சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க
கட்சிகளுக்கு தடை:
சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க கட்சிகளுக்கு தடை:
முக்கியத்துவம் வாய்ந்த ‘இந்துத்துவா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்பது சட்டவிரோத செயல். அரசியல்வாதிகள் யாரும் அதுபோல் வாக்கு கேட்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை தேர்தலின் போது, பாஜக வைச் சேர்ந்த மனோகர் ஜோஷி, இந்துத்துவா கொள்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி என்.பி.பாட்டீல் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
‘இந்துத்துவா வழக்கு’ என்று பெயர் பெற்ற இவ்வழக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. கடந்த 1995 ம் ஆண்டு இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, ‘‘இந்துத்துவா என்பது மக்களின் வாழ்க்கை முறை. அதன் அடிப்படையில் வாக்கு சேகரித்தால் வேட்பாளரை பாதிக்காது’’ என்று தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புடைய வேறு சில மனுக் களும் சேர்க்கப்பட்டன. குறிப்பாக மும்பை சான்டாகுரூஸ் சட்டப் பேரவை தொகுதியில் கடந்த 1990-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் அபிராம் சிங் என்பவர் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த பாம்பே உயர் நீதிமன்றம், அபிராம் சிங்கின் தேர்தல் வெற்றியை ஒதுக்கிவிட்டது. இதை எதிர்த்து அவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் இந்துத்துவா வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின்போது, ஒரு மதத்தின் தலைவர், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்கும்படி தன்னுடைய ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123-ன்படி சட்டவிரோத செயலா? என்ற முக்கிய கேள்வி முன்வைக்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த அமர்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட், எம்.பி.லோகுர், எஸ்.ஏ.பாப்தே, எல்.என்.ராவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த அக்டோபர் 27-ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், எம்.பி.லோகுர், எஸ்.ஏ.பாப்தே, எல்.என்.ராவ் ஆகிய 4 பேர் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
சாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் தேர்தலில் வாக்கு சேகரிப்பது சட்டவிரோதமானது, முறையற்ற செயல். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123(3) பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘அவரது மதம்’ என்பது சட்டவிரோத நடவடிக்கைகளை பற்றியது. இங்கு மதம் என்பது வாக்காளர்கள், வேட்பாளர்கள், அவர்களுடைய ஏஜென்ட்கள் என அனைவரையும் குறிக்கும்.
இதுபோன்ற பிரச்சினைகளை கையாளும்போது மதச்சார்பின் மையையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே, தேர்தல் சட்ட விதிகளின்படி சாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மதச்சார்பற்றவை. மக்களுக்கும் அவர்கள் வழிபடும் நபர்களுக்கும் உள்ள உறவு என்பது தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. எனவே, ஜாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிக்க முடியாது
இவ்வாறு 4 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
எனினும், யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய 3 நீதிபதிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள‘அவரது மதம்’ என்பது வேட்பாளரின் மதத்தை மட்டும்தான் குறிப்பிடுகிறது என்று கருத்து தெரிவித்தனர். எனினும், பெரும்பான்மை அடிப்படையில் 4 நீதிபதிகள் ஒரே கருத்தில் தீர்ப்பை நேற்று வெளியிட்டனர்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, விரும்பும் மதத்தை பின்பற்றவும், அதைப் பற்றி பிரச்சாரம் செய்யவும் எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், தேர்தலுக்காக அந்த மதத்தை பயன்படுத்தலாமா என்ற கேள்வியும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 02.01.2017