லோக் ஆயுக்தா - என்ன செய்ய வேண்டும்?
நாட்டில் லோக்ஆயுக்தா நீதிமன்றம் அமைத்த முதல் மாநிலம் கர்நாடகம் - சட்டம் ஒரு எட்டும் கனி
நாட்டில் வேகமாக பெருகிவரும் லஞ்ச-ஊழலை கட்டுபடுத்தும் நோக்கத்தில் கடந்த 1988ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அச்சட்டம் அமலில் இருந்தபோதும், சரியாக செயல்படவில்லை. அதை தொடர்ந்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலங்களில் லோக்ஆயுக்தா அமைக்கப்பட்டது. லோக்ஆயுக்தா என்றால் லஞ்சம் வாங்குவோரை கையும், களவுமாக பிடித்து விசாரணைக்கு உட்படுத்தும் ஒரு அமைப்பு மட்டுமே என்ற எண்ணம் மக்கள் மத்தியில் சமானியமாக உள்ளது.
லஞ்சம் வாங்குவோரை பிடித்து விசாரணை நடத்துவது லோக்ஆயுக்தா சட்டத்தில் ஒரு அம்சம் மட்டுமே. அதனுடன் ஆட்சி நிர்வாகத்தில் நடக்கும் ஏற்ற-தாழ்வு, லஞ்ச-ஊழல், ஆட்சி இயந்திரம் சரியாக செயல்படாமல் இருப்பது உள்பட லோக்ஆயுக்தாவிடம் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் உள்ளது. நாட்டில் லோக்ஆயுக்தா அமைப்பு கடந்த 1988ம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், கர்நாடக மாநில முதல்வராக இராமகிருஷ்ண ஹெக்டே இருந்தபோது கடந்த 1984ம் ஆண்டு லோக்ஆயுக்தா அமைப்பை மாநிலத்தில் தொடங்கினார்.
இதன் மூலம் லோக்ஆயுக்தாவின் பணி லஞ்ச-ஊழல்வாதிகளை கண்டுப்பிடிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகத்தை கண்காணிக்கும் பொறுப்பும் அதனிடம் உள்ளது. அரசு அதிகாரிகள் மட்டுமில்லாமல் ஊழியர்கள் மீது பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் கொடுத்தால், அதையேற்று விசாரணை நடத்தி, தவறு செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாநில அரசுக்கு சிபாரிசு செய்யும் பொறுப்பும் லோக்ஆயுக்தாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லஞ்ச-ஊழலுக்கு எதிராக தனி விசாரணை அமைப்பு தொடங்கிய முதல் மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவுக்கு உள்ளது.
லோக்ஆயுக்தா மற்றும் துணை லோக்ஆயுக்தா நீதிபதி நியமனம்: கர்நாடக மாநில லோக்ஆயுக்தாவுக்கு நீதிபதியாக நியமனம் செய்யப்படுபவர் உச்சநீதிமன்றம் நீதிபதியாகவோ அல்லது நாட்டில் எந்த மாநில உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் அல்லது ஓய்வு பெற்றவர் நியமனம் செய்யப்படுவர். அதேபோல் நாட்டில் எந்த மாநில உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றி வருபவர் அல்லது ஓய்வு பெற்றவர் துணை லோக்ஆயுக்தா நீதிபதியாக பணியில் அமர்த்தும் வகையில் லோக்ஆயுக்தா சட்டத்தில் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் லோக்ஆயுக்தா நீதிபதி மற்றும் துணை நீதிபதியாக நியமனம் செய்யப்படுவோரின் பதவி காலம் 5 ஆண்டுகளாகும். அவருக்கு மாநில ஆளுநராக இருப்பவர் பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைப்பார். மேலும் நீதிபதி மற்றும் துணை நீதிபதிகளுக்கு உதவியாக வக்கீல்கள், அரசு வக்கீல்கள், போலீசார், தணிக்கையாளர்கள், பொறியாளர்கள் உள்ளனர். அவர்களை லோக்ஆயுக்தா நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்யாமல், பிற துறைகளில் இருந்து தற்காலிகமாக வரவழைத்து பயன்படுத்தி கொள்வார்கள்.
லஞ்ச வழக்குகள்:
மாநிலத்தில் அரசு துறையில் நடக்கும் லஞ்ச-ஊழலை கட்டுப்படுத்த மாநில தலைநகர் பெங்களூருவில் லோக்ஆயுக்தா தலைமை அலுவலகம், அதில் பதிவு செய்யும் வழக்குகளை விசாரணை நடத்த தனியாக நீதிமன்றம் இயங்கிவருகிறது. மேலும் அனைத்து மாவட்ட தலைநகரிலும் லோக்ஆயுக்தாவுக்கு தனி போலீஸ் நிலையம் உள்ளது. இதில் ஐபிஎஸ் முடித்துள்ள எஸ்பி, ஏஎஸ்பி இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் தைரியமாக சென்று போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். புகாரை பெற்று கொள்ளும் போலீசார், உடனடியாக விசாரணை நடத்துவார்.
