disalbe Right click

Thursday, December 8, 2016

பணமில்லா பரிவர்த்தனை


பணமில்லா பரிவர்த்தனை - என்ன செய்ய வேண்டும்?
பணப் பரிமாற்றத்தில் யூபிஐ… தேவை நிறைய மாற்றம்!
வங்கிகளில் பணம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படாதீர்கள். பணமில்லா பரிவர்த்தனையைப் பயன்படுத்துங்கள். வங்கிகள் தரும் யூபிஐ (UPI – Unified Payment Inteface) வசதியைப் பயன்படுத்தி எளிதில் பணத்தை அனுப்புங்கள்’’ என்று சொல்கிறது மத்திய அரசாங்கம்.

பிரதமர் தொடங்கி ஒவ்வொரு மத்திய அமைச்சரும் இந்த யூபிஐ-க்காக பிரசாரமே செய்து வருகின்றனர்.
வங்கிகள் தரும் யூபிஐ வசதியை சாதாரண மக்களும் பயன்படுத்தும் நிலையில் அது எளிதாக இருக்கிறதா என்பதை அறிய களத்தில் இறங்கினோம். களத்தில் இருக்கிற நிலைமை நம்மை அதிர்ச்சி அடையவே செய்தது.

யூபிஐ-யின் தொடக்கம்!

முதலில் இந்த யூபிஐ-யைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம். ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி மொபைல் வழியிலான பணப் பரிவர்த்தனைகளை எளிதாகச் செலுத்தும் வசதியை யூபிஐ என்ற பெயரில் என்பிசிஐ அறிமுகப்படுத்தியது.

கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் அப்போதைய கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் இந்த யூபிஐ-யை முறைப்படி அறிமுகப்படுத்த, ஜூலை 31-ம் தேதிக்குள் கிட்டத்தட்ட 15 வங்கிகள் இந்த யூபிஐ வசதியைத் தரத் தயாராகிவிட்டன. கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்பட பல வங்கிகள் பொது மக்களுக்கு இந்த யூபிஐ வசதியைத் தரத் தயாராக இருந்தன.

என்ன நன்மை?

உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் யூபிஐ வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே பல்வேறு வேலைகளைச் செய்ய முடியும். அதிகபட்¬ச¬மாக ஒரு லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் பணத்தை அனுப்பவும், பெறவும் செய்யலாம். நண்பர்கள், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக பணத்தை அனுப்பலாம். ரயில்வே டிக்கெட், சினிமா டிக்கெட் வாங்கலாம்; பார்கோடு அடிப்படையில் பணம் செலுத்தலாம்; இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்தலாம். நன்கொடை, பள்ளிக் கட்டணங்கள் என கவுன்டர் பேமென்ட் வழியாகவும் பணத்தை செலுத்தலாம்; ஆன்லைன் மூலமாகவும் வாங்கும் பொருட்களுக்கும் கட்டணத்தைச் செலுத்தலாம்;

24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படக்கூடியது; உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும் இதைப் பயன்படுத்த முடியும்; யூபிஐ-ல் இ-மெயில் முகவரி போன்ற விர்ச்சுவல் ஐடியை உருவாக்கி, எளிதாகப் பணம் அனுப்பலாம் என யூபிஐ மூலம் கிடைக்கும் பல செளகரியங்களைச் சொன்னார்கள்.

விர்ச்சுவல் ஐடி

யூபிஐ-ல் விர்ச்சுவல் ஐடி மூலம் எளிதாக பணத்தை அனுப்பலாம். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு பொதுத் துறை வங்கியின் வாடிக்கையாளர் எனில், அந்த வங்கியின் மொபைல் ஆப்-ஐ உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் பெயர், உங்களுடைய இ-மெயில் முகவரியைப் பதிவு செய்து புதிதாக விர்ச்சுவல் இமெயில் முகவரி ஒன்றை உருவாக்கி, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை அனுப்பலாம்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளராக இருக்கிறீர்கள், அந்த வங்கியின் மொபைல் ஆப்ஸ் மட்டுமில்லை, வேறு ஒரு வங்கியின் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இது போல் பல தரப்பட்ட வசதிகள் இந்த யூபிஐ-ல் இருக்கின்றன.

பணம் அனுப்புவதைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை அனுப்பலாம். இது வங்கிகளுக்கு வங்கிகள் வித்தியாசப்படுகின்றன. இதற்கு ஒவ்வொரு வங்கியில் இருந்தும் ஒவ்வொரு விதமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, 10,000 ரூபாய் அனுப்புகிறார் எனில், ரூ.5 என்கிற அளவில் கட்டணம் வசூலிக்கப்படு கின்றன.

இத்தனை வசதிகள் இருக்கும் என்று சொல்லி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யூபிஐ வசதியை பல வங்கிகள், கடந்த மூன்று மாத காலத்தில் பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்களிடம் பிரபலப்படுத்தவே இல்லை. இதனால் இந்தியா முழுவதும் இதுவரை 2.5 லட்சம் பேர் மட்டுமே இந்த யூபிஐ ஆப்ஸை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் ஆன்லைன் மூலம் கணக்குப் பரிவர்த்தனை செய்கிறவர்கள் குறைந்தபட்சம் ஒரு கோடி பேராவது இருக்கும்போது, வெறும் 2.5 லட்சம் பேர் மட்டுமே யூபிஐ ஆப்ஸை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் என்பது ஏமாற்றமளிக்கக்கூடியதாக இருக்கிறது.

மிகக் குறைவானவர்களே இந்த யூபிஐ வசதியைப் பயன்படுத்தி வருகிறபோதிலும், அவர்களும் இந்த வசதியானது திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்றே சொல்கின்றனர். உதாரணமாக, தென் மாநிலங்களில் பிரபலமாக விளங்கும் ஒரு பொதுத் துறை வங்கியின் யூபிஐ வசதியைப் பயன்படுத்தியவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, அதன் கஸ்டமர் ரெவியூகளைப் பார்வையிட்டோம். மிகச் சிலர் மட்டுமே இந்த வசதியைப் பற்றி நன்றாகச் சொல்லி இருந்தாலும் பலரும் தங்களது மோசமான அனுபவத்தையே பதிவு செய்திருக்கின்றனர்.
புகார் பட்டியல்!

