணியும் இல்லாதவர் என, தான் வசிக்கும் பகுதி சார்ந்த காவல்நிலையத்தில் சான்றிதழ் பெற வேண்டும். பின்னர் பதிவு செய்யப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசின் 'காரா (CARA - Central Adoption Resource Agency)' தத்தெடுப்பு மையத்தில் முறையாக பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து பதிவு செய்த தம்பதி அல்லது நபரை 'காரா' மையத்தினர் தனியாக கவுன்சிலிங் செய்து தேர்வு செய்யும் பட்சத்தில், ஒரு குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி கொடுப்பார்கள். அதன் பின்னர்தான், குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தங்களுக்கு பிடித்தமான ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்குத் தேர்வுசெய்ய முடியும்.
* தொடர்ந்து சைல்டு வெல்ஃபேர் கமிட்டி மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர்களால் விசாரணை செய்யப்பட்டு, காப்பகத்தில் வளரும் அக்குழந்தை தத்துக்கொடுக்கும் விபரம் நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிடப்படும். பின்னர் குறிப்பிட்ட நாள் வரையில் அந்த குழந்தையைச் சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை எனில், அக்குழந்தையை தத்தெடுக்க விண்ணப்பித்தவர்கள் தத்தெடுத்துக்கொள்ளலாம் என சைல்டு வெல்ஃபேர் கமிட்டி உறுப்பினர்கள் சான்று கொடுப்பார்கள்.
* பின்னர், குழந்தை தத்தெடுத்தல் தொடர்பான அனைத்து தகவல் மற்றும் வாக்குறுதியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, நீதிமன்றமும் சாதகமான உத்தரவு கொடுத்த பிறகுதான் குழந்தையைத் தத்தெடுக்க முடியும். எனவே, குழந்தை தத்தெடுப்புக்கு முறையாக 'காரா' மையத்தில் பதிவு செய்த நாளிலிருந்து 1-2 வருடங்கள் வரைகூட ஒரு குழந்தையைத் தத்தெடுக்க காத்திருக்க வேண்டி வரலாம். அதுவரை பொறுத்திருக்க வேண்டும். பின்னர் அக்குழந்தையை விண்ணப்பித்தவர்கள் பெற்றுக்கொள்வதோடு, அன்று முதல் அக்குழந்தை அவர்களுக்குச் சொந்தமாகிவிடும்.
* குழந்தைகளைத் தத்தெடுக்க நினைப்பவர்கள், தத்தெடுத்தல் குறித்த முழு விபரங்களைத் தெரிந்துகொண்ட பின்னர் சட்டப்படியாக தத்தெடுப்பதே சிறந்தது.
குழந்தை தத்தெடுப்பு குறித்த விபரங்களை அறிய மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கொண்டு தத்தெடுத்தல் குறித்த விபரங்களை www.cara.nic.in இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
நன்றி : விகடன் செய்திகள் - 21.10.2016