disalbe Right click

Sunday, November 13, 2016

சர்க்கரை நோய்


உலக சர்க்கரை நோய் தினம் - என்ன செய்ய வேண்டும்?

இன்சுலின் கண்டுபிடித்த சார்லஸ் பென்டின் பிறந்த நாளான இன்று, உலகம் முழுவதும் சர்க்கரை நோய் தினமாக கொண்டாடப்படுகிறது. 

அவர் ௧௮௯௧ல் பிறந்தார். அவரது நுாற்றாண்டு தினத்தை முன்னிட்டு 1991-லிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இன்று உலக அளவில், 415 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2040ல் 642 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.நடுத்தர வயதினர், முதியோர்களில் பாதி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. 

இரண்டு பேரில் ஒருவர் தனக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பது தெரியாமலேயே வாழ்கிறார். உலக அளவில் மருத்துவத்திற்கு ஆகும் செலவில் 12 சதவீதம் சர்க்கரை நோய்க்கு செலவிடப்படுகிறது.

2016ல் சர்க்கரை நோய் தினத்தின் நோக்கம், உலக அளவில் சர்க்கரை நோயை கண்காணித்து அதனால் ஏற்படும் விளைவுகளை தடுக்க முயற்சி எடுப்பதே ஆகும். முக்கியமாக மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, கால்புண், கால் இழப்பு, கண்பார்வை இழப்பு, போன்ற விளைவுகளை தடுப்பதுதான்.ஆரம்ப நிலையிலேயே நோயின் பக்க விளைவுகளை கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.

பாதிப்பு தெரிந்தும்... 

''முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்'', ''தும்பை விட்டு வாலை பிடிக்கக் கூடாது'', போன்ற பழமொழிகள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு பொருத்தமானதாகும். 

பெரும்பாலான நோயாளிகள் சர்க்கரை நோய் குறித்த விளைவுகள் தெரிந்தும், அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர்.

இதனால், அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுவதுடன், உயிரிழப்பும் ஏற்படுகிறது. மிக குறைந்த அளவிலான மக்களே மருத்துவரிடம் கலந்தாலோசித்து அவர்கள் தரும் மாத்திரைகளை உண்டு, உணவு முறைகளை கடைபிடிப்பதோடு, சர்க்கரை நோய் குறித்த அளவீடுகளை ஆவணங்களில் பதிவு செய்து பாராமரிக்கின்றனர். இந்த ஆவணப் பதிவு மிக அவசியம். கவனக் குறைவான நோயாளிகள் பல்வேறு தவறுகளை செய்கின்றனர்.

உணவு பழக்க வழக்கம் 

சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம் நமது கட்டுப்பாடற்ற உணவு பழக்கம்தான். ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிட பழக வேண்டும். ருசியற்ற உணவுகளும் ஆரோக்கியமான உணவுகளே. அளவான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டு பழகி கொள்ள வேண்டும்.

பொதுவாக உணவு என்று எடுத்துக் கொண்டால், காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என மூன்று வேளைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். என்ன சாப்பிட்டோம் என நாம் நினைவில் வைத்துக் கொள்வதும் அவைகளைத்தான். 

ஆனால், அதற்கு இடைப்பட்ட காலத்தில் எடுத்துக்கொள்ளும் வடை, சமோசா போன்ற உணவுகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
கணக்கில் வராத பணம் என்றால் கறுப்பு பணம் என்பது போல், கணக்கில் வராத உணவினை 'கறுப்பு உணவு' எனக் கூறலாம். இந்த கறுப்பு உணவுதான், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டின்றி செல்வதற்கும், பெரும்பாலான மாரடைப்புக்கும் காரணமாகும்.

நம்மில் பலர் உண்ணும் உணவினை கணக்கிடுவதை கவுரவ குறைச்சலாக கருதுகின்றோம். ஆனால், அதனை அப்படி கருதுவது தவறு. கறுப்பு பணத்தால் நாட்டுக்கு கேடு. கறுப்பு உணவால் உடலுக்கு கேடு.வீட்டில் பெரியவர்கள் அறிவுரை கூறும்போது கண்டதையும் சாப்பிடாதே எனக் கூறுவதுண்டு. இந்த கண்டதையும் என்பதற்கு பொருள் கறுப்பு உணவே.

ஒரு உளுந்தவடை அல்லது மசால் வடையில் இரண்டு அல்லது மூன்று இட்லியில் உள்ள கலோரிகள் உள்ளது. எண்ணெய் கலந்த கொழுப்பு உணவுகளை உண்ணும்போது, உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகமாகிறது; உடல் பருமனாகிறது. இது சர்க்கரை நோய் மட்டுமின்றி மாரடைப்புக்கும் வழிவகுக்கிறது.

உடற்பயிற்சி 

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 5 கி.மீ., துாரம் நடந்தால் சர்க்கரை நோயை வராமல் பார்த்துக் கொள்ளலாம். நடப்பது என்பது மிதமான அல்லது சற்று அதிகமான வேகத்துடன் இருக்க வேண்டும். இருதயத்தின் வேலைத்திறனை பொருத்து நடக்கலாம். நடை பயிற்சியால் பல நன்மைகள் உள்ளன. நமது கணையம் சுரக்கும் இன்சுலினின் வேலைத்திறனை கூட்டுகிறது. உடல் எடையை குறைக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. உடல் தசை நார்களை பலப்படுத்துகிறது.

மழை காலத்தில் வீட்டிற்குள் நடக்கலாம். கணவனும் மனைவியும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் சர்க்கரை நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு தோள்பட்டை வலி வருவதற்கு காரணம் அவர்கள் தங்கள் தலைக்கு மேல் கைகளை துாக்கும் பயிற்சிகளை செய்யாததுதான். இதனால், தோள்பட்டை தசை இறுகி கடினமாகிறது. பின்னர் தீராத வலியை ஏற்படுத்துகிறது. எனவே, தசைகளை பலப்படுத்தும் 'ஸ்டிரெச்' வகை உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

கால்புண் அபாயம் 

சர்க்கரை நோய் ஏற்படுத்தும் நரம்பு பாதிப்பால் சர்க்கரை நோயாளிகள் கால்களில் தொடு, அதிர்வு உணர்ச்சி குறைந்து காணப்படுகின்றனர். அதனால், அவர்களுக்கு கால்புண் வரும் வாய்ப்பு அதிகம். 

வலியில்லாமல் மாரடைப்பு வருவது போல், வலியில்லாமல் கால்புண் நோய் வருகிறது. இதனால், கால்புண்ணை பெரும்பாலானோர் கவனிப்பதில்லை.புண்ணுடன் காலணி இல்லாமல் நடந்து, அதனை குணப்படுத்த முடியாத அளவிற்கு பெரிதாக்கி கால்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

கால்களில் முள் குத்தியோ, கொதிக்கும் தரையில் காலணியின்றி நடத்தல் போன்ற காரணங்களால் கால்புண் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஒரே வழி, கால்களை முகத்தை பராமரிப்பதை போல பராமரிப்பதுதான். இயக்கம்தான் வாழ்வு. இயக்கமற்ற வாழ்வு செடி, கொடிகளின் நிலையை விட மோசமானது. 

டாக்டர். ஜெ. சங்குமணி
சர்க்கரை நோய் நிபுணர், 
மதுரை sangudr@yahoo.co.in

நன்றி : தினமலர் நாளிதழ் - 14.11.2016


Saturday, November 12, 2016

மழைக் காலத்தில்


மழைக் காலத்தில் ..... என்ன செய்ய வேண்டும்?