‘‘இந்த ஆப்ஸ் சுத்த மோசம்; ஒருமுறை பணம் அனுப்பினால், மூன்று முறை பணத்தை எடுத்துவிடுகிறது; பணத்தை அனுப்பியவுடன், கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. ஆனால், யாருக்கு பணம் அனுப்பினோமோ, அவருக்குப் பணம் போய்ச் சேரவில்லை; ஒவ்வொரு முறை பணம் அனுப்பும்போதும் எல்லாத் தகவல்களையும் கேட்கிறது. இதனால் பணம் அனுப்ப நீண்ட நேரம் ஆகிறது’’ என்கிற மாதிரி எல்லாம் பலரும் புகார் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தப் புகார்களைப் படித்துப் பார்த்த அந்த வங்கி நிர்வாகம், அந்தக் குறைகளை கூடிய விரைவில் நிவர்த்தி செய்வதாக புகாருக்குக் கீழேயே பதில் சொல்லி இருக்கிறது. இதேபோல டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் இன்னொரு வங்கியின் யூபிஐ ஆப்ஸை பயன்படுத்தியவர்களும் தங்கள் அதிருப்தியை கொட்டவே செய்திருக்கிறார்கள்.

‘‘இந்த ஆப்ஸ் நம்பிக்கைக்குரியதாக இல்லை; இந்த ஆப்ஸை நான் வெறுக்கிறேன். இது ஒரு மோசமான அப்ளிகேஷன்; இந்த ஆப்ஸ் வீண்; இந்த ஆப்ஸில் நிறைய மாற்றம் செய்ய வேண்டும்; இது ஒரு நான்சென்ஸ் ஆப்ஸ்’’ என்றெல்லாம் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். ‘எல்லாக் குறைகளையும் சரிசெய்து விடுகிறோம்’ என பொறுமையாக பதில் சொல்லி இருக்கிறது வங்கி நிர்வாகம்.

யூபிஐ வசதியை எப்படிப் பயன் படுத்துவது? இப்படியொரு வசதி மக்களுக்குத் தெரியாமலே இருக்கிறதே..? சில வங்கிகளின் அதிகாரிகளை சந்தித்துக் கேட்டோம். சென்னை, அடையாரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி அதிகாரி ஜானிடம் கேட்டோம்.

எப்படிப் பயன்படுத்துவது?

‘‘யூபிஐ ஆரம்பித்து சில மாதங்களே ஆகின்றன. ஆனால், எங்கள் வங்கியில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்கள் இப்போதை யூபிஐ ஆப்-ஐ பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்களுக்கும் இதன் பயன் குறித்துத் தெரிவித்து வருகிறோம். எங்களுடைய வங்கி இணையதளத்திலும், மொபைல் ஆப்-லும் யூபிஐ குறித்து விளம்பரப்படுத்தி வருகிறோம். விர்ச்சுவல் ஐடியை எப்படி உருவாக்குவது, பணத்தை எப்படி அனுப்புவது, பெறுவது என அனைத்து விஷயங்களும் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

நான்கூட இந்த ஆப்-ஐ பயன்படுத்தி பணத்தை அனுப்பியுள்ளேன். இதில் வங்கிக் கணக்கு விவரம், ஐஎஃப்எஸ்சி கோட் என பல தரப்பட்ட தகவல்கள் எதுவும் தரவேண்டியதில்லை. என் நண்பருக்கு பணம் அனுப்ப வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே ஆனது. வங்கிச் சேவையில் எப்போதும் பணத்தை அனுப்ப மட்டுமே முடியும். ஆனால், இந்த ஆப் மூலம் பணத்தை மற்றவர்களிடம் எளிதாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதால், இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது’’ என்றார்.

சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த மேலாளர் எம்.எஸ்.சந்திரமொளலியிடம் கேட்டோம்.

“யூபிஐ வசதி இப்போதுதான் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆர்டிஜிஎஸ், நெப்ட்-க்கு எல்லாம் ஐஎஃப்எஸ்சி கோட் தேவை. ஆனால், இதற்கு விர்ச்சுவல் ஐடி மட்டும் இருந்தால் போதுமானது. உடனடியாக பணத்தை அனுப்பலாம். மிகவும் எளிமையானது, பாதுகாப்பானது. யூபிஐ குறித்த விழிப்பு உணர்வு நன்றாகத்தான் உள்ளது.

இந்த ஆப்-ஐ இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த ஆப்ஸை பற்றி சொன்னாலே பயப்படுகின்றனர். இதற்குக் காரணம், நம்முடைய பணம் பறி போய்விடுமோ என்ற பயம்தான்’’ என்றார்.

காலப்போக்கில் குறைகள் குறையும்!

சென்னையில் இருக்கும் ஒரு பொதுத்துறை வங்கியில் சீனியர் மேனேஜர் ஒருவருடன் பேசினோம்.
‘‘இப்போதுதான் யூபிஐ சேவையினை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். யூபிஐ பயன்படுத்துபவர்களிடம் எப்படி பயன்படுத்துவது என்ற பயம் இருக்கிறது. நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். மேலும், போதுமான அளவு விழிப்பு உணர்வும் இல்லாமல் இருக்கிறார்கள்.

விழிப்பு உணர்வை உடனே ஏற்படுத்திவிடவும் முடியாது. மக்களிடையே யூபிஐ-யை கொண்டு சேர்க்க கொஞ்சம் காலம் ஆகும். யூபிஐ-யை பயன்படுத்துவோர் பல்வேறு சேவைக் குறைபாடுகள் இருப்பதாக சொல்வதற்குக் காரணம், இதற்கான சப்போர்ட்டிங் சிஸ்டத்தை இனிவரும் காலங்களில்தான் மேம்படுத்த வேண்டி இருக்கிறது. இதனை மேம்படுத்திய பின்பு சேவையில் ஏற்படும் குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும்” என்றார்.

இன்றைக்கு இந்தியாவில் சுமார் 34 கோடி பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நல்லதொரு தரத்தில், பிழை இல்லாமலும் எளிமையான முறையிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாதிரி யூபிஐ ஆப்ஸை எல்லா வங்கிகளும் அறிமுகம் செய்திருந்தால், இந்த நேரத்தில் குறைந்தபட்சம் ஒன்றிரண்டு கோடி பேராவது அதனைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பார்களே! இதன் மூலம் பணத் தட்டுப்பாடு பிரச்னையை மிக எளிதாக சமாளித்திருக்க முடியுமே!

