disalbe Right click

Wednesday, January 11, 2017

நோயாளிகளின் உரிமைகள்


நோயாளிகளின் உரிமைகள்

நன்றி குங்குமம் டாக்டர் (சிறப்பு கட்டுரை)
‘அசந்தா அடிக்கறது உங்க பாலிசி... அசராம அடிக்கறது பாபா பாலிசி’ என்ற ரஜினி டயலாக் மாதிரி ‘நோயாளிகள் கொஞ்சம் அசந்தால்.. அசராமல் அடிப்பதுதான் பல மருத்துவமனைகளின் பாலிசி’யாக இருக்கிறது. நாம் ஏமாளியாக இருந்துகொண்டு  மற்றவர்களைக் குறை சொல்லிப் பயன் இல்லைதான்.

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?

‘நம் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொண்டு விழிப்புணர்வோடு இருந்தால் மருத்துவமனைகளின் மோசடிகளிலிருந்து தப்பிக்க முடியும்’ என்பதற்கான வழிமுறைகளை  விளக்குகிறார் நுகர்வோர் அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன்.

* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ன்படி நோயாளிகளுக்குப் பல உரிமைகள் உள்ளன. இதன்படி மருத்துவ அஜாக்கிரதை, அலட்சியம் என்பதின் கீழ் மருத்துவ சேவை குறைபாடுகள்  குறித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றம் அல்லது மாநில மற்றும் தேசிய அளவிலான நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில்  புகார் மற்றும் மேல்முறையீடு செய்து உரிய நிவாரணம் பெறலாம். இந்தச் சட்டத்தின்படி உள்ள உரிமைகளைப் பற்றி பார்ப்போம்.

* ஒரு மருத்துவரிடம் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு, உடல் மற்றும் மனதளவில் எந்த பாதிப்பும்  ஏற்படாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது. மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் எந்த சூழ்நிலையிலும்  நோயாளிகளைத் தாக்கவோ, காயப்படுத்தவோ, இழிவான சொற்களால் புண்படுத்திப் பேசவோ கூடாது. அவர்களது உடலை மிகுந்த  கவனத்துடன் மருத்துவ சேவையாளர்கள் கையாள வேண்டும்.

* தீ, வெள்ளம், அசுத்தமான தண்ணீர், மின்சாரக் கசிவு, தாவரக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளால் நோயாளிகளுக்கு ஆபத்து  ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் மருத்துவமனைகள் கட்டப்பட வேண்டும்.

மருத்துவ சாதனங்கள், மருத்துவமனை படுக்கைகள் முதல் எந்திரங்கள், மின்சார சாதனங்கள் மற்றும் ரசாயனங்களால் பாதிப்புகள்  ஏற்படாதவாறு அவற்றை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும்போது தப்பிக்க தகுந்த வழிகள் இருக்க வேண்டும்.

* மருத்துவமனையில் நோயாளியின் தேவைகளுக்கான தண்ணீ–்ர், படுக்கை போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  மருத்துவமனையில் தொற்றுநோய் கிருமிகளால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகம். அதனால்  கழிவுகளை சரியான முறையில், முழுமையாக நீக்கி மருத்துவமனை சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

*தகுதியில்லாத, போதுமான பயிற்சியில்லாத மருத்துவர்களால் நோயாளிகள் ஆபத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே, மருத்துவ  சாதனங்களை இயக்குபவர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போன்றவர்களை வேலையில் திறமை  உள்ளவர்களாகவும், சேவை மனப்பான்மை உள்ளவர்களாகவும் நியமிக்க வேண்டும்.

*அவசர சிகிச்சைக்குத் தேவையான உயிரூட்டும் மாத்திரைகள், ஆக்ஸிஜன் மற்றும் உயிர் காப்பு சாதனங்கள் போன்ற எல்லா  வசதிகளும் மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

*நோயாளிக்கு தனது நோய் குறித்த ரகசியங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு. அவர்களுடைய உடல்நிலை, நோய்  மற்றும் தனிப்பட்ட விவரங்களை மருத்துவமனை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.  அவர்களுடைய அனுமதி பெற்ற  நபர்களிடமே எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை முடிவுகள், நோய் சம்பந்தமான பிற ஆவணங்கள் மற்றும் முடிவுகளைத் தெரிவிக்க  வேண்டும். 

*மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் அதன் பணியாளர்களுக்கும்கூட அவரது அனுமதி பெற்றே அவரது மருத்துவ சிகிச்சை  ஆவணங்களை கொடுக்க வேண்டும். உடல், மன பரிசோதனையின் போது நோயாளிகளை சங்கடப்படுத்தாமல் பரிசோதனை செய்ய  வேண்டும். பெண் நோயாளிகளின் பரிசோதனையின்போது அவரது உறவினர் அல்லது பெண் பணியாளரை அமர்த்திக் கொள்வது  அவருக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும்.

*நோயாளிகளை மரியாதையுடன் அழைக்க வேண்டும். நடத்த வேண்டும்.மருத்துவ சிகிச்சை சாதி, மத, இன, கலாச்சார மற்றும் நிற  வேறுபாடின்றி கொடுக்க வேண்டும். அவர்கள் மருத்துவமனையில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், தங்கள் நண்பர்கள்,  உறவினர்களைப் பார்க்கும் உரிமை உண்டு.

*நோயாளிக்கு தங்கள் நோய், அதற்கான சிகிச்சை, சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை மருத்துவர்கள்  மற்றும் மருத்துவமனைகளில் இருந்து பெறும் உரிமை உண்டு.

*சிகிச்சைக்கு சம்மதிப்பதைப் போல, சில சிகிச்சைகளுக்கு மறுப்பு தெரிவிக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு. மாற்று சிகிச்சை  பெறவும், மருத்துவமனையில் இருந்து வெளியேறவும் அவர்களுக்கு உரிமை உண்டு. நோயாளிகள் மனநிலை குழம்பி இருந்தால்  அவரது நெருங்கிய உறவினரை முடிவு எடுக்கச் சொல்லலாம்.

* எக்ஸ்ரே, வீடியோ, சி.டி., பயாப்சி போன்ற தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை யின் ஆவணங்களை இரண்டாவது மருத்துவக்  கருத்து (Second opinion)) கேட்பதற்காக, மருத்துவமனையிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் உரிமை உண்டு.

* மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் தகுதிகளைப் பற்றி அறிய உரிமை உண்டு.

*மருத்துவமனைகள் கொடுக்கும் கட்டண ரசீதில், மாத்திரைகள், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை மற்றும் அறை வாடகை  கட்டணங்களை தனித் தனியாக குறிப்பிட வேண்டும். மேலும், மருத்துவர் கட்டணம், மருத்துவமனையின் கட்டணத்தையும் தனித்  தனியாக குறிப்பிட வேண்டும்.

* மருத்துவ சேவை பற்றிய குறைகளை சொல்வதற்கான அதிகாரிகள் யார், எங்கே இருப்பார்கள் என்பதை மருத்துவமனை தெளிவாக  தெரிவிக்க வேண்டும்.

*மருத்துவக் காப்பீடு செய்த நோயாளிகள், தங்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையும், மருத்துவர்களும் காப்பீட்டில் இருந்து  எவ்வளவு தொகை பெற்றார்கள் என்பதை அறியும் உரிமை உண்டு.

* சிகிச்சை அளிக்கும் மருத்துவர் இல்லாத நேரங்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு.  நோய் அதிகமாகாமல் இருக்க செவிலியர்கள் மற்றும் மருத்துவ மனை பணியாளர்கள் பின்பற்றும் முறைகளை தெரிந்து கொள்ளும்  உரிமை உண்டு. உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளி்ன் போதும் செலுத்தப்படும் ரத்தத்தின் தூய்மை குறித்த  தகவலை தெரிந்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு.

*மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பரிசோதனைகளுக்கு நோயாளிகளை உட்படுத்தும்போது பரிசோதனைக்காகவே மருந்துகள்  கொடுக்கப்படுகிறது என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். மருத்துவப் பரிசோதனை ஆராய்ச்சிக்கு உட்படவோ,  உட்படாமல் இருப்பதற்கோ அவர்களுக்கு உரிமை உண்டு.

*நோயாளிகள் மருத்துவமனையில் இறக்கும்போது, அவரது உடலை கண்ணியமான முறையில் கொடுக்க வேண்டும். அவர் இறந்த  நேரம் குறித்த சரியான தகவலை அவரது குடும்பத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

*பிரேதப் பரிசோதனை செய்யும் முன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு, சரியான நேரத்தில் பிரேதப் பரிசோதனை செய்ய  வேண்டும். சிலர் இறந்தபிறகு தங்கள் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவார்கள். அதற்கு ஏற்றார்போல் மருத்துவமனை உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். மூளைச்சாவு ஏற்பட்டபின் நன்றாக இயங்கும் மற்ற உறுப்புகளை, உறுப்பு மாற்று அறுவை  சிகிச்சைக்காக மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினால் அதற்கான நடவடிக்கைகளையும் மருத்துவமனை விரைந்து எடுக்க  வேண்டும்.

*நோயாளிகள் இறந்த பின்னரும், அவரது நோய் பற்றிய பல விஷயங்களை ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும். அவர் அனுமதி  கொடுத்தவர்களிடம் மட்டுமே மருத்துவ ஆவணங்களின் உண்மை நிலை குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும். இறந்த  நோயாளிகளின் உரிமைகளை,அவர்களது உறவினர்கள் கேட்டுப் பெறுவதற்கு உரிமை உண்டு.

நன்றி : தினகரன் நாளிதழ் - 10.01.2017

டூவீலர் ஓட்டுவதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்


டூவீலர் ஓட்டுவதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

தேவை அதிக கவனம்
பறந்து செல்ல விரும்பும் பெண்களுக்குக் கிடைத் திருக்கும் புதிய சிறகுகளே இருசக்கர வாகனங்கள். காற்றைக் கிழித்துப் பறக்கும் நொடியில், காலின் கீழே வானம் நழுவும். உடல்தொட்டு வருடும், காற்றின் சந்தங்களுக்கு வார்த்தைகள் பிடித்து வந்து, மனம் கவிதை வாசிக்கும்!

ஆனால், ‘`இருசக்கர வாகனங்களின் வடிவமைப்பு மற்றும் அதை இயக்கும் முறைகளால், பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்புப் பிரச்னைகள் பலரும் அறியாதது’’ என்று எச்சரிக்கிறார், சேலத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ரம்யா.

‘`பெண்கள் இருசக்கர வாகனத்தில் சரியான பொசிஷனில் அமர்ந்து இயக்க வேண்டும். மாறாக, தன்னை வருத்தி அமர்ந்து ஓட்டும்போது, அவர்களின் எடை முழுவதையும் பிறப்புறுப்பு தாங்க நேர்வதால், அவ்விடம் மரத்துப் போவதோடு, நாளடைவில் அவர்களின் தாம்பத்ய இன்பம் உணரும் தன்மையும் குறைந்துபோகும்’’ என்று அதிர்ச்சித் தகவல் கூறிய ரம்யா, அதுபற்றி விளக்கமாகப் பேசினார்.

ஆண்கள் சந்தித்த பிரச்னை இப்போது பெண்களுக்கும்…

‘`சைக்ளிக் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் பெரினியல் பெயின் (Perineal Pain) பிரச்னையை, முன்னர் சைக்ளிங் விளையாட்டில் ஈடுபடும் ஆண்கள் மட்டுமே சந்தித்து வந்தனர். இப்போது, இருசக்கர வாகனம் இயக்கும் பெண்களில் 60% பேருக்கு இந்தப் பாதிப்பு உள்ளது.

என்ன காரணம்?

சரியான பொசிஷனில் அமர்ந்து இருசக்கர வாகனத்தை இயக்கும்போது, உடலின் எடை இடுப்பு எலும்பின் அடிப்பகுதியில் இறங்கும். அதுவே, ஸீட்டின்முன் நகர்ந்தவாறு அமரும்போது, உடலின் எடை பிறப்புறுப்புக்குச் செல்லும். எலும்புகளைப் போல தசைகளால் எடையைத் தாங்கமுடியாது என்பதால், அந்தத் தசைகள் பாதிக்கப்படும். 
குறிப்பாக, நாப்கின் பயன்படுத்தும் மாதவிடாய் நாட்களில், இந்த அழுத்தம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.  உடலின் எடையைத் தாங்குவதோடு, வாகனம் இயக்கும்போது அழுத்தம், உராய்வுக்கும் உள்ளாவதால் அந்தத் தசை நரம்புகள் நாளடைவில் மரத்துப்போகும். சிலிர்ப்பு, கூச்சம் என மிக நுண்ணிய உணர்வுகள் பரவும் பிறப்புறுப்புத் தசைகள் மரத்துப்போவது மற்றும் பாதிப்புக்குள்ளாவதால், அந்த உணர்வுகளை உறுப்பு உணரும் தன்மை பெண்களுக்குக் குறையும். அதன் விளைவாக, தாம்பத்யமே அலுத்துப்போகலாம். 

அறிகுறிகள் என்னென்ன?

* பிறப்புறுப்பில் வலி மற்றும் எரிச்சல், சில நேரங்களில் மரத்துப்போன உணர்வு

* குதிரைவால் எலும்பில் வலி (முதுகுத் தொடரின் கடைசி எலும்பு) வலி

* தொடை இடுக்குகளில் வலி

* தாம்பத்யத்தின்போதும் பின்னரும் வலி மற்றும் திருப்தியின்மை

* சிறுநீர் கழிக்கையில் வலி மற்றும் எரிச்சல், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அடிக்கடி ஏற்படுவது, சிறுநீர் முழுமையாக வெளியேறாத உணர்வு

 * தொடைகள்,  வயிற்றை இறுக்கிப்பிடிக்கும் ஜீன்ஸ் உள்ளிட்ட உடைகள் அணியும் போது ஏற்படும் அசௌகர்யம்.

என்ன தீர்வு?

* இருசக்கர வாகனத்தை இயக்கும்போது  எடையை இடுப்பு எலும்பு தாங்குவது போல் நேராக அமர வேண்டும்.

* எடை அதிகம் உள்ளவர்கள் டபுள்ஸ் செல்லும்போது, வாகனத்தை இயக்குபவர் ஸீட்டின் நுனிக்குத் தள்ளப்படுவார் என்பதால், அவற்றைத் தவிர்க்கலாம். ட்ரிபுள்ஸ் செல்லக் கூடாது.

* இருசக்கர வாகனத்தில் அதிக தூரப் பயணங்களைத் தவிர்க்கலாம். வேறுவழியின்றி செல்ல நேர்ந்தால், உடலை வருத்தாமல் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளலாம். பயணங்களின்போது ஜீன்ஸ், லெகிங்ஸ் போன்ற இறுக்கமான உடைகளைத் தவிர்க்கலாம்.

* பெண்கள் சரியான நிலையில் அமர்ந்து வாகனம் இயக்க நினைத்தாலும், பொதுவாக இருசக்கர வாகனங்களின் இருக்கை அமைப்பே, முன்புறம் வழுக்கிக் கொண்டு வருவது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர்க்கும்விதமாக, முன்பகுதியில் ஸீட்டின் அகலத்தை, உயரத்தை அதிகரித்து மறுவடிவமைப்பு செய்து கொள்ளலாம். 

* உயரம் குறைவான பெண்கள், தங்கள் உயரத்துக்கேற்ப ஸீட்டின் உயரத்தை மறுவடி வமைப்பு செய்து பயன்படுத்தலாம்.