அதில் புகார்தாரரிடம் லஞ்சம் பெற்றது அல்லது கேட்டது உண்மை என்று உறுதியாகும் பட்சத்தில், அவர் மீது வழக்கு பதிவு செய்வதுடன், தகுந்த சாட்சியங்களுடன் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வார். நீதிமன்றம் விசாரணை நடத்தி லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு குற்றத்திற்கான தண்டனை வழங்கும். மேலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் அரசு அதிகாரி மற்றும் ஊழியர் மீது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக புகார் வந்தாலும், அது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் லோக்ஆயுக்தாவுக்கு உள்ளது.
பொதுமக்கள் குறைபாடுகள் தீர்வு:
லோக்ஆயுக்தா என்பது லஞ்ச-ஊழல் புகாரை விசாரணை நடத்துவது, ஆட்சி நிர்வாகத்தை கண்காணிப்பது மட்டுமில்லாமல், பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் தார்மீக கடமையும் உள்ளது. அரசாங்கம் அல்லது அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால் பாதிக்கப்படும் நபர், தனக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு நியாயம் கேட்டு லோக்ஆயுக்தாவில் புகார் கொடுத்தால், அதை மனிதநேய அடிப்படையில் விசாரித்து நீதி வழங்கும் கடமையும் லோக்ஆயுக்தாவுக்குள்ளது.
மேலும் அரசு ஊழியராக இருப்பவர் தனது பதவியை பயன்படுத்தி அவருக்கோ அல்லது அவரை சார்ந்தவருக்கோ லாபம் ஏற்படும் வகையில் செயல்பட்டாலோ அல்லது அரசாங்கத்தின் சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல், தனது அதிகாரத்தை துஷ்பிரியோகம் செய்து அவருக்கோ அல்லது அவரை சார்ந்தவருக்கு லாபமடைய செய்தால் லோக்ஆயுக்தா சட்டத்தின் படி அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் லோக்ஆயுக்தா நீதிபதிக்கு மட்டுமில்லாமல், மாவட்ட அளவில் இயங்கிவரும் லோக்ஆயுக்தா போலீசாருக்கும் உள்ளது. மேலும் அரசு அதிகாரி மற்றும் ஊழியர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் அலட்சியம் காட்டினாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமுள்ளது.
லோக்ஆயுக்தா சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படும் விஷயங்கள்:
மாநிலத்தில் லஞ்ச-ஊழலை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள லோக்ஆயுக்தாவுக்கு தனியாக சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. நீதிபதி பொறுப்பில் உள்ளவருக்கு என்ன பணி, துணை நீதிபதிகள் என்னென்ன புகார்களை விசாரணை நடத்த வேண்டும், மாநில தலைநகரில் உள்ள லோக்ஆயுக்தா நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள அதிகாரம் என்ன? மாவட்ட அளவில் இயங்கிவரும் லோக்ஆயுக்தா போலீசாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணி என்ன? லோக்ஆயுக்தா என்னென்ன விஷயங்களை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் படைத்துள்ளது.
அதன் கீழ் விசாரணைக்கு உள்ளாகும் விஷயங்கள் என்ன? மேலும் லோக்ஆயுக்தா சட்டத்தின் 2வது சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பாக கீழ் காணும் விஷயங்கள் வருமாறு.
01. மாநில பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் சில குற்ற செயல்களை விசாரணை நடத்தி எடுத்துள்ள நடவடிக்கைகளை லோக்ஆயுக்தா மூலம் மறு விசாரணைக்கு உட்படுத்த முடியாது.
02. அரசு துறை தொடர்பான புகார்கள் நீதிமன்றம் வரை கொண்டு செல்ல தகுதியானவையா? இல்லையா? என்பதை அதிகாரிகள் முடிவு செய்வதற்குள், அந்த பிரச்னை தொடர்பாக லோக்ஆயுக்தாவில் புகார் கொடுத்தாலும் விசாரணை நடத்தக்கூடாது.
03. வணிகர்கள் மற்றும் நுகர்வோர் இடையிலான விவகாரம் குறித்து விசாரணை நடத்த தனியாக நுகர்வோர் நீதிமன்றம் உள்ளது. அங்கு விசாரணை நடந்து வரும் சமயத்தில் லோக்ஆயுக்தாவில் விசாரணை நடக்ககூடாது. ஒருவேளை நுகர்வோர் நீதிமன்றத்தில் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என மனுதாரர் கருதினால், லோக்ஆயுக்தாவில் புகார் கொடுத்தால், அதை விசாரணை நடத்தலாம்.