யூபிஐ ஆப்ஸில் இருக்கும் குறைகளை முழுவதுமாகக் களைந்து, அதைக் குறையில்லாத கருவியாக்கி, எல்லோரும் பயன்படுத்தும்படி பிரபலப்படுத்தினால் மட்டுமே பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமாகும் என்பதை மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு, வெறுமனே பணமில்லா பரிவர்த்தனையை செய்யுங்கள் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இருக்காது! அதனால் மக்களின் அதிருப்தியைத்தான் சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும்!

சோ.கார்த்திகேயன், ஞா.சக்திவேல் முருகன்,


நன்றி- நாணயம் விகடன் – 11.12.2016


லோக் ஆயுக்தா நீதிமன்றம்


லோக் ஆயுக்தா - என்ன செய்ய வேண்டும்?
நாட்டில் லோக்ஆயுக்தா நீதிமன்றம் அமைத்த முதல் மாநிலம் கர்நாடகம் - சட்டம் ஒரு எட்டும் கனி

நாட்டில் வேகமாக பெருகிவரும் லஞ்ச-ஊழலை கட்டுபடுத்தும் நோக்கத்தில் கடந்த 1988ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அச்சட்டம் அமலில் இருந்தபோதும், சரியாக செயல்படவில்லை. அதை தொடர்ந்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலங்களில் லோக்ஆயுக்தா அமைக்கப்பட்டது. லோக்ஆயுக்தா என்றால் லஞ்சம் வாங்குவோரை கையும், களவுமாக பிடித்து விசாரணைக்கு உட்படுத்தும் ஒரு அமைப்பு மட்டுமே என்ற எண்ணம் மக்கள் மத்தியில் சமானியமாக உள்ளது. 
லஞ்சம் வாங்குவோரை பிடித்து விசாரணை நடத்துவது லோக்ஆயுக்தா சட்டத்தில் ஒரு அம்சம் மட்டுமே. அதனுடன் ஆட்சி நிர்வாகத்தில் நடக்கும் ஏற்ற-தாழ்வு, லஞ்ச-ஊழல், ஆட்சி இயந்திரம் சரியாக செயல்படாமல் இருப்பது உள்பட லோக்ஆயுக்தாவிடம் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் உள்ளது. நாட்டில் லோக்ஆயுக்தா அமைப்பு கடந்த 1988ம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், கர்நாடக மாநில முதல்வராக இராமகிருஷ்ண ஹெக்டே இருந்தபோது கடந்த 1984ம் ஆண்டு லோக்ஆயுக்தா அமைப்பை மாநிலத்தில் தொடங்கினார். 

இதன் மூலம் லோக்ஆயுக்தாவின் பணி லஞ்ச-ஊழல்வாதிகளை கண்டுப்பிடிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகத்தை கண்காணிக்கும் பொறுப்பும் அதனிடம் உள்ளது. அரசு அதிகாரிகள் மட்டுமில்லாமல் ஊழியர்கள் மீது பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் கொடுத்தால், அதையேற்று விசாரணை நடத்தி, தவறு செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாநில அரசுக்கு சிபாரிசு செய்யும் பொறுப்பும் லோக்ஆயுக்தாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லஞ்ச-ஊழலுக்கு எதிராக தனி விசாரணை அமைப்பு தொடங்கிய முதல் மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவுக்கு உள்ளது.

லோக்ஆயுக்தா மற்றும் துணை லோக்ஆயுக்தா நீதிபதி நியமனம்: கர்நாடக மாநில லோக்ஆயுக்தாவுக்கு நீதிபதியாக நியமனம் செய்யப்படுபவர் உச்சநீதிமன்றம் நீதிபதியாகவோ அல்லது நாட்டில் எந்த மாநில உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் அல்லது ஓய்வு பெற்றவர் நியமனம் செய்யப்படுவர். அதேபோல் நாட்டில் எந்த மாநில உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றி வருபவர் அல்லது ஓய்வு பெற்றவர் துணை லோக்ஆயுக்தா நீதிபதியாக பணியில் அமர்த்தும் வகையில் லோக்ஆயுக்தா சட்டத்தில் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. 

மேலும் லோக்ஆயுக்தா நீதிபதி மற்றும் துணை நீதிபதியாக நியமனம் செய்யப்படுவோரின் பதவி காலம் 5 ஆண்டுகளாகும். அவருக்கு மாநில ஆளுநராக இருப்பவர் பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைப்பார். மேலும் நீதிபதி மற்றும் துணை நீதிபதிகளுக்கு உதவியாக வக்கீல்கள், அரசு வக்கீல்கள், போலீசார், தணிக்கையாளர்கள், பொறியாளர்கள் உள்ளனர். அவர்களை லோக்ஆயுக்தா நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்யாமல், பிற துறைகளில் இருந்து தற்காலிகமாக வரவழைத்து பயன்படுத்தி கொள்வார்கள்.

லஞ்ச வழக்குகள்: 

மாநிலத்தில் அரசு துறையில் நடக்கும் லஞ்ச-ஊழலை கட்டுப்படுத்த மாநில தலைநகர் பெங்களூருவில் லோக்ஆயுக்தா தலைமை அலுவலகம், அதில் பதிவு செய்யும் வழக்குகளை விசாரணை நடத்த தனியாக நீதிமன்றம் இயங்கிவருகிறது. மேலும் அனைத்து மாவட்ட தலைநகரிலும் லோக்ஆயுக்தாவுக்கு தனி போலீஸ் நிலையம் உள்ளது. இதில் ஐபிஎஸ் முடித்துள்ள எஸ்பி, ஏஎஸ்பி இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் தைரியமாக சென்று போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். புகாரை பெற்று கொள்ளும் போலீசார், உடனடியாக விசாரணை நடத்துவார். 

அதில் புகார்தாரரிடம் லஞ்சம் பெற்றது அல்லது கேட்டது உண்மை என்று உறுதியாகும் பட்சத்தில், அவர் மீது வழக்கு பதிவு செய்வதுடன், தகுந்த சாட்சியங்களுடன் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வார். நீதிமன்றம் விசாரணை நடத்தி லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு குற்றத்திற்கான தண்டனை வழங்கும். மேலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் அரசு அதிகாரி மற்றும் ஊழியர் மீது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக புகார் வந்தாலும், அது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் லோக்ஆயுக்தாவுக்கு உள்ளது.