* குஷன் ஸீட் பயன்படுத்துவது சிறந்தது.

சிகிச்சைகள் உண்டு!

பெரினியல் பெயின் பிரச்னையில் இருந்து விடுபட, எளிமையான பிசியோதெரபி பயிற்சிகளைச் செய்யலாம். பிறப்புறுப்பின் ரத்த ஓட்டம் அதிகரித்து நுண்மையான உணர்வுகளைத் தூண்டும் கெஜல்ஸ் பயிற்சிகள் (Kegels exercise) செய்யலாம். வாரம் ஒரு முறை பாத்டப்பில் வெதுவெதுப்பான நீரில் அமரலாம். பிறப்புறுப்பில் தொற்று உள்ளிட்ட வேறு பிரச்னைகள் இருப்பின், அதற்கான மருத்துவச் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்’’ – வலியுறுத்துகிறார் ரம்யா.

நன்றி : அவள்விகடன் - 27.01.2017

உதவித்தொகையுடன் M.Sc படிக்கலாம்!


உதவித்தொகையுடன் படிக்கலாம் 
மாதம் ரூ.5000-த்துடன் எம்.எஸ்சி. படிப்பு
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் நேரடியாக ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. படிப்பில் சேர வகை செய்கிறது ‘நெஸ்ட்’ நுழைவுத் தேர்வு (National Entrance Screening Test-NEST). இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் அடிப்படை அறிவியல் சீர்மிகு மையத்தில் (Centre for Excellence in Basic Science) ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. படிப்புகளில் (உயிரியல், வேதியியல், கணிதம்) சேரலாம்.

தேவையான தகுதி
இந்த ஒருங்கிணைந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அதோடு புராஜெக்ட் பணிகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். மத்திய அரசின் ‘இன்ஸ்பயர் ஸ்காலர்ஷிப்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2017-2018-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நெஸ்ட் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களை எடுத்து குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் என்றால் 55 சதவீத மதிப்பெண் போதும்.

கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்தவர்களும், 2017-ல் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1.8.1997 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.

என்ன கேட்பார்கள்?
புவனேஸ்வரம் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 170 இடங்களும், மும்பை பல்கலைக்கழகத்தில் செயல்படும் அடிப்படை அறிவியல் சீர்மிகு மையத்தில் 45 சீட்டுகளும் உள்ளன. மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கு இடஒதுக்கீடு உண்டு. 

நுழைவுத் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் அறிவியல், கணிதப் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். பொதுவாக சி.பி.எஸ்.இ. பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

நெஸ்ட் நுழைவுத் தேர்வுக்கு www.nestexam.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மார்ச் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மே மாதம் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. 

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 16-ல் வெளியிடப்படும். 

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, அதற்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் உள்பட அனைத்து விவரங்களையும் நெஸ்ட் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 10.01.2017

Thursday, January 5, 2017

உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் நேரம் மாற்றம்


உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் நேரம் மாற்றம்


மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு, அதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக காலை 10:00 முதல் மதியம் 3:00 மணிவரை வழக்கு எண் இடப்படும். 

தற்போது ரிட், ஆட்கொணர்வு, கிரிமினல் மேல்முறையீடு, கிரிமினல் சீராய்வு மனுக்களுக்கு மதியம் 1:30 மணிக்குள் வழக்கு எண் இடும் வகையில், பழைய நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மறுநாள் விசாரணைக்கு வரும் வழக்குகள் பட்டியலை விரைந்து அச்சிடவும், அவற்றை உயர்நீதிமன்ற இணையதளத்தில் முதல் நாள் இரவு 8:30 மணிக்குள் பதிவேற்றம் செய்யும் வகையிலும் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நன்றி : தினமலர் நாளிதழ் - 05.01.2017

Wednesday, January 4, 2017

வழக்கறிஞர் இல்லாமல் வாதாடுபவருக்கு


வழக்கறிஞர் இல்லாமல் வாதாடுபவருக்கு
விதி எண் : 5 (அ)வழக்கு தரப்பினர்கள் வழக்கு நடத்துவதற்கு வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளாதபோது, வழக்குகளில் மேல்முறையீடு செய்வது எங்கு என்பதை நீதிமன்றம் வழக்கு தரப்பினர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
(Court to inform parties as to where an appeal lies in cases where parties are represented by pleaders)
மேல்முறையீடு செய்வதற்குரிய ஒரு வழக்கில் தீர்ப்பு பகரும்போது மேல்முறையீடு செய்யவேண்டியது எந்த நீதிமன்றத்தில் என்பது குறித்தும், அத்தகைய மேல்முறையீடு தாக்கல் செய்வதற்கான கால வரையறை பற்றியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் தரப்பினர்களுக்கு அது தெரிவிக்க வேண்டும். மற்றும் தரப்பினர்களுக்கு அவ்வாறு தெரிவிக்கப்பட்ட தகவலை பதிவு செய்தல் வேண்டும்.

தகவல் உதவி : வழக்கறிஞர் Senthil Kumar அவர்கள்
                              & ஆவணக் காப்பகர் திரு Govindaraj Tirupur

குழந்தையின்மை பிரச்னைக்கு 5 காரணங்கள்!

குழந்தையின்மை பிரச்னைக்கு 5 காரணங்கள்! 

பத்து வருடங்களுக்கு முன்பு வரை திருமணமாகி நான்கைந்து வருடங்கள் குழந்தையில்லாமல் போனால் பிறகுதான் மருத்துவரைச் சந்திக்க வந்துகொண்டிருந்தார்கள். 

ஐந்து வருடங்களுக்கு முன்புவரை திருமணமான அடுத்த மாதமே குழந்தை இல்லை என மருத்துவமனைகளுக்குப் படையெடுக்க ஆரம்பித்தார்கள். 

இன்று என்ன டிரெண்ட் தெரியுமா? திருமணத்துக்கு முன்னரே மருத்துவரைச் சந்தித்து, தனக்கு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா? ​திருமணத்துக்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருக்குமா என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். 

இது ஆரோக்கியமான, வரவேற்கத்தக்க விஷயம். ஆனாலும் இன்னொரு பிரிவினர் இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் உணவுமுறையிலும் வாழ்க்கை முறையிலும் தவறுகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக, குழந்தையின்மைப் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள்...” என்கிறார் மகப்பேறு மருத்துவர் ப்ரியா.
குழந்தையின்மைப் பிரச்னையைத் தவிர்க்க அவசியமான ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்கிறர் டாக்டர் ப்ரியா...
பிசிஓடி பயங்கரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!
பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’ (பிசிஓடி) எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னை இன்று மிக அதிகமாகிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றம், ஜங்க் உணவுகள், அதீத மன அழுத்தம், பரம்பரைத் தன்மை - இந்த நான்கும்தான் பிசிஓடிக்கான பிரதான காரணங்கள். 

பிசிஓடி பிரச்னை குழந்தையின்மைக்குக் காரணமாவதுடன், சர்க்கரைநோய் நெருக்கத்தில் இருப்பதற்கான எச்சரிக்கை மணியும்கூட. எனவே, அதை ப்ரீடயப்பட்டிக் அறிகுறியாகவே கருத வேண்டும். மட்டுமின்றி ஹைப்பர் டென்ஷன், மெட்டபாலிக் சிண்ட்ரோம், பருமன் போன்றவையும் வரும் அபாயம் அதிகம்.
உடற்பயிற்சியில் உறுதிகொள்ளுங்கள்!
என்னதான் வசதிகள் இருந்தாலும், ஆரோக்கியத்துக்காக சில விஷயங்களில் உடலை வருத்திக்கொண்டுதான் ஆக வேண்டும். வீட்டைவிட்டு இறங்கினாலே வண்டி, எல்லாவற்றுக்கும் உதவியாள் போன்றவற்றை மறந்து, உடற்பயிற்சிகளை தினசரிக் கடமையாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம்
திருமணத்தையும் முதல் கர்ப்பத்தையும் தள்ளிப் போடாதீர்கள்!
சரியான வயதில் திருமணம் என்பது இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு மிக மிக முக்கியம்.30 பிளஸ்ஸில் திருமணம்... பிறகு 2, 3 வருடங்கள் இடைவெளி... என வருடங்களைக் கடத்துவது ஆபத்தானது. வயதைக் கடந்து கருத்தரிப்பதே இன்று சவாலாக இருக்கிறது. அப்படியே கருத்தரித்தாலும், அதைக் கலைக்கிற பெண்களும் இருக்கிறார்கள். கருவைக் கலைக்க தானாகவோ அல்லது தெரிந்த மருத்துவரிடம் கேட்டோ மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள். 