கடந்த வருடத்தைப் போல் இந்த வருடமும் பருவ மழை காலம் கடந்து பெய்யத் தொடங்கியிருக்கிறது. உச்சபட்ச வெயிலை இந்த வருடக் கோடைக் காலம் நம் மீது உமிழ்ந்து விடைபெற்றுள்ளது. இப்போது அதற்கு இயற்கையே பரிகாரம் செய்வதுபோல் இதமான பொழுதை நமக்கு வழங்குகிறது. மழை இல்லை என்றாலும் இள வெயில் மனதையும் உடலையும் புத்துணர்வு கொள்ளச் செய்கிறது.
சாலைகளில் புது வெள்ளம் ஓடுவதைப் பார்க்கும்போது மனதுக்குள் சந்தோஷம். இது ஒரு பக்கம் இருந்தாலும் சாலைகளின் தரத்தை, நம் வீட்டுக் கட்டுமானத்தின் உறுதியைச் சோதனை செய்ய வரும் அதிகாரி போன்றது மழை. மழைக் காலத்தில் தரமில்லாத சாலைகள் பெயர்ந்து போய்விடும். அதுபோல நம் வீட்டுக் கட்டுமானத்தில் வெளித் தெரியாத அளவில் இருந்த விரிசல் மழைக் காலத்தில்தான் தெரியவரும். மழைக் காலங்களில் முக்கியமாக நம் வீட்டுக் கட்டுமானத்தில் உள்ள குறைகளைக் கவனிக்க வேண்டும். முற்றத்தில் மழை நீர் செல்வதற்கான வழிமுறை உள்ளதா எனச் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் முற்றத்தில் நீர் தேங்கினால் பலவிதமான கிருமிகள் உற்பத்தியாகி நோய் பரப்பக்கூடும்.
அதனால் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தேங்கியிருந்தால் உடனடியாக அதை அப்புறப்படுத்த வேண்டும். வீட்டுக் கட்டுமானத்தில் விரிசல் இருந்தால் அதை உடனடியாகப் பார்த்துச் சரிசெய்ய வேண்டும். மொட்டை மாடியில் மழை நீர் வெளியேறும் துளைகளில் அடைப்பு இருந்தால் நீக்க வேண்டும்.
பொதுவாக மழைக் காலங்களில் நம் வீட்டில் உள்ள மரப் பொருள்களில் பூச்சிகள் மற்றும் செல்லரிப்பு ஆகியவை ஏற்படக்கூடும். அதனால் மரப் பொருள்களைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும்.
இம்மாதிரியான பாதிப்புகளைக் கிராம்பு அல்லது கற்பூர வில்லைகள் கொண்டு நீக்கலாம். பயன்படுத்தாத மரப் பொருள்களை பிளாஸ்டிக் உறைகொண்டு மூடினால் இதுபோன்ற பாதிப்புகள் வராமல் இருக்கும். மழைக் காலங்களில் மரச் சாமன்களைச் சுத்தம் செய்வது அவசியம். மேஜை, நாற்காலிகள் போன்ற மரப் பொருள்களுக்கு உறை இடுவது அவசியம். மழைக் காலத்தில் துணிவைக்கும் அலமாரிகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். ஈரப்பதத்துடன் இருந்தால் துணிகளில் பூஞ்சைகள் படிய வாய்ப்பிருக்கிறது. மழைக் காலத்தில் துணிகளை உலர்த்துவது சிரமமான காரியம்.
சரியாக உலராத துணிகளை அலமாரிகள் உள்ளே மடித்துவைப்பதால் துர்நாற்றம் வரும். இதைத் தவிர்க்க ரசக் கற்பூரங்களைப் போட்டு வைக்கலாம்.
துணிகளை வெளியில் காய வைக்க முடியவில்லை என்றால் முடிந்தளவு மின்விசிறியிலாவது உலர வையுங்கள். மழைக் காலங்களில் மின்சாதனப் பொருள்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். சுவிட்ச் போர்டுகளைத் தொடும்போது கவனமாக இருக்க வேண்டும். வீட்டு மின் சாதனங்களையும் கவனமாகக் கையாள வேண்டும். தண்ணீர் இறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

- மித்ரன்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 05.11.2016

பதிவுத்துறை வழங்கும் இ சேவைகள்


பதிவுத்துறை வழங்கும் இ சேவைகள் 
பத்திரப் பதிவுத் துறையின் இ-சேவைகள் என்ன?
தமிழ்நாடு பத்திர பதிவுத் துறையில் பொது உபயோகத்திற்காகப் பல ஆன்லைன் சேவைகள் உள்ளன. சொத்து வழிமுறை மதிப்புகள், வில்லங்க பதிவுகள், முத்திரை தாளுக்கான ஆன்லைன் கட்டணம், பத்திர முன்பதிவு போன்ற பல அம்சங்கள் சேவைகளாக வழங்கப்படுகின்றன.
ஆன்லைன் வழிகாட்டு மதிப்பு
உங்கள் பகுதியின் வழிகாடு மதிப்பை www.tnreginet.net என்ற இணையத்தில் பார்க்க முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இணையத்தில் கைடுலைன் தேடுதல் பகுதிக்குச் சென்று தெரு அல்லது சர்வே எண், மண்டலம் (9 மண்டலங்கள் உள்ளன), சார் பதிவாளர் அலுவலகம், கிராமம், சர்வே எண் அல்லது தெரு பெயர் பூர்த்தி செய்து விண்ணப்பித்தால் போதுமானது.
மேலும் சொத்தின் நில வகைப்பாடுடன் அந்த சொத்தின் இதர விவரங்கள் குடியிருப்பு நிலம், வணிக நிலம், விவசாய நிலம், அல்லது புறம்போக்கு நிலம் போன்ற அம்சங்கள் குறிப்பிடவும் வேண்டும். இந்த விவரங்களைச் சரியாக நிரப்பினால் வழிகாட்டு மதிப்பை தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைன் வில்லங்கச் சான்றிதழ்
இந்தியாவில் முதன் முதலில் ஆந்திரபிரதேசத்தில் அனைத்து சொத்துக்களின் வில்லங்கம் சரிபார்க்கும் முறை 2012-ல் ஆன்லைனில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மகாராஷ்ட்ரத்தில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இணையத்தில் வில்லங்க சான்றிதழ் சரிபார்க்கும் நடைமுறை அமலில் உள்ளது. இந்தச் சேவையை இந்தியாவில் பின்பற்றும் 3-வது மாநிலம் தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சொத்துகளின் வில்லங்கங்களை இணையத்தில் சரிபார்க்கும் முடியும். பத்திர பதிவுத் துறையின் இணையதளத்தில் சென்று வில்லங்கம் சரிபார்க்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். பிறகு வில்லங்கம் அல்லது பத்திரப்பதிவை தேர்வு செய்ய வேண்டும்
வில்லங்கத்தைத் தேர்வு செய்தால் சொத்தின் மண்டலம், மாவட்டம், சார் பதிவாளர் அலுவலகம், கிராமம் மற்றும் தேர்வு செய்யும் ஆண்டுகள், சர்வே எண், உட்பிரிவு போன்ற விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். தற்போது 1987-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் அனைத்து சார் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்த விவரங்கள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம். அனைத்து சொத்தின் விவரங்களையும் இணையத்தில் சரிபார்க்க முடியும். பவர் பத்திரம் (2010-க்கு முன்) மற்றும் உயில் பத்திரங்களின் தகவல்களை இணையத்தில் பார்க்க இயலாது. ஒரு வேளை பத்திர எண் மூலம் தேர்வு செய்யுமேயானால் குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவு எண், பதிவு செய்த ஆண்டு ஆகியவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பத்திர பதிவு கட்டணங்கள் செலுத்தும் முறை
பத்திர பதிவுத் துறை இணையதளத்தில் இச்சேவையைப் பெற முதலில் பதிவு செய்ய வேண்டும். இச்சேசையைப் பெற அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிட வேண்டும். இச்சேவை பாரத ஸ்டேட் பாங்க், கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பாங்க ஆப் பரோடா, யூனியன் பாங்க ஆப் இந்தியா போன்ற குறிப்பிட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
பத்திரப் பதிவு முன்பதிவு
ஒருவர் ஒரு மாதம் முன்பே குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு செய்ய விரும்பினால் தமிழ்நாட்டில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். இச்சேவை தமிழ்நாடு தவிர ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, கேரளாவிலும் அமலில் உள்ளது.
கட்டுரையாளர்: திரு ஷ்யாம் சுந்தர்
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 12.11.2016

Friday, November 11, 2016

கேன்சல் செய்யாத கிரடிட் கார்டுகள்


கேன்சல் செய்யாத கிரடிட் கார்டுகள் - என்ன செய்ய வேண்டும்?

‘‘ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரெடிட் கார்டு வைத்திருக்காதவர்களே இல்லை. இன்றைக்கு கிரெடிட் கார்டு பயன் படுத்துகிறவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. 