பொதுமக்கள் குறைபாடுகள் தீர்வு: 

லோக்ஆயுக்தா என்பது லஞ்ச-ஊழல் புகாரை விசாரணை நடத்துவது, ஆட்சி நிர்வாகத்தை கண்காணிப்பது மட்டுமில்லாமல், பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் தார்மீக கடமையும் உள்ளது. அரசாங்கம் அல்லது அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால் பாதிக்கப்படும் நபர், தனக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு நியாயம் கேட்டு லோக்ஆயுக்தாவில் புகார் கொடுத்தால், அதை மனிதநேய அடிப்படையில் விசாரித்து நீதி வழங்கும் கடமையும் லோக்ஆயுக்தாவுக்குள்ளது. 

மேலும் அரசு ஊழியராக இருப்பவர் தனது பதவியை பயன்படுத்தி அவருக்கோ அல்லது அவரை சார்ந்தவருக்கோ லாபம் ஏற்படும் வகையில் செயல்பட்டாலோ அல்லது அரசாங்கத்தின் சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல், தனது அதிகாரத்தை துஷ்பிரியோகம் செய்து அவருக்கோ அல்லது அவரை சார்ந்தவருக்கு லாபமடைய செய்தால் லோக்ஆயுக்தா சட்டத்தின் படி அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் லோக்ஆயுக்தா நீதிபதிக்கு மட்டுமில்லாமல், மாவட்ட அளவில் இயங்கிவரும் லோக்ஆயுக்தா போலீசாருக்கும் உள்ளது. மேலும் அரசு அதிகாரி மற்றும் ஊழியர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் அலட்சியம் காட்டினாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமுள்ளது.

லோக்ஆயுக்தா சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படும் விஷயங்கள்: 

மாநிலத்தில் லஞ்ச-ஊழலை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள லோக்ஆயுக்தாவுக்கு தனியாக சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. நீதிபதி பொறுப்பில் உள்ளவருக்கு என்ன பணி, துணை நீதிபதிகள் என்னென்ன புகார்களை விசாரணை நடத்த வேண்டும், மாநில தலைநகரில் உள்ள லோக்ஆயுக்தா நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள அதிகாரம் என்ன? மாவட்ட அளவில் இயங்கிவரும் லோக்ஆயுக்தா போலீசாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணி என்ன? லோக்ஆயுக்தா என்னென்ன விஷயங்களை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் படைத்துள்ளது. 

அதன் கீழ் விசாரணைக்கு உள்ளாகும் விஷயங்கள் என்ன? மேலும் லோக்ஆயுக்தா சட்டத்தின் 2வது சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பாக கீழ் காணும் விஷயங்கள் வருமாறு.

01. மாநில பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் சில குற்ற செயல்களை விசாரணை நடத்தி எடுத்துள்ள நடவடிக்கைகளை லோக்ஆயுக்தா மூலம் மறு விசாரணைக்கு உட்படுத்த முடியாது.

02. அரசு துறை தொடர்பான புகார்கள் நீதிமன்றம் வரை கொண்டு செல்ல தகுதியானவையா? இல்லையா? என்பதை அதிகாரிகள் முடிவு செய்வதற்குள், அந்த பிரச்னை தொடர்பாக லோக்ஆயுக்தாவில் புகார் கொடுத்தாலும் விசாரணை நடத்தக்கூடாது.

03. வணிகர்கள் மற்றும் நுகர்வோர் இடையிலான விவகாரம் குறித்து விசாரணை நடத்த தனியாக நுகர்வோர் நீதிமன்றம் உள்ளது. அங்கு விசாரணை நடந்து வரும் சமயத்தில் லோக்ஆயுக்தாவில் விசாரணை நடக்ககூடாது. ஒருவேளை நுகர்வோர் நீதிமன்றத்தில் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என மனுதாரர் கருதினால், லோக்ஆயுக்தாவில் புகார் கொடுத்தால், அதை விசாரணை நடத்தலாம்.

04. பொது ஊழியர் தேர்வு (அரசு ஊழியர்), பதவி உயர்வு, சம்பளம், சம்பள உயர்வு, தவறு செய்யும்பட்சத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, ஓய்வு பெறும் வயது விவகாரம், அரசு ஊழியர்கள் சட்ட விதிமுறைகள், வருங்கால வைப்பு நிதி, சேவை நீட்டிப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட புகார்கள் குறித்து விசாரணை நடத்தலாம்.

05. அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படும் கவுரவ பதவிகள் மற்றும் விருதுகள் தொடர்பாக விஷயங்களை விசாரணை நடத்தலாம்.

விசாரணைக்கு உட்படாத விஷயங்கள்:
அரசாங்கத்தால் பாதிக்கப்படும் நபர் நீதிமன்றம், அரசு அதிகாரி அல்லது அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தில் மேல்முறையீடு செய்வது அல்லது சட்டத்தின் மூலம் வேறு வழியில் பரிகாரம் பெற வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அத்தகைய புகார்களை லோக்ஆயுக்தா அல்லது துணை லோக்ஆயுக்தா நீதிபதிகள் விசாரணை நடத்த முடியாது.

லோக்ஆயுக்தா அல்லது துணை லோக்ஆயுக்தா நீதிபதிகளின் சிபாரிசு மற்றும் அனுமதியுடன் தனி நபர் கொடுக்கும் புகாரை விசாரணை நடத்தி தீர்வு காண்பதற்காக தனியாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டாலோ அல்லது ஏற்கனவே அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் முன் நடந்து வரும் விசாரணையாக இருக்கும்பட்சத்தில், அதில் தீர்வு காணாத நிலையில், அத்தகைய புகாரை லோக்ஆயுக்தா அல்லது துணை லோக்ஆயுக்தா நீதிபதிகள் விசாரணை நடத்தும் அதிகார வட்டத்தில் வருவதில்லை.

அரசு அதிகார வர்க்கம் உள்பட லோக்ஆயுக்தா விசாரணைக்கு உட்பட்ட விஷயமாக இருக்கும்பட்சத்தில் அந்த புகார் தொடர்பாக மனுதாரரின் கவனத்திற்கு வந்த 6 மாதங்களுக்கும் முறைப்படி லோக்ஆயுக்தாவில் புகார் கொடுக்க வேண்டும். 6மாதம் கழித்து கொடுக்கப்படும் புகார் விசாரணைக்கு ஏற்கப்படாது. அதேபோல் ஒரு பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணை வேறு நீதிமன்றம் அல்லது விசாரணை கமிஷன் முன் நடந்து தீர்வு வழங்கப்பட்டால், அதில் பாதிக்கப்படுவோர் 5 ஆண்டுகளுக்குள் லோக்ஆயுக்தாவில் புகார் கொடுத்தால் விசாரிக்க முடியும். காலகெடு முடிந்தபின் கொடுக்கும் புகார் ஏற்க முடியாது. ஒருவேளை காலதாமதத்திற்கான காரணத்தை மனுதாரர் தெளிவான ஆதாரங்களுடன் தெரிவித்தால் விசாரணை நடத்தலாம்.