அப்படி மாத்திரை எடுக்கும்போது, கருவானது முழுமையாகக் கலையாமல், மிச்ச சொச்சங்கள் உள்ளேயே தங்கிவிடும். அப்படி மிச்சம் இருந்தால், எண்டோமெட்ரியம் பகுதியில் தொற்று வரும். அடுத்த குழந்தை உருவாகாது. ரத்தப்போக்கு இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் ஸ்கேன் சோதனை அவசியம்.
கருவைக் கலைக்க நீங்களாக மாத்திரை எடுக்காதீர்கள்!
7 முதல் 9 வாரக் கரு என்றால் மட்டுமே அதைக் கலைக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். அதைத் தாண்டிவிட்டால், மாத்திரைகளின் மூலம் கலைப்பது பாதுகாப்பானதல்ல. டி அண்ட் சி முறைப்படிதான் கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும்.
இது எதுவும் தெரியாமல் கருவைக் கலைக்க மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்கள், நான்கைந்து நாட்கள் ரத்தப்போக்கு முடிந்ததும், ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். கர்ப்பப்பையில் கருவின் மிச்சமோ, ரத்தக் கட்டிகளோ இல்லையா என்று பார்க்க வேண்டும். அதேபோன்று எண்டோமெட்ரியம் அடர்த்தி அதிகமாக இருந்தாலும் பிரச்னைதான். அதற்கும் டி அண்ட் சிதான் செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பப்பையை தேவையின்றி சுரண்டி சுத்தப்படுத்துவதன் மூலம் புண்கள் ஏற்படும். அது அடுத்த கர்ப்பத்திலும் பிரச்னைகளைத் தரலாம்.

எனவே, சரியான வயதில் திருமணம்... முதல் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடாமல் சரியான வயதில் பிள்ளைப் பேறு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பருமனைக் கட்டுப்படுத்தும் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பின்பற்றுதல் போன்றவை மிக அவசியம்.
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!
பிசிஓடியை கட்டுப்படுத்த பட்டையைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து குடிப்பதும், இரவே ஊறவைத்த வெந்தயத்தை காலையில் எடுத்துக்கொள்வதும் உதவும்.
14, 15 வயதிலேயே பிசிஓடி இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். திடீரென பெண் குழந்தைகளின் உடலில் எடை எகிறும். முகம் மற்றும் உடல் முழுவதும் தேவையற்ற ரோம வளர்ச்சி இருக்கும். இதையெல்லாம் அலட்சியப்படுத்தாமல், உடனே மருத்துவரைச் சந்தித்து பிசிஓடிக்கான அறிகுறிகளா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.
நன்றி : விகடன் செய்திகள் - 03.01.2017



Monday, January 2, 2017

வருகிறது இஸ்லாமிய வங்கிகள்

வருகிறது இஸ்லாமிய வங்கிகள் 

இஸ்லாமிய ஷரிஅத் சட்டப்படியே இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இந்த வங்கிகளில் முதலீடு செய்யப்படும் தொகைக்கும் வட்டி கிடையாது. ஆனால் வட்டி தரும் வங்கிகளை விட அதிக அளவில் லாபத்தைத் தன் முதலீட்டாளர்களுக்குத் தரக்கூடியது. 

வாடிக்கையாளர்கள் வாங்கும் கடன்களுக்கும் வட்டி வசூலிக்கப்பட மாட்டாது. இந்த வங்கிகள் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தநிலையில் பல்வேறு பன்னாட்டு வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டன. ஆனால் அம்மாதிரியான மோசமான சூழலிலும் இந்த இஸ்லாமிய வங்கிகள் சிறப்பாகச் செயல்பட்டன.

முதல் இஸ்லாமிய வங்கி
துபாய் இஸ்லாமிய வங்கிதான் முதன் முதலில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய வங்கி. 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கிதான் ஐக்கிய அரபு நாடுகளின் மிகப் பெரிய வங்கி. 175 கிளைகளுடன் பாகிஸ்தானிலும் இந்த வங்கி செயல்பட்டுவருகிறது. இன்று இஸ்லாமிய வங்கிகள் பல நாடுகளின் முதலீட்டுடன் 50களுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இது கடந்த பத்தாண்டுகளுக்குள் இஸ்லாமிய வங்கிகள் அடைந்த மாபெரும் வளர்ச்சி.

வட்டி இல்லாமல் எப்படிக் கடன் தருகின்றன?
இஸ்லாமிய வங்கிகளைப் பொறுத்தவரை கட்டப்படும் பணத்துக்கு வாடிக்கையாளர்களுக்கு வட்டி அளிப்பதில்லை என்பதைப் போல் கடனாக அளிக்கப்படும் பணத்துக்கும் வட்டி வசூலிப்பதில்லை. வங்கிகள் செய்யும் முதலீட்டின் மூலம் ஈட்டும் பணம்தான் வங்கிகளின் லாபம். இதில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

கிடைக்கும் லாபத்தை வங்கிகள், முதலீட்டாளர்களுடன் பங்குபோட்டுக்கொள்கின்றன. அதைப் போல நஷ்டத்தையும் முதலீட்டாளர்கள் வங்கிகளுடன் பங்குகொள்ள வேண்டும். அதுபோல் கடன் விண்ணப்பதாரருடன் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் பங்கு என்ற அளவில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்கிறார்.

இந்த லாப அடிப்படையில் இஸ்லாமிய வங்கிகள் கடன் அளிக்கின்றன. மேலும் தொழிலுக்குத் தேவையான கருவிகளையும் வங்கியே வாங்கித் தருகின்றன. அதுபோலவே வீட்டுக் கடனையும் வட்டியில்லாமல் தருகின்றன. அதாவது சிறு அளவில் லாபத்தைப் பங்கு பத்திரமாக அவ்வப்போது வாங்குவதாலும் அல்லது மாத வாடகை முறையில், கடன் தொகையைக் கால வரையறை இல்லாமல் செலுத்துவதாலும் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுவதில்லை. 

வீட்டுக் கடன் தொகையைச் செலுத்த முடியவில்லை என்றால் அதுவரை வாங்கிய பங்குப் பத்திரங்களை உடனடியாக விற்றுவிடலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்தப் பரிந்துரை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இஸ்லாமிய வங்கிகள் உலகில் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. இவை இந்தியாவுக்கும் வரும் பட்சத்தில் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாமிய மதக் கோட்பாட்டின் அடிப்படையில் இஸ்லாமிய வங்கிகள் தாங்கள் கொடுக்கும் கடனுக்கு வட்டி வசூலிப்பதில்லை. அதேபோல தங்கள் வங்கியில் பணம் முதலீடுசெய்பவர்களுக்கும் வட்டி கொடுப்பதில்லை. வங்கிகளின் முக்கியமான ஆதாரம் வட்டி. ஆனால் வட்டியே இல்லாமல் ஒரு வங்கி எப்படி இயங்கும், என்பது ஆச்சரியமான விஷயம்தானே.