காரணம், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தேவை இல்லாமல் அதிக செலவு செய்து கையைக் கடித்துக்கொண்டதுதான். 

இந்தக் கசப்பான அனுபவத்துக்குப்பின் பலரும் கிரெடிட் கார்டை தூக்கி எறிந்துவிட்டனர். 

ஆனால், இப்படி செய்வது கூடவே கூடாது. அதை முறைப்படி கேன்சல் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் எதிர்காலத்தில் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்கிறார்கள் அனுபவசாலிகள்.

கிரெடிட் கார்டினை முறையாக கேன்சல் செய்யாமல்விட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து திஷா நிதி ஆலோசனை மையத்தின் முதன்மை ஆலோசகர் எஸ்.கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். 

அவர் கொடுத்த விரிவான விளக்கம் இங்கே...
“நான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை நிறுத்தி பல மாதங்கள் ஆகிறது. ஆனால், வங்கியில் இருந்து பணம் செலுத்தச் சொல்லி தபால் மட்டும் வந்துகொண்டே இருக்கிறது என்று பலபேர் எங்களது ஆலோசனை மையத்தை அணுகி சொல்கிறார்கள். 

இவர்கள் இப்படி ஒரு பிரச்னையைச் சந்திக்கக்  காரணம், கிரெடிட் கார்டுகளை முறையாக கேன்சல் செய்யாமல் விட்டதுதான்.

 கேன்சல் செய்யாததால் ஏற்பட்ட விபரீதம்!

ஒருநாள் கணேசன் என்பவர் எங்கள் மையத்தை தேடி வந்தார். இவர் வேலை செய்த நிறுவனம், வேலை விஷயமாக இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கிறது. ஓராண்டு அங்கேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதால், இங்கே பயன்படுத்திவந்த தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு ஒன்றை அலட்சியமாகத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போய்விட்டார்.  

அவர் தூக்கியெறிந்த கிரெடிட் கார்டை யாரோ ஒருவர் பயன்படுத்த  ஆரம்பித்திருக்கிறார்.  கணேசன்  அமெரிக்காவில் இருந்ததால், இந்த விஷயம் அவருக்கு தெரியவே இல்லை.

ஓராண்டு கழித்து நாடு திரும்பியபோது தான் அவர் கார்டினை யாரோ பயன் படுத்தியதும், அதற்கு அவர் அசலும் வட்டியுமாக பல ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில்தான் மிகுந்த மன உளைச் சலுடன் எங்களைச் சந்தித்தார் அவர்.

 கிரெடிட் கார்டை  முறையாக கேன்சல் செய்யாமல் விட்டதால் ஏற்பட்ட வினை இது என்று அவருக்குப்  புரியவைத்தோம். அந்தக் கடனை சுமூகமாக அடைக்க வங்கியோடு பேசவும், அந்த கார்டினை முறைப்படி கேன்சல் செய்யவும் நாங்கள் அவருக்கு உதவினோம்.

 நட்பால் வந்த நஷ்டம்!

ஸ்ரீதரன் என்பவர் தான் பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டை கேன்சல் செய்யாமல்,  தனது நண்பரிடம் தந்திருக் கிறார். அதை அவர் தனது வண்டியின் சாவிக்குக் கீ-செயினாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார். ஒருசமயம்  வண்டியின் சாவியுடன், கிரெடிட் கார்டு தொலைந்து போக வண்டிக்கு புதிய சாவியை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். தரனும் தன் நண்பருக்குத் தந்த கிரெடிட் கார்டினை சுத்தமாக மறந்து விட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு தனது கிரெடிட் கார்டை யாரோ பயன்படுத்தி இருப்பதும், அதிலிருந்து குறிப்பிட்ட தொகைக்கு ஷாப்பிங் செய்திருப்பதும் ஸ்ரீதரனின் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக வந்தது.

 அதன்பிறகே தன் தவறை உணர்ந்தவர் நண்பருடன் வங்கிக்குச் சென்று நடந்ததை விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்கிறார். வேறு வழியில்லாததால், வங்கிக்குச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தி, அதை கேன்சல் செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.

 எப்படி கேன்சல் செய்வது?
கிரெடிட் கார்டினை இனி பயன்படுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் அஜாக்கிரதையாக அதை விட்டுவைக்காமல், கேன்சல் செய்துவிடுவதே நல்லது. 

இதற்கு, கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியை அணுகி தனது முடிவை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதனுடன் தான் அதுவரை பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டை இரண்டு துண்டாக உடைத்து அவர்களிடமே கொடுத்துவிட்டு, அதற்குண்டான உறுதிக் கடிதத்தை  வாங்கிக்கொள்ள வேண்டும்.

அல்லது கிரெடிட் கார்டு ரத்து செய்யும் விவரத்தை கடிதம் மூலமாகவோ  போன் மூலமாகவோ தெரிவித்துவிட்டு, துண்டிக்கப்பட்ட கிரெடிட் கார்டை கூரியர் மூலம் வங்கிக்கு அணுப்பலாம். 

எனினும், இப்படி செய்வதைவிட வங்கிக்கு நேரடியாகச் சென்று கிரெடிட் கார்டினை கேன்சல் செய்வதே சிறந்தது’’ என்றார் கோபாலகிருஷ்ணன்.

கிரெடிட் கார்டு வேண்டாம் என்கிறவர்கள் முறையாக அதை கேன்சல் செய்துவிடுவதே நல்லது!

செ.கார்த்திகேயன்

நன்றி நாணயம் விகடன் - 13.11.2016

சொந்த வீடு வாங்குவது சுலபம்


சொந்த வீடு வாங்குவது சுலபந்தான் - என்ன செய்ய வேண்டும்?

நடுத்தர வருமானப் பிரிவினரின் வாழ்நாள் கனவாக இருப்பது சொந்த வீடு. ஆனால், வீடு வாங்குவதற்கான முழுத் தொகையையும் ஒருவரால் மொத்தமாகப் புரட்டுவது என்பது கஷ்டமான காரியமாக இருக்கிறது. வேறு என்னதான் செய்வது..? 

கவலையேபடத்தேவையில்லை. இருக்கவே இருக்கிறது இஎம்ஐ.

பெரிய கனவுகளை எல்லாம் மாதத் தவணை திட்டங்கள் மூலம்தான் எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். சிறிது சிறிதாக பணம் சேர்த்து வீடு கட்டலாம் அல்லது வாங்கலாம் என்றாலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மிரட்டுவதாக இருக்கிறது. வீட்டு வாடகையும் அதிகமாக இருக்கிறது.

    அப்படியானால் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க  இஎம்ஐ-தானே ஒரே வழி.

 நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ள ஒரு சின்ன உதாரணம்…

சென்னை கூடுவாஞ்சேரியில்  600 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு ரூ.25 லட்சத்துக்கு கிடைக்கிறது. மாதச் சம்பளம் ரூ.40,000 வாங்கும் ஒருவரால் எப்படி இவ்வளவு தொகையைப் புரட்டி அந்த வீட்டை சொந்தமாக்கி கொள்ள முடியும். 

வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்குவதுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே சுலப வழி. ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டை, கையில் இருக்கும் சேமிப்பு ரூ.5 லட்சம் போக, மீதி ரூ.20 லட்சத்துக்கு 25 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் வாங்கினால் வட்டி விகிதம் 10% என்கிறபோது, மாதத் தவணை18,200 ரூபாய்தான். 

ரூ.40,000 சம்பளம் வாங்கும் ஒருவரால் இந்தத் தொகையைக் கட்டுவது ஒன்றும் கஷ்டமில்லை. 

வாடகை கொடுக்கும் தொகையைவிட கொஞ்சம்தான் அதிகம். சொத்தும் சொந்தமாகும்; வாடகை வீட்டு நச்சரிப்புகளில் இருந்தும் விடுதலை. 
அதனால், உங்கள் கனவுகளின் பின்னால் ஓடாதீர்கள். அவற்றை நனவாக்க இஎம்ஐ செலுத்துங்கள். கொஞ்சம் யோசனை செய்தால் சொந்த வீடு வாங்குவது சுலபம்தான்.