லோக்ஆயுக்தாவில் கொடுக்கப்படும் புகாரை உடனடியாக ஏற்று அவசரமாக விசாரணை நடத்த முடியாது. பொதுமக்கள் கொடுத்துள்ள புகாரில் உண்மை உள்ளதா? என்பதை அதிகாரிகள் ஒன்றுக்கு பத்துமுறை பல கோணங்களில் பரிசீலனை செய்வார்கள். அதில் புகாரில் உண்மை இருப்பது மேலோட்டமாக உறுதியானால் மட்டுமே முழு விசாரணைக்கு உத்தரவிடும்.

அரசு அதிகாரி அல்லது ஊழியரை தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நோக்கத்தில் அவர் தவறு செய்துள்ளதாக மனுதாரர் புகார் கொடுத்திருப்பது தெரியவந்தால், லோக்ஆயுக்தா அல்லது துணை லோக்ஆயுக்தா நீதிபதிகள் நடத்தி வரும் விசாரணையை பாதியில் நிறுத்துவதுடன், புகார்தாரர் கொடுத்துள்ள புகார் உண்மையா? என்பதை கண்டறிய போலீசாருக்கு உத்தரவிடலாம். அவர்கள் விசாரணை நடத்தி பொது ஊழியர் மீது கொடுத்துள்ள புகார் உண்மைக்கு புறம்பானது, பழிவாங்கும் நோக்கத்தில் கொடுக்கப்பட்டது என்பது தெரியவந்தால், புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் லோக்ஆயுக்தாவுக்கு உள்ளது. 

நன்றி : தினகரன் நாளிதழ் - 27.09.2016


ஆங்கிலம் - பிழையின்றி எழுத


ஆங்கிலத்தில் கதை, கட்டுரை பிழையின்றி 
எழுத என்ன செய்ய வேண்டும்?
ஆங்கிலத்தில் எழுத உதவிக் குறிப்புகள் 
நான் அனைவருமே, ஆங்கிலத்தில் பேச, எழுத விரும்புகிறோம். 

அயல் மொழியாக இல்லாமல், ஆங்கிலம் இரண்டாவது மொழியாக நம்முடன் கலந்து விட்டது. இருப்பினும் ஆங்கில மொழியைப் பிழை இன்றி எழுத நமக்குக் கல்லூரி படிப்பு முழுமையாகக் கை கொடுப்பதில்லை. மொழியைத் தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே, தெளிவாக அதனைக் கையாள முடியும். 

இந்த வகையில், நாம் பயன்படுத்தும் போது, குறிப்பாக எழுதும்போது, நமக்குப் பல சந்தேகங்கள் எழுதுவது இயற்கையே. இணையத்தில் ஆங்கில மொழிப் பயன்பாடு குறித்து குறிப்புகள் தருவதற்குப் பல தளங்கள் உள்ளன. 

சில தளங்கள் குறித்து, கம்ப்யூட்டர் மலரில் ஏற்கனவே தகவல்கள் தரப்பட்டுள்ளன. அண்மையில் இத்தகைய தளம் ஒன்றினைப் பார்க்க நேரிட்டது. அந்த தளம் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அத்தளத்தின் பெயர் Daily Writing Tips. 
தளம் கிடைக்கும் முகவரி http://www.dailywritingtips.com/ 

ஆங்கில மொழி இலக்கணம், டெக்ஸ்ட்டில் நிறுத்தற்குறிகள், சரியான எழுத்து பயன்படுத்தல், கதை எழுதுதல் மற்றும் குறிப்பிட்ட வகை ஆவணங்களைத் தயாரித்தல் ஆகியவை குறித்து இந்த தளம் குறிப்புகளைத் தருகிறது.

இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதன் இடது பக்கத்தில், எழுதுவது குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன. வலது பக்கத்தில், உதவிக் குறிப்புகள் வகைகள் வாரியாகத் தரப்படுகின்றன. அவை Business Writing, Mistakes, Expressions, Fiction Writing, Freelance Writing, General, Grammar, Grammar 101, Misused Words, Punctuation, Spelling, Style, Vocabulary, Word of the Day, Writing Basics, மற்றும் Usage Review என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த வகைப் பிரிவுக்கு மேலாக, தேடல் மெனு தரப்பட்டுள்ளது. இதில் நாம் நமக்குத் தேவைப்படும் பிரிவினை உள்ளீடு செய்து தேடி குறிப்புகளைப் பெறலாம். எடுத்துக் காட்டாக, Participles எனக் கொடுத்து, அவற்றைப் பயன்படுத்துவதில் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வுகளைப் பெறலாம். 

வகைப் பிரிவிற்குக் கீழாக, ஆங்கில மொழிப் பயன்பாடு குறித்த கட்டுரைகள் தரப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சில: 10 rules for writing numbers, Passed Vs Past, Creative Writing 101, 44 Resume writing tips, Among Vs Amongst என இந்தப் பட்டியல் நீள்கிறது.

மொத்தத்தில் நமக்கு ஆங்கில மொழிப் பயன்பாட்டில் ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த தளம் ஒரு தீர்வினைத் தருகிறது. சந்தேகம் இல்லை என்றாலும், ஆங்கில மொழிப் பயன்பாடு குறித்து கற்றுக் கொள்ளவும் இந்த இணைய தளம் பயனுள்ள ஒன்று. இன்றே பார்த்து, வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும், மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 05.12.2016

முகநூல் - பதிவுகளை நீக்க


முகநூலில் தங்களது முந்தைய பதிவுகளை நீக்க 
என்ன செய்ய வேண்டும்?
பேஸ்புக் இணைய தளம் பயன்பாட்டிற்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 2004 ஆம் ஆண்டில் இது இணைய தளத்தில் கிடைக்கத் தொடங்கினாலும், அப்போது அது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. 

2006 ஆம் ஆண்டு முதல், 13 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டது. இன்றைக்குப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. பலர், அதன் தொடக்க காலம் முதலே பயன்படுத்தி வருகின்றனர். 

அவர்கள், தற்போது பத்தாண்டுகளுக்கு முன் தாங்கள் பதிந்தது குறித்து வருத்தப்படலாம், வெட்கப்படலாம். அவற்றை நீக்க வேண்டும் என நினைக்கலாம். 