இந்த இஸ்லாமிய வங்கிகள் தங்கள் முதலீட்டை தொழில்களில் முதலீடுசெய்து அதில் வரும் லாபத்தைத் தனது முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கிறது. மதுபானம், சீட்டாட்டம் போன்ற தொழில்களில் அவை முதலீடுசெய்வதில்லை. இந்த வங்கிகள் அரபு நாடுகள் மட்டுமின்றி லண்டன் முதல் பிலிப்பைன்ஸ் வரை தனது வங்கிச் சேவையை விஸ்தரித்துள்ளன.

இஸ்லாமிய வங்கிகளுக்கான முதல் அனுமதியைக் கேரள அரசு முன்னமே வழங்கியுள்ளது. ஆனால் அந்தச் சமயத்தில் ரிசர்வ் வங்கி அதற்கான அனுமதியைத் தரவில்லை. அதுபோல் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் அவரது சவுதிஅரேபியப் பயணத்தின்போதே இஸ்லாமிய வங்கிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்த கோரிக்கை சவுதி அரபியே தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அது சாத்தியமாகவில்லை. 

இப்போது ரிசர்வ் வங்கியே இஸ்லாமிய வங்கிக்கு அனுமதி தரலாம் எனப் பரிந்துரைத்துள்ளன. அதனால் இஸ்லாமிய வங்கிகள் இந்தியாவில் கூடிய விரைவில் தனது செயல்பாட்டைத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். 

அவை இந்தியாவில் வீட்டுக் கடன் தரப் போகின்றனவா எனத் தெரியவில்லை. அப்படித் தரும் பட்சத்தில் அதற்கு கண்டிப்பாக வட்டி வசூலிக்காது. பதிலாக வீட்டு வாடகை போல மாதம் மாதம் தவணைத் தொகைபோல் சிறு லாபத்துடன் வசூலிக்க வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை வீடில்லாத நடுத்தரவர்க்கத்தினர் வீடு வாங்கப் பெரும்பாலும் வங்கிக் கடனையே சார்ந்திருக்கிறார்கள். கடன் வாங்கிவிட்டு வட்டிப் பிரச்சினையால் சிரமப்படு கிறார்கள். ரிசர்வ் வங்கி பரிந்துரைசெய்திருக்கும் இந்த இஸ்லாமிய வங்கிகள் இங்கு வந்தால் வட்டி யில்லா வீட்டுக் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. 

அப்படியான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் வீட்டுத் தேவையும் நிறைவேறும். பண மதிப்பு நீக்கம், அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வு, நிலையில்லாமல் உயரும் கட்டுமானப் பொருள்கள் விலையேற்றம் என ஸ்தம்பித்துப் போயுள்ள கட்டுமானத் துறையும் சற்றுப் புத்துணர்ச்சி அடையும்.

இஸ்லாமிய வங்கிகளைப் பொறுத்தவரை கட்டப்படும் பணத்துக்கு வாடிக்கையாளர்களுக்கு வட்டி அளிப்பதில்லை என்பதைப்போல் கடனாக அளிக்கப்படும் பணத்துக்கும் வட்டி வசூலிப்பதில்லை

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 31.12.2016



சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க தடை


சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க 
கட்சிகளுக்கு தடை: 


சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க கட்சிகளுக்கு தடை: 
முக்கியத்துவம் வாய்ந்த ‘இந்துத்துவா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்பது சட்டவிரோத செயல். அரசியல்வாதிகள் யாரும் அதுபோல் வாக்கு கேட்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை தேர்தலின் போது, பாஜக வைச் சேர்ந்த மனோகர் ஜோஷி, இந்துத்துவா கொள்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி என்.பி.பாட்டீல் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

‘இந்துத்துவா வழக்கு’ என்று பெயர் பெற்ற இவ்வழக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. கடந்த 1995 ம் ஆண்டு இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, ‘‘இந்துத்துவா என்பது மக்களின் வாழ்க்கை முறை. அதன் அடிப்படையில் வாக்கு சேகரித்தால் வேட்பாளரை பாதிக்காது’’ என்று தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புடைய வேறு சில மனுக் களும் சேர்க்கப்பட்டன. குறிப்பாக மும்பை சான்டாகுரூஸ் சட்டப் பேரவை தொகுதியில் கடந்த 1990-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் அபிராம் சிங் என்பவர் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பாம்பே உயர் நீதிமன்றம், அபிராம் சிங்கின் தேர்தல் வெற்றியை ஒதுக்கிவிட்டது. இதை எதிர்த்து அவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் இந்துத்துவா வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின்போது, ஒரு மதத்தின் தலைவர், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்கும்படி தன்னுடைய ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123-ன்படி சட்டவிரோத செயலா? என்ற முக்கிய கேள்வி முன்வைக்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. 

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த அமர்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட், எம்.பி.லோகுர், எஸ்.ஏ.பாப்தே, எல்.என்.ராவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த அக்டோபர் 27-ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், எம்.பி.லோகுர், எஸ்.ஏ.பாப்தே, எல்.என்.ராவ் ஆகிய 4 பேர் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

சாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் தேர்தலில் வாக்கு சேகரிப்பது சட்டவிரோதமானது, முறையற்ற செயல். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123(3) பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘அவரது மதம்’ என்பது சட்டவிரோத நடவடிக்கைகளை பற்றியது. இங்கு மதம் என்பது வாக்காளர்கள், வேட்பாளர்கள், அவர்களுடைய ஏஜென்ட்கள் என அனைவரையும் குறிக்கும்.
இதுபோன்ற பிரச்சினைகளை கையாளும்போது மதச்சார்பின் மையையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 

எனவே, தேர்தல் சட்ட விதிகளின்படி சாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மதச்சார்பற்றவை. மக்களுக்கும் அவர்கள் வழிபடும் நபர்களுக்கும் உள்ள உறவு என்பது தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. எனவே, ஜாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிக்க முடியாது

இவ்வாறு 4 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

எனினும், யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய 3 நீதிபதிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள‘அவரது மதம்’ என்பது வேட்பாளரின் மதத்தை மட்டும்தான் குறிப்பிடுகிறது என்று கருத்து தெரிவித்தனர். எனினும், பெரும்பான்மை அடிப்படையில் 4 நீதிபதிகள் ஒரே கருத்தில் தீர்ப்பை நேற்று வெளியிட்டனர்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, விரும்பும் மதத்தை பின்பற்றவும், அதைப் பற்றி பிரச்சாரம் செய்யவும் எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், தேர்தலுக்காக அந்த மதத்தை பயன்படுத்தலாமா என்ற கேள்வியும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 02.01.2017

மணம் தரும்... நோயை விரட்டும் சீரகம்!


  1. மணம் தரும்... நோயை விரட்டும் சீரகம்! 


நாம் உணவுக்கு மணமூட்டியாகப் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று, சீரகம். இது வெறும் மணமூட்டி மட்டும் அல்ல. பார்க்க அவ்வளவாக வசீகரம் இல்லாமல், கொஞ்சம் அழுக்காக, அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாக, உலர்வாக இருக்கும் சீரகம் ஒரு மிகச் சிறந்த மருந்து. அதாவது, நோயை விரட்டும் சீரகம். நம் அகத்தைச் சீர்ப்படுத்துவதால், இதற்குச் சீரகம (சீர்+அகம்) எனப் பெயர் வந்தது. 

நாம் உணவுக்கு மணமூட்டியாகப் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று, சீரகம். இது வெறும் மணமூட்டி மட்டும் அல்ல. பார்க்க அவ்வளவாக வசீகரம் இல்லாமல், கொஞ்சம் அழுக்காக, அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாக, உலர்வாக இருக்கும் சீரகம் ஒரு மிகச் சிறந்த மருந்து; நோயை விரட்டும். அதாவது, நம் அகத்தைச் சீர்ப்படுத்துவதால், இதற்குச் சீரகம (சீர்+அகம்) எனப் பெயர் வந்தது. 