நன்றி : நாணயம்விகடன் - 13.11.2016

Wednesday, November 9, 2016

ரூ.500 & ரூ.1000 சந்தேகங்கள்-பதில்கள்


ரூ500 & ரூ.1000 மாற்றுவது பற்றிய சந்தேகங்கள், பதில்கள்
என்ன செய்ய வேண்டும்? 
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவது எப்படி?
- பதற்றம் தணிக்க ரிசர்வ் வங்கியின் 20 வழிகாட்டுதல்கள்
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உதவி மையம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.

பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி தனது www.rbi.org.in இணையதளத்தில் இது குறித்து பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் சந்தேங்களுக்கு / கேள்விகளுக்கு விளக்கும் அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை அலுவகலத்தில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பின்வரும் தொடர்பு எண்களை அணுகலாம்: 044 25381390/ 25381392 என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு அளித்துள்ள விளக்கம்:

1. பழைய நோட்டுகளை மாற்றினால் முழுத்தொகையும் கிடைக்குமா?

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள்/ தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் கொடுத்து அதற்கான முழு மதிப்பிலான தொகையையும் பெறலாம்.

2 .ரொக்கமாக எவ்வளவு பெற முடியும்?

இப்போதைக்கு தனிநபருக்கு ரூ.4000 வரை வங்கிகளில் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெறலாம். அதற்கு மேலான தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

3. நான் ஏன் எனது அனைத்து பழைய நோட்டுகளுக்கும் புதிய நோட்டுகளை பெற முடியாது?

இப்பொதைக்கு மத்திய அரசு அதனை அனுமதிக்கவில்லை. எனவே தற்போதைய இந்தத் திட்டம் ரூ.4000 வரை மாற்றி கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

4. எனக்கு ரூ.4,000 போதவில்லை நான் என்ன செய்வது?

ரூ.4000 ரொக்கத்தொகை போக மீதித் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம், அதனை காசோலை மற்றும் பிற எலக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை மூலம் உங்கள் தேவைக்கு பயன்படுத்தலாம்.

5. என்னிடம் வங்கிக் கணக்கு இல்லை எனில்?

நீங்கள் வங்கிக் கணக்கு ஒன்றை அதற்கான அடையாள ஆவணங்களுடன் சமர்ப்பித்து தொடங்குவது அவசியம்.

6. என்னிடம் ஜன்தன் யோஜனா திட்டப்படி தொடங்கப்பட்ட கணக்குதான் உள்ளது என்றால்?

ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் அதற்கான விதிமுறைகளுடன் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

7. பரிமாற்றத்திற்கு நான் எங்கு செல்ல வேண்டும்?

அனைத்து வர்த்தக வங்கிகள், ஆர்ஆர்பி.க்கள், அரசு கூட்டுறவு வங்கிகள், அல்லது எந்த ஒரு தலைமை மற்றும் துணை தபால் அலுவலகங்களிலும் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

8. நான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குத்தான் செல்ல வேண்டுமா?

ரூ.4,000 வரை மாற்றி கொள்ள எந்த ஒரு வங்கிக்கும் முறையான அடையாள அட்டையுடன் சென்று மாற்றிக் கொள்ளலாம். 

ரூ.4,000த்துக்கும் கூடுதலான தொகைக்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் கிளைகளுக்கும் சென்று கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் ஆனால் அதற்குரிய அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும். மெலும் எலெக்ட்ரானிக் முறையின் பணத்தை வங்கிக் கணக்கில் மாற்றம் செய்வதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும் கொண்டு செல்லவும்.

9. நான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த கிளைக்கும் செல்லலாமா?

ஆம். உங்கள் வங்கியின் எந்த ஒரு கிளைக்கும் செல்லலாம்.

10. எந்த ஒரு வங்கியின் எந்த ஒரு கிளைக்கும் செல்லலாமா?

ஆம். செல்லலாம், ஆனால் பணப்பரிமாற்றத்துக்கு தேவையான அடையாள அட்டை, ஆவணத்தை சமர்ப்பிப்பது அவசியம். ரூ.4,000த்துக்கும் அதிகமான தொகைக்கு எலெக்ட்ரானிக் நிதி பரிமாற்றத்துக்குத் தேவையான அடையாள அட்டை, வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிப்பது அவசியம். 

11. எனக்கு வங்கிக் கணக்கு இல்லை.. ஆனால் என் நண்பர் அல்லது உறவினர் வைத்திருக்கும் வங்கிக் கணக்கில் நான் பரிமாற்றி கொள்ளும் தொகையை வரவு வைத்துக் கொள்ளலாமா?

செய்யலாம், மற்றவர்களது விருப்பத்தின் பேரில், அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்கலாம். அப்போது உங்கள் அடையாள அட்டையை வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டும். வங்கி வாடிக்கையாளரின் ஒப்புதல் சான்றும் அவசியம்.

12. பணத்தை எடுத்துக் கொண்டு கணக்கு வைத்திருப்பவர்தான் நேரில் செல்ல வேண்டுமா, அல்லது பிரதிநிதியை அனுப்பலாமா?

நேரடியாக செல்வது விரும்பத்தக்கது. உங்களால் நேரடியாக செல்ல முடியாதபட்சத்தில் உங்கள் பிரதிநிதியிடம் உங்கள் கைப்பட எழுதிய அனுமதி கடிதம் அவசியம். அவரது அடையாள அட்டையும் அவசியம். 

13. ஏடிஎம்.இலிருந்து நான் பணம் எடுக்க முடியுமா?

18 நவம்பர் 2016 வரை நீங்கள் ரூ.2,000 வரை நாளொன்றுக்கு எடுக்க முடியும், அதன் பிறகு 19-ம் தேதியிலிருந்து இதன் வரம்பு ரூ.4000 ஆக அதிகரிக்கப்படும். 

14. காசோலை மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாமா?

இம்மாதம் 24ம் தேதி வரை வித்ட்ராயல் ஸ்லிப் அல்லது காசோலை மூலம் ஒரு நாளைக்கு ரூ.10,000 வரை எடுக்கலாம். வாரம் ஒன்றிற்கு ரூ.20,000 வரையே எடுக்க முடியும் (இதில் ஏ.டி.எம். பண எடுப்புத் தொகையும் அடங்கும்), இதன் பிறகு இந்தத் தொகையை உயர்த்த மறுபரிசீலனை செய்யப்படும். 

15. ஏ.டி.எம். மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாமா?

ஆம். ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஏ.டி.எம் மூலம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். 

16.நெட்பேங்கிங்கில் பணபரிமாற்றம் செய்யலாமா?
என்இஎப்டி / ஆர்டிஜிஎஸ் / ஐஎம்பிஎஸ் / இன்டர்நெட் பேங்கிங் / மொபைல் பேங்கிங் மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம். எந்த தடையும் இல்லை.

17. நான் தற்போது இந்தியாவில் இல்லை, நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் பிரதிநிதியிடம் உங்கள் கையெழுத்துடன் ஒப்புதல் கடிதம் அளித்து அவரது அடையாள அட்டையுடன் வங்கிக்கு அவர் சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். 

18. நான் ஒரு என்.ஆர்.ஐ. என்னிடம் என்.ஆர்.ஓ. கணக்கு உள்ளது பரிமாற்றத் தொகையை என் கணக்கில் வரவு வைக்க முடியுமா?

ஆம், செய்யலாம்.

19. சுற்றுலாப் பயணிகள் தங்கள் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை என்ன செய்வது?

விமான நிலையங்களில் இருக்கும் பணப்பரிவர்த்தனை மையங்களில் 72 மணி நேரத்திற்குள் கொடுத்து ரூ.5,000 வரை மாற்றிக் கொள்ளலாம். ஓ.எச்.டி நோட்டுகளை பெற்றதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும். 

20. செல்லுபடியாகும் அடையாள அட்டைகள் யாவை?

ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், என்.ஆர்.இ.ஜி.ஏ கார்டு, பான் கார்டு, அரசுத்துறை அதன் ஊழியர்களுக்கு அளித்துள்ள அடையாள அட்டை ஆகியவை.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 09.11.2016

மழைக் காலம்-குழந்தைகள் பாதுகாப்பு


மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் எப்படி? 
15 பாதுகாப்பு டிப்ஸ்கள்!
மழைக்காலம் துவங்கிவிட்டது. பெற்றோரின் பதற்றத்தை கூட்டும் நேரம் இது. சளி, காய்ச்சல் என குழந்தைகளின் ஆரோக்கியத்தை முடக்கும் வைரஸ், பாக்டீரியாக்களிடமிருந்து உங்கள் குழந்தையை தற்காத்துக்கொள்வது எப்படி?