அவர்கள் எளிதாக, ஒவ்வோர் ஆண்டாக, ஒவ்வொரு மாதமாகத் தங்கள் பதிவுகளைத் தேடி அறிந்து, நீக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதை நீக்கலாம். 

முதலில் உங்கள் பக்கத்தினைத் திறக்கவும். பின் அதில் உள்ள Timeline பக்கத்தைத் தேர்ந்தெடுத்து, கீழாக ஸ்குரோல் செய்திடவும். இப்போது இடது புறம், உங்கள் படம், பெயர், Timeline, Recent என்று கிடைக்கும். 

இதில் Recent என்பதில் கிளிக் செய்தால், 2016 லிருந்து பின்னோக்கி ஆண்டுகள் கொண்ட மெனு கிடைக்கும். நீங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஆண்டைத் தேர்ந்தெடுத்தால், அருகில் உள்ள மாதங்கள் அடங்கிய மெனு கீழாக விரியும். இதில் குறிப்பிட்ட மாதத்தைத் தேர்ந்தெடுத்தால், அந்த மாதத்திய பதிவுகள் கிடைக்கும். 

அதில் உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்து, தேவையற்றவற்றை நீக்கலாம். நீக்குவதற்கு, குறிப்பிட்ட அந்த பதிவில், வலது மூலையில் உள்ள கீழ் நோக்கிய முக்கோண அடையாளத்தில் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Delete என்பதைத் தேர்ந்தெடுத்து நீக்கலாம்.

நீங்கள் உங்கள் பேஸ்புக் தளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், சரியாக அதே நாளில் சென்ற ஆண்டில் என்ன பதிவு செய்தீர்கள் என்று பார்க்க ஆவலா? 

இதற்கான இன்னொரு எளிய வழி உள்ளது. பேஸ்புக் தளத்தில் “On This Day” என்று ஒரு டூல் தரப்பட்டுள்ளது. இதன் மூலம், குறிப்பிட்ட ஒரு நாளில், பல ஆண்டுகளுக்கு முந்தைய பதிவுகளைக் காணலாம். 

உங்கள் பேஸ்புக் தளத்தைத் திறந்த பின்னர், பிரவுசரின் இன்னொரு டேப்பில், https://www.facebook.com/onthisday/ என்று முகவரியிட்டுச் செல்லவும். 

ஓராண்டுக்கு முன்னர் அதே நாளில் நீங்கள் செய்த பதிவுகள் காட்டப்படும். மீண்டும் என்டர் செய்தால், ஐந்து ஆண்டுகளுக்கு முன், அதே நாளில் செய்த பதிவுகளைப் பார்க்கலாம். பார்ப்பதுடன், தேவைப்பட்டால், நீக்கவும் மறைக்கவும் செய்திடலாம். இந்த செயல்பாட்டினை, மொபைல் சாதனங்களிலும் மேற்கொள்ள இயலும்.

நன்றி : தினமலர் நாளிதழ் – 05.12.2016

Wednesday, December 7, 2016

இரண்டு நாளில் பான் கார்டு


இரண்டு நாளில் பான்கார்டு பெற என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லை என்றாலும் பான் கார்டு வைத்திருப்பது நல்லது.

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரி செலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10 இலக்க எண்ணெழுத்தாகும். பான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம். 

முன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினை பெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டே நாட்களில் பான் கார்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

1. என்எஸ்டிஎல் இணையதளத்தில் உள்நுழைக 
என்எஸ்டிஎல் இணையதளத்தில் உள்நுழைந்த பிறகு உங்களுக்கான படிவத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் இணையம் அல்லது ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமா என்பதைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இணையம் மூலமாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

2. எந்த படிவம் என்பதைத் தேர்வு செய்யவும் 
வழிகாட்டுதல்களை வாசித்த பிறகு என்ன படிவம் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும் பின்னர் தேவையான விவரங்களைப் படிவத்தில் உள்ளிடவும்.

3. விண்ணப்பத்தை எப்படிச் சமர்ப்பிப்பது?
 படிவத்தை முழுவதுமாக நிரப்பிய பிறகு, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும். ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்களும் பதிவிறக்கிய படிவத்தை அச்சிட்டு அதில் விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர் தேவையான விவரங்களை இணைக்க வேண்டும்.

4. விண்ணப்பத்தின் நிலை கண்டறிக 
விண்ணப்பத்தைப் பதிவேற்றிய பிறகு உங்களுக்கு ஒப்புகை எண் ஒன்று கிடைக்கும், அதை வைத்துக்கொண்டு https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html என்ற இணைப்பிற்குச் சென்று உங்கள் விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்று சரிபார்த்துக்கொள்ளலாம். இப்படிச் செய்யும் போது உங்களுக்கு எப்போதும் போல பான் கார்டினை பெற 15 முதல் 20 நாட்கள் வரை ஆகும். எனவே இங்குத் தெரிவினை பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்.

5. 48 மணி நேரத்தில் பான் கார்டு 
படிவத்தினை சமர்ப்பித்த பிறகு நீங்கள் சரிபார்ப்பு முறை படிகளை செய்ய வேண்டும். உங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லை என்றாலும் பான் கார்டு வைத்திருப்பது நல்லது.

Written by: Tamilarasu 

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள்  - 07.12.2016

Sunday, December 4, 2016

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்


சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்
சென்னை: 'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவரை, 180 நாட்கள் வரை காவலில் வைக்க, மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மார்ச் மாதம், ரிஸ்வான் ஷெரிப் என்பவர் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார். அவ்வப்போது, அவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது. 90 நாட்கள் கடந்த பின், காவல் நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, ரிஸ்வான் தரப்பில் காவல் நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், 'கைது செய்யப்பட்டு, 90 நாட்கள் முடிந்த பின், காவல் நீட்டிப்பு செய்ய, மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரமில்லை; எனவே, காவல் நீட்டிப்பு சட்ட விரோதமானது' என, கூறப்பட்டது. 

மனுவை, நீதிபதிகள் ஜெய்சந்திரன், பாஸ்கரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. போலீஸ் தரப்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம், 'புலன் விசாரணையை முடிக்க, மாஜிஸ்திரேட்டிடம் அவகாசம் கேட்கப்பட்டது; சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் காவல் நீட்டிப்பு செய்ய, மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது' என்றார்.

அதைத் தொடர்ந்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், 180 நாட்கள் வரை காவல் நீட்டிப்பு செய்ய, மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது. 