04. பொது ஊழியர் தேர்வு (அரசு ஊழியர்), பதவி உயர்வு, சம்பளம், சம்பள உயர்வு, தவறு செய்யும்பட்சத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, ஓய்வு பெறும் வயது விவகாரம், அரசு ஊழியர்கள் சட்ட விதிமுறைகள், வருங்கால வைப்பு நிதி, சேவை நீட்டிப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட புகார்கள் குறித்து விசாரணை நடத்தலாம்.
05. அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படும் கவுரவ பதவிகள் மற்றும் விருதுகள் தொடர்பாக விஷயங்களை விசாரணை நடத்தலாம்.
விசாரணைக்கு உட்படாத விஷயங்கள்:
அரசாங்கத்தால் பாதிக்கப்படும் நபர் நீதிமன்றம், அரசு அதிகாரி அல்லது அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தில் மேல்முறையீடு செய்வது அல்லது சட்டத்தின் மூலம் வேறு வழியில் பரிகாரம் பெற வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அத்தகைய புகார்களை லோக்ஆயுக்தா அல்லது துணை லோக்ஆயுக்தா நீதிபதிகள் விசாரணை நடத்த முடியாது.
லோக்ஆயுக்தா அல்லது துணை லோக்ஆயுக்தா நீதிபதிகளின் சிபாரிசு மற்றும் அனுமதியுடன் தனி நபர் கொடுக்கும் புகாரை விசாரணை நடத்தி தீர்வு காண்பதற்காக தனியாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டாலோ அல்லது ஏற்கனவே அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் முன் நடந்து வரும் விசாரணையாக இருக்கும்பட்சத்தில், அதில் தீர்வு காணாத நிலையில், அத்தகைய புகாரை லோக்ஆயுக்தா அல்லது துணை லோக்ஆயுக்தா நீதிபதிகள் விசாரணை நடத்தும் அதிகார வட்டத்தில் வருவதில்லை.
அரசு அதிகார வர்க்கம் உள்பட லோக்ஆயுக்தா விசாரணைக்கு உட்பட்ட விஷயமாக இருக்கும்பட்சத்தில் அந்த புகார் தொடர்பாக மனுதாரரின் கவனத்திற்கு வந்த 6 மாதங்களுக்கும் முறைப்படி லோக்ஆயுக்தாவில் புகார் கொடுக்க வேண்டும். 6மாதம் கழித்து கொடுக்கப்படும் புகார் விசாரணைக்கு ஏற்கப்படாது. அதேபோல் ஒரு பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணை வேறு நீதிமன்றம் அல்லது விசாரணை கமிஷன் முன் நடந்து தீர்வு வழங்கப்பட்டால், அதில் பாதிக்கப்படுவோர் 5 ஆண்டுகளுக்குள் லோக்ஆயுக்தாவில் புகார் கொடுத்தால் விசாரிக்க முடியும். காலகெடு முடிந்தபின் கொடுக்கும் புகார் ஏற்க முடியாது. ஒருவேளை காலதாமதத்திற்கான காரணத்தை மனுதாரர் தெளிவான ஆதாரங்களுடன் தெரிவித்தால் விசாரணை நடத்தலாம்.
லோக்ஆயுக்தாவில் கொடுக்கப்படும் புகாரை உடனடியாக ஏற்று அவசரமாக விசாரணை நடத்த முடியாது. பொதுமக்கள் கொடுத்துள்ள புகாரில் உண்மை உள்ளதா? என்பதை அதிகாரிகள் ஒன்றுக்கு பத்துமுறை பல கோணங்களில் பரிசீலனை செய்வார்கள். அதில் புகாரில் உண்மை இருப்பது மேலோட்டமாக உறுதியானால் மட்டுமே முழு விசாரணைக்கு உத்தரவிடும்.
அரசு அதிகாரி அல்லது ஊழியரை தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நோக்கத்தில் அவர் தவறு செய்துள்ளதாக மனுதாரர் புகார் கொடுத்திருப்பது தெரியவந்தால், லோக்ஆயுக்தா அல்லது துணை லோக்ஆயுக்தா நீதிபதிகள் நடத்தி வரும் விசாரணையை பாதியில் நிறுத்துவதுடன், புகார்தாரர் கொடுத்துள்ள புகார் உண்மையா? என்பதை கண்டறிய போலீசாருக்கு உத்தரவிடலாம். அவர்கள் விசாரணை நடத்தி பொது ஊழியர் மீது கொடுத்துள்ள புகார் உண்மைக்கு புறம்பானது, பழிவாங்கும் நோக்கத்தில் கொடுக்கப்பட்டது என்பது தெரியவந்தால், புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் லோக்ஆயுக்தாவுக்கு உள்ளது.
நன்றி : தினகரன் நாளிதழ் - 27.09.2016