`போசனகுடோரியைப் புசிக்கில் நோயெல்லா மருங்காசமிராதக் காரத்திலுண்டிட’ என, சித்த மருத்துவ இலக்கியமான, `தேரன் வெண்பா’வில், ஜீரண நோயெல்லாம் வராமல் காக்கும் `போசனகுடோரி’ எனப் போற்றப்பட்டது. பித்த நோய்க்களுக்கு எல்லாம் முதல் மருந்தாகப் போற்றப்பட்ட சீரகம், அஜீரணம், கண் எரிச்சல், சைனசிட்டிஸ், வாந்தி, விக்கல், கல்லடைப்பு எனப் பல நோய்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

உலகின் மூத்த மணமூட்டியான சீரகம், கிரேக்கத்திலிருந்து உலகெங்கும் பரவியது. சீரகத்தின் பிரத்யேக மணத்தின் காரணமாக, கிரேக்கத்தில் `வரிக்குப் பதிலாக, சீரகம் செலுத்தலாம்’ எனும் அரசாணையே அந்தக் காலத்தில் இருந்ததாம். இன்று, சீரகம் உலகை ஆளும் ஒரு மருத்துவ உணவு (Functional Food). இன்று நம் ஊர் ரசம் தொடங்கி, மெக்ஸிகோவின் பிரிட்டோஸ், மொராக்கோவின் ரஸ்-எல்-ஹேனோ என உலகின் அத்தனை கண்டங்களின் சிறப்பு உணவுகளிலும் சீரகம் மணமும் தந்து, நோயை ஓட்டும் மருந்தாகவும் இருக்கிறது. 

சீரகம் தரும் நன்மைகள்! 

* `எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்’ என்கிறது சித்த மருத்துவம். அதாவது, விடாமல் இருக்கும் விக்கலுக்கு, 8 திப்பிலியையும் 10 சீரகத்தையும் பொடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால் போதும், விக்கல் நின்றுவிடும். 

உணவு செரிமானம் ஆகாமல் எதிர்த்துக்கொண்டு வரும்போது (GERD), சாதாரண தண்ணீருக்குப் பதில், உணவருந்தும்போது, இளஞ்சூடான சீரகத் தண்ணீர் அருந்தலாம். 

* `சாப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வயிறு உப்பிடுது’ என வருத்தப்படுபவர்களுக்கு இது ஓர் அருமருந்து. சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, இந்தப் பிரச்னை தீரும். 

* சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டுவர, எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். 

* சீரகத்தை தனித்தனியே கரும்புச் சாறு, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு, முசுமுசுக்கைச் சாறு ஆகியவற்றில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு ஊறிய சீரகத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சீரகச் சூரணம், பித்தத் தலைவலி எனும் மைக்ரேன் தலைவலிக்கும்,
 பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் சிறந்த துணை மருந்து. வீட்டில் செய்ய முடியாதவர்கள், சித்த மருந்துக் கடைகளில் `சீரகச் சூரணம்’ என்று கேட்டு வாங்கிப் பயன்படுத்தலாம். 

* இஞ்சியை தோல் சீவி, சில மணித் துளிகள் ஈரம் போகும் வரை உலரவைத்து, அதே அளவுக்கு சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டின் கூட்டு அளவுக்குச் சமமாக நாட்டுச்சர்க்கரையைக் கலக்கவும். இந்தக் கலவையை அரை டீஸ்பூன் அளவுக்கு காலை வேளையில் சாப்பிட, மைக்ரேன் தலைவலி படிப்படியாகக் குறையும். 

* சீரகத்தையும் வில்வவேர்க் கஷாயத்தையும் சேர்த்து, சித்த மருத்துவர்கள் செய்யும் `சீரக வில்வாதி லேகியம்’, பித்த நோய்கள் பலவற்றையும் போக்கும் மிக முக்கிய மருந்து. சீரகம், பித்தத்தைச் சீர்ப்படுத்தும் மருந்து. எனவே, உளவியல் நோய்க்கும்கூட இதை ஒரு துணை மருந்தாகப் பயன்படுத்த முடியும். 

ரகத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது. 

பஞ்ச தீபாக்னி சூரணம் 

குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறார்களா? சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் இவற்றைச் சம பங்கு எடுத்து, நன்கு மையாகப் பொடி செய்து, அத்துடன் சம அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். சாப்பிடுவதற்கு முன்னர், இதிலிருந்து இரண்டு முதல் நான்கு சிட்டிகையை எடுத்து தேனில் குழைத்துக் குழந்தைக்குக் கொடுங்கள். இது நேரத்துக்கு பசியைத் தூண்டும்; ஆரோக்கியத்தையும் பராமரிக்கும். 

பொங்கலோ, பொரியலோ சீரகம் சேர்க்கத் தவறாதீர்கள்! 

நன்றி : விகடன் செய்திகள் – 03.01.2017

ஜே.இ.இ., நுழைவு தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்


ஜே.இ.இ., நுழைவு தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்  

ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதலாக இரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., படிப்பில் சேர, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், ஜே.இ.இ., பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

வரும் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக, ஏப்ரலில், ஜே.இ.இ., தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு, டிச., 3ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது; நேற்றுடன் பதிவு முடிவதாக இருந்தது. 

ஆனால், பெரும்பாலான மாநிலங்களில், மாணவர்கள் உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க, கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து, ஜே.இ.இ., தேர்வு, ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், ஜன., 16 வரை, இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை, ஜன., 17 வரை செலுத்தலாம்.

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 03.01.2017

Sunday, January 1, 2017


மத்திய அரசு பணி - வயது வரம்பு அதிகரிப்பு

மத்திய அரசின் ‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக அதிகரிப்பு: ஓபிசி பிரிவினரின் வயது வரம்பு 33 ஆக இருக்கும்.

மத்திய அரசின் ‘குரூப்-பி’ பணிக ளுக்கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உதவியாளர், வருமான வரி ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, அஞ்சலக ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த வயது வரம்பு உயர்வு உத்தரவு பொருந்தும்.

மத்திய அரசின் ‘குரூப்-ஏ’ அதிகாரிகள் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அதேபோல், மத்திய அரசின் சார்நிலைப்பணி அதிகாரிகள் அதாவது குருப்-பி அதிகாரிகள் பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். அடிப்படை சம்பளம் ரூ.9,300 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 முதல் ரூ.4,600 வரையிலான பதவிகள் இந்த பிரிவின் கீழ் வருகின்றன.

தற்போது இந்த ‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 27 ஆக இருந்து வருகிறது. 27 என்பது பொதுப் பிரிவினருக்கான (ஓசி) வயது வரம்பு ஆகும். 

மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்த்தப்படுகிறது.

இந்த நிலையில், பணியாளர் தேர்வாணையத்தால் ரூ.4200, ரூ.4600, ரூ.4,800 தர ஊதியத்துடன் கூடிய பணிகளுக்கான வயது வரம்பை 27-லிருந்து 30 ஆக உயர்த்தி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி பின்வரும் பணிகளுக்கான வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்படுகிறது.

1. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய உதவியாளர்

2. உள்துறை அமைச்சக உதவியாளர்

3. ரயில்வே அமைச்சக உதவியாளர்

4. வெளியுறவு அமைச்சக உதவியாளர்

5. பாதுகாப்பு அமைச்சக உதவியாளர்

(மேற்கண்ட பதவிகள் அனைத் துக்கும் தர ஊதியம் ரூ.4,600)

6. இதர அமைச்சகங்களில் உதவியாளர் (தர ஊதியம் ரூ.4,200, ரூ.4,600)

7. வருமான வரி ஆய்வாளர்

8. மத்திய கலால் ஆய்வாளர்

9. கடத்தல் தடுப்பு ஆய்வாளர்

10. ஆய்வாளர்

11. உதவி அமலாக்க அதிகாரி
(மேற்கண்ட பதவிகள் அனைத் துக்கும் தர ஊதியம் ரூ.4,600)
12. அஞ்சலக ஆய்வாளர்

13. கோட்ட கணக்காளர்

14. போதைப் பொருள் தடுப்பு ஆய்வாளர்

(மேற்கண்ட பதவிகள் அனைத்துக்கும் தர ஊதியம் ரூ.4,200)

‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்படுவதால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயது வரம்பும் அதிகரிக்கப்படும்.

அதன்படி, எஸ்சி, எஸ்டி வகுப்பி னரின் வயது வரம்பு 35 ஆகவும், ஓபிசி பிரிவினரின் வயது வரம்பு 33 ஆகவும், மாற்றுத்திறனாளிகளின் வயது வரம்பு 40 ஆகவும் உயர்த்தப்படும்.

எஸ்எஸ்சி ‘குரூப்-பி’ பணிகளுக் கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி ‘குரூப்-1’ தேர்வுக்கான வயது வரம்பும் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படித்தும்வரும் தேர்வர்களிடம் கேட்டபோது, “மத்திய அரசைப் பின்பற்றி தமிழக அரசும் ‘குரூப்-1’ தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர். 

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் ‘குரூப்-1’ தேர்வுக்கான வயது வரம்பு தற்போது பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், மற்ற அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 35 ஆகவும் உள்ளது. 

பிஎல் பட்டம் பெற்றிருந்தால் அனைத்து தரப்பினருக்கும் கூடுதலாக ஓராண்டு வயது வரம்பு தளர்த்தப்படுகிறது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 01.01.2017

ஹார்ட் அட்டாக் VS கார்டியாக் அரெஸ்ட்



ஹார்ட் அட்டாக்   VS   கார்டியாக் அரெஸ்ட்
உலகம் முழுவதும் அதிகம் பேர் மரணிப்பது இதய நோய்கள் காரணமாகத்தான். அதிலும் மாரடைப்பு வந்து இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கூட ‘கார்டியாக் அரெஸ்ட்’ ஏற்பட்டது. அவரது மரணத்துக்கு அதுவே காரணமாக மாறிவிட்டது. ஆனால், பலரும் கார்டியாக் அரெஸ்டை, மாரடைப்பு என்றே தவறாக நினைத்துக்கொள்கின்றனர். மாரடைப்புக்கும், கார்டியாக் அர்ரெஸ்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?

மாரடைப்பு

இதயத் தசைக்கு ரத்தம் செல்லும் பிரத்யேக  கரோனரி ரத்தக்குழாய்களில், அடைப்பு ஏற்பட்டு, இதயத் தசைக்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்படுவதைத்தான் மாரடைப்பு (Heart Attack) என்கிறோம். இதயத்துக்கான ரத்த ஓட்டம் தடைப்படுவதால், கொஞ்சம் கொஞ்சமாக இதய செல்கள் உயிரிழக்கின்றன. சிகிச்சை அளித்து இதை சரி செய்யாவிடில், கடைசியில் இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டு, நிரந்தரமாக இதயம் நின்றுவிடும். மாரடைப்பு ஏற்பட்ட எல்லோருக்கும், உடனடியாக இதயத் துடிப்பு முடக்கம் ஏற்படும் எனச் சொல்லமுடியாது. ஒவ்வொருவருக்கும், அவரது உடல்நிலையை பொறுத்து மாறுபடும்.

எப்படி அறிவது?

மாரடைப்பு ஏற்படும் போது முதலில் நெஞ்சு பகுதியில் ஒரு விதமான பாரம் ஏற்படுவது போல தோன்றும். மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்கு பின் பகுதியில் வலி ஏற்படும். இதனை ‘மார்பு இறுக்கம்’ எனச் சொல்வார்கள். இது முக்கியமான அறிகுறி. பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு, சுய நினைவு இருக்கும், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடியும்.

இடது தோளில் ஆரம்பித்து, கழுத்து, தாடை, முதுகு, இடது கை பகுதிகளில் வலி பரவும். வியர்த்துக் கொட்டி, மூச்சு வாங்கும். இதை வைத்தே தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என ஒருவர் சந்தேகப்பட முடியும். ஒரு சிலருக்கு மார்பு இறுக்கத்துடன், தலைச்சுற்றல், பதற்றம், வாந்தி, மயக்கம், சீரற்ற இதயத்துடிப்பு போன்றவை ஏற்படலாம்.

என்ன செய்ய வேண்டும்?

மாரடைப்பு வரும் அறிகுறி இருப்பவர்களுக்கு, ஆஸ்பிரின், டிஸ்பிரின் முதலான மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மாத்திரையை விழுங்கும் வடிவத்திலும் உதட்டுக்குள் வைக்கும் முறையிலும் இவை மருந்தகங்களில் கிடைக்கின்றன.
மாரடைப்பு ஏற்படும் சமயங்களில், இந்த மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் தனக்குத் தானே முதலுதவி செய்து கொள்ளலாம். பின்னர் உடனடியாக, இதய அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவமனைக்கு சென்றால், மருத்துவர்கள் முதலுதவி மற்றும் சிகிச்சைகளை அளித்து நோயாளியை காப்பாற்ற முடியும்.

மாரடைப்பு வந்த பின்னர் எவ்வளவு விரைவில் மருத்துவமனை செல்கிறோமோ அந்த அளவுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். எதனால் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அதற்கான சிகிச்சைகள் (ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, இதய அறுவை சிகிச்சைகள்) மேற்கொள்ளப்படும்.

கார்டியாக் அரெஸ்ட்

‘திடீர் இதயத் துடிப்பு முடக்கம்’ என இதைச் சொல்லலாம். எந்த வித அறிகுறிகளும் இல்லாமலும்கூட இது வரலாம். இதயம், சீரான இடைவெளியில் துடிக்க மின்னோட்டம் உள்ளது. சீரான எலெக்ட்ரிக் பல்ஸ் இருக்கும்போது, இதயம் சரியாக ரத்தத்தை பம்ப் செய்யும்.

‘அரித்மியா’ உள்ளிட்ட சில பிரச்னைகளால் எலக்ட்ரிக் பல்ஸ் திடீரென தாறுமாறாக மாறினால், சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படும். இவ்வாறு ஏற்படுவதற்கு பல  காரணிகள் உண்டு. அதில் ஒரு மிக முக்கிய காரணிதான், மாரடைப்பு. தூக்கத்தில் சிலர் இறந்து விடுவதை மாரடைப்பு வந்து இறந்தவர்கள் எனச் சொல்வார்கள். இது தவறு. தூக்கத்தில், உடலில் என்ன நடக்கிறது எனத் தெரியாமலேயே ஒருவர் இறந்தால் அவருக்கு சடன் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டிருக்கக்கூடும்.

சடன் கார்டியாக் அர்ரெஸ்ட் வந்தால் தப்பிக்க முடியமா?

உயிர் பிழைக்க வாய்ப்புகள் உள்ளன. ஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்த பின்னர், முதலுதவி தராமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 10 சதவிகிதம் அளவுக்கு குறைகிறது. ‘சி.பி.ஆர்’ எனச் சொல்லப்படும் முதலுதவி தருவதன் மூலமாக இவர்களின் உயிரை காப்பாற்றும் வாய்ப்பு இருக்கிறது. மேலை நாடுகளில் இந்த செயல்முறையை விளக்க, வகுப்புகள் அமைத்து பயிற்றுவிக்கப்படுகிறது.  இந்தியாவில் இந்தச் செயல்முறை இன்னும் சரியாக மக்களுக்கு தெரிவதுஇல்லை.