காவல் நீட்டிப்பு செய்வதற்கான முகாந்திரங்கள் இருப்பதாக கருதினால் அந்த நடவடிக்கையை, மாஜிஸ்திரேட் மேற்கொள்ளலாம்.

இந்த வழக்கை பொறுத்தவரை, காவல் நீட்டிப்பு செய்வதற்கு தேவையான நடைமுறையை மாஜிஸ்திரேட் பின்பற்றிஉள்ளார். எனவே, காவல் நீட்டிப்பு செய்ததில் நடைமுறை மீறல் எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் – 03.12.2016

Thursday, December 1, 2016

பிரசவ கால சிக்கல்கள்

பிரசவகால சிக்கல்கள் - என்ன செய்ய வேண்டும்?
பெரும்பாலான பிரசவங்கள் சுகப் பிரசவமாகவே நிகழ்கின்றன. ஆனால், சிலருக்குச் சிக்கலானதாக மாறிவிடுகின்றன. இதற்கு, தாயின் உடல்நிலையும் சிசுவின் உடல்நிலையும் காரணமாக இருக்கின்றன. 
சில நேரங்களில், கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் பெண்ணுக்கு இருந்த சில பிரச்னைகள்கூட கர்ப்ப காலத்தையும் பிரசவத்தையும் சிக்கலானதாக மாற்றிவிடுகின்றன. இதை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தாய், சேய் இருவரின் உயிரையும் காப்பாற்ற முடியும். 
போதுமான மருத்துவ வசதியின்மை, மருத்துவ வசதி பெற நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டிய நிலை, வறுமை, போதுமான விழிப்புணர்வு இன்மை உள்ளிட்ட காரணங்களால் பல கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு வருவது இல்லை.
கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள்…
❤  கருச்சிதைவு, இறந்தே பிறப்பது.
❤  உயர் ரத்த அழுத்தம்.
❤  கர்ப்ப கால சர்க்கரைநோய்.
`ப்ரீஎக்ளாம்சியா’ (Preeclampsia) எனப்படும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலை.
❤ குறை பிரசவம்.
பிரசவ காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள்:
❤ பிரசவ வலி ஏற்படும். ஆனால் குழந்தையின் தலை கீழே இறங்காது. இதற்கு பெண்ணின் இடுப்புப் பகுதி, குழந்தை வெளிவரும் பாதையின் அளவில் குறைபாடு இருக்கலாம். இதை அப்ஸ்ட்ரக்டட் லேபர் (Obstructed labour) என்று சொல்வோம். இந்தச் சூழலில் சிசேரியன் செய்வதுதான் நல்லது.
பிரசவத்துக்குப் பிறகு, கர்ப்பப்பை சுருங்க வேண்டும். சில பெண்களுக்கு, சுருங்காமல் ரத்தப்போக்கு ஏற்படும். அதிக ரத்தப்போக்கு உயிரிழப்பை ஏற்படுத்தலாம்.
சிலருக்கு குழந்தையின் தலை வெளியே வருவதற்குப் பதிலாக கால் முதலில் வெளியே வரும். ஆனால், சிலருக்கு குழந்தையின் அதிக உடல் எடை காரணமாக தோள்பட்டை வெளியே வராது. இதனால், குழந்தைக்கு காயமோ உயிரிழப்போ ஏற்படலாம்.
தாய்சேயை காக்கும் வழிகள் என்னென்ன?
❤ கர்ப்பிணிகளுக்கு, பிரசவத்துக்கு முன், பிரசவத்தின்போது, பிரசவத்துக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த விழிப்புஉணர்வை அளிக்க வேண்டும்.
❤ கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன்பிருந்தே ஃபோலிக் அமிலம்  சாப்பிடுவது, கர்ப்பம் தரித்த பிறகு டாக்டர் பரிந்துரைப்படி கால்சியம், இரும்புச்சத்து மாத்திரையை எடு்த்துக்கொள்ள வேண்டும்.
❤ கர்ப்பம் தரித்த பிறகு, மாதத்துக்கு ஒருமுறை கட்டாயம் மகப்பேறு மருத்துவரை சந்தித்து, எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவற்றைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
❤ ப்ரீஎக்ளாம்சியா பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தால், உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் எக்ளாம்சியா என்ற உயிருக்கு ஆபத்தான நிலைக்கு செல்வதைத் தடுக்கலாம்.
❤ மூன்று மற்றும் 5-வது மாதத்தில் ஸ்கேன் செய்து குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் அல்லது ஏதேனும் உடல் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
❤ கை தேர்ந்த மருத்துவர்கள் இருக்கும் இடத்தில் பிரசவம் நிகழ வேண்டும். அப்போதுதான், பிரசவச் சிக்கல் இருந்தால், விரைவான நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
❤ பிரசவ கால பாதிப்புகளில் அடுத்த முக்கியக் காரணியாக இருப்பது, நோய்த்தொற்றுக்கள். சரியான நேரத்தில் நோய்த்தொற்றைத் தவிர்த்து, தடுப்பூசி எடுத்துக்கொள்வது போன்ற பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதால் தாய் சேயை நலனைப் பாதுகாக்கலாம்.
டாக்டர்கள் இலவச சேவை!
`உலக அளவில் ஒவ்வொரு நாளும் 830 கர்ப்பிணிகள் பிரசவச் சிக்கல் காரணமாக உயிரிழக்கின்றனர்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். இதில் 99 சதவிகித உயிரிழப்புகள், வளரும் நாடுகளில் நடக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பிரசவங்களில், 178 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
 இந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட, சில கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் ஒரு முறைகூட மகப்பேறு மருத்துவரை சந்திக்காததுதான் காரணம். இந்தக் குறையைப் போக்க, ‘ஒவ்வொரு மாதமும் 9-ம் தேதி ஒருநாள் மட்டும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்கள், ரேடியாலஜி நிபுணர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து கர்ப்பிணிகளுக்கு இலவசப் பரிசோதனை, ஆலோசனை வழங்க வேண்டும்’ என்று பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கான புதிய திட்டம் ஒன்றை யுனிசெஃப் துணையுடன் மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தில் சேர்ந்து சேவை செய்ய விரும்பும் மருத்துவர்கள் http://pmsma.nhp.gov.in என்ற இணை தளத்தில் நேரடியாக தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். 5616115 என்ற எண்ணுக்கு PMSMA (பெயர்) டைப் செய்து அனுப்புவது அல்லது 1800 180 1104 என்ற டோல் ஃப்ரீ எண்ணை அழைப்பதன் மூலம் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.
நன்றி : டாக்டர் விகடன் – 01.12.2016

காய்கறிகள் நல்லதாக வாங்க


காய்கறிகள் நல்லதாக வாங்க என்ன செய்ய வேண்டும்?