இதோ டிப்ஸ்கள்...

1. காய்ச்சல் என்பது வியாதி அல்ல, உடலில் ஏற்பட்ட ஓர் உபாதைக்கு எதிராக உடல் மேற்கொள்ளும் போர். நம் உடலுக்குள் நுழைந்த வைரஸ் அல்லது பாக்டீரியாவை கொன்றொழிக்கும் பொருட்டு ஏற்படுவதுதான் உடற்சூடு.

உபாதைக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு மருந்து எடுத்துக் கொள்ளும்போது காய்ச்சல் விடைபெறும்.

2. பாரசிட்டமால் கொடுத்தாலே காய்ச்சல் சரியாகிறது என்றால், அது உடல்வலி மற்றும் சோர்வினால் ஏற்பட்ட காய்ச்சலாக இருக்கலாம். மருந்து கொடுக்கும் இடைவெளி, குறைந்தபட்சம் 4 மணி நேரமேனும் இருக்க வேண்டும். காய்ச்சலால் உடல் தகித்தால், 'ஸ்பான்ச் பாத்' முறையில், ஈரத்துணியை வைத்து உடலை தலை முதல் பாதம் வரை, சூடு தணியும் வரை ஒத்தி எடுப்பது நலம். 48 மணி நேரத்திற்குப் பிறகும் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை காண்பது நலம்.

3. காய்ச்சலின்போது வயிற்றுப்போக்கு இருந்தால் உப்பு, சர்க்கரை கரைசல் அல்லது 'electrobion' பவுடரை, தகுந்த இடைவெளியில் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டுவது அவசியம். நீர் இழப்பை இது சரி செய்யும்

4. சளியினால் காய்ச்சல் என்றால், எடுத்தவுடன் ஆன்ட்டிப் பயாடிக் மருந்துகளை நாடுவது நல்லதல்ல; மருத்துவர் தரும் வழக்கமான சளி மருந்தே போதும். அவ்வப்போது வெந்நீர் மற்றும் குளிர்ச்சி அல்லாத பொருட்களைத் தருவது போதும்.

5. சுக்கு, மிளகு, சேர்ந்த கஷாயமும், துளசி , ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி போன்ற இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, நீரை வடிகட்டி, கொஞ்சம் ஆறியப் பிறகு சிறிது தேன் கலந்து, காலை, மாலை என இருவேளைகள் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குக் கொடுக்கலாம்.

6. குடிக்கும் நீரைத் தூய்மைப்படுத்தி காய்ச்சிக் கொடுப்பதாலும் , சுகாதாரம் இல்லாத உணவுப்பொருட் களைத் தவிர்ப்பதன் மூலமும் டைபாய்ட் மற்றும் சில வைரஸ் காய்ச்சலை தவிர்க்கலாம்

7. டெங்கு , மலேரியா மற்றும் பிற காய்ச்சலுக்கு மருத்துவர் பரிந்துத்துரைத்த மருந்துகளுடன் நிலவேம்புக் கஷாயமும், பப்பாளி இலைச்சாறும் பரிந்துரைக்கும் அளவுகளில் கொடுப்பது நல்லது

8. போதிய நீரை அவ்வப்போது குடிக்க வைத்து, அடிக்கடிச் சிறுநீர் கழித்தால் நோய்க்கிருமிகள் உடலை விட்டு வெளியேறும். 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்ற திருக்குறளை நினைவில் வைத்துக்கொள்ளுங் கள். நோயின் மூலகூறுக்குச் சிகிச்சை செய்வதே நலம்

9. குழந்தைகளின் உடலில் ஒருநாளில் குறைந்தபட்சம் அரைமணியில் இருந்து ஒரு மணிநேரமாவது சூரிய வெளிச்சம் படுவது அவசியம். எப்போதும் குளிரூட்டப்பட்ட அறையிலேயே இருந்தால் உடலின் சமன்பாடு பாதிக்கப்படும். வியர்ப்பது நல்லது.

10. சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கைகளைச் சுத்தமாகக் கழுவச் செய்யுங்கள். வெளியில் சென்று வரும்போதும், மலஜலம் கழித்தபின்னரும் கை கால்களைச் சுத்தமாகக் கழுவும் வழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

11. பழம், பழச்சாறு போன்றவைகளை உணவுக்கு முன்பு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்னராவது கொடுக்க வேண்டும். அல்லது உணவிற்கு பின்பு இரண்டு மணிநேரமேனும் கழித்துக் கொடுப்பது, அதன் பூரண சக்தியை உடலுக்குத் தரும்.

12. ஆண் குழந்தைகளுக்குச் சளி, காய்ச்சல் சமயம் தவிர்த்து, தொடர்ந்து துளசி தருவதைத் தவிர்த்திட வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள் .

13. கொசு மருந்துகளையும் கொசுவர்த்திகளையும் தவிர்த்து வேப்பிலைப்புகை, பூண்டு, கற்பூரம், கொசு வலை அடித்தல், வீட்டினை, சுற்றுப்புறத்தைத் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்ற இயற்கை வழிமுறைகளையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றலாம்

14. காய்ச்சலில் குழந்தைகள் இருந்தால், மருந்துக் கொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்திக் கொண்டே இருக்காதீர்கள், அந்த நேரத்தில் நீங்கள் அவர்களுடன் உரையாடிக் கொண்டும் அல்லது உங்கள் அருகாமையைக் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் .

15. குழந்தையின் உடல்நலத்திற்கும் மனநலனிற்கும், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், நல்ல வெளிச்சம், நல்ல காற்று, ஆடிப்பாடி விளையாடுவது என்று குழந்தைகளின் உடல்நலத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுங்கள்
********************************************************************************* அமுதா, சென்னை 
(விகடன் செய்திகள் - 09.11.2015)