முதலுதவி கொடுத்து உயிர் பிழைக்க வைத்த பின்னர், உடனடியாக எதனால் சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்திருக்கிறது என பார்க்க வேண்டும், ஒரு வேளை இதய நோய்கள் காரணமாக ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சைகளை தொடர வேண்டும். மாரடைப்பு காரணமாக இருந்தால், அதற்கான சிகிச்சையைச் செய்ய வேண்டும். சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து உயிர் பிழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சி.பி.ஆர் முதலுதவி

சி.பி.ஆர் என்பது இதயத்துக்குச் செயற்கையாக உயிரூட்டல். பாதிக்கப்பட்டவரை ஒரு சமதளத்தில் உடனடியாகப் படுக்கவைக்க வேண்டும்.
அவரது சட்டை பட்டன்களை அவிழ்த்து, நெஞ்சின் மையப்பகுதியின் மீது, வலது அல்லது இடது உள்ளங்கையின் தடிமனான அடிப்பகுதியை வைக்க வேண்டும். இன்னொரு கையை அந்தக் கையின் மேல் வைத்து, ஐந்து விரல்களுக்கு நடுவில் பிடிமானம் போல் பிடித்தபடி இறுக்கமாகக் கோத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது, பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் சுமார் ஐந்து செ.மீ ஆழத்துக்கு வேகமாக அழுத்தம் கொடுத்து கொடுத்து, எடுக்க வேண்டும். 

அதாவது, ஒரு நிமிடத்துக்கு 100 முதல் 120 முறை இப்படி அழுத்தம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் உணர்வு வரும் வரையிலோ அல்லது அவசரஉதவிப் பிரிவில் பணியாற்றும் மருத்துவக் குழுவினர் வரும் வரையிலோ உங்களுக்குக் கடும் சோர்வு ஏற்படும் வரையிலோ, இந்த முதலுதவியைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவருக்குச் பக்கவாட்டில் அமர்ந்துதான் இந்த முதலுதவியைச் செய்ய வேண்டும்.

மருத்துவமனையில் நோயாளிக்கு டீஃபிப்ரிலேஷன் (Defibrillation) என்ற சிகிச்சை அளிக்கப்படும். அதாவது, நெஞ்சுப் பகுதியில் மின்சாரத்தை செலுத்தி மீண்டும் இதயத்தை செயல்படத் தூண்டும் சிகிச்சை இது.

ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிலிருந்து ஸ்மார்ட்டாக தப்பிக்க


ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிலிருந்து ஸ்மார்ட்டாக தப்பிக்க சில டிப்ஸ்..!

பணப்பரிவர்த்தனை, ப்ரியமானவர்களுடன் சாட்டிங், தொலைபேசி உரையாடல், வீடியோ சாட்டிங், கேம்ஸ், கூகுள் தேடல், உடல்நிலை பேண ஹெல்த் ஆப்ஸ்... என எத்தனையோ வேலைகளுக்கு உதவுகிற கையடக்க ஸ்மார்ட்போன் நம் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கிறது.

 `அவன் செல்போன் இல்லைனா செத்துப்போயிடுவான்...’ என ஒரு திரைப்படத்தில் விளையாட்டாகச் சொல்வார்கள். அது உண்மையோ, பொய்யோ ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஓர் அங்கமாகிவிட்டது என்பது மறுக்க முடியாதது.

 பல சிம்கார்டு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட டாக்டைம் ஆஃபர்கள் வழங்குகின்றன. அதனாலேயே பலர், வேலை காரணங்களுக்காகவும், தங்கள் நண்பர்கள், உறவினர்களோடு பேசுவதற்காகவும் பல மணி நேரத்தை ஸ்மார்ட்போனிலேயே செலவழிக்கின்றனர். 

`சார்ஜ் எடு... கொண்டாடு!’ என்பதுபோல, தீரத் தீர சார்ஜ் ஏற்றி, பேசிப் பேசி மாய்ந்துபோகிறார்கள் நம் மக்கள். இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உண்டு. ஸ்மார்ட்போனில் பல மணி நேரம் பேசும்போது, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, (Radio Frequency Radiation - RF) கேட்கும்திறனை பாதிக்கிறது. 

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாதுதான். ஆனால் சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கதிர்வீச்சின் தாக்கத்தைக் குறைக்கலாம். அவை என்னென்ன... பார்ப்போம்!

・ பேட்டரியில் உள்ள சார்ஜ் 15 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும்போது கதிர்வீச்சு வெளிப்படும் அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் ஸ்மார்ட்போனில் பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.

・ பேட்டரி சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும்போது ஸ்மார்ட்போனில் பேசவே கூடாது. மின்சாரம் தாக்கலாம். அதிக வெப்பம் காரணமாக, ஸ்மார்ட்போன் வெடித்துவிடுவதுகூட நிகழலாம். அதிக வெப்பம் மூளையையும் பாதிக்கும்.

・ மலிவு விலை ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். இவற்றிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவு அதிகம். மூளை நரம்புகளின் செயல்திறன் பாதிக்கலாம்.

・ வளரும் குழந்தைகளின் மூளை, இளைஞர்களைவிட இருமடங்கு அதிகமாக கதிர்வீச்சை உள்வாங்கும் ஆற்றல் உடையது. எனவே, முடிந்தவரை குழந்தைகள் ஸ்மார்ட்போனில் இருந்து தள்ளியே இருக்க வேண்டும். அழுகிறார்கள், அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காக எல்லாம் அவர்களுக்கு ஸ்மார்ட்போன் கொடுத்து விளையாட அனுமதிக்ககூடாது.

கர்ப்பிணிகள் அதிகநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். அது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். பிற்காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு நடத்தைக் குறைபாடுகள் (Behaioral Difficulties) ஏற்பட வாய்ப்பு உண்டு.

・ வேலை காரணமாக, நீண்ட நேரம் ஸ்மார்ட்போனில் பேசவேண்டியிருப்பவர்கள், புளூடூத் ஹெட்செட் அல்லது தரமான இயர்போன்களைப் பயன்படுத்தலாம். அதுவும், 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டே பலமணிநேரம் இயர்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். இதனால் கவனச்சிதறல் ஏற்படும். அதன் காரணமாக, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

・ 20 நிமிடங்களுக்கு மேல் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஸ்மார்ட்போனை வலது மற்றும் இடது காதுக்கு மாற்றிவைத்துப் பேச வேண்டும்.

・ யாரும் அருகில் இல்லாத நேரங்களில் ஸ்பீக்கர் மோடில் பேசலாம். இதனால், ஸ்மார்ட்போனில் இருந்து வெளியாகும் நேரடி கதிர்வீச்சு பாதிப்பைக் குறைக்கலாம்.
 சட்டை பாக்கெட், பான்ட் பாக்கெட் ஆகியவற்றில் ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். இதனால் இதயத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல, இறுக்கமான ஆடையை அணிந்துகொண்டு தரமற்ற ஸ்மார்ட்போனை பான்ட் பாக்கெட்டில் வைக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு விந்தணுக்கள் பாதிப்பு ஏற்படலாம்.

・ தோலில் கதிர்வீச்சு ஊடுருவுவதைத் தவிர்க்கும் 'ரேடியேஷன் டிஃபெண்டர் கேஸ்கள்' மார்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்..

・ பேட்டரியை அதிகச் சூடாக்கும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

・ இருட்டில் ஸ்மார்ட்போனின் திரையைப் பலமணிநேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு, பார்வைக்குறைபாடுகளும் ஏற்படலாம்.

 இரவு தூங்கும்போது, தலையணையின் அடியில் ஸ்மார்ட்போன் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைத்திருந்தால், இரவு முழுவதும் அதன் கதிர்வீச்சு, மூளையைத் தாக்கும் அபாயம் உள்ளது.
ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது ஒன்றே, அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரே வழி!

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்.