மைத்த உணவு சுவையாக இருக்கவேண்டும் என்றால், வாங்கும் காய்கறிகள் நல்லதாக இருக்கவேண்டும். சிலருக்கு காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும் என்பது பிடிபடுவதில்லை. ஒவ்வொரு காய்கறியையும் எப்படி தரம் பார்த்து வாங்கவேண்டும். அப்படி, நீங்கள் வாங்கும் காய்கறிகளில் அவசியம் கவனிக்க வேண்டியவை இதோ:
1. உருளைக்கிழங்கு: தழும்புகள், ஓட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும். பச்சையாகவோ அல்லது பச்சை நிறத்தழும்புகள் இருந்தாலோ தவிர்க்கவும். தோல் சுருங்கியவற்றையும் வாங்கக்கூடாது. விரல் நகத்தினால் கீறினால் தோல் வரவேண்டும். இதுதான் நல்ல உருளைக்கிழங்குக்கு அடையாளம். சுவையாகவும் இருக்கும்.
2. முருங்கைக்காய்: கரும்பச்சை நிறத்திலும் சற்று உருண்டையாகவும் இருக்கும் முருங்கைக்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் உள்ளே சதை இருக்காது என்பதால் தவிர்க்கவும். இரு முனைகளைப் பிடித்து லேசாக முறுக்கினால் வளைத்துகொடுக்கவேண்டும். அதுவே இளசான காய். அதுவே முறுக்கும்போது மளமளவென்று சத்தம் கேட்டால், அது முற்றல். தவிர்க்கவும்.
3. முள்ளங்கி: காய் நீண்டு, தலைப்பகுதி காம்பு நிறம் மாறி வாடிவிடாமல் பச்சையாக இருக்க வேண்டும். நகத்தால் லேசாகக் கீறிப் பார்க்கும்போது தோல் மென்மையாக இருந்தால் அது இளசு, சமைக்க உகந்தது.
4. பீன்ஸ்: ஃப்ரெஷ் பீன்ஸ் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். உடைத்தால் பட்டென்று உடையும். அதுதான் சமையலுக்குச் சுவையாக இருக்கும். வெளிர்பச்சை நிறத்தில் இருந்தால் அது முற்றிய பீன்ஸ். நாள்பட்ட பீன்ஸும்  வதங்கி வெளிர்பச்சையாகக் காட்சிகளிக்கும்; தவிர்க்கவும்.
5. கத்தரிக்காய்: ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும் என்பதால், சிறு ஓட்டைகூட இல்லாமல் நன்றாகப் பார்த்து வாங்கவேண்டும். காம்பு நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல் என்று அர்த்தம். காய் முழுக்க ஒரே நிறத்தில் பளபளவென்று இருப்பது நல்ல காய். பச்சை நிறத்தில் உள்ள கத்தரிக்காய் மீது வெள்ளை வரிகள் இருந்தால் அது கசக்கும்.
6. வாழைக்காய்: காம்பு ஒடிந்த இடத்தில் வெள்ளையாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. வாங்கி வந்தபிறகு சுத்தமாகக் கழுவிவிட்டு தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.
7. வெண்டைக்காய்: பச்சை நிறத்தில் இருக்கவேண்டும். நுனியை உடைத்தால் படக்கென்று உடையவேண்டும், அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்தாலோ, இரண்டாகப் பிளந்தாலோ அல்லது காம்பு சுருங்கியிருந்தாலோ அது முற்றல்.
8. முட்டைக்கோஸ்: இலைகள் வெள்ளையாக இருக்கக்கூடாது; பச்சை உள்ளவையாகப் பார்த்து வாங்கவேண்டும். அதுதான் இளசு. முட்டைக்கோஸ் அளவில் சிறியதாகவும் கனமாகவும் இருந்தால் சுவையாக இருக்கும். நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருக்கவேண்டும். தவறினால் அது பழையது என்று அர்த்தம்.
9. சேப்பங்கிழங்கு: நீண்டிருக்கும் கிழங்கு சுவை தராது. உருண்டையாக இருக்கும் சேப்பங்கிழங்காகப் பார்த்து வாங்கவும். மேலே கீறிப் பார்த்தால் உள்ளே வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு.
10. பீர்க்கங்காய்: பார்ப்பதற்கு பச்சைப் பசேல் என்று இருப்பதை வாங்கவேண்டும். மேலும் அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்கவேண்டும். காயின் மேல் நரம்புகள் எடுப்பாகவும் வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றல் என்று அர்த்தம்.
11. மாங்காய்: தேங்காயைக் காதருகே வைத்து தட்டிப் பார்ப்பது போல மாங்காயையும் தட்டிப் பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போது சத்தம் வந்தால் அந்த மாங்காயில் கொட்டை சிறியதாக இருக்கும், சதைப்பகுதி நிறைந்திருக்கும்.
12. பச்சை மிளகாய்: காயும் காம்பும் பச்சையாக இருந்தால் ஃப்ரெஷாக இருக்கும். காம்புகள் சுருங்கி, கறுத்தப் போயிருந்தால் பழையது என்று அர்த்தம். மிளகாய் நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். அதுவே குண்டாக இருந்தால் காரம் அதிகமாக இருக்கும்.
13. சௌசௌ: காயின் மேல் பகுதியில் விரிசல்கள் பெரியதாக இல்லாதபடி பார்த்து வாங்கவும். விரிசல்கள் பெரியதாக இருந்தால் அது முற்றிய காய்.
14. அவரைக்காய்: ஒவ்வொரு காயையும் தொட்டுப் பார்க்கவும். அதில் விதைகள் பெரியதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும். இளசாக இருக்கும் காய்களில் விதைகள் சிறியதாக இருக்கும், நார் அதிகம் இருக்காது.
15. கோவைக்காய்: முழுவதும் பச்சையாக இருக்கவேண்டும். இளம் சிவப்பு, மஞ்சள் இருக்கும் காய்களை வாங்க வேண்டாம். அது பழுக்கும் நிலையில் இருப்பதால் ருசி இல்லாமல் இருக்கும்.
-என்.மல்லிகார்ஜுனா
நன்றி : விகடன் செய்திகள் – 02.12.2016