உலக சர்க்கரை நோய் தினம் - என்ன செய்ய வேண்டும்?
இன்சுலின் கண்டுபிடித்த சார்லஸ் பென்டின் பிறந்த நாளான இன்று, உலகம் முழுவதும் சர்க்கரை நோய் தினமாக கொண்டாடப்படுகிறது.
அவர் ௧௮௯௧ல் பிறந்தார். அவரது நுாற்றாண்டு தினத்தை முன்னிட்டு 1991-லிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இன்று உலக அளவில், 415 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2040ல் 642 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.நடுத்தர வயதினர், முதியோர்களில் பாதி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது.
இரண்டு பேரில் ஒருவர் தனக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பது தெரியாமலேயே வாழ்கிறார். உலக அளவில் மருத்துவத்திற்கு ஆகும் செலவில் 12 சதவீதம் சர்க்கரை நோய்க்கு செலவிடப்படுகிறது.
2016ல் சர்க்கரை நோய் தினத்தின் நோக்கம், உலக அளவில் சர்க்கரை நோயை கண்காணித்து அதனால் ஏற்படும் விளைவுகளை தடுக்க முயற்சி எடுப்பதே ஆகும். முக்கியமாக மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, கால்புண், கால் இழப்பு, கண்பார்வை இழப்பு, போன்ற விளைவுகளை தடுப்பதுதான்.ஆரம்ப நிலையிலேயே நோயின் பக்க விளைவுகளை கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.
பாதிப்பு தெரிந்தும்...
''முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்'', ''தும்பை விட்டு வாலை பிடிக்கக் கூடாது'', போன்ற பழமொழிகள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு பொருத்தமானதாகும்.
பெரும்பாலான நோயாளிகள் சர்க்கரை நோய் குறித்த விளைவுகள் தெரிந்தும், அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர்.
இதனால், அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுவதுடன், உயிரிழப்பும் ஏற்படுகிறது. மிக குறைந்த அளவிலான மக்களே மருத்துவரிடம் கலந்தாலோசித்து அவர்கள் தரும் மாத்திரைகளை உண்டு, உணவு முறைகளை கடைபிடிப்பதோடு, சர்க்கரை நோய் குறித்த அளவீடுகளை ஆவணங்களில் பதிவு செய்து பாராமரிக்கின்றனர். இந்த ஆவணப் பதிவு மிக அவசியம். கவனக் குறைவான நோயாளிகள் பல்வேறு தவறுகளை செய்கின்றனர்.
உணவு பழக்க வழக்கம்
சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம் நமது கட்டுப்பாடற்ற உணவு பழக்கம்தான். ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிட பழக வேண்டும். ருசியற்ற உணவுகளும் ஆரோக்கியமான உணவுகளே. அளவான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டு பழகி கொள்ள வேண்டும்.
பொதுவாக உணவு என்று எடுத்துக் கொண்டால், காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என மூன்று வேளைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். என்ன சாப்பிட்டோம் என நாம் நினைவில் வைத்துக் கொள்வதும் அவைகளைத்தான்.
ஆனால், அதற்கு இடைப்பட்ட காலத்தில் எடுத்துக்கொள்ளும் வடை, சமோசா போன்ற உணவுகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
கணக்கில் வராத பணம் என்றால் கறுப்பு பணம் என்பது போல், கணக்கில் வராத உணவினை 'கறுப்பு உணவு' எனக் கூறலாம். இந்த கறுப்பு உணவுதான், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டின்றி செல்வதற்கும், பெரும்பாலான மாரடைப்புக்கும் காரணமாகும்.
நம்மில் பலர் உண்ணும் உணவினை கணக்கிடுவதை கவுரவ குறைச்சலாக கருதுகின்றோம். ஆனால், அதனை அப்படி கருதுவது தவறு. கறுப்பு பணத்தால் நாட்டுக்கு கேடு. கறுப்பு உணவால் உடலுக்கு கேடு.வீட்டில் பெரியவர்கள் அறிவுரை கூறும்போது கண்டதையும் சாப்பிடாதே எனக் கூறுவதுண்டு. இந்த கண்டதையும் என்பதற்கு பொருள் கறுப்பு உணவே.
ஒரு உளுந்தவடை அல்லது மசால் வடையில் இரண்டு அல்லது மூன்று இட்லியில் உள்ள கலோரிகள் உள்ளது. எண்ணெய் கலந்த கொழுப்பு உணவுகளை உண்ணும்போது, உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகமாகிறது; உடல் பருமனாகிறது. இது சர்க்கரை நோய் மட்டுமின்றி மாரடைப்புக்கும் வழிவகுக்கிறது.
உடற்பயிற்சி
சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 5 கி.மீ., துாரம் நடந்தால் சர்க்கரை நோயை வராமல் பார்த்துக் கொள்ளலாம். நடப்பது என்பது மிதமான அல்லது சற்று அதிகமான வேகத்துடன் இருக்க வேண்டும். இருதயத்தின் வேலைத்திறனை பொருத்து நடக்கலாம். நடை பயிற்சியால் பல நன்மைகள் உள்ளன. நமது கணையம் சுரக்கும் இன்சுலினின் வேலைத்திறனை கூட்டுகிறது. உடல் எடையை குறைக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. உடல் தசை நார்களை பலப்படுத்துகிறது.
மழை காலத்தில் வீட்டிற்குள் நடக்கலாம். கணவனும் மனைவியும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் சர்க்கரை நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு தோள்பட்டை வலி வருவதற்கு காரணம் அவர்கள் தங்கள் தலைக்கு மேல் கைகளை துாக்கும் பயிற்சிகளை செய்யாததுதான். இதனால், தோள்பட்டை தசை இறுகி கடினமாகிறது. பின்னர் தீராத வலியை ஏற்படுத்துகிறது. எனவே, தசைகளை பலப்படுத்தும் 'ஸ்டிரெச்' வகை உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
கால்புண் அபாயம்
சர்க்கரை நோய் ஏற்படுத்தும் நரம்பு பாதிப்பால் சர்க்கரை நோயாளிகள் கால்களில் தொடு, அதிர்வு உணர்ச்சி குறைந்து காணப்படுகின்றனர். அதனால், அவர்களுக்கு கால்புண் வரும் வாய்ப்பு அதிகம்.
வலியில்லாமல் மாரடைப்பு வருவது போல், வலியில்லாமல் கால்புண் நோய் வருகிறது. இதனால், கால்புண்ணை பெரும்பாலானோர் கவனிப்பதில்லை.புண்ணுடன் காலணி இல்லாமல் நடந்து, அதனை குணப்படுத்த முடியாத அளவிற்கு பெரிதாக்கி கால்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கால்களில் முள் குத்தியோ, கொதிக்கும் தரையில் காலணியின்றி நடத்தல் போன்ற காரணங்களால் கால்புண் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஒரே வழி, கால்களை முகத்தை பராமரிப்பதை போல பராமரிப்பதுதான். இயக்கம்தான் வாழ்வு. இயக்கமற்ற வாழ்வு செடி, கொடிகளின் நிலையை விட மோசமானது.
டாக்டர். ஜெ. சங்குமணி
சர்க்கரை நோய் நிபுணர்,
மதுரை sangudr@yahoo.co.in
நன்றி : தினமலர் நாளிதழ் - 14.11.2016