Thursday, November 3, 2016

பிச்சை எடுக்கும் குழந்தைகள்


பிச்சை எடுக்கும் குழந்தைகளைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? 
நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில் கடத்தப்பட்ட 23,699 குழந்தைகள் மீட்பு:
பிச்சையெடுத்தல், உடல் உறுப்புகளை பெறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த 2 ஆண்டுகளில் கடத்தப்பட்ட 23,699 குழந்தைகள் நாடு முழுவதும் மீட்கப்பட்டுள்ளனர்.
பிச்சையெடுக்கும் குழந்தைகளைக் கண்டால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து உதவ வேண்டும் என இந்திய குழந்தைகள் நல கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், சாலைகளின் முக்கிய சந்திப்புகள், சிக்னல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களை வழிமறித்து பிச்சையெடுக்கும் வட மாநில குழந்தைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், ‘தி இந்து’ உங்கள் குரல் வசதியை பயன்படுத்தி கூறும்போது, “சென்னையில் போக்குவரத்து சிக்னல்களில் நிறைய சிறுவர்கள் பிச்சையெடுத்தும், பொருட்களை விற்பனை செய்தும் வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் இவர்கள் விபத்துகளில் சிக்கவும், கல்வியின்றி எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, இச்சிறுவர்களுக்கு கல்வி அளிக்க அரசு ஏற்பாடு செய்துதர வேண்டும்” என்றார்.
வெளிமாநிலத்தவர்கள் அதிகம்
இதுகுறித்து ‘யுனிசெப்’ அமைப்பின் குழந்தை பாதுகாப்பு சிறப்பு அலுவலர் (ஓய்வு) வித்யாசாகர் கூறியதாவது:
தமிழகத்தில் பிச்சை எடுப்பவர்களில் வெளி மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து வருபவர்கள்தான் அதிகம் பேர் உள்ளனர். இதுதவிர, குடிசைப் பகுதிகளில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வந்தும், குழந்தைகளை கடத்திச் சென்றும் பிச்சையெடுக்க வைக்கின்றனர்.
சிறு குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள், அந்தக் குழந்தைகள் அழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தூக்க மருந்து போன்றவற்றை அளிக்கின்றனர். இதனால், குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு பிச்சையெடுக்கும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகளை மீட்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்களை தமிழக அரசு அண்மையில் நிரப்பியுள்ளது. அந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமாகவே நிரப்பப்பட்டுள்ளன. எனவே, அந்தப் பணிக்கு நிரந்தரமாக அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கு போதிய பயிற்சியை அரசு அளிக்க வேண்டும்.
மேலும், புகார் வந்தால் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். அப்படி இல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எந்தெந்த பகுதிகளில் இருந்து பிச்சையெடுக்க வருகின்றனர்.
அவர்களது பிரச்சினைகள் என்ன என்பதைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதாரத்துக்கான மாற்று வழிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சவாலான பணி
சென்னையில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தின் (சிடபிள்யூசி) உறுப்பினர் ஷீலா சார்லஸ் மோகன் கூறும்போது, “பிச்சை எடுப்பதில் இருந்து மீட்கப்படும் குழந்தைகள் எங்கள் முன்பு ஆஜர்படுத்தப்படுகின்றனர். அந்தக் குழந்தைகள் குறித்த விவரங்களை சரிபார்ப்பதுதான் எங்களுக்கு சவாலான பணியாக உள்ளது.
குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பதில் மிகப்பெரிய கும்பல் செயல்படுகிறது. மீட்கப்படும் குழந்தைகளுக்கு அந்த கும்பல் சொந்தம் கொண்டாடும். இருப்பினும், தீவிர விசாரணை நடத்தி உரியவர்களிடம் குழந்தையை ஒப்படைக்கிறோம். பெரும்பாலான குழந்தைகளின் மறுவாழ்வு, கல்விக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டு வருகிறோம்.
வெளிமாநில குழந்தைகள் மீட்கப்பட்டால் அந்தந்த மாநில குழந்தைகள் நல குழுமத்திடம் அவர்களை அனுப்பி வைக்கிறோம்’’ என்றார்
.தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
இந்திய குழந்தைகள் நல கவுன்சில் (ஐசிசிடபிள்யூ), தமிழ்நாடு பிரிவின் துணைத் தலைவர் சந்திரா தணிகாசலம் கூறியதாவது:
சிறார் நீதிச் சட்டம் 2015-ன் கீழ் பிச்சையெடுக்கும் குழந்தைகளை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தை என அறிவித்து 18 வயது வரை அவர்களுக்கு தேவையான படிப்பு, உணவு, உடை ஆகியவற்றுக்கு அரசு செலவு செய்ய வேண்டும். மீட்கப்படும் குழந்தைகளை பராமரிக்க அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற இல்லங்கள் தமிழகத்தில் உள்ளன.
பிச்சையெடுக்கும் குழந்தைகளுக்கு நாம் பணம் கொடுப்பதால் அந்தக் குழந்தையின் வாழ்வில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. ஒருவேளை உணவுக்காக குழந்தைகள் பிச்சை எடுக்கின்றனர் என்பது தவறான கருத்து. அனுதாபத்தின் மூலம் எளிதில் பணம் பெறும் வகையில்தான் குழந்தைகளை பிச்சையெடுக்க பயன்படுத்துகின்றனர்.
எனவே, அவர்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதில், பிச்சையெடுக்கும் குழந்தைகள், சாலைகளில் பொருட்களை விற்கும் குழந்தைகளைக் கண்டால் ‘1098’ என்ற 24 மணி நேர இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தகவல் தெரிவிப்பது மட்டுமே பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்டு நிரந்தர மறுவாழ்வு அளிக்க உதவும்.
இவ்வாறு சந்திரா தணிகாசலம் கூறினார்.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (என்சிஆர்பி) தகவலின்படி கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரை மட்டும் நாடு முழுவதும் பிச்சையெடுத்தல், பாலியல் தொழில் மற்றும் உடல் உறுப்புகளுக்காக கடத்தப்பட்ட 23,699 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
2014-ல் 7,670 குழந்தைகளும், 2015-ல் 11,954 குழந்தைகளும், 2016-ல் (ஜூன் வரை) 4,075 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளன.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 02.11.2016

திருப்பதிக்கு திடீர் பயணம்


திடீர்ன்னு திருப்பதிக்கு கெளம்புறீங்களா - என்ன செய்ய வேண்டும்?

திருவேங்கடமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு பயணத்தை எளிதாக்க இதோ சில குறிப்புக்கள்:

• திருமலையை மேல் திருப்பதி என்றும் திருப்பதியை கீழ் திருப்பதி என்றும் அழைப்பார்கள். திருமலை திருப்பதிக்கு ஒருநாளைக்கு 50,000 முதல் ஒரு லட்சம் பக்தர்களுக்குமேல் வருகை புரிகிறார்கள்.

• சுவாமியை தரிசனம் செய்வதற்கு, 'சர்வதரிசனம்', 'திவ்ய தரிசனம்' (கீழ்திருப்பதியிலிருந்து நடந்தே மலையேறிச் சென்று தரிசிப்பது), ஸ்பெஷல் தரிசனம் என மூன்று வழிமுறைகள் இருக்கின்றன.

• சர்வ தரிசனத்தில், தரிசனம் செய்வதற்கு சாதாரண நாட்களில் 4 மணி முதல் 8 மணிநேரம் ஆகும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில், 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை ஆகும். திவ்ய தரிசனத்தில் சர்வ தரிசனத்தை விட 2 மணி நேரம் குறைவான நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம்.

• 'சிறப்பு தரிசனம்' என்பது எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல்,  ஆன்லைன் மூலமாக புக் செய்துவிட்டு 300 ரூபாய் டிக்கெட் எடுத்துச் சென்று தரிசனம் செய்யும் முறையாகும். ஒரு நபருக்கு மட்டும் அனுமதி. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் முந்தைய தினமே முன்பதிவு செய்துவிட்டு புறப்படுவது நல்லது. வார நாட்கள் என்றால்  மலைக்குச்சென்று அங்குள்ள விற்பனைப் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.

• உங்கள் திருமலை யாத்திரையை விடுமுறை அல்லாத நாட்களில் தொடர்வது நல்லது. திருமலைக்கு செல்லும் முன்பே ரயில் மற்றும் பேருந்து டிக்கட்டுகள், தங்கும் வசதிகள் மற்றும் சேவை டிக்கட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

• தங்கும் வசதிக்காக உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சி.ஆர்.ஓ அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மட்டும் க்யூவில் காத்திருக்கலாம். மற்றவர்கள் சி.ஆர்.ஓ. அலுவலத்துக்கு பக்கத்தில் உள்ள பயணிகள் தங்குமிடத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம். அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.

• தகவல்களை  அறிந்துகொள்ள, ரயில்நிலையம், விமான நிலையம், ஆர்.டி.சி. பேருந்து நிலையம், அலிபிரி பேருந்து நிலையம், சத்திரங்கள், அலிபிரி டோல்கேட், மற்றும் ரேணிகுண்டா ரயில்நிலையத்தில்  உள்ள தகவல் மையங்களை அணுகலாம்.

• திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ,  மலைப்பாதையில்  பழுதடையும் வாகனங்களை சரிபார்ப்பதற்கு ரோந்து பழுதுபார்ப்பு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

• திருமலைக்கு நடந்து செல்பவர்களுக்கு வசதியாக திருப்பதி ரயில்நிலையத்திலிருந்து அலிபிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

• நடந்து செல்லும் யாத்திரிகர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி அடிவாரத்தில் உள்ள கௌண்டரில் செலுத்திவிட்டு மலை ஏறிச்சென்று திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக  திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

• திருமலை யாத்திரையை பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் இல்லாமல், வார நாட்களில் பயணம் இருப்பது போல் திட்டமிட்டுக்கொண்டால், எளிதாக சுவாமி தரிசனம் செய்து, பயணத்தை இனிதானதாக ஆக்கலாம்.

• திருப்பதிக்குச் செல்ல ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள், திருமலையில் தங்கும் அறை வசதிகள் மற்றும் தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகளுக்கு, ஆன்லைனில் 90 நாட்களுக்கு முன்பாகவும், தேவஸ்தான அலுவலகங்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

• தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருமலையில் அறை எடுத்து தங்கும் வசதியைப் பெற, கணவன் மனைவி இருவரும் செல்ல வேண்டும். 
தனிநபராக செல்பவருக்கு அறைகள் தரப்படுவதில்லை.

• திருமலையில் அறைவசதி கிடைக்காவிட்டாலும்,  நாம் கொண்டு செல்லும் பொருட்களை வைப்பதற்கு ஆயிரக்கணக்கான இலவச லாக்கர் வசதிகள் உள்ளன. அதில்  நமது பொருட்களை வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.

• கீழ்த்திருப்பதி வந்தவுடன் அங்குள்ள லாக்கர்களில் பொருட்களை வைத்து விட்டு, அலர்மேலு மங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்து விட்டு, மேல் திருப்பதியில், சுவாமி வெங்கடாசலபதியை வழிபடுவதற்கு முன், சுவாமி புஷ்கர்ணி தீர்த்தத்தில் புனித நீராடி வராகப் பெருமாளைத் தரிசனம் செய்ய வேண்டும்.

• கோயிலின் விதிமுறைகளைப் பின்பற்றி, கடவுளை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டும்.கோயில் வளாகத்தில் எச்சில் துப்பவோ அல்லது எந்த விதத்திலும்  மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யவோ கூடாது.

• கோயிலின் விதிமுறைகளுக்கும் வழக்கங்களுக்கும் எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. கோயில் வளாகங்களில் புகைபிடிக்கக் கூடாது. கோயில் வளாகங்களில் காலணிகளை அணியக்கூடாது.

• தங்களது அறையிலோ, வாகனங்களிலோ காலனிகளை விட்டுவிட்டு வெறுங்கால்களுடன்தான் பிரகாரங்களை வலம் வர  வேண்டும்.  மறந்து அணிந்து வந்து விட்டால், அருகாமையிலிருக்கும் காலணிகள் பாதுகாப்பு மையத்தில் விட்டுச் செல்லலாம்.

• சுவாமி தரிசனம் செய்யச் செல்லும்போது உங்களது செல்போன்களை  சைலண்ட் மோடில் போட்டு அறையிலேயே விட்டுச் செல்வது நல்லது. இல்லாவிட்டால், தரிசனம் முடித்துவிட்டு, லட்டு கௌண்டருக்குச் சென்று லட்டு வாங்கி முடித்துவிட்டு, பிறகு செல்போன் பாதுகாப்பு மையத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதற்கு நீங்கள் நிறையவே அலைய வேண்டியிருக்கும்.

• திருமலை யாத்திரையின்போது அளவுக்கதிகமான நகைகளையோ, பணத்தையோ உடன் எடுத்துச்செல்லக் கூடாது. முன்பின் அறியாதவர்களிடம் தங்குவதற்கு அறைகள் கேட்கக் கூடாது. முன்பின் அறியாதவர்களை உங்கள் அறையிலும் தங்க வைக்கக்கூடாது.

• கோயில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்றைத் தொடர்பு கொள்வது அல்லது http://www.tirumala.org/ இணையதளத்தின் வழியாக அறியலாம்.

------------------------------------------------------------------------------------------------எஸ்.கதிரேசன்

நன்றி : விகடன் செய்திகள் -15/10/2016

Wednesday, November 2, 2016

ஊழல் என்பது குற்றமா?


ஊழல் என்பது குற்றமா? - என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சியில் புதிய குற்றவியல் சட்டம் ஒன்றை உருவாக்க முற்பட்டனர். மெகாலே பிரபு எழுதியது தான் 1860ல் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம். 

இச்சட்டத்தின் கீழ் லஞ்சம் கேட்டுப் பெறுவது குற்றமாக்கப்பட்டது. அப்பிரிவுகளின் கீழ் லஞ்சம் கேட்டுப் பெறுவதை, குற்றவியல் நீதிமன்றங்களில் நிரூபிப்பது மிக கடினமாக இருந்ததனால், அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க முடியவில்லை.

ஆசிய நாடுகளின் தனிக்குணம் : 
அரசு ஊழியர்கள் தங்களது கடமையை ஆற்றுவதற்கே பணம் பெற்றுக் கொள்வது பல மொழிகளில் பலவாறாக அழைக்கப்பட்டது. தஸ்துாரி, தாலி, பக்கீஸ் இனாம் என்றெல்லாம் வாங்கப்பட்ட தொகைகள் லஞ்ச குற்றமாக்கப்படவில்லை.

இப்படிப்பட்ட பெருமளவு ஊழல் செயல்பாடுகள், காலனி ஆதிக்கத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், ஆங்கில அறிஞர்கள் இப்படிப்பட்ட செயல்பாடுகள் எல்லாம் ஆசிய நாடுகளின் தனிக் குணம் என்றே வர்ணித்தனர். 

இரண்டாம் உலகப் போரின் போது, போர்த் தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து, மிகப்பெரும் ஊழல் செய்த குற்றவாளிகளை தண்டிப்பதோடு, 1944ம் ஆண்டு அவசர சட்டத்தின் மூலம் குற்றவாளிகளின் சொத்துக்களின் மீது பற்று வைப்பதுடன், குற்றம் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் சட்ட வழி வகுக்கப்பட்டது. 

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, அரசு மற்றும் பொது சேவைகளில் ஊழல்களைத் தடுப்பதற்காக தனி சட்டம் இயற்ற முற்பட்ட போது உருவானது தான், 1947ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம். 

இச்சட்டப்படி ஊழல் என்பதற்கு விரிவான விளக்கமும் அக்குற்றத்தை கண்டுபிடிப்பதற்கான புதிய நடைமுறைகளும் விளக்கப்பட்டது. குற்றத்தை நிரூபிப்பதில் அரசுக்கு மட்டும் பொறுப்பு என்றில்லாமல், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவரும் தன் பங்கிற்கு தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும்.

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியரை பொறி வைத்து பிடிக்கும் முறைகளும், அப்படி கைப்பற்றப்பட்ட பணம் எதற்காக பெறப்பட்டது என்பதை விளக்க வேண்டிய கட்டாயம் அரசு ஊழியர் மீது சுமத்தப்பட்டது.

புதிய சட்டம் : 
1947ல் கொண்டுவரப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தால் மிகப்பெரிய அளவில் அரசு மற்றும் பொதுஊழியர்கள் ஊழல் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியவில்லை.

 எனவே 1988ல் நாடாளுமன்றத்தில் புதிய ஊழல் தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்படிப்பட்ட சட்டத்தை நிறைவேற்றுவதற்காக, மத்திய அரசு அமைத்த நிர்வாக சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்திருந்தது. 

இச்சட்டத்தின் கீழ் லஞ்சம் கேட்டுப் பெறுவது குற்றமாக்கப்பட்டது மட்டுமல் லாமல், அரசு அல்லது பொது ஊழியரிடம் அவரது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் இருந்தால், அதையும் ஊழல் பணத்தால் பெறப்பட்டது என்று வகுக்கப்பட்டு, அவரை தண்டிக்க வழிவகுக்கப்பட்டது. 

குற்றவியல் தண்டனைக்கு உள்ளாகும் அரசியல்வாதிகள், நீதிபதிகளாலும், இதர சக்திகளாலும் தீட்டப்படும் சதிகளினால் தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்று கூறி, அரசின் நல்ல திட்டங்களால் பயன் பெற்ற சாதாரண மக்களை, தெருப் போராட்டங்களில் ஈடுபட வைப்பதன் மூலம், ஊழல் குற்றவாளிகளை தண்டிக்கவே கூடாது என்பது போன்ற கருத்தை உருவாக்கி வருகின்றனர். 

அவநம்பிக்கை : 
புதுக்கோட்டை நகராட்சி ஊழியர் கூத்தப்பெருமாள் தொடுத்த மேல் முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த தகவலை ஆங்கிலத் தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பியது. 1993ல் நகராட்சி கட்டடச் சான்றிதழ் கொடுப்பதற்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்கியதற்கு, மூன்று மாத கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டதை, 18 ஆண்டுகளுக்கு பின் உச்சநீதிமன்றம் உறுதி செய்த செயலை, குறைகூறுவது போல் அந்நிகழ்ச்சி அமைந்தது. என்றாலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பற்றிய வழக்கை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்கவில்லை என்றால் மக்களுக்கு அச்சட்டத்தைப் பற்றிய அவநம்பிக்கை வந்துவிடும் என்பது தெளிவு. 

ஊழல், லஞ்சம் போன்ற நடவடிக்கைகளால் தாங்கள் பாதிக்கப்படுவதை சாதாரண மக்கள் தங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே எடுத்துக் கொண்டனர்.

 மக்களுக்கு உதவி செய்ய ஏற்படுத்தப்பட்ட அரசு அலுவலகங்களில், கையூட்டு கொடுக்காமல் காரியங்கள் ஏதும் நடைபெறாது என்பதை மக்கள் தெளிவாகவே புரிந்து கொண்டனர். 

கையூட்டு வாங்குவது தண்டிக்கப்படக்கூடிய குற்றம் என்று அரசு அலுவலகத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அவ்வாசகங்கள் பெரும்பான்மையான அரசு அலுவலர்களுக்கு மறந்து போனதா அல்லது மரத்துப் போனதா என்று தெரியவில்லை. 

ஐந்தாவது துாண் என்ற அரசு சாரா நிறுவனம் வெளியிட்ட அறிக்கைகளின்படி, ஆண்டு தோறும் மக்களிடமிருந்து அரசு அலுவலர்களுக்கு கையூட்டு பணமாக கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

யாருக்கு பொருந்தும் : 
1988ல் கொண்டுவரப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து போடப்பட்ட பெரும்பான்மையான வழக்குகள் அரசியல்வாதிகளாலேயே போடப்பட்டன. 

அச்சட்டத்தின் கீழுள்ள அனைத்து பிரிவுகளும் அவர்கள் போட்ட வழக்குகளால் உச்ச நீதிமன்றத்தில் பலமுறை அலசப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஊழல் தடுப்பு சட்டம் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பொது ஊழியர்கள் என்ற வரையறையின் கீழ் அமைச்சர்கள் வரமாட்டார்கள் என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் 1979ல் நிராகரித்தது.

நீதிபதி மீது வழக்கு : 
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.வீராசாமி மீது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட போது, அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

பொது ஊழியர் என்ற வரையறையின் கீழ் நீதிபதிகளை கொண்டு வர முடியாது என்றும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிபதிகளின் மீது வழக்கு தொடரும் அதிகாரம் காவல் துறையினருக்கு கொடுக்கப்பட்டால், அது நீதித்துறையின் சுதந்திரத்தை குலைக்கும் என்றும் வாதாடினார். 

அந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு நீதிபதிகள் மீதும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என்றும், அவர்கள் அச்சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றும்1991ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

லோக்பால் : 
லோக்பால் போன்ற அதிகார அமைப்பை உருவாக்க வேண்டியதன் கட்டாயம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்தால், ஊழல் தடுப்புச் சட்டம், அதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது புரியும். ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது வழக்கு தொடர முன் அனுமதி தேவை என்பதும், அவ்வழக்கை விசாரிக்கும் காவல்துறை அவர்களது கட்டுப்பாட்டின் கீழேயே இயங்குகிறது என்பதையும் அறிவோம்.

 திறமை மிக்க வழக்கறிஞர்களை மிகுந்த பொருட்செலவில் அமர்த்தி, சட்டத்திலுள்ள ஓட்டைகளின் மூலம் தப்பிப்பது, இரண்டுக்கு மேல் முறையீட்டு முறை அனுகூலங்களினால், வழக்கை பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்க முடியும் என்ற சிந்தனை ஓட்டம் தற்போது வலுப்பெற்றுள்ளது. 

ஊழல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை வாங்கித் தருவதோடு, அப்படிப்பட்ட குற்றங்களை இழைத்தவர் யாராக இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை மக்களிடம் உருவாக்க வேண்டும். 

இந்த தொழில்நுட்ப காலத்தில், ஊழல் செயல்பாடுகளும் நவீனத்துவம் பெற்று அறிவியல் ரீதியாக நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றை எதிர்கொள்ள அறிவியல் சிந்தனைகளையும், சாதனங்களையும் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இன்னும் அதிக அளவில் ஆராய முயற்சிக்க வேண்டும்.

- கே.சந்துரு
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி
saraskrish1951@gmail.com

நன்றி : தினமலர் நாளிதழ் - 02.11.2016

மொபைல் போன் சார்ஜ்


மொபைல் போன் சார்ஜ் குறையாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
மொபைல் சார்ஜ் குறையாமல் இருக்க முக்கிய 7 விஷயங்கள்!
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரது முக்கியக் கவலைகளில் ஒன்று அதன் பேட்டரி. வீடியோ, கேம்ஸ் ஆகியவற்றை அதிக நேரம் பயன்படுத்தாவிட்டாலும்கூட, சார்ஜ் விரைவில் இறங்கிவிடும். ஆனால், இந்த 7 விஷயங்களைக் கவனத்தில்கொண்டு செயல்பட்டால் மொபைல் சார்ஜ் விரைவில் தீர்வதைத் தவிர்க்கலாம்.
1. குறுஞ்செய்தி, அழைப்புகள், அறிவிப்புகள் என அனைத்துக்கும்வைப்ரேட் ஆப்ஷனை தேர்வு செய்யாதீர்கள். இது ஒலியை விடவும் அதிக சக்தியை இழுக்கும். தவிர்க்க முடியாத சூழல்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் வைப்ரேஷன் ஆப்ஷனை எடுத்துவிடுங்கள்.
2. வைஃபை, ப்ளூடூத் பயன்படுத்திவிட்டு, தேவையற்ற சமயங்களில் ஆஃப் செய்யவும்.
3. இணையம் மூலமாக பிரவுசரில் ஏதேனும் தேடிக்கொண்டிருக்கும்போதோ, கேம்ஸ் விளையாடும்போதோ அந்த அப்ளிகேஷனை முழுமையாக குளோஸ் செய்யாமல், மொபைல் திரையை அணைக்கக்கூடாது. அப்படிச் செய்தால், திரைக்குப் பின்னால் அந்த அப்ளிகேஷன் இயங்கிக்கொண்டே இருக்கும்.
4. நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் இருக்கும்போது, உங்கள் மொபைல் ஆண்டனாக்கள் அதிக மின்சக்தியை செலவுசெய்து, நெட்வொர்க்கைத் தேடும். எனவே டவர் கிடைக்காத இடங்களில் ஏர் பிளேன் (Air Plane) மோட்-ஐ ஆன் செய்துவிடலாம். இதனால் எந்த இணையமும் இல்லாமல் போனில் இசை கேட்கலாம். கேம்ஸ், வீடியோ பார்க்கலாம்.
5. போனில் இருக்கும் ஒவ்வொரு ஆப்களையும் அடிக்கடி அப்டேட் செய்வது கொஞ்சம் சிக்கலான வேலைதான். ஆனால், இதன் மூலம் பேட்டரித் திறனை அதிகரிக்க முடியும். காரணம், ஒவ்வொரு ஆப் நிறுவனமும் தனது புதிய அப்டேட்டில், முன்பைவிட குறைவான மெமரி எடுக்கும்படியும், சார்ஜ் செலவாகும்படியும் வடிவமைப்பார்கள்.
6. ஆட்டோ சிங்க் ஆப்ஷனை அணைத்துவிடுவது மொபைல் டேட்டாவுக்கும், பேட்டரிக்கும் நல்லது. இல்லையெனில் மொபைல் டிஸ்ப்ளேவை ஆஃப் செய்து வைத்திருக்கும்போதும், மொபைல் பயன் படுத்தாதபோதும்கூட, இவை பின்னணியில் நமது டேட்டாவை தின்றுகொண்டே இருக்கும்.
7. உங்கள் மொபைல் பேட்டரி எவ்வளவு செலவாகி உள்ளது என எடுத்துப் பார்த்தால் அதில் அதிக பங்கு வகிப்பது மொபைல் திரைதான். இதன் வெளிச்ச அளவைக் குறைப்பதே சார்ஜ் குறைவதைத் தடுக்கும் முக்கிய வழி. ஆட்டோ ப்ரைட்னஸ் ஆப்ஷனைத் தேர்வு செய்வது நல்லது.

நன்றி : நாணயம் விகடன் - 06.11